“உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஓரினச்சேர்க்கை எண்ணம்
புதைந்திருக்கும்.... அதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்போது மட்டுமே அது
வெளிப்படும்” என்ற சிக்மண்ட் ப்ராயிட் (sigmond freud) கருத்தும், “பெரும்பாலான ஆண்கள் தங்கள்
வாழ்வில் ஒருமுறையாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்கள்” என்று தன் ஆய்வின்
முடிவில் கின்சே (Alfred kinse) வெளிப்படுத்திய கருத்தும்
நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய கருத்துகள்.... நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் சொன்ன
இந்த கருத்துகளின் உண்மைத்தன்மையை நம்மில் நிறைய பேர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை
என்பதுதான் நிதர்சனம்.... வெளிப்படையாக பார்க்கும்போது இரண்டு கருத்துகளுமே “இது
என்ன முட்டாள்த்தனமான கருத்து!” என்றே சிந்திக்க தோணும்.... ஆனால், அந்த
முட்டாள்த்தனமான கருத்துக்குள் ஆழப்புதைந்திருக்கும் ஒருசில அறிவியல் உண்மையையும் நாம்
பேசுவதற்காகத்தான் இந்த கட்டுரை...
அதற்கு முன்பு “ஒருபால் ஈர்ப்பு” என்பதையும்
“ஓரினச்சேர்க்கை” என்பதையும் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமும் இங்கே
உள்ளது.... ஓரினச்சேர்க்கை என்பது ஒரு செயல் சார்ந்த விஷயம்... ஆணோடு ஆணும்,
பெண்ணோடு பெண்ணும் எவ்வித உணர்வு ரீதியிலான தொடர்புமின்றி, நிகழ்கால காம
எண்ணத்தின் வடிகாலாக உடலுறவு கொள்ளும் அந்த செய்கைக்கு பெயர்தான்
ஓரினச்சேர்க்கை... இந்த செய்கையில் கே, ஸ்ட்ரைட், பைசெக்சுவல் போன்ற பாகுபாடுகள்
கிடையாது... அதே நேரத்தில் ஒருபால் ஈர்ப்பு என்பது உணர்வு சார்ந்த விஷயம்...
உடலுறவுக்கு அப்பாற்பட்டு, தன் பாலினத்தை சேர்ந்த நபருடன் உணர்வுப்பூர்வமாக வாழ
எத்தனிக்கும் நபர்கள்தான் ஒருபால் ஈர்ப்பாளர்கள்.... முன்னது சூழலின் விளைவு,
பின்னது மரபணு சார்ந்த வெளிப்பாடு... பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு
ஆணுடன் இன்னொரு ஆணின் உடல் ரீதியான தொடர்புக்கு பெயராக “ஓரினச்சேர்க்கை” என்ற
பெயரை சூட்டினர்... ஆனால், அப்போது அந்த சேர்க்கைக்கு பின்னால் ஒரு மரபணு சார்ந்த
விஷயம் இருப்பதை அறிவியல் கண்டுபிடிக்கவில்லை... ஆனால், இரண்டு ஒருபாலினத்தவரின்
உறவுக்கு பின்னால் அறிவியலும், மரபணுவும் இருப்பதை உணர்ந்தபிறகும் பழைய
“ஓரினச்சேர்க்கை” பதத்தையே அந்த ஈர்ப்புக்கு இன்றும் பயன்படுத்துவது முறையல்ல என்ற
கருத்தின் விளைவாகவே, இப்படி “ஓரினச்சேர்க்கை, ஒருபால் ஈர்ப்பு” என்ற இரண்டு
பதத்தையும் வெவ்வேறாக இங்கே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்....
இப்போ ப்ராயிட் மற்றும் கின்சே சொன்ன கருத்துகள் உங்களுக்கு
புரிந்திருக்கலாம்... பெரும்பாலான பள்ளி கல்லூரி விடுதிகள், ஆண்கள் மட்டும்
தங்கும் விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் நிறைய ஓரினச்சேர்க்கை
நிகழ்வுகளை நாம் கண்டிருக்கலாம், கேட்டிருக்கலாம்... அவைகளுள் பெரும்பாலானவை
ஓரினச்சேர்க்கை தானே தவிர, ஒருபால் ஈர்ப்பு என்பது அங்கு குறைவுதான்.... இந்தியா
போன்ற கலாச்சாரம் காக்கும் நாடுகளில் இன்னும் பதின்ம வயது ஆண்களோடு பெண்கள்
பேசுவதை கூட கலாச்சார சீர்கேடாக பார்க்கிறார்கள்... பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்
ஆண்களோடு பெண்கள் பேசக்கூட வாய்ப்புகள் குறைவாக உள்ளன.... இப்படிப்பட்ட சூழலில்
இயற்கையாக ஒரு பதின் வயது ஆணின் உடலுக்குள் நிகழும் ஹார்மோன் மாற்றத்தின் விளைவான
உடல் தேவைகளை பூர்த்தி செய்ய இன்னொரு பெண்ணால் முடியாது.... அப்போ, அந்த காமத்தீயை
அணைக்க, தன் பாலினத்தை சேர்ந்த நபரை அணைக்கிறான்... இப்படிப்பட்ட வடிகால்களின்
வெளிப்பாடான ஓரினச்சேர்க்கை, பின்னாளில் ஒரு பெண்ணுடனான உறவை அனுபவிக்க தொடங்கிய
பிறகு, ஆண்களின் மீதான காம எண்ணம் தொடராமல் நிறுத்தப்பட்டும் விடுகிறது.... அதனால்,
ஓரினச்சேர்க்கை செய்கையில் ஈடுபடும் எல்லா மனிதர்களும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள்
கிடையாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்....
இது மனிதர்களில் மட்டுமல்ல, விலங்குகளில் கூட சாதாரணமான
ஒன்றுதான்.... ஒருபால் ஈர்ப்பு விலங்குகளுக்கு அப்பாற்பட்டு, நாம் நிறைய
நேரங்களில் ஓரினச்சேர்க்கை செயல்களில் ஈடுபடும் விலங்குகளை பார்த்திருப்போம்....
ஒரு ஆண் நாய் இன்னொரு ஆண் மீது படர்வதையும், ஒரு காளை மாடு இன்னொரு காளை மீது
பின்னேறுவதையும் நாம் கவனித்திருக்கலாம்.... அவை பெரும்பாலான நேரங்களில்
ஓரினச்சேர்க்கை மட்டுமே தவிர, ஒருபால் ஈர்ப்பு கிடையாது... நான் மேலே மனிதர்களுக்கு
குறிப்பிட்ட “வடிகால்” காரணம் தவிர்த்து, “இதை முயற்சி செஞ்சு பார்ப்போமே!...
நல்லாத்தான் இருக்கும்!” என்ற ஒரு ஆர்வத்தின் வெளிப்பாடாக கூட அந்த செய்கைகள்
விலங்குகளுக்குள் நிறைந்திருக்கும்....
மதங்கள் உருவாகுவதற்கு முன்பு காணப்படும் பண்டைய கிரேக்க,
ரோமானிய, எகிப்து கலாச்சாரங்களில் இப்படிப்பட்ட பாலீர்ப்பு வேறுபாடுகள்
நிலவியதில்லை.... இப்போது கலாச்சார ரீதியாக கட்டப்பட்டிருக்கும் ஹோமோபோபிக்
நிலைமையின் விளைவால்தான் நம் நாட்டில் கூட தன் பாலீர்ப்பை தானே ஏற்க மறுக்கும்
நிறைய நபர்கள் வாழ்கிறார்கள்.... தன் வாழ்வில் வடிகால்களுக்காக ஓரினச்சேர்க்கையில்
ஈடுபட்ட எண்ணற்ற ஸ்ட்ரைட் நபர்கள்தான், இங்கே “ஒருபால் ஈர்ப்பை” தவறென்று கை
நீட்டுகிறார்கள்...
சமீபத்தில் ஒரு ஸ்ட்ரைட் நபரின் வெளிப்படையான,
ஓரினச்சேர்க்கை ஆசை பற்றி ஒரு தளத்தில் படித்ததன் விளைவாகத்தான் இந்த கட்டுரை
எழுதினேன்.... அந்த நபர் தன்னை ஸ்ட்ரைட் என்று சொல்லிக்கொள்பவர்... திருமணமாகி
மனைவியுடன் இனிதாக வாழ்பவர்... ஆனால், அவருக்கு உடலுறவில் ஒரே ஒரு குறை... வாய்வழி
புணர்ச்சியில் அந்த நபருக்கு அதிக ஈடுபாடு உண்டு, ஆனால் மனைவிக்கோ அதில்
விருப்பமில்லை... ஓரிரு முறை நிர்பந்திக்க, மனைவியுடன் சண்டை வந்துவிட்டதாம்....
அப்போது யோசித்தபோதுதான், இணைய அறிவின் மூலம் “கே தளங்களை” அறிந்தார்... அந்த
தளங்களில் இணைந்து தன்னை “ப்யூர் டாப்” என பிரகடனப்படுத்திக்கொண்டு, மற்ற ஆண்கள்
மூலம் வாய் வழி புணர்ச்சியை ரசிக்கிறாராம்.... பெரும்பாலும் கட்டிப்பிடித்தல்களை
கூட மறுக்கும் அந்த நபரின் ஒரே எண்ணம் வாய்வழி புணர்ச்சி மட்டுமே....
“ஓரல் செக்ஸ் தான் உங்களுக்கு விருப்பம்னா நீங்க உங்க
மனைவியை தாண்டி வேற பெண்களை தேடி இருக்கலாமே?” என்றேன் நான்....
“பெண்களோட டேட் போறது ரொம்ப ரிஸ்க் சார்... வெளில தெரிஞ்சா
வேற விதமான ப்ராப்லம்ஸ் வரலாம்... இங்க எவ்வளவோ பசங்க இருக்குறப்போ நான் ஏன்
பெண்களோட போய் ரிஸ்க் எடுக்கணும்?” என்றார் அவர்....
இப்படி நீங்கள் கடக்கும் எத்தனையோ “ப்யூர் டாப்”களுக்கு
பின்னால் இதுபோன்ற ஒரு வித்தியாசமான மனநிலை இருந்திருக்கலாம்...
ஆக, நான் இங்கே தெளிவாக கூற வருவது, “ஓரினச்சேர்க்கையில்
ஈடுபடும் எல்லோரும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இல்லை” என்பதுதான்...
அப்போ, “ஒப்பீடு ரீதியாக எதிரின சேர்க்கையை விட,
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்களுக்கு பாலியல் நோய்கள் தாக்கும் ஆபத்து அதிகம்”
என்று சிலர் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த ஆபத்து ஒருபால் ஈர்ப்பு
நபர்களால் அல்ல என்பதையும், அது பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையால் விளையும் ஆபத்து
என்பதையும் பொதுத்தளங்கள் உணரவேண்டும்....... அதுமட்டுமல்லாமல், இப்படி
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெரும்பாலான ஸ்ட்ரைட் நபர்கள், தங்களுக்கு தோன்றியது
போலவே மற்றவர்களுக்கும் ஓரினச்சேர்க்கை ஒரு வடிகால் தேவைதான், அதற்கு எதற்காக
உரிமை? சட்டம்? என்றல்லாம் கேட்கிறார்கள்... ஆனால், ஒருபால் ஈர்ப்பு என்பது மரபணு
சார்ந்த விஷயம் என்பதையும், அது பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும்,
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஸ்ட்ரைட் நபர்களுக்கான வடிகால்கலாக இல்லாமல் இது
அவர்களின் (கே & லெஸ்பியன்) வாழ்க்கைக்கான அவசியம் என்பதையும் ஒவ்வொரு
ஸ்ட்ரைட் நபரும் புரிந்துகொள்ள வேண்டும்...
இன்னொரு விஷயத்தையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்...
இப்போது நாம் சட்டரீதியான உரிமைகள் வேண்டும்! என்று போராடுகிறோமே, அந்த
போராட்டமெல்லாம் ஓரினச்சேர்க்கை என்கிற செயலுக்கான முன் அனுமதி மட்டுமே...
ஒருபால் ஈர்ப்பாளர்களின் திருமணத்தை ஏற்கும் சட்டம்
உருவாக்கப்படும்போது மட்டுமே, அது ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கான உரிமை என்று
கருதப்பட வேண்டும்....
அதுவரை சட்டப்பிரிவு 377 நீக்கம் என்பதுகூட படுக்கைக்கான உரிமையை கொடுக்குமே ஒழிய,
வாழ்வதற்கான உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படத்தான் போகிறது... ஆனால், அது நிச்சயம்
ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நீங்கள் எல்லோரும் நம்புவதை போல நானும்
நம்புகிறேன்...
“ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் ஒருபால் ஈர்ப்பு
நபர்கள் இல்லை...!” என்கிற ஆணித்தரமான உண்மையை இன்னொரு முறை அடித்து கூறுவதோடு,
கட்டுரையை நிறைவு செய்கிறேன் நண்பர்களே....!