“அதிகரிக்கும் பிரேக்கப்’கள் – உருவாகிறதா ப்ளேபாய் கலாச்சாரம்?” கட்டுரைக்கு நம் மக்கள் கொடுத்த ஆதரவினை,
அந்த கட்டுரையின் சாரத்தை நம்மவர்கள் ஆமோதிக்கும் விதமாகவே நான் பார்க்கிறேன்...
என்றாலும், அந்த கட்டுரைக்கு ஒருசில அன்பர்களிடமிருந்து மாற்றுக்கருத்துகளும் வரவே
செய்தது... வழக்கமான முரண்பாடுகள் எல்லா கருத்துகளுக்குமே உண்டு என்கிற விதத்தில்,
அப்படி சில மாற்றுக்கருத்துகளை சகஜமாகவே கடந்துபோனேன்... ஆனாலும், எனது நண்பரும்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளுள் ஒருவருமான தினேஷ் என்பவர்
மூலம் வந்த எதிர்மறை கருத்துகள் என்னை அதிகமாகவே யோசிக்க வைத்தது... எனக்கு அவர்
சொன்ன கருத்துகளில் பல இடங்களிலும் முரண்பாடுகள் இருந்தாலும், அந்த கருத்துகளின்
சாராம்சம் ஏற்கும்படியாகவே இருந்தது... அதன் விளைவாகவே, அந்த விஷயங்களை
உங்களிடமும் பகிர்ந்துகொள்ளவே இக்கட்டுரை... “காதலர்களா இருந்தா மற்ற நபர்களிடம்
உறவு வைத்துக்கொள்ள கூடாதா?... வைத்துக்கொள்ளலாம், அது தவறில்லை...” என்னும் கருத்தை இந்த கட்டுரையின்
தொடக்கத்தில் நீங்கள் ஏற்கவில்லை என்றாலும், இதன் முடிவில் நிச்சயம் கொஞ்சம் அதனைப்பற்றி
யோசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...
இதோ அவர் சொன்ன கருத்துகளை, அவர் வாயிலாகவே உங்களுடன் பகிர்கிறேன்...
நான் தினேஷ்... எனக்கான அடையாளமாக எதை முதலில் முன்னிறுத்துவது? என்று
தெரியவில்லை என்றாலும், இந்த இடத்தில் என்னை ஒரு கே என்றே முதலில்
அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்... சொந்த ஊர் மதுரை பக்கத்தில் சோழவந்தான்,
இப்போ வசிப்பது ஆஸ்திரேலியாவில்... ஐந்து வருடங்களாக எனது காதலனுடன் லிவிங்
டுகெதர் வாழறேன், அடுத்த வருடம் இனிதே திருமணமும் செஞ்சுக்க போறோம்... நான்
மதுரைக்காரன் என்றாலும், என் காதலன் பூர்விக ஆஸ்திரேலியாவின் குடிமகன்...
என்னோட அறிமுகம் அவ்ளோதான்... இப்போ விஷயத்துக்கு வரேன்... காதலர்களா
இருக்குறவங்க, எக்ஸ்ட்ரா மரைட்டல் (காதலனை விடுத்து வேறு நபரிடம் உடல் உறவு)
செக்ஸ் வச்சிக்கக்கூடாதா?... இந்த கேள்வியை
வேற யாராவது என்கிட்டே அஞ்சு வருஷத்துக்கு முன்ன கேட்டிருந்தா “ஐயோ... அதல்லாம் தப்பு... நம்ம கல்ச்சர்
என்னாகுறது?”ன்னு நானும் தலைகீழா நின்னு தபேலா வாசிச்சிருப்பேன்... ஆனால்,
இன்னிக்கு அது தப்பில்லைன்னு ஒரு ப்ளாக்ல சொல்ற அளவுக்கு மாறிருக்கேன்... இந்த
மாற்றம் சரியா? தப்பா? அப்டின்னல்லாம் பார்க்குறதுக்கு முன்ன, என் காதலனுக்கும்
எனக்கும் உண்டான முதல் பேச்சுவார்த்தை பற்றி இங்க சொல்லிடுறேன்...
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருவருக்கொருவர் பரஸ்பர காதலை
வெளிப்படுத்தியபோது, இருவருமே அவரவருக்குரிய கண்டிஷன்களை விவாதித்துக்கொண்டோம்...
என் தரப்பிலிருந்து நான் வரிசைகட்டி என்னோட விருப்பங்களை சொன்னேன், ஆனால் அவன்
போட்ட ஒரே கண்டிஷன் “எனக்கு ஒருவனுக்கு ஒருத்தன் (monogamy) கான்சப்ட்’ல உடன்பாடில்லை... நம்ம காதல்
வாழ்க்கையிலோ, திருமண வாழ்க்கையிலோ அதை நீ கட்டாயப்படுத்தவும் கூடாது”ன்னு குண்டை போட்டான்... ஹைவோல்டேஜ்
மின்சாரம் என் தலைக்குள் பாய்ந்ததை போல ஒரு பேரதிர்ச்சி எனக்கு... இதென்ன
முட்டாள்த்தனம்?... அவன் யார் கூட வேணாலும் செக்ஸ் வச்சுகிட்டா, அப்புறம் அதென்ன
காதல்னு பேரு... பொதுவா எனக்கு ரொம்ப பிடிச்ச நண்பர்கள் அடுத்தவங்ககிட்ட அதிக
உரிமை எடுத்துகிட்டாலே என்னால பொறுத்துக்க முடியாது, இதுல எனக்கு சொந்தமான
ஒருத்தனை இன்னொருத்தன் பயன்படுத்துறத என்னால எப்டி தாங்கிக்க முடியும்?...
இவ்வளவு உறுதியா இருந்தும், என்னால அவன் காதலை விட்டுக்கொடுக்க
முடியாத காரணத்தால அவனோட அதிபயங்கர ஒப்பந்தத்துக்கு சம்மதிச்சேன்... காதல் கண்ணை
மறைக்கும்னு சொல்வாங்க, எனக்கு கலாச்சாரத்தை மறைச்சுடுச்சுன்னு சொல்லலாம்...
ஆனால், அஞ்சு வருஷம் கழிச்சு இன்னிக்கு அதைப்பற்றி யோசிச்சா, அதை நினச்சு
சிரிப்புதான் வருது... இவ்ளோ சின்ன விஷயத்துக்கா நான் அன்னிக்கு அவ்ளோ
பயந்தேன்?ன்னு நினைக்குறேன்... என்னோட இவ்வளவு மாற்றத்துக்கு காரணம் என்னோட “அவரு” தான்...
Non monogamous relationshipகுள்ள போகப்போறத நினைச்சப்போ, நம்ம தமிழ்
சினிமா வில்லன்கள் கல்யாணம் பண்ணிட்டு வீட்ல மனைவி இருக்கும்போதே, இன்னொரு பொண்ணை
கூட்டிட்டு வந்து கூத்தடிப்பாங்களே, அப்டி இருக்குமோன்னு கற்பனைகள்ல தொடக்கத்தில பதறினேன்...
ஆனால், அப்டி எதுவுமே நடக்கல... அப்போ இந்த அஞ்சு வருஷமும் என்னதான்
நடந்துச்சு?...
வழக்கமான காதல் ஜோடிகளை போல திகட்ட திகட்ட காதலிச்சோம், எங்க எதிர்கால
கனவுகளை பற்றி நிறைய கற்பனை பண்ணினோம், சின்ன சண்டைகள் போட்டோம், ரொம்பவே சந்தோஷமா
வாழ்ந்தோம்... எப்போவாச்சும் ஒருமுறை என் காதலன் யாராச்சும் ஒரு நபரை காட்டி,
“இவர் கூட செக்ஸ் வச்சிக்கவா?”னு கேட்பான்... எனக்கு
விருப்பமில்லைன்னாலோ, பிடிக்கலைன்னாலோ அந்த நபர் “ரிக்கி மார்ட்டின்”ஆவே இருந்தாலும் தொடமாட்டான்... எனக்கு
தெரியாம யார்கூடவும் டேட் கூட போகமாட்டான்... எந்த விஷயத்தையும் என்கிட்டே
ஒளிவுமறைவில்லாம பேசுற அந்த வெளிப்படைத்தன்மை, அவனுக்காக என்னோட சில குணங்களையும்
மாத்திக்க வச்சுது...
எல்லா விஷயத்துலயும் என்னோட முடிவுதான் இப்போவரைக்கும் இறுதி
முடிவு... சண்டை போட்டா கூட, சார் தான் சாரி முதல்ல கேட்பார்... இவ்ளோ
விட்டுக்கொடுத்த அவனுக்கு, அவனோட இந்த எப்போவாச்சும் தோனுற சின்ன ஆசையை செய்ய
விடுறதில தப்பில்லைன்னு தோனுச்சு... ஒருவேளை அவனோட ஆசையை மறுத்து, பிடிவாதமா monogamy வட்டத்துக்குள்ள அவனை கொண்டுவந்திருந்தா
என்னாகிருக்கும்?... இரண்டு விதமா விளைவுகள் இருந்திருக்கலாம்... ஒன்னு அவன்
எனக்கு தெரியாம வேற யார் கூடவாச்சும் செக்ஸ் வச்சிருப்பான், இல்லைன்னா எனக்காக
அவனோட ஆசைகளை கடைசிவரைக்கும் வெளிப்படுத்திக்காம மறைச்சு வச்சிருப்பான்... இது
இரண்டுமே எங்க காதலுக்கு ஆபத்தாதான் முடிஞ்சிருக்கும்.. எனக்கு தெரியாம செக்ஸ்
வச்சிருந்தா, நிச்சயம் அந்த எண்ணிக்கை இப்போதைய எண்ணிக்கையைவிட ரொம்ப
அதிகமாகிருக்கும்... திருட்டு மாங்கா ரொம்பவே ருசியா இருக்கும்ல, அதை அளவுக்கு
அதிகமாவே ருசிச்சிருப்பான்... அது என்னிக்காவது தெரிய வந்திருந்தா மிகப்பெரிய
பிரளயம் எங்களுக்குள்ள உண்டாகிருக்கும்... எப்பவும் நான் சந்தேகத்தோட
பார்த்திருப்பேன், அவனோ பொய்யாவே என்கூட வாழ்ந்திருப்பான்... அதேபோலத்தான்,
எனக்காக அவனோட ஆசைகள மறைச்சு வாழ்ந்தாலும், ஒருகட்டத்துல அவனுக்கே ‘என்னடா
வாழ்க்கை!’னு போர் அடிச்சிருக்கும், அது வேற விதமான பிரச்சினைகளுக்கு
வழிவகுத்திருக்கும்...
இப்போ அப்டி எந்த கவலையும் இல்ல.. காதல்ன்றது வெறும் உடல்
சம்மந்தப்பட்ட விஷயம் இல்லைன்னு தெளிவா புரிஞ்சுகிட்டேன்... நான் வளர்ந்த இந்திய
சூழல், முதல்ல அவனோட விருப்பத்தை ஏற்க மறுத்துச்சு... அப்புறம் அவன் தரப்பை நான்
புரிஞ்சதால, அவன்மேல காதல் இன்னும்தான் அதிகமாகிருக்கு... அவன் வேற யார்கூடவும்
செக்ஸ் வச்சுக்கக்கூடாதுன்னு நான் நினைச்சிருந்தா, அவன் உடலை மட்டும்தானே
காதலிச்சதா அர்த்தமாகிருக்கும்?... அவன் என்னைய மட்டும்தான் காதலிக்கிறான்,
எப்போவாச்சும் செக்ஸ் மட்டும் வேற சிலர்கூட வச்சுக்கறான்... இதில தப்புக்கோ,
துரோகத்துக்கோ இடமே இல்லைங்க...
ஆரம்பத்துல என்னோட பொசசிவ்னஸ் அவன் செயல்களை ஏற்க மறுத்தது என்னவோ
உண்மைதான்... அப்டி அவன் என்கிட்டே ஆரம்ப நாட்களில் ஒப்புதல் கேட்குறப்போ, எனக்கு
பிடிக்கலைன்னாலும் சும்மா ஒத்துக்குற மாதிரி நடிப்பேன்.. ஆனால், என் முகமாற்றத்தை
பார்த்து புரிஞ்சுகிட்டு ஆரம்ப காலங்கள்ல, பலமுறை செக்ஸை தவிர்த்தான்... மெள்ள
நிதர்சனங்களை நான் புரிஞ்சுக்க தொடங்கினேன், மோனோகாமி பற்றி தெரிஞ்சுக்க உளவியல்
கலந்தாய்வுகளுக்கு போனோம், எங்களை போலவே வாழற மத்த காதல் ஜோடிகள்கிட்ட பேசினோம்...
என்னோட சம்மதம் இல்லாம, விருப்பம் இல்லாம வேற யாரையும் அவன்
நினைச்சுக்கூட பார்க்கமாட்டான்குற நம்பிக்கையை அவன் என் மனசுக்குள்ள ஆழமா
விதச்சிட்டான்... பொதுவா ஏன் “பொசசிவ்னஸ்” வருது?ன்னு யோசிச்சு
பார்த்திருக்கிங்களா?... எங்கே நமக்கு நெருக்கமான நபர் இன்னொருத்தர்கிட்ட
நெருக்கமாகி, நம்ம இடத்தை வேற ஒருத்தர் பிடிச்சிடுவாரோ?ங்குற பயமும், பாதுகாப்பின்மையும்தான்
அப்டி பொசசிவ்னஸ்’ஆ வெளிப்படுது... அந்த விதத்துல, உலக அழகனே வந்தாலும் என்னவன்
என்னைவிட்டு போய்டமாட்டான்குற நம்பிக்கைய என் மனசுல நங்கூரம் மாதிரி அழுத்தமா
இறக்கிட்டான்... அதுக்கப்புறமும் காரணமே இல்லாம என்னத்துக்கு பயப்படனும்?.... அவன்
சந்தோஷமா இருக்குறான், அதனால நானும் சந்தோஷமா இருக்குறேன்...
இதுக்கு பின்னாடி உள்ள வரலாறை கொஞ்சம் புரட்டிப்பார்த்தாபே நமக்கு சில
விஷயங்கள் புரியும்.. பொதுவாவே நாகரிக வளர்ச்சி தோன்றுவதற்கு முன்னாடி, மனிதர்களோட
செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்துச்சு தெரியுமா?.. ஒரு ஆண் பல பெண்களுடனும் செக்ஸ்
வச்சு, தன்னோட வம்சத்தை விருத்தியாக்க நினைச்சான்... ஆனால் பெண்ணோ, ஒரு வலிமையான,
குடும்பம் நடத்த ஏற்ற ஆண்மகனை தேர்ந்தெடுத்து, அவனை குடும்ப அமைப்புக்குள்
கொண்டுவந்து, அவன் ஒருவனுடனேயே வாழ நினைத்தாள்... ஆக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
ஒரு ஆணுடைய உடலியல் தேடல் பலரிடம்தான் இருந்துச்சு... இதன் நீட்சியாகத்தான்
இப்பவும் ஆண்கள் விதவித அனுபவங்களை தேட நினைக்குறாங்க... கலாச்சாரம் என்ற போர்வை
மூலம் அதை மறைத்துவாழ முயன்றாலும், பலராலும் அதை மறைக்கமுடியவில்லை என்பதுதான்
நிதர்சனம்... அதனால்தான் இரண்டு ஆண்கள் இணைந்துவாழும் கே வாழ்க்கையில் கூட, இப்படி
எல்லைகளை மீறிய உறவுகள் சில நேரங்களில் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது... ஆனால்,
இந்த விஷயத்தில் லெஸ்பியன் உறவு முற்றிலும் முரண்பட்டது... அவங்களில் பெரும்பாலும்
மோனோகமி ரிலேஷன்ஷிப்ல தான் இருக்காங்க... இது அவங்களோட உடலியல் தேவைன்னு
சொல்லலாம்...
இந்த விஷயத்துல நான் மத்தவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறேன்னா, ஒரு
காதல் வாழ்க்கைல சம்மந்தப்பட்ட இருவருக்கும் Non monogamous relationshipல பிரச்சினை இல்லை என்றால், அது
தப்பில்லை... அதே போல, இப்போ என் காதலன் இன்னொருத்தர்கிட்ட செக்ஸ் வச்சுக்க
போறார்னா, எங்க காதலை பத்தி அந்த மூன்றாவது நபருக்கும் முழுமையா சொல்லிட்டுதான்
களத்துல இறங்குவான்... ஆக, அந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மூன்று நபர்களுக்கு
பிரச்சினை இல்லைன்னா, அது ஒரு பிரச்சினையே இல்லைங்க... அதே நேரத்துல எல்லா காதல்களிலும்
அப்டி இருக்கனும்ன்குற அவசியம் இல்லை...
அதாவது எங்க நண்பர்கள் சிலர் கூட மோனோகாமி’னு சொல்லப்படுற ஒருவனுக்கு ஒருத்தன்
வாழ்க்கைல வாழறாங்க... சம்மந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அப்டி வாழ்றதுதான்
பிடிக்கும்னா தாராளமா வாழலாம்... இப்போ எங்க காதல்ல கூட எடுத்துகிட்டா என் காதலன்
மட்டும்தான் அப்டி களத்துல இறங்குவார்... அஞ்சு வருஷமா, வேற யார்கூடவும் எனக்கு
உறவு இருந்ததில்ல... என் காதலன் அதுக்கான
முழு சுதந்திரத்தையும் எனக்கு கொடுத்தாலும், எனக்கு இப்டி வாழ்றதுதான்
பிடிச்சிருக்கு... ஆக, தனிமனித சுதந்திரம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம்தான்... சுதந்திரம்
இருக்குங்குறதுக்காக பிடிக்காத விஷயங்களையும் வம்படியா செய்யனும்னு அவசியம்
இல்லைல்ல?... பத்து வருஷங்களுக்கு மேல ஒற்றுமையா வாழற எங்க நண்பர்கள் இருவர்,
இப்போவரைக்கும் polygamy பற்றி யோசிச்சது கூட இல்ல... இத்தனைக்கும்
அவங்க இருவருமே மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள்...
அதேபோல இன்னொரு தம்பதி இருக்காங்க... அவங்க இதிலிருந்து ரொம்பவே மாறுபட்டவங்க...
அதாவது, “நீ யார்கூட வேணாலும் செக்ஸ் வச்சுக்கோ, ஆனால் அது எதைப்பற்றியும்
என்கிட்டே சொல்லாத... நானும் யார்கிட்ட வேணாலும் செக்ஸ் வச்சிப்பேன், அதை நானும்
உன்கிட்ட சொல்லமாட்டேன்!” அப்டின்னு காதலின் தொடக்கத்தின்போதே
ஒப்பந்தம் போட்டு, இப்போவரைக்கும் வருடங்கள் கடந்து சந்தோஷமா வாழறாங்க...
ஒருத்தருக்கொருத்தர் அதைப்பற்றி சொல்லி, வருத்தம் உண்டாகி, கஷ்டம் வேண்டாம் என்பது
அவங்க நிலைப்பாடு.... இப்டி காதலுக்குள் பல வகைகள் இருக்கத்தான் செய்யுது...
“செக்ஸ்” மட்டுமே காதல்னு நினைச்சா மட்டும்தான் இந்த காதல்களில் பிரச்சினை
உண்டாகிருக்கும்.. ஆனால், “எனக்காக அவன் சிரிக்கணும், அவனுக்காக நான் அழனும்...
ஒருத்தருக்காக இன்னொருத்தர் வாழனும்!...”னு உள்ளம் சார்ந்து யோசிச்சா, இந்த செக்ஸ்
ஒரு விஷயமாவே தெரியாது... ஆக, இங்க பலதரப்பட்ட காதல் உலாவத்தான் செய்யுது...
ஆனால், எந்த காதலர்களும் காதலை விட்டுக்கொடுத்திடாமல், உடல் சார்ந்த தேவைகளில்
மட்டும் சமரசம் செஞ்சு வாழறாங்க...
ஆனால், சில காதல் ஜோடிகள் தங்களோட காதலையும் மற்றவங்ககிட்ட பகிர்ந்துக்குற
ஒரு மாறுபட்ட காதல் வாழ்க்கையும் உலகத்தில் காணப்படுதுன்னு தெரியுமா?... Polyamoryனு சொல்லப்படுற அந்த காதல் வாழ்க்கைல,
இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சுப்பாங்க... உதாரணமா
மூன்று நபர்கள் ஒருவரை ஒருவர் காதலிச்சு, ஒன்னாவே வாழுவாங்க... இங்க மூன்றாவது
நபரை வெறும் செக்ஸ் தேவைக்காக மட்டுமல்லாமல், உணர்வு ரீதியாகவே காதலிப்பார்கள்...
இதில் மூவரின் முழுமையான ஒப்புதலும், மூவருக்குமான வெளிப்படைத்தன்மையும்
அவசியம்... 2009ஆம்
ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே முடிவின்படி ஏறத்தாழ 5,00,000 polyamorous உறவுகள்
அங்கு காணப்படுவதாக கூறியுள்ளனர்... இத்தகைய நபர்களுக்கு அதீத மன முதிர்ச்சியும்,
விட்டுக்கொடுத்தலும் காணப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்....
பூவே உனக்காக
படத்தில் விஜய் சொல்வதை போல, “ஒரு செடில ஒரு பூதான் பூக்கணும்!”
கான்செப்ட் இவங்களுக்கு கிடையாது... இப்படிப்பட்ட உறவுகளும் பல வருடங்கள் கடந்து
நீடிக்கிறது ஆச்சர்யமாதான் இருக்கு... இப்படியோர் உறவில் நம்மாலல்லாம்
இருக்கமுடியாது என்றாலும், அப்படி வாழறவங்கள ஆச்சர்யத்தோட பார்க்குறேன்... நம்ம
ஊர்கள்ல காணப்படுற “சின்ன வீடு” கான்சப்ட் இவங்களுக்கு பொருந்தாது..
காரணம், இந்த உறவுகளில் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கனுமே!...
சமீபத்தில்
தாய்லாந்தை சேர்ந்த மூன்று நபர்கள் ஒருத்தரை ஒருத்தர் கல்யாணம் செஞ்சுகிட்டு வாழற
செய்தியை பார்த்தப்போ எனக்கும் கொஞ்சம் ஆச்சர்யமாதான் இருந்துச்சு... “காதலை ஒருத்தர் கூடத்தான் வரணும்னு எல்லை போட்டு
தடுக்கமுடியாது, அது எல்லைகள் அற்றது... எங்க காதலை வெறும் கண்களால பார்ககாதிங்க,
உங்க உள்ளத்தால பாருங்க”ன்னு
கடந்த காதலர் தினத்தன்று ஒருத்தரை ஒருத்தர் திருமணம் செஞ்சுகிட்ட அந்த மூன்று
நபர்களும் கருத்து சொல்லிருக்காங்க.... (இந்த கட்டுரைக்கு மாடல் போல
பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களில் இருப்பவர்கள் அந்த மூன்று நபர்கள்தான்!)
இப்படி பாலிஅமொரி
உறவுகளில் விருப்பம் கொண்டவர்கள் எங்கயோ மறைஞ்சு வாழறாங்கன்னு நினைச்சுடாதிங்க...
அவங்களுக்குன்னு அமைப்பு, கொடி, குறியீடு, பேரணின்னு பட்டவர்த்தனமா வாழறாங்க...
அவங்க மூணு
பேருக்கும் அதில சந்தோஷம்னா அதை குறைசொல்லவோ, குற்றம் கண்டுபிடிக்கவோ நாம யாரு
சொல்லுங்க?...
அதே போலத்தான் நம்ம
கே வாழ்க்கைல, வேறு நபர்களிடமும் உறவுகொள்ளும் காதல் ஜோடிகள், எதையும் மறைக்காம,
தன் காதலன்கிட்ட வெளிப்படையா பேசி, வேற நபர்கிட்ட உறவு வச்சுக்கிறதும்
தப்பில்லைன்னுதான் இறுதியாவும் சொல்றேன்...
பிரபல கே உளவியல்
ஆய்வாளர் மைக்கேல் செர்னாப் அவர்கள் ஒரு ஆய்வின் முடிவில் “கிட்டத்தட்ட அறுபது
சதவிகித கே தம்பதிகள், காதலுக்கு அப்பாற்பட்ட பிற நபர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள்!”னு
சொல்றார்... அந்த அறுபது சதவிகிதத்திற்குள் நாங்களும் இருப்பதை நினைத்து
கவலைப்படவில்லை... ஒருவேளை மீதமுள்ள நாற்பது சதவிகிதத்தை சேர்ந்த ‘ஒருவனுக்கு
ஒருவன்’
வாழ்க்கை வாழறவர் நீங்கன்னா, உங்க முதுகை தட்டிக்கொண்டு உங்களுக்கு ஒரு ‘சபாஷ்’
போட்டுக்கொள்ளுங்கள்... மற்றபடி வேற நபர்களை குறை தேடி குற்றம் சொல்லவேண்டாமே!...
(நண்பர் தினேஷின் கருத்துகளை படிச்சிங்களா?... “இந்த எல்லா
கருத்துகளிலும் உனக்கு உடன்பாடு உண்டா விஜய்?”னு என்னை கேட்டால்... இதில் உடன்படுவதற்கோ,
மறுப்பதற்கோ நான் யாருங்க?... தினேஷ் சொன்னது போல, இதில் சம்மந்தப்பட்ட மூவருக்கு
பிரச்சினை இல்லைன்னா, அதை குற்றம் காண எனக்கென்ன உரிமை இருக்கு?... கொள்கைரீதியா
சில முரண்பாடுகள் இருந்தாலும், எல்லா உறவுகளுக்கும் இன்னொரு முகமும், பரிமாணமும் உண்டு... அந்த இன்னொரு முகத்தைத்தான் உங்களுக்கு
முழுமையாக இந்த கட்டுரையில் காட்டியுள்ளேன்... இதை எல்லோரும் ஏற்கனும்னு அவசியம்
இல்லை,. குறைந்தபட்சம் இப்படியும் வாழ்க்கை இருக்குன்னு புரிஞ்சுக்க இந்த கட்டுரை
பயன்படும்னு நம்புறேன்!)
ஒருவனுக்கு ஒருவன்’ வாழ்க்கை வாழறவர் நீங்கன்னா, உங்க முதுகை தட்டிக்கொண்டு உங்களுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுக்கொள்ளுங்கள்... மற்றபடி வேற நபர்களை குறை தேடி குற்றம் சொல்லவேண்டாமே!...
ReplyDeleteசூப்பர்.
கமல்தாசன்.கு
கருத்திற்கு மிக்க நன்றி கமல்... உங்கள் புரிதலுக்கும்தான்...
Deleteதினேஷ் சொன்னதுல தப்பில்லயே! Boy friend கூட மட்டும் தான் sex வச்சுக்கணுமா? தினேஷ் சொன்னதுல நான் 3 வது type.- இலங்கையில் இருந்து -
Deleteஅதை தப்புன்னு சொல்ல எனக்கும் கூட உரிமை இல்லைதான் வினய்... உங்க தரப்பு நியாயத்தை முழுமையா புரிஞ்சுகிட்டேன்... உங்க கருத்துக்கும் மிக்க நன்றி...
DeleteReally amazing... but ellarum adhe madhiri unmaya irundhangana paravala.. namma kita sollama ipdi pannuna then really it ll hurt.....
ReplyDeleteReally amazing... but ellarum adhe madhiri unmaya irundhangana paravala.. namma kita sollama ipdi pannuna then really it ll hurt.....
ReplyDeleteஉண்மைதான் தம்பி.. ஒளிவுமறைவில்லாமல் இவங்கள போல வாழ்றதுல தப்பில்லைன்னே தோணுது... மறைத்து வாழ்வதில் நிச்சயம் நிறைய சிக்கல் உண்டு... உன் கருத்துக்கும் ரொம்ப நன்றிப்பா...
Deleteopen relationships, premarital and extra marital sex are okay if all parties involved are reliable and they and their close ones are not affected and stay safe in all aspects.
ReplyDeleteஉண்மைதான் பிரபு... பிரச்சினைகள் இல்லாதவரைக்கும் சரின்னுதான் தோணுது... உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி...
Deleteம்ம் ஒருவன காதலிச்சுக்கிட்டு வேற அக்களோட sex வைச்சுக்குறத ஒரு அளவு ஏற்று கொண்டாலும். ஒண்டுக்கு மேற்பட்ட ஆக்கள காதலிக்கிறத ஏற்று கொள்ளுரதில சில நடைமுறை சிக்கல்கள் இருக்குது. உதாரணமா ஒருவேள மூணு பேர் காதலிக்கேக்க யார் மேல யாருக்கு அதிக காதல் எண்டு ஒரு சின்ன பிரச்சன வந்தாலே போதும் அந்த காதல் நரகமாக்கிடும். ஆனா ஒன்ன ஏற்று தான் ஆகணும் இப்பிடி பலபேர காதலிக்கிறவங்க நிச்சயமா மன முதிர்ச்சி அடைஞ்சவங்கதான் ஏன்னா ஒருமுற ஒரு குருவ பாத்து ஒருத்தர் கேட்டார் காதல பற்றி என்ன நினைக்கிறீங்க என்டு அதுக்கு அவர் சொன்னார் ஒருதர காதலிச்சா அது காதல் அந்த ஒருத்தரபோல எல்லார் மீதும் காதல் இருந்தா அதுதான் ஞானம். பாகுபாடு இல்லாம எல்லார் மீதும் அன்பு வைக்கும் போது ஒருவர் ஞானத்தை உணர்கிறார் எண்டாரம் அந்த குரு, ஆக பல பேர காதலிக்கிறவங்க நிச்சயமா மனமுதிர்ச்சி அடையுறதில ஆச்சரியம் ஒண்டும் இல்ல ஆனா அப்புடி இருக்குறது பலநேரங்களில சத்திய படாது என்பதுதான் யதார்த்தம் ஏன்னா அவன் அவன் ஒரு காதலனைவைச்சே குடும்பத்த நடத்த பெரும்பாடு பற்றான். ஒருத்தன புருஞ்ச்சுக்குறதே ரொம்ப கஷ்டமா இருக்குறப்போ பலபேருரோட உண்மையான காதல் வைக்கிறது என்றதும் அவங்கள புரிஞ்ச்சுக்கிறதும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். இதெல்லாம் ஒரு ஞானியல தான் சத்தியப்படும் எண்டுறது என் தனிப்பட்ட கருத்து, என்ன சொல்லுரிங்க வியஜ் அண்ணா,,,,,,,,,,,,,,,,,,????/
ReplyDeleteஉங்க கருத்து ரொம்ப சரிதான் தம்பி... நாம வாழுற சூழ்நிலை, நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கலாச்சாரம் எல்லாம் தாண்டி நம்மால அப்படியொரு முடிவை எடுக்குறது சிரமம்தான்... ஆனால், மேற்கத்திய நாடுகளில், அவங்க வளர்ந்த சூழலை பொருத்து இதை ஏற்பதில் அவங்கள நாம குறைசொல்லவும் கூடாதல்லவா?... ஞானியோ என்னவோ, அவங்க அப்படி வாழறதுல பிரச்சினை இல்லைன்னா வாழட்டுமே!
Deleteம்ம் அவங்க அப்பிடி வாழ்றத குறைசொல்லல என் கருத்த தான் சொன்னன். அவங்க சந்தோஷமா வாழ்ந்தா எனக்கும் சந்தோஷம் தான்
ReplyDeleteபுரியுது தம்பி... உங்க கருத்தை உளமார நான் ஏற்கிறேன்...
Deleteஇதில் தாங்கள் சொல்லி இரூக்கும் சொய்தி ஏற்று கொள்ள கூடியதாக இரூந்தாலும் இது பொரிய அளவிளான துர் விளைவுகளை ஏற்படுத்த வல்லது.... இதனால் அப்பாவி ஆண்கள் எளிதாக ஏமாற்ற படலாம்.... அதனால் தாங்கள் இதை ஊக்க படுத்த வேண்டாம் விஜய்.....
ReplyDelete