Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Showing posts with label இ.வரலாறு. Show all posts
Showing posts with label இ.வரலாறு. Show all posts

Sunday, 14 December 2014

இந்து மதமும், பாலீர்ப்பும்! - திரு.கிஷோர் சுவாமி...



(இந்த கட்டுரை முழுவதும் என்னுடையது கிடையாது... பேஸ்புக் பிரபலம் திரு கிஷோர் சுவாமி அவர்களின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பலவற்றையும் தொகுத்து இங்கே பதிந்திருக்கிறேன்... இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தாலும், கிஷோர் அவர்களின் பாலீர்ப்பு தொடர்பான எண்ணங்கள் முற்போக்கு சிந்தனை நிறைந்தவை... மத ரீதியிலான உதாரணங்களின் வழியாகவே ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க மதவாத அமைப்புகளுக்கு கோரிக்கை விடுக்கும் கிஷோர் அவர்களின் பதிவுகள் உங்களுக்காக.... எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குரல் கொடுக்கும் கிஷோர் அவர்களுக்கு நன்றிகள்!)

                              

ஸ்டேட்டஸ் 1..

இது கொஞ்சம் 18 + ரக பதிவு என்றும் சொல்லலாம் தான் .... ஆனால் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை கேள்வி கேட்க வேண்டிய விஷயங்களில் முக்கியானவை . 

ஓரின சேர்கை குறித்து ஆர் எஸ் எஸ் என்ன சொல்கிறது ? அது கூடவே கூடாது , தடைச் செய்யப் பட வேண்டும் என்கிறது . சரி . சாவர்க்கர் ஓரின சேர்கையில் ஈடு பாடு கொண்ட்டவராக இருந்தார் என்பதைக் கூட ஒதுக்கி வைத்து விடுவோம் . நாம் கேட்கப் போகும் கேள்வி ஓரின சேர்க்கையை எல்லோரும் ஏற்க வேண்டுமா இல்லையா என்பது பற்றியதில்லை . 

நமது கேள்வி , தனி மனித உரிமைகளில் ஆர் எஸ் எஸ் இன் நிலைப்பாடு ஹிந்து மதத்திற்கு ஒத்து இருக்கிறதா என்பது தான் . ஓரினச் சேர்க்கையை ஆர் எஸ் எஸ் ஏற்கவில்லை என்றாலும் ஹிந்து மதம் தவறு என்று சொல்லவில்லை . அதற்கு ரிக் வேதம் முதற்கொண்டு பல உதாரணங்களை என்னால் முன் வைக்க முடியும் .... 

உதாரணத்திற்கு சிவ புராணத்தை எடுத்துக் கொள்வோம் .
சிவ புராணத்தின் படி , கார்த்திகேயன் , போர்களின் தலைவன் . ஞானத்தின் இருப்பிடம் , சம்பிரதாயங்களின் உறைவிடம் . சுப்பிரமணியன் என்றும் குமரா ( மரா என்கிற அரக்கனை அழித்தவர் ) என்றும் முருகன் என்றும் அவரை அழைக்கிறோம் . குஹா என்றும் அழைக்கிறோம் ( குகைகளின் வாழ்பவர்) ...

ஆனால் முக்கியமாக அவருக்கு இருக்கும் பெயர் ஸ்கந்தன் என்பது தான் இப்பொழுது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது . சாந்தன் என்கிற பெயர் , ஸ்கந்த்ரி என்கிற சொல்லிலிருந்து வந்தது , அதாவது , தாக்கி , பாய்ந்து எழுந்து சிந்துவது என்பது தன அதன் பொருள் . சிந்தப் பட்ட விந்தின் விதை என்பது தான் உள் அர்த்தம் . 

மகாபாரதத்தில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது ? முருகன் , அக்னியின் மகன் . அக்னியின் விந்தை க்ரித்திகைகள் என்கிற ரிஷி பத்தினிகள் மீது மோகம் கொண்டு அவர்களில் ஒருவரான ஸ்வாஹா என்பவற்றின் கையில் சிந்திவிட , அவர் அதை குளத்தில் எரிந்து விட , அதிலிருந்து முளைத்தவர் ஸ்கந்தன் என்கிற கார்த்திகேயன் என்பது தான் . க்ரித்திகைகள் பாலூட்டி வளர்த்தால் அவரை கார்த்திகேயன் என்று அழைப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது . 

சரி அது மகாபாரதம் , அடுத்து சிவ புராணத்தில் என்ன சொல்லப் பட்டுள்ளது ? சிவனின் விந்தை முழுங்கிய அக்னி யின் செயலை கண்டித்தார் பார்வதி . அது குற்றம் என்றும் தவறு என்றும் அவர் சொல்ல .. அக்னிக்கே உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட , ரிஷி பத்தினிகளின் கருவில் அந்த விந்தை அக்னி ஊற்றிட , அவர்கள் அதை கங்கையில் ஊற்றிவிடுகிரார்கள் . கங்கையிலிருந்து ஒரு புள் வெளியில் விழுந்த அந்த விந்து அழகிய கார்த்திகேயனாக உருவெடுக்க , அந்தக் குழந்தையை எடுத்து வளர்கிறார் பார்வதி தேவி .
ஸ்கந்த புராணம் ( 1.1.27) என்கிற பாகத்தில் வரும் வரிகளில் குறிப்பிடுவது என்ன ? அக்னி , ஒரு ரிஷியாக வேடமணிந்து , சிவனும் பார்வதியும் உறவு கொண்டிருந்தப் பொழுது இடையில் நுழைந்து , சிவனின் விந்தை தனது கையில் வாங்கி அதை உட்கொள்கிறார் , அதன் விளைவில் பிறந்தவர் தான் கார்த்திகேயன் ... 

சரி , இப்பொழுது மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்துமே ஹிந்து மதத்தின் உயரிய படைப்புக்கள் தான் , அதில் சந்தேகமே இல்லை . ஓரின சேர்கை ஏற்கப் பட வேண்டுமா வேண்டாமா என்கிற வாதத்திற்க்குள்ளும் நான் செல்லவில்லை . அது தனி மனித விருப்பு வெறுப்பு சார்ந்தது ... ஆனால் ஹிந்து மதம் அதைச் சகித்துக் கொள்வதாகவே புராணங்களும் கூட நமக்கு உணர்த்துகிறது .... ஆனால் ஆர் எஸ் எஸ் சகித்துக் கொள்ள மறுக்கிறது . 

இப்பொழுது சொல்லுங்கள் ஹிந்து மதத்தின் அடிபப்டையான சகிப்புத் தன்மைக்கு எதிரானது தானே ஆர் எஸ் எஸ் ?
                                  ******************************


ஸ்டேட்டஸ் 2…

கீர்த்திவாச இராமாயணம் , வங்க தேசத்தில் ( மேற்கு வங்கம் ) போற்றப் படுகிறது .... பத்ம புராணத்தை அடிபப்டையாகக் கொண்டு படைக்கப் பட்டதாக கருதப் படுகிறது , தமிழில் நாம் கம்ப இராமாவதாரத்தை எப்படி போற்றுகிறோமோ அதைப் போல அவர்கள் கீர்த்திவாச இராமாயணத்தை போற்றுகிறார்கள் ... 

அதில் ஒரு சுவாரசியமான விஷயம் குறிப்பிடப் பட்டுள்ளது ... அது மட்டுமில்லாமல் சுஷ்ருத சம்ஹிதம் என்பதை அடிப்படையாக வைத்து மேற்கோள் காட்டப் படும் விஷயம் அது . 

என்ன சொல்கிறது சுஷ்ருத சம்ஹிதம் ? - இரண்டு பெண்கள் உறவு கொண்டு அதனடிப்படையில் பிறக்கும் குழந்தைக்கு எலும்புகள் இருக்காது என்பது ... வெறும் சதைப் பிண்டமாக குழந்தை இருக்கும் என்பது தான் 

சரி விஷயம் என்னவென்று பாப்போம் . அதாவது அயோத்தியில் திலீபன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான் , அவனுக்கு குழந்தைகள் இல்லை . அந்த சோகத்திலிருந்து விடு பட புனித கங்கையை தேடிச் சென்றான் , பல ஆண்டுகள் கடும் தவமிருந்தும் , அவனால் கங்கையை காண முடியவில்லை .... இந்த வருத்தத்திலேயே அவன் இறந்துப் போனான் .....
மன்னன் இறந்து விட , வாரிசு இல்லாத அரசாங்கமானது அயோத்தி , இரண்டு ராணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர் , பிரம்மனுக்கும் இந்திரனுக்கும் கவலை , இதே வம்சத்தில் தானே ஸ்ரீமன் நாராயணன் அவதாரம் எடுக்கப் போகிறார் , வாரிசு இல்லாமல் வம்சம் எப்படி தழைக்கும் என்று . இது குறித்து பரமசிவனிடம் முறையிட , சிவ பெருமான் ராணிகளுக்கு தரிசனம் தந்ததுடன் ...... 

உங்கள் இருவரில் ஒருவருக்கு மகன் பிறப்பான் என்று ஆசிர்வதிக்கிறார் ... அதைக் கேட்ட ராணிகள் , " நாங்கள் இருவரும் விதவைகள் , அப்படியிருக்க எங்களுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்று வினவ .... " நீங்கள் இருவரும் உடலுறவு கொள்ளுங்கள் , எனது ஆசிர்வாதத்துடன் உங்களுக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைகிறார் ..... 

அப்படிப் பிறந்த மகன் பாகிரதன் , சதைப் பிண்டமாக மட்டுமே இருக்க சரையு நதிக்கரையில் அஷ்டவக்ர முனிவரின் ஆசியினால் அழகிய வடிவைப் பெறுகிறார் , அவரது தந்தை மற்றும் மூதாதையர்கள் கங்கையை கொண்டு வர முயற்சி மேற்கொண்டதைப் பற்றி அறிந்த பாகிரதன் தனது மூதாதையர் செய்ய முடியாத செயலான கங்கையை கொண்டு வரும் முயற்சியில் இறங்க ..... கடும் தவத்திற்குப் பின்னர் கங்கையை மேல் லோகத்திலிருந்து நமக்கு கொண்டு வந்தார் ..... இதை மனதில் வைத்து தான் கடுமையான செயல்களை பகீரத பிரயர்த்தனம் என்று குறிப்பிடுவதுண்டு ...... 

சரி இரண்டு பெண்கள் உறவு கொள்வது என்பதை புராணங்கள் அனுமதிக்கிறது , அப்படிச் செய்யுங்கள் என்று சிவ பெருமானே கூறுகிறார் .... ஆர் எஸ் எஸ் அதை எதிர்பதேன் ? இரண்டு பெண்கள் உறவு கொண்டு பிறந்த பகீரதன் கொண்டு வந்த கங்கை புனிதமானது , இரண்டு பெண்கள் உறவு கொள்வது கலாச்சார சீர்கேடா ? என்னப்பா உங்க லாஜிக்
பி . கு : அந்த வம்சத்தில் அதற்கு பிறகு பிறந்தவர் தான் ஸ்ரீ இராமர்
                               ********************************


ஸ்டேட்டஸ் 3…

 டாக்டர் சேகர் என்பவர் சபரிமலா பிள்க்ரிமேஜ் (SABARIMALA PILGRIMAGE ) என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டார் , அதில் அர்த்தசாஸ்திரத்திலும் , மனு ஸ்ம்ரிதியிலும் வரும் வார்த்தையான அயோனி ( யோனியின் உதவியில்லாத ) என்பது தான் அயோனி ஜாதா என்கிற பெயருக்கு காரணம் என்றும் , அதுவே ஐயப்பன் என்று பெயர் மருவியதாகவும் குறிப்பிடுகிறார் . அதாவது யோனியின் உதவியில்லாமல் , இரண்டு ஆண்களின் உறவில் பிறந்த குழந்தை என்று புலப்படுகிறது .... 

ஆக ஆண்கள் கடவுளாக இருக்கையில் உறவு கொள்ளலாம் , மனிதர்கள் என்று வரும் பொழுது தான் ஆர் எஸ் எஸ் எதிர்க்கும் என்று இதை பொருள் கொள்ளலாம் தானே

                             **********************************



ஸ்டேட்டஸ் 4…

பிள்ளையார் உருவான கதை குறித்து பல கோணங்களில் பல புராணங்களில் கூறப் பட்டுள்ளது , அதில் ஒருபடைப்பு ஜெயத்ரதர் எழுதிய ஹரிசரித சிந்தாமணி .... 

அதில் குறிப்பிடப் பட்டுள்ளது என்னவென்றால் ,பார்வதி தேவி குளித்து முடித்தப் பின்னர் அவர் குளித்த நீரானது அவரது உடல் அழுக்குகளுடன் கங்கையில் சேர்கிறது , அந்தத் தண்ணீரை மாலினி என்கிற பெண் யானை குடித்து விட , அது கற்பமாகி விடுகிறது , அது பெற்ற குழந்தை தான் பிள்ளையார் 

ஒரு பென் குளித்த வீரியத்துடன் இருக்கும் நீரை குடிப்பதால் இன்னொரு பெண்ணுக்கு கரு உண்டானதாக சொல்லப் பட்டுள்ளது . அதாவது இரண்டு பெண்கள் உறவு கொள்வதற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது ....

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் , மதத்தை கொச்சை படுத்துவதற்கு என்பதை விட , பல கோணங்களில் நமது மதம் பார்க்கப் பட்டுள்ளது , அதை எல்லாமும் உள் வாங்கும் மதமாக அது இருந்ததால் தான் இன்றளவும் அது நிலைக்கிறது ... இந்த ஆர் எஸ் எஸ் போன்ற மத வெறி கும்பல்கள் , ஒரு குறுகிய கோணத்தில் மட்டுமே மதத்தை பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையை திணிப்பதால் , மதத்தின் அடித்தளத்தையே அசைக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்
                               *****************************




ஸ்டேட்டஸ் 5…
சரி அடுத்த சுவாரசியமான விஷயத்தை பார்ப்போமா ... இது பத்ம புராணத்தில் இருக்கும் விஷயம் . 

அர்ஜுனன் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரது ராச லீலையைக் காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்க , அதைக் அர்ஜுனன் காணக் கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் தடுத்து விடுகிறார் , ஆனால் அர்ஜுனனோ பிடிவாதமாக இருக்க , திரிபுரசுந்தரி தேவியை அர்ஜுனன் வணங்கினால் , தனது ராச லீலையை காணும் அனுபவம் கிட்டும் என்று சொல்கிறார் .... 

அர்ஜுனனும் அவ்வாறு வேண்டிக் கொள்ள , தேவி திரிபுர சுந்தரியும் அர்ஜுனனுக்கு காட்சியளித்த, கிழக்கு திசையில் இருக்கும் குளத்தில் குளித்து விட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ராச லீலையை அனுபவிக்குமாறு ஆசி வழங்கி மறைகிறார் .... 

அவ்வாறு அர்ஜுனனும் குளத்தில் முங்கி எழுந்தப் பொழுது , , அர்ஜுனனுக்கு ஆச்சரியம் , அவர் ஒரு அழகிய பெண்ணாக மாறியிருந்தார் . அர்ஜுநியாக மாறியிருந்த அர்ஜுனன் , பின்னர் அங்கே தோன்றிய கோபியர்களால் அலங்கரிக்கப் பட்டு , ராதா தேவியை வணங்குகிறார் . ராதா தேவி அவரை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்கிறார் . 

ஸ்ரீ கிருஷ்ணரின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அர்ஜுனி ரசித்து அனுபவிக்கிறார் .... கிருஷ்ணரின் ஆணுறுப்பு மஞ்சள் நிற துணியால் மூடப் பட்டிருக்கிறது என்பது வரை விவரிக்கப் படுகிறது . இதை எல்லாம் பார்த்த அர்ஜுனிக்கு மோகம் தலைக்கேற .... ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனியின் கரங்களை பற்றி இழுத்து , காட்டுக்குள் அழைத்துச் சென்று உறவு கொள்கிறார் .... 

உறவு கொண்டு முடிந்தப் பின்னர் , அவரது தோழியரை அழைத்து , அர்ஜுணியை மேற்கில் இருக்கும் குளத்தில் முங்கி எழச் செய்யச் சொல்லி கட்டளையிட , அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப் படுகிறார் , குளத்தில் முங்கி எழுந்தப் பின்னர் அவர் மீண்டும் அர்ஜுனனாக மாறுகிறார் . 

பத்ம புராணம் - 5.74.60 - இதில் தான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் உடல் உறவு கொண்டது குறித்து இருக்கிறது , நாரதரும் இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணருடன் உடல் உறவு கொண்டார் என்பதும் பத்ம புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது .... 


அதாவது எல்லா வித இச்சைகளுக்கும் சகிப்புத் தன்மையை கொண்டிருந்த மதம் தான் ஹிந்து மதம்.
                                ****************************

Monday, 25 August 2014

சிறையில் அடைக்கப்பட்ட கலைத்துறை ஜாம்பவான்கள் - ஒருபால் ஈர்ப்புதான் காரணம்!

  

“சட்டென உங்கள் கண்களை மூடிக்கொண்டு ஒரு புகழ்பெற்ற ஓவியத்தை நினைத்துக்கொள்ளுங்கள்!” என்று உங்களிடம்  சொன்னால், பெரும்பாலானவர்களின் மனதில் பளிச்சென வந்துபோவது இரண்டு ஓவியங்களாகத்தான் இருக்கும்... மோனலிசா மற்றும் கடைசி விருந்து (தி லாஸ்ட் சப்பர்) என்ற அந்த இரண்டு உலகப்புகழ்பெற்ற ஓவியங்களை தவிர்த்துவிட்டு நாம் ஓவியங்களை பற்றி பேசிட முடியாது... இந்த ஓவியங்களை ரசிக்க பெரிதாக ரசனைகள் தேவையில்லை, கலை நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை... கண்ணிருக்கும் எல்லோருமே பார்த்து வியந்த அந்த இரண்டு ஓவியங்களை படைத்தவரான லியோனார்டோ டா வின்சி தான் இந்த கட்டுரையின் நாயகன்... 

டாவின்சி பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள்... இத்தாலியை சேர்ந்தவரான இவர் கட்டிடக்கலைஞர், சிற்பி, பொறியாளர், ஓவியர் என்று பன்முகங்களில் நம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்... 

டாவின்சி வரைந்த ஓவியங்களில் நமக்கு கிடைத்துள்ளவை வெறும் பதினேழு மட்டுமே... அப்படி தப்பிய ஓவியங்களில் சிலதான் நாம் வியக்கும் மோனலிசா முதல் கடைசி விருந்து ஓவியம் வரை என்னும்போது, மொத்தமும் கிடைத்திருந்தால் டாவின்சியின் உயரம் எந்த அளவை அடைந்திருக்கும்? என்று கற்பனை செய்துபார்க்க முடியவில்லை... 

தன் பதினைந்து வயதில் புகழ்பெற்ற ஓவியரான ஆண்ட்ரியா டெல் வெறோச்சி என்பவரிடம் ஓவியம் கற்க மாணவராக சேர்ந்தார்... ஐந்தே வருடத்தில் ஓவியத்தின் அத்தனை நுணுக்கங்களையும் மிகநேர்த்தியாக கற்றுக்கொண்ட டாவின்சி, தனது இருபதாவது வயதில் தனிப்பெரும் ஓவியராக உருமாறிவிட்டார்.... இன்றைக்கு உலகமே வியக்கும் அவரது ஓவியங்கள் பலவும் அந்த இருபதுகளின் இளமையில் வரைந்தது என்பதை நாம் நம்பித்தான் ஆகணும்...

சரி, டாவின்சி புராணம் போதும்!.. டாவின்சியை பற்றிய வரலாறு தமிழ் விக்கிப்பீடியாவில் கூட தகவல்களாக இருக்கின்றன... சமீபத்தில் அதை படித்தபோதுதான் அதில் இவருடைய பாலீர்ப்பை பற்றிய விஷயங்களை ஏன் மறைத்திருக்கிறார்கள்? என்று அதிர்ந்தேன்... ஆம், நீண்டகாலமாகவே டாவின்சி ஒருபால் ஈர்ப்பு நபர் என்ற நம்பிக்கை பொதுத்தளத்தில் நிலவுகிறது... அதற்குரிய ஆதாரங்களும் நிறையவே காணப்படுகிறது! எனும்போது ஏன் இத்தகைய உண்மையைக்கூட தமிழில் எழுதுபவர்கள் மறைக்க முயல்கிறார்கள்? என்றெனக்கு புரியவில்லை... 

புகழ்பெற்ற உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் ப்ராயிடு முதல் மிகப்பிரபலமான வரலாற்று ஆய்வாளரான சர் கென்னத் க்ளார்க் வரையிலான பலரும் “டாவின்சியின் ஒருபால் ஈர்ப்பை பற்றிய” நம்பத்தகுந்த வகையிலான ஆதாரங்களை முன்வைக்கின்றனர்...

டாவின்சி வாழ்ந்த காலம் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக இத்தாலியில் பார்க்கப்பட்டது... “1476 ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் இரண்டுமுறை கைதுசெய்யப்பட்டு, பின்பு போதிய ஆதாரமின்றி விடுவிக்கப்பட்டார் டாவின்சி”. இரண்டு மாத காலம் அதற்காக சிறையில் இருந்ததையும் நாம் வரலாற்றின் வழியே அறியமுடிகிறது... தன் 24வது வயதில் ஜாக்கப் சட்ரெல்லி என்ற பிரபலமான விலைமகனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகத்தான் கைதுசெய்யப்பட்டார் டாவின்சி... 

டாவின்சி திருமணம் செய்துகொள்ளவில்லை. பெரும்பாலான தனது ஓவியங்களில் ஆண்களின் நிர்வாணப்படங்களையே அதிகம் வரைந்திருக்கிறார். பெண்களின் உடலை விட ஆண்களின் உடலில் நிறைய ஆர்வத்திற்குரிய விஷயங்கள் இருப்பதாக அவர் உணர்ந்திருப்பதால்தான் ஆண்களின் நிர்வாணப்படங்களில் அதிக ஆர்வமுற்றிருந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்...

குறிப்பாக தனது மாணவர்களான சலாய் மற்றும் மெல்ஸி ஆகிய இருவருடனும் டாவின்சி’க்கு மிக நெருக்கமான உணர்வுரீதியிலான உறவு இருந்ததாக கூறப்படுகிறது... அதில் மெல்ஸி என்பவர் டாவின்சி இறக்கும்வரை உடனிருந்த அன்பிற்குரிய ஒரு காதலனாக பார்க்கப்படுகிறார்.... அதுமட்டுமல்லாமல் சலாய் என்னும் மாணவர் தான் டாவின்சியின் பெரும்பாலான ஓவியங்களுக்கு மாடல் என்று கூறப்படுகிறது...
இன்றைக்கு உலகம் வியக்கும் மோனலிசா ஓவியத்திற்குகூட சலாய் தான் மாடல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்...

இப்படி பெண்ணுடன் திருமண உறவெதுவும் இல்லாமல் வாழ்ந்த டாவின்சி தனது மாணவர்களான மேற்சொன்ன இருவரிடம் காட்டிய அன்பை வரலாற்றில் நாம் நிறைய பார்க்க முடிகிறது... அவ்வளவு ஆத்மார்த்தமான அந்த உறவைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாத “ஹோமோபோபிக்” சூழல் நிலவிய அந்த காலகட்டத்தில், சொல்லப்படாத காதல்களாகத்தான் அத்தகைய உறவுகள் முற்றுப்பெற்றன....

இன்னொரு விஷயத்தையும் நாம் அறியமுடிகிறது.... டாவின்சி ஓரினச்சேர்க்கை செய்ததற்காக கைதுசெய்யப்பட்ட நிகழ்வு அவரை உள்ளளவில் நிறையவே காயப்படுத்தி இருக்கிறது... இரண்டு மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த டாவின்சி அந்த நகரைவிட்டு வெளியேறி மிலன் என்னும் இடத்திற்கு சென்றுவிட்டார்.... அதன்பிறகு தன் ஓவியத்துறையில் கூட அவ்வளவாக ஈடுபாடில்லாமல்தான் வாழ்ந்திருக்கிறார்...

இப்படி மிகத்திறமை வாய்ந்த பல மேதைகளை, அவர்களின் பாலீர்ப்பு வழியே ஒடுக்கி ஒழித்துவிட்ட பட்டியலில் டாவின்சியும் ஒருவரென சொல்லலாம்...

இந்த வரிசையில் நான் ஏற்கனவே ஆலன் தூரிங் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் குற்றம் சாட்டப்பட்டதை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.... இங்கே இன்னொரு நபரை பற்றியும் ஒருசிறு குறிப்பை சொல்ல விரும்புகிறேன்.... டாவின்சி போல பாலீர்ப்பால் ஒடுக்கப்பட்ட மேதைகளுள் ஒருவர்தான் ஆஸ்கார் வைல்ட்’உம் கூட...

ஆஸ்கார் வைல்டும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்ததாக நாம் அறியமுடிகிறது...
ஆஸ்கார் வைல்டின் திறமைக்கும் வரலாற்றில் திடமான ஒரு இடமுண்டு... சிறந்த எழுத்தாளரான இவருடைய நாடகங்கள் இன்றுவரையிலும்கூட மேற்குலகில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன... நாடகம் மட்டுமல்லாது கதைகள் மற்றும் கவிதைகளில் தனக்கென சிறப்பான இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்... இன்றைக்கும் இவரது The Picture of Dorian Gray என்கிற நாவல் இளமை மாறாத தோற்றத்துடன் வாசகர்களை கவர்ந்துவருகிறது... எவ்வளவோ திறமைகளை கொண்டு இலக்கிய வட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இவர் ஏற்படுத்தியிருந்தாலும் கூட, இவருடைய பாலீர்ப்பை காரணம் காட்டி மேற்குலகம் ஆஸ்கார் வைல்டை மரணத்தின் விளிம்பிற்கு தள்ளியது... 

ஆம், ஆஸ்கார் வைல்ட் ஒரு ஒருபால் ஈர்ப்பு நபர்... இளங்கலை மாணவரான ஆல்பிரெட் டக்லஸ் என்பவருடன் இவருக்கு காதல் உண்டாக, இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறி காதலர்களாக சிலகாலம் வாழ்ந்தனர்... அந்த தருணங்களில் ஆஸ்கார் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்திருந்தார்... ஆனால், வெகுநாள் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை... 

மேற்குலகமே கொண்டாடிய அந்த படைப்பாளியை “ஓரினச்சேர்க்கை”யில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்... சிறையில் அவர்பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை... இரண்டு வருட நரக வேதனையை அனுபவித்து பெருமூச்சு விட்டபடி விடுதலையான ஆஸ்கார் வைல்ட், சமூகத்தின் ஏளன பார்வையால் மீண்டும் மனம் நொந்தார்... ஓரினச்சேர்க்கை குற்றத்திற்காக தண்டனை பெற்று விடுதலை ஆன ஒரு நபரின் மீதான சமூகத்தின் பார்வையை இப்போதைய இந்தியர்கள் அனைவரும் எளிதாக யூகிக்க முடியும்... ஒரு நாள் பகலை அந்த ஏளனப்பார்வையோடு கழித்த ஆஸ்காரால், அதற்கு மேலும் அத்தகைய புறக்கணிப்புகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை... இரவோடு இரவாக லண்டன் மாநகரை விட்டு வெளியேறி, பிரான்ஸ் நாட்டினை அடைந்தார்...

அதன்பிறகும் மன உளைச்சலிளிருந்து மீளமுடியாமல், மூன்று ஆண்டுகளில் தனது நாற்பத்தி ஆறாவது வயதில் உயிரையும் விட்டார்... உடலை பரிசோதித்த மருத்துவர்களால் அவருடைய இறப்பிற்கு மூளை காய்ச்சலை காரணமாக சொல்ல முடிந்தாலும், எவராலும் அவருடைய மனதின் பாதிப்பை கண்டறியமுடியவில்லை....

ஆஸ்கார் வைல்ட், டாவின்சி, ஆலன் தூரிங் என்று எல்லா ஒருபால் ஈர்ப்பு நபர்களும் இந்த சமூகத்திற்கு பலவிதமான ஆக்கங்களைத்தான் விட்டு சென்றுள்ளனர்... பதிலுக்கு இந்த “ஹோமோபோபிக்” சமூகம் அவர்களுக்கு அழிவைத்தான் பரிசாக கொடுத்துள்ளது.... பாலீர்ப்பு காரணத்தால் புறக்கணிக்கப்பட்டு புதைகுழியில் தள்ளிவிடப்படும் கொடுமைகள் இன்றைக்கு மேற்குலகில் மறைந்துவிட்டாலும், விட்டகுறை தொட்டகுறையாக இந்தியா போன்ற நாடுகளில் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது...


என்றைக்கு இந்த பாவங்களிலிருந்து இந்த சமூகம் விடுபடப்போகிறது? என்பதை ஒவ்வொரு பொதுத்தள மனிதனும்தான் தீர்மானிக்க வேண்டும்!...

Sunday, 10 August 2014

நாட்டின் முதல் "கே" பிரதமர்! - ஆச்சர்யமான உண்மைகள்...




நாட்டின் முதல் வெளிப்படையான ஒருபால் ஈர்ப்பு பிரதமர் என்றதும் ஏதோ இந்தியாவை சொல்றேன்னு நினச்சிடாதிங்க... இந்தியாவில் இப்போதுள்ள நிலைமையின்படி ஒரு கவுன்சிலர் கூட வெளிப்படையாக தன் பாலீர்ப்பை ஒப்புக்கொள்ளமுடியாது... அப்படி இருக்கையில் ஒரு நாட்டின் பிரதமரே வெளிப்படையாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட நிகழ்வை ஆச்சரியமாகத்தான் நாம் பார்க்க வேண்டும்... அந்த ஆச்சரியத்துக்கு சொந்தக்காரர் “சேவியர் பெட்டேல்” என்னும் பிரதமர், அந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ள நாடு லக்ஸம்பர்க்.... 

பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கிறித்துவ சமூக மக்கள் கட்சியின் பிரதமரை வீழ்த்தி, ஆட்சியை பிடித்துள்ள குடியரசு கட்சியின் சேவியர் பெட்டேல் அரியணை ஏறி சில மாதங்கள்தான் ஆகிறது... நாற்பது வயதாகும் சேவியர் லக்ஸம்பர்க் நகரத்தின் முன்னாள் மேயரும் கூட... இதுவரை மதவாத அடிப்படையில் ஒருபால் ஈர்ப்புக்கு சற்று எதிரான மனப்போக்கு நிலவிய அந்நாட்டில், சேவியரின் பொறுப்பேற்பு நிச்சயம் பல மாற்றங்களை உண்டுசெய்யும் என்று உலகமே எதிர்பார்க்கிறது... இதில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது... சேவியருடன் துணை பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் எடின்னே ஷ்னீடர் கூட தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஒருபால் ஈர்ப்பு நபர்தான்... 

இதன்மூலம் கல்வித்துறையில் திணிக்கப்பட்டுள்ள மதவாத கருத்துகளை நீக்கிவிட்டு, சமூக நல்லிணக்கம் தொடர்பாக பாடத்திட்டங்களை முதலில் உருவாக்கப்போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது... மேலும், விரைவில் அந்நாட்டில் ஒருபால் ஈர்ப்பு திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் பல லக்ஸம்பர்க் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் தத்தமது திருமண நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்... லக்ஸம்பர்க் உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றுதான், அங்கே சில லட்சங்களில்தான் மக்கள் தொகையே என்று அந்நாட்டை நாம் குறைவாக மதிப்பிட முடியாது.... உலகின் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருப்பது அந்த சிறிய நாடுதான் என்பதை நாம் நம்பித்தான் ஆகணும்... இத்தகைய சிறப்பான மாற்றத்தை அந்த மக்கள் உணர ஒருவகையில் அவர்களின் கல்வியறிவும் காரணம் என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகணும்...

ஏற்கனவே நான் நேபாளின் சுனில் பாபு பான்ட் பற்றிய கட்டுரை எழுதியிருக்கிறேன்... இப்போது சேவியர் பெட்டேல் பற்றி நீங்கள் படித்தீர்கள்... இனி இவர்களை போல இன்னும் பல மிக உயரிய பொறுப்புகளுக்கு உரியவர்களும்கூட தங்களின் பாலீர்ப்பை வெளிப்படையாக கூறும் வாய்ப்புண்டு... உலகமே ஓரளவு ஒருபால் ஈர்ப்பை ஏற்கும் இந்த தருணத்தில் இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள் பெரிய அளவில் நமக்கு அதிசயத்தை ஏற்படுத்திடாது.... அதேநேரத்தில் இந்த அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்னோடி நபர் ஒருவர் இருந்தார்... 1970களில் வெளிப்படையாக தன் பாலீர்ப்பை அறிவித்தத முதல் அரசியல்வாதி அவர்தான்.... இன்றைக்கும் பல பாலீர்ப்பு சிறுபான்மையினரின் முன்னோடிகளில் ஒருவரும் இவர்தான்... அவர்தான் ஹார்வே மில்க் எனப்படும் அமெரிக்க அரசியல்வாதி... 

ஹார்வே மில்க் பற்றி பல தருணங்களில் கட்டுரை எழுத நினைத்தும் கூட சரியான தருணம் அமையவில்லை... இப்போது பெட்டேல் அவர்களின் ஆட்சி அமைந்துள்ள இந்த தருணத்தில் இதை சொல்வது உகந்ததாக இருக்குமென நினைக்கிறேன்....
முதலில், யார் இந்த ஹார்வே மில்க்?

தன் நாற்பது வயது வரை தனது பாலீர்ப்பை வெளிப்படுத்தவுமில்லாமல், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல்தான் வாழ்ந்துவந்தார் ஹார்வே மில்க்... நாற்பது வயது வரையிலும் ஆசிரியர் பணி, கடற்படையில் சில காலம் சேவை என்று பணி சார்ந்து இயங்கினார்... அப்போது அவருக்கு அரும்பிய காதல்களுக்கும் கூட பஞ்சமில்லை... முதல் காதல் தன்னைவிட ஏழுவயது இளையவரான ஜோ காம்பல் மீது உண்டாகவே... காதலின் சாட்சியாக நிறைய கவிதை மற்றும் கடிதமல்லாம் ஜோவிற்கு எழுதியிருந்தார்... காப்பீட்டு துறையில் வேலை கிடைத்தபோது ஜோவுடன் உண்டான பிரிவு, காதலுக்கும் சேர்ந்தே பிரிவாக மாறியது.... சில காலம் தனியே வாசித்த மில்க் அப்போது யோசித்த தனது வாழ்க்கை பற்றிய முடிவு ஆச்சர்யமளிக்கக்கூடியது.... சமூக பார்வைக்காக தனது லெஸ்பியன் தோழியை மணக்கும் முடிவில் இருந்தார்... சமூகம் மற்றும் குடும்பத்திற்காக அந்த திருமணம் நடந்தால், இருவருமே தத்தமது வாழ்க்கையை பிரச்சினை இல்லாமல் வழிநடத்தலாம் என்று நினைத்தார்.... ஆனால், அதன் பிறகு அவருக்கு ராடுவெல் மீது உண்டான காதல், அந்த எண்ணத்தை ஈடேற செய்யவில்லை... ராடுவெல் சில ஒருபால் ஈர்ப்பு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது, மில்கிற்கு பிடிக்கவில்லை... ஒருகட்டத்தில் ராடுவெல் காவல்துறையால் கைதுசெய்யப்படவே, அந்த காதலும் அத்தோடு முறிந்துபோனது.... இதற்கு பிறகு இன்னும் ஓரிரு காதலும் வரிசைகட்டி வந்தது, அவற்றை சொல்லி இன்னும் சில பத்திகளை நிரப்ப விரும்பவில்லை...

1960களில் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான தீவிர மனநிலை அமெரிக்காவில் நிலவியது... அந்த காலகட்டத்தில்தான் மில்க் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது... 1971இல் மில்க் வாழ்ந்த சான் பிரான்சிஸ்கோ நகர் முழுவதும் பார்கள் மற்றும் அரங்கங்களில் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.... ஒருபால் ஈர்ப்பை மதத்திற்கு எதிராகவும், இயற்கைக்கு புறம்பாகவும் மக்கள் பார்த்திட்ட காலகட்டம் அது...

அந்த தருணத்தில்தான் பெருவாரியான மக்கள் ஆதரவோடு சான் பிரான்சிஸ்கோ நகரின் மேற்பார்வையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹார்வே மில்க்... பல்வேறு தொழிற்சங்கங்கள், பாலீர்ப்பு சிறுபான்மையினர், சாமானிய மக்கள் என்று பலதரப்பட்ட ஆதரவோடு வென்ற மில்க் பலரது புருவத்தையும் உயர்த்தி அதிசயிக்க வைத்தார்... 

அவர் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில்தான் ஒருபால் ஈர்ப்பு நபர்களின் உரிமைக்காக அரசாணை ஒன்றை வெளியிட செய்தார்... இதன்மூலம் அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த ஒருபால் ஈர்ப்பு நபர்களின் உரிமைகள் அந்த நகரில் மீட்கப்பட்டன.... பலராலும் பாராட்டப்பட்ட அந்த அரசாணைதான் பிற்காலத்தில் அமெரிக்க சட்டங்களின் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மாற்றத்திற்கான முன்னோடி என்று சொல்லலாம்...

இப்படி பலதரப்பட்ட மக்களின் பாராட்டோடு தன் பதினோராவது மாத அரசியல் பணியை நிறைவுசெய்வதற்கு முன்பே கொடூரமாக கொல்லப்பட்டார் ஹார்வே மில்க்... சான் பிரான்சிஸ்கோ நகரின் மேயர் மற்றும் ஹார்வே மில்க் இருவரையும் தன் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கிய நபரின் பெயர் வைட்... எவ்வளவோ சாதனைகள் செய்வார்! என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை ஒருவருடத்தை கூட பூர்த்தி செய்யாமல் முடியப்போவதை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.... அந்த மாகாணமே கண்ணீரில் தத்தளித்தது... கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் திரளாக அணிவகுத்து மில்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்...

ஹார்வே மில்க்கின் கொலை குற்றவாளியான  வைட்டிற்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்படும் என்று பலராலும் பேசப்பட்டது... ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்... அதற்கு காரணம், சில மத ரீதியான அமைப்புகள் வைட்டிற்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களும், அப்போது மாகாணத்தில் ஆட்சியிலிருந்த ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலை கொண்ட ஆட்சியாளர்களும்தான்... அந்த தீர்ப்பு சட்டத்தின்படி வழங்கப்படவில்லை என்றும், மதவாத கருத்துகளுக்கு தூபம் போடும் தீர்ப்பென பலரும் எதிர்த்தனர்... ஆனால், மதவாத தரப்போ “ஒருபால் ஈர்ப்பு நபர்களை மேலும் வளரவிடக்கூடாது” என்ற மனப்போக்கில் தங்களின் வலிமையை ஆட்சியாளர்களிடம் காட்டினார்கள்....

ஆனால், எந்த தீர்ப்பு இந்த ஒருபால் ஈர்ப்பு மக்களை அச்சுறுத்தி அமரவைக்கும் என்று அவர்கள் நினைத்தார்களோ, அதே தீர்ப்புதான் பல ஒருபால் ஈர்ப்பு நபர்களையும் வீதிக்கு வந்து போராட வைத்தது என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்... தீர்ப்பு வெளியான அந்த இரவில் நடந்த கலவரத்திற்கு “வைட் இரவு கலவரம்” என்று வரலாற்றில் பதிவுசெய்யப்படும் அளவிற்கான பெரிய அளவிலான கலவரமாக அது உருமாறியது.... 

சிட்டி ஹாலின் வாயிலில் மக்கள் திரள் திரண்டது....  கட்டிடத்தின் மீது கல்லெறியப்பட்டது, காவலர்களின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.... பல்லாயிரக்கணக்கான மக்களின் அந்த போராட்டம் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெகுண்டெழுந்தது.... இரவு முழுவதுமே நகரம் முழுவதும் நெருப்பில் நனைந்தது.... விடியும்வரை போராட்டக்காரர்களின் கோபம் சற்றும் குறையவில்லை... போராட்டத்தின் விளைவாக வழக்கு மறுபடியும் விசாரிக்கப்பட்டது....

ஒருபால் ஈர்ப்பு மக்கள் மட்டுமல்லாது, பலதரப்பட்ட மக்களின் மனதில் இடம்பிடித்த ஹார்வே மில்க்கின் இறப்பு, அவரின் பல நினைவுகளை அந்நகர் முழுவதும் நிரப்பிவிட்டுத்தான் சென்றிருக்கிறது... அவர் பெயரில் க்ளப் முதல் பள்ளிக்கூடம் வரை அந்த நகரில் பல இடங்களில் மில்க்கின் இருப்பை நாம் பார்க்கமுடியும்..

டைம் இதழ் வெளியிட்ட “இருபதாம் நூற்றாண்டின் நூறு நாயகர்கள்” பட்டியலில் ஹார்வே மில்க் பெயரும் இடம்பெற்றதே அவருடைய வானளாவிய புகழுக்கு எடுத்துக்காட்டு எனலாம்... 2009ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் “விடுதலைக்கான அதிபர் விருது” ஹார்வே மில்க்கின் ஒருபால் ஈர்ப்பு சமூகத்திற்கான முன்னெடுப்புகளை பாராட்டி அவருக்கு வழங்கி கௌரவித்தார்... 

இன்னும் எத்தனையோ புகழுக்கு சொந்தக்காரரான ஹார்வே மில்க், தான் இறப்பதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட சான் பிரான்சிஸ்கோ நகரின் கே பேரணியில் பேசிய பேச்சு இன்றைக்கு நமக்கும் அவசியமான ஒன்றாகவே வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது....
“ஸ்டோன்வால் கலவரத்தின் வருடாந்திர நாளை நினைவுகூறும் வகையில் இங்கு திரண்டுள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் எல்லோரும் போராடுவதற்கான தீர்மானத்தை உங்கள் மனதிற்குள் விதைக்க வேண்டும்... உங்களுக்காகவும், உங்கள் உரிமைகளுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் இந்த தீர்மானம் அவசியம்.... நம்மை மறைத்துக்கொண்டே அமைதியாக வாழ்ந்தால் நமது உரிமைகளை எக்காலத்திலும் பெறமுடியாது... பொய்மைக்கு எதிராகவும், நம்மீதான பிம்பங்களுக்கு எதிராகவும் போராட நாம் வெளிவந்தே ஆகவேண்டும்... ஒருபால் ஈர்ப்பை பற்றிய உண்மைகளை மக்களிடத்தில் உரத்து சொல்லவேண்டும்.... ஆகையால், உங்கள் பெற்றோரிடத்திலும், உங்கள் உறவுகளிடத்திலும் முதலில் உங்களை வெளிப்படுத்துங்கள்” கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் திரண்ட அந்த பேரணியில் ஹார்வே மில்க் உதிர்த்த இந்த வார்த்தைகள் நிச்சயம் பலரது மனதிலும் போராட்டத்திற்கான விதையை விதைத்தது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை...
உலக அளவில் ஸ்டோன்வால் கலவரம் நிகழ்த்திய அதே அளவிலான தாக்கத்தை ஹார்வே மில்க் இருந்தும், இறந்தும் நிகழ்த்திக்காட்டினார்.... அந்த அளவில் நிச்சயமாக சேவியர் பெட்டேல் தொடங்கி சுனில் பாபு பான்ட் வரை எல்லோருடைய அரசியல் முன்னோடியும் ஹார்வே மில்க்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!