Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 25 August 2014

சிறையில் அடைக்கப்பட்ட கலைத்துறை ஜாம்பவான்கள் - ஒருபால் ஈர்ப்புதான் காரணம்!

  

“சட்டென உங்கள் கண்களை மூடிக்கொண்டு ஒரு புகழ்பெற்ற ஓவியத்தை நினைத்துக்கொள்ளுங்கள்!” என்று உங்களிடம்  சொன்னால், பெரும்பாலானவர்களின் மனதில் பளிச்சென வந்துபோவது இரண்டு ஓவியங்களாகத்தான் இருக்கும்... மோனலிசா மற்றும் கடைசி விருந்து (தி லாஸ்ட் சப்பர்) என்ற அந்த இரண்டு உலகப்புகழ்பெற்ற ஓவியங்களை தவிர்த்துவிட்டு நாம் ஓவியங்களை பற்றி பேசிட முடியாது... இந்த ஓவியங்களை ரசிக்க பெரிதாக ரசனைகள் தேவையில்லை, கலை நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை... கண்ணிருக்கும் எல்லோருமே பார்த்து வியந்த அந்த இரண்டு ஓவியங்களை படைத்தவரான லியோனார்டோ டா வின்சி தான் இந்த கட்டுரையின் நாயகன்... 

டாவின்சி பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள்... இத்தாலியை சேர்ந்தவரான இவர் கட்டிடக்கலைஞர், சிற்பி, பொறியாளர், ஓவியர் என்று பன்முகங்களில் நம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்... 

டாவின்சி வரைந்த ஓவியங்களில் நமக்கு கிடைத்துள்ளவை வெறும் பதினேழு மட்டுமே... அப்படி தப்பிய ஓவியங்களில் சிலதான் நாம் வியக்கும் மோனலிசா முதல் கடைசி விருந்து ஓவியம் வரை என்னும்போது, மொத்தமும் கிடைத்திருந்தால் டாவின்சியின் உயரம் எந்த அளவை அடைந்திருக்கும்? என்று கற்பனை செய்துபார்க்க முடியவில்லை... 

தன் பதினைந்து வயதில் புகழ்பெற்ற ஓவியரான ஆண்ட்ரியா டெல் வெறோச்சி என்பவரிடம் ஓவியம் கற்க மாணவராக சேர்ந்தார்... ஐந்தே வருடத்தில் ஓவியத்தின் அத்தனை நுணுக்கங்களையும் மிகநேர்த்தியாக கற்றுக்கொண்ட டாவின்சி, தனது இருபதாவது வயதில் தனிப்பெரும் ஓவியராக உருமாறிவிட்டார்.... இன்றைக்கு உலகமே வியக்கும் அவரது ஓவியங்கள் பலவும் அந்த இருபதுகளின் இளமையில் வரைந்தது என்பதை நாம் நம்பித்தான் ஆகணும்...

சரி, டாவின்சி புராணம் போதும்!.. டாவின்சியை பற்றிய வரலாறு தமிழ் விக்கிப்பீடியாவில் கூட தகவல்களாக இருக்கின்றன... சமீபத்தில் அதை படித்தபோதுதான் அதில் இவருடைய பாலீர்ப்பை பற்றிய விஷயங்களை ஏன் மறைத்திருக்கிறார்கள்? என்று அதிர்ந்தேன்... ஆம், நீண்டகாலமாகவே டாவின்சி ஒருபால் ஈர்ப்பு நபர் என்ற நம்பிக்கை பொதுத்தளத்தில் நிலவுகிறது... அதற்குரிய ஆதாரங்களும் நிறையவே காணப்படுகிறது! எனும்போது ஏன் இத்தகைய உண்மையைக்கூட தமிழில் எழுதுபவர்கள் மறைக்க முயல்கிறார்கள்? என்றெனக்கு புரியவில்லை... 

புகழ்பெற்ற உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் ப்ராயிடு முதல் மிகப்பிரபலமான வரலாற்று ஆய்வாளரான சர் கென்னத் க்ளார்க் வரையிலான பலரும் “டாவின்சியின் ஒருபால் ஈர்ப்பை பற்றிய” நம்பத்தகுந்த வகையிலான ஆதாரங்களை முன்வைக்கின்றனர்...

டாவின்சி வாழ்ந்த காலம் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக இத்தாலியில் பார்க்கப்பட்டது... “1476 ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் இரண்டுமுறை கைதுசெய்யப்பட்டு, பின்பு போதிய ஆதாரமின்றி விடுவிக்கப்பட்டார் டாவின்சி”. இரண்டு மாத காலம் அதற்காக சிறையில் இருந்ததையும் நாம் வரலாற்றின் வழியே அறியமுடிகிறது... தன் 24வது வயதில் ஜாக்கப் சட்ரெல்லி என்ற பிரபலமான விலைமகனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகத்தான் கைதுசெய்யப்பட்டார் டாவின்சி... 

டாவின்சி திருமணம் செய்துகொள்ளவில்லை. பெரும்பாலான தனது ஓவியங்களில் ஆண்களின் நிர்வாணப்படங்களையே அதிகம் வரைந்திருக்கிறார். பெண்களின் உடலை விட ஆண்களின் உடலில் நிறைய ஆர்வத்திற்குரிய விஷயங்கள் இருப்பதாக அவர் உணர்ந்திருப்பதால்தான் ஆண்களின் நிர்வாணப்படங்களில் அதிக ஆர்வமுற்றிருந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்...

குறிப்பாக தனது மாணவர்களான சலாய் மற்றும் மெல்ஸி ஆகிய இருவருடனும் டாவின்சி’க்கு மிக நெருக்கமான உணர்வுரீதியிலான உறவு இருந்ததாக கூறப்படுகிறது... அதில் மெல்ஸி என்பவர் டாவின்சி இறக்கும்வரை உடனிருந்த அன்பிற்குரிய ஒரு காதலனாக பார்க்கப்படுகிறார்.... அதுமட்டுமல்லாமல் சலாய் என்னும் மாணவர் தான் டாவின்சியின் பெரும்பாலான ஓவியங்களுக்கு மாடல் என்று கூறப்படுகிறது...
இன்றைக்கு உலகம் வியக்கும் மோனலிசா ஓவியத்திற்குகூட சலாய் தான் மாடல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்...

இப்படி பெண்ணுடன் திருமண உறவெதுவும் இல்லாமல் வாழ்ந்த டாவின்சி தனது மாணவர்களான மேற்சொன்ன இருவரிடம் காட்டிய அன்பை வரலாற்றில் நாம் நிறைய பார்க்க முடிகிறது... அவ்வளவு ஆத்மார்த்தமான அந்த உறவைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாத “ஹோமோபோபிக்” சூழல் நிலவிய அந்த காலகட்டத்தில், சொல்லப்படாத காதல்களாகத்தான் அத்தகைய உறவுகள் முற்றுப்பெற்றன....

இன்னொரு விஷயத்தையும் நாம் அறியமுடிகிறது.... டாவின்சி ஓரினச்சேர்க்கை செய்ததற்காக கைதுசெய்யப்பட்ட நிகழ்வு அவரை உள்ளளவில் நிறையவே காயப்படுத்தி இருக்கிறது... இரண்டு மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த டாவின்சி அந்த நகரைவிட்டு வெளியேறி மிலன் என்னும் இடத்திற்கு சென்றுவிட்டார்.... அதன்பிறகு தன் ஓவியத்துறையில் கூட அவ்வளவாக ஈடுபாடில்லாமல்தான் வாழ்ந்திருக்கிறார்...

இப்படி மிகத்திறமை வாய்ந்த பல மேதைகளை, அவர்களின் பாலீர்ப்பு வழியே ஒடுக்கி ஒழித்துவிட்ட பட்டியலில் டாவின்சியும் ஒருவரென சொல்லலாம்...

இந்த வரிசையில் நான் ஏற்கனவே ஆலன் தூரிங் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் குற்றம் சாட்டப்பட்டதை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.... இங்கே இன்னொரு நபரை பற்றியும் ஒருசிறு குறிப்பை சொல்ல விரும்புகிறேன்.... டாவின்சி போல பாலீர்ப்பால் ஒடுக்கப்பட்ட மேதைகளுள் ஒருவர்தான் ஆஸ்கார் வைல்ட்’உம் கூட...

ஆஸ்கார் வைல்டும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்ததாக நாம் அறியமுடிகிறது...
ஆஸ்கார் வைல்டின் திறமைக்கும் வரலாற்றில் திடமான ஒரு இடமுண்டு... சிறந்த எழுத்தாளரான இவருடைய நாடகங்கள் இன்றுவரையிலும்கூட மேற்குலகில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன... நாடகம் மட்டுமல்லாது கதைகள் மற்றும் கவிதைகளில் தனக்கென சிறப்பான இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்... இன்றைக்கும் இவரது The Picture of Dorian Gray என்கிற நாவல் இளமை மாறாத தோற்றத்துடன் வாசகர்களை கவர்ந்துவருகிறது... எவ்வளவோ திறமைகளை கொண்டு இலக்கிய வட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இவர் ஏற்படுத்தியிருந்தாலும் கூட, இவருடைய பாலீர்ப்பை காரணம் காட்டி மேற்குலகம் ஆஸ்கார் வைல்டை மரணத்தின் விளிம்பிற்கு தள்ளியது... 

ஆம், ஆஸ்கார் வைல்ட் ஒரு ஒருபால் ஈர்ப்பு நபர்... இளங்கலை மாணவரான ஆல்பிரெட் டக்லஸ் என்பவருடன் இவருக்கு காதல் உண்டாக, இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறி காதலர்களாக சிலகாலம் வாழ்ந்தனர்... அந்த தருணங்களில் ஆஸ்கார் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்திருந்தார்... ஆனால், வெகுநாள் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை... 

மேற்குலகமே கொண்டாடிய அந்த படைப்பாளியை “ஓரினச்சேர்க்கை”யில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்... சிறையில் அவர்பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை... இரண்டு வருட நரக வேதனையை அனுபவித்து பெருமூச்சு விட்டபடி விடுதலையான ஆஸ்கார் வைல்ட், சமூகத்தின் ஏளன பார்வையால் மீண்டும் மனம் நொந்தார்... ஓரினச்சேர்க்கை குற்றத்திற்காக தண்டனை பெற்று விடுதலை ஆன ஒரு நபரின் மீதான சமூகத்தின் பார்வையை இப்போதைய இந்தியர்கள் அனைவரும் எளிதாக யூகிக்க முடியும்... ஒரு நாள் பகலை அந்த ஏளனப்பார்வையோடு கழித்த ஆஸ்காரால், அதற்கு மேலும் அத்தகைய புறக்கணிப்புகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை... இரவோடு இரவாக லண்டன் மாநகரை விட்டு வெளியேறி, பிரான்ஸ் நாட்டினை அடைந்தார்...

அதன்பிறகும் மன உளைச்சலிளிருந்து மீளமுடியாமல், மூன்று ஆண்டுகளில் தனது நாற்பத்தி ஆறாவது வயதில் உயிரையும் விட்டார்... உடலை பரிசோதித்த மருத்துவர்களால் அவருடைய இறப்பிற்கு மூளை காய்ச்சலை காரணமாக சொல்ல முடிந்தாலும், எவராலும் அவருடைய மனதின் பாதிப்பை கண்டறியமுடியவில்லை....

ஆஸ்கார் வைல்ட், டாவின்சி, ஆலன் தூரிங் என்று எல்லா ஒருபால் ஈர்ப்பு நபர்களும் இந்த சமூகத்திற்கு பலவிதமான ஆக்கங்களைத்தான் விட்டு சென்றுள்ளனர்... பதிலுக்கு இந்த “ஹோமோபோபிக்” சமூகம் அவர்களுக்கு அழிவைத்தான் பரிசாக கொடுத்துள்ளது.... பாலீர்ப்பு காரணத்தால் புறக்கணிக்கப்பட்டு புதைகுழியில் தள்ளிவிடப்படும் கொடுமைகள் இன்றைக்கு மேற்குலகில் மறைந்துவிட்டாலும், விட்டகுறை தொட்டகுறையாக இந்தியா போன்ற நாடுகளில் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது...


என்றைக்கு இந்த பாவங்களிலிருந்து இந்த சமூகம் விடுபடப்போகிறது? என்பதை ஒவ்வொரு பொதுத்தள மனிதனும்தான் தீர்மானிக்க வேண்டும்!...

1 comment:

 1. லியனார்டோ டாவின்சியைப் பற்றிய ஒரு அரிய புத்தகத்தை ஆங்கில இலக்கியம் படிக்கும் நண்பனின் தங்கை படிக்கக் கொடுத்திருந்தாள். அவருடைய இளமைக் காலம், அவர் கப்பலில் சுற்றிய இடங்கள், அவர் ஆண்களை வர்ணிக்கும் விதம், அவர் கொண்டிருந்த காதல், என்பது வரிக்கு வரி வரிக்கு வரி என்னைப் படிப்பது போலவே இருந்தது.. :)

  அவருடைய எண்ணங்கள் மிக ஆழமானவை, அழகானவை.. என்னைபோல கொஞ்சம் சோம்பேறியும் கூட.. பல வருடங்கள் கழித்துத்தான் மோனலிசா படத்தை வரைந்து முடித்தார். :D

  என் தேவதைக் கதைகளுக்கு எப்போதும் உயிரூட்டியவர் ஆஸ்கர் வைல்ட். இப்போது நினைத்தாலும், என் கண்களில் நீர் வந்துவிடும் :) ஸ்காட்லாந்தின் பனி நிறைந்த மலைப்பகுதிகள், நீண்ட புல்வெளிகள், அதில் கொஞ்சம் காதல், என்று அவருடைய வார்த்தைச் செறிவு மிக மிக அற்புதமானது. 8 ஆவது படிக்கும் போதே ஆஸ்கர் வைல்ட் மேல் ஒரு சிறிய க்ரஷ் :)

  அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் பற்றி படிக்க நேர்ந்தது.
  என் உணர்வளவில் நான் இன்னும் ஆஸ்கர் வைல்டின் க்ளாஸ்கோ வீட்டிலும், அவருடைய கவிதைகளுக்குள்ளும், எண்ணங்களுக்குள்ளும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன் :)
  what knid of arrogance these homophobic society still shows on hmosexuals ?! :(

  ReplyDelete