கடந்த வருடத்தின்
இந்த நாட்களில் Mr. Gay World 2014க்கான போட்டிகள் ஆரவாரமாக நடந்து முடிந்திருந்தது.. இந்தியாவின் சார்பாக
போட்டியில் சுஷாந்த் திவ்கிகர் கலந்துகொண்டதை நாம் அறிவோம்.. (அந்த போட்டிகளை பற்றிய
கட்டுரைகளாக பட்டம் வெல்வாரா சுஷாந்த்?, பட்டத்தை வென்ற இங்கிலாந்து அழகன்!)... அந்த போட்டியில் வெற்றியாளராக சுஷாந்த் தேர்வாகவில்லை என்றாலும்
கூட, மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளராக அவர்
அறிவிக்கப்பட்டார்... இந்தியா முழுவதும் இந்த போட்டியை பற்றிய விழிப்புணர்வு
அதிசயிக்கத்தக்க வகையில் இருந்தது.. இந்த ஓராண்டில் சுஷாந்தின் பாலீர்ப்பு
தொடர்பான பங்களிப்புகள் அளப்பரியவை என்றுதான் சொல்லவேண்டும், அந்த அங்கீகாரம்தான்
அவரை இவ்வளவு தூரம் செய்யவைத்திருக்கிறது என்பதில் ஆச்சர்யம் இல்லை... அப்படி என்ன
இந்த போட்டி அவசியம்? என்ற கேள்வி நமக்கு எழலாம்... இந்த போட்டியில் வெல்வதன்மூலம்
சர்வதேச கவனத்தை அந்த நாட்டினரால் பெறமுடியும்... பாலீர்ப்பு சிறுபான்மையினரின்
பிரதிநிதியாக இதன் வெற்றியாளர் கருதப்படுவார்... இந்தியாவிற்கு அப்படியோர்
அங்கீகாரம்தான் தேவைப்படுகிற சூழலில், அதற்கான வாய்ப்பு தொடக்கத்திலேயே
தட்டிப்பறிக்கப்பட்டுவிட்டது காலத்தின் கொடுமை...
இந்த ஆண்டு தென்
ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த Mr. Gay World 2015 போட்டியில், ஜெர்மன் நாட்டினை சேர்ந்த க்ளாஸ்
பர்கார்ட் என்ற 21 வயது இளைஞர் வெற்றியாளராக பட்டம் சூட்டப்பட்டுள்ளார்... “உலக அளவில் கே
இளைஞர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நான் கவனம்
செலுத்துவேன்... பள்ளி கல்லூரிகளுக்கு சென்று அங்கு கே நபர்களுக்கு எதிராக
நடக்கும் வன்முறைகளை பற்றி விளக்கி, நல்ல புரிதலை ஏற்படுத்த முயற்சிப்பேன்...
என்னால் இயன்ற அளவிற்கு நம் சமூகத்து இளைஞர்கள் தங்கள் பாலீர்ப்பை வெளிப்படுத்த
தேவையான நல்லதொரு ஆக்கங்களை உருவாக்க செயல்பாடுகளை செய்வேன்” என்று வெற்றிபெற்ற
வேகத்தோடு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை தெரிவித்துள்ளார்...
இப்போதுள்ள
சூழலின்படி அந்த செயல்பாட்டினை இந்தியாவிலிருந்து தொடங்குவதுதான் சரி என்று
தோன்றுகிறது... அதற்குக்காரணம், அவருடன் அழகுப்போட்டிக்கு தேர்வான இந்திய
போட்டியாளர் கடும் மிரட்டல்களின் விளைவாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்... Mr. Gay India 2015 பட்டம் வென்ற தாஹிர்
சையத் என்பவர்தான், தென்னாப்ரிக்காவில் நடக்கின்ற ‘உலக கே அழகன்’ போட்டிக்கு இந்திய பங்கேற்பாளராக செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது...
ஆனால், கடுமையான மிரட்டல்களாலும், சமூக அழுத்தங்களாலும் தாஹிர் இந்த போட்டியிலிருந்து
விலகிவிட்டதால் இந்தியாவின் பங்கேற்பே இல்லாமல் போட்டி நடந்து முடிந்துள்ளது (பெயரளவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டதாக அறிகிறேன்!)....
கேரள மாநிலத்தின்
கோட்டயத்தை சேர்ந்த தாஹிர், வளர்ந்து வருகின்ற மாடலும் கூட.. Mr. Gay World போட்டியில் தான்
கலந்துகொள்ள இருப்பதை மிகவும் மகிழ்வோடும், உற்சாகத்தோடும் தன் நண்பர்களிடம் பகிர்ந்துவந்தவர்,
போட்டி நடக்க சில நாட்களே இருந்த சூழலில் தலைமறைவாகிவிட்டார்...
போட்டியில் தான்
விலகிக்கொள்வதாக கூட எந்த ஒரு அறிவிப்பையும் கூறிடாமல், எல்லா தொடர்புகளையும்
துண்டித்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்... போட்டி ஏற்ப்பாட்டாளர்கள் பல நாட்களாக
தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக மட்டுமல்லாது நேரடியாக அவர் வீட்டையும் அணுகி தாஹிரை
தொடர்புகொள்ள முயற்சித்தும், எங்கும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை... அவர்
நண்பர்கள் மூலம் விசாரித்தபோது, போட்டியில் கலந்துகொள்வதற்கான அறிவிப்பு வந்த
நாள்முதலாக தாஹிருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அவர் குடும்பத்தினருக்கும்
அச்சுறுத்தல் உண்டாகியுள்ளதாகவும் அறியப்படுகிறது... அதனால் சிலகாலம் மீடியா
வெளிச்சம் இல்லாத இடத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்...
தாஹிரை பொறுத்தவரை
தனது 13 வயதிலேயே, தான் ஒரு சமபால் ஈர்ப்புள்ளவனாக குடும்பத்தில் வெளிப்படுத்திய
நபர்... அவர் குடும்பத்தில் அதுகுறித்து பெரிய அளவில் புரிதல் இல்லாவிட்டாலும்,
இன்றுவரை அவரை பாசத்தோடுதான் அணுகுகிறார்கள்... இதனை தாஹிரே, டிஎன்ஏ இதழுக்கு
அளித்த பேட்டியில் முன்பொருமுறை தெரிவித்துள்ளதால், இப்போதைய தாஹிரின் இந்த
தலைமறைவுக்கு நிச்சயம் அவர் குடும்பம் காரணமில்லை என்றே தோன்றுகிறது...
இந்தநிலையில்
இந்தியாவின் போட்டி ஏற்ப்பாட்டாளர்கள் எவ்வளவோ முயன்றும் இறுதிவரை மாற்று
ஏற்பாட்டினை செய்திடமுடியவில்லை... இதுகுறித்து போட்டியின் இந்தியக்குழு இயக்குனர்
நோலன் தெரிவிக்கையில், “தாஹிர் மிக அழகான திறமையான போட்டியாளர்... அவர்
கலந்துகொண்டிருந்தால், நமக்கான வெற்றி வாய்ப்பு நிறைய இருந்ததாக
நினைத்திருந்தேன்... அவருக்கு அச்சுறுத்தல் உண்டாகியிருப்பதாக அறிகிறேன்...
மிகவும் துரதிர்ஷ்டமான சூழல் இது என்றுதான் சொல்லவேண்டும்... அவரை தொடர்புகொண்டு
போட்டியில் கலந்துகொள்ளவைக்க எவ்வளவோ முயன்றோம்... இனி புதிதாக இந்தியாவில்
எவரையும் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியாது, அதற்கான நேரமும் நமக்கு இல்லை என்பதால்
இறுதிவரை தாஹிரை நம்பி ஏமாந்தோம்... இது நிச்சயம் நமக்கொரு பாடம், இனியொரு முறை
இப்படி தவறுகள் நிகழாமல் சுதாரித்து செயல்பட நல்லதொரு வாய்ப்பு” என்று இன்னுமே மனம் தளராமல் சொல்லிமுடிக்கிறார்...
2013 போட்டியாளர் நோலன்
லூயிஸ், 2014 போட்டியாளர் சுஷாந்த் என இருவருமே
மெட்ரோபொலிட்டன் நகரங்களை சேர்ந்தவர்கள், ஓரளவு பாலீர்ப்பு பற்றிய புரிதலுள்ள
சமூகத்துக்கு மத்தியில் வாழ்பவர்கள்... ஆனால், தாஹிர் கேரளாவின் கோட்டயத்தை
சேர்ந்தவர்... அவர் பேஷன் டிசைனிங் மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் படிப்பவர்
என்றாலும், அவருடைய குடும்பத்தினர் கோட்டயத்தில்தான் வசிக்கிறார்கள்...
தன்னைப்பற்றிய மீடியா வெளிச்சத்தால், அவர் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்
உண்டாகியுள்ள சூழலில்தான் அவர் போட்டியிலிருந்து விலகிவிட்டார்... காரணம் எதுவாக
இருந்தாலும், இப்படியோர் சூழல் நம் சமூகத்திற்கு சற்று பின்னடைவுதான் என்பதை
ஒப்புக்கொள்ள வேண்டும்...
இதுகுறித்து
போட்டியின் சர்வதேச இயக்குனர் எரிக் பட்டர் கருத்து தெரிவிக்கையில், “சமபால் ஈர்ப்பாளர்கள்
மீதான வெறுப்புகளை போக்குவதற்காகத்தான் இதைப்போன்ற போட்டிகளை நடத்துகிறோம்...
ஆனால், போட்டியின் பங்கேற்பாளருக்கும் அவருடைய குடும்பத்தினருக்குமே அப்படியோர்
அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது கண்டிக்கத்தக்க நிகழ்வு... இனி வரும் காலங்களில்
இப்படிப்பட்ட சூழல்கள் உருவாகாமல் முன்னரே அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும்” என்கிறார்...
இந்தியாவின் தாரிக்
மட்டுமல்லாது வேறு இரண்டு போட்டியாளர்களும், இப்படியோர் சூழலுக்கு
ஆட்படுத்தப்பட்டிருப்பது இன்னும் வேதனைக்குரிய விஷயம்... நமீபியாவின் போட்டியாளர்
வெண்டேலினஸ் ஹமுடென்யா என்பவர், சில சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்... எத்தியோப்பியாவின் போட்டியாளர் ரோபல்
ஹைலு, இதே போன்றதொரு கொலை மிரட்டல்களால் குடும்பத்திலிருந்து
வெளியேற்றப்பட்டுள்ளார்...
இன்னும் இப்படி
எவ்வளவு கசப்புகளை இந்த சமூகம் சந்திக்கவேண்டுமோ? தெரியவில்லை... மிகுந்த
எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டின் Mr. Gay World 2015 போட்டிகளுக்கு காத்துக்கொண்டிருந்த சூழலில், இப்படியோர் நிலைமை மிகவும்
வருந்தத்தக்கது.... ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்மறையாக நமக்கு அச்சுறுத்தல்
கொடுக்கிறார்களோ, அதைவிட அதிகமாகவே நமக்கான விழிப்புணர்வு உருவாகிவருகிறது...
கடந்த ஆண்டின் போட்டியைவிட, இந்த ஆண்டின் தாஹிருக்கு ஊடகங்கள் கொடுத்த
முக்கியத்துவமே அதற்கு நல்லதொரு சான்று.. வெற்றிபெற்ற பர்கார்ட் அவர்களுக்கு
பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அடுத்த ஆண்டின் போட்டியை சிறப்பாக செய்திட போட்டி
ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன்..
No comments:
Post a Comment