Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 11 January 2015

ஏசெக்சுவல் நபர்கள் (Asexuality) ஏலியன்'கள் இல்லை...








“ஆணுக்கு பெண்தான்” என்கிற எதிர்பால் ஈர்ப்பு அடிப்படைவாதத்தை நொறுக்கி, சமபால்/இருபால் ஈர்ப்புகளும் இயற்கையான ஒன்றுதான் என்று உலக அளவில் உண்மையை நிலைநாட்டவே நமக்கு அரை நூற்றாண்டு கால போராட்டம் தேவைப்பட்டது... இந்நிலையில் எதிர்பால், சமபால், இருபால் ஈர்ப்புகளை தாண்டியும் வேறுசில பாலீர்ப்புகள் உண்டு என்ற உண்மை சமீபகாலங்களில்தான் விழிப்புணர்வு அடையத்தொடங்கி உள்ளது... அப்படிப்பட்ட பாலீர்ப்புகளில் முக்கியமான ஒன்றான “ஏசெக்சுவாலிட்டி” (Asexuality) பற்றிதான் இங்கே பேசப்போகிறோம்...

அது என்னங்க ஏசெக்சுவாலிட்டி? என்று கேட்பவர்களுக்கு முதலில் அதன் எளிமையான விளக்கத்தை தந்துவிடுகிறேன்... பாலீர்ப்பு இல்லாதோர்தான் இந்த ஏசெக்சுவல் (Asexual) நபர்கள்... ஆண், பெண், திருநர் என்று எந்த தரப்பு மனிதர்கள் மீதும் இந்த ஏசெக்சுவல் நபர்களுக்கு ஈர்ப்பு உண்டாகாது, உடலுறவு கொள்ளும் எண்ணம் வராது... இந்த ஏசெக்சுவல் நபர்களும் கூட ஆண், பெண், திருநர் என்று எல்லா தரப்பிலும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்...

இப்படியுமா ஆட்கள் இருக்கிறார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு எழலாம்... நியூட்டனின் மூன்றாம் விதி, “ஒவ்வொரு வினைக்கும், ஒரு எதிர்வினை உண்டு” என்பதுபோல பாலீர்ப்பு இருப்பவர்கள் இந்த உலகத்தில் இருப்பதை போலவே, பாலீர்ப்பு இல்லாதவர்களும் உண்டு... அவர்களின் “இல்லாத பாலீர்ப்பும்” இயற்கையானதே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்...

சரிங்க, பாலீர்ப்பே இல்லைன்னு சொல்லப்படுற நபர்களை எதற்கு பாலீர்ப்பு வகைக்குள் சேர்க்குறீங்க? என்ற லாஜிக்கான கேள்வியை சிலர் கேட்கலாம்... எண்களில் “பூஜ்யத்திற்கு” மதிப்பு இல்லை என்பதற்காக, அந்த எண்ணை எண்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டோமா என்ன?.. அதனால், பெரும்பான்மையான எதிர்பால் ஈர்ப்பு சமூகத்தால் புறக்கணிக்கப்படும் பாலீர்ப்பு சிறுபான்மையினர் பட்டியலில் இந்த ஏசெக்சுவல் நபர்களுக்கும் இடமுண்டு...

இத்தகைய பாலீர்ப்பு பற்றி சமீப காலங்களில்தான் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது... இந்த பாலீர்ப்பு இல்லாத சூழலுக்கு காரணங்கள் கூட ஆராய்ச்சி வடிவில்தான் இன்னும் இருக்கிறது... ஆனால், இந்த ஏசெக்சுவாலிட்டி வகைக்குள் சிக்கி, தனது பாலீர்ப்பை பற்றியே புரியாத குழப்பத்தில் உலகில் கோடிக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை.... அவர்களின் குழப்பங்களுக்கு விடைசொல்லத்தான் உலக அளவில் ஏசெக்சுவாலிட்டி பற்றி விழிப்புணர்வு கொடுக்க பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன... அவற்றுள் முக்கியமாக Asexual Visibility and Education Network (AVEN) என்ற அமைப்பு 2001ம் ஆண்டு டேவிட் ஜே அவர்களால் தொடங்கப்பட்டு, உலக அளவில் இதற்கான விழிப்புணர்வை கொடுத்துவருகிறது...

2004ஆம் ஆண்டு பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், கிட்டத்தட்ட 1% பிரித்தானியர்கள் இந்த ஏசெக்சுவாலிட்டி வகைக்குள் வகைப்படுத்தப்பட்டார்கள்... இந்த ஆய்வு முடிவு உலக அளவில் ஆய்வாளர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது... ஏசெக்சுவாலிட்டி பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லாத நிலையில், ஒரு சதவிகித மக்களை இந்த வகைக்குள் இணைக்கமுடிகிறது என்றால், முழுமையான விழிப்புணர்வு கிடைத்தால், இந்த விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என்று ஏசெக்சுவாலிட்டி பற்றிய ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள்..... அதன்பிறகுதான் இந்த பாலீர்ப்பு பற்றி ஆய்வு செய்யும் அவசியம் பற்றி ஆய்வாளர்கள் உணர்ந்து ஆய்வுகளை முன்னெடுத்தார்கள்...

இந்த பட்டியலில் இணைக்கப்படும் நபர்களில் சில சிக்கல்கள் இருப்பதையும் நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்... மத ரீதியாகவும் வேறுசில நம்பிக்கைகள் சார்ந்தும் யார் மீதும் ஈர்ப்புகொள்ளாத நபர்களை இந்த பட்டியலில் இணைக்கக்கூடாது, அதாவது சாமியார்களுக்கு இந்த பட்டியலில் இடமில்லை என்கிறார்கள் (சாமியார்களே பாலீர்ப்பு இல்லாமல் இல்லை என்ற நிலைமை இருக்கும்போது, மேற்கொண்டு சாமியார்களை இந்த பட்டியலில் இணைத்தும் பயனில்லைதானே!). இந்த வகை நபர்கள் தாங்கள் பிறக்கும்போதே எவர்மீதும் ஈர்ப்பு இல்லாமல்தான் உருவாகுவார்கள், அது இடையில் நம்பிக்கை சார்ந்து தோன்றும், தொற்றும் பழக்கமும் இல்லை...

மற்ற பாலீர்ப்பு நபர்களை ஒப்பீடு செய்யும்போது, இந்த ஏசெக்சுவாலிட்டி வகை நபர்கள் அதிகம் மன அழுத்தம் மற்றும் குழப்பங்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்... ஒரு சமபால் ஈர்ப்பு நபர் இருக்கிறான் என்றால், அவனால் தனது பாலீர்ப்பை பற்றி கண்டிப்பாக பதின்வயதுகளில் ஆராய முடியும்... “அது ஏன் எல்லாரும் பொண்ணுகள பார்க்குறாங்க, எனக்கு மட்டும் ஆம்பள பசங்கள பிடிக்குது?” என்ற கேள்வி நிச்சயம் பள்ளிபருவத்தில் உண்டாகும்... அந்த குழப்பம், கண்டிப்பாக அவனை விடைகளைதேடி ஓடசொல்லும்... அவனுடைய கல்லூரி வயதிலாவது தனக்கிருக்கும் பாலீர்ப்பை பற்றி அவன் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு... அதேநேரத்தில் இந்த சூழலில் ஒரு ஏசெக்சுவல் நபரைப்பற்றி யோசியுங்கள்... பள்ளிப்பருவத்தில் எல்லோரும் எதிர்பாலினத்தவரை பார்க்கும்போது, ஓர்சிலர் தன் பாலினத்தவர்களை பார்க்கும்போதும், தமக்கு மட்டும் எவர்மீதும் ஈர்ப்பு இல்லை என்றால் ஒரு நபரால் குழம்ப முடியுமா?... கண்டிப்பாக வாய்ப்பில்லை...  “இப்ப நமக்கு சின்ன வயசு... சைட் அடிக்கிறது எல்லாம் தப்பு!”ன்னு நினைத்துக்கொண்டு கருமமே கண்ணாக இருக்கும் அந்த நபர்களை சமூகமும், “அந்த பையன் மாதிரி நல்லவன் உண்டா?.. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான்!” என்று சான்றிதழ் கொடுக்கும்போது கண்டிப்பாக குழப்பத்திற்கு வாய்ப்பே இல்லை.. காலம் கனிய, வயதும் கூடக்கூடத்தான் அப்படியோர் குழப்பம் ஒரு நபருக்குள் உண்டாகும்... அநேகமாக ஒரு நபரின் திருமணப்பேச்சின்போதுதான் அந்த குழப்பம் ஏசெக்சுவல் நபருக்கு உண்டாகும்... அதற்கு விடைகண்டு, குழப்பம் அகன்றுவிடுவதற்கு முன்பு திருமணமும் முடிந்துவிடும்... பிறகென்ன?.. மன அழுத்தம், குழப்பம் எல்லாமும் உண்டாகும்..

இந்த குழப்பம் சிலநேரங்களில் வேறுவிதமாகவும் உருமாற வாய்ப்புண்டு.. அதாவது, பெண்களின் மீது ஈர்ப்பு இல்லை என்று ஒரு ஆண் நபர் உணர்ந்தவுடன், உடனே தன்னை கே’வாக நினைத்துக்கொள்வார்கள்... அவனுக்கு ஆண்களின் மீதாவது ஈர்ப்பு உண்டா? என்றால், அதற்கு சரியான விடை அந்த நபர்களுக்கு இருக்காது... இந்த குழப்பங்களுக்கு காரணம், “ஏசெக்சுவாலிட்டி” என்ற பாலீர்ப்பு இருப்பதை பற்றிய முறையான தெளிவு இல்லாமையே... இந்த பாலீர்ப்பை பற்றி அறியாத நபர்கள், தங்களை “கே அல்லது ஸ்ட்ரைட்” என்ற இரண்டில் ஒன்றிற்குள் திணிக்க முயன்றுதான், இவ்வளவு குழப்பமும் உண்டாவதற்கு காரணம்...

சரி, இந்த வகையான பாலீர்ப்பு உள்ள நபர்கள் முழுமையாகவே உறவுகளிலும், ஈர்ப்பிலும் ஈடுபாடு அற்றவர்களாகத்தான் இருப்பார்களா? என்ற கேள்வி இயற்கையாகவே நமக்கு எழலாம்... இல்லை, அந்த வகையினர் சிலர் காதல் வயப்படவும் வாய்ப்பிருக்கிறது... ஆனால், இந்த வகையிலான காதல், எந்த தருணத்திலும் உடலுறவில் உச்சம் பெறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்... வெறும் உணர்வுப்பூர்வமான காதல் மட்டுமே அவர்களின் விருப்பமாக இருக்கும்... கட்டிப்பிடித்தல், மடியில் சாய்தல், கையை பிடித்தல் போன்ற செயல்பாடுகள் மட்டுமே அவர்கள் காதலின் உச்சகட்டம்... சிலர் அதிகபட்ச உடல் சார்ந்த பாலியல் இன்பமாக, சுய இன்பம் செய்வதைக்கூட அறியமுடிகிறது... ஆனால், இந்த சுய இன்ப ஈடுபாடு கூட, உடலிலிருந்து விந்தை வெளியேற்றும் ஒரு இயல்பான நிகழ்வாகத்தான் அவர்கள் நினைத்து ஈடுபடுகிறார்கள்... ஆக, இத்தகைய பாலியல்ரீதியான மேம்போக்கான செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்களை நாம் ஏசெக்சுவாலிட்டி வகைக்குள் திணிக்க முடியாது என்பதால், இத்தகைய நபர்களை குறிக்க டெமிசெக்சுவாலிட்டி (Demi sexuality or Demi romantic) என்ற உட்பிரிவிற்குள் இவர்களை நாம் இணைக்கவேண்டும்....

இன்னொரு முக்கியமான விளக்கத்தை இந்த பிரிவினர் பற்றி நாம் பார்த்தாக வேண்டும்.. ஏசெக்சுவாலிட்டி பற்றி கேள்விப்படும்போதே, அனிச்சையாக நமக்கு அவர்களைப்பற்றி “மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்” என்று தோன்றலாம்... மருத்துவ காரணங்களால் உடலுறவில் நாட்டமில்லாத நபர்களின் நிலையை  hypoactive sexual desire disorder (HSDD) என்று மருத்துவ உலகத்தால் அழைக்கப்படுகிறது... இந்த மருத்துவ குறைபாட்டை எக்காரணத்தை முன்னிட்டும் நாம் ஏசெக்சுவாலிட்டி வகையோடு இணைத்துப்பார்க்க கூடாது... ஏசெக்சுவாலிட்டி ஒரு மருத்துவ குறைபாடு கிடையாது... இத்தகைய நபர்கள் உடலுறவு கொள்ள முழுமையான உடல் தகுதி பெற்றவராக இருந்தாலும், மன ரீதியிலான  ஈடுபாடு இருக்காது... பிறக்கும்போதே ஏசெக்சுவல் நபர்கள் ஏசெக்சுவல் ஈர்ப்போடுதான் பிறக்கிறார்களே தவிர, அது இடைக்காலத்தில் அவர்களுக்கு உண்டான குறைபாடு அல்ல... இதனை உறுதிப்படுத்தும் விதமான ஒரு ஆய்வை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...
2001ம் ஆண்டு அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில், இதுபற்றி செம்மறியாட்டு இனத்தில் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர்... அதில், 2 முதல் 3% ஆடுகள், எவ்விதமான உடலுறவிலும் ஈடுபாடில்லாமல் இருந்தன... மேலும், அந்த உறவில் நாட்டமில்லாத ஆடுகளின் உடலை, மற்ற ஆடுகளுடன் பரிசோதித்து ஒப்பீடு செய்தபோது உடலளவில் எவ்வித மாற்றத்தையும் ஏசெக்சுவல் ஆடுகள் பெற்றிடவில்லை... எவ்விதமான ஹார்மோன் குறைபாடும் அவற்றுக்கு காணப்படவில்லை என்றும், இந்த பாலீர்ப்பு இல்லாத நிலைக்கும் உடல் சார்ந்த இயக்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று ஆய்வகம் முடிவை அறிவித்தது...

இது ஏதோ சமீப காலத்தைய கண்டுபிடிப்பு என்று நினைத்திடவேண்டாம்.... பல்லாயிரம் ஆண்டுகளாகவே இத்தகையோர் உலகில் வாழவே செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்த ஈர்ப்பை பற்றி விழிப்புணர்வு இன்மையால் அதன் வெளித்தோற்றம் நமக்கு காணக்கிடைக்கவில்லை... கடந்த பத்தாண்டு அறிவியல் வளர்ச்சியால் இதைப்பற்றி நாம் பேசினாலும், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரிவின் இருப்பை பதிவுசெய்த பெருமை ஆல்ப்ரட் கின்சே அவர்களுக்கு உண்டு... 
பைசெக்சுவாலிட்டி பற்றிய கட்டுரையில் கின்சே அவர்களின் பாலீர்ப்பு அட்டவணையை நாம் பார்த்திருப்போம்... பாலீர்ப்பினை 0 முதல் 6 வரை வகைப்படுத்திய கின்சே, ஏழாவது வகையாக “பாலீர்ப்பு இல்லாதோர்” என்ற பிரிவினரை “X” வகைப்படுத்தியிருப்பார்.... அந்த “எக்ஸ் மேன்”கள்தான் இதுவரை நாம்  பார்த்த ஏசெக்சுவல் நபர்கள்... 

அதன்பிறகு பல்வேறு ஆய்வாளர்கள் பலவிதமான ஆய்வுகள், சர்வேக்கள், புள்ளிவிபரங்களை அடுக்கி வந்திருந்தாலும் கூட, அவர்களுள் குறிப்பிடத்தக்க நபராக பால் நாரியஸ் என்ற பெண் அறிவியல் ஆய்வாளரை நாம் பார்க்கமுடிகிறது... கிட்டத்தட்ட இரண்டு சதவிகித நபர்கள் இந்த வகைக்குள் வகைப்படுத்தப்பட்டனர் என்பது மட்டும் இவருடைய ஆய்வு முடிவு கிடையாது... மற்ற பாலீர்ப்பினரைவிட ஏசெக்சுவல் நபர்கள் அதிக அளவிலான தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், மன ரீதியான அழுத்தம் அதிகம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்று உளவியல் முடிவை சொன்னார் நாரியஸ்... இந்த ஆய்வின் முடிவு, ஏசெக்சுவாலிட்டி பற்றிய ஆய்வுகளின் அவசர அவசியத்தை உணர்த்தியது என்றுதான் சொல்லவேண்டும்... இதற்கு பிறகுதான் “ஏசெக்சுவாலிட்டி” பற்றிய உலகளாவிய ஆராய்ச்சி வேகமடைந்தது...

சமீப காலங்களில் ஏசெக்சுவாலிட்டி பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுக்க பரவலாக செய்யப்பட்டு வருகிறது... இதன் நீட்சியாக அந்த சமூகத்திற்கான தனித்தன்மையான கொடி, அடையாள குறியீடு என எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பாலீர்ப்பு சிறுபான்மையினர் பேரணியில் முதல் முறையாக இந்த சமூக மக்கள் தங்கள் கொடி மற்றும் குறியீட்டுடன் கலந்துகொண்டு தங்களின் இருப்பை உலகிற்கு முதன்முதலாக பதிவுசெய்தனர்... கடந்த ஜூன் மாதம் கனடாவில் நடந்த “சர்வதேச ஏசெக்சுவாலிட்டி கான்பரன்ஸ்”நிகழ்வில் உலக அளவில் பாலீர்ப்பு இல்லாதோர் அணுகும் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது...

இந்த சமூக மக்களின் இப்போதைய முதல் தேவை என்பது சமூக அங்கீகாரம்  கிடையாது... உலகின் ஒவ்வொரு ஏசெக்சுவல் நபரும் தன்னை அறியவேண்டும், தமது ஏசெக்சுவாலிட்டி பற்றி உணரவேண்டும் என்பதைத்தான் அவர்கள் அவசியத்தேவையாக எதிர்பார்க்கிறார்கள்... இந்த “சுயத்தை உணர்தல்” கொள்கை, நாளடைவில் சமுதாய புரிதலுக்கு வித்திடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்... நாமும் நம்புவோம்...!

(தமிழில் ஏசெக்சுவாலிட்டி பற்றி வெளியாகும் முதல் தனி கட்டுரை இதுவே!)

3 comments:

  1. நின் பணி தொடர வாழ்த்துக்கள் விஜய்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி கமல்...

      Delete
  2. நாங்க தான் நன்றி சொல்லனும் உங்களுக்கு விஜய்.

    ReplyDelete