ஞாயிற்றுக்கிழமை
காலை என்பது தெளிந்த நீரோடை போல, தொந்தரவில்லாத உறக்கத்தை தந்திடும் ஒரு பொழுது...
பெரும்பாலும் அப்படி ரசித்து உறங்கும் நான், நாளைய இயக்குனரில் கீர்த்தியின்
குரலைக்கேட்டுதான் எழுவேன்... இன்றைக்கு அறை நண்பனும் ஊருக்கு சென்றுவிட்டதால், தொலைக்காட்சியும்
கூட கண்ணயர்ந்துதான் கிடக்கிறது... ஆப்ரிக்க காடுகளுக்குள் நானும் ரன்பீர் கபூரும்
தனியே மாட்டிக்கொண்டதாக கனவு, கடும் குளிரை சமாளிக்க என்ன செய்வதென்று இருவரும்
தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம்... வழக்கம்போல அடுத்த காட்சி ‘அதுதான்!’
நடக்கும் என எதிர்பார்த்து காத்துக்கிடந்த நேரத்தில், வீட்டின் அழைப்பு மணி
வில்லனாக ஒலித்து கனவை கலைத்தது... எனக்கு உண்டான எரிச்சலின் அளவை வெப்ப சக்தியாக
மாற்ற முடியுமானால், சென்னை கொழுந்துவிட்டு எரிந்திருக்கும்... நல்லவேளையாக
அப்படியோர் சூப்பர் பவர் என்னிடம் இல்லாததால், தமிழகத்தின் தலைநகரம் தப்பித்தது...
கண்களை கசக்கிக்கொண்டு உடைகளை சரிபடுத்தியவாறே படுக்கையை விட்டு எழுவதற்குள்,
ஆறாவது முறை அழைப்பு மணி அடித்துவிட்டது... “எந்த அவசரத்துக்கு பொறந்தவன் இது!”
பொங்கிய கோபத்தை எச்சிலோடு சேர்த்து துப்பிவிட்டு, கதவை திறக்க போகும்போது
மறக்காமல் தலையை வாரிவிட்டு, முகத்தையும் துடைத்துக்கொண்டேன்....
கதவை
திறந்தேன்... ஒரு இளைஞன் முகத்தில் புன்னகையோடு கையை நீட்டியபடி, “ஹாய்...”
என்றான்...
நானும்
பதிலுக்கு கையை கொடுத்துவிட்டு, கதவை முழுக்க திறந்து, அந்த இளைஞனை உள்ளே
அழைத்தேன்... வெகு இயல்பாக வீட்டிற்குள் நுழைந்து, பலநாள் பழகிய நண்பனை போல
இருக்கையிலும் அமர்ந்துவிட்டான்...
“உக்காருங்க
விஜய்...” என் பெயரல்லாம் கூட தெரிந்திருக்கிறது... என் வீட்டிற்கே வந்து என்னை
அமரச்சொல்லும் அளவிற்கு பரிச்சயமான நபரா? நான்தான் மறந்துவிட்டேனோ?... மனத்திரையில்
வந்திருப்பவனின் முகத்தை ஓடவிட்டு, அந்த முகத்திற்கான பெயரை தேடினேன்... ஊஹூம்...
புலப்படவில்லை... ஆனாலும், எங்கோ பார்த்து, சில நாட்கள் பழகிய முகம் போலவே
தோன்றுகிறது....
“அட!
ஏன்தான் நின்னுட்டே யோசிக்கிறீங்க, சும்மா உட்காருங்க” என் கையை பிடித்து அருகிலிருந்த
இருக்கையில் அமரவைத்துவிட்டான்... அரைத்தூக்கத்திலிருந்து ஒருவனை எழுப்பி
இப்படியல்லாம் குழப்புறானே!... யாரென கேட்கவும் மனம் தயங்குது, கேட்காமல்
விட்டாலும் மனம் குழம்புகிறது...
“ஏன்
விஜய் உங்க கதைய படிச்ச வாசகர் மாதிரி குழப்பமா இருக்கீங்க?” குழப்பத்தின் அளவினை
உச்சத்திற்கே கொண்டுசென்றுவிட்டான்....
“தப்பா
நினச்சுக்காதிங்க... நீங்க யாருன்னு எனக்கு ஞாபகம் இல்ல...” ஒருவழியாக
கேட்டுவிட்டேன்...
“ஹ ஹா....
ஒரே ராத்திரில என்னைய மறந்தாச்சா?... பெத்த அம்மாவுக்கு பிள்ளை மறக்குமா?”
ஒருமுடிவோடுதான் வந்திருக்கிறான்... அம்மா, பிள்ளைங்குறான்... ஒருவேளை சொத்துல
பங்கும் கேட்பானோ?..
“நான்
எப்பங்க பிள்ளை பெத்தேன்?... கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க...” கொஞ்சம்
கடுமையாகவே கேட்டேன்...
“ஓகே
ஓகே... கூல்.... என் பெயரை சொல்றேன், உங்களால கெஸ் பண்ண முடியுதான்னு பாருங்க...”
“ஹ்ம்ம்...
என்னத்தையாவது முதல்ல சொல்லுங்க...”
“என்
பேரு அமானுஷ்யன்...”
“அமா...
நுஷ்யன்.....” பெயரை மீண்டும் ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்... இது விலையில்லா இன்பம் கதையில நான் உருவாக்கிய கதாப்பாத்திரத்தோட பெயராச்சே?... எவனோ
என்னிடம் விளையாடுகிறான்...
“யோவ்...
என்ன விளையாடுறியா?... முதல்ல எந்திரி?... காலங்காத்தால வந்து, அமானுஷ்யனாம்...
வெளில போய்யா” காலை முதல் உண்டான அத்தனை எரிச்சலையும் வார்த்தைகளாக
வெளிவிட்டேன்...
“ஹலோ
விஜய்... ஏன் இவ்ளோ டென்ஷன்?... முதல்ல தண்ணிய குடிங்க, அமைதியா உக்காருங்க...”
என் கையில் தண்ணீர் பாட்டிலை திணித்தான்... அதை பொருட்படுத்தாமல் இன்னும்
கோபப்பார்வையை அவன் மீது பாய்ச்சிக்கொண்டுதான் இருந்தேன்...
“என்ன
நம்பலைல்ல?... இதோ என்னோட வோட்டர் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், இயக்குனர் சங்கத்தோட ஐடி
கார்டு எல்லாம் பாருங்க... என் போட்டோ, அதில என் பேரு அமானுஷ்யன்.... புரியுதா?”
ஒவ்வொரு ஆதாரமாக என் கைகளுக்குள் திணித்தான்... ஆச்சர்யத்தோடு அவற்றை பார்த்த
எனக்கு, இன்னும் அவன் ஏமாற்றுவதாக எண்ணம்தான் மேலோங்கி இருந்தது...
அத்தனை
அட்டைகளையும் மீண்டும் அவன் கையிலேயே கொடுத்துவிட்டு, “இதல்லாம் நாங்க சிவாஜி
படத்துலேயே பார்த்துட்டோம், நீ கிளம்பு.... காசு கொடுத்தா மோடி பேரை போட்டே எனக்கு
ஐடி கார்டு போலியா தயார் பண்ணமுடியும்... ஆனாலும் ஒரு சந்தேகம்தான், என்னைய ஏமாத்த
ஏன் இவ்வளவு மெனக்கடுற? இவ்வளவு செலவு பண்ணிருக்க?” சந்தேகத்தை கேட்டேன்...
“இன்னும்
சந்தேகம் போகலைல்ல?... அதோ அந்த விகடன்ல முப்பத்தி ஆறாவது பக்கத்த பாருங்க
விஜய்...” நேற்று இரவு நான் படித்த விகடன்தான், இந்த நபர் சொல்லும் அந்த
பக்கத்தில் தமயந்தியின் சிறுகதை படித்ததாக ஞாபகம்... இவன் பொய்தான் சொல்கிறான்,
ஆனாலும் அதை தீர்க்கமாக சொல்கிறான்... இந்த விகடன் மூலமாவது அவன் சொல்லும் பொய்யை
நிரூபித்து, வீட்டை விட்டு வெளியேற்றனும்...
விகடனை
எடுத்தேன்... பக்கங்கள் பரபரப்பாக புரண்டன.... 34…
35…. வந்துவிட்டது 36… முந்தைய நாள் இரவு நான்
புரட்டும்போது காணப்படாத பக்கம் அது... “அதீதம்.... சொல்வது என்ன? – இயக்குனர்
அமானுஷ்யன்” என்ற தலைப்பில் நாகப்பன் எடுத்திருக்கும் நேர்காணல்... கூடவே இன்னொரு
அதிர்ச்சியாக என் கண் முன்னே அமர்ந்திருக்கும் அதே இளைஞனின் புகைப்படம்,
அரைப்பக்கத்திற்கு அமானுஷ்யன் என்னும் பெயரோடு அச்சாகியுள்ளது...
“இன்னும்
நம்பலைன்னா.. இந்த ஒரு வாரத்து நியூஸ் பேப்பர்ல அதீதம் படத்தோட விளம்பரம் பாரு!”
நாளிதழ்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினான்....
தடுமாற்றத்தோடு
அந்த நாளிதழ்கள் ஒவ்வொன்றையும் விரிக்க, அத்தனையிலும் “அதீதம் – சூப்பர் ஹிட்”,
“வெற்றிகரமாக ஐம்பதாவது நாள்”, “வசூலில் சாதனை!” என்று விளம்பரங்கள்... ஹீரோ
அபிமன்யூ என ஒரு அழகான இளைஞனின் புகைப்படம் வேறு அத்தனை விளம்பரத்திலும்....
என்
தலை சில நிமிடங்கள் சுற்றியது... அவசரமாக தண்ணீரை எடுத்து வாயில் கவிழ்த்தேன்...
சிதறி தெறித்தது போக கொஞ்சம் தண்ணீரும் தொண்டையை நனைத்தது... என்னால் எதையும்
யோசிக்கமுடியவில்லை.... நான் கற்பனையாக உருவாக்கிய கதாப்பாத்திரம், என் கண்
முன்னே... தண்ணீர் ஊற்றிய ஆடைகள் முழுக்க உடலை சில்லிட வைத்தது, அப்படியானால் இது
கனவும் கூட இல்லை...
என்
அதிர்ச்சிக்கு மேல் இன்னொரு அதிர்ச்சியாக, “அமானுஷ்யன் கதைப்படி
இறந்திருக்கனுமே?!” என்ற குழப்பமும் குடிகொண்டது...
“ஒன்னும்
டென்ஷன் வேணாம் விஜய்.... நான்தான் அமானுஷ்யன், நீங்க உருவாக்குன
கதாப்பாத்திரம்... நீங்களே ஒருகதைல சொன்னது போல, நம்பமுடியாத விஷயங்கள் உலகத்துல
நிறைய இருக்கு விஜய்... அது தானா நடக்கும்போது நாம நம்பித்தான் ஆகணும்... உங்க கூட
நிறைய பேசனும், டிரெஸ் மாத்திட்டு வாங்க... நம்ம கார்ல போகலாம்...” சொல்லிவிட்டு
அவன்பாட்டுக்கு தொலைக்காட்சியை போட்டான்... நாளைய இயக்குனரில் கீர்த்தியின்
குரலுக்கு இடையில் வந்த விளம்பரத்திலும் “அதீதம்.... சூப்பர் டூப்பர் ஹிட்”
விளம்பரம் ஒளித்தது...
இனி
குழம்பியும், பயந்தும் அர்த்தமில்லை.... எழுந்து அறைக்குள் சென்று உடைகளை
மாற்றிவிட்டு அமானுஷ்யனுடன் காரில் கிளம்பினேன்....
விலையுயர்ந்த
வெளிநாட்டு ரக கார்... பின்சீட்டில் சில “அதீதம் வெற்றிவிழா” அழைப்பிதழ்கள்
சிதறிக்கிடந்தது... பயணத்தின் தொடக்க நிமிடங்கள் இருவரும் எதுவும்
பேசிக்கொள்ளவில்லை, இன்னும் அதிர்ச்சியிலிருந்து நான் மீளவில்லை என்பதுதான் அதற்கு
காரணம்... எங்கள் இருவர் மௌனத்தின் வெற்றிடத்தை, எப்.எம் தன் பாடல்கள் வழியே
நிரப்பிக்கொண்டிருந்தது...
“இப்போ
நேரம் சரியா பன்னிரண்டு மணி, நாலு நிமிஷம்... நீங்க கேட்டுட்டு இருக்கது சூரியன்
எப்.எம்’இன் 93.5… இப்போ அடுத்ததா
சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் அதீதம் படத்தோட செம்ம
பீட் பாட்டு வரப்போகுது... கேளுங்க... கேளுங்க... கேட்டுகிட்டே இருங்க....”
இடைவெளி விடாமல் சொல்லிமுடித்த பண்பலை தொகுப்பாளர் தனது பங்கிற்கு சிறப்பாகவே
குழப்பத்தை அதிகப்படுத்தினார்....
எதுகை
மோனையோடு, சாரியை சந்தி விகாரம் கூட பிறழாமல் வைரமுத்துவின் வரிகள்...
“நல்ல
பாட்டுல்ல?.... யூடியூப்’ல வைரல் கலக்கிக்கிட்டு இருக்கு...”
“ஹ்ம்ம்...”
சத்தம் கூட வராமல் தலையசைத்தேன்....
“இப்போ
என்ன கதை எழுதிட்டு இருக்கீங்க?”
“ஒரு
லவ் ஸ்டோரி தான்...”
“அதிலயாவது
ஹீரோவ கொல்லாம விட்டிங்களா?... ஹ ஹ ஹா...” செயற்கையாக சிரித்தான்...
நான்
மௌனமாகவே இருந்தேன்... காரணம், எழுதிக்கொண்டிருக்கும் கதையில் கூட க்ளைமாக்ஸ் ஒரு
இறப்புதான்...
கார்
சரியாக ஒரு திரையரங்கத்தை கடந்து போக, அங்கே ஓடியதோ அதீதம் திரைப்படம்தான்... மதிய
காட்சிக்கு டிக்கெட் வாங்க, திரையரங்க வாசல் வரை கூட்டம் நிரம்பி வழிந்தது....
இதையல்லாம் விட போதாக்குறைக்கு அரங்கத்தின் வாயிலில் பிரம்மாண்ட “அபி” கட்டவுட்...
அதற்கு ஆளுயர மாலை வேறு... அநேகமாக பால் அபிஷேகமல்லாம் பண்ணியிருக்கக்கூடும்,
பாலின் திட்டுகள் அந்த கட்டவுட் விளிம்பில் வலிந்துகொண்டிருக்கிறது.....
“நம்ம
அபிக்கு இப்போ தமிழ்நாடு முழுக்க ரசிகர் மன்றங்கள் வந்தாச்சு... கூடிய சீக்கிரம்
அரசியல் பிரவேசம் நடந்தா கூட ஆச்சரியப்பட வேண்டாம்... ஒரே படத்துல இவ்ளோ ரீச்
யாருமே எதிர்பார்க்காதது...” அமானுஷ்யனின் தொனியில் ஒருவித பெருமையும்
கலந்திருந்தது.... என்னிடம் அவன் அதற்கான எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை,
எதிர்பார்த்திருந்தாலும் சொல்வதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை....
“இப்போ
என் படம் ‘உறைபனி’ ரிலீஸ் ஆகிருந்தா, அபியை யாராலையும் அசைக்க முடிஞ்சிருக்காது...
தேசிய விருது கூட கிடைச்சிருக்கும்... ப்ரிவியூவ் ஷோ முடியுறதுக்குள்ளயே என்னை
நீங்க முடிச்சுட்டதால, படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும்” அமானுஷ்யன் இப்படி
சொல்லும்போது, அதுவரை அவன் முகத்தில் படர்ந்திருந்த இயல்புத்தன்மையை
சோகத்திரை மறைத்திருந்தது...
ஆனாலும்
அந்த மாற்றத்தை கவனிக்காததை போல, எனது பார்வையை இடப்பக்கமாக திருப்பி சாலையில்
படரவிட்டேன்... அதை எதேச்சையான நிகழ்வாக அவன் நினைத்திருந்தாலும், எனக்குள் எழுந்த
குற்ற உணர்ச்சியின் விளைவு என்பதுதான் உண்மை.. அப்போதுதான் அந்த டீக்கடை வாசலை
கவனித்தேன்.... நாளிதழ்களின் விளம்பரங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தது....
அதில், “இயக்குனர் அமானுஷ்யன் மரணம்... மௌலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்த
பரிதாபம்!” கொட்டை எழுத்தில் விற்பனைக்காக காத்திருந்தன....
நான்
அந்த நாளிதழ்களை கவனித்ததை அவனும் கவனித்திருக்கக்கூடும்... என்னை பார்த்து ஒரு
அருவருப்பான முகசுளிப்பை உதிர்த்துவிட்டு, பச்சை விளக்கு சிக்னலினால் வாகனத்தை
விரைவாக செலுத்தினான்...
முன்பைவிட
கார் கொஞ்சம் அதிவேகமாக பயணிப்பதாய் தோன்றியது... முன்பிருந்த இயல்புத்தன்மை கூட
அவன் முகத்தில் காணப்படவில்லை.... சிறுபிள்ளைகள் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை போல
காரை வலமும் இடமுமாக அதிவேகமாக திருப்பியபடி ஓட்டினான்... எனக்கு முதன்முதலாக
உயிர்மீது அப்போதுதான் பயம் வந்தது....
அவசரமாக
சீட் பெல்ட்டை அணிந்தேன்... அதைப்பார்த்த அமானுஷ்யன், “விஜய்க்கு உயிர்மேல அவ்ளோ
பயம் போல?... சீட் பெல்ட் போட்டும் கூட எத்தனையோ விபத்துல பலபேர் இறந்திருக்காங்க
தெரியுமா?ஹ ஹ ஹா..” ஆக்ரோஷமாக சிரித்தான்... அந்த சிரிப்பில் தெரிந்த வன்மம் என்னை
கலவரத்திற்கு உள்ளாக்கியது...
“ஆமா...
எனக்கு ஒரு சந்தேகம் விஜய்....”
“என்ன?”
எச்சிலை விழுங்கிவிட்டு அவனை பார்த்தேன்....
“அது
ஏன் என்னைய மௌலிவாக்கம் விபத்துல க்ளோஸ் பண்ணின?” மெல்ல பேச்சு ஒருமையில் மாறியதை
கவனித்தேன்....
பதில்
சொல்லவில்லை... ஆனால், அவனும் விடுவதாக இல்லை...
“பரவால்ல
சொல்லு, நான் எதுவும் நினைச்சிக்க மாட்டேன்...”
“ஒரு
ரியாலிட்டி’க்காக... அப்போதான் எதார்த்தமா இருக்கும்னு....” தயங்கியபடி சொல்லி
இழுத்தேன்....
“ஹ ஹ
ஹா.... ரியாலிட்டி.... எதார்த்தம்.... ஹ ஹ ஹா...” சொல்லிக்கொண்டே சடாரென்று காரை
வலது பக்கம் ஒடிக்க, அங்கே சென்ற லாரியில் மோதுவதைப்போல சென்று, மயிரிழையில் ஒரு
பெரிய விபத்திலிருந்து தப்பித்ததை போல கார், ‘வீச்’ என்ற சத்தத்தோடு சாலையின்
ஓரத்தில் நின்றது... கண்கள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல், நான் உயிருடன்
இருக்கிறேனா? ஒருமுறை சோதித்துக்கொண்டேன்....
ஆழமாக
ஒரு பெருமூச்சு... இன்னும் சாகவில்லை...
“பயந்துட்டியா
விஜய்?... இப்போ நம்ம கார் கூட லாரில மோதிருந்தா அதுவும் எவ்ளோ ரியாலிட்டியா
இருந்திருக்கும்ல?”
அமானுஷ்யன்
ஏதோ முடிவோடுதான் வந்திருக்கிறான்... ஒரு சைக்கோவுடன் மாட்டிக்கொன்டதை போல
உணர்ந்தேன்... என் பயத்தை அவன் கொஞ்சம் கொஞ்சமாக ரசிப்பதாக தோன்றியது.... என்ன
தோன்றியும் இனி ஒன்றும் பயனில்லை, நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்....
“என்னடா
ஒரு சைக்கோ கிட்ட மாட்டிகிட்டோம்’னு நினைக்கிற தானே?” நான் நினைத்ததை அப்படியே
சொல்லிவிட்டான்.... எப்படி கண்டுபிடித்தான்?... மாய மந்திரங்கள் தெரிந்தவனாக
இருக்குமோ?...
“ரொம்ப
லாஜிக் பார்க்காத விஜய்... இவ்ளோ நேரம் நடந்த விஷயங்களையே நம்புறப்போ, நீ நினைச்சத
கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா?” கேள்வியும் அவனே, பதிலும் அவனே....
“இப்போ
என்னதான் உங்களுக்கு வேணும்?... ப்ளீஸ், சொல்லுங்க!” முதல்முறையாக வாயை திறந்து
கேட்டேன், என் கண்களில் பயத்தினால் அரும்பிய நீரை அவன் கவனிக்காமல் இல்லை....
“ஒன்னும்
வேணாம்... இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஒரு வீட்டுக்கு போறோம், அதுவரைக்கும் எதுவும்
கேட்காம வந்தின்னா போதும்!” சொல்லிவிட்டு இயல்பாக காரை கிளப்பினான்...
அந்த
இடைப்பட்ட சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை... அந்த கால இடைவெளி
அமானுஷ்யனின் கோபத்தைக்கூட கூட குறைத்திருப்பதாக தோன்றியது....
சரியாக
ஐந்து நிமிடங்களில் கார் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை அடைந்தது...
அந்த
குடியிருப்பின் வாசலில் நாங்கள் வந்த கார் நிற்பதையோ, அதிலிருந்து நாங்கள் இறங்கி
மாடிப்படிகளை நோக்கி நடப்பதையோ எவரும் கவனித்ததாக தெரியவில்லை... சிறுவர்கள்
கிரிக்கெட் விளையாண்டுகொண்டிருந்தனர்... மட்டையின் வேகத்தால் அடிக்கப்பட்ட பந்து
அமானுஷ்யனை நோக்கி பாய, அவன் தலை பதம் பார்க்கப்பட்டிருக்கும் என்று பார்த்துக்கொண்டிருந்த
எனக்கு பேரதிர்ச்சி.... ஆம், அந்த பந்து அவன் தலைக்குள் ஊடுருவி, மறுமுனையில்
வெளியேறி கீழே விழுந்தது... அமானுஷ்யன் எதையும் பொருட்படுத்தாதவனாக மாடிப்படிகளில்
ஏறத்தொடங்கினான்.... சில வினாடிகள் அதிர்ச்சி என்னை நிலைகுழைய வைத்துவிட்டது,
தடுமாற்றத்தில் அங்கேயே நின்றதை கவனித்த அமானுஷ்யன், “வா விஜய், மாடிலதான் இருக்கு
வீடு” என்று அழைக்கும்போதுதான் சகஜநிலைக்கு திரும்பினேன்....
எவ்வித
எதிர்வினையையும் காட்டாமல், மாடிப்படிகளில் ஏறினேன்....
கதவு
திறந்திருந்த ஒரு வீட்டிற்குள் பழக்கப்பட்டவனை போல நுழைந்தான்... நானும்
தயங்கியபடியே உள்ளே நுழைந்தேன்... ஹாலில் நான்கைந்து நபர்கள் பரபரப்பாக
“மௌலிவாக்கம் விபத்து” பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்... என் பின்னால் வந்த இரண்டு
நபர்கள், கையோடு கொண்டுவந்திருந்த மாலையை ஒரு புகைப்படத்திற்கு
போட்டுக்கொண்டிருப்பதை கவனித்தேன்... முன்னேறி சென்று, அந்த புகைப்படத்தை
கவனித்தேன்... அது அமானுஷ்யனின் படமேதான்... அப்படியானால், இது அபியும்,
அமானுஷ்யனும் தங்கியிருக்கும் வீடு... இவ்வளவு நேரமும் நான் அங்கு நிற்பதை எவரும்
கவனிக்கவில்லை, கற்பனை உலகத்தில் எனக்கு இடமில்லை என்பது புரிந்தது... அப்படியானால்
அபி எங்கே? யோசித்தபடியே கண்களை அலைபாயவிட்டேன்....
“விஜய்...
இங்க வா...” ஒரு அறையின் வாயிலில் நின்று அமானுஷ்யன் அழைத்தான்... சற்றும்
யோசிக்காமல் அறைக்குள் சென்றேன்....
அங்கு
அபிதான் இருக்கிறான்... ஆனால், என் வர்ணிப்புகள் பொய்யாகி போகும் அளவிற்கு ஆளே உருமாறி
இருக்கிறான்... இரவு முழுக்க அழுத கண்கள், சிவந்தும் சுருங்கியும் காணப்பட்டது...
கண்ணிற்கு கீழே கருவளையம் அவ்வளவு வேகமாக அவனை அணுகியிருந்தது... முகம் முழுக்க
கண்ணீரின் தடயங்கள், பிசுபிசுப்பான படலமாக சருமத்தில் படர்ந்திருந்தது....
“அபியை
இப்டி பாக்கத்தானே ஆசைப்பட்ட?... நல்லா பாத்துக்கோ...” அமானுஷ்யன் வார்த்தைகளில் கோபம்
அப்பட்டமாக தெரிந்தது... திரும்பி அவனை நோக்கினேன், மெலிதாக அவன் கண்களிலிருந்து
நீரும் அரும்பியிருந்தது...
நான்
மௌனத்தை தொடர்ந்து கடைபிடித்தேன்....
“எல்லா
ப்ராப்லமும் முடிஞ்சதும், சந்தோஷமா இருக்கலாம்னு எவ்ளோ கனவுகள் தெரியுமா?...
அத்தனை கனவுகளுக்கும் ஒரே வரில முடிவுரை எழுதிட்ட...”
“நான்
வேணும்னா அடுத்த பாகத்துல அபி மறுபடியும் உயிரோட வர்றது மாதிரி எழுதிடறேன்... கதைல
இதல்லாம் சகஜம்தான் அமானுஷ்யன்” சமாதான உடன்படிக்கையை தொடங்கினேன்....
“ஹ ஹ
ஹா.... கதை எழுதுறதால உனக்கு கடவுள்னு நினைப்பா?, நினச்ச நேரத்துல கொன்னு,
பிரச்சினை வந்தா மறுபடியும் உயிரூட்ட?” அவன் சிரிப்பு எனக்கும் மரண பயத்தை
ஏற்படுத்தியது....
“கதையோட
சுவாரசியத்துக்காக எழுதினேன், அது இவ்ளோ பெரிய எதிர்வினையை உண்டாக்கும்னு சத்தியமா
எதிர்பார்க்கல...”
“சாவுல
என்னடா சுவாரசியம்?... சரி, உன் வழிலையே நானும் வரேன்.... இந்த கதையோட முடிவும்
சுவாரசியமா இருக்க, நானும் ஒரு கொலை பண்ணலாம்னு இருக்கேன்” என்று கூறியவாறே என்னை
நெருங்கினான்.... என்னால் நகரமுடியவில்லை, கால்கள் தரையோடு பிணைக்கப்பட்டதை போல
உணர்ந்தேன்.... கத்தினேன், ஓலக்குரல் எழுப்பினேன்... எவரிடமும் சிறு சலனமும்
இல்லை, அமானுஷ்யன் என்னை நெருங்கிவிட்டான்.... கழுத்தை நோக்கி வந்த அவன் கை,
நரம்புகள் புடைத்து ஆக்ரோஷமாக காணப்பட்டது... கழுத்தை சுவற்றோடு அழுத்தி, இன்னும்
வேகமாக நெருக்கினான்... மூச்சு முட்டியது, இருமல் நில்லாமல் தொடர்ந்தது.... சில
நொடிகளில் மூர்ச்சையாகிப்போனேன்....
சட்டென
கண் விழித்தேன்... என் வீட்டு ஹாலின் தரையில் கசங்கிய கோலத்தில் கிடந்தேன்... உடல்
முழுக்க வியர்வை நனைத்திருந்தது.... இதுவரை நடந்ததல்லாம் கனவா?... அமானுஷ்யன்
வந்தது கூட கற்பனையா?....
பயம்
அகன்று, குழப்பம் ஆட்கொண்டது... கழுத்து வலியால் தலையை நிமிரக்கூட முடியவில்லை...
மெல்ல எழுந்து சென்று, கண்ணாடியை பார்த்தேன்... கழுத்தை சுற்றி சிவந்திருந்தது,
விரல்கள் அழுத்தியதின் விளைவுதான்.... அப்படியானால், நடந்தவை உண்மைதானா?...
அலைபேசி
அழைத்தது....
அழைப்பில்
நண்பர் அவிட்....
“ஹலோ
அவிட்... ஒரு முக்கியமான விஷயம்....” என்று நடந்த நிகழ்வு முழுவதையும்,
ஒன்றுவிடாமல் வரிசையாக சொன்னேன் “என்னை அந்த அமானுஷ்யன் கழுத்தை நெறிச்சு கொல்ல
பார்த்தான்... எவ்வளவோ கத்தியும் என்னை ஆக்ரோஷமா நெறிச்சான்... மயக்கமே வந்திடுச்சு”
...
“கண்
முழிச்சு பார்த்தா வீட்ல இருந்திருப்பியே?” சரியாக சொன்னான்... அமானுஷ்யனை போல
இவனுக்கும் ஏதேனும் மாய வித்தைகள் தெரிந்திருக்குமோ? என்ற ஆச்சர்யத்தில்
மூழ்கினேன்....
“ஆமா...
ரொம்ப சரி... எப்டி கண்டுபிடிச்ச?”
“பழைய
க்ளைமாக்ஸ்தான் விஜய்... உன் ஒருசில கதைகள்ல கூட வந்த முடிவுதான், ஆனாலும்
வாசகர்கள் விரும்புவாங்க... நல்ல கதைதான், எழுதுப்பா...”
“அடப்பாவி....
இது கதையில்ல நிஜம்... நான் சொல்றதல்லாம் உண்மை... என்னைய நம்பு...”
“என்ன
வரிசையா டிவி ஷோ பேரா சொல்ற?... இந்த கதைக்கு தலைப்பா?”
“ஐயோ
சாமி... சத்தியமா சொல்றேன், இதல்லாம் நிஜமாவே நடந்துச்சு... எனக்கு என்ன
பண்றதுன்னே புரியல, பயமா இருக்கு...” அவரிடம் இதற்கு மேல் எப்படி சொல்லி
புரியவைப்பது? என்று புரியவில்லை...
“சரி...
சரி... நம்புறேன்... இது ஏதோ கெட்ட சக்தியோட வேலையா இருக்கும்.... அனேகமா உன்னை
பிடிக்காதவங்க யாராச்சும் செய்வினை வச்சிருப்பாங்களோ?... ஆனா நீதான் நாத்திகன்
ஆச்சே, இதல்லாம் நம்பமாட்டியே?”
“பேயை
கண்ணால பார்த்த பின்னாடி, ஆத்திகனாவது, நாத்திகனாவது.... இதுக்கு என்ன பண்ணா
சரியாகும்?....”
“சில
பரிகாரங்கள் பண்ணனும்... நான் ஏழு வருஷமா, நாலாயிரம் செய்வினை வச்சவங்ககிட்ட பண்ண
ரிசர்ச் படி சொல்லவா?”
“என்னத்தையோ
வச்சு முதல்ல சொல்லு....”
“மும்பை
மாடல் எவனையாவது வச்சு ஒரு நிர்வாண பூஜை பண்ணினா சரியாகிடும்....”
“என்ன
சரியாகும்?... உன்னோட பல வருட ஆசைதானே?... உன்ட்ட கேட்டது மகா தப்பு.... இனிமேலும்
எதாச்சும் சொன்னின்னா, உன்ன வச்சு நரபலி பூஜை பண்ணிடுவேன்... போனை முதல்ல வை”
கோபமாக அழைப்பை துண்டித்தேன்....
என்ன
செய்வதென்று புரியவில்லை... நடந்தவை நிஜமா?... கற்பனை என்றால், உடலில் ஏற்பட்டுள்ள
மாற்றங்கள் எப்படி?... இனி யோசித்தும் பயனில்லை, குழப்பங்கள் தீரப்போவதில்லை....
எதாவது கோவிலுக்கு சென்று முதலில் பூஜை பண்ணனும்....
அவசரமாக
எழுந்து, குளியலறைக்குள் நுழையும்போது, சரியாக அழைப்பு மணி அடித்தது... மீண்டும்
பயம் என்னை தொற்றியது...
பயந்து
பயனில்லை... ஆறாவது அழைப்பு மணி அடித்தபோது, கதவை திறந்தேன்....
அப்பாடா!...
அமானுஷ்யன் இல்லை... நின்ற வாலிபன் வாட்டசாட்டமாக இருந்தான்... மெல்லிய சிரிப்போடு
அவன் பார்த்த பார்வை, குழப்பம் மறந்து ரசிக்க வைத்தது...
மெலிதாக
தன் மீசையை வருடியவாறே, என்னை நோக்கி கை நீட்டி, “ஹாய் விஜய், எப்டி இருக்கீங்க?”
என்றான்...
அவசரமாக
கையை கொடுக்காமல், “நீங்க அமானுஷ்யன் இல்லையே?” என்றேன்...
அந்த
கேள்வி அவனை குழப்பியிருக்கக்கூடும்... முகத்தை சுளித்து யோசித்தபடியே,
“இல்லையே.... யார் அந்த ஆமானுஷ்யன்?” என்றான்...
“என்னை
மறந்துட்டிங்களா?... நான்தான் அருண், சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலிஸ்...”
“அருண்?...
எந்த அருண்?... யார்னு தெரியல சார்...” தயங்கினாலும், தடுமாற்றத்தோடு நேரடியாகவே
கேட்டேன்...
“உங்க
கள்வனின் காதலன் கதையோட ஹீரோ.... க்ளைமாக்ஸ்’ல கூட என்னைய கொன்னிடுவீங்களே?...”
சொல்லிக்கொண்டே அவனுடைய ஐடி கார்டு, வோட்டர் ஐடி என்று என் கையில்
அடுக்கத்தொடங்கினான்... (முற்றும்)
(கதையினை படித்த
அன்பர்கள், தங்களின் கருத்துகளை பின்னூட்டமாக வலைப்பதிவிலேயே இடுமாறு அன்போடு
கேட்டுக்கொள்ளப்படுகிறது)
நல்ல கதை .......நல்லா சிரிச்சேன் .......ஆனா ஒரு விஷயம் உறுதி ஆகிடுச்சு அது என்ன நா.....உங்க கதைகளுல கதபடிரங்களை நீங்க கொலை சையும் பொது நா செம்மத்யியா உங்கள திட்டி இருக்கேன் .....ஆனா இந்த கதைலே இருந்து பார்த்தா உங்கள பல பேறு திட்டி இருபங்க போல இருக்கே ........
ReplyDeleteநன்றி நண்பா... திட்டுகளை ஒருங்கிணைத்துதான் இந்த கதை எழுதப்பட்டதுப்பா...
Deleteஇது நிஜமாவே ஸ்டோரி தானா ? இல்ல உண்மையா நடந்ததா ? செம்ம திரிலிங் அண்ணா ! Good ஸ்டோரி ! GOOD IMAGINATION அண்ணா !!
ReplyDeleteநன்றி தம்பி... இது நிச்சயம் கற்பனைதான்.. உண்மையா நடந்திருந்தா, இன்னேரம் எழுத நான் இருந்திருக்க மாட்டேன்பா...
Deletekollapatta kathapaathirangal, kolai veriyodu alaivathai paarthaal,neengal kalyaanam seithu vaiththa antha raaji, matrum ena palarum vanthu ubgalai kelvi kettpaargal.
ReplyDeletekolayum tharkolayum nam samoogathin mudivalla endru palvidangalil pathivau seitha enakku , naan kadhai ezhuthiyabothu( orkut valai thalathil) kondra antha moondru per ithey pola vanthu ennai baymuruthuvaargalo endru achcham thondrugirathu. antha alavukku thathroobhamai irunthathau intha kadhai.
இவ்வளவு போதாதா அண்ணே?... இன்னும் கதாபாத்திரங்கள் துரத்துற அளவுக்கு எழுதிட்டேனா?.... ஹ ஹா... இனி கொஞ்சு சுதாரிச்சு முடிவை வைப்போம் அண்ணே...கருத்துகளுக்கு நன்றி...
DeleteWooooooow!! semaya iruku na..... so ella characters um unga mela kola veri la suthudhu pola........:-):-)
ReplyDeleteExcellent......!! I really like it..........
நன்றி தம்பி... ஆமாம்பா, கொலைவெறி தலைக்கேறி சுத்துறாங்க, அவங்களுக்கான படையல்தான் இந்த கதை..
Deletekathai sooper............ semaya irruku aduthu enna nadakum nu therinjuka aravamaa oduchu nan enge irrukenu theriyatha alavuku super ah irrunthathu..........
ReplyDeleteithula namba friend Avidyum ulla konduvatathu soper.............
nanga ovovru story mudivulayum sonatha antha kathaioda character en nerla vanthu sonathu mathiri eluthinathu nalla irruku............
thigil kathai maathiri (Rajeshkumar kathi maathiri) romba thril ahh irrunthathu..........
ரொம்ப நன்றி நண்பா....
Deleteஇது கற்பனையா அல்லது உங்களை அச்சுருத்திய கனவுகளா அல்லது நிஜ நிகழ்வுகளா??? அதுவும் அவிட் உடன் பேசிமுடித்ததும் மற்றொரு ஆவி உங்களை நோக்கி வந்த நிகழ்வோடு கதை முடிந்ததால் இவ்வளவு கேள்விகள்... நான் தலைப்பை படித்தவுடன் நேற்றய செய்தித்தாளில் படித்த ஓரினசேர்க்கையால் நடந்த மாணவர் எட்டாம் வகுப்பு மாணவனின் கொலை பற்றிய விழிப்புணர்வு செய்தி என்று எண்ணிவிட்டேன்..
ReplyDeleteஅவசர கால உதவி எண்கள் - பயனுள்ள ஒன்று...
ஒரு ஊர்ல ஒரு ராஜா - அபாராமான கற்பனை..
அந்த மூன்று நாட்கள் - நம்மவர்களால் நினைக்க முடியாத கற்பனை..
கொஞ்சம் வேலையாக இருந்ததால் இப்போதுதான் மொத்தமாக படித்து முடித்தேன்...
ஆனால் யார் ஆவியாக வந்தாலும் உங்களுக்கு உதவி செய்யத்தான் வருவார்களே தவிர உபத்திரவம் செய்ய வரமாட்டார்கள்... ஏனென்றால் நம்மவர்களுக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளும் விழிப்புணர்வும் அபராமானவை....
கருத்துகளுக்கு மிக்க நன்றி சக்தி.... கற்பனை மட்டுமே, கவலை வேண்டாம்... ஆவியாக வந்தாலும், அவங்களையும் ஒரு பேட்டி எடுத்து, பதிவாக்கிடமாட்டேனா?... அதுவும் வரட்டும், பார்த்துக்கலாம் சகோ...
Deleteநம்மை நாமே வெறுக்கிறோமா - சுயபரிசோதனை செய்து பார்க்க உதவிய நல்ல முயற்சி
ReplyDeleteஒரே பக்கத்தில் எல்லா கட்டுரைக்குமான கருத்தை பதிவு செய்தமைக்கு மன்னிக்கவும்
ReplyDeleteLOL!! :D
ReplyDeleteரசிச்சி சிரிச்சி படிச்சேன்.. அவிட்டின் மும்பை மாடல் நிர்வாண பூஜை ஐடியா.. is hilarious.. RFOL... :DDDDD
ரொம்ப நன்றி அண்ணாச்சி...
Deleteகதையில் உங்களையும் கொண்டுவரலாம்னு நினச்சேன்... ஆனால் எப்பப்பார்த்தாலும் உங்களையே வம்பிழுக்குறது வேண்டாம்னுதான் விட்டாச்சு....
Super :) Inimel unga kathaila yarayavathu sgadipeenga ?? :D
ReplyDelete