Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 15 April 2015

ஷாக் ட்ரீட்மென்ட் - சிறுகதை...







“மெட்ராஸ் வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப்போங்கப்பா, உங்க பேரனால ஒரு பிரச்சினை! அலைபேசியில் மகன் இப்படி சொன்னதற்கு பிறகு, ஒரு நிமிடம்கூட துரைப்பாண்டிக்கு இருப்புக்கொள்ளவில்லை... அரைகுறையாய் காய்ந்த வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு, கையில் தென்பட்ட தன் ஒருசில உடுப்புகளையும் பைக்குள் திணித்தவாறு பயணம் கிளம்பிவிட்டார்...

வயலில் இன்னும் களையெடுப்பு கூட முடியவில்லை, விவசாய வேலைகளை இப்படி பாதியில் விட்டுவிட்டு வெளியூர் செல்வது வழக்கமில்லை என்றாலும், சூழலின் சிக்கல் மகன் சொன்ன “பிரச்சினை என்கிற வார்த்தையிலேயே எளிதாக அனுமானிக்க முடிந்தது... சென்னைக்கு குடியேறிய இந்த இருபது வருடங்களில், இப்படி வரச்சொல்லி அழைப்பு வந்ததில்லை... எழுபது வயது கிழவனால் அப்படி அவர்களோட எந்த பிரச்சினைக்கு வழிசொல்ல முடியும்?னு புரியாமல்தான் பயணித்தார்...

“அப்டி என்னப்பா பிரச்சினை?ன்னு அவரால் கேட்டிருக்கமுடியும்தான்...

“ஏன், சொன்னாதான் பெருசு வருமோ?... எல்லாம் நீங்க கொடுக்குற சலுகைன்னு மருமகள் சொல்லுவாள்... கிடைக்கும் எதாவது வாய்ப்பை பயன்படுத்தி உறவை துண்டிக்க காத்திருக்கும் மருமகளின் வாய்க்கு அவலை தீனியாக போடவிரும்பவில்லை... அப்படி என்ன அவள் கணவன் இந்த கிழவனுக்கு சலுகை கொடுத்துவிட்டான்? என்பதுதான் துரைப்பாண்டிக்கும் இந்த இருபது வருடங்களில் புரியாத புதிர்... வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும்போது, நாலு முழம் வெட்டி இரண்டு வாங்கிவருவான். அலைபேசிக்கு எப்போதாவது பணம் ஏத்திவிடுவான்... மகனுடைய படிப்பிற்காக பொன்னாக விளைந்த பூமியை ஒத்திக்கு வைத்து ஒரு லட்சம் கொடுத்த தந்தைக்கு, மகன் கொடுக்கும் இந்த சலுகைகள்தான் அவன் மனைவிக்கு பிடிக்கவில்லை போலும்... நல்லவேளையாக இந்த கொடுமைகள் எதையும் பார்க்கவிரும்பாத அவர் மனைவி, மகனின் திருமணத்திற்கு முன்பே சீக்கு வந்து இறந்தும் போய்விட்டாள்... 

இவ்வளவு உறவின் சலிப்புகளையும் தாண்டி, இன்னும் அந்த உறவை ஏதோ ஒரு விளிம்பில் ஒட்டவைத்துக்கொள்ள துரைப்பாண்டிக்கு இருக்கின்ற ஒரே காரணம் நீரஜ், அவரின் ஒரே பேரன்.. அந்த பெயரின் உச்சரிப்பு சிக்கலால், “நீரு என்றுதான் அழைப்பார்... “நீ மட்டும்தான் தாத்தா என் பேரை இன்னும் ஸ்டைலா ஆக்கிட்ட!ன்னு தாத்தாவின் உச்சரிப்பு பிழைகளை கூட, அழகியல் விஷயங்களாக மாற்றிவிடுபவன்... 

“உங்க பேரனால ஒரு பிரச்சினை என்று நீருவை பற்றிய ஏதோ ஒரு பிரச்சினை என்ற நினைவே அவர் மனதை அதிகமாக் அழுத்தசெய்தது... பேருந்து பயணத்தில் தூக்கத்தை அண்டவிடாமல், தன் பெயரனை பற்றிய சிந்தனைகளே மனதை நிறைத்தன... அப்பா அம்மாவைவிட தாத்தாவை அதிகம் நேசிப்பவன்... “நான் பெரியாளா ஆகி, உன்கூடத்தான் தாத்தா நம்ம ஊர்ல வயல்ல வேலை பாப்பேன்! மழலை மொழி மாறாத வயதில் சொன்ன வார்த்தைகள் நேற்று சொன்னதைப்போல இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது...

“உனக்கல்லாம் வேணாம்யா இந்த பொழப்பு... சோறு போடுற நம்மள, மனுஷனா கூட இந்த பயமக்க மதிக்க மாட்டானுக... நீ நெறைய படிச்சு பெரிய ஆபிசர் ஆவணும்... பெரிய காருல வந்து எறங்குறப்ப, அப்டியே சீமத்தொர கணக்கா இருக்கணும்...பேரனோடு இருக்கும்போது, அவனுடைய மழலை உலகத்திற்கே துரைப்பாண்டியும் பயணித்து, சில நேரங்களில் அந்த உலகத்திலேயே தங்கிவிடுவதுமுண்டு....

பேருந்தின் குறை வெளிச்சத்தில், சாலையை வேடிக்கை பார்த்தபடியே இரவை கழிக்க எத்தனித்தார்... கண்களை இறுக்க மூடி, வேடிக்கை பார்த்து, தலையை கவிழ்த்துக்கொண்டு என்று என்னென்னமோ செய்தும் உறக்கம் மட்டும் வந்தபாடில்லை...

விடியலில், அறையிருட்டோடு கிண்டியில் இறங்கிக்கொண்டார்... ஆட்டோக்காரர்கள் அலைபாய்ந்து அவரை வரவேற்றனர், அவரை சென்னையில் இந்த தானி ஓட்டுனர்கள் மட்டும்தான் விரும்பி அழைப்பவர்கள்... “கிராமத்தானை ஏமாத்தி காசு வாங்கலாம்! என்கிற உயரிய எண்ணம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.. ஒருவழியாக ஷேர் ஆட்டோவில் பயணித்து வேளச்சேரியில் இறங்கிவிட்டார்... மகன் குடியிருக்கும் வீட்டின் சாலையையும் அடைந்துவிட்டார்... ஆனால் வீடுதான் எதுவென்று புரியவில்லை....

பச்சை பூச்சு அடித்த வீடு, ஆனால் இரண்டுமுறை தெருவில் நடந்தும் பச்சையே கண்களுக்கு தென்படவில்லை... பெயின்ட் மாற்றிவிட்டதை சொல்லவில்லை என்றெல்லாம் மகனிடம் அவர் கோவிக்க முடியாது... வீட்டு வெளிக்கதவில் தாமரைப்பூ வரைந்திருந்ததாக நினைவு... கருப்பு கேட்டில், அந்த குறைப்பார்வையை வைத்து தாமரைப்பூவை அவர் எங்கே கண்டுபிடிப்பது?.. யாரிடமும் கேட்கலாமா? என்றால், எவரும் முகத்தைக்கொடுத்துக்கூட பேச முன்வரவில்லை...


அலைபேசி அழைத்தது, பைக்குள்ளிருந்து துழாவி அதனை கையில் எடுத்தார்... பச்சை பொத்தானை அழுத்தி, காதில் வைத்தார்...

“இங்க வலது பக்கம் மேல பாருங்க! என்ற மகனின் குரல் அலைபேசிக்குள்...

வலப்பக்கம் திரும்பி அண்ணாந்து பார்த்தார், பால்கனி ஒன்றில் மகன் நின்று கை அசைத்தான்.. “அப்பா!ன்னு கொஞ்சம் அழுத்தி சத்தம் வைத்திருந்தால் கூட துரைப்பாண்டி திரும்பிப்பார்த்திருக்கும் அளவிலான தொலைவுதான் என்றாலும், அழுக்கு வேஷ்டியும், நரைத்த தலையுடனும் தடுமாறி நடந்துவந்த கிழவனை “அப்பா என்று அவன் அக்கம்பக்கத்தினர் முன்பு அழைக்க கூச்சப்பட்டிருப்பான் போலும்... இதையும்கூட பொருட்படுத்தாமல், அந்த வீட்டை அடைந்தார்... இப்போது மஞ்சள் நிறமாக மாறியிருந்த அந்த வீடு, அடுத்தமுறை வரும்போது சிவப்பாக மாறியிருக்கலாம்... ஆகையால், நிறத்தை நினைவில் வைக்க அவர் விரும்பவில்லை...

வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்து, ஹாலின் இருக்கையில் அமரவைத்தான் மகன்... பால்கனி அருகிலிருந்த வாஷ்பேசின்இல் முகம் கழுவி, துண்டால் துடைத்துக்கொண்டே தயக்கத்துடன் நாற்காலியில் அமர்ந்தார்... ஏனோ, நம் மகன் வீட்டில்தான் இருக்கிறோம்! என்கிற சௌகர்ய உணர்வு அவருக்குள் உருவாகவே இல்லை...

வழக்கமாக தாத்தா வருவதை வாசலிலேயே காத்திருந்து அழைத்துசெல்லும் பேரனை ஏனோ இன்று வீட்டிற்குள் காணவில்லை... மூடப்பட்ட மூன்று அறைக்கதவினுள் ஏதோ ஒன்றில் தூங்கிக்கொண்டிருப்பான்... எழுந்து சென்று பேரன் உறங்கும் அறைக்கதவை திறக்க அவர் மனசுக்குள் ஆசைதான்... ஆனால், தவறுதலான கதவை திறந்துவிட்டால் மேலிடத்தில் பதில்சொல்லி மாளமுடியாது... “உங்கப்பா என்னமோ ஆராயிறாருன்னு பற்றவைக்கும் தீக்குச்சி, நெருப்பு குழம்புகளாக அவரை தாக்கும் ஆபத்து உண்டு...

சமையலறைக்குள் குக்கர் விசில் அடித்தது.. சில நிமிடங்களில் மருமகள், கையில் காபி கோப்பையுடன் வெளிவந்தாள்... கோப்பையை கையில் கொடுத்துவிட்டு, “வாங்க மாமா!” என்றாள் வேண்டாவெறுப்பாக..

“நல்லா இருக்கியாம்மா? கேட்க மனமில்லை என்றாலும், கேட்டுத்தான் ஆகணும்...

“ஹ்ம்ம்... இருக்கேன் புடவையை உதறிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் ஐக்கியமானாள்... கையில் கொடுக்கப்பட்ட குவளையில் இருக்கும் திரவத்துக்கு பெயர் “காபிதான் என்பதை, காபி கொட்டைகளே நம்பிவிடாத அளவிற்கு முகத்தை சுளிக்க செய்தது அதன் சுவை...

“காபி ஒரு மாதிரி இருக்கும்மா... டிக்காசன் சரியா கலக்கலையோ?ன்னு ஒருமுறை அவர் எதேச்சையாக சொல்லி பட்டபாட்டை வாழ்க்கை முழுமைக்கும் மறக்கமாட்டார்...

“காபி போட எனக்கொண்ணும் கத்துத்தர வேணாம் மாமா... இதே காபியைத்தான் உங்க மகன் பல வருஷமா குடிக்கிறார், ஒருநாள் கூட இப்புடி குத்திக்காட்டியதில்ல... நீங்க சண்டை போடுறதுக்காகவே கிளம்பிவந்திருக்கிங்க! என்று கண் கலங்க பொங்கிவிட்டாள்...

“என்னப்பா தேவையில்லாத பிரச்சினை?.. நம்ம ஊர்ல நாட்டுப்பசு பால்ல காபி குடிச்சுட்டு, பாக்கெட் பால் டேஸ்ட் உங்களுக்கு பிடிக்கலை போல.. அதுமட்டுமில்லாம இப்பல்லாம் காபிதூள்ல சிக்கரிய கண்ணாபின்னான்னு கலக்குறானுக, சக்கரைல கூட ஆயிரத்தெட்டு கெமிக்கல்ஸ்... இதுக்கல்லாம் அவ என்னதான் பண்ணுவா?... இந்த சின்ன விஷயத்துக்கு போயி ஏன்பா இவ்ளோ பிரச்சின பண்றீங்க? ஒரு காபி கொஞ்சம் சரியில்லைன்னு சொன்னதுக்கு, இவ்வளவு பெரிய வகுப்பே எடுத்துவிட்டான் மகன்... காபி தூளையும், பாலையும், சக்கரையையும் குறைசொல்ல தெரிந்த மகனுக்கு, ஒருநாளும் தன் மனைவிக்கு காபி போட தெரியவில்லை என்று ஒப்புக்கொள்ள மட்டும் மனம் வந்ததில்லை...
அதனால் இப்போது எதுவும் சொல்லிக்கொள்ளாமல், வேப்பிலை கஷாயம் போல ஒரே மூச்சில் குடித்து, மூச்சிரைக்க குவளையை கீழேவைத்தார்...

குளித்துமுடித்துவிட்டு, துண்டால்  துவட்டிக்கொண்டே ஹாலில் வந்து அமர்ந்தான் மகன்...

“நீரு எங்கப்பா? வெகுநேர தேடலை, கேட்டுவிட்டார்...

“தூங்குறான் பட்டும் படாத பதில்...

“என்ன பிரச்சினைன்னு என்ன வரசொன்ன?

“அதான் சொன்னேனே, உங்க பேரனால ஒரு பிரச்சின...

“அப்டி என்னப்பா பிரச்சின?மெள்ள தயங்கித்தான் கேட்டார்...

“என்ன பாவம் பண்ணேன்னு தெரியல, சனியன் எனக்கு மகனா பொறந்ததுதான் பிரச்சினை!இந்த பதிலைக்கேட்ட துரைப்பாண்டிக்கு தூக்கிவாரிப்போட்டது... பிள்ளையின் பாதம்கூட மண்ணில் படக்கூடாதுன்னு பொத்திப்பொத்தி வளர்த்த பையனைப்பற்றியா இப்படி ஒரு வெறுப்பான விமர்சனம்?...

“என்னப்பா இப்புடி பேசுற?.. அப்புடி என்ன தப்பு பண்ணான் அவன்?... படிக்குற காலேஜ்ல எதுவும் பிரச்சினையோ? கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் கேட்டார்...

“மூதேவிக்கு படிக்குறதுல இப்ப பிரச்சினை இல்ல, படுக்குறதுலதான்! முகம் சுளித்தபடி சொன்னார்...

“கொஞ்சம் வெளக்கமா சொல்லுப்பா, படபடன்னு வருது!

“உங்க பேரன் ஒரு கேயாம்

“அப்புடின்னா?

“இந்த ஆம்பள பசங்க ஆம்பளையோட அசிங்கமா... அத எப்புடி சொல்றதுன்னும் புரியல, அவன் ஒரு ஆம்பள பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவானாம்... கருமம் கருமம்... இது வெளில தெரிஞ்சா, தூக்குல தொங்க வேண்டியதுதான் தலையில் அடித்துக்கொண்டு கண் கலங்கினார்...

“பதறாதப்பா பதறாத.... இப்புடியல்லாம் கூட இருக்குமா என்ன?.. என்னாலையுமே நம்பமுடியல... யாரு சொன்னது இத? துரைப்பாண்டியும் அதிர்ச்சியில் ஆட்பட்டவராக கேட்டார்...

“ஆமா... அவனே சொன்னான்... அந்த கருமத்த மாத்திக்க சொல்லி எவ்வளவோ அடிச்சு, திட்டியும் சொல்லிப்பாத்தாச்சு... அது இயற்கையானது, தப்பில்லன்னுதான் திரும்ப திரும்ப சொல்றானே தவிர, மாத்திக்க ட்ரை பண்றேன்னு கூட சொல்லல.. இன்னிக்கு ஒரு மனநல மருத்துவர்கிட்ட அவன மாத்துறதுக்காக கூட்டிட்டு போகலாம்னு இருக்கோம்... உங்கமேல ரொம்ப பாசமா இருப்பான்ல, நீங்களாச்சும் எதாவது சொல்லி மாத்தமுடியுதான்னு பாருங்க!... இல்லைன்னா மொத்தமா நானும் உங்க மருமகளும் நாண்டுகிட்டு சாகவேண்டியதுதான்! வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே சொல்லிமுடித்தார்...

துரைப்பாண்டிக்கும் கண்கள் கலங்கியிருந்தது... மகன் சொல்வது உண்மையா?... நீரு ஏன் இப்படி ஆனான்?... எல்லா விவரமும் நல்லா தெரிஞ்ச பிள்ளையாச்சே, இது தப்புன்னு மட்டும் ஏன் புரியல?... மகன் சொல்றதும் நியாயம்தான், இந்த விஷயம் வெளில தெரிஞ்சா என்னாகுறது?... எப்படியாவது அவனை மாத்திடனும்? நம்ம குடும்பத்துக்கு அசிங்கமான பேரு வந்திடாத அளவுக்கு அவனுக்கு எல்லாத்தையும் புரியவைக்கணும்... மனதிற்குள் எண்ணிக்கொண்டே, நீரஜ் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தார் துரைப்பாண்டி...

எட்டுமணி ஆனதுகூட தெரியாமல் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறான், போர்வையை இழுத்து தலையோடு சேர்த்து போர்த்தியபடி... ஜன்னல் திரைகளை விலக்கி, சூரிய ஒளி அவன் மீது படும்படி செய்தார்... அப்போதும் தூக்கம் களையவில்லை... வழக்கமாக பேரனை பார்க்க வந்திருக்கும் தாத்தாவாக இருந்திருந்தால், போர்வையை விலக்கி கன்னத்தை உருவி கொஞ்சியபடி, “ஐயா நீரு!... எப்புடி இருக்காரு எங்கய்யா?ன்னு வாஞ்சையோடு கேட்டிருப்பார்...

ஆனால், இன்றோ நீரஜ் மீது ஒருவித மெல்லிய கோபம் கலந்த வெறுப்பு... வழக்கம்போல பாசமழை பொழிந்தபடி அவனிடம் பேசினால், தன் கோபமும் ஆதங்கமும் கரைந்துபோய்விடும்... அதனால், விறைப்பாகவே அவன் போர்வையை விலக்கினார்...

முகத்தைவிட்டு போர்வை விலகிய மறுநிமிடம் துரைப்பாண்டி அப்படியே அதிர்ந்துபோனார்... நீருவா இது?... முகம் முழுக்க காயங்களுடன், ரத்த சுவடுகள் கூட காய்ந்துபோய் சுத்தப்படுத்தப்படாமல்... கரம்பயத்து மாரியம்மா, என்ன இது சோதனை?... வெள்ளை ரோஜா பூத்ததை போல எப்போதும் மலர்ந்து காணப்படும் அந்த முகத்தில்தான் இன்றைக்கு, காயங்கள் நிறைக்கப்பட்ட சுவடுகள்...

கண்ணுக்கு கீழே காயம், உதட்டின் ஓரங்களில் ரத்தக்கசிவு, கன்னத்தில் கீறப்பட்ட காயங்கள்... முருகா, இப்படி ஒரு கோலத்தில் இவனை பார்க்கவா ஆவலோடு வந்தேன்?.. அதுமட்டுமல்லாது இப்படி உடல் மெலிந்துபோய், கண்கள் உள்வாங்கிப்போய்.. அப்பப்பா, உருக்குழைந்து கிடக்கிறான் என்ற இரண்டே வார்த்தையில் மொத்தத்தையும் சொல்லிடலாம்....

கட்டிலில் மெள்ள அமர்ந்து, தலையை தன் மடிமீது தூக்கிவைத்துக்கொண்டு காயங்களை தன் கைகளால் வருடினார்... அசதி களைந்து அப்போதுதான், வலியின் முனகலோடு கண்விழித்தான் நீரு...

தாத்தாவை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியால் துள்ளிக்குதித்தான்.. படுக்கையில் மண்டியிட்டு அமர்ந்தபடி, “தாத்தா எப்ப வந்த?... நீ வரேன்னு யாரும் சொல்லவே இல்ல?... ஆளே கருத்துப்போய்ட்ட, வயல்லயே நிக்குறியா?.. உடம்பை ஒழுங்காவே பாக்குறதில்ல போல, நாளைக்கு உனக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் ஒன்னு பண்ணிடனும்... தாத்தாவின் கையை பிடித்தபடி காயத்தின் வலிகள் கூட மறந்தவனாக இயல்பாக நலம் விசாரித்தான்...

துரைப்பாண்டியால் எந்த கேள்விக்கும் பதில்சொல்ல முடியவில்லை, கண்கள் கலங்க அவன் கன்னங்களை வருடினார்... “என்னய்யா இதல்லாம்? கட்டிப்பிடித்து கண்கள் கலங்கினார்...

அப்போதுதான் காயங்கள் நினைவில் வந்தவனாக, கன்னத்தை தடவிப்பார்த்துக்கொண்டான் நீரஜ்...

தோளில் கிடந்த துண்டை எடுத்து, தண்ணீரில் ஒற்றியபடி அவன் காயங்களில் படிந்திருந்த ரத்த சுவடுகளை துடைக்கத்தொடங்கினார்...

மூன்று நாட்களுக்கு முன்பு, நேற்றைக்கு முந்தையநாள், நேற்றுன்னு அடித்த அடிகளுக்கு ஏற்ப காயங்களும் புதியதும், பழையதுமாக கலந்தே காணப்பட்டது... காயங்கள் மீது தண்ணீர் படும்போது, “ஷ்ஷ்ஷ்... என்று வலியால் நீரு துடித்தான்... காயங்களின் மீது மருந்து பூசிவிட்டு, ஓரளவு முகத்தை இயல்பாக்க எத்தனித்த முயற்சியில் துரைப்பாண்டி தோல்விதான் அடைந்தார்... முகம் முழுக்க நிறைந்த காயங்களை எப்படி மறைத்து, இயல்பான முகமாய் மாற்றமுடியும்? போட்டோஷாப்பால் மட்டுமே முடிந்த வித்தை, அவருக்குத்தான் புலப்படவில்லை...

கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே, நீருவின் முகத்தை வருடினார்...

“ஏன் தாத்தா அழுவுற? அம்மா குடுத்த காபிய குடிச்சிட்டியோ?ன்னு சோகம் மறந்தவனாக சிரித்தான்...

தாத்தாவுக்கும் இயல்பாகவே சிரிப்புவந்தது, அறையில் சூழ்ந்திருந்த இறுக்கம் இப்போது வெகுவாகவே தளர்ந்திருந்தது....

“நானே இந்த செமஸ்டர் லீவுக்கு ஊருக்கு வரலாம்னுதான் இருந்தேன்... நீதான் என்ன மறந்துட்ட, நானாச்சும் பாக்க வரலாம்னு இருந்தேன்... உரிமையோடு கோபித்துக்கொண்டான்...

“அப்புடில்லாம் இல்லய்யா... ஊருல நெறைய வேல, அதான் வரமுடியல... அதான் இப்ப வந்துட்டேன்ல பரிவோடு தலையை வருடியபடி சொன்னார்...

தாத்தாவின் விவசாயவேலை, பேரனின் கல்லூரிப்படிப்பு, உறவினர் வீட்டுத்திருமணம், சென்னையின் வெயில், காவிரியின் வறட்சின்னு இருவருக்கும் அந்த இரண்டு மணி நேரத்திற்கு பேசிட ஆயிரம் விஷயங்கள் இருந்தன.. வந்த விஷயத்தை மறந்த தாத்தாவும், இறுக்கமான சூழலை தளர்த்திட நினைத்த பேரனுக்கும் இப்படி பொதுப்படை பேச்சுகள் அப்போது அவசியமாகப்பட்டது...

“ஐயோ, மணி பத்தாகிடுச்சு... நான் போய், நம்ம ரெண்டுபேருக்கும் டிபன் வாங்கிட்டு வரேன்... நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு தாத்தா... என்று எழுந்து சட்டையை மாட்டத்தொடங்கினான் நீரஜ்...

“ஏன்யா, வீட்ல இன்னிக்கு சமைக்கலையா?

“சமைச்சாலும் நமக்கு சாப்பாடு கிடையாது... சிரித்தான்...

“ஏன்?

“ரெண்டுநாளா அப்டிதான்... பசிக்குறப்போ ஹோட்டல், இல்லாட்டி பட்டினி... அப்பா ஆபிஸ் போகாம இருந்திருந்தா உனக்காச்சும் சாப்பாடு கிடைச்சிருக்கும், அம்மா மட்டும்தான் இப்ப இருப்பாங்கங்குறதால, உனக்கும் கிடைக்காது... இதெல்லாத்தையும்விட ஒரு நல்ல சாப்பாடு சாப்பிடுறதுக்கு ஏன் இவ்ளோ கேள்வி கேட்குற? உடைகளை மாற்றிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாகிவிட்டான்...

“இதல்லாம் தேவையாய்யா?... என்று பிரச்சினை குறித்து தொடக்கப்புள்ளி வைக்க நினைத்த தாத்தாவின் பேச்சை, “சாப்பாடுதான் இப்போ தேவை, நான் கிளம்புறேன் என்று சொல்லி முற்றுப்புள்ளி ஆக்கிவிட்டான் நீரஜ்...

கட்டிலில் படுத்தபடி நீருவைப்பற்றி சிந்திக்கத்தொடங்கினார்... இவ்வளவு பாசக்கார புள்ளையா தப்பு பண்ணுச்சு?... நல்லா விபரம் தெரிஞ்ச புள்ள, ஒருவேளை அந்த அதீத விபரமே அவனை மாறுபட்டு சிந்திக்கவைத்திருக்குமோ?... எப்படி யோசித்திருந்தாலும், அதை மாற்றிவிட்டுதான் ஊருக்கு போகணும்... பொதுவா ஒரு திட்டு திட்டினாவே, அம்புட்டு அழுது தப்பை உணர்ந்துகொள்ளும் நீரு ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கணும்?... பேசிப்பார்க்கலாம்....

பலவாறும் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, சாப்பாட்டு பொட்டலங்களுடன் நீரஜ் வந்துவிட்டான்...

“இன்னிக்காச்சும் அரிசி செண்டிமெண்ட் பாக்காம, பூரி சாப்பிடு தாத்தா...

“இல்லப்பா வேணாம்... நமக்கு அரிசி பலகாரத்த தவிர வேற எதுவும் ஒத்துவராது... இட்லியை பிரித்து சாப்பிடத்தொடங்கினார்...

“நீ அழுத்தக்கார ஆளுதான்...

அவனும் பசியின் விளைவாக அரக்கபபறக்க சாப்பிட்டான்... தண்ணீர்கூட பாட்டிலில் வாங்கிவந்திருக்கிறான், வீட்டின் அறுந்த தொடர்புகள் அதிலேயே பட்டவர்த்தனமாக தெரிந்தது...

“நான் அழுத்தக்கார ஆளுன்னா, நீ என்னவாம்? தாத்தா மெள்ள பேச்சைத்தொடங்கினார்...

“உம்பேரன் தான? நானும் அப்புடித்தான் இருப்பேன் சிரித்துக்கொண்டான்..
“எல்லா விஷயத்துலயும் அழுத்தமா இருந்துடக்கூடாதுய்யா, சரியான விஷயத்துக்கு மட்டும்தான் இருக்கணும்...

“உன் பேரனுக்கு சரி தப்பு புரியாதுன்னு நினச்சுட்டியா?

வார்த்தைக்கு வார்த்தை பொட்டில் அறைந்தாற்போல பதில்.. ஒருபக்கம் அதைப்பார்த்து தாத்தாவாக பெருமைப்பட்டுக்கொண்டாலும், மறுமுனையில் திசைமாறி செல்லும் பேரனை எப்படியாவது சரியான வழியில் பயணிக்க செய்திடவேண்டும் என்ற பொறுப்பும் அவர் தலை மீது சுமத்தப்பட்டுள்ளதன் கவலை...

சாப்பிட்டு முடித்துவிட்டு, கட்டிலில் அமர்ந்து பலவாறும் பேசிக்கொண்டிருக்கும்போதும்கூட துரைப்பாண்டி தன் முயற்சியை கைவிடவில்லை...

“இன்னும் எத்தன வருஷம் படிக்கனும்யா?

“கடைசி வருஷம் இதான் தாத்தா... அடுத்த வருஷமல்லாம் ஜம்முன்னு வேலைக்கு போய்டலாம்... நான் வேலைக்கு போனதும் என்கூடவே வந்து தங்கிடு தாத்தா... நல்ல காபி போட்டுத்தரேன்... சிரித்தான்...

“அதுக்கென்னய்யா வந்துரலாம்... ஆனா, என் மண்டை போறதுக்குள்ள உனக்கொரு கல்யாணத்த பண்ணி வச்சு பார்த்துட்டா சந்தோஷமா போவேன்...

“தாத்தா எனக்கு இப்ப என்ன வயசாகுது?.. இப்பதான் 21... அதுக்குள்ளையும் இந்த பேச்சு அவசியமா?

“இப்போ சொல்லலைய்யா... இன்னும் ஒரு நாலு வருஷத்துக்குள்ள நடந்தா தேவல...

“அதுக்கென்ன... பண்ணிடலாம்... இயல்பாக சொன்னான்...

“நெசமாவா சொல்ற? ஆச்சர்யத்தோடு கேட்டார்...

“ஆமா தாத்தா...

“நம்ம ஒரத்தநாட்டுல உன் மாமன் முருகேசன் இருக்கானே, அவன் மககூட இந்த ஊர்லதான் படிக்குதாம்... உனக்கு கட்டுறதுக்கு கொள்ள இஷ்டம்...

“அந்த மாமாவுக்கு பையன் இருந்தா சொல்லுங்க, அவனை கட்டிக்கலாம்... போட்டு உடைத்துவிட்டான்...

துரைப்பாண்டி எதுவும் பேசவில்லை... நேரடியாக கேட்டிட தயக்கப்பட்டு இப்படி மறைமுகமாக, தருணம் பார்த்து தயக்கத்துடன் சொன்ன விஷயத்தை, இப்படி கேலிப்பொருளாக ஆக்கிவிட்டதில் அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே கோபம்...

“என்ன தாத்தா கோவிச்சுகிட்டியா?... பின்ன என்ன, எதாச்சும் கேட்குறதுன்னா நேரடியா கேக்க வேண்டியதுதான?.. ஏன் இவ்வளவு தயக்கம்?... ஆமா தாத்தா, அப்பா சொன்ன எல்லாம் உண்மைதான்... எனக்கு பொண்ணுக மேல ஈர்ப்பு இல்ல, பசங்க மேலதான் உண்டு... மண்சட்டியை தரையில் போட்டதை போல, சுக்குநூறாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டான்...

சிறிது மௌனத்திற்கு பிறகு, “நீரு, இதல்லாம் தப்புய்யா... நம்ம குடும்பத்துக்கு எதுவும் ஒத்துவராது... கொஞ்சம் மாத்திக்க முயற்சிபண்ணலாம்ல? கேட்டார்...

“மாத்த முடிஞ்ச விஷயமா இருந்திருந்தா, இவ்வளவு அடி திட்டு சண்டைன்னு ஏன் தாத்தா போகப்போறேன்?... நான் பிறக்குறப்போவே இப்புடித்தான் தாத்தா... என்னை மாதிரி நூத்துல பத்து பேர் இந்த உலகத்துல இருக்குறாங்க... உங்க எல்லாருக்காகவும் மாத்திக்கிற மாதிரி நடிச்சாக்கூட, வாழ்க்கை முழுக்க நடிச்சுகிட்டே வாழனும் தாத்தா... தாத்தாவின் கைகளை பிடித்துக்கொண்டு உருக்கமாக சொன்னான்... அவருக்கும் கண்கள் கலங்கியது... இதற்கு மேலும் அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை, நீருவை தன் மடியில் கிடத்தி தலையை வருடினார்.... நீருவின் கண்களில் உண்மை தெரிந்தது, வார்த்தைகளில் உருக்கம் தொனித்தது, அதை ஆராய்ச்சி செய்ய தாத்தாவாக துரைப்பாண்டி விரும்பவில்லை... 

இது சரியா? தப்பா? யோசிக்க தோன்றவில்லை... ஊர் உலகம் பேசுவதில்கூட  கவலை இல்லை... நீரு சந்தோஷமா இருக்கணும், வாழ்க்கை முழுக்க இப்புடி அழுதுகிட்டே இருக்கக்கூடாது... வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவரும் கட்டிலில் சாய்ந்தார்....

மாலை ஆறு மணி...

தாத்தாவும் பேரனும் உறவினர் வீட்டு சம்பவம் ஒன்றைப்பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்...

படாரென அறைக்கதவு திறக்கப்பட்டது... மகனும், மருமகளும் அறைக்குள் வந்ததை தயக்கத்தோடு பார்த்தார் துரைப்பாண்டி... 

“நான் சொல்லல, காலைலேந்து இந்த கூத்துதான் நடக்குது... ஹோட்டல் சாப்பாடு என்ன, சிரிப்பு சத்தம் என்ன... அப்பப்பா... வீட்ல என்ன பிரச்சின ஓடிகிட்டு இருக்கு, பெரிய மனுஷரா உங்கப்பா பண்ணிக்கிட்டு இருக்குற கூத்த பாத்திங்களா?அலுவலகத்திலிருந்து வந்த கணவனை உடைகளைக்கூட மாற்றவிடாமல், மாமனாரை குறைசொல்ல அறைக்குள் அழைத்துவந்து பொரிந்துதள்ளினாள் நீரஜின் அம்மா...

துரைப்பாண்டி குறுகிப்போய் அமர்ந்திருந்தார்...

“என்னப்பா இதல்லாம்?... நீங்களாச்சும் நாலு நல்லது சொல்லி அவனுக்கு புரியவைப்பிங்கன்னு பார்த்தா... அடச்ச... அப்படியே மனைவியின் கருத்துகளை பிரதிபலித்தார்...
 
தலையை கவிழ்த்தபடி, பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார் துரைப்பாண்டி...

“இப்ப உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சின?... எதுக்கு தேவையில்லாம தாத்தாவ பேசுறீங்க?... என் மேல கோபமிருந்தா வழக்கம்போல வந்து அடிங்க, முடியலைன்னா அன்னிக்கு மாமாவ கூட்டிட்டு வந்து மிரட்டுனது மாதிரி மிரட்டுங்க... தேவையில்லாம தாத்தாவ பேசுனா, நான் சும்மா இருக்கமாட்டேன் கட்டிலிலிருந்து விருட்டென எழுந்து உரக்கப்பேசினான் நீரஜ்...

இதுவரை அமைதியாகவும், அழுதுகொண்டும் மட்டுமே இருந்த நீரஜ்தானா இது? ஆச்சர்யமாக பார்த்தார்கள் அனைவரும்...

“பார்த்திங்களா என்ன நடக்குதுன்னு?... என்னமோ உங்கப்பா வந்தா பேசி மாத்திடுவார்னு அப்டியே ஜம்பம் பேசுனீங்க?... இப்போ எப்புடி மாத்திருக்கார்னு பார்த்திங்களா?... இன்னும் நம்மள இவன் அடிக்காதது மட்டும்தான் குறை... கண் கலங்கினாள் நீரஜின் அம்மா...

மனைவியின் கண் கலங்கியதில், உருகிப்போனது என்னவோ கணவன்தான்...

“போதும்மா நடிப்பல்லாம்... கடைசிவரைக்கும் என் மேல தப்பு இருக்கக்கூடாதுன்னு ஒரு அம்மாவா நீ நினைக்கிறது தப்பில்ல... ஆனா, இதுல சம்மந்தமே இல்லாம தாத்தாவ வில்லனா ஆக்கப்பார்க்குற உன்னோட மைண்ட்செட் ரொம்ப கொடூரமானது... நீரஜ் பேச, அவனை பேசவேண்டாமென சைகை செய்தார் தாத்தா....

“வாயை மூடு ராஸ்கல்... நீ படிச்சு பெரிய கம்பெனில ஜாப்க்கு போகணும், எல்லா வசதிகளோடவும் சந்தோஷமா இருக்கனும்னுதான் இவ்வளவும் பண்றோம்... நீ மட்டும் உன் ஈர்ப்பை மாத்தி நார்மல் ஆகிட்டேன்னா, பெரிய லெவலுக்கு போய்டுவ நீரஜ்... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் இறங்கினார் அப்பா...

“என்னோட ஓரியன்டேசன மாத்திகிட்டாதான் நான் பெரிய லெவலுக்கு போகமுடியும்னு யாருப்பா சொன்னா?... நீங்க எப்பவும் ஆசையா வாங்கனும்னு சொல்லுவீங்களே ஆப்பிள் ஐபோன், அந்த கம்பெனியோட சி.இ.ஓ டிம் குக் ஒரு கேப்பா... நீங்க தினமும் ஆப்பரேட் பண்றீங்களே கம்ப்யூட்டர், அந்த மாடர்ன் கம்ப்யூட்டரோட தந்தைன்னு சொல்லப்படுற ஆலன் தூரிங் ஒரு கேதான்பா... இன்னும் எத்தனையோ ஜாம்பவான்கள் பற்றி சொல்லலாம், ஆனா எதையும் புரிஞ்சு ஏத்துக்கற மனநிலைலதான் நீங்க இல்ல... மிகத்தெளிவாக சொல்லிமுடித்தான் நீரஜ்...

அவன் சொன்ன பெயர்களோ, ஆட்களோ எதுபற்றியும் துரைப்பாண்டிக்கு புரியவில்லை என்றாலும், இந்த சூழலில் தன் பேரனும் அவங்களைப்போல உயரத்துக்கு வருவான்னு நம்பிக்கை ஒரு தாத்தாவாக அவருக்குள் உண்டானது...

நீரஜின் பெற்றோருக்குதான் எத்தகைய சமாதானத்திலும் உடன்பாடில்லை...
சிறிது நேரத்து மௌனத்திற்கு பிறகு, “ஏழு மணிக்கு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மென்ட்... கிளம்பிரு, போகலாம்.. என்று மட்டும் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினார் அப்பா...

மனதிற்குள் விரக்தியில் சிரித்தவனாக, உடைகளை மாற்றத்தொடங்கினான் நீரஜ்...


                                  ***********
ஒன்பது மணி ஆகிவிட்டது... மருத்துவரை பார்க்கப்போன மூவரையும் இன்னும் காணவில்லை...

கதவை திறந்துகொண்டு வாசலில் நின்று, சாலையை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் துரைப்பாண்டி...
ஏழு மணிக்கு டாக்டரை பாக்கனும்னு சொன்னாங்க, இன்னும் ஆளை காணுமே? என்ற பதற்றம் துரைப்பாண்டியின் முகத்தில் குடிகொண்டுவிட்டது... அலைபேசியை எடுத்து தட்டுத்தடுமாறி மகனின் எண்ணிற்கு அழைத்தால், அது அணைத்துவைக்கப்பட்டுள்ளது...

பத்து மணியென கடிகாரம் காட்டியபோதுதான் மகிழுந்து வீட்டின் வாசலில் வந்து நின்றது...

மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டு சகிதமாக முதலில் இறங்கிய மருமகளை அவர் பார்வை பொருட்படுத்தவில்லை... வண்டியை நிறுத்திவிட்டு மகன் இறங்கும்வரையிலும் கூட நீரஜ் இன்னும் இறங்கியபாடில்லை, மனம் கொஞ்சம் வேகமாகவே படபடத்தது...

இறங்கிய மகன், பின் கதவை திறந்து கைத்தாங்கலாக நீருவை இறக்கியபோதுதான் அதிர்வின் எல்லையை அடைந்தார் துரைப்பாண்டி...

“ஐயோ... என்னாச்சுப்பா? பதறிப்போய் நீரஜை இன்னொருப்பக்கம் தாங்கியபடி நடந்தார்....

படுக்கையில் கிடத்தப்பட்ட நீரஜ் சுரத்தை இன்றி கிடந்தான்.. உடல் முழுக்க வியர்த்து, வாயிலிருந்து எச்சில் வழிந்துகொண்டிருந்தது... ஏற்கனவே காயத்தின் சுவடுகளுடன் காணப்பட்ட முகம், இப்போது இன்னும் அதிக அலங்கோலமாக தெரிந்தது...

“என்னப்பா ஆச்சு?... ஏன் இப்புடி கிடக்குறான்? பதற்றம் இன்னும் அதிகமானபடி கேட்டார் துரைப்பாண்டி...

“ஒன்னும் பயப்பட வேணாம்பா... அவனோட ஈர்ப்பை மாத்த ஈ.சி.டி சிகிச்சை கொடுத்திருக்காங்க, அவ்ளோதான்... அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்..

“இப்புடி கந்தலா போற அளவுக்கு அதென்ன சிகிச்சைப்பா?... ஏன் இவனப்போட்டு இந்த பாடு படுத்துறீங்க? சொல்லும்போதே குரல் உடைந்து, கண்களும் கலங்கிவிட்டது...

“ஷாக் ட்ரீட்மெண்ட்ப்பா... கரண்ட் வைக்குற சிகிச்சை... இன்னும் ஒருவாரத்துக்குள்ள சரி ஆகிடுவான் பாருங்களே... நீங்க இப்ப பண்ண வேண்டியது ஒரே ஒரு உபகாரம்தான்... நாளைக்கு காலை ட்ரைன்ல உங்களுக்கு டிக்கெட் போட்டிருக்கேன், கோவிச்சுக்காம கிளம்புங்கப்பா... சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் அறையைவிட்டு வெளியே சென்றார் துரைப்பாண்டியின் மகன்...

கதவை சாத்திவிட்டு, நீருவின் அருகில் வந்து அமர்ந்தார் துரைப்பாண்டி... வழிந்திருந்த எச்சிலை தன் உள்ளங்கையால் துடைத்து, களைந்த தலையை சரிசெய்தார்...

“ஏன்யா இப்புடி கஷ்டப்படுற?... கரண்ட் கொடுத்தா நீ சரி ஆகிடுவன்னு யாரோ சொன்னதால கரண்ட் கொடுத்த உங்கப்பா, நீ மாறவே முடியாதுன்னு தெரிஞ்சுதுன்னா கொன்னாலும் ஆச்சர்யமில்லய்யா... அந்தஸ்து, கலாச்சாரம்னு பேய் புடிச்சு அதுகள ஆட்டிவைக்குது, அந்த நேரத்துல நீ சொல்றத காது கொடுத்து கேக்கக்கூட அவுகளால முடியாது... எனக்கு நீ சொன்ன எதுவும் வெளங்கல, ஆனா எதாச்சும் செஞ்சு இப்புடி கஷ்டப்படாம இருக்கப்பாருய்யா...நீருவுக்கு கேட்கிறதோ இல்லையோ, அவனால் இதல்லாம் உணரமுடியுமோ முடியாதோ... எதைப்பற்றிய கவலையும் இல்லாது, ஒரு புலம்பலாக சொல்லிமுடித்தார் துரைப்பாண்டி...

விடிந்தால் பயணம் கிளம்பியே ஆகணும், மறுத்துப்பேசி இருப்பதல்லாம் சாத்தியமில்லை.. நகரும் இரவுத்துளிகள் மட்டுமே நீரஜுடன் அவரால் கழிக்கமுடியும் என்பதால் உறங்க விரும்பாமல் பலவாறும் அவனைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்... அழுகையும், புலம்பலும் நிறைக்கப்பட்டு கழிந்த இரவு, மெள்ள விடியலை விதைத்தது...

ஐந்து மணிக்கல்லாம் அறைக்கதவை தட்டினார் மகன்...

“ஏழு மணிக்கு ட்ரைன், ஆறு மணிக்கு இங்கிருந்து கிளம்பனும்... தகவலை மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்... சம்பிரதாயத்துக்குக்கூட பிள்ளையை உட்புகுந்து பார்க்கவில்லை...

நீரஜ் இன்னும் தூக்கம் களைந்து எழவில்லை... துண்டை எடுத்துக்கொண்டு குளிப்பதற்காக குளியலறைக்குள் சென்றார் துரைப்பாண்டி... மனதில் இறக்கமுடியாத பாரம் அழுத்திக்கொண்டே இருக்கிறது, கண்கள் கூட கண்ணீரை வெளியேற்ற எந்நேரமும் ஆயத்தமாகவே இருக்கிறது...

ஆண்டவா... முருகா... இந்த சிக்கல்களிலிருந்து உன் பிள்ளையை காப்பாற்று! என பொறுப்பை கடவுளிடம் விட்டுவிட்டு, குளித்துமுடித்து வெளியே வந்தார் துரைப்பாண்டி...

வெளிவந்த அவரால் அவர் கண்களையே நம்பமுடியவில்லை... நீரஜ் சோபாவில் அமர்ந்திருக்க, அவனருகில் அமர்ந்து கைகளை பிடித்து இயல்பாக பேசிக்கொண்டிருக்கிறார் மகன்... கையில் கோப்பையில் காபியை ஆற்றிக்கொண்டே மகிழ்வாக காணப்படுகிறாள் மருமகள்.. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, இப்படியோர் காட்சிக்கு அங்கு வாய்ப்பே இல்லை... என்னவாக இருக்கும்? என்று யோசித்தபடியே அவர்கள் அருகில் சென்றார் துரைப்பாண்டி...

“அப்பா, இங்க பார்த்திங்களா என் மகன் நார்மல் ஆகிட்டான்?... ஷாக் ட்ரீட்மெண்ட்க்கு ரொம்ப பயந்திங்களே, இப்ப அதனாலதான் மாறிருக்கான்... ஒருவழியா இப்பதான் நிம்மதியா இருக்கு! முகமெல்லாம் புன்னகையாக படபடவென சொல்லிமுடித்தார்...

துரைப்பாண்டியால் இன்னும் ஆச்சர்யத்திலிருந்து விலகமுடியவில்லை.. நீரஜையே நோக்கினார்.. இயல்பாக இருப்பதைப்போலத்தான் காட்டிக்கொண்டான்.. எப்படி இது சாத்தியம்?.. குழப்பம் மேலிட்டவராகவே யோசித்துக்கொண்டிருந்தார்...

“ஏங்க ஏழு மணிக்கு ட்ரைன்னு சொன்னிங்க, மணி ஆறு ஆகிடுச்சு... கிளம்பலையா? வந்தது முதலாகவே மருமகள், அவள் வேலையை சரியாக செய்துவிடும் நேர்த்தியானவள்... துரைப்பாண்டியால் பெருமைபட்டுக்கொள்ள மட்டும்தானே முடியும்!...

“ஆமாப்பா... ட்ரெஸ் மாட்டிட்டு கிளம்புங்க, போகலாம்... வழக்கம்போல வழிமொழிந்தான் மகனும்...

தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தவராக அறைக்குள் சென்று உடைகளை அணியத்தொடங்கினார் துரைப்பாண்டி... மெள்ள நீரஜ் உள்ளே வந்தான்...

“இனி நீ அலையவேண்டாம் தாத்தா... செமஸ்டர் லீவுக்கு நானே ஊருக்கு வரேன்...தாத்தாவின் துணியை மடித்துக்கொண்டே சொன்னான் நீரஜ்...

அவர் பதில் எதுவும் சொல்லவில்லை, ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்துபோய் காணப்பட்டார்... “அப்பா... வாங்க போகலாம்... மகனின் குரல் வெளியில் ஒலிக்கத்தொடங்கிவிட்டது, நேரம் ஆகிவிட்டதென சத்தம் போடவும் தொடங்கிவிட்டார்...

“உடம்ப பாத்துக்கோ தாத்தா, வேலைய கொஞ்சம் குறைச்சுக்கோ... எதையும் போட்டு குழப்பிக்காம நிம்மதியா இரு தாத்தா...” 

அதற்கு மேலும் அவரால் கேட்காமல் இருக்கமுடியவில்லை...

“நிஜமாவே நீ மாறிட்டியா நீரு?

“நம்பமுடியலையா தாத்தா?

“தெரியல... ஆனா உன்னால மாறமுடியாதுன்னு நினச்சேன்...

“அந்த நினைப்பு உங்க புள்ளைக்கு வந்திருந்தா, நீங்க சொன்னபடி கொன்னிருக்கக்கூட தயங்கமாட்டார் தாத்தா... நம்ம ஊர்கள்ல ரேக்ளா பந்தயத்துக்கு வளர்க்குற மாடுகள் சரியா ஓடலைன்னா, அடிமாட்டுக்கு கேரளாவுக்கு அனுப்பிடுவாங்கள்ல?.. அப்டி பந்தயத்துக்காக என் அப்பாம்மா வளர்க்குற மாடுதான் நான், சரிவரலைன்னா அடிமாடுதான்...விரக்தியில் சிரித்தபடி சொன்னான்...
“அப்டின்னா? அதிர்ந்து போனார்...
“அவங்க மாறுற வரைக்கும், நான் மாறின மாதிரி நடிக்க வேண்டியதுதான்.. உடைகளை பைக்குள் திணித்து, தாத்தாவின் கைகளில் கொடுத்தான்... அழுது வரண்டுபோன நீரஜின் கண்கள், விரக்தியான பார்வையை மட்டுமே தாங்கி நின்றது..
நீருவிடம் என்ன பேசுவது? எதை சொல்வது? என்றல்லாம் அவருக்கு புரியவில்லை... அவனை கட்டி அணைத்து அழமட்டுமே அவரால் முடிந்தது... லாக்ரிமல் சுரப்பி வரண்டுபோகும்வரை அழுதார்!... (முற்றும்)
         

7 comments:

  1. very good narration. I have heard lot of such treatments going on. I wish alcoholics, womanizers can be given such treatments and see if a habit they developed over years can be changed, sexual orientation can be changed too.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி பிரபு... இன்னும் கூட சமபால் ஈர்ப்புக்கு மின் சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கும்னு பலபேர் நம்புறாங்க... அது அப்பட்டமான மடத்தனம்... அதை எல்லாரும் இனியாவது புரிஞ்சுப்பாங்கன்னு நம்புவோம்...

      Delete
  2. உருக்கமான கதை! தாத்தா பேரன் ரெண்டு பேருமே உயர்ந்து நிக்கறாங்க... அந்த காலத்து தாத்தா... முழுக்க புரிஞ்சிக்க முடியலன்னாலும்.. உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க தெரிஞ்சிருக்கார்...
    இந்த காலத்து பேரன்... தன்னிலை பற்றி நல்லா புரிஞ்சிருந்தும்... பெத்தவங்க உணர்வுக்கு மதிப்பளிச்சி நடிக்க ஆரம்பிச்சிருக்கார்...

    நீரஜ் வாழ்க்க முழுக்க நடிக்கும்படியா இல்லாம.. அவனோட பெத்தவங்க... அவனோட உணர்வுகள புரிஞ்சிப்பாங்களா...?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணாச்சி... இங்க வாழற பல நீரஜ் அப்படித்தான்... சமூகம் புரிஞ்சுக்கற வரைக்கும் நடிக்க வேண்டிதான் இருக்கு!

      Delete
  3. idha padikum podhu kastama iruku na....... naama epo dha namakaga nu vaalradhu?? We always live for others... Really Disgusting......

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நமக்கான விடியல் வரும் தம்பி... கொஞ்சம் தாமதமானாலும் கூட, நிச்சயம் ஒருநாள் வரும்...

      Delete
  4. thatha character yenaku romba pidichi irunthathu vijay
    but avra mathiri pasam matum pothum mathathu yethuvum venamnu yaarum iruka matenguranga

    ReplyDelete