Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 11 March 2013

"இப்படித்தான் செயல்படணும் அமைப்பு" - ஒரு அலசல் கட்டுரை...


“கே அமைப்புகள்” பற்றி நான் எழுதிய கட்டுரையை பார்த்து ஒரு நண்பர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்... “விஜய், நீங்க அமைப்புகளை பற்றி சொன்ன விஷயங்களை நிஜமாகவே ஒரு அமைப்பு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.... அதுவும் பதினைந்து வருடங்களாக செயல்படும் அந்த அமைப்பு கும்பகோணத்தில் இருக்கிறது” என்ற அந்த மின்னஞ்சலை பார்த்ததும் எனக்கு நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது... ஒரு அமைப்பு “கம்யூனிஸ்ட்’கள் போல செயல்பட்டால்தான் அது அனைத்து தரப்பையும் சென்றடையும் என்று நான் வலியுறுத்தினேன்.... நான் சொன்ன பல விஷயங்களுக்கும் வாழும் உதாரணமாக ஒரு அமைப்பு இருக்கிறது, அதுவும் எங்கள் டெல்டா பகுதியில் இருக்கிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா என்ன?...
“லோட்டஸ் சங்கம்” என்கிற பெயரிலான அந்த அமைப்பை பற்றியும், அதன் நிறுவனர் முத்துக்குமார் நடேசன் அவர்கள் பற்றியும் அந்த நண்பரே எனக்கு தொடர்புகளை அனுப்பி இருந்தார்....
“gay”, “homosexuals”, “LGBT” இப்படி எந்த வார்த்தைகளையும் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக பயன்படுத்தாமல், அதே நேரத்தில் கே பற்றிய விழிப்புணர்வை கடைநிலை மக்களையும் சென்றடையும் விதமாக செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இத்தகைய பால் ஈர்ப்புக்கு வைத்திருக்கும் பெயர்தான் “பெண் மனம் கொண்ட ஆண்”... இவ்வளவு எளிமையான சொல்லாடலை பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?... இவர்கள் இப்படிப்பட்ட விழிப்புணர்வை கொண்டுசேர்க்கும் இடம்தான் காரணம்.... ஆம், இவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இடங்கள் டெல்டா பகுதிகளை சேர்ந்த கிராமங்கள்...
இன்னும் மெட்ரோ நகரங்களை கூட தாண்டாத இத்தகைய பாலீர்ப்பு சார்ந்த விழிப்புணர்வை, இடையிலிருக்கும் மாநகரம், நகரம், சிறிய நகரம் போன்ற படிகளை தாண்டாமல் நேராக கிராமங்களுக்கு கொண்டுசேர்ப்பது சாத்தியமா?... அதை சாத்தியமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் முத்துக்குமாரின் லோட்டஸ் நண்பர்கள்.... இவர்கள் “ப்ரைடு” என சொல்லப்படும் வெற்றிப்பேரணிகள் நடத்துவதில்லை... அதே நேரத்தில் உண்மையான வெற்றிப்பேரணி நடந்திட பலம் வாய்ந்த அடித்தளம் அமைத்து கொடுக்கிறார்கள்... பல சர்வதேச அளவிலான பாராட்டுகள், அங்கீகாரங்கள் என்று நிறைய பெற்றுள்ள லோட்டஸ் அமைப்பு, சத்தமில்லாமல் இன்னும் காவிரி படுகை கிராமங்களில் சேவை செய்துகொண்டுதான் இருக்கிறது....
இவர்கள் ஒட்டுமொத்த கே சமூகம் பற்றியும் இப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இறங்கவில்லை... கே சமூகத்தில், பெண் தன்மை மிகுந்து காணப்படும் நபர்களுக்குத்தான் இவர்களின் விழிப்புணர்வு இப்போதைக்கு கிடைக்கிறது....
பெண் தன்மை நிறைந்த கே நபர்கள் பொதுவாக குடும்பத்தால், நண்பர்களால், சமூகத்தால் மட்டும் புறக்கணிக்கப்படாமல், நம் கே சமூகத்தில் கூட புறக்கனிக்கப்படுவதை நாம் காணமுடியும்... அத்தகைய நபர்களின் உணர்வுகளை, வலிகளை அழகாக ஒரு நாடகத்தின் மூலம் எளிதாக கிராம மக்களுக்கு புரியும்படி செயல்படுத்துகிறார்கள்....
அதே நேரத்தில் இந்த நாடகத்திற்கு பிறகு இவர்கள் கொடுக்கும் கலந்தாய்வுக்கு அனைத்து கே நபர்களும் வருவதை நாம் காணமுடிகிறது... ஒரு நகரத்து இளைஞனுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்க்கவும், தெரிந்துகொள்ளவும் எத்தனையோ வழிமுறைகள் விரவி கிடக்கின்றது... ஆனால், ஒரு கிராமத்து இளைஞன் கடைசிவரை இதைப்பற்றிய ஒரு புரிதல்கூட இல்லாமல் வாழ்ந்து முடித்துவிடுகிறான்... அத்தகைய நபர்களை தேடி சென்று விழிப்புணர்வு கொடுக்கிறார்கள் இந்த அமைப்பினர்... அதனால்தான் “கே, ஹோமோ” என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல், எளிதாக புரியும்படி “பெண் மனம் கொண்ட ஆண்” என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்....
அந்த நாடகத்தின் மூலம் சில விஷயங்களை கிராமத்து மக்களிடம் புரிய வைத்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது....
1.      “ஆண் என்றால் பெண்ணையும், பெண் என்றால் ஆண் மீதும்தான் ஈர்ப்புக்கொள்ள வேண்டும் “ என்கிற மரபு சார்ந்த நம்பிக்கையை தாண்டி பாலீர்ப்பு இருக்கிறது....
2.      பாலீர்ப்பு வேறுபாடு உள்ள நபர்களை ஒதுக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது... மற்ற பிள்ளைகளைவிட அவர்களுக்கு பெற்றோர்கள் இன்னும் அதிகமான அக்கறை செலுத்த வேண்டும்....
3.      பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது....
இந்தஉண்மைகளை நாடகத்தை பார்க்கும் ஒவ்வொரு கிராமவாசியும் உணர்ந்து கொள்வதை காணமுடிகிறது... அந்த நாடகத்தை பார்த்த “கே” நபர்கள் பலரும், சில பெற்றோர்களும் கூட இந்த அமைப்பினரை சந்தித்து, கலந்தாய்வு பெற்றுக்கொள்வது ஒவ்வொரு நாடகத்தின் நிறைவிலும் காணமுடிகிறது.....
இப்படி மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள் வழியாக விழிப்புணர்வை கொடுத்த கிராமங்கள் இதுவரை 75க்கும் மேல்... பல ஆயிரம் மக்களை சென்றடைந்த இவர்களின் விழிப்புணர்வு இன்னும் நிற்காமல் சென்றுகொண்டு இருக்கிறது....
பலராலும் நம்பமுடியாத இந்த விஷயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் முத்துக்குமார் அவர்களை தொடர்புகொண்டேன்.....
நாற்பது வயதுகளை கடந்த மனிதர்... கும்பகோணம் நகரில் மிகச்சிறிய அறைதான் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம்.... வீட்டிற்கு வந்ததும் என்னை தொடர்புகொண்டு பேசிய முத்துக்குமாரின் வார்த்தைகளில் சில, உங்கள் பார்வைக்கு....
உங்களைப்பற்றி சொல்லுங்க!
என்னைப்பத்தி என்ன சொல்ல?... பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன்... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட பாலீர்ப்பு காரணத்தால வீட்டில் வந்த முரண்பாடுதான் என்னோட போராட்டங்களுக்கு முதல் புள்ளி... என்னைப்போல எண்ணம் கொண்டவங்கள ஒன்னு சேர்த்து, லோட்டஸ் அமைப்பு தொடங்குனேன்.... பல எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் எல்லாத்தையும் தாண்டியும் ஒரு மனநிறைவான பங்களிப்பை இந்த சமூகத்துக்கு கொடுத்த நிம்மதி மனசுல இருக்கு.... ஒரு தனியார் நிறுவனத்துல பார்த்துட்டு இருந்த வேலையையும் விட்டுட்டு, இப்போ முழுநேர சமூகப்பணியில ஈடுபட்டிருக்கேன்....

உங்க “பெண் மனம் கொண்ட ஆண்” பற்றி கொஞ்சம் சொல்லுங்க...
இப்போ பாலீர்ப்பை மையப்படுத்தி எத்தனையோ வார்த்தைகள் பயன்படுத்துறாங்க... அத்தனை வார்த்தைகளும் இன்னும் நம்ம மக்களுக்கு அன்னியமாத்தான் தெரியுது... நாங்க களம் இறங்குற கிராமத்து மக்களுக்கு புரியுற மாதிரி இருக்கணும்னு வச்ச பேர்தான் இது.... அந்த வார்த்தைலையே நாங்க சொல்ல வர்றதை மக்கள் எளிதா புரிஞ்சுக்கறாங்க.... மக்களுக்கு புரியுற மாதிரி, மனசுல பதியுற மாதிரி பாலீர்ப்பை கொண்டு சேர்க்கணும்னு தான் இந்த எளிமையான வார்த்தை....

பொதுவா நகரத்தில் கூட இன்னும் விழிப்புணர்வை உண்டாக்கப்படாத பாலீர்ப்பு விஷயத்தில், கிராமங்களில் இந்த வெற்றி எப்படி சாத்தியமாச்சு?
யார்கிட்ட சொல்றோம்னு முக்கியமில்ல, அதை எப்டி சொல்றோம்னு தான் முக்கியம்... இயந்திரமயமாகிப்போன நகரங்கள்ல சொல்றதுக்கும், கிராமங்கள்ல மக்கள்கிட்ட சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு... எவ்வளவோ சினிமா, தொலைக்காட்சி நாகரிகம் வளர்ந்தாலும், இன்னும் ஊர் திருவிழா’க்கு நாடகம் பாக்க வர்ற கிராமத்து மக்கள் குறையவே இல்ல... அவங்க வாழ்க்கைக்கும் இந்த நாடகத்துக்கும் ரொம்ப பிரிக்க முடியாத பந்தம் இருக்கு... எங்க நாடகங்கள்ல ஒரு “பெண் மனம் கொண்ட ஆண்” மனநிலையை தெளிவா சொல்றோம்... அதை ரொம்ப அழகா அந்த மக்கள் புரிஞ்சுக்கறாங்க... நாடகத்துல அப்டி ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆண் அழும்போது, அந்த மக்களில் சிலரோட கண்களில் கண்ணீர் கூட வருவதுண்டு.... நாடகம் முடிஞ்சு அவங்க கேக்குற கேள்விக்கும் நாங்க பதில் சொல்றோம்... இன்னைக்கு வரைக்கும் மக்களோட ரெஸ்பான்ஸ் எங்களுக்கு மனநிறைவா இருக்கு....
கிராமங்கள்ல அப்டி நாடகம் போடுறப்போ பிரச்சினைகள் வருமே?.. அதை எப்டி சமாளிப்பிங்க?
நிச்சயமா எங்க ஒவ்வொரு நாடகத்துக்கு பின்னாடியும் மிகப்பெரிய போராட்டமே இருக்கும்.. அதைகூட தனி நாடகமா போடலாம்... முதல்ல கிராமத்து ஊராட்சி மன்ற தலைவரை பார்க்கணும், அவங்களுக்கு நாடகத்த பற்றி சொல்லணும்... அப்புறம், ஊர் பெரிய மனுஷங்க முன்னாடி சில நேரம் ரிஹர்சல் நடத்தனும்.... சிலர் நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க.... அவங்களுக்கு இன்னும் அதிகமான விளக்கம் கொடுக்கணும்... நாடகம் நடக்குற இடத்துல சிலர் சில சமயம் பிரச்சினை பண்ணுவாங்க... அதை சமாளிச்சு நடிக்கணும்.. “கே” பற்றிய எல்லா விஷயத்தையும் நேரடியா சொல்லிட முடியாது... சிலவற்றை கொஞ்சம் மறச்சு சொல்லணும்... ஆனாலும், எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொரு நாடகத்தோட முடிவுலையும் மனம் நிறைஞ்சு அவங்க பாராட்டுற வார்த்தைகள், எல்லா வலிகளுக்கும் மருந்தா மாறிடும்...

ஏன் உங்க அமைப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியை தாண்டி விரிவடயல?
நாங்க இப்போ தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள்ல இருக்குற கிராமங்கள்ல தான் விழிப்புணர்வு பண்றோம்... எங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு... எங்களுக்கு இருக்குற நிதியில செய்ய முடியுறதை செய்றோம்... சில இடங்கள்ல மேடைகள்ல நாடகம் நடக்கும், சில நேரத்துல தரையில கூட நடக்கும்.... எங்க அமைப்புல இருக்குற பெரும்பாலானவங்க கஷ்டப்படுற ஆளுங்கதான்... இதுல நடிக்குறவங்க கூட நம்ம அமைப்பை சேர்ந்தவங்க தான்... நடிக்கும் ஆர்வத்தோட வர்ற நபர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து நடிக்க வைக்கிறோம்.... சில நிதி அமைப்புகள் கொடுக்குற பணத்த வச்சுதான் இப்போவரைக்கும் இயங்கிகிட்டு இருக்கோம்... இப்போ இருக்குற நிதிய வச்சுகூட இன்னும் ஒருசில மாதத்துக்குதான் அலுவலகத்துக்கு வாடகை கொடுக்க முடியும்... ஆனாலும், நிக்காம ஓடிட்டு இருக்கோம்... இந்த பதினஞ்சு வருஷத்துல ஒருதடவை கூட நாங்க தேங்கி நின்னதில்ல... நாங்க செலவு செய்ற ஒவ்வொரு ரூபாய்லயும், நாளைக்கான யோசனையும் இருக்கும்... அதனால அகலக்கால் வைக்காம, அளவோடு இயங்கிட்டு இருக்கோம்.....
                       
இவ்ளோ போராடுறீங்க, சர்வதேச அளவுல, தேசிய அளவுல பல விருதுகள், பாராட்டுகள் வாங்கிருக்கிங்க... ஆனாலும், மக்கள் மத்தியில உங்களுக்கு அங்கீகாரம் கிடச்சிருக்குன்னு நம்புறீங்களா?
அங்கீகாரம்’னா நீங்க எதை சொல்றீங்க?... பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில நாடகம் நடத்திருக்கோம், லட்சக்கணக்கான மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கோம், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு கலந்தாய்வு கொடுத்துள்ளோம்... இதைத்தாண்டி அங்கீகாரம் வேணுமா என்ன?... விளம்பரங்கள் நாங்கள் செய்றதில்ல.... எங்கள் நோக்கங்களை ஒரு நேர்கோடாக வரைந்து, அதன் வழியே பயணம் செஞ்சிட்டு இருக்கோம்.... கடமையை செய்றோம், மக்களின் விழிப்புணர்வு என்ற பலனை பெற்றுள்ளோம், அது போதும்....

இந்த போராட்ட களத்தில் நீங்க இழந்தது என்னனு நினைக்குறீங்க?
இழக்குறதுக்கு ஒன்னுமில்லைங்க... பதினஞ்சு வருஷத்துக்கு மேல தனியாதான் வாழறேன், ஆனாலும் இப்போவரைக்கும் தனிமையை உணர்ந்ததில்ல.... நாப்பது வயசுக்கு மேல ஆச்சுன்னதால, ரத்த கொதிப்பு இருக்குறதா டாக்டர் சொல்றாங்க.... அதனால, முன்ன மாதிரி இப்போ வேகத்தோட உழைக்க முடியல.... மனசு ஓட சொல்லுது, உடம்பு உக்கார சொல்லுது... இவ்வளவு நாளும் உடம்பு மேல அக்கறையே இல்லாம இருந்ததா நண்பர்கள் திட்டுறாங்க... இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு, அதுவரைக்கும் இந்த உடம்பு ஒத்துழைத்தால் போதும்....
                                   
பக்கத்து கோவில் திருவிழாவிற்கு நண்பர்கள் அழைக்க, இரண்டு மணி நேர உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விடைபெற்று சென்றார் முத்துக்குமார்.... என்றைக்கோ ஒருநாள் அமைப்புகள் பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு, வாழும் சாட்சியாக ஒரு அமைப்பு இருப்பதை கண்ட எனக்கு ஆச்சரியம் என்றால், முத்துக்குமாருடனான இந்த உரையாடல் பேராச்சரியம்.... மிகச்சிறிய அலுவலகம், பட்டப்படிப்பு படித்திடாத நிறுவனர், லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்த விழிப்புணர்வு, பல சர்வதேச இந்திய விருதுகள், பாராட்டுகள்... இவ்வளவும் சாத்தியம்தான், மனமும் தளராத உழைப்பும் இருந்தால்.... அண்ணா அசாரே’யும், அருந்ததி ராயும் மட்டும் சமூக ஆர்வலர் போராளிகள் இல்லை, இதைப்போன்ற முத்துக்குமார்’களும் அப்படிப்பட்டவர்கள்தான்... வாழ்க்கை முழுவதையும் போராட்ட களத்திற்கு அடகு வைத்துவிட்ட இவரை போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் உருவாகவேண்டும்... ருசிக்கு நட்சத்திர ஹோட்டல் ட்ரீட் தேவையில்லை நமக்கு, பசிக்கு அன்னதான உணவு போதும்.... நமக்கான தேவைகள் என்பது “தார்மிக உரிமைகள்” எனப்படும் பசிதான்.... அதை உணர்ந்து அனைவரும் போராட்டங்களை கொண்டு சென்றால் நிச்சயம் நமக்கான உரிமைகள் கிடைப்பது காலத்தின் கட்டாயம்.... இந்த “லோட்டஸ்” இன்னும் பல இதழ்கள் சூழ, நம் “ஒருபால் ஈர்ப்பு” நீரோடையை அழகுற வைத்திடும் என்கிற நம்பிக்கை மட்டும் ஆழமாக பதிந்துவிட்டது என் மனதிற்குள்....

6 comments:

  1. இன்னும் இது போன்ற எண்ணற்ற தாமரைகள் தமிழ் தரணி எங்கும் மலர எண்ணிறைந்த வாழ்த்துக்கள்!

    கட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! :)

    ReplyDelete
  2. @rotheiss...
    நன்றிகள் நண்பா.....

    இந்த கட்டுரையை படித்த முத்துக்குமார் அவர்கள் என்னை அழைத்து நேற்று நன்றி கூறினார்.... அவரிடம் நான் சொல்வது ஒன்றுதான்.... நன்றி சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம், நன்றிக்கு உரிய இடத்தில் நீங்க இருக்கீங்க.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தோழர்...

    ReplyDelete
  3. bravo, congrats to muthukumar ...
    long way to go ....
    Love & Light ..

    ReplyDelete
  4. My Best wishes to Muthukumar......
    Keep Going yar......:-)

    ReplyDelete