காரிருள் சூழ்ந்த கும்மிருட்டு.. சிறிய மங்கிய வெளிச்சத்தினூடே ஒரு பெண்மணி
தெரிகிறாள்.. அழுது வற்றிய கண்கள், அரை மயக்கத்தில் சாய்ந்தபடி
முனகிக்கொண்டிருக்கிறாள்... திடீரென எங்கிருந்தோ ஒரு குரல்... அசிரிரீ போல
இல்லை... நன்கு பரிச்சயமான குரல், சற்று கணீரென கேட்கிறது... “அம்மா அழுதுட்டே
இருக்காங்க ராம்... நீ மட்டும் ஏண்டா வரல!... பார்க்கணும் போல இருக்கு...” சட்டென மந்திரம் போட்டது போல
மறைந்துபோனது அத்தனையும்...
திடுக்கிட்டு விழித்தேன்...
கனவுதான்... உடல் முழுக்க வியர்வையால் நனைந்துவிட்டது... எழுந்து அமர்ந்து விளக்கை
போட்டேன்.. சற்றுமுன் பார்த்ததும், கேட்டதும் கனவுதான் என்பதை மூளை பதிவுசெய்யவே
சிலநிமிடங்கள் ஆனது.. இதற்குமுன்பு இப்படியல்லாம் கனவு கண்டதில்லை.. பெரும்பாலான
கனவுகள், விடிந்து எழும்போதே தாமரை இலை நீர் போல இருந்த தடமே தெரியாமல் காணாமல்
போவதுண்டு... ஆனால் இன்றைக்கு விசித்திரமாக தெரிகிறது... ஒரு கனவு நடுநிசியில் என்
தூக்கத்தை கெடுத்து, தடுமாற செய்வதென்பது அதிசயமின்றி வேறென்னவாக
இருக்கமுடியும்...
மனதின் பதைபதைப்பு இன்னும் அடங்கவில்லை... இனி படுத்தாலும் தூக்கம்
வரப்போவதில்லை... எழுந்து ஹாலுக்கு சென்றேன்... நேரம் இரண்டரைதான் ஆகிறது...
விடிவதற்கே இன்னும் சிலமணி நேரங்கள் மீதமிருக்க, என்ன செய்வது குறைப்பொழுதை!...
படிக்காமல் குறையாக விட்ட புத்தகமொன்றை எடுத்து புரட்டினேன்... இரண்டு
வாக்கியத்தைக்கூட என்னால் கடக்க முடியவில்லை... அந்த அழும் பெண்மணியும்,
பரிச்சயமான குரலும் என்னை இம்சிக்கத்தொடங்கிவிட்டது...
அந்தக்குரல்... ஆம்... அந்தக்குரல் குமாருடையதுதானே... அந்த பெண்மணி கூட அவன்
அம்மாதான்... அவள் ஏன் அழுகிறாள்? அவன் என்ன சொல்ல வருகிறான்?... இதை வெறும்
கனவென்று எடுத்துக்கொள்வதா? அல்லது, ஏதேனும் நிமித்தமென கொள்வதா?... அடச்ச!... ஒரு
கனவுக்கு போய் இவ்வளவு ஆராயவேண்டுமா?... ஆழ்மனதில் என்றைக்கோ புதைந்திருக்கும்
நினைவுகள், தொகுப்பாக வெளிவந்திருக்கிறது... அவ்வளவுதான்... ‘நீ ஏண்டா வரல!...
உன்ன நான் பார்க்கணும்!’ என்பதல்லாம் அவன் எத்தனைமுறை சொல்லி,
என் காதுகளில் புளித்துப்போன வசனங்கள்...
அப்பப்பா... இந்த ஒரு மாதமாகத்தானே அந்த வசனங்களை கேட்காமல் நிம்மதியாக
இருக்கிறேன்... இல்லையென்றால் நித்தமும் ஒரு சர்ச்சையும் சலசலப்பும்தான்
எங்களுக்குள்... அது கைகலப்பாக மாறுவதற்குள் விடாப்பிடியாக கடந்த மாதத்தில் உறவை
முறித்துக்கொண்டேன்... குமாருக்கு அதில் உடன்பாடு இல்லைதான்...
இரண்டு வருடக்காதல்... அதை நான் கொச்சைப்படுத்த மாட்டேன்... அவனும்
நல்லவன்தான்... என்மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தான்... அதுவேதான்
பிரச்சினையாகவும் முடிந்தது...
அவனுக்கு சரியெனப்பட்டது எதுவும் எனக்கு சரியெனப்படவில்லை... சில நேரங்களில்
என் ‘சரி’ கள் அவனுக்கு தவறாகப்படும்... இதை
விலாவரியாக விளக்குவதென்பது கதையின் நீளத்தை அதிகரிக்குமே தவிர, ‘இது சரி, தவறு’ என எதையும் உங்களாலும் உறுதிபட
கூறமுடியாத அளவிற்கான குழப்பம் நிறைந்த விஷயங்கள்தான்...
“என்னடா பிஸியா?”
“கால் வெயட்டிங்க்ல போச்சே, யாருடா?”
“அவசியம் சொல்லனுமா?”
“சொல்லமுடியாத அளவுக்கு அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னு நினைக்குறேன்”
“நான் செய்ற எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது குமார்...
எனக்குன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடு, எல்லாத்துக்குள்ளயும் வந்து நிக்காத”
இப்படித்தான் நீளும் நான் மேற்சொன்ன ‘சரி, தவறு’ பிரச்சினைகள்... இது கடைசியில் போய்
நிற்கும் இடம் என்ன தெரியுமா?... என்றைக்கோ நான் செய்த தவறுகளை பட்டியலிட்டு,
தன்னை நியாயவாதியாக காட்டிக்கொள்ள முற்படுவான்.. ஒரு மணி நேரமாக நீளும் உச்சக்கட்ட
விவாதத்துக்கு பின்னால், அழைப்பை துண்டித்து போனை அணைத்துவிடுவேன்.... அன்றைக்கு
என் நிம்மதியும் போய்விடும், தூக்கமும் போய்விடும்...
பிரச்சினையின் விதை என்னன்னு கவனிச்சிங்களா?... சாதாரண ஒரு போன் கால்...
அதல்லாம் கூட அவன்கிட்ட சொல்லனுமான்னு என்னோட நியாயம், இதகூட தன்கிட்ட
சொல்லமாட்றானேன்னு அவனோட ஆதங்கம்...
இது ஒருநாள், ரெண்டுநாள் இல்லை... ஒவ்வொரு நாளும் மூன்று மாதங்கள் இதேபோல தொடரத்தான்,
கடைசியாக அந்த பிரேக்கப் முடிவையும் நான் எடுத்தேன்...
கடவுளே... மறுபடியும் பழசல்லாம் கிளறி, ஏதோ குழப்புறேன்... ப்ரிட்ஜை திறந்து
தண்ணீர் குடித்துவிட்டு, பால்கனியை நோக்கி நகர்ந்தேன்... விடிவதற்கு முன்னாலான
அந்த தெருவின் நடமாட்டங்கள் எனக்குப்பிடிக்கும்... பகலில் பார்த்திராத அத்துனை
நாய்களும், இரவில் தெருவை ஆக்கிரமித்திருக்கும்... ஏதோ ஒரு குடியிருப்பின் காவலாளி
விசில் ஊதிக்கொண்டு நடந்துகொண்டிருப்பார்...
அந்த நேரத்திலும் அதிசயமாக ஓரிரு வாகனங்கள் சாலையில் கடந்துகொண்டுதான்
இருக்கும்... தெருவிளக்கின் வெளிச்சம், இன்னுமொரு நகரத்தின் பரிணாமத்தை
கொடுப்பதுண்டு...
வழக்கம்போலவே நாய்கள் கூட்டமாக குரைத்துக்கொண்டிருக்கிறது... இன்று சற்று
உக்கிரமாக... ஏதோ ஒரு மையத்தை நோக்கி அந்த குட்டி நாயும் குரைத்துக்கொண்டே
பின்னால் ஓடுகிறது... அழகாய் வாலை ஆட்டியபடி, ‘நானும் ரௌடிதான்’ ரேஞ்சுக்கு மழலை குரைப்போடு ஓடியது
ரசிக்கத்தக்க நிகழ்வுதான்...
நாய்கள் எதைப்பார்த்து குரைக்கின்றன?... அந்த மின்விளக்கின் கீழே யாரோ
நிற்கிறார்கள் போலும்... சற்று முன்னேறி கூர்ந்து கவனித்தேன்... வாகன வெளிச்சம்
ஒன்று அந்த உருவத்தின் மீது பட, சட்டென திடுக்கிட்டது எனக்கு...
குமாரா அது?... இங்கு நின்று என்ன செய்துகொண்டிருக்கிறான்? அதுவும் இந்த
நேரத்தில்... என் வீட்டு பால்கனியை பார்த்தபடியேயல்லவா நிற்கிறான்!... எதுவும்
குழப்பம் ஏற்படுத்தப்போகிறானா?..
ஒரு மாதமாய் அவனுடைய எந்த அழைப்பையும் நான் ஏற்கவில்லை... அனைத்து எண்களையும்
ப்ளாக் செய்துவிட்டேன்... வாட்சப், பேஸ்புக் என எல்லாவற்றிலும் விலக்கிவிட்டேன்...
எந்த தொடர்பும் இல்லையென்றால் ஒருகட்டத்தில் மறந்துவிடுவான் என்றல்லவா
நினைத்திருந்தேன்... இப்படி அர்த்தராத்திரியில் தெருவில் வந்து நிற்பானென
நினைத்துக்கூட பார்க்கவில்லை...
அம்மாவின் பாம்பு காதுகளுக்கு கேட்டிடாதவாறு கதவை மெல்ல திறந்து, அவசரமாக
வாசலை நோக்கி ஓடினேன்... அக்கம் பக்கத்தை ஒருமுறை நோட்டமிட்டபடி, தெருவில்
நடக்கத்தொடங்கினேன்... அதோ அந்த விளக்கிற்கு அருகில்தான் நிற்கிறான்...
முடியெல்லாம் கலைந்து, தாடியை ஷேவ் செய்யாமல் ஏதோ பரதேசம் போய்வந்தவனைபோல
இருக்கிறான்... அருகில் சென்றபோது ஏதோ ஒரு நாற்றம்... எங்கோ அடிக்கடி
நுகர்ந்திருந்த ஒரு பரிச்சயமான நாற்றம்... ஒருவேளை குடித்திருப்பானோ?..
அருகில் சென்றபிறகும் கூட மெல்லிய சிரிப்பை தாண்டி அவனிடத்தில் அதிக உற்சாகமோ,
ஆர்ப்பாட்டமோ இல்லை...
“இங்க ஏண்டா வந்த இப்போ?”
“உன்ன பார்க்கனும்னு தோனுச்சு...”
“கடவுளே... அதுக்காக இந்த நேரத்துலயா?... தயவுசெஞ்சு போய்டு, இந்த ஒரு மாசமாதான்
கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்... அது உனக்கு பொறுக்கலையா?”\
“போதும் போதும் ராம்... நான் உன்ன எந்த தொந்தரவும் பண்ண வரல... பார்க்கனும்னு
தோனுச்சு வந்தேன்... ஒருவேளை நீ இங்க வரலைன்னா கூட, பால்கனில நின்னு உன்ன
பார்த்தபின்னாடி நானே போயிருப்பேன்...” சொல்லிவிட்டு பதிலெதையும்
எதிர்பார்க்காமல் விறுவிறுவென நடக்கத்தொடங்கினான்...
சைக்கோ... முழு பைத்தியமாகவே ஆகிவிட்டானா?... எப்படியோ எதுவும் பழைய ‘என்னைய
வெறுத்திடாத ராம், என் கூடவே இரு’ என்ற புராணத்தை பாடிவிடுவானோ என்று
பயந்துபோனேன்...
ஒருமுறை தெரியாமல் நெருப்பில் விழுந்தேன்.... உடல் முழுக்க தீப்புண்ணின்
வலி... அப்படியிருக்க இன்னொருமுறை தெரிந்தே தீயினுள் விரலைவைக்க நான் என்ன
முட்டாளா?...
மீண்டும் எவ்விதமான சப்தமும் எழாதபடி வீட்டினுள் வந்து, படுக்கையில்
படுத்துக்கொண்டேன்... ஒருபுறம் படபடப்பு இன்னும் அடங்கவில்லை என்றாலும், மறுபுறம்
ஏதோ ஆபத்திலிருந்து தப்பித்த பெருநிம்மதி...
சில நாழிகைகள் கழிந்தபிறகுதான் எனக்குள் சில கேள்விகள் எழத்தொடங்கின...
எதற்காக இப்போது வந்தான்?, ஒரு மாத காலமாக அவன் எப்படியிருந்தான்?, ஓரளவு
என்னை மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருப்பானா?...
என்னெதிரில் நிற்கும்போது அவனை துரத்தினால் போதுமென்று நினைத்த மனதிற்கு,
இப்போது அடுக்கடுக்காக கேள்விகள் தொக்கிக்கொண்டு நிற்கிறது...
எத்தனையோ முரண்கள் அவன்மீது எனக்கிருந்தாலும்... எங்கள் இருவருக்குமே, ஒருவர்
மீது மற்றவர் கொண்டிருந்த காதலில் எள்ளளவும் பொய்மை இல்லை... சில
சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஒருவருக்கு மற்றொருவரை வில்லனாய்
காட்டியிருந்தாலும் வாழ்க்கையில் அவனோடு நான் கடந்த அந்த இரண்டு வருடங்களை நூறு
வருடங்கள் ஆனாலும் மறந்திட முடியாது...
ஒருகட்டத்தில் எனது வாழ்வில் ஒவ்வொருநாளும் இந்த காதலால் நிம்மதி பறிபோவதாய்
மனம் நினைத்தபோதுதான், இந்த உறவு மேலும் மோசமாவதற்குள் முரித்துக்கொள்ளப்படுவது
நல்லது என்றெனக்கு தோன்றியது...
அவனிடம் பொறுமையாகத்தான் சொன்னேன்... அவன் அழுது ஆர்ப்பாட்டம்
செய்துவிட்டான்... இருவரின் பிடிவாதங்களும் ஒன்றையொன்று முந்திசெல்ல
போட்டிபோட்டுக்கொண்டிருந்தது... இறுதியில் கனத்த மனதோடுதான் அவனை புறக்கணிக்க
ஆரமித்தேன்...
அவனுடைய எல்லா அழைப்புகளையும் வலியோடு புறக்கணித்தேன்... கிட்டத்தட்ட பத்து
நாட்களுக்கும் மேலாக எத்தனையோ எண்களிலிருந்து என்னிடம் பேசிட கடும் பிரயத்தனம்
செய்து பார்த்தான்... ஆனால், என் பிடிவாதமொன்றும் அவன் அறியாதது அல்ல...
“நீ இல்லன்னா நான் செத்துடுவேன்” ஒருமுறை இப்படி மிரட்டியல்லாம் கூட
மெசேஜ் அனுப்பியிருந்தான்...
“வாழ்க்கையில் ஒரு கடுமையான சூழலை கடக்கத்தெரியாமல் சாகத்துணியும் ஒரு கோழையை
நம்பி என் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள நான் விரும்பவில்லை” என்று அதற்கு மட்டும் பதிலளித்தேன்...
நாளடைவில் அவனுடைய தொல்லைகள் சற்று குறைந்தது... அவ்வப்போது எழும் அந்த
நினைவுகளை தவிர நானுமே இப்போதெல்லாம் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன்...
அவனும் மனம் மாறியிருப்பான் என்கிற நம்பிக்கையில்தான் இப்போதும் பொறுமை
காத்திருக்கிறேன்... காலத்தைவிட சிறந்த மருந்து எதுவுமில்லைதானே!..
எனக்கும் கூட மெலிதான ஒரு ஆசை இப்போதும் உண்டு... எனக்காக சில விஷயங்களை
விட்டுக்கொடுத்து, என்னை புரிந்து ஒருவேளை அவன் என்னிடம் வருவானேயானால்
ஏற்றுக்கொள்ளலாம் என்கிற அற்ப ஆசை!... ஆனால், அதெல்லாம் நடக்குமா?...
சற்று முன்பு பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல், ஒரு சிறு சலனம் கூட இல்லாமல் என்னை
கடந்துபோனானே... அப்போது அந்த பழைய குமாரை அவனுள் நான் பார்த்தேன்.. எந்த
குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, காதல்வயப்பட்டு காத்துக்கிடந்தேனோ அப்படியொரு
நிதானத்தை மீண்டும் அவனுள் பார்த்தேன்... ஒருவேளை அவன் மாறியிருப்பானோ?... அவன்
கண்களில் இன்னுமும் காதல் தெரிந்தது... காதலுக்காக இறங்கி வந்தவனை நான்தான்
துரத்தி அனுப்பிவிட்டேனோ?....
குழப்பங்கள் மறைந்து இப்போது எதிர்பார்ப்புகள் ஏகோபித்தது...
அவனோடு மகிழ்ச்சியாய் கழிந்த அந்த நாட்கள் மனதினை ஆக்கிரமித்தது...
“உன்னவிட எனக்கு யாரும் முக்கியமில்ல குமார்... நீ இப்போ சொன்னாலும்
எல்லாத்தையும் விட்டுட்டு வந்திடுவேன்”
“நீயே என்னையவிட்டு விலகிப்போனாலும், கடைசிவரைக்கும் உன்ன என்னால மறக்க
முடியாது குமார்”
“உன்னோட விருப்பம்தாண்டா என்னோடதும்... உனக்கு என்னவல்லாம் பிடிக்குமோ,
அதல்லாம் எனக்கும் பிடிக்கும்”
காதல் மிகுந்து கண்களை மறைத்திருந்த நாட்களில், நான் உதிர்த்த வார்த்தைகள்தான்
இவை... வெறும் வசனங்களாக இல்லை... உள்ளார்ந்து, மனதினுள் வெளிப்பட்ட உணர்வுகளின்
பிம்பம்தான் இவை...
இருவருமே ஒருவருக்காக ஒருவர் எவ்வளவோ விஷயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறோம்,
மகிழ்ச்சிகளை பகிர்ந்திருக்கிறோம்... ஏதோ ஒரு அசாதாரண சூழல் அந்த அழகான வெள்ளை
சுவற்றின் மீது சேற்றை வாரியிறைத்துவிட்டது....
இனியும் அவனை ஏனோ புறக்கணிக்க மனம் ஒப்பவில்லை...
நேரத்தை பார்த்தேன்... ஆறரை ஆகிவிட்டது... ஏதோ நினைவுகளுக்குள்
சிக்கிவிட்டால், மீண்டு எழும்போது காலச்சக்கரம் அவ்வளவு வேகமாய்
சுழன்றுவிடுகிறது....
குமாரின் எண்ணுக்கு அழைத்தேன்....
இரண்டு முறை முழு அழைப்பு போய் துண்டிக்கப்பட்டது...
எதுவும் கோபமாக இருக்கிறானோ?... இருக்கலாம்.... நான் இறங்கி வரும்போது, அவன்
சற்று ஏறிப்போவதுதானே இயல்பு...
மூன்றாவது முறை அழைத்தேன்...
“ஹலோ....”
“குமார்?”
“குமார் இல்ல... நான் தேவா... குமாரோட ப்ரென்ட்...”
“ஓ சரி... குமார் கிட்ட போனை கொடுங்களே, கொஞ்சம் முக்கியமா பேசணும்!”
“அது... அது வந்து... உங்களுக்கு விஷயம் தெரியாதா?”
“என்ன கதை விடப்போறிங்க?... பக்கத்துல குமார் எதாச்சும் வசனம்
எழுதிக்கொடுத்திருக்கானா?”
“ஐயோ இல்லங்க... சீரியஸா சொல்றேன்... குமார் இறந்துட்டான்... உடம்பை இப்போதான்
போஸ்ட் மார்டம் பண்ண எடுத்திட்டு போயிருக்காங்க!”
“ஹலோ... விளையாடாதிங்க மிஸ்டர்... இன்னிக்கு காலைல ரெண்டரைக்கு அவனை நான்
பார்த்தேன், பேசினேன்..”
“இப்போ நீங்கதான் விளையாடுறீங்க... அவன் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு,
சீரியஸா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியே ரெண்டு நாள் ஆகுது... இப்போதான்
ஐசியூலருந்து அவனை வெளில கொண்டுபோய்ருக்காங்க... நைட் ஷார்ப்பா ரெண்டு முப்பதுக்கு
அவன் இறந்தும் போய்ட்டான்...”
அலைபேசி கை நழுவி கீழே விழுந்தது... கண்களில் நீர், தாரை தாரையாய்
வழிந்துகொண்டிருந்தது...
அழும் அம்மா, ஏக்கமான குரல்... அவன் மீது வீசிய நாற்றம் கூட, ஐசியூவிற்குள்
அடிக்கும் கிருமிநாசினி வாசனை... எதுவும் புரியவில்லை... ஆனால், எல்லாம்
புரிந்தது!...
இங்கே எதுவும் கடந்துபோவதில்லை!