Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 10 November 2012

நம்ம வீட்டு கல்யாணம் - சிறுகதை.....

-->


வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, சமையலறையில் கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு, நெற்றியில் வலிந்த வியர்வையை தன் சேலை முந்தானையில் துடைத்தவாறே கதவை திறந்தார் பார்வதி அம்மா.... புறங்கையில் ஒட்டியிருந்த அரிசி மாவும், தலை முடியோடு சேர்ந்திருந்த கருவேப்பிலையும் பார்வதி அம்மா சமையல் செய்துகொண்டிருப்பதை சத்தம் போட்டு சொன்னது.... கதவை திறந்த பார்வதி, இறுக்கம் களைந்து இன்முகத்தோடு வரவேற்றார் முத்து மாமாவை.... நெற்றியில் திருநீறு பட்டை, வாயில் கொதப்பிய வெற்றிலை சாறு, கதர் சட்டையின் சிறு துளைகளை மறைக்கும் அளவிற்கு தோளில் ஒரு துண்டு சகிதம் ஜவ்வாது நெடி பரவ உள்ளே வந்தார் முத்து மாமா.... 

"வாங்க மாமா, உக்காருங்க.... டீ கொண்டு வரேன்"

"வேணாம்மா..... கை கால் அலம்பிட்டு வரேன், டிபன் எடுத்து வை" உரிமையோடு பார்வதியிடம் கூறினார்....

முகம், கை, கால் கழுவிவிட்டு அதை வேட்டியால் துடைத்துக்கொண்டவரை, தோளில் கிடந்த துண்டு அதிசயமாக பார்த்தது....
இலையில் இருந்த ஐந்து இட்லிக்களை இலை முழுவதும் கிளை பரப்பி வைத்து, ஊற்றும் சாம்பாருக்கு அணை கட்டினார்.... அவர் பேச்சை போலவே சாப்பிடுவதிலும் கூச்சப்படாமல், இரண்டு ஈடு இட்லிக்களை சுவாகா செய்துவிட்டு பெரிதாக ஏப்பம் விட்டார்....
"எங்கம்மா ராமு?....வேலைக்கு போய்ட்டானோ?"
"ஆமா மாமா.... அவர் வழக்கம்போல ஏழு மணிக்கே போய்ட்டாரு"
"நம்ம பய விவேக் எங்க? ஆளே காணும்?"
"நீங்க வந்த சத்தம் கேட்டதால, வெளில வராம அவன் ரூம்லேயே இருக்குறான்.... இருங்க கூப்பிடுறேன்"
"வேணாம்மா.... நானே போய் பார்க்குறேன்" சொல்லிவிட்டு விவேக்கின் அறைக்குள் சென்று கதவை சாத்தினார்.... முத்து மாமா எழுபது வயதை நோக்கி சென்றுகொண்டிருக்கும்  தாத்தா.... ஆனாலும், யார் கேட்டாலும் அறுபது வயதை தாண்டி தன் வயதை சொல்லமாட்டார்.... அதில் அவருக்கொரு, கௌரவ குறைச்சல்.... ராமநாதன் பார்வதி குடும்பத்துக்கு தூரத்து சொந்தம்.... அதாவது ராமனாதனோட பெரியப்பா சம்சாரத்தோட தங்கச்சி மாமனாருக்கு தம்பி வகையில இவர் சொந்தம்.... ரொம்ப குழம்பாதிங்க, எந்த வகை சொந்தம் என்று ராமநாதன் கூட இதுவரை யோசித்ததில்லை.... ஆனாலும், உரிமையோடு மாதம் ஒருமுறை இங்கு வருவார், வந்து விவேக் திருமணம் தொடர்பாக பேசிவிட்டு, ஒரு ஐந்நூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு போவார்.... இங்கு மட்டுமல்ல, அவர்கள் சமுதாயத்தில் எந்த வீட்டில் பையனோ, பெண்ணோ திருமணத்திற்கு தயாராக இருந்தாலும், அங்கு அழைப்பே இல்லாமல் ஆஜர் ஆகிடுவார் முத்து.... பெண் பார்ப்பது முதல், திருமணம் முடிந்து தாலி பெருக்கி போடும்வரை முத்து மாமா அந்த வீட்டில் ஒருவராக மாறிவிடுவார்.... ராமநாதன் வீட்டுக்கு மட்டும்தான் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக, முன்னூறு வரண்களுக்கு மேலாக பார்த்தும், இதுவரை ஒன்றும் அமையவில்லை.... இப்போதும் சிலபல வரன்களின் படங்களோடு, ஜாதகம் சகிதம் வந்திருக்கிறார்.... விவேக்கின் அறைக்குள் நுழைந்ததும், "ஏய் பேராண்டி.... என்னடா பண்ற?" என்றார்....
கட்டிலில் படுத்திருந்த விவேக், அவரை பெரிதாக அலட்டிக்கொள்ளாதபடி, "வாங்க மாமா..... அதுக்குள்ளையும் ஒரு மாசம் ஆகிடுச்சா?"
"டேய், உங்கம்மாவுக்குத்தான் நான் மாமா.... உனக்கு தாத்தா முறைடா"
"கைல என்ன வச்சிருக்கீங்க?"
"பொண்ணுங்க போட்டோ"
"அப்போ நீங்க மாமா தானே?"
"எனக்கு வேணும்டா... சின்ன பையன்னு பாக்காம, உன்கூட சரிசமமா பேசுறது என் தப்புதான்"
"சரி மாமா கோவிச்சுக்காதிங்க.... சாப்டிங்களா?.... அப்பா மதியம் வருவாரு, பணத்தை வாங்கிகிட்டு கிளம்புங்க.... எனக்கு தூக்கம் வருது"
"டேய் நான் பணத்துக்காக இங்க வரலடா.... இதுவரைக்கும் எழுபத்தி ஏழு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்... மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்னுதான் பண்றேன்..... உனக்கும் பண்ணிட்டா உங்கம்மா ரொம்ப சந்தோஷப்படும்டா"
"மாமா, அதான் சொல்லிருக்கேன்ல... இப்போ என் கல்யாணத்த பத்தி பேசாதிங்க..... எனக்கு எப்ப பண்ணிக்கனும்னு தோணுதோ அப்போ சொல்றேன்"
"உனக்கு தோணுற வரைக்கும் நான் உயிரோட இருக்கணுமே?.... இங்க பாரு இந்த பொண்ணு ஒரத்தநாடு பக்கத்துல ஒரு பெரிய குடும்பத்து பொண்ணு..... நெறைய பிடிச்சிருக்கு..... ஆளும் கிளி மாதிரி இருக்குடா" என்றவாறே ஒரு புகைப்படத்தை எடுத்து விவேக் முகத்திற்கு நேர் நீட்டினார் முத்து மாமா.....
அந்த புகைப்படத்தை வாங்கி, அவரின் கைப்பைக்குள் வைத்துவிட்டு, "கிளி மாதிரி இருந்தா, ஒரு கூண்டுல வச்சு ஜோசியம் பாருங்க.... என்னைய ஆளை விடுங்க" என்று கூறிவிட்டு அருகில் கிடந்த போர்வையை எடுத்து தலையோடு போர்த்திக்கொண்டான் விவேக்..... அதற்கும் சிரித்தவாறே, "சரி சரி தூங்கு... அப்புறம் வாரேன்" என்று வெளியே வந்தார்..... பார்வதி அம்மா அவருக்காகவே காத்திருந்தது போல, "என்ன மாமா சொன்னான்?.... அந்த பொண்ணு பிடிச்சிருக்காமா?"
"பொண்ணு போட்டவ கூட பாக்க மாட்ரான்மா.... கல்யாணத்துல அப்டி என்னதான் வெறுப்போ?.... கொஞ்ச நாள் போகட்டும்.... நான் இன்னொரு நாள் வரேன்மா"
கிளம்பியவரிடம் ஐந்நூறு ரூபாய் தாளை கொடுத்தார் பார்வதி.... அதை வாங்க மறுத்த முத்து மாமா, "இல்லமா வேணாம்.... கல்யாணம் முடிவாகுற வரைக்கும் இனி நான் உன்கிட்ட காசு வாங்க மாட்டேன்" விவேக் சொன்னதை அவனிடம் விளையாட்டாக எடுத்துக்கொண்டதை போல காட்டிக்கொண்டாலும், இவர் மனதில் அது உறுத்தியதால்தான்  பணத்தை மறுத்தார்.... பார்வதி எவ்வளவோ கூறியும், அதை மறுத்தவாறே அங்கிருந்து சென்றுவிட்டார் முத்து மாமா....
இரண்டு மணி நேரம் கழித்து, ராமநாதன் வீட்டிற்குள் நுழைந்தார்.... கதவு பறக்க திறந்து கிடந்தது, தொலைக்காட்சியில் ஏதோ புரியாத கன்னட படம் ஓடிக்கொண்டிருந்தது, ஹாலில் கீழே அமர்ந்து கத்தரிக்காய் நறுக்கிக்கொண்டிருந்தார் பார்வதி, அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.... ராமநாதன் வீட்டிற்குள் நுழைந்ததை கூட கவனிக்காமல், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தார் பார்வதி....
"என்ன பண்ற பாரு?... வெங்காயம் நறுக்குனாத்தான் கண்ணீர் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன், உனக்கு கத்திரிக்காய் நறுக்குரப்போலாம் கண்ணீர் வருது?.... என்ன ஆச்சு?"
ராமநாதன் குரல் கேட்டதும்தான் சுயநினைவுக்கு வந்தார் பார்வதி, "வாங்க, என்ன சொன்னிங்க?" என்றார்.... அவர் பேச்சில் ஒரு குழப்பம் தெரிந்ததை கண்ட ராமநாதன், "முத்து வந்தாரா?" என்றார்.....
"ஆமா.... பாத்திங்களா வெளில?"
"இல்ல, உன்ன பாத்தாவே புரியுது"
"என்ன அதுக்குள்ளையும் வந்துட்டிங்க?"
"நம்ம மோகன் இருக்கான்ல, அவன் மகளுக்கு புள்ளை பொறந்திருக்காம்.... சாப்ட்டுட்டு ஹாஸ்பிட்டல் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்"
அதை கேட்டதும் பார்வதியின் கண்கள் ஒருவித ஏக்கத்தை வெளிப்படுத்தியது, "அந்த பொண்ணை கூட நம்ம பையனுக்கு கொடுக்குறதா சொன்னாங்கள்ல?" பெருமூச்சு விட்டார்....
"சரி சரி... பழசை விடு..... நான் குளிச்சுட்டு வரேன், நீயும் கிளம்பு... போயிட்டு வந்திடலாம்" என்றவாறே உள்ளே சென்றார் ராமநாதன்....

சாப்பிட்டுவிட்டு இருவரும் தங்கள் மகிழுந்தில் மருத்துவமனை நோக்கி சென்றனர்.... செல்லும் வழியெல்லாம் பார்வதியின் பேச்சு விவேக்கின் திருமணம் பற்றியே இருந்தது....
“ரோடல்லாம் பாத்தியா எவ்வளவு மோசமா இருக்குன்னு?..... மாட்டு வண்டி ஓட்ட கூட இந்த ரோடு ஒத்து வராது”
“ஆமாங்க..... நம்ம விவேக் கல்யாணத்த தஞ்சாவூர்’லேயே வச்சுக்கணும்.... சொந்த பந்தம் சொல்றாங்கன்னு உங்க ஊர்ல வச்சிடாதிங்க”
சிரித்துக்கொண்டு வந்த ராமநாதனின் முகம் இறுகியது..... பேச்சை திசை திருப்ப, மகிழுந்தில் பாடல்களை ஒலிக்க விட்டார்.... போட்டதுமே, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா.... கண்ணா...... வருவதை எதிர்கொள்ளடா....” சீர்காழி கோவிந்தராஜன் உச்ச ஸ்துதியில் பாடினார்....
“எவ்வளவு அருமையான பாட்டுல்ல?”
“ஆமாங்க.... சூப்பர் சிங்கர்’ல கௌதம் கூட அவ்வளவு அருமையா பாடினான் இந்த பாட்டை.... விவேக் கல்யாணத்துக்கு பாட்டு கச்சேரிக்கு கெளதமை தான் கூப்பிடனும்...”
பாட்டை அணைத்து வைத்துவிட்டு, பார்வதியை காணாதவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார் ராமு....
“என்னங்க எதுவும் பேசாம வரீங்க?”
“என்னத்த பேச சொல்ற?.... நான் எது சொன்னாலும், நீ விவேக் கல்யாணத்துல கொண்டு வந்து முடிப்ப, இது எனக்கு தேவையா?”
“அவன் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்லையா?”
“நான் விருப்பப்பட்டு என்ன பண்றது?... முப்பது வயசாச்சு அவனுக்கு.... மூணு வருஷமா நானும் அதைப்பத்தி அவன்கிட்ட பேசாத நாள் இல்ல.... வெளில யாரை பாத்தாலும் ‘எப்போ விவேக் கல்யாணம்?’னு கேக்குறாங்க.... ரொம்ப சங்கடமா இருக்கு..... வீட்டுக்கு வந்தா நீயும் பாக்குற எல்லாத்தையும் அவன் கல்யாணத்தோடவே முடிச்சு போடுற....”
“மன்னிச்சிக்குங்க.... இந்த வயசுல நான் வேற எதைப்பத்தி பேசமுடியும்?... எப்பபாத்தாலும் அவன் கல்யாண நெனப்பாவே இருக்கு.... யார் சொல்லியும் கேக்க மாட்றான்.... என்னங்க பண்றது?”
“ஒருவேள யாரையாவது லவ் பண்றானோ?”
“உங்க பையன் அவன்... பண்ணிட்டாலும்..... அதையும் பலதடவை கேட்டுட்டேன்.... நெறைய சாதிக்கனுமாம்.... வடக்க யாரோ அரவாணி’னு யாரோ இருக்காராமே, அவர் மாதிரி ஆகணுமாம்”
“யே லூசு.... அது அரவாணி இல்ல, அம்பானி.... அதுவரைக்கும் நாம இருக்கணுமே?” சிரித்தார்.....
மருத்துவமனை வந்துவிட்டார்கள்.... மோகன் இவர்களின் தூரத்து உறவுதான்..... ராமநாதன் சொந்த பந்தத்தில் அதிசயமாக இருக்கும் ஒருசில நல்லவர்களுள் இவரும் ஒருவர்.... ராமநாதனையும் பார்வதியையும் பார்த்ததும், மகிழ்வோடு அழைத்துக்கொண்டு உள்ளே போனார்.... அப்போது அவர்களை ஒரு பெண் மருத்துவர், வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும்.... அவளை பார்த்ததும் ராமநாதன் காதருகில் வந்த பார்வதி, “ஏங்க, அந்த டாக்டர் பொண்ணு எவ்வளவு லெச்சணமா இருக்கு பாருங்க..... நான் வேணும்னா அதப்பத்தி விசாரிக்கவா?” என்றார்... ராமநாதன் கண்களால் கோபக்கனலை கொட்டியதும், அதை கண்டுகொள்ளாதவாறே வேறுபக்கம் திரும்பிக்கொண்டு நடக்க ஆரமித்தார் பார்வதி....
ஏற்கனவே அங்கு ஒருசில உறவினர்களும் இருக்க, சிரித்தபடியே சென்றனர் ராமநாதன் தம்பதி.... சந்தனத்தை எடுத்து கையில் தேய்த்துக்கொண்டு, கற்கண்டுகளை வாயில் போட்டு கடித்தபடி பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தனர் அனைவரும்....
 பேச்சு திசை மாறி இப்போ ராமநாதன் பக்கம் வந்தது....
“என்ன ராமு, மவனுக்கு எப்ப கல்யாணம் பண்ண போற?”
“கல்யாணம் பண்றதா உத்தேசம் இருக்கா என்ன மாப்ள” மீசையை முறுக்கியபடி ஒரு பெருசு உறுமியது...
“நல்ல வரனல்லாம் விட்டுட்டானேப்பா.... இனி எங்க போயி அவன் பொண்ணு தேடுவான்?.... இனி சப்பான்’லையும், சீனாவுலையும் தான் தேடனும்” வெற்றிலை எச்சி தெறிக்க ஒருவர் சொல்ல, சுற்றியுள்ள கூட்டம் அதை ரசித்து சிரித்தது....
தர்ம சங்கடத்தில் நெளிந்த ராமநாதனை பார்த்து, நிலைமையை புரிந்த மோகன், “என்ன சித்தப்பா பேச்சு இது?... அவரு மகன் கல்யாணத்த எப்ப பண்ணனும்னு அவருக்கு தெரியும்.... உங்களுக்கு என்ன பிரச்சின?” என்று மீசையை பார்த்து கேட்க, அது மீண்டும் தன் மீசையை திருத்தியது....
“அட அதுக்கில்லப்பா.... நம்ம வீரபாண்டி மாமாவோட வம்சம் விருத்தியாகனும்னு ஒரு ஆசைதான்”
“என்ன மாமா அவனுக்கு வயசாச்சு?.... நாமதான் இருபது, இருபத்தி ஒண்ணுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டோம்.... அவன் நல்லா ஜாலியா இருக்கட்டும் கொஞ்ச நாளக்கி..... அப்புறமா குடும்ப பாரத்த சுமக்கட்டும்” என்று தன் இறுக்கத்தை மறைத்து பொய் சிரிப்பை உதிர்த்தார் ராமநாதன்... இந்த இக்கட்டான நிலையிலும் தன் மகனை விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல் பேசியதை மோகன் ரசித்தார்....
“சரி வாங்க ராமு, வந்து புள்ளைய பாருங்க” ராமநாதனை அழைத்துக்கொண்டு அறைக்கு உள்ளே சென்றார் மோகன்....
ராமு உள்ளே சென்றதும், அங்கிருந்த சில பெண்கள் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வழிவிட்டனர்.... படுக்கையில் படுத்திருந்த மோகன் மகள் அமுதாவும் எழ முயல, “நீ படும்மா..... நீ படு” என்று அவளை இயல்பாக்கினார் ராமு.....
அமுதாவை பார்த்ததும் மனதுள் ஒரு மெல்லிய சோகம் படர்ந்தது... அமுதாவை தன் மருமகளாக்கிக்கொள்ள எவ்வளவோ பிராயத்தனம் மேற்கொண்டும் கடைசியில் விவேக் பிடிவாதமாக மறுத்துவிட்டான்..... அமுதாவின் பேச்சும் எப்போதும் மற்றவர்களை வசீகரிக்கும் விதமாகவே இருக்கும்....
“நல்லா இருக்கிங்களா மாமா” ராமு கேட்கும் முன்பே அமுதா அவரிடம் கேட்டுவிட்டாள்....
“இருக்கேன்மா..... நீ எப்டி இருக்க?... வலி இன்னும் இருக்கா?”
“இல்ல மாமா....”
ராமநாதன் சுற்றும் முற்றும் குழந்தையை தேடினார்... ராமு உள்ளே வந்ததை கூட கவனிக்காமல் அந்த குழந்தையை மடியில் வைத்து சீராட்டிக்கொண்டு இருந்தாள் பார்வதி... பின்பு குழந்தையை தூக்கி ராமுவின் கைகளில் கொடுத்தாள்....
குழந்தையை கையில் வாங்கியவுடன், கைகள் நடுக்கம் கொண்டன...
பார்த்ததும் ஏதோ ஒரு பந்தம் உண்டானதைப்போல அந்த குழந்தை அவரை பார்த்து சிரித்தது.... விவேக்கிற்கு அமுதாவுடன் திருமணம் நடந்திருந்தால் இந்நேரம் இந்த குழந்தை தன் பேரனாக இருந்திருக்கும்.....
அமுதாவின் கரிசனம், குழந்தையின் சிரிப்பு, விவேக்கின் நினைவு, சுற்றத்தாரின் கேள்விகள், பார்வதியின் புலம்பல், தன் ஏமாற்றம் எல்லாம் இப்போது ராமநாதனை சுழற்றி அடித்தது..... உடல் முழுவதும் வியர்க்க தொடங்கியது.... கண்கள் இருண்டன... உடல் தடுமாற்றம் அடைந்தது.... இதைக்கண்ட பார்வதி குழந்தையை தன் கையில் வாங்கிக்கொண்டாள்....
“என்னங்க என்னாச்சு?” பார்வதி இப்போது உருவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தாள்...
“ராமு.... என்னப்பா பண்ணுது?” மோகன் குரல் மட்டும் கேட்டது.......
“மாமா.... மாமா......” அமுதாவின் குரல் இப்போது மெல்ல மறைந்தது....
மயங்கி விழுந்துவிட்டார்.....
மெல்ல யாரும் அறியாதபடி கண்விழித்து பார்த்தால் தான் படுக்கையில் படுத்திருப்பதையும், கையில் ஊசி மூலம் சலைன் எற்றப்படுவதையும், படுக்கைக்கு அருகில் மோகன் அமர்ந்து அருகில் நின்ற பார்வதியை சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தார்.... அறையின் கதவருகே சில உறவுக்காரர்கள் நின்றனர்... குழந்தையை பார்க்க வந்தவர்கள், தன் அறையையும் எட்டிப்பார்த்து செல்வதை கவனித்தார் ராமு....
உள்ளே கோபத்துடன் கையில் புது சலைன் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தார் ஒரு செவிலியர்.....
“கூட்டம் போடாதிங்க..... டாக்டர் பாத்தா எங்கள திட்டுவாங்க..... ஒரு ஆள் மட்டும் இருக்கட்டும், மத்தவங்க வெளில போங்க” செவிலியரின் குரலில் அதட்டல் தொனிக்க மறுபேச்சு பேசாமல் கூட்டம் கலைந்தது.... அறைக்குள் மோகனும், பார்வதியும் மட்டும் இப்போது இருந்தனர்....
எவ்வளவு நேரம் இப்படி படுத்திருப்பார்? என்பதை அவரே புரியாமல் கேட்டுக்கொண்டார்..... சரியாக உள்ளே நுழைந்தான் விவேக்.... விவேக் இப்போதான் வருகிறான் என்றால் நிச்சயம் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டார்....
“என்ன மாமா ஆச்சு?.... ஏன் திடீர்னு மயங்கிட்டாராம்?” விவேக்கின் குரலில் பதட்டம் தெரிந்தது....
“ஒன்னும் பயப்பட வேண்டாம் மாப்ள..... ப்ளட் ப்ரெஷர் அதிகமாகிடுச்சாம்.... திடீர்னு அதிகமானதால மயங்கிட்டார்.... கண் முழிச்சோன வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க....” மோகன் விளக்கினார்...
இதுதான் சமயம் என்று கண்களை இப்போதுதான் விழிப்பது போல அகல விரித்தார் ராமநாதன்....
“என்னங்க.... இப்ப எப்டி இருக்கு?.... அரை மணிநேரத்துக்குள்ள இப்டி பயமுறுத்திட்டிங்களே......” அழுகையும் பேச்சுமாக பார்வதி பதறினாள்.....
“ஒண்ணுமில்ல... இன்னைக்கு அலைச்சல் கொஞ்சம் அதிகம்... அதான், வேற ஒண்ணுமில்ல” ராமுவின் இந்த பதில் உண்மை இல்லை என்பது அவர் உட்பட அங்கிருந்த மற்ற மூவருக்குமே புரிந்தாலும், அதை அப்போது யாரும் காட்டிக்கொள்ளாமல் அந்த பதிலை ஆமோதித்தனர்.....
பின்பு மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டு, இப்போது விவேக் மகிழுந்தை இயக்க, இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார் ராமநாதன்....
விவேக் எதுவும் பேசவில்லை, பேசினால் அந்த பேச்சு எங்கு முடியும்? என்பது அவனுக்கு தெரியும்.... சூழ்நிலை அறிந்து அப்போது யாரும் எதுவும் பேசவில்லை..... வீட்டை அடைந்ததும், தன் அறையில் சென்று  படுத்தார் ராமு..... சமையலறை சென்று, ஆரஞ்சு பழத்தில் சாறு பிழிந்து கொண்டுவந்து கொடுத்தாள் பார்வதி.....
“என்னங்க ஆச்சு இன்னக்கி திடீர்னு?”
“அதான் சொன்னேனே..... வேலை அலைச்சல்மா”
“அது ஊருக்கு சொன்னது, உண்மைய சொல்லுங்க”
“என்ன உண்மை?”
“அந்த குழந்தையை கையில வாங்குனப்பவே உங்க கை நடுங்குனத பாத்தேன்.... முகமெல்லாம் வெளிறி போச்சு.... ஏன்?”
அது.... அது வந்து....”
“அந்த குழந்தைய பாக்குறப்போ விவேக் ஞாபகம் வந்துச்சா?.... அமுதாவ அவனுக்கு கட்டிருந்தா, அது நம்ம பேரனா இருந்திருக்கும்னு தோனுச்சா?”
தன் மனதில் நினைத்ததை அப்படியே படம் பிடித்ததை போல சொல்லும் பார்வதியை ஒரு கனம் ஆச்சரியம் விலகாமல் பார்த்த ராமு, “எப்டி பாரு, இவ்வளவு சரியா சொல்ற?” என்றார்...
“உங்க கூட முப்பது வருஷத்துக்கு மேல குப்ப கொட்ற எனக்கு தெரியாதா!.... எனக்கும் அப்டிதான் தோனுச்சு.... நான் அதை சொன்னா நீங்க திட்டுவீங்கன்னுதான் சொல்லல”
“நல்ல வேளை இதை கார்ல வர்றப்போ உளறாம இருந்தியே.... விவேக் கேட்டிருந்தா கஷ்டப்பட்டிருப்பான்”
“இவ்வளவு அவனுக்காக யோசிக்கிறீங்க, நமக்காக அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்றான் பாருங்க..... எவ்வளவு பேசினாலும், அதை என்னென்னமோ பேசி சமாளிக்கிறான்..... அவன் மனசுக்குள்ள என்னமோ இருக்குங்க, அதை நமகிட்ட சொல்ல முடியாம தவிக்கிறான்.....”
“ஆமா பாரு, அவன் என்னமோ நம்மகிட்டேந்து மறைக்கிறான்.... நான் இன்னைக்கே குமாரை போன் பண்ணி வரச்சொல்றேன்.... விவேக் மனச விட்டு பேசுறது அவன் ஒருத்தன் கிட்டதான்.... அவன் வந்து கேட்டா எதுவும் நமக்கு தெரிய வரலாம்”
இருவரும் பேசிய அத்தனை பேச்சுக்களையும் அந்த அறையின் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தான் விவேக்.... இந்த சமயத்தில் கூட தன்னால் “அப்பா, நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.... எனக்காக நீங்க கஷ்டப்படாதிங்க” என்று சொல்ல முடியவில்லையே என்ற இயலாமையில் அவன் அறையில் சென்று கதவை தாழிட்டு தலையணையில் முகம் புதைத்து அழுதான்....
இந்த அழுகை இன்று புதிதாக அவன் கண்ணில் வருவதில்லை.... கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக அந்த நான்கு சுவர்களுக்கு மட்டுமே பரிச்சயமான அழுகை.... “கல்யாண வயசு” என்று பலரும் சொல்லும் அந்த வயது வந்த நாள் முதல், வெளியில் காட்டிக்கொள்ள முடியாத பல வேதனைகளை அந்த தலையணையின் அரவணைப்போடு சமாளித்துவிட்டான்....
யார், என்ன பேசினாலும் கடைசியில் முடிவது என்னவோ கல்யாணம் பற்றிய பேச்சில்தான்.....
“என்னம்மா சாம்பார்ல உப்பே இல்ல.... பருப்பெல்லாம் சரியா வேகவே இல்ல”
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க, உன் பொண்டாட்டி வந்து நல்ல கொழம்பா வச்சு கொடுப்பா”
சாப்பாட்டில் வழக்கமாக அம்மா போடும் இந்த தூண்டிலில் இதுவரை சிக்காமல் தப்பித்ததே பெரிய விஷயம்தான்....
“அப்பா, என் ப்ரெண்ட் ஒருத்தன் கனடா’ல ஜாப் இருக்குன்னு சொல்றான்.... ஒரு அஞ்சு லட்சம் ஏற்பாடு பண்ண முடியுமா?”
“அஞ்சு லட்சம் என்னப்பா, பத்து லட்சம் தரேன் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியோட வெளிநாட்டுக்கு போ”
அன்று முதல் அப்பாவிடம் ஐந்து பைசா கூட வாங்காமல், தன் தேவைகளுக்காக கிடைத்த வேலைக்கு செல்ல தொடங்கினான் விவேக்....
“ஹலோ தாத்தா.... எப்டி இருக்க?.... நெஞ்சு வலி இப்ப எப்டி இருக்கு?”
“நெஞ்சு வலி ரொம்ப கொடைச்சல் பண்ணுதுடா.... உன் மவன் வந்து என் நெஞ்சுல ஒரு உதை விட்டான்னா வலியெல்லாம் பறந்துடும்..... எப்படா கல்யாணம் பண்ணிக்க போற?”
அன்று முதல் தாத்தாவுக்கு தொலைபேசுவதையும் நிறுத்திவிட்டான் விவேக்....
நண்பர்கள் திருமணம், உறவினர்கள் இல்ல நிகழ்ச்சி, ஊர் திருவிழா என்று எந்த சுப நிகழ்வையும் ஏதோ காரணங்கள் சொல்லி, பல நேரங்களில் இல்லாத காரணங்களை உருவாக்கிக்கொண்டு தட்டிக்களித்தான்....
இப்போ குமார் வரப்போகிறான்?.... ஆம், அவனிடம்தான் இதை சொல்லவேண்டும்.... சிறுவயது முதல் அவனிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பலமுறை நல்ல ஆலோசனை கொடுப்பான்.... இப்போதும் அவனைவிட்டால் வேறு வழி இல்லை.... அப்பாவுக்கு தோன்றிய இந்த யோசனை தனக்கு இத்தனை நாள் தோன்றாததை எண்ணி தன்னை நொந்துகொண்டான்.... குமாரிடம் எப்படி இந்த பேச்சை தொடங்குவது?.... பள்ளி நாட்களில் ஒரு பையனுடன் நடந்த “அந்த” நிகழ்வை குமாரிடம் சொன்னபோது அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரசித்தான்.... இப்போது இந்த வயதிலும் அத்தகைய விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்வானா?.... வேறு வழி இல்லை, வரட்டும் அவனிடம்தான் இதை சொல்லமுடியும் என்று தன்னை தயார் படுத்திக்கொண்டான் விவேக்...
அன்றைய இரவு பெரிய குழப்பங்கள் இல்லாமல் கழிந்தது அவனுக்குள்..... வழக்கமாக தன் அறைக்குள் தன் பெற்றோரையே அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டான்.... இப்போது தன்னை யாரோ எழுப்புவது போல உணர்ந்தான் விவேக்... கனவா?... இல்லை, இல்லை..... தொடும் உணர்வு தெரிகிறதே?.... விழித்து பார்த்தான், அது குமார் தான்...
“வாடா மச்சான்.... எப்போ வந்த ஊர்லேந்து?... தூங்குடா, காலைல பேசிக்கலாம்” போர்வையை எடுத்து போர்த்தினான் விவேக்....
அதை உருவி அருகில் வைத்த குமார், “டேய் எரும.... மணி இப்போ எட்டு.... இனி எந்த காலைல பேசுறதாம்?... ஒழுங்கா எந்திருச்சு பல்லை விலக்கு” விவேக்கின் கைகளை பிடித்து இழுத்தான்....
தன் மொபைலில் மணியை பார்த்த விவேக், மறுபேச்சு பேசாமல் எழுந்தான்...
வழக்கமான மாமா அத்தையின் உபசரிப்புகளுக்கு மத்தியில், தங்களின் ரகசிய உடன்படிக்கை பற்றியும் குமாரிடம் கூறினர் ராமு தம்பதி....
“அவ்வளவுதானே ,மாமா?.... கவலைய விடுங்க.... இன்னைக்கு சாயுங்காலமே உங்களுக்கு நான் பதில் சொல்லிடுறேன்” தன் வாக்குறுதியை அள்ளிவிட்டுவிட்டு விவேக்குடன் வெளியே கிளம்பினான் குமார்....
பள்ளி கல்லூரி நாட்களில் வழக்கமாக இருவரும் பல கதைகளையும் பரிமாறிய  இடத்திற்கு சென்றனர்.... ஆள் அரவமே இல்லாத இடம், அப்போதைக்கு திருட்டு “தம்” அடிக்க பயன்பட்டது... இப்போதும் அந்த இடத்தை நோக்கி விவேக்கை அழைத்து சென்றான் குமார்....
“என்னடா மச்சான்?... என்னத்துக்கு இப்போ இங்க கூட்டிட்டு வந்த?” தெரிந்தும் அதை தெரியாதது போல கேட்டான் விவேக்....
“ஒண்ணுமில்லடா.... நாம ரெண்டு பேரும் தனியா பேச உங்க வீடு தோதா இருக்காது..... காலேஜ் ,முடிஞ்சதும் இப்டி நாம சந்திக்கவே முடியாம போய்டுச்சுல்ல?”
“இப்ப என்னத்துக்கு நீ நெஞ்ச நக்குற?.... நேரா விஷயத்துக்கு வா”
மெல்ல பேச்சை தொடங்க இப்படி உணர்ச்சிகரமா கொண்டுபோக நினைத்த குமார், இதை கேட்டதும் அதிர்ச்சியானான்.... “என்ன சொல்ற?.... எந்த விஷயத்த சொல்ற?”
“டேய்... அதான் எங்க அப்பா அம்மா உன்கிட்ட கேக்க சொன்ன விஷயம், அதை கேக்கத்தானே இங்க கூட்டிட்டு வந்த?”
“அடப்பாவி.... அது உனக்கு தெரியுமா?... இதை அப்பவே சொல்லிருந்தா இவ்வளவு தூரம் அலஞ்சிருக்க வேணாம்ல?... சரி விடு.... குவெஸ்ட்டின் பேப்பர் தான் அவுட் ஆகிடுச்சே, நீ பதிலை நேரடியா சொல்லிடு”
குமாரை பார்த்ததும் என்னவல்லாம் பேசனும், எதையல்லாம் சொல்லணும்? என்று ஒரு பெரிய பட்டியல் போட்டு வைத்திருந்தான் விவேக்... ஆனால், இப்போது அவனிடம் எதை பேசுவது? என்று புரியாமல் அமைதியாக இருந்தான்....
“சொல்லுடா..... கல்யாணம் வேணாம்னு ஏன் இவ்ளோ அடம்பிடிக்குற?”
“பிடிக்கலடா”
“யாரையாச்சும் லவ் பண்றியா?”
“ச்சி.. ச்சீ...”
“அதானே, நீ பொண்ணுங்ககிட்ட பேசுறதே அபூர்வம், இதுல நீ லவ் பண்ணிட்டாலும்.... சரி, அப்போ என்னதான் பிரச்சின?”
“இல்லடா மச்சான்... அதை எப்டி சொல்றதுன்னு தெரியல.... நீ எதுவும் தப்பா நெனச்சிடுவியோனு பயமா இருக்கு”
“உன்ன நான் எதுக்குடா தப்பா நெனக்க போறேன்?... என் மச்சான் எதையும் தப்பா செய்ய மாட்டேன்னு எனக்கு தெரியும்.... தைரியமா சொல்லு”
“எனக்கு பொண்ணுங்கள கல்யாணம் பண்ண பிடிக்கலடா.... அவங்க கூட என்னால சந்தோஷமா இருக்க முடியாது”
“என்னடா சொல்ற?.... ஏன்?... அது கல்யாணம் ஆனா சரி ஆகிடும்”
“இல்லடா.... உன்கிட்ட நான் முன்ன ஒருதடவ சொன்னேன்ல, ஒரு பையன் கூட நான் செக்ஸ் வச்சுகிட்டேன்னு, அதுதான்....”
இதை கேட்டதும் குமார் அதிர்ச்சியானான், ஆனால் அடுத்த நிமிடமே இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்....
“ஓ அப்டினா நீ கே’யா?... இப்போதான் எனக்கு எல்லாம் புரியுது.... நீ அப்போ சொன்னப்போ, ஏதோ ஜாலிக்கு விளையாட்டா செஞ்சனு நெனச்சேன்.... இவ்வளவு நாள் இந்த காரணத்தால்தான் நீ கல்யாணத்த அவாய்ட் பண்ணியா?” குமாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஒரு பரிதாபம் தெரிந்தது..... தன் நண்பன் இப்போது தடுமாறி நிற்கும் வேதனை தெரிந்தது....
“ஆமாடா.... என்னால ஒரு பொண்ணுகூட சந்தோஷமா இருக்க முடியாது... இப்போ அடுத்தவங்க கம்பல் பண்றாங்கன்னு நான் கல்யாணம் செஞ்சுகிட்டா, வாழ்க்கை முழுசும் நான் அவஸ்தி படனும்டா” விவேக்கின் கண்கள் அவனை அறியாமல் கலங்கியது....
சில நிமிடங்கள் குமார் என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான், யோசித்தான்.... கொஞ்ச நேரத்திற்கு பின்பு, ஏதோ முடிவுக்கு வந்தவன் போல, “இதை மாமாகிட்ட சொல்லிடலாமா?... இல்லைனா வேற வழி தெரியல.... மாமா படிச்சவரு, நிச்சயம் இதை புரிஞ்சுப்பார்” விவேக்கின் கைகளை பிடித்து அவனுக்கு தைரியமூட்டினான்....
“அதான் பயமா இருக்கு மச்சான்.... அவர் இதை எப்டி புரிஞ்சுப்பார்னு தெரியல... ஆனால், இதைவிட்டா வேற வழி தெரியல.... நீதான் அப்பாகிட்ட சொல்லி புரியவைக்கணும்”
குமார் அதை ஒப்புக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டனர்.... இப்போது செல்லும் வழியெல்லாம் குமார் விவேக்கின் சிந்தனையில் வந்தான்.... மாமாவிடம் எப்படியாவது இதை எடுத்து சொல்லி, அவரை புரியவைக்கணும்.... குமார் இதை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு, தனக்கு துணையாக நிற்பான் என்று விவேக் நினைக்கவே இல்லை.... வருடங்கள் ஆனாலும் குமார் இன்னும் பழைய குமாராகவே தெரிந்தான் விவேக்கிற்கு.....
வீட்டை அடைந்தனர் இருவரும்....
வாசலிலேயே இருவரின் வரவுக்காக காத்திருந்தார் ராமநாதன்....
இருவரின் முகத்திலும் சுரத்தே இல்லாமல் இருந்ததை கவனித்த ராமநாதன் இன்னும் படபடப்பானார்.... முதலில் விவேக் தன் அறைக்குள் சென்றதும், குமாரின் கையை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றார் ராமநாதன்...
“என்னடா நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க?.... உனக்காக எவ்வளவு நேரமா நான் எதிர்பாத்துட்டு இருக்கேன்.... சரி சொல்லு, என்ன சொன்னான்?”
“சொல்றேன் சொல்றேன்.... அத்தை எங்க?”
“அவ விவேக்கோடா ஜாதகத்த பாக்க பட்டிக்காட்டு ஜோசியர பாக்க போயிருக்கா.... நீ சொல்லு”
“நல்ல வேளை.... அவங்க இருந்தா எப்டி சொல்றதுன்னு யோசிச்சேன்.... சரி, உங்களுக்கு விவேக் கல்யாணம் பண்ணிக்கனுமா?, இல்லை, சந்தோஷமா இருக்கணுமா?”
“இது என்னடா கேள்வி?.... அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்.... ஏண்டா புதிரல்லாம் போடுற?”
“இல்ல மாமா..... அவன் கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருக்க முடியாது.... இரண்டுல எதாச்சும் ஒண்ணுதான் நடக்கும்...”
“என்ன சொல்ற?.... சுத்தி வளைக்காம நேரா சொல்லிடு.... என்னதான் பிரச்சினை?”
“சொல்றேன் மாமா.... எப்டி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு..... சொன்னபின்னாடி நீங்க ஆத்திரப்படக்கூடாது, அவசரப்பட்டு எதுவும் செய்ய கூடாது”
“அய்யய்யோ.... இப்பவே எனக்கு படபடப்பு அதிகமாகுது.... சொல்லித்தொலடா.... தலையே சுத்துது”
“மாமா, நம்ம விவேக் ஒரு ‘கே’... அதான் ஹோமோசெக்சுவல்” மெல்லிய குரலில் சொல்லிவிட்டு தயங்கியபடியே இருந்தான் குமார்....
“என்னடா சொல்ற?” குரலில் நடுக்கம் தெரிந்தது....
“ஆமாம் மாமா, அதான் அவன் இவ்வளவு நாளா கல்யாணம் வேணாம்னு சொன்னான்”
“அட ஆண்டவா! என் தலைல இடியை தூக்கி போட்டுட்டியே... இது வெளில தெரிஞ்சா அவனவன் காறித்துப்புவானே.... ஐயோ முருகா!.... இப்படி ஒரு சனியனை என் புள்ளையா கொடுத்திருக்கியே..... “ தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார்....
“அவனை கொல்லாம விடமாட்டேன்..... அவனையும் கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்கறேன்...” என்றவாறே எழுந்து விவேக்கின் அறைக்கு சென்றார்.... குமார் எவ்வளவோ தடுத்தும், அவனை பொருட்டாகவே மதிக்காமல் உள்ளே சென்றார்...
அப்பா இவ்வளவு கோபத்தில் வருவதை கண்டு திகைத்து நின்றான் விவேக்.... என்ன? ஏது? என்று அவன் நிதானிக்கும் முன்னரே விவேக்கை பிடித்து தள்ளி, அவனின் இடுப்பில் ஒரு உதை விட்டார்.... அவன் நிலைதடுமாறி கீழே விழுந்து, மெல்ல எழ முற்பட்டான்.... இதற்குள் சுதாரித்துக்கொண்ட குமார், ராமநாதனை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு விவேக்கை மெல்ல தூக்கி அமரவைத்தான்.....
“டேய், நாளக்கி உனக்கு பொண்ணு பாக்க நானும் உங்கம்மாவும் போறோம்..... வர்ற தை மாசம் உனக்கு கல்யாணம்.... இதுல எதாவது முரண்டு பண்ண, உன்ன கொல்லவும் தயங்கமாட்டேன்”
“அப்பா.... நான் வந்து....”
“வாயை மூடு.... இதுவரைக்கும் உன் பேச்சை கேட்டது போதும், இனி எதுவும் பேசுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்” சொல்லிவிட்டு எதையும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு சென்றுவிட்டார் ராமநாதன்....
குமாரால் எவ்வித ஆறுதலும் சொல்ல முடியவில்லை... மாமா படித்தவர், அவரிடம் சொல்லி புரியவைக்கலாம் என்ற நினைப்பு இப்படி கனவாகும் என்று அவன் நினைக்கவில்லை....
பிடித்து தள்ளியதில் விவேக்கின் கைகளில் லேசாக ரத்தம் வந்தது... அதற்கு மருந்து போட்டு அவனை படுக்க வைத்துவிட்டு மாமாவின் அறைக்கு வந்தான் குமார்....
“நல்லா பண்ணிங்க மாமா.... இதுக்குத்தான் அவன் இத்தனைநாளா இதை யார்கிட்டயும் சொல்லாம தவிச்சான்.... பெத்த அப்பா நீங்களே அவனை புரிஞ்சுக்கலைனா அவன் எங்க மாமா போவான்?”
“என்னடா சொல்ற?.... அவன் சின்ன வயசுலேந்து ஒவ்வொண்ணையும் அவனுக்காக பாத்து பாத்து பண்ணேன்.... அவன் வயசு புள்ளைகல்லாம் பாட்டு, டான்ஸ் கிளாஸ்’னு போனப்போ, அவன் ஆம்பளையா வீரமா இருக்கணும்னு கராத்தே அனுப்புனேன்.... அவன் நெத்தியில அவங்கம்மா விளையாட்டுக்கு பொட்டு வச்சா கூட அதுக்கு அவளை நான் திட்டுவேன்.... அவன் முழு ஆம்பிளையா வரணும்னு ஆசைப்பட்டேன்... இப்டி பண்ணிட்டானே” மீண்டும் அழுதார்.....
“மாமா, அவன் இப்பவும் நல்ல வீரமான ஆம்பிள்ளைதான்.... அவன் ஒரு ஆள் பத்து பேர கூட அடிப்பான்.... இது அவன் தப்பில்லை மாமா.... பிறக்குரப்பவே அவன் அப்படி தீர்மானிக்கப்பட்டுட்டான்.... அவன் ஆம்பிள்ளைனு கல்யாணம் பண்ணித்தான் நிரூபிக்கனுமா?”
“ஒரு முழு ஆம்பிள்ளை, தன் ஆண்மையை தாம்பத்யத்துல காண்பிக்கணும்.... அப்படி இல்லாதப்போ, எப்படி அதை ஏத்துக்க முடியும்?”
“நீங்க சொல்றபடி பாத்தா நம்ம தமிழ்நாட்டுல பிரேமானந்தா, நித்தியானந்தா தவிர வேற யாரும் ஆம்பிள்ளையா இருக்க முடியாது.... அதுவுமில்லாம அவன் பொண்ணுங்க மேலதான் இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கான், அவனால பையனை கல்யாணம் பண்ணிக்க முடியும் மாமா.... அதுதான் அவனுக்கு நிம்மதிய தரும்...”
“டேய், நாம இந்தியாவுல இருக்கோம்.... இங்க இதுதான் விதி.... இதை ஏத்துத்தான் ஆகணும்.... இதுக்கு மட்டும் அவன் ஒத்துக்கலைனா நானே அவனை கொல்லவும் தயங்க மாட்டேன்”
“ஒரு அப்பா மாதிரி பேசுங்க மாமா.... உங்க புள்ளைய விட உங்களுக்கு கௌரவமும், சொந்தக்காரனும் தான் முக்கியமா போச்சுல்ல?... நீங்க சொல்றமாதிரி அவனை கொல்றது தப்பில்ல.... கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் ஒவ்வொரு நாளும் சாகுறதவிட, மொத்தமா செத்துப்போறது தப்பில்ல.... இதுக்கு மேலையும் உங்ககிட்ட நான் எதுவும் பேசமுடியாது... நான் ஊருக்கு கிளம்புறேன்” சொல்லிவிட்டு குமார் ஊருக்கு கிளம்பிவிட்டான்... எவ்வளவோ யோசித்தும் ராமனாதனால் விவேக் பக்கம் நியாயம் என்ற ஒன்று இருப்பதையே உணரமுடியவில்லை....
பார்வதி உள்ளே நுழைந்தாள்....
“என்னங்க, நம்ம விவேக்குக்கு இப்போ கெரகம் சரி இல்லையாம்.... பெரிய கண்டம் இருக்காம்.... அதனால கொஞ்சநாள் கல்யாண பேச்சு பேசவேனாம்னு ஜோசியர் சொல்லிருக்கார்.... கயறு கொடுத்திருக்கார்... கைல கட்டிக்கிறீங்களா? இடுப்புலையா?” என்று ஒரு கருப்பு கயிறை நீட்டினாள் பார்வதி....
மனைவியை ஏற இறங்க பார்த்த ராமு, “என் கழுத்துல மாட்டி மேல தொங்கவிடு, எல்லா கிரகமும் சரி ஆகிடும்”
“வாயை திறந்தாவே இப்டிதான் பேசுவீங்களா?... சரி குமார் வந்தானா?... என்ன சொன்னான்?” ஆர்வத்தோடு கேட்டாள் பார்வதி....
முதலில் தயங்கினாலும் பின்பு மெல்ல அனைத்தையும் சொல்லிவிட்டார் ராமநாதன்.... பார்வதி அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள் என்று நினைத்த ராமுவுக்கு அதிர்ச்சி, கன்னம் நனைய கண்ணீர் சிந்தியதோடு பெரிய அளவில் அவள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை....
சில நிமிடங்களுக்கு பிறகு, “அவனை அடிச்சிங்களா?” என்றாள்....
“பிடிச்சு தள்ளினேன்.... வந்த கோபத்துக்கு.....” பல்லை கடித்தார்...
“மனுஷனா நீங்க?.... முப்பது வயசு பையனை கை நீட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?.....  அவன் எதாவது செஞ்சுகிட்டா என்ன பண்றது?” பார்வதியின் வார்த்தைகளால் ராமு திகைத்து நின்றார்....
ஆனாலும், அதில் உள்ள உண்மையை உணர்ந்தார்.... பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனை அடித்தபோது, வீட்டை விட்டு ஓடிப்போக முடிவெடுத்தான் விவேக்... இது தெரிந்தது முதல் அவனை அடிப்பதை விட்டுவிட்டார் அவர்....
கண்ணீரை துடைத்துக்கொண்ட பார்வதி, சமையலறையில் ஒரு குவளை பால் எடுத்துக்கொண்டு விவேக்கின் அறைக்கு சென்றாள்.... விவேக் தூங்கிக்கொண்டிருந்தான்... கைகளில் காயத்திற்கு மருந்து போடப்பட்டிருந்தது.....
அதை தன் கைகளால் வருடிய பார்வதி, “பாவி மனுஷன், இப்படியா அடிப்பாரு” கண்ணீர் விட்டாள்... அந்த வருடலில் விவேக் விழித்துவிட்டான்... அருகில் அம்மா கண்ணீரோடு அமர்ந்திருப்பதை கவனித்தான்....
“என்னம்மா?” வார்த்தைகளில் உயிர் இல்லை....
உடலிலாவது உயிர் இருக்கிறதே என்ற ஒரு நிறைவு பார்வதிக்குள் எழுந்தது....
“இந்தாப்பா பால்.... குடிச்சுட்டு படுத்துக்க” குவளையை நீட்டினாள்....
“வேணாம்மா.... பசிக்கல”
“வெறும் வயித்தோட படுக்கக்கூடாது.... இந்தா குடி”
இப்போது அதை மறுக்காமல், வாங்கி குடிக்கும்போது அவனை அறியாமல் கண்ணீர் வழிந்தது.... அம்மாவுக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது, அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை... அதனால்தான் அவள் “அம்மா”வாக இருக்கிறாள் போல....
குடித்துவிட்டு படுத்தான் விவேக்... போர்வையை எடுத்து போர்த்திவிட்டு, அவன் தலைகளில் முடியை கோதிவிட்டாள்.... பின்பு, கட்டிலுக்கு அருகே கீழே ஒரு தலையணையை போட்டு அங்கேயே படுத்துக்கொண்டாள்....
கண்கள் அயரும்வரை விவேக்கின் கைகளை பார்வதி இறுக்கமாக பிடித்திருப்பதை அவன் உணர்ந்திருந்தான்....
நாடு இரவில் திடீரென்று விழிப்பு உண்டானது... தூக்கம் வரவில்லை.... அருகில் அம்மா உறங்கிக்கொண்டிருந்தார்.... மெல்ல எழுந்து அறைக்கு வெளியே வந்தான்.... ஹாலில் அப்பா படுத்திருந்தார்.... அறைக்கு உள்ளே தன் பக்கத்தில் அம்மா, அறைக்கு வெளியே காவலுக்கு அப்பா, மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.... அவரை தாண்டி மெல்ல வீட்டு முற்றத்தை அடைந்தான்.... கையில் இருந்த சிகரட்டை பற்றவைக்க முயலும்போது, சுவரில் ஏதோ நிழல் தெரிவதை போல உணர்ந்தான்... அப்பாவேதான்... தான் என்ன செய்கிறேன் என்பதை உளவு பார்க்கிறார் போலும்... சிகரட்டை தூக்கி எறிந்துவிட்டு அவரை கண்டுகொள்ளாமல் உள்ளே வந்து படுத்தான்....
காலை விடிந்தது....
குளியலறைக்குள் சென்ற விவேக் திரும்பி வந்து பார்க்கையில் தன் அறையின் உள்பக்க தாழ்ப்பாள் கழற்றப்பட்டு கிடந்தது... அப்பாவின் வேலைதான்.... ஒவ்வொரு ஐந்து நிமிடமும் அப்பாவின் தலை அவன் அறையை நோட்டம் விட்டதை கவனித்தான் விவேக்.... வெளியே வந்தான்....
“அப்பா... அப்பா”
“என்ன” குரலில் இன்னும் கோபம் தொனித்தது....
“நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு நெனைக்கிறீங்களா?”
“அது.... அது வந்து”
“அந்த அளவுக்கு நான் கோழை இல்லைப்பா.... நீங்க பயப்படாதிங்க.... அதுவுமில்லாம நான் அப்டி நெனச்சிருந்தா இந்நேரம் வரைக்கும் காத்திருந்திருக்க மாட்டேன்”
“இல்ல... அது....”
“வேணாம்பா... நீங்க நைட் முழுக்க தூங்கலைன்னு தெரியும்.... நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்.... நீங்க பொண்ணு பாக்க போங்க”
“என்ன?... என்ன சொல்ற?.... நெஜமாவா?”
“நெஜமாதான்பா.... என்னோட கஷ்டத்த மட்டுமே இதுவரை நெனச்சுட்டேன், உங்களோட கவலைய நான் இப்போதான் புரிஞ்சுக்கறேன்.... நீங்க கல்யாணத்துக்கு ஆகுற வேலைகள தொடங்குங்க...” சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான் விவேக்....
அடுத்த ஒருமணி நேரத்தில் ராமநாதனும் பார்வதியும் ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க கிளம்பிவிட்டார்கள்.....
செல்லும் வழியில், “ஏங்க, கோவிலுக்கு போயிட்டு போவோமா?”
“கண்டிப்பா.... முதன்முதலா சந்தோஷமா பொண்ணு பாக்க போறோம், கோவிலுக்கு போயிட்டே போவோம்”
வண்டி கோவிலுக்கு வெளியே நின்றது....
கடவுளை மனமுருக வணங்கிவிட்டு, கோவில் குளக்கரையில் அமர்ந்தனர் இருவரும்.... அன்று விசேஷ நாள் எதுவும் இல்லை என்பதால், கூட்டம் அறவே இல்லை அங்கு...
படிக்கரையில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டவாறே குளத்தில் உள்ள மீன்களை ரசித்துக்கொண்டிருந்தார் ராமநாதன்....
“என்ன பாரு, காலைலேந்து ஒரு மாதிரியாவே இருக்க?..... விவேக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டது உனக்கு சந்தோஷமில்லையா?” மனைவியின் கையை பிடித்து கேட்டார்....
எப்போதும் கலகலப்பாக இருப்பதும், விவேக்கின் திருமணம் பற்றியே எண்ணியும் பேசியும் வரும் பார்வதி இன்று அமைதியாக வருவது இயல்பை மீறியதாக ராமநாதனுக்கு தோன்றியது....
“என்னன்னே தெரியலங்க.... இவ்வளவு நாளும் அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டானா?னு ஒவ்வொரு நிமிஷமும் கவலைப்பட்டேன், இப்போ காலைலேந்து அவன் ஏன் இதுக்கு ஒத்துகிட்டான்னு கவலைப்படுறேன்”
“என்ன பேசுற நீ?... அவனே ஒத்துகிட்ட பிறகு என்ன கவலை?”
“நல்லா யோசிச்சு சொல்லுங்க... அவனா சொன்னானா? நம்மளால சொல்லவைக்கப்பட்டானா?.... காலைல அவன் உங்ககிட்ட பேசுனத நானும் கேட்டேன்.... புடிக்காத ஒரு பொண்ணை உங்களுக்கு பேசி முடிச்சதுக்காக உங்கப்பாகிட்ட சண்டைக்கு போயி என்னை கல்யாணம் பண்ணிகிட்டிங்க.... உங்கப்பா அந்த பொண்ணைதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு உங்களை கட்டாயப்படுத்தி இருந்தா என்ன பண்ணிருப்பிங்க?”
“சண்டை போட்ருப்பேன்.... வீட்டை விட்டு வெளில வந்திருப்பேன்.... ஆனால், அப்டி அவன் எந்த பொண்ணை கட்டிக்கனும்னு சொன்னாலும் நான் ஒத்திருப்பேன்.... எந்த பொண்ணுமே வேண்டாம்னு சொன்னதுதான் என் கோபத்துக்கு காரணம்”
“அவன் நாம சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பான்னு நினைக்குறீங்களா?... அவன் நினைச்சிருந்தா நீங்க உங்க அப்பாகிட்ட சண்டை போட்ட மாதிரி, அவன் உங்ககிட்ட சண்டை போட்ருக்க முடியும்.... அவனை அடிச்சப்போ திருப்பி உங்க மேல கை ஓங்கிருந்தா நீங்க என்ன பண்ணிருக்க முடியும்?.... நம்மளோட கஷ்டத்த புரிஞ்சு அவனுக்கு புடிக்காத ஒரு விஷயத்த, வாழ்க்கை முழுவதும் ஏத்துக்க தயார் ஆகிட்டான் அவன்?... அவன் சந்தோஷத்துக்காக நாம ஏன் அவனை புரிஞ்சுக்க முயற்சி பண்ணல?”
ராமநாதன் இப்போதுதான் யோசித்தார்.... அவர் எதுவும் பேசவில்லை.... பார்வதி இவ்வளவு ஆழமாக இதுவரை பேசியதில்லை.... தான் யோசிக்க நினைக்காத ஒரு கோணத்தில் அவள் யோசித்திருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டார்....
“நல்லா யோசிங்க.... நம்ம சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, கௌரவம், பரம்பரை மானம் இப்டி என்னென்னமோ யோசிச்சோம்... ஒரு நிமிஷம் கூட நாம அவன் சந்தோஷத்த யோசிக்கல பாத்திங்களா?.... இது சரி? இது தப்பு? னு எனக்கு தெரியல... அந்த அளவுக்கு எனக்கு உலக அறிவு தெரியல... ஆனால், என் புள்ளை கண்ணை பார்த்தே அவன் எந்த நோக்கத்துல ஒரு விஷயத்தை சொல்றான்னு எனக்கு புரிஞ்சுக்க முடியும்.... இன்னைக்கு அவன் சொன்னது, நீங்க நல்லா இருக்கணும்னுதான்.... நாளக்கி அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுறப்போ, அதைப்பாத்து கவலைப்பட போறதும் நாமதான்.... இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கதான்”....
இப்பவும் எதுவும் பேசவில்லை ராமநாதன்.... தன் மகிழுந்தை நோக்கி விரைந்தார், பின்னாலேயே பார்வதியும் சென்றாள்... வீட்டிற்கு சென்றனர்.... ராமநாதன் எதையும் பேசவில்லை... நேராக தன் பீரோவை திறந்து அதில் ஒரு பையை எடுத்துக்கொண்டு விவேக்கின் அறைக்கு வந்தார்....
விவேக் அப்போதுதான் வேலையில் இருந்து வந்திருந்தான்.... அப்பாவை பார்த்ததும், “என்னப்பா பொண்ணு பாத்தாச்சா?.... தேதி முடிவு பண்ணிட்டிங்களா?” தன் கவலைகளை மறைத்து பொய்யான புன்னகையை உதிர்த்து அப்பாவிடம் கேட்டான் விவேக்... இப்போதுதான் பார்வதி சொன்னதைப்போல அவன் கண்களை பார்த்தார்.... அதில் ஒரு பெரும் சோகம் தெரிந்தது.... கட்டிலில் அவன் அருகில் அமர்ந்தார்.... கையில் வைத்திருந்த பையை விவேக்கின் கையில் கொடுத்தார்...
“என்னப்பா இது?”
“பணம்.... அஞ்சு லட்சம்”
“எதுக்கு?”
“கனடா போறதுக்கு கொஞ்சநாள் முன்னாடி கேட்டில்ல!”
“கல்யாணத்துக்கு நான் ஒத்துகிட்டதால லஞ்சமாப்பா?”
“இல்ல.... நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.... நீ உன் இஷ்டப்படி கனடா போகலாம்...”
“அப்பா..... என்ன சொல்றீங்க?”
“நெஜமாதான் விவேக்.... சாரிடா, உன்னை இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம நான் என் சந்தோஷத்தையே பெருசா நெனச்சுட்டேன்.... எனக்காக நீ உன் வாழ்க்கையை கஷ்டத்துல கழிக்க ஒத்துகிட்ட, உனக்காக நான் விட்டுக்கொடுக்க யோசிக்க கூட மறந்துட்டேன்.... உன் சந்தோசம் தாண்டா, என் சந்தோஷமும்... நீ நல்லா இரு”
அப்பாவின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினான் விவேக்.... இதுவரை இப்படி அவன் அவருடன் நெருக்கமாக இருந்த தருணம் அவர் வாழ்க்கையில் கண்டதில்லை.... பிள்ளைகளை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் உண்மையான சந்தோசம் என்று உணர்ந்தார் ராமநாதன்....
“அம்மா இதை ஒத்துகிட்டாங்களாப்பா?.... அவங்களுக்கு இதுல சந்தோஷமா?”
“இதை சொல்லி எனக்கு புரியவச்சதே உங்கம்மாதான்.... இத்தனை நாளும் அவள் படிக்காதவள், அவளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருந்துட்டேன்.... ஆனால், எவ்வளவு படிச்சும் உன்னை புரிஞ்சுக்க முடியாம நான்தான் முட்டாளா இருந்துட்டேன்.... அவதான் எனக்கு புரியவச்சா.... நீ கனடா போறதுக்கான ஏற்பாடுகளை செய்.... ” இதை சொல்லிவிட்டும் விவேக்கின் கண்களை பார்த்தார் ராமநாதன்.... அதில் பெருமிதமும், சந்தோஷமும் நிரம்பி வழிந்தது..... செல்லும் முன் விவேக்கை அழைத்த ராமநாதன், “ஒரே ஒரு சஜஷன் விவேக்....”
“என்னப்பா?”
“கனடால போய் உன் இஷ்டப்படி கே மேரேஜ் பண்ணிக்கோப்பா.... அதுவும் எனக்கு சந்தோஷம்தான்” இப்போது விவேக்கின் முகம் வெட்கத்தால் சிவந்தது..... தலையை மட்டும் அசைத்து தன் ஒப்புதலை தெரிவித்து, “தாங்க்ஸ் பா” என்றான்..... இதை சொல்லிவிட்டு வெளியே வந்தார் ராமு.... அங்கு நின்ற பார்வதி, “என்ன அப்பாவும் மகனும் ஒன்னு சேந்தாச்சா?... ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.... எப்பவும் நான் சொல்றதை உதாசீனப்படுத்துற மாதிரி, இப்பவும் பண்ணிடுவிங்களோனு நெனச்சு பயந்துட்டேன்” பழைய அறியாமை பேச்சு எட்டிப்பார்த்தது....
“இவ்வளவு நாள் நான் உன்னையும் சரியா புரிஞ்சுக்கல, விவேக்கையும் சரியா புரிஞ்சுக்கல.... சாரிம்மா....”
“சாரிலாம் வேண்டாம்.... முடிஞ்சா போத்திஸ்’ல ஒரு சாரி வாங்கித்தாங்க.... ஒரே ஒரு கவலைதாங்க”
“என்ன கவலை?”
“பேரன் பேத்தி பத்தி நிறைய கனவு கண்டேன்... இப்போ எல்லாம் போச்சுல்ல?”
“இல்ல பாரு... இப்போ அவன் போற கனடால, இந்த மாதிரி கல்யாணம் ரொம்ப சாதாரணம்... அதுவுமில்லாம வாடகைத்தாய் மூலமா அவங்க புள்ளை பெத்துக்கவும் நெறைய வழி இருக்கு.... அதனால அடுத்த வருஷம் எப்படியும் நமக்கு பேரனோ பேத்தியோ உறுதி”
இருவரும் சிரித்தார்கள்.....

இந்த உரையாடலையும் உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த விவேக்கின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது... இத்தனை வருடமும் சிந்திய சோக கண்ணீர் அல்ல அது, ஆனந்த கண்ணீர்... தலையணை கூட அந்த கண்ணீரை சந்தோஷமாக உள்வாங்கிக்கொண்டது....
அப்போது அவன் அலைபேசி அடித்தது, “ஹலோ மச்சான்....”
“சொல்லு குமார்....”
“என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சா?..... நீ பெரிய ஆளுடா மச்சான்....”
“என்னடா சொல்ற?... தெளிவா சொல்லு”
“நீ சொன்னபடி அப்பாகிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்.... இப்போ வந்து, என்னைய கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொல்லிட்டு, கனடா போக பணமும் கொடுத்துட்டார்.... நான் ரொம்பவே பயந்துட்டேன்.... எப்டிடா இது ஆச்சு?”
“ரொம்ப சிம்பிள்டா.... அப்பா அம்மாலாம் எப்பவும் கண்ணாடி மாதிரி.... பெத்தவங்க எப்பவுமே நாம முரண்டு பிடுச்சா அவங்களும் முரண்டு பிடிப்பாங்க... நாம விட்டுக்கொடுத்தா, அவங்க அதுக்கு மேலேயே நமக்காக விட்டுக்கொடுப்பாங்க..... நீ அவங்களுக்காக விட்டுக்கொடுத்ததை ஒரு அஞ்சு நிமிஷம் யோசிச்சு பாத்திருப்பாங்க, உன் பக்க நியாயம் அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்... உடனே அவங்க உன் வழிக்கு வந்துட்டாங்க.... அவங்களுக்கு யோசிக்க நாம சந்தர்ப்பம் கொடுத்தாலே, எந்த பெத்தவங்களும் நம்மள நிச்சயம் புரிஞ்சுப்பாங்க.....”
“கிரேட் மச்சான்.... ரொம்ப தாங்க்ஸ்டா”
“சரி சரி... நீ கனடா போறதுக்கு வேலைய பாரு.... வாழ்த்துக்கள்”
விட்டுக்கொடுப்பவங்க எப்பவுமே கேட்டுப்போறதில்ல.... இதை பெத்தவங்களும், பிள்ளைகளும் புரிஞ்சுகிட்டா நிச்சயம் சமூகம் ஒன்றும் நம்மை செய்துவிடாது....

6 comments:

  1. Nice story ViJay. I got tears in my eyes while reading. I am not ready to get marry a girl. Still now, I denied marriage for the reasons like studying, job searching, family problem, etc., I am 28 now. But I dont know how to convince my mom.

    ReplyDelete
    Replies
    1. Hi their.

      I read your command.My age 28 and I am also in same condition. I am just post-ponding my marriage. But i can ignore it till i find my gay partner. Once i met him i'll revel this matter to my family. But my mom said you have one year only to get married. Still i haven't met my partner. I have hope one day i'll with this one year.
      Find your partner then you will get courage to face anything.
      All the Best.

      Delete
  2. Superb story , as said by raju, got tears in my eyes. Fantastic lines in the entire story

    ReplyDelete
  3. Hi Guys,
    Even me too had the same feeling when my parents asked me to get marry. How I can say that I want to marry a guy. Definitely they will think like I'm a transgender. And I know for sure, it's not gonna work unless I leave my family. I tried postponing by saying reasons like need to settle....... but they didn't accepted. even i avoided 3 to 4 girls also for the dummy reasons.
    My only fear is I never get attracted by the girls. even in the porn, I used to see the guyz. All I worried is only about, whether I can fulfill the sex life or not. Finally once in the public chat room i met a guy and he said he too had the same issue, but after marriage, everything got normal and he has 2 children and even now they do sex for weekly twice.
    Based on that confident, I accepted for the marriage and now i'm really very happy about my marriage life. I may not be very romantic as like other straight hubbies, but i'm showing the love as i can and my wife is also very much affectionate to me and even very possessive too.
    And about my worries on sex. :)
    First 1 week after our marriage, we just tried to understand each other's likes and dislikes and slowly i became casual and confident with her. during our second week our first love happens smoothly and very naturally. I didn't had any medication for that. we been married for 2 years now and also in another 2 weeks i'm going to be a dad. I'm awaiting for that moment.
    Because of that faceless friend's advice, now i'm able to live this happy life. I really want to thank him in this moment.

    Mr Vijay's story is really awesome, but it won't work for the real life.so friends, please don't worry about anything. 99.99999% of us will not have the option to marry a guy. so please say yes for the girl and live the life happily.

    thanks
    Mithun

    ReplyDelete
    Replies
    1. Mithun -

      Am happy that you changed your mind and have settled with a Girl. But after marriage, are you still having sex with guys? Think about that. 99% of gays are continuing their gay affair after marriage which is painful. Having an affair with a guy or a girl after marriage is betraying the relationship. So people who marry should be truthful to their wife....

      Delete