Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 19 August 2013

"நிகழ்தகவு...!" - சிறுகதை....

"
மருத்துவமனையின் மருந்து நெடி கெளதமை முகம் சுளிக்க வைக்கவில்லை.... கதவை திறப்பதற்காகவே காத்திருந்ததை போல, நாசிகளை துளைத்த அந்த வாடை அவனுக்கு பழகிப்போய்விட்டது.... சில வாசனைகளுக்கு நிறைய பின்புலம் இருப்பதுண்டு.... சிறுவயதில் பள்ளிக்குள் நுழையும்போது நுகரப்பட்ட “பயத்தின்” வாசம், கோவிலுக்குள் நுழையும்போதல்லாம் உணரப்படும் “பக்தியின்” வாசம், ஹாஸ்டல் உணவு அலுத்துப்போய் வீட்டிற்குள் நுழையும்போது நுரையீரல் வரை பரவும் “பாதுகாப்பின்” வாசம் என்று எல்லா வாசனைகளுக்குமே சில பின்புலங்கள் இருப்பதுண்டு... இதுநாள் வரை அந்த வாசனைகளை வெளியாக்கும் மூலப்பொருள் என்ன? என்று அவனால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை....
நீல நிற சட்டை, வெள்ளை நிற பேன்ட், கழுத்தில் மாட்டப்பட்டு இடது பக்கம் “குரங்கின் குட்டியை போல” தொங்கிக்கொண்டிருந்த லெதர் பேக், அதில் எழுதப்பட்டிருந்த “வீ.ஜே பார்மா” அடையாளம் என்று  எல்லாமும் சேர்ந்து அவனை “இவன்தான் அந்த மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி!” என்று சத்தமில்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது....
அவன் வயது, அதிகாரப்பூர்வமாக இருபத்தி ஏழு... ஆளை பார்த்தால் இரண்டு வயதை குறைக்க சொல்கிறது அவன் உருவம்... வரவேற்பறை இருக்கைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, தரைகளிலும் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்... சுவற்றில் மாட்டியிருந்த குழந்தை படங்களை தவிர, வேறு யார் முகத்திலும் சம்பிரதாய சிரிப்பு கூட இல்லை...
“வழில உக்காராத... எந்திரி... எந்திரி....”
எரிச்சலும், முணுமுணுப்பும் கலந்து, படுத்திருந்த பாட்டி எழுந்து சென்று ஓரத்தில் அமர்ந்தாள்... யாருமே கவனிக்காவிட்டாலும், எல்லோருக்காகவும் பாட்டை டெடிக்கேட் செய்துகொண்டிருக்கிறாள் சன்மியூசிக் வீ.ஜே. ஒருத்தி.... பாடல் பிடிக்காமலோ என்னவோ, குழந்தை ஒன்று “வீல்”என்று அழுதுகொண்டே இருக்கிறது.....
எல்லாவற்றையும் கடந்து சென்று, வரவேற்பில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்களையும் தவிர்த்துவிட்டு ஐந்தாவதாக நின்ற வரவேற்பாளனை அணுகினான் கௌதம்....
“அதான் சொல்றேன்’ல டாக்டர் பத்து மணிக்கு தான் வருவார்... அதுக்குள்ள போய் ஸ்கேன் எடுத்துட்டு வா.... இம்சை பண்ணாம போம்மா” யாரையோ கரித்தபடியே, அழகாக கௌதமின் பக்கம் திரும்பினான் அந்த யுவன்.... கெளதமை பார்த்ததும், உதடு பிரியாத ஒரு சிரிப்பு....
“என்ன காலைலயே டென்ஷனா?” ஒரு கையை மேசை மீது வைத்து, அதில் ஸ்டைலாக சாய்ந்தபடி கேட்டான் கௌதம்..
“இல்ல சார்.... கேட்டதையே நூறு தடவை திரும்ப திரும்ப கேக்குறாங்க”
“நீ திரும்பாம நிக்கலாம்ல?”
கௌதம் மட்டுமே சிரித்தான்.... கௌதம் சிரித்தபிறகுதான் அது ஜோக் என்பதை உணர்ந்த யுவனும், பதிலுக்கு சிரித்து வைத்தான்....
“டாக்டர் தியேட்டர்’ல இருக்கார்... ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு வர பத்தாகிடும்...” எப்படியாவது கெளதமை அந்த இடத்திலிருந்து துரத்தவேண்டும் என்கிற முனைப்பு அவன் பேச்சில் இருந்தது....
“ஹ்ம்ம்... நாமளும் தியேட்டர் போயிட்டு, அப்டியே ரவுண்ட்ஸ் போயிட்டு வரலாமா? ஹ ஹ ஹா...”
இப்போதும் கௌதம் மட்டும்தான் சிரிக்கிறான்....
“ட்ரிங்... ட்ரிங்.... ட்ரிங்....” மருத்துவமனை தொலைபேசி அலறியது... அவ்வையார் காலத்து தொலைபேசியாக இருக்க வேண்டும், சில இடங்களில் விரிசல்கள் கூட விழுந்துவிட்டது...
“சார்...”
“.....”
“ஓகே சார்...”
“....”
“அந்த வீ.ஜே பார்மா ஆள் வந்திருக்கார் சார்...”
“....”
“ஓகே சார்....” அழைப்பை துண்டித்த அந்த யுவன், நிமிர்ந்து கெளதமை பார்த்தான்....
கௌதம் அவனையே இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான் என்பதை உணரும்போது, உடலில் ஒரு குறுகல், மனதிற்குள் ஒரு எரிச்சல்....
“உங்களை சார் மூணாவது ப்ளோர்’க்கு வர சொன்னார்.... அங்கதான் ரவுண்ட்ஸ்’ல இருக்காராம்...” சொல்ல வேண்டிய தகவலை மட்டும் சொல்லிவிட்டு, மேசை மீது இருந்த கோப்பில் கண்களை படரவிட்டான் அந்த யுவன்.... அவ்வப்போது கருவிழியை மட்டும் மேல்நோக்கி நகர்த்தி, கௌதம் இருக்கிறானா? என்பதை பார்த்துக்கொண்டான்.... ஒருவழியாக கௌதம் அங்கிருந்து விலகி, லிப்ட் நோக்கி நகரும்போதுதான் அந்த யுவன் கொஞ்சம் பெருமூச்சு விட்டான்....
லிப்ட் அருகே வழக்கமாக நிற்கும் செக்யூரிட்டி, வழக்கமான “பத்து ரூபாய்”க்காக சலாம் வைத்தான்.... பதிலுக்கு சிரித்துவிட்டு, வாயை பிளந்த லிப்ட்’க்குள் நுழைந்தான் கௌதம்.... அவனை தவிர இன்னும் நான்கு பார்வையாளர்கள், இரண்டு நர்ஸ்களும் அந்த கணப்பொழுது பயணத்தில் இணைந்துகொண்டார்கள்....
சில “தடக்... தடக்...”களை தொடர்ந்து புறப்பட்டது லிப்ட்... ஆயில், கிரீஸ் போட்டு எப்படியும் வருடங்கள் ஆகிவிட்டதை “க்ரீச்... க்ரீச்.... க்லீக்” சத்தம் போட்டு சொன்னது...
அருகில் நின்ற ஒருவர், அந்த லிப்ட் பயணத்திலும் நேரத்தை வீணாக்க விரும்பாமல், விகடனை புரட்டிக்கொண்டு நிற்கிறார்.... அதிலிருந்த சினேகாவின் புடவையையும், நகையையும் எட்டிப்பார்த்தபடி வந்தார் பின்னால் நின்ற நர்ஸ்....
“1…..2…..3….” இறங்கினான் கௌதம்.....
அருகில் இருந்த கண்ணாடி கதவின் வழியாக தன் முகத்தை பார்த்து, தலைமுடியை சரிபடுத்திக்கொண்டு நகர்ந்தான்...
அந்த தளத்தில் இருக்கும் (அநேகமாக) இருபது அறைகளில், எதில் இருப்பார் அந்த மருத்துவர்?.... தயங்கியபடியே செவிலியர்கள் யாரையாவது எதிர்பார்த்து நின்றான்.... யாரும் வருவதாக தெரியவில்லை.... திறந்திருந்த கதவுகளின் வழியாக எட்டிப்பார்த்தான்.... சன் டிவியில் மெகாத்தொடர்களில் வரும் கதாப்பாத்திரங்களை போல, அறைகளுக்குள் இருக்கும் எல்லோரும் முகம் சுண்டி, வதங்கி  காணப்பட்டார்கள்.... மூன்று, நான்காவது தாண்டி, ஐந்தாவது அறை ஒருக்களித்து சாத்தப்பட்டு இருக்கிறது....
மெல்ல திறந்தான்.... வழக்கமான சீரியல் அம்மா போல ஒரு பெண்மணி தரையில் அமர்ந்து துணிகளை மடித்துக்கொண்டு இருக்கிறார்.... சிரித்துவிட்டே அந்த கதவை சாத்த முயன்றபோது, சட்டென்று படுக்கையில் படுத்திருந்த நோயாளியின் முகம் கண்களில் நுழைந்து, மூளையை குடைந்து, பழைய நினைவுகளை நிலைதடுமாற வைத்தது....
எங்கோ பார்த்த முகம்!... எப்போதோ பழகிய முகத்தின் சாயல்!...
தயங்கியபடியே உள்ளே நுழைந்தான்....
கதவு மெல்ல திறப்பதை கவனித்த அந்த பெண் தன் சேலையை சரிசெய்துகொண்டு முட்டியை பிடித்தபடி மெல்ல எழுந்தார்.... மருத்துவர் வந்திருக்கிறார் என்று நினைத்திருக்கக்கூடும், கெளதமை பார்த்ததும் குழப்பத்தில் “வாங்க...” என்றார்...
அதை கவனிக்க தோன்றாத கௌதமின் பார்வை, படுத்திருப்பவனின் முகத்தை உற்று பார்த்தது... சித்தார்த்தின் சாயல்!... சாயல் தானா? அல்லது, அவனே தானா?... அவனாக இருக்கக்கூடாது... கௌதமின் பார்வை, படுத்திருப்பவனின் வலது கையை தேடியது... வலது கை ஆட்காட்டி விரலின் நகம் பட்டுப்போய் இருந்தது.... சித்தார்த் தான்....
அடக்கடவுளே!....
“சித்தார்த்...” வாய்விட்டு உச்சரித்தான்....
“சித்துவோட ப்ரெண்டாப்பா?.... உக்காருப்பா....” அருகிலிருந்த இருக்கையில் கிடந்த மாத்திரை கவர்களையும், திருச்செந்தூர் கோவில் திருநீறையும் கையில் எடுத்துவிட்டு, அதில் அமர்வதற்கு வழிசெய்து கொடுத்தார் அம்மா...
சித்துவை இந்த கோலத்தில் பார்த்தது கெளதமை நிலைகுழைய வைத்துவிட்டது.... பளபளத்த மேனியும், தகதகத்த முகமும், மின்னல் வெட்டினை மிஞ்சும் அவன் சிரிப்பும், நடக்கும்போதே அவனுடன் ஆடிடும் தலைமுடியும்... அதுதான் சித்தார்த்.... ஆனால் இப்போதோ... தலைமுடி உதிர்ந்து கிட்டத்தட்ட மொட்டை தலையின் முந்தைய ஸ்டேஜ், வீங்கிய முகம், அதை தன்னால் முடிந்த அளவுக்கு அலங்கோலமாக காட்டிடும் மேடு பள்ளங்கள், கருத்துப்போன உதடுகள்... ஆறு மாதங்கள்தான் இருக்கும், அதற்குள் இவ்வளவு மாற்றங்கள் எப்படி?....
கண்கள் இருட்டி, கால்கள் நிலைதடுமாறி மெல்ல அந்த இருக்கையில் அமர்ந்தான்...
“இப்பதான் தூங்குனான்.... எழுந்திருக்கிற வரைக்கும் இதை படிச்சுட்டு இருங்கப்பா.... நான் கீழ இருக்குற கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன்....” சித்துவை எழுப்பிவிட்டிட வேண்டாம் என்பதைத்தான் அம்மா, அவ்வளவு நாசூக்காக சொல்கிறார்கள்.... கையில் வாங்கிய அந்த புத்தகத்தின் தலைப்பை கூட அவன் பார்க்க விரும்பவில்லை....
ஆறு மாதத்திற்கு முன்பு பேசிய பேச்சு, இப்போதுதான் கௌதமிற்கு நினைவுக்கு வந்தது...
“இங்க பாரு கௌதம்... எனக்கு இந்த லவ்’லயல்லாம் நம்பிக்கை இல்ல.... செக்ஸ் வச்சிக்குறதுக்கு ஒரு லைசன்ஸ் போலத்தான் இப்போலாம் காதல் இருக்கு... அதனால அதல்லாம் விட்டுடலாமே?”
“என்ன சித்து சொல்ற?... காதல் பத்தி இவ்வளவு மோசமான ஒரு விளக்கத்தை இப்போதான் நான் கேட்குறேன்.... அதோட புனிதத்த நீ இன்னும் புரிஞ்சுக்கல”
“ஹ ஹ ஹா... புனிதம்!.... பலதடவை பாத்திருக்கேன்.... பலபேர்கிட்ட பாத்திருக்கேன்... லவ் பண்றதா சொல்வாங்க, கொஞ்ச நாள் பழகுவோம்’னு சொன்னா, பாதில கழன்டுட்டு போய்டுவாங்க.... செக்ஸ் தான் அவங்களுக்கு பிரதானம்... அந்த செக்ஸ் அலுத்துப்போற வரைக்கும், அவங்க காதல் புனிதமா தெரியும்... அதுக்கப்புறம், அடுத்த காதலை தேட போய்டுவாங்க...”
“என்னையும் அப்டி நினைக்குறியா?”
“நீ வித்தியாசமானவனா இருப்பன்னு எனக்கு தோணல....”
“அப்டி நம்பிக்கை வர நான் எவ்வளவு நாள் காத்திருக்கணும்?”
“ஹ்ம்ம்... ஒரு ஆறு மாசம்.... ஆனால், அந்த ஆறு மாசமும் நீ என்னைய பாக்கவோ, பேசவோ கூடாது.... அதுக்கப்புறமும் உன்னோட லவ் அப்டியே இருந்தா, என்னைய வந்து பாரு.... நானே உன்கிட்ட ப்ரப்போஸ் பண்றேன்.... டீல் ஓகே வா?”
“டபுள் ஓகே.... இது ஒனக்கு மட்டுமில்ல... காதலை பற்றி தப்பா பேசுற அத்தனை பேருக்கும் இது என்னோட சவால்....”
சபதம் முடிந்து வெளியேறிய கௌதமின் மனதில் காதல் தீ, அடுத்த ஒரு வாரத்துக்கு கனன்றுகொண்டே இருந்தது.... அதற்கு பிறகு?... காதல் தீ மெல்ல மெல்ல அணைந்து, கதகதப்பான விஷயங்களை தேடி சென்றது....
இப்போது, இந்த தருணத்தில், இந்த கோலத்தில் சித்துவை பார்ப்பான் என்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை.... கிட்டத்தட்ட மனதைவிட்டு மறந்தே போன ஒருத்தன் இப்படிப்பட்ட நிலைமையில் தன் முன் படுத்திருப்பதை அவனால் நம்பமுடியவில்லை....
ஏன் இங்கு உட்கார்ந்திருக்கணும்?... சித்துவுக்கு ஏமாற்றம் என்ன புதிதா?... காதலிக்கும் நிலைமையிலா அவன் இருக்கிறான்?... இங்கே அமர்ந்திருப்பது முட்டாள்த்தனமான விஷயம்... மெல்ல எழமுற்பட்டபோது, கண்களை விழித்தான் சித்து....
அருகில் அம்மாவை எதிர்பார்த்திருக்கக்கூடும், வேறொரு உருவம் குழப்பத்தை உண்டாக்கியது... கண்களை அகல திறந்து பார்த்தான், கௌதம் தான்.... ஆனால், அவன் கண்களில் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ, திகைப்போ தெரியவில்லை... மெல்ல சிரித்தபடி, தன் வறண்ட உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான்...
“வா கௌதம்... நல்லா இருக்கியா?” குரல் கூட சிதைந்து போய் இருக்கிறது....
“ஏண்டா இப்டி? என்ன ஆச்சு?”
“ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா... அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்.... புரியுற மாதிரி சொல்லனும்னா, கேன்சர்...” பொய்யாக சிரித்தான்....
“எப்டிடா?... ஏன் உனக்கு?”
“கேன்சர் கூட ரஜினி மாதிரிதான்.... எப்போ வரும்? யாருக்கு வரும்?னு சொல்ல முடியாது... ஆனால், வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்...”
“ப்ளீஸ்... ஒழுங்கா சொல்லு... இப்போ சிரிக்குற நிலைமைல நான் இல்ல...” கண்கள் கலங்கியது கௌதமிற்கு....
“ப்ளீஸ் அழாத... இந்த நாலு மாசமும் வேண்டிய மட்டும் அழுதாச்சு, அளவுக்கு அதிகமா அழுகையை பார்த்தாச்சு... இருக்கப்போற ஒரு ரெண்டு மாசத்துலயாவது கொஞ்சம் சிரிச்சுகிட்டு இருக்க ஆசைப்படுறேன்....”
“முட்டாள்த்தனமா பேசாத... இப்போ கேன்சர்’லாம் கியூர் பண்ணிடலாம்... இன்னும் நூறு வருஷம் நீ நல்லா இருப்ப.... இப்போலாம் எவ்வளவோ மருத்துவம் வளர்ந்துடுச்சு....”
“அதைவிட அதிகமா உடம்புல கேன்சர் செல் வளர்ந்துடுச்சு.... அதான் சொல்றேன்ல, இது முற்றிய நிலையாம்.... ஆரம்பத்துலையே காட்டிருந்தா கியூர் பண்ணிருக்கலாம்... இப்போ வாழ்நாளை நீட்டிக்க மருந்து கொடுக்குறாங்க... அதோட வாழ்நாள் கூட அதிகபட்சம் ரெண்டு மாசம்தான்.... காதலோ, கேன்சரோ ஆரம்பத்துலையே புரிஞ்சுகிட்டா சந்தோஷமா வாழலாம்... என்னை மாதிரி லேட் பண்ணினா, ரெண்டுலயும் தோல்விதான்... பன்ச் நல்லா இருக்குல்ல?... என்னமோ தெரியல, இப்போலாம் நான் பேசுறதல்லாம் கவிதையா இருக்கு தெரியுமா?” சிரித்தான்.... அந்த சிரிப்பில், கெளதமை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்கிற முனைப்பு தெரிந்தது.....
கௌதம் இன்னும் இறுக்கமான முகத்துடன்தான் இருக்கிறான்... எப்படி அவனால் அதிர்ச்சியை மறந்து இயல்பாக முடியும்....
நர்ஸ் ஒருத்தி வந்தாள்.... கையில் ஒரு தட்டு, அதில் ஊசி, க்ளுக்கொஸ் வகையறாக்கள்...
“சாப்டிங்களா சித்தார்த்?.... அந்த கைல போட்டிருக்கிற ஐவி லைன்’ல க்ளாட் ஆகிடுச்சு... லைன் மாத்தணும்” சிதார்த்திடம் பதிலையோ, அனுமதியையோ அவள் எதிர்பார்க்கவில்லை.... அவன் மறுத்தாலும் செய்தாக வேண்டிய கடமை அவளுடையது....
“கை விரல்களை நல்லா க்ளோஸ் பண்ணிக்கோங்க...” நரம்புகள் புடைக்கும் அளவிற்கு விரல்களால் அடித்தாள்.....
“சித்து... ஒரே ஒரு ப்ரிக்’டா.... உன் ப்ளட் க்ரூப் என்னன்னு பார்க்கத்தான்.... விரல்ல சின்ன குத்துதான்....”
“ப்ளீஸ் வேணாம்டா கௌதம்.... வலிக்கும்.... அது தெரிஞ்சு இப்போ ஒன்னும் ஆகப்போறதில்ல, என்ன விட்டுடு...”
“எல்லாம் ஒரு எமெர்ஜென்சி’க்காகத்தான்... கண்ணை மூடிக்கோ..... சின்ன ப்ரிக் தான்...”
பிளாஸ்டர் ஒட்டிவிட்டு, சித்துவின் முகத்தை பார்த்த நர்ஸ், “வலிக்கலைல?” என்றாள்....
“இல்ல சிஸ்டர்...” சிரிக்கிறான்.... வலிக்காமல் நடிக்க அவன் கற்றுக்கொண்டுவிட்டான்... அவ்வளவு பெரிய ஊசி அவன் நாளங்கலுக்குள் செல்லும்போது, வலியின் சுவட்டை கூட அவன் காட்டிக்கொள்ளவில்லை....
ஆறு மாதங்கள் ஒருவனை இவ்வளவு உடல் மாற்றத்தொடும், மன மாற்றத்தோடும் மாற்றி இருக்கும் என்று கௌதம் நினைத்துக்கூட பார்க்கவில்லை....
“இந்த ப்ளூ கலர் ஷர்ட் உனக்கு சூப்பரா இருக்குடா....”
“ஹ்ம்ம்....”
“நீ வருவன்னு நான் எதிர்பார்த்தேன்... ஆனால், இப்டி இங்க திடீர்னு வந்து நிப்பன்னு நான் நினச்சு கூட பார்க்கல.... இப்போதான் நீ வந்திருக்கவேகூடாதுன்னு நினைக்குறேன்..., வந்து நீ இப்டி கவலைப்பட்டு உட்கார்ந்திருக்குறதுக்கு பதிலா, வராமலே இருந்திருக்கலாம்....”
வந்திருக்கக்கூடாதுதான்.... வந்து சித்துவின் மனதை குழப்பி இருக்கக்கூடாதுதான்.... எதேச்சையாக அவனை பார்த்ததை, சித்து வேற மாதிரி நினைத்துக்கொண்டான்...
கதவை திறந்து மீண்டும் நுழைந்தாள் நர்ஸ்....
“சார், நீங்கதான் பார்மா ஏஜன்சி ரெப்பா?”
“ஆமா.... என்ன விஷயம்?”
“சார், உங்களைத்தான் தேடிட்டு இருக்கார்.... கீழ ரூம்’க்கு போங்க...”
சொல்லிவிட்டு செவிலியர் சென்றுவிட்டார்.... கதவு சாத்தப்பட, சித்துவின் முகத்தை பார்த்தான் கௌதம்....
“ஓகே கௌதம்... நீ கிளம்பு....” சித்துவின் வார்த்தையில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது.... ஆனாலும், அதை காட்டிக்கொள்ளவில்லை.... கௌதமிற்கு அந்த மருத்துவமனையில் என்ன வேலை? என்று அவனுக்கு கேட்க தோன்றவில்லை, கௌதம் தன்னை தேடி இங்கு வரவில்லையா? என்று குழம்ப தோன்றவில்லை....
மெல்ல எழுந்து, கதவை நோக்கி வந்தான் கௌதம்...
“கௌதம்... அடுத்த தடவை வரும்போது பீ.ஜி நாய்டு ஸ்வீட்ஸ்’ல அக்காரவடிசல் வாங்கிட்டு வாடா...”
“வாங்கிட்டு வாடா!” என்று சொல்வதில் “அடுத்து எப்போடா வருவ?” என்ற ஒரு ஏக்கம் அழுத்தமாக பதிவாகி இருந்தது.... தலையை மட்டும் அசைத்துக்கொண்டு, மனதை அசைத்த குழப்பங்களோடு அறையை விட்டு வெளியே வந்தான்....
குழப்பம் மேலும் மேலும் அதிகமானது....
அலைபேசி அலற, திரையை பார்த்தான்.... “ஷ்யாம்” பெயர் பளிச்சிட்டது....
பச்சை பொத்தானை அழுத்தி காதில் வைத்தான்...
“ஹாய் கௌதம் குட்டி.... என்ன காலைலேந்து போன் காலே காணும்?”
“ஒண்ணுமில்ல கொஞ்சம் பிஸிடா... சொல்லு, என்ன விஷயம்?”
“நாம லவ் பண்ணி ஒரு மாசத்துக்குள்ள நான் போர் அடிச்சுட்டேன்’ல?.... நீ ஊருக்கு போய் மூணு நாள் ஆச்சு, எப்போதான் இங்க வருவ?”
யோசிக்காமல் பதில் சொன்னான் கௌதம், “இங்க ஒரு ப்ராஜக்ட் வந்திருக்கு... அதனால, ரெண்டு மாசம் இங்கதான் ஷ்யாம்.... பிஸியா இருப்பேன்...அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணாத” அழைப்பை துண்டித்தான்....
குழப்பம் மறைந்து, யோசிக்க தொடங்கினான் கௌதம் “அருகில் பீ.ஜி நாய்டு ஸ்வீட்ஸ் கடை எங்கிருக்கும்?”.... (முற்றும்)

12 comments:

  1. என்ன கற்பனை, கூரபோனால் ஒரு வரி கதை, அதை எவ்வளவு அருமையாக, ஆளுமையுடன் வெளி படுத்தி உள்ளீர்கள் விக்கி, கௌதமின் என்ட்ரி மிக மிக அருமை, அங்கு விரியும் கத பாத்திரம் அதன் வர்ணனை நீங்கள் நீங்கள் தான் என்று நிரூபித்துக்கொண்டே முன்னேறி கொண்டு இருந்கின்றீர்கள்., கதை முக்கியம் இல்லை அதை கூறும் உங்கள் தமிழ் முறை மிக அருமை., u r கிரேட்.,

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி விஜய்.... உங்களை போன்றோர் ஆலோசனையின் படியே இன்னும் நான் சிறப்பாக எழுத முடியும்...

      Delete
  2. superb story vijay.

    ReplyDelete
  3. இந்த கதையில் சித்து இறக்கப்போறான்ங்கிறத காட்டிலும் இன்னும் 2மாதத்திற்கு கெளதம் கூட காதலோட இருக்கப்போரான் நினைக்கும் போது சந்தோஷாமா இருக்கு விக்கி.
    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சேகர்.....

      Delete
  4. very nice Vijay i like this story

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஜெகன்...

      Delete