Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 12 August 2013

"விலையில்லா இன்பம்....!" - சிறுகதை.....





கோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், பற்பல கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி ஊட்டியின் பிரபலமான “ஹோட்டல் விஜி பாரடைஸ்” வாசலில் “க்ரீச்” சத்தத்துடன் நின்றது.... மகிழுந்திலிருந்து இறங்கியபோது அவன் அழகில் அங்கு ஸ்தம்பிக்காத மனிதர்களே இருக்க முடியாது.... ஏழு குதிரைகள்  பூட்டிய தேரிலிருந்து இந்திரன் இறங்கினால் இப்படித்தான் இருந்திருக்குமோ? என்கிற ஒரு கேள்வியை விதைக்கும் அளவிற்கு அது ஒரு பேரழகு காட்சியாக இருந்தது.... நியான் விளக்குகள் வெளிச்சத்தில் அவன் சந்தன நிறம், கொஞ்சம் மஞ்சள் பூசினாற் போல காணப்பட்டது.... கருப்பு நிற டீ ஷர்ட், ஊதா ஜீன்ஸ், தலை முடிகளில் குத்தீட்டி போல நின்ற ஸ்பைக்ஸ் முடிகள், ஒரு காதில் மட்டும் சிறிய கடுக்கன் வகை தோடு போன்ற விஷயங்கள் அவன் இயல்பான அழகுக்கு இன்னும் மெருகூட்டியதாய் திகழ்ந்தது....
“வெல்கம் சார்...” வரவேற்பாளன் வாசல் வரை வந்து உள்ளே அழைத்து சென்றான்... அந்த அதிக அக்கறையான வரவேற்பில் ஒரு “வழிதல்” தெரிந்தது.... பன்னீர் தெளித்த ரோஜா இதழ்களை ஓட்டவைத்தாற் போன்ற உதுடுகளை லேசாக விரித்து சிரித்தான்.... அந்த இதழ்களுக்கு நடுவே சில நொடிகள் எட்டிப்பார்த்த அவை முத்துக்கற்கள் இல்லை, அது அபியின் பற்கள்....
“உங்க லக்கி ரூம் 201 உங்களுக்காக தயாரா இருக்கு சார்...” சாவியை கையில் கொடுக்கும்போது, அபியின் கையை தொட்டுவிட்ட ஒரு உற்சாகம் அந்த வரவேற்பாளன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது....
“லக்கி ரூம்..... லக்கி ரூம்... ஹ ஹ ஹா...” தனக்குள் சிரித்துக்கொண்டு, அறையை நோக்கி நடந்தான்....
அறைக்கதவை திறந்தபோது, கதவை தள்ளிக்கொண்டு வெளியே வந்தது மல்லிகையின் மணம்... அறையின் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டிருக்கக்கூடும்.... பிரம்மாண்ட படுக்கை, அதில் வெல்வெட் விரிப்பு... பையை அருகில் வைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்தான் அபி... பயணக்களைப்பு... சென்னையிலிருந்து கோவை தொடர்வண்டியில், கோவையிலிருந்து ஊட்டி மகிழுந்தில் கொஞ்சம் அசதியாக்கிய பயணங்களாக இருந்தது.... சுவற்றில் மாட்டியிருந்த மாடர்ன் ஆர்ட்டில், நிர்வாண பெண் உருவம்... படம் என்ன சொல்ல வருகிறது? என்பதல்லாம் அவனுக்கு யோசிக்க மனமில்லை.... இப்போது அவனுக்கு தேவைப்பட்டது ஒரு அரைமணி நேர தூக்கம்.... லேசாக கண் அயர்ந்தான்.....
“மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்.... நெறஞ்ச மௌனம்....” பாடல் அவன் காதுகளை ஊடுருவி, மூளைக்குள் முட்டி மோதியது... ஏற்கனவே கனவில் ஆர்யாவுடன் டூயட், அதில் இந்த பாடலும் சேர்ந்து ஒரு குழப்பத்தை ஏற்ப்படுத்த திடுக்கிட்டு விழித்தான் அபி.... அவன் அலைபேசிதான் அலறிக்கொண்டு இருக்கிறது... எரிச்சலோடு, அலைபேசி திரையை பார்த்தான்.... “பாஸ்கர்”....
“சொல்லு பாஸ்....”
“ரூம்’க்கு போயிட்டியா?...”
“ஹ்ம்ம்...”
“பெட்ல படுத்து தூங்கிட்டு இருக்கியா?”
சட்டென எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான்... யாரும் இல்லை... “எப்டிடா சொல்ற?.... கேமரா எதுவும் செட் பண்ணி வச்சிருக்கியா?”
“ஆமா... உன்னைப்பத்தி எனக்கு தெரியாது பாரு!... மணி இப்பவே ஏழு ஆச்சு... குளிச்சுட்டு, சாப்பிட்டுட்டு வெய்ட் பண்ணின்னா, ஒன்பது மணிக்கு அவன் வந்திடுவான்... போன மாசம் பெங்களூர்ல செஞ்ச மாதிரி லேட் பண்ணிடாத”
“சரிப்பா... சரி.... அவன் பேரு என்ன மங்க்கியா?”
“ஐயோ.... அவன் சிங்வி... பிரசாத் சிங்வி...”
“ஹ்ம்ம்... சரி பாஸ்.... நான் பாத்துக்கறேன்...”
“குளிக்குறப்போ நான் சொன்ன விஷயங்களை மறந்துடாத... மாத்திரையை மறந்துடாத... அப்புறம்....”
“போதும் போதும்... அப்புறம், விழுப்புரம்.... நான் பாத்துக்கறேன் பாஸ், போனை வச்சிடு”
மணியை பார்த்தான், ஏழே கால்... இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கு... சாப்பிட்டுவிடலாம்... “ஹலோ ரூம் நம்பர் 201க்கு ஒரு செஷ்வான் நூடில்ஸ், செட்டிநாட் சிக்கன்.......”
குளிக்க சென்றான்... வெதுவெதுப்பான சுடுநீர் அவன் அங்கங்களில் பட்டு, குளிரை தூரதேசத்துக்கு விரட்டியது.... அழகான பாத் டப், இம்முறை அந்த அறையில் புதிய வரவு... கையோடு எடுத்து வந்திருந்த ஒரு பாட்டில் திரவத்தை அதில் ஊற்றினான் (மறக்காம இந்த ரோஸ் எசன்ஸ் கலந்து குளி... அந்த வாசம் விடியற வரைக்கும் இருக்கும்), குளித்து முடித்து துண்டால் உடலை துடைத்தபோது ஒரு ஜெல்லை எடுத்து உடல் முழுக்க தேய்த்தான் (அது ஷைனர் ஜெல்டா.... அதை தேய்ச்சா உன் உடம்பு மின்னும்)... ஒரு வழியாக குளியல் பணியை முடித்து, அறைக்குள் வருவதற்கும், அறையின் கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது....
மணியை பார்த்தான், எட்டு தான் ஆகிறது... “அதற்குள்ளாகவா அந்த மங்க்கி வந்துட்டான்?.... பாஸ் சொன்ன மாதிரியே ஆகப்போகுது!” மனதிற்குள் எண்ணியவாறே கதவை திறந்தான்.... கையில் பதார்த்தங்களுடன் உணவக ஊழியன்.... வெறும் துண்டு மட்டுமே இடுப்பில், என்றாலும் அபி வெட்கப்படவில்லை.... “கழுகு பனியன்” விளம்பரத்தில் வெறும் பனியன் ஜட்டியோடு அவன் நிற்கும் விளம்பர தட்டி இன்று கிண்டியின் அடையாளங்களுள் ஒன்றாக ஆகிவிட்டது...
பல்வகை உணவுகளை மேசை மீது வைத்த அந்த ஊழியன், அபியை பார்த்து சிரித்தான்....
“சார் அந்த எஸ்.எஸ் சில்க்ஸ் விளம்பரத்துல நீங்க ‘பலவிதமா புத்தாடை,  பளபளக்குது பட்டாடை, பத்து மாடி கட்டடத்தில் பறக்குது பார் பாவாடை’னு ஆடுவீங்க பாருங்க, செம்ம சார்...” உடலை அசைத்தபடியே ஏழு கட்டை போட்டு, அதில் தாளம் தப்பாமல் பாடினான்....
“யோவ் அது பாவாடை இல்ல, பாலாடை...”
“ஆமா சார்... அதுவா முக்கியம்... நீங்க ஆடுறதுதான் முக்கியம்...”
ஒருவழியாக அவனை வெளியே அனுப்பிவிட்டு உணவு வகைகளை ருசித்து ரசிக்க தொடங்கினான் அபி.... இதுவரை நடித்த மூன்று விளம்பரங்களுக்கே, இவ்வளவு பில்டப் கொடுப்பதல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.... ஆனாலும், நம் மக்களை பொருத்தவரை தொலைக்காட்சியில் தோன்றினாலே அவன் பிரபலம் என்கிற அந்தஸ்த்தை அடைந்துவிடுகிறான்.... நல்ல பசி, நிறையவே ஆர்டர் செய்திருந்தான்.... கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் உள்ளே தள்ளி, ஒரு ஏப்பத்தோடு கை கழுவினான்.... “இப்போ சாப்பிட்ட கலோரிகளை எரிக்க, நாளைக்கு ஒரு இரண்டு மணி நேரமாவது வாக்கிங் போகவேண்டும்” மனதிற்குள் நினைத்துக்கொண்டே, வயிற்றை தடவிக்கொண்டான்.... 
ஒன்பது மணியாக இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கிறது... ஆளுயர நின்ற கண்ணாடி முன்பு நின்று, தன்னை ரசித்தான்... பாஸ் சொன்னதை போல நிஜமாகவே அந்த ஜெல் அவன் உடலை மினுமினுக்க வைத்தது.... தலையை சீவி, முகத்தில் பூச்சுகளை பூசி, இளம் சிவப்பு உதட்டில் அதற்கு ஏற்றார் போல சாயம் தேய்த்து நள்ளிரவு நாடகத்துக்கு தயார் ஆனான்...
அவசர அவசரமாக தன் பைக்குள் இருந்த மாத்திரை பெட்டியை எடுத்தான்... விதவிதமான மாத்திரைகளுக்கு மத்தியில் “செர்நோபில்” என்று பெயரிடப்பட்ட மாத்திரையை எடுத்து வாய்க்குள் போட்டு, தண்ணீரை குடித்தான்....
எல்லா வேலைகளும் முடிந்தது, மணியும் ஒன்பதை கடந்தது.... சில மணித்துளிகளில் கதவு தட்டப்பட, திறந்தான் அபி.... கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க அவசியம் இல்லாத அளவில், அந்த சிங்வி நிஜமாகவே வெள்ளை நிற மங்க்க்கி போலத்தான் இருந்தான்... செம்பட்டை படர்ந்த தலைமுடி, பெரிய மூக்கு, சிரித்தபோது பல் இடுக்குகளில் காணப்பட்ட பாக்கு கரை... அவன் வரும் முன்பே அவசரமாக எட்டிப்பார்த்த தொப்பை, கழுத்து கை என்று அங்கம் முழுவதும் தங்கம் மின்ன அறைக்குள் நுழைந்தான் அந்த சிங்வி.... நாற்பது வயதை கடந்திருக்கலாம், கண்களை திறக்க முடியாத அளவிற்கு போதை.... தத்தி தடுமாறி படுக்கையில் அமர்ந்த சிங்வி, அபியை பார்த்து அலங்கோலமாய் சிரித்தான்.... கதவை தாழிட்டு, அவன் அருகில் வந்து அமர்ந்தான் அபி.....
“லைட்டை அணைக்கவா?” அபி கேட்டான்.... அந்த கேட்டலில் கொஞ்சமும் வருத்தமோ, எரிச்சலோ தெரியவில்லை..... விளக்கு அணைக்கப்பட, அந்த இருட்டில் நடக்கவேண்டிய அத்தனையும் அந்த அறைக்குள் அவசர கதியில் நடந்தேறியது....

விடியும் முன்பே அவசரமாக அங்கிருந்து கிளம்பிவிட்டான் சிங்வி.... மணி எட்டு ஆகிவிட்டது, இன்னும் உறக்கம் கலையாமல் படுக்கையில் அரை நிர்வாண கோலத்தில் கிடக்கிறான் அபி....
“மூங்கில் தோட்டம்.... மூலிகை வாசம்....” பாஸ்கரின் அழைப்பு....
“சொல்லு பாஸ்...”
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?... சிங்வி ரொம்ப சந்தோஷப்பட்டான்... உன்ன மாதிரி ஒரு கம்பனிய அவன் பார்த்ததே இல்லைன்னு ஒரே பாராட்டு மழை.... ஐம்பதாயிரம் போடுறதுக்கு ஒத்துகிட்டான்.... இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சுட்டு வந்திடு...இன்னிக்கும் நைட் ஒன்பதுக்குதான் வருவான்”
“சரி பாஸ்... நான் பாத்துக்கறேன்.... எனக்கு தூக்கம் வருது, என்ன தூங்கவிடு” குழந்தையாய் பேசினான் அபி....
“ஓகேடா... தூங்கு... நான் அப்புறம் பேசுறேன்”....
பதினொரு மணிக்குத்தான் எழுந்தான்... எழுந்து முகம் கழுவி, அறைக்கு வெளியே இருந்த பூங்காவிற்கு சென்றான் அபி...
சுற்றிலும் பசுமை செழித்து காணப்பட்டது... நண்பகல் நேரமாகினும் இன்னும் சூரியன் சோம்பல் முறித்து முழுதாக வெளிவராமல் மேகக்கீற்றுகளுக்குள் ஒளிந்துதான் கிடக்கிறான்... பச்சை தாவரங்களின் மேல் விழுந்த வெண்பனி துளிகள் இயற்கை அன்னையின் ஆசிர்வாதமாய் தெரிந்தது.... புல் தரை நெடுகிலும் பனித்துளிகள் ஆதிக்கம் செலுத்தின, கரும்பச்சை புற்கள் தங்கள் செழுமையின் ஆணவத்தை நிமிர்ந்து நின்று வெளிக்காட்டியது....
மெல்ல அந்த புல் தரையில் அமர்ந்தான் அபி... புற்களின் நுனியில் படர்ந்திருந்த பனித்துளி அவன் உடலில் பட்டு, “ஹா...” சில்லிட வைத்தது....
பூங்கா முழுதும் குரோட்டன்ஸ் செடிகள் பலவும் நாயாகவும், யானையாகவும், சிங்கமாகவும், இதயமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.... வண்ண மலர்கள் புடைசூழ சில அரியவகை தாவரங்கள்.... எல்லோரும் புல்தரையை ஆக்கிரமிக்க, தன்னந்தனியாய் அமர்ந்திருந்தன சிமென்ட் இருக்கைகள்.... ஊஞ்சல்களில் ஒய்யாரமாக விளையாடிக்கொண்டிருந்தன குழந்தைகள்... அவர்களை நிச்சயம் மேற்தட்டு குழந்தைகள் என்று தனிமைப்படுத்தி சொல்ல வேண்டுமென அவர்கள் அணிந்திருக்கும் உடையும், கை மற்றும் கால் உரைகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் சொல்லாமல் சொல்லின.... உயிரோடு நின்றிருக்கும் அம்மாக்களை அவர்கள் “மம்மி”களாக்கி கொண்டிருந்தது மட்டும்தான் ஒரே உறுத்தல்.....
அப்போது அபியை பின்னாலிருந்து ஒரு குரல் அழைக்க,
“சார்... இது உங்க கர்சீப்பா?” கையில் வைத்திருந்த ஒரு காந்தி காலத்து கைக்குட்டையை நீட்டினான் புதியவன்....
“இது ரொம்ப பழைய சீன்’ல?” சிரித்தான் அபி....
“சார்.... என்ன?”
“இல்ல.... இது பழையகாலத்து சீன் சார்.... இப்போலாம் இதுமாதிரி காட்சிகள் விஜய் கதைகள்ல கூட வர்றதில்ல”
“ஐயோ சார்... நிஜமாவே இது கீழ கிடந்துச்சு, அதான் கேட்டேன்....” பதறிப்போனான் புதியவன்...
“சரி.... என்ன பேசனும் என்கிட்ட?... சொல்லுங்க.... நான் வந்து உட்கார்ந்த ஒரு மணி நேரத்துல, இந்த இடத்தை நீங்க ஒரு பத்து தடவை க்ராஸ் பண்ணிருப்பிங்க... அதுல ரெண்டு தடவை பேச வந்து, தயக்கத்துல போயிட்டிங்க.... சொல்லுங்க...” அபி அழகாய் பேசினான்.... வந்தவன் அபியின் பேச்சை கேட்கவில்லை, ரசித்தான்... அந்த உதட்டின் அசைவு அவனை உள்ளூற கலங்கடித்தது.....
“உட்காருங்க.... எவ்ளோ நேரம் நின்னுகிட்டே என்னைய பார்ப்பிங்க?” சிரித்தான்....
தயக்கத்தோடு பேச்சை மறந்தவனாய் அபியின் அருகில் அமர்ந்தான் புதியவன்.... அவனுக்கு இருபதுகளின் தொடக்கமாக வயது இருக்கலாம்... மெல்லிய தேகம்... பேரழகில்லை என்றாலும், ஒரு கவரும் வசீகரன்.... கண்களுக்குள் உருண்டோடிய “க்ரே” கருவிழிகள், தலையை ஆக்கிரமித்த சுருள் முடிகள் மட்டும் அவனை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி காட்டின....
“என்ன அமைதியாவே இருக்குற?.... இங்க என்ன பண்ணுற?.. உன் பேர் என்ன?” அபிக்கும் இப்போது பேச்சு துணைக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது.... சென்னையில் இருக்கும்போது ஒரு நாளைய பெரும்பகுதியை பாஸ்கரின் பேச்சே ஆக்கிரமித்துவிடும்... இப்போது இந்த அமைதி ஒருவகையில் அபிக்கு உறுத்தலாகவே தெரிந்தது....
“நான் யுவராஜ்... கேட்டரிங் முடிச்சுட்டு, இப்போ ஒரு ட்ரெயினிங்’க்காக இங்க வந்தேன்.... நாளையோட ட்ரெயினிங் முடியுது.... சொந்த ஊர் விழுப்புரம்.... அப்பா, தாசில்தார் ஆபிஸ்’ல....”
இடைமறித்த அபி, “ஏய் ஏய்..... போதும்.... நான் என்ன உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணா பாக்க போறேன்?... நீ பாட்டுக்கு உன்னோட ஹிஸ்டரி, ஜியாக்ரபி எல்லாம் சொல்ல ஆரமிச்சுட்ட”...
அசடு வழிய சிரித்தான் யுவராஜ், சிரிக்கும்போது இன்னும் கொஞ்சம் அழகாக தெரிகிறான்....
“உங்களைப்பத்தி சொல்லுங்களே.... நீங்க என்ன வேலை பாக்குறீங்க?” ‘வேலை’ என்ற வார்த்தையை சொல்லும்போது எச்சிலை விழுங்கிக்கொண்டான் யுவி....
“நான் நாசா’ல வேலை பாக்குறேன்....”
“நாசா’லையா? அங்க என்ன வேலை?”
“ராக்கெட்டுக்கு பெயின்ட் அடிக்குற வேலை...”
“விளயாடாதிங்க சார்.... நைட் உங்க ரூம்’க்கு வந்தாரே ஒரு ஆள், அவர் யாரு?”
“அவரு ராக்கெட்டுக்கும் பெயின்ட் அடிக்கனுமாம்... அதான் நைட் அடிச்சுட்டேன்” சிரித்தான் அபி....
“என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியல.... கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க...” தலையை சொறிந்துகொண்டு கேட்டான் யுவி....
“இதுக்கு மேல விளக்கமா சொன்னா படிக்குறவங்க முகம் சுளிக்க ஆரமிச்சிடுவாங்க.... உனக்கு இப்போ என்ன தெரியணும்?... ஆமா, நான் ‘கால் பாய்’ தான்... நைட் வந்தவரு என் கஸ்டமர் தான்.... இந்த விஷயம் இந்த ஹோட்டல்ல வேலை பாக்குறவங்க நிறைய பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.... நான் போனபிறகு அதைப்பத்தி பேசி சிரிப்பாங்கன்னும் தெரியும்... சிலபேர் அதுக்காக என்கிட்ட வழியுறதும் தெரியும்.... ஒரு பத்து ரூபாய் கர்சீப்பை வச்சுகிட்டு கச்சேரிய முடிக்கலாம்னு சிலர் ஆசைப்படுறதும் எனக்கு தெரியும்....” எவ்வளவு பெரிய விஷயத்தை அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டு, தன் கையில் வைத்திருந்த ஆர்பிட்டை எடுத்து வாயில் போட்டு அசைபோடத்தொடங்கினான் அபி....
யுவி அந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில மணித்துளிகள் ஆனது.... அதுவும் “கர்சீப் வச்சு கச்சேரி முடிக்க ஆசைப்படும்” ஆசையை அவன் புரிந்துகொண்டது அவனுள் பேரதிர்ச்சியாய் உறைந்தது....
“ஐயோ நான் அப்டி இல்லங்க.... நீங்க தப்பா புரிஞ்சுட்டிங்க”
“சரி விடு.... வேற எதாச்சும் பேசலாம்...”
“நீங்க ஏன் இப்டி.....?” கேள்வியை இழுத்தான் யுவி....
“இங்க பார் யுவி.... அம்மா ஹார்ட் பேஷன்ட், அக்கா கல்யாணம், தம்பி படிப்பு... இப்டி பொய்யல்லாம் நான் சொல்ல விரும்பல.... எனக்குன்னு யாரும் இல்ல... நான் சின்ன வயசுலேந்து படிக்கல... ஒரு ஹோட்டல்ல வேலை பார்த்தேன்... அந்த ஹோட்டல் முதலாளி தினமும் அவர்கூட படுக்க சொல்வாரு.... எனக்கு ஒன்னும் தப்பா தெரியல... அப்டி படுத்ததால எனக்கு அதிகம் வேலை சொல்ல மாட்டாரு, யாருக்கும் தெரியாம பிரியாணி வாங்கி கொடுப்பாரு... அப்போ ஹோட்டலுக்கு வந்த ஒருத்தர்  ‘ஆள் நல்லா இருக்க, மாடலிங் சான்ஸ் தரேன்’னு சொல்லி படுக்க சொன்னாரு... படுத்தேன்... அப்டியே கொஞ்சம் கொஞ்சமா மாடலிங்’ல நுழைஞ்சேன்....
படிக்கலனாலும், படிச்ச மாதிரி டிரெஸ் பண்ண கத்துகிட்டேன்.... இங்கிலீஷ்’ல ஒரு பத்து வார்த்தை தெரிஞ்சுகிட்டேன்.... இப்போ கை நிறைய காசு, அலட்டிக்காத வாழ்க்கை.... முன்னாடிலாம் படுக்குறதுக்கு நூறுகள் தான் கெடைக்கும், அதிசயமா ஆயிரம் கிடைக்கும்... இப்போ மாடலிங் போனதால, ஒருநாளைக்கு ஐம்பதாயிரம் வரைக்கும் போகுது... இத்தனைக்கும் நான் நடிச்சது மூனே விளம்பரம் தான்....
இப்போ ஒரு படத்துல ஹீரோவுக்கு ப்ரெண்ட்ஸ் கேரக்டர் ஒன்னு கொடுக்குறேன்னு சொல்லி இருக்காங்க.... அதுல நடிச்சுட்டா, அப்புறம் நான் ஒரு சினிமா ஸ்டார்... அப்போ என் வால்யூ லட்சங்களுக்கு போய்டும்...” சிரித்தான்....
அபி எதையும் மறைக்க விரும்பவில்லை.... இப்படி பேசிடத்தான் ஆள் இதுவரை அவனுக்கு கிடைக்கவில்லை.... சிலரை பார்த்ததும், சில வார்த்தை பேசியதும் ஒரு குருட்டு நம்பிக்கை அவர்கள் மீது வரும்... அப்படி ஒரு நம்பிக்கை யுவி மீது அபிக்கு...
யுவியின் கண்கள் லேசாக கலங்கி இருந்தன, அபியின் வாழ்க்கை யுவிக்கு ஒரு வகையில் சோகத்தை ஏற்படுத்தியது.... இன்னும் சில நேரம் இருவரும் பேசினார்கள், ஆனால் இந்த வாழ்க்கையை பற்றியதல்ல....
அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள எத்தனையோ பொதுவான விஷயங்கள் இருந்தது... “சிம்புவுக்கும் ஹன்சிக்காவுக்கும் இப்போ என்ன ஆச்சு?” கலைத்துறையில் தொடங்கி, “விஜயகாந்த் பையன் அரசியலுக்கு வரானாமே?” அரசியலுக்குள் நுழைந்து, “பொன்னியின் செல்வனில் கடைசியா பெரிய பழுவேட்டரரையரை கொன்னது யாரு? இலக்கியத்தில் முற்றுபெற்றபோது நேரம் மாலை ஐந்து ஆகிவிட்டது... இருவரும் மதிய உணவை மறந்தனர், தாகத்தை துறந்தனர்.... செவிக்கு உணவில்லாத பொழுது தானே வள்ளுவன் கூட வயிற்றுக்கு ஈய சொல்கிறான், அதனால் செவியின் உணவே இருவருக்கும் ஒரு அறுசுவை விருந்தாக தோன்றியது....
“மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்....” அந்த நேரத்துக்கு பொருத்தமாகவே ஒலித்தது.....
“சொல்லு பாஸ்....”
“என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு?.... சாப்டியா?”
திருடன் அவன், ஒரு வார்த்தையில் என் மொத்த சரித்திரத்தையே புட்டு வைத்துவிடுவான்....
“சாப்டேன் பாஸ்... லைட்டா...”
“சரி... காலைல சிங்வி பெங்களூர் போகணுமாம்... அதான் நைட் சீக்கிரமே வரான்... அனேகமா எட்டு மணிக்கு வந்திடுவான்.... ரெடியா இருந்துக்கோ...”
“சரி பாஸ்... டன்”
அழைப்பை துண்டித்துவிட்டு, யுவியை பார்த்தான் அபி...
“ஓகே யுவி... நான் கெளம்புறேன்....”
யுவியின் முகம் சிறுத்தது....
“அபி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத... இதல்லாம் விட்டுடுவே?.... வாழ்க்கைல சந்தோஷமா வாழ எவ்வளவோ விஷயம் இருக்கு... உனக்கு பிடிச்ச ஒருத்தனை லவ் பண்ணி, அவன் கூட வாழ்றது எவ்ளோ சந்தோசம் இருக்கும் தெரியுமா?”
சிரித்த அபி, “ஹ்ம்ம்... ‘கண்ணே, மணியே, கலியுக பதியே’னு டயலாக் பேசிட்டு வாழ்ந்தா, இப்டி சொகுசா வாழமுடியும்னு நினைக்குறியா?... இதல்லாம் விட்டுட்டு உன்கூட பத்து பாத்திரம் தேய்க்க வர சொல்றியா?”
யுவியின் முகம் இன்னும் சுருங்கியது, முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது... தான் செய்யும் வேலையை அவன் இவ்வளவு கேவலமாக நினைப்பது அவனுள் ஒரு சோகத்தை உண்டாக்கியது... தலையை கவிழ்த்து நின்றான்...
“ஏய், சும்மா ஜாலிக்கு சொன்னேன்... நீ தப்பா எடுத்துக்காத....” சொல்லிவிட்டு யுவியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு ஓடினான் அபி.... எதிர்பாராத நொடியில் நடந்த அந்த நிகழ்வை, யுவி உணர்வதற்குள் அங்கு காட்சிகள் கலைக்கப்பட்டு  கண்களை விட்டு மறைந்துவிட்டான் அபி.... கன்னத்தை ஒருமுறை தடவி பார்த்துக்கொண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டான் யுவி....
அறைக்கு சென்ற அபி, இன்றும் வழக்கம்போல அதே குளியல், அதே ரோஜா திரவம், அதே ஷைனர்.... எட்டு மணி ஆகிட, ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் அதே “செர்நோபில்”....
சில மணித்துளிகளில் கதவு தட்டப்பட, கதவை திறக்கும் முன்பே அந்த அறையை ஆக்கிரமிக்க தொடங்கியது சிங்வி போட்டிருந்த வாசனை திரவியம்.... அது ஒரு வகையான மல்லிகையின் நறுமணமாக தோன்றியது... திறந்த கதவினுள் அவசரமாக நுழைந்த சிங்வி, அதே அவசரத்தோடு கதவையும் தாழிட்டான்... நேற்றை போல இன்று மதுவின் நெடி இல்லை, கண்களில் போதை இல்லை, உடலில் தடுமாற்றம் இல்லை.... வாய் நிறைய புன்னகையோடு, பற்களின் இடுக்குகளை நிரப்பியிருந்த பாக்கு கறையோடும் அபியை நெருங்கி வந்தான்.... படிய வாறிய தலையும், யார்ட்லி பவுடரால் கமகமக்கப்பட்ட முகமுமாக இன்று நான்கு வயது குறைந்தவனாக தெரிகிறான் சிங்வி.... ஆனாலும், வெள்ளை குரங்கின் வயது குறைந்தால் மட்டுமென்ன அது மானாகவா மாறிடப்போகிறது?....
நெருங்கி வந்தவன் ஆசையோடு அபியை கட்டி அணைத்தான்.... அணைத்தபடியே அவன் கைகளை அபியின் முதுகில் படரவிட்டான்.... படர்ந்த கைகள் பக்குவமாக சில பாகங்களை ஆக்கிரமிக்க தொடங்கியது.....
“இதல்லாம் விட்டுட்டு சந்தோஷமா ஒரு காதலனோட வாழ்ந்தா என்ன?” யுவராஜின் கேள்வி அபியை இந்த நேரத்தில் தொந்தரவு செய்தது.... இப்போது சிங்க்வியின் கை தொடும் இடமெல்லாம் அவனுக்கு கம்பளி பூச்சி ஊர்வதை போல தெரிகிறது, மூச்சு காற்று படும் இடமெல்லாம் திராவக நெடி படர்வதை போல தோன்றுகிறது....
அபியின் இந்த எந்த எண்ணமும் புரியாமல், கையால் களவியலின் முதற் படியை தாண்டிவிட்டான் சிங்வி.... இப்போது, அடுத்த படியில் அடியெடுத்து வைக்க அபியின் கன்னங்கள் இரண்டிலும் தன் கைகளை வைத்து, மெல்ல முத்தம் கொடுக்க ஆயத்தமானான்.... நேற்றைய இரவின் நெடுநேரத்தை தக்க வைத்தது இந்த முத்தம்தான்... நேற்றைய கனவோடு, தன் உதட்டால், அபியின் தேனில் ஊறவைத்த சுவைமிக்க செர்ரி பழத்தை ருசிபார்த்தான்.....
கணநேரத்தில் சிங்க்வியை உதறித்தள்ளிய அபி, நேராக குளியலறைக்குள் விரைந்து சென்றுவிட்டான்.... உதறித்தள்ளப்பட்ட சிங்வி, மெல்ல சுதாரித்து எழுந்து, நடப்பது புரியாமல் திகைத்து அமர்ந்தான்..... குளியலறைக்குள் கேட்ட சத்தங்களின் வாயிலாக, அபி வாந்தி எடுப்பது போல தோன்றியது.... “ஏன்? எதற்கு? அடுத்தது என்ன?” போன்ற கேள்விகள் மனம் முழுதும் பரவிட, கசங்காத படுக்கை விரிப்பின் மீது அமர்ந்து கசங்கிய மனதுடன் யோசித்துக்கொண்டு இருக்கிறான் சிங்வி.....
சில நிமிடங்களில் கையில் துண்டோடு, முகத்தின் தண்ணீரை துடைத்தபடியே வெளியே வந்தான் அபி....
“பரவால்ல அபி.... நீ ரெஸ்ட் எடுத்துக்கோ... நாளைக்கு பார்த்துக்கலாம்” இப்படி சிங்வி சொல்வான் என்று எதிர்பார்த்து, மெல்ல நடந்து சிங்வி அருவில் வந்து நின்று “சாரி சார்” என்றான் அபி.....
அந்த “சாரி”யை சிறிதும் பொருட்படுத்தாத சிங்வி, அபியின் முகத்தை கூட நேராக பார்த்திடாமல் அப்படியே அவனை கட்டி அணைத்தான்.... கட்டி அணைத்த வேகத்தோடு, உடைகளை களைந்து முழுவதுமாக அபியை ஆக்கிரமிக்க தொடங்கினான்.... இந்த செயலால் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான் அபி... “மனிதாபிமானம் கிலோ என்ன விலை?” என்று கேட்கும் மனதினை உடைய ஒருவனிடம், அபி மேல்நினைத்த கரிசனத்தை எதிர்பார்த்தது முட்டாள்த்தனம்தான்....
கண்களில் எட்டிப்பார்த்த நீர்த்துளிகளை அடக்கிக்கொண்டு, மெல்ல சிங்க்வியை விலக்கிய அபி , “ஒரு நிமிஷம்!” என்று மட்டும் சொல்லிவிட்டு, மேசை மீது இருந்த “செர்நோபில்” மாத்திரையை பிரித்து வாய்க்குள் போட்டபடி, மீண்டும் சிங்வி முன்பு வந்து ஒரு பொம்மை போல நின்றான்.... இனி சிங்வி ஆட்டுவிக்கப்போகும் ஒரு விளையாட்டு பொம்மைதான் அபி.... உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்து போக தொடங்கியது, மனம் மரத்துப்போய் சில நிமிடங்கள் ஆகிவிட்டதையும் நாம் அறிவோம்.....
கட்டிப்பிடிப்பு, முத்தங்கள் தொடர்ந்து முழுமுதற் உடல் தேவையும் பூர்த்தி செய்யப்படும் வரை ஒரு மரமாகவே மாறிப்போனான் அபி.....
விடிந்தது.....
இன்றும் “மூங்கில் தோட்டம்”தான் அவனை எழுப்பியது....
“என்ன ஆச்சு அபி உனக்கு?.... சிங்வி எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?.... இத்தனை வருஷ சர்வீஸ்ல இதுவரை இப்படி ஒரு கம்ப்ளைன்ட் எனக்கு வந்ததில்லை.... ரொம்ப வருத்தப்பட்டான்.... உனக்கு பிடிக்கலைனா உன்ன யாரும் இதுக்கு கட்டாயப்படுத்தல.... எச்சிக்கைய உதறுனா, அதை பொறுக்க ஆயிரம் காக்கா வரும்.... அதுல நீயும் நானும் ஒன்னும் சிறப்பு அந்தஸ்து பெற்ற காக்கா இல்ல.... ஊட்டி ட்ரிப்’க்கு முதல்ல நான் யோசிச்சது நம்ம சித்தார்த்த’தான்... உன் மேல இருந்த ஒரு ஸ்பெஷல் கேரால உனக்கு ஓகே பண்ணேன்.... காரியத்தையே கெடுத்துட்ட.... இன்னிக்கு நைட் சிங்வி வரமாட்டான்.... பெங்களூர் போறான், நாளைக்கு நைட் தான் அடுத்த வேலை உனக்கு.... அதனால, இன்னிக்கு முழுக்க யோசிச்சு நாளைக்கு காலைல விருப்பமில்லைனா சொல்லிடு..... விருப்பமில்லைனா தயங்காம சொல்லிடு, நாளைக்கே சித்தார்த்த அனுப்பி வச்சிடுறேன்....”
“சாரி பாஸ்கர்”
அபி “சாரி” சொல்வதற்கு முன்பாகவே பாஸ்கர் அழைப்பை துண்டித்துவிட்டான்.... அந்த “சாரி” கேட்டிருந்தாலும் கூட பாஸ்கர் அதை பொருட்படுத்தியிருக்க மாட்டான் என்பதை அபி அறிவான்.... அவனை பொருத்தவரை முதலில் “தொழில்”தான் முக்கியம், நட்பெல்லாம் நாலு படிகளுக்கு கீழே தான்.... ஆனாலும் பாஸ்கரின் வார்த்தைகளில் உள்ள வேகத்தை, அதில் உள்ள வீரியத்தை அவன் புரிந்துதான் பேசியிருப்பானா?....
ஏனோ மனம் ஒரு நிலையில் நிற்கவில்லை.... குழப்பமும், கோபமுமாக வந்தது.... ஆனால், அந்த கோபம் யார் மீது? என்று அவனுக்கு புரியவில்லை..... இப்போ வலியை ஏற்படுத்தும் பேச்சை பேசிய பாஸ்கர் மீதா?... நிச்சயமாக இல்லை... குழந்தையாக இருக்கும்போதே இறந்து போன பெற்றோர் மீதா?, தன் வறுமையை பயன்படுத்தி படுக்கைக்கு பழக்கிய உணவக முதலாளி மீதா?, படுத்தால் காசு பார்க்கலாம் என்று ஒரு தொழிலை சொல்லித்தந்த மாடலிங் வழிகாட்டி மீதா?.... இல்லையென்றால், இவ்வளவு காலமும் குழப்பமே இல்லாமல் சென்ற வாழ்க்கையில் குழப்பமான சிந்தனைகளை விதைத்த அந்த யுவராஜ் மீதா?.....
புரியவில்லை.... ஆனால், இந்த புரியாத கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்கும்? என்பதை அவன் அறிவான்.... அவசர அவசரமாக முகம் கழுவி, காலைக்கடன்களை முடித்துவிட்டு அபி சென்ற இடம், முந்தைய நாள் அவனுக்கு முக்தி கிடைத்த அதே பூங்காவிற்கு..... நேற்று ஒரு கைக்குட்டை மூலம் ஒரு புதிய நட்பை தன் வாழ்க்கைக்குள் நுழைத்த அதே இடத்திற்கு சென்றான்.... நேற்று முழு நேரமும் அமர்ந்திருந்த அந்த இடத்தில் மட்டும் புற்கள் சாய்ந்து, கொஞ்சம் நிற்க தடுமாறியபடி படுத்திருக்கிறது.... சுற்றிலும் கவனித்தான், யுவராஜ் இருப்பதற்கான அறிகுறிகள் துளியும் தென்படவில்லை.... அங்கேயே அமர்ந்து, நேற்று பார்த்த அதே காட்சிகளை பார்த்தான்.... ஆனால், அதை ரசிக்கத்தான் அவன் மனம் ஒரு நிலையில் நிற்கவில்லை...
அவன் தலையை உரசி சென்ற ஒரு பட்டாம்பூச்சி கூட எரிச்சலை ஏற்படுத்தியது.... ஓடி விளையாடிய குழந்தை ஒன்று அவன் அருகில் வந்து சிரித்தபோது கூட, அந்த சிரிப்பை அவனால் ரசிக்கமுடியவில்லை.....
அவன் நினைவெல்லாம் அவன் வாழும் வாழ்க்கை பற்றியது.... எவ்வளவோ பணம்!, சொகுசு வாழ்க்கை!... இதுவா சந்தோசம்?.... நேற்று இரவு சிங்க்வியை பொருத்தவரை அபி  ஒரு “சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை”.... ஒருவேளை நேற்று  ஹார்ட் அட்டாக் வந்து இறந்திருந்தால் கூட,  இறந்த பின்பு பிணத்துடன் உறவு கொண்டபிறகுதான் சிங்வி அடுத்தவர்களுக்கு தகவல் சொல்லி இருந்திருப்பான்.... சிங்க்வியை பொருத்தவரை அன்றைய இரவுக்கு கொடுத்த காசுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.... சரி, எவனோ ஒரு வடநாட்டுக்காரன் அப்படி நினைப்பதில் ஒரு நியாயம் கூட இருக்கலாம்.... இத்தனை காலம் பழகிய பாஸ்கரை பொருத்தவரை கூட, தான் ஒரு “எச்சில் பொறுக்கும்” காக்கையாக இருந்திருப்பதில்தான் அபியின் வலி இன்னும் அதிகமானது....
ஒருவகையில் யுவராஜ் சொன்னது உண்மைதான்.... தனக்கென ஒருவன் இருந்திருந்தால், இவ்வளவு ஆகி இருக்காது.... அந்த ஒருவன் ஏன் யுவராஜாக இருக்க கூடாது?.... யுவராஜின் பேச்சிலும், பார்வையிலும் அவனுக்கும் அபி மீது காதல் இருப்பதை அவனால் உணர முடிகிறது.... ஏனோ இப்போது அவனை பார்க்க வேண்டும், பேச வேண்டும், கவலைகளை சொல்ல வேண்டும் என்று அபியின் மனம் முழுக்க எண்ணங்கள் விரிந்தன.... அவனை கட்டி அணைத்து, அந்த அணைப்பின் அரவணைப்பை உணரவேண்டும் என்று என்னன்னவோ அவனுக்குள் தோன்றியது.... ஆனால், இன்னும் யுவராஜை காணவில்லை.... நேரமும் மதியத்தை தாண்டி விட்டது.... மெல்லிய சாரல்கள் பெய்ய தொடங்கியபோதே சிறுவர்கள் கூட்டம் களைந்து தத்தமது பெற்றோர்களின் சேலைகளுக்குள் பதுங்கிக்கொண்டனர்.... சாரல் மழை இப்போது கனமான தூரல்களை கடந்து, பெரு மழையாக பெய்ய தொடங்கிவிட்டது.... பெய்த மழை, அபியின் காத்திருப்புக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.....
எழுந்து சென்று அறைக்குள் நுழைந்து, ஈரமான உடைகளை கூட மறந்தவனாக படுக்கையில் சாய்ந்தான் அபி....
கண்களை மூடினாலும் கூட, காட்சிகள் அவன் மனத்திரையில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.... “டக்... டக்... டக்...” கதவு தட்டப்பட்டது....
யாராக இருக்கும்?... மதிய உணவு எடுத்து வருகிறார்களோ?.. நான்கு மணிக்கா மதிய உணவு?, அதுவும் ஆர்டர் செய்யாமல் எப்படி எடுத்து வருவார்கள்.... உடல் முழுக்க அசதி அபியை எழ விடாதபடி படுக்கையில் கிடத்திவிட்டிருக்கிறது.....
மீண்டும், “டக்... டக்.... டக்...”
அலுப்புடன் மெல்ல எழுந்து கதவை திறந்தான், முகம் முழுக்க சிரிப்புடன் யுவராஜ் நிற்கிறான்... நேற்றைப்போலத்தான், ஆனால் இன்று அவன் கையில் கைக்குட்டை இல்லை.... மழையில் தொப்பலாக நனைந்திருக்கிறான்.... மழையில் நனைவதற்காகவே படைக்கப்பட்ட வெள்ளை சட்டைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில், ஆடை முழுக்க மழை நீர் ஆக்கிரமித்து கிடக்கிறது.... யுவராஜின் கழுத்துக்கு கீழான பகுதிகள் முழுவதும், ஒளிந்து நின்று அபியை பார்ப்பது போல இருந்தது.... ஷைனர் இல்லாமலேயே யுவராஜின் சருமம் பளபளத்தது....
“ஏய், என்ன இது சர்ப்ரைஸ்?.... ஏன் இப்டி நனஞ்சிருக்க?” யுவராஜ் துடைத்துக்கொள்ள துண்டை கொடுத்தவாறே கேட்டான் அபி....
“இல்ல அபி... இன்னிக்கு கொஞ்சம் வேலை அதிகமானதால பார்க்குக்கு வரமுடியல.... நீ அங்க வந்திருப்பியோன்னு இப்போதான் போய் பார்த்தேன், காணல.... அதான் இங்க வந்தேன்”
“ஹ ஹ ஹா.... விக்ரமன் படத்து ஹீரோயின் மாதிரி நான் மழைல நனைஞ்சு உனக்காக பார்க்ல காத்திருப்பேன்னு நினைச்சியா?” சிரித்தான் அபி....
அபியின் தலையை தொட்டுப்பார்த்த யுவராஜ், அங்கிருந்த ஈரத்தை தன் விரல்களால் பதம் பார்த்துவிட்டு, “விக்ரமன் படத்து ஹீரோயின் பத்தி எனக்கு தெரியாது... ஆனால், என்னோட ஹீரோ இவ்ளோ நேரம் எனக்காக அங்க காத்திருந்தான்னு அவன் தலைய நனைச்ச தண்ணிய பார்த்தாலே தெரியுது”
அபி அசடு வழிய சிரித்து, அவசரமாக தலையை துடைத்தான்... இருவரும் நேரடியாக தத்தமது ஆசைகளை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்ளவில்லையே தவிர, இருவரின் மனதிலும் உள்ள எண்ணங்கள் அப்பட்டமாய் வெளியில் தெரிந்தது....
இயல்பான பேச்சுதான் தொடங்கியது...
“இன்னிக்கு மழை ஓவர்’ல?.... இன்னும் ஒரு வாரத்துக்கு இப்டிதான் இருக்குமாம்... கோயம்பத்தூர்’ல கூட அடிச்சு ஊத்துதாம்...” வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் ரமணன் போல பேச்சை தொடங்கினான் யுவராஜ்....
மழை பற்றிய பேச்சு இயற்கைக்கு போனது, அதிலிருந்து நேராக விவசாயத்துக்கு போனது, அப்படியே வலது பக்கம் திரும்பி பேச்சு ஒரு புள்ளியில் நின்றபோது விலைவாசி பற்றி தலைப்பு ஓடிக்கொண்டு இருந்தது....
“அபி, நான் ஒன்னு கேட்பேன், தப்பா நினைக்க மாட்டியே?”
“தப்பா நினைக்காத அளவுக்கு எதுவும் கேட்டின்னா, நான் தப்பா நினைக்க மாட்டேன்....” சிரித்தான்...
“நீ பொதுவா என்ன வாங்குவ?”
“அதுவா?.... ரொம்ப தூரம் நடந்தா மூச்சு வாங்குவேன், வேலை எதுவும் இல்லைனா பேசியே உயிரை வாங்குவேன்... அப்புறம்....”
“ஐயோ போதும்.... நல்ல ஜோக் தான், ஆனால் டைமிங் சரியில்ல.... நான் கேட்க வந்தது நீ எவ்ளோ சார்ஜ் பண்ணுவன்னு?”
“அது எனக்கு தெரியும்!.... சும்மா உன்ன வெறுப்பேத்துனேன்.. அது ஆளை பொருத்து ரேட் மாறும்... குறஞ்சபட்சம் இருபதாயிரம்.... அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரேட், ஒரு நைட்டுக்கு’ன்னா ஒரு ரேட், வயசான ஆளுங்களுக்கு அதிக ரேட்.... இப்டி மாறும் எல்லாம்...” கிட்டத்தட்ட சரவண பவன் விலைப்பட்டியல் போல வரிசையாக வாசித்தான் அபி.....
சில மணித்துளிகள் யோசித்த யுவராஜ், “எனக்குன்னா என்ன ரேட்?” என்றான்....
திகைத்து யுவராஜின் முகத்தை பார்த்த அபி, “என்னது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்....
“இல்ல.... என்ன மாதிரி பசங்கன்னா எவ்ளோ ரேட்’னு கேட்டேன்...” சமாளித்தான்....
“ஹ்ம்ம்... மினிமம் ரேட் தான்... இருபதாயிரம்....” சிரித்தான் அபி....
“நான் நேத்து சொன்னதை யோசிச்சியா அபி?... காதல்’ன்றது...” யுவராஜ் தொடங்கும்போதே இடைமறித்தான் அபி...
“ஐயோ... காதல் பத்தி டயலாக் பேசப்போறியா?.... வேணாம்... ப்ளீஸ்.... காதல்’ன்றது கடலை மிட்டாய் மாதிரி... அது வாய்ல போட்டா இனிக்கும், கீழ போட்டா உடையும்’னு மொக்கை டயலாக் பேசி படிக்குறவங்கள இம்சை படுத்திடாத...”
யுவராஜும் சிரித்துவிட்டான்.....
தொடர்ந்த அபி, “ஆனால், தெளிவான ஒரு முடிவை நான் எடுத்துட்டேன்.... இனி காதல்தான் என் வாழ்க்கை.... நான் காதலிக்க போற ஒருத்தனோட மட்டும்தான் இனி என்னோட இரவுகள் கழியும்....” என்று சொன்னவாறே மெல்ல யுவராஜின் அருகில் வந்தான்....
அப்படியே அவனை கட்டி அணைத்து, மழையின் குளிருக்கு இதமான உதட்டு ஒத்தடம் கொடுத்தான்...... முதல் முறையாக அபி தன்னை முழு மனதுடன் அடுத்த ஆடவனுக்கு கொடுக்கிறான்... இந்த இரவில் நடக்கும் உறவில், செயற்கை வாசனை திரவியங்கள் மணக்கவில்லை, ஷைனர்கள் பளபளக்கவில்லை, உறவின் நேரத்தை நீட்டிக்க மாத்திரைகள் விழுங்கப்படவில்லை.....
காலை எழும்போது, கண்களை விழிக்கும் முன்பே அருகில் படுத்திருந்த யுவராஜை தொட்டுப்பார்த்தான்.... அபியின் கைகளுக்கு யுவராஜ் அகப்படவில்லை.... திடிக்கிட்டு விழித்து, எழுந்து அமர்ந்து பார்த்தான்.... யுவராஜை காணவில்லை.... எழுந்து சென்று பார்க்கலாம் என்று எழுந்தபோது, அவனை அதிகம் தேட வேண்டாதபடி மேசையில் ஒரு காகிதம் காற்றில் தடதடத்துக்கொண்டு இருக்கிறது....
கொஞ்சம் பதட்டத்துடனும், அதிக குழப்பத்துடனும் அதை எடுத்து பிரித்து பார்த்தான்....
“அன்புள்ள அபி,
           நான் கிளம்புறேன்.... உன்னை ஏமாத்திட்டு போறதா நினைக்காத... எனக்கு உன்னோட படுக்க ஆசை, உனக்கு என்கூட பழக ஆசை... ரெண்டுமே நடந்துடுச்சு.... காதலுக்கு உண்மையா இருக்க நீ ஒன்னும் ராமனும் இல்ல, உனக்கு வாழ்க்கை கொடுத்து காதலிக்க நான் ஒன்னும் தியாகியும் இல்ல....
உன் எண்ணப்படி ஒரு நல்ல காதலன் கிடைக்க நான் வாழ்த்துறேன், இறைவனை வேண்டுகிறேன்....

                                                     இப்படிக்கு,
                                            உன் ஒருநாள் காதலன், யுவராஜ்.....”

கண்களை மீறி கண்ணீர் துளி வழிந்தது....
“மூங்கில் தோட்டம்...” பாஸ்கரின் அழைப்பு...
“என்ன அபி யோசிச்சியா?”
கண்களை துடைத்துக்கொண்டு, தொண்டையை சரி செய்துகொண்டு, சிரித்தபடியே பதில் சொன்னான் ‘கால் பாய்’ அபிமன்யூ “ஓகே பாஸ்... நைட் சிங்க்விய வர சொல்லிடு”.... (முற்றும்)

28 comments:

  1. கதையில் கேலியும், கிண்டலும், நகைச்சுவையும் தூக்கலாய் இருக்கவும், முடிவும் அப்படி இருக்கும் என்று நம்பிவிட்டேன். முடிவு எப்பவும் போல தான்.
    கடைசி சில பத்திகளைப் படிக்கும்போது, "காதலின் உன்னதம், அன்பின் மகத்துவம்" அப்படின்னு Cliche வசனங்கள் பேசி, நீங்க கிண்டல் பண்ண விக்ரமன் பட கதைகளைப் போல கிளைமாக்ஸ் இருக்கும்னு நினைச்சேன். ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட் வெச்சுட்டீங்களே..

    பாவம் அந்த அபி. இத்தன நாளும் தானுண்டு, தன் 'தொழில் (!?)' உண்டுன்னு கவலையில்லாம சுத்திட்டு இருந்தவன். இனிமே பழைய மாதிரி இருக்கவும் முடியாது, அதைவிட்டு வெளியேறவும் முடியாது.

    ஒரு 'கால் பாய்'இன் அவலத்தை உங்க கதைல தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சது.

    ஆனா ஒன்னு, இப்படி ஏமாத்திட்டு திரியற 'யுவராஜ்'களையும், கதாநாயகன விதம் விதமா 'torture' பண்ற உங்கள மாதிரி கதாசிரியர்களையும் ஒரே மரத்தில கட்டிவெச்சு உதைக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொன்னா கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.... வழக்கமா யோசிக்குற மாதிரி யோசிக்காம, வித்தியாசமா யோசித்தால்தானே வாசகர்களை திருப்தி படுத்த முடியுது..... நன்றிப்பா....

      Delete
    2. but romba paavama irukupa.. yuviya kettavana mudichuruka venam..

      Delete
    3. வித்தியாசமா யோசிக்கறது இருக்கட்டும். உங்க 'வித்தியாசமான' மூளை ஏன் இப்படி கொலைவெறியாவே யோசிக்குது? எல்லா கதைகளிலும் இப்படி நெகடிவ் முடிவு இருந்தா, அது வாசிக்கறவங்க மனசுல ஒரு நம்பிக்கையின்மையையும், பயத்தயும் ஏற்படுத்தாதா?

      Delete
    4. எல்லா கதைகளும் அப்படி இருப்பதில்ல.... நான் எழுதிய இறப்பில்லா கதைகள் எவ்வளவோ இருக்கே... சில நேரங்களில் நாம சொல்ல வரும் விஷயத்தை அழுத்தமா சொல்ல அப்படி முடிவுகளை வைக்க வேண்டி இருக்கும்.... இன்னொரு வகைல இந்த சமுதாயத்திடம் "இப்படி கதைகளில் கூட செத்துக்கொண்டிருக்கும் எங்க இளைஞர்களுக்கு எப்போதான் விடை சொல்ல போகிறீர்கள்?" என்ற கேள்வியையும் வைக்க முடிகிறது.... பயம் நிச்சயம் இதனால் உண்டாகாது... ஒரு விழிப்புணர்வு, எச்சரிக்கை, கவனம் எல்லாம் வரும் என்றே கருதுகிறேன்...

      Delete
  2. முடிவுகள் எதார்த்தமாய் இருந்தாலும் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட சம்பவங்களே பெரும்பான்மையாக நடந்தாலும் ஒருவனுக்குள் மனமாற்றம் ஏற்படும்போது அவனது வாழ்க்கையும் மாறவேண்டும் இல்லாவிடில் அது மிகபெரிய தாக்கத்தை உண்டாக்கி ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும். கண்டிப்பாக நானாக இருந்தால் அபியை முழுமனதோடு காதலித்து கைகோர்திருப்பேன்... யூவி செய்த துரோகதிற்கு மன்னிப்பு கிடையாது..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.... நீங்க சொல்றது சரிதான், சில நேரங்களில் நாம எதிர்பாராத விஷயங்கள் நடந்துடுது...

      Delete
  3. idhu edhir paatha oru climax dhan anna!!! :(
    yuvaraj mela enna thappu irukku??? :/

    ReplyDelete
    Replies
    1. அனேகமா இந்த கதைக்கு வந்த கருத்துகளில், யுவராஜ் பக்கம் நியாயம் பேசுவது நீங்க மட்டும்தான்... இங்க நான் யாரையும் நல்லவன்னும், கெட்டவன்னும் சொல்ல வரலப்பா... சிலர் பார்வைக்கு சிலர் நல்லவர்களா தெரியலாம், அவர்களே வேறு சிலர் பார்வைக்கு கெட்டவர்களா தெரியலாம்... அவ்வளவுதான்.... நன்றி தம்பி...

      Delete
  4. I was really shocked about the "climax". Can't digest... Tirupur Babu

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.... உண்மை சில நேரங்களில் கசக்கத்தானே செய்யும்!

      Delete
  5. வணக்கம் விஜய்.

    என் வாழ்கையை திரும்பி பார்பதை போல உள்ளது இக்கதை. நான் பார்தவரைக்கும் யுவராய் போல என் வாழ்க்கைல வந்தாக போனக நிறையபேறு காதல் என்ற பெயரில். ஆனா நான் இப்ப ஏமாறுவதில்லை நம்பிக்கையும் இலக்கவில்லை. தேடல் தொடர்கிறது.

    நான் எதிர்பார்த முடிவுதான் ஆனால் கொஞ்சம் முடிவை மாற்றியிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... நம்ம சமூகத்தில் ஏமாறாத நபர்களே இருக்க முடியாது என்பதுதான் உண்மை... அந்த ஏமாற்றம் ஒரு கால்பாய் வாழ்க்கையில் நடந்தால் கூட அது வலி மிகுந்த ஒன்று என்று சொல்லத்தான் இப்படி ஒரு முடிவு....

      Delete
  6. இந்த தொழிலில் இருக்கிறவர்கள் அவரகளாக நினைத்தாலும் வெளிவரமுடிவதில்லை என்பதற்கு இது போன்ற அனுபவங்கள் காரணமாக இருக்குமோ. நல்ல கதையோட்டம் . எதிர்பாராத முடிவு .

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... உண்மைதான்.... அவர்களே வெளிவர நினைத்தாலும், நம்மில் எத்தனை பேர் அவங்கள நம்புவோம்?

      Delete
  7. really good vijay. but abi s paavam. onething atleast abi had a sex with love for a single night.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாலா... உண்மைதான், அந்த ஒரு இரவு இன்பம் மட்டும்தான் அவனுக்கு மிச்சம்...

      Delete
  8. இன்று முதல் நான் உங்கள் வாசகன்....
    இதோ என் எண்ணங்கள்...
    உண்மையின் உணர்வுகள் எப்பொழுதும்
    கதைகளாகவே காட்டப்படுகின்றன...
    ஒவ்வொரு கதைக்குள்ளும் ஓரிரு
    உண்மைகள் பொதிந்திருக்கத்தான்
    செய்கின்றன....
    காட்சிப்படுத்தியதற்கு நன்றி....
    என்றும் அன்புடன்
    தினேஷ்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தினேஷ்.... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்...

      Delete
  9. விஜய் கதை விறுவிறுப்பு என்னை கவர்ந்தது !! கடைசி முடிவு நிஜ வாழ்கையினை நினைவு செய்தது ! என்னுடன் வாழ்ந்த ஒரு திருநங்கை நேற்று என்னிடம் உவராஜ் சொன்ன பதில் தான் சொன்னாள் ! உனக்கு வேசி வாழ்கை தான் வேண்டுமென்றால் நான் கட்டிய தாலிய குடு என்றேன் !! அதற்கு அவள் (தாலியின் மதிபபு தெரிய ந்ஞாயம் இல்லை) நீ என்ணுடன் இருந்த 3 மாத்ததிற்கு அத்துதான் என் றேட்டு ) என்று சொல்லி விட்டு அடுத்த கஸ்டமர் ரெடி ஆனாள் !!!!!!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. I know that the climax is hurtful, but it's true.

    I have been a call boy for one night, when i had no job, no money to eat. That night was the worst night of my life. He was a old guy. Picked me up in car and took me to a lodge. That was the first time i went to a lodge. I was 19 at that time. Finished UG and was wokring in a small BPO for 3000rs. This all happened in 2011.Next morning he dropped me in bus stand and gave me 500rs.

    My second experience was with another guy.

    That second guy was a middle-aged guy in the same Coimbatore, who said that he would help with my job. But all that he did was, he came in his car. Take me somewhere alone and have sex with me inside of the car.

    No matter what time it is. He will call me at night 2 o clock. I had to go to meet him, because of money. But all that he gave me was 40rs, which helped me for that night food. that's all.

    Some people prefer to be call boys. But some people are chosen to be call boys, who are young and poorer. :'-(

    ReplyDelete
  12. Remba sogamana, anal mikavum yatharthamana mudivu...

    ReplyDelete
  13. Climax is good. In reality, this is what happens :-) We will accept things and move on.

    ReplyDelete
  14. அருமை நண்பா...... வாழ்வியல் மாற்றம், ஏமாற்றம்...... தொடர்கதை....��☺��

    ReplyDelete
  15. அருமை நண்பா...... வாழ்வியல் மாற்றம், ஏமாற்றம்...... தொடர்கதை....��☺��

    ReplyDelete
  16. I was moved by the climax. I could feel the pain but it's Life

    ReplyDelete