Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 10 August 2012

கே உறவு தவறானது ஏன்?

இப்போது நம் கே பற்றிய புரிதலும், மனநிலையும் தெளிவாக இருந்தாலும், நாம் கடந்து வந்த பாதையில் நாம் கேள்விப்பட்ட விஷயங்கள் நம்மை பதின் வயதுகளில் குழப்பி இருக்கும்.... அப்படி நான் சந்தித்த ஒருசில பதின்வயது நிகழ்வுகளையும் காலம் மாறும்போது உண்டான என் மனநிலை மாற்றத்தை பற்றியும் இப்போ இங்கே கூறப்போகிறேன்..... அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.... அரும்பிய மீசையும், குழம்பிய மனதும் தொடங்கிய வயது...... செக்ஸ் பற்றிய அரைகுறை புரிதலோடு, எல்லாம் தெரிந்ததைப்போல திரிந்த நாட்கள்.... அப்படி ஒருநாள் பள்ளிக்குள் நுழைந்தது முதல் பலரும் ஆங்காங்கே கிசுகிசுத்து கொண்டிருந்தனர்..... ஏதோ, ஒரு விஷயம் மாட்டி இருக்கு போல என்று நினைத்த நான் அங்கு நின்ற என் சக வகுப்பு தோழனிடம் , "என்னடா? என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்றேன்..... அவன் என் காதருகே மெல்ல வந்து , "நம்ம கெமிஸ்ட்ரி சார் இருக்கார்ல, அவர் ஹோமோ'வாம்டா" என்றான்..... "ஓ அப்படியா?" என்று அவனிடம் கூறிவிட்டு எவ்வித அதிர்ச்சியும் காட்டாமல் நான் சென்றது என் வகுப்பு தோழனுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.... ஆனால், நான் அமைதியாக போனதுக்கு காரணம், அவன் சொன்னதற்கான அர்த்தம் புரியாததால்தான்னு இப்போவரை யார்கிட்டயும் சொல்லல..... ஆனாலும் அந்த பேச்சு பல இடத்திலும் பிரபலமாக இருக்கவே, என் செக்ஸ் குருவிடம் சென்றேன்..... அவனும் என் வகுப்புத்தோழன் தான்.... செக்ஸ் பற்றி என்னைப்போன்ற என் நண்பர்கள் பலருக்கு பாலபாடம் எடுப்பது அவன்தான்..... அவன் அண்ணன் யாருக்கும் தெரியாமல் வாங்கி வைத்திருக்கும் செக்ஸ் புத்தகங்களை அவருக்கே தெரியாமல் படித்து,  அடுத்தநாள் பள்ளியில் அதை "மதன்ஸ் திரைப்பார்வை மதன்" ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வான்...... எங்கள் பலநேர உணவு இடைவேளைகள் அவன் கதைகளில்தான் கழிந்திருக்கிறது..... அவனை நான் ஒருவாராக தேடிக்கண்டுபிடித்தேன்...... நான் எதிர்பார்த்ததைப்போலவே எனக்கு முன்னால் பலரும் கெமிஸ்ட்ரி சாரின் விஷயத்துக்கு அர்த்தம் புரியாமல் அவனை சுற்றி அமர்ந்திருந்தனர்...... "அப்பாடா!.... என்னைப்போலவே இதுக்கு அர்த்தம் தெரியாமல் பலபேர் இருக்காங்க" என்ற சந்தோஷத்தில் அவன் அருகில் சென்றேன்.... என்னை பார்த்ததும் புன்னகைத்த என் குரு, அவன் அருகில் இருந்த இடத்தில் அமருமாறு சைகை காண்பிக்கவே நானும் ஜோதியில் ஐக்கியமானேன்..... எங்கள் கெமிஸ்ட்ரி சார் ஒரு கே என்பதை அவன் ஒரு திரைப்படமாகவே எங்கள் கண்முன்னால் காண்பித்தான்..... "நம்ம ப்ளஸ் டூ சதீஷ்  அண்ணன் இருக்கார்ல, அவர் நைட் ஸ்டடி'க்காக ஸ்கூலுக்கு வந்திருக்கார்..... படிச்சு முடிச்சுட்டு நம்ம சவந்த் கிளாஸ் ரூம்ல படுத்திருக்கார்.... அந்த நேரம் பார்த்து நம்ம கெமிஸ்ட்ரி சார், நம்ம சதீஷ் அண்ணன் பக்கத்துல படுத்து......................" என்றவாறே தன் கண்முன்னால் நடந்த விஷயம் போல விவரித்ததை கண்கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தோம் நாங்கள்..... இத்தகைய விஷயங்கள் எனக்கு ரொம்பவே புதிதாக இருந்தது.... அன்றைக்கு மட்டுமல்லாமல் இந்த கெமிஸ்ட்ரி சார் கதை பல நாட்கள் சுவாரசியம் குறையாமல் பள்ளியில் ஆங்காங்கே கிசுகிசுக்கப்பட்டது..... இதை நான் ஆரம்பத்தில் நம்ப மறுத்தாலும் ஒருநாள் என் குரு, எங்கள் முன்னால் அந்த சதீஷ் அண்ணனிடமே இதை கேட்டான்.... அவனும் இதை உண்மை என்று சொல்லவே, அன்றுமுதல் குரு சொன்னதை வேதவாக்காக கருத தொடங்கினோம்.....  சிறு கதையாக தொடங்கிய கெமிஸ்ட்ரி சார் கதை, தொடர் கதையாக குருவைப்போல பலராலும் வழிமொழியப்பட்டது..... ரெக்கார்ட் நோட் கையெழுத்து வாங்கப்போன அவர் ரூமுக்கு போன ப்ளஸ் ஒன் படிக்கும் ராஜெசையும் அவரையும் இணைத்து கதையை கிளப்பிவிட்டதும் இந்த குருதான்.... பின்னாளில் அந்த ராஜேஷ் அழுதபடியே அதை மறுத்தபோதுதான், குருவும் தன் கதையை மாற்றிக்கொண்டான்..... இந்த கதைகள் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், எங்கள் ஆசிரியர்கள் மத்தியிலும் பேச்சாக இருந்தது..... தொழில் போட்டியின் காரணமாக பல ஆசிரியர்களும் எங்கள் முன்னே எங்கள் கெமிஸ்ட்ரி சாரை பற்றி தவறாக பேசத்தொடங்கினார்...... அப்படி ஒருநாள் பள்ளியில் இன்ஸ்பெக்சன் நடக்க இருந்த நாளில் எங்கள் பள்ளி பாத்ரூமிற்கு வெளியே ஒரு கூட்டம்.... அருகில் சென்று பார்த்த நான் அதிர்ந்தேன்.... அங்கே "கெமிஸ்ட்ரி ஒரு ஹோமோ பு***" "சதீஷ், ராஜேஷ், அடுத்த இலக்கு யார்?" இப்படி பாத்ரூம் சுவர் முழுக்க எழுதப்பட்டிருந்தது.... இன்ஸ்பெக்சன் வருகிறார்கள் என்பதால் முதல்நாள்தான் வெள்ளை அடிக்கப்பட்ட சுவற்றில் அப்படி யாரோ எழுதி வைத்திருந்தனர்..... பின்னர், அதை சுண்ணாம்பு பூசி யாருக்கும் தெரியாமல் அழித்தனர்....அதுவரை ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் மட்டும் இருந்த பேச்சு, பின்பு ஆயம்மா, வாட்ச்மென், டிரைவர் வரைக்கும் போய்விட்டது...... கெமிஸ்ட்ரி சார் தனிப்பட்ட முறையில் ரொம்ப நல்லவர்.... வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகவே மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியர்..... தனிவகுப்பு எடுப்பார்.... அதனாலே மாணவர்களுக்கு அவர் மீது கோபம் இருந்தது..... ஆசிரியர்களுக்கும் அவர் மீது தொழில் போட்டி இருந்தது..... இத்தகைய காரணங்களால் அவரை பற்றிய கட்டுக்கதைகள் அதிகமாகவே பெருகியது..... சதீஷ் பற்றிய கதை தவிர மற்ற அனைத்தும் அவர் மீது சுமத்தப்பட்ட பொய் கரைகள்..... அத்தகைய நிகழ்வுகளுக்கு பிறகு அவர் யாரிடமும் பேசுவதையே குறைத்துக்கொண்டார்..... ஏளன பேச்சுகள் அவர் காதுகளில் விழுந்தாலும், கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்..... பல நேரங்களில் அவர் அறையில் அவர் அழுததை நான் கண்டிருக்கிறேன்..... இப்போதுதான் அவர் எவ்வளவு கொடுமையை அனுபவித்திருப்பார் என்று உணர முடிகிறது..... இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் எங்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வேறு ஊரில் வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் தெரிந்தது..... அவர் சென்ற பிறகுதான் அந்த கட்டுக்கதைகளும் கொஞ்சம் குறைய தொடங்கியது.... முதன்முதலாக நான் ஒரு கே'வை பற்றி தெரிந்துகொண்டது அப்போதான்.... இத்தகைய நிகழ்வே பிற்காலத்தில், என் அடையாளத்தை மறைத்து வாழ நிர்பந்தித்தது...... கெமிஸ்ட்ரி சாருக்கு பிறகு கே பற்றி நான் கேள்விப்பட்டது என் பதினொன்றாம் வகுப்பில்......
பதினொன்றாம் வகுப்பின் இறுதி நாட்கள்.... பன்னிரண்டாம் வகுப்பின் மன அழுத்தம் தொடங்கப்ப்கும் நாட்கள்..... அப்போதுதான் எனக்குள்ளும் ஓரின உணர்வுகள் கிளர்ச்சி அடைந்திருந்த நாட்கள்..... எங்கள் டியூசன் பக்கத்தில் ஒரு உணவகம் இருக்கும்..... எங்கள் டியூசன் மாடிப்படிகளில் ஏறி மாடிக்கும் செல்லும்போது அந்த உணவகத்தினை முழுமையாக பார்க்கலாம்..... புதிதாக தொடங்கப்பட்ட உணவகம் என்பதால் கூட்டம் எப்போதும் அங்கே அதிகமாகவே இருக்கும்..... உணவகத்தின் முற்பகுதியிலேயே சுவர் ஓரத்தில் சைனீஸ் வகை உணவுகள் தயார் செய்யப்படும்.... நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், சிக்கன் வகைகள் என்று அங்கு செய்வார்கள்.... அதை செய்பவர் ஒரு நேபாளி.... பார்ப்பதற்கு நம் "ஏழாம் அறிவு" படத்தின் வில்லன் போலவே இருப்பான்.... என்னைவிட ஒன்றிரண்டு வயது அதிகம் இருக்கலாம்.... ஒரு டி ஷர்ட்டும், சாட்சும் போட்டிருப்பான்..... பல நாட்கள் அவனை சைட் அடித்திருக்கேன்..... அவன் அறியாமல் சைட் அடித்திருக்கேன்..... ஒருநாள் அந்த உணவகத்தை பற்றி என் நண்பர்களிடம் டியூசனில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பன் என்னிடம் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது.... ஆம், அந்த நேபாளி மாஸ்டர் ஒரு கே என்பதுதான் அந்த செய்தி.... நிச்சயமாக பார்ப்பவர்களை கொஞ்சம் கிறங்கடிக்கும் அழகன் அவன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.... அதனால், என் நண்பன் சொன்னதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை..... மேலும், அவனைத்தேடி பல இளைஞர்கள் வருவதை நானே பார்த்திருக்கிறேன்..... அதிகம் யாருடனும் பேசாமல் தன் வேலையை பார்ப்பான், வித்தியாசமாக பலர் அவனிடத்தில் வந்து ரகசியம் பேசுவதை பார்த்திருக்கிறேன்..... ஒரு விடுமுறை தினத்தில் என் டியூசன் மாடியில் நின்று நான் பார்த்தபோது, ஒரு முத்த காட்சியை நானே பார்த்திருக்கிறேன்..... .  அந்த உணவகத்தின் உரிமையாளர் மகனுடன், இந்த நேபாளி அப்படி செய்ததை நான் பார்த்ததும் அவசர அவசரமாக விலகி ஓடினார்கள் இருவரும்.... நான் பார்த்ததை இருவரும் பார்த்துவிட்டனர்.... அன்றிலிருந்து என்னை பார்த்தால் அசடு வழிவார் அந்த உணவாக உரிமையாளரின் மகன்.... ஆனால், இந்த நேபாளிதான் என்னை குழப்பினான்..... காரணம், என்னை எப்போது அவன் பார்த்தாலும் ஒரு கண் அடித்து, மெல்ல சிரிப்பான்..... அந்த செயலுக்கும், சிரிப்பிற்கும் எனக்கு இன்றுவரை அர்த்தம் புரியவில்லை.... அதனாலேயே அந்த உணவகத்திற்கு நான் செல்வதையே தவிர்ப்பேன்..... ஒருமுறை வேறு வழியின்றி அங்கு நண்பனுடன் சென்றேன்.....  எப்போதும் சமையல் செய்யும் இடத்தை விட்டு நகராத அந்த நேபாளி, என்னிடம் நெருங்கி நெருங்கி பரிமாறினான்..... எனக்கோ உள்ளூர பயம்..... அதன்பின்பு, நான் அவனை அவனுக்கே தெரியாமல் பார்ப்பேன்.... அதை எப்படி அவன்  கண்டுபிடிப்பானோ தெரியாது, சரியாக திரும்பி பார்ப்பான், கண் அடிப்பான், சிரிப்பான்..... மனதிற்குள் பயம் இருந்தாலும், நானும் அதை ரசித்தேன்.... ஆனால், அதை தாண்டி செல்ல எனக்கு தைரியம் இல்லை.... அவன் என்னை நோக்கி வந்தாலும், விலகி ஓடிவிடுவேன், அல்லது நண்பர்களுக்கு மத்தியில் நின்ருகொள்வேன்..... அவன் மனதிற்குள் என்ன நினைக்கிறான் என்று எனக்கு புரிந்தாலும், தயக்கமும் பயமும் அவனிடம் என்னை விலக்கியே வைத்தது...... பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு வந்ததும், டியூசன் போவதை நிறுத்திவிட்டேன்..... நேபாளியை பார்த்தே மாதக்கணக்கில் ஆகிவிட்டது..... ஒருமுறை என் நண்பர்களிடத்தில் எதேச்சையாக உணவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பன் ஒருவன், "சிவா ஹோட்டல்ல நூடுல்ஸ் நல்லா இருக்கும்டா..... அந்த நேபாளி போனதுலேந்து இப்போ எதுவுமே அங்க நல்லா இல்லையாம்" என்றான் அவன்..... நீண்ட நாட்களுக்கு பிறகு நேபாளியின் கண் சிமிட்டலும், சிரிப்பும் எனக்கு நினைவில் வரவே, கொஞ்சம் ஆர்வமாக அவனிடம் ,"ஏண்டா அவன் இப்போ அங்க இல்லையா?" என்றேன்..... "அவன் ஹோமோ டா..... எயிட்ஸ் வந்திடுச்சாம், இப்போ அவன் செத்துட்டான்னு சொன்னாங்க" என்றான் அவன்.... தூக்கி வாரி போட்டது எனக்கு..... "எயிட்ஸா?" என்று வாயை பிளந்தேன்.... நூழிலையில் தப்பித்ததை எண்ணி கொஞ்சம் ஆறுதல் ஆனேன்... அவனுக்கு எயிட்ஸ் என்றால் உணவகத்தின் உரிமையாளர் மகனுக்கும் இப்போ வந்திருக்கணுமே, அவன் நல்லா இருக்கானே என்று நினைத்தேன்.... இருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக நான் அலட்டிக்கொள்ளவில்லை.... தப்பித்ததை எண்ணி கொஞ்சம் நிம்மதி மட்டும் அடைந்தேன் .... பின்னர் நான் கல்லூரி சென்று, மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருமுறை குடும்பத்தோடு ஒரு உணவகத்திற்கு சென்றோம்.... (இது வேறு உணவகம்)..... கை கழுவ செல்லும் வழியில் சமையல் அறையை எதேச்சையாக நோட்டமிட்டபோது அதிர்ந்தேன்..... அங்கு நூடுல்ஸ் போட்டுக்கொண்டிருந்தான் அந்த நேபாளி..... ஆனாலும் ஒரு குழப்பம், பொதுவாக நேபாளிகள் எல்லோரும் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள்.... அப்படி யாரையோ பார்த்து அவன் என்று நினைக்கிறேன் என்று எனக்கு நானே பதில் கூறிவிட்டு கை கழுவி வரும் வழியில் என்னை அவன் பார்த்துவிட்டான்..... என்னை பார்த்ததும் அதே கண் சிமிட்டல், அதனை தொடர்ந்த சிரிப்பு..... ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது..... என்ன காரணத்துக்காகவோ திடீரென்று காணாமல் போன நேபாளி, கே என்ற ஒரே காரணத்துக்காக, அவன் மீது எயிட்ஸ் பழியும், இறந்துவிட்டான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது..... பதிலுக்கு நானும் சிரித்துவிட்டு (முதல் முறையாக அவனை பார்த்து இப்போதான் சிரித்தேன், ஆனால் எதுவும் பேசவில்லை) டேபிளுக்கு போனேன்....  ஊருக்குள் நேபாளியை பொறுத்தவரை இப்போதும் இறந்துவிட்டாம் என்றுதான் சொல்கிறார்கள்...... இறந்ததற்கு காரணமாக அவன் கே பழக்கத்தைதான் சொல்கிறார்கள்..... என் கெமிஸ்ட்ரி சாரும், இந்த நேபாளி மாஸ்டரும் தாங்கள் கே என்பதால் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு நாளும் இந்த சமூகத்தால் பழிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.... இவர்கள் இருவரும் கே பற்றி பேசினால், இப்போதும் என் கண் முன்னால் வந்து போகிறார்கள்....
இதுவரை கே பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கூறினேன்..... கே பற்றி நம்மை போன்றவர்களே என்ன நினைக்கிறார்கள்? எப்படி நினைக்கிறார்கள்? என்று பார்ப்போம்..... உண்மையில் பெரும்பாலான ஓரின விரும்பிகள் மற்ற கே'க்களை வெறும் "செக்ஸ் மெஷின்"களாக மட்டும்தான் பார்க்கிறார்கள்.... இதுதான் உண்மையும்.... ஒருவர் கே என்று தெரிந்தாலே, அடுத்த நொடி அவனை எப்போ படுக்கையில் பார்க்கலாம் என்ற எண்ணம்தான் இங்கு தோன்றுகிறது.... இப்போதெல்லாம் நான் ஆர்குட் வரும்போது "invisible" ஆக இருப்பதற்கு காரணமே பலரும் செக்ஸ் நோக்கத்துடனே இருப்பதால்தான்..... ஏன் என்றால், "hi, u u frm?" "ur likes" "asl" "do u hav place?"...... இதைத்தவிர வேறு எதைப்பற்றியும் பேச யாருக்கும் மனம் இருப்பதில்லை.... ஆச்சரியமாக சிலர் நலம் விசாரிப்பார்கள்.... அவ்வளவுதான்..... இந்த பரஸ்பர உரையாடல்களுக்கு பிறகு படுக்கைக்கு போக நேரமும் இடமும் குறித்துவிடுகிரார்கள்...... இதுதான் இப்படி என்றால் எல்லாமும் முடிந்தபிறகு இருவரும் விடைபெறும் முன் ஒரு சம்பிரதாயத்துக்கு கூட நன்றி சொல்வதில்..... அடுத்து சூடேறி காமம் தேவைப்படும் நேரம்தான் மீண்டும் அவன் நினைவுக்கு வருகிறான்...... புகைப்படம் கேட்டு வாங்கும் நபர்கள், பார்த்தபின் பதிலே சொல்லாமல் போய்விடும் அதிநவீன நல்ல பழக்கமும் இங்கு இருப்பதை நொந்து சில நண்பர்கள் சொல்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது..... இங்கு யாருக்கும் நல்ல மனம் இல்லையோ என்று ஒருசில நேரங்களில் தோன்றுகிறது..... நல்ல குணம் யாருக்கும் தேவைப்படுவதில்லையோ என்று பல நேரம் யோசிப்பதுண்டு.... இதனால்தான் என்னவோ பலருக்கும் கே உறவு என்பது காதலாக மலரவோ, வாழ்க்கையில் நிலைக்கவோ வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது போலும்.... சில மாதங்களுக்கு முன்புவரை நானும் அப்படித்தான் நினைத்தேன்..... இங்கு கதை எழுத வந்திருக்காவிட்டால், பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் இருந்திருந்தால் நிச்சயம் நானும் அந்த எண்ணத்தில்தான் இப்போதும் இருந்திருப்பேன்.....கே நட்பு எவ்வளவு முக்கியம் என்பதும், கே காதல் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் இங்கு நான் கண்டேன்.... என் நெருங்கிய நண்பனிடமோ, உறவுகளிடமோ சொல்ல முடியாத, பகிர முடியாத விஷயங்களை இந்த நண்பர்களிடத்தில் பகிர்ந்துகொண்டேன்.... பகிர்ந்துகொண்டும் இருக்கிறேன்..... இவ்வளவு காலம் மனதிற்குள் அடைபட்டிருந்த சோகங்களை இத்தகைய நண்பர்களிடத்தில் பகிரும்போதும், பேசும்போதும் நிறைய மனமாற்றங்கள் நடப்பதை என்னால் உணரமுடிகிறது.... ஆனால் இந்த குழுமத்தை தாண்டி கே நட்பு அதிகம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது..... படுக்கையை நோக்கியே பார்வைகள் போவதை என்னால் ஏற்கமுடியவில்லை..... கே உறவில் மட்டும்தான் செக்ஸ் பற்றிய சிந்தனைகள் அதிகம் உள்ளதோ என்று தோன்றுகிறது...... பார்க்கும் பார்வைகள் அனைத்துமே காமப்பார்வையாக இருக்கிறதாக தோன்றுகிறது...... ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கொண்ட உடலுறவுகளை எண்ணிக்கையாக சொன்ன ஒரு இழையை நான் பார்த்தேன்.... அதில் சொன்ன பெரும்பாலானவர்கள் குறைந்தபட்சம் ஐம்பது முறை உறவு கொண்டதாக சொல்கிறார்கள்..... நானும் ஒன்னும் ராமன் இல்லை.... அப்படி இருந்தவன்தான்.... ஆனால், இதை எல்லோரும் உணர்வார்களா? உணர விழைவார்களா? என்பது சந்தேகம்..... மனம் விட்டு அத்தகைய நபர்களிடம் பேசினாலே, இந்த நட்பில் உள்ள ஆழம, வீரியம் , வலிமை எல்லாம் நமக்கு புரியும்.... ஆனால், அதை புரிந்துகொள்ளும் பக்குவமும், மனநிலையும் இங்கு இருக்கிறதா? என்றால் அது பெரிய கேள்விக்குறிதான்..... ஸ்ட்ரைட் நபர் ஒருவரால் திருமணம் வரை விர்ஜினாக இருக்க முடிகிறது, பெரும்பாலும் அப்படி இருக்கிறார்கள்.... ஆனால் கே உறவில் நாட்டமுள்ள ஒருவன் நிச்சயம் பதின் வயதை தாண்டும் முன்னரே விர்ஜினிட்டி'யை இழந்துவிடுகிறான்..... சுகம் கண்ட உடலும் மனமும் அதை மீண்டும் மீண்டும் ருசிக்க தூண்டுகிரதன் பயனாக இத்தகைய சீர்கேடுகள் கே உறவில் நடக்கின்றன...... சரி, கே நட்பின் அவசியத்தை பார்த்தோம்..... கே காதலின் சாத்தியத்தை பற்றியும் இங்குதான் நான் பார்த்தேன்..... இங்குள்ள சில நண்பர்களின் காதலை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.....
என் கதைகளின் மூலம் அறிமுகமான நண்பர்களின் காதல்கள் எனக்கு அந்த பாடத்தை கற்றுத்தந்தது.... முதலில் இங்குள்ள நண்பர் ஒருவரின் காதல் என்னை புருவத்தை உயர்த்த வைத்தது.... தானும் தன் காதலரும் பதினான்கு வருடங்களாக காதலித்து வருவதாக கூறினார்.... குடும்ப நிற்பந்தத்தினால் திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் தன் காதலனுடன் வாழ்ந்து வரும் அந்த நண்பருக்கு வயது முப்பதை தாண்டிவிட்டது..... என் கதைகளில் மட்டுமே சாத்தியம் என்று நான் நினைத்த ஒன்றை தன் வாழ்க்கையில் நடைமுரையாக்கி இருக்கிறார் அந்த நண்பர்.... முதலில் அவர் காதலுக்கும், அடுத்து அவர் துணிச்சலுக்கும் ஒரு சபாஸ்......  அடுத்த நண்பரின் காதல் கொஞ்சம் வித்தியாசமானது..... இங்கு நிறைய பேர் தத்தமது திருமணம் வரை காதலித்துவிட்டு பின்னர், வருத்தத்தோடு காதலை துறப்பது வாடிக்கை..... பலரது வாழ்விலும் இதுதான் எழுதப்படாத நியதி..... ஆனால் நான் சொல்லும் இந்த இரண்டாம் நபரின் காதல் திருமண பந்தத்திற்கு பின்பும் தொடர்கிறது.... குடும்ப சூழலாலும், நிற்பந்தங்களாலும் திருமணம் செய்துகொண்ட இந்த நண்பர், திருமணத்திற்கு பின்பும் அவர் காதலனுடன் காதலித்து வருகிறார்....இருவருக்கும் திருமணம் முடிந்து, குழந்தைகளும் இருக்கிறது.... ஆனாலும், காதல் இன்னும் குறையவில்லை என்று கூறுகிறார்..... "இப்போதெல்லாம் தோள் சாய்ந்து பேசவும், பகிரவும் தான் அதிகம் இந்த காதல் தேவைப்படுகிறது... உடல் சுகம் மட்டுமே காதல் இல்லையே" என்று கூறுவதை இன்னும் வித்தியாசமாகத்தான் பார்க்கிறேன்..... அடுத்து மூன்றாவது நபரின் காதல்..... இவர் ரொம்பவே வித்தியாசமானவர்.... பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு நண்பரை காதலிக்கிறார்.... அவர் கே'யா அல்லது ஸ்ட்ரைடா? என்று இன்னும் புரியாமல் தவிப்பது நிஜமாகவே பாவமாக இருக்கிறது.... இவர் காதலை அந்த நபரிடம் தெரிவித்துவிட்டார்.... பிடிக்கவில்லை என்றால் விலகி இருக்கலாம், பிடித்திருந்தால் எற்றுக்கொண்டிருக்கலாம்.... ஆனால், எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறாராம் அவர் நண்பர்.... "அவரை விட்டுட்டு அடுத்தவரை பார்க்கலாமே" என்று நான் கூறியபோதும், இன்னமும் அந்த காதலரை எண்ணியே தினம் தினம் புலம்புகிறார்.... இது சரியா? தவறா? என்பதெல்லாம் அவர் கவலை இல்லை, வாழும் வரை அவனுடனே வாழவேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம்.... காதல் வெற்றிபெற்றுவிட்டால் எத்தகைய எதிர்ப்பையும் மீறி அவனுடனே மீதி வாழ்வை அற்பநிப்பதாகவ் அவர் கூறியது அவர் மனதார கூரியதாகவே இருந்தது......  அடுத்தவர் நான்காவது நபர் , இறுதி நண்பர் இதுவரை தான் விர்ஜின் என்று சொன்னதை இப்போவரை ஆச்சரியமாகத்தான் பார்க்க முடிகிறது..... காதளித்துக்கொண்டிருக்கிறார் ஒருவரை.... இதுவரை இருவருக்குள்ளும் உடல் சார்ந்த பிணைப்பு நடக்கவில்லை என்று அவர் சொல்வது இன்னும் ஆச்சரியமாக உள்ளது.... தன் காதலனுடன் இறுதிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று அவர் சொல்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் சாத்தியமாகவேண்டும் என்பதுதான் என் எண்ணமும்....  இந்த நபர்களின் காதலும் சூழலும் வேறுவேறாக இருந்தாலும், ஆழ இருக்கும் உணர்வு ஒன்றுதான்.... ஓரின சேர்க்கையில் காதலும் நட்பும் எவ்வளவு முக்கியம், எந்த அளவு சாத்தியம் என்றெல்லாம் நாமாக உணரும்வரை புரியாது.... நான் மேற்சொன்ன நான்கு நபர்களும் யாரோ அல்ல..... இந்த தளத்தில், தினம் தோறும உங்களோடும் என்னோடும் பேசிக்கொண்டும், பழகிக்கொண்டும் , கருத்துகளை கூறிக்கொண்டும், கதை எழுதிக்கொண்டும், இருக்கும் நபர்கள்தான்....  அவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் யாரென்று சொல்கிறேன், அதுவரை அவர்களின் காதலை நீங்கள் உணருங்கள்..... கே தவறு இல்லை என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள்....  சரி, இத்தோடு இந்த கட்டுரைகளுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு, ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்......

3 comments:

  1. I want to tell my story here, I am gay my friends is Straight(100000%). but we were in relationship for last 11 years. some time we do sex also at start we do often. we both are very close friends. when we were in b.sc 3rd year, at the end of semester exam we did sex that is first time. after that we do but not often. i went to Trichy for my PG. he is in my native itself. 2 years gap we only speak on phone 2 month one time we see each other we share things about college. and i go to my hostel(trichy). after completing M.sc he stated telling we do it wrong so we have to stop. i agreed with him so we did't do sex for 1.9 yers. we so close after that. but we stared again one day we did sex, we both had a nice smile about our resolution. after that we were busy with work we talk only in phone. we did't do sex for 8 months. after some time one fine day we did. Now for last 1.5 year we stoped. I think this time we will stop completely. Our friendship will never end. I don't know how to discribe our friendship may be we both so close friends soul friends or may be i am gay so that i seduced a straight guy. one funny thing is he never admits me as a Gay he say that is my illusion that i am gay. i don't know how to explain him. he knows i have no attraction towards girls but he says like taht. may be he don't want me to in wrong direction. I am very happy i have one great friend. our relationsip was 1 to 1 for 11 years. Now he is going to married. i am all alone now. Now i am searching for my soul mate my husband.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete