Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 28 December 2014

2014 முதல் 2015வரை - ஒரு அதிர்ச்சியான "377" பயணம்...



                                
                          

“2014” பாலீர்ப்பு சிறுபான்மையினர் வரலாற்றில் இதையும் ஒரு சாதாரண ஆண்டாக கருதி கடந்துவிடமுடியாது... 2009ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் “மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாலும், குறிப்பிட்ட சிலரின் மீது மட்டும் பாரபட்சமான தண்டனை வழங்கப்படுவதாலும் சட்டப்பிரிவு 377இல் திருத்தம் கொண்டுவரவேண்டும்!” என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது... அடுத்த நான்கே ஆண்டுகளில், அதாவது கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், “ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமே... இயற்கைக்கு முரணான அந்த செயலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக, ஆயுள்தண்டனை கொடுக்கப்படலாம்” என்கிற தீர்ப்பை அளித்து, நம்மையெல்லாம் கால எந்திரமே இல்லாமல் ‘காலனிய ஆட்சி காலத்து’க்கு கொண்டுசேர்த்தது உச்சநீதிமன்றம்......

இந்த தீர்ப்பு வெளியாகி சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது... இந்த ஒரு வருடம் (2014) கண்டிப்பாக இந்திய ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினர் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய அளவிற்கு முக்கியத்துவமான ஆண்டு... அந்த அளவிற்கு தீர்ப்பு வெளியாகி, நம்மை அரசு மீண்டும் குற்றவாளிகளாக அறிவித்தபிறகு நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு அசாதாரணமானது... பெரிய அளவில் விளக்கவேண்டாம் என்றாலும், ஒரு சிறு உதாரணத்தை சொல்லலாம்... இப்போதல்லாம் நாம் ஒருபால் ஈர்ப்பை பற்றி புரியவைக்க பக்கம் பக்கமாக விளக்க வேண்டாத அளவிற்கு, ஒரு குறிப்பிட்ட எண் மட்டுமே ஆயிரம் பக்கத்து விளக்கத்தை கொடுத்துவிடும்... அந்த மந்திர எண் “377”. எந்த எண், நமது உரிமைகளை பறிக்க அடையாளக்குறியீடாக இந்த சட்டத்தினால் அடையாளப்படுத்தப்பட்டதோ, அதே எண் இன்றைக்கு போராட்ட வடிவத்தின் ஒரு அங்கமாக மாறிய நிகழ்வு ஒரு வரலாற்று வெற்றிதான்..

இத்தகைய விழிப்புணர்வு அடைவதற்கான காரணகர்த்தாவாக தனிப்பட்ட நபர் எவரையும் குறிப்பிட முடியாது என்றாலும், இந்த ஓராண்டு காலமும் ஓய்வில்லாது உழைத்த பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று எல்லோருடைய ஒன்றுபட்ட ஒருங்கிணைவு மட்டுமே இதை சாத்தியப்படுத்தி உள்ளது... 

அதேநேரத்தில் இவ்வளவு பிரச்சாரங்களும், சட்டம் பற்றிய விழிப்புணர்வும் ஒருவித எதிர்வினையை இந்த சமூகத்தில் உண்டாக்கி இருப்பதையும் நாம் மறுக்கமுடியாது... அந்த எதிர்வினைகள் பற்றியும், அதனை எந்த விதத்தில் களைவது என்பது பற்றியும் இனி பார்க்கலாம்...

“377” பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கண்டிப்பாக சமூக தளத்தில் பாலீர்ப்பு சிறுபான்மையினர் உரிமைகள் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, எனினும் இதே விஷயம் பாலீர்ப்பு சிறுபான்மையினரை மிரட்டி ஒடுக்கும் அச்சுறுத்தல் மிக்க ஆயுதமாகவும் உருமாறியுள்ளது... 

மதுரையை சேர்ந்த நண்பர் ஒருவர் தன்னை முழுமையாக வீட்டில் வெளிப்படுத்திக்கொண்டவர்... தன் பாலீர்ப்பை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தி, புரியவைத்து ஒருவழியாக அவர்களை ஏற்கவைத்த சமயத்தில்தான் கடந்த வருடத்தில் தீர்ப்பு வெளியானது... ஓரினச்சேர்க்கை ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் கருதும்போது, ‘தங்கள் மகன் சிறையில் இருக்கவேண்டிய சூழல் உருவாகுமோ?’ என்கிற அச்சத்தில், இப்போது மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க நிர்பந்திக்க தொடங்கிவிட்டார்கள்...

சென்னையை சேர்ந்த இன்னொரு நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்... தீர்ப்பிற்கு பிறகு, குடும்ப நிர்பந்தத்தால், இப்போது வேறு நாட்டிற்கு தஞ்சம் புக தயார் ஆகிவருகிறார்....

இதுதான் இன்றைக்கு குடும்பங்களில் பாலீர்ப்பு சிறுபான்மையினரின் நிலைமை... இந்த தீர்ப்பு அப்படியோர் அதிர்வை குடும்பத்தினர் மத்தியில் உண்டாக்கிவிட்டது... எவ்வளவுதான் பாலீர்ப்பு பற்றிய புரிதலும், தெளிவும் இருந்து தங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை ஏற்றாலும் கூட, இந்த பெற்றோர்களால் புதிய தீர்ப்பை எதிர்கொள்ள முடியவில்லை... ஒன்று வெளிநாட்டிற்கு அகதியாக தஞ்சம் புகவேண்டும், இல்லையேல் ஒரு பெண்ணை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற இரண்டே வாய்ப்புகளைத்தான் குடும்பத்தினர் யோசிக்கும் நிலை உண்டாகிவிட்டது.... 

குடும்பத்தினர் மட்டுமல்லாது, பணிபுரியும் இடங்களிலும் இந்த தீர்ப்பு ஒரு ஆபத்தான தாக்கத்தை உண்டாக்கியுள்ளதாக கவின் மௌலி என்ற மென்பொருள் ஊழியர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.... பெரும்பாலும் மேற்குலக நாடுகளை மையமாக கொண்டுள்ள மென்பொருள் நிறுவனங்கள்தான் நம் நாட்டில் செயல்பட்டுவருகின்றன என்பதால், அந்த நாடுகளின் சமூக சூழலை பொறுத்தே நிறுவனங்களின் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.... ஆக, இங்கே செயல்படும் மென்பொருள் நிறுவனங்களில் பாலீர்ப்பு ரீதியான பாகுபாடு இருக்கக்கூடாது, ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நிறுவன விதிமுறை... ஆனால், இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பால், அந்த விதிமுறைகள் இந்தியாவிற்கு பொருந்தமுடியாத சூழல் உண்டாகியுள்ளது... அதிகாரப்பூர்வமாக எந்த மென்பொருள் நிறுவனங்களிலும் பாலீர்ப்பு சிறுபான்மையினர்களுக்கான குழுமம்/அமைப்பு உருவாக்கமுடியாத சூழல் உண்டாகியுள்ளது...

இப்படி குடும்பத்தினர் மற்றும் பணியிட சூழல் என நமக்கு நெருக்கமான இடங்களில் இந்த தீர்ப்பும், சட்டப்பிரிவு 377ம் இந்த அளவிற்கு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை கண்கூடாக நம்மால் பார்க்கமுடியும்... 

சரி, அப்படியானால் இந்த சட்டப்பிரிவு சட்டரீதியாக எந்த அளவிற்கு நம்மவர்கள் மீதான அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது? என்பதை விளக்க ஓரிரு உதாரணங்களை சுட்டிக்காட்ட விழைகிறேன்...

பெங்களூரு மருத்துவர் ஒருவரை சில இளைஞர்கள், அவருடைய அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி, லட்சங்களை பறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்... இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, மிரட்டிய இளைஞர்களுக்கு முன்பு கைதாகி, இப்போது சட்டப்பிரிவு 377ன் கீழ் அந்த மருத்துவர் சிறையிலடைக்கப்பட்ட நிகழ்வு நாம் அறிந்ததே... 

அதே பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர், தன் மனைவியின் மூலம் புகார் கொடுக்கப்பட்டு, அந்த நபர் 377ன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு நடந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கும்...

இப்படி சட்டரீதியான ஒடுக்குமுறைகளை பற்றி ஒன்றிரண்டு உதாரணங்களை நாம் சொல்ல முற்பட்டாலும், இத்தகைய காவல்துறை சார்ந்த வழக்குகள் பதிவுசெய்திருப்பது மட்டும் எவ்வளவு தெரியுமா?... ஹம்சாபர் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் இதுபற்றி எடுத்த ஆய்வில், “குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் மட்டும் இந்த ஓரினச்சேர்க்கை புகாரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  264…. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும், இரட்டிப்பு மடங்கு அதிகமாகியுள்ளது” என்கிற அதிர்ச்சியான முடிவை அறிவித்துள்ளனர்....  சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இதுதொடர்பான ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது... அதில், இந்த சட்டப்பிரிவின் கீழ் அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட மாநிலம், டெல்லி (140 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, கைதான நபர்களின் எண்ணிக்கை 110)...

இதேபோன்று உத்திர பிரதேசம் (127 வழக்குகள், 36 கைதுகள்), மகாராஷ்டிரா (98 வழக்குகள், 100 கைதுகள்), ஹரியானா (99 வழக்குகள், 89 கைதுகள்) என்று பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை இந்த மாநிலங்கள் பிடித்துள்ளன.... இதற்கு முன்பு இல்லாத அளவில் ஒரு குறிப்பிட்ட வழக்கின்கீழ், குறுகிய காலத்தில் இவ்வளவு வழக்குகளும், கைதுகளும் மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகள்தான்...

இதுபற்றி நாஸ் பவுண்டேசனின் அஞ்சலி கோபாலன் அவர்கள் தெரிவிக்கையில், “குற்றத்திற்காக வழக்குகள் பதிவுசெய்வதைவிட, இப்போது அதிகமாக மிரட்டலுக்கான ஆயுதமாகவே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுவருகிறது” என்கிறார்... இந்த நாஸ் பவுண்டேசன்தான் இப்போதுவரை இந்த சட்டப்பிரிவினை நீக்கக்கோரி தீவிரமான செயல்பாட்டில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது... 

ஒருபுறம் இப்படி வழக்குகளால் மிரட்டப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவரும் சூழலில், சமீப காலங்களில் இந்த சட்டப்பிரிவை சமூக விரோதிகள் தங்கள் மிரட்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருவதை பரவலாக பார்க்கமுடிகிறது... ஆமாங்க... சட்ட ரீதியாக எந்த அளவிற்கு நம்மவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்களோ, அதைவிட சட்டத்திற்கு புறம்பான நபர்களாலும் நம்மவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியான உண்மை...

காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்றார்போல சமூக விரோதிகளும் தங்களை அப்டேட் செய்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே... அந்த வகையில் புதுவரவு “ஒருபால் ஈர்ப்பாளர்கள் போர்வையில் ஏமாற்றுக்காரர்கள்” என்பதுதான்... இன்றைக்கு நாம் சமூக வலைதளங்களிலும், பிளானட் ரோமியோ போன்ற டேட்டிங் தளங்களிலும் எதேச்சையாக கடக்கும் பத்தில் ஒருவர் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு... பணம், பொருள், ஏடிஎம் கார்டு, பைக், அலுவலகத்தில் வேலை என்று அந்த சமூக விரோதிகள் பலவிதத்திலும் நம்மவர்களை ஏமாற்றியது நித்தமும் நடந்துவருகிறது.. இந்த ஒருவருடத்தில் மட்டும் நான் கேள்விப்பட்ட இத்தகைய ஏமாற்றுகள் மட்டும் நூறை தாண்டும்... 

அவை எல்லாவற்றையும் இங்கே தொகுப்பதென்றால் இன்னொரு வருடம் தேவைப்படலாம்... ஆனால், ஏமாந்த எல்லா நபர்களின் மனநிலையும் சிதிலம் அடைந்தேபோய்விட்டதை என்னால் உணரமுடிந்தது... பணம், பொருள் எல்லாம் போனாலும் பரவாயில்லை, மொத்தமாக மனநிம்மதியை இழந்து தவித்தார்கள்... எல்லோரையும் நோக்கிய ஒரே ஆயுதம், “377”தான்... 

இந்த புறக்கணிப்புகள், ஏமாற்றுதல்கள், மிரட்டல்களின் கடைசி புள்ளி எது தெரியுமா?... பலரின் தற்கொலை... சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பிரவீன் என்கிற இளைஞன் இறந்தார்... நம் அமைப்புகள் பலவும் அவருக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்தினார்கள்... கடந்த ஓரிரு மாதங்களிலேயேகூட எனக்கு தெரிந்தவரை நான்கைந்து இறப்புகள், அத்தனையும் தற்கொலைகள்... ஆனால், எந்த தற்கொலைக்கும் காரணமாக பாலீர்ப்பு பதிவுசெய்யப்பட மாட்டாது... குடும்பத்தினரும், நண்பர்களும் துக்கத்திற்கு அழுவதைவிட, இறப்பின் காரணத்தை மூடிமறைக்க பகீரத பிரயத்தனம் செய்வார்கள்...

ஆனால், உண்மையான காரணங்கள் எல்லோரும் அறிந்ததே... எத்தனையோ தற்கொலைகள், கணக்கில் அடக்கமுடியாத தற்கொலை முயற்சிகள் என இந்த ஓராண்டு நான் கவனித்தவரையில் ஆபத்தான பாதையில் பயணித்ததாகவே தெரிகிறது...

இந்த எல்லா பிரச்சினைகள் மற்றும் இழப்பிற்கும் காரணம் என்ன என்று இதற்கு மேலும் விளக்கம் சொல்லவேண்டுமா என்ன?... ஒரே வார்த்தையில் கூட அதற்கான காரணத்தை சொல்லமுடியும், அது “377”… அப்போ என்னதான் இதற்கு தீர்வு? கொஞ்சம் யோசிக்கணும்... நாம நினைத்த உடனேயே அந்த சட்டப்பிரிவை நீக்கவல்லாம் முடியாதுதான்... ஆனால், அதிலுள்ள ஆபத்துகளை போக்க அமைப்புகள் இனி போராடனும் என்பதுதான் நம் கோரிக்கை.... விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அமைப்புகளின் வெற்றி நிச்சயம் போற்றுதலுக்கு உரியது... அதே முக்கியத்துவத்தை நம் அமைப்புகள் நம்மவர்களின் பாதுகாப்பை மையப்படுத்திய பிரச்சினைக்கும் அளிக்கவேண்டும் என்பது நம் விருப்பம்....

சட்டப்பிரிவு 377 நிச்சயம் மிரட்டலுக்காக பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே... அப்படி ஆபத்துகளில் சிக்கும் நம்மவர்களை காக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.... நம் அமைப்பினர், சட்ட வல்லுனர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பை சார்ந்தவர்களையும் இணைத்த குழுவாக அது இருத்தல் வேண்டும்... அந்த சட்டப்பிரிவை சொல்லி மிரட்டப்படும் நபர்கள் எளிதில் அணுகி, இலவச சட்ட ஆலோசனை பெறுவது பற்றியும், பாதிக்கப்பட்ட நபர்கள் பிரச்சினைகளிலிருந்து மீள்வது பற்றியும் அந்த குழுமம் ஆலோசனைகள் வழங்க வேண்டும்... மேலும், பணம் மற்றும் பொருட்களை பறிக்கும் ஏமாற்றுக்காரர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கமுடியும்? என்பதுபற்றியும் அந்த குழு பரிந்துரைக்க வேண்டும்...

377 பாதுகாப்பு மீட்புக்குழு” அப்படி உருவாகி செயல்பட்டால்தான், நம்மவர்களும் பயமின்றி பாதுகாப்போடு இனி செயல்பட முடியும்... அதேபோல, இனி ஏமாற்றுபவர்களும் கொஞ்சம் அடங்கி ஒடுங்குவார்கள்.... அதனால், இனிவரும் 2015ஆம் ஆண்டு நம் ஒருபால் ஈர்ப்பு நபர்களின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்துகொடுக்கும் ஆண்டாக இருந்திட நாம் எல்லோரும் இணைந்து பயணிக்கவேண்டும்...
 
அது வரும் ஆண்டில் நடக்கும் என்கிற நம்பிக்கையோடு, அனைவருக்கும் “இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!” சொல்லி விடைபெறும்.... உங்கள் விஜய்...

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Great info, Vijay!

    This is the reason I live abroad. I feel the same as people seeking refuge or asylum, (they) don't feel safe to live in their home land.

    Hope to get the 377 reformed and help us live safe and peacefully soon.

    ReplyDelete
    Replies
    1. வரும் ஆண்டு நிச்சயம் நம் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் ஆண்டாக இருக்கும்னு நம்புவோம் சகோ....

      Delete
  3. Yes anna.... indha year(2015) aavadhu edhavadhu namaku change kedaikum nu kathu irupom... Lets hope for the Best...:-)

    ReplyDelete
  4. sexual perversion endra thalipil irundu homosex edukka vendum melum maruthuva ulagam(manothathuva nibunargal) kootrukkal en adigamga vivadikka pada villai.

    ReplyDelete