Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 16 August 2023

தமிழ் சீரியலில் 'gay' கதாபாத்திரம்!

 


 

தமிழ்நாட்டில் தமிழ் மெகா சீரியலில் ஒரு gay காதாப்பத்திரம் உருவாக்கி வெகுஜன பார்வைக்கு கொண்டுவருவார்கள் என்று நேற்றுவரை நான் எதிர்பார்க்கவில்லை.. நண்பர் ஒருவர் இன்று ஒரு சீரியலின் முன்னோட்டத்தை அனுப்பி, அதனை பார்க்கும்படி கூறியிருந்தார்.. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “ரஞ்சிதமே” என்கிற சீரியலின் ப்ரோமோ அது..

வாசகர்களுக்கு நினைவிருக்குமானால் எனது ‘அரிதாரம்’ ( /https://envijay.blogspot.com/2016/06/blog-post.html ) சிறுகதையில் ஒரு கால் கிலோ, ‘ஆம்பள’ சிறுகதையில் கால் கிலோ என்று காக்டெயிலாக உருவாக்கி வைக்கப்பட்டதை போல இருந்தது அந்த முன்னோட்டம்... ஆர்வமாக உள்ளே சென்று பார்த்தேன்.. ஒரு கால் மணி நேரத்துக்குள் மட்டுமே வருகின்ற ‘செந்தில்’ என்கிற காதாப்பத்திரம்தான் ஒரு gay.. அவன் மனைவி வித்யா.. எதற்காகவோ ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, யாருக்காகவோ வாழ்வது போல ஒரு வாழ்க்கையை வாழ்கிறான் செந்தில்.. மனைவி வித்யாவிற்கு எப்படியோ தன கணவனின் பாலீர்ப்பு தெரியவர, அவனிடம் நேரடியாகவே ‘என்னை ஏன் ஏமாற்றினாய்?’ என்று கேட்டுவிடுகிறாள்.. அப்போது செந்திலிடம் பதில் இல்லை.. அன்றைய இரவு கழிந்தபோது, வித்யாவிற்கு அதற்கான பதில் தெரிகிறது.. ஆம், செந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறான்..

 

இந்த காட்சி ஒரு flashback போல (episode 25) வந்துபோகிறது.. இதிலென்ன ஆச்சர்யப்பட? என்று உங்களுக்கு கேள்வி எழலாம்.. தமிழ் மெகா சீரியல்களில் இத்தகைய பாத்திரங்கள் அரிது, அரிதினும் அரிது என்றுதான் சொல்லவேண்டும்..

 

சற்று மிகைப்படுத்தப்பட்டு கெட்டவன் போல காட்டப்படும் பாத்திரம்தான்.. பொதுவாக gay நபர்களை வில்லன்களை போல சித்தரிக்கும் எவ்விதமான பொழுதுபோக்கு, வெகுசன நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டித்துவரும் நாமே, இதனை தவறென குறிப்பிட மனம் ஒப்பவில்லை..

 

அரிதாரம் சிறுகதையில் வரும் அமுதாவை போல அல்லாது, எதிர் கேள்வி கேட்கும் இந்த சீரியல் வித்யா பாராட்டப்பட வேண்டியவள்தானே!..

 

“என்னை ஏன் ஏமாற்றினாய்?” இது ஒற்றை வித்யாவின் கேள்வியாக எனக்கு தோன்றவில்லை.. குடும்பம், சமூக சூழல்கள் என்று ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் வித்யாவிற்கும், அமுதாவிற்கும் நம் சமூகத்து கணவன்மார்கள் என்ன பதில் சொல்ல முடியும்?..

 

இந்த கதையை எழுதி உருவாக்கிய ‘விகடன்’ குழுமம், இன்னும் விரிவாக இந்த விஷயத்தை அணுகியிருந்தால், மெல்ல நம் தமிழ் சமூக பெண்களின் மனதிற்குள் ஒரு அறிவார்ந்த கருத்தை உருவாக்க செய்திருக்கலாம்.. ஏனோ கதையாசிரியர்கள், gay விஷயத்தில் ஆழமாக போக தயங்கிவிட்டார்கள் என்பது அந்த பத்து நிமிடங்களில் நமக்கு புரிகிறது.. ஆனாலும் இதனை ஒரு நல்ல தொடக்கமாக கருதலாம்..

 

மீண்டும் அதே கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன்.. ஒரு பெண்ணுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கலாம்.. உங்களை இந்த சமூகத்தில் இயல்பான நபராக காட்டிக்கொள்ள, அந்த ஆயிரம் கனவுகளையும் சீற்குழைக்க வேண்டுமா? என்பதை மட்டும் ஒருமுறை உங்களையே நீங்கள் கேட்டுக்கொண்டு, பெண்ணுடனான திருமணத்தைப்பற்றி சற்று யோசித்து முடிவெடுங்கள்!..  

 

ஒரு ஆணுடன் இல்லற வாழ்க்கையை வாழ்வதென்பது உங்கள் விருப்பத்தை சார்ந்த விஷயம்.. அதேவேளையில் பெண் மீது ஈர்ப்பு என்பதே இல்லாத ஒரு நபர், பெண்ணை திருமணம் செய்வதென்பது பாவச்செயல்.. அச்செயலுக்கு உங்களாலும் என்னாலும் ஆயிரம் சப்பைக்கட்டு காரணங்களை அடுக்கிவைக்க முடியும்.. அந்த காரணங்கள் எதுவுமே, ஒன்றுமே அறியாது நம்முடன் வாழத்தயாராக இருக்கும் பெண்ணின் கனவுகளை சமரசம் செய்துவிடாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!.. 


இது ஒரு நண்பனாக, நம் சமூகத்தை வெகுகாலமாக அலசிவரும் ஒரு வலைப்பதிவராக மட்டுமே உங்களுக்கு சொல்கிறேன்... மற்றபடி இறுதி முடிவுகள் உங்கள் கைகளில்தான்!