(கீற்று இணையதளம் மற்றும் சிறுகதைகள் இணையதளத்தில் பொதுத்தள வாசகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றிட்ட "அரிதாரம்" சிறுகதை வலைப்பூ வாசகர்களின் பார்வைக்காக...)
{ஓவியங்கள் - இளையராஜா}
தீபாராதனை முடிந்து, அர்ச்சகர் கொடுத்த திருநீறை
மடித்துவைக்க காகிதத்தைத் தேடிய அமுதாவிற்கு, கசங்கிய, அழுக்கான, தண்ணீரில் ஊறிய
காகிதங்கள் மட்டும்தான் கண்களுக்கு அகப்பட்டது... வேறு வழியின்றி, சேலையின்
முந்தானையில் கொட்டி முடிச்சுப்போட்ட பிறகுதான்தான் மனம் சற்று நிதானமானது...
வழக்கம்போலவே அர்ச்சனையில் உடைத்த தேங்காய்முடிக்குள் அதனை
கொட்டியிருக்கலாம்தான்... ஆனால், கடந்தமுறை அப்படி செய்திருந்த தேங்காயில் சட்னி
செய்தபோது, “ஏன் சட்னி ஒரு மாதிரி ஸ்மெல்லா இருக்கு!”ன்னு மூன்று இட்லிகளோடு சிற்றுண்டியை முடித்துக்கொண்ட
கணவனின் முகம் மனதிற்குள் வந்துபோனதால்தான் இன்றைக்கு காகிதத்தைத் தேடவேண்டிய
கட்டாயம் இவளுக்கு...
மாலையின் வெளிச்சம் மெள்ள
மங்கிக்கொண்டிருந்தது.. பிரகாரத்தின் இடதுபுறம் ஒரு தூணில் சாய்ந்தபடி
அமர்ந்துகொண்டாள் அமுதா.. பைக்குள்லிருந்து ‘க்ர்ர்ர்... க்ர்ர்ர்..’ அலைபேசி வைப்ரேட்டியது.. ‘அரவிந்த்’ என திரை பளிச்சிட, ஸ்வைப் செய்து காதில் வைத்தவாறு
“கோவில்ல இருக்கேங்க.. கொஞ்சநேரம் இருந்துட்டு வரேனே!” பணிவாக பேசினாள்.. “ஹ்ம்ம் சரி... கிளம்புறப்போ கால்
பண்ணு, கார் வரச்சொல்றேன்.. இருட்டிடும்ல” கணவனின் அக்கறையான பதில்.. சிவப்பு பொத்தானை அழுத்தி, மொபைலை கைப்பைக்குள்
திணித்துக்கொண்டாள்.. ஒரு மணி நேரத்திற்கொருமுறை, எவ்வளவு பணிச்சுமையில்
சிக்கித்தவித்தாலும் அரவிந்திடமிருந்து ஒரு அழைப்பு வந்துவிடுவதுண்டு.. “எங்க
இருக்க?... சாப்டியா?.. இவ்ளோ நேரம் ஏன் சாப்டாம இருக்க?” நலன் சார்ந்த கேள்விகள்தான் அதில் பிரதானம்..
நடந்துசென்றால்கூட நெற்றி வியர்க்காத தூரத்திலிருக்கும் கோவிலுக்கு கார் அனுப்பும்
இதுபோன்ற வினோத அக்கறைகளை அரவிந்திடம் மட்டும்தான் காணமுடியும்!
இப்போ வீட்டிற்கு சென்றாலும் ஒன்றும்
செய்துவிடப்போவதில்லை.. சட்னியும் கூட செய்துவைத்தாகிவிட்டது, தோசை
வார்த்துக்கொடுக்க ஐந்து நிமிடங்கள் போதும்.. அதுவரை என்ன செய்வது?.. படித்த
புத்தகம் எதையாவது எடுத்து புரட்டிக்கொண்டு வேண்டுமானால் இருக்கலாம்.. அப்படி
பலமுறை புரட்டிய காகிதங்களே கிழியும் தருவாயில் தொக்கித்தான் நிற்கின்றன..
இப்போதும்கூட கிரிக்கெட்டில் ‘லொட்டு’ லொட்டு’ன்னு தட்டிக்கொண்டிருப்பதை வைத்த கண் விலகாமல்
பார்த்துக்கொண்டிருப்பார் அரவிந்த்.. அப்பப்போ, ‘செம்ம ஷாட்!... ஐயோ அவுட்
ஆகிட்டான்!’ன்னு தனியே
புலம்பிக்கொண்டிருக்கும் அவரைத்தாண்டி, சுவற்றை மட்டும்தான்
வெறித்துக்கொண்டிருக்கவேண்டும்... அதற்கு பதிலாக இந்த கோவிலில் வேடிக்கை
பார்க்கத்தான் எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறதே!...
வலதுபுறத்தில், படிகளின் ஓரத்தில் அமர்ந்து
கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் அந்த புதுமண ஜோடியை கண்களால்
கணித்துக்கொண்டிருக்கிறாள் அமுதா.. திருமணம் முடிந்து அதிகபட்சம் பத்து
நாட்கள்தான் ஆகியிருக்கணும்!.. தாலியின் மஞ்சள் கூட இன்னும் மங்கவில்லை,
நெற்றியின் வகிட்டுக் குங்குமம் அந்த அனுபவமின்மையை பிரதிபலித்தது... அந்த
புதுப்பெண்ணின் கைகளில் வைத்திருந்த மருதாணி வாசனையை அவள் கணவன்
நுகரத்துடிக்கிறான்... அவளோ, அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருப்பதாய் மறுக்கிறாள்...
அவன் ஏதோ காதுகளுக்குள் கிசுகிசுக்க, அவள் வெட்கப்பட்டுச் சிரித்தவாறே பதில்
சொல்கிறாள்.. மேற்கொண்டு அவற்றை பார்க்க விரும்பாதவளாக வேறுபக்கம் பார்வையை
படரவிட்டாள் அமுதா..
திருமணமான புதிதில் இவளுக்கும் அப்படியோர்
அனுபவம் வாய்த்தது... ஏதோ பரிகார நிவர்த்திக்காக புதுமணதம்பதியை மட்டும்
கோவிலுக்கு அனுப்பிவிட்டு, ‘சின்னஞ்சிறுசுகள் தனியா போயிட்டு வரட்டும்!’ என ஒதுங்கிக்கொண்டார்கள் பெரியவர்கள்... வழிபாடு முடிந்து
இப்படியோர் பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது, அமுதாவிற்கும் அரவிந்திடம் கேட்க
ஆயிரம் கேள்விகள் வரிசைகட்டிக் காத்திருந்தன... மொபைலில் சென்செக்ஸ் புள்ளிகளை
கணித்துக்கொண்டிருந்த கணவனிடம், எப்படி கேள்வியை தொடங்குவது? என்றுதான்
புரியவில்லை...
“நீங்க படமெல்லாம் பார்ப்பிங்களா?” அப்பாவியாக பேச்சைத் தொடங்கினாள்..
“ஹ்ம்ம்...”
“எந்த ஹீரோ பிடிக்கும்?”
“லியோனார்டோ டி காப்ரியோ”
இந்த பதிலின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை...
ஆனால், மேற்கொண்டு கேள்விகளை தவிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்ட
பதிலென்பது மட்டும் புரிந்தது.. மீதமிருந்த தொல்லாயிரத்து தொன்னூற்றெட்டு
கேள்விகளும் தொண்டைக்குள் விழுங்கிய எச்சிலோடு கரைந்துபோனது..
திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல்
ஆகிறது... என்றாலும், இன்னும் முழுமையாய் புரிந்துகொள்ள முடியாத சூட்சமமாய்தான்
இருக்கிறான் அரவிந்த்... சற்று ஏழ்மையான குடும்பத்தின் மூத்த மகளுக்கு, கனிம
வளத்துறையில் உயரிய பொறுப்பு வகிக்கும் வசதியான வரன் அமைந்ததை எண்ணி இன்னும்
சிலாகித்துக்கொண்டிருக்கிறார் அமுதாவின் அப்பா... “நம்ம அமுதாவ அவங்களுக்கு ரொம்பப்
பிடிச்சிருக்காம்.. ஜாதகமும் நல்லா பொருந்திருக்கு, யோசிக்காம முடிச்சிடுங்க!” தூரத்து உறவினர் வழியே வந்த வாய்ப்பை இவளின்
அதிர்ஷ்டமாகத்தான் பார்த்தார்கள் வீட்டார்... “நம்ம அமுதா யோகத்துக்கு அவ ராணி
மாதிரி இருப்பான்னு சொன்னேனா இல்லையா?” அப்பா பெருமை
பீற்றிக்கொண்டார்... மாமானாரைக்கூட ‘அப்பா’ என உரிமையோடு விளிக்கும் மாப்பிள்ளை எத்தனைபேருக்கு
வாய்த்திருக்கமுடியும்?... வாய்வார்த்தைக்கு மட்டுமல்லாது, மகனாகவே பலமுறை
குடும்பத்து பிரச்சினைகளின்போது முன்னின்ற அரவிந்த்துக்கு இவள் அப்பா ரசிகர்
மன்றம் தொடங்கினால்கூட அதிசயமில்லை..
அவர்கள் கணிப்பும், யோசனையும் பொய்யாகவில்லை...
வசதியான வாழ்க்கை.. முழுமையான சுதந்திரம், ராணி போலத்தான் வாழ்கிறாள்.. ஆனால்....
பின்னாலிருந்து ஒரு கை அவள் தோளின் மீது படர,
திடுக்கிட்டு திரும்பினாள் அமுதா.. வாய் முழுக்க புன்னகையோடு நின்றுகொண்டிருக்கும்
அந்த பெண்ணை சட்டென அடையாளம் காணமுடியவில்லை.. ஒருவழியாய் நிழல் உலகத்திலிருந்து
தன்னை மீட்டுக்கொண்டு, எதிரே நிற்பவளை அடையாளம் காண்பதில் மனம் முனைப்பானது...
“அமுதா மிஸ் தான நீங்க?” அமுதா மிஸ்’ஸா?.. ஏதோ ஒருகாலத்தில் பணிபுரிந்தது.. இவளுக்கே
மறந்துபோயிருந்த இறந்தகாலமாயிற்றே, அந்த தனியார் பள்ளியின் ஆசிரியை பணி!... அதை
நினைவுகூர்ந்து இன்றைக்கு அழைக்கும் இந்தப்பெண் யார்?.. அட ஆமா!.. அந்த
தெத்துப்பல், புருவத்தின் மேலிருக்கும் மரு... ஒருவழியாய் ஊகித்துவிட்டவளாக, “பானு
மிஸ்தான நீங்க?” ஆச்சர்யம் பொங்க
வினவினாள்... கடந்த ஆறு மாதங்களாக தடயமே இல்லாது தனது வாழ்க்கைப் புத்தகத்தில்
மறைந்துபோன மனிதர்களுள் ஒருத்திதான் பானுவும்...
பானு, கலகலப்பாக பேசுபவள்.. மனதிற்குள்
தோன்றியதை பட்டென போட்டு உடைத்துவிடும் கண்ணாடி மனசுக்காரி.. உணவு இடைவேளையில்
அவள் திறக்கப்போகும் டிபன் பாக்ஸ்க்காக காத்திருந்த ஏழெட்டு சக ஆசிரியைகளுள்
அமுதாவும் ஒருத்தி..’ ஒவ்வொன்றாய்
நினைவுகள் வரிசைக்கட்டி மடையை திறந்துகொண்டு மனதிற்குள் கொட்டத்தொடங்கின...
“பரவால்லையே... ஞாபகம் வச்சிருக்கிங்க!”
“எப்டி மறக்கமுடியும்?... அந்த கத்தரிக்காய்
தொக்கு இப்பவும் கண்ணு முன்னால வந்துபோகுது!” சிரித்துக்கொண்டாள் அமுதா..
“கத்தரிக்காய்லாம் ஞாபகம் இருக்கு, என்னைய
கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணனும்னு மட்டும் மறந்தாச்சுல்ல?”
“ஐயோ சாரி பானு... அவசரமா ஏற்பாடு
பண்ணிட்டாங்க... அவரு ஜாதகத்துல ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு
சொல்லிட்டாங்களாம்... அதான், நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லி
கோவில்லையே சிம்பிளா நடந்துமுடிஞ்சிடுச்சு... ப்ரெண்ட்ஸ், கூட வேலை
பாக்குறவங்கன்னு யாரையும் இன்வைட் பண்ணமுடியலன்னு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா...” பானுவின் கையைப்பிடித்து அழுத்தியபோது அவள் முகத்தில்
ஏமாற்றம் தெரிந்தது...
“சரி விடுங்க... பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம்
நடக்குது?... உங்க ஹஸ்பன்ட் எப்டி இருக்காரு?... கவர்மென்ட் ஜாப்னு சொன்னாங்க,
வசதியான குடும்பமாமே.. சொத்துபத்துன்னு பாரம்பரியமான குடும்பம்னுலாம்
சொன்னாங்களே!.” எல்லாவற்றையும்
விசாரித்து வைத்திருக்கிறாள் போலும்..
“ஆமா... மினரல்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல வர்க்
பண்றார், பெரிய குடும்பம்தான்.. இங்க திருச்சிலதான்... ஆமா, நீங்க எப்போ
தஞ்சாவூர்லேந்து இங்க வந்திங்க?”
“மூணு மாசமாச்சு... திருச்சிதான் எனக்கும்
புகுந்தவீடு”
பானுவின் கழுத்தை கவனித்தாள் அமுதா... அட ஆமா,
தாலி இருக்கிறது.. அவளிடம் கோபித்துக்கொள்வதில் அர்த்தமில்லை.. அவளுக்குமான
பதிலாகத்தான் முன்னமே, ‘பொம்பளைங்க நாம நெனச்சா எல்லாம் நடக்குது?’ன்னு சொல்லிவிட்டாள்...
“கங்க்ராட்ஸ்பா...” வாழ்த்துகளைத் தாண்டி, கடந்த கால நினைவுகளை
அசைபோட்டுக்கொண்டிருந்தபோதுதான் பானுவின் கழுத்தினை எதேச்சையாக கவனித்து, “அதென்ன
உங்க கழுத்தில சிவந்து போயிருக்கு?.. காயம் போல இருக்கே..” அக்கறையாய் வினவினாள் அமுதா...
பானுவிடம் பதில் வார்த்தைகளாக வரவில்லை, அசட்டுச்
சிரிப்பு மட்டும்தான் வெளிவந்தது... எதற்காக வெட்கப்படுகிறாள்? அமுதா புரியாமல்
ஏறிட்டுப் பார்த்தாள்... சற்று கூர்ந்து அந்த காயத்தை கவனித்தபோதுதான், பற்களின்
தடம் அவள் கண்களுக்கு புலப்பட்டது... அமுதாவிற்கு சுருக்கென்றது...
கேட்டிருக்கக்கூடாத கேள்வியோ?.. என்ன நடந்திருக்கிறது? என்பது எளிதாக அனுமானிக்க
முடிந்த விஷயம்தான்... அதனை இவ்வளவு துழாவியிருக்க வேண்டாம்!..
“ஐயோ நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது.. அவரு
அர்ச்சனை சீட்டு வாங்குறதுக்குப் போனார், உங்கள பார்த்ததும் அவரை மறந்துட்டேன்
பாருங்க... போய் சாமி கும்பிட்டுட்டு வரேன், இங்கயே இருங்க.. நிறைய பேசுவோம்!” துள்ளிக்குதித்து கணவனை நோக்கி ஓடினாள் பானு...
ஆனால் அமுதாவிற்கு அவளுடன் பேச்சைத் தொடர
விருப்பமில்லை... மனதினுள் ஏதோ ஒரு இன்ஸ்டன்ட் கவலை சூழ்ந்துகொண்டது.. சட்டென
பேட்டரியின் சார்ஜ் இழந்த மொபைல் போல முகத்தின் பிரகாசம் மங்கிப்போனது.. பானு தன்
பார்வையைவிட்டு மறைந்த மறுகணம், சட்டென எழுந்து வீட்டை நோக்கி
நடக்கத்தொடங்கினாள்..
இப்போதெல்லாம் யாரோ கணவன், அவன் மனைவியிடம்
காதலோடு பேசுவதை பார்த்தாலே அவள் மனதிற்குள் அனிச்சையாய் அமிலம் சுரக்கிறது...
கோபம் சுளீரிடுகிறது.. இப்போதுகூட பானுவின் கணவன் மீது, “கோவிலுக்கு போற
பொண்ணுகிட்ட இப்டியா நடந்துக்கர்றது?.. பொண்டாட்டியாவே இருந்தாலும் இதல்லாம்
அசிங்கமா இல்ல?”ன்னு கோபம்
வருகிறது... இவள் வேகமாய் கிளம்பவும் அந்த கோபம்தான் காரணம், கொஞ்சம் கூடுதல்
நேரம் பானுவிடம் பேசியிருந்தால் அநேகமாய் அந்த மனக்குமுறல் வார்த்தைகளாக
வெளிவந்திருக்கும்.. இப்போது மட்டுமல்ல.. பார்க்கில் காதலன் மடியில்
சாய்ந்திருக்கும் காதலியை பார்த்தபோதும், திரையரங்கில் கார்னர் சீட் தேடிப்போகும்
தம்பதிகளை பார்க்கும்போதும், திரைப்படங்களில் அன்யோன்யமாக நடிக்கும் நடிகர்களை பார்த்தால்கூட
இப்படிப்பட்ட கோபங்கள் அனிச்சையாகவே உண்டாகிறது.. ‘இதல்லாம் சமூக சீர்கேடு!..
அன்யோன்யம்னா வீட்டுக்குள்ள இருக்கணும், இப்டி பப்ளிக்ல அசிங்கமா... ச்ச ச்ச...
மனுஷனுக்கும் நாய்க்கும் வித்யாசம் இல்லையா?’ன்னு அவ்வப்போது பொங்கித்தீர்ப்பதும் உண்டு... ஆனால், இந்த
கோபங்கள் சமூக அக்கறையைத் தாண்டிய, அது ஒருவித மனவிரக்தியின் வெளிப்பாடு என்பது
அவள் மனதிற்கு மட்டுமே தெரிந்த உண்மை... ஆனால், அந்த உண்மையை அமுதாவின் ஈகோ
என்றைக்குமே ஏற்றதில்லை என்பது வேறு விஷயம்!..
இருட்டிப்போயிருந்தது.. சாலையின் இருட்டு
பயமில்லை, நாய் குரைப்பதில் கவனம் இல்லை, மதுவின் நெடி வீசும் யாரோ சில சிகரெட்’வாலாக்கள் தன்னைக் கடந்துசென்றபோதும் எவ்வித சலனமும்
இல்லை... இவள் கவனம் முழுக்க மனதின் வலிகளைப்பற்றியே
சிந்தித்துக்கொண்டிருக்கிறது..
எதற்கு இப்படியொரு கோபம், கவலை அவளுக்குள்?..
வசதியான வாழ்க்கை, அக்கறையான கணவன், முழுமையான சுதந்திரம்.. தன்னை மட்டுமல்லாது,
தனது குடும்பத்தினையும் மிகுந்த பாசத்துடன் அணுகும் மணவாளன்... தன் தகுதியை மீறிக்
கிடைத்த வாழ்க்கையென எத்தனையோ முறை எண்ணியிருக்கிறாள்... ஆனால், எல்லாமும் இருந்து
ஏதுமற்றதாய் ஒரு வெறுமை எப்போதுமே அமுதாவை ஆட்கொண்டிருப்பதுதான் சிக்கலே..
உப்பில்லாத உணவு பண்டங்களை போல, உணர்ச்சிகளற்ற வாழ்க்கை அது...
திருமணமான புதிதில் அரவிந்த் உடல் சார்ந்த
இன்பங்களில் அதிகம் நாட்டமில்லாமல் இருப்பதை கவனித்தபோது, ‘சரி பழக்கமில்லாத
பொண்ணுங்கிறதால தயங்குறார் போல!’ என அதனைப் பெரிதாய்
பொருட்படுத்தவில்லை.. ஆனால், நாட்கள் செல்ல அந்த இடைவெளி இன்னும்
அதிகரித்துக்கொண்டே செல்லும்போதுதான் அவளுக்குள் ஒருவித பயம் உதித்தது.. ‘ஒருவேளை
என்னைய பிடிக்கலையோ?’ இப்படித்தான்
தாழ்வுமனப்பான்மை மொட்டாய் அரும்பியது... அமுதாவை பொறுத்தவரை பேரழகி இல்லை என்றாலும்,
களையான முகத்தவள்... செயற்கை ஒப்பனைகள் இல்லாமலேயே, முகப்பொலிவு மங்காதவள்...
கல்லூரி காலம் முதல், பணிபுரியும் நாட்கள் வரையென இவளை மனைவியாக்கிக்கொள்ள
எத்தனித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் டசன் கணக்கைத் தாண்டும்... அப்படியிருக்க
அரவிந்துக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை?.. யாரோ ஒரு தோழி மூலம், அழகு நிலையம் கூட
சென்று பார்த்துவிட்டாள்... புருவத்தைச் செப்பனிட முடிந்தது, கரும்புள்ளிகளை
காணாமல் போக செய்திட முடிந்தது... பேஷியல், பவுண்டேஷன் க்ரீம், மஸ்காரா என செயற்கை
ஒப்பனைகளால் அலங்கரித்தபோதிலும், அரவிந்தின் பார்வை மட்டும் இன்னும் இவள் பக்கம்
திரும்பியபாடில்லை...
“பொண்ணுங்க மல்லிப்பூ வச்சிருந்தாதான் தனி அழகே!” என்றைக்கோ ஒருமுறை நண்பரிடம் அரவிந்த் சம்பாஷித்த பேச்சினை
கவனித்த அமுதாவிற்கு அன்றுமுதல் மல்லிகைப்பூவும் உடலின் ஒரு அங்கமாகவே
மாறிவிட்டது.. மல்லிகை மணம் ஏற்படுத்திய ஒவ்வாமை தலைவலியை தாங்கிக்கொண்டு, மலர்
சூடிய மங்கையாய் அரவிந்தின் எதிரில் நிற்பாள்..
இன்னும் வேறென்னவெல்லாம் குறை கண்டிருக்கிறார்
என்னிடம்?... எவ்வளவோ இயல்பை மீறிய மாற்றங்களை உள்வாங்கி வெளிப்படுத்தியபோதும்,
அதனை பொருட்டாகவே கண்டுகொள்ளாத கணவனின் பார்வை என்றைக்குத்தான் இவள் பக்கம்
ஏறிடுமோ தெரியவில்லை!..
‘ஒருவேளை இவருக்கு திருமணத்திற்கு முன்பே வேறு
பெண்ணுடன் காதல் இருந்திருக்குமோ?’ ஆறு மாதங்களாய்
அதற்கான தடயங்களை தேடியும், அப்படி ஒரு சான்றும் சிக்கவில்லை.. திருமணத்திற்கு
பின்னும் கூட எத்தனையோ பெண்கள், இவள் அறிந்தே அரவிந்திற்கு தூண்டில் போட்டனர்...
“தூண்டில் முள்ளில் சிக்கிட அரவிந்த் ஒன்றும் கெண்டை மீன் இல்லை, திமிங்கலம்” பலமுறை கணவனை நினைத்து இப்படி சிலாகித்ததுண்டு.. கடைக்கண்
பார்வை பட்டால் கவிழ்ந்துவிட பெண்கள் என்னவோ தயாராகத்தான் இருந்தார்கள், இவன்
நிமிர்ந்து பார்த்தால்தானே அதெல்லாம் நடக்கப்போகிறது!.. ராமன்தான்... ஆனால்,
சீதையைக்கூட தொட மறுக்கும் ராமன்... அணிலாய் நினைத்து தொட்டால்கூட, மூன்று
கோடுகளுக்காவது கொடுப்பினை இருந்திருக்கும்.. அதற்கும் வழியில்லாத அசோகவனத்து சீதை
இவள்..
அதற்காக உடலுறவில் ஈடுபடவில்லை என்றெல்லாம்
நினைத்திட வேண்டாம்... அத்திபூத்தார் போல அவ்வப்போது, ஒரு உடலியல் நிகழ்வாக மட்டும்
அது நடப்பதுண்டு... முத்தம் கூட இல்லாமல், கருவை உருவாக்குவதில் மட்டுமே
முனைப்பாகிய முற்றிலும் எந்திரத்தனமான நிகழ்வு அது.. ஆனால், அமுதாவின் ஏக்கம் வேறு
மாதிரியானது... அது செக்ஸ் சார்ந்தது இல்லை..
கதைகளில் படித்த காதல், திரைப்படங்களில்
காட்சிப்படுத்தப்பட்ட அன்யோன்யம், அக்கம்பக்கத்தில் பார்த்தறிந்த நெருக்கம்...
ஒருவேளை தான் வாழ்வதுதான் உண்மை, மற்றவை எல்லாம் கற்பனையா? என்கிற யோசனை கூட
அடிக்கடி வருவதுண்டு... நிஜத்தில் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள அவளாகவே
ஏற்படுத்திக்கொள்ளும் காம்ப்ரமைஸ் கற்பனைகள் அவை... இப்போது பார்த்த பானுவின்
கழுத்து காயத்தடம் போன்ற நிகழ்வுகள், அந்த கற்பனை பிம்பத்தினை அவ்வப்போது
சிதறிப்போகச் செய்துவிடுகின்றன... மீண்டும் பழையபடி ஒருவித காம்ப்ளக்ஸ் அவளைத்
தொற்றிக்கொள்கிறது...
இப்படி அன்யோன்யம் இல்லாது போவதால்,
அக்கறையில்லாத கணவனாகவும் அரவிந்த்தை பார்த்திடமுடியாது.. கனிவான கவனிப்பில்
சராசரி கணவன்மார்களைவிட சற்று கூடுதல் மதிப்பெண்களே கொடுக்கும் அளவிற்கு
பொறுப்பானவன்...
இதோ அமுதா இப்போது கடந்துசெல்லும் பாரதி
ஹாஸ்பிட்டலே அதற்கொரு சாட்சிதான்.... இரண்டு மாதங்களுக்கு முன்பு டெங்கு
காய்ச்சலால் கிட்டத்தட்ட ஒருவாரம் இங்குதான் அனுமதிக்கப்பட்டிருந்தாள் அமுதா..
நிமிர்ந்து அமர்ந்திடக்கூட உடலில் வலு இல்லாமல் சுரத்தே இன்றி படுக்கையில்
கிடத்தப்பட்டிருந்த அந்த நாட்களில் அரவிந்த்’தான் அவ்வளவு அக்கறையாக கவனித்துக்கொண்டான்.. பழச்சாறு
பிழிந்து கொடுப்பது, கைத்தாங்கலாக நிமிர்த்தி அமரச்செய்தது, வேளாவேளைக்கு
மாத்திரைகள் கொடுத்தது... “நீங்க ஏன் லீவ் போடுறீங்க?.. அம்மாவை வரச்சொல்றேன்,
நீங்க ஆபிஸ் போங்க!” அமுதாவும் சொல்லிப்பார்த்தாள்...
அவன் மனம்தான் அதற்கு ஒப்பவில்லை.. “பரவால்ல... எனக்கொரு கஷ்டமும் இல்ல!” என்றான் பதிலுக்கு... “என் மனைவியை நான்தானே
பார்த்துக்கணும்!” என்கிற தொனியிலான
பதிலது..
இவ்வளவு அக்கறையாக இருப்பவர் ஏன் அன்யோன்யத்தை
விரும்பவில்லை?.. பாசம் இல்லாமல் அக்கறை உருவாகிட வாய்ப்பில்லை.. பாசம் இருக்கும்
பட்சத்தில் அது காதலாய் ஏன் கனியவில்லை?...
‘ஒருவேளை எனக்கு பிடிக்காதுன்னு நினைச்சு
அதல்லாம் அவர் செய்றதில்லையோ?’ என்ற சந்தேகம்கூட
ஒருமுறை எழுந்தது... சரி, அதையும்தான் வெட்கத்தைவிட்டு சோதித்து பார்க்கலாமே!.. தானாக
அரவிந்திடம் அன்யோன்யமாக இருக்க முற்பட்டு கட்டி அணைத்தாள்... அந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட அரவிந்த், அவளை வித்தியாசமாக ஏறிட்டு
வெறித்துப்பார்த்தான்... அந்த பார்வையில், அமுதாவின் சப்த நாடிகளும்
ஒடுங்கிப்போனது..
அநேகமாய் இவள் நடத்தையில் கூட அவனுக்கு சந்தேகம்
ஏற்பட்டிருக்கலாம்... இந்த பாழாய்ப்போன உலகம் எல்லாவற்றுக்கும் ஒரு
முட்டாள்த்தனமான வரையறை வகுத்துள்ளதே... காதலை சொல்வதோ, காமத்தில் திழைப்பதோ அவை
பெண்கள் முன்னெடுக்கும்போது இயல்பாகவே அந்த வரையறையை மீறியதாகப் பார்க்கிறார்கள்..
ஆசையாய் கணவனைத் தொடும்போது, எதிர்கொள்ள வேண்டிய பார்வையா அது?... ஐயோ, பழுக்க
காய்ச்சிய கம்பியை தலையில் தேய்த்ததுபோல உயிரைப் பிளந்திடும் பார்வை.. அதற்குமேல்
சோதித்து பார்க்கவெல்லாம் மனதில் திடமில்லை.. ஆசைகளை ஆழமாய் மனதிற்குள் புதைத்து
வாழத்தொடங்கினாள்..
யோசித்தபடியே வீட்டை நெருங்கிவிட்டாள்...
தெருவின் முனையில் சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்றுநீரில் கால்
வைத்துவிட்டாள்.. செருப்பெல்லாம் சகதி... இவள் குழம்பிய மனதோடு நடந்துவந்ததில்,
ஆற்று நீரை கடந்திருந்தால் கூட ஆச்சர்யமில்லை...
“இந்த கார்ப்பரேஷன்காரங்க என்னதான் வேலை பார்க்குறாங்க” கணவன் மீதிருந்த கவலை, சில வினாடிகள் கார்ப்பரேஷன் மீதான
கோபமாய் மாறியிருந்தது..
ஐயோ புது செருப்பெல்லாம் சகதியாப் போச்சே!..
பேசாம போன் பண்ணி கார் வரச்சொல்லிருக்கலாம், வாளுபோய் கத்தி வந்தது போல இதை எங்கே
கழுவுறது?...
சேலையை தூக்கிப்பிடித்தபடி ஒருவழியாய் வீட்டின்
கேட் அருகே வந்துவிட்டாள்.. இப்படியே அழைப்புமணியை அடித்தால், அனாவசிய
சலசலப்புக்கு வழிவகுத்துவிடுவதாய் ஆகிவிடும்.. “ஏன் நடந்து வந்த?, எவ்ளோ
சொன்னாலும் புரியாதா உனக்கு?.. போன வாரம் ஒரு பொண்ணு செய்னை அறுத்துட்டுப்
போனானுகளே, மறந்துட்டியா?” இப்படி அரவிந்தின்
ஆயிரம் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டியிருக்கும்.. சத்தமில்லாமல் சேற்றை
கழுவிக்கொண்டு, உள்ளே போகலாம்... ஆட்டோவில் வந்ததாய் சொல்லி
சமாளித்துக்கொள்ளலாம்.. சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து, அப்படியே
கொல்லைப்புறத்தில் இருக்கும் பைப்பை நோக்கி நடந்தாள்.. தண்ணீரை மெள்ள
திறந்துவிட்டு, செருப்பைக் கழுவினாள்... சேலையின் கீழ்ப்புறத்திலும் சேற்றின்
திட்டுக்கள்... அதனையும் தண்ணீர் தொட்டு துடைத்துவிட்டு நிமிர்ந்தாள் அமுதா..
படுக்கையறையின் ஜன்னலின் மீது பார்வை படர்ந்தது..
ஜன்னல் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருக்கிறது...
ஏசியின் காற்று அதனூடே கசிந்து வீணாவதாய் எத்தனையோ முறை மனம் பதைத்தபோதிலும்,
அரவிந்திற்கு எப்போதும் அது ஒரு பொருட்டாகவே தெரிந்ததில்லை.. அருகிலிருந்த
திட்டின் மீது ஏறி நின்று, அதனை அழுத்தி சாத்த முற்பட்டபோதுதான் ஒருவித வித்யாசமான
சத்தம் உள்ளிருந்து காற்றினூடே காதுகளை அடைந்தது.. என்ன சத்தம் இது?.. ஏதோ முனகல்
சத்தம் போலல்லவா கேட்கிறது.. அழுத்தி சாத்திட எத்தனித்த கைகள், அனிச்சையாகவே
ஜன்னல் கதவினை மெள்ள திறந்தது..
உள்ளே என்ன நடக்கிறது?... அடக்கடவுளே!... ஒருசில
வினாடிகள் தலை சுற்றி தடுமாறி நின்றது..
அரவிந்துடன் வேறொரு நபர் நிர்வாண கோலத்தில்
கட்டிப்பிடித்தபடி படுக்கையில்... ஐயோ.. அதுவும் யாரோ ஒரு ஆணுடன்... கடவுளே!...
அரவிந்தாக அது இருக்கக்கூடாது என மனம் பதறியது... உற்று கவனித்தபோது, உறுதியாக
அவனேதான்...
கால்கள் செயலிழந்ததைப் போல தடுமாறின.. நிற்க
வலுவின்றி சுவற்றோடு சாய்ந்து கீழே அமர்ந்தாள்.. மனம் நிதானிக்க மறுத்தது.. உடல்
முழுக்க ஊசியால் குத்தும் உணர்வு, வியர்வை சுரப்பிகள் வெடித்து உமிழ்ந்ததில் வியர்வை அரும்பி
வழிகிறது... வகிட்டுக்குங்குமம் வியர்வையோடு கரைந்து, மூக்கிற்கு நேராக
சிவப்புக்கோடு வரைந்தது.. எச்சில் தொண்டையை தாண்டி உள்ளே செல்ல மறுத்தது.. ஓவென
அழவேண்டும் போல தோன்றினாலும், அதற்கான திராணி அற்று பிண்டம் போல
அமர்ந்திருந்தாள்.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் ஊற்றுநீராய் பொங்கி
வழிந்துகொண்டிருக்கிறது...
சீதையை தொடமறுத்த இவள் ஏகபத்தினி விரதன்,
கட்டிலில் யாரோ ஆடவனுடன்!..
இவ்வளவு காலமும் என் மீது தவறென நினைத்து,
இத்தனை வேடங்கள் தரித்தபோதும் ஏமாளியாய் நிற்பதென்னவோ நான்தான்.. முகத்தின்
செயற்கை பூச்சுகள் கம்பளிப்பூச்சியின் வருடலைப்போல அரிக்கத்தொடங்கியது..
மல்லிகையின் மணம் நெடியேற்றும் துர்நாற்றமாய் உருமாறியது...
வேகமாய் எழுந்து, சூடியிருந்த பூவை பிய்த்து
வீசியெறிந்தாள்... தண்ணீர் குழாயைத் திறந்து, கொட்டிய நீரை முகத்தின்மீது ஓங்கி
இறைத்தாள்.. கண்ணின் கருப்பு மையும், முகத்தின் வண்ண பூச்சுகளும் நீரோடு கலந்து
சாயமாய் தரையில் பாய்ந்தது.. வேஷம் கலைந்தது!..
ஒரு பால் ஈர்ப்புடையவர்கள் திருமணம் செய்வதால் என்ன ஏற்படும் என்ற கருத்தை மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. நம்மவர்கள் இப்படித்தான் திருமணம் செய்து தன்னையும் ஏமாற்றி, தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஏமாற்றி தன்னை நம்பி பல கனவுகளோடு வரும் பெண்களையும் ஏமாற்றி பொய்யான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ReplyDeleteIts a true thing I heard from many married gay guys. They cannot hide their sexuality but need to get married and sire children for social status.
ReplyDeletePathetic.