Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday, 25 May 2013

“ஓராண்டின் நிறைவை நோக்கி உங்கள் விஜயின் வலைப்பூ....” - நன்றி! நன்றி! நன்றி!...






என் முதல் பதிவை தொடங்கியது முதல், இன்னும் சில நாட்களோடு இந்த வலைப்பூ முதல் வருடத்தை இனிதே நிறைவு செய்ய இருக்கிறது... காமம் கலக்காமல் ஒரு “ஒருபால் ஈர்ப்பு” தளம் என்ற எண்ணத்தில் இந்த வலைப்பூவை தொடங்கும்போது, “இதல்லாம் ரொம்ப நாளைக்கு வராது” என்று என் திசையை மாற்றிட நண்பர்கள் சிலர் சொன்னார்கள்... சில கிளர்ச்சியூட்டும் படங்கள், பிரபல எழுத்தாளர்களின் கதைகள் என்று இந்த வலைப்பூவில் மசாலா சேர்க்க சொன்னார்கள்... ஆனால், பிடிவாதமாக நான் இந்த ஒரே வழியை பின்பற்றி இந்த ஒரு வருட பயணத்தை நிறைவு செய்கிறேன்.... நூறினை நெருங்கும் பின்தொடர்பவர்கள், ஐம்பதாயிரத்தை கடந்த பார்வையாளர்கள், எழுபதாவது எண்ணிக்கையை தொட இருக்கும் பதிவுகள் என்று நிச்சயம் நான் எதிர்பார்த்திராத ஆதரவை நீங்கள் தந்திடாமல் இருந்திருந்தால் நிச்சயம் வலைப்பூ என்றைக்கோ காய்ந்து சருகாய் மாறிப்போயிருக்கும்... ஆனால் இதை ஒரு மசாலா கலந்த கமர்சியல் வலைப்பூவாக கொண்டு சேர்த்திருந்தால் நிச்சயம் இதைவிட அதிக பிரபலமும், வளர்ச்சியும் உடையதான தளமாக உருவாக்கியிருக்க வேண்டும்... ஆனால், இந்த தளத்திற்கான தனித்துவத்தை இழந்திருக்க வேண்டி இருந்திருக்கும்... இப்போது, இந்த மத்திம வளர்ச்சியில் மனம் நிறைந்த தளமாக என் வலைப்பூவை கொண்டு வந்திருப்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவான மகிழ்ச்சியை கொடுக்கிறது...
பொதுவாக தமிழில் சொல்லப்படும் உயர்ந்த நெறிகள் கூட, தமிழனை பொருத்தவரை அது சாதாரண விஷயம்தான்... இங்கு நான் எழுதிய கருத்துக்களை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அது இன்னும் கொஞ்சம் அதிகமா பிரபலம் ஆகிருக்கலாம்.... தமிழில் வெளியிடுவதால் பெரும்பாலானவர்களால் அதிகம் படிக்கப்படுவதில்லை...இப்படிப்பட்ட ஒரு முட்டாள்த்தனமான மொழி ஏற்றத்தாழ்வில் என் வலைப்பூவும் சிக்கியது நான் அறிவேன்...... அதற்காக நான் கவலைப்படவில்லை.... என் தமிழ் எந்த அறிவியலையும் கிரகிக்கும் திறன் வாய்ந்த மொழி... அந்த வகையில் நான் சொல்ல விரும்பும் விஷயங்களை அழகிய தமிழில் சொல்வதில் பெருமை அடைகிறேன்.... காலம் எவ்வளவோ மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றது, இந்த தமிழரின் மனநிலையையும் ஒருநாள் மாற்றும் என்ற நம்பிக்கையில் இன்னும் நான் எழுதுவேன்...
இதை இங்க சொல்ல காரணம் என்ன?... தற்பெருமை என்று தயவுசெஞ்சு நினச்சுடாதிங்க.... உங்களுக்கு வெளியில் தெரியும் இந்த வெற்றிகளுக்கு பின்னால், நான் அனுபவித்த வேதனைகளையும் சொல்லத்தான் இதை சொல்கிறேன்... வெளிப்படையா பார்க்குறப்போ இதல்லாம் ஒரு முன்னேற்றமா தெரியலாம்... ஆனால், இந்த முன்னேற்றங்களுக்கு நான் கொடுத்த விலை ரொம்பவே அதிகம்... ஆமாம், அந்த விலைக்கு பெயர் “நிம்மதியின்மை”... ஒரு பக்கம் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான கருத்துகளை எழுதுவதால், கருத்தில் முரண்பட்ட சில பொதுவான நபர்களின் எதிர்ப்பு... இன்னொரு பக்கம், காரணமே இல்லாத பகைமை விரும்பும் நம் ஒருபால் இனத்தவர்கள்.... அதிகபட்சமாக கொலை மிரட்டல் வரை கொடுத்ததுதான் இங்கே உச்சம்... கொலை செய்ய வைக்கும் அளவிற்கு நான் அப்படி என்ன எழுதிட்டேன்னு எனக்கு தெரியல...
எதனால் அப்படி ஒரு பகைமை உருவானது?ன்னு எனக்கு புரியல... என்னை பகையாக கருதும் நண்பர்களுக்கும் எனக்கும் என்ன பங்காளி தகராறா? வாய்க்கால் வரப்பு பிரச்சினையா?.... இன்னும் சொல்லப்போனால் விஜய் விக்கி என்பதை தவிர என்னை பற்றிய எவ்வித விஷயமுமே தெரியாதவர்கள்தான் அவர்களுள் பெரும்பாலானவர்கள்.... இருந்தும் பகைமை உருவாக காரணம் என்ன?... என் தனிப்பட்ட தொலைபேசி எண் கேட்டு, நான் கொடுக்கவில்லை என்றால் நான் அவர்களை பொருத்தவரை “திமிர் பிடித்தவன்”, ஏதோ ஒருவகையில் அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல மறந்தால் நான் “ஆணவக்காரன்”... இப்படி நம்ம மக்கள் அவங்களாவே சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு மனதிற்குள் பகைமையை வளர்ப்பதுதான் நிதர்சனம்... முன்பெல்லாம் அந்த பகைமையின் வெளிப்பாடாக வரும் விமர்சனங்களை கண்டும், வராத பாராட்டை எண்ணியும் வருத்தப்பட்டதுண்டு... ஆனால், என் எழுத்துலக கடவுள் அமரர்.சுஜாதா அவர்களின் ஒரு கருத்தை சமீபத்தில் நான் படிக்க நேர்ந்தபோதுதான் ஒரு தெளிவான மனநிலைக்கு வந்தேன்.... “வாசகர்கள் ரசிப்பது என்னை அல்ல, என் எழுத்தை.... அவர்கள் கொடுக்கும் எதிர்மறை விமர்சனம் தனிப்பட்ட சுஜாதாவை பற்றியதல்ல என்பதால், எவ்வித விமர்சனத்தையும் படித்து முடித்ததும் நினைத்து கவலைப்படுவதே இல்லை” என்ற இந்த ஒற்றை கருத்து இன்றைக்கு எதையும் தாங்கும் இதயத்தவனாக ஆக்கிவிட்டது....  என் முகத்தை, சுய அடையாளத்தை மறைத்து நான் எழுதிக்கொண்டு இருப்பதால் பொது தளத்தில் எழுதும் மற்றவர்களை போல இங்கே நமக்கு உரிய அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை... ஆனாலும், ஏதோ ஒரு மன நிம்மதிக்காக எழுதும் எங்களை போன்றவர்களுக்கு நிம்மதி அழிவதுதான் மிச்சம்.... ஆனாலும், இப்போவரை எழுதுவதை நிறுத்த முடியவில்லை...
இவ்வளவையும் தாண்டி இன்னும் எழுதிக்கொண்டு இருப்பதற்கு வலைப்பூ , ஆர்குட், பேஸ்புக், அன்பைத்தேடி தளம் போன்ற இடங்களில் தொடர்ந்து ஊக்கமும், உறுதுணையும் கொடுக்கும் வாசக நண்பர்கள்தான் காரணம்... அந்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த முதல் நன்றி... பல கஷ்டங்களை தாண்டியும் இன்னும் நான் எழுதிக்கொண்டு இருப்பதற்கு நீங்கள்தான் முதல் மற்றும் முக்கிய காரணங்கள்....
ஒரு தனி நபருக்கும் இங்கே நான் நன்றி சொல்லணும்... என் பெரும்பாலான கதைகள் சிறப்பான முடிவை பெற்றிட, இங்கு பதிவதற்கு முன்பே நான் ஆலோசனை கேட்டு பதிவது வழக்கம்... அப்படி நீங்கள் பாராட்டிய பல கதைகளுக்கும் சிலபல ஆலோசனை உதவிகளை செய்த என் அன்பு அண்ணன் திரு.ROT HEISS அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்....
மேலும் வெறும் எழுத்தாக மட்டும் இருந்த எண்ணங்களை, நிகழ்வுகளாக்க, நிஜமாக்க இந்த ஒருபால் ஈர்ப்பு சமூகத்து நண்பர்களுக்காக போராடும் அமைப்பினரான சிருஷ்டி, சென்னை தோஸ்த், லோட்டஸ் சங்கம் போன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
முகம் மற்றும் அடையாளம் தெரியாத எத்தனையோ நபர்கள், இந்த தளம் கொடுத்த ஏதோ ஒரு மனநிறைவால், தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றி சொல்வதை பார்க்கும்போது, நிச்சயம் என் பயணம் தடம் மாறாமல் சரியான வழியில் செல்வதாக நினைக்கிறேன்.... இந்த பயணம் இன்னும் நிறைய தூரம் சென்றிடவும், நிறைய நிறைவுகளை பெற்றிடவும் உங்கள் அத்தனை பேரின் ஆசிர்வாதமும், ஆதரவும் இந்த வலைப்பூவிற்கும், உங்கள் விக்கிக்கும் என்றைக்கும் தேவை....
“அண்ணா” என்று பாசத்தோடு அழைத்திடும் தம்பிகளுக்கும், தங்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் எனக்கும் ஓர் இருக்கை கொடுத்து அழகு பார்க்கும் நண்பர்களுக்கும், முகம் தெரியாமல், குரல் கேட்காமலும் கூட நட்பின் உயர்ந்த உன்னதத்தை உணரவைத்த அன்பிற்கு உரியவர்களுக்கும் நன்றிகள்....
ஒரு நல்ல விஷயத்தை பாராட்ட எல்லோருக்கும் எளிதாக மனம் வந்துவிடாது... அந்த வகையில் மற்ற தளங்களில் என் வலைப்பூவை பாராட்டியும், இதனை ஒரு உந்துசக்தியாக நினைத்து வலைப்பூ தொடங்கிய நண்பர்களுக்கும் நன்றிகள்... (கீழே கொடுத்திருக்கும் இணைப்புகள் அப்படிப்பட்ட தளங்களில் சில)...
என்னோடு இல்லையென்றாலும், எங்கோ இருந்து நினைவுகளால் என்னை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கும் என் விஜய்க்கு ஒரு நன்றி...
பல பணிசூழல்களுக்கு மத்தியிலும், குடும்ப நிர்பந்தங்களுக்கு மத்தியிலும் இன்னும் தொடர்ந்து என்னை எழுதிடும் அளவிற்கு மனதிடத்தை கொடுத்த நான் வணங்கும் இறைவனுக்கு என் இறுதி நன்றிகள்.....
இன்னும் சிறப்பான உயரத்தையும், உன்னதத்தையும் உங்களின் விஜயின் வலைப்பூ அடைந்திட பேராதரவு கொடுக்கும், கொடுக்க இருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!...

Thursday, 16 May 2013

"அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கடா......!" - சிறுகதை...



ஆறு மாதத்தில் ஊருக்குள் பெரிதாக எந்த மாற்றத்தையும் கண்டிடவில்லை சண்முகம்... அம்மன் கோவில் குளத்தில் இவன் கிட்டிப்புள்ளும், கோலியும் விளயாண்டுதான் நினைவிருக்கிறது... இப்போதோ, நீர் நிறைந்து தாமரை இலைகள் படர்ந்திருக்கிறது... சாலை முக்கில் புதிதாக சாதி சங்க கொடிகள் பறக்கிறது, அதற்கு முன் அந்த இடத்தில் என்ன இருந்தது? என்று புருவத்தை சுருக்கி யோசித்தாலும், சண்முகத்துக்கு புலப்படவில்லை... இது இரண்டை தவிர மற்றது எல்லாம் அப்படி அப்படியே இருக்கிறது, “ரெண்டு மாசத்துல செத்துபோயிடும்”னு சொல்லப்பட்ட பட்டம்மா கிழவி கூட பொக்கை வாயில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு திண்ணையில் அப்படியே உட்கார்ந்துகொண்டு இருக்கிறது.... பதினெட்டு வயதாகும் சண்முகம் மேலத்தெரு பக்கம் செல்லும்போது, அவனுக்குள் இருக்கும் தயக்கம் பார்ப்பவர்களுக்கு பட்டவர்த்தனமாக புலப்படும்... காரவீட்டுக்காரம்மா வீட்டில் அம்மா வேலை  பார்த்தபோது, அந்த வீட்டுப்பைய்யனின் பழைய பள்ளி சீருடையை சன்முகத்துக்காக கேட்டு வாங்கி வந்து, அநேகமாக மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும்... இப்போதுவரைக்கும் அந்த சட்டைதான் அவனுக்கு பட்டுத்துணி போல...
வலது தோள்பட்டைக்கு நேராக ஒரு கிழிசலையும், கழுத்தருகே ஒரு கிழிசலையும் அவ்வப்போது மறைப்பது போல, கைகளை கட்டிக்கொண்டு நிற்பது அவனுக்கு வாடிக்கை....
“யாருடா அது, கீழத்தெரு பய மாதிரி தெரியுது?” சாலை ஓரத்தில் கறிக்கடை போட்டிருந்த முத்துமாணிக்கம் கேட்டார்....
“ஆமாங்கய்யா... கொத்தனாரு செல்லமுத்து மவன்” சண்முகத்துக்கு அந்த ஊருக்குள் இருக்கும் ஒரே அடையாளம் இதுதான்...
“நீ மதுரையில ஏதோ பேக்டரி’ல வேலை பாக்குறதா உங்கப்பன் சொன்னான்?” தலைகீழாய் தொங்கிய ஆட்டின் தோலை தன் முழு பலம் கொண்டு கிழித்தபடியே கேட்டார்....
“ஆமாய்யா... நேத்துதான் வந்தேன்...”
“அப்டியே அந்த வேப்பங்குலையை உடைச்சு ஆட்டுக்கு போட்டுட்டு போ” என்று கூற, சண்முகமும் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்கு இலை பறித்து போட்டு, அதை தடவிக்கொடுத்துக்கொண்டு இருந்தான்... அதை ஆடு என்று சொல்வதா? ஆட்டுக்குட்டி என்று சொல்வதா? என்று வரையறுக்க முடியாத ஒரு அளவில் இருக்கிறது...
கறிக்கடையை நோக்கி ஆட்கள் அதிகம் வரவே, அங்கிருந்து விலகி நடந்தான் சண்முகம்...
முத்துமாணிக்கம் சொல்வதை போல, நேற்றுவரை சண்முகம் மதுரையில் சிமென்ட் பேக்டரியில் தான் வேலை செய்தான்... திருப்பத்தூர் அருகே இருக்கும் இவர்கள் ஊரான “கழனிப்பட்டி”க்கும் மதுரைக்கும் ஒன்றரை மணி நேர பயண தூரம்தான்... ஆறு மாதமாக அங்கு வேலை பார்த்ததில், கால்கள் நடக்க முடியாத அளவிற்கு ரணமாகி போய்விட்டது... நேற்று இரவு மருதாணி இலையை அரைத்து அம்மா அந்த புண்ணில் பூசிய பிறகுதான், ஓரளவு வலி குறைந்திருக்கிறது.. கைகள் இரண்டும், ஒருவித தோல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது... உடன் பணிபுரிந்த ராசு’வுக்கு நுரையீரலில் நோய் தாக்கி இறந்தே போய்விட்டான்.. இவ்வளவு நடந்தபிறகும் அங்கு வேலை செய்யும் எண்ணம் வந்தால்தான் அது ஆச்சரியம்... ஏனோ எவ்வளவு காரணம் சொன்னாலும், அப்பா அதை ஏற்கவே இல்லை என்பது சண்முகத்தின் வருத்தம்...
“வேலைன்னா கஷ்டம் இருக்கத்தான் செய்யும்... கஷ்டமே இல்லாம வாழனும்னா சிவகங்கை ராசாவுக்குத்தான் புள்ளையா பொறந்திருக்கணும்” என்று கூறும் அப்பா, தன் ஒரு நாள் சம்பளத்தில் பாதியை தண்ணி அடிக்க செலவழிக்காம இருந்தா, கஷ்டமெல்லாம் தீரும்னு உணரவே இல்லை.... “மூன்று வருடமாக இத்துப்போயிருக்கும் வீட்டு கீற்றை மாற்றணும், அம்மாவுக்கு புதிதாக வந்திருக்கும் ஆஸ்துமா நோய்க்கு மதுரைக்கு போய் வைத்தியம் பாக்கணும், இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாண வயசை எட்டிட இருக்கும் அக்காவுக்கு குண்டுமணி அளவாச்சும் தங்கம் சேக்கனும்...” என்று ஒற்றை ஆண்பிள்ளையாக வீட்டில் இருக்கும் சண்முகத்துக்கு பொறுப்புகள் நிறைய உண்டு... “கிழியாத சட்டையும், ரப்பர் செருப்பும் வாங்கணும்” என்ற தன் நீண்டநாள் ஆசையை, இப்போதல்லாம் நினைக்க கூட அவனுக்கு நேரமில்லை....
அம்மாவுக்கு எல்லாமே “பாத்துக்கலாம்” விஷயங்கள்தான்.... “உங்கப்பா அப்டிதான் சொல்லும், நீ மதுரயல்லாம் போவ வேணாம்... பாத்துக்கலாம்” என்று அம்மா சொல்லும்போது, அத்தனை பிரச்சினைகளும் காற்றோடு கரைந்துபோவதை போல மனம் இலகுவாக இருப்பதாய் சண்முகம் உணர்கிறான்... நேற்று இரவு சண்முகத்தின் கால்களில் மருதாணியை பூசிக்கொண்டே, “வாத்தியார் ஐயா வீட்ல ஏதோ வேலை இருக்காம்... காலைல போயிட்டு வா”னு அம்மா சொல்லும்போது, அவள் கண்கள் கலங்கியதை பார்த்த சண்முகம் மனம் வாடிப்போனான்...
வாத்தியார் வீடு சமீபத்தில் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும், சுவற்றில் கை வைத்த சண்முகத்தின் கைகளில் சுண்ணாம்பு ஒட்டிக்கொண்டது... ஊருக்குள் இருக்கும் வீடுகளில் ஆகப்பெரிய வீடு, அந்த வீடுதான்... வாசல் கேட்டில் நின்ற சண்முகத்தை பார்த்த நாய் அவனை பார்த்து விடாமல் குரைத்தது... கோனார் வீட்டில் புதிதாக வாங்கியிருக்கும் சீமைப்பசு கன்றுக்குட்டியின் உயரம் இருக்கிறது அந்த நாய், காதுகள் நட்டுக்கொண்டு நிற்க, அதன் வாய் மட்டும் செவ்வாழை பழம் போல சிவந்து, நீளமாக  இருக்கிறது... அது குரைக்கும் சத்தத்தில், மெல்ல ஆடி அசைந்து தன் தொப்பையை தள்ளியபடி வெளியே எட்டிப்பார்த்தார் வாத்தியார்..... கிட்டத்தட்ட மார்பு வரை தூக்கி கட்டிய கைலியுடன், மேலில் ஒரு தேங்காய்ப்பூ துண்டுடனும், கையில் அன்றைய நாளிதழுடன் வெளியே வந்தார்...
“வாடா சம்முவம்... நல்லா இருக்கியா?”
“இருக்கேங்கய்யா”
“பெரிய வேலயல்லாம் ஒண்ணுமில்ல... வீட்ட சுத்தி கண்ட செடியும் வளந்து பொதறு மாதிரி கெடக்கு.... அதனால கண்ட பூச்சியும் வீட்டுக்குள்ள வருது... செத்த அத சுத்தம் பண்ணிட்டு, காசு வாங்கிட்டு போ” சொல்லிக்கொண்டு இருக்கும்போது, விடாமல் அந்த நாய் குரைத்துக்கொண்டே இருந்ததில் எரிச்சலான வாத்தியார், “அட செத்த சவமே!... சனியனாட்டம் கத்திகிட்டே இருக்காத” சொல்லியவாறு அதன் கயிற்றை பிடித்து இழுத்து ஒரு தூணில் கட்டினார்... அது இன்னும் சண்முகத்தை முறைத்துக்கொண்டே இருப்பதாக அவனுக்கு தோன்றியது...
“என்னடா புரியுதா?”
“புரியுதுங்கய்யா”
“வேல சுத்தமா இருக்கணும்.. உங்கப்பனாட்டம் சொன்ன வேலைய பொறுப்பா செய்யனும்”
“சரிங்கய்யா”
வாயிற் கதவை திறந்து, காம்பவுண்ட் சுவருக்குள் இருந்த செடிகளை சுத்தப்படுத்த தொடங்கினான் சண்முகம்.....
அவ்வப்போது ஊருக்குள் இருக்கும் பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு இப்படி வெளிவேலைக்கு செல்வது அவனுக்கு வழக்கம்தான்... பொறுமையாக பார்த்தாலும், செய்யும் வேலையில் எப்போதும் ஒரு தெளிவு இருக்கும் சண்முகத்தின் வேலையில்... களைச்செடி எது? குரோட்டன்ஸ் செடி எது? என்று தெரியாத அளவிற்கு விதவிதமான செடிகளில், அவன் பிரித்தெடுப்பதே பெரிய வேலையாக இருந்தது... காலை சூரியன் தன் உக்கிரத்தை காட்டத்தொடங்கியதன் விளைவாக, முத்து முத்தாக அவன் முகத்தில் வியர்வை அரும்பி, அது அருவி போல அவன் முகத்தில் வழிந்தோடியது...
இவ்வளவு நேரம் வேலை பார்த்தும், குடிக்க நீராகாரம் கூட இன்னும் வாத்தியார் கொடுக்கவில்லை... பசியும், தாகமும் அதற்கு மேல் அவன் தன்மானத்தை தாக்குபிடிக்க வைக்க முடியவில்லை...
“ஐயா.... ஐயா....” வாசலில் நின்று அழைத்தான்... நான்கைந்து சத்தத்திற்கு பிறகும் யாரும் வெளியே வருவதாக தெரியவில்லை... மெல்ல வீட்டின் வலது பக்கத்தில் இருக்கும் ஜன்னலை நோக்கி வந்தான்... ஜன்னல் கம்பிகளில் கைவைத்து உள்ளே எட்டிப்பார்த்தான்... அந்த அறை பார்க்க சொர்க்க லோகம் போல இருந்தது... அறையை தன் கண்களால் அளவெடுத்த நேரத்தில் தன் தாகத்தை கூட மறந்தான்... திடீரென்று யாரோ தன்னை அழைப்பதாக சண்முகம் உணர்ந்து திரும்பி பார்க்க, அங்கு ஒரு இளைஞன் நிற்கிறான்...
பெரிய அளவில் சண்முகம் யோசித்திட வேண்டாத அளவிற்கு, அந்த வாத்தியார் மகன் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தது போலவே இப்பவும் இருக்கிறான்... முட்டிக்கு கீழ் போட்டிருக்கும் அந்த உடுப்புக்கு பெயர் ட்ரவுசரா? பேன்ட்டா? என்பது புரிய சண்முகத்துக்கு சிரமமாகத்தான் இருந்தது.... லேசான தெத்துப்பல் சிரிக்கும்போது மட்டும் பளிச்சிடும், உதட்டுக்கு மேல் நான்கு நாள் பயிர் போல அரும்பு மீசை... பாரதிராஜா படங்களில் பார்க்கும் பட்டணத்து மாப்பிள்ளையை அப்படியே உரித்து வைத்திருக்கிறான் அவன்.... சிறுவயது முதல் பல தருணங்களில் புதியவனை பார்த்திருந்தாலும், அவனோடு சண்முகம் பேசிகொண்டதில்லை... மதுரையில் ஏதோ கான்வென்ட்டில் படிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறான், கடந்த வருடம் அவனுக்கு சென்னை கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாக செவி வழி வந்த செய்தியை தவிர, மூன்று வருடங்களாக புதியவனை எங்கும் சண்முகம் பார்த்திடவில்லை...
“நீதான் சண்முகமா?” என்று கூறும் அந்த இளைஞனின் முகத்தில் ஆதிக்கப்பேச்சு சிறிதும் தெரியவில்லை...
“ஆமாங்க”
“எதுக்கு வாங்க போங்கன்னு சொல்ற?... நம்ம ஒரே வயசு பசங்கதானே?... ஷ்ரவன்’னே கூப்பிடு”
மெல்ல வாயை அசைத்தபடி அந்த பெயரை முணுமுணுத்தான் சண்முகம்.. “சருவன்... சிரவன்... சரவண்... ஊஹூம்...” வாய்க்குள் நுழையவே இல்லை... வாய்க்குள் நுழைந்தாலும் பெயர் சொல்லி அழைப்பது உசிதமல்ல...
“பரவால்லங்க... இருக்கட்டும்” சமாளித்தான் சண்முகம்...
“சரி விடு.... அட்லீஸ்ட், வாங்க போங்கன்னு சொல்லாமலாச்சும் கூப்பிடு”
“ஹ்ம்ம்... சரிங்க”
சத்தமாக சிரித்தான் ஷ்ரவன்... “உன்ன மாத்துறது ரொம்ப கஷ்டம்... ஓகே விடு, நீ கூப்ட்ட மாதிரி சத்தம் கேட்டுச்சே, என்ன?”
“குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும், அதான் அய்யாவ கூப்பிட்டேன்”
“அப்பா மதுரை வரைக்கும் போயிருக்கார்... வா, நான் தரேன்” என்று ஷ்ரவன் சொல்ல, பின்னாலேயே நடந்தான் சண்முகமும்... வாசல் வரை சென்றவன், அத்தோடு நின்றதை கவனித்த ஷ்ரவன், “வா உள்ள...” என்றான்...
“இல்ல பரவால்ல... நீங்க கொண்டு வாங்க”
“ஏன்? என்னாச்சு?”
“நான் வரக்கூடாது உள்ள... ஐயா திட்டுவாங்க” தன் குரலை தாழ்த்தி மெல்ல கூறினான்...
“ஏய் என்ன லூசுத்தனமா பேசுற?... அப்டிலாம் எதுவுமில்ல, எல்லாரும் மனுஷங்கதான்... அப்பா இப்போ வரமாட்டார், உள்ள வந்து எதாச்சும் சாப்டுட்டு அப்புறம்  வேலை பாரு” அதற்கு மேலும் சண்முகத்தால் மறுக்க மனம் வரவில்லை... சுற்றி முற்றி பார்த்துவிட்டு, கொஞ்சம் தயங்கியபடியே அடியெடுத்து வைத்து உள்ளே சென்றான்...
வீட்டுக்குள் நுழையும்போது ஒரு புதுவித வாசனை கமகமத்தது... என்ன வாசனை? தெரியவில்லை... ஆனால், நுகர்ந்துகொண்டே இருக்கணும் போல இருக்கிறது... ஹாலில் நின்று அன்னாந்து பார்த்தான், சுற்றிலும் மாட்டியிருந்த புகைப்படங்களில் வாத்தியாரின் மொத்த குடும்பமும் தம்பதி சகிதமாய் நிற்கின்றனர்... “பாடம் சொல்லிக்கொடுக்க இம்புட்டு பணமா கொடுப்பாங்க?” என்ற அவன் யோசிப்பு, சில நொடிகளில் மறைந்துபோனது...
கையில் குளிர்பானத்துடன் சண்முகத்தின் அருகில் வந்து நின்றான் ஷ்ரவன்....
“என்ன அப்டி பாக்குற?... இந்தா ஜூஸ் குடி”
வாத்தியார் நீராகாரத்துக்கே உப்பு போட யோசிப்பவர், அவர் பையன் தண்ணீர் கேட்டால் ஜூஸ் தருவதை விசித்திரமாகத்தான் பார்த்தான் சண்முகம்... அதைப்பற்றி கேட்கவல்லாம் அவன் தாகமும், பசியும் அவனை விடவில்லை... அந்த கோப்பையை வாங்கி, ஒரே மூச்சில் முழு பானத்தையும் “மடக் மடக்”என்று குடித்துவிட்டான்...
“மவுண்டையின் டியூ” விளம்பர மாடல் போல சண்முகத்தை பார்த்தான் ஷ்ரவன்... முழு பானத்தையும் குடித்துவிட்டு, உதட்டை தன் உள்ளங்கையால் துடைத்துக்கொண்டு “சரிங்க, நான் வேலைய பார்க்குறேன்” என்றான் சண்முகம்...
 “உன் உடம்பல்லாம் இவ்வளவு வேர்த்திருக்கே, ஏசி ரூம்ல கொஞ்ச நேரம் இருந்துட்டு போ” என்ற ஷ்ரவனிடம் மறுக்க மனமில்லாமல் ஒப்புக்கொண்டு அவனோடு அந்த “குளுகுளு” அறைக்குள் சென்றான்... சண்முகம் சிறிது நேரத்திற்கு முன்பு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த அதே சொகுசு அறைதான் அது...  சுவற்றை தொட்டுப்பார்த்தபோது கை வழுக்கிக்கொண்டு போனது... ஏற்கனவே வியர்த்திருந்த அவன் உடல் இப்போது சிலுசிலுத்தது...
பகலிலேயே விளக்கு எரிவதன் காரணம் யோசிக்கவல்லாம் அவனுக்கு தோன்றவில்லை...
அறையை சுற்றி லயித்து பார்த்துக்கொண்டிருந்தவனிடம் ஒருசில சட்டைகளை கொடுத்தான்... ஷ்ரவனை பொருத்தவரை அது பழைய சட்டை, ஆனால் சண்முகத்துக்கு அது பொக்கிஷமாக தெரிந்தது...
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே சைஸ் தான்... உனக்கு சரியா இருக்கும், போட்டுக்கோ” என்று ஷ்ரவன் சொன்னதை சண்முகம் கவனித்ததாக தெரியவில்லை... ஒவ்வொரு சட்டையாக எடுத்து பிரித்து பார்த்து மனம் மகிழ்ந்து போனான்... “இந்த பச்சை சட்டைய போட்டுக்கிட்டு அம்மா மின்னாடி நின்னா ரொம்ப சந்தோஷப்படும்... இந்த வருஷ கோயில் திருவிழாக்கு இந்த ஊதா சட்டைதான்” மனதிற்குள் ஒவ்வொரு சட்டைக்கும் இலாகா ஒதுக்கிக்கொண்டு இருக்கிறான்...
“சரி உக்காரு, எதாச்சும் படம் பாக்கலாம்” என்று சண்முகத்தின் கையை பிடித்து கட்டிலில் உட்கார வைத்தான் ஷ்ரவன்... உட்காரும்போது அழகாக குதித்தது அந்த மெத்தையும்... வெல்வெட் துணி போர்த்தியிருக்கும் அந்த மெத்தையை ஒருநிமிடம் தடவி பார்த்தான் சண்முகம்...
“வேற சிடி இல்ல, மேட்டர் படம்தான் இருக்கு... போடவா?” என்று ஷ்ரவன் சொல்லும்போது மனதிற்குள் சந்தோஷப்பட்டான் சண்முகம்... அந்த சந்தோஷத்துக்கு காரணம், அந்த மாதிரி படமெல்லாம் மதுரையில் பேக்டரியில் வேலை பார்க்கும் குமார் அண்ணன் செல்லில் தான் பார்க்க முடியும்... வாரத்துக்கு இரண்டு நாள் அங்கு வரும் குமார் அண்ணனின் வரவுக்காக அங்கு சண்முகத்தை போல பலரும் காத்திருப்பது வழக்கம்... இரண்டு அங்குல திரையில் ஓடும் அந்த காட்சிகளை பார்க்க, இருபது பேர் சுற்றி நிற்பார்கள்... இவ்வளவு பெரிய கணினி திரையில் இப்போது பார்க்க இருப்பது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது...
ஆனாலும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாமல், “ஹ்ம்ம்.. பரவால்ல” என்றான்...
சிடியை போட்டுவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு சண்முகத்தின் அருகில் வந்து அமர்ந்தான் ஷ்ரவன்...
எப்.பி.ஐ எச்சரிக்கையோடு தொடங்கியது அந்த படம்.... மொபைல் திரையில் பார்த்த காணொளி க்ளிப்பிங்’கள்தான் இதுவரை சண்முகம் பார்த்த அதிகபட்ச “அடல்ட்ஸ் ஒன்லி” படங்கள்.... நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் சகிதம் படத்திற்கான ஆடை வடிவமைப்பாளரின் பெயர் உட்பட வரிசையாக பெயர் ஓடி முடித்து காட்சிகள் தொடங்கியது அவனுக்கு புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது... “வெளிநாட்டு மதுபான விடுதியில் வெள்ளைக்காரன் ஒருவன் மதுக்கோப்பைகளை ருசித்தபடியே, அங்கு நடனமாடிய பெண்ணை ரசித்துக்கொண்டு இருந்தான்... சுற்றிலும் சுழல் விளக்குகள் வண்ணவண்ணமாக மின்னிட, கிராமங்களில் இறந்த வீட்டில் ஒப்பாரி பாடும் பாடலைப்போல மெல்லிய ஒலியில் பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது... நடனமாடிக்கொண்டிருந்த பெண் ஒவ்வொரு ஆடைகளாக களைந்திட, மிஞ்சிய இரண்டு அங்குல துணியோடு அந்த ஆடவனின் முன்பு வந்து நின்றாள்.... அவன் கண்களை ஒரு கருப்பு துணியால் கட்டி, அருகில் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றாள் அந்த மாது....” இப்படியாக காட்சிகள் விரிய, அகன்ற கண்களோடு கண்கொட்டாமல் அவற்றை பார்த்துக்கொண்டு இருக்கிறான் சண்முகம்...
காட்சிகளில் மனம் ஒன்றி போயிருந்த சண்முகத்துக்கு, கட்டிலில் தன் வெகு அருகில் நெருங்கி அமர்ந்திருக்கும் ஸ்ரவனை கவனிக்கவல்லாம் தோன்றவில்லை... இயல்பான காட்சிகள், கொஞ்சம் கொஞ்சமாக திரையில் இயல்பை மீறி சென்றபோதுதான் அங்கு ஏதோ தவறாக நிகழ்வதை அவன் உணர்ந்தான்.... ஆம்! திரையில் அந்த ஆடவனை கண்களை கட்டி அறைக்குள் கொண்டு சென்ற பெண், அந்த அறையை விட்டு வெளியே செல்ல, இன்னொரு ஆடவன் அறைக்குள் நுழைந்தான்...  ஆணோடு இன்னொரு ஆணுக்கு என்ன வேலை?....என்ன நடக்கிறது? என்பது சண்முகத்துக்கு புரியவில்லை... கட்டப்பட்ட கண்களோடு இருந்தவனின் உடைகளை மெல்ல களைந்தான் புதியவன்... அந்த அதிர்ச்சியில்தான் திரையில் இருந்த சண்முகத்தின் மனம் இயல்புக்கு வந்தது... அப்போதுதான் ஷ்ரவனின் கை சண்முகத்தின் தொடை மேல் மெல்ல நகர்வதை உணர்ந்தான் அவன்....
சட்டென கட்டிலை விட்டு எழுந்துவிட்டான் சண்முகம்... கணினியின் வெளிச்சம் மட்டுமே அறைக்கு வெளிச்சம் கொடுத்தது...
கட்டிலை விட்டு எழுந்த சண்முகம் ஷ்ரவனிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் அறைக்கதவை நோக்கி நகர்ந்தான்....
“ஏய் சண்முகம்!... எங்க போற?” சண்முகத்தின் கையை இழுத்தபடி கேட்டான்...
“நேரமாச்சுங்க.... வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு போவனும்” இடது கையால் தன் வலது கையை பிடித்திருந்த ஷ்ரவனின் கையை விலக்க முற்பட்டான்... ஆனால், ஷ்ரவன் விடுவதாக இல்லை... தன் முழு பலம் கொண்டு சண்முகத்தை இழுக்க, கட்டிலில் தடுமாறி விழுந்தான் அவன்... உடல் பலத்தை பொருத்தவரை சண்முகத்துக்கு பலம் அதிகம்... ஆனால், காலம்காலமாக அடிமைப்பட்ட  மனதின் பலவீனத்தால், சண்முகம் அங்கு முற்றிலும் பலம் குன்றியவனாக ஆகிப்போனான்.... ஆனாலும், ஷ்ரவனின் கைகள் சண்முகத்தின் அந்தரங்க பாகங்களில் பட்டிடும் போதல்லாம், அவன் உடல் துடித்து தன் எதிர்ப்பை காட்டினான்...
“ஒரு அஞ்சு நிமிஷம் பேசாம இரு சண்முகம், நல்லா இருக்கும்”
“ஐயோ வேணாம் விடுங்க... எனக்கு இதல்லாம் புடிக்கல.... அசிங்கமா இருக்கு” படுக்கையிலிருந்து திமிறி எழ முற்பட்டான் சண்முகம்....
“ஒழுங்கா சொல்றத கேளு.... எதாவது சத்தம் போட்டின்னா நீ வீட்டுக்குள்ள திருட வந்துட்டன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்”
இப்படியாக சில வாக்குவாதங்களுக்கு பிறகு, வென்றது ஷ்ரவனின் ஆசைதான்... அந்த அரை மணி நேரமும் ஏதோ நரகத்தில் அகப்பட்டவனாக சண்முகம் துடித்துப்போனான்... தன் ஆதிக்க ஆசையை, பல நாள் காமப்பசியை தீர்த்த பெருமிதத்தில் லேசான சிரிப்போடு குளியலறைக்குள் சென்றான் ஷ்ரவன்.... தூக்கி எறியப்பட்ட எச்சை இலையாக சண்முகம் கண்கள் கலங்க அந்த வீட்டை விட்டு வெளியேறினான்... முழுவதும் கந்தலான மனதுடனும், கசங்கிப்போன மனதுடனும் ஒவ்வொரு அடியும் அந்த தெருவில் எடுத்துவைத்தான்.... கண்கள் சாலையை வெறித்துப்பார்க்க, கால்கள் அனிச்சையாக நடக்க, இது எவற்றிலும் தொடர்பில் இல்லாத மனம் நடந்தவற்றையே சிந்தித்துக்கொண்டு இருந்தது...
கறிக்கடையை கடக்கும்போதுதான் தன் நினைவை மீட்டான்... தான் பறித்துக்கொடுத்த வேப்ப இலையை முழுமையாக தின்பதற்குள், அந்த ஆடு உரித்து கம்பியில் தொங்கவிடப்பட்டு இருந்தது.... “நல்ல இளம் ஆடுங்க, கறி நல்லா ருசியா இருக்கும்” ஆட்டின் மார்புப்பகுதியை வெட்டியவாறே கறிக்கடைக்காரர் ஆட்டின் மகிமையை கறி வாங்க வந்தவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார்... அந்த ஆட்டிற்கும் சண்முகத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... நம்பிக்கெட்டவர்கள்தான் இருவரும்...
உடலும் மனமும் சோர்ந்து போனதாய் உணர்ந்த சண்முகம், வீட்டை நோக்கி நடந்தான்... வாசலில் மீன் நறுக்கிக்கொண்டிருந்த அம்மா, “என்னப்பா சம்முவம், வேலை முடிஞ்சுடுச்சா அதுக்குள்ளையும்?”
“எல்லாம் முடிஞ்சுடுச்சு” வார்த்தைகளில் உயிர் இல்லை...
“சோறு போடவா?... சாப்புடுறியா?”
“வேணாம்மா... பசிக்கல”
“வாத்தியார் ஐயா மவன் ஊர்லேந்து வந்திருக்காகன்னு சொன்னாவளே, பாத்தியா?”
“....”
“வாத்தியார் அம்மாகிட்ட உனக்கு பழைய சட்டை கேட்டேன், அவுக மவன் வந்ததும் தாரேன்னு சொன்னாக... அதான் கேக்குறேன்”
“வேணாம்மா... இனி யார்கிட்டயும் போய் அப்டி சட்டை கேக்காத... கிழிஞ்சத போட்டாலும் அத நம்ம காசுல வாங்கிப்போடலாம்” சண்முகம் இதுவரை இப்படி பேசியதில்லை... சக நண்பர்கள் கம்யூனிச சித்தாந்தம் பேசியபோதும், இவன் ஏனோ பொதுவுடைமை பேசமாட்டான்... “நமக்கிட்ட இல்லாத குறைக்கு அவுககிட்ட அடங்கி நடக்குறது தப்பில்ல” என்பான்... ஆனால், இன்று இப்படி பேசியது அம்மாவிற்கே ஆச்சரியம்தான்....
“சரி விடு... பாத்துக்கலாம்....” வழக்கமான அம்மாவின் பேச்சோடு வீட்டிற்குள் சென்று படுத்துவிட்டான் சண்முகம்.... உறக்கத்தில் அவனுக்கு நிகழ்ந்ததை விட கொடுமையான கனவுகள் வந்தது.... காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட சண்முகத்தை ஓநாய் கூட்டம் துரத்த, அதிலிருந்து மீண்டு குளத்தில் குதிக்க, அங்கோ முதலைகள் கூரிய பற்களோடு அவனை நோக்கி வந்தது... குளத்தின் கரையில் ஷ்ரவன் நின்றான், மிருகங்களிடமிருந்து தப்பித்து அவன் முன்பு போய் நின்றான் சண்முகம்... “அஞ்சு நிமிஷம் அமைதியா இருடா... நல்லா இருக்கும்” என்றபடி சண்முகத்தின் மீது கை வைக்க, திடுக்கிட்டு விழித்தான் சண்முகம்... கனவு!... ஆம், கனவுதான்.... பயத்தில் உடல் நடுக்கும் கொண்டது, உடல் முழுக்க வியர்த்து கொட்டியது...
உடல் முழுவதும் ஏதோ புழு ஊர்வதை போல உணர்வு அவனுக்குள் இடைவிடாமல் தோன்றியது...
“ஏன் அவனுக்கு அடிபணிஞ்சேன்?.... தொட்ட கையை ஒடிச்சு போடாம வந்தது தப்பு!.... அந்த அஞ்சு நிமிஷமும் நரகம் எவ்வளவு வேதனையா இருக்கும்னு அவன் காட்டிட்டான்.... தப்பு செஞ்ச அவன் ஏளனமா சிரிக்குறான், பாதிக்கப்பட்ட நான் தலை குனிஞ்சு வந்தேன்...” தன் மீதே கோபத்தை கொட்டி முடித்தான் சண்முகம்... வெளியே அப்பாவின் குரல் கேட்கிறது, வழக்கத்திற்கு மாறாக இன்று நிதானமாக பேசிக்கொண்டு இருக்கிறார்....
“இன்னையோட நமக்கு புடிச்ச சனியன் விட்டுச்சுடி... சம்முவத்த வாத்தியார் ஐயா மவன் மெட்ராசுக்கு கூட்டிட்டு போறாராம்... அவுன வேலைக்கு சேத்துடுறாராம்... ஏழாயிரம் ரூவா சம்பளமாம்... உசுர பணயம் வச்சு பேக்டரில பாத்த வேலைக்கி, பிச்சைக்கார பயலுவ அஞ்சாயிரம் கொடுத்தாணுவ... இப்ப போற வேலை ஏசி ரூம்புலயாம்.... செலுவி கல்யாணத்துக்கு அவுகளே செலவு செய்ராகலாம்.... ஒனக்கு வைத்தியத்துக்கும் அவுக மதுரைல தெரிஞ்ச ஆஸ்பத்திரில சொல்றோம்னு சொல்லிட்டாக.... நம்ம மவன் வேலை அவுகளுக்கு அம்புட்டு புடிச்சிருக்காம்....” இதை கேட்ட சண்முகத்துக்கு தூக்கி வாரிப்போட்டது... ஒரு பக்கம் தன் குடும்பத்தின் மொத்த கவலைகளுக்கும் விலையாக தன்னையே கேட்கும் ஷ்ரவன்... மறுபக்கம், நடந்த எதுவும் புரியாமல் மகிழ்ச்சியில் குதிக்கும் அப்பா....
அருகில் இருந்த பையை எடுத்தான், பழைய கந்தல் துணிகளை அள்ளி வைத்தான்... பையோடு வெளியே வந்த சண்முகத்தை பார்த்த அப்பா சந்தோஷத்தில், “நான் சொன்னதல்லாம் கேட்டுச்சாடா.... இனி ஒரு கவலையும் இல்ல நமக்கு...” என்றார்....
பதிலெதுவும் சொல்லாமல் அம்மாவை பார்த்தான் சண்முகம்....
“நான் கெளம்புறேன்மா”
“எங்கடா?”
“மதுரக்கி... பேக்டரிக்குத்தான்”
“ஏண்டா?... சம்பள பாக்கி எதுவும் தரணுமா?”
“இல்ல... மறுவடியும் அங்க வேலக்கி போறேன்”
அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல், துணிப்பையை தோளில் போட்டவாறே தெருவில் நடக்க தொடங்கினான் சண்முகம்....
“அவன் திருந்தவே மாட்டான்... புள்ளையா பொறந்திருக்கு, சனியன்.... இன்னையோட அதுக்கு தலை முழுகனும்.... அந்த வெளங்காத பய மறுவடியும் வீட்டுக்கு வந்தா கொன்னே புடுவேன்....” அப்பாவின் வார்த்தைகள் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு தொடர, எதையும் காதில் வாங்காமல் தெருவை கடந்துவிட்டான் சண்முகம்.... இதுவரைக்கும் பேக்டரியில் வேலை பார்த்தபோது உண்டான தோல் நோயும், சுவாச நோயும்தான் கொடுமையான விஷயங்களாக தெரிந்த சண்முகத்துக்கு, அதைவிட கொடுமையான விஷயங்கள் கூட இருக்கிறது என்று புரிய வைத்த வாத்தியாரின் வீட்டை கடக்கும்போது உடல் துண்டாகிப்போனது போல உணர்ந்தான்.... அதை கடந்ததும் மனம் இலகுவாதை போல உணர்ந்தான்... “இனி அவனுடைய பசிக்கு நான் இரையாகப்போவதில்லை” என்கிற ஒற்றை நிம்மதி, பேக்டரியில் சந்திக்க இருக்கும் அத்தனை வேதனைகளுக்கும் நிச்சயம் மருந்தாக இருக்கும்..... (முற்றும்)


(இதுவரை எத்தனையோ கதைகள் இங்கு எழுதப்பட்டிருந்தாலும், கே பற்றிய ஒரு நெகட்டிவ் பிம்பத்தோடு எழுதப்பட்ட இந்த கதை நிச்சயம் சில விமர்சனங்களுக்கு உள்ளாகலாம்....  ஆனால், நம்மை பற்றிய நல்ல விஷயங்களையே எத்தனை காலம் நாம பேசிட்டு இருக்கிறது?... நமக்குள்ள பதிஞ்சு போன சில தவறான விஷயங்களை நாம மாத்திக்கணும் என்பதால்தான் இந்த கதை.... பேப்பர் போடுவனை, லாட்ஜ்’களில் வேலை பார்ப்பவர்கள், நமக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் என்று நம்மவர்கள் செட்யூஸ் என்கிற பெயரில் அடுத்தவங்க மனதை அறியாமல் செய்யும் தவறை, அவங்க கோணத்தில் சொல்லனும்னு எழுதியது இந்த கதை... செட்யூஸ் செய்வதன் ஒரு முகத்தை வைத்தே இதுவரை கதை படிச்ச நீங்க, அதனால பாதிக்கப்படுற இன்னொரு முகத்தையும் பார்க்கணும் என்பதுதான் இதன் நோக்கம்.... நிச்சயம் நான் சொன்ன விஷயம் உங்களுக்கு சரியா சொல்லப்பட்டிருக்கும்னு நம்புறேன்.... மீண்டும் இன்னொரு கதையில் இன்னொரு நாள் சந்திக்கலாம்)
----------------------------------- அன்புடன், உங்கள் விஜய்----------------------------------------