(ஒரு கட்டுரை தொடர்பாக சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னாவிடம் இருந்து வந்த கருத்துக்கான என் பதில்.... அவருடைய கருத்தை காண... http://chennai-dost.blogspot.in/2013/06/blog-post.html)
அன்பிற்கினிய
தோழர் விக்ராந்த் அவர்களே,
“தனியாக
போராட முடியாதா?” என்ற எனது கட்டுரைக்கு நீங்கள் முன்வந்து பதில் அளித்தமைக்கு
நன்றி.... குறிப்பிட்ட அந்த கட்டுரையில், எனது நீண்டநாள் கேள்விகளையும்,
கோரிக்கையையும் முன்வைத்தே எனது வாதங்களை முன்வைத்தேன்....
நீங்கள்
சொல்வதை போல திருநங்கைகள் அனைவரும் நம் சகோதரிகள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து
கிடையாது... சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நபர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒரே
குடும்பத்தினர் என்பதையும் நான் ஏற்கிறேன்.... ஒரே குடும்பமாக இருந்தாலும், அந்த
குடும்பத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் உரிமைகள் வெவ்வேறாக இருக்கும் என்பது
உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... நம் கையில் உள்ள விரல்கள் கூட ஒரே
அளவில் இருந்திடவில்லை... அதே போல நம் போராட்டம் மற்றும் கோரிக்கைகளும்,
திருநங்கைகளின் கோரிக்கைகளும் முற்றிலும் வேறு என்பதும் நாம் ஏற்றாக வேண்டிய
உண்மை....
“மூன்றாம்
பாலினமாக தங்களை அங்கீகரிக்க வேண்டும், அரசு தங்களுக்கான உரிமைகளை முழுமையாக
தந்திட வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க
வேண்டும்” போன்ற இன்னும் பல நியாயமான கோரிக்கைகளோடு போராடுகிறார்கள் நம் திருநங்கை
சகோதரிகள்.... ஆனால், நம் கோரிக்கைகள் முற்றிலும் வேறுபட்டவை.... “சட்டரீதியாக
ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க வேண்டும், ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை சட்டமாக்க
வேண்டும், ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள்
வழங்கக்கூடிய சட்ட முன்வரைவுகள் கொண்டுவரப்பட வேண்டும், குழந்தைகள் தட்தெடுப்பதில்
ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று முற்றிலும்
வேறு திசைகளிலான நம் போராட்டங்கள் துளி அளவு கூட நம் சகோதரிகளின் கோரிக்கையோடு ஒத்துப்போகாது....
திருநங்கைகளை
பற்றிய சமூக விழிப்புணர்வு ஓரளவு நம் தமிழகத்தில் உண்டாகிவிட்டதை நீங்களும் நானும்
அறிவோம்.... அவர்களுக்கான சட்ட ரீதியான கோரிக்கைகள் கூட ஓரளவு நடைமுறை
படுத்தப்பட்டு வருகிறது (நலவாரியம், வாக்குரிமை போன்ற விஷயங்கள்)... அவர்களின்
இனிவரும் போராட்டங்கள் என்பது, அடுத்தகட்ட உரிமைகளுக்கான போராட்டமே.... ஆனால், நம்
போராட்டங்கள் அடிப்படை போராட்டம்.... படித்த படைப்பாளிகள், இலக்கியவாதிகள்,
ஊடகங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களிடம் கூட நம்மை பற்றிய ஒரு தெளிவான சிந்தனை
இல்லை....
முதலாம்
வகுப்பில் “அகர” எழுத்து கற்பவனுக்கும், இளங்கலை பட்ட வகுப்பில் “இலக்கியங்கள்”
படிப்பதற்கும் உள்ள வித்தியாசம் நம் இரு போராட்டங்களின் அடிப்படையில் உள்ளது...
இனியும்
நாம் தனியாக போராட மறந்தால், நமக்கான தனித்துவத்தை நாம் இழந்துவிடுவோம்....
இறுதிவரை நம்மை பற்றியான ஒரு விளக்கத்தை மக்கள் மன்றத்தின் முன் வைக்க முடியாமலேயே
போய்விடும்.... இவ்வளவு காலம் இணைந்து செயல்பட்டோம்... நம் அக்காக்களின் கைகளை
பிடித்து, போராட்ட வழிகளை கண்டறிந்து சென்றோம்.... இனி நம்முடைய தனிப்பட்ட
அடையாளத்தை நாம் காட்ட வேண்டாமா?... அரசுக்கு உணர்த்த வேண்டாமா?... மக்கள்
முன்னால் வைக்க வேண்டாமா?....
அதற்கான
காலம் இதுவென்று உணருவோம்... கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை
இப்போது இல்லை.... ஓரளவு நாம் நம்மை புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறோம்... இனி நமக்கு
புரிந்ததை இந்த சமூகத்துக்கு புரியவைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது... இதனை
நான் நிச்சயம் ஒரு எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கவில்லை... உங்களை போன்ற
அமைப்பினர் நிச்சயமாக சமூக மாற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான வழிவகைகளை செய்து வருவதை
நான் காண்கிறேன்... அந்த உழைப்பு இன்னும் உயர்வான வெற்றிகளை பெற்றிட, அந்த
போராட்டங்கள் தனிப்பட்ட முறையில் அமைந்திட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்....
இங்கு
நம் கே சமூகத்தில் நடக்கும் “சகோதர யுத்தம்” பற்றி நான் நன்றாக அறிகிறேன்.... இது
மிகப்பெரிய அபாயத்தில் நம் சமூகத்தை இட்டு செல்லும் என்பதை அனைவரும் அறிவோம்... பல
திசைகளிலும், பல வழிகளிலும், பல விதங்களிலும், பல அமைப்புகளாக நீங்கள் எல்லோரும்
போராடினாலும், அந்த போராட்டங்களின் அடிநாதம் என்பது “ஒருபால் ஈர்ப்புக்கான
உரிமைகள்” என்பதை நாம் அனைனரும் அறிவோம்.... அப்படி இருக்கையில், ஈகோ மறந்து,
போட்டிகள் மறந்து ஒன்றாக கைகோர்த்து போராடி நமக்குள் இருக்கின்ற “நுண்ணரசியலை”
உடைத்தெறிய வேண்டும் என்பது எனது பணிவான
வேண்டுகோள்....
அனைத்து
அமைப்பும் ஒன்றாக இணைந்து போராடினால், நாம் வேறு யாருடனும் கைபிடித்து செல்ல
வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படாது.... அப்படி ஒரு இணக்கமான சூழலை நாமாக உருவாக்க
வேண்டிய காலம் இப்போது கனிந்திருக்கிறது.... இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இனி நம்
போராட்டங்களின் அடுத்த கட்டத்தை அடைந்திட இந்த தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்....
“நல்லதொரு
மாற்றத்துக்கு நாம் எல்லோரும், ஒன்றாக இணைந்து போராட வேண்டும்”...
நல்லதொரு மாற்றத்தை எதிர்நோக்கி,
என்றும்
உங்கள் விஜய் விக்கி...
அன்புக்குரிய நண்பரே எதேச்சயாக உலாவும் போது தோஸ்த் அமைப்பின் வலைப்பூவை படிக்க நேர்ந்தது. அவர் தங்களுக்கு பதில் கூறி இருப்பது வியப்பளித்தது. பின் தங்கள் வலைப்பூவில் தாங்களும் பதிலளித்திருந்தீர்கள். மிகவும் பாராட்டுக்குரிய கருத்தை விதைதுள்ளீர்கள்கள். அரவாணிகளும் ஓரின விரும்பிகளும் ஒன்று என்று கருதும் சமூகத்தில் இருவரும் இணைந்து போராடும் போது முதல் வெற்றி அவர்களுக்கே கிடைக்கும் நாம் மேற்கொண்டு நம்மை அடையாள படுத்தி கோரிக்கை வைக்கும் போது அது பெரும்பான்மை சமூகத்தை நச்சரிப்பது போல ஆகிவிடும். எனவே முதலிலிருந்தே தனித்துவ படுவதே சிறப்பு. மேலும் எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் அந்த அமைப்பின் வலைபூ ஓரின விரும்பிகளின் உடல் தேவைகளுக்கு பல வகையில் உதவும் ஒன்றாகவும் படுகிறது.
ReplyDelete