Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday, 25 May 2013

“ஓராண்டின் நிறைவை நோக்கி உங்கள் விஜயின் வலைப்பூ....” - நன்றி! நன்றி! நன்றி!...






என் முதல் பதிவை தொடங்கியது முதல், இன்னும் சில நாட்களோடு இந்த வலைப்பூ முதல் வருடத்தை இனிதே நிறைவு செய்ய இருக்கிறது... காமம் கலக்காமல் ஒரு “ஒருபால் ஈர்ப்பு” தளம் என்ற எண்ணத்தில் இந்த வலைப்பூவை தொடங்கும்போது, “இதல்லாம் ரொம்ப நாளைக்கு வராது” என்று என் திசையை மாற்றிட நண்பர்கள் சிலர் சொன்னார்கள்... சில கிளர்ச்சியூட்டும் படங்கள், பிரபல எழுத்தாளர்களின் கதைகள் என்று இந்த வலைப்பூவில் மசாலா சேர்க்க சொன்னார்கள்... ஆனால், பிடிவாதமாக நான் இந்த ஒரே வழியை பின்பற்றி இந்த ஒரு வருட பயணத்தை நிறைவு செய்கிறேன்.... நூறினை நெருங்கும் பின்தொடர்பவர்கள், ஐம்பதாயிரத்தை கடந்த பார்வையாளர்கள், எழுபதாவது எண்ணிக்கையை தொட இருக்கும் பதிவுகள் என்று நிச்சயம் நான் எதிர்பார்த்திராத ஆதரவை நீங்கள் தந்திடாமல் இருந்திருந்தால் நிச்சயம் வலைப்பூ என்றைக்கோ காய்ந்து சருகாய் மாறிப்போயிருக்கும்... ஆனால் இதை ஒரு மசாலா கலந்த கமர்சியல் வலைப்பூவாக கொண்டு சேர்த்திருந்தால் நிச்சயம் இதைவிட அதிக பிரபலமும், வளர்ச்சியும் உடையதான தளமாக உருவாக்கியிருக்க வேண்டும்... ஆனால், இந்த தளத்திற்கான தனித்துவத்தை இழந்திருக்க வேண்டி இருந்திருக்கும்... இப்போது, இந்த மத்திம வளர்ச்சியில் மனம் நிறைந்த தளமாக என் வலைப்பூவை கொண்டு வந்திருப்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவான மகிழ்ச்சியை கொடுக்கிறது...
பொதுவாக தமிழில் சொல்லப்படும் உயர்ந்த நெறிகள் கூட, தமிழனை பொருத்தவரை அது சாதாரண விஷயம்தான்... இங்கு நான் எழுதிய கருத்துக்களை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அது இன்னும் கொஞ்சம் அதிகமா பிரபலம் ஆகிருக்கலாம்.... தமிழில் வெளியிடுவதால் பெரும்பாலானவர்களால் அதிகம் படிக்கப்படுவதில்லை...இப்படிப்பட்ட ஒரு முட்டாள்த்தனமான மொழி ஏற்றத்தாழ்வில் என் வலைப்பூவும் சிக்கியது நான் அறிவேன்...... அதற்காக நான் கவலைப்படவில்லை.... என் தமிழ் எந்த அறிவியலையும் கிரகிக்கும் திறன் வாய்ந்த மொழி... அந்த வகையில் நான் சொல்ல விரும்பும் விஷயங்களை அழகிய தமிழில் சொல்வதில் பெருமை அடைகிறேன்.... காலம் எவ்வளவோ மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றது, இந்த தமிழரின் மனநிலையையும் ஒருநாள் மாற்றும் என்ற நம்பிக்கையில் இன்னும் நான் எழுதுவேன்...
இதை இங்க சொல்ல காரணம் என்ன?... தற்பெருமை என்று தயவுசெஞ்சு நினச்சுடாதிங்க.... உங்களுக்கு வெளியில் தெரியும் இந்த வெற்றிகளுக்கு பின்னால், நான் அனுபவித்த வேதனைகளையும் சொல்லத்தான் இதை சொல்கிறேன்... வெளிப்படையா பார்க்குறப்போ இதல்லாம் ஒரு முன்னேற்றமா தெரியலாம்... ஆனால், இந்த முன்னேற்றங்களுக்கு நான் கொடுத்த விலை ரொம்பவே அதிகம்... ஆமாம், அந்த விலைக்கு பெயர் “நிம்மதியின்மை”... ஒரு பக்கம் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான கருத்துகளை எழுதுவதால், கருத்தில் முரண்பட்ட சில பொதுவான நபர்களின் எதிர்ப்பு... இன்னொரு பக்கம், காரணமே இல்லாத பகைமை விரும்பும் நம் ஒருபால் இனத்தவர்கள்.... அதிகபட்சமாக கொலை மிரட்டல் வரை கொடுத்ததுதான் இங்கே உச்சம்... கொலை செய்ய வைக்கும் அளவிற்கு நான் அப்படி என்ன எழுதிட்டேன்னு எனக்கு தெரியல...
எதனால் அப்படி ஒரு பகைமை உருவானது?ன்னு எனக்கு புரியல... என்னை பகையாக கருதும் நண்பர்களுக்கும் எனக்கும் என்ன பங்காளி தகராறா? வாய்க்கால் வரப்பு பிரச்சினையா?.... இன்னும் சொல்லப்போனால் விஜய் விக்கி என்பதை தவிர என்னை பற்றிய எவ்வித விஷயமுமே தெரியாதவர்கள்தான் அவர்களுள் பெரும்பாலானவர்கள்.... இருந்தும் பகைமை உருவாக காரணம் என்ன?... என் தனிப்பட்ட தொலைபேசி எண் கேட்டு, நான் கொடுக்கவில்லை என்றால் நான் அவர்களை பொருத்தவரை “திமிர் பிடித்தவன்”, ஏதோ ஒருவகையில் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல மறந்தால் நான் “ஆணவக்காரன்”... இப்படி நம்ம மக்கள் அவங்களாவே சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு மனதிற்குள் பகைமையை வளர்ப்பதுதான் நிதர்சனம்... முன்பெல்லாம் அந்த பகைமையின் வெளிப்பாடாக வரும் விமர்சனங்களை கண்டும், வராத பாராட்டை எண்ணியும் வருத்தப்பட்டதுண்டு... ஆனால், என் எழுத்துலக கடவுள் அமரர்.சுஜாதா அவர்களின் ஒரு கருத்தை சமீபத்தில் நான் படிக்க நேர்ந்தபோதுதான் ஒரு தெளிவான மனநிலைக்கு வந்தேன்.... “வாசகர்கள் ரசிப்பது என்னை அல்ல, என் எழுத்தை.... அவர்கள் கொடுக்கும் எதிர்மறை விமர்சனம் தனிப்பட்ட சுஜாதாவை பற்றியதல்ல என்பதால், எவ்வித விமர்சனத்தையும் படித்து முடித்ததும் நினைத்து கவலைப்படுவதே இல்லை” என்ற இந்த ஒற்றை கருத்து இன்றைக்கு எதையும் தாங்கும் இதயத்தவனாக ஆக்கிவிட்டது....  என் முகத்தை, சுய அடையாளத்தை மறைத்து நான் எழுதிக்கொண்டு இருப்பதால் பொது தளத்தில் எழுதும் மற்றவர்களை போல இங்கே நமக்கு உரிய அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை... ஆனாலும், ஏதோ ஒரு மன நிம்மதிக்காக எழுதும் எங்களை போன்றவர்களுக்கு நிம்மதி அழிவதுதான் மிச்சம்.... ஆனாலும், இப்போவரை எழுதுவதை நிறுத்த முடியவில்லை...
இவ்வளவையும் தாண்டி இன்னும் எழுதிக்கொண்டு இருப்பதற்கு வலைப்பூ , ஆர்குட், பேஸ்புக், அன்பைத்தேடி தளம் போன்ற இடங்களில் தொடர்ந்து ஊக்கமும், உறுதுணையும் கொடுக்கும் வாசக நண்பர்கள்தான் காரணம்... அந்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த முதல் நன்றி... பல கஷ்டங்களை தாண்டியும் இன்னும் நான் எழுதிக்கொண்டு இருப்பதற்கு நீங்கள்தான் முதல் மற்றும் முக்கிய காரணங்கள்....
ஒரு தனி நபருக்கும் இங்கே நான் நன்றி சொல்லணும்... என் பெரும்பாலான கதைகள் சிறப்பான முடிவை பெற்றிட, இங்கு பதிவதற்கு முன்பே நான் ஆலோசனை கேட்டு பதிவது வழக்கம்... அப்படி நீங்கள் பாராட்டிய பல கதைகளுக்கும் சிலபல ஆலோசனை உதவிகளை செய்த என் அன்பு அண்ணன் திரு.ROT HEISS அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்....
மேலும் வெறும் எழுத்தாக மட்டும் இருந்த எண்ணங்களை, நிகழ்வுகளாக்க, நிஜமாக்க இந்த ஒருபால் ஈர்ப்பு சமூகத்து நண்பர்களுக்காக போராடும் அமைப்பினரான சிருஷ்டி, சென்னை தோஸ்த், லோட்டஸ் சங்கம் போன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
முகம் மற்றும் அடையாளம் தெரியாத எத்தனையோ நபர்கள், இந்த தளம் கொடுத்த ஏதோ ஒரு மனநிறைவால், தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றி சொல்வதை பார்க்கும்போது, நிச்சயம் என் பயணம் தடம் மாறாமல் சரியான வழியில் செல்வதாக நினைக்கிறேன்.... இந்த பயணம் இன்னும் நிறைய தூரம் சென்றிடவும், நிறைய நிறைவுகளை பெற்றிடவும் உங்கள் அத்தனை பேரின் ஆசிர்வாதமும், ஆதரவும் இந்த வலைப்பூவிற்கும், உங்கள் விக்கிக்கும் என்றைக்கும் தேவை....
“அண்ணா” என்று பாசத்தோடு அழைத்திடும் தம்பிகளுக்கும், தங்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் எனக்கும் ஓர் இருக்கை கொடுத்து அழகு பார்க்கும் நண்பர்களுக்கும், முகம் தெரியாமல், குரல் கேட்காமலும் கூட நட்பின் உயர்ந்த உன்னதத்தை உணரவைத்த அன்பிற்கு உரியவர்களுக்கும் நன்றிகள்....
ஒரு நல்ல விஷயத்தை பாராட்ட எல்லோருக்கும் எளிதாக மனம் வந்துவிடாது... அந்த வகையில் மற்ற தளங்களில் என் வலைப்பூவை பாராட்டியும், இதனை ஒரு உந்துசக்தியாக நினைத்து வலைப்பூ தொடங்கிய நண்பர்களுக்கும் நன்றிகள்... (கீழே கொடுத்திருக்கும் இணைப்புகள் அப்படிப்பட்ட தளங்களில் சில)...
என்னோடு இல்லையென்றாலும், எங்கோ இருந்து நினைவுகளால் என்னை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கும் என் விஜய்க்கு ஒரு நன்றி...
பல பணிசூழல்களுக்கு மத்தியிலும், குடும்ப நிர்பந்தங்களுக்கு மத்தியிலும் இன்னும் தொடர்ந்து என்னை எழுதிடும் அளவிற்கு மனதிடத்தை கொடுத்த நான் வணங்கும் இறைவனுக்கு என் இறுதி நன்றிகள்.....
இன்னும் சிறப்பான உயரத்தையும், உன்னதத்தையும் உங்களின் விஜயின் வலைப்பூ அடைந்திட பேராதரவு கொடுக்கும், கொடுக்க இருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!...

22 comments:

  1. Replies
    1. எனக்கு வாழ்த்து வேணாம் நண்பா... இந்த வலைப்பூ இன்னும் சிறக்க உங்கள் ஆதரவு இருந்தால் மட்டும் போதும்...

      Delete
  2. Senthamizh Selvan26 May 2013 at 09:22

    Congrats dear Vicky. All the best for your future works and life.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  3. vijay anna,really superb stories. i love it.all the best anna

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் விக்கி!
    ரொம்பவும் நெகிழ்வா இருக்கு!!
    இன்னும் நிறைய எழுதி.. இன்னும் அதிகமான விழிப்புணர்வ ஏற்படுத்துங்க..!! நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, இப்போ மட்டுமில்ல... இன்னும் பல காலம் உங்க ஆதரவும் ஆலோசனையும் எனக்கு எப்பவும் இருக்கணும்.... உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்...

      Delete
  5. all the best vicky... Tirupur Babu

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி நண்பா.....

      Delete
  6. great machi nee,,,, continue it., congrats.,

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பா,தங்கள் பனி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.... உங்கள் மேலான ஆதரவே இந்த வெற்றிக்கு வித்துக்கள்...

      Delete
  9. வாழ்த்துக்கள் விஜய்..கண்டிப்பஇந்த தளம் முலம் ஓரிணசேர்க்கை பற்றிய தவறான எண்னங்களை நீக்கி தெளிவுபெற்றேன். நண்றி விஜய். உஙகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..... "தெளிவுபெற்றேன்" இந்த ஒற்றை வார்த்தைகள்தான் என் இவ்வளவு இன்னல்களுக்கும் மருந்தாக இருக்கிறது நண்பா,....

      Delete
  10. Hello anna !! cha, wonderful !!
    hats off ! but kolai mirattal ah ?? is it true ??!!!!
    but ithellam celebrity ku thane varum, how come to you??
    so you have become a celebrity !!!
    so this is your real success bro !! enjoy !!
    vera yaru--- rocking remo than !!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தம்பி.... ஒரு சிறுகதையில் நான் உருவாக்கிய கதாபாத்திரம் தொடர்பாக, எனக்கு மிரட்டல் வந்தது.... மதரீதியான மிரட்டல்... நான் அங்கு தவறாக எதுவும் சொல்லிவிடவில்லை என்றாலும், பிரச்சினைகளை வளர்க்க வேண்டாம் என்று அந்த சிறுகதையை மொத்தமாக நீக்கிவிட்டேன்.... எவ்வளவோ பார்த்தாச்சு!..... நன்றி தம்பி....

      Delete
  11. all the best vicky....rajesh from chennai

    ReplyDelete
  12. we need your service always vicky.. I wish this site to last for many years..

    ReplyDelete