Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday, 9 November 2017

"அக்காவின் திருமணம்!" - சிறுகதை...
ஒன்பது மணிக்கு பேருந்தை பிடிக்கவேண்டியவன், ஏழரை மணிக்கு அவன் அறைக்கு வருவதாய் ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது... எப்போதுமே காமம் திரவமாய் வெளியேறிய பிறகுதான் இதுபோன்ற ஜென் நிலை மனதிற்குள் தோன்றுகிறது... என்ன செய்து தொலைக்க... கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பல கோணத்தில் எடுக்கப்பட்ட போட்டாக்களை அனுப்பி, “பிளேஸ் இருக்கு என்று அவன் சொன்னபோது, காந்தத்தை கண்ட இரும்புத்துகளாய் மனம் பரிதவிக்கத்தொடங்கிவிட்டது...
இப்போது அவசர அவசரமாக உடைகளை சரிசெய்துகொண்டு, ஒரு கேப் பிடித்து, சாப்பிடக்கூட நேரமில்லாதவனாக, பேருந்தை அடைவதற்கும், அது நகர்ந்து கொண்டிருப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது...

முதலில் இந்த பிளானட் ரோமியோவ அன்இன்ஸ்டால் பண்ணனும்... அநேகமாக இது ஆயிரத்து எட்டாவது முறையாக நான் எடுத்திருக்கும் தீர்மானமாக இருக்கலாம்... என்ன செய்வது, எல்லாம் அந்த ஹார்மோன் செய்யும் வேலை... 

செமிஸ்லீப்பர் இருக்கையில் சாவுகாசமாக சாய்ந்துகொண்டபோதுதான் ஆசுவாசமாக நிம்மதி பெருமூச்சு வெளியானது... பக்கத்து இருக்கையில் நாற்பது வயதுகளை கடந்த ஒரு முன்வழுக்கை ஆசாமி... ஒருவேளை அங்கு யாரோ ஒரு இளைஞன் அமர்ந்திருந்தால், விடியும்வரை ஏதோ ஒரு தொடுதலுக்காக இந்த பாழாய்ப்போன மனம் காத்திருந்து என் தூக்கத்தை கெடுத்திருக்கும்... இனி நிம்மதியாக உறங்கலாம், மனக்குறங்கும் கொட்டாவி விட்டுக்கொண்டது...

ஐந்து மணிக்கே திருச்சியை அடைந்துவிட்டேன்... டோல்கேட்டில் இறங்கியபோது மெல்லிய இருட்டு சுற்றிலும் படர்ந்திருந்தது... இந்த நேரத்தில் சிட்டி பஸ் வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை... பேரம் பேசாமல் ஒரு ஆட்டோவில் ஏறி, கேகே நகரை அடைந்தபோது வாசலில் அம்மா கோலமிட்டுக்கொண்டிருந்தாள்... என்னை பார்த்ததும் சில புள்ளிகளை அழித்துவிட்டு, அவசர கதியில் கோடுகளை மட்டும் அங்குமிங்குமாக இணைத்துவிட்டு எழுந்து வந்தாள்...

அருகில் வந்து, “என்னடா ஆளே இப்டி இலச்சுபோய்ட்ட.. என்றபோது, “நீங்க கொஞ்சம் சப்பியா இருக்கீங்க, நாட் இன்ட்ரஸ்ட்டட் எவனோ ஒருவனின் நிராகரிப்பு கண்முன் வந்துபோனது...

“அதல்லாம் ஒண்ணுமில்லம்மா... கடந்து உள்ளே நுழைந்தேன்...

அப்பா இன்னும் எழவில்லை... சமயலறையில் பால் காய்ச்சிக்கொண்டிருந்த அக்கா, பரபரப்பாக ஓடிவந்தாள்.... 

முப்பது வயது நெருங்கிவிட்டது... முகத்தில் சுருக்கங்களுக்கு பஞ்சமில்லை, போதாக்குறைக்கு தடியான லென்ஸ் கண்ணாடி வேறு...  ஏதேதோ எண்ணைகள் தேய்த்து, முடியும் கழுத்தோடு சுருண்டுகொண்டிருக்கிறது... பாவம், எவ்வளவு நிராகரிப்புகளை கடந்து வந்திருப்பாள்...

ஒருவழியாக திருமணம் கைகூடி, இதோ இன்னும் பதினைந்து நாட்களில் மணமேடையில் வெட்கத்தோடு அமர்ந்திருக்கப்போகிறாள்... மிகப்பெரிய சுமையை இறக்கிவைக்கப்போவதன் மகிழ்ச்சி உள்ளுக்குள் அரும்பியது..

“என்னடி புதுப்பொண்ணு, கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டியா?

“புதுப்பொண்ணா?... இருபத்தெட்டு வருஷமா நான் பொண்ணுதான்... சிரிக்கிறாள்...

“பார்மாலிட்டிக்காகவாச்சும் கொஞ்சம் வெட்கப்படுடி...

கலகலப்பானது சூழல்... எப்படி வெட்கப்படுவாள்?... எத்தனையோ கோணங்களில் வெட்கப்பட்டு, எல்லாம் வேதனையில் முடிந்த தருணங்கள் ஆயிற்றே... 

காபி ஆற்றிக்கொடுத்துக்கொண்டே, மாப்பிள்ளை புராணம் பாடத்தொடங்கினாள் அம்மா... 

“பெரிய இடம்டா தம்பி... பையன் ஏதோ ஐடி கம்பெனில பெங்களூர்ல இருக்காராம்... குடும்பத்துல எல்லாருமே தங்கமானவங்க... கருமண்டபத்துல சொந்த வீடு இருக்கு... இந்துவ பாக்கனும்னு நெனச்சா ஒரு எட்டுல போயிட்டு வந்துடலாம்... அடுத்த மாசத்தோட மாப்பிள்ளைக்கு கல்யாண கெரகம் முடியுதாம்... அதான் ஐப்பசிலையே நல்ல நாளா பார்த்து பேசியாச்சு

நாங்கள் யாருமே எதிர்ப்பார்த்திடாத மிகப்பெரிய சம்மந்தம் இது... காலதாமதமாக இருந்தாலும், கடவுள் கண்ணை திறந்ததே புண்ணியம்தான்...

சற்றுநேரம் தூங்கி எழுந்தேன்...

ஹாலில் அப்பா ஏதோ கணக்கு வழக்குகளை புரட்டிக்கொண்டிருந்தார்... ஒற்றை ஆளாய் பரபரத்துக்கிடந்திருப்பார், இனி நானும் பொறுப்புகளை ஏற்கவேண்டும்... கம்பெனியில் முன்பணமாக வாங்கியது, சேமித்து வைத்திருந்தது என்று மூன்று லட்சம் ரூபாய்களை எடுத்துக்கொண்டு அப்பாவின் முன்பு அமர்ந்தேன்...

என்னைப்பார்த்ததும் மெலிதாய் சிரித்துக்கொண்டே, அந்த நோட்டினை மூடிவைத்தார்.. இதுநாள் வரை பார்த்திடாத ஒரு நிறைவை அவர் கண்களில் பார்க்கிறேன்... டயபெட்டிஸ், ப்லட் பிரஷர் என்று எப்போதுமே அரை மயக்கத்தில் ஈசி சேரில் சாய்ந்திருக்கும் அப்பாவா இது?, இவ்வளவு உற்சாகத்தோடு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்ததாய் ஞாபகம்... 

அவர் முன்பிருந்த டீப்பாயின் மீது அந்த பணக்கட்டினை வைத்தேன்... “என்ன? என்பது போல புருவத்தை உயர்த்தி என்னை ஏறிட்டார்...

“எதாச்சும் செலவுக்கு ஆகும்லப்பா..

“கடனா வாங்குனியா?

“இல்லப்பா... என்னோட சேவிங்க்ஸ்தான்..

விசித்திரமாக என்னை ஏறிட்டார்... இவ்வளவு காலமாக பொறுப்புகள் உணராது சுற்றித்திரிந்த தன் மகனா, இப்போது கையில் சில லட்சங்களோடு அக்காவின் திருமணத்தை எடுத்து நடத்த வந்திருக்கிறான்?... அதனை கிரகிக்கவே அவருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது...

“மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சாப்பா? நானே பேச்சினை மடைமாற்றினேன்...

“குடுத்தாச்சுப்பா... அவசரத்துல வைக்குறதால எதிர்பார்த்த மண்டபம் எதுவும் அமையல... மணப்பாறை ரோட்ல வசந்தம்னு ஒரு மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு.. சமையலுக்கு நம்ம காரைக்குடி பக்கமே பேசிராலாம்னு ராசு மாமா சொன்னாரு...

மண்டபம், சமையல், உறவினர்களுக்கான தங்குமிடம் தொடங்கி திருமணத்திற்கு வந்து செல்பவர்களுக்காக கொடுக்கப்படும் தேங்காய் பழம் வரைக்கும் அப்பாவே ஏறக்குறைய எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட்டார்..

“ஆர்க்கெஸ்ட்ரா எதுனாச்சும் வைக்கலாம்ப்பா

“எதுக்குடா அனாவசிய செலவு

“என்னங்க அனாவசிய செலவு?... அடுத்து நம்ம அரவிந்து கல்யாணத்துக்கு எப்டியும் மூணு நாலு வருஷமாகும்... கொஞ்சம் சிறப்பா செய்யலாம்ல இப்ப

“சூப்பர் சிங்கர் யாராச்சும்...

“அவங்கல்லாம் காஸ்ட்லிம்மா... லோக்கல் ட்ரூப் ஒன்னு இருக்கு, நல்லா பாடுவாங்க... ரேட் விசாரிக்கிறேன்...

ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒரு வாத பிரதிவாதம் முடிந்து, இறுதியில் பெரும்பான்மையினரின் கருத்து எங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது...

கறி வாங்கி வந்து அம்மா சமையலில் ஐக்கியமாகிவிட்டாள்... அப்பாவும் நானும் திருமண அழைப்பிதழில் பெயர்களை எழுதிக்கொண்டிருந்தோம்... 

ஏதோ நினைவில் வந்தவராக அப்பா, “ஒரு எட்டு கருமண்டபம் வரைக்கும் போயிட்டு வந்திடேன் என்றார்...

“எதுக்குப்பா?

“இல்ல... மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள பார்த்து அறிமுகப்படுத்திக்கத்தான்... நல்ல மனுஷங்க... இப்ப நீ போய் பார்த்தா அவங்களுக்கு ஒரு மரியாதையா இருக்கும்... அதான்..

நான் மறுக்கவில்லை... மதியத்திற்கு மேல் சென்றுவர வேண்டும்... என் அக்கா வாழ்க்கைப்படப்போகிற குடும்பத்தை நானும் நேரில் பார்க்க வேண்டும்தான்... ‘எதற்காக வந்தாய்? என யாராவது கேட்டால்?.... மாப்பிள்ளைக்கு ட்ரெஸ் எடுக்குறதப்பத்தின்னு ஏதாவது சொல்லி சமாளித்துக்கொள்ளலாம்....

ஈரலும் கறியுமாய் அம்மாவின் அன்பு இலையில் அடுக்கப்பட்டது.. தொண்டை வழியே ஆடு கடத்துவதாக உணரும் அளவிற்கு வயிறு முட்ட சாப்பிட்டேன்... 

ஒரு குட்டித்தூக்கம் போட்டபிறகு, மாப்பிள்ளை வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்...

கருமண்டபம் பகுதி எனக்கு ஓரளவு பரிச்சயமானதுதான்... எத்தனையோ முறை ஹரியை பார்க்க வந்திருக்கிறேன்... அந்த ‘வி நெக் கருப்பு டீஷர்ட் அணிந்து அவன் நடந்துவரும் அழகிற்கு தில்லை நகரையே தாரை வார்க்கலாம்... அழகாய் சிரித்தபடி, ‘ஹாய் அரவிந்த் என்று சொல்லும்போதே ஒட்டுமொத்தமாய் என் ஆறடி உடலும் சிலிர்த்துப்போகும்... இப்போது எங்கே இருப்பான்?... இது இப்போதைக்கு அனாவசியமான தேடல்... வந்த வேலையை முதலில் பார்க்கலாம்...

இதோ இதுதான் அந்த மூன்றாவது தெரு... பச்சை பெயின்ட் அடித்த வீடு, அதுதான்... வாசலில் ஸ்விப்ட் கார் நிற்கிறது.. “பெரிய இடம் என்று அம்மா அழுத்தி சொன்னதன் அர்த்தம் புரிந்தது... விசாலமான கேட்டின் வழியே உள்ளே எட்டிப்பார்க்க, விலையுர்ந்த மேல்நாட்டு நாய் ஒன்று குரைக்கத்தொடங்கியது... அக்காவிற்கு நாய் என்றாலே அலர்ஜி, அக்காவின் போராட்டம் வாசலிலேயே தொடங்கவேண்டும்!... காலிங் பெல்லை அழுத்தினேன்...

காதோரம் நரை வழிந்த ஒரு மத்திம வயது பெண்மணி, கதவை ஒருக்களித்து திறந்து எட்டிப்பார்த்தார்...

“யாருப்பா? கனிவாகத்தான் விசாரிக்கிறார்... மாப்பிள்ளையின் அம்மாதான் போலும்...

“நான் அரவிந்த்... இந்துவோட ப்ரதர்... இனி இப்படி சொல்லித்தான் அறிமுகமாகவேண்டும்...

“ஓ வாப்பா வாப்பா.... கதவை முழுதாய் திறந்து வாஞ்சையோடு உள்ளே அழைத்து சென்றார்...

கிரானைட் கற்கள் பதித்த ஹால், சுவற்றில் நாற்பது இன்ச் பிளாஸ்மா டிவி, துளியளவு தூசி படியாத வெல்வெட் சோபா, சுவற்றில் நாகரிகத்துக்கான அடையாளமென நினைத்துக்கொண்டு மாட்டப்பட்டிருக்கும் புரியாத மாடர்ன் ஆர்ட் சித்திரங்கள், ஷோ கேசில் அழகான காஸ்ட்லி பொம்மைகள்...

க்ளாசில் பழச்சாறு கொண்டுவந்து கொடுக்க ஒரு பணியாள், அநேகமாக மூன்று நான்கு அறைகள் இருக்கக்கூடும்...

“எதுக்கு தேவையில்லாம ரூம்ல லைட் எரியுது மின்சாரத்தைக்கூட அணு அணுவாக சிக்கனப்படுத்தி வாழ்ந்த எங்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய சம்மந்தம் என்பது இன்னுமே என்னால் நம்பமுடியாத புதிராய் மனக்கண் முன் நிற்கிறது...

“சென்னைல வேலை பார்க்குறதா சொன்னாங்க, எப்போப்பா வந்த? என் திகைப்பு சற்று இளைப்பாறியது...

“இன்னிக்குதான் வந்தேன்மா... லீவ் இப்பதான் கிடைச்சுது...

“சரிப்பா... கல்யாண வேலைலாம் எப்டி போகுது?... இன்விட்டேஷன் குடுக்க ஆரமிச்சாச்சா?

“அல்மோஸ்ட் எல்லா வேலையையும் அப்பாவே முடிச்சுட்டார்... இன்விட்டேஷன் நாளைலேந்து கொடுக்கணும்...

“வீடல்லாம் பிடிச்சிருக்கா தம்பி?.. ஒன்னும் கவலை வேணாம்... இந்துவ எங்க பொண்ணு மாதிரி பார்த்துப்போம்... என் பையனும் தங்கமானவன்ப்பா... ரொம்ப டேலன்ட் கூட என்று தொடங்கி கிட்டத்தட்ட எல்கேஜியில் ‘லெமன் இன் தி ஸ்பூன்இல் சோப்பு டப்பா பரிசாக வாங்கியது முதல் அத்தியாயங்களாக மகன் புராணம் பாடத்தொடங்கிவிட்டார்... 

கையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சில ஆல்பங்களை புரட்டியே ஆகவேண்டுமென நச்சரிப்புகள் வேறு... வேறுவழியின்றி சில ஆல்பங்களை கடனுக்கென திறக்க, அப்போதுதான் மாப்பிள்ளையின் கொஞ்சம் பழைய புகைப்படங்களை பார்த்து திடுக்கிட்டேன்...

இதுவா மாப்பிள்ளை?... அக்கா வாட்சப்பில் அனுப்பிய புகைப்படத்தில் மழித்த முகமாய், முன்நெற்றி வழுக்கையை மறைக்கும் முடியோடு கைகட்டி நிற்கும் ஒரு அம்மாஞ்சி மாப்பிள்ளையைதானே பார்த்தேன்...

இந்த புகைப்படத்தில் பிரெஞ்ச் பியர்ட் வைத்து, சற்று மாநிறமாய், கழுத்து வரை வழியும் முடியுமாக நிற்கும் இவனை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே...

“இது மூணு வருஷத்துக்கு முன்ன எடுத்ததுப்பா.... சென்னைல வர்க் பண்ணான் அப்போ... ரௌடி மாதிரி ஹேர்ஸ்டைல் பார்த்தியா... இப்போதான் எல்லாத்தையும் மாத்திருக்கான்...

கடவுளே!... இதென்ன புது சோதனை...

இவனை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்... பார்த்திருப்பது மட்டுமானால் இங்கே சிக்கல் இல்லையே, இவன் கூட படுத்திருக்கிறேனே... பெயர், விபரங்கள் எதுவும் நினைவிலில்லை.... ஆனால், இந்த பிரெஞ்ச் பியர்ட் என்னால் மறக்க முடியாது.. உடலில் சற்று கடுமையான வலியல்லாம் கூட உண்டானது இவன்கூட இருந்தபோதல்லவா!...

“மனுஷனே இல்லடா அவன்... இங்க பாரு இடம்பெல்லாம் சிவந்துபோய்... கடிச்சு வைக்கிறாண்டா
தலை சுற்றியது எனக்கு...

அவசரமாக அங்கிருந்து வெளியேறி, வீட்டை நோக்கி நகர்ந்தேன்...

எப்பாடுப்பட்டாவது இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும்.... எப்படி?... அப்பாவிடம் உண்மையை சொல்லியா?... என் கழுத்தைத்திருகி, சுவற்றோடு அடித்து கொன்றே விடுவார்... அக்காவிடம் இதனையல்லாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை... உலகம் தெரியாத கிணற்றுத்தவளை அவள்!...

கடவுளே!.. இந்த திருமணத்தை என்ன செய்தாவது நான் நிறுத்தியே ஆகவேண்டும்... அதற்குண்டான மனவலிமையை எனக்குத்தா ஆண்டவா!...

எதிர்பார்த்தது போலவேதான் எதிர்வினைகளும் அமைந்தன...

“என்னடா ஆச்சு உனக்கு?... ஏன் கல்யாணத்த நிறுத்த சொல்ற? அம்மா பதறினாள்...

“பொறுப்பா பணம்லாம் குடுத்ததும் திருந்திட்டான் போலன்னு நம்பினேன்... இப்போ சொந்த அக்கா கல்யாணத்துக்கே குறுக்க நிக்குறான்... யூஸ்லஸ் அம்மா வழக்கம்போல உறுமினார்... 

அக்காவிற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை... எல்லாம் சுபமாய் அமையும் வேளையில் நான் வந்து கெடுக்கப்போவதாய் என்மீது எரிச்சல் படுகிறாள் போலும்... 

“ஐயோ நான் சொன்னா உங்களுக்கு புரியாது... அந்த மாப்பிள்ளை வேணாம்ப்பா...

“ஏன் நீ எதுவும் மைசூர் மகாராஜா வீட்ல மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கியா?

“ஐயோ அவர் ஆள் ரொம்ப சுமாரா இருக்கார்... வழுக்கைத்தலை வேற

“உங்க அக்காவுக்கு முப்பது வயசு நெருங்குதே, அது தெரியுமா உனக்கு?

“வேலையும் நிரந்தரம் இல்லாததுப்பா... ஐடி... என்னிக்கு வேணாலும் வீட்டுக்கு அனுப்பிடலாம்...
 
“நீயும் ஐடி தான?... அதுமட்டுமில்ல... வேலையே இல்லைன்னாலும், நாலு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருக்கு

நான் இப்படி ஏதாவது முட்டாள்த்தனமான காரணங்களை அடுக்குவதும், அவர் அதற்கு விதண்டாவாதம் புரிவதுமாகவே அந்த யுத்தம் நீடித்துக்கொண்டிருந்தது... அப்பா ஒரு விடாக்கண்டன்... தடுக்கி இடறுவதை கூட, தானாக குனிந்ததாக தர்க்கம் செய்பவர்... எந்த காரணமும் அவரிடம் எடுபடாது, என் எந்த நோக்கமும் அங்கு பலிக்காது...

என்னதான் செய்வது!

“ஹலோ...

“சொல்லுங்க... யாரு?

“நான் இந்துவோட பிரதர்...

“ஓ நீங்களா?... சொல்லுங்க மச்சான்... வீட்டுக்கு வந்திங்களாம், அம்மா சொன்னாங்க... நான்தான் உங்கள மிஸ் பண்ணிட்டேன்...

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... இப்போ ப்ரீயா நீங்க?

“இப்போவேவா?... இன்விட்டேஷன் குடுக்க தஞ்சாவூர் கிளம்பிட்டு இருந்தேன்... சரி ஓகே... வீட்டுக்கு வரவா?

“இல்ல வேணாம்... கபே காபி டே வாங்க... கொஞ்சம் பெர்சனலா பேசணும்

ஐந்து நிமிடங்கள் கூட அங்கு என்னால் பொறுமையாக அமரமுடியவில்லை... கண்ணாடி திரையின் வழியே வாசலையே எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்... எப்படி அவனிடம் பேச்சை தொடங்குவது? என்ன பதில் சொல்லப்போகிறான்?... சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவதென முடிவு செய்தாகிவிட்டது... உதடு வரண்டது, ஏசி குளிரிலும் வியர்த்து கொட்டியது...

காரிலிருந்து இறங்கி உள்ளே வருகிறான்... புகைப்படத்தைவிட இன்னும் சற்று சிவப்பாக தெரிகிறான்... பேசியலின் புண்ணியமாக இருக்கக்கூடும்... பார்க்க சாதுவாகத்தான் இருக்கிறான்... சொல்லிப்பார்க்கலாம், சரிவரவில்லை என்றால் மிரட்டினாலும் வழிக்கு வருவானா?...

நான் கை தூக்கி அடையாளம் காட்டினேன்... என்னை பார்த்ததும் சட்டென அவன் மனதிற்குள் ஒரு ஷாக்... கண்களில் ஒரு மிரட்சி... என்னை இன்னும் அடையாளம் வைத்திருக்கிறான்...தேவையற்ற விளக்கங்கள் அவசியமில்லை... 

என்னெதிரே அமர்ந்தான், பயத்தை மறைக்கும் பொருட்டு சிரித்தபடியே என்னை பார்த்தான்...

“சொல்லுங்க அரவிந்த்... என்ன விஷயம்? மிக இயல்பாக என்னிடம் எப்படி இவனால் பேசமுடிகிறது?...

“என்ன விஷயம்னு உங்களுக்கு தெரியாதா என்ன? சற்று வன்மையாக வார்த்தைகளை உதிர்த்தேன்...

“தெரியலையே... கல்யாண விஷயம் பத்தியா? நான் மறந்திருப்பேன் என்று நினைக்கிறானா?... அல்லது ஏமாற்றி மணம் முடிக்க துணிந்துவிட்டானா?...

“உனக்கு என்னய்யா நான் துரோகம் பண்ணேன்?... நீ இப்ப பண்ணிட்டு இருக்குற விஷயத்தால, என் குடும்பமே பாதிக்கப்படும்னு தெரியாதா?

“ஹலோ மிஸ்டர் அப்டி என்ன தப்பு பண்ணேன்?

“என்கூட செக்ஸ் வச்சுக்கிட்டதை மறந்துட்டியா?

“மியூட்சுவலா தானே வச்சுகிட்டோம், உன்ன ரேப் ஏதும் பண்ணலையே!

“நீ கேய்யா

“சோ வாட்?.... நம்ம நாட்ல கேஸ் பொண்ணுகள கல்யாணம் பண்ணிக்கர்றது புதுசா என்ன?... எங்க மனசாட்சிய தொட்டு சொல்லு, நீ கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லையா?

“உன்னோட ஓரியன்டேஷன் எனக்கு தெரிஞ்சும், உன்கூட செக்ஸ் வச்சுகிட்ட பிறகும் எப்டி என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியும்?... இது என் அக்காவோட கனவுடா... தயவுசெஞ்சு அதல்லாம் சிதச்சிடாத

“டிராமாட்டிக்கள் டயலாக்ஸ் வேணாம் அரவிந்த்... நான் எதையும் கலைக்கல... என்னைப்பத்தி எல்லாம் எங்க வீட்டுக்கு தெரியும்... இப்ப போர்ஸ் பண்ணித்தான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்க வச்சிருக்காங்க... இப்போ நானும் பொறிக்குள் மாட்டின எலிதான்... எனக்குன்னும் எவ்ளோ கனவுகள் இருந்துச்சு, அதல்லாம் மறந்துதான் இப்போ ப்ராக்டிக்கல் லைப்க்கு மாற கத்துட்டு இருக்கேன்...

எனக்கு தாழமாட்டாத கோபம் தலைக்கு ஏறியது.. என்னெதிரே கவிழ்க்கப்பட்டிருந்த அந்த கண்ணாடி குவளையால் அவன் தலையை பதம் பார்த்துவிடலாமா? என்று ஒருகணம் யோசித்து அடங்கினேன்... தவறை தெரியாமல் செய்பவனாக இருந்திடும் பட்சத்தில் காரண காரியங்கள் சொல்லி புரியவைக்கலாம், ஆனால் விளைவுகள் எல்லாம் தெரிந்துமே இவன் பிடிவாதமாக அந்த தவறை செய்வேன் என்கிறான்... என்ன செய்வது?..

“நீ ஆம்பளைன்னு இந்த ஊருக்கு நிரூபிக்க ஒரு கஷ்டப்படுற வீட்டுப்பொண்ணுதான் பகடையா உனக்கு?

“ப்ராக்டிக்கலி அதான் உண்மை... இதை ஓப்பனா ஒத்துக்கிட்டதால நான் திமிரா பேசுறேன்னு நினைக்காத... நான் என்னதான் பொய் சொல்லி மழுப்பினாலும், இந்த உலகம் அப்படிப்பட்ட நிரூபிப்பை உன்கிட்டயும் என்கிட்டயும் எதிர்பார்க்குது...

“உனக்கு ஒரு சிஸ்டர் இருந்தா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துப்பியா?... மனசாட்சிய தொட்டு சொல்லு

“கண்டிப்பா மாட்டேன்... ஆனா, இப்டி உன்கிட்ட புலம்பிட்டு இருக்க மாட்டேன்... வீட்ல உண்மைய சொல்லி கல்யாணத்தை நிறுத்திருப்பேன்... உன்னோட ஆண்மையின் வீரியத்தை வீட்ல குறைச்சிக்கக்கூடாதுன்னுதான இப்ப என்கிட்ட புலம்புற!... முதல்ல உன்னோட அழுக்கை சரி பண்ணிக்க அரவிந்த், அப்புறமா அடுத்தவங்களை தேடி வந்து குறை சொல்லலாம்... சட்டென எழுந்து சென்றுவிட்டான்...

காபி கொண்டுவரப்பட்டு என்னெதிரே வைக்கப்பட்டது... அந்த குவளையின் விளிம்பில் அமர்ந்த ஈ, அதன் சுவையை ருசிக்க எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது... விழுந்தால் காபி கடல், ஆசை தீர குடித்துவிட்டு தத்தளித்து சாகலாம்... அல்லது, கீழே சிதறப்போகும் துளிக்காக எங்கோ ஒரு மூலையில் பொறுமையாக காத்திருக்கலாம்...

எழுந்து நடக்கத்தொடங்கினேன்...

‘பீப் பீப் பிளானட் ரோமியோ அவசர தகவல் அனுப்பியது... அருகில் யாரோ இருப்பதாக ஆசை தீட்டியது... ஆயிரத்து ஒன்பதாவது முறையாக எனது தீர்மானம் வெற்றிபெற்றது... அந்த ஆப்பை டீஆக்டிவேட் செய்தேன்!..(முற்றும்)

9 comments:

 1. En story padikira maadhiri irundhichi, en sister ku january la oru paiyanai paathu marriage fix panni irundhom. Paiyan number vaangi fb la search panni kandupudichen. Profile normal la irundhalum interested in male nu irundhadhu. Enaku doubt arambichadhu. Veetla epdi idha solradhunu theriyale friend (gay) kitta ketten maybe interested in friendship with male nu irukalam kavalai padadhe nu sonnan. March la engagement vachirundhom. Appo paiyan paathu enga yaarukume pidikale but nirutha endha oru solid reason num illai. Engagement mudinji sister avan kuda pesa arambichanga. Avan pechula oru aanmaithanam theriyale. Engaluku enna seiradhunu theriyale sisterku therinjirukumo ennavo but apdilam onnum illai nu sollitanga. Naanga sister kitta evlavo sonnom edhum doubta irundha sollu nu but avanga edhum sollale. Marriage august last la fix pannirundhom. July beginning la rendu family kum sandai vandhadhu appo enga amma indirect aa andha paiyanai pathi kettanga but avan sister apdilam edhum illai nu solli malupitanga. Adhuku aprom andha paiyanai en sister kitta kalyanam mudiyira varai pesa vendamnu sollitanga. Avanum pesave illai. Kalyanathuku 5 days munnadi paiyan 8th dhaan padichirukaan nu theriya vandhu ketapo (avanga avan graduate nu solli irundhanga) avan enga kuda illai chennai la paati veetla thangi padichaan. So padichana illaya nu engaluku theriyama pochu. Naanga village la irukom enga kitta neraya property iruku adhanala naanga avan padippula avlo akkarai eduthukalai nu sonnanga.naanga kalyanathai niruthitom.

  ReplyDelete
  Replies
  1. ஓ... வருத்தமான நிகழ்வு தோழர்... திருமணம் என்கிற பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பது பெண்களின் பாதுகாப்பிற்கு மிக அவசியம்..

   Delete
 2. 1000 poi solli oru kalyanam pannalamnu solrom but idhellam movies la paaka dhaan nalla iruku, real life ku othu varaadhu.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் திரு... நிதர்சனம் என்பது வேறுதான்..

   Delete
 3. Romba arumaiya iruku unga kathaigal ellame... Thirumba vanthu stories poduratha paka romba santhosama iruku. Ethana kathai padichathum unga kathai than enaku romba pidikum. Next story kaga eager ah wait panitu iruken sikirama podunga

  ReplyDelete
 4. அண்ணா வழமைபோல உங்க யதார்த்தான கதை நகர்வு றொம்ப பிடிச்சிருக்கு நீங்க திரும்ப கதை எழுத தொடங்கியது இப்பதான் அண்ணா தெரியும். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அண்ணா.
  எனக்கும் திருமணம் எண்றாலே இதே பிரச்சனைகள் தான் கண்முன் வருகிறது.
  இங்கு ஆண்மையை நிரூபிக்க சமுதாயம் இதைத்தான் செய்ய சொல்கிறது. என் ஒருபால் ஈர்பை சாபமாக பார்க்கிறேன் அண்ணா சொல்லவும் முடியாத மெல்லவும் முடியா நிலை. இது என் எதிரிக்கும் வரக்கூடாது.
  அன்புடன் இலங்கையில் இருந்து

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி தம்பி... சாபம்னு நினைக்காதப்பா... கொஞ்சம் போராடனும், நிறைய பொறுமை வேணும்... கண்டிப்பா வாழலாம் தம்பி..

   Delete
 5. Welcome to The Pokies Slot Machine Online | Oklahoman Canada
  Welcome to the Pokies Slot Machine Online | Oklahoman Canada - Sign up, deposit, play for free or 바카라 사이트 추천 for 해외배당 real money and get your 아시아 게이밍 sign-up 아이 벳 bonus 가입머니 주는 사이트 now!

  ReplyDelete