Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 14 September 2014

ஒரு காதலனின் கல்யாணப்பரிசு...! - சிறுகதை...





நாளை எனக்கு திருமணம்... மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு, முந்தையநாள் காலையில் விட்டத்தை பார்த்தபடி, காற்றாடியின் இரைச்சலை உள்வாங்கிக்கொண்டு எந்த மாப்பிள்ளையாவது என்னைப்போல இப்படி தனியே படுத்திருப்பார்களா? என்பது எனக்கு தெரியவில்லை... திருமணத்திற்கே உரிய பரபரப்பு என் அறைக்கதவை தாண்டி உள்ளே வரவில்லை... அறைக்கு வெளியே சாமான்கள் உருட்டும் சத்தமும், “அதை கொண்டுபோய் ஸ்டோர் ரூம்ல வை” அம்மாவின் பரபரப்பான வார்த்தைகளும், குழந்தைகளின் அழுகை சத்தமும், “அத்தாச்சி, இதான் வர்ற நேரமா?” சித்தியின் வரவேற்பு குரலும் நிச்சயமாக ஒலிச்சித்திரம் கேட்பவர்களால் கூட “இது திருமண வீடு!”ன்னு சட்டென கண்டுபிடித்துவிடும் அளவிலான உற்சாகம் கரைபுரண்டது....
ஏனோ அந்த உற்சாகமும், பரபரப்பும் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை.... அதற்கான காரணத்தை ஒரே வரியில் சொல்லனும்னா, “நான் ஒரு கே!”... அப்புறம் ஏன் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன்?.... கிராமத்து சூழலில் வாழ்ந்த பெற்றோரிடம் என்னை பற்றி வெளிப்படுத்த முடியாததால், எனக்கு பிறகு இன்னும் சில வருடங்களில் திருமண வயதை எட்டவிருக்கும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் என் தங்கையின் வாழ்க்கை குறித்த யோசனையால், இந்த சமூகமும் சுற்றமும் பாலீர்ப்பை பற்றி புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றிருக்காததால் என்று நான் எவ்வளவோ காரணங்கள் சொல்லமுடியும்.... ஆனால், இவை எல்லாம் வெறும் காரணங்கள் மட்டுமே... என்னுடைய பயத்தையும், கோழைத்தனத்தையும், இயலாமையையும் நான் மறைத்துக்கொள்ள என்னை சுற்றி நானே போட்டுக்கொண்ட பாதுகாப்பு வேலிதான் இந்த காரணங்கள்...
எனது திருமண ஏற்பாடுகள் தொடங்கிய இந்த ஒருமாத காலகட்டத்திலும் இதைப்பற்றியே, இதைப்பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்க இன்னொரு வலிமையான காரணமும் உண்டு... அது கனல் உடனான எனது மூன்று வருட காதல்... என் திருமணத்தை பற்றி அவனிடம் சொன்ன அந்த நாளது ஒவ்வொரு நொடியையும் இப்போது நினைத்தால்கூட என் வயிற்றுக்குள் அமிலத்தை சுரக்க வைத்திடும்...
“ஹலோ கனல்....”
“சொல்லுடா... சார் என்ன இன்னிக்கு இவ்ளோ சீக்கிரமா கால் பண்றீங்க?”
“போனவாரம் பொண்ணு பார்க்க தஞ்சாவூர் போனேன்ல?”
“ஆமா.... நீ பார்த்த பதினேழாவது பொண்ணுதான?... ஜாதகம் சரியில்லையா? உங்க டிமான்ட்’க்கு அவங்க ஒத்துவரலையா?” சிரித்தான்... அவன் சிரிப்பிற்கும் நிச்சயம் காரணம் உண்டு... இதுவரை தப்பிப்போன பதினாறு வரண்களுக்கும் கனல் சொன்ன அந்த இரண்டு காரணங்கள்தான் தூபம் போட்டன....
“இல்லடா.... எல்லாம் ஓகே ஆகிடுச்சாம்....” தயங்கிக்கொண்டே சொன்னேன்....
“அப்டின்னா?”
“அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் பண்ணனும்னு சொல்றாங்க..” வார்த்தைகளை மென்று விழுங்கினேன்....
“சரி.... அதுக்கு நீ என்ன சொன்ன?” வார்த்தைகளில் வேகம் தெரிந்தது....
“உனக்கே தெரியும் அம்மா அப்பாவல்லாம் கிராமத்து ஆளுங்க, அவங்க கிட்டயல்லாம்....” நான் முடிக்கும் முன்பே இடைமறித்தான் கனல்...
“நீ என்ன சொன்னன்னு மட்டும்தான் நான் கேட்டேன், உன்னோட விளக்கங்கள் எல்லாம் எனக்கு தேவையில்லை....” பிடிகொடுக்காத பதிலால் என்னை தடுமாற வைத்தான்...
“அது.... வேற வழி இல்லடா... ஒத்துக்” வார்த்தையை முடிப்பதற்கு முன்பே அழைப்பை துண்டித்தான்.... அந்த துண்டிப்பிற்கு பின்னால் மறைந்திருந்த கனலின் வலியை கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை.... ஆனால், இது எதிர்பார்த்த ஒன்றுதான்... இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்த்துத்தான் அவனிடம் இந்த தகவலை சொன்னேன்.... பெற்றோர், சுற்றம், சமூகம் என்று பலதரப்பை சமாளிப்பதைவிட கனலை சமாளிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை என்கிற ஒரு “தப்பித்தல் மனோபாவம்” தான் அதற்கு காரணம்... அதன்பிறகு இரண்டு நாட்கள் அவனிடமிருந்து எவ்விதமான பதிலும் இல்லை... அந்த நாற்பத்தி எட்டு மணி நேரங்களில் மட்டும் நான் அவனை அழைத்து “தவறிய அழைப்புகளாக” மாறிப்போன அழைப்புகளின் எண்ணிக்கை சதத்தை தொட்டுவிட்டிருக்கும்.... வீட்டிற்கு சென்று அவனை பார்க்கும் சந்தர்ப்பமும் அந்த இரண்டு நாட்களில் உருவாகவில்லை, நானும் உருவாக்கிக்கொள்ளவில்லை...
கதவு தட்டப்பட்டது... கனலின் கற்பனை உலகிலிருந்து வெளிவந்தேன், அறைக்கு வெளியே வழக்கத்தைவிட அதிக சொந்தங்களின் பேச்சுக்குரல் கேட்டது.... மெல்ல எழுந்து கதவை திறந்தேன்.... அம்மா நின்றார்...
“என்னப்பா தூங்கிட்டியா?.... கொலசாமி கோயிலுக்கு போவனும்யா, சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பு....” தலைமுடியை வருடிவிட்டார்....
“சரிம்மா....”
“நம்ம கனலு தம்பி காருலதான் போறோம்... வண்டி எடுத்துட்டு வாறேன்னு சொன்னுச்சு... நம்ம வண்டிய மாமா எடுத்துகிட்டு தஞ்சாவூர் வரைக்கும் போய்டுச்சுப்பா...” அம்மாவை பொருத்தவரை எல்லா விஷயங்களும் எனக்கு தெரிந்தாக வேண்டும்... எனக்கு அவசியமே இல்லாத விஷயமானாலும், நான் “ஹ்ம்ம்” சொல்லவே எரிச்சலுறும் விஷயமானாலும் கூட அதை சொல்லிமுடித்துவிட்டுதான் என்னை விடுவார்...
“சரிம்மா... நீங்க போங்க, நான் குளிச்சுட்டு வரேன்... எந்த காரா இருந்தா என்ன, கோயிலுக்கு போனா போதும்...” அம்மாவின் பதிலை எதிர்பார்த்திடாமல் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றேன்...
உடைகளை களைந்து, ஷவரை போட்டேன்... சில்லிட்ட தண்ணீர் ஓரளவு என் உடல் சூட்டையாவது தணித்ததாக உணர்ந்தேன்....
இரண்டு நாட்கள் என்னை புறக்கணித்த கனல் எப்போது மீண்டும் வந்தானென்று உங்களுக்கு கேள்விகள் தோன்றியிருக்கலாம்.... நூறை கடந்த தவறிய அழைப்புகளுக்கு பிறகு மூன்றாம் நாள், இரண்டு நாட்களின் எவ்விதமான சுவட்டையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் என் அறைக்குள் நுழைந்தான் கனல்....
ஒருபக்கம் அவன் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி, எந்த காரணத்தால் வந்தான்? என்கிற குழப்பம், மூன்று வருட காதலை ஐந்தே நிமிடத்தில் உடைத்தெறிந்த எனது குற்ற உணர்ச்சி என்று கலவையான மனநிலையோடு, அவனை வரவேற்க கூட மறந்து ஸ்தம்பித்து நின்றேன்.... மறுபக்கம் அவனோ எவ்வித குழப்பமும் தன்னை அண்டாதவனை போல இயல்பாக அறைக்குள் நுழைந்து, கட்டிலில் அமர்ந்து, மேசையின் மீதிருந்த விகடனை புரட்டத்தொடங்கினான்....
ஓரளவு என்னை சுதாரித்துக்கொண்டு, அவன் அருகில் சென்றேன்....
“ரொம்ப சாரி கனல்... நான் வந்து...” எழுந்து வந்து தன் உள்ளங்கையால் எனது வாயை பொத்தினான்....
“இப்பவும் நான் உன்கிட்ட எந்த விளக்கத்தையும் எதிர்பார்க்கல... இதுதான் விதின்னா அதை யாராலும் மாத்த முடியாது... அதை நான் உணரத்தான் இந்த ரெண்டு நாள்... என்னை காதலிச்ச இந்த மூணு வருஷமும் நீ எதுவும் பெருசா கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், ஓரளவு சந்தோசமாவே உன்ன பாத்துகிட்டேன்னு நம்புறேன்... இன்னும் நீ என்னோட காதலனாவே இருக்கப்போற இந்த ஒருமாதமும் நீ அதே அளவிலான சந்தோஷத்தில் இருக்கணும்... நீ அந்த பொண்ணுக்கு தாலி கட்டுற வரைக்கும் எனக்கான உன்னிடம் இருக்குற உரிமைகள் குறையாது... அதே போல உன்னை சந்தோஷமா வச்சிருக்குற பொறுப்பும் இந்த ஒரு மாசமும் என்கிட்ட இருக்கு... அதனால, பழசை எதுவும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா கல்யாண வேலைகளை பார்ப்போம்...” சொல்லிவிட்டு அறையை விட்டு நகர்ந்துவிட்டான்.... அன்று முதல் என் திருமண அழைப்பிதழ் அச்சடித்தது முதலாக, முகூர்த்தப்பட்டு தேர்ந்தெடுப்பது வரையிலான எல்லாமுமாக என் நிழல் போல என்னருகே செயல்பட்டுக்கொண்டிருப்பவன் அவன் மட்டும்தான்.... நேற்று வரை அவன் சொன்னது போலவே மகிழ்ச்சியோடுதான் இருந்தேன்... ஏனோ இன்று காலை எழுந்தபோது எனக்குள் உண்டான வெறுமை என்னை குழப்பியது.... நாளை முதல் நான் கனலின் காதலன் இல்லை, அமுதாவின் கணவன்... என்னை இன்னும் அமுதாவின் கணவனாக நான் மனதளவில் தயார்படுத்திக்கொள்ளவில்லை.... அந்த குழப்பமும் பயமும்தான் என்னை இப்படி தனியே புலம்பவைத்துவிட்டது....
மீண்டும் அறைக்கதவு தட்டப்பட்டது....
கட்டியிருந்த துண்டோடு சென்று கதவை திறந்தேன்.... கனல் நின்றான்... அவனை பார்த்த மறுநொடியே சூரிய ஒளியில் காணாமல்போன பனித்துளியைப்போல அத்தனை நேரமும் என்னை ஆட்கொண்டிருந்த குழப்பங்கள் காணாமல் போனது...
“ஓஹ்... சாரி... நீ டிரெஸ் சேஞ் பண்ணிட்டு வா, நான் வெளில நிக்குறேன்” அங்கிருந்து நகர முயன்றான்...
“ஏய்... உள்ள வாடா... நமக்குள்ள என்னடா இந்த பார்மாலிட்டிஸ்...?” கொஞ்சம் கோபத்தில்தான் கேட்டேன்....
தயக்கத்துடனேயே உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தபடி, மேசையின் மீதிருந்த விகடனை புரட்டினான்...
“அது போன மாசமே நீ படிச்சுட்ட!” சிரித்தேன்...
“ஓஹ்... நான் கவனிக்கல...” மூடி மேசை மீதே வைத்துவிட்டு, தன் மொபைலை எடுத்து ஆராயந்துகொண்டிருந்தான்....
என் கவலைகள் மறந்து எனக்கு சிரிக்க தோன்றியது.... என் அரை நிர்வாணத்தை பார்க்க தயங்கி அவன் செய்யும் இந்த செயல்கள் என்னை ரசிக்க வைத்தன...
“ஏன் சிரிக்குற?” கோபத்தோடு கேட்டான்...
“அது உனக்கே தெரியும்....” நான் சொன்ன வேகத்தில் விருட்டென எழுந்தான்...
“இதுக்குத்தான் நான் வெளில இருக்கேன்னு சொன்னேன், உன் பேச்சை கேட்டு உள்ள வந்தேன் பாரு” தலையில் அடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்....
மனம் கொஞ்சம் இலகுவானதாக உணர்ந்தேன்... உடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பி, காரை நோக்கி நகர்வதற்குள் வந்திருந்த அத்தனை சொந்தங்களின் குசல விசாரிப்புகளும் என்னை ஸ்தம்பிக்க வைத்தன...
ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து காரில் ஏறுவதற்குள் மூச்சடைத்துவிட்டது....  காரை கனல்தான் ஓட்டினான், முன் சீட்டில் நான் அமர்ந்தேன்... பின்சீட்டில் அம்மாவும், சித்தியும்... சொந்தங்கள் சூழ்ந்து நலம் விசாரித்ததில் உடைகள் கசங்கி, தலை முடி கூட கலைந்துபோய்விட்டன...
வாய்க்குள் சிரித்தான் கனல்...
எனக்கோ எரிச்சல்....
“எதுக்குடா சிரிக்குற?” கோபத்தோடு கேட்டேன்....
“அது உனக்கே தெரியும்...” என்னை பதிலுக்கு பதில் கலாய்த்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது... வெளிப்படையாக நான் கோபம் கொண்டாலும், அவனுடைய இந்த செய்கையையும் நான் உள்ளளவில் ரசிக்கவே செய்தேன்...
“இவங்க ரெண்டு பேரும் இப்டிதான்... சின்ன புள்ளைக மாதிரி சண்டை போடுறது, பத்து நிமிஷத்துல ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசிக்கிவாக” சித்தியிடம் அம்மா விளக்கிக்கொண்டிருந்தார்....
“கனலு மட்டும் இல்லைன்னா ரொம்ப கஷ்டம்தான்.... எம்புட்டு வேலை பாத்துச்சு தெரியுமா?... கனலு கல்யாணத்துக்கும் கூட நாமல்லாம் போய் எல்லா வேலையும் இழுத்துப்போட்டு பாக்கணும்...” அம்மா இலவச இணைப்பாக “கனல் புராணம்” பாடினார்...
“வாழையிலை என்னாச்சுப்பா?... எங்கயோ சொல்லிருக்கொம்னு சொன்னியே கனலு?” சித்தி இம்முறை...
“அது குளித்தலைலேந்து காலைல வெள்ளன வந்திரும்.... அவுகளே கொண்டு வந்திடுவாக சித்தி....” வாழை இலை வரை கனலின் பங்கு வந்துவிட்டது எனக்கு ஆச்சர்யமாக பட்டது...
தார் சாலையிலிருந்து பிரிந்த செம்மண் சாலையில் கார் பயணிக்கத்தொடங்கியது... அதுவரை வாழை இலை முதல் வரவேற்பில் வைக்க வேண்டிய வாழைப்பழம்வரை சிரித்துக்கொண்டே பேசிவந்த கனல் சட்டென மௌனமானான்... ஓரிரு “ஹ்ம்ம்... ஆமா... செய்யலாம்” மட்டும் உயிரற்ற வார்த்தைகளாக வந்து விழுந்தன...
அந்த மௌனத்திற்கான காரணத்தை நான் மட்டுமே அறிவேன்... இந்த சாலையில் எத்தனையோ முறை கனலும் நானும் பயணித்ததுண்டு... பைக்கில் இருவரும் வரும் நேரங்களில், எனது பின்னால் அமர்ந்துவரும் அவனுடைய சேட்டைகள் இப்போதும் பசுமை மாறாத நினைவுகள்தான்....
“டேய், கையை ஒழுங்கா வச்சுட்டு வா.... கோவிலுக்கு போறோம்னு மறந்திடாத” என் தொடை மீது வைத்த அவன் கையை விலக்கிவிட்டு இப்படி சொன்னேன்...
“ரோடு இவ்ளோ மோசமா இருக்கேன்னு ஒரு க்ரிப்புக்காக கை வச்சேன், எப்ப பார்த்தாலும் தப்பாத்தான் நினைப்பியா?” செல்லமாக கோபித்துக்கொண்டான்....
“நீ க்ரிப்புக்காக வைக்கிற கை எங்க ஸ்லிப் ஆகி போகும்னு எனக்கும் தெரியும்... நம்ம யாழினிக்கு கூட இங்கதான் மொட்டை அடிச்சு காதுகுத்தப்போறோம், அதனால பயபக்தியோட வா...”
“யாருடா யாழினி?”
“அடப்பாவி.... நாம கனடா போய் செட்டில் ஆனப்புறம் குழந்தை வளர்க்க பிளான் பண்ணோமே, அப்போ கூட எனக்கு பெண்குழந்தை வேணும்னு சொன்னேனே... மறந்துட்டியா?” விளக்கமாக சொன்னேன்....
“அதல்லாம் ஞாபகம் இருக்கு... இந்த பேர் தான் மறந்துட்டேன்... அப்போ, கனடாலேந்து குழந்தைக்கு காதுகுத்த இங்க வரணுமா?”
“ஆமா.... அதுல என்ன கஷ்டமாம்?”
“உங்க சொந்தக்காரங்க கத்திய எடுத்துகிட்டு நம்மள குத்தாம இருந்தா சரிதான்...” சிரித்தான்....
இந்த கருவேல மரங்கள் நிச்சயம் அந்த பசுமையான நினைவுகளை பதப்படுத்தி வைத்திருக்கும்...
கார் இப்போது கருவேல மரங்களால் சூழப்பட்ட அந்த பழமைவாய்ந்த கோவிலை நெருங்கிவிட்டது... காரின் வருகைக்காக காத்திருந்ததை போல வாசலில் அமர்ந்திருந்த பூசாரி எழுந்து உள்ளே சென்று இறுதி வேலைகளில் ஆயத்தமானார்...
அம்மாவும் காருக்குள் இருந்த பழம், பத்தி, மாலை உட்பட பூஜை சாமான்களை எடுத்து பூசாரியிடம் கொடுத்தார்... “ஒரு அஞ்சு நிமிஷத்துல சாமி கும்பிட்டடலாம்” என்று சொன்னபடியே ஏற்கனவே பொங்கி வடித்திருந்த பொங்கலை, வாழை இலையில் கொட்டி, சாமிக்கு படைத்தார்....
அந்த ஐந்து நிமிடத்தை கோவில் வாசலில் செலவிட வெளியே வந்தேன்.... காரை விட்டு இறங்கிய கனல் இன்னும் கோவிலுக்குள் வராமல், குதிரை சிலையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்... எனக்கும் அவன் முகத்தில் வடிந்த சோகம் தொற்றியதாக உணர்ந்தேன்...
“கனல்...” அழைத்தேன்...
ஓரிரு வினாடிகள் கழித்தே திரும்பினான்... அந்த ஓரிரு வினாடிகளை கண்ணீரை கட்டுப்படுத்தக்கூட பயன்படுத்தியிருக்கலாம்... சோகத்தை மறைத்து சிரிக்க முயன்ற உதடுகளால் ஏனோ முழுமையாக வருத்தத்தை மறைக்கமுடியவில்லை....
“என்னடா?” என்றான்...
“சாமி கும்பிடலாம் வா...”
“இல்லடா.... நீ கும்பிட்டு வா, இங்க நிக்குறேன்...” மறுத்தான்.... காரணம் புரிந்தது... கல்லாக அமர்ந்திருக்கும் கடவுளிடம் கோபித்து என்ன பயன்?... நானும் வற்புறுத்தவில்லை...
“தம்பி, வா சாமி கும்பிடலாம்...” சித்தி அழைத்தார், உள்ளே சென்று பெயருக்காக கைகூப்பி வணங்குவதை போல பாவனை செய்தேன்... என்னால் கனலை போல வெளிப்படையாக கோபத்தை காட்ட முடியாதல்லவா.... சூடத்தட்டுடன் அருகே வந்த பூசாரி, என் தலையில் திருநீற்றை தெளித்து, நெற்றியிலும் பூசிவிட்டார்...
“எந்த கொறையும் இல்லாம எல்லாம் நல்லபடியா நடக்கும்!... கொலசாமிக்கு கெடா வெட்டி பூசை போடுறதா வேண்டிக்கோங்க” அம்மாவிடம் திருநீற்றை கொடுத்துவிட்டு இப்படி சொன்னார் பூசாரி...
பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பவே மதியம் ஆகிவிட்டது...
வீட்டிற்கு செல்லும் வழியிலும் எதுவும் பேசவில்லை கனல்.... அம்மாவும் சித்தியும் மட்டுமே மறுநாள் கட்டவேண்டிய புடவை பற்றியும், அணிய வேண்டிய நகைகள் பற்றியும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர்....
இரவு மாமன் விருந்து... முக்கிய சொந்தங்களும், நண்பர்களும் இரவே வரத்தொடங்கினர்....
சீக்கா சுத்தும் சடங்கும் முடிய இரவு பத்துமணி ஆகிவிட்டது... சிக்கன், மட்டன், காடை, மீன்  என்று அசைவ உணவுகள் அத்தனையும் இருந்தும், எதுவும் சாப்பிட முடியாத அளவிற்கு ஒருவித பயம் மனதிற்குள்... விடிந்தால் திருமணம், என்கிற பயமாகக்கூட இருக்கலாம்...
நண்பர்களோடு அறையில் அமர்ந்து பழைய புராணங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தேன்.... ஒரே சிரிப்பு சத்தமும், மகிழ்ச்சியும் இப்போதுதான் அறைக்குள் நுழைந்தது....
அப்போதுதான் அறைக்குள் நுழைந்தான் கனல்...
“மச்சான்... உங்க எல்லாருக்கும் மலர் ரெசிடன்சில ரூம் போட்டாச்சு.... மத்த எல்லா ஏற்பாடுகளும் அங்கேயே செஞ்சுட்டேன்” நண்பர்களை நோக்கி சுற்றிலும் பார்த்தபடி சொன்னான்... அந்த “மத்த” என்ற அழுத்தத்தை சட்டென புரிந்துகொண்ட நண்பர்கள், சற்றும் யோசிக்காமல் சாவிகளை வாங்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினர்....
எல்லோரும் சென்றபிறகு, கனலும் கிளம்ப ஆயத்தமானான்....
“கனல்.... ஒரு நிமிஷம்!”  அருகில் அழைத்தேன்...
“என்னடா...?”
“ஒண்ணுமில்ல... ஒரு மாதிரி இருக்கு, கொஞ்ச நேரம் இருடா...” அருகில் அமருமாறு சைகை செய்தேன்....
மறுபேச்சு கேட்காமல் அமர்ந்தான்... “ஏற்கனவே மணி பதினொன்னு ஆகிடுச்சு.... காலைல ஏழு மணிக்கு முகூர்த்தம், தூங்கி எழுந்தா சரி ஆகிடும்டா” இந்த அக்கறை கனலுக்கே உரித்தான ஒன்றுதான்...
“ஹ்ம்ம்... ஒரு பத்து நிமிஷம் எதாச்சும் பேசலாம்” மீண்டும் வற்புறுத்தினேன்....
நான் காதலை பற்றி பேசி, வேறுவிதமான சூழலை உருவாக்கிவிடுவேனோ? என்கிற பயம் அவனது தயக்கத்தில் தெரிந்தது... “மண்டபத்துல அலங்கார வேலயல்லாம் சூப்பரா இருக்குடா, இப்போதான் பார்த்துட்டு வந்தேன்...”
“ஹ்ம்ம்... நீ சாப்டியா?” ஒரு மாதத்தில் இப்போதான் அவனைப்பற்றி விசாரிக்கிறேன்...
“சாப்டேன்டா... சமையலும் நல்லா இருந்ததா எல்லாரும் சொன்னாங்க... மணி அண்ணன் காண்ட்ராக்ட் பக்காவா இருக்குடா... காலைல கேசரிக்கு பதிலா அசோகா போடசொல்லிட்டேன்...” எந்த தருணத்திலும் அவன் மீண்டும் பழைய விஷயங்களை பேச விரும்பவில்லை...
சரியாக அந்த நேரம் என் அலைபேசி அடிக்க, எடுத்துப்பார்த்தேன்... “அமுதா” பெயர் பளிச்சிட்டது.... கனலின் முகத்தை பார்த்தவாறே, அந்த அழைப்பை துண்டித்துவிட்டு அருகில் வைத்தேன்....
வைத்த மறுநொடியே மீண்டும் அழைப்பு, அவளேதான்....
“யாரு அமுதாவா?” சரியாக யூகித்துவிட்டான்....
“ஹ்ம்ம்...”
“நீ பேசிட்டு தூங்குடா, நான் காலைல வரேன்” என் பதிலை எதிர்பார்த்திடாமல் அங்கிருந்து வெளியேறினான்....
போனவாரம் வரை கனலும் நானும் இரவு பத்து மணி முதல் பதினொன்று வரை பேசுவது மூன்று வருட வாடிக்கையான நிகழ்வு... கடந்த வருடத்தில் தாத்தா இறந்தபோதுகூட, கேத வீட்டிலும் மொட்டை மாடியில் அமர்ந்து கனலுடன் பேசி அந்த கடமையை நிறைவேற்றினேன்...
கடந்த வாரத்தில் ஒருநாள் இயல்பாக அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் கனல்...
“என்னடா அடிக்கடி பீப் சத்தம் கேட்குதே?” குழப்பத்தில் கேட்டான்...
“இல்ல... கால் வெய்ட்டிங்ல போகுதுடா...” தயக்கத்துடன் பதில் சொன்னேன்...
“யாரவன் இந்த நேரத்துல, இவ்ளோ நேரமா இம்சை பண்றது?” எரிச்சலோடு கேட்டான்...
“அது... அமுதா..” இந்த பதிலுக்கு பிறகு சில நொடிகள் மறுமுனையில் சப்தமில்லை... நிசப்தம் நிலவியது... மீண்டும் சுதாரித்த கனல், “ஐயோ சாரிடா.... நான்தான் முட்டாள், நீயாவது சொல்லிருக்கலாம்ல?.... நீ அமுதா கூட பேசு... நெறைய பேசி, ரெண்டு பேரும் நல்லபடியா புரிஞ்சுக்கோங்கடா...” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.... அதன்பிறகு எங்கள் வழக்கமான “பத்து மணி டாக்” நிறுத்தப்பட்டு, சம்பிரதாய பேச்சுகள் மட்டுமே தொடர்ந்தது...
இப்போதுகூட அமுதாவிடமிருந்து ஆறாவது தவறிய அழைப்பு... அலைபேசியை அணைத்துவிட்டு படுத்துவிட்டேன்...
“என்னடா இன்னும் தூங்குற?... சீக்கிரம் குளிச்சுட்டு வா...” அம்மா...
“வேஷ்டி ஒரு பக்கமா மேல தூக்கிருக்கு பாரு!” சரிசெய்துவிட்டார் அப்பா...
“மண்டபத்துக்கு நாம முதல்ல போய்டலாம் தம்பி” சித்தி அழைத்துக்கொண்டு மண்டபம் கிளம்பினார்...
“சார்... கொஞ்சம் ரைட்’ல நில்லுங்க.... அப்டியே கையை சுவத்துல சாய்ச்சுகிட்டு சிரிங்க” புகைப்படக்காரர் தன் பங்கிற்கு இம்சை செய்தார்...
கொஞ்சம் கொஞ்சமாக மண்டப இருக்கைகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள் உறவினர்கள்....  இறுதி டச்சப் செய்தபிறகு மேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன்... சொல்லி வைத்தாற்போல நான்கைந்து சிறுவர்கள் என்னை சூழ்ந்து புகைப்படங்களுக்கு “போஸ்” கொடுத்தனர்... மாப்பிள்ளை தோழனாக மைத்துனர் ஒருவன் அருகில் நின்றான்... அவ்வப்போது தன் கைக்குட்டையால் என் வியர்வையை துடைத்துக்கொண்டும், ஜரிகையில் சிக்குண்ட வேஷ்டியின் முனையை எடுத்துவிடுவதற்கும் என்றே நிறுத்திவைக்கப்பட்டவன் போல அவ்விரண்டு வேலைகளையும் சிரத்தையுடன் கவனித்தான்....
அமுதா அழைத்துவரப்பட்டாள்... தோழிகள் மற்றும் என் தங்கை புடைசூழ அழைத்துவரப்பட்டு என்னருகே அமரவைக்கப்பட்டாள்... மாலை அணிவிக்கப்பட்டு, தாலியும் கூட தயாராக கண் முன்னால் தேங்காய் மீது ஒய்யாரமாக படுத்திருந்தது....
கனலை தேடினேன்... கையில் அட்சதை தட்டை எடுத்துக்கொண்டு வந்திருந்த வருகையாளர்களிடம் நீட்டிக்கொண்டிருந்தான்....
தாலியை எடுத்து என் கையில் கொடுத்து கட்டசொன்னார் பெரியவர் ஒருவர்.... கனலை தேடினேன்... “கல்யாணத்தை நிறுத்துங்க!” என்று சொல்லி எதாவது நடந்து திருமணம் நிறுத்தப்படாதா? என்று என் மனதிற்குள் தோன்றிய கணப்பொழுது பேராசை எவ்வளவு முட்டாள்த்தனமானது....
“கெட்டிமேளம்.... கெட்டிமேளம்” நாதஸ்வரம் மேளம் முழங்க மூன்று முடிச்சுகள் போட்டதோடு என் வாழ்க்கை வேறு திசையில் பயணித்துவிட்டதாக உணர்ந்தேன்.... கனலை இப்போது காணவில்லை... எங்காவது அமர்ந்து, அழுகிறான் போல!... எனக்கும் அழவேண்டும் போலவே தோன்றுகிறது... ஆனால், என் கண்ணில் கண்ணீர் வருவது பாறைக்குள்ளிருந்து நீரை எடுப்பதை போன்று அவ்வளவு கடினமான காரியம்...
மாலை வரை கனலை என்னால் பார்க்க முடியவில்லை... ஒரு புகைப்படம் எடுக்கக்கூட மேடைக்கு வரவில்லை... அம்மா கூட ஒருமுறை கேட்டார் “எங்கப்பா கனலு?... எல்லா வேலையும் பாத்துட்டு ஒரு போட்டோ எடுக்கக்கூட ஆளைக்காணுமே!” நொந்துகொண்டார்......
திருமணம் முடிந்ததற்கான அடையாளமாக மண்டபம் காலியாகிவிட்டது.... நாற்காலிகளை டெம்போவில் அடுக்கிவைத்துக்கொண்டிருந்த சமயத்தில் நாங்கள் வீட்டிற்கும் சென்றுவிட்டோம்...
திருமணமான பதற்றம், கனலை காணமுடியாத சோகம்... இவற்றை தாண்டி அமுதாவிடமும் திருமணமான முதல்நாளே ஒரு பிரச்சினை...
முந்தையநாள் அழைப்பை எடுக்காததிற்கு சண்டை...
ஒரு மாதம் அவளோடு பேசிய நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒன்றில்கூட எங்கள் இருவருக்கும் பொருத்தமில்லை.... கனல் உடன் “யாழினிக்கு மொட்டை போடும்” அளவிற்கு நான் யோசித்த விஷயங்கள் அனைத்திலும் பெரிதாக எந்த மாற்றுக்கருத்தும் வந்ததில்லை... ஆனால், முகூர்த்தப்புடவை எடுத்தது முதலாகவே அமுதாவுடன் பிரச்சினைகள், கனலிடம் இதுபற்றி எதுவும் சொன்னதில்லை...
“கல்யாணம் முடிஞ்சு நம்ம ரூம்ல நிறைய பேசனும்!” என்றேன் ஒருமுறை...
“எங்க?”
“நம்ம வீட்லதான்...”
“திருச்சிலையா?”
“ஆமா...”
“அய்யய்ய.... அங்கயல்லாம் என்னால ஒன் வீக் கூட இருக்க முடியாது... சென்னைல செட்டில் ஆகிடனும்... உங்களுக்கும் அங்க பிஸ்னஸ் ஏற்பாடு பண்ணிடலாம்...” சர்வசாதாரணமாக சொல்லிவிட்டாள்....
“சென்னையா?... எங்க அம்மா அப்பாவுக்கு அங்கயல்லாம் ஒத்துவராது”
“அவங்களுக்கு ஒத்துவரனும்னு அவசியமே இல்ல... அவங்க திருச்சிலையே இருக்கட்டும், நாமதான் சென்னை போறோம்” இதற்கு பிறகான எங்கள் சண்டைகளை விவரிக்க விரும்பவில்லை...
இப்போதும்கூட துவங்கியுள்ள “போன் அட்டன்ட் பண்ணாத பிரச்சினை”யை நினைத்துக்கொண்டே என் வீட்டின் மொட்டை மாடியில் நின்றேன்....
இந்த நினைவுகளிலிருந்து என்னை மீட்டது கனலின் தொடுதல்தான் என்பதை நான் உணரவே சில நொடிகள் தேவைப்பட்டது....
“ஏய்.... எங்கடா போன?.. ஒரு போட்டோ’க்கு கூட வரல?” கோபித்துக்கொண்டேன்....
“போய்ட்டேன்.... என் வேலை முடிஞ்சாச்சு போய்ட்டேன்... இதுதான் நாம சந்திக்குற கடைசி சந்திப்பா இருக்கட்டும்டா...” கனல் தரையை நோக்கியபடி சொன்னான்...
“ஏய்... ஏன்?... கல்யாணம் ஆனதால...” வழக்கம்போல இப்போதும் என் வாயை பொத்தினான்...
“எந்த விளக்கமும் வேணாம்.... இனி நாம சந்திக்காம இருக்கிறதுதான் நம்ம ரெண்டுபேருக்கும் நல்லது... எதாவது ஒரு சந்தர்ப்பத்துல நம்ம விஷயம் உன் மனைவிக்கோ வீட்டுக்கோ தெரிஞ்சா, எல்லாம் பாழாப்போய்டும்... நான் போறேன், எதையும் போட்டு குழப்பிக்காம அமுதா கூட சந்தோஷமா வாழு!” சொல்லிவிட்டு என் பதிலை கேட்க விரும்பாதவனாக படிகளில் இறங்க ஆயத்தமானான்...
ஏதோ நினைவில் வந்தவனாக மீண்டும் அருகில் வந்து, “என்னிக்காவது உனக்கு பசங்க கூட செக்ஸ் வச்சுக்கனும்னு தோனுனா, என்னை கூப்பிடு... ஏதோ உடம்பு சுகத்துக்காக கூப்பிடுறதா நினைக்காத... வேற யாரையும் நீ அப்ரோச் செஞ்சு, அவங்க மூலமா உனக்கு எதுவும் பிரச்சினை வந்திடக்கூடாதுன்னுதான் இதுவும் கூட” சொல்லிவிட்டு பிளாட்டினம் மோதிரம் ஒன்றை என் விரலில் மாட்டிவிட்டு, தன் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கிருந்து மறைந்தான்...
மோதிரத்தை பார்த்தேன்....
“நம்ம கல்யாணத்துல மோதிரம் மாத்திக்கறதுக்காக என் முதல் சம்பளத்துல உனக்கு பிளாட்டினம் மோதிரம் வாங்கிருக்கேன்... அதை நம்ம கல்யாணத்தப்போ தான் உனக்கு காட்டுவேன்” இந்த மோதிரத்தை பற்றி கடந்த வருடத்தில் ஒருநாள் கனல் சொன்னபோது சிரித்தேன்.... என் மனதிற்குள் நிலைகொள்ளாத மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத்தான் அந்த சிரிப்பு வெளிப்பட்டது...
இப்போது என்னையும் அறியாமல் வெடித்து அழுதேன்.... சத்தம் வராமல் கதறி அழுதேன்... மூச்சு விடக்கூட தடுமாறியபடி தேம்பி அழுதேன்... இனி அழமட்டும்தானே என்னால் முடியும்! (முற்றும்).

22 comments:

  1. It is Really Touched..
    Nisand pinged me saying " Hey Joe! Vicky published a new post Just Check !!! .". I said " yes I will "

    Hmmmm. Its Says Something personally to me..

    Adding weights to my Heart..
    Good Narration !!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி விகாஷ்.....
      உங்களை படிக்க சொன்ன நிஷாந்த்'உம் கூட கருத்திட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...

      Delete
  2. kaadhaliley tholvi utrran kaalai oruvan endra kalyanaparisu climax thaan ninaivukku varugirathu. Oru sridhar padam paarththa effect. oli chitram -----maranthuvitta kettu pala aandugal aana oru vaanoli nigalchiyayi ninaivu baduthi ulleergal..
    viraivil ithan irandaam baagam varum endru thondrugirathu.... amuthavudanaana thirumanavaazhkaiyum yaazhiniyin kaadhu kuththalaum varum endra nambikkaiyodu kaathirikkirom.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான உதாரணங்கள் அண்ணா.... மிக்க மகிழ்ச்சி, நன்றியும் கூட.....
      இக்கதை வெற்றிபெற்றால் நிச்சயம் இரண்டாம் பாகம் கூட வரும் அண்ணா...

      Delete
  3. for the first time sent this story to my ex-guy.

    today old memories were coming into my mind. this story is timely. thanks na.

    as usual, tears :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி.... உன் "முன்னாள்" என்ன சொன்னார்னு சொல்லலையேப்பா?

      Delete
    2. Still he ddidnt see it seems na ! ll definitely let you know !

      Delete
    3. ஹ்ம்ம்.... சரி தம்பி...

      Delete
  4. i have so many questions in my mind. some time can fell better while reading ur articles but some time i could nt realize myself where am i?. Even i dont know weather im straight or gay.???

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.... கட்டுரைகளை படித்தும் உங்கள் குழப்பங்கள் அகலவில்லையா?.... அப்படி என்ன குழப்பம் உங்களுக்கு?... விரைவில் எல்லாம் சுபமாக அமையுமென நம்புகிறேன்...

      Delete
    2. everything cant talk in public?
      even i cant talk with my frds abt these ??

      Delete
  5. படித்து முடித்ததும் மனம் கனக்கிறது ! புதிய படைப்பு ! மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே....

      Delete
  6. i didn't read the whole story. just read the climax, because i know this may happen to me too, i don't have the strength to go through the whole story but i couldn't avoid reading it too. thats why read only the climax. it was very touching.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அசோக்.... முழுக்கதையும் படித்தால், முடிவின் உணர்வுகளை இன்னும் ஆழமாக உணர்ந்திருக்க முடியுமென நினைக்கிறேன்...

      Delete
  7. A typical Vijay Vikki Story (Names : Amutha and Yazhini states tat too). I always decide not to read ur stories; But I en.d up with reading it. And i am really with tears on reading this story. Out of all this is something special to me..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... ஆம், கதாப்பாத்திரங்கள் பெயர் வழக்கமான பெயர்கள்தான்... உங்கள் கண்ணீர் கதைக்கான வெகுமதியாக நினைக்கிறேன், மிக்க நன்றி...

      Delete
  8. Ennoda varunkaalam kan munne theriyiradhu pola irukku indha story! Neenga evlo dhan future pathi yosikaadha nu sonnalum 10% bayam manasla irukka dhan seidhu....
    Kadhai pona nadaiya paathaa azha vekka matinga nu nenachen.... Mmm hmmm....
    Nejamave 100% reality ah mattume solra oru yadharthamana nigalvu....
    Really awesome!! Bt a painful ending... :( :( :(

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete