Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 21 April 2015

டெல்லியை உலுக்கிய ப்ரியாவின் தற்கொலை - தவறுகள் யார் மீது?அண்மையில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் ப்ரியா வேதி என்ற பெண்ணின் தற்கொலை என்னை நிறைய பாதிப்புக்கு உள்ளாக்கியது... டெல்லியின் பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரியும் ப்ரியாவின் கணவரும் அதே மருத்துவமனையின் பிரபல தோல் நோய் மருத்துவரான கமல் வேதி என்பவர்தான்... 31 வயதாகும் ப்ரியாவிற்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில்தான், இந்த தற்கொலை நிகழ்ந்துள்ளது...

ப்ரியாவின் மரணத்திற்கு காரணம், அவர் கணவரின் சமபால் ஈர்ப்புதான் எனும்போது நமக்குள்ள சமூக பொறுப்பை நாம் இன்னும் உணரவில்லையோ?னு தோணுது... ஆம், ப்ரியாவின் கணவர் ஒரு கே, அதைத்தான் தன் மரணத்திற்கான காரணமாக தன் மரண வாக்குமூலம் போல எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார்... கே கணவனின் பாலீர்ப்பை மனைவி கண்டுபிடிப்பதென்பது அண்மைய காலங்களில் அதிகரித்துவரும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது... என்றாலும்கூட, ப்ரியாவின் கதை மற்றவைகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது, மிகவும் வருத்தத்திற்குரியது...

பேஸ்புக் தளத்தில் தமது அத்தனை துயரத்தையும் இறப்பதற்கு முன் பகிர்ந்துள்ளார்..

“எங்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆனாலும் கூட, இதுநாள் வரை இருவரும் பத்துமுறைக்கு மேல் உடலுறவில் ஈடுபட்டதில்லை... அவரால் என்னோடு இயல்பான உறவில் ஈடுபட முடிந்ததே இல்லை... நான் மருத்துவர் என்பதால், அதற்கான காரணங்களை மருத்துவக்குறைபாடு என்றே நினைத்து, பெரிதாக பொருட்படுத்தவில்லை... அதை யாரிடத்திலும் சொன்னதுகூட இல்லை... எனக்கு அவர் மீது நிறைய காதல் இருந்தது, என்றைக்காவது அந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தேன்... குழந்தை பெறாதது பற்றி குடும்பத்தினர் யாரேனும் கேட்டால்கூட, வேறு காரணங்களை சொல்லி சமாளித்துவிடுவேன்.. அந்த அளவிற்கு என் கணவன் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தேன்...

காவல்துறை விசாரணையில் கணவரின் அலைபேசி, மடிக்கணினி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அவருடைய போலி பேஸ்புக் கணக்கை கண்டுபிடித்துள்ளனர் காவல்துறை... அதில் நூற்றுக்கணக்கான கே உரையாடல்கள், புகைப்படங்கள், காணொளிகள் சிக்கியுள்ள நிலையில் ப்ரியாவின் வாக்குமூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது... இப்போது கணவன் கைதுசெய்யப்பட்டுவிட்டார்..

“என்னோட கணவரின் அசாதாரண நடவடிக்கையால் முதலில் நான் அவரை சந்தேகப்பட்டேன்... அவரோட மின்னஞ்சலில்  உரையாடல்கள், ஆண்களின் நிர்வாணப்படங்கள், வீடியோக்கள் இருந்ததை  பார்த்துவிட்டு, அவரிடம் விளக்கம் கேட்டேன்... அவரோட கணக்கை யாரோ ஹாக் செஞ்சுட்டதா சொல்லி சமாளிச்சார்... கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், பெருசா அலட்டிக்காம விட்டுட்டேன்...

மனைவிக்கு இப்படியோர் சந்தேகம் வந்ததும்தான் கணவனின் குணமும் மாறியது.. மெள்ள மெள்ள சண்டைகளை உருவாக்கியுள்ளார்.. ப்ரியாவை பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் ஏதாவது குறைகள் கண்டுபிடித்து, உளவியல் ரீதியாக நிறைய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளார்... மனைவி தனது பாலீர்ப்பை சந்தேகிப்பதிலிருந்து, திசைதிருப்புவதற்காக போடப்பட்ட சண்டைகளே பின்னாளில் மிகப்பெரிய பிரளயத்தை உண்டாக்குமென அவர் நினைத்திருக்க மாட்டார்...

“கொஞ்ச காலம் கழித்துதான், தான் கே என்பதை என்னிடம் வெளிப்படையாக சொன்னார்... பிற ஆண்களிடத்தில் தனக்கிருக்கும் தொடர்புபற்றியும் வெளிப்படையா சொன்னார்... எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தபடியால், எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக தோன்றவில்லை.. மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும்கூட, அவரைவிட்டு பிரிய வேண்டுமென நினைக்கவில்லை...

தனது பாலீர்ப்பை வெளிப்படுத்திவிட்டால், மனைவி விலகிவிடுவாள் என்று நினைத்து சொன்னாரா? என்று தெரியவில்லை... அப்படி வெளிப்படுத்திக்கொண்ட பிறகுதான், ப்ரியாவை அதிகம் கொடுமைபடுத்தியுள்ளார் கணவர்... பிரேத பரிசோதனையின் முடிவில்கூட உடம்பெல்லாம் காயங்கள், துன்புறுத்தல் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது... ஒரு இரவில் கொடூரமாக தாக்கப்பட்டு, மூச்சுக்கூட விடமுடியாத நிலையல்லாம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது...

அந்த சண்டைகளின் தொடர்ச்சியாகத்தான் கடந்த சனிக்கிழமை ப்ரியா வீட்டைவிட்டு வெளியேறி, அருகிலிருந்த ஹோட்டலில் தங்கியுள்ளார்... அங்குதான் கையில் கத்தியால் அறுக்கப்பட்ட காயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறாள்... தன் முடிவிற்கான அனைத்துக்காரணங்களையும் ஒன்றுவிடாமல், தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சமூகத்திற்கு சொல்லிவிட்டுத்தான் இறந்துள்ளார்...

ப்ரியாவின் மரண வாக்குமூலத்தின் இறுதி வரிகள், அவள் கணவனுக்காக சொன்னதல்ல... ஒட்டுமொத்த கே சமூகத்துக்கும், பெண்கள் தரப்பிலிருந்து சொல்லவிரும்பும் தகவல்...

“நான் உன்னை அளவுக்கதிகமா காதலித்ததற்கு பதிலுபகாரமாக என் சந்தோசம் அனைத்தையும் எடுத்துக்கொண்டாய்... நீ மனிதனே இல்லை, பேய்... என் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பறித்த பேய்... உன்னிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவே இல்லை.. உன்னிடமிருந்து செக்ஸ் எதிர்பார்த்ததாக நினைக்குறியா?... இல்லவே இல்லை, உன்னை மொத்தமாக ஏற்று, உன்னுடனே கடைசிவரை வாழணும்னு நினச்சேன்... ஏனெனில், அந்த அளவிற்கு உன்னை காதலித்திருந்தேன்... ஆனால், இது எதைப்பற்றியுமே சிந்திக்கத்தெரியாத நீ, நிச்சயம் ஒரு குற்றவாளிதான்... தயவுசெய்து எந்த கே நபரும், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவள் வாழ்க்கையை பறித்துவிடாதீர்கள்!”...  கத்தியை கையில்  வைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க அந்தப்பெண் எழுதிய கடைசி வார்த்தைகள் இவைதான்...

இங்கே பார்த்த ப்ரியாவின் முடிவு, அவள் கணவன் கே என்பதால் மட்டுமில்லை... காரணம், தன் கணவனின் பாலீர்ப்பை அறிந்தபிறகும்கூட, அவள் விலகமுயலவில்லை... தான் கண்டுபிடித்த சாட்சிகளை கொண்டு கணவனின் மீது வழக்குத்தொடுக்கவில்லை... எல்லாம் அறிந்தபிறகும் அவனுடனேயே வாழ நினைத்தார்... ஆனால், கமல் வேதியால் அப்படி வாழ முடியவில்லை போலும்... தன் பாலீர்ப்பை காரணம்காட்டி மனைவியை ஒதுக்க இவ்வளவையும் செய்த கமல், திருமணத்திற்கு முன்பு ஒருமுறை இதைப்பற்றி யோசித்திருந்தால் இந்த இழப்புகள் அவசியமா?...
ப்ரியாவின் மரணம் எத்தகைய அபாய மணியை அடித்துள்ளது? என்பதை உணர்ந்தீர்களா?... சட்டப்பிரிவு 377,  சமபால் ஈர்ப்பு உரிமைகள், திருமணத்திற்கான அங்கீகாரம் இதல்லாம் இங்கு இரண்டாம் பட்சம்தான்... முதல் மற்றும் முக்கிய கடமையே, இதைப்போன்ற இறப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதுதான்..

ஒரு கே நபரால், மற்றொரு பெண்ணுடன் உறவில் ஈடுபட முடியாது என்னும் சூழலில் நிகழ்கின்ற இத்தகைய திருமணங்கள்தான், இப்படி விளைவுகளை உண்டாக்குகிறது... வேறு ஆணை திருமணம் செஞ்சுதான் ஆகணும்னு கட்டாயம் இல்லை, ஆனால் குறைந்தபட்சம் ஒரு பெண்ணுடனான வாழ்க்கையை பறிக்காமல் இருக்கலாமே?...

உங்க ஒவ்வொருவர் பத்தியும் அவரவருக்கு மட்டுமே தெரியும்... ஒருவேளை, உங்களால் பெண்களுடன் உறவில் ஈடுபட முடியுமானால் (பைசெக்சுவல்), இப்படி தொடர்புகளை முழுமையாக துண்டித்துவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம்... அப்படி இல்லாது, பெண் மீது ஈர்ப்பே இல்லாத பட்சத்தில், திருமணம் செய்துகொள்வது ஆபத்தானதுதான்... பெண்கள் நுட்பமானவர்கள்... உங்க ஒரு முகமாற்றத்தை வைத்தே, மனதிற்குள் நினைப்பதை ஊகிப்பவர்கள்... அவர்களிடமிருந்து மறைத்து, நீங்க சமாளிச்சிடலாம்னு நினைப்பது மிகப்பெரிய ஆபத்தில் முடியலாம்... நம்முடைய பாலீர்ப்பை நான் சமாளிக்க முடியாமல், திருமணம் என்கிற சடங்கின் மூலம் அத்தனை சுமைகளையும் ஒரு அப்பாவி பெண்ணின் தலையில் சுமத்துகுவது நியாயமா?.. “திருமணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும்!னு நினைக்குற பெரும்பாலான கே ஆண்களின் வாழ்க்கை, இப்படி தவறான முடிவினில்தான் முற்றுப்பெறுகிறது... 

ப்ரியாவின் மரணம்தான் என்னை இப்படி பதறவைத்துள்ளது... அவளுக்கென எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்?.. அவளுடைய அத்தனை எதிர்பார்ப்புகளும் இப்படி சுக்குநூறாக உடைந்துபோனதில் எப்படி நொறுங்கி போயிருப்பாள்?... அவள் குடும்பத்தினரின் நிலைமை இன்னும் கொடுமையானது... போதும் போதும்... அந்த சகோதரியின் ஆன்மாவே, அப்படி இறக்கின்ற கடைசி மனிதராக இருக்கட்டும்...!

(இங்கே கமல் வேதி என்கிற தனி நபரின் குற்றங்களுக்கு சில ஊடகங்கள், ஒட்டுமொத்த சமபால் ஈர்ப்பு சமூகத்தையும் குற்றம்சாட்டுவதை போல கருத்தாக்கம் உருவாக்குகிறார்கள்... அதனை வன்மையாக கண்டிக்கிறேன்... கமல் வேதி செயலை எங்கள் சமூகத்து ஆட்களும் ஏற்கவில்லை, அதனை தவறென்பதை ஒப்புக்கொள்கிறோம்... அவரைப்போன்ற ஒருசிலரின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குறைசொல்ல வேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கிறேன்!)

6 comments:

 1. ரொம்பவே வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்! அந்த சகோதரியோட ஆன்மா சாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ! அந்த சகோதரியின் பொறுமை மற்றும் காதலை ரொம்பவே மதிக்கிறேன் ! தான் புருஷன் ஒரு சமபால் ஈர்ப்பு உள்ளவன்னு தெரிஞ்சும் அவங்க கடைசிவரை அவன் கூட வாழனும்னு நினைச்சுருக்காங்க ! ஒருவேளை ஒரு straight பையனுக்கு ஒரு சமபால் ஈர்ப்புள்ள ஒரு சகோதரிய திருமணம் செய்துவைக்கும் போது அந்த பையன் இவ்ளோ பொறுமையா இருந்துருப்பனா, அதே காதல் அவள் மேல இருக்குமா னு சொல்ல முடியாது ! பெண்களுக்கு பொறுமை கடல் அளவுக்கு இருக்கும்னு கேள்விபட்டுருக்கேன் ! பசங்களுக்கு அந்த பொறுமை இருக்குமா என்னனு தெரியல ! அப்டியே இருந்தாலும் மேல சொன்ன விஷயத்துல எந்த அளவுக்கு இருக்கும் னு சொல்ல தெரியல ! 1 வருஷம் பொறுப்பான் 2 வருஷம் பொறுப்பான் ஆனால் என்னைக்காவது ஒரு நாள் " ஏண்டி நீ தான் இப்டினு உனக்கு தெரியும்ல அப்படி இருக்கும் போது என்ன ****************க்கு டி என்ன கல்யாணம் பண்ணி உயிரை வாங்குற "ன்ற அமிலம் கலந்த வார்த்தைகள கண்டிப்பா உபயோகிப்பான்..அதே கேள்விய ஒரு பொண்ணு நம்மள பார்த்து கேட்டா எப்டி இருக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சுஇருந்தா அந்த தப்ப அவர் பண்ணிருக்க மாட்டாரு னு நினைக்கிறன் ! இவரை பற்றி எல்லாம் தெரிஞ்சும் அவன் கூட கடைசி வரைக்கும் வாழ நினைச்ச பொண்டாட்டிய சித்ரவதை பண்ணினது மன்னிக்க முடியாத குற்றம் ! இப்படி மனைவி கிடைக்கிறதுக்கு அவன் புண்ணியம் பண்ணிருக்கணும் ! வாழ தெரியாதவன் ! உனக்கு எல்லாம் பெங்களூர்காரன் பொண்டாட்டி மாதிரி இருந்துருக்கணும்டா. அப்டி இருந்துருந்தா தான் உனக்கு எல்லாம் அறிவு வந்துருக்கும். உனக்காக ,தனக்கு குழந்தை இல்லை அப்டின்ற குறைய கூட பெருசா எடுத்துக்காம , அந்த சூழ்நிலைல கூட உன்ன காட்டிகொடுக்கம இருந்துருக்கா பாரு ! இப்டி ஒரு பொண்டாட்டி எவனுக்குமே கிடைக்க மாட்டாடா ! உன்னயெல்லாம் ........................... சும்மா விட்ருக்க கூடாதுடா ! I feel shame on U கமல் வேதி !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கோபம் நியாயமானதுதான் வேல்... ஆணாதிக்க சமூகத்திலிருந்து விடுபடும்வரை இப்படி கொடுமைகளை தவிர்க்க முடியாது... மிக விளக்கமான நீண்ட கருத்திற்கு மிக்க நன்றி...

   Delete
 2. எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத, மன்னிக்கத் தகுதியற்ற தவறை இழைத்து விட்டார் கமல் வேதி.. சமபால் விரும்பிகள் சமூகப்புரிந்துணர்வுக்காகப் போராடும் இந்த காலகட்டத்தில்... தன்னை புரிந்து கொண்டு.. அளவுக்கதிகமான காதலால் பல அவச்சொற்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட ஒரு நல்ல உள்ளத்தை, உயிரை காவு வாங்கி விட்டார்... :(

  எக்கேடாவது கெட்டு ஒழியுங்கள் என்று நினைத்தாவது சட்டப்பிரிவு 377ல் மாற்றங்கள் கொண்டு வந்தால் நலமாக இருக்கும்... குறைந்தபட்சம் இப்படி ஒரு கட்டாயத் திருமணம் தவிர்க்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.. அநியாயமாக இந்த உயிரும் பறிபோயிருக்காது...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ... நிச்சயம் இந்த அரசின் அலட்சியமான சட்டப்பிரிவும் இதற்கு ஒரு காரணம்தான்... இந்த கொலைக்கான பங்கு, நமது ஆட்சியாளர்களுக்கும் உண்டு.. சட்டமும் ஒருநாள் மாறும் என்று நம்புவதைத்தவிர வேற வழியில்ல.. கருத்திற்கு ரொம்ப நன்றிங்க..

   Delete
 3. Kastama iruku........ kandipa oru ponnoda life ah ipdi panniruka kudadhu....... RIP.....

  ReplyDelete
  Replies
  1. அந்த சகோதரியின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறும் தம்பி...

   Delete