Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 18 August 2014

யாருக்கு யார் தாலி கட்டுவீங்க?! - சிறுகதை...






காட்சி - 1
இடம் தீபக் வீடு...                                                                              நேரம் காலை 8 மணி...
 
விடிந்து வெகுநேரம் ஆனதாக, தன் ஒளிக்கீற்றின் ஊடாக தகவல் சொல்லிக்கொண்டிருக்கிறது சூரியன்... ஏசியின் நள்ளிரவு தாக்குதலின் விளைவாக முகத்தோடு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்  தீபக்...
“தீபு.... தீபு....” தோளை உலுக்கி அம்மா எழுப்பியபோதுதான் கண் விழித்தான்...
“என்ன?” என்பது போல புருவத்தை உயர்த்தி தலையை மேல்நோக்கி அசைத்து கேட்டான்... அந்த அசைத்தலில் தூக்கம் தடைபட்டதன் வருத்தம் தெளிவாகவே தெரிந்தது....
“ஊர்லேந்து உன் மாமா வந்திருக்கார்... உடனே கிளம்பறாராம், உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.... முகம் கழுவிட்டு ஹாலுக்கு வா...” தகவலாக மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்த அம்மா, கதவின் அருகே சென்றபோது ஏதோ நினைவில் வந்தவராக, “நைட் நாம பேசுனது எதுவும் அவருக்கு தெரிய வேணாம்...” சொல்லிவிட்டு தீபக்கின் தலை அசைந்து ஒப்புதல் சொன்னவுடன் அறையை விட்டு நகர்ந்தார்...
இந்த மாமாவிற்கு வேறு வேலையில்லை... மின்வெட்டு போல எந்த நேரத்தில் வருவார்? என்பது யூகிக்கவே முடியாது, ஆனால் மின்னல் போல வந்த வேகத்தில் எப்போதும் மறைந்துவிடுவார்... பெரும்பாலும் அலுவலக பணியாக சென்னை வரும்போதெல்லாம் ஒரு “பில்டர் காப்பிக்கும், நான்கு இட்லிக்கும்” தலையை காட்டி செல்லும் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர்... “நைட் நாம பேசுனது எதுவும் மாமாவுக்கு தெரிய வேணாம்!” என்று அம்மா சொன்னதில் நிச்சயம் காரணங்கள் உண்டு... “ஓட்டை வாய், உளறுவாய், ஆல் இந்தியா ரேடியோ, சன் நியூஸ்” மாமாவிற்கு ஒவ்வொரு இடத்திலும் இப்படிப்பட்ட பெயர்கள் நிலைக்கும் அளவிற்கு தேவையற்ற விஷயங்களை, தன் கற்பனையுடன் கலந்து, அதை தொடர்பே இல்லாத இடத்தில் அளந்து விடுவார்... மணலை கயிறாக திரித்து அதில் மலையை கட்டி இழுப்பதாக கதை சொல்லும் மாமாவிற்கு நேற்றைய வீட்டின் விவாதப்பொருள் தெரிந்தால் நிச்சயம் ஒரு மாதம் இதைவைத்தே பல வீடுகளில் கடத்திவிடுவார்....
அலைபேசியை எடுத்தான்... சத்யாவின் எண்ணை அழைத்தான்....
நெடுநேரம் கழித்தே அழைப்பு ஏற்கப்பட்டது....
“எப்டி இருக்கடா?”
“ஹ்ம்ம்... இருக்கேன்....” சத்யாவின் குரல் உயிரற்று வெளிவந்தது...
“ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?... எதுவும் பிரச்சினையா?”
“இல்லடா... எதுவும் பெருசா இல்ல... எல்லாத்தையும் நேர்ல பாக்குறப்போ சொல்றேன்... அப்பா வர்ற மாதிரி இருக்கு, உனக்கு அப்புறம் கால் பண்றேன்” அழைப்பு துண்டிக்கப்பட்டது....
பெருமூச்சு விட்டுக்கொண்டான் தீபக்... நேற்றைய இரவின் தாக்கம் இன்னும் மனதின் ஓரத்தில் படிந்திருந்தது....
“அப்பா நான் ஒரு கே, சத்யாவை லவ் பண்றேன்... அவனோட சேர்ந்துதான் வாழப்போறேன்” இப்படி சொன்ன அந்த சில நொடிகள் வீட்டில் நிசப்தம் முழுமையாக ஆட்கொண்டிருந்தது.... “haematology and oncology secrets” புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த அம்மாவிற்கு தீபக்குடைய இந்த சீக்ரெட் இன்னும் அதிக ஆச்சர்யத்தை அளித்ததன் விளைவாக, கண்கள் அவனையே உற்று கவனித்தது.... மேற்கொண்டு அவன் பேச்சை இருவருமே கவனிக்க காத்திருந்தனர்... ஆனால், அதற்கு மேல் தன் நிலையை விளக்க தீபக்கிடம் வார்த்தைகள் இருப்பதாக தோன்றாததால், அவனும் மௌனம் காத்தான்...
மிகப்பெரிய கலவரம் உண்டாகலாம் என்றுதான் நினைத்திருந்தான்.... ஆனாலும், மருத்துவ துறையை சார்ந்த அம்மா மற்றும் வெளிநாட்டு வணிகம் செய்யும் அப்பா என்று கொஞ்சம் பரந்துபட்ட பார்வையை கொண்ட பெற்றோர் என்பதால் விவாதத்தின் வழியே பிரச்சினையை கொண்டு சென்றனர்...
வாதங்கள் முற்றுப்பெற்றும் எல்லோரும் ஓர் முடிவுக்கு வரமுடியவில்லை... புத்தகங்கள் வழியே படித்ததை தாண்டிய புரையோடிய சில நம்பிக்கைகள் அம்மாவை ஏற்கவைக்க மறுத்தது, தன் சமூக அந்தஸ்து பற்றிய கவலை அப்பாவை அதைத்தாண்டி யோசிக்கவைக்கவிடவில்லை...
இறுதி முயற்சியாக நள்ளிரவை தாண்டிய நேரத்தில் தீபக்கை அவன் அறைக்கே வந்து சந்தித்த அப்பாவின் முகத்தில் நிதானம் தெரிந்தது... சன் மியூசிக் தொலைக்காட்சியில் ‘ஹிட்ஸ்’ பாடல்கள் பார்த்துக்கொண்டிருந்த கண்கள், அப்பாவின் பக்கம் திரும்பியது...
“உன் பேரே தெரியாது.... உன்னை கூப்பிட முடியாது” பாடல் ஒளித்து ஒலித்துக்கொண்டிருந்தது...
தீபக்கின் வெகு அருகில் வந்து அமர்ந்தார் அப்பா...
“நல்ல பாட்டுல்ல?”
“ஹ்ம்ம்... ஆமாப்பா...”
“எங்கேயும் எப்போதும்தானே?” தொலைக்காட்சியின் இடது ஓரத்தில் சிறிதாக எழுதியிருந்த படத்தின் பெயரை பார்த்திராவிட்டால் அப்பாவால் இப்படி ஒரு படத்தின் பெயரையே கூறியிருக்க முடியாது...
“ஆமா...”
“இப்டி பாட்டு ஹிட் ஆகறதுக்கு காரணம் ரெண்டு விஷயம்தான் தீபக்... சிலருக்கு இந்த மியூசிக் கம்போசிங் பிடிக்கும், சிலருக்கு பாட்டோட வரிகள் பிடிக்கும்... ஆனால், நல்ல வரிகளால பல நேரங்கள்ல மியூசிக்கையும் கூட பிடிக்க வைக்க முடியும்...” அப்பா திசைமாறி வார்த்தைகளை எடுத்து செல்வது எங்கு? என்பதை தீபக் அறிவான்...
“அதுக்கென்னப்பா?”
“வாழ்க்கையும் அப்டிதான்... ஒரு நல்ல பெண்ணால உன்னோட ஓரியன்டேசனையும் கூட மாத்த முடியும்னு நினைக்குறேன் தீபு...” தீபக்கின் தலையை வருடினார்....
“இந்த பாட்டு எனக்கு ஏன் பிடிக்கும்னு தெரியுமாப்பா?”
“எதுக்கு?”
“வரிகளோ, இசையோ அதுக்கு காரணமில்ல.... இதுல வர்ற சர்வா அழகா இருப்பான், அதுதான் ஒரே காரணம்....” சொல்லிவிட்டு அப்பாவை நோக்கி பார்வையை படரவிட்டான்....
வார்த்தைகளுக்கு வழியற்று அப்பா தடுமாறி நின்றார்... தன் ஒரு பக்கத்து விளக்கத்தையும், ஒரே வரியில் தகர்த்து எறிந்த அந்த வார்த்தைகளுக்கு நிச்சயம் பதில் தேடி அலைவதில் நியாயமில்லை.. தடுமாற்றத்தோடு எழுந்து அறையை விட்டு சென்றார்....
“தீபு, இன்னும் பெட்லையே உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க?... சீக்கிரம் ஹாலுக்கு வா...” கதவுக்கு வெளியிலிருந்து அம்மாவின் குரல் ஒலித்தது...
எரிச்சலோடு முகம் கழுவிவிட்டு ஹாலை நோக்கி நகர்ந்தான்....
“ரமேஷ் பையன் இப்போ அமெரிக்காவுல ஏதோ ஒரு வெள்ளைக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு குழந்தையும் பெத்துட்டானாம்... அது தெரியாம அவன் இங்க மகனுக்கு பொண்ணு தேடிட்டு இருந்த கூத்து செம காமெடி...” மாமாவின் வாய்க்கு அவலாக அகப்பட்ட யாரோ ஒரு ‘ரமேஷ்’ பற்றி பரிதாபப்பட்டான் தீபக்...
ஹாலை நோக்கி வரும் தீபக்கை பார்த்ததும் உற்சாகமானார் மாமா....
“ஏய் தீபக் எப்டி இருக்க?”
“இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கேன்... இனிமே உங்க புண்ணியத்துல என்னவாக போறேனோ!”
“இந்த ஹியூமர் சென்ஸ் தான் உன்கிட்ட பிடிச்ச விஷயமே... வயசும் ஆகிட்டே இருக்கே, எப்போ கல்யாணம் பண்றதா உத்தேசம்? அம்மா அப்பாவல்லாம் நீ சொல்றப்போதான்னு சொல்லிட்டாங்க... உன் அபிப்ராயம் என்ன?”
“ஹ்ம்ம்.... பண்ணலாம்... அதுக்குன்னு நேரம் வரட்டும்...” பிடிகொடுக்காமல் பதில் சொன்னான் தீபக்...
“அதான் நான் வந்துட்டேன்ல இனி நேரமும் வந்திடும்... நம்ம சொந்தக்காரங்க பொண்ணு ஒன்னு இருக்கு... சென்னைலதான் ஐடி கம்பெனி ஒண்ணுல வேலை பார்க்குது.. நல்ல குடும்பம், நீ எதிர்பார்க்குறதவிட நல்லாவே எல்லாம் பண்ணுவாங்க.... பொண்ணு கூட சிம்ரன் மாதிரி.....”மாமா சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தான் தீபக்...
“எப்போ மாமா ப்ரோக்கர் வேலயல்லாம் பார்க்க ஆரமிச்சிங்க?... நீங்க பாட்டுக்கு வரிசையா சொல்லிட்டே இருக்கீங்க...” வார்த்தைகள் வேகமாக விழுந்ததின் காரம் தெரிந்தது...
“ஏய் அப்டி இல்ல... எனக்கு நல்ல பழக்கம் பொண்ணு வீட்டுக்காரங்க.... உன்னை மாதிரி நல்ல மாப்பிள்ளையை அவங்க எதிர்பார்க்குறாங்க... எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா உனக்குத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன்.... ஒரே பையனா போய்ட்டான் அவனும்.... இனி என்ன பண்ணமுடியும்?... அதான் இப்டி ஒரு வரன் பார்த்தாவது என் ஆசையை பூர்த்தி செஞ்சுக்கலாம்னு...” மாமாவின் வார்த்தைகளில் ஏக்கம் தெரிந்தது...
“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல... நீங்க ஓகே சொன்னா உங்க வீட்டுக்கு நான் மருமகனா வந்திடுறேன்....” தீபக் குதர்க்கமாக சொன்ன பதிலால் அம்மாவும் அப்பாவும் பேச்சற்று திகைத்தார்கள்....
“ஹ ஹ ஹா.... உங்க அத்தைகிட்ட சொல்லி பார்க்குறேன்... முடிஞ்சா சீக்கிரமே உனக்காக  ஒரு பொண்ணு பெத்துக்க சொல்றேன்....” வெடி போல சிரித்தார்... மிகவும் சரியாக, தீபக் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு அவன் பெற்றோரை நிம்மதி பெருமூச்சு விடவைத்தார் மாமா... ஒருவழியாக அவரை பேசி வழியனுப்பி வைத்தபிறகு சூழல் மீண்டும் இறுக்கமானது....
தன் அறைக்குள் நுழைந்த தீபக், ஏற்கனவே தயாராக எடுத்துவைத்திருந்த தன் உடமைகள் உடைகள் அடங்கிய இரு பைகளை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்...
“நான் கிளம்புறேன்பா.... நாளைக்கு நானும் சத்யாவும் நம்ம முருகன் கோவில்ல மோதிரம் மாத்திக்க போறோம்... நீங்க விருப்பப்பட்டா வாங்க....” சொல்லிவிட்டு பெற்றோரின் பதிலை நோக்கி காத்திருந்தான்...
அம்மா ஏதோ பேச முனைந்ததை தடுத்தார் அப்பா....
“சரி தீபு.... உன்னை நான் தடுக்கல... உனக்காக நாங்க இதை ஏத்துகிட்டாலும் இந்த சொசைட்டி ஏத்துக்கற வரைக்கும் உன்ன தூரமா இருந்துதான் நாங்க பார்க்க முடியும்... உன் கல்யாணத்துக்கு மட்டுமில்ல, அதுக்கப்புறம் கூட உன்னை பார்க்க முடியாதுன்னுதான் தோணுது... இப்போ உனக்குன்னு நல்ல ஜாப் இருக்கு, என்னை டிப்பன்ட் பண்ணி நீ இல்ல... நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பன்னு நம்புறேன்... ஆல் தி பெஸ்ட்...” கை குலுக்கி, தோள் தட்டி அவனை வழியனுப்பி வைத்தார்... அம்மாவும் இரண்டு சொட்டு கண்ணீரை தாண்டி, நிதர்சனத்தை ஏற்கும் பொருட்டு நெற்றியில் இட்ட முத்தத்தோடு அவனை வழியனுப்பி வைத்தார்....


காட்சி  2
இடம் – சத்யா வீடு...                                                                                 நேரம் காலை 8 மணி

தனிமை சூழ்ந்த அறைக்குள் கட்டிலில் அமர்ந்தபடி சுவற்றை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சத்யா... கண்கள் சிவந்து இரவு உறக்கம் இல்லையென்று வெளிச்சமிட்டது... முகம் முழுக்க வியர்வையும், கண்ணீருமாய் விட்டு சென்ற சுவடுகள் காய்ந்த திட்டுகளாக தெரிந்தன...
அலைபேசி சினுங்கியது.... தீபக் தான்...
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எழுந்து சென்று அறைக்கதவை ஒருக்களித்து சாத்தியபிறகு ஆன் செய்தான்...
ஒன்றிரண்டு வழக்கமான விசாரிப்புகள் நடந்துகொண்டிருந்தபோதே அறைக்கு வெளியே அப்பாவின் குரல் கேட்டது....
“அப்பா வர்ற மாதிரி இருக்கு, உனக்கு அப்புறம் கால் பண்றேன்...” சொல்லிவிட்டு தீபக்கின் பதிலை கூட எதிர்பார்த்திடாமல் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.. அப்பாவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அறைக்கதவை நெருங்கிவிட்டது....
“என்ன சொல்றான்?... ஒழுங்கா சொல்றத கேக்க சொல்லு, இல்லைன்னா அவனை கொல்லவும் தயங்கமாட்டேன்... இந்த அசிங்கத்துக்கு பதிலா கொலைகாரன் பட்டம் சுமக்குறது எவ்வளவோ தேவலாம்...” பட்டென கதவை திறந்தார்... கதவு சுவற்றில் பட்டு எழுப்பிய சத்தம் சத்யாவை திடுக்கிட வைத்தது...
அப்பாவின் கண்கள் கோபத்தில் அனலை கக்கிக்கொண்டிருந்தது...
“என்ன முடிவு பண்ணின?” வேறு முடிவு ஏதேனும் எடுத்திருந்தால் தொலைத்துவிடுவேன் என்பதான உள்ளர்த்தம் பொதிந்த கேள்வி அது... எல்லாவற்றையும் யோசித்துதான் சத்யா தன்னை பற்றி வீட்டிற்கே சொன்னான்... இத்தகைய எதிர்விளைவுகள் கூட அவன் அறிந்ததே...
எச்சிலை விழுங்கிவிட்டு, தனக்குள் மூச்சை இழுத்து விட்டவாறே தொடங்கினான், “முடிவு பண்ணதுக்கு அப்புறம்தான் அதை உங்ககிட்ட சொன்னேன்... என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல...”
வேகமாக நகர்ந்து சத்யாவின் தலைமுடியை கொத்தாக பிடித்து அவன் தலையை சுவற்றோடு மோதினார்... ஒன்று, இரண்டு, மூன்றாவது மோதலிலும் அவன் சிறிதும் லட்சியம் செய்யாதவனாக வலியையும் பொறுத்துக்கொண்டே, “இப்டி அடிச்சே கொன்னாலும் என் முடிவுல ஒரு மாற்றமும் இல்ல...” சத்தமாக சொன்னான்...
அவனை பிடித்து தள்ளிவிட்டு, தன்னை நிதானப்படுத்தியவாறு விலகி நின்றார் அப்பா... “இவ்வளவு அடிச்சும் ஒனக்கு புத்தி வரலைல்ல?.... இனி எனக்கு புள்ளையே இல்லன்னு நெனச்சுக்கறேன்.... எங்கயாவது நீ செத்து கிடந்தாலும் அனாதை பொணமாத்தான் கெடப்ப.... அப்பா அம்மா, குடும்பம், உறவுன்னு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஆம்பள சுகம் தேடி போற உன்ன பெத்த பாவம் எனக்கு ஏழு சென்மம் ஆனாலும் போவாது...” அதற்கு மேலும் அந்த இடத்தில் இருந்தால் நிச்சயம் சத்யாவை கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் கூட நிறைய இருக்கிறது... வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினார் அப்பா....
சத்யாவாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை....
அப்பா வீட்டை விட்டு வெளியே போனதன் மறுநொடி அம்மா உள்ளே வந்தாள்... அப்பாவாவது பி.யூ.ஸி படித்தவர்... அம்மாவின் அதிகபட்ச கல்வியறிவே அவர் பெயரை எழுதத்தெரிந்த அளவுதான்... “முத்துலெட்சுமி” என்ற கையெழுத்து போடக்கூட பல நேரங்களில் புள்ளியை எங்கு வைப்பதென்று தடுமாறுவாள்...
அறைக்குள் வந்த அம்மா வேகமாக சத்யாவின் தலையை தொட்டுப்பார்த்தார்....
“அய்யய்யோ இவ்வளவு பொடச்சு போயிருக்கே....” சொல்லிக்கொண்டே வேகமாக அதை தேய்த்துவிட்டாள்... அப்பாவின் வார்த்தைகளின் வலியை தாங்க மாட்டாதவனாக இன்னும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டுதான் இருந்தது...
மெல்ல சத்யாவின் கண்களை துடைத்தவாறே, “ஏன்பா இப்புடி பண்ற?... அப்பா சொல்றதைத்தான் கேளேன்...” அம்மாவும் கண்ணீர் வடித்தாள்....
சட்டென அம்மாவின் கைகளை உதறிவிட்டவனாக, “அவரு அடிச்சு மாத்த முடியலைன்னு, உன்னை அழுது மாத்த சொன்னாரோ?... சும்மா போம்மா...” சீறினான்...
“ரெண்டு பேருமே பிடிவாதம் பிடிச்சா என்னப்பா பண்றது?... ரெண்டு வாய் சாப்பிடுப்பா... ராத்திரிலேந்து ஒன்னும் சாப்பிடல... மத்தத அப்பறம் பேசிக்கலாம்...” கையை பிடித்து இழுத்தாள் அம்மா... சத்யாவிற்கோ இன்னும் கோபம் அடங்கிய பாடில்லை...
“நீங்க ரெண்டுபேரும் நல்லா சாப்பிடுங்க... நிம்மதியா இருங்க... என்னைய தயவுசெஞ்சு இம்சை பண்ணாம வெளில போம்மா... கொஞ்ச நேரம் என்னைய தனியா விடு...” பிடித்து தள்ளாதவனாக அம்மாவை அங்கிருந்து வெளியேற்ற பிரயத்தனம் செய்தான்... அப்பாவின் மீதான கோபத்தை கூட அம்மாவின் வழியேதான் அவனால் வெளிப்படுத்த முடியும்... அம்மாவிற்கு அழுவதை தாண்டி எதுவும் தெரியாது... அப்பாவின் சொற்கள் தான் வேத வாக்கும் கூட... நிச்சயம் தான் சொல்வதை ஒருகாலத்திலும் அம்மாவால் புரிந்துகொள்ள முடியாது என்ற மனநிலைதான் இப்போது கூட அவரின் மீதான சுடுசொற்களாக வெளிவந்தன...
சில நிமிடங்களில் அறையை விட்டு வெளிவந்த சத்யாவின் கைகளில் ஒரு பை, அதில் அவன் உடைகள் சிலவும் உடமைகள் சிலவும் இருந்தன... அப்பா வெளியிலிருந்து கொஞ்சம் கோபம் தணிந்து வந்திருப்பது அவரின் பார்வையில் அப்பட்டமாக தெரிந்தன... அவர் கண்களில் இப்போது நெருப்பு இல்லை...
சத்யாவை கவனித்தாலும், அதை கண்டுகொள்ளாதவராக வேறுபக்கம் தன் பார்வையை திருப்பிக்கொண்டார்... அம்மாவோ, தனக்கே உரிய கண்ணீரை சேலையில் வடித்துக்கொண்டிருந்தாள்...
“அப்பா....” அவர் திரும்பவில்லை...
“நாளைக்கு காலைல நானும் தீபக்கும் முருகன் கோவில்ல கல்யாணம் பண்ணிக்க போறோம்... கடவுளா நம்புனவங்க கைவிட்ட பிறகு, கடவுளைத்தானே நம்பியாகனும்... விருப்பப்பட்டா காலைல அங்க வாங்க.... நீங்களா வர்ற வரைக்கும் நான் உங்கள இனிமே தொந்தரவு பண்ணமாட்டேன்... அக்கம் பக்கத்துலயும் என்னைப்பத்தி நீங்க சொல்ல வேணாம்... வெளிநாட்டுக்கு போய்ட்டதாவும், அங்க விபத்துல நான் இறந்துட்டதா கூட சொல்லிக்கோங்க... நிச்சயம் உங்கள எப்பவும் நான் பதில் சொல்ல முடியாம தடுமாற வைக்குற அளவுக்கு விட்டுடமாட்டேன்... நான் போறேன்...” அம்மாவை பார்த்து தலையை மட்டும் அசைத்து விடைபெற்றுக்கொண்டான் சத்யா.... அப்பா இன்னும் அந்த பக்கம் கூட திரும்பவில்லை...
கதவை நோக்கி செல்லும்போதுதான் ஒரு விஷயம் நினைவில் வந்தவனாக.... “அப்பா, நான் ஆம்புள சுகத்துக்காக இந்த முடிவெடுக்கல... இங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கற எல்லாரையும் பொம்பள சுகத்துக்காக கல்யாணம் பண்ணிக்கறதா யாரும் சொல்றதில்ல... ஏனோ எங்களுக்குண்டான சாபம்தான் இப்டிப்பட்ட புரிதல்.... உங்க பையன் ஒருத்தனோடதான் வாழப்போறேன்... செத்தாலும் கூட நான் அநாதை இல்லப்பா... தீபக்கோடா வாழ்க்கை துணைவன்தான்...” இப்போது அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான் சத்யா....

காட்சி – 3
மறுநாள் காலை 8 மணி....                                                            இடம் – முருகன் கோவில்...
முருகன் கோவில் மாதக்கார்த்திகைக்கே உரிய உற்சாகத்தில் காணப்பட்டது... “எல்லா பிணியும் என்றனை கண்டால், நில்லாதோட நீ எனக்கருள்வாய்...!” சூலமங்களத்து சகோதரிகளின் கவசக்குரலே பலரது பிணியை போக்குவதை போல ரம்மியமாய் ஒலித்தது... பூக்களின் வாசம், பத்திகளின் மணம் என்று ஆன்மிக வாசம் அங்கு நின்ற தீபக் மற்றும் சத்யாவை நெகிழசெய்தது... இன்னும் கோவிலுக்குள் செல்லாமல் வாயிலில் நின்றே ஏதோ யோசித்துக்கொண்டிருந்தனர்....
“உள்ள போகலாமே சத்யா?... டக்குன்னு மோதிரத்த மாத்திட்டு வீட்டுக்கு போகலாம்ல, இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் வேற...” கண்ணடித்து சிரித்தான்...
“ஏய் எரும... கோவில்ல இருக்கோம், கொஞ்சம் சென்சார் கட் பண்ணி பேசு.... வேற யாரும் வரலையா?” யாரையோ எதிர்பார்த்தபடி கேட்டான் சத்யா....
“யாரும் வரலையாவா?... லாரில வந்துகிட்டு இருக்காங்களாம், சீக்கிரம் வரசொல்லட்டுமா?... லூசு மாதிரி என்ன கேள்வி?... யார் வர்றதா சொன்னாங்க உன்கிட்ட?”
“உன் அம்மா அப்பா... யாரும்?... அவங்கதான் நம்ம விஷயத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களே?”
“ஹ ஹா... அவங்களா?... வடிவேலு மாதிரி ஒரு கோடு போட்டுட்டு, அதை தாண்டி நீயும் வராத, நானும் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க... நம்ம காதலுக்கு அவங்க இடைஞ்சல் தரமாட்டாங்க... அதே போல, நாமளும் அவங்கள எந்த தொந்தரவும் பண்ணக்கூடாதுன்னுதான் இப்போ டீலிங்...”
“ஓஹோ... அப்போ வரமாட்டாங்களா?” சத்யாவின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது...
“ஹ்ம்ம்... காலைலயே அம்மா ‘பெஸ்ட் விஷஸ்’னு மெசேஜ் அனுப்பிட்டாங்க... ஒரு மெசேஜ் அளவுக்குத்தான் நம்ம கல்யாணம் அவங்களை பொறுத்தவரைக்கும்” மொபைலை எடுத்து காட்டினான்...
“ஏய், இதுவே பெரிய விஷயம் இல்லையா?... என் நிலைமையை யோசிச்சு பாரு.... அசிங்கமான திட்டுகள், அடி, அழுகை’னு நான் சந்திச்சதவிட இது எவ்வளவோ மேல் இல்லையா?... எங்க அம்மாவல்லாம் இப்டி மெசேஜ் அனுப்பிருந்தா நானல்லாம் குதிக்கிற குதில இந்த கோவிலே ஆடிருக்கும்... என்னதான் இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்... படிப்பு அவங்களுக்கு எவ்வளவோ புரிதலை உண்டாக்கிடுது...” சத்யா உணர்ச்சி பெருக்கோடு தன் ஆற்றாமையையும் வார்த்தைகளால் வடித்தான்...
“ஓகே ஓகே... நோ மோர் எமோஷன்ஸ் ப்ளீஸ்.... வா உள்ள போகலாம்...” என்று சத்யாவின் கையை பிடித்து தீபக் கோவிலை நோக்கி இழுத்த நேரத்தில், கோவில் வாசலில் அதிவேக பாய்ச்சலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.... அதனுள்ளிருந்து பரபரப்பாக இறங்கிய பெண் ஒருவர், அதைவிட வேகமாக கோவிலுக்குள் நுழைந்தார்....
சத்யாவை பார்த்ததும் அந்த பெண்ணின் முகத்தில் பூரிப்பு, ஒருவித நிம்மதியும் கூட... வேகமாக அவன் அருகில் வந்து நின்று, கைகளை பிடித்துக்கொண்டிருக்கும் பெண்மணி தன் அம்மாதான் என்பதை சத்யா உணர்வதற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது...
தீபக்கை பார்த்து மெலிதான ஒரு மென்முறுவலை உதிர்த்துவிட்டு, சத்யாவை பார்த்து, “ஒன்னும் நேரம் ஆகலைல்ல?” சொல்லிக்கொண்டே தன் புடவையை சரிசெய்துகொண்டாள்... “உன் கல்யாணத்துக்கு என்னென்னமோ மாதிரி சேலை கட்டிக்கனும்னு ஆசைல இருந்தேன், இப்டி காட்டன் சேலையோட வேலையை முடிச்சுட்ட....” சிரித்தாள்...

“நான் சொன்னத புரிஞ்சுகிட்டியாம்மா?” அம்மாவின் கைகளை தன் கைகளோடு அழுத்தி கேட்டான் சத்யா...
“இப்பவும் நீ சொன்னது எனக்கு முழுசா புரியல... ஆனாலும், எம்புள்ள எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு எனக்கு தெரியும்... உலகமே எதுத்தாலும் உன்கூட நான் எப்பவும் இருப்பேன்பா...” அம்மாவின் குரல் தழுதழுத்தது...
“அப்பாவுக்கு தெரியுமா?” சத்யாவிற்கு அம்மாவின் மீது பரிவு பிறந்தது....
“தெரியாது... நானும் எதுவும் சொல்லிக்கல... தெரிஞ்சா கத்துவாறு, எல்லை மீறுனா அடிப்பாரு.... அவ்வளவுதானே, நான் பாத்துக்கறேன்.... எத்துன மணிக்கு முகூர்த்தம்?” அம்மா மகனின் திருமணத்திற்கே உரிய பதற்றத்தில் ஆழ்ந்துவிட்டாள்....
“நேரம் ஆகிடுச்சு ஆண்ட்டி... உள்ள போகலாம்...” தீபக் குறுக்கிட்டான்....
“சரிப்பா.... ஆமா, அர்ச்சனை வாங்குனிங்களா இல்லையா?” இருவரின் கைகளையும் பார்த்தபடியே கேட்டாள்....
“இல்லம்மா...” சத்யா இன்னும் ஆச்சரியம் விலகாமல்தான் பதில் சொன்னான்...
“என்ன புள்ளைங்க நீங்க... இருங்க, நான் போய் வாங்கிட்டு வரேன்...” என்று சொன்னபோதே வேறு ஏதோ நினைவில் வந்தவராக, “ஆமா, கல்யாணம் சரி... யாரு யார் கழுத்துல தாலி கட்டுவீங்க?” அம்மா நிஜமான குழப்பத்தில்தான் கேட்டாள்....
“தாலி இல்ல ஆண்ட்டி, மோதிரம் தான்...” தீபக் தான் இப்போதும் குறுக்கிட்டான்...
“ஓஹ்... சரிப்பா... நான் போய் அர்ச்சனை வாங்குறேன், அதுல மோதிரத்த வச்சு சாமிகிட்ட அர்ச்சனை பண்ணிட்டு மாத்திக்கோங்க” சொல்லிக்கொண்டே அர்ச்சனை கடையை நோக்கி பரபரப்பாக நடந்தாள் அம்மா...
அம்மாவின் செயல்களில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக சத்யா ஸ்தம்பித்துதான் நின்றான்.... சத்யாவின் தோளை இறுக்கமாக பிடித்தான் தீபக்....
“ஏய், என்ன பண்ற... வலிக்குது, கைய எடு...” சத்யா தீபக்கின் கைகளிலிருந்து பிடியை விலக்க முயன்றான்...
“நீ பாட்டுக்கு குதிக்குற குதில கோவில் ஆடிடுச்சுன்னா?” சிரித்தான்...
சத்யாவின் கண்களில் மகிழ்ச்சியால் சுரந்த நீர், முத்துக்களாக அரும்பி வழிந்தன.... அவனால் பேச முடியவில்லை, அம்மாவிற்கு அழுவதைத்தாண்டி எதுவும் தெரியாதென நினைத்திருந்த தன் மூட எண்ணத்தை எண்ணி வெட்கினான்...
சத்யாவின் கண்களை துடைத்துவிட்ட தீபக், “படிப்பு ஓரளவு புரிதலை மட்டும்தான் உண்டாக்கும்... இப்டிப்பட்ட பாசம்தான் சத்யா புரிதலை தாண்டிய தியாகத்தையும் துணிச்சலையும் கூட உண்டாக்கும்...” சொல்லும்போதே அவன் கண்களும் கலங்கியது.... அர்ச்சனை தட்டுகளோடு அம்மா அவர்களை நெருங்கிவிட்டார்.... அம்மாவின் கண்கள் இன்றைக்கு கலங்கவே இல்லை...(முற்றும்).

17 comments:

  1. அருமை விஜய் ...

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  3. Super..... Semma naa... :) :) :) :) :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி...

      Delete
  4. sathyavin kangal mattumalla en kangalum kulamaayina . aasapatta ellathayum kaasirundha vaangalam ammmava vaangamudiyuma? deepakkuku avan amma mssg seidhar sathyavukku amma vanthaar . Ella ammakkalaum nammai purindhu kolvaargal appakkalai paarthu bayapadavidil.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா...

      Delete
  5. ரெண்டு ஆன்கள் கல்யனம் செய்து கொண்டால் யார் கனவன்? யார் மனைவி? ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்கிரொம், அதனால் அந்த கேல்வி தெவை இல்லை என சொன்னால், அதற்கு கல்யனம் எதற்கு? சாதாரன்மா சேர்ந்து வாழலாமே

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் கணவனாகவும் பெண்கள் மனைவியாகவும் எதிர்பால் திருமணங்களில் மட்டுமே இருக்கக்கூடியவை.... அதுவும்கூட மனைவியான பெண்கள்தான் வீட்டுப்பணிகளை செய்திடவேண்டும், குழந்தையை பராமரிக்க வேண்டும் போன்ற அடிப்படை கட்டுப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மாயவார்த்தைகள்... ஒருபால் திருமணங்களில் அது அவசியமில்லை... மனம் ஒப்ப சேரும் இருவரும் அமர்ந்து பேசி, இருவருமே பணிகளை, பராமரிப்புகளை பங்கிட்டு செய்யும் சமதர்ம கோட்பாடு இதில் மட்டுமே இப்போதைக்கு சாத்தியம்....
      அடுத்ததாக நீங்கள் சொல்வதை போல திருமணம் என்ற ஒரு விஷயம் இல்லாமலேயே இணைந்து வாழ்வது தவறல்ல... இந்த கதையிலாக இருக்கட்டும், நம் நாட்டில் கூட இப்படிப்பட்ட சம்பிரதாய திருமணங்கள் என்பது நம்மை போன்றோரின் மன திருப்திக்கு மட்டுமே... அது இல்லாமல் இணைந்து வாழும் எத்தனையோ தம்பதிகள் இங்க உண்டு அஜய்.... அதேநேரத்தில் மற்ற பலநாடுகளில் இந்த திருமணங்கள் அவசியம்... சொத்துக்கள் சார்ந்த உரிமை, குழந்தை தத்தெடுப்பு போன்ற பல அவசியமான விஷயங்களுக்கு இத்தகைய திருமணப்பதிவு அவசியம்.... அங்கு இவை நடந்தே ஆகவேண்டும்....
      என்னதான் இப்படி திருமணங்கள் நடந்தாலும் கூட, என்னை பொருத்தவரை இரண்டு மனங்கள் ஒன்றுசேர்ந்த பிறகு எவ்விதமான திருமண சம்பிரதாயத்துக்கும் அவசியம் இல்லை...

      Delete
    2. அதை தன் நானும் சொல்றேன் விஜய் விக்கி, எதுக்கு கல்யணம் ?

      Delete
    3. தாங்கள் எனது பதிலை முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்...

      இந்தியாவில் திருமணம் ஏன்? என்றால், அது முழுக்க முழுக்க அவரவரின் மனதிருப்திக்காக மட்டுமே... அந்த திருப்தி தேவைப்படாதவர்கள் மணம் புரியாமலும் வாழ்வது தவறல்ல.... அதேவேளையில் தனது மன திருப்திக்காக இப்படியோர் திருமணம் செய்துகொள்பவரையும் நாம் ஏன்? என்று கேட்கமுடியாது.... அது அவரவர் விருப்பம்...

      ஆனால் மேற்குலக நாடுகளில் இத்தகைய தம்பதிகளின் சட்டரீதியான திருமணப்பதிவு என்பது அவசியம்... அது அவர்களின் சில திருமணமானவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் அதிகாரப்பூர்வமாக தம்பதிகளுக்கு கிடைத்திட ஒரே வழி.. ஆகையால், அத்தகைய திருமணங்கள் மேற்குலகில் அவசியம்...

      Delete
  6. முத்தாய்ப்பான விஷயம் சொல்லி அருமையான கதை படைச்சிருக்கீங்க விக்கி :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணாச்சி...

      Delete
  7. Very nice... Unconditional love never fails...

    ReplyDelete
  8. சத்யாவின் அம்மா மாத்ரி எல்லாம் எங்கம்மா சொல்ல மாட்டாங்க.. ( எனக்கே அழுகை வந்துடுச்சு )
    எங்க வீட்ல இருக்கற பிரச்சனையே தாங்க முடியல. இதுல இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல.
    நான் ஏதாவது பண்ணி ஓட்டிக்கறேன் :)
    தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள் :)
    நல்ல கதை :)

    ReplyDelete
  9. This story made me to think of something Vijay..I felt its not about the guy's marriage story..its about a mother..For every mother, her child's marriage is such a dream of her life la..Let that be whatever the type of marriage its..but she just dream for that day from the day we born in this world. we have to respect that Vijay. thanks for your story..

    ReplyDelete