அழகு
என்றால் என்ன?... அழகுக்கான இலக்கணம் என்ன?.... அழகை வரையறுத்தது யார்?....
ஒருத்தரை நாம பார்த்த நொடியே, அவங்க அழகானவங்களா?னு நாம தீர்மானித்திடுறோம்....
எவ்வளவு முற்போக்குவாதியாக இருந்தாலும் கூட, அழகானவர்களுக்கு நாம நம்மை அறியாமலேயே
பிரதிநிதித்துவம் கொடுத்திடுறோம்.... உலகிலேயே அழகானவர் யார்? என்ற கேள்விக்கு
உங்க பதிலும், என் பதிலும் நிச்சயம் வேற வேறாகத்தான் இருக்கும்... ஆனாலும், அழகின்
அடிப்படைனு நாம தீர்மானித்திருக்கும் விஷயம் ஒண்ணாத்தான் இருக்கும்.... சரி, அழகு
என்பதன் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம்.... பொலிவான முகம், அளவான முக அங்கங்கள், முழுமையான உதடுகள் போன்ற
விஷயங்கள் அழகான முகத்தின் பிரதிபலிப்பாக நம்மால் பொதுவாக பார்க்கப்படுகிறது...
இத்தகைய முக அமைப்பு இருக்கும் பெண் ஆரோக்கியமானவளாகவும், குழந்தை
பேறு மிக்கவளாகவும் அதிகம் இருந்தமையால், முற்காலத்திலிருந்தே
அத்தகைய முக அமைப்பினை உடைய பெண்களை ஆண்கள் விரும்பி அணுகினார்கள்...
காலப்போக்கில் அதுவே பெண்களின் அழகின் அடையாளமாக மாறிப்போனது...
ஒரு
விஷயத்தை பலரும் தேடி தேடி அணுகும்போது, ஒன்றுமே
இல்லையென்றாலும் அது "மிக சிறந்த" ஒன்றாக ஆகிவிடுவதை போல அழகின்
இலக்கணமாக மேற்சொன்ன முக அமைப்பு மாறிவிட்டது... பார்க்கும் பார்வையில்
மட்டுமல்லாமல், ஒருவரின் மூளை அமைப்பே இதை நம்ப
தொடங்கிவிட்டது தான் உண்மை... சுருக்கங்கள் அற்ற, பொலிவு
நிறைந்த தோல் இளமையின் வெளிப்பாடாகவும், ஆரோக்கியத்தின்
அளவுகோளாகவும் கருதப்பட்டது... அந்த பார்வையே நவீன காலத்தின் அழகை நிர்ணயிக்கும்
விஷயமாக மாறிவிட்டது... பல ஆய்வுகளின் முடிவிலும் அழகான முகத்திற்கான அடையாளமாக
ஆய்வாளர்கள் சொல்வது "பெரிய கண்கள், மெலிதான புருவங்கள்,
சிறிய மூக்கு, முழுமையான சிவந்த
உதடுகள்"என்பவற்றைதான்....
“பெரிய சிறிய, முழுமையான” போன்ற அளவீடுகளுக்கு கணித ரீதியான சில
அளவுகோலும் உருவாக்கினார்கள்.... அந்த அளவுகோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
பிரபல ஓவியர்களின் (டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ) ஓவியங்கள் உலக பிரசித்தி பெற்றது
நாம் அறிந்த விஷயம்தான்...
பொதுப்படையான அளவுகோள்கள் இருந்தாலும் கூட, சமூகம் மற்றும்
கலாச்சாரத்திற்கு ஏற்ப அந்த அளவீடுகள் கொஞ்சம் மாற்றம் பெறுவதும் உண்டு...
அதனால்தான் ஆப்ரிக்காவின் அழகை நம்மால் ரசிக்கமுடியவில்லை, அமெரிக்கனின் அழகை
ஆப்ரிக்கன் விசித்திரமாக பார்க்கிறான்...
பெண்களின் அழகை முகம் தீர்மானித்தது போல, ஆண்களின் அழகை உடல்
அமைப்பு தீர்மானித்தது... விஞ்ஞானம் வளராத காலத்தில் பெண்ணை வெறும் குழந்தை
பேறுக்கான கருவியாக மட்டும் பார்த்ததால், முகத்தினை வைத்து பெண்கள்
விரும்பப்பட்டார்கள்... காலப்போக்கில், இன்றுவரை காரணமே புரியாவிட்டாலும் அதையே
அழகாக நாமும் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம்.... ஆண்கள் உடல் பலம் மிக்கவர்களாக
இருப்பதையே அந்த காலத்தைய பெண்கள் விரும்பினார்கள்... காரணம், காட்டிற்கு சென்று
வேட்டையாடி குடும்பத்தை காப்பாற்ற, ஆண் உடல் வலிமை மிக்கவனாக இருக்க வேண்டும்
என்பதால் பெண்கள் புஜபலம் மிக்க ஆண்களை நாடினார்கள்....
ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்... காலத்திற்கு
ஏற்றார்போல பெண்கள் புத்திசாலியாக ஆகிவிட்டார்கள், ஆண்கள் இன்னும் அப்படியேத்தான்
இருக்கிறார்கள்... ஆமாங்க,அதான் உண்மை... இப்போ கணவனை தேடும் எந்த பெண்ணும் ஆணின்
வீரத்தையோ, உடல் பலத்தையோ பார்ப்பதில்லை... இனி எந்த ஆணும் காட்டிற்கு சென்று
விலங்குகளை வேட்டையாட வேண்டிய அவசியமில்லை என்பதால், இந்த காலத்தில் குடும்பத்தை
மேம்படுத்த தேவையான அறிவையும், பணியையும், பணத்தையும் மட்டும்தான் பெண்கள் இப்போ
எதிர்பார்க்கிறார்கள்... காட்டு வாழ்க்கையையும், நாட்டு வாழ்க்கையையும் பெண் மிக
நேர்த்தியாக பிரித்து பார்த்து வாழக்கற்றுக்கொண்டாள்....
ஆனால், நம்ம ஆண்கள் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை புடித்துக்கொண்டு
அழகை முன்னிலைப்படுத்துவதுதான் கொடுமையான உண்மை...
இன்னொரு முட்டாள்த்தனமான நம்பிக்கையும் நம்ம மத்தியில்
ஊரிக்கிடக்குது... “கருப்பு என்பது அழகில்லை” என்கிற வாதம்... இது எங்கிருந்து
வந்தது தெரியுமா?... சில நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த
ஆங்கிலேயர்களின் நிறம் வெள்ளை... நம் மீது ஆதிக்கம் செலுத்திய வெள்ளையர்களின்
நிறத்தை இன்னும் நாம ஆதிக்க நிறமாகத்தான் பார்க்கிறோம்.... அதனால், கருப்பு என்பது
அடிமைத்தன நிறமாக மாறிப்போனது.... நீங்க கவனித்ததுண்டா, நம் ஊரில் கருப்பு
நிறத்தின் பயன்பாடு பற்றி.... எதிர்ப்பு தெரிவிக்க “கருப்புக்கொடி”,
சமாதானத்துக்கு “வெள்ளைக்கொடி”... துக்க நிறம் “கருப்பு”, மகிழ்ச்ச்யின் நிறம்
“வெள்ளை”.... நம்ம மனசுக்குள்ளயே கருப்பை ஒரு அடிமை நிறமாக மிக சாமர்த்தியமாக
ஆக்கிவிட்டு சென்றுவிட்டான் வெள்ளைக்காரன்.... விளையாட்டில் கூட தன் எண்ணத்தை
நிறைவேற்றி இருக்கிறான்.. கேரம் விளையாட்டில் கருப்பு காயை விட, வெள்ளைக்கு தான்
பாய்ன்ட் அதிகம்... சதுரங்கத்தில் கூட வெள்ளை காய்தான் முதல் நகர்த்தலை நகர்த்த
வேண்டும்... இப்படி நம் மனதில் கருப்பை பற்றிய தங்களின் எண்ணத்தை ஆழ வேரூன்ற
வைத்துவிட்டு, நம்மையும் கருப்பின் எதிரியாக ஆக்கிவிட்டு சென்றுவிட்டார்கள்....
நாமோ இன்னும் காதலன்/வாழ்க்கை துணைவன் தேடும் விருப்பப்பட்டியலில் “fair” என்பதற்கு ரொம்பவே
முக்கியத்துவம் கொடுத்திட்டு இருக்கோம்...
இப்போ, இந்த தளத்தில் நான் அழகை பற்றிய இவ்வளவு விளக்கம் கொடுக்க
என்ன காரணம்?னு நீங்க யோசிக்கிறது புரியுது.... அதற்கு காரணம் உண்டு... பொது
உலகைவிட, நம் கே உலகில் தான் அழகு பற்றிய தாழ்வுமனப்பான்மையில் அதிகம்பேர் சிக்கித்தவிப்பதும்,
தற்கொலை எண்ணம் வரை செல்வதும் நடக்கிறது....
ஒரு ஆண், குழந்தை பேறு சிறப்பாக அமைந்திட அப்படி அழகான பெண்ணை
விரும்பி தேர்ந்தெடுப்பதில் கூட ஒரு சிறு நியாயம் இருக்கிறது.... ஆனால், ஒரு கே
ஆண், எந்த காரணத்திற்காக இன்னொரு அழகான ஆடவனை தேடி ஓட வேண்டும்?... குழந்தை பேறு
தொடர்பாக வரையறுக்கப்பட்ட முகத்தின் பிம்பத்தை, அழகின் வெளிப்பாடாக இன்னும் நாம்
பொய்யாக நம்பிக்கொண்டு, அந்த அழகை உடைய ஆண்களை தேடுவதுதான் முட்டாள்த்தனமான
நம்பிக்கை.... அப்படி அழகான ஆணை விரும்பி அடைவதால், அந்த ஆணுக்கு குழந்தையா
பிறக்கப்போகிறது?...
ஒருநாள் படுக்கைக்கு அப்படி அழகானவர்களை தேடினால் கூட
பரவாயில்லை... காதலனை தேடுகிறேன் பேர்வழி என்று அழகை மட்டுமே பிரதான அம்சமாக வைத்து
துணையை தேடும் நபர்களை என்னவென்று சொல்வது?.... இது எல்லாவற்றையும்விட இன்னொரு
கொடுமையான உண்மை என்ன தெரியுமா?... ஒரு கே, தன் நண்பனை தேர்ந்தெடுப்பதில் கூட அழகை
பிரதான அம்சமாக வைத்தே தேர்ந்தெடுக்கிறான்.... நீங்கள் மறுத்தாலும், மறைத்தாலும்,
முறைத்தாலும் அதுதான் உண்மை... சில நேரம் நாம் அறிந்தும், பல நேரம் நாம்
அறியாமலும் ஒருவரை பற்றிய நல்ல அபிப்ராயத்தை நமக்கு அவர் முகம் ஏற்படுத்துகிறது....
இந்த வகையில் ஸ்ட்ரைட் நபர், தன் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் அழகை ஒரு பொருட்டாக
மதிப்பதே கிடையாது.... நண்பனை தேர்ந்தெடுக்க கூட நம் மனம் அந்த பாழாய்ப்போன
அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகிவிட்டது.... என் கதைகளை படித்துவிட்டு,
தனிப்பட்ட மின்னஞ்சலில் பாராட்டும் பல நபர்களின் அடுத்த கேள்வியே “உங்க போட்டோ
அனுப்ப முடியுமா?” என்பதுதான்... ஏன் நம்ம ஆளுங்க இப்டி ஆகிட்டாங்கன்னு எனக்கு
புரியல.... அழகு என்ற கோட்டை தாண்டி, நம்ம மக்கள் இன்னும் சிந்திக்கவே இல்லை....
படுக்க அழகு, காதலனுக்கு அழகு, நட்புக்கு அழகு, பாராட்ட கூட அழகு... இப்படி அழகை
தாண்டிய ஒரு உலகம் இருப்பதையே நம்ம மக்கள் ஏத்துக்க மறுக்குறாங்க....
இப்படி முரண்பாட்டு மூட்டைகளாக நாம் பல பொய்யான நம்பிக்கைகளை
சுமந்து வாழ்வதும், அந்த நம்பிக்கைகளால் பல நபர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக
பறிபோய்க்கொண்டு இருப்பதும் நம்மை அறியாமல் நடக்கும் உண்மை நிகழ்வுகள்... “அழகு”
என்பது பார்ப்பவரது கண்ணோட்டத்திலும் இருக்கிறது... உலகில் இருக்கும் எல்லாமே
அழகுதான்... அந்த அழகுகளை ரசிக்கும் திறன்தான் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...
உங்கள் அழகை ரசிக்க தெரியாதவன், நிச்சயம் ஒரு ரசனை அற்றவன் என்பதை உணருங்கள்....
அழகை ஒரு சிறிய வட்டத்திற்குள் நாம் அடக்கிவிட கூடாது, அடக்கவும் முடியாது....
இந்த வானம் போல, பூமி போல அதுவும் அளவிட முடியாத பரந்த கூறுகளை கொண்ட ஒரு
அம்சம்...
அழகான மனதின் வழியே பார்ப்பவர்களுக்கு, இந்த உலகின் எல்லா அழகையும்
நிச்சயம் ரசிக்க முடியும்... அடுத்தவங்க ரசிக்குறது இருக்கட்டும், முதலில் நீங்கள்
உங்களை ரசிக்க தொடங்குங்க.... உங்களோட அழகை முதல் ஆளாக ரசிப்பது நீங்களாகத்தான்
இருக்கணும்... அழகு என்பது முகத்தோடு முடிந்துவிடும் விஷயமல்ல, அது ஒரு மனிதனின்
முழுமையையும் உணரவேண்டிய விஷயம்...
உலகில்
எந்த ஒரு முகமும், இன்னொரு முகத்தோடு முழுமையாக ஒத்திருக்காது...
இயற்கையின் படைப்பின் ரகசியமே அதுதான், அந்த உண்மையை
புரிந்தால் அழகு பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை... அழகின்மை
என்னும் எண்ணத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு பலரும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்,
அதன் விளைவு சில நேரங்களில் தற்கொலைகளில் கூட முடிந்திருக்கிறது...
நாங்கள் கதை எழுதும்போது கூட, கதையின் நாயகனை
"பேரழகன்" போல சித்தரிப்பது உண்டு.... ஒரு நாள் நண்பர்
ஒருவரிடத்திலிருந்து வந்த ஒரு கேள்வி, அந்த வர்ணனைகளுக்கு
அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.... அந்த நண்பர் கேட்ட கேள்வி,
"ஏன் எல்லா கதைகளிலும் நாயகங்களை ரொம்ப அழகானவங்களா வர்ணனை
பண்றீங்க?... அப்டினா, சுமாரா
இருக்குறவங்க காதலிக்க கூடாதா?" என்றார்... அதுவரை
நானும் இப்படி ஒரு கண்ணோட்டத்தில் யோசித்ததில்லை... அதன் பிறகு இப்போவரை, தேவையுள்ள இடங்களை தவிர மற்ற கதைகளில் நாயகன்களை பேரழகனாக சித்தரித்தது
இல்லை... காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற உண்மையை எல்லோரும் உணரும்
நாள் என்றாவது வரும்...
இந்த விஷயத்தில் பெண்கள் முற்போக்குத்தனமாக சிந்தித்து
வந்துவிட்டதை போல, நாமும் வெளியே வரவேண்டும்... பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளை
தூக்கி எறிந்து, அழகுக்கு மேலும் அழகு சேர்க்க வேண்டும்...
நல்ல பதிவு. எல்லோருமே அழகை ஒரு அங்கீகாரமாகவே கருதுகிறார்கள்.
ReplyDelete//ஏன் எல்லா கதைகளிலும் நாயகங்களை ரொம்ப அழகானவங்களா வர்ணனை பண்றீங்க?... அப்டினா, சுமாரா இருக்குறவங்க காதலிக்க கூடாதா?" என்றார்...// இப்படி நானும் யோசித்ததுண்டு.
அழகு என்ற அளவு கோலே இல்லாமல் போவது நன்று
ரொம்ப நன்றி நண்பா.... உங்கள் பெயர் ரொம்ப அழகா இருக்கு... :)
Deleteநல்ல பதிவு விஜய். அழகையும் தாண்டி நிறைய இருக்கு. அதை உணர மட்டும் தான் முடியும். பார்க்க முடியாது.
ReplyDeleteஅன்புடன் சேகர்.
மிக்க நன்றி சேகர்.... கண்களுக்கு தெரியும் அழகையே நம்ம ஆளுங்க தவறாதான் புரிந்துகொள்கிறார்கள், இதில் உணரவேண்டிய விஷயங்களை அவங்க எப்போ உணர போறாங்க?... நடக்கும்னு நம்புவோம்...
DeleteVERY NICE TOPIC WONDERFUL LINES... GREAT VIJAY
ReplyDelete....RAJESH FROM CHENNAI
நன்றி ராஜேஷ்.... நீங்க எந்த ராஜேஷ்?... புதியவரா? இல்லை, முன்பு பழக்கம் உடையவரா?
ReplyDeletethanks vijay now i understood . The facult is not mine .he only leaved me after two months of life
ReplyDeletebcz of my light brown skin tone. i think he does't know the meaning of the true love
by krish harry
It reveled the Truth........
ReplyDelete