Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 21 April 2014

GAYS பற்றிய 10 பிம்பங்களும், அதன் உண்மைகளும்...


ஒருபால் ஈர்ப்பை பற்றி நாம் எவ்வளவுதான் விளக்கினாலும் கூட, தொடர்ந்து அதனைப்பற்றிய பொதுத்தள மக்களின் தவறான புரிதல்கள் இன்னும் மாறவில்லை... அதிலும், ஒருசில குறிப்பிட்ட தவறான எண்ணங்களை வைத்துதான் அவர்கள் தொடர்ந்து நம்மை புறக்கணிக்கிறார்கள்... இந்த கட்டுரையில், பொதுத்தள மக்கள் நம்மை பற்றி மனதில் கொண்டிருக்கும் பத்து தவறான புரிதல்களை பற்றியும், அதன் உண்மை நிலையை பற்றியும் கூற விரும்புகிறேன்...
1.      ஒருபால் ஈர்ப்பல்லாம் மேற்கத்திய கலாச்சாரம்பா.... அதல்லாம் நம்ம பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் ஒத்துவராது....
நூற்றாண்டுகளுக்கு முன்பு இதே ஒருபால் ஈர்ப்பை தவறுன்னு சொன்னது நீங்க சொல்ற அதே மேற்கத்திய கலாச்சாரம் தான்... ஆனால், அந்த அறிவியல் வளர்ச்சி அடையாத காலத்திலும் கூட ஒருபால் ஈர்ப்பை இயல்பான உறவாக சுட்டிக்காட்டியது நம் பாரம்பரியமிக்க காமசூத்திர நூல்... இன்னிக்கு நீங்கதான் மேற்கத்திய தாக்கத்தின் விளைவாக இன்னும் ஒருபால் ஈர்ப்பை தவறுன்னு சொல்லிட்டு இருக்கீங்க... அறிவியல் வளர்ச்சியின் விளைவாக நாம் அன்றைக்கு சொன்ன உண்மையை இன்றைக்கு ஏற்க முன்வந்துள்ளனர் மேற்கத்திய நாடுகள்... அதனாலதான் சொல்றேன், இந்த உறவை தவறுன்னு சொல்ற உங்களைத்தான் இன்னும் மேற்கத்திய தாக்கம் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது...

2.      ஒரு ஆண் ஆணைத்தான் காதலிக்கனும்னா, அதுக்கு பேசாம அவன் பெண்ணா மாறிடலாமே?...
இது ரொம்பவே அடிப்படை புரிதலற்ற வாதம்... திருநங்கைகளுக்கும், ஒருபால் ஈர்ப்பினருக்கும் வேறுபாடு தெரியாத அடிப்படைவாதிகளின் வாதம் இது... திருநங்கை என்பவர் ஆணாக இருந்தாலும், தன்னை பெண்ணாகவே முழுமையாக உணர்பவர்... பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே வாழ விரும்பும் அவர்களுக்கு பாலீர்ப்பு என்பது இரண்டாம் பட்சமான விஷயம்தான்... ஆனால், ஒருபால் ஈர்ப்புள்ள ஆண்கள் முழுமையான ஆண்தான்... அவர்கள் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்வது மட்டுமே அவர்களின் பிரதான மாறுபாடு... ஆண் மீது ஈர்ப்பு கொள்ளும் ஆணை, பெண்ணாக மாற சொல்வதென்பது “தலைவலின்னு டாக்டர் கிட்ட போனா, தலையை வெட்டிக்க சொல்ற மாதிரி.... நீங்க சொல்ற அடிப்படை கருத்து போல, தலை இருந்தாத்தானே வலிக்கும் என்பது போலத்தான்...”... ஆக, பாலின விருப்பம் என்பது வேறு, பால் ஈர்ப்பு வேறு என்பதை கொஞ்சம் பிரித்து பார்த்து உணருங்கள்....

3.      கே ஒரு மனநோய்.... அதை எளிதா குணப்படுத்திடலாம் ....
இப்டி உங்களில் சிலர் சொல்ல, எங்களில் பலர் நித்தமும் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்... 1970களிலேயே ஒருபால் ஈர்ப்பு மனநோய் இல்லை என்று அறிவியல் தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லிடுச்சு... ஆனால், இன்னமும் “ஒருபால் ஈர்ப்புக்கு சிகிச்சை உண்டு”ன்னு சொல்லி சிலர் ஏமாற்றுவதும், பலர் ஏமாறுவதும் வாடிக்கையாக நடந்து வருது... “இதுக்கு சிகிச்சை இருக்கா?” என்று என்னிடம் பலர் கேட்கும்போது நான் சொல்லும் பதில் இதுதான்... “சிகிச்சை இருக்கு... ஒருபால் ஈர்ப்பு எண்ணத்தை மாற்ற அல்ல... அதை நோயாக கருதும் உங்க மனநிலையை மாற்ற” என்பதுதான்... அதே பதிலைத்தான் இப்பவும் சொல்றேன்... இனியும் எங்கள் பிள்ளைகளை ஏமாற்றி படுகுழிக்குள் தள்ள முனையாதீர்கள்....

4.      ஒருபால் ஈர்ப்பாலதான் எயிட்ஸ் நோய் பரவுது.... அவங்க ஈடுபடும் ஆசனவாய் புணர்ச்சிதான் அந்த நோய்க்கான காரணம்...
முதல்ல ஒருவிஷயத்த தெளிவா புரிஞ்சுக்கணும்... ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எல்லாரும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் இல்லை, ஒருபால் ஈர்ப்பினர் எல்லோரும் ஆசனவாய் புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் இல்லை, ஆசனவாய் புணர்ச்சி மட்டுமே எயிட்ஸ் நோய்க்கு முக்கிய காரணி இல்லை.... சந்தர்ப்பமும் சூழலும் இருப்பிடமும் சில ஸ்ட்ரைட் நபர்களையும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்துவது உண்டு... சிறைச்சாலை, விடுதிகள், ராணுவ முகாம்கள் என்று ஆண்கள் ஒன்றாக வாழவேண்டிய நிர்பந்தத்தில் வாழும் ஆண்கள், தங்கள் அப்போதைய வடிகால்கலாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்... அப்படி ஈடுபடும் வெகுசிலரே ஒருபால் ஈர்ப்பு நபர்கள்... அத்தகைய நபர்கள் ஒரு பெண்ணுடனான உறவுக்கு பிறகு ஓரினச்சேர்க்கையை தொடரமாட்டார்கள்... ஆக, பால்வினை நோய்க்கு காரணமாக நீங்கள் சொல்லப்படும் ஓரினச்சேர்க்கைக்கு ஒருபால் ஈர்ப்பு நபர்களை விட, சந்தர்ப்ப தாகம் தீர்க்க முனையும் ஸ்ட்ரைட் நபர்கள்தான் முக்கிய காரணம்... அடுத்து, ஆசனவாய் புணர்ச்சியில் ஒருபால் ஈர்ப்பினர் மட்டும்தானா ஈடுபடுகிறார்கள்?... உங்கள் மனசாட்சியை தொட்டு சொன்னால், “இல்லை” என்றுதான் சொல்வீர்கள்... நிறைய ஸ்ட்ரைட் நபர்கள், தங்கள் மனைவியிடமும் ஆசனவாய் புணர்ச்சியில் ஈடுபடுவதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் நீங்கள்... அதேபோல, எல்லா ஒருபால் ஈர்ப்பினரும் அந்த வகை புணர்ச்சியில் ஈடுபடுவதில்லை... ஆக, பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொள்ளும் எல்லோரையும் எயிட்ஸ் நோய் பாதிக்கவே செய்யும்.... எச்.ஐ.வி கிருமிக்கு சமபால் எதிர்பால் உறவு என்ற பேதமெல்லாம் இல்லை...

5.      சிறுவயதுல பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்டவர்கள்தான் பெரியவர்கள் ஆகுறப்போ ஒருபால் ஈர்ப்பளாரா மாறிடுறாங்க.....
 சமீபத்தில் ஒரு ஆய்வை பார்த்தேன்... நான்கில் ஒரு பெண் குழந்தையும், ஆறில் ஒரு ஆண் குழந்தையும் தங்கள் சிறுவயதில் வன்புணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வு... அதே ஆய்வில், அப்படி வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட அந்த குழந்தைகள் எல்லோருமே ஒருபால் ஈர்ப்பு நபர்களாக மாறவில்லையாம்.... சிறுவயதில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் மனரீதியான குழப்பமோ, பிறழ்ச்சியோ ஏற்படுவது உண்மை என்றாலும், அது எந்த விதத்திலும் அவர்களை சமபால் ஈர்ப்பினராக மாற்றவில்லை என்பதுதான் உண்மை.... அதனால்தான் சொல்கிறேன், குழந்தைகள் வன்புணர்ச்சிக்கும் பாலீர்ப்புக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை...

6.      ஒருபால் உறவல்லாம் நம்பகத்தன்மை இல்லாத உறவுப்பா.... இன்னிக்கு லவ்’னு சொல்வாங்க, நாளைக்கு பிரேக்கப்னு பிரிஞ்சிடுவாங்க.... நம்பகத்தன்மை அறவே இல்லாத உறவுப்பா....
 இப்படி யோசிக்குறவங்க ஒரு கற்பனை பண்ணுங்க நண்பர்களே... நாளைக்கே நம்ம நாட்டுல எதிர்பால் உறவு குற்றமாக பார்க்கப்ப்படும்னு சொல்றாங்க... ஆண்கள் பெண்களை திருமணம் செய்யக்கூடாதுன்னு சொல்றாங்கன்னு வச்சுப்போம்... அடுத்த ஒரு வருஷத்துல நிலைமை எப்படி இருக்கும்?... இப்போ நீங்க சொல்ற ஒருபால் ஈர்ப்பு உறவை விட, எதிர்பால் உறவு அதிக நம்பகத்தன்மை அற்றதாக ஆகிடும்... ஒரு ஆணும் ஆணும் காதலிப்பதை உலகம் இயல்பாக பார்க்கும் நிலை வந்து, இருவருக்கும் சொந்தங்களின் முன்னால கல்யாணம் பண்ணி வச்சு, சட்ட ரீதியாக அவங்க சேர்ந்துதான் வாழணும்னு கட்டாயப்படுத்தி வைக்குற அளவுக்கான சமூக மாற்றம் இங்க வந்ததுக்கப்புறம் நீங்க எங்க உறவுகளின் ஸ்திரத்தன்மை பற்றி பேசுங்க... குடும்பம், சமூகம், சட்டம் எல்லாத்தையும் எதிர்த்து இன்றைக்கு எங்கள் சமூகத்தில் நூறில் ஒரு காதலாவது வருடங்களை கடந்து தொடர்கிறது என்றால், எதிர்பால் உறவை காட்டிலும் எங்கள் உறவு உணர்வுப்பூர்வமானது என்பதை நீங்க புரிஞ்சுக்கணும்... இன்றைக்கு மெட்ரோ சிட்டிகளில் நாம சாதாரணமா பார்க்குற ஆண் பெண் லிவிங் டுகெதர் வாழ்க்கைகளில், எத்தனை இணைகள் மாதங்களை கடந்து பயணிக்குது?னு கொஞ்சம் அலசிப்பாருங்க.... மேற்குலகில் இதுக்கு ஒரு ஆய்வும் பண்ணினாங்க... பன்னிரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பின் ஆண் பெண் உறவில் காணப்பட்ட விவாகரத்துகளின் சதவிகித்தைவிட, ஆண் ஆண் உறவின் பிரேக்கப் விகிதம் மிகக்குறைவாம்... ஆக, எங்களை வாழவிட்டு, அதற்கு பிறகு எங்களின் நம்பகத்தன்மை பற்றி நீங்க ஒரு முடிவுக்கு வாங்க...


7.      கே எல்லாரும் பெண்தன்மை கொண்டவர்கள்... உடல்வாகும், பெண்களை போல நளினமான தோற்றமும் நடவடிக்கைகளும் உடையவர்கள் எல்லாம் கே தான்...
அநேகமாக இந்த மூடத்தனம் என்பது சினிமா மூலம் உருவாகியிருக்கும் என்று நினைக்குறேன்... பெண் தன்மை உடையவர்களுக்கு ஹார்மோன்கள், வளரும் சூழல் போன்றவைதான் காரணமே தவிர, அதற்கும் பாலீர்ப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை... பெண் தன்மை உள்ள ஸ்ட்ரைட் ஆண்கள் பலரும் கூட இந்த மூடநம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்... எத்தனையோ விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், கடுமையான உடல் அமைப்பை கொண்ட கம்பீரமான ஆண்கள், ஆல்பா ஆண்கள் என நிறையபேர் ஒருபால் ஈர்ப்பு நபராக இருப்பதை நாம் பார்க்க முடியும்... அதனால், இன்னும் பெண் தன்மை உடையவர்களை கே’யாக காட்டும் சினிமா கதைகளை நம்பாமல், கொஞ்சம் நிஜ உலகிற்கு வந்து பாருங்கள்...

8.      கே வந்து ஒரு நாகரிக ட்ரெண்ட்... கே’க்கள் எல்லாரும்  தலையில் ஸ்பைக்ஸ் வச்சுகிட்டு, காதில் கடுக்கன் மாட்டிகிட்டு, சதா சர்வகாலமும் பார்களில் தவம் கிடக்கும் நாகரிக வளர்ச்சியின் விபரீத விளைவுகள்
என்றைக்கு ஒருபால் ஈர்ப்பை மேற்கத்திய கலாச்சாரம்னு நம்ம ஆளுங்க சொல்ல தொடங்கினாங்களோ, அப்போதிருந்தே இந்த தவறான புரிதலும் நம்மை துரத்திக்கொண்டு தான் இருக்குது... மேற்கத்திய தாக்கத்தின் விளைவாக உருவான மெட்ரோ கலாச்சாரங்களோடு, ஒருபால் ஈர்ப்பையும் அவங்க சேர்த்ததுதான் இந்த விளைவுக்கு காரணம்... “ஒரு லுங்கி கட்டிக்கிட்டு, லோடு மேன் வேலை செய்து, இந்தியாவுக்கு மேற்கே என்ன இருக்கு?ன்னே தெரியாத பல லட்சம் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இங்கே வாழ்கிறார்கள்”... நீங்க சொல்ற நாகரிக வளர்ச்சியை அவங்க இன்னும் வேடிக்கை கூட பார்த்ததில்லை... அதனால், பாலீர்ப்பை நாகரிக வளர்ச்சியின் அடையாளமாக பார்ப்பதை விட்டுவிட்டு, ஆதிகாலத்தில் இருந்தே அது நம் கலாச்சாரத்தோடு தொடர்ந்து பயணிக்கிறது என்பதை உணருங்கள்...


9.      சிறுவயதில் ஆண்கள் மீது வெறுப்பு கொண்ட பெண்கள் லெஸ்பியன்’களாகவும், பெண்கள் மீது வெறுப்பு கொண்ட ஆண்கள், கே’க்களாகவும் மாறிடுறாங்க ... அதனால வளர்ப்புதான் இதுக்கல்லாம் காரணம்...
நம்மை மனநோய் உள்ளவர்கள் என்று சிலர் நேரடியாக சொல்வதற்கு பதிலாக, இப்படி சுற்றி வளைத்து சொல்றாங்க.... இது முழுக்க முழுக்க தவறான வாதம்தான்... இன்னும் சொல்லனும்னா, கே’க்களில் பெரும்பாலானவர்கள் பெண்களின் மீது, குறிப்பாக அவங்க அம்மா மீது அளவுக்கதிகமான பிணைப்பு வைத்திருப்பவர்கள் தான்.... பாலீர்ப்பு என்பது ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டு விடும், வளரும் சூழல் எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நபரின் பாலீர்ப்பை மாற்றிவிடாது...

10.  கே எல்லாரும் செக்ஸ் வெறி பிடித்தவர்கள், பார்க்கும் எல்லா ஆண்களோடும் படுக்க விரும்புபவர்கள்......
ஒரு அடிப்படையற்ற புரிதலால் ஒரு சமூகத்தை இவ்வளவு கேவலமாகவும் நினைக்கவும், பேசவும் முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கு... நம் இந்தியாவில் நித்தமும் நடக்கும் பாலியல் வன்புணர்ச்சிகளில் எத்தனை குற்றங்களுக்கு எங்கள் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் காரணமா இருக்காங்க?ன்னு உங்களால ஒரு ஒப்பீடு செய்ய முடியுமா?... பத்து வயது குழந்தை பூங்கொடியை நான்கு கொடிய மிருகங்கள் கதறக்கதற கற்பழித்தார்களே, ரத்தம் வழிந்தபோதும் கூட பவுடர் பூசி அதை தொடர்ந்தார்களே, அவர்கள் கே நபர்களா?... ஸ்ட்ரைட் ஆண்கள் எல்லோரையும் இதன்மூலம் செக்ஸ் வெறி பிடித்தவர்கள் என்று சொல்ல முடியுமா?... முடியாது, கூடாது... பாலீர்ப்பு பேதங்கள் இல்லாமல் எல்லா பிரிவுகளிலுமே காம வெறி பிடித்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள்... அதை வைத்து ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டுவது ஆரோக்கியமான சமூகம் உருவாக வழிவகுக்காது.... அதனால, எங்களையும் நீங்க புரிஞ்சுக்கணும் நண்பர்களே...

இந்த பத்து விஷயங்களை தாண்டி இன்னும் எத்தனையோ தவறான புரிதல்களும் நம்மீது இந்த சமூகம் கொண்டிருக்கிறது என்றாலும், இந்த பத்தும்தான் அதில் பிரதானம்.... நிச்சயம் நம்மீதான தவறான புரிதல்களை நம் பொதுத்தள நண்பர்கள் இதன்மூலம் உணர்வார்கள் என்று நம்புறேன்...

10 comments:

 1. nalla katturai. 1- 9 nammudaya kayil illai samoogathin paarvai endru sollividalam. AAnal no 10. naamum gavanm kolla vendiya ondru
  theruvil pogum bodhu kattudal konda vaseegaramana aanmagn ponal nammavar oru ganam avanai meendum pparpathum avan kaalgalukku naduvil paarvayai oda viduvathum oru vagai pervertedness( veri) endru than kollavendum. intha perverted ness anegamaaga namil palarukkum undu naan koodalaga.. Ithai naam kattupaduthikondal allathu matravar kaanatha vannam ithai seithal nam meedhu samoogathukku irukkum karuthu maaruvatharku oru vazhi pirakkam.
  ithu en thaazhmayana karuthu. kutramaga pattal manikkavum

  ReplyDelete
 2. உண்மைதான் அண்ணா.... ஆனாலும், தெருவில் செல்லும் பெண்களின் கழுத்திற்கு கீழ் வெறித்து பார்க்கும் ஆண்களை எங்கும் நாம் பார்க்கத்தானே முடியுது.... தனிநபர் கட்டுப்பாடு இரண்டு தரப்பிலும் இருக்க வேனும்தான் அண்ணா... நம்மவர்களும் நிச்சயம் அதை புரிஞ்சுப்பாங்க.... கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா...

  ReplyDelete
 3. Hai anna, nenga solra ellam sari than, ana ennala en unarchikalai control panna mudiyala, thinamum remba kasta padaren, enakku nimmathiye irukka mattenguthu ithanala, enakku ethavathu advice solla mudiyuma???

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி... "காமம் தப்பில்லைங்க" என்ற கட்டுரையை நீங்க படிச்சு பாருங்க, மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்க...

   Delete
 4. Nice post! Will certainly create an awareness!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணாச்சி...

   Delete
 5. Why don't you publish it as a pamphlet and distribute it in collegees through any Gay NGOs Vicky? This is an excellent article that needs to be shared with a larger section of the society. Please think about it when a judgement comes against sec. 377 again.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ஜான்.... உங்க கருத்து நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.... ஆனால், அச்சிட்டு விநியோகிப்பதை பற்றி அமைப்புகள் தானே முடிவு செய்யனும்... அவங்க முன்வந்தால் தாராளமாக செய்யலாம்...

   Delete
 6. very nice and awesome post vijay...proud of you vijay

  ReplyDelete
 7. Does homosexual orientation happen due to genetic or environment?
  \

  ReplyDelete