Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 17 November 2022

வாழவிடுங்கடா...!

 

‘அம்மா எப்போதும் அம்மாவாகத்தான் இருக்கிறாள், நான்தான் பலநேரம் பிள்ளையாய் இருந்ததில்லை’ என்னுடைய ஏதோ ஒரு கதையில், எங்கோ குறிப்பிடப்பட்ட வாக்கியம்தான் என்றாலும், அதை வெறும் எழுத்துகளை கோர்த்து வடிவமைத்த வார்த்தைகளாக அங்கே குறிப்பிட்டிருக்க மாட்டேன்.. உள்ளார்ந்து மனம் நிறைந்த நம்பிக்கையோடு பதிவுசெய்த பதிவுகள் அவை.. பல கதைகளில் அம்மாக்களை வெகுளியாகவும், பிள்ளைக்காக எதையும் விட்டுக்கொடுப்பவர்களாகவும்தான் வடிவமைத்திருந்தேன்.. எனக்கும் என் அம்மாவுக்கும் இருந்த உறவுகூட ஒரு வருடத்திற்கு முன்புவரை அப்படித்தானிருந்தது..

‘வெள்ளைக்காக்கா பறக்குது பார்!’ என்று சொன்னால் கூட, துளியும் யோசித்திடாது அண்ணாந்து பார்க்கும் அக்மார்க் அம்மாதான்.. என்னை முழுமையாக நம்புவாள்.. பள்ளி கல்லூரி நாட்களில் கூட அப்பாவிடம் சொல்லும் பொய்களை போல, அம்மாவிடம் சொல்ல தோன்றியதில்லை.. நம்மை கண்மூடித்தனமாக நம்பும் ஒருத்தியிடம் பொய் சொல்ல எப்படி மனது வரும்?..

பத்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தாள் என்றாலும், எனக்கு இலக்கியத்தின் மீது நாட்டம் வர அவள் வாசித்து வந்த புத்தகங்கள்தான் காரணம்.. நிறைய படித்தாளாம், நான் பிறந்த பிறகு அதற்கு நேரம் வாய்க்கவில்லை என்பாள்.. இப்படி கதைகள் எழுதுகிறேன் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.. ஒன்றிரண்டு கதைகளை கொஞ்சம் எடிட் செய்து (ஆண்-ஆண் காதலை ஆண்-பெண்ணாக மாற்றி) அவளிடம் காட்டியதுண்டு.. அப்பப்பா, கொண்டாடி தீர்த்தாள்.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா!..

சரி, இந்த விளக்கம் வைத்து என்னையும் அம்மாவையும் ஓரளவு உருவகப்படுத்தியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. என்னுடைய பாலீர்ப்பு பற்றியும் அவள் அரசல் புரசலாக அறிந்திருப்பாள் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.. முப்பதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு ஆணை, இந்த சமூகம் எந்த அளவிற்கு திருமண அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.. அப்படியிருக்கும்போது, உப்புக்கு பெறாத காரணங்களை சொல்லி அவ்வளவு காலமும் திருமணத்தை தவிர்த்து வந்தபோதும் கூட அம்மா என்னிடம் பெரிதாக அதுபற்றி அழுத்தம் கொடுத்ததில்லை..

ஆனால், அம்மாவையும் மீறி என்னை திருமணம் செய்துவைக்க சொந்தங்கள் என்கிற பெயரில் ஒரு சதிகாரக்கூட்டம் சூழ்ச்சி செய்துவந்தது தாமதமாகத்தான் தெரியவந்தது.. அப்போதுதான், எனக்கும் அம்மாவுக்கும் அப்படியொரு ஆழமான வாதம் உண்டானது..

“இன்னும் எவ்வளவு நாள் இப்புடியே இருக்கப்போற?.. மாமாவல்லாம் பேசிட்டாங்க, வர்ற புதன் ஜாதகம் பாக்க போறோம்!” தலையில் இடியாய் விழுந்தது..

வழக்கம் போலவே அற்ப காரணங்களை சொல்லியும், அம்மா அன்று எதையும் செவிகொடுத்து கேட்கவே இல்லை.. நீண்ட வாதங்களுக்கு பிறகு, எனது மிகநீண்ட யோசனைக்கு பிறகு, இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்கிற இக்கட்டான சூழலில் என்னுடைய பாலீர்ப்பு பற்றி அவளிடம் மெதுவாக விளக்கினேன்..

அவளிடம் அதிர்ச்சியில்லை.. காரணம், அவளுக்கு அதுபற்றி ஓரளவு தெரிந்திருந்தது.. ஆனால், மிகப்பெரிய கோபத்தை கொட்டினாள்.. அவள் வார்த்தைகளில் அவ்வளவு வெறுப்பை அதுநாள் வரை நான் கண்டதில்லை..

அழுகிறாள், திட்டுகிறாள், சபிக்கிறாள்.. “சரி கல்யாணம் பண்ணிக்கறேன்” என்ற வார்த்தையை என்னென்ன விதமாகவோ செய்து, வரவைக்க வேண்டும் என்று போராடும் முனைப்பு மட்டுமே அவளிடம் தெரிந்தது.. 

என் சுயத்தை காக்க, கடும் பிரயத்தனம் அன்றைக்கு தேவைப்பட்டது.. எல்லாவற்றுக்கும் மௌனித்து, வாதங்களை புறந்தள்ளினேன்.. இயற்கை அறிவியல் என்று எனது எந்த வாதத்தையும் அவர்களும் பொருட்படுத்தவில்லை.. அம்மாவை பொறுத்தவரை, சுற்றம் சொந்தம் என்ன சொல்லுமோ? என்கிற மிகப்பெரிய அச்சமும், தனக்கு பிறகு பிள்ளை துணையின்றி கஷ்டப்படுவானே! என்கிற சிறிய பயமும் மட்டுமே ஆட்பட்டவளாக தெரிந்தாள்..

ஒரு வருடம் ஆகிவிட்டது.. இப்போவரை என்னிடம் பேசவில்லை.. அவள் வேதனை அறியாத அளவிற்கு நான் முட்டாள் இல்லை, ஆனால் ஒரு பெண்ணை மகிழ்விக்க இன்னொரு பெண்ணின் கனவுகளை சிதைக்க விரும்பவில்லை.. என்னை பொறுத்தவரை நான் சமாதானப்படுத்தி, என் தரப்பை புரிந்துகொள்ள செய்ய வேண்டியது அம்மாவை மட்டும்தான்.. மற்ற எவருக்கும் புரியவைக்கவோ விளக்கவோ எனக்கு திராணியும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை.. அவள் ஒருத்தி என்னை புரிந்துகொண்டால் போதும்!

எதற்காக இங்கே இதனை சொல்கிறேன் தெரியுமா?.. இந்த பாழாய்ப்போன சமூகத்தில் சிக்குண்டு நாம் மட்டும் சிதைபடவில்லை, நாம் நல்லவிதத்தில் வாழவேண்டும் என்று நினைக்கும் ஆட்களின் எண்ணங்களும் சிதைபட்டுக்கொண்டிருக்கிறது..

எங்கோ ஒரு நல்லது கெட்டதுக்கு போனால், “பையனுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல?” இப்படி கேள்விகளை எதிர்கொண்டே எத்தனை நாட்கள் அவர்கள் அழுதிருப்பார்கள்!.. 'கல்யாணம் ஆகல' என்பதற்கும் 'கல்யாணம் பண்ணிக்கல' என்பதற்கும் வேறுபாடு தெரியாத மூடர் கூட்டத்திற்கு எதை சொல்லி புரியவைக்கமுடியும்.. அந்த 'பண்ணிக்கல!' என்கிற வார்த்தைக்குள் கிடக்கும் ஆயிரம் வலிகளில், ஒன்றையேனும் இந்த சமூகத்தால் உணரமுடியுமா?.. குறைந்தபட்சம் 'பண்ணிக்கல' என்பது ஒரு தனிநபர் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்த செயல் என்கிற அடிப்படை நாகரிகமாவது இந்த சமூகத்துக்கு இருக்கிறதா?.. 

கல்யாணம் ஆகுற வரைக்கும், "ஏன் கல்யாணம் ஆகல?", கல்யாணம் ஆனபிறகு , "ஏன் குழந்தை இல்ல?", குழந்தை பிறந்தபிறகும் கூட, 'அது ஏன் இல்ல?, இது ஏன் இல்ல?'... இத்யாதி.. இத்யாதி.. இந்த சமூகத்தை ஒவ்வொரு நாளும் திருப்தி படுத்தி உச்சநிலை அடையசெய்வது மட்டும்தான் வாழ்க்கையா?... அட போங்கய்யா..

ஒரு பையனை கல்யாணம் செஞ்சு, கனடாவில் செட்டில் ஆகி, குழந்தை தத்தெடுத்து வாழும் அந்த கற்பனை கதைகள் போலவெல்லாம் இந்த சமூகம் எங்களை வாழவிட வேண்டாம்.. குறைந்தபட்சம் எங்களையும், எங்களை சார்ந்தவர்களையும் நிம்மதியாக வாழவிட்டால் போதும்!.. மற்றபடி எனக்கும் என் அம்மாவுக்குமான அந்த சிக்கலை நான் சரிபார்த்துக்கொள்கிறேன், இந்த சமூகத்திடமிருந்து எங்கள் இருவரையும் காப்பாற்றிடு கடவுளே!

3 comments:

  1. "எப்போ கல்யாணம்.. வேலைக்குப் போயாச்சா.. எத்தன குழந்தைங்க.." இதெல்லாம் ரொம்ப எளிதா கேட்டுடுவாங்க.. எவ்வளவு ரணமா இருக்கும்னு அனுபவப்பட்டவங்களுக்குத் தான் தெரியும்.. உங்க வேலை பொழப்ப மட்டும் பாருங்களேண்டா.. 😡😤😫

    ReplyDelete
  2. வீட்ல தினம் தினம் சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க ஃபோன் பண்ணாலோ இல்லை வீட்டுக்கு வந்தாலோ ஒரு வித பயமும் அசெளகரியமும் வந்திடும். வாய்விட்டு மனசில இருக்கிறத சொல்ல முடியாம மனசு கிடந்து தவிச்சுக்கும். ஒவ்வொரு முறையும் வேணாம்னு சொல்ல முடியுதே தவிர அதுக்கான காரணத்தை உடனே சொல்ல முடியுறது இல்ல. சொல்றதுங்கிற முடிவுல தான் இருக்கேன் ஆனா அந்த விஷயத்தை ஆரம்பிக்கிற ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல் வந்திட்டே இருக்கு. தள்ளிப்போட்டுடே இருக்கேன் ஆனா என்னைக்காச்சும் ஒரு நாள் சொல்லத்தான் போறேன்.

    ReplyDelete
  3. உண்மைதான் இந்தமாதிரி மத்தவங்க தனிப்பட்ட விஷயங்கள்ல தலையிடக் கூடாதுனு எப்பதான் இந்த சமூகம் புரிஞ்சுக்கப் போகுதோ தெரியலை.

    ReplyDelete