வழக்கம்போலவே இன்றைக்கும் அவசரகதியில்தான் ரயிலை
பிடிக்க ஓடினான் வசந்தன்... ஒவ்வொருமுறையும் அதற்கான காரணங்கள் மாறுபட்டாலும்,
சக்திமான் பார்ப்பதற்காக சனிக்கிழமை விடுப்பெடுத்த பள்ளிக்கூட மாணவர்கள் சொல்லும்
காரணங்கள் போல, அவசியமான அவசரங்கள் எதுவும் இருந்ததில்லை... இன்றைக்கும் கூட
அப்படித்தான், ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்ததுதான் இவ்வளவு
தாமதத்திற்கு காரணம்...
“மணி இப்பவே மூணு வசந்தன், இன்னும் முக்கால் மணி
நேரத்துல ட்ரைன்... ட்ராவலிங் கண்டிப்பா அரை மணி நேரம் ஆகிடும்” அறைத்தோழன் மணிகண்டன், அரை மணி நேரமாக மணி
அடித்துக்கொண்டுதான் இருந்தான்..
அந்த பிரபல மூன் டிவியின், தமிழகத்தின்
பிரம்மாண்ட குரல் தேடும் “செம்ம சிங்கர்” நிகழ்ச்சியைதான் அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கிறான்... இவ்வளவு
ஆர்வத்தை பார்த்தவுடன் வசந்தனின் இசை ஞானத்தை அதீதமாக கற்பனை செய்துவிடவேண்டாம்...
ஒரு பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் கூட இன்னும் வித்தியாசம் தெரியாத
சாமானியன்தான் அவன்... குழந்தைகள் எலிமினேட் செய்யப்படும்போது அழுவதை ரசித்து
பார்க்கும் வக்கிர குணம் கொண்டவனும் கூட அவனில்லை என்றாலும், கிட்டத்தட்ட ஒரு
வருடமாக ஒரு எபிசோட் விடாமல் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்கிறான்...
அந்த உடும்புப்பிடி ரசனைக்கு காரணங்கள்
கண்டிப்பாக அதில் பாடும் சிறுவர்களோ, ‘மார்க்’ போடும் நடுவர்களோ, ‘வழவழ கொழகொழ’ தொகுப்பாளர்களோ, சல்வார் கம்மீஸ் போல உடை அணிந்துவரும்
வாய்ஸ் ட்ரைனரோ சத்தியமாக இல்லை.. பாடகர்கள் பாடும்போது, இடையிடையே சில
நொடித்துளிகள் திரையில் காட்டப்படும் இசைக்கலைஞர்களை எப்போதாவது நீங்கள்
பார்த்திருப்பீர்கள்... அதில் கீ போர்ட் வாசிக்கும் ஒரு இளைஞனை எதேச்சையாக உங்கள்
கண்கள் கடந்து வந்திருக்கக்கூடும்.. ஆனால் அந்த இளைஞனைத்தான் வசந்தனின் கண்கள்
மட்டும் கடக்காமல் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது...
பெரும்பாலும் ஏதேனும் பாடலினூடே அவன் இரண்டு
கைகளையும்தான் பார்த்திருக்க முடியும்... இடது கை மோதிர விரலில் வெள்ளி மோதிரமும்,
வலது கையில் நான்கைந்து வண்ணநிற கயிறுகளும் அணிந்திருப்பான்... அந்த விரல்கள்
இடமும் வலமும் நகரும்போது, அவன் உடலை வருடுவதைப்போல சிலாகிப்பான் வசந்தன்...
எப்போதும் கருப்பு உடை மட்டுமே அணிந்திருப்பான்... முழுக்கை சட்டையை முழங்கைக்கு
கீழ்வரை மடித்திருக்கும் அழகை பலநாள் கண்ணாடி முன்பு வசந்தனும் செய்து
பார்த்ததுண்டு, ஆனாலும் அவன் அளவிற்கு அழகு வந்ததில்லை... நான்கைந்து முறை அவன்
முகத்தை பார்த்திருக்கிறான்... அந்த கருப்பு நிற தேகத்தவன்தான், அதுவரை வெள்ளைதான்
அழகு என்ற வசந்தனின் எண்ணத்தினை அடியோடு மாற்றியவன்... அவன் அளவாய் சிரித்தபோது கன்னத்தில்
விழுந்த குழி இன்னும் அழகு... போதும் போதும்... இதற்கு மேல் அவனை வர்ணித்தால், இனி
நீங்களும் அந்த நிகழ்ச்சியில் அவனை தேடத்தொடங்கிவிடுவீர்கள்...
“அப்டி என்னடா அவன் பேரழகன்?... எனக்கென்னவோ
சுமாராத்தான் தெரியுறான்!” ஒருமுறை
மணிகண்டன்தான் மறுத்துப்பேசினான்...
“தேவதூதன்களோட அழகு, கண்ட தேவாங்குகளுக்கு தெரியாது!” என்று அலட்சியப்பார்வையோடு கடந்துவிடுவான்...
ஒருவழியாக இன்றைக்கும் அவன் விரல்களை
ரசித்துவிட்டு ரயில் நிலையம் செல்வதற்குத்தான் அவ்வளவு தாமதம் ஆனது... நல்லவேளையாக
இன்றைக்கு தொடர்வண்டி பத்து நிமிடங்கள் தாமதமாம், அப்படியும்கூட மெள்ள
நகரும்போதுதான் வசந்தனால் ட்ரெயினில் ஏறமுடிந்தது...
மூச்சிரைக்க ஏறியபின், தண்ணீரை குடித்துவிட்டு
தனது இருக்கையை தேடினான்... 13, 14 கடந்து 15.. அதுதான்.. பையை இருக்கைக்கு கீழே
வைத்துவிட்டு, அதிலிருந்த விகடனை எடுத்து வேகமாக விசிறத்தொடங்கினான்...
சட்டையின் மேலிரண்டு பட்டன்களை கழற்றி,
வியர்வையின் கசகசப்பை போக்க முயன்றான்... ஜன்னல் காற்று சில்லிட்டு, உடலோடு
சேர்ந்து மனதையும் குளிர்வித்தது.. அப்போதுதான் , எதேச்சையாக தன் எதிரில்
அமர்ந்திருக்கும் நபரை கவனித்தான் வசந்தன்...
அது நிஜமா? அல்லது, வழக்கம்போல கனவா?... கனவாக
இருந்தால், காற்று சில்லிடுவதை உணர்ந்திருக்கமுடியாது... நிஜம்தான், அவனேதான்...
வசந்தனின் எதிரில், சுஜாதாவின் ‘கனவு தொழிற்சாலை’ புத்தகத்தில் கண்களை புதைத்துக்கொண்டிருப்பவன் அந்த கீ
போர்ட் இளைஞனேதான்... எதிர்க்காற்றில் துள்ளிக்குதித்த முடிகள், அவ்வப்போது அவன்
கண்களின் மீது விழுந்தபோது, அந்த மென்மையான விரல்களால் அதை விலக்கிவிடும்போது அவன்
உதடு குவிக்கும் அழகை வேறு எந்த அழகோடும் ஒப்பீடு செய்யமுடியாது... ஆச்சர்யமாக
இன்றைக்கு வழக்கமான கருப்பு உடை இல்லாமல் சிவப்பு நிற சட்டை, அதனை அழகின் இன்னொரு
பரிமாணம் என்றுகூட சொல்லலாம்..
சில நிமிடங்கள் வசந்தன் தன்னையே கவனித்ததை
உணர்ந்த அவன், புத்தகத்திலிருந்து பார்வையை மேலே உயர்த்தினான்... சட்டென வசந்தன்
வேறுபக்கம் திரும்பிக்கொள்ள, மீண்டும் புத்தகத்துக்குள் புகுந்துகொண்டான்...
அடச்ச! ஏன் திரும்பினேன்?.. அவனையே
பார்த்திருந்தால் அவனாகவே பேச்சை தொடங்கியிருப்பான், நல்ல வாய்ப்பை
தவறவிட்டுவிட்டேன்... சில நிமிடங்கள் கழித்து வசந்தனாகவே பேச்சை தொடங்கினான்...
“ஹாய்... நான் வசந்தன்...” மெலிதாக புன்னகைத்தபடி கை நீட்டினான்...
“நான் கவின்...” சில நொடிகள் யோசிப்புகளுக்கு பிறகு, சந்தேகத்துடனேயே
கைகொடுத்தான் கவின்...
கவின்... அழகான பெயர்தான்.. அதிசயமாகத்தான்
பெயரைப்போலவே அதற்குரிய ஆட்களும் அமைவதுண்டு....
“காகித தொழிற்சாலை நல்ல புக்’ல?.. எனக்குக்கூட சுஜாதான்னா ரொம்ப பிடிக்கும்” இந்த நேரத்தில் அவனோடு பேசுவதற்காக எதை சொல்லவும்
தயங்கமாட்டான் வசந்தன்...
“ஹ ஹா... இது கனவு தொழிற்சாலை சார்...” புத்தகத்தின் அட்டையை உயர்த்தி காட்டியபடி, அழகாய்
சிரித்தான்...
தலையில் கொட்டிக்கொண்டு, “உங்கள பார்த்ததும்
எல்லாமே மறந்துபோச்சு...” பொய்யாக
நொந்துகொண்டான்...
“என்னை பார்த்ததுமா? ஏன்?”
“அது... அது வந்து... நீங்க எவ்ளோ பெரிய
ம்யுசிசியன்... அதனாலதான்..” சமாளித்தான்
வசந்தன்...
“அதெப்டி உங்களுக்கு தெரியும்?”
“உங்கள நான் செம்ம சிங்கர்’ல பார்த்திருக்கேன்... ரொம்ப அழகா வாசிப்பிங்க...” புகழ் தூண்டிலை போட்டு, அதில் மாட்டாத மீன்கள் உண்டா
என்ன?...
“ஓ... அந்த அளவுக்கு இசைப்பிரியரா நீங்க?...
நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு சார்... ரொம்ப சந்தோஷமா இருக்கு... ” பழைய குழப்பங்கள், இறுக்கங்கள் தளர்ந்து இயல்பாக பேசினான் கவின்...
“சார்’லாம் வேணாம்... ஜஸ்ட் வசந்தன்னே கூப்பிடுங்க...”
“ஓகே ஜஸ்ட் வசந்தன்...”
“ஹ ஹ ஹா...” அளவுக்கு அதிகமாகவே சிரித்தான்... இதே ஜோக்கை அறை நண்பன்
மணிகண்டன் சொல்லியிருந்தால், “டைம் கிடைக்குறப்போ சிரிக்கிறேன்!” என்று பதிலுக்கு கலாய்த்திருப்பான்... ஆனால், கவின்
சொன்னதை கேட்டு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் சிரித்தான்...
“ஓகே ஓகே... கூல் வசந்தன்... நீங்க என்ன பண்றீங்க?”
“நீங்க படிக்குற கனவு தொழிற்சாலைல இருக்கேன்...”
“அப்டின்னா?”
“அசிஸ்டென்ட் டைரக்டரா நாலு படம் வர்க்
பண்ணிருக்கேன்... இப்போ ஒரு படம் டைரக்ட் பண்ண அக்ரீமன்ட் போட்டாச்சு... அது
சம்மந்தமாத்தான் இப்போ திருச்சி போறேன்” சிரித்துக்கொண்டே சொன்னான்...
“ஓ கிரேட் வசந்தன்... உங்க படம் சக்சஸ் ஆகிட
வாழ்த்துகள்!” சொல்லிவிட்டு கை
கொடுத்தான்... மெத்தென இருந்தது உள்ளங்கை, வித்தைகள் காட்டும் விரல்கள் மட்டும்
மெல்லிய கனமாக இருந்தது...
“தாங்க்ஸ் கவின்... படபூஜைக்கு உங்கள
இன்வைட் பண்றேன், கண்டிப்பா வரணும்... நீங்க ஆள்கூட ஸ்மார்ட்டா இருக்கீங்க,
விருப்பப்பட்டா எதாச்சும் ரோல் பண்ணுங்க...”
“ஐயோ தாங்க்ஸ்... ஆனா எனக்கு நடிப்பல்லாம்
சுட்டுபோட்டாலும் வராது... என்ன ஸ்டோரி?” வெட்கப்பட்டு சிரித்தான்...
“வழக்கம்போல லவ் ஸ்டோரிதான்... கொஞ்சம்
வித்தியாசமா ஹீரோ ஹீரோயின்’கிட்ட படத்தோட
க்ளைமாக்ஸ்லதான் ப்ரப்போஸ் பண்ணுவான்... க்ளைமாக்ஸ் விஷயத்துலதான் எனக்கும்
ப்ரட்யூசருக்கும் சின்ன முரண்பாடு, அது சரிவந்துட்டா பூஜை போட்டுடலாம்...”
“ஓ அதிலென்ன ப்ராப்ளம்?”
“க்ளைமாக்ஸ்ல ப்ரப்போஸ் பண்றப்போ, அவங்க ஒன்னு
சேரக்கூடாதாம்... அதேநேரத்துல யாரையும் கெட்டவங்களா காட்டக்கூடாது, யாரும்
சாகக்கூடாதுன்னு ஆயிரம் கண்டிஷன்ஸ்... பின்ன எப்டி அவங்கள பிரிக்கமுடியும்?...
அதைத்தான் தலைய பிச்சுகிட்டு யோசிச்சுட்டு இருக்கேன்... ஆர்டிஸ்ட் எல்லாம் கூட
பிக்ஸ் பண்ணியாச்சு, லொக்கேஷன் பாக்கத்தான் திருச்சி கூட போறேன்... கருமம் பிடிச்ச
க்ளைமாக்ஸ்தான்...” தன்னிலையை
நொந்துகொண்டான் வசந்தன்...
“அப்போ கஷ்டம்தான்... வேணும்னா ஹீரோ ப்ரப்போஸ்
பண்றதோட படத்த முடிச்சிடுங்க, முடிவை ஆடியன்ஸ் கைல கொடுத்திடலாம்ல”
“அதையும் சொல்லிப்பார்த்தேன்... ஆடியன்ஸ் முடிவு
பண்றதா இருந்தா, நீ எதுக்கு டைரக்டர்’னு இருக்க?ன்னு
கேட்குறார்... முடிவு இதுவரை தமிழ்சினிமால காட்டப்படாத ஒண்ணா இருக்கனுமாம்... நான்
என்னத்த பண்றது?”
“ஹ ஹ ஹா... அப்போ ரொம்பவே கஷ்டம்தான்...
எனக்கேகூட ஆர்வமாத்தான் இருக்கு, என்ன க்ளைமாக்ஸ் வைக்கப்போறிங்கன்னு... முடிவு
பண்ணிட்டு சொல்லுங்க!”
இருவரும் கதைப்பற்றிய விவாதங்களிலும்,
இசைப்பயணம் குறித்த நிகழ்வுகள் பற்றியும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர்...
நேரம் ஓடியதே தெரியவில்லை, தொடர்வண்டி திருச்சியை அடைந்தபோதும் கூட இருவரும்
பகிர்ந்துகொள்ள ஆயிரம் விஷயங்கள் மிச்சம் இருந்தன..
இடைப்பட்ட பேச்சில் முக்கியமான அந்த
கேள்வியையும் கேட்க மறக்கவில்லை வசந்தன்...
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா கவின்?”
“இன்னும் இல்ல வசந்தன்... இப்போதான் கரியர்’ல ஓரளவு நல்லா வந்துருக்கேன், இனிமேதான் அதல்லாம்”
“அப்போ யாரையும் லவ் பண்றீங்களா?”
“சந்தோஷமா சிரிச்சு பேசுறத பாத்துமா உங்களுக்கு
அந்த சந்தேகம்... அதல்லாம் இல்லைங்க...”
போதும்... இதுபோதும்... மனநிறைவோடு திருச்சியில்
இறங்கினான் வசந்தன்...
**************
“சார் என்ன இந்த நேரத்துல மேக்கப் போட்டுட்டு
இருக்கார்? எங்கப்பா போற?” வெங்காயம்
நறுக்கிக்கொண்டே கேட்டான் மணிகண்டன்...
“நீயல்லாம் சின்னப்பையன்... ஓரமா போய் விளையாடு
தம்பி... நான் என் லவ்வர பார்க்கப்போறேன்!” மூன்றாம் முறையாக முகத்திற்கான பூச்சை அப்பியபடி சொன்னான் வசந்தன்...
“அந்த கொடுமயல்லாம் எப்போ நடந்துச்சு?”
“கொழுப்பா உனக்கு?.. காண்டாமிருகத்துக்கு
காஸ்ட்யூம் போட்ட மாதிரி இருக்க உனக்கே ஒரு பொண்ணு செட் ஆனப்போ, எனக்கு லவ்வர்
செட் ஆகக்கூடாதா?... போன வாரம் ட்ரைன்ல பார்த்தேனே, அவனைப்பார்க்கத்தான்...” தலை சீவிய சீப்பின் முனையை பல்லில் கடித்தவாறு
வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னான்...
“என்ன கருமமோ பண்ணு, தயவுசெஞ்சு
வெட்கப்படுறேங்குற பேர்ல சீப்பை கடிச்சு தின்னுடாத... திருந்தாத ஜென்மம்” தலையில் அடித்துக்கொண்டான்...
“இதுல என்ன திருந்துறதுக்கு?... மயித்தக்கட்டி
மலைய இழுக்குறேன்... வந்தா மலை, போனா...”
“மயித்தக்கட்டி மலைய இழுக்குறதே முட்டாள்த்தனம்
இல்லையா?.. அதுக்கு கல் குவாரில வேலைக்கு சேர்ந்தா கூட, காசாச்சும் கொடுப்பாணுக!”
“பொறாம புடிச்ச பொங்கப்பானை, இதல்லாம் உனக்கு
புரியாது... இப்போ சிங்கிளா போறேன், வரும்போது டபுள்ஸா வருவேன்...”
“மொதல்ல உயிரோட வர்றியான்னு பார்க்கலாம்...
ட்ரைன்ல பாத்து பேசிட்டதால உடனே லவ் ப்ரப்போஸ் பண்றதல்லாம் அடிமுட்டாள்த்தனம்...
அவன் ஓரியன்டேசன் என்னன்னு முதல்ல தெரியுமா?”
“டேய், இதல்லாம் நானா பண்ணல... கடவுள் பண்ண
வைக்குறான்... எதுக்காக டீவில ஒரு வருஷமா அவன நான் பாக்கணும்? அன்னிக்குன்னு ஏன்
ட்ரைன் பத்து நிமிஷம் லேட்டா கிளம்பனும்? அதே கோச்’ல என் பக்கத்துல அவன் ஏன் ட்ராவல் பண்ணனும்?...
இதல்லாத்தையும் சரியா லிங்க் பண்ண கடவுளுக்கு, அடுத்து என்ன பண்ணனும்னும்
தெரியும்... கடவுள் காரணமில்லாம எதையும் செய்யமாட்டார்டா...” சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்திற்கு ஒரு கும்பிடு
போட்டுக்கொண்டான்...
வெங்காயத்தை சட்டியில் கொட்டி தாளித்துக்கொண்டே,
“கடவுள் பண்றது இருக்கட்டும், நாளைக்குள்ல க்ளைமாக்ஸ் முடிவு பண்ணனும்னு
தெரியும்ல?.. இல்லைன்னா ப்ரட்யூசர் பொட்டிய தூக்கிகிட்டு வேற பக்கம் போய்டுவான்...” என்றான்...
“பண்ணிடலாம்.. பண்ணிடலாம்.. ...” ஆடையை மீண்டும் ஒருமுறை சரிசெய்தபடி வீட்டைவிட்டு
கிளம்பினான் வசந்தன்...
**************
அந்த பிரபல ஸ்டூடியோவின், செம்ம சிங்கர் செட்டை
அடைந்தபோதும் ஒருமுறை தலையை சரிசெய்துகொண்டான் வசந்தன்.. தொகுப்பாளர்கள் கடைசிகட்ட
மேக்கப்பில் ஆழ்ந்திருந்தனர், இன்னொரு பக்கமோ குழந்தைகளின் பாட்டிகளுக்கு நடனமாட
கற்றுக்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது... இடமும் வலமுமாக வசந்தனின் கண்கள்
கருப்பு சட்டையை நோக்கி அலைபாய்ந்தது....
“ஹலோ வசந்தன்... எப்டி இருக்கீங்க?... என்ன
திடீர் சர்ப்ரைஸ்?” வசந்தனை பார்த்ததும்
வேகமாக எழுந்துவந்து கைகுழுக்கினான் கவின்...
“இல்ல... வேற வேலையா வந்தேன், அதான் உங்களையும்
பார்க்கலாம்னு” உதட்டினை ஈரப்படுத்திக்கொண்டு பேசினான்...
“ரொம்ப சந்தோசம்... பொதுவா ரயில் சிநேகிதம்,
பிளாட்பாரத்தோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க... நம்ம விஷயத்துல ஷூட்டிங் ஸ்பாட்
வரைக்கும் வந்திடுச்சு... ஆமா, க்ளைமாக்ஸ் பிக்ஸ் பண்ணிட்டிங்களா?”
“இன்னும் இல்ல, சீக்கிரம் சரி பண்ணிடலாம்...
உங்களுக்கு சூட் முடிஞ்சிடுச்சா?”
“ஒரு ஷெட்யூல் ஓவர், அடுத்தது இன்னும் பத்து
நிமிஷத்துல...” நேரத்தை
பார்த்துக்கொண்டான்...
அப்படியானால் இன்னும் பத்து நிமிடங்களுக்குள்
காதலை சொல்லிடனும்... நெஞ்சில் படபடப்பு அதிகமானது, அனிச்சையாக வியர்வையும்
சுரந்து வழிந்தது... அடி வயிற்றுக்குள், உள்ளுறுப்புகளை யாரோ பிசைவதை போல
உணர்ந்தான்...
அந்த யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ஒரு
பெண் கவினுடன் மிக நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தாள்... அவன் காதுகளுக்குள்
ஏதோ சொல்வதும், அதற்கு அவள் செல்லமாக அடிப்பதுமாக காட்சிகள் அரங்கேறின... அட
முருகா!.. இதென்ன புது சோதனை?...
ஒருவழியாக அவள் அங்கிருந்து விலகியபிறகு, “இவங்க
யாரு கவின்?” தயக்கத்துடன்
கேட்டான்...
“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுப்பா,
உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்...” மிக இயல்பாக
வெடிகுண்டை வீசினான்...
“அன்னிக்கு யாரையும் லவ் பண்ணலன்னு சொன்னிங்க?” அப்பாவியாக கேட்டான்...
“இன்னிக்கும் அதேதான் சொல்றேன்... திவ்யா என்
பேமிலி ப்ரென்ட், அரேஞ்சிடு மேரேஜ்தான்... இனிமேதான் லவ் பண்ணனும்... ரோபோ
மாதிரியே இருந்துட்டதால எப்டி லவ் பண்றதுன்னு கூட தெரியல.. சினிமாக்காரங்கதான்
அந்த விஷயத்துல அசத்துவீங்களே, இனிமே உங்ககிட்டதான் அதுக்கு ஐடியா கேட்கணும்!” சிரிப்பும் பேச்சுமாக சொல்லி முடித்தான்... அனைத்தையும்
சோகத்தை சுமந்த முகத்துடன், அப்பாவியாக பார்த்துக்கொண்டிருந்தான் வசந்தன்...
‘டமால், டுமீல்’ வசந்தனின் இதயம் நொறுங்கியதாக நினைத்திட வேண்டாம்... செம்ம
சிங்கர் செட்டில் சிறப்பு விருந்தினரின் வருகைக்கு வெடி வெடித்திருக்கிறார்கள்...
“ஓகே வசந்தன்.. சூட் ஸ்டாட் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன்!” மீண்டும் கைகொடுத்தபடி விடைபெற்றான் கவின்...
ஸ்தம்பித்து நின்றான் வசந்தன்... ‘டமால்,
டுமீல்..’ இது வசந்தனின்
இதயம்தான்...
அலைபேசி அழைத்தது... அழைப்பில் மணிகண்டன்...
“என்னடா என்னாச்சு?” பரபரப்பாக கேட்டான்...
“நாசமாபோச்சு... அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சாம்...”
“இதைத்தான் அப்பவே சொன்னேன்... இதல்லாம்
தேவையா?.. ஸ்ட்ரைட் பையனை லவ் பண்றத இனியாச்சும் நிறுத்துங்கப்பா...” பொறுமையாக சொன்னான் மணிகண்டன்...
“க்ளைமாக்ஸ்ல மெசேஜ் சொல்றியாக்கும்?... கதை
முடியுறப்போ அதை நானே சொல்லிக்கறேன், உனக்கு வேற டயலாக் இருந்தா பேசு!” மனமுடைந்து நிற்கும் நண்பனுக்கு ஆறுதல் சொல்லாமல் அட்வைஸ்
செய்வதன் கோபம், வசந்தனின் வார்த்தைகளில் தெரிந்தது..
“அட லூசு அதுக்கு சொல்லலடா... ஓரியன்டேசன்
தெரியாம ப்ரப்போஸ் பண்றதல்லாம் எவ்ளோ முட்டாள்த்தனம்... உன் முட்டாள்த்தனத்துக்கு
கடவுளையும் சேர்த்துகிட்ட... என்னமோ கடவுள் எல்லாத்தையும் காரணமாத்தான் செய்வார்னு
சொன்ன, எல்லாம் போச்சா?” இதைத்தான் வசந்தன்
சொல்வான் என்று ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உரைபோல கடகடவென்று பேசினான் மணி...
“இப்பவும் கூட கடவுள் காரணமாத்தான் செஞ்சிருக்கார்...”
“இன்னும் நீ திருந்தலையா?.. என்ன காரணம்?”
“என் கதைக்கு சூப்பர் க்ளைமாக்ஸ்
கிடைச்சிடுச்சு...”
“அப்டியா என்ன?”
“ஆமா... ஹீரோ ப்ரப்போஸ் பண்ணப்போறப்போதான்,
ஹீரோயின் ஒரு லெஸ்பியன்னு அவனுக்கு தெரியவருது!” நிதானமாய் சொல்லிமுடித்தான் வசந்தன்... (முற்றும்)
:-)
ReplyDeletesuper anna
ReplyDeleteநன்றி தம்பி...
Delete" காரணமின்றி யார் மீதும் காதல் வருவதில்லை அந்த காரணம் தான் என்னவென்று யாருக்கும் புரிவதில்லை"... நாம விரும்புற பையன விட அவனோட விருப்பம் ( ஒரியன்டேசன்) தெரிஞ்சு விரும்புனா நம்ம காதல் ஒரு தலைகாதலாக இருந்தாலும் கூட அது சுகமே !...... உங்களோட கதைகள்ல பெரும்பாலும் காதலுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமா அதே நேரத்துல ஒரியன்டேசனை பொறுத்து காதல் அமையனும் அப்டின்ற ரொம்ப முக்கியமான/அழுத்தமான ஒரு கருத்தையும் சொல்லிருக்கிங்க! வழக்கம் போல் கதை அருமை ! புதிய முயற்சி ! பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் அண்ணே !
ReplyDeleteஇந்த உண்மையை ஸ்ட்ரைட் நபர்களை காதலிப்பதா சொல்ற எல்லோரும் புரிந்துகொண்டால் சரி... கருத்திற்கு நன்றி தம்பி..
Delete