“எப்டி மயக்கம் போட்டு விழுந்தாங்க?”
“தெரியல... நான் காலேஜ் போயிட்டு வந்து பார்த்தப்போ, கிச்சன்ல விழுந்து
கிடந்தாங்க...”
“காலைல சாப்டாங்களா?”
“தெரியல...”
“பளட் பிரஷர், சுகர் எதுவும் இருக்கா?”
“தெரியல”
“வேற எதுக்காச்சும் ட்ரீட்மெண்ட் எடுக்குறாங்களா?”
“அதுபத்திலாம் ஒன்னும் தெரியாது சிஸ்டர்..”
“அவங்களுக்கு நீங்க என்ன வேணும்?”
“டாட்டர்”
ஏற இறங்க என்னை பார்த்துவிட்டு, ஒரு புழுவைப் பார்ப்பது போல என்னை கடந்து
சென்றாள் அந்த செவிலிப்பெண்.. அவளை சொல்லி குறையில்லை.. அவள் இடத்தில் யாராக
இருந்தாலும், இதைவிட அருவருப்பான பார்வையோடுதான் என்னை கடந்திருப்பார்கள்...
ஒரு தாய் மயக்கம்போட்டு விழுந்து, தலையில் ரத்தம் வழிந்தபடி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்... மகளாக என் கண்களிலிருந்து இதுவரை ஒருசொட்டு கண்ணீர்
கூட அரும்பவில்லை... ஏறக்குறைய அங்கே கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் எனது
பதில் “தெரியாது” என்பது மட்டும்தான்...
எதை தெரிந்துவைத்திருப்பது.. எப்படி தெரிந்துவைத்திருப்பது?... அவள்
சொல்லியிருந்தால்தானே தெரியும்... சரி நான் கேட்கவில்லை என்பது அவளின் வாதமாக
இருக்கலாம்... கேட்கக்கூடிய சூழலை உருவாகாததற்கும் கூட அவளின் அழுத்தமான
பிடிவாதம்தானே காரணம்..
“சுகர் லெவல் நானூறுக்கு மேல போயிருக்கு... ஹைப்பர்டென்ஷன்... மைல்ட் ஹார்ட்
அட்டாக்... கிட்னியும் சரியா பங்க்சன் ஆகல... அசைட்டிஸ் வேற... மல்டி ஆர்கன்
பெய்லியர்மா.. எதை முதல்ல சரி பண்றதுன்னு பார்க்குறோம்... எங்களோட பெஸ்ட் நாங்க
ட்ரை பண்றோம்மா”
வரிசையாக நோய்களை அடுக்கிவிட்டு சென்றார் மருத்துவர்.. இது எனக்கு புதிய
அனுபவம்தான்.. மருத்துவர் அப்படி சொல்லும்போதுகூட, கல் போலத்தான் நின்று
கேட்டுக்கொண்டிருக்கிறேன்... ஒரு சீரியல் வசனத்தைப்போல, ஒரு சிறுகதையின் வரிகள்
போலத்தான் அவற்றை என்னால் கடந்துசெல்ல முடிகிறது...
எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த உணர்வு என்னிடத்தில் அரும்பக்கூட இல்லையே
ஏன்?... அம்மாவைப்பற்றி எனக்குள் பதிந்த பிம்பம்தான் அதற்கெல்லாம் காரணம்... அம்மா
என்றால் எல்லோருக்குமே பொதுவான ஒரு பிம்பம் உண்டு... அன்பானவள், ஆதரவானவள்,
அரவணைப்பவள்... ஆனால் இவளோடு நான் முகம்கொடுத்துப்பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது...
‘அம்மா’ என்ற வார்த்தையைக் கூட நினைவு தெரிந்த நாள் முதலாய் உச்சரித்ததாக
நினைவில்லை..
முதன்முதலாக எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் எனக்குள் தீப்பொறியாய் உதித்த
கேள்வி , “அப்பா எங்கே?” பல ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன்...
கேள்வியை திசைதிருப்புவது, பேச்சை மடைமாற்றுவது, கேள்வியை புறக்கணித்து கடந்து
செல்வதென ஒவ்வொருமுறையும் அவற்றை புறந்தள்ளி, அந்த மெல்லிய தீப்பொறியை
நெருப்புக்குழம்பாக என் மனதிற்குள் வார்த்தது அந்த நிராகரிப்புதான்...
இனிஷியலுக்காகவும், சான்றிதழில் இடத்தை நிரப்புவதற்காகவுமான ஒரு கருவியாய்
மட்டும்தான் அந்த நபரின் பெயர் இருந்திருக்கிறது... அவர் எங்கே? எதனால் இருவரும்
பிரிந்தார்கள்? என்று எனக்குள் கேள்வி எழுவது இயல்புதானே...
முறையாக பதில்சொல்ல வேண்டிய கடமையை அவள் புறந்தள்ளியதால், முறைதவறிய பல
கற்பனைகள்தான் என் காதுகளுக்கு எட்டின...
“உங்க அம்மாவுக்கும் வேற ஒருத்தருக்கும் தொடர்பு இருந்தது தெரிஞ்சு,
கோவிச்சுக்கிட்டு போயிட்டாரு”
“உங்கப்பா தங்கமானவரு பாப்பா... உங்காத்தாக்காரிதான் லம்பாடி கணக்கா
திரியுவா.. கல்யாணத்துக்கு முன்னமே பழக்கவழக்கம் சரியில்லாதது தெரிஞ்சு அந்தாளு
எங்கயோ வெளிநாட்டுக்கு போயிட்டாராம்...”
“கல்யாணமான ஆறு மாசத்துல வயித்துல புள்ளையோட, தாலிய கழட்டிகுடுத்துட்டு வந்து
நின்னா உங்கம்மா... உங்க தாத்தாவுக்கு அன்னியோட முடியாமப்போய், செத்தே போனாரு...
குடும்பம் நடத்தவே லாயக்கில்லாதவ”
என் அம்மாவா இப்படியல்லாம்?... இப்படிப்பட்ட எந்த வதந்திகளுக்குமே பதில்
சொல்லவில்லை அவள்... பலநாள் அழுதபடி கேட்டிருக்கிறேன், “அசிங்கமா இருக்கும்மா
அவங்கல்லாம் பேசுறது... ஏம்மா அவரு போனாரு” கடைசியாக அந்த பிஞ்சு வயதில் மடியில்
முகம் பதித்து, தேம்பி அழுது கேட்டபோதும் அந்த அழுத்தக்காரி மனம் நெகிழவில்லை...
“ஊருக்காரங்க ஆயிரம் பேசுவாங்க கண்ணு... நீ ஏன் கலங்குற”
முதலில் வதந்திகளை கண்டு அவமானப்பட்டு கூனிக்குறுகினேன், பிறகு வருத்தப்பட்டு
அழுதேன், ஒருகட்டத்தில் மனம் வேறு வழியில்லாது அதை நம்பவும் தொடங்கியது...
“நெருப்பில்லாமல் புகையாது... அம்மாவின் மேல் தவறில்லை என்றால், உண்மையை
சொல்லியிருக்கலாமே... குறைந்தபட்சம் என்னிடமாவது”
மெல்ல மெல்ல அவளை மனம் வெறுக்கத்தொடங்கியது... ஏதோ சொல்லத்தகாத தவறினை அவள்
இழைத்துவிட்டதாக நம்பியபிறகு, அவளோடு முகம்கொடுத்தே பேசியதில்லை..
வெறுப்புணர்வு மேலோங்க, என்னை கட்டுப்படுத்தும் திறனும் அவள் இழந்துபோனாள்...
அவளுமே பேச்சை குறைத்துக்கொண்டாள்... எதாவது அத்தியாவசிய கேள்விகள் கேட்கும்போது
கூட, முகத்தை வெறுப்பாய் வைத்துக்கொண்டு, வார்த்தைகளில் நெருப்பை கொட்டுவது
வாடிக்கையான நிகழ்வாகவே மாறிப்போனது... ஒரே வீட்டிற்குள் தனித்தனி தீவுகளுக்குள்
இருக்கும் தனிமை அங்கே நிலவியது...
அவள் கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தேன்.. ஏதேதோ கருவிகள் உடலோடு
இணைக்கப்பட்டு, ‘பீப்... பீப்’ என ஒருவித அச்சமான சூழலை அந்த
அறைக்குள் உருவாக்கியிருந்தது... மெதுவாக நகர்ந்து கட்டிலுக்கு அருகாமையிலிருந்த
இருக்கையில் அமர்ந்தேன்.. உறங்குகிறாளா? மயக்கத்தில் கிடக்கிறாளா? தெரியவில்லை..
வெகுகாலத்திற்கு பிறகு இவ்வளவு அருகாமையில் அவள் முகத்தை இப்போதுதான்
பார்க்கிறேன்... இந்த உடலுக்குள்தான் எத்தனை வியாதிகள்!... எதையுமே அவள் வெளிக்காட்டிக்கொண்டதே
இல்லை.. இப்படி ஒருநாள் மயங்கி விழுவாளென கற்பனை செய்திடகூட முடியாத
அளவுக்குத்தான் நேற்றுவரைக்கும்கூட உழைத்துக்கொண்டிருந்தாள்... எனக்காக... எனக்காக
மட்டுமே...
ஆறு மாத கருவை சுமந்துகொண்டு, கணவனை பிரிந்து, பிறந்த வீட்டோடு பிரிவை
எதிர்கொண்டு தனியொரு மனுஷியாய் இந்த பதினெட்டு வருடங்களும் அவள் வாழ்க்கை
மிகப்பெரிய ஒரு போராட்டக்களம்தான்... தையல் மெஷினை முன்னும் பின்னும்
அசைத்துக்கொண்டிருந்த இந்த கால்கள் ஓய்வெடுத்து நான் பார்த்ததே இல்லை..
எவ்வளவோ அவளை நான் வெறுத்து ஒதுக்கிய காலத்திலும் எனக்கான வேலைகளை அவள்
புறந்தள்ளியதே இல்லை.. ஆனால், இந்த எவ்விதமான போற்றத்தகுந்த விஷயங்களையும்
கிரகித்து அவளோடு அன்பு பாராட்ட என் மனம் ஒப்பியதில்லை.. இப்போதும் மனதிற்குள்
உறுத்திக்கொண்டிருக்கும் அந்த கேள்விக்கு, அவளின் மௌனம்தான் பதிலாக
இருக்கக்கூடும்... “அப்பா ஏன்மா போனாரு?”...
மெலிதாய் கண்களை திறந்தாள்... அருகில் நான் அமர்ந்திருப்பதைப்பார்த்து
அவளுக்குள் உண்டான திகைப்பை, அந்த கண்களில் பார்த்தேன்... சுற்றிமுற்றி
பார்த்தாள்... மருத்துவமனையில் இருப்பதை உணர்கிறாள்... அச்ச ரேகை முகத்தில்
படரத்தொடங்கியது...
“ஒன்னும் பயப்படவேணாம்... சுகர் கூடிடுச்சாம், மயக்கம் போட்டுட்ட...
சரியாகிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க”
என்னை ஏறிட்டுப்பார்த்தாள்... நான்தான் பேசுகிறேன் என்பதை ஒருமுறை
உறுதிசெய்துகொண்டாள்...
“தண்ணி ஏதும் வேணுமா?”
அவளை நிமிர்த்தி என் தோளோடு சாய்த்துவைத்து, தண்ணீர் கொஞ்சம் குடிக்கக்கொடுத்தேன்...
மூச்சு அதிகமாக திணறியது... மீண்டும் படுத்துக்கொண்டாள்...
பயமாக இருக்கிறது... எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் கடவுளே!...
அவள் கையை பிடித்துக்கொண்டேன்... கண்ணீர் விழியோரம் அவளுக்கு
கசியத்தொடங்கியது...
“இப்ப ஏன் அழற?... பயப்படவல்லாம் ஒண்ணுமில்ல... பேசாம தூங்கு” தலையை கோதிவிட்டேன்....
“அம்மா மேல கோபமில்லையா கண்ணு” வார்த்தைகளை முடிப்பதற்குள் மேல்மூச்சு
கீழ்மூச்சு வாங்கியது...
“அதல்லாம் ஒண்ணுமில்ல... இப்ப எதையும் பேசவேணாம்...” என் கையை எடுத்து அவள் முகத்தோடு ஒற்றி
அழத்தொடங்கினாள்... சிலபல சமாதான வார்த்தைகள் சொல்லி அவளை சற்று ஆசுவாசப்படுத்தி
நிதானிக்க செய்தேன்...
“அப்பாவோட பிரிஞ்சதுக்கு, நான் எதுவும் தப்பு பண்ணல கண்ணு... மத்தவங்க ஆயிரம்
சொல்லட்டும், எம்பொண்ணு நீ நம்புடா என்னைய...”
“....” மெளனமாக அமர்ந்திருந்தேன்...
அழுதுவிடுவேன் போலிருக்கிறது... தொண்டையை சரிசெய்து என்னை இயல்பாக இருப்பதாய்
காட்டிக்கொண்டேன்...
“உங்க அப்பாவுக்கு என்மேல விருப்பம் இல்லம்மா...”
“...” திகைப்போடு அவளை உற்று நோக்கினேன்..
“என்மேலன்னா, என்மேல மட்டுமில்ல.. அவருக்கு பொண்ணுங்க மேலேயே விருப்பம்
இல்லையாம்... ஆம்பளைங்க மேலதான் விருப்பமாம்..”
“அப்போ அப்பா கே’வா?” அதிர்ந்தேன்...
“ஆமா... அப்டிதான் ஏதோ சொன்னாரு... ரொம்ப கஷ்டமா இருக்கு, பிரிஞ்சிடலாம்னு
சொன்னாரு... மத்தபடி தங்கமான மனுஷன்மா... அவரு என்ன சொல்றாருன்னு புரியல... ஆனா,
நான் கூட இல்லாட்டி நிம்மதியா இருப்பேன்னு சொன்னாரு... சரின்னு ஒப்புக்கிட்டு நான்
விலகிட்டேன் கண்ணு...”
“இதை ஏன்மா யார்கிட்டயும் சொல்லல?... எல்லாரும் உன்னதான தப்பா பேசினாங்க?”
“ஆம்பள ஆயிரம் தப்பு செஞ்சாலும் பொம்பளைய கொற சொல்ற உலகம்மா இது... நான்
எப்புடி இத அவங்ககிட்ட சொல்றது... முக்கியமா உங்கப்பா சொன்ன விஷயம் எனக்கு முழுசா
புரியவே பல காலம் ஆச்சும்மா...”
“ஐயோ... சாரிம்மா இவ்ளோ நாள் நானும் உன்ன தப்பா புரிஞ்சிருந்தேன்... என்னை
மன்னிச்சிடும்மா....” அவள் கைகளை என் முகத்தோடு ஒற்றி தேம்பி
அழத்தொடங்கினேன்...
‘பீப்..... பீப்... பீப்...” சற்று நீளமாக ஒலிக்கத்தொடங்கியது...
பரபரத்து ஓடிவந்த செவிலி ஒருத்தி, “கொஞ்சம் வெளில போம்மா” என்னை வெளியே அனுப்பிவிட்டாள்...
பின்னாலேயே நான்கைந்து செவிலிப்பெண்கள் சகிதம், மருத்துவர் நடையும் ஓட்டமுமாக
உள்ளே நுழைந்தார்...
“பல்ஸ் டவுன் ஆகிடுச்சு சார்...”
“ஈசிஜி உடனே எடுங்க... கார்டியாலஜிஸ்ட்க்கு இன்பார்ம் பண்ணுங்க...”
“சிபிஆர் பண்ணுப்பா நீ”
ஒருக்களித்து சாத்தியிருந்த கதவின் ஊடே திகைப்போடு இவற்றை
பார்த்துக்கொண்டிருந்தேன்... மருந்து பாட்டில்கள் படார் படாரென உடைத்து ஊசியாக ஏற்றப்பட்டுக்கொண்டிருக்க,
ஒரு மருத்துவர் அந்த படுக்கையின் மீதேறி அம்மாவின் நெஞ்சினை வேகமாக
அழுத்திக்கொண்டிருக்கிறார்...
இன்னும் இரண்டு மருத்துவர்கள் அவசரமாக உள்ளே நுழைகின்றனர்...
“கொஞ்சநேரம் தூங்கு லக்ஷ்மி... சாப்புட எதாச்சும் செஞ்சு எடுத்துட்டு வரேன்..” ரோஜாப்பூ மாலை போட்டிருந்த அம்மாவின்
படத்திற்கு கீழே எரிந்துகொண்டிருந்த விளக்கிற்கு கூடுதல் எண்ணையை ஊற்றிவிட்டு கீழ்
வீட்டு இந்திரா அக்காவும் வெளியே சென்றுவிட்டாள்...
வீட்டில் நிசப்தம் குடிகொண்டுவிட்டது... எப்போதும் நிலவும் அமைதிதான்
என்றாலும், இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மயான அமைதி... ‘எனக்கென
யாருமில்லை!’ என்று கடிகாரத்தின் நொடிமுட்கள்
சத்தம்போட்டு சொல்லிக்கொண்டிருக்கும் நிசப்தம்..
அம்மாவின் புகைப்படத்தையே வெகுநேரம் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்...
யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்க, கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து
சென்றேன்...
குமார் மாமா யாரோ ஒரு வயதானவரை அழைத்து வந்திருக்கிறார்... துக்கம்
விசாரிக்கவாகத்தான் இருக்கும்.. நாற்காலியை காட்டி அமரும்படி சொன்னேன்..
“இவரு யாருன்னு தெரியுமா?” என்னருகில் வந்து கிசுகிசுத்தபடி
வினவினார் மாமா...
“தெரியல..” இடமும் வலமுமாக தலையசைத்தேன்...
“உங்கப்பாம்மா... சமூகத்துல பெரிய அந்தஸ்துல இருக்கார் இப்போ... எஸ்கே க்ரூப்
ஆப் கம்பெனிஸ்னு இருபத்திரண்டு ப்ராஞ்சஸ் இருக்காம்...” வாய் பிழந்தார் மாமா..
எதையும் பொருட்படுத்தாது, அலட்சியமாக அவர்களை கடந்து மீண்டும் உள்ளே சென்றேன்...
வாங்கி வந்திருந்த மாலையை அம்மாவின் படத்தின் முன்பு வைத்துவிட்டு என்னருகில்
வந்து நின்றார் அந்த ‘யாரோ’ நபர்.. நான் கண்டுகொள்ளவில்லை...
“கண்டிப்பா என்மேல உனக்கு கோபம் இருக்கும்னு தெரியும் எனக்கு... ஏன்னா
உங்கம்மா என்னப்பத்தி எதுவும் நல்லவிதமா உன்கிட்ட சொல்லிருக்க வாய்ப்பே இல்ல..”
“நல்லவிதமாவா?... அப்டி எதாச்சும் இருந்தா சொல்லுங்களே கேட்குறேன்..” பேசவைக்கிறார் பாதகன்...
“நான் கே’தான்மா... குடும்ப சூழலால கல்யாணம்
பண்ணினது தப்புதான்.. ஆனா நான் சொன்னதும் உங்கம்மா புரிஞ்சு விலகி போய்ட்டா...
இதுதான் சரியான முடிவு... இப்ப நானும் நல்ல வசதியா இருக்கேன், அவளும் திருமண
பந்தத்துல சிக்கி கஷ்டப்பட்டிருக்காம சுதந்திரமா இருந்தா...”
“எங்கம்மா நல்லா இருந்தாளா?... நீங்க பார்த்திங்களா சார்?... அவங்கள
விட்டுப்பிரிஞ்ச இத்தன வருஷத்துல ஒருதடவயாச்சும் வந்து பார்த்திருந்தா, எவ்ளோ
சந்தோஷமா வாழ்ந்தாங்கன்னு பூரிச்சு போயிருப்பிங்க சார்....”
“சார்னு சொல்லாதம்மா... நான் உன் அப்பா.. நாங்க அப்போ எடுத்த அந்த முடிவு,
எங்க ரெண்டுபேரோட எதிர்காலமும் நல்லா இருக்கணும்னுதான்மா”
“ஒரு கணவனை பிரிஞ்ச பொண்ணு இந்த சொசைட்டில சந்திக்கக்கூடிய அத்தனை
கஷ்டங்களையும் எங்கம்மா அனுபவிச்சா... உனக்கென்ன எல்லாம் மயிரா போச்சுன்னு
போய்ட்ட... நீ ஆம்பளைன்னு நிரூபிக்க ஒரு பொண்டாட்டியும் ஆச்சு, உன் ஆண்மைய
நிரூபிக்க ஒரு புள்ளையும் ஆச்சு... நீ சரியானவன்னு இந்த சமூகத்துக்கு
காட்டினதுக்கு பிறகு எச்சில் இலை போல எங்கம்மாவ தூக்கி போட்டுட்டு போய்ட்ட... இப்ப
நான் அனாதையா நிக்குறதுதான் மிச்சம்...”
கோபம் தலைக்கு மேல் ஏறி கண்களில் நீர்
கொட்டத்தொடங்கியது... எப்படி இந்த மனிதனால் தான் செய்த தவறை, இந்த சூழலிலும்
நியாயப்படுத்தமுடிகிறது!
“நீ அனாதை இல்லம்மா... என் பொண்ணு... நடந்த எல்லா தப்புக்கும் மன்னிப்பு
கேட்டுக்கறேன்... என்கூட வந்திடு... என்னோட எல்லா சொத்துகளுக்கும் நீதான்மா ஒரே
வாரிசு...”
“த்தூ... உன் பணத்துல ஒரு ரூபாய் நான் வாங்கினாலும், எங்கம்மாவுக்கு நான்
செஞ்ச மிகப்பெரிய துரோகம் அது... இவ்ளோ நாள் எங்கம்மாவுக்கு நான் செஞ்ச பாவத்துக்கு
கொஞ்ச காலம் நான் அனுபவிக்கனும்னு இருக்கு... தயவுசெஞ்சு நீ போய்டு...” தையல் மெஷினின் அடிப்பகுதியில் முகத்தை
புதைத்து அழத்தொடங்கினேன்... ‘அம்மா... அம்மா... அம்மா’ புலம்பிக்கொண்டே இருக்கிறேன்... எதாவது
ஒரு ரூபத்தில் அவள் காதுகளுக்கு என் குரல் எட்டுமென்ற நம்பிக்கையில்!
great narration... hats off
ReplyDelete