Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 12 June 2013

"உண்மை காதலருடன் ஒரு உன்னத சந்திப்பு" - உண்மை நிகழ்வு...



        தமிழகத்தின் பிரபலமான ஒரு மாநகராட்சியின் புறநகரில் இருக்கும் அந்த வீட்டை நான் அடைந்தபோது காலை எட்டு மணி... வழக்கமான ஒரு ஞாயிற்றுக்கிழமை... ஒருபால் ஈர்ப்பு சமூகத்தில் நான் எழுத தொடங்கிய பிறகு, நான் முதன்முதலாக சந்திக்கப்போகும் என்  வாசகரின் வீடு அது... “வாசகர்” என்று சொல்வதைவிட, “வாசகர்கள்” என்று சொல்வது இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்... ஆமாங்க, அது ரவி மற்றும் கமல் என்ற காதல் தம்பதியின் வீடு... ரவி தான் முதலில் வாசகராக எனக்கு அறிமுகமானார், இப்போ நல்ல நண்பராகிட்டார்... இத்தனை நாட்கள் “கப்சா” காதல் கதைகளை உங்ககிட்ட சொல்லிட்டு இருந்த எனக்கு, அவரோட நிஜ காதல் கதை ரொம்பவே பிடிச்சிருந்தது... அவர்களின் காதல் மீதான ஈர்ப்பால், இன்றைக்கு அவர்களின் வீடு வரை செல்லும் அளவிற்கு நண்பராகிவிட்டேன்...
வாசலில் அழைப்பு மணியை அடித்த சில மணித்துளிகளில் கதவை திறந்தார் ஒரு இளைஞன்... அவரை வர்ணிக்கவல்லாம் மாட்டேன், அவரை வர்ணிக்கத்தான் வீட்டுக்குள்ள ஒருத்தர் இருக்காரே!... அவர் ரவி இல்லை என்பதால், அதிகமாக யோசிக்க வேண்டதபடி “கமல்”தான் அந்த இளைஞர் என்பதை நான் புரிந்துகொண்டேன்... என்னை ஏற்கனவே புகைப்படங்களில் அவர் பார்த்திருப்பதால், முகம் முழுக்க புன்னகையுடன் “ஐயோ!.... வாங்கண்ணா......” என்று வாஞ்சையோடு உள்ளே அழைத்தார்...
அவர் என்னை வரவேற்று உள்ளே அழைத்து செல்லும் இந்த இடைவேளையில், அவங்க காதலை பற்றிய ஒரு குட்டி முன்னுரை கொடுத்திடுறேன்... இருவரும் முதன்முதலில் சந்தித்தது ஒரு பேருந்து பயணத்தில், இயல்பான பேச்சோடு அலைபேசி எண் பரிமாற்றத்துடன்  அந்த பயணம் முடிவுற்றது... அதன்பிறகு ஒருநாள் சந்திப்போடு, இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவானது... தானாக அந்த இடைவெளி உருவாகவில்லை, ரவியாக அதை உருவாக்கி இருக்கிறார்... காரணம், அப்போது ரவி ஒரு பெண்ணுடனான காதலில் இருந்தார்... ஒரு கட்டத்தில் ரவிக்கும் கமலுக்கும் தொடர்பு முழுமையாக நிற்கும் அளவிற்கு போனது.... கொஞ்ச நாட்களில், ரவிக்கு அந்த பெண்ணுடனான காதல் சில காரணங்களால் முற்றுபெற்றது... அந்த தனிமையில் அவர் படித்த கதைகள் (ஒருபால் ஈர்ப்பு காதல் கதைகள்) அவருக்கு அவருக்குள் இருந்த கமலுடனான காதலை வெளிப்படுத்தியது.... கமலை பிரிந்திருக்க கூடாது என்பதை உணர்ந்தார்... அப்போதே கமலை தொடர்புகொண்டு, தன் நிலையை வெளிப்படுத்த, ஏற்கனவே ரவி மீதான காதலில் இருந்த கமலும் ஒப்புக்கொள்ள....... இன்றோடு இரண்டு வருடங்களை நிறைவு செய்கிறது இந்த காதல் தம்பதியின் இல்லற வாழ்க்கை...
உள்ளே நான் நுழைந்தபோது, வழக்கமான தன் சிரிப்புடன் என்னை வரவேற்றார் ரவி... சமையலறையில் ரொம்ப பிஸியாக இருந்தவரை நான்தான் தொந்தரவு செய்துவிட்டேன்...
“நீங்க வழக்கமான உங்க வேலைய பாருங்க, உங்க இயல்பான வாழ்க்கைய பாக்கத்தான் நான் வந்தேன்” என்ற என் அன்பு கட்டளையை ஏற்ற ரவி சமையலறை செல்ல, நானும் உள்ளே போனேன்.... பம்பரமாக சுழன்று, தோசை சட்னியுடன் வெளியே வந்தோம்.... வேலை பார்த்தது அவர்தான், வேடிக்கை பார்த்ததுதான் நான்...
நல்லாவே செஞ்சிருந்தார்.... “நீங்கதான் பொதுவா சமைப்பிங்களா ரவி?”
“இல்லங்க.... அவனும் சமைப்பான்... ஆனால், வீட்டை சுத்தம் பண்றதே அவனுக்கு பெரிய வேலையா இருக்கும்... நான் எடுத்ததை எடுத்த எடத்துல வைக்க மாட்டேன், கண்டபடி போட்ருவேன்... அவன் அந்த வேலையை பாக்குறதால இப்போ நான் சமச்சேன்” நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கமல் அயன் செய்துகொண்டிருந்த ஆடைகள் கூட, ரவியுடயது தான்... ‘நீ இந்த வேலையதான் பாக்கணும், நான் இந்த வேலைய பாக்கமாட்டேன்’ போன்ற ஈகோ இருவருக்குள்ளும் துளியும் இல்லை... இருவருமே வேலையாக எதையும் பார்க்கவில்லை, தத்தமது உரிமைகளாக பார்க்கிறார்கள்...
வேலைகள் முடிந்து, மூவரும் பேச அமர்ந்தோம்.... வந்தது முதல் அதிகம் பேசாத கமல் அப்போதான் பேசினார், “உங்க கதையல்லாம் நல்லா இருக்கு அண்ணா... நெறைய கதைகள் படிச்சிருக்கேன்” என்றார்...
“ரொம்ப சந்தோசம்பா... ரவியோட உங்க வாழ்க்கை எப்டி போகுது?”
“ஹ்ம்ம்... ரொம்ப சந்தோஷமா போகுது.... இந்த ரெண்டு வருஷமும் மனசு முழுக்கவும் நிம்மதியா இருக்கு” வழக்கம்போல தன் பாணியில், சுருக்கமாக முடித்துக்கொண்டார் கமல்....
ரவி கோவிலுக்கு மாலை போட்டிருப்பதால், கமலும் விரதத்தில் இருக்கிறார்.... மொத்தத்தில் நான் ஆசையாய் எதிர்பார்த்த “ரவி ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி” இன்னிக்கு இல்லை என்பதில், எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.... இருந்தாலும், அந்த சந்திப்பே மனதை நிறைத்துவிட்டது...
நான் புகைப்படத்தில் பார்த்ததைவிட நேரில் இருவருமே கொஞ்சம் குண்டாக இருந்தனர்... அதை பற்றி ரவி சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது... “இப்போ நாங்க குடும்பஸ்தனாக ஆகிட்டோம், அதனால உடல் வாகு பத்தியல்லாம் ஒன்னும் நாங்க பெருசா கவலைப்படல” என்றார்... இதை அவர் எதார்த்தமாக சொன்னாலும், அவங்களோட காதல் வாழ்க்கையை அந்த பதில் ரொம்பவே அழகா விளக்கி சொல்லுச்சு...
திருமணம் ஆகுற வரைக்கும் “குண்டாகிட்டேன்”னு கவலைப்படுற எத்தனை பேர், திருமணத்துக்கு பிறகு அதைப்பற்றி கவலைப்படுறாங்கனு நினைக்குறீங்க?... ரவி மற்றும் கமலை பொருத்தவரை, அவங்க இப்போ திருமணத்துக்கு பின்னான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க...
நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில், தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கிரிக்கெட்டை அவ்வப்போது ரசித்துக்கொண்டிருந்தார் கமல்... அதை கவனித்த ரவி, “அதை கொஞ்சம் அணைச்சுதான் வையேண்டா” என்றார்...
கமலுக்கு கிரிக்கெட் பைத்தியம், ரவிக்கு கிரிக்கெட் என்பதே பைத்தியகார விளையாட்டு... அவ்வபோது இருவருக்குள்ளும் எழும் ஊடலே, இந்த கிரிக்கெட்டால்தான் அதிகம்...
“ஏன் கமல் அதிகமா பேசமாட்றிங்க?” என்றேன் கமலை பார்த்து....
“அப்டி இல்லிங்கண்ணா.... எனக்கும் சேர்த்து ரவியே பேசிடுவார், நான் பேசுறதுக்கு தேவையே இல்லாத அளவுக்கு அவர் பேசிடுவார்” அழகாக பேசினார், ஆனால் அதிகமாகத்தான் பேசமாட்டேங்குறார்...
இப்படி எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இவர்களுக்கும் சண்டை நிச்சயம் வராமல் இருக்காது.... எப்படி அதை சமாளிப்பாங்க?.... அதையும் அவரிடத்தில் கேட்டேன், வழக்கம்போல சிரித்துக்கொண்டே சொன்னார் ரவி, “சண்டை வராமல் இருந்தா வாழ்க்கை போர் அடிச்சிடும்ல... எங்களுக்கும் சண்டை வரும், ஆனால் ரொம்ப நேரம் நீடிக்காது... நானே பெரும்பாலும் சமாதானமாகிடுவேன்.... சில நேரத்துல அவன் வந்து சாரி கேக்கனும்னு எதிர்பார்ப்பேன், அவன் லேட் பண்ணினால் நானே பேசிடுவேன்.... எங்களுக்குள்ள நான் ஈகோ பாக்க மாட்டேன், அவனும் பாக்க மாட்டான்.... அதனால அரிதா வர்ற சண்டை, ரொம்ப எளிதா ஓடிடும்” ....
இருவரும் விட்டுக்கொடுப்பதில் கூட யோசிப்பதில்லை, நிச்சயமா இந்த பதில் என்னை முகத்தில் அறைந்தார் போல இருந்தது.... நானும் விட்டுக்கொடுத்திருக்கலாம் நிறைய தடவை, இனி யோசிச்சு என்ன செய்ய?...
“கே சமூகத்துல காதலே சாத்தியமில்லை, ஒரு கே’வால் ஒருவனுக்கு ஒருவன்னு வாழ முடியாது”னு பொதுவா நம்ம ஆளுங்ககிட்ட ஒரு பொய்யான நம்பிக்கை இருக்கு... ஆனால், என் கண் முன்னால இப்போ அதற்கு வாழும் சாட்சியாக நிற்கும் இந்த தம்பதிகள்கிட்ட அதே கேள்வியை முன்வைத்தேன்....
“இரண்டு வருஷ இந்த காதல் வாழ்க்கை போர் அடிக்கலையா?...” என்றேன்....
“நம்ம ஊருல பெண்ணை திருமணம் செஞ்சுகிட்ட ஆண்கள் எல்லாரும் ரெண்டு வருஷத்தோட போர் அடிச்சு, பிரிந்து போயிடுறாங்களா என்ன?... அப்போ ஏன் நம்மள மாதிரி கே’க்கள் கிட்ட மட்டும் இப்டி ஒரு கேள்வி கேட்குறாங்க.... வெறும் செக்ஸ் மட்டும்தான் முக்கியமா நினைச்சிருந்தா, ரெண்டு வருஷம் இல்ல, ரெண்டு நாள்ல கூட போர் அடிச்சிடும்.... எனக்கு காதல், பாசம், அரவணைப்பு, துணை, பகிர்ந்துகொள்ள நட்பு இதல்லாம் தான் முக்கியமா தேவைப்படுது, அது இப்போ எனக்கு கிடைச்சிருக்கு... இன்னும் இருபது வருஷத்துக்கு அப்புறம் இந்த கேள்வியை கேட்டாலும், என்னோட பதில் இதேதான்... இப்போவரைக்கும் ஒவ்வொரு நாளும் அவன் எனக்கு புதுசாத்தான் தெரியுறான், எல்லாம் நாம பார்க்குற பார்வைலதான் இருக்கு..... இனி கமல் இல்லாத வாழ்க்கைய நெனச்சு கூட பாக்க முடியாது, அப்டி ஒரு தவிர்க்கமுடியாதவனா என்னோட வாழ்க்கைல ஆகிட்டான்....” ரொம்ப அழகா சொல்லிட்டார், இதை நான் எனக்கான பதிலா பார்க்கலா.... இந்த சமூகத்துக்கான கே நபர்கள் மீதான ஒரு பொய்யான பிம்பத்துக்கு பதிலடியா பார்க்குறேன்....
இந்த வீட்டுக்கு வந்தது முதல் எனக்கு ஏதோ ஒரு திருமணமான தம்பதிகள் வீட்டுக்கு வந்தது போலவே இருக்கு... ஒருத்தர் நினைக்குறத, இன்னொருத்தர் அழகா புரிஞ்சுக்கறார், ஒளிவு மறைவில்லாத வாழ்க்கை, ஈகோ இல்லாத காதல், விட்டுக்கொடுக்குற மனப்பான்மை, காதல் மீதான அதீத நம்பிக்கை.... கதைகள்ல எவ்வளவோ சொன்னாலும், இங்க நடக்குற ஒவ்வொன்றுமே எனக்கு ரொம்ப வித்தியாசமாவும் புதுசாவும் இருக்கு....
கடைசியா அவங்ககிட்ட நான் கேட்கவேண்டிய ஒரு கேள்வி இருக்கு, அது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.... ஆனாலும், அந்த கேள்வி கேட்காமல் நான் நிம்மதியா அங்கிருந்து கிளம்ப முடியாது....
“இப்போ உங்க குடும்பங்களை பொருத்தவரைக்கும் நீங்க நண்பர்கள்.... இன்னும் ஒருசில வருஷங்களில் உங்களுக்கு திருமண அழுத்தம் வீட்லேந்து கொடுப்பாங்க... அப்போ, நம்ம சமுதாயத்தையும், உங்க குடும்பத்தையும் எப்டி சமாளிப்பிங்க?... இல்லைனா, குடும்பத்துக்காக என்னை மாதிரி முட்டாள்த்தனமா காதலை தியாகம் பண்ணிடுவீங்களா?” என்று கேட்டேன்....
இருவரும் ஒருவர் முகத்தை பார்த்து ஒருத்தர் சிரித்துக்கொண்டார்கள்... அந்த கேள்வியை அவர்கள் எதிர்பார்த்திருக்கக்கூடும்.... வழக்கமான சிரிப்பை தவிர்த்து, கொஞ்சம் சீரியஸாக பதில் சொல்ல தொடங்கினார் ரவி, “ஒன்னே ஒன்னு சொல்றேன், எந்த காரணத்துக்காகவும், எப்பவும், யாருக்காகவும் நான் காதலை விட்டுக்கொடுக்க மாட்டேன்.... நான் வீட்ல கமலை கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு சொன்னாத்தானே பிரச்சினை... எனக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லி, இப்போ மாதிரியே அவன் கூட எப்பவும் வாழ்ந்துட்டு போறேன்.... கல்யாணம் பண்ணிக்காதவங்க நம்ம ஊர்கள்ல இல்லையா என்ன?... அது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் என்னோட காதலுக்காக அந்த சின்ன கஷ்டத்த கூட சமாளிக்க முடியலைனா நான் இந்த காதல் விவகாரத்துக்கே வந்திருக்கக்கூடாது....” என்று நான் எதிர்பாராத பதிலை சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார்....
நான் அவர்கிட்ட எதிர்பார்த்த பதில், வெளிநாடு செல்வதாக இருக்கும்னு நினச்சேன்.... மறுபடியும் அதே கேள்வியை வேறு வடிவில் கேட்டேன், “ஒருவேளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கடும் நிர்பந்தம் வந்தால் என்ன செய்வீங்க?... வேற வழியே இல்லைன்னு நிலைமை வந்தா உங்க முடிவு?”...
“ரவி சொன்னது மாதிரிதான்.... எந்த விஷயத்துக்காகவும் நாங்க எங்க காதலை விட்டுக்கொடுக்க மாட்டோம்.... முடிஞ்சவரை யார் மனசும் புண்படாதபடி அஹிம்சா வழியில் போராடுவோம், வேற வழி இல்லைனா எங்க வழி, தனி வழிதான்” அழகாக சொன்னார் கமல்...
பல கதைகளில், நாயகன்களை கனடாவிற்கு விமானம் ஏற்றிவிட்டு “அந்த காதல் ஜோடிகள் நிம்மதியாக வாழட்டும்... எ ஸ்டோரி பை விஜய் விக்கி”னு பாரதிராஜா படத்து க்ளைமாக்ஸ் மாதிரி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ற நான், அதைப்பற்றி அவங்ககிட்ட கேட்டேன்... காரணம், ஒருகாலத்தில் என் ஆசை கனடாவில் வாழணும்னு இருந்துச்சு, அவன் கூட....
“இங்க இருந்து பிரச்சினைகள சமாளிக்கிறத விட, வெளிநாடுகளுக்கு போய் சட்டரீதியா திருமணம் செஞ்சு நிம்மதியா வாழலாமே?” என்று கேட்டேன்... (இதுவரை எத்தனையோ காதலர்களுக்கு “கனடா” நாட்டை சிபாரிசு பண்ணிருக்கேன், கனடா நாட்டு அரசாங்கம் அதுக்கு எனக்கு சன்மானம் தர்றதா கூட சில பேச்சுகள் உண்டு.... அதனால் இம்முறை பொத்தம் பொதுவாக வெளிநாடு என்று கேட்டுவிட்டேன்)...
“எதுக்குங்க நான் வெளிநாடு போகணும்?... அங்க போனா மட்டும் பிரச்சினைகள் இல்லையா?... என்னைய பொருத்தவரைக்கும் எனக்கும் கமலுக்கும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சு.... இங்க இருக்குறவங்களுக்கு பிரச்சினைனா வெளிநாடு போகனும்னு சொன்னா, நம்ம நாட்ல ஒருத்தன் கூட இருக்க கூடாது... ரெண்டு வருஷமா இவனையே சமாளிச்சுட்டேன், மத்த பிரச்சினைகள சமாளிக்குறதா கஷ்டம்?” என்று சோகமான பேச்சின் இறுதியில், கமலை ரவி கலாய்க்க, கையை ஓங்கி கமல் ரவியை அடிக்க துரத்த.... நான் ஒருத்தன் நடுவில் இருக்கிறதையே கவனிக்காமல், காதல் ஜோடிகளாக சிறகடித்து பறந்து திரிந்தனர் இருவரும்... ஒருவழியாக நானும் அங்கிருந்து விடைபெற்றேன், இனி சிவபூசையில் கரடியாக நான் எதற்கு?...
எவ்வளவோ கதைகளை எழுதி முடிச்சாச்சு, ஆனால் இப்போதான் காதலில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்குன்னு எனக்கு புரியுது... காதல் என்றாலே மென்மையான விஷயமாக பார்த்த எனக்கு, காதலித்து வாழ கடுமையான விஷயங்களை சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்....
இதுவரை நான் எத்தனையோ காதலர்களோடு பழகிருக்கேன், பல காதல்களை பார்த்திருக்கேன், பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கேன்.... அவர்களில் ஒருவரை சந்தித்து, அதைப்பற்றி இங்கு எழுதனும்னு ரொம்ப நாளாவே அலசி ஆராய்ந்ததில் எல்லாவிதத்திலும் இவர்கள் இருவரும் “மிகசிறந்த தம்பதிகள்” என்று என்னை பொருத்தமட்டில் தோன்றினார்கள்....
என் கதாபாத்திரங்களாக, கதையின் நாயகர்களாக நான் இதுவரை உருவாக்கிய எத்தனையோ நபர்களை விட, இந்த “ரவி கமல்” இருவரும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார்கள்... நான் வாழ விரும்பிய, ஆனால் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்துகொண்டு இருப்பதை கண்டு நிஜமாகவே மனம் பூரிப்பாக இருக்கிறது... நான் வணங்கும் இறைவனை ஒன்றே ஒன்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன், “தயவுசெய்து இவர்களை இதே நிம்மதியோடு இன்னும் நூறாண்டுகள் நிம்மதியாக வாழவிடு... இன்னும் எத்தனை வருஷங்கள் கடந்து நான் அவங்களை சந்திச்சாலும், அவங்க அதே புரிதலோடும், ஒற்றுமையோடும், நிம்மதியோடும் இருக்குற மாதிரி செஞ்சிடு...”.....

12 comments:

  1. படிக்கும் போது ரொம்ப சந்தோஸமா இருக்கு விஜய். நானும் prayer பண்னிகிறேன் விஜய். அவர்கள் குடும்பத்தின் முலமா இவர்களுக்கோ, இவர்கள் மூலமா அவர்கள் குடும்பத்திற்கோ எந்த மண உளைச்சலும் இருக்க கூடாது என்று.
    அந்த இனிய தம்பதிகளுக்கு என்மணமார்ந்த வாழ்த்துகள். நன்றி விஜய்.
    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சேகர்... நிச்சயம் நம்ம வேண்டுதல் அந்த இறைவன் காதில் விழுந்திருக்கும்....

      Delete

  2. super anna enakum indha madiri oru lover irundharu ana ippo illa avan bisex nan gay so avana oru ponnu love panna avan en kita ketan,,nan ippo ennada pannaporen enaku theriyala nu kasta pattan,nan than ne avan life long iruka mudium but enkuda iruka mudiyahu so ava kuda un life ne start pannu nu solliten....♥ vinoth ♥

    ReplyDelete
    Replies
    1. உங்க கவலை புரியுது சகோ... எல்லாம் சரி ஆகிடும் விடுங்க...

      Delete
  3. அருமையான கட்டுரை விக்கி.. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணாச்சி......

      Delete
  4. May god bless them...

    ReplyDelete
  5. பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா....

      Delete
    2. very nice to know about this wonderful couple....santhosama irunthuchu nu solradha vida romba poramaya irunthuchu solla asapaduren....God bless them with a very long happy life!!!!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. என் இனிய நண்பர் விஜய்க்கு வணக்கம்...@!
    முதலில் ரவி மற்றும் கமல் தம்பதிகளுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....!
    உங்களின் தேடலில் இத்தகைய உண்மையான ஓரின தம்பதியர்கள் தமிழகத்திலும் உள்ளார்கள் என்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதை பற்றிய முறையான புரிதல்கள் பெற்றோர்களிடம் இல்லை என்பது தான் வருத்திற்கு உரிய ஒன்றாக உள்ளது. அவர்களையும் சமாளித்து திருமணம் செய்து கொண்டு வாழும் இவர்களை பார்க்கும் போது மிகவும் பொறாமையாக உள்ளது... நம் ஓர் பால் ஈர்ப்பு சமூகத்தில் இவர்களை போல் ஒரு சிலரால் மட்டுமே ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை....!
    இப்படிக்கு மன குமுறல்களுடன்,
    ராஜா & கிருஷ்

    ReplyDelete