Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 19 May 2015

பிரதமரின் கே (gay) திருமணம், வாழ்த்திய மக்கள் - கதையல்ல நிஜம்!






இந்த செய்தி, “உலக அரசியல் வரலாற்றில் என்ற முன்னோட்டத்தோடு கூட சொல்லும் அளவிற்கு ஆச்சர்யமான செய்திதான்... லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர், கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த வைரல் செய்தி... லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டேல், தனது காதலரான கவுதியர் டெஸ்டினி என்பவரை கரம் பிடித்துள்ளார்... ஒரு நாட்டின் பிரதமர், கே திருமணம் செய்துகொள்வது என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுதானே?...

சேவியர் பெட்டேலின் அரசியல் நுகர்வு குறித்து ஏற்கனவே "வெளிப்படையான கே பிரதமர்" என்கிற கட்டுரையில் பார்த்துவிட்டதனால், இவருடைய பாலீர்ப்பு வாழ்க்கைக்குள் கொஞ்சம் நுழைந்து பார்க்கலாம்...

2010ஆம் ஆண்டு முதல் இணைந்து வாழும் இந்த இணை, அந்நாடு கடந்த ஆண்டில் “சமபால் திருமணம் அங்கீகரிப்பு சட்டம் இயற்றிய பிறகு, அதிகாரப்பூர்வமான தம்பதியாக இணைந்துவாழ முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்... இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில், ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் நடந்து முடிந்துள்ளது... வெள்ளிக்கிழமை காலையிலேயே திருமணம் நடக்க இருக்கிற சிட்டி ஹாலுக்கு, தன் காதலனுடன் வந்துவிட்டார் பெட்டேல்... தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை, எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிக்க விரும்பவில்லை என்பதால் ஊடகங்களுக்கு ‘தடா போட்டுவிட்டார் பிரதமர்...

என்றாலும் கூட தங்கள் நாட்டு பிரதமரின் முக்கிய வாழ்க்கை நிகழ்வை பார்த்திட சிட்டி ஹாலுக்கு எதிரே மக்கள் குவிந்துவிட்டனர்... மதியம் நடந்த திருமண நிகழ்வில் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது... பெல்ஜியம் நாட்டின் பிரதமர் சார்லஸ் மைக்கேல் முக்கிய விருந்தினராக நிகழ்வில் கலந்துகொண்டார்... “எனது நண்பரின் திருமணத்திற்காக வந்துள்ளேன்... இந்த திருமணம் மிகப்பெரிய சமூக நிகழ்வு... ஐரோப்பியாவில் காணப்படுகிற சமபால் ஈர்ப்புக்கு எதிரான ஹோமோபோபியாவை குறைக்கும் வல்லமை பெற்ற நிகழ்வு... சமூக முன்னேற்றங்களுக்கு வித்திடும் நிகழ்வு என்று கூறுகிறார் சார்லஸ்...

திருமணம் முடிந்து வெளியே வந்த பெட்டேல், குழுமியிருந்த கூட்டத்தை பார்த்து, “ரொம்ப நன்றி லக்ஸம்பர்க்வாசிகளே! என்று கூற, மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்...

மிக எளிமையான முறையில் ஒரு நாட்டில் பிரதமருடைய திருமணம் நடந்தேறியுள்ளது, பலரையும் வியந்துபார்க்க வைத்துள்ளது... ஜூலை முதல்வாரம்தான் இவர்களின் தேன் நிலவும் கூட...

 இவர் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு சமபால் ஈர்ப்பு நபர்களும் கற்றுக்கொள்வதற்கான ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது என்பதுதான் உண்மை...

2013ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நேரம், பெட்டேல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகிய தருணத்தில், தன் காதலன் டெஸ்டினியை அழைத்து, “நான் பிரதமர் ஆவதில் உனக்கு விருப்பமா? எப்போதும் போல எனக்கு உறுதுணையாக நிற்பாயா? என்று கேட்டிருக்கிறார்... ஒருவேளை அன்றைக்கு டெஸ்டினி மறுத்திருந்தால், இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது... ஆம், “அவன் மறுத்திருந்தால் நான் முடிவை மறுபரிசீலனை செய்திருப்பேன், எக்காரணத்தை முன்னிட்டும் காதலனோடு பிரிவைப்பற்றி மட்டும் யோசித்திருக்கவே மாட்டேன் என்கிறார்...

பெட்டேல் அரசியலில் நுழைந்த காலம் என்பது மிகவும் பழமைவாத கருத்துகள் நிறைந்து காணப்பட்ட காலகட்டம்... “இன்றைக்கு இருப்பது போல புரிதல்கள் இல்லாத நாட்கள் அவை... என்னுடைய பாலீர்ப்பை காரணம் காட்டி, நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டது... எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் என் பணியை செய்தேன்... என்னுடைய வாழ்க்கையை நான்தான் முடிவுசெய்யவேண்டும், அதில் அடுத்தவர்களுக்கு என்ன பங்கு இருக்கிறது?... 

 அரசியல்வாதி என்றால் மனைவி, குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று படிந்திருந்த மக்களின் மனநிலை கூட தொடக்கத்தில் என்னை பாதித்தது... ஆனால், காலப்போக்கில் கடுமையாக போராடி என்னை நிலைநிறுத்திக்கொண்டேன் என்கிறார் பெட்டேல்...

வெறும் ஐந்தரை லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஒருநாட்டில், அதுவும் கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் மீது தீவிர பிடிப்புள்ள நாட்டில், பெட்டேல் போன்ற வெளிப்படையான கே தலைவர்கள் பட்டிருக்கக்கூடிய சிரமங்கள் நம்மால் எளிதாக யூகிக்க முடிந்ததுதான்...

பதின் வயது முதலாகவே தன் பாலீர்ப்பை பெட்டேல் எவரிடமும் மறைக்க விழைந்ததில்லை... தன்னுடைய சுயத்தை அவர் பொய்யான பிம்பம் நிறைத்து வெளிப்படுத்த விரும்பவில்லை... 

“என் நண்பர்களிடம் எனது பாலீர்ப்பை மறைத்ததில்லை... உங்கள் பாலீர்ப்பை காரணம் காட்டி, உங்களை விலகும் நண்பர் நிச்சயம் நண்பனே இல்லை... அந்தவகையில் பெரும்பாலான எனது நண்பர்கள் என்னை முழுமையாக ஏற்றனர்... எனக்கு இருக்கிற ஒரே வாழ்க்கையை, அடுத்தவர்களுக்காக என் சுயத்தை மறைத்து ஏன் வாழவேண்டும்?...

கடுமையான சிக்கலை தாண்டி, அதுவரை அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த கத்தோலிக்க மதக்கட்சியை தோற்கடித்து, வெற்றிபெற்ற பெட்டேல் ஆட்சிப்பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை அறிவித்தார்... “நம் நாட்டில் மாற்றப்பட வேண்டிய பழமைவாத சட்டங்கள் நிறைய இருக்கிறது... அதில் முக்கியமானது சமபால் ஈர்ப்பு நபர்களுக்கான திருமணத்தடை... மற்ற அரசியல் தலைவர்களை போல அடுத்த ஐந்தாண்டுகளில் இவற்றை சரி செய்வேன் என்று சொல்லமாட்டேன்... இன்னும் ஒரே ஆண்டில் இந்த குறைகளை நிவர்த்தி செய்து காட்டுகிறேன் என்றார்...

சொன்னதை அடுத்த ஒரே ஆண்டில் செய்தும் காட்டினார்... கடந்த ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவுடன் “சமபால் ஈர்ப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது...

“நான் கே பிரதமர் என்று அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை... நான் லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமர், அவ்வளவுதான்... மற்ற நாட்டு பிரதமர்களை, “ஸ்ட்ரைட் பிரதமர் என்று அழைக்காதபோது, என்னை மட்டும் பாலீர்ப்பு அடையாளத்தை முன்னிறுத்தி அழைப்பது இன்னும் சமபால் ஈர்ப்பை உங்கள் மனங்கள் இயல்பாக பார்த்திடாத பாரபட்சம்தான் காரணம்.. இனி இந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றிய திட்டங்கள் போடவேண்டும், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

பெட்டேல் சொல்வதும் சரிதான்... ஆனால், இந்தியா போன்ற நாட்டில், குறைந்தபட்சம் நம்மவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகப்படுத்தவாவது, அவரை “கே பிரதமர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...

இந்த தம்பதி இன்னும் நூறாண்டுகள், சிறப்போடு வாழ உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்... 

“மதவாத கருத்துகளால் பழமைவாத சிந்தனை படிந்திருந்த ஒருநாடு, இப்போது தன்னை முதிர்ச்சியான சிந்தனையால் புதுப்பித்துக்கொண்டது ஆச்சர்யமான வளர்ச்சி என்று லக்சம்பர்க் நாட்டின் புரிதலை வர்ணிக்கிறார் பிரபல பிரெஞ்ச் நடிகர் ஸ்டீபன் பெம்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்படி திருமணம் செய்துகொண்ட முதல் பிரதமர் என்கிற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது என்றாலும், முதல் வெளிப்படையான சமபால் ஈர்ப்பு பிரதமர் என்கிற புகழை பெல்ஜியம் நாட்டினை சேர்ந்த முன்னாள் பிரதமர் எலியோ டி ருபோ (2009 – 2013) ஏற்கனவே பெற்றுவிட்டார்... ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் ஜோஹன்னா (2010), தன் காதலியை திருமணம் செய்துகொண்ட நிகழ்வுதான் ‘உலக வரலாற்றில் முதல் முறையாக! என்பதால், பெட்டேல் திருமணம் ‘இரண்டாவது இடத்தைதான் பெற்றுள்ளது (ஐஸ்லாந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை)... லக்ஸம்பர்க் நாடு நாம் மகிழும் அளவிற்கான இன்னொரு சிறப்பையும் பெற்றுள்ளது, அந்நாட்டின் துணை பிரதமர் எடின்னே ஷ்னைடர் என்பவரும் சமபால் ஈர்ப்பு நபர்தான்.. இன்னும் 377 என்கிற நெளிந்த சொம்பை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து பேசிக்கொண்டிருக்கும் நம்மவர்களை பார்க்கும்போது, சிரிப்பதா? அழுவதா? என்றுகூட புரியவில்லை...

6 comments:

  1. ஆனந்தம் அடைகிரேன். அவர்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நம் எல்லோருடைய வாழ்த்துகளும் அவர்களை நல்லபடி வாழச்செய்யும் சகோ...

      Delete
  2. Replies
    1. வாழ்த்து சென்றடையும் கார்த்திக்..

      Delete
  3. This shows how much awareness people in Luxembourg have on issues like this. What can we expect from people from our country in US make fun of me like "Avana nee!!!!" just because I remain single in my early 30s :(((((

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒருநாள் நிச்சயம் மாறும் பிரபு.... கருத்திற்கு மிக்க நன்றி நண்பா...

      Delete