நான் வருண்... ஒரு
சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்... இப்போ நான்
கனடாவின் ஒட்டவா நகரில், எங்கள் வீடு அமைந்திருக்கும் எல்கின் வீதியிலிருந்து
விக்கியுடன் சிட்டி ஹால் நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்... கனடாவிற்கு வந்து
மூன்று வருடங்கள் ஆகிடுச்சு... இதுவரை எங்க ரெண்டுபேருக்கும் இடையில் வேறு யாரும்
வந்துவிடவில்லை... இன்றைக்கு மூன்றாம் நபர் எங்கள் வாழ்க்கைக்குள் நுழைய
இருக்கிறார்... இன்னும் அரை மணி நேர பயணத்தில் அந்த நபரை சந்திக்கும்போது
உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்குறேன்... அதுவரை கனடாவின் மூன்று வருட வாழ்க்கையை
உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்....
விக்கி, “தனக்கு
கனடாவில் ப்ராஜக்ட் கிடைத்துவிட்டது” என்று சொல்லும்போது எனக்கு முதலில் வருத்தமாகத்தான்
இருந்தது... “எனக்கும் கனடாவில் வேலைக்கு சொல்லி இருப்பதாக அவன் சொன்னபோது,
மகிழ்வாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது”.... எல்லாவற்றையும்
பேசித்தீர்த்து சென்னையிலிருந்து கனடாவிற்கு விமானம் ஏறிய அந்த நாளை என்னால் மறக்க
முடியாது... விமானம் மெல்ல மெல்ல உயரப்பறந்த அந்த நிமிடங்களில், விமானத்தை தாண்டிய
உயரத்தில் நான் பறப்பதாக உணர்ந்தேன்... என் அருகில் விக்கி, கண்ணுக்கு தெரிந்த
வரையில் தெரிந்த முகம் வேறு எவருமில்லை... அவனோடு சொர்க்கத்திற்கு போவதைப்போல
உணர்கிறேன்....
என் கண்கள் அலைபாய,
உடல் அசைவுகளில் உற்சாகம் மேலோங்க, என் முகத்தில் இனம் புரியாத ஒரு பரவசத்தை
விக்கி உணர்ந்து, என் கையை அழுத்தி பிடித்தான்... அந்த அழுத்தத்தில் இன்னும்
பரவசமானேன்... கனடா பற்றி அதிகம் நான் அறிந்ததில்லை... “உலகில் பரப்பளவில்
இரண்டாவது பெரிய நாடு, க்ளைமேட் பெரும்பாலும் குளிராக இருக்கும்” போன்ற புவியியல்
பாடத்தில் படித்த விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது... அப்படி ஒன்றும்
தெரியாத நாட்டிற்கு செல்வது கொஞ்சம் பயமாக இருந்தாலும், விக்கி அருகில் இருந்தால்
அமேசான் காட்டுக்குள் கூட போகும் மன திடம்
எனக்குள் இருக்கும்... ஒட்டாவாவின் மெக் டொனால்ட் கார்ட்டியர் சர்வதேச
விமான நிலையத்தில் இறங்கியபோது, ஒரு புதுவித உணர்வு மனதிற்குள் உண்டானது...
விமான
நிலையத்திலிருந்து எல்கின் வீதி செல்லும் வழியெல்லாம் வாய் பிளந்து ரசித்தேன்
கனடாவின் அழகை.... “புதிய வானம், புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது”னு
எம்.ஜி.ஆர் போல பெட்டியை தூக்கி வீசி பாடவேண்டும் என்று தோன்றினாலும், மனதிற்குள்
ஆசையை அடக்கிக்கொண்டேன்.... கனடாவின் அழகை “அழகு” என்ற ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கிவிட முடியாது.... அந்த அழகை ரசித்ததில் அருகில் இருந்த விக்கியை கூட சில
நிமிடங்கள் மறந்துவிட்டேன் என்றால், அந்த அழகு எப்படி இருந்திருக்கும்? என்பதை
உங்கள் கணிப்புக்கு விட்டுவிடுகிறேன்....
விஞ்ஞான
வளர்ச்சிக்கேற்ப நகர அமைப்பில் காணப்படும் வீதிகளில் கூட பசுமையை நினைவூட்டும்
மரங்கள், துளித்துளியாய் என் மீது விழுந்து சில்லிட வைக்கும் பனி சாரல்,
பொருளாதாரத்தில் மிக உயரத்தை எட்டியுள்ள நகரத்திற்கான எவ்வித ஆரவாரமும் இல்லாமல்
அமைதியான வீதிகள்.... போதும் போதும்... கனடா பற்றி அதிகம் நான் வர்ணிப்பதை
பார்க்கும் விக்கிக்கு கனடாவின் மீதே பொறாமை வந்துவிடும்.... எல்கின் வீதியில்
எங்கள் வீட்டை அடைந்ததும் பயணக்களைப்பாலும், கடும் குளிராலும் படுக்கை அறையில்
சென்று படுத்துவிட்டேன்...
சில நிமிடங்களில்
விக்கியும் என் அருகில் வந்து, என் மார்பில் அவன் தலைபுதைத்து படுத்தான்... குளிருக்கு கொஞ்சம் இதமாக
இருந்தது, அவன் மூச்சுக்காற்று என் மார்பில் சிலிர்ப்பை உண்டாக்கியது...
“என்னடா ஹார்ட் பீட்
இவ்ளோ வேகமா துடிக்குது?... பயமா இருக்கா?” உண்மைதான், என் இதயம் எப்போதையும்விட
இப்போது வேகமாக துடித்தது...
“இல்லடா... ஒரு
வித்தியாசமான பீலிங்... இதுக்கு பேர் என்னனு தெரியல... அடிவயிற்றில்
பட்டாம்பூச்சி’லாம் பறக்குதுடா” சிரித்தேன்....
“அப்டியா?... எங்க
நானும் பாக்குறேன்.....” சொல்லிவிட்டு என் சட்டையை கழற்ற முயல, அதைத்தடுத்த நான்,
“பரவால்ல இருக்கட்டும்.... நீ எதை பார்ப்பனு எனக்கு தெரியும்.... முதல்ல ரெஸ்ட்
எடு...” என்றேன்....
“அவ்ளோதானா?....
அடப்போடா!!” அழகாக சினுங்கினான் விக்கி...
“நெஜமாதான்
சொல்றேன்... இந்த நிமிஷத்துல, உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமானவன் நான்தான்
தெரியுமா!... நீயும் நானும் ஏதோ புது உலகத்துக்கே வந்த மாதிரி இருக்குடா”
“இந்த நிமிஷத்துல,
இந்த உலகத்துல ரொம்ப கடுப்பா இருக்குறவன் யார் தெரியுமா?..”
“யாரு”
“வேற யாரு?... நான்
தான்”
“ஏண்டா?”
“பதினெட்டு மணி
நேரம், ஒரு கிஸ் கூட இல்லாம.... ச்ச.... என்ன வாழ்க்கடா இது” செல்ல கோபமுற்றான்
விக்கி....
“அவ்ளோதானே?... இதோ,
இப்போவே தரேன்...” சொல்லிவிட்டு, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்....
“இதுக்கு பேர்
கிஸ்ஸா?.... இரு நான் சொல்லித்தரேன்” என்று சொன்னவன், எழுந்து என் அருகில்
படுத்தான்.... முன் நெற்றியை மறைத்திருந்த முடிகளை விலக்கி நெற்றியில்
முத்தமிட்டான், பனித்துளிகள் பட்டு வறண்டு போன என் கன்னத்தில் முத்தமிட்டான்,
அப்படியே அவன் கண்கள் என் உதடுகளை குறிவைத்தது.... சற்றும் யோசிக்காமல் ஆழமாக
முத்தமிட்டான்... அவன் செய்கைகளுக்கு நான் முழுவதுமாக வழிவிட்டேன்... இதற்கு மேல்
சொன்னால், அது சென்சார் பிரச்சினை ஆகிடும்.... லவ் பேர்ட்ஸ் இரண்டு கொஞ்சுவது
போலவும், பனிக்கரடிகள் விளையாடுவது போலவும் காட்சிகளை நினைத்துக்கொள்ளுங்கள்....
மைனஸ் டிகிரி குளிரிலும், வியர்க்கும் அளவிற்கு அன்றைய உறவு நிகழ்ந்தது....
அடுத்த ஒரு வாரம்
ஒட்டாவா முழுவதும் சுற்றினோம்... சென்னைக்கு வருபவர்கள் தேடித்தேடி “சமாதி”களுக்கு
செல்வதைப்போல, ஒட்டாவாவில் வீதிக்கு ஒரு மியூசியம் அந்நாட்டு பெருமையை, அழகை
சொல்லிக்கொண்டு இருந்தது... அதைதாண்டி ஒட்டவா நீரோடை இன்னும் அழகாக இருந்தது...
ஒருவாரத்தில்
இருவரும் அவரவர் வேலைகளுக்கு செல்ல தொடங்கினோம்... வெளிங்க்டன் வீதியில் உள்ள
மருத்துவமனையில் நண்பரின் பரிந்துரையில் கிடைத்த வேலையின் முதல் நாள்...
இங்க்லீஷ், அரைகுறை பிரெஞ்ச் இரண்டையும் வைத்து முதல்நாள் மருத்துவமனையில் கொஞ்சம்
சிரமப்பட்டு போனேன்... என் அருகில் அமர்ந்திருந்த இன்னொரு மருத்துவர், வெகுநேரமாக
அனாட்டமி புத்தகத்தின் அட்டைப்படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.... அந்த
அட்டையை வடிவமைத்தவன் கூட அவ்வளவு உன்னிப்பாக அதை பார்த்திருக்க மாட்டான்... கேஸ்
ஷீட் எழுதி முடித்துவிட்டு, “முருகா!” என்று பெருமூச்சு விட்டேன்...
சட்டென அனாட்டமி
அட்டையிலிருந்து தலையை நிமிர்த்திய அந்த நபர், “நீங்க தமிழா?” என்றார்...
அப்பாடா!... வெகுநேரத்துக்கு பிறகு தமிழ் வார்த்தையை கேட்கிறேன்....
“ஆமா... நீங்க?”
“ஓம்... நானும் தமிழ்
தான்”
“ஓஹோ... இலங்கையா?”
“இல்லை... ஈழம்”
சிரித்தார்...
“அப்பாடா... இப்பதான்
நிம்மதியா இருக்கு... இங்க்லீஷ், பிரெஞ்ச்... இத்தோட காலத்த ஓட்டுற நிலைமை
வந்திடுமோன்னு பயந்தேன்.... என் பேர் வருண்... நீங்க?” என்னையும் மீறி வார்த்தைகள்
வேகமாக வந்து விழுந்தன...
“என்ட பெயர்
குகன்...”
இருவரும் எங்களது
வரலாறு, புவியியல் தொடங்கி அறிவியல் வரை வெகுநேரம் பேசினோம்... என்னைப்பற்றி
எல்லாவற்றையும் சொன்னேன், விக்கி உடனான திருமணம் வரை... அதை ஆச்சரியமாக கேட்டாரே
தவிர, அதிர்ச்சியாக பார்க்கவில்லை... நம் ஊரில் சாதி மாற்றி செய்யும் கலப்பு
திருமணத்தை போலதான், அங்கு கே திருமணங்களை பார்க்கிறார்கள்... முற்போக்குவாதிகள்
ஆதரிக்க, பழமைவாதிகள் எதிர்க்கின்றனர்... ஆனாலும், பெரும்பான்மை சமூகமும், நாட்டு
சட்டமும் எங்களை போன்றவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்பதை குகன் மூலம்
தெரிந்துகொண்டேன்.... “கனேடிய தமிழர் அமைப்பின்” முக்கிய பொறுப்பில் இருக்கிறார்
குகன்... பலவிஷயங்களையும் பேசிவிட்டு, விடைபெறும் முன்னர் என்னை அழைத்த குகன்,
“இண்டைக்கு முடிந்தால் பார்க் ஸ்ட்ரீட் வாங்க வருண்... எங்கட தமிழ் அமைப்பின் சார்பா இலங்கை அரசை கண்டித்து
பேரணி நடத்துறம்...” என்றார்...
“நிச்சயமா வரேன்
குகன், விக்கியையும் கூட்டிட்டு வரேன்” சொல்லிவிட்டு விடைபெற்றேன்.... கடல்
கடந்து, பல கண்டங்கள் கடந்து வந்தும் தமிழால் உண்டான இந்த நட்பு என்னை இன்னும்
உற்சாகமாக்கியது....
வீட்டை அடைந்தபோது,
எனக்கு முன்னால் விக்கி வந்துவிட்டதை உணர்ந்தேன்...
லேப்டாப்பில்
புதைத்திருந்த முகத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி, நெற்றியை சுருக்கி “எப்டி
இருந்துது புது ஜாப்?” என்றான்.... அந்த கேள்வியைவிட, அவன் கேட்ட விதம் என்னை ஏதோ
செய்தது....
அவன் அருகில் சென்று
அமர்ந்து, தோளில் தலை சாய்த்து, கையை பிடித்து என் கன்னத்தில் ஒட்டியவாறே,
“ஹ்ம்ம்... உன்ன மாதிரியே இருந்துது.... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றேன்...
எதனால்? என்று தெரியவில்லை, என்னை அறியாமல் அவன் மீது கட்டுக்கடங்காத காதல்
இப்போது என்னையும் மீறி வெளியானது...
“இன்னைக்கு நாம ஒரு
இடத்துக்கு போறோம்... நம்ம கனேடிய தமிழ் அமைப்பு சார்பா இலங்கை அரசை கண்டித்து ஒரு
பொதுக்கூட்டம் நடத்துறாங்களாம்.... நாமளும் போறோம்... அங்க ஒரு எம்.பி ....” என்று
நான் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தான் விக்கி......
“இன்னிக்கா?... இல்ல
வேணாம்... இன்னைக்கு ஈவ்னிங் ஒரு பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கேன்... என்னோட கலிக்ஸ்,
டீம் லீடர் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்குறேன், உன்னையும் இன்ட்ரோ கொடுக்குறதா
சொல்லிருக்கேன்...” முகத்தில் அப்பாவித்தனத்துடனும், ஆசை மிகுந்த வார்த்தைகளுடனும்
சொன்னான்.... வார்த்தைகளில் பேசி வழிக்கு கொண்டுவரும் வித்தைகளில் விக்கியை விஞ்ச
எவருமில்லை... ஆனாலும், இந்த விஷயத்தில் நான் விட்டுக்கொடுக்க முடியாது என்பதில்
உறுதியாக இருந்தேன்....
“நீ வைக்குற ட்ரீட்
தானே?... நாளைக்கு வச்சுக்கலாம்... ஆனால், இந்த மீட்டிங் நாளைக்கு இருக்காது...
கனடா முழுக்க இருக்குற பெரும்பாலான தமிழர்கள் வராங்க... நாம போய்தான் ஆகணும்...
ஏதோ நம்மால அந்த மக்களுக்கு முடிஞ்சது இதானே?”
“ஐயோ புரியாம பேசாத
வருண்.... வேணும்னா பணம் எதாச்சும் கொடுக்கலாம்... இப்போ நாம போகாததால அவங்களுக்கு
என்ன பெரிய நஷ்டம் வந்திடப்போகுது?” மனசாட்சியே இல்லாமல் பேசினான்... சாலையில்
மயங்கி கிடந்த ஒரு முதியவரை தாண்டி சென்று, கருணைக்கிழங்கு பேரம் பேசி வாங்கியவர்
விக்கியின் அப்பா.... அவருக்கு பிறந்தவன் இப்படி பேசுவதில் ஆச்சரியமில்லை தான்...
ஆனாலும், இப்போ அவன் என் விக்கி, இப்பவும் அதே போல பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள
முடியாது...
வார்த்தைகள் தடிக்க,
வாக்குவாதம் முற்றிய நிலையில், “ எனக்குன்னு மனசாட்சி இருக்கு... நான் மீட்டிங்
தான் போவேன்... எவனோ அமெரிக்கா காரனுக்கு நீ வேணும்னா வெலக்கு புடிச்சுக்கோ”
சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் கூட்டம் நடக்கும் பார்க் வீதியை நோக்கி
சென்றேன்.... செல்லும் வழியெல்லாம் எனக்கு விக்கி பற்றிய நினைவே மேலோங்கி
இருந்தது... “அவனிடம் நான் அப்படி பேசி இருக்க கூடாதோ?... வந்த ஒரு வாரத்திற்குள்
இப்படி ஒரு சண்டை தேவையா?... கொஞ்சம் மென்மையாக பேசி அவனுக்கு
புரியவைத்திருக்கலாமோ?... முதலாளித்துவ எண்ணங்களை கொண்டவனிடம் என், கம்யூனிச
சிந்தனையை திணிக்கிறேனோ?” கேள்விகளுக்கு பஞ்சமில்லாமல் டசன் கணக்கில் வந்து
விழுந்தது... எப்போதும் என் பாழாய்ப்போன மனசு அவனுக்குத்தான் பரிந்து பேசும், என்
பக்கம் இருக்கும் நியாயத்தை அது திரையிட்டு மறைத்துவிட்டு அவனை நல்லவனாக்கவே
முயற்சி செய்யும்...
பார்க் வீதி
ஈழத்தமிழர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது... எங்கும் தமிழ், எதிலும் தமிழாய் வீதி
முழுக்க தமிழ்மணம் பரவியது... கூட்டத்தினர் மத்தியில் என்னை அடையாளம் கண்ட குகன்,
தனியே அழைத்து சென்று நிற்கவைத்தான்... கையில் புலிக்கொடியும், வாயில் விடுதலை
வேண்டிய குரலும் ஒலிக்க, கூட்டம் நடந்துகொண்டிருந்தது... “தமிழ் ஈழம் அமைந்தே
தீரும்!” மேடையில் முன்னவர் முழங்க, என் நினைவெல்லாம்
விக்கிதான் நிறைந்திருந்தான்...... ஒரு பக்கம், தமிழ் உணர்வும், மனித நேயமும்
இல்லாமல் அவன் இருப்பதை எண்ணி எனக்கு வருத்தமாக இருந்தது... மறுபக்கம், அவனுடனான
என் சண்டையை எண்ணி கவலையும் இருந்தது... இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் என்
பின்புறத்திலிருந்து என் இடுப்பை ஒரு கை அணைத்ததை உணர்ந்து, சட்டென
திரும்பினேன்....
அது வேறு யாருமில்லை,
என் விக்கியேதான்.... என் இடுப்பை பிடித்த கையை விலக்காமல், இன்னும் என் அருகில்
நெருங்கி வந்து என்னை பார்த்து மென்முறுவல் உதிர்த்தான்.... எனக்கோ தலைகால்
புரியாத அளவிற்கு மகிழ்ச்சி உண்டானது... ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் , அவனை
விட்டு கொஞ்சம் விலகி நின்றேன்... மனநிறைவோடு கூட்டத்தை கவனித்தேன், அவனோ என்னை
மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தான்.... அவ்வப்போது என்னிடம் அவன் நெருக்கம் காட்டி
நிற்பதும், பொது இடம் கருதி நான் சற்று விலகி நிற்பதும் அந்த ஒரு மணி நேரத்தில், ஏழெட்டு முறை நடந்துவிட்டது....
கூட்டம் முடிந்து
வீட்டிற்கு செல்லும்வரை நான் எதுவும் பேசவில்லை... வீட்டிற்கு சென்றதும் பொறுமை
இழந்த விக்கி, “இன்னும் உனக்கென்ன ப்ராப்ளம்?... அதான் நீ சொன்னதால ட்ரீட்
நாளைக்கு மாத்தி வச்சிட்டு, நீ சொன்ன மீட்டிங் வந்தேன்ல... நான் இறங்கி இறங்கி
போறதால, நீ ரொம்பத்தான் ஏறி போற” காட்டமாகத்தான் பேசினான்... உண்மைதான், அவன்
இவ்வளவு இறங்கி வந்தும், நான் கொஞ்சமும் என் நிலையில் மாற்றம் கொள்ளவில்லை... பொதுவாக நான் அப்படி பிடிவாதம் பிடிக்க
மாட்டேன், ஆனால் ஏனோ இந்த விஷயத்தில் இவ்வளவு அழுத்தம் காட்டுகிறேன்... என்
பிடிவாதம் இதற்கு மேலும் தொடர்ந்தால், அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது
எனக்கு தெரியும்...
“சரி ஓகே.... இனி
பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு விக்கி... எனக்காக நீ எதையும் மாத்திக்கனும்னு
நான் சொல்ல வரல... ஆனால், சரியானதை நான் சொல்றப்பவாச்சும் நீ அதை கேட்டுக்கலாம்,
அது தப்பாகிடாது” வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாண்டேன்... நான் சொன்னதால்
நாளைக்கே அவன் ஈழப்போராட்டத்தில் போராளியாகிவிட போவதில்லை... ஆனாலும், எனக்காக
அந்த போராட்டத்தின் நியாயத்தை அவன் உணர்ந்தால் போதும்.... கிரிக்கெட்டின் அடிப்படை
கூட தெரியாத நான் அவனுக்காக யுவராஜையும், கோலியயும் ரசிக்க கற்றுக்கொண்டேன்,
அதிதீவிர ஆன்மிகவாதியான நான் அவ்வப்போது அவனுக்காக பெரியாரிசம் பேசினேன்... அதனால்
எனக்காகவும் அவன் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது பேராசை
கிடையாதல்லவா?...
மறுநாள் காலை
மருத்துவமனை சென்றபோது, குகன் ரொம்பவே பெருமையோடு நேற்றைய கூட்ட நிகழ்வுகளை பற்றி
சொல்லிக்கொண்டிருந்தான்.... இடையில் அவன் விக்கி பற்றி என்னிடம் கேட்டது
ஆச்சரியமாக இருந்தது... “உயரமா, கருப்பு சட்டை அணிந்துகொண்டு நின்டவர்தானே உங்கட
மனுஷன்?” என்றான் குகன்...
“எப்டி
கண்டுபிடிச்சிங்க?” ஆச்சரியத்துடன் கேட்டேன்...
“இது ஒண்டும் கடினமான
வேலை இல்லை... நீங்கள் ரெண்டு பேரும் உடலால் பேசிக்கொண்டதில் நேற்று கனடாவே அதை
கண்டுகொண்டிருக்கும்... உங்க இணை, ரொம்பவும் வடிவான இணை.... “ என் கையை பிடித்து வாழ்த்தினார்,
மனம் முழுக்க பெருமிதமும், சந்தோஷமும் என்னுள் நிறைந்து காணப்பட்டது...
வீட்டிற்கு சென்றதும்
விக்கியிடம் இதைப்பற்றி சொல்லி சிரித்தேன்....
“பப்ளிக்ல நீ பண்ண
கூத்துல ஊரே நம்மள கண்டுபிடிச்சிருக்கும்டா”
“இதுல கண்டுபிடிக்க
என்னடா இருக்கு? நாம என்ன யாருக்கும் தெரியாமலா வாழறோம்.?... நீயும் நானும் இப்போ
கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க.... யாரும் கேட்டால் பெருமையா சொல்லிக்கலாம்டா” அடடா!
எவ்வளவு பெரிய உண்மையை, இவ்வளவு எளிதாக, அழகாக சொல்லிவிட்டான்.... உண்மைதான்,
எதற்காக நான் இதை மறைக்கணும்?...
பதிலெதுவும் சொல்லாமல்
சிரித்தேன், அந்த சிரிப்பில் என் சமாதானத்தை பறக்க விட்டேன்.... சைக்கிள் கேப்பில்
ஆட்டோ ஓட்டும் அவன், தங்க நாற்கர சாலை அமைத்துக்கொடுத்தால் சும்மாவா
இருப்பான்?.... மெல்ல என் அருகில் வந்து அமர்ந்து, என் மீது சாய்ந்தான்... கைகளை
என் மீது படரவிட்டான்... புயல் வருவதற்கான நான்காம் எண் கூண்டை ஏற்றிவிட்டான்...
“கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக்கலாமே?” எனக்கும் ஆசை இருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் மறுப்பது போல சொன்னேன்...
மனதிற்குள் மட்டும் “ஓகே சொல்லிட கூடாது”ன்னு பரபரத்தேன்...
நல்லவேளையாக அவன் என்
மனம் அறிந்து பேசினான், “அடப்பாவி! ரெஸ்ட்டா?.... அல்ரெடி ரெஸ்ட்’லதான்
இருக்கோம்... நேத்து நைட் கூட நம்ம ப்ராப்ளம்’ல ஒண்ணுமே நடக்கல... இதுக்கே
மேலையும் என்னால வெயிட் பண்ண முடியாது” வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
முன்பே, என் மீது புலி பாய்ச்சலில் பாய்ந்தான் விக்கி... மனம் முழுக்க
உற்சாகத்துடன் அவனை முழுவதுமாக எனதாக்கிக்கொண்டேன்... இனிதே முடிந்த அன்றைய
உறவுக்கு பிறகு, அவன் மார்பில் தலைவைத்து நான் படுத்திருந்தேன்.... அவன் மூச்சின்
வேகம் இன்னும் குறையவில்லை... என் மூச்சுக்காற்று அவன் மார்பின் ரோமங்களை நடனமாட
வைத்தது...
“புடிக்காத மாதிரி
பேசுன?... அப்பப்பா..... நீ சொன்ன மாதிரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம் போல”
சிரித்தான் விக்கி.... வெட்கத்தின் மிகுதியால் நானும் சிரித்தேன்...
“கனடா
பிடிச்சிருக்கா?... இல்லை நம்ம ஊர்தான் பிடிக்குதா?” என் தலைமுடிக்குள் விரல்களை
ஊடுருவ செய்தவாறே கேட்டான்...
“ஹ்ம்ம்.... அது
சொல்ல தெரியல... ரெண்டுமே ரொம்ப பிடிச்சிருக்கு... இங்க இருக்கிறது அங்க இல்ல,
அங்க கிடைச்சது இங்க இல்ல”
“என்னடா சொல்ற?...
கமல் படம் எதுவும் பார்த்தியா என்ன?”
“கொழுப்பா உனக்கு?...
இங்க இருக்குற நமக்கான சுதந்திரம் நம்ம ஊர்ல இல்ல... அங்க கிடச்ச நம்ம சாப்பாடு,
கலாச்சாரம் இங்க கிடைக்கல... அவ்ளோதான்”
“ஓஹோ சரி சரி....
எனக்கு இங்கதான் பிடிச்சிருக்கு... ஏன்னு சொல்லு?”
“அதையும் நீயே
சொல்லிடு”
“இங்கதான் க்ளைமேட்
எப்பவும் ஜில்லுன்னு இருக்கு.... எப்பவும் ‘அந்த’ மூட்லையே இருக்குற மாதிரி இருக்கு”
“எரும எரும....
எப்பவும் அதுதான் நெனப்பா உனக்கு?” செல்லமாக கோபித்துக்கொண்டேன்.... அவனோ அந்த
கோபத்தில் உண்டான சிறிய கைகலப்பில் அடுத்த உறவுக்கான “ட்ரைலர்” காட்சியை
அரங்கேற்றினான்....
மறுநாள் விக்கியின்
ட்ரீட்’க்கு இருவரும் சென்றோம்... வெள்ளை,
கருப்பு, மஞ்சள், ரோஸ் என்று பலவண்ண மனிதர்கள் வந்திருந்தனர்... பேசுவது ஆங்கிலமா,
பிரெஞ்ச்சா? என்று புரியாத அளவில் “வாயில் கூழாங்கல்” போட்டவாறு பலரும்
பேசிக்கொண்டிருந்தார்கள்... சாப்பிட
செல்லும் முன்பு ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி சென்ற விக்கி, நிமிடங்கள் சில
தாண்டியும் வரவில்லை என்பதால், மெல்ல நகர்ந்து ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றேன்....
வழியை கண்டுபிடிப்பதில் கொஞ்சம் சிரமப்பட்டு, அந்த அறையை கண்டுபிடித்தேன்... அந்த
அறையின் கதவை திறந்த எனக்கு நியாயமாக அதிர்ச்சியும் கோபமும்தான் வந்திருக்க
வேண்டும்... ஆனால், அப்படி எதுவும் எனக்கு வராததுதான் எனக்கே ஆச்சரியம்... அந்த
அறையில் நடந்தது இதுதான்... “அந்த அறையின் கதவை நான் திறந்தபோது, உள்ளே நின்ற
விக்கியும் ஒரு அமெரிக்கனும் என்னை கவனிக்கவில்லை... அந்த அமெரிக்கனின் கைகள்
விக்கியின் வயிற்றில் படர்ந்து அலைபாய்ந்தது... மெல்ல அது நகர்ந்து விக்கியின்
அடிவயிற்றை தொடும் வரையில் விக்கியின் கண்கள் மூடியும், உடல் நடுக்கத்துடனும்
காணப்பட்டது.... விக்கியின் அந்தரங்க எல்லையை அவன் கைகள் தொட்டபோது, தன்னிலை
மீட்டவனாக அமெரிக்கனின் கைகளை உதறிவிட்டு கதவை நோக்கி திரும்பினான் விக்கி ...
அப்போதுதான் நான் அங்கு நின்றதை கவனித்தான் ...”
என்னை பார்த்ததும்
அவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் மிரண்டன... உடலில் இன்னும் நடுக்கமும், முகத்தில்
ஒரு கலவரமும் அவனிடம் காணப்பட்டது,,,, அதை எதையுமே நான் கவனிக்காததைபோல, அவன்
அருகே நகர்ந்து “என்னடா இவ்ளோ நேரம்?... உனக்காக எல்லாரும் அங்க வெயிட் பண்றாங்க,
வா போகலாம்” அவன் கைகளை பிடித்து டைனிங் இடம் நோக்கி அழைத்து சென்றேன்... அவன்
கைகள் வியர்த்திருந்ததை என்னால் உணரமுடிந்தது... ஏதோ என்னிடம் சொல்ல முயன்றான்,
எதுவும் பேசிட அது களம் இல்லை என்பதால் அதை கண்டுகொள்ளாதவாறே, எல்லோரும்
அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றோம்...
அவன் சரியாக
சாப்பிடவில்லை, மற்றவர்களிடத்தில் பேசும்போதும் பழைய இணக்கம் காட்டவில்லை...
அவ்வப்போது என் முகத்தை திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான்... எனக்கு ஏன் கோபம்
வரவில்லை?... நியாயமாக பார்த்தால், அந்த ரெஸ்ட் ரூமில் விக்கியையும்,
அமெரிக்கனையும் துவைத்து எடுத்துவிட்டு, வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும்,
மிகப்பெரிய கலவரத்தை நிகழ்த்தி இருக்க வேண்டும்... அவனிடம் நான் இப்போது அப்படி
நடந்துகொள்ள காரணங்களும் உண்டு...
முதலில், நான் அவனை
நம்புறேன்... ஏதோ ஒரு இச்சையில் அமெரிக்கன் செய்த செயலுக்கு அமைதியாய்
ஒத்துழைத்தாலும், அடுத்த நொடியே என்னை அவன் புரிந்துகொண்டு அதைவிட்டு
விலகிவிட்டான்.... அற்ப சுகத்துக்கும், காதலுக்கும் அவனுக்கு வித்தியாசம் நிச்சயம்
தெளிவாக புரிந்ததின் வெளிப்பாடுதான் இது....
அடுத்த காரணம், தான்
செய்த தவறை அவன் உணர்ந்துவிட்டான்... தவறே செய்யவில்லை என்றாலும் கூட, தவறு
செய்யும் எண்ணம் வந்ததே தவறாக அவன் புரிந்துகொன்டதன் விளைவாக மிகுந்த குற்ற
உணர்ச்சியில் சிக்கி தவிக்கிறான்... இதை அவன் உடல் மொழியிலும், முக மாற்றத்திலும்
நான் நன்றாக உணர்ந்துகொண்டேன்....
ட்ரீட் முடிந்து
வீட்டிற்கு செல்லும்வரை, அவன் ரொம்பவே அமைதியாக இருந்தான்.... படுக்கும் முன்பு
என்னை அழைத்த அவன், தடுமாற்றத்தில் “வருண்.... அது... அதுவந்து...” என்று
இழுத்தான்....
“என்னாச்சு
உனக்கு?... ஏன் ஒரு மாதிரி இருக்க?” ஒன்றும் புரியாதவனைப்போல கேட்டேன்....
“உனக்கு என்னாச்சு?”
மீண்டும் அதே கேள்வியை என்னிடம்
கேட்டான்....
“எனக்கு ஒன்னும்
ஆகலையே... நான் நார்மலாத்தான் இருக்கேன், நீதான் ஒரு மாதிரி இருக்க”
“அதான் ப்ராப்லமே....
நீ ஏன் நார்மலா இருக்க?... பாத்ரூம்ல நடந்தது பார்த்தும் நீ எப்டி நார்மலா
இருக்க?” தலையை குனிந்தபடி கேட்டான்...
“அங்க நீ எதுவும்
தப்பு பண்ணியா என்ன?”
“ஐயோ... தப்பல்லாம்
ஒன்னும் பண்ணல.... ஆனா....” இழுத்தான்...
“நீ தப்பு பண்ணாதப்ப
நான் எதுக்கு அப்நார்மலா ஆகணும்?... நீ என்னைய இன்னும் பழைய வருணாவே பாக்குற
போல.... ஆனால் நீ இப்போ பழைய விக்கி இல்லன்னு நான் புரிஞ்சுகிட்டேன்... நிச்சயம்
நீ தப்பு செய்ய மாட்டன்னு எனக்கு தெரியும்.... அதனால நீ கூலா இரு” என் அருகில்
வந்து கட்டிப்பிடித்தான் விக்கி, அவன் கண்களில் முதல்முறையாக கண்ணீர் ததும்பி
நின்றதை அப்போதுதான் நான் பார்க்கிறேன்....
“ஐ லவ் யூடா....
சாரிடா.... ஐ லவ் யூ....” ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டான் விக்கி....
“போதும் போதும்...
பொதுவா நான்தான் எமோஷனல் ஆகுவேன், இன்னைக்கு நீ ஆகிட்ட... அதுக்காக இதை
அட்வான்ட்டேஜா எடுத்துகிட்டு எதாச்சும் வாலாட்டின......”
கண்களை
துடைத்துக்கொண்டு சிரித்த விக்கி, “ச்ச ச்ச... நிச்சயம் மாட்டேன்.... ‘கனி இருப்ப
காய் கவர்ந்தற்று’....” என்றான்....
“அடடா....
திருக்குறள்லாம் சொல்ற.... சூப்பர்டா” இருவரும் சிரித்து, எங்கள் இணைப்பையும்
பிணைப்பையும் பற்றி சிலாகித்துக்கொண்டோம்..... இந்த நிகழ்வால் விக்கி என்னை
புரிந்துகொண்டதைவிட, நானே என்னை அதிகமாக புரிந்துகொண்டேன்.... எனக்கே என்னை சுய
பரிசீலனை செய்துகொள்ள என் முருகன் அமைத்துக்கொடுத்த வாய்ப்பாகத்தான் இந்த நிகழ்வை
நான் பார்க்கிறேன்....
மறுநாள் காலை
எப்போதையும்விட விக்கி என் மீது இன்னும் அதிகமான காதலை பொழிவதை என்னால்
உணரமுடிகிறது.... காதலில் மட்டும் எவ்வளவு கொடுக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு நாம்
திரும்ப பெறுவோம் என்பதை என்னால் உணரமுடிகிறது.... ஆனால், இது வெகுநாட்கள்
நீடிக்கவில்லை..... அடுத்த ஒருவாரத்தில் ஒரு மிகப்பெரிய புயல் எங்களிருவருக்கு
இடையில் வருமென்று நான் அதற்கு முன்புவரை நினைத்துக்கூட பார்க்கவில்லை... அந்த
புயல், விக்கியின் புது ப்ராஜக்ட் வடிவத்தில் வந்தது....
“ரொம்ப முக்கியமான
ப்ராஜக்ட் இது... இது சக்சஸ் ஆகலைனா என்னால கனடா’ல தொடர்ந்து வேலை பார்க்கிறது
கஷ்டம்... ஒரு வாரம்தான் டைம், என்ன பண்ண போறேன்னு தெரியல” இப்படி வந்து அவன்
என்னிடம் சொன்னபோது ஆறுதல் கூறி அவனுக்கு தெம்பூட்டியபோது கூட, அது பின்விளைவுகளை
பலமாக தரக்கூடிய ப்ராஜக்ட் என்பதை நான் அறியவில்லை...
அடுத்தநாள் மாலை
வீட்டில் அவனுக்காக வெகுநேரம்
காத்திருந்தேன்.... வழக்கமாக ஐந்து மணிக்கு வந்துவிடும் விக்கி, இன்று ஒன்பது
ஆகியும் வரவில்லை.... ஆறு முறை அவன் அலைபேசிக்கு அழைத்தும், அதில் பதில் இல்லை...
புது இடம், புது வேலை, புது நபர்கள் கொஞ்சம் பயத்தை என்னுள் ஏற்படுத்தியது....
ஒன்பதரை மணிக்கு வீட்டிற்கு வந்தவன், வழக்கமாக என்னிடத்தில் காட்டும் மென்முறுவலை
கூட அன்று மறந்துவிட்டான்...
முகம் நிறைந்த
அசதியும், உடல் முழுக்க சோர்வும் என்று நான் எப்போதும் காணாத விக்கியாக இருந்தான்...
“என்னாச்சு விக்கி?... ஏன் இவ்ளோ நேரம்?... லேட் ஆகும்னா ஒரு கால் பண்ணி
சொல்லிருக்கலாம்ல?” சாதாரணமாகத்தான் கேட்டேன்....
“ஐயோ கொஞ்சம் ப்ரீயா
விடு வருண்.... தலை வலி தாங்க முடியல” சோபாவில் சாய்ந்தவாறு, என் முகத்தை கூட
பார்க்காமல் பதில் கூறினான்...
“நான் வேணும்னா காபி
போட்டு தரவா?” அவன் அருகில் சென்று அமர்ந்தேன்...
“ஒன்னும் வேணாம்...
என்னை கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க விடு” சட்டென எழுந்துசென்று படுக்கையில் படுத்துவிட்டான் ....
எனக்கு கோபம்
வந்தாலும், அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைதி காத்தேன்.... அவனுக்கு மிகவும்
சவாலான இந்த சில நாட்களில் என்னை எவ்வித பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதில்
நான் தீர்மானமாக இருந்தேன்... அதனால், கோபமாக என் முகமாற்றத்தை கூட அவன் முன்னால்
நான் காட்டவில்லை... அதற்கு மேலும் அன்றைய இரவில் அவனை நான் எதுவும் ‘தொந்தரவு’
செய்யவில்லை... “விடிந்தால் சரி ஆகிடும்” என்ற நம்பிக்கையில் அன்றைய உறக்கத்தை
நோக்கி என்னை செலுத்தினேன்...
ஆனால், அந்த விடியல்
நான் எதிர்பார்த்தபடி அமையவில்லை.... வழக்கமாக நான் எழுந்து வெகுநேரம் கழித்துதான்
அவன் எழுவான்.... எழுந்ததும் முகம் கூட கழுவாமல் எனக்கு முத்தம் கொடுப்பதால்
உண்டாகும் செல்ல சண்டையில்தான் எங்கள் நாள் எப்போதும் தொடங்கும்... ஆனால் அன்றைய
காலையில் என்னை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... அவசர அவசரமாக லேப்டாப் பையை
தூக்கி அவன் தோளில் மாட்டியபோதுதான் என்னை கவனித்தான்... ஆனால், அவன் ஏன்தான் கவனித்தான்? என்று நான்
எரிச்சலாகும் வகையில் எந்தவொரு முகமாற்றத்தையும் அவன் காண்பிக்கவில்லை....
பேசியே கொல்வது ஒரு
வகை சண்டை என்றால், பேசாமல் கொல்வது இன்னொரு வகை... முதலாம் வகைக்கு தீர்வு என்பது
எளிது, ஆனால் இரண்டாம் வகைக்கு தீர்வுக்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு... பிரச்சினை
என்னவென்றே தெரியாமல், அதற்கு தீர்வு தேடுவது போலத்தான் இதுவும்...
மருத்துவமனை
சென்றபோது, என்னை பார்த்த மாத்திரத்தில் குகன் என் மனக்கவலையை கண்டுகொண்டான்...
“சந்தோசம், கவலை, கோபம், ஏக்கம்” என்று எந்த உணர்வானாலும், அதை படம் பிடித்து
காட்டிவிடும் அளவிற்கு முகமாற்றம் என்னை அறியாமல் என் முகத்தில்
குடிகொண்டுவிடும்... அதானால், அன்றைய
கவலையை குகன் கண்டுகொண்டது ஆச்சரியப்படக்கூடிய விஷயமில்லை...
“என்ன வருண் உங்கட
முகம் இண்டைக்கு கவலை தோய்ந்து இருக்கிறதே?”
“ஒண்ணுமில்ல குகன்,
ஒரு சின்ன ப்ராப்ளம் தான்”
“குடும்பம் எண்டால்
பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்... பேசித்தீர்த்துக்கொங்க வருண்...”
பேசினால்தான் பிரச்சினையே
இல்லையே!... அவன் பேசாததுதான் என் கவலைக்கு காரணம் என்பதை குகனிடம் எப்படி
புரியவைப்பது?... இருந்தாலும், மூன்றாம் நபரிடம் விக்கியை பற்றி குறைசொல்ல எனக்கு
மனமில்லை.... அதனால், என் கவலையை முடிந்தவரை எனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அன்றைய
பொழுதை கழித்தேன்.... அன்று மாலை எனக்கு வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை... சாலை
ஓரத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து, வாகனங்களை கவனித்துக்கொண்டிருந்தேன்....
எட்டு மணி ஆனபோதிலும் விக்கியிடமிருந்து அழைப்பு எதுவும் வரவே இல்லை.... இதற்கு
மேலும் வராது என்று எனக்கு புரிந்தது.... குளிரின் மிகுதியால் வீட்டை நோக்கி
சென்றேன்....
இருக்கையில்
அமர்ந்ந்தவாறு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி.... வாயை
பிளந்துகொண்டு அருகில் லேப்டாப் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது, இரண்டொரு
புத்தகங்கள் தன்னை புரட்டியதின் அசதியில் இளைப்பாறிக்கொண்டு இருக்கிறது...
விக்கியின் கண்கள் பயம், அசதி, பரபரப்பு என்று ஒரு காக்டெயில் கலவையாய் உணர்வுகளை
வெளிக்காட்டிக்கொண்டு இருந்தது.... அவனோடு பேசலாமா? என்கிற தயக்கத்தை மனதிற்குள்
வைத்துக்கொண்டே அவனை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தேன்... அவன் அருகில்
சென்றபோதுதான் அங்கு நான் நின்றதை கவனித்தான்... இப்போது லேசான சிரிப்பு, ஆனால்
அதில் எப்போதும் போல உயிர் இல்லை... இவ்வளவு தாமதமாக வந்ததற்கான காரணம் கூட
என்னிடத்தில் கேட்கவில்லை, ஒருவேளை
இப்போது நான் வந்ததுதான் அவனுக்கு பிரச்சினையோ?... அதற்கு மேலும் அன்குநின்று
என்னை நானே வருத்திக்கொள்ள விரும்பாமல் அறைக்குள் சென்று முகம் கழுவி வெளியே
வந்தேன்... தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, லேப்டாப் புத்தகங்கள் சகிதம் போட்டது
போட்டபடியே கிடக்க, களைப்பின் மிகுதியால்
ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறான் விக்கி...
அவன் மீது
கோபப்படுவதா? பரிதாபப்படுவதா? என்பது கூட எனக்கு புரியவில்லை... ஆனாலும்
எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு, அந்த சோபாவில் அவனை சாய்த்து
படுக்கவைத்துவிட்டு, போர்வையால் போர்த்திவிட்டு அறைக்குள் வந்து நானும்
படுத்தேன்...
நான்கைந்து நாட்களும்
இதே நிலைதான் தொடர்கிறது.... எள்ளளவும் முன்னேற்றமில்லை... அவன் மீது நானோ, என் மீது
அவனோ சிறு கோபமான வார்த்தைகளை கூட உதிர்க்கவில்லை... ஆனால் எங்களுக்குள் உண்டான
அந்த விரிசலின் அளவு மிகப்பெரியதாக ஆகிவிட்டதை மட்டும் என்னால் உணரமுடிகிறது....
இந்த ஒருவாரமும் நரக
வேதனை என்பது எப்படி இருக்கும்? என்பதை நான் உணர்ந்துவிட்டேன்.... முக்கியமான ப்ராஜக்ட்
தான், நேரம் இல்லை என்பதும் உண்மைதான்... ஆனால், நேரமில்லாததால் அவன் இந்த
ஒருவாரமும் சாப்பிடவில்லையா? தூங்கவில்லையா? குளிக்கவில்லையா?... அவ்வளவு ஏன்,
அவ்வப்போது இளைப்பாற தொலைக்காட்சி பார்க்கிறான், சென்னை நண்பர்களிடத்தில் ஓரிரு
முறை தொலைபேசியில் பேசினான்... இதற்கெல்லாம் நேரம் எங்கிருந்து வந்தது?
வானத்திலிருந்தா குதித்தது???.... என்னிடம் மட்டும் ஏன் சம்பிரதாயப்பேச்சுகள்
பேசக்கூட இத்தனை மறுப்பு?...
இந்த ப்ராஜக்ட்
முடிந்ததும் அவனிடம் இதற்கான பதிலை நான் கேட்டே தீரனும்... மனதிற்குள் ஆற்றாமையால்
நான் புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது... கதவை திறந்து
பார்க்க, அங்கே ஒருவார பிரச்சினைகளின் சலனமே இல்லாமல் சிரித்த முகத்துடன் விக்கி
நிற்கிறான்...
ஒருவார
இறுக்கத்திற்கு பிறகு, அவன் சிரிப்பில் இன்றுதான் பழைய பொலிவை காண்கிறேன்....
திறந்த கதவை நான் சாத்துவதற்கு முன்பு, என்னை பாய்ந்து வந்து கட்டிப்பிடித்து
“சக்சஸ் டா.... ப்ராஜக்ட் செமையா வந்தாச்சு..... எல்லாரும் ரொம்பவே அப்ரிசியெட்
பண்ணாங்க....” பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உற்சாகம் துள்ளிக்குதித்தது....
அவன் பிடிப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, “ஓ அப்டியா?.... நல்லது”
சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல், அறையை நோக்கி நடந்தேன்....
“ஏய் என்னாச்சு
உனக்கு?... நான் எவ்ளோ சந்தோஷமா சொல்லிட்டு இருக்கேன், நீ கொஞ்சம் கூட ரியாக்சனே
இல்லாம போற?”
“வேற என்ன பண்ண
சொல்ற?.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” சொல்லிவிட்டு என் லேப்டாப்பை ஆன்
செய்தேன்.... ஆன் செய்த எனக்கு, அதற்கு மேல் அதில் என்ன செய்வது? என்று
தெரியவில்லை.... நல்லவேளையாக என்றைக்கோ பதிவேற்றம் செய்து வைத்திருந்த “hematology
secrets” புத்தகத்தின் கோப்பு என் கண்ணில் பட்டது.... அதை திறந்து,
பல முறை படித்த விஷயங்களை இப்போதும் வேறு வழியின்றி படிப்பதை போல “பாவ்லா”
செய்தேன்....
“என்ன ப்ராப்ளம்
உனக்கு?... நான் இவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன், நீ இவ்ளோ இன்சல்ட் பண்ற!”
அவன் வார்த்தைகளில் மெல்லிய சூட்டை உணர்ந்தேன்...
“ஏன் கோபப்படுற?...
உனக்கு மட்டும்தான் தலைக்கு மேல வேலை இருக்கணுமா?... நீ மட்டும்தான் அடுத்தவங்களோட
பேசக்கூட நேரமில்லாம வேலை பார்ப்பியா?” ஒரு வாரத்து கோபத்தை, இயல்பாக பேசுவது போல
சொன்னேன்...
“என்னடா லூசு மாதிரி
பேசுற?... அந்த ப்ராஜக்ட் நம்ம வாழ்க்கைக்கு சம்மதப்பட்டது... அது எவ்ளோ
முக்கியம்னு உனக்கு நான் எப்டி புரியவைக்கிறது?”
“அது எவ்ளோ முக்கியமா
வேணாலும் இருக்கட்டும், அந்த ஒருவாரமும் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?..
ஒருதடவை உன்ன இன்சல்ட் பண்ணதுக்கே நீ கோபப்படுறியே, ஒவ்வொரு தடவையும் நீ என்ன
புடிக்காத மாதிரி ஒதுங்குனப்போ நான் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்னு உனக்கு
புரியலையா?”
அவன் முகத்தில்
உண்டான சோக ரேகையால் என் மனம் கனம் குறைந்தது....
“ஐயோ சாரிடா.... நான்
அதை புரிஞ்சுக்கவே இல்ல... தப்புதான் நான் பண்ணது.... என்னோட கோபம், சந்தோசம்,
வருத்தம் எல்லாத்தையும் உன்கிட்டதாண்டா நான் காட்டமுடியும்... என்னை இந்த உலகத்துல
அதிகம் புரிஞ்சுகிட்டவன் நீ மட்டும்தானே?... அந்த உரிமைல ஏதோ என்னை அறியாமல் தப்பு
பண்ணிட்டேன்.... சாரிடா” எனக்கு மிக அருகில் அவன் வந்து நிற்பதை இப்போதுதான் நான்
உணர்கிறேன்.... அழுதிடக்கூடாது என்று நான் என்னை எவ்வளவோ கட்டுப்படுத்திக்கொண்டு
நின்றாலும், என்னையும் அறியாமல் சில கண்ணீர் துளிகள் கீழே விழுந்தது.... அவன் அதை
காணும் முன்பு, கண்களை அவன் அறியாமல் துடைத்துக்கொண்டேன்....
“ப்ளீஸ்
புரிஞ்சுக்கோடா” என்னை கட்டி அணைத்தான்.... ஒருவாரத்தின் மன சுமைகள் அனைத்தும்,
அந்த நொடியில் காற்றோடு கரைந்து போனதை போல உணர்கிறேன்....
என் விக்கியை
மன்னிக்காமல் நான் யாரை மன்னிக்க போறேன்?... என் கைகளையும் அவன் முதுகோடு நான்
அணைக்க, அந்த அணைப்பு இன்னும் அழுத்தமானது... சில நிமிடங்கள் தொடர்ந்த அந்த
அணைப்பை, பின்புதான் உணர்ந்தேன்...
“சரி விடு.... போய்
முதல்ல குளி.... வெளில போயிட்டு வரலாம்” என் சமாதானத்தை மறைமுகமாக அவனிடத்தில்
தெரிவித்தேன்... மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன், என்னைவிட்டு விலகி சில அடி
தூரங்கள் நடந்தான்.... மீண்டும் வேகமாக வந்து என் இதழ்களில் அழுத்தமான முத்தத்தை
பதிந்துவிட்டு, என் திட்டிற்கு பயந்து குளியலறை நோக்கி ஓடி சென்றுவிட்டான்....
எனக்குள்
சிரித்தவாறு, மனதிற்குள் மகிழ்ந்தேன்....
நாளுக்கு நாள் எங்கள்
இருவருக்குமான புரிதல் அதிகமாகிக்கொண்டே இருந்தாலும், எங்கள் இருவருக்குள்ளும்
சண்டைகள் சிறிதும் குறைந்ததாக தெரியவில்லை.... நானும் தலைகீழாய் நின்று யோசித்தாலும்,
அதற்கான காரணங்கள் மட்டும் எனக்கு புரியவில்லை... இருவருமே நிறைய
விட்டுக்கொடுக்கிறோம், புரிதலோடு பழகுகிறோம், ஒருவர் மீது மற்றொருவர் அளவு கடந்த
காதல் கொண்டுள்ளோம்... ஆனாலும், காரணமே இல்லாமல் உருவாகும் அந்த பிரச்சினைகள் ஏன்
வருது?ன்னு புரியல...
இரண்டு வருடங்கள்
அப்படி புரியாமல் ஓடிய எங்கள் வாழ்க்கையில், அதற்கான காரணம் எனக்கு ஒருநாள்
புரியவந்தது....
இருவரும் ஒருநாள்
அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றோம்.... பனிப்பொழிவு, சூழலை ரம்மியமாக்கிக்கொண்டு இருந்தது.... பச்சை இழைகளின் மேல்
விழுந்திருந்த வெள்ளை பனித்துளிகள் துளித்துளியாக தரையில் விழுந்துகொண்டு
இருந்தது... என் மூச்சுக்காற்று புகையாக வெளியானது.... இழைகளில் படர்ந்திருந்த
பனித்துளிகளை ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடிக்கொண்டிருந்தனர் சில
குழந்தைகள்...
வழக்கமாக நம் ஊரில்
பார்க் பெஞ்ச்சில் எழுதப்பட்டிருக்கும் காதல் புராணங்கள் இங்கு மிஸ்ஸிங்...
சுத்தமாகவும், அழகாகவும் இருந்த அந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தோம்... குளிரால்
என் உதடுகள் நடுங்க தொடங்கின, அவன் அருகில் நெருங்கி அமர்ந்து, கைகளை கையேடு
கோர்த்து, அவன் தோள் மீது சாய்ந்து அமர்ந்தேன்...
என் மருத்துவமனை
நிகழ்வு முதல், பேருந்தில் போகும்போது நான் கண்ட சல்லாப காட்சிகள் வரை என்னென்னமோ
அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.... ஐந்து நிமிட என் தொடர் பேச்சில்,
ஆரம்பத்தில் அவன் சொன்ன “ஹ்ம்ம்” கூட சிறிது நேரத்தில் இல்லாமல் போய்விட்டது...
நான் மட்டுமே வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பதை போல எனக்கு தோன்றவே, கைகளை விலக்கி
அவன் முகத்தை பார்த்தேன்....
அவன் பார்வை வேறு
எங்கோ இருந்தது... கோபத்தில் நான், “ஏய், நான் சொல்றத கவனிக்கிறியா? இல்லையா?”
என்றேன்....
“.......”
அவன் தோளை பிடித்து
உலுக்கி, “டேய் பாவி, நான் சொல்றது கேட்குதா இல்லையா?” என்றேன்... அப்போதுதான்
தன்னிலை மீண்டவனாக, “என்னடா?... என்னாச்சு?” என்கிறான்...
“பார்க் வந்தோம், நீ
இந்த பெஞ்ச்’ல சாய்ஞ்ஜ, இந்த இடத்துல அடி பட்டிருக்கும்... அங்கதான் மெடுல்லா
அப்லங்கேட்டா இருக்கும்.... டெம்பரவரி மெமரி லாஸ் ஆகிருக்கும், அது தானா சரி
ஆகிடும்....”
“ஏய், என்ன
கிண்டலா?.... அப்டிலாம் இல்ல... அங்க குழந்தைங்க விளையாடுது பாரு, அதை
பார்த்துட்டு இருந்ததுல நீ சொன்னதையே கவனிக்கல” என்று அவன் கை நீட்டிய இடத்தில்
நான்கைந்து குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் பனி கட்டிகளை தூக்கி வீசி
விளையாடிக்கொண்டு இருந்தனர்...
“குழந்தைங்க’ன்னா
உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
“ஏன் உனக்கு
பிடிக்காதா?”
“பிடிக்கும்....
ஆனால், என்னையே மறந்து நான் நிக்குற அளவுக்கு இல்ல”
“நான் அப்டிதான்...
நான் அதனாலதானே எப்போ மூட் அவுட்’ல இருந்தாலும் ‘அழகு குட்டி செல்லம’ பாட்டு
பார்ப்பேன்... நீ கவனிச்ச்சதில்லையா?”
“கவனிச்சிருக்கேன்....
ஆனா, வேற மாதிரி நினைச்சிருக்கேன்”
“என்னனு?”
“நீ ப்ரித்விராஜ்’ஐ
சைட் அடிக்கிரியோன்னு நினச்சு கோபப்படுவேன்”
“அடப்பாவி....
ப்ரித்விராஜை விட அந்த பாட்டுல வர்ற ஒவ்வொரு குழந்தையும் அவ்வளவு அழகா
இருக்கும்டா” என்று சொல்லிவிட்டு அந்த குழந்தைகளை நோக்கி நடந்தான்.... அவைகளோடு
சேர்ந்து அவனும் விளையாட தொடங்கினான்.... பொது இடத்தில் சத்தமாக பேசக்கூட டீசன்ஸி
பாக்குறவன், குழந்தை மாதிரி விளையாடியதை கண்டபோது நானும் மகிழ்ச்சியானேன்.... விக்கி
இவ்வளவு சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததே இல்ல... அதை சந்தோசம் என்ற
வார்த்தைக்குள் அளவிட முடியாத அளவிற்கு ஒருவித உணர்வில் அவன் திளைத்து
இருக்கிறான்....
எப்படி இவ்வளவு
நாளும் இந்த விஷயத்தை நான் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேன்?... எந்த
குழந்தையை பார்த்தாலும், அதை கையில் வாங்கி முத்தம் கொடுப்பதை
பார்த்திருக்கிறேன்... அது பொதுவா பலருக்கும் இருக்குற இயல்புதான்னு
நினைச்சிருக்கேன்.... ஆனால், தன்னையே மறக்குற அளவுக்கு அவன் குழந்தைகள் மீது
ஈடுபாட்டோடு இருக்கிறான் என்பதை இப்போதான் நான் புரிந்திருக்கிறேன்....
அடுத்த வாரத்தில்
வரவிருக்கும் அவன் பிறந்தநாளுக்கு நான் கொடுக்க வேண்டிய பரிசை இப்போ
தீர்மானிச்சுட்டேன்....
அவன் பிறந்தநாள்
அன்று பன்னிரண்டு மணிக்கு, அவனை எழுப்பிய நான் அவனிடம் ஒரு கோப்பை நீட்டினேன்....
“என்னடா இது?”
என்றான்...
“பர்த்டே கிப்ட்...”
“என்னது?”
“பிரிச்சு பாரு”
அது குழந்தையை
தத்தெடுப்பதற்கான பார்மாலிட்டிஸ் அடங்கிய கோப்பு... ஒவ்வொரு வரியாக அவன் அந்த
கோப்புகளை படிக்கும்போது அவன் முகமாற்றத்தை அணு அணுவாக நான் ரசித்தேன்... முதலில்
எதிர்பார்ப்பில் உயர்ந்த அவன் புருவங்கள், அதனை தொடர்ந்து ஆச்சரியத்தில் விரிந்த
அவன் கண்கள், மகிழ்ச்சியில் மெல்ல மெலிதாக அரும்பிய அவன் புன்னகை, இறுதியாக அதை
படித்து முடிக்கும்போது அவன் கண்களில் மெல்ல அரும்பிய கண்ணீர் துளி...
அப்பப்பா!!!!.... நவரசத்தையும் கலந்த ஒரு அறுசுவை விருந்தை சுவைத்த பெருமிதத்தில்
நான் அவற்றை எல்லாம் கண்டு ரசித்தேன்...
தாவி எழுந்து என்னை
கட்டிப்பிடித்து, என் கன்னம் சிவக்கும் அளவிற்கு முத்தங்களால் நிறைத்தான்....
ரொம்ப உணர்ச்சி மிகுதியில் காணப்பட்ட அவனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, அருகில்
அமரவைத்தேன்....
“எப்போடா பண்ணின
இதல்லாம்?”
“அன்னிக்கு பார்க்
போனோம்ல, அப்போதான் தோனுச்சு”
“இது எனக்கு தோணவே
இல்லையேடா... நான் இன்னும் நம்ம ஊர்ல இருக்குற நினப்புலையே இருந்திட்டேன்....
இன்னும் நமக்கு கே மேரேஜ் அபீசியலா நடக்கலையே?.. அப்புறம் எப்டி?”
“அது ஒன்னும்
ப்ராப்ளம் இல்ல.... இங்க தனியாள் கூட குழந்தைகள அடாப்ட் பண்ணிக்கலாம்... இப்போ
போய் குழந்தைய செலக்ட் பண்ணிக்கலாம், அந்த குழந்தை தலைமைல நாம கல்யாணம்
பண்ணிக்கலாம்.. நாளைக்கு ஒரு ப்ரைவேட் ஏஜன்சி’ல குழந்தைகள பார்க்க போறோம்..... ஓகே
தானே?...” என்று நான் சொல்லி முடிக்கும்போது, என் கைகளை இறுக்கி பிடித்தான்
அவன்...
“ஐயோ... என்னால
சந்தோஷத்த தாங்க முடியலடா.... விடியுற வரைக்கும் எனக்கு நிச்சயம் தூக்கம் வராது...
நாளைக்கு போய் குழந்தைகள பார்க்குற வரைக்கும், எனக்கு கையும் ஓடாது, காலும்
ஓடாது.... சரி, என்ன குழந்தை அடாப்ட் பண்ணலாம்?, எப்போ குழந்தை வீட்டுக்கு வரும்?,
நான் வேணும்னா ஜாப் விட்றவா?” அவன் என்னென்னமோ யோசிக்க தொடங்கிவிட்டான்....
“டேய் பொறுமையா இரு
முதல்ல.... நாளைக்கு போய் குழந்தை பார்க்குற வரைக்கும் உன்னோட கற்பனைகள கொஞ்சம்
அளவோட வச்சுக்க” அவனை பிடித்து வலுக்கட்டாயமாக படுக்கையில் படுக்க வைத்தேன்....
“வாய மூடிட்டு பேசாம
தூங்கு, காலைல பாத்துக்கலாம்” சொல்லிவிட்டு அவன் மீது போர்வையை எடுத்து
போர்த்தினேன்.... அவன் நான் பேசுவதை கவனித்ததாக தெரியவில்லை.. வழக்கமான குழந்தை
சிந்தனைக்கு ஓடிவிட்டான்... ஓடி சென்று லேப்டாப்பை எடுத்து, குழந்தைக்கு பெயர்
வைக்க பல வலைதலங்களையும் தேடத்தொடங்கிவிட்டான்.... அவனை பார்த்துக்கொண்டு
இருந்தால், அடுத்தநாள் என் பிழைப்பு ஓடாது என்று கருதி நான் தூங்க தொடங்கினேன்....
என் மொபைல் அலாரம்
அடிக்கும் முன்பே என்னை விக்கி எழுப்புகிறான்...
“டேய் எழுந்திரு...
லேட் ஆச்சு... வா போகலாம்” என்றான்...
வழக்கமாக அடிக்கும்
அலாரம் அடிக்கவில்லை போலும் என்று நினைத்து அலைபேசியின் திரையை பார்த்த எனக்கு
விக்கி மீது கோபம்தான் வந்தது... நேரம் இப்போது அதிகாலை ஐந்து மணி.... வெளியில் கும்மிருட்டு, பனிப்பொழிவால்
தெருக்களில் திருடர்கள் கூட நடமாடாத சூழலில் என்னை எழுப்புகிறான்... அவனோ குளித்து
முடித்து, சுத்த பத்தமாக கிளம்பி அமர்ந்திருக்கிறான்...
“டேய் பாவி... மணி
இப்போ அஞ்சு.... அந்த ஆபிஸ் திறக்குற நேரமே காலை பத்து மணிதான்.... நாம போயி அங்க
என்ன திருடவா போறோம்?” என்றேன்....
அவன் என்னை விடுவதாக
இல்லை... வலுக்கட்டாயமாக என்னை எழுப்பி கிளம்ப வைக்கிறான்...
ஒருவாறாக குறிப்பிட்ட
ப்ரைவேட் ஏஜென்சியை நாங்கள் அடையும்போது சரியாக மணி பத்து... மதியம் வரை பல
இடங்களுக்கும் சென்று குழந்தைகளை பார்த்து வந்தோம், எங்களுக்கென்று குழந்தை பற்றி
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை... நான்காவது இடத்துக்கு நாங்கள் குழந்தையை காண
சென்ற இடத்தில் எங்களிருவர் கண்களும் அந்த “கருப்பி” மீது பட்டது... அந்த குழந்தை
அவ்வளவாக கருப்பில்லை என்றாலும் கூட, மற்ற “வெளிர் மஞ்சள்” குழந்தைகளுக்கு
மத்தியில் அது கருப்பாகவே தோன்றியது.... அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கலாம்,
ஆணா? பெண்ணா? என்பது இப்போவரை தெரியவில்லை... பெண் குழந்தையாக இருந்தால் இன்னும்
உத்தமம் என்று மனம் எதிர்பார்த்தது...
பார்த்தவுடன் மனதில்
பதிந்த அந்த குழந்தையின் சிரிப்பில் நானே சிறிதுநேரம் என்னை மறந்தேன்... இந்த
குழந்தையைதான் தத்தெடுக்க வேண்டும் என்ற முடிவோடு நான் விக்கியை நோக்க, அவனோ “டேய்
அந்த குழந்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... அதையே அடாப்ட் பண்ணிக்கலாம்” என்று
என் எண்ணங்களை அப்படியே பிரதிபளித்தான்...
“நானும் அதைத்தாண்டா
உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்” என்று அவனிடம் சொல்ல, அருகில் இருந்த நிறுவன
நண்பர், “அது பெண் குழந்தை சார், இலங்கை தமிழ் பொண்ணுக்கு பிரசிவித்த குழந்தை
அது... பார்மாலிட்டிஸ் முடிச்சிடலாமா?” என்றார்....
எனக்கோ அளவில்லா
மகிழ்ச்சி.... நான் அந்த குழந்தையை பற்றிய மேலும் பல விபரங்களை
கேட்டுக்கொண்டிருக்க, எதையும் கண்டுகொள்ளாமல் அந்த குழந்தையை தூக்கி கொஞ்ச தொடங்கிவிட்டான்
விக்கி....
இரண்டு மாதங்கள்
முழுதாக பலகட்ட விசாரிப்புகள், கேள்விகள், உத்திரவாதங்கள், அங்கீகரிப்புகள் என்று
தினந்தோறும் குழந்தை தத்தெடுப்பு தொடர்பாக பலகட்ட பார்மாலிட்டிஸ்’கள்
நடந்தேறின.... அந்த நாட்களிலும் மறக்காமல் குழந்தையை சென்று தினமும் பார்த்து
வருவோம் இருவரும்...
பெண் குழந்தை என்று
முடிவாயிற்று.... சும்மா இருப்பானா விக்கி???.... ஒன்றரை வயது குழந்தைக்கு
நூற்றுக்கணக்கான ஆடைகள், விளையாட்டு பொம்மைகள் என்று வாங்கி குவிக்க
தொடங்கிவிட்டான்.... ஒவ்வொருநாளும் குழந்தை பற்றிய பேச்சுதான் எங்கள் இருவரையும்
அதிகமாக ஆக்கிரமித்தது... இரண்டு பெயர்கள் இறுதிகட்ட பரிசீலனையில் இருந்தது...
நிச்சயம் தமிழ் பெயர்தான் என்பதில் இருவரும் உறுதியாக இருந்ததால் “யாழினி, அமுதா”
என்ற இரண்டு பெயர்களும் இறுதிகட்ட பரிசீலனையில் இருந்தது...
“அமுதா நல்ல
பேர்தானே?.. அதையே வச்சுக்கலாம்டா” என்றான்....
“அது பழைய பேர்
மாதிரி இருக்குடா....”
“யாலினி கூட
அப்டிதானே?”
“அது யாலினி இல்ல,
யாழினி”
“அதனாலதான்
சொல்றேன்.... எனக்கு அந்த பெயரை ஒழுங்கா உச்சரிக்க வராதுடா..”
“அதனால என்ன?...
போகப்போக சரி ஆகிடும்”
“வேணாம்டா... அவ
வளரும்போது ‘உனக்கு என் பேரை கூட சரியா உச்சரிக்க தெரியல’னு கிண்டல் பண்ணுவா”
பாவமாக கூறினான்...
“ஒன்னும் ப்ராப்ளம்
இல்ல.... தினமும் ‘ஏழை கிழவன் வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்தான்’னு சொல்லி
ப்ராக்டிஸ் பண்ணு, கொஞ்ச நாள்ல சரியா வந்திடும்”
இதை சொன்ன நாள்முதலாக
ஒருநாளைக்கு இந்த பயிற்சியை பத்து முறைக்கு மேல் செய்ய தொடங்கினான்.... மனதிற்குள்
சிரித்துக்கொண்டேன்....
எல்லா வழக்கங்களும்
முடிந்து இன்று குழந்தை எங்கள் கைக்கு வரும் நாள், அதுமட்டுமல்ல எங்கள் திருமணம்
கூட இன்றுதான்....
சிட்டி ஹாலுக்கு
அதற்குதான் இப்போ போய்கிட்டு இருக்கோம், எங்க யாழினி குட்டி இந்நேரம் அங்க
வந்திருப்பா.... இப்போ மறுபடியும் பிளாஷ்பேக் முடிந்து இயல்புக்கு வந்திடலாம்...
எங்களிருவர் வாழ்க்கைக்குள்ளும் நுழையப்போகும் மூன்றாம் நபர் அவள்தான்... அவளை
மூன்றாம் நபர் என்று சொல்லக்கூடாது, எங்களிருவருக்குள் ஒருத்தி தான் யாழினி...
எங்கள் வாழ்க்கைக்கான புது அர்த்தத்தை, நாங்கள் வாழ்வதற்கான புது வாழ்க்கையை
அவள்மூலம் பெற்றுள்ளோம்... எங்கள் வாழ்வின் சலனங்களை குறைத்து, இன்பங்களை நிறைக்க
வந்த தேவதை அவள்....
என் பக்கத்தில்
உட்கார்ந்திருக்கும் விக்கி, ,மெல்ல “வாழைப்பழம்” பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான்.....
சிட்டி ஹாலுக்கு முன்பு வண்டி நிற்க, குழந்தையை கையில் வைத்தபடி நின்றார் நிறுவன
நண்பர்.... எங்கள் இருவரையும் பார்த்து உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறாள்...
தினமும் எங்களோடு அவள் விளையாடுவதை அவள் ரொம்பவே ரசிப்பாள்... விக்கியிடம் இன்னும்
அதிக பாசத்தோடு இருப்பாள்... அவனை பார்த்தாலே தூக்க சொல்லி கைகளை உயர்த்துவாள்....
குழந்தை மீது
பாசமும், அன்பும் மட்டும் இருந்தால் போதுமா?.. எப்படி தூக்க வேண்டும்? என்று கூட
அவனுக்கு தெரியவில்லை... அதை அவனுக்கு கற்றுக்கொடுக்கவே இரண்டு நாள் ஆனது... இடது
மார்போடு சேர்த்து பிடித்து, ஒரு கையை குழந்தையின் இடுப்பிலும், இன்னொரு கையை அவள்
முதுகிலும் வைத்தவாறு தூக்க வேண்டும் என்று பாடம் நடத்தினேன்....
இப்போதும் விக்கியை
தூக்க சொல்லி கையை நீட்டவே, அவனும் உற்சாகத்தில் “யாழினி குட்டி, எப்டி இருக்க?”
என்று சொல்லி குழந்தையை தூக்கினான்...
எனக்கு ஆச்சரியம்...
அவன் பெயரை ஒப்புக்கொண்டதால் அல்ல, அதை சரியாக உச்ச்சரித்ததால்.....
“என்ன சொன்ன?”
ஆச்சரியமாக கேட்டேன்....
“புரியலையா?...
யாழினி குட்டி’னு சொன்னேன்.... ஏழை கிழவன், வாழைப்பழ தோல் வழுக்கி கீழே
விழுந்தான்.... போதுமா?” அச்சு பிசறாமல் அப்படியே கூறினான்...
எங்கள் வீட்டு தேவதை
வந்த முதல்நாளே அவனுடைய உச்சரிப்பை மாற்றிவிட்டாள்.... பின்னர் இருவரும்
மோதிரங்கள் மாற்றிக்கொண்டு, திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டோம்... திருமணம்
முடிந்த கையேடு எனக்கு அவன் முத்தம் கொடுக்க, அதைப்பார்த்த யாழினி ஏனோ
அழத்தொடங்கினாள்.... அதை பார்த்த விக்கி, பதறிப்போய் ஓடி யாழினியை தூக்கி கொஞ்ச
தொடங்கினான்....
அழுகை நிறுத்தி
சமாதானமான, அவளுடைய கண்ணீரை துடைத்த கன்னத்தில் முத்தங்களை பரிமாறினான் விக்கி...
யாழினி அழுததும் பதறிய விக்கியை கண்டபோது, குழந்தை யாழினியா? விக்கியா? என்பதை
புரியாமல் ரசித்து சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.... என்னை அறியாமல்
என் கண்களில் மகிழ்ச்சி பெருக்கால் கண்ணீர் திரண்டு வழிந்தோடியது.... (முற்றும்)