நாட்டின் முதல் வெளிப்படையான ஒருபால்
ஈர்ப்பு பிரதமர் என்றதும் ஏதோ இந்தியாவை சொல்றேன்னு நினச்சிடாதிங்க... இந்தியாவில்
இப்போதுள்ள நிலைமையின்படி ஒரு கவுன்சிலர் கூட வெளிப்படையாக தன் பாலீர்ப்பை
ஒப்புக்கொள்ளமுடியாது... அப்படி இருக்கையில் ஒரு நாட்டின் பிரதமரே வெளிப்படையாக
தன்னை வெளிப்படுத்திக்கொண்ட நிகழ்வை ஆச்சரியமாகத்தான் நாம் பார்க்க வேண்டும்...
அந்த ஆச்சரியத்துக்கு சொந்தக்காரர் “சேவியர் பெட்டேல்” என்னும் பிரதமர், அந்த
அதிசயத்தை நிகழ்த்தியுள்ள நாடு லக்ஸம்பர்க்....
பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்த
கிறித்துவ சமூக மக்கள் கட்சியின் பிரதமரை வீழ்த்தி, ஆட்சியை பிடித்துள்ள குடியரசு
கட்சியின் சேவியர் பெட்டேல் அரியணை ஏறி சில மாதங்கள்தான் ஆகிறது... நாற்பது
வயதாகும் சேவியர் லக்ஸம்பர்க் நகரத்தின் முன்னாள் மேயரும் கூட... இதுவரை மதவாத
அடிப்படையில் ஒருபால் ஈர்ப்புக்கு சற்று எதிரான மனப்போக்கு நிலவிய அந்நாட்டில்,
சேவியரின் பொறுப்பேற்பு நிச்சயம் பல மாற்றங்களை உண்டுசெய்யும் என்று உலகமே
எதிர்பார்க்கிறது... இதில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது... சேவியருடன் துணை
பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் எடின்னே ஷ்னீடர் கூட தன்னை வெளிப்படுத்திக்கொண்ட
ஒருபால் ஈர்ப்பு நபர்தான்...
இதன்மூலம் கல்வித்துறையில்
திணிக்கப்பட்டுள்ள மதவாத கருத்துகளை நீக்கிவிட்டு, சமூக நல்லிணக்கம் தொடர்பாக
பாடத்திட்டங்களை முதலில் உருவாக்கப்போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது... மேலும்,
விரைவில் அந்நாட்டில் ஒருபால் ஈர்ப்பு திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படலாம்
என்ற எதிர்பார்ப்பில் பல லக்ஸம்பர்க் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் தத்தமது திருமண நாளை
எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்... லக்ஸம்பர்க் உலகின் மிகச்சிறிய நாடுகளில்
ஒன்றுதான், அங்கே சில லட்சங்களில்தான் மக்கள் தொகையே என்று அந்நாட்டை நாம் குறைவாக
மதிப்பிட முடியாது.... உலகின் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருப்பது அந்த
சிறிய நாடுதான் என்பதை நாம் நம்பித்தான் ஆகணும்... இத்தகைய சிறப்பான மாற்றத்தை
அந்த மக்கள் உணர ஒருவகையில் அவர்களின் கல்வியறிவும் காரணம் என்பதை நாம்
ஏற்றுத்தான் ஆகணும்...
ஏற்கனவே நான் நேபாளின் சுனில் பாபு பான்ட்
பற்றிய கட்டுரை எழுதியிருக்கிறேன்... இப்போது சேவியர் பெட்டேல் பற்றி நீங்கள்
படித்தீர்கள்... இனி இவர்களை போல இன்னும் பல மிக உயரிய பொறுப்புகளுக்கு
உரியவர்களும்கூட தங்களின் பாலீர்ப்பை வெளிப்படையாக கூறும் வாய்ப்புண்டு... உலகமே
ஓரளவு ஒருபால் ஈர்ப்பை ஏற்கும் இந்த தருணத்தில் இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள்
பெரிய அளவில் நமக்கு அதிசயத்தை ஏற்படுத்திடாது.... அதேநேரத்தில் இந்த
அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்னோடி நபர் ஒருவர் இருந்தார்... 1970களில் வெளிப்படையாக தன் பாலீர்ப்பை அறிவித்தத முதல் அரசியல்வாதி
அவர்தான்.... இன்றைக்கும் பல பாலீர்ப்பு சிறுபான்மையினரின் முன்னோடிகளில் ஒருவரும்
இவர்தான்... அவர்தான் ஹார்வே மில்க் எனப்படும் அமெரிக்க அரசியல்வாதி...
ஹார்வே மில்க் பற்றி பல தருணங்களில் கட்டுரை
எழுத நினைத்தும் கூட சரியான தருணம் அமையவில்லை... இப்போது பெட்டேல் அவர்களின்
ஆட்சி அமைந்துள்ள இந்த தருணத்தில் இதை சொல்வது உகந்ததாக இருக்குமென
நினைக்கிறேன்....
முதலில், யார் இந்த ஹார்வே மில்க்?
தன் நாற்பது வயது வரை தனது பாலீர்ப்பை
வெளிப்படுத்தவுமில்லாமல், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல்தான்
வாழ்ந்துவந்தார் ஹார்வே மில்க்... நாற்பது வயது வரையிலும் ஆசிரியர் பணி, கடற்படையில்
சில காலம் சேவை என்று பணி சார்ந்து இயங்கினார்... அப்போது அவருக்கு அரும்பிய
காதல்களுக்கும் கூட பஞ்சமில்லை... முதல் காதல் தன்னைவிட ஏழுவயது இளையவரான ஜோ
காம்பல் மீது உண்டாகவே... காதலின் சாட்சியாக நிறைய கவிதை மற்றும் கடிதமல்லாம்
ஜோவிற்கு எழுதியிருந்தார்... காப்பீட்டு துறையில் வேலை கிடைத்தபோது ஜோவுடன் உண்டான
பிரிவு, காதலுக்கும் சேர்ந்தே பிரிவாக மாறியது.... சில காலம் தனியே வாசித்த மில்க்
அப்போது யோசித்த தனது வாழ்க்கை பற்றிய முடிவு ஆச்சர்யமளிக்கக்கூடியது.... சமூக
பார்வைக்காக தனது லெஸ்பியன் தோழியை மணக்கும் முடிவில் இருந்தார்... சமூகம் மற்றும்
குடும்பத்திற்காக அந்த திருமணம் நடந்தால், இருவருமே தத்தமது வாழ்க்கையை பிரச்சினை
இல்லாமல் வழிநடத்தலாம் என்று நினைத்தார்.... ஆனால், அதன் பிறகு அவருக்கு ராடுவெல்
மீது உண்டான காதல், அந்த எண்ணத்தை ஈடேற செய்யவில்லை... ராடுவெல் சில ஒருபால்
ஈர்ப்பு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தது, மில்கிற்கு பிடிக்கவில்லை...
ஒருகட்டத்தில் ராடுவெல் காவல்துறையால் கைதுசெய்யப்படவே, அந்த காதலும் அத்தோடு
முறிந்துபோனது.... இதற்கு பிறகு இன்னும் ஓரிரு காதலும் வரிசைகட்டி வந்தது, அவற்றை
சொல்லி இன்னும் சில பத்திகளை நிரப்ப விரும்பவில்லை...
1960களில் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான தீவிர மனநிலை
அமெரிக்காவில் நிலவியது... அந்த காலகட்டத்தில்தான் மில்க் அரசியல் பிரவேசமும்
நிகழ்ந்தது... 1971இல் மில்க் வாழ்ந்த சான் பிரான்சிஸ்கோ
நகர் முழுவதும் பார்கள் மற்றும் அரங்கங்களில் ஒருபால் ஈர்ப்பு நபர்கள்
ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.... ஒருபால் ஈர்ப்பை மதத்திற்கு எதிராகவும்,
இயற்கைக்கு புறம்பாகவும் மக்கள் பார்த்திட்ட காலகட்டம் அது...
அந்த தருணத்தில்தான் பெருவாரியான மக்கள்
ஆதரவோடு சான் பிரான்சிஸ்கோ நகரின் மேற்பார்வையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹார்வே
மில்க்... பல்வேறு தொழிற்சங்கங்கள், பாலீர்ப்பு சிறுபான்மையினர், சாமானிய மக்கள்
என்று பலதரப்பட்ட ஆதரவோடு வென்ற மில்க் பலரது புருவத்தையும் உயர்த்தி அதிசயிக்க
வைத்தார்...
அவர் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில்தான்
ஒருபால் ஈர்ப்பு நபர்களின் உரிமைக்காக அரசாணை ஒன்றை வெளியிட செய்தார்... இதன்மூலம்
அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த ஒருபால் ஈர்ப்பு நபர்களின் உரிமைகள் அந்த நகரில் மீட்கப்பட்டன....
பலராலும் பாராட்டப்பட்ட அந்த அரசாணைதான் பிற்காலத்தில் அமெரிக்க சட்டங்களின்
ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மாற்றத்திற்கான முன்னோடி என்று சொல்லலாம்...
இப்படி பலதரப்பட்ட மக்களின் பாராட்டோடு தன்
பதினோராவது மாத அரசியல் பணியை நிறைவுசெய்வதற்கு முன்பே கொடூரமாக கொல்லப்பட்டார்
ஹார்வே மில்க்... சான் பிரான்சிஸ்கோ நகரின் மேயர் மற்றும் ஹார்வே மில்க்
இருவரையும் தன் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கிய நபரின் பெயர் வைட்... எவ்வளவோ
சாதனைகள் செய்வார்! என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு அரசியல் தலைவரின்
வாழ்க்கை ஒருவருடத்தை கூட பூர்த்தி செய்யாமல் முடியப்போவதை யாரும் நினைத்துக்கூட
பார்க்கவில்லை.... அந்த மாகாணமே கண்ணீரில் தத்தளித்தது... கிட்டத்தட்ட இரண்டரை
கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் திரளாக அணிவகுத்து மில்கிற்கு இறுதி அஞ்சலி
செலுத்தினார்கள்...
ஹார்வே
மில்க்கின் கொலை குற்றவாளியான வைட்டிற்கு
முதலில் மரண தண்டனை விதிக்கப்படும் என்று பலராலும் பேசப்பட்டது... ஆனால், யாரும்
எதிர்பாராத வகையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்... அதற்கு காரணம், சில மத ரீதியான
அமைப்புகள் வைட்டிற்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களும், அப்போது மாகாணத்தில்
ஆட்சியிலிருந்த ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலை கொண்ட ஆட்சியாளர்களும்தான்...
அந்த தீர்ப்பு சட்டத்தின்படி வழங்கப்படவில்லை என்றும், மதவாத கருத்துகளுக்கு தூபம்
போடும் தீர்ப்பென பலரும் எதிர்த்தனர்... ஆனால், மதவாத தரப்போ “ஒருபால் ஈர்ப்பு
நபர்களை மேலும் வளரவிடக்கூடாது” என்ற மனப்போக்கில் தங்களின் வலிமையை
ஆட்சியாளர்களிடம் காட்டினார்கள்....
ஆனால், எந்த தீர்ப்பு இந்த ஒருபால் ஈர்ப்பு மக்களை அச்சுறுத்தி அமரவைக்கும் என்று அவர்கள் நினைத்தார்களோ, அதே தீர்ப்புதான் பல ஒருபால் ஈர்ப்பு நபர்களையும் வீதிக்கு வந்து போராட வைத்தது என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்... தீர்ப்பு வெளியான அந்த இரவில் நடந்த கலவரத்திற்கு “வைட் இரவு கலவரம்” என்று வரலாற்றில் பதிவுசெய்யப்படும் அளவிற்கான பெரிய அளவிலான கலவரமாக அது உருமாறியது....
சிட்டி ஹாலின் வாயிலில் மக்கள் திரள்
திரண்டது.... கட்டிடத்தின் மீது
கல்லெறியப்பட்டது, காவலர்களின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.... பல்லாயிரக்கணக்கான
மக்களின் அந்த போராட்டம் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு
வெகுண்டெழுந்தது.... இரவு முழுவதுமே நகரம் முழுவதும் நெருப்பில் நனைந்தது....
விடியும்வரை போராட்டக்காரர்களின் கோபம் சற்றும் குறையவில்லை... போராட்டத்தின்
விளைவாக வழக்கு மறுபடியும் விசாரிக்கப்பட்டது....
ஒருபால் ஈர்ப்பு மக்கள் மட்டுமல்லாது,
பலதரப்பட்ட மக்களின் மனதில் இடம்பிடித்த ஹார்வே மில்க்கின் இறப்பு, அவரின் பல
நினைவுகளை அந்நகர் முழுவதும் நிரப்பிவிட்டுத்தான் சென்றிருக்கிறது... அவர் பெயரில்
க்ளப் முதல் பள்ளிக்கூடம் வரை அந்த நகரில் பல இடங்களில் மில்க்கின் இருப்பை நாம்
பார்க்கமுடியும்..
டைம் இதழ் வெளியிட்ட “இருபதாம் நூற்றாண்டின்
நூறு நாயகர்கள்” பட்டியலில் ஹார்வே மில்க் பெயரும் இடம்பெற்றதே அவருடைய வானளாவிய
புகழுக்கு எடுத்துக்காட்டு எனலாம்... 2009ஆம் ஆண்டு
அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் “விடுதலைக்கான அதிபர் விருது” ஹார்வே மில்க்கின்
ஒருபால் ஈர்ப்பு சமூகத்திற்கான முன்னெடுப்புகளை பாராட்டி அவருக்கு வழங்கி கௌரவித்தார்...
இன்னும்
எத்தனையோ புகழுக்கு சொந்தக்காரரான ஹார்வே மில்க், தான் இறப்பதற்கு ஒருசில
மாதங்களுக்கு முன்பு தான் கலந்துகொண்ட சான் பிரான்சிஸ்கோ நகரின் கே பேரணியில்
பேசிய பேச்சு இன்றைக்கு நமக்கும் அவசியமான ஒன்றாகவே வரலாற்றில்
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது....
“ஸ்டோன்வால்
கலவரத்தின் வருடாந்திர நாளை நினைவுகூறும் வகையில் இங்கு திரண்டுள்ள சகோதர
சகோதரிகளே, நீங்கள் எல்லோரும் போராடுவதற்கான தீர்மானத்தை உங்கள் மனதிற்குள்
விதைக்க வேண்டும்... உங்களுக்காகவும், உங்கள் உரிமைகளுக்காகவும், நாட்டு
நலனுக்காகவும் இந்த தீர்மானம் அவசியம்.... நம்மை மறைத்துக்கொண்டே அமைதியாக
வாழ்ந்தால் நமது உரிமைகளை எக்காலத்திலும் பெறமுடியாது... பொய்மைக்கு எதிராகவும்,
நம்மீதான பிம்பங்களுக்கு எதிராகவும் போராட நாம் வெளிவந்தே ஆகவேண்டும்... ஒருபால்
ஈர்ப்பை பற்றிய உண்மைகளை மக்களிடத்தில் உரத்து சொல்லவேண்டும்.... ஆகையால், உங்கள்
பெற்றோரிடத்திலும், உங்கள் உறவுகளிடத்திலும் முதலில் உங்களை வெளிப்படுத்துங்கள்”
கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் திரண்ட அந்த பேரணியில் ஹார்வே
மில்க் உதிர்த்த இந்த வார்த்தைகள் நிச்சயம் பலரது மனதிலும் போராட்டத்திற்கான
விதையை விதைத்தது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை...
உலக
அளவில் ஸ்டோன்வால் கலவரம் நிகழ்த்திய அதே அளவிலான தாக்கத்தை ஹார்வே மில்க் இருந்தும்,
இறந்தும் நிகழ்த்திக்காட்டினார்.... அந்த அளவில் நிச்சயமாக சேவியர் பெட்டேல்
தொடங்கி சுனில் பாபு பான்ட் வரை எல்லோருடைய அரசியல் முன்னோடியும் ஹார்வே
மில்க்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
No comments:
Post a Comment