(கதையில் குறிப்பிட்டுள்ள நபர்கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனையே.... காட்சிகளை ஏதேனும் நடப்பு நிகழ்வுகளுடன் நீங்கள் ஒப்பிட்டுக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பு இல்லிங்கோ...)
“மேகநாடு”
நாசாவின் அதிநவீன செயற்கைகோள்களால் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறு தீவு.. சுற்றிலும்
நீலக்கடல் சூழ்ந்திருக்க, அலைகளை வேலியாக இயற்கையே அரண் அமைத்துக்கொடுத்துள்ள
நாடு... பசுமை பூத்துக்குழுங்கும் தலைநகரின் திரும்பும் பக்கமெல்லாம் மக்கள்
சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்...... நாட்டின் செல்வசெழிப்புக்கு கொஞ்சமும்
பஞ்சமில்லை என்பதை பொதுமக்கள் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் அனிச்சையாக
வெளிப்படுத்தியது... வானுயர நின்ற அரண்மனை கோபுரத்தின் உச்சத்தில் பட்டொளி வீச
பறந்துகொண்டிருந்தது, அந்நாட்டின் சின்னமான புலிக்கொடி... அரண்மனையின் அவையில்
மன்னர் நடுநாயகமாக வீற்றிருக்க, அமைச்சர் பெருமக்களும், தளபதியும் சிறிது
தயக்கத்துடன் அமர்ந்திருந்தனர்...
அந்த
தயக்கத்திற்கு காரணம், மன்னரின் முகத்தில் பளிச்சிட்ட கவலைதான் என்பதை எளிதாக
யூகிக்க முடியும்.... மன்னரின் இருபுறமும் ஆட்டோமேட்டிக் சாமரம் ஜெனரேட்டர்
உதவியுடன் இயங்கிக்கொண்டிருந்தாலும், சாமரம் வீசும் பெண்களும் கடமைக்கென
வெண்சாமரத்தை விசிறியபடி நின்றிருந்தனர் என்றாலும் கூட, மன்னரின் முகத்தில்
வியர்வை முத்துக்களாக அரும்பியிருந்தன....
“தற்போது
என்ன நிலைமை தளபதியாரே?” செருமலுடன்
தொடங்கினார் மன்னர்...
“தாங்கள்
அறியாதது எதுவுமில்லை மன்னா... நமது வீரர்களால் புரட்சிப்படயினரை சமாளிக்க
முடியவில்லை... மன்னராட்சி முறையை ஒழிக்க அவர்கள் தீவிரமாகவே செயல்படுவதாக
தோன்றுகிறது... பொதுமக்களும் ஆங்காங்கே சிவப்புக்கொடிகளை கையிலேந்தி
போராடத்தொடங்கிவிட்டனர்...”
“அதென்ன
சிவப்புக்கொடி? எதிர்ப்பு தெரிவிக்க கருப்புக்கொடி அல்லவா பயன்படுத்துவார்கள்?”
அரசியல் ஆலோசகரை நோக்கினார் மன்னர்...
மன்னருக்கு
வணக்கம் சொன்னபடி தொடங்கினார் ஆலோசகர் “இது சீனதேசத்திலிருந்து நம் மக்கள்
கற்றுக்கொண்ட போராட்ட முறை... கம்யூனிசம் என்று பெயராம்... முதலாளித்துவ
சிந்தனைக்கு எதிரான இயக்கமாம்... சீனாவே இன்றைக்கு கம்யூனிசத்தை மறந்து
வேறுபாதையில் பயணிக்கும் நிலையில், கம்யூனிசம் மட்டும் உயிர்ப்போடு ஆங்காங்கே
இருக்கிறதாம்...” .
“அடக்கொடுமையே...
கடல் கடந்து எப்படி இந்த விஷயங்கள் நம் மக்களுக்கு சென்றது?”
“சீன
நாட்டிலிருந்து மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்ததன் விளைவுதான், இப்படிப்பட்ட
ஆபத்துகளுக்கு வித்து... மகாராணியாருக்கு பதினாறாவது ஆண் குழந்தை பிறந்ததற்காக
நாட்டில் உள்ள எல்லோருக்கும் இலவச மொபைல் போன் கொடுக்கப்போய் இந்த நிலைமை
ஆகிவிட்டது...”
“இலவசம்
என்று சொல்லாதீர் ஆலோசகரே, விலையில்லா அலைபேசி என்று சொல்லும்” மன்னர்
இறுக்கமானார்...
“எப்படி
சொன்னாலும் அதன் விளைவு ஒன்றுதான் மாமன்னரே...”
“சரி,
குற்றங்களை ஆராய்ந்து இனி பயனில்லை... இதற்கான தீர்வைப்பற்றி யோசியுங்கள்...இந்த
ஆபத்துகள் எத்தகைய விளைவுகளை நோக்கி நாட்டை இழுத்துசெல்லும் என்பது நாம்
அறிந்ததே... உடனடியாக இதற்கோர் தீர்வு தேவை... இனி உங்களை நம்பிப்பயனில்லை
என்பதால், நமது தலைமை அமைச்சர் மங்குனியார் நம் தாய்தேசத்துக்கு சென்று,
அங்கிருக்கும் ஒரு மிகச்சிறந்த ராஜதந்திர அரசியல்வாதியை அழைத்துவர
சென்றிருக்கிறார்...” சோமபானத்தை அருந்தியபடி சொல்லிமுடித்தார் மன்னர்...
“வேண்டாம்
மன்னா... ஒரு இறக்குமதியால் நாம் பட்ட துன்பமே நம் தலைக்கு மேல் கத்தியாக
நிற்கிறது, இந்நிலையில் இன்னொரு இறக்குமதி, ஆபத்தை அதிகமாக்கும் என்றே
நினைக்கிறேன்... நமது நாட்டின் சூழல், மக்கள், போராட்டம், கலாச்சாரம் பற்றியல்லாம்
வேற்று நாடுகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...” ஆலோசகர் கடுமையாகவே மன்னரை
எச்சரித்தார்...
“அந்த
சந்தேகம் எனக்கும் இருந்ததுதான்... அதனால்தான் நமது தாய் தேசத்திலிருந்து
ஆலோசனைக்கு ஆள் அழைத்துவர செரிருக்கிறார் மங்குனி... மிகப்பெரிய ராஜதந்திரியான
அந்த நபர், ஒபாமாவின் ஒயிட் ஹவுஸ் சமையலறை வரை சென்றுவரும் அதிகாரம்
படைத்தவராம்... லூனா சாமி என்றால்
வல்லரசு நாடுகளே கதிகலங்குமாம்... நமது
மங்குனி அமைச்சர் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்” மன்னர் வரப்போகும்
புதியவரின் புகழை உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார்...
“எச்சரிப்பது
என் கடமை, செய்துவிட்டேன்... இனி நீங்களாச்சு அந்த லூனா சாமியாச்சு... நான்
விடைபெறுகிறேன் மன்னா...” என்று சிரம் தாழ்த்தி விடைபெற்றவாறு அங்கிருந்து வெளியேறினார்
ஆலோசகர்...
அவர்
வெளியேறிய சில வினாடிகள் அவையில் நிசப்தம் நிலவியது....
“எதற்கெடுத்தாலும்
எதிர்கருத்து பேசுவதால்தான் இவர் இன்னும் ஆலோசகராகவே இருக்கிறார்...” மன்னர்
எரிச்சலுடன் சொன்னார்...
“ஆமாம்
மன்னா... தலைக்கனம் மிக்கவர்” தலைமை அமைச்சர் ஆமோதித்தார்....
“நான்
சொல்லும் எல்லாவற்றுக்கும் இப்படி ஆமாம் போடுவதால்தான் நீர் தலைமை அமைச்சர்
ஆகிவிட்டீர் அமைச்சரே...” மன்னர் சொல்ல, அவை அந்த நகைச்சுவைக்கு சற்று அதிகமாகவே
சிரித்துவைத்தது...
அப்போது
ஓடிவந்த வாயிற்காப்பாளன், “மாமன்னருக்கு வணக்கங்கள்... நமது அமைச்சர் மங்குனியார்
வந்துகொண்டிருக்கிறார்... உடன் தாய்தேசத்து அரசியல் பிரமுகரும்
வந்துகொண்டிருப்பதாக தகவல் சொல்லப்பட்டிருக்கிறது...” சொல்லிமுடித்துவிட்டு
விடைபெற்றுக்கொண்டான்....
உடனடியாக
விருந்தினர்களுக்கு செய்யவேண்டிய நடைமுறை விஷயங்களை செய்யுமாறு மன்னர்
ஆணையிட்டார்... தலைமை அமைச்சர் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அருகே புது
விருந்தினருக்கு ஆசனம் தயார் செய்து, பட்டுத்துணிகளால் அதை அலங்கரிக்க
செய்தார்....
சில
நிமிடங்களில், “ஹலோ ஒபாமாவா?... இன்னிக்கு நான் லஞ்ச் வரலப்பா... மிக்ஸல் கிட்ட
சமைக்க வேண்டாம்னு சொல்லிடு.... ஒரு அர்ஜன்ட் வேலையா கொஞ்சம் வெளில
வந்திருக்கேன்.... அழக்கூடாது, சொன்னா புரிஞ்சுக்கணும்...” அலைபேசியை காதில்
வைத்து பேசியபடியே அரங்கிற்குள் நுழைந்தார் அயல்தேசத்து அரசியல் பிரமுகர்...
மன்னர்
கைகூப்பி வணக்கம் தெரிவிக்க, அதை அலட்சியப்படுத்த்வதைப்போல பதில் வணக்கம்
சொல்லிவிட்டு, இருக்கையில் அமர்ந்துவிட்டார் புதியவர்...
சலனங்களுக்கு
இடம்கொடுக்க விரும்பாத மங்குனியார், பேச்சை தொடங்கினார் “மாமன்னருக்கு
வணக்கங்கள்... இவர்தான் லூனா சாமி.... மிகப்பெரிய அரசியல் சாணி...”
“என்னது?”
லூனா சீறினார்....
“மன்னிக்கவும்
ராஜதந்திரியாரே... அரசியல் ஞானி..” திருத்திக்கொண்டார் மங்குனி...
“சரி
சரி விஷயத்துக்கு வாங்கோ...”
“நாட்டில்
மன்னராட்சிக்கு எதிரான சூழல் உருவாகியுள்ளது... புரட்சிப்படையினரின் தாக்குதல்கள்
ஆங்காங்கே தொடங்கியுள்ளது.... பொதுமக்கள் இடையேயும் ஆட்சிக்கு எதிரான மனநிலை
உருவாகத்தொடங்கி இருக்கிறது... இதுதான் எங்கள் இப்போதைய பிரச்சினை... இதற்கு நாங்கள்
என்ன செய்யவேண்டும்?” மன்னர் கவலைகளை மொத்தமாக கொட்டிவிட்டார்...
“இதெல்லாம்
சப்பை மேட்டர்... விஷயத்துக்கு வர்றதுக்கு முன்ன, உங்க சின்னத்தை முதல்ல
மாத்துங்கோ... எங்கபார்த்தாலும் புலிப்படமா இருக்கு... புலிகள்’னாவே எனக்கு அலர்ஜி”
லூனா அமர்ந்திருந்த ஆசனத்திலும் புலிப்படம் பொறித்திருக்க, முகம் சுளித்தபடி
அதைபார்த்தவாறே சொன்னார்...
“அய்யகோ....
அது எங்கள் குலத்தின் அடையாளமாயிற்றே... சோழ வம்சத்தின் வழித்தோன்றல்கள் நாங்கள்
என்பதற்கான அடையாளம் இப்போதைக்கு இது ஒன்றுமட்டும்தானே?... ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு எங்கள் முன்னோர்கள் சிறைபிடித்த இந்த தீவு மட்டும்தான் எங்களுடைய ஒரே
இருப்பு...”மன்னர் வருத்தத்துடன் விளக்கினார்...
“அதல்லாம்
எனக்கு தெரியாது... புலி எனக்கு பிடிக்காது.... வேணும்னா, கழுதைய சின்னமா வச்சுக்கோங்க...”
“கழுதையா?...”
அவையினர் முகம் எல்லாம் ஒரேநேரத்தில் சுளித்தன....
“ஆமா...
ஒபாமாவோட சின்னம் கூட கழுதைதானே?... அதென்ன தப்பு?... எங்க ஊர்ல கூட கழுதை முகத்த
பார்த்துட்டு போனா நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க... என்னயக்கூட எத்தனையோ பேர்
கழுதைன்னு சொல்வாங்க, எனக்கு அதில பெருமைதான்...”
மங்குனியாரை
தன் அருகில் அழைத்த மன்னர், “என்ன அமைச்சரே இது?... கடல் பிரயாணத்தில் சித்தம்
கலங்கிவிட்டதைப்போல் பேசுகிறார்... அநேகமாக இன்றைக்கு பலிபீடத்திற்கு இரண்டு
தலைகள் காணிக்கையாகப்போகிறது என்று நினைக்கிறேன்...” கிசுகிசுத்தார்...
மங்குனியார்
முகமெல்லாம் வியர்த்துவிட்டது...
“லூனா
சாமி அவர்களே, சின்னத்தை பற்றி பிறகொரு சமயத்தில் பேசலாம்... பிரச்சினையை தீர்க்க
வழிசொல்லுங்கள்...”
“ஹ்ம்ம்...
சொல்றேன்...மக்களுக்குள்ள எதாச்சும் பிரச்சினைய கிளப்பி விடுங்கோ, உங்க பிரச்சினைய
மறந்திடுவாங்க...” லூனா தொடங்கினார்...
“கொஞ்சம்
தெளிவாக சொல்லுங்கள் ராஜதந்திரியாரே!” மன்னர் கூர்ந்து கவனிக்க தொடங்கினார்...
“பெரும்பான்மையா
இருக்குறவங்களோட உணர்வுகள கொளுத்திவிடுங்க, சிறுபான்மையினர் உரிமையை பறியுங்க...
அவங்களுக்குள்ள ஒரு வெறுப்பை உண்டாக்குங்க.... அந்த பிரச்சினைய தீர்க்கவே
அவங்களுக்கு நேரம் பத்தாது.... ரொம்ப எளிதா உங்கள பற்றி மறந்திடுவாங்க... ஊருசனம்
ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு கேள்விப்பட்டதில்லையா?”
“அது
கூத்தாடிக்கு தானே கொண்டாட்டம்?” தலைமை அமைச்சர் குறுக்கிட்டார்....
“அரசியல்னு
வந்துட்டா நாம எல்லோரும் கூத்தாடிகள்தான்... இந்த வருஷ சிறந்த நடிகருக்கான விருது
கூட எனக்கு கொடுக்க போறாங்கன்னா, எங்க ஊர்ல நான் எவ்ளோ நடிக்கிறேன்னு
பார்த்துக்கோங்க...” பெருமையில் முகம் சிவக்க சொல்லிமுடித்தார் லூனா....
“அது
இருக்கட்டும் லூனா சாமி.... நீங்கள் சொல்வதைப்போல எங்கள் நாட்டில் மதச்சண்டை,
சாதிக்கலவரம், வகுப்பு வாத பிரச்சினைகள் எதுவும் எழ சாத்தியமே இல்லையே?...
எல்லோரும் அண்ணன் தம்பிகளாக பழகுகிறார்கள், அப்படி இருக்கையில் பிரிவினை
உண்டாக்குவது சாத்தியமில்லையே?” மன்னர் ஆழமாக யோசித்தபடி சொன்னார்....
“பிரிவினைன்னா
சாதி மதம் மட்டும்தானா?... இன்னும் எவ்வளவோ இருக்கே.... எங்க நாட்டில் இப்போ
பாலீர்ப்பு தொடர்பா கூட அரசியல் பண்ணிட்டு இருக்கோம்.... அதைவச்சுக்கூட நீங்க ட்ரை
பண்ணுங்கோ...”
“அப்படியா?...
அதிலென்ன பிரச்சினை?”
“சட்டப்படி
எங்க ஊரில் ஓரினச்சேர்க்கை குற்றம்... அதைவைத்து ஒருபால் ஈர்ப்பு நபர்களை சமூக
குற்றவாளியாக்கி, அதில் அரசியல் செய்றோம்... எங்கள் மக்களும் ஆட்சியை
விமர்சிப்பதைவிட, அடுத்தவர்களின் படுக்கையை எட்டிப்பார்ப்பதை சுவாரஸ்யமாக
நினைக்கிறாங்க... ஹ ஹ ஹா...”
“இதென்ன
முட்டாள்த்தனமான சட்டம்?... பாலீர்ப்பு என்பது மக்களின் அடிப்படை உரிமை இல்லையா?”
மன்னர் அதிர்ந்து கேட்டார்...
“அப்போ
குடியாட்சி கூட மக்களின் அடிப்படை உரிமைதான், குடுத்திடுங்கோ... எங்க ஊர்ல ஒரு
தத்துவவாதி சொல்லிருக்கார், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னு...”
“அப்படியா?...
யார் அந்த நாலு பேர்?”
“நான்,
என் மனைவி, என் இரண்டு பிள்ளைகள்... அதுபோல நீங்களும் உங்க குடும்பம் நல்லா
இருக்கணும்னு நினச்சா, அடுத்தவங்க உரிமை பற்றி பேசுறத விடுங்க...” வரிக்கு வரி
இடைவெளி கூட விடாமல் சொல்லிமுடித்த லூனா சாமியை அவையே ஆச்சர்யத்தில்
பார்த்துக்கொண்டிருந்தது...
“சரி...
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” மன்னர் அடிபணிந்துவிட்டார்...
“ஓரினச்சேர்க்கை
குற்றம்னு சொல்லுங்கோ... ஒருபால் ஈர்ப்பு நபர்களை கைது செஞ்சு சிறையில் அடையுங்கோ...
அதை எதிர்த்து போராடினா, அவங்க மேலயும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கோ... நிச்சயம்
மக்களுக்குள் குழப்பம் உண்டாகிடும்...”
“ஓஹோ...
அதற்கு முதலில் நாங்கள் என்ன செய்யவேண்டும்?” கையில் குறிப்பேட்டுடன் தலைமை
அமைச்சர் கவனிக்க ஆயத்தமானார்...
“ஓரினச்சேர்க்கை
ஒழிப்புத்துறைனு ஒரு துறை ஆரமிங்கோ... அந்த துறைக்கு ஒரு அமைச்சர், ரெண்டு இணை
அமைச்சர் அது இதுன்னு படம் காட்டுங்கோ... அந்த துறையின் கீழ்தான் ஒருபால் ஈர்ப்பு
நபர்கள் கண்டறியப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவார்கள்னு அறிவியுங்கோ...”
“மன்னர்
மன்னா... அந்த இலாகாவை எனக்கே ஒதுக்கவேண்டும்” மன்னரின் காதருகே சொல்லியபடி, தலையை
சொறிந்தார் மங்குனி...
சற்று
கோபத்துடன் மன்குனியை நோக்கிய மன்னர், “இருக்கும் துறையை முதலில் ஒழுங்காக
கவனியும் மன்குனியாரே....” லூனாவை பார்த்த், “நீங்கள் மேற்கொண்டு சொல்லுங்கள்
அய்யா” என்றார்...
“மாவட்ட
வாரியாக, தொகுதி வாரியாக, கிராமத்து வாரியாகன்னு அந்த துறை ரொம்ப வேகமா
செயல்படனும்... தெருக்கு தெரு ஓரினச்சேர்க்கை தடுப்புப்படைனு ஒரு காவல் துறை
தொடங்கப்படனும்... ஒருபால் ஈர்ப்பு நபர்களை கண்டுபிடிச்சு ஜெயில்ல போடுறது அவங்க
வேலைதான்... மீடியா எல்லாம் அதைப்பற்றியே பேசுறது மாதிரி செஞ்சிடுங்க...” லூனா
பட்டியலிட்டார்...
“எனக்கு
ஒரு சந்தேகம் எழுகிறது லூனா அவர்களே.... உடலுறவு என்பது இரண்டு தனிநபர்கள்
சம்மந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயம்... அதில் ஈடுபடுபவர்களை நாம் எப்படி
கண்டுபிடிக்க முடியும்?.. கண்டுபிடித்தால்தானே தண்டனை கொடுக்க முடியும்!” மன்னர்
குழப்பத்துட கேள்வியை முவைத்தார்...
“இதென்ன
பிரமாதம்?... அதல்லாம் எளிதா கண்டுபிடிக்கலாம்... ஒவ்வொரு வீட்டு படுக்கை
அறையிலும் வெப் கேமரா பொருத்தப்படனும்... 24*7 அந்த காட்சிகளை அந்த தெருவில் இருக்கும் கண்காணிப்பகம் நேரடியா
கவனிச்சுகிட்டே இருக்கும்... யாராவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் உடனே
ஓரினச்சேர்க்கை தடுப்புப்படை அங்கு விரைந்து, கையும் களவுமா பிடிக்கும்...”
“மன்னா...
எனக்கு இலாகவால்லாம் கூட வேணாம்... அந்த தெருவில் இருக்கும் கண்காணிப்பகத்தில் ஒரு
வேலை போட்டு தாருங்கள், என் பிறவிப்பயன் நிறைவேறிவிடும்..” மங்குனி மீண்டும் தலையை
சொறிந்தார்....
“மங்குனியாரே...
இதுவே உமக்கு கடைசி எச்சரிக்கை... அடுத்தமுறை இப்படி எதாவது கேட்டால், சொறிவதற்கு
உமக்கு தலை இருக்காது... நானே படுக்கை அறையில் கேமரா வைக்க சொல்கிறாரே, அது
தனிநபர் சுந்தந்திரத்தை பரிப்பதைப்போல் ஆகிவிடாதா? என்று கவலையோடு இருக்கிறேன்...
இந்த சமயத்தில் நீ வேறு...” மன்னர் நெற்றியில் கைவைத்தபடி யோசித்தார்...
“வேண்டாம்
மன்னா... இதை அந்த லூனாவிடம் சொல்லாதீர்கள்... அப்புறம் நாலு பேரு நல்லா இருந்தா
இதுவும் தப்பில்லைன்னு தொடங்கிவிடுவார்... இனி நானும் கூட படுக்கையை சமையலறை
பக்கம் மாற்றவேண்டும் போல...” மங்குனியார் தன் கவலையை நொந்துகொண்டார்....
“லூனா
அவர்களே... உடலுறவு படுக்கையறையில் மட்டும்தான் நடக்கவேண்டும் என்கிற அவசியம்
இல்லையே?... பலநேரங்களில் சமையலறை, குளியலறை என்றல்லாம் கூட நடக்கலாம் அல்லவா?...
அப்போது எப்படி கண்டுபிடிப்பீர்கள்?” லூனாவை குறுக்கிட்டு கேள்விக்கேட்டதன்
பெருமிதம் மன்னரின் குரலில் தெரிந்தது...
சிரிப்புடன்
பதிலை தொடங்கினார் லூனா, “ஹ ஹா... இதெல்லாம் ஒரு விஷயமா?... அதுக்கு ஒரு சிப்
மேட்டர் இருக்கு...”
“சிப்பா?..
சோமபானத்துடன் காரத்திற்காக சாப்பிடுவோமே நொறுவல் அதுவா?” மங்குனியார்
குறுக்கிட்டார்...
“இல்ல
இல்ல... நீங்க சொல்றது சிப்ஸ்... நான் சொல்றது சிப்... கம்ப்யூட்டர்
சம்மந்தப்பட்டது... அந்த சிப்பை உங்கள் நாட்டு குடிமக்கள் எல்லோருடைய
பாலுறுப்பிலும் பொருத்திடனும்... அந்த சிப் ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பு...
ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணையும்போது அந்த சிப்பில் பச்சை லைட் எரியும்...
அப்டின்னா, அந்த உறவு அனுமதிக்கப்பட்ட உறவுன்னு அர்த்தம்... அதேநேரத்தில்
ஆணுறுப்பும் ஆணுறுப்பும் ஒன்னு சேர்ந்தா, அதில் சிவப்பு விளக்கு எரியும்... உடனே
அந்த தெருவில் இருக்கும் கண்கானிப்பகத்துக்கு அந்த சிப்புக்கு உரியவர் பற்றிய முழு
விபரங்களும் போய் சேர்ந்துடும்... உடனே நம்ம கண்காணிப்பகம், ஓரினச்சேர்க்கை
தடுப்புப்படைக்கு தகவல் சொல்லி, பத்து நிமிஷத்துல ரெண்டு நபர்களையும் கைது
பண்ணிடுவாங்க... இதே மாதிரி
பெண்ணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணையும்போதும் நடக்கும்... இதிலிருந்து யாரும் பெரும்பாலும்
தப்பிச்சிட முடியாது....” லூனாசாமியின் வார்த்தைகளில் அப்படியே ஸ்தம்பித்து
நின்றது அவை....
“உலகில்
இவ்வளவு வேலைவெட்டி இல்லாதவர்கள் இருக்கிறார்களா அமைச்சரே?” மங்குனியாரிடம்
கேட்டார் மன்னர்...
“யாரை
சொல்கிறீர்கள் மன்னா?... இது எல்லாவற்றையும் சொல்லும் லூனாவையா? கேட்கும்
நம்மையா?”
“இந்த
சிப்பை பற்றி யோசித்து கண்டுபிடித்தவர்களை பற்றி சொல்கிறேன்... இன்னும் குடிநீர்
பஞ்சத்தை தீர்க்க ஒருத்தனும் எதையும் கண்டுபிடிக்கவில்லை... இவர்களோ, இதற்கெல்லாம்
ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்...”
“இதையும்
மீறி தவறு நடக்காது என்று உறுதியாக சொல்லமுடியுமா லூனா அவர்களே?” தலைமை அமைச்சர்
வினவினார்....
“இன்னொரு
ஐடியாவும் இருக்கு, அதையும் செய்தால் முழுமையா இதை நாம தடுக்கலாம்... வயதிற்கு
வந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரும்பு ஜட்டி அணிவித்துவிட வேண்டும்...
இயற்கை உபாதைகளுக்கு மட்டும் மெல்லிய துவாரங்கள் அமைந்த ஜட்டி அது... அதை
எல்லோருக்கும் மாட்டிவிட்டு, திண்டுக்கல் பூட்டை வச்சு இறுக்கமா பூட்டிவிடனும்...
திருமணமாகும்வரை அந்த பூட்டிற்கான சாவியல்லாம் அரசின் கீழ் இருக்கும்... ஒரு
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணமான மறுநிமிடம், கணவனுடைய சாவியை மனைவிக்கும்,
மனைவியுடைய சாவியை கணவனுக்கும் மட்டும் கொடுக்கணும்... அதாவது தங்கள்
வாழ்க்கைத்துனைவர் விரும்பினால் மட்டுமே, அந்த ஜட்டியை கழற்ற முடியும்...
இதைத்தாண்டி தவறு நடக்க வாய்ப்பே இல்ல பாருங்கோ...” லூனாசாமி அதறிபுதறியாக
யோசனைகளால் அவையை துவம்சம் செய்தார்....
“மன்னர்
மன்னா... தங்களுக்கு பூட்டப்படும் பூட்டின் சாவியை அந்தப்புரத்திலிருக்கும்
பதினேழு பெண்களுக்கும் கொடுக்கவேண்டுமோ?” சொல்லிவிட்டு, மங்குனி தனது தலையை
பத்திரமாக பிடித்துக்கொண்டார்....
மன்னர்
அதற்கு பதிலெதுவும் சொல்லவில்லை, அவருக்கும் அதே குழப்பம் இருந்திருக்குமோ
என்னவோ...
“இவ்வளவையும்
எங்கள் மக்களுக்கு எப்படி புரியவைப்பது லூனாசாமி அவர்களே?... புரியவைத்து
விழிப்புணர்வு கொடுத்தால்தானே இந்த சட்டமும் திட்டமும் வெற்றிபெறும்?” மன்னர்
இறுதிகட்ட கேள்விக்கு வந்துவிட்டார்...
“இந்த
லூனா ஒருவிஷயத்துல இறங்கிட்டா, அதுக்கான முழு தீர்வும் கண்டிப்பா வச்சிருப்பான்...
விழிப்புணர்வு பிரச்சாரமல்லாம் ரொம்ப எளிது.... உங்க நாட்டு நடிகர்களை வச்சு, டிவி
சீரியல்களுக்கு இடையில விழிப்புணர்வு கொடுத்தா மேட்டர் ஓவர்... காசு மட்டும்
கொடுத்தா காக்காவைக்கூட மயில்னு சொல்லி மார்கெட்டிங் பண்ணித்தருவாங்க சில
நடிகர்கள்...”
“ஓஹோ....
ஆனால், உங்கள் நாட்டில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான மனநிலை கொண்ட நடிகர்களை வைத்து
விளம்பரம் செய்துவிடுவீர்கள்... எங்கள் நாட்டில் அந்த மனநிலை இல்லையே, பிறகெப்படி
அவர்கள் கொள்கைக்கு முரணான ஒரு விளம்பரத்தில் நடிப்பார்கள்?” மன்னர் குழப்பத்துடன்
வினவினார்....
“நாசமாப்போச்சு....
கொள்கையாவது, குரட்டையாவ்து... ஒரு குளிர்பானத்தை குடிக்கக்கூடாதுன்னு வசனம் பேசுற
அதே ஹீரோதான், எங்க ஊர்ல அதே குளிர்பானத்துக்கு விளம்பரமும் பண்றார்... உங்க
ஊர்லயும் அதல்லாம் கொஞ்சநாளில் பழகிடும்... எல்லா சந்தேகமும் தீர்ந்துச்சா?”
பெருமூச்சு விட்டபடி சோமபானத்தை அருந்தினார் லூனா சாமி...
“எல்லாம்
சுபமாய் தீர்ந்தது லூனா அவர்களே.... மிக்க நன்றி... ஓரினச்சேர்க்கை ஒழிப்பு சட்டம்
பற்றி மக்கள் முன்னிலையில் நாளையே அறிவிப்பு செய்கிறேன்... இன்று இரவு எங்கள்
விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, நாளைக்கு நடக்க இருக்கும் அந்த
அறிவிப்பு நிகழ்விலும் கலந்துகொண்ட பிறகே தாங்கள் விடைபெறவேண்டும்... இது
மேகநாட்டின் சார்பாக தங்களுக்கு விடுக்கப்படும் அன்புக்கட்டளை...” மன்னர் கைகூப்பி நன்றி தெரிவித்தார்....
**************
மக்கள்
திரள் கூடியிருந்தது.... மன்னர் மாடத்தில் போடப்பட்டிருந்த ஆசனத்தில்
அமர்ந்திருந்தார், அருகில் தலைமை அமைச்சரும், லூனாவும் அமர்ந்திருந்தனர்... மன்னர்
ஏதோ புதிய அறிவிப்பை அறிவிக்கப்போவதாக மக்கள் ஆர்வமாக காத்திருந்தனர்... மக்கள்
கூட்டத்திற்குள் சில கலவரக்காரர்களும், மன்னரின் வார்த்தைக்காக காத்திருந்தனர்...
“இரவில்
நன்றாக ஓய்வெடுத்தீர்களா லூனா அவர்களே?” மன்னர் நலம் விசாரித்தார்...
“எங்க
ஓய்வெடுக்க விட்டாங்க... கேமரூன் போன் பண்ணி அவங்க நாட்டு பிரச்சினைக்கு தீர்வு
கேட்டு ஒரே தொல்லை... தூங்கவே விடல...” சலித்துக்கொண்டார் லூனா...
“ஒரு
ரகசியம் சொல்லட்டுமா லூனா?”
“சொல்லுங்கோ”
“எங்கள்
நாட்டில் செல்போன் டவரே கிடையாது... எனக்கு மகன் பிறந்ததற்காக எல்லோருக்கும்
விலையில்லா அலைபேசி கொடுத்தேனே தவிர, இன்னும் டவர் அமைக்கவில்லை... குழந்தைகளுக்கு
விளையாட்டுப்பொருளாக மட்டுமே இங்கே அலைபேசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன...
ஒபாமா மட்டுமல்ல, ஒசாமாவே நினைத்தாலும் இங்கே யாருக்கும் தொடர்புகொள்ள
முடியாது...” காதருகே கிசுகிசுத்தார் மன்னர்...
வெளிறிய
முகத்தோடு பேய் அறைந்ததை போல அமர்ந்திருந்தார் லூனா...
தொடர்ந்த
மன்னர், “ஏன் டவர் அமைக்கவில்லை தெரியுமா?... டவர் அமைத்தால் சிட்டுக்குருவிகளை
போன்ற சிறு உயிரினங்கள் அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறதாம்... சரி, நான் அறிவிப்பை
மக்கள் முன் அறிவிக்கிறேன்...” சொல்லிவிட்டு எழுந்து நின்று, மக்களின் முன்
வணக்கம் சொன்னபடி தொடங்கினார் மன்னர்..
“மேகநாட்டு
எனதருமை குடிமக்களே... நமது நாட்டில் ஆட்சிக்கு எதிராக போராட்ட இயக்கங்கள்
மக்களிடம் போராட்டத்தை தூண்டி வருகிறார்கள்... எந்த பிரச்சினையையும் தீர்க்கும் பொறுப்பு ஒரு மன்னனுக்கு உண்டு...
போராட்ட இயக்கங்கள், கிளர்ச்சி அமைப்புகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைக்கு
அழைப்புவிடுக்கிறேன்... உங்களின் பிரச்சினைகளை நான் நேரடியாக கேட்டு , அதற்கான
தீர்வை முன்வைக்க விழைகிறேன்...” மன்னரின் சமாதான பேச்சுவார்த்தை அறிவிப்பை கேட்ட
மக்கள் ஆரவாரம் செய்து கைதட்டினர்... அந்த ஓசை அடங்க சில நிமிடங்கள் ஆனது...
மேலும்
தொடர்ந்த மன்னர், “நமது பிரச்சினையை முன்வைத்து சில குள்ளநரிகள் நமக்குள்
பிரிவினையை ஏற்படுத்த முயன்றார்கள்... பாலீர்ப்பு தொடர்பான பிரிவினையை ஒருநாளும்
மேகநாடு அனுமதிக்காது... எதிர்பால் ஈர்ப்பு திருமணங்கள் போல, இனி ஒருபால் ஈர்ப்பு
திருமணங்களுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் நம் நாட்டில் வழங்கப்படும்... நாட்டில்
பிரிவினையை ஏற்படுத்த முயன்ற லூனாசாமி மற்றும் அமைச்சர் மங்குனி இருவரையும்
நாடுகடத்த உடனே நமது வீரர்களுக்கு ஆணை இடுகிறேன்....” மீண்டும் கரவொலி விண்ணை
பிளந்தது....
“மானன்னர்
வீர பராக்கிரமன் வாழ்க!... மேகநாட்டு வேந்தே வாழ்க!” வாழ்த்து கோஷம் வையகம்
அதிர்ந்தது...
அதிர்ச்சியில்
உறைந்திருந்த லூனா தன்னிலை மீள்வதற்கு முன்பே குண்டுக்கட்டாக தூக்கி மரக்கலத்தில்
வைக்கப்பட்டார், சற்றும் தாமதிக்காமல் உடனே படகு செலுத்தப்பட்டதை மன்னர்
புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்...
இதை
எல்லாவற்றையும் கவனித்த ஆலோசகர், “மன்னிக்கவும் மன்னா... நான்கூட தங்களை தவறாக
நினைத்துவிட்டேன்... சிட்டுக்குருவிகளுக்கு கூட தீங்கு நினைக்காத நீங்கள், நமது
நாட்டு மக்களுக்கு தீங்கு நினைக்கமாட்டீர்கள் என்பதைகூட நான் யோசிக்கவில்லை...”
கைகூப்பி மன்னிப்பை கேட்டார்...
“அந்த
லூனா சொன்னபிறகுதான் உலகம் ஒருபால் ஈர்ப்பினர் மீது எந்த அளவிற்கு வெறுப்புணர்வு
கொண்டிருக்கிறது? என்பது எனக்கே புரிந்தது... நாமும் கூட அவர்களுக்கு இன்னும்
திருமண அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பதும் உறைத்தது... நம்மை அறியாமல் நாமே அந்த
சமூகத்தின் மீது பாரபட்ச மனப்போக்கை வைத்திருந்த குற்ற உணர்வே அப்போதுதான்
எழுந்தது... அதனால்தான் இந்த அவசர அறிவிப்பும் கூட...”
“சுயநலத்தோடு
சிந்தித்து, மக்கள் நலத்தை நீங்கள் மறந்துவிடுவீர்கள் என்று நினைத்துவிட்டேன்
மன்னா... நானே உங்கள் நிலையில் இருந்தாலும் உங்க அளவிற்கு பொதுநலத்தோடு
சிந்தித்திருப்பேனா? என்பது சந்தேகமே...” நெகிழ்ந்தார் ஆலோசகர்...
“நமது
நாட்டின் முதல் ஒருபால் ஈர்ப்பு திருமணத்திற்கான அறிவிப்பை உடனே அறிவியுங்கள்
ஆலோசகரே.... முதல் மணமகனே எனது மூத்த மகனும், நாட்டின் பட்டத்து இளவரசனுமான விஜயன்தான்....
எல்லா பொதுநலத்திலும் ஒரு சுயநலமும் இருக்கத்தான் செய்யும் ஆலோசகரே...” மன்னர்
சிரித்தார்... ஆலோசகரும் எல்லாம் புரிந்தது போல மனமுருக மகிழ்ச்சியடைந்தார்... (முற்றும்)
Cha ipdi unmayave namma natula oru law pass aana super ah irukum... waiting for that day....
ReplyDeleteஓரளவு மேற்குலக நாடுகள் இந்த அளவிற்கு விழிப்புணர்வோட இருக்காங்க தம்பி...
Deletemega naatukku visa eppadi apply pannanum sollunga?. naan anga kudipuga aasaipaduren. suna cha luna saamigalum cellphonum illatha oru naatukku poi vaazha aasai padugiren .
ReplyDeleteAAnalum antha loona saamikku thakka thandanai vazhangi anuppiirukkanum. Avanukku Kudhabagam endra thandanai koduththu anuppi irukkanum. ( kudhabagam enbadhu luna saamiyin vattakudhaathi punnakki kizhiththu nayya pudaippathu)
ஹ ஹா... இந்த நாடு கடத்தலே அந்த லூனாவுக்கு போதும் அண்ணா.... இனி திருந்துவார்னு நம்புவோம்...
Deletefunny story... nice one
ReplyDeleteBut may be you would know that iron briefs with locks was in practice in various civilization, but still being reported, happening in some remote villages in India in recent days. That ritual is called "Tara" which will be done to women when husband goes out of town or even if they doubt her having affair. There are some evidences that women will die because of infection etc because of that iron locked briefs. Hope this kind of brutal acts will be crushed with iron hand by law.
ReplyDeleteகருத்துகளுக்கு நன்றி நண்பா... இரும்பு ஆடை விஷயம் முன்னொரு காலத்தில் வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்ததாக படித்திருக்கிறேன்... ஆனால், இந்தியாவில் இருக்கிறதா?... ஆச்சர்யமாக இருக்குப்பா....
Deleteஅந்த முத திருமணத்துக்கு.. லூனாவையும் அட்சதை போட வச்சிட்டு.. அப்புறமா நாடு கடத்தியிருக்கலாம்.. :D
ReplyDelete