“கனவு”
கூகுலில் தட்டினேன்...
கனவு, மூளையில்
உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக
இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அறிவியல் ஆய்வுகள், நாம் தூக்கத்தின் ஐந்தாம்
நிலையான REM(Rapid Eye Movement) நிலையில் கனவு காண்பதாக தெரிவிக்கின்றன. நமது
சராசரி வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை கனவு காண்பதற்காக செலவழிக்கிறோம்... டாட்...
போதாக்குறைக்கு
கனவுகளின் பலன்கள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிய தளங்கள் நிறைய... கனவில் வடை
சாப்பிட்டதற்கும், வாந்தி எடுத்ததற்கும் கூட பலன்களை பட்டியலிட்டிருப்பார்கள்
போல... ஹப்பப்பா... இணைய உலகிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பினேன்...
என்னை
கேட்டால் உலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் நம் மனசு’ன்னுதான் சொல்வேன்... நாம்
நித்தமும் காணும் கனவின் காட்சிகளை அப்படியே திரைப்படமாக எடுக்க நினைத்தாலும்கூட,
அந்த முயற்சியில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் எல்லாம் கூட
தோற்றுப்போவார்கள்.. அத்தகைய சாத்தியமில்லாத காட்சிகளைகூட படமாக்கும் நம் மனம்,
நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதானே!...
சரி,
கனவைப்பற்றி ரொம்ப ஆராய்ந்துவிட்டோம்னு நினைக்கிறேன்... எதுக்காக இவன் திடீர்னு
கனவுகள் பற்றிய தேடலில் இறங்கிட்டான்? அதில எதுவும் ஆய்வுசெய்ய போறானோ?ன்னு
குழப்பமடைய வேண்டாம்... எனக்கு ஒரு மூன்று நாட்களாக தோன்றிய கனவின் விளைவுதான்
இவ்வளவு குழப்பமும்...
கனவு 1:
அதிகாலை
பொழுது, அதிசயமாக நடைப்பயிற்சி சென்றுகொண்டிருக்கிறேன்... என் வலதுபக்கம்
வயல்வெளியும், இடதுபக்கம் கடற்கரையும் அந்த காலைப்பொழுதை ரம்மியமான கவிதையாய்
ஆக்கியிருந்தது... ஆள் அரவமே இல்லாத விடியல், எல்லோருக்கும் உடல்மீதான அக்கறை
இல்லாமல் போய்விட்டதோ? என்கிற உலக சிந்தனையில் நடையை தொடர்ந்துகொண்டிருந்தேன்...
அப்போதுதான் தூரத்திலிருந்து என் எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு யுவனை
கவனித்தேன்... மெல்ல சூரியன் சுடர்விட்ட ஒளிக்கதிரில் அந்த முகம் மின்னியது...
புருவங்கள் வில்லாய் வளைந்து, கண் இமைகள் அம்புகளாய் மாறியிருந்தன... அளவான
கண்கள், கூரான நாசி, வரைந்து வண்ணம் நிறைத்ததை போன்ற உதடுகள்... அந்த வலது
நெற்றியின் மேற்பகுதியில் மட்டும் ஏதோ ஒரு தழும்பு, வட்ட வடிவத்தில், பிரவுன் நிறத்தில்
இருந்தது... இவ்வளவு பேரழகிற்கு பிரம்மனே இட்ட திருஷ்டிக்கான பொட்டாக
இருக்கும்....
அரும்பிய
மீசை, தாடியோடு இணைக்கப்பட்டிருந்தது... பொன்னிற மேனிக்கு பொருத்தமான அளவில் அந்த கரிய
முடிகள்... என்னைப்பார்த்து சிரித்தபோது உண்டான கன்னக்குழியில் அப்படியே தடுமாறி விழப்போனேன்...
என் முதுகின் மீது படர்ந்த அவன் கைகள், அப்படியே என்னை தாங்கி நிலைநிறுத்தியது...
என் வெகு அருகாமையில் அவன், மூச்சுக்காற்றுகூட சூடாக என் முகத்தில் பட்டு
சிலிர்க்கவைத்தது...
அந்த
நேரத்தில் யாரோ தங்கக்காசுகளை சிதறவிட்டார்கள்... இல்லை இல்லை... அவன்தான்
பேசுகிறான் ...
“பார்த்து
போங்க சார், விழுந்திருப்பிங்க இந்நேரம்!” என் தோள்தட்டி அழகாய் சொன்னான்...
“பார்த்துட்டே
வந்ததால்தான் விழப்பார்த்தேன்...” என்று சொல்ல நினைத்தாலும், முதல் சந்திப்பில்
வேண்டாம்! என்கிற தயக்கத்தில், அவன் சொன்னதை ஆமோதிப்பதை போல தலையை மட்டும்
அசைத்துவைத்தேன்...
கழுத்தை
வளைத்து, அழகாய் சிரித்தபடியே என்னை கடந்துபோய்விட்டான்...
கனவு 2…
அலுவலகம்
முடிந்து பைக்கில் வந்துகொண்டிருந்தேன்... அதுவரை வெயிலை அனலாக கக்கிய வானம்,
சட்டென கறுத்து மழை பெய்ய தொடங்கியது... வேகமாக ஒரு மரத்தினருகே வண்டியை
நிறுத்திவிட்டு, அருகிலிருந்த நிழற்குடையில் தஞ்சம் அடைந்தேன்... அப்போதுதான்
மழைத்துளிகளுக்கு மத்தியில் மீண்டும் அதே முகத்தை பார்த்தேன்... என்னைப்போலவே
மழைக்காக ஒதுங்கி நின்றான், தொப்பலாக நனைந்த பிறகும்... மழையில் நனைவதற்காகவே
உருவாக்கப்பட்ட வெள்ளை நிற ஆடை, தண்ணீர் பட்டு உடலோடு ஒட்டியிருந்தது... ஆஹா...
ஆஹா... அதுவல்லவோ கண்கொள்ளா காட்சி!...
நனைந்திருந்த
தலையை வலமும் இடமுமாக அசைக்க, அந்த அசைவுக்கு ஏற்றார்போல முடிகளும் சிலிர்த்து
அசைந்தது... அந்த சிலிர்ப்பில் சில துளி தண்ணீர் என் முகத்திலும் படவே, அப்படியே
மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்தேன்...
“ஐயோ
சாரி சார்...” என்று சொல்லியபடியே என்னருகே வந்தான்...
பதிலெதுவும்
கூறாமல் இன்னும் கண்கொட்டாமல் அவனை பார்த்தபடியே நின்றேன்...
“ஹலோ
உங்களைத்தான்...” என் தோள் தொட்டு அசைத்தான்.... தன்னிலை மீண்டேன்... அவனை
பார்த்து பரிச்சயமாக சிரித்தேன், அந்த சிரிப்பில் அவனுக்கு முந்தைய சந்திப்பின்
நினைவுகள் வந்திருக்கக்கூடும்...
“நீங்கதானே
அன்னிக்கு வாக்கிங் வந்தப்போ விழப்போனது?” ஆட்காட்டி விரலை என் மார்பின் மீது
வைத்தபடி கேட்டான்... பதில் சொல்லிவிட்டால் விரலை எடுத்துவிடுவானோ? என்கிற
தயக்கத்தில் அப்படியே நின்றேன்...
“மழை
நின்னுடுச்சு... நான் கிளம்புறேன், நீங்க இப்டியே நில்லுங்க...” சொல்லிவிட்டு
அங்கிருந்து மறைந்துவிட்டான்....
கனவு 3…
வீட்டில்
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்... அழைப்புமணி வித்தியாசமாக ஒலித்தது...
கதவை திறந்தேன், அவனேதான்...
இவனெப்படி
வீட்டிற்கு? குழப்பத்தில் கதவைகூட முழுமையாக திறக்காமல் அப்படியே நின்றேன்....
“வீட்டிற்கு
வந்தா வாசலோடவே அனுப்பிடுவீங்களா?” சொல்லிக்கொண்டே என் இடுப்பில் கைவைத்து, என்னை
இடதுபக்கம் விலக்கி நிற்கவைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்...
“ஹ்ம்ம்...
வீட்டை நல்லாத்தான் வச்சிருக்கிங்க?.. வாழப்போற வீடுல்ல, அதான் பாக்கவந்தேன்” என்
கன்னத்தை கிள்ளி அழகாக சிரித்தான்...
வாழப்போற
வீடா?... வாழ்வதற்குதானே வீடு, பின்ன சாவதற்கா கட்டுவாங்க!... இல்லை இல்லை, அவன்
வேற பொருள்படும்படி சொல்றான்... அப்படியானால், என்னுடன் இனைந்து வாழ விரும்புறானா? குழப்பிக்கொண்டே
அவனை பார்த்தேன்...
“ரொம்ப
குழம்ப வேணாம்... ஆமா, நான் உங்கள லவ் பண்றேன்... வாழ்க்க முழுக்க இங்கதான் வாழப்போறேன்....”
வாக்கியத்தை முடிப்பதற்குள் புலிப்பாய்ச்சலாக என்னை கட்டி அணைத்தான்..
*******************.
இந்த
மூன்று கனவுகளும், தொடர்ந்து மூன்று நாட்களில் எனக்கு வந்தது... அதெப்படி கனவுகள்
மெகாசீரியல் போல, விட்ட இடத்திலிருந்து தொடரும்?... அந்த இளைஞனை இதுவரை எங்கும்
பார்த்ததாக என் சிற்றறிவுக்கு எட்டியவரை நினைவில்லை... மூன்று கனவுகளிலுமே அவனுடைய
அதே சிரிப்பு, அதே கன்னக்குழி, அதே நெற்றித்தழும்பு உட்பட எதுவும் மாறவில்லை....
முதல் நாள் சந்தித்து, மூன்றாம் நாள் காதல் சொல்லும்வரை எப்படி என்னை
ஈர்த்தான்?...
இது
கனவுதான் என்றாலும், அப்படி நினைத்து ஒதுக்கித்தள்ள முடியவில்லை... நேரில்
பார்த்திடாத அந்த மன்மதனுடன் காதல் வயப்பட்டுவிட்டேன், அவனை கண்டுபிடிக்க இனி
என்னாலான முயற்சிகளை செய்யனும்...
ஹாலில்
அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, அழைப்புமணி அடித்ததை உணர்ந்தேன்...
எவ்வளவு நேரம் அடித்ததோ தெரியவில்லை, இந்த கனவின் நினைவுகளில் எதுவும்
கேட்கவில்லை.. விரைவாக எழுந்து கதவை திறந்தேன்....
சதீஷ்தான்
நின்றுகொண்டிருந்தான்...
“என்னடா
பண்ணின உள்ள?... எவ்வளவு நேரமா காலிங் பெல் அடிக்கிறது?... ஜன்னலை உடச்சு உள்ள
வரலாமான்னு யோசிக்குற அளவுக்கு போயிட்டேன்...” கடிந்துகொண்டே வீட்டிற்குள்
நுழைந்தான்...
“டேய்,
உன் போலிஸ் ஆக்ஸன் சீக்வன்ஸ் காட்ட என் வீடுதான் கிடைச்சுதா?...”
“சரி
சொல்லு... யாரையோ கண்டுபிடிக்கணும்னு சொன்னியே, உன்ன எவனும் பணம் கேட்டெதுவும்
மிரட்டுறானா? கொலை மிரட்டல் செய்றானா?”
“சதீஷ்...
நீ பி.சி தான், அதுவும் ட்ராபிக் போலிஸ்... வேட்டையாடு விளையாடு ராகவன், காக்க
காக்க அன்புசெல்வன் ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்ணாத...”
“எனக்கு
இது தேவைதாண்டா!... நால் ரோடு சிக்னல்ல நின்னிருந்தா கலெக்சன் அள்ளிருக்கலாம்னு
தெரிஞ்சும், நீ கூப்டன்னு வந்தேன் பாரு...” கோபித்துக்கொண்டான்...
“சரிடா
மச்சான்... கோவிச்சுக்காத... எனக்கு ஒருத்தனைப்பற்றி கண்டுபிடிக்கணும், நீதான்
அதுக்கு ஹெல்ப் பண்ணனும்” சரண்டர் ஆகிவிட்டேன்...
“சரி
சொல்லு... என்ன விஷயம்?”
“நான்
ஒருத்தன லவ் பண்றேன், ஆனா அவன் எங்க இருக்கான்னு தெரியல... அதான்..” வெட்கப்பட்டு
சிரித்தேன்...
“அடடா...
இதல்லாம் வேற நடக்குதா?... நாலு நாளா பித்துப்பிடிச்சு நின்னப்பவே நினச்சேன்... சொல்லுடா,
உன் காதலுக்காக என்னால் முடிஞ்சத செய்றேன்... அவன் போன் நம்பர் இருக்கா?”
“போன் நம்பர்
இருந்திருந்தா நானே பேசிருக்க மாட்டேனா?”
“சரி..
எங்க படிக்கிறான்? எந்த ஏரியா? எதாச்சும் தெரியுமா?”
“அதல்லாம்
தெரியாதுடா...”
“பேரு,
ஊரு எதாச்சும்...?”
“இல்லடா...”
“போட்டோவாச்சும்
காட்டுடா...”
“அதுவுமில்ல...”
“ஆண்டவா....
எங்க மீட் பண்ணின? எப்போ பார்த்த...?” தலையில் கைவைத்தபடி கேட்டான்....
“நைட்
கனவுல...” மெல்ல சொன்னேன்...
சட்டென
நிமிர்ந்த சதீஷ், நெருப்பை உமிழ்வதை போல என்னை பார்த்தான்... அதை கவனிக்காததை போல
வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்...
“டேய்...
என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதா?” வார்த்தைகளிலும் கோபம் தொனித்தது...
“பார்த்தா
தெரியல... ஆனால், பேசினா கண்டுபிடிச்சிடலாம்...”
கோபப்பட்டு
அங்கிருந்து வெளியேற முயன்றவனை ஆசுவாசப்படுத்தி, அமரவைத்து முழு விஷயத்தையும்
சொல்லிமுடித்தேன்....
எல்லாவற்றையும்
பொறுமையாக கேட்ட சதீஷ், என்னை பார்த்து ஏளனமாக சிரித்தான்...
“டேய்,
கனவுல பார்த்தவன லவ் பண்றதல்லாம் லூசுத்தனமா இல்ல?”
“பார்க்காமலேயே
அஜித் லவ் பண்ணலாம், கனவுல வந்த பொண்ணை விஜய் லவ் பண்ணலாம்... அதையே நாங்க பண்ணா
லூசா?... நாங்களும் ஹீரோதான்பா...” காலரை உயர்த்திவிட்டு, சில ஹீரோ முகபாவங்களை
செய்துகாட்டினேன்...
சிரித்தான்....
“சரி,
சொன்னா கேட்க மாட்ட... இவ்ளோ கிறுக்கனாட்டம் புலம்ப வச்சவன் எப்டி இருந்தான்?”
“அழகுடா...
பேரழகு...”
“என்ன
மாதிரி இருப்பானா?”
“அழகா
இருப்பான்னு சொன்னேன்டா, அப்டி சொன்னபிறகும் இதென்ன கேள்வி?”
மீண்டும்
இறுக்கமானான்....
“சரிடா
மச்சான்... எதாச்சும் ஐடியா சொல்லு, உன்ன நம்பிதான் இருக்கேன்...”
“ஐடியாவா?...
கண்ணை கட்டி அமேசான் காட்டுக்குள்ள விட்டு, அட்டைப்பூச்சிய கண்டுபிடிக்க சொல்ற
மாதிரி இருக்குடா”
“ஏய்,
அவனை அட்டைப்பூச்சின்னல்லாம் சொல்லாத... உன் நண்பனோட காதலன் அவன்...”
“இருந்துட்டு
போகட்டும்... வந்த கனவுக்கு என்ன பின்புலம்னு முதல்ல கண்டுபிடிப்போம்...” என்று
சொல்லி என்னை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றான்...
கிட்டத்தட்ட
ஒருமணி நேரம் பாடம் நடத்தினார் அந்த நிபுணர்... சிக்மன்ட் ப்ராயிட் தொடங்கி
சிதம்பர ரகசியம் வரை என்னென்னமோ சொன்னார்... இடையிடையே தேஜா வு, ஜமாய் வு
போன்றவற்றையும் கலந்தடித்தார்...
“புதிய
விஷயம், முன்னமே பார்த்தது போல இருப்பது தேஜா வு... முன்ன பார்த்த நிகழ்வு
மறுபடியும் நினைவுக்கு வராதது ஜமாய் வு...”
“சார்,
நான் அவனை நேர்ல பார்த்ததா நினைவில்ல... கனவுல மட்டும்தான் பார்த்திருக்கேன்...”
“அதுதான்
இல்ல... நிச்சயம் எங்கயோ பார்த்த முகம்தான் உங்க கனவுல தோன்றிருக்கும்... ஆனால்,
நேர்ல பார்த்தப்போ அந்த முகத்தை சரியா கவனிக்காம இருந்திருப்பிங்க... நீங்க
கவனிக்கலைன்னாலும் உங்க ஆழ்மனம் அப்டியே உள்வாங்கிடுச்சு... இப்போ சொன்னத வச்சு
பாக்குறப்போ, சமீபமா ஒரு ஆறு மாசத்துக்குள்ள எங்கயோ பார்த்த ஆள்தான் உங்க கனவுல
வந்திருக்கணும்...” சொல்லி முடித்தார்...
வீட்டிற்கு
வந்தபிறகும் அந்த ஆறு மாத நிகழ்வுகளை அசைபோட்டேன்... ஊஹூம்.. துளியும்
நினைவில்லை... சுமாரா இருக்குற பசங்களையே கடந்து போற வரைக்கும் வெறிச்சு பார்க்குற
நான் எப்படி இப்டி ஒரு அழகனை, கண்டும் காணாமல் இருந்திருப்பேன்?... இன்னும் இரண்டு
நாட்கள் இதையே யோசித்துக்கொண்டிருந்தால் தலையின் முடிகள் எல்லாம் கொட்டி,
எர்வோமாட்டின் வசம் தஞ்சம் அடைய வேண்டிவரும்...
“சதீஷ்,
என் குழப்பத்துக்கு நீதான் உதவி பண்ணனும்...”
“நான்
என்னடா இதுல பண்ணமுடியும்?”
“அந்த
சைக்கியாட்ரிஸ்ட் சொன்னது போல பார்த்தா, கடந்த ஆறு மாசமா திருச்சிய விட்டு நான்
வெளில போகல... அதுவும் திருச்சி சிட்டிய தாண்டிகூட போகல...”
“சரி...
அதனால?”
“அதனால,
என் கனவுல வந்தவன கண்டிப்பா திருச்சிலதான் பார்த்திருக்கணும்... அப்போ, வோட்டர்
ஐடி லிஸ்ட் கிடச்சா, அதை வச்சு அவன் முகத்த அடையாளம் சொல்லமுடியும்ல?”
“உனக்கு
பைத்தியமே பிடிக்கப்போவுது... நீ திருச்சிலையே அவன பார்த்ததா இருக்கட்டும்,
அதுக்காக அவன் சொந்த ஊரும் திருச்சியா இருக்கனுமா என்ன?... ஒருவேள இந்த ஊராவே
இருந்தாலும், அவன் வோட்டர் ஐடி பதிவு செஞ்சவனா இருக்கனும்ல?... இதல்லாம் விட
இன்னொரு விஷயம்... வோட்டர் ஐடி போட்டோவ வச்சு ஒருத்தன கண்டுபிடிக்கிறது முடியாத
காரியம்டா... என் மூஞ்சியே அதில சிம்பன்ஸி குரங்கு மாதிரி இருக்குதுன்னா
பாரேன்...” சீரியஸாக சொல்லி முடித்தான்...
“அதுக்கென்னடா
பண்றது, இருக்குறதுதானே போட்டோல தெரியும்!” இயல்பாய் கூறிவிட்டு, அடுத்தகட்ட தேடல்
யோசனையில் மூழ்கினேன்...
எனக்கு
வரையத்தெரிந்திருந்தால்கூட, அவன் முகத்தை வரைந்து அதன் மூலம் கண்டுபிடித்திருக்க
முடியும்... ஆனால், எனக்கு அதிகபட்ச ஓவிய அறிவே ‘அமீபா’ வரைவது மட்டும்தான்
எனும்போது, அது சாத்தியமில்லை... இதயத்தை ஸ்கேன் செய்ய எத்தனையோ ஸ்கேன்கள்
வந்துவிட்டன, நம்ம மனசை ஸ்கேன் செய்ய முடிந்திருந்தால் அவன் படத்தை அப்படியே
ப்ரின்ட்டவுட் எடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருப்பேன்... இப்படி சாத்தியமற்ற
யோசனைகள்தான் என் சிந்தனையில் துளிர்த்து, காய்ந்தும் போனது...
சதீஷ்
மூலம் தீவிரவாதிகளையும், திருடன்களையும் சொல்லப்படும் அடையாளத்தை வைத்து, கணினி
மூலம் படமாக வரையும் நிபுணரை சந்தித்தேன்...
“கண்ணு
எப்டி சார் இருந்துச்சு?”
“அப்டியே
மீன் மாதிரி, அதுல இமைகள் வளைந்து அம்பு மாதிரி”
“ஹலோ
சார், உங்கள வர்ணிக்க சொல்லல... அடையாளத்தை மட்டும் சொல்லுங்க” என்று
நூற்றுக்கணக்கான கண் மாதிரிகளை காட்டினார்... கண்கள் நிறைந்த கடலுக்குள் மூழ்கி,
ஒருவழியாக கனவில் பார்த்தவனை ஒப்பீடு செய்யும் அளவிற்கான கண்ணை கண்டுபிடித்தேன்...
அதன் வழியே மூக்கு, உதடுகள், தாடை எல்லாமும்....
உறுப்புகள்
ஒவ்வொன்றையும் ஒன்றாக இணைத்து, ஒரு முகமாக முழுமையாக என் கண் முன் காட்டினார்...
எனக்கு ஒருவிஷயம் தெளிவாக புரிந்தது, “ஏன் காவல்துறையால் பல குற்றவாளிகளை இன்னும்
கண்டுபிடிக்கமுடியவில்லை” என்று...
போதும்
போதும்... இந்த தேடல்கள் முடிந்து இன்றோடு ஒருவாரமும் ஆகிவிட்டது... இன்று காலை
ஒரு அதிமுக்கியமான வரலாற்று முடிவை தீர்மானமாக எடுத்துவிட்டேன்... “இனி எந்த
காலத்திலும் இப்படி கனவில் வந்தவனை காதலனாக கற்பனை செய்யக்கூடாது... புலியை
பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி, இனி படங்களை பார்த்துவிட்டு இப்படி
காதல் பித்தில் திரியக்கூடாது!”.
ஏன்
இந்த முடிவு?ன்னு நீங்க நினைக்கலாம்... காரணம் இருக்கு...
இன்று
காலைதான் பழைய நாளிதழ்களை எடைக்கு போடுவதற்காக அடுக்கிவைத்துக்கொண்டிருந்தேன்...
அப்போது, கடந்த மாத இதழை மடித்தபோது என் கண்கள் ஒரு புகைப்படத்தை விட்டு விலக
மறுத்து நின்றது...
என்ன
புகைப்படம்?... ஆம், அவன்தான்... அந்த அழகன்தான்... அழகாய் சிரித்தபடி
புகைப்படத்தில், கன்னத்து குழிகூட தெரிகிறது... அதே கண்கள், அதே உதடுகள்... அட,
அதே நெற்றியின் தழும்பு... இல்லை... அது தழும்பு இல்லை.. நாளிதழ்
படித்துக்கொண்டிருந்தபோது ஊற்றிய காபியின் துளி ஒன்று அந்த புகைப்படத்தின் மேல்
பகுதியில் தெறித்துதான் நெற்றியில் தழும்பு போல தெரிந்திருக்கிறது... அதற்காக
கனவில் கூட இவன் காபி கரையோடுதான் வந்திருக்கனுமா?.. சிரித்தபடியே,
புகைப்படத்திற்கு கீழே எழுதியிருந்த வாசகத்தை கவனித்தேன்...
“கண்ணீர்
அஞ்சலி... கண்ணீருடன் இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள்...” என்று
எழுதியிருந்தது... என் கண்களும் கலங்கிவிட்டது... அந்த வாக்கியத்திற்கு அருகிலேயே ‘உன்
காதலனும்!’னு எழுதப்பேனாவை தேடினேன்.... என்ன செய்வது, தேடலே என் வாழ்க்கையாகிவிட்டது!
(முற்றும்)
Evanayachum climax la kaalipaniranum... Yen bro....
ReplyDeleteKadhal rasam sotta sotta oru kadhai.... Eludhunga
Athulayum hero va kondradhinga... Bro.....
ஐயோ தம்பி, இந்த கதையில் நான் யாரையும் கொல்லல... நம்ம ஹீரோதான் இறந்த ஒருத்தனை காதலிக்கிறான்... இந்த இறப்பையல்லாம் கம்பெனி கணக்குல சேர்த்துடாதிங்க.... ஆனால், உங்க கோரிக்கை நிச்சயம் நடக்கும்.... கண்டிப்பா விரைவில் ஒரு முழுநீள காதல் கதை, திகட்டத்திகட்ட காதலை வச்சு எழுதுறேன்... காதலர் தினத்து ஸ்பெஷலா அது வரும்...
Deleteவழக்கம் போல, மிக அருமை, மனதின், கனவின் காட்சிகளை மிக அருமையாக வர்ணித்து சொன்னது ரொம்ப அருமை, சில இல்லை இல்லை பல சமயங்களில் கனவில் சந்திக்கும் பத்திரங்களும், நம்பளுடைய ஆழ் மனசு ஆசைகளும் சேரும் புள்ளி தான் கனவும், அதில் வரும் சம்பவங்களும் நு ரொம்ப அழகா ஒரு கதை மூலமாக சொனது அருமை, இந்த மூன்று கனவுகளும் அதில் வரும் சம்பவங்களும் நம்மை போல இருபவர்களுக்கு ஒரு கனவாவே இருக்ககூடாது நா ஆசைபடுறேன், என்ன சொலுறிங்க விஜய் விக்கி?
ReplyDeleteகருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்.... கண்டிப்பா இந்த மூன்று கனவுகளும் நிஜத்தில் நம்மவர்களுக்கு நடக்கனும்னுதான் என்னோட கனவும்....
Deleteவிஜய்
ReplyDeleteஉங்கள் கடஒஇ எப்போதும் போலே அருமை. இப்படி கனவில் நம்மில் பலர் காதலனை தேடுகின்றோம். ஆனால் என்ன ஒரு விதியாசம் என்றால், கனவின் காதலில் ஒருபோதும் ஏமாற்றம் இல்லை, அழுகை இல்லை, கவலை இல்லை; முழுதும் அன்பும் காதலும் மட்டுமே மிஞ்சுகிறது. :-)
கனவில் பல நாட்கள் கழித்த காதலை என்னும்போது, நானே மேககூட்டத்தில் மிதப்பாது போலே இருக்கும். நீகள் எஜுததியது போல மனத்தை படமாக்கும் தொழில்நுட்பம் வந்தால் நல்ல வியாபாரமாகும். :-)
விஜய்
ReplyDeleteஉங்கள் கதை எப்போதும் போலே அருமை!
இப்படி கனவில் நம்மில் பலர் காதலனை தேடுகின்றோம். ஆனால் என்ன ஒரு விதியாசம் என்றால், கனவின் காதலில் ஒருபோதும் ஏமாற்றம் இல்லை, அழுகை இல்லை, கவலை இல்லை; அன்பும் காதலும் மட்டுமே மிஞ்சுகிறது. :-)
கனவில் பல நாட்கள் மகிழ்ந்த காதலை என்னும்போது, நானே மேககூட்டத்தில் மிதப்பாது போலே இருக்கும். நீங்கள் எழுதியது போல மனத்தை படமாக்கும் தொழில்நுட்பம் வந்தால் நல்ல வியாபாரமாகும். :-)
Keep it up!!!
கருத்துகளுக்கு ரொம்ப நன்றி பிரபு.... எதிர்காலத்தில் அப்படிப்பட்ட தொழில்நுட்பம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை...
DeleteSuper anna.... Idhu verum story ah?? illa neenga unmaya kanda kanava??
ReplyDeleteBut idhulayum oru character dead!!!! sad......
நன்றிப்பா.... இது வெறும் கனவுதான், அனுபவமல்லாம் இல்லை...
Deleteஇதில பாத்திரத்தை நான் கொல்லல தம்பி, இறந்த பாத்திரத்தைதான் கதைக்கு பயன்படுத்திக்கொண்டேன்...
super
ReplyDeleteHave you ever written a story without a death Vijay anna? As usual a sad climax.. U r a psycho, I think.. ;)
ReplyDeleteஅடப்பாவி தம்பி, என்னை பிரதாப்போத்தன், ரகுவரன் ரேஞ்சுக்க் கொலைகாரன் ஆக்கிடாத.... இந்த கதையில் நான் யாரையும் கொல்லல, கதைக்கு முன்னமே இறந்த ஒருத்தனை பயன்படுத்திக்கொண்டேன்... இந்த கொலை என் கணக்கில் வராது, எமன் கணக்கில் சேத்துக்கோ....
Deleteநான் இரசித்து இரசித்து படித்த கதை என்னை மறந்து சிரிக்க வைத்த கதை இது. முழு நீள நகைச்சு கலந்த சிறு கதை தந்ததற்கு நன்றி விஜய்.
ReplyDeleteகமல்குமார்.