“இந்த வருடத்தில் நான் சந்தித்த ஒரு நபரால் என் வாழ்க்கையின்
பாதையே மாறிப்போனது.... என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கும், பெருமிதத்துக்கும்
ஆட்படுத்திய அந்த நபர் ஒரு ஆண்.... என்னுடைய இந்த முடிவுக்கு என் அம்மா முழுமனதோடு
சம்மதம் தெரிவித்துள்ளார்... உறவினர்கள் மற்றும் நண்பர்களில் மட்டும் ஒருசில மாற்றுக்கருத்துகளை
நான் எதிர்கொள்கிறேன்...” இப்படி நீளும்
அந்த யூடியூப் காணொளி காட்சிக்கு சொந்தக்காரர் என்னை போல ஒரு சாமானியன் இல்லை,
ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வரை வென்று, நீச்சல் பிரிவில் மகுடம் சூடிய பிரிட்டனை
சேர்ந்த 19 வயதான டாம் டேலி (Tom Daley)தான்
அவர்.... கடந்த வாரத்தின் உலக ஆங்கில ஊடகங்களின் முக்கிய விவாதமே இந்த டேலியின்
யூடியூப்தான்... அதுமட்டுமல்லாமல் உலகின் பல பிரபலங்கள் டேலியின் இந்த துணிச்சலான
வெளிப்படுத்துதலுக்கு தங்கள் ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்....
இதைப்பற்றிய
தகவல்களை உங்களில் பெரும்பாலானவர்கள் படித்திருக்கலாம்... ஆனால், இதற்குள்
புதைந்திருக்கும் ஒருசில புரியாத புதிர்களை பற்றி இப்போ நான் பேசலாம்னு
நினைக்கிறேன்...
டாம்
டேலி’தான் உலகில் முதன்முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஒருபால் ஈர்ப்பு
விளையாட்டு வீரர் என்பதை போன்ற பூதாகரமான செய்தியாக இதை ஊடகங்கள் விஸ்தரித்துள்ளதாக
நான் நினைக்கிறேன்... நிஜத்தில், விம்பிள்டன் போட்டிகளில் பதினெட்டு
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்ட்டினா நவ்ரத்திலோவா , பிரபல கால்பந்தாட்ட
வீரர் ஆன்டன் ஹைசன், அமெரிக்காவின் கூடைப்பந்தாட்ட வீரர் ஜேசன் காலின்ஸ்,
பிரிட்டனின் குத்துச்சண்டை வீரர் நிக்கோலஸ் ஆடம்ஸ், கால்பந்தாட்ட வீரர் ராபி
ரோஜர்ஸ் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அளவிற்கான “டாம் டேலியைவிட”
அதிகமான சாதனைகளை புரிந்த ஜாம்பவான்களை தங்கள் பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொண்ட
விளையாட்டு வீரர்களின் பட்டியலில் நாம் இணைக்க முடியும்....
அப்படி
இருக்கையில், டாம் டேலியின் கருத்தை ஊடகங்கள் இவ்வளவு பெரிய அதிசய நிகழ்வாக
சித்தரிப்பதற்கான காரணம் கொஞ்சம் குழப்பமான ஒன்றுதான்...
மேலும்,
அந்த காணொளியின் முழு பாகத்திலும் டாம் டேலி எந்தவொரு இடத்திலும், தன்னை “gay” என்று வெளிப்படையாக
அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை... தனக்கு பெண்களுடனும் ஈர்ப்பு இருப்பதாக கூறும்
டேலி, குறைந்தபட்சம் தன்னை ஒரு “bisexual” என்று கூட
வெளிப்படையான கருத்தை முன்வைக்கவில்லை... அந்த காணொளி காட்சியை பார்க்கும் நமக்கே
டேலி ஒருவித தெளிவற்ற கருத்துகளை முன்வைத்திருக்கிறார் என்பது புரியும்.... அவர்
சொன்ன விஷயங்கள் பலவற்றையும் இணைத்துப்பார்த்து “டேலி ஒரு கே” என்றோ “டேலி ஒரு
பைசெக்சுவல்” என்றோ நாமாக ஒரு யூகத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில்தான் அவரின்
காணொளி காட்சி தெளிவற்ற போக்கை கொண்டுள்ளது.... அப்படி இருக்க, இந்த எதிர்மறை
விஷயங்கள் எதையும் கணக்கிலெடுக்காமல் “டேலி ஒரு முற்போக்குவாதி, வீரர், தீரர்,
துணிச்சல்காரர்” போன்ற அடைமொழிகளை சூட்டி அந்த ஊடகங்கள் அழகு பார்ப்பது
எதனால்?....
உண்மையில்,
இந்த விஷயத்தில் நாம் டாம் டேலியை பாராட்டுவதற்கு முன்பாக, அதைவிட அதிக
பாராட்டுதலுக்கு உரிய ஊடக நண்பர்களை பாராட்டியே ஆகவேண்டும்...ஏன்?... நான்
மேற்சொன்ன டேலியை பற்றிய விமர்சனங்களுக்கு காரணம், டேலியின் முதிர்ச்சியற்ற
கருத்துகள்... அதற்கு டேலியை குறை சொல்லக்கூடாது, பத்தொன்பது வயது இளைஞனிடமிருந்து
இப்படிப்பட்ட கருத்துகள் வருவது இயல்புதான்... பிறகு எதற்காக டேலி மீதான
விமர்சனங்களை முன்வைக்கிறேன்? என்று நீங்கள் கேட்பீர்கள்.... மேற்கத்திய ஊடகங்கள்
இவ்வளவு விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் டேலியின் கருத்துக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுத்துள்ள ஆச்சரிய நிகழ்வை சுட்டிக்காட்டத்தான் நானும் மேற்சொன்ன
டேலி பற்றிய விமர்சனங்களை முன்வைத்தேன்... மழலை பேச்சின் இலக்கனப்பிழையை
கண்டுபிடிப்பது முட்டாள்த்தனம்தான், நானும் கூட ஊடகத்தின் பெருந்தன்மையை
சுட்டிக்காட்டத்தான் இந்த பிழைகளை முன்வைக்க வேண்டி இருந்தது....
ஒருபால்
ஈர்ப்பு நபர்கள் மீதான அந்த ஊடகத்துறை நண்பர்கள் கொண்டுள்ள அக்கறையின்
வெளிப்பாடுதான், டேலி பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம்... “டேலி
இதை சொன்னார், இப்படி சொன்னார், இங்கே சொன்னார்” என்று குற்றங்களை தேடி
கண்டுபிடிக்க முயலவில்லை, மாறாக டேலியின் துணிச்சலை பாராட்டி பாலீர்ப்பு பற்றிய
விழிப்புணர்வுக்கு இந்த செய்திகளை பயன்படுத்திக்கொண்டார்கள்....
“தெஹல்கா” தருண் தேஜ்பால் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு வரிந்துகட்டிய வடஇந்திய ஊடகங்கள், மத்திய பிரதேச நிதி
அமைச்சர் ராகவ்ஜி மீது சுமத்தப்பட்ட ஓரினசேர்க்கை புகாரை எப்படி கையாண்டார்கள்?
என்பதை நான் முன்பே கூறி இருக்கிறேன்...
தமிழ்
ஊடகங்களும், இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது...
ஒருபால்
ஈர்ப்பு திருமணம் பற்றிய செய்தி ஒன்றுக்கு, “உலகம் போகும் போக்கை பாருங்க!” என்று
சலித்துக்கொள்ளும் “அந்துமனிகள்” தொடங்கி, “இயற்கைக்கு மாறான உறவுகள்” என்று
அடைமொழி சூட்டிடும் “ஆவியின் ஜூனியர்”கள் வரை தமிழ் ஊடகங்களின் செய்திகளை பார்த்து
சலித்து, வெறுத்து, களைத்துப்போன நமக்கு மேற்கத்திய ஊடகங்களின் மனநிலை நிச்சயம்
ஆச்சரியம் ஊட்டும் ஒன்றாகத்தான் தெரியும்...
2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல டாம்
டேலியை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய ஊடக முன்னோடிகளை வணங்கிக்கொண்டும்
விடைபெறுவோம்!....
கொசுறு தகவல்....
கே
ஒலிம்பிக்ஸ் (gay Olympics) என்னும்
விளையாட்டு போட்டிகள் பிரத்யேகமாக பாலீர்ப்பு சிறுபான்மையினருக்காக 1982ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது... முதலாம் கே ஒலிம்பிக்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது... ஒருபால் ஈர்ப்பு குற்றமாக
பார்க்கப்படும் நாடுகளை சார்ந்த வீரர்கள் கூட அந்த போட்டிகளில் கலந்துகொள்வதை நாம்
காணமுடியும்.... ஒருபால் ஈர்ப்பு நபர்களை பற்றிய நல்லதொரு எண்ணங்களை மக்களிடம் விதைக்கவும்,
ஒருபால் ஈர்ப்பு நபர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இப்படிப்பட்ட
விளையாட்டுகள் நடத்தப்படுவதாக “கே ஒலிம்பிக்” ஏற்பாட்டாளர்கள்
தெரிவிக்கிறார்கள்....



