காதல் – தி கோர் (Kaathal – The core) சில வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாள திரைப்படம்.. ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படம் இயக்கிய இயக்குனரின் அடுத்த படம், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் ஜோதிகா என்று உச்ச நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் என்றெல்லாம் இந்த படத்திற்கு எத்தனையோ ‘இயற்கை’ விளம்பரங்கள் இருக்கும்போதிலும், இந்த படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியதற்கு மேற்சொன்ன எந்த விஷயமும் காரணமாக இருந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்... அப்படியானால், இவற்றை மீறிய காரணம் என்னவாக இருக்கும்?.. திரைப்படத்தின் நாயகன் ஒரு ‘gay’ என்ற ஒற்றை காரணம் போதாதா?...
‘gay’ என்றதும் இதுவரை நாம் திரைப்படங்களில் பார்த்துவந்த ‘சைக்கோ’ கொலைகார கே இல்லை, ‘அவனா நீ’ தர கே இல்லை, சிணுங்கும் கே இல்லை, சில்மிஷம் செய்யும் கே இல்லை, வலுக்கட்டாயமாக ஒரு ஆணை செட்யூஸ் செய்யும் கே இல்லை.. அந்த நாயகன் ஒரு ‘gay’ அவ்வளவுதான்.. இந்த புரிதல் மலையாள திரைத்துறைக்கு வந்திருப்பதென்பது வியப்பாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது..
முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.. இங்கே நான் இந்த திரைப்படத்தை பற்றிய விமர்சனத்தை உங்களிடம் பேசவில்லை.. முதல் பாதி அப்படி, நடிப்பு இப்படி என்றெல்லாம் நான் பேசப்போவதில்லை.. காரணம், இவ்வளவு காலமாக நம்மைப்பற்றி எவரும் பேசாத ஒரு உண்மை முகத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்தமைக்கு , அந்த இயக்குனருக்கு கோடானு கோடி நன்றிகள்..
மாத்தீவ்’வாக மம்மூட்டி, ஓமானா’வாக ஜோதிகா.. இருவருக்கும் திருமணமாகி பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு, கணவனிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்கிறார் ஜோதிகா.. இருவருக்கும் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு மகள் இருக்கிறாள் என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம்.. அந்த ஊரில் செல்வாக்கு மிக்க நபராக வலம்வரும் மம்மூட்டி, அங்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் சூழலில் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.. விவாகரத்திற்கு காரணமாக அந்த மனுவில் குறிப்பிடப்படும் காரணம் ‘கணவன் ஒரு கே.. அவரால் மன ரீதியிலான கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்’ என்பதுதான்..
இந்த விஷயம் தேர்தல் நேரத்தில் அங்கு மம்மூட்டிக்கு எதிரான ஒரு பிரச்சாரமாக கொண்டுசெல்லப்படுகிறது.. இதற்கிடையில் தேர்தல் நடக்கிறது.. வென்றாரா? என்பதெல்லாம் இங்கே நமக்கு தேவையற்ற விஷயம்தான்..
இப்போ நமக்கு தேவைப்படும் விஷயங்களை பார்ப்போம்..
முதலில் இந்த திரைப்படத்தில் யாருமே கெட்டவர்களாக காட்டப்படவில்லை.. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இணைந்து வாழ்ந்துவரும் ஒரு தம்பதிக்கு இடையில், விவாகரத்து வழக்கு நடைபெறும் போதிலும் , இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வசிப்பது , இருவருக்கும் இடையிலான புரிதலை நமக்கு தெரியப்படுத்துகிறது..
கே’வாக இருந்தபோதிலும் அப்பாவின் வற்புறுத்தலால் ஜோதிகாவை திருமணம் செய்துகொள்ளும் மம்மூட்டி, ஒரு கட்டத்தில் அப்பாவை பார்த்து “கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்னு பண்ணி வச்சியே” என்று அழும்போது.. “என்னை மன்னிச்சிருடா .. எல்லா தப்புக்கும் நான்தான் காரணம்” என்று அத்தனை வருடங்களாக பேசிக்கொள்ளாத மகனை கட்டியழும் தந்தையை பார்த்தபோது, இங்கு வாழும் ஒவ்வொரு தந்தையும் பார்க்க வேண்டிய படம் இது என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறார் இயக்குனர்...
படத்தின் ஒரு முக்கியமான பகுதி, நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சி..
“உங்க கணவனை கே’ன்னு சொல்றீங்க.. அப்புறம் எப்படி உங்களுக்கு குழந்தை?” வழக்கறிஞரின் குறுக்கு கேள்வி இது...
“அது மட்டும் நான் கேட்டு வாங்கினது!” அப்படியே என்னை உறையவைத்த பதில்..
“அப்படின்னா எத்தன தடவ நீங்க செக்ஸ் வச்சிருக்கிங்க?”
“இந்த பத்தொன்பது வருஷத்துல நான்கு தடவை” கேள்வி கேட்ட வழக்கறிஞரின் முகம் வெளிறிப்போனது..
மேலும் ஜோதிகாவின் வழக்கறிஞர் பேசும் சில வசனங்களும் , இந்த சூழலுக்கு தேவைப்படும் கருத்துகள்..
“நம்ம நாட்டுல 80% தன்பால் ஈர்ப்பு கொண்ட நபர்கள், யாருக்கோ கணவனாகவோ மனைவியாகவோதான் வாழறாங்க” என்னைப்பொறுத்தவரை இந்த சதவிகிதம் கூடலாமே ஒழிய குறைவாக இருந்திட வாய்ப்பில்லை..
மேலும், இந்த படத்தில் கே’வாக வரும் மம்மூட்டி, பல ஆண்களுடன் பழக்கம் உள்ளவராக காட்டப்படாமல், ‘தங்கன்’ என்ற நபருடன் வெகுகாலம் உறவில் இருந்து வந்ததாகத்தான் காட்டப்படுகிறது.. மம்மூட்டியின் பாலீர்ப்பு வெளியே தெரியும்போது, அவர் மகளாக இருக்கட்டும், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சி என்று எல்லாமும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக காட்டப்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது.. நிஜத்தில் கேரளாவின்
சூழல் பாலீர்ப்பை பொறுத்தவரை இவ்வளவு முற்போக்காக இருக்கிறதா? என்பது எனக்கு புலப்படவில்லை.. இதே விஷயத்தை தமிழ்நாட்டோடு பொருத்தி பார்க்கையில், இவ்வளவு பெருந்தன்மை கொண்ட சமூகம் நம்மை சுற்றி இருக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..
இங்கு ஜோதிகாவும் மம்மூட்டியை பழிவாங்கவல்லாம் வழக்கு போடவில்லை.. “இப்புடியே இருக்கப்போறியா மாத்தீவ்?.. அப்போ உனக்குன்னு வாழ்க்கைய எப்போ வாழப்போற?.. இதல்லாம் எனக்காக மட்டும்தான் பண்ணேன்னு நெனச்சியா?” என்று சொல்லும் ஜோதிகா ஆச்சர்யமாக தெரிகிறார்..
விவாகரத்து கிடைத்தவுடன், மனைவிக்கு வேறொரு துணையை சேர்த்துவிட்டு , வெளியே வந்து நிற்கும் மம்மூட்டி நிச்சயம் மனதில் கனத்தை உண்டாக்குவார்..
இதெல்லாம் நாம ரொம்ப காலம் சொல்லிக்கொண்டே இருக்குற விஷயம்தான்.. என்னுடைய ‘அரிதாரம்’ சிறுகதையின் அமுதாவும் கூட, பதினெட்டு வருடங்கள் கழித்து இப்படியொரு ஓமனாவாக மாறியிருக்கக்கூடும்.. காரணம், அந்த இரண்டு பாத்திரத்துக்குள்ளும் பெரிய வேறுபாடு இல்லை.. கணவனின் பாலீர்ப்பை தெரிந்து, வீட்டில் சொன்னால்கூட, சமூகம் சுற்றம் என்று உப்புப்பெறாத காரணங்கள் சொல்லி, பெண்களை ஊமையாக்கும் சமுதாயத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?..
ஒரு பெண்ணுக்கும் திருமணம் பற்றிய ஆயிரம் கனவுகள் இருக்கும்.. ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக, அந்த கனவுகளை க்ளஸ்டர் குண்டுகளை போட்டு கொளுத்தும் சந்தர்ப்பவாதிகளாக மட்டுமே இங்கு பெரும்பான்மையாக இருக்கிறோம்..
“கல்யாணம் ஆனா சரியாகிடும்”, “குழந்தை பிறந்தா சரியாகிடும்”.. இதல்லாம் நம்மை சமாதானப்படுத்த நம்மை சார்ந்தவர்கள் சொல்லும் மூடத்தன வார்த்தைகள்.. பிற்பாடு நம்மை சமாதானப்படுத்த நமக்கே இவற்றை நாம் சொல்லிக்கொள்கிறோம்.. நிஜத்தில் நாம தொடக்கத்திலேயே சரி பண்ணலன்னா, பிற்பாடு எப்போதும் அவை சரியா போகப்போறது இல்லை என்பது மட்டும்தான் உண்மை..
உண்மையில் இப்படி ஒரு கருவை, யாரையுமே வில்லன் போல சித்தரிக்காமல், சொல்லும் கருத்தை மிகச்சரியாக கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் திரைக்கதையை செதுக்கிய இயக்குனருக்கு மீண்டும் ஒருமுறை எங்கள் சமூகம் சார்பாக நன்றிகள்..
நீங்க எல்லோரும் பார்க்க வேண்டிய படம்... முக்கியமாக உங்களை சார்ந்தவர்களுக்கும் இதனை பரிந்துரை செய்யுங்கள்.. நிச்சயம் புதியதாய் பிறக்கும் சமூகமாவது , நம்மை புரிந்துகொள்ளும் சமூகமாக வளர்ந்து வரட்டும்!
No comments:
Post a Comment