Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 24 May 2016

தொடுவானம் - தொடர்கதை (பாகம் 2)



ஹலோ மாமா...
“ஹலோ... என்ன பண்ற?
“சும்மாதான் மாமா உக்காந்திருக்கேன்.. நீ?
“அடுத்த ஷாட்க்காக வெய்ட்டிங்... சாப்டியா?
“இல்ல மாமா.. இனிதான் கேண்டீன் போகணும்... நீ?
“சாப்ட்டாச்சு... அப்புறம்?
“அப்புறம்?
“வேற என்ன விஷயம்?
“மாமா... நாமளும் இப்போ கலியுக காதலர்களா மாறிட்டோம் சிரித்தான் மகி..
“என்ன சொல்ற?
“ஆமா மாமா... பொதுவா இந்த லவ்வர்ஸ்லாம் பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை கால் பண்ணி ‘அப்புறம், நீதான் சொல்லணும்னு விஷயமே இல்லைன்னாலும் மணிக்கணக்கா பேசிட்டு இருப்பாங்க... கிட்டத்தட்ட நாமளும் அப்டி ஆகிட்டோம்
திலீப் சத்தமாக சிரித்துவிட்டான்... அருகில் உதட்டுச்சாயம் இட்டுக்கொண்டிருந்த உதிஷா ஒருகணம் திடுக்கிட்டு நிதானித்தாள்...
சற்று சுதாரித்த திலீப், சத்தத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு, “ஆமா.. இதுவரைக்கும் வெறும் பேச்சுல மட்டும்தான லவ்வரா இருக்குறோம்? கிசுகிசுத்தான்...
“மாமா... நீயா இப்டி பேசுற அளவுக்கு நான் விட்டுவச்சது என் தப்புதான்... இன்னிக்கு ஒருவழி பண்ணிடுறேன்.. நைட் ஷோவிற்கான டிக்கெட் முன்பதிவு செய்தான்...
“ஆமா.. அந்த பையன் கார்த்தி எவ்ளோ நாள் இங்க இருப்பான்?
“ஒரு பத்து நாள் மாமா... நம்மகூடவே எப்பவும் இருக்கத்தான் சொன்னேன்.. நம்ம ப்ரைவசி போயிடுமாம், அதனால போறேன்னு சொல்றான்... பெரிய மனுஷன் மாதிரி பேசுறான்.. இயல்பாக சொன்னான் மகி...
திலீப்பிற்கு அந்த பதில் எரிச்சலை உண்டாக்கியது.. “சரி... டேக் போகணும், அப்புறம் பேசுறேன் அவசரமாக அழைப்பை துண்டித்தான்.. பத்து நாட்கள் பல்லை கடித்துக்கொண்டு கடத்தணும்.. மகிக்காக இவற்றை சகித்துத்தான் ஆகணும்...

மாலை வீட்டிற்குள் நுழையும் முன்பே, செருப்புகளை நோட்டமிட்டான் திலீப்... அந்த கார்த்தியுடைய செருப்பை காணவில்லை, மெலிதாய் உற்சாகம் அரும்பியது...
உள்ளே நுழைந்த வேகத்தில் அறைகளில் துழாவினான்... எங்கும் அவனை காணவில்லை..
ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வாசுவை பார்த்து, “எங்கடா அந்த கார்த்தி? ஆர்வமாய் வினவினான்...
“அவன் ஏதோ பர்ச்சேஸ் பண்ணனும்னு டீ நகர் போயிருக்கான்... நைட் லேட்டாதான் வருவான்... அவன ஏன் கேட்குற?
“ஒரு பொது அறிவுக்குதான்... உள்ளம் பூரிப்பானது... மகியோடு நிறைய நேரம் செலவிடலாம், முடிந்தால் அவனோட எங்கயாச்சும் வெளில போயிட்டு வரலாம்.. யோசிக்கத்தொடங்கினான்..
“அப்புறம் இன்னொரு விஷயம்... உன் நம்பருக்கு மகி ரொம்ப நேரம் ட்ரை பண்ணான், வழக்கம்போல நாட் ரீச்சாபில்... உன்கிட்ட சொல்ல சொன்னான்...
“மகி வந்துட்டானா?
“அவன் வந்துட்டு போய்ட்டான்...
“என்னடா உளருற?
“அட லூசு... மகிதான் கார்த்திய ஷாப்பிங் கூட்டிட்டு போனதே....
“மகியும் போயிருக்கான்னு நீ ஏன் முதல்லையே சொல்லல? சீறினான்...
“நீ கார்த்தியதான கேட்ட...
இவனிடம் வாதம் புரிந்து என்ன பயன்?... சட்டையை கழற்றி தூர எறிந்துவிட்டு கட்டிலில் அமர்ந்தான் திலீப்...
மகியின் மேல் மெலிதாய் எரிச்சல் படர்ந்தது... ஏன் அவன் தொடர்ந்து இப்டி பண்றான்?... நான் காதலிக்காம சிடுசிடுன்னு விழுந்தவரைக்கும், ‘மாமா மாமான்னு செக்கை சுற்றும் மாடு போல வட்டமடித்துக்கொண்டிருந்தவன், இப்போ அன்பா பேசின பிறகு அதிகமா பேசுறது கூட இல்லை... முன்னமாதிரியே கொஞ்சநாள் அவனை விட்டுப்பிடிக்கணும் போல.. கடித்த நகங்கள் கிழிந்து மெல்லிய ரத்தசிவப்பு எட்டிப்பார்க்க, வாயிலிருந்து விரலை அவசரமாக எடுத்துவிட்டான்...
கமலோடு பழகிய நாட்களில் இப்படி காதல் மொழிகள் பேச தயங்கியதால்தான், அவன் வெறுத்து ஒதுங்கியதும் கூட...
“திலீப்.. உன் மடில படுத்து வானத்துல தெரியுற நட்சத்திரங்கள ரசிக்கணும்.. உன்னோட கைய பிடிச்சுகிட்டே கடற்கரையில நாள் முழுக்க நடக்கணும்.. கஷ்டமான நேரங்கள்ல உன் மார்ல சாஞ்சு ரிலாக்ஸ் ஆகணும்...
“போதும் கமல்... தூக்கம் வருது
மீண்டும் அப்படியொரு வெறுப்புணர்வு மகியிடமும் வந்துவிடக்கூடாது என்று எவ்வளவோ மெனக்கட்டும், விதி விளக்கை பொருத்திவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிறது...
நள்ளிரவை நெருங்கும் நேரத்தில்தான் இருவரும் வீட்டை அடைந்தனர்... கீழ்த்தளத்தை அடையும்போதே, அந்த சிரிப்புசத்தம் வீட்டிற்குள் எதிரொலித்தது.. ஒருவித அசௌகர்யமான அகோர சத்தமாய் திலீப்பின் காதுகளுக்குள் ஒலித்தது..
வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில், திலீப்பை பார்க்க அறைக்குள்தான் நுழைந்தான் மகி...
“அப்பாடா... நல்லவேள இன்னும் தூங்கலையே உற்சாகமானான்...
திலீப் பதிலெதுவும் சொல்லிக்கொள்ளாமல், ‘காண்டி க்ரஷ் விளையாடிக்கொண்டிருந்தான்...
முகம் கழுவி, உடைமாற்றிக்கொண்டு அவனருகில் அமர்ந்தான் மகி...
“மிட்னைட்ல விளையாடவேண்டிய விளையாட்டா மாமா இது? தோளில் தலைசாய்த்தான்...
“க்ரஷ் ஆகுற மாதிரி எவ்ளவோ காண்டி இருக்கு மாமா, அதை பார்க்கலாமா?.. காதுகளில் முத்தமிட்டு, மெலிதாய் கடித்தான்...
“இனி நான் விளையாடட்டுமா?  கன்னங்களின் பச்சக், உதடுகளை நோக்கி நகர்ந்தது...
தன் வலது கையால் மகியை அப்படியே விலக்கி, சற்று விலகி அமர்ந்தான்... “என்ன மாமா? சிறிய ஏமாற்றத்தோடு கேட்டான்..
“எனக்கு தூக்கம் வருது, குட் நைட் படுத்துக்கொண்டான்...
மகிக்கு ஏமாற்றத்தைவிட, குழப்பமே மேலிட்டது... என்னாச்சு திலீப்பிற்கு?.. காலையில் கூட அவனாகவே காதல் கனிய பேசினான், ஏன் இப்டி திடீர் மாற்றம்?... ஒருவேளை ஷூட்டிங்ல எதாச்சும் பிரச்சினையா இருக்குமோ?.. இருக்கலாம், இவன் எப்போதான் எல்லாத்தையும் வெளிப்படையா பேசப்போறானோ!.. சில நிமிடங்கள் அவனையே பார்த்துக்கொண்டபிறகு, தானும் கட்டிலில் சாய்ந்துகொண்டான்...

                                      *************
“மாமா இன்னிக்கு எங்க ஷூட்டிங்?
“ஸ்டூடியோலதான்
காலை முதலாகவே முகம் கொடுக்காத பேச்சு, பட்டும் படாத பதில்கள்... மகியின் மனதிற்குள் ஏதோ அபாய சமிக்ஞை தெரிந்தது.. முகமும் கூட இறுகிப்போயிருந்தது...
“மாமா... ஏதும் ப்ராப்ளமா? தயக்கத்தோடு கேட்டான்...
“இல்ல அதே அளவான பதில்... திலீப் கதவை திறந்து சென்ற பிறகும், ஒருசில நிமிடங்கள் புரியாத குழப்பத்தில் அப்படியே நின்று யோசித்துக்கொண்டிருந்தான் மகி... என்ன பிரச்சினையா இருந்தாலும், அவனை மீட்டுவிடு முருகா!... மனதிற்குள் வணங்கிக்கொண்டான்...
“வாங்க திலீப்... என்ன இவ்ளோ லேட்டு?... சீக்கிரம் போய் கண்டின்யூட்டி ட்ரஸ் போட்டுட்டு வாங்க யூனிட்டிற்குள் நுழையும் முன்பே அவசரப்படுத்தினான் துணை இயக்குனர்...
அறைக்குள் சென்று சட்டையை கையில் எடுத்தான்... “மகி மாமாவுக்கு அந்த கிரீன் ஷர்ட் அவ்ளோ சூப்பரா இருக்கு! காலையில் ஒலித்த கார்த்தியின் குரல் காதுகளுக்குள் குடைந்தது...
“ஏய் குமாரு... எங்கப்பா அந்தாளு?... ட்ரஸ் மாத்த இவ்வளவு நேரமா?... இயக்குனரின் குரல் கேட்டபிறகு, அவசரமாக சட்டையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான்..
மேலும் கீழுமாக திலீப்பை பார்த்தான் இயக்குனர்... “என்னமோ மிஸ் ஆகுற மாதிரி இருக்கு, என்னன்னு கவனி குமாரு! சொல்லிவிட்டு உதிஷாவை தேடிப்போனான்...
உதிஷாவின் அறைக்குள் சென்றான்... ஒயிட் வாஷ் அடிப்பதை போல உதட்டினை ரெட் வாஷ் செய்துகொண்டிருந்தாள்...
“பேபி... இவ்ளோ லிப்ஸ்டிக் வேணாம்... நேத்து சீன்ல இவ்ளோ டார்க்கா இல்லையே?
“ஓ... ஓகே சார்... குற்சுக்கறேன்... சட்டென இயக்குனரின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டாள்... அருகில் அமர்ந்திருந்த அம்மாவோ வெட்கத்தில் தலை குனிந்துகொண்டாள்...
“பேபி அதிர்ச்சியாய் கன்னங்களை தடவிக்கொண்டான்..
“டிஸ்யூ பேப்பர்ல வைப் பண்ணா நெற்யா போய்டும், அதான் கிஸ் கொடுத்து குர்ச்சேன் சார்... அழகாய் சிரித்தாள்...
‘அடிக்கடி இப்படி குறைச்சுக்கோ பேபிமனதிற்குள் வழிந்துகொண்டான்...
திலீப்புடைய உடைகளை கசக்கிவிட்டு, வியர்வை திட்டுக்களாய் தண்ணீரை சட்டையில் தெளித்துவிட்டு, காட்சித்தொடர்பு துண்டிக்கப்படாத வண்ணம் திலீப் தயார்படுத்தப்பட்டிருந்தான்...
“குமாரு, அந்த தம்பி கேரக்டர் பையன் எங்க? கன்னத்திலிருந்து கையை விலக்கிடாமல் கேட்டார் இயக்குனர்...
“மிதுன் இங்க வாப்பா... கை உயர்த்தி அழைக்க, ஒரு மன்மதன் வில்லும் அம்பும் இல்லாமல் நடந்து வந்தான்... இல்லை இல்லை, மிதந்து வந்தான்..
“ஹ்ம்ம்.. நல்லாத்தான் இருக்கான்... சீன் எக்ஸ்ப்ளைன் பண்ணிடு குமாரு கேமராவை நோக்கி விரைந்தார்...
“மிதுன்... நீ திலீப்போட பக்கத்து வீட்டு பையன்... உன் அக்காதான் உதிஷா... உங்க அக்காவ கரெக்ட் பண்றதுக்காக, இவர் உன்னோட பழகுறாரு... நல்லா ஜாலியா, க்ளோசா பழகனும்... டயலாக் ஏதும் இல்ல, பீஜிஎம் மட்டும்தான்..
“ரோல்... ஆக்சன்...
காட்சிகளின் தொடக்கத்தில் கார்த்தியும் மகியும் மாறிமாறி மனத்திரையில் தோன்றியபோதிலும், ஒருகட்டத்தில் மிதுன் உருவம் திரைபோல குறுக்கே நின்றது... அதிகபட்சம் பதினெட்டு வயதிருக்கலாம், அதுவும் கூட கதையின் கன்டன்ட் வார்னிங்க்காக சொல்லவேண்டியதால்.. மெலிதாய் அரும்பிய மீசை, மழிக்கப்பட்ட தாடி, கலப்படமில்லாத பசும்பொன் மேனி... போதும், காட்சிக்குள் போகலாம்...
“திலீப்போட நட்புணர்வா விளையாடுப்பான்னு சொன்னதும் போதும், திலீப்பின் கன்னங்களை கிள்ளுகிறான், கட்டிப்பிடிக்கிறான், உருண்டு புரளுகிறான்...
“ஏய் குமாரு... என்ன நடக்குது?... லவ்வர் கணக்கா விளையாடுறானுக?
“ரியலா இருக்குது சார், நீங்க ரோல் போங்க...
தலைமுடியை கலைத்துவிட்டு காதுகளை கடிக்கிறான், கன்னங்கள் சிவக்கும் அளவிற்கு கிள்ளி கடிக்க எத்தனிக்கிறான்... கைகள் மெள்ள தொடைகளில் தழுவி, மேல்நோக்கி....
“கட்.. கட்... கட்... டேக் ஓகே சத்தமாக சொல்லிவிட்டு, “என்ன கருமம்யா நடக்குது?... இதே ரேஞ்சுல போனா கூடியசீக்கிரம் நான் சகிலாவையும், ரேஷ்மாவையும் வச்சுதான் படம் எடுக்கணும்... சரி, அடுத்த சீனுக்கு பேபி ரெடியான்னு பாரு! வழிந்த வியர்வையை துண்டில் துடைத்துக்கொண்டார்...
திலீப் இன்னும் குழப்பங்களிலிருந்து மீளவில்லை.. ஆனால் இது காலை முதலாக கனத்திருக்கும், கார்த்தி பற்றிய குழப்பம் இல்லை.. சற்றுமுன் தன் மீது உருண்டு புரண்ட மிதுன் பற்றிய குழப்பம்...
காட்சியின் போது அவன் கைகள் மார்பை அழுத்தியது, வயிற்றுக்கு கீழே பலமுறை பயணிக்க முயற்சி செய்தது, தொடைகளை வருடியது... இதல்லாம் எதற்காக?... ஒருவேளை அவ்வளவு தன்னை மறந்து நடிக்கிறானா? அல்லது, வேறெதுவும் நோக்கத்தில்...
உடைமாற்றி வெளியே வந்த மிதுன், தன் காட்சி முடிந்ததால் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்...
“நாளைக்கு உன் சீன் இருக்கும், வந்திடு அலைபேசி எண்ணை வாங்கிவைத்துக்கொண்டான் குமார்...
அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு திலீப்பின் அருகே வந்த மிதுன், “தாங்க்ஸ்... இன்னிக்கு உங்கள நினைச்சுதான், பேன்ட் நனஞ்சிது சிரித்துக்கொண்டான்...
திலீப் திகைத்துவிட்டான்... அடப்பாவி, இவ்வளவு வெளிப்படையா சொல்றானே! எச்சிலை விழுங்கிக்கொண்டான்... திலீப்பின் கையை பிடித்து பேனாவால் பத்து எண்களை எழுதிவிட்டு எதுவும் சொல்லிக்கொள்ளாமல் நகர்ந்துவிட்டான்...
ஏதோ ஒரு அலைபேசி எண்... அவனுடையதாகத்தான் இருக்கும்... பேசச்சொல்கிறானோ?.. பேசினால் மேற்கொண்டு என்ன சொல்வான்?... ஐயோ அதல்லாம் எதுவும் வேணாம், மனதை இயல்பாக்கிக்கொண்டான்...
“திலீப்... டேக் போகலாமா? எங்கோ குரல் கேட்க, காட்சிகளுக்குள் ஐக்கியமானான்..
மார்பு பிதுங்கும் அளவிற்கு இறுக்கமான டாப்ஸ், தொடைக்கு மேலேறிய குட்டைப்பாவாடை சகிதம் உதட்டை ஈரப்படுத்தியவாறு திலீப்பின் அருகில் நின்றுகொண்டிருந்தாள் உதிஷா.. இறுக்கமான டாப்ஸ் உறுத்துகிறது போலும், அடிக்கடி விரல்களால் எலாஸ்டிக்கை இழுத்துவிட்டுக்கொண்டிருக்கிறாள்...
எச்சிலை விழுங்கிக்கொண்டே காட்சியை விளக்கிக்கொண்டிருந்த இயக்குனரின் கண்கள் அலைபாய்ந்தது...
“சார்... அந்த அந்த ஜன்னல்ல பூச்செடி வைக்குறாப்ல செட் பண்ணனுமான்னு ஆர்ட் டைரக்டர் கேட்குறாரு! யூனிட் ஊழியன் ஒருவன் மூச்சிரைக்க கேட்டான்..
“அல்ரெடி செட் ஆகிடுச்சு, நீ போ உதிஷாவிடமிருந்து கண்களை நகர்த்தாமல் சொன்னான்...
“சார், சீன் பற்றி சொல்லுங்க! குமார் சூழலை மீட்டான்...
“ஓகே... உதிஷா காலேஜ் போறீங்க... திலீப்புக்கும் உங்களுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம்..
“மனாஸ்தாப் அப்டின்னா? இந்த சந்தேகம் அவளுக்கு வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம்...
“அமிதாப்ஓட சித்தப்பா..ன்னு சொல்ல வாயெடுத்த இயக்குனர், பேபியின் அளவுக்கு மீறி வழிந்த மனதை (?) சங்கடப்படுத்த விரும்பாததால்,  “அப்டின்னா ஈகோ க்லாஷ்... அப்போ திலீப்பை வெறுப்பேத்த அவரோட ப்ரென்ட் கூட நீங்க கடலை போடுறீங்க, அதைப்பார்த்த திலீப் டென்ஷன்ல உங்ககூட சண்டை போடுறாரு!.
“ஓகே... அப்போ மேடம் காஸ்ட்யூம் மாத்தணுமா சார்?
“ஏன்?... இதுவே அம்சமாதான இருக்கு!
“காலேஜ்க்கு இப்டி போடமுடியாதே... ட்ரஸ் கோடு இருக்குல்ல சார்?
“ஆமா... காசு கொடுத்து டிக்கெட் வாங்குறவன் ட்ரஸ் கோடு பார்க்கப்போறானா?... பேபி இந்த காஸ்ட்யூமோட பாஸ்கட் பால் விளையாண்டா அது கொடுத்த காசுக்கு வர்த்து... அதிகப்ரசங்கித்தனமா பேசாம, போய் டேக் போறதுக்கு வேலைய பாரு!
உதிஷா குலுங்கி பிதுங்கி சிரித்துக்கொண்டே நடந்துவர, “பேபிம்மா... கொஞ்சம் கோபமா ரியாக்ஷன் காட்டுங்க... உங்க லவ்வர் கூட டேட் போகல, சண்டைதான் போடப்போறிங்க! கோபத்தை காட்டிக்கொள்ளாமல் கடிந்துகொண்டார்...
“ஒன்ஸ் மோர்...
பதினோராவது டேக்கில் சோர்ந்துபோன முகத்துடன் உதிஷா நடந்துவர, அதற்குமேலும் இன்னொரு டேக் போக மனதைரியம் இல்லாத இயக்குனர், “ரோல் போகட்டும்! விரக்தியாய் சொன்னார்...
“நான் உன் பிரண்ட் கூட பேஸ்னா உன்க்கின்னா? கோபமாய் பேசுகிறாளாம்...
“நீ தப்பில்லாம தமிழ்ல பேசினா நான் ஏன்மா கோபப்படப்போறேன்? சிரித்துவிட்டான் திலீப்...
“கட் கட் கட்... பாய்ந்துவந்தான் இயக்குனர்...
“என்னய்யா நடக்குது இங்க?... அந்த பொண்ணே அரைகுறையா இப்பதான் மூஞ்சில ஒரு ரியாக்சன் காட்டுது, அப்பன்னு பார்த்து நீ ஏன் டயலாக் மாத்தி பேசிட்டு சிரிக்குற? இயக்குனரின் கழுத்தோரத்தில் நரம்பு புடைத்தது... எப்படியும் பீபி ஷூட்டப் ஆகிருக்கும், மயங்கி விழுந்தாலும் விழுந்திடுவார்... அடச்ச, மகி கூட சேர்ந்து இப்டி என்னென்னமோ யோசிக்கிறேன்...
“சார், உங்க பேபிய பார்த்து சத்தியமா எனக்கு கோபமே வரமாட்டுது... லிப்ஸ்டிக் கலையாம டயலாக் பேசுறத பாக்குறப்போ சிரிப்புதான் வருது...
“யோவ்... தாலி அறுக்காதிங்கய்யா... ஒட்டுமொத்த படத்துலயும் உன்ன மட்டும்தான் நம்பிருக்கேன், உன் நடிப்பு மட்டும்தான் படம் சக்சஸ் ஆகும்னு ஓரளவு நம்பிக்கை தருது.. நீயும் இப்டி சொதப்புனா என்னய்யா பண்ணுவேன்?... உன் எதிர்ல நிக்குறது உதிஷா இல்ல, உன்னோட லவ்வர்னு நினைச்சுக்க... உன் லவ்வர் அடுத்தவன்கிட்ட வழிஞ்சு பேசினா உனக்கு எவ்ளோ கோபம் வருமோ, அந்த அளவுக்கு நடிச்சிடு... கிட்டத்தட்ட கெஞ்சியேவிட்டார்...
“ரோல்... ஆக்சன்...
பூனை போல உதட்டை குவித்து, கோபித்துக்கொண்டிருப்பதாக அரைகுறை முகபாவனையோடு நின்ற உதிஷா மெள்ள மறைந்தாள்... மனத்திரையில் கிராப்பிக்ஸ் மூலம் மகி தோன்றினான்... அருகிலேயே கார்த்தியும்... “மகி மாமா... நான் ஊட்டி விடுறேன், நீ சாப்டு சத்தங்களும் காதுகளை தாண்டி சிந்தைக்குள் புகுந்தது...
“என்ன நெனச்சிட்டு இருக்க?.. நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியாதா?... நீ அடுத்தவங்க கூட பேசுறது தப்புன்னு சொல்லவரல, ஆனா எனக்குன்னு உன்கிட்ட இருக்குற உரிமைகள பங்குபோடுற அளவுக்கு உன்கூட யாரும் சொந்தம் கொண்டாடினா எனக்கு பிடிக்காது... நீ எனக்கு மட்டும்தான், அதை வேற எந்த சூழல்லையும் விட்டுத்தர முடியாது கண்களில் ஆக்ரோஷம், உதடுகள் துடிக்க பேசி முடித்தான்... சட்டென உதிஷாவை கட்டி அணைத்து, இறுக்கமாய் தன் மார்போடு சேர்த்து தூக்கினான்... அந்த பிடியில் உதிஷாவின் மூச்சுத்திணற, திலீப்போ அவள் உதட்டினை நோக்கி பார்வையை செலுத்தினான்...
“கட் கட் கட்... டேக் ஓகே... சத்தமாய் சொல்லிவிட்டு, குமாரை அருகில் அழைத்து, “என்னமா நடிக்கிறான் பாருடா... இவனுக்கு இந்த வருஷம் நேஷனல் அவார்ட் கிடைக்கலைன்னா நான் படம் எடுக்குறதையே விட்டுடுறேன் பாரு உருகினார்...
“எப்டியும் அதான் நடக்கப்போகுது... இந்த வருஷத்துல அவார்டு கிடைக்குதோ இல்லையோ, அடுத்த வருஷம் உங்க பேபிக்கு பேபி பொறந்திடும் அங்க பாருங்க... குமார் கை நீட்டிய திசையில், இயக்குனர் “கட் சொன்ன பிறகும் கூட உதிஷாவை அணைப்பிலிருந்து விடுவிக்காமல் இறுகப்பற்றிக்கொண்டிருந்தான் திலீப்...
ஒருவழியாக இயக்குனர் ஓடி, திலீப்பின் கைகளை இழுத்து நகர்த்த, மனத்திரையின் மகி மறைந்து உதிஷா கண்களுக்கு புலப்பட்டாள்... மூச்சிரைக்க தடுமாறியவளுக்கு தண்ணீர் கொடுத்து நிதானமாக்கினான் இயக்குனர்...
“திலீப்... பர்ஸ்ட் கிளாஸ் ஆக்டிங்... ஆனா சீன்ல ரொம்பவே ஐக்கியமாகிட்டிங்க போல, அதான் பேபி ரெஸ்ட்லஸ் ஆகிட்டாங்க... வழிந்தான் இயக்குனர்...
“இட்ஸ் ஓகே சார்... இன்னுரு டேக் போலாமா? உதிஷா ஆர்வமானாள்...
“போதும் பேபி... நீ ஒரு முடிவோடதான் இருக்க... போய் அடுத்த சீனுக்கு ரெடி ஆகும்மா ஒருவழியாய் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தாள்...
படப்பிடிப்பு முடிய ஆறு மணி ஆகிவிட்டது... யூனிட்டின் ஏசி காரில் கொஞ்சம் ஆசுவாசமாக சாய்ந்துகொண்டான்...
எவ்வளவு நாடகத்தன்மையான கதைகள்... ஆனால், இதைத்தான் ரசிகர்கள் ரசிக்கிறாங்க.. பாலச்சந்தரையும், மகேந்திரனையும் ரசித்த மக்கள் இப்போ திரையரங்கிற்கே வருவதில்லை போலும்.. யாரோ ஒரு ஹீரோ, படம் முழுவதும் சந்தானம், ஜவுளிக்கடை பொம்மை போல ஒரு ‘கும் நாயகி... இதுதான் வெற்றிக்கான பார்முலாவாம்... ஒரு நாலு படம் ஹிட் ஆனபிறகு, சொந்த தயாரிப்பில் முழுக்க முழுக்க மகேந்திரன் பாணி கதையில் ஒரு படம் நடிக்கணும்...
நாயகி இன்னொரு ஆணுடன் பேசினால், நாயகனுக்கு கோபம் வருதாம்... பிறகென்ன அவன் நாயகன்?... சாமானியன்தானே அவனும்?...
கைக்கடிகாரத்தை பார்த்தபோது, கையில் ஏதோ எழுத்து தென்பட்டது... விளக்கை போட்டு பார்த்தான்... அலைபேசி எண், காலையில் மிதுன் எழுதியதுதான்... ரெனால்ட்ஸ் விளம்பரம் போல, அவ்வளவு வியர்வையை தாண்டியும் இன்னும் அழியாமல் இருக்கிறது...
சட்டென மனதிற்குள் ஒரு மின்சார யோசனை.. நான் எவ்வளவு காண்டாகுறேன்னு மகிக்கு புரியவைக்க அற்புதமான வாய்ப்பு இது... நெருப்பு சுடும்னு சொன்னால் அவனுக்கு புரியாது, ஒருமுறை அவன் விரலை பிடித்து நெருப்பில் வாட்டுவதில் தவறில்லை..
அலைபேசியை எடுத்து ஒவ்வொரு எண்ணாக தட்டி, காதில் வைத்தான்...
“ஹலோ மிதுன்...
“வாவ்... வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்?... திலீப் நாயர்தான? உருகினான்...
“ஹ்ம்ம்.. ஆமா...
“கால் பண்ணுவீங்கன்னு தெரியும், பட் இவ்ளோ சீக்கிரம் நான் எதிர்பார்க்கல... சொல்லுங்க, எப்போ மீட் பண்ணலாம்?
“இப்போ எங்க இருக்க?
“அது அவசியமில்லாத கேள்வி திலீப்... எங்க வரணும்னு சொல்லுங்க, பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்...
“நான் இப்போ விருகம்பாக்கத்துகிட்ட வந்துட்டு இருக்கேன்..
“காட் இஸ் கிரேட்... நான் வடபழனிலதான் இருக்கேன்... பத்து நிமிஷம் இல்ல, அஞ்சே நிமிஷத்துல பார்த்துடலாம்...
“சரி... நானே வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..
“உங்க வீட்டுக்குதானே?
“ஹ்ம்ம்... ஆமா...
அடுத்த பத்தாவது நிமிஷத்தில் திலீப்பின் அருகில் முகம் முழுக்க உற்சாகத்தில் அமர்ந்திருந்தான் மிதுன்...
கருப்பு நிற ‘வி கட் டீ ஷர்ட், காலையில் பார்த்த பார்மல் ஷர்ட்ஐ விட கூடுதல் கவர்ச்சியாய் மிதுனை காட்டியது... உடலை ஒட்டி இறுக்கமாய், உடலின் வழமையை அப்பட்டமாய் வெளிப்படுத்தியது.. உதடு கூடுதல் இளஞ்சிவப்பாய் தெரிகிறது...
இன்னும் கூடுதலாக சில நிமிடங்கள் பார்த்துவிட்டால், மகிக்கு வெட்டிய குழிக்குள் தான் விழுந்துவிடுவனோ? என்கிற பயத்தில் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் திலீப்..
“என்னால இப்போவரைக்கும் நம்பமுடியல திலீப்... உங்கள எவ்ளோ நாள் சைட் அடிச்சிருப்பேன் தெரியுமா?.. என்னோட பேக் பேஸ்புக் ஐடியோட ப்ரோபைல் பிக்சரே உங்க ஜட்டி விளம்பர போட்டோதான்.. ஆனா, இப்போ உங்க பக்கத்துல நான்.. கையை பிடித்து அழுத்திக்கொண்டான்...
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாது முன்னே செல்லும் பேருந்தை, முந்திசெல்வதில் கவனமாக இருக்கிறார் கார் டிரைவர்.. கிசுகிசுப்புகளில் சுவாரசியம் இல்லாத அதிசயப்பிறவி போல...
“மெடிக்கல் ஷாப் போயிட்டு போகலாமா? திலீப்பின் காதுக்குள் கிசுகிசுத்தான்...
“ஏன்?.. உடம்பெதுவும் சரியில்லையா? அப்பாவியாக கேட்டான்...
“இல்லப்பா.. காண்டம் ஏதும் வாங்கத்தான், புதுசா ஸ்ட்ராபெரி ப்ளேவர் வந்திருக்கு கண்ணடித்தான்...
“ஹ ஹா... சிரித்துக்கொண்டான்..
“ஓ.. அப்போ ஸ்டாக் வச்சிருக்கிங்க போல.. லூப்ரிக்கன்ட் ஏதும் தேவைப்படுமோ?
“ஏய், நீ பேசாம வா... டின்னர் சாப்பிட எதுக்கு லூப்ரிக்கன்ட்?
“அப்போ டின்னருக்கு அப்புறம்? தொடையை வருடினான்...
“அப்புறம்... கை கழுவனும்.. கையை எடுத்துவிட்டான்...
“அதுக்கப்புறம்?
“அதுக்கப்புறம் உன்ன வடபழனில டிராப் பண்ணிடுறேன்...
“திலீப் விளையாடாதிங்க... டின்னர் சாப்பிட இடம் இல்லாமதான் உங்க வீட்டுக்கு வர்றேனா?... கூச்சப்படுறீங்க போல, நான் பார்த்துக்கறேன் இடுப்பை கிள்ளினான்...
லிப்டில் குடியிருப்பின் கீழ்த்தளத்திலிருந்து மூன்றாம் தளத்திற்குள் போவதற்குள் திலீப்பிற்கு மூச்சு முட்டிவிட்டது... ஆங்காங்கே தொட்ட கைகளை விலக்கிவிட்டே சோர்ந்துபோனான்...
“ஏய், கொஞ்சம் அமைதியாத்தான் வாயேன் சிடுசிடுத்தான்...
எதையும் பொருட்படுத்தாமல் தோளில் கைபோட்டபடியே வீட்டின் வாசல் வரைக்கும் வந்தான் மிதுன்... அழைப்பு மணியை அடித்தான் திலீப்...
“என்ன பெல் அடிக்குற?... வீட்ல ஆள் இருக்காங்களா?
“ஹ்ம்ம்.. என் ப்ரெண்ட்ஸ்
கதவு திறக்கப்பட்டது.. கதவை திறந்த கார்த்தியின் பார்வையில் ஒருவித வெறுப்பு... திலீப்பின் தோளில் யாரோ ஒரு புதியவன் கைபோட்டுக்கொண்டு, அவ்வளவு நெருக்கமாய் நிற்கிறான்... சற்று விலகி நின்று, அவர்கள் உள்ளே செல்லும்வரை பார்வையை நகர்த்தாமல் மிதுனையே பார்த்துக்கொண்டிருந்தான்...
‘இவன் யாரோ ஒருத்தன கூட்டிட்டு வந்திருக்கான்... அந்த லூசு மகி மாமா, இந்த அதிசய மனவாளனுக்காக சமையலறைக்குள் ஒரு கோழியை கொன்று சமைத்துக்கொண்டிருக்கிறான்... மனம் புழுங்கியது...
கார்த்தி தங்களை கவனித்துக்கொண்டிருக்கிறான்! என்பதை அனுமானித்த திலீப், தனது கையை மிதுனின் இடுப்போடு சேர்த்து அணைத்தபடி அறைக்குள் அழைத்து சென்றான்... நுழைந்த வேகத்தில் அறைக்கதவும் அவசரமாக மூடிக்கொண்டது.. எச்சிலை விழுங்கிக்கொண்டான் கார்த்தி, மெலிதாய் படபடத்தது...
“கார்த்தி, என்னடா பண்ற?.. சிக்கன் கிரேவி ரெடி பண்ணிட்டேன், அந்த சப்பாத்திய நீ போடு சமையலறைக்குள்ளிருந்து மகியின் குரல்...
விறுவிறுவென உள்ளே நுழைந்தான் கார்த்தி... சமையல் மேடையில் அமர்ந்து மாவு பிசைந்துகொண்டிருந்தான் வாசு, அடுப்பில் எதையோ வறுத்துக்கொண்டிருக்கிறான் மகி...
“என்னடா பேசாம நிக்குற?... மாமா வந்தாச்சு போல, சப்பாத்திய போடேன்... கார்த்தியை உலுக்கினான்...
“ஆமா... நீ சப்பாத்தி போடு, அந்த நாயரு உன் சக்காலத்திய... நிறுத்திக்கொண்டான்...
“என்ன ரைமிங்க்ல பேசுற?...
“இல்ல... சரியான டைமிங்லதான் பேசுறேன்.. உன் ஆளு யாரோ ஒருத்தன கூட்டிட்டு வந்திருக்கார்... அவன் நாயரை கட்டிப்பிடிக்கிறதும், நாயர் அவன் இடுப்பை வளைச்சு பிடிக்குறதும்... கருமம்.. கருமம்.. தலையில் அடித்துக்கொண்டான்...
“டேய்... என்ன உளருற? இடைபுகுந்தான் வாசு...
“ஆமா... நான்தான் உளருறேன், அந்த நாயர் இந்நேரம் பெட்ல உருளுவான்...
“ரொம்ப பேசாம போய் திலீப்பையும் அந்த பையனையும் சாப்ட வரச்சொல்லு சிக்கன் வெந்துவிட்டதை ஒருமுறை உறுதிசெய்துகொண்டான் மகி...
“அந்த கொடுமைய இன்னொருமுறை என்னால பாக்கமுடியாது, நீயே போய்க்கோ வாசுவின் அருகில் அமர்ந்துகொண்டு மாவினை தேய்க்கத்தொடங்கினான்..
நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டே அறையை நோக்கி நகர்ந்தான் மகி... கதவு சாத்தியிருந்தது.. திறக்கலாமா? தட்டிவிட்டு திறக்கலாமா?.. இதென்ன முட்டாள்த்தனமான யோசனை. பட்டென கதவை திறந்தான்.. கட்டிலில் திலீப்பின் வெகு அருகாமையில் அமர்ந்திருந்த மிதுன், சரியாக அந்த கணப்பொழுதில் திலீப்பின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்... அவன் ஒரு கை திலீப்பின் தொடையின் மீது.. மகி கதவை திறந்தததால் மிதுனின் செய்கையை திலீப் தடுக்கவில்லை, இதற்குத்தானே இவ்வளவு போராட்டங்களும்!... “என்ன மகி? என்று கேட்டபிறகு திலீப்பின் ஒரு கையும் மிதுனின் தொடையில் ‘தொப்பென விழுந்தது...
“சாப்பிடலாம் திலீப்... ரெண்டு பேரும் வாங்க... மிக இயல்பாக சொல்கிறான்... அவன் முகத்தில் கொஞ்சமும் சலனமில்லை.. ஒருவேளை மூன்றாவது நபர் அருகில் இருப்பதால், நடிக்கிறான் போலும்... எப்படியும் இரவு சண்டைக்கு வருவான், மனதிற்குள் ஒரு குதூகலம்...
எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இருவரும் சாப்பிட்டார்கள்.. மகிதான் பரிமாறினான்... சமையலறை வாயிலின் சுவற்றில் சாய்ந்தபடி நின்று நடக்கும் கூத்தினை பற்கள் நறநறக்க பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்தி...
சிக்கன் துண்டுகளை பிய்த்து, கடித்து தின்றபோது மெதுவாய் மிதுனின் கால் திலீப்பின் கால்களை உரசத்தொடங்கியது... கால் கட்டை விரலால் திலீப்பின் கெண்டைக்கால் தொடங்கி, மேல்நோக்கி நகர்த்த தொடங்கினான்... ஒருபக்கம் திலீப்பிற்கு எரிச்சலாக இருந்தாலும், மறுபக்கம் சற்று விலகி நின்றுகொண்டிருக்கும் கார்த்தி அதை கவனித்துக்கொண்டிருப்பதில் அப்படி ஒரு ஆனந்தம்...
கட்டைவிரல் முட்டிவரை சென்றுவிட்டது, இதற்கு மேலும் தாமதித்தால் வேறுவித சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்... இன்னும் பசி அடங்கவில்லை, எனினும் அவசரமாக எழுந்து கைகழுவ சென்றுவிட்டான்...
“இன்னொரு சப்பாத்தி! கேட்டு வாங்கி சாப்பிட்டு, நிதானமாய் கைகழுவினான் மிதுன்...
“சரி மிதுன், உன்ன எங்க டிராப் பண்ணனும்? வீட்டிற்கு வெளியே அழைத்துவந்துவிட்டான்...
“டிராப் பண்றியா?.. அடப்பாவி, நிஜமாதான் சொல்றியா?
“இதிலென்ன பொய் சொல்ல இருக்கு?
“நீ கூப்ட்டன்னு பிளானட் ரோமியோல மீட் பண்ண வரச்சொல்லிருந்த ஒரு சேட்டு பையனையும் அவாய்ட் பண்ணிட்டு வந்தேன் பாரு... என் புத்திய... இடமும் வலமும் திரும்பிப்பார்த்து செருப்பை தேடினான்...
“ஏய் ஏய்... கூல்... ஒரு நட்பு ரீதியா டின்னர் சாப்பிடத்தான் கூப்டேன்...
“ஆமா நீ இந்திய பிரதமர், நான் பாகிஸ்தான் அதிபர்.. ரெண்டு பேரும் நல்லெண்ண அடிப்படைல டின்னர் சாப்ட்டோம்... ஆளப்பாரு... பொரிந்து தள்ளினான்...
“என்கூட நடிக்குற கோ ஆர்டிஸ்ட் நீ, அதனாலதான்...
“சரி... வந்ததும் வந்துட்டேன்... அட்லீஸ்ட் ட்ராவலிங் எக்ஸ்பென்ஸ் ஆச்சும் கவனி..
சட்டைப்பைக்குள் துழாவினான் திலீப்... நூறு, ஐந்நூறு என காகிதங்களை அடுக்கினான்...
“யோவ்... அசிங்கப்படுத்தாத என்னைய... நான் காசு கேட்கல... அட்லீஸ்ட் ஒரு முத்தமாச்சும் கொடு, வந்ததுக்கு அதாச்சும் மிச்சம்னுட்டு போறேன்..
சற்றும் யோசிக்காமல் மிதுனின் கன்னத்தில் அவசரமாக ஒரு முத்தம் கொடுத்தான்... உதட்டில் எதிர்பார்த்தபோதிலும், கிடைத்த கன்னத்தை தடவிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்...
“நீ ட்ராப்லாம் பண்ணவேணாம்... நானே போய்க்கறேன்... படுபாவி இன்னிக்கும் என் கைக்கு வேல வச்சுட்டானே! புலம்பிக்கொண்டே லிப்டிற்குள் நுழைந்து, மறைந்து போனான்...
இருவரும் சாப்பிட்ட பின், பாத்திரங்களை எடுத்துவைத்துவிட்டு, இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தான் மகி...
“மாமா உனக்கென்ன மனசுல சிலப்பாதிகாரம் கண்ணகின்னு நெனப்பா?... அப்பேர்பட்ட கோவலனுக்கே என்ன முடிவுன்னு தெரியும்ல? இளங்கோவடிகளை சாட்சிக்கு அழைத்தான் கார்த்தி...
“மதியம் கே டிவில பூம்புகார் படம் பார்த்தியா என்ன?
“இல்ல... ஒரு அரைமணிநேரத்துக்கு முன்ன இங்க ஓடுன ஒரு பிட்டுப்படத்த பத்தி பேசுறேன்..
“என்னதாண்டா குட்டி பிரச்சினை உனக்கு? ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டு, எதிரே கார்த்தியையும் அமரச்செய்து பொறுமையாக கேட்டான் மகி...
“திலீப் ஏன் இப்டிலாம் பண்றாரு?...
“நீ இப்போ புலம்புற அளவுக்கு என்ன பண்ணிட்டாரு?
“யார் அந்த பையன்?
“கூட நடிக்குற ஆர்டிஸ்டா இருக்கும்டா... ப்ரெண்ட்ஸ்ஐ வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதா என்ன?
“அடடே... கூட நடிக்குறவன் இடுப்புல கைவச்சுதான் நடப்பாரா?... அவனும் எங்கங்கயோ தொடுறான், கட்டை விரலால காலுல சொரண்டுறான்... அடச்ச, கருமம்
“கார்த்தி, நீ அளவுக்கதிகமா கற்பனை பண்ற... அதல்லாம் சும்மா விளையாட்டா பண்ணிருப்பான்..
“நீ மனுஷனே இல்ல மாமா.. ரெண்டு பேரும் முத்தம் கொடுத்திருந்தா கூட, உதட்டால ஒத்தடம் கொடுத்திருப்பாங்கன்னு சொல்லுவ போல..
“ஹ ஹா... ரூம் கதவை திறந்தப்போ அதுவும் நடந்துச்சுடா... உறுத்தலில்லாமல் சொல்கிறான்..
திகைத்தான் கார்த்தி... மனுஷனா இவன்?... அடப்பாவி... “எந்த தைரியத்துல மாமா இன்னும் நாயரை நம்புற?
“அவர் மேல உள்ள நம்பிக்கைல சிரித்தான்...
“சரி, உன் துணைவனை நீ நம்புறது தப்பில்ல... ஆனா கூட வந்தவன் பார்வையே சரியில்ல... அவன் கண்ணு நொடிக்கு ஒருதடவை இடுப்புக்கு கீழதான் பார்த்துச்சு... அதையும் கொஞ்சம் கவனத்துல வச்சுக்க! சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்...
மகியின் மீதான அக்கறைதான், இப்படி அதீத கோபமாக வெளிப்பட்டது.. சிரித்துக்கொண்டான் மகி.. எவ்வளவு முதிர்ச்சியா பேசுறான் அந்த அறுந்தவாலு... ஓரிரு வருடங்களுக்கு முன்புவரைக்கூட, “மாமா ஐஸ் க்ரீம் வாங்கித்தா!ன்னு பின்புறத்திலிருந்து கழுத்தை சுற்றி இரண்டு கைகளாலும் அணைத்தபடி பேசிக்கொண்டிருந்தவன், சடாரென பெரியவனாக பேசுகிறான்... அதுவும் அவ்வளவு விஷயங்களை கவனித்து உள்வாங்கி பேசுகிறான்...
ஒருவழியாக மிதுனை வழியனுப்பி வைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தான் திலீப்... தனியே அமர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மகியை பார்த்ததும் மனதிற்குள் ஒரு புளகாங்கிதம்... எத்தனை நாள் இப்படி தனியே குழம்பிருப்பேன், யார்கிட்டயும் கவலையை பகிர்ந்துக்கமுடியாம தவிச்சிருப்பேன்?... இன்னிக்கு புரியுதா அந்த வலி? மனதிற்குள் ஆனந்தப்பட்டுக்கொண்டான்...
திலீப் அருகில் வந்து நிற்கும்வரையிலும் அவனை கவனித்திடாது யோசித்துக்கொண்டிருக்கிறான் மகி... மனதிற்குள் மகிழ்ச்சியை மறைத்துவிட்டு, இயல்பான முகத்தோடு மகியின் தோள்களை தொட்டான்...
திடுக்கிட்டு நிதானித்தான் மகி.. “என்ன மாமா?
“என்ன தீவிர யோசனைல இருக்க போல?
“ஆமா... ஈரான்லேந்து பைப் லைன் வழியா கேஸ் எப்டி கொண்டுவர்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன் சிரித்துக்கொண்டே திலீப்பை அண்ணாந்து பார்த்தான்... அவன் முகத்திலோ நூறு வால்ட்ஸ் பல்பு பிரகாசமாக எரிந்தது...
ஆனாலும் அதனை காட்டிக்கொள்ளாமல் அறைக்குள் சென்றான்... மூக்கிற்கு கீழே விரல்களால் வருடினான், மண் எதுவும் ஒட்டவில்லை...
எப்படியல்லாம் நடிக்கிறான் அந்த மகாநடிகன்?... நியாயமாக சினிமாத்துறையில் இருக்கவேண்டியவன் மகியல்லவா?... ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறான், கேட்டால் சிரித்துக்கொண்டே மறுக்கிறான்... மிதுன் முத்தம் கொடுத்ததை தெளிவாக பார்த்தபிறகும், அதெப்படி சந்தேகம் எழாமல் இருக்கும்?.. எவ்வளவு தூரம் வரையில் அவனால் மறைக்கமுடிகிறது என்று பார்க்கலாம், இன்று இரவோடு அதற்கொரு தீர்வையும் பார்த்தாகனும்.. கட்டிலின் விளிம்பை பிடித்தவாறே, யோசித்துக்கொண்டிருக்கிறான் திலீப்...
“இப்ப நீ என்ன மாமா யோசிச்சுகிட்டு இருக்குற?.. கனடால ஆட்சி மாற்றம் நடந்தது பற்றியா? சிரித்தவாறு கட்டிலில் அமர்ந்தான்... ஆப்புக்கு ஆப்பு சரியாப்போச்சு...
திலீப்பின் கோபம் சில செல்சியஸ்கள் உயர்ந்திருந்தது...
“ஏன் மகி ஒருமாதிரி இருக்க?
“எனக்கென்ன மாமா நல்லாதான இருக்கேன்? கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டான்...
“இல்லடா... ஏதோ ஒரு விஷயம் உன்ன உறுத்திகிட்டே இருக்கமாதிரி தெரியுதே தூண்டிலை போட்டான்...
“அட ஆமா மாமா... சரியா சொன்ன.. இந்த ட்ராக் பேன்ட் எலாஸ்டிக் ரொம்ப அழுத்துது, உறுத்திகிட்டே இருக்கு... லுங்கிதான் பெஸ்ட் தூண்டில் போட்டவனையும் சேர்த்து விழுங்கியது திமிங்கலம்...
லுங்கியை மாற்றிக்கொண்டு திலீப்பின் அருகில் அமர்ந்து, கட்டிலில் சாய்ந்துகொண்டான்...
சரியான விடாக்கண்டனாக இருக்கிறான், ஆனாலும் விடக்கூடாது... திலீப்பின் சூப்பர் ஈகோ விடாமல் அவனை துரத்தியது...
மொபைலை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு தானாக சிரித்தான்.. “அந்த மிதுன் ரொம்ப மோசம்... இப்டியா பச்சை பச்சையா குட் நைட் மெசேஜ் அனுப்புவான் ஓரக்கண்ணால் மகியை பார்த்தான்.. ஒரு அசட்டுசிரிப்பை தவிர பெரிய அளவிலான சலனம் எதுவுமில்லை...
இவ்வளவு அழுத்தக்காரனாய் இருக்கிறான்.. “மகி... என்னை எதுவும் தப்பா நினைக்கலையே? நேரடியாக விஷயத்துக்கு வந்தான்...
“உன்ன தப்பா நெனைக்க என்ன மாமா இருக்கு?... ஐ லவ் யூ மாமா கழுத்தை உயர்த்தி திலீப்பின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டான்...
“அதுக்கில்ல... இதே முத்தத்த அந்த மிதுனும் எனக்கு கொடுத்தானே... நீ கூட பார்த்த  ஜவ்வாக இழுத்தான்..
“மாமா நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்... அப்டி எவ்வளவோ முத்தங்கள நீ கடந்துதானே ஆகணும்..
திலீப் ஸ்தம்பித்து நின்றான்... “அப்போ என்மேல உனக்கு சந்தேகம் இல்லையா?
“எப்பவும் உன்மேல எனக்கு சந்தேகம் வராது மாமா...
“நான் அந்த அளவுக்கு யோக்கியன் இல்லையே?
“யாருமே நூறு சதவிகிதம் யோக்கியம் இல்லைதான்... ஆனா நீ தப்பு செய்யமாட்டன்னு நான் நம்புறேன்... ஒருவிஷயம் செய்றதால என் மனசு சங்கடப்படும்னு தெரிஞ்சா, அதை செய்யமாட்டன்னு எனக்கு தெரியும் மாமா... திலீப்பின் விரல்களை தனது விரல்களோடு கோர்த்துக்கொண்டான்...
“ஒரு ரூம்குள்ள வேற ஒரு பையனோட நான்... அதுவும் முத்தம் கொடுக்குறான், அங்கங்க தொடுறான்... தப்பு எதுவும் நடந்திருக்காதுன்னு எப்டி நம்புற?
“ஒருவேள நீ தப்பு செய்ற ஆளா இருந்தா அவன வீட்டுக்கா கூட்டிட்டு வந்திருப்ப?... எத்தனையோ ஹோட்டல்கள், லாட்ஜ்கள தாண்டித்தான இங்க வந்திருப்ப... அதுமட்டுமில்லாம நீ என்னைய லவ் பண்ற மாமா, அதவிட உன்ன நம்புறதுக்கு என்ன வாரண்ட்டி வேணும்?
திலீப்பின் சந்தேக எண்ணங்கள் அத்தனையும் அஸ்தமித்து போயின... என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மகியின் மடியின் மீது சாய்ந்தான்...
மகியே தொடர்ந்தான் “ஏன் மாமா இப்டிலாம் யோசிக்குற?... ஒருவேள ஏதோ ஒரு பையனோட... அவ்வளவு ஏன், நம்ம கார்த்தி கூட எவ்வளவோ க்ளோஸா பழகிருப்பேன்... ஒருமுறை கன்னத்துல முத்தம் கூட கொடுத்தத பார்த்தியே... அப்போவல்லாம் என்மேல சந்தேகப்பட்டா ஒதுக்கின?... என்னை முழுசா நம்பினதான?... பின்ன நான் மட்டும் எப்டி உன்ன சந்தேகப்படுவேன்... சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளா?ன்னு எனக்கு தெரியாது... ஆனால் நிச்சயம் மகியின் மணாளன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன்னு வரலாறு பேசும் மாமா சிரித்தான்...
திலீப்பின் முகத்தில் செருப்பால் அறைந்ததை போன்ற ஒரு உணர்வு... கன்னங்களை வருடிக்கொண்டான்... கண்களை விரல்களால் அழுத்தி கசக்கினான், கண்ணீர் திவலைகள் சாறுபோல கசிந்தது...
“சாரி மகி... வார்த்தை தழுதழுத்தது...
“ஐயோ மாமா.. என்ன இதல்லாம்... குழந்தையா நீ?... திலீப்பை எழுப்பி நிமிர்த்தி இரண்டு கைகளாலும் கன்னங்களை தாங்கி முகத்தோடு முகமாய் ஒற்றிக்கொண்டான்... இறுக்கமாய் கட்டியணைத்தபடி, “நீ தப்பே செஞ்சாலும் உன்னைவிட்டு போய்டமாட்டேன் மாமா மகியின் கண்களிலும் கண்ணீர் அரும்பியது...
மகியின் மார்பில் தலை சாய்த்து படுத்திருக்கும்போது, சூரிய ஒளியில் விலகும் பனித்திரை போல அத்தனை குரூர எண்ணங்களும் மறைந்துபோனதாய் உணர்ந்தான் திலீப்...
ஜன்னலின் ஊடே ஒலித்த குருவிகளின் சத்தத்தில் தூக்கம் களைந்து கண் விழித்தான் மகி.. மார்பில் தலை சாய்த்து படுத்திருக்கிறான் திலீப்... மெள்ள அவன் தலையை உயர்த்தி அருகில் தலையணையில் பூப்போல வைத்தான்... திலீப் தலை வைத்திருந்த மார்புப்பகுதி சிவந்துபோயிருந்தது, முடிகள் அழுத்திய தடம் பதிந்திருந்தது... சிரித்துக்கொண்டான்... குழந்தைபோல உதடுகளை குவித்தபடி உறங்கிக்கொண்டிருக்கிறான் திலீப்.. குனிந்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டு, “ஐ லவ் யூ மாமா சத்தம் வராமல் சொன்னான்...
படுக்கை அதிராத வகையில் மெதுவாய் நகர்ந்து, எழுந்து சோம்பல் முறித்தான்.. மொபைலை எடுத்து நேரத்தை பார்த்தான், ஆறு மணிதான் ஆகிறது... இன்னும் ஒருமணி நேரம் தூங்கியிருக்கலாம், ஜன்னலை திறந்து சாலையை வேடிக்கை பார்த்தான்.. அதிகாலை காற்று சில்லிட்டது...
முகம் கழுவிவிட்டு ஹாலில் அமர்ந்து நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கும்போதுதான் வாசுவின் அறைக்குள் பேச்சுக்குரல் கேட்பதை கவனித்தான்.. ஆறரைக்குள் எழுந்துவிட்டார்களா இருவரும்?... கும்பகர்ணன்கள் ஆச்சே, மழை வந்தாலும் ஆச்சர்யமில்லை...
எழுந்து அறைக்கதவை திறந்தான்... படுக்கையின் மீதிருந்த பெட்டியில் ஒவ்வொரு உடையாக மடித்து அடுக்கிவைத்துக்கொண்டிருக்கிறான் கார்த்தி... அருகில் அமர்ந்திருக்கும் வாசு, அரைகுறை குழப்பத்தில் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறான்...
“பத்து நாள்னு சொன்னியே, இன்னியோட எட்டுநாள்தான ஆகுது?... அப்டி என்னடா அவசரம்?
“உங்ககூடவல்லாம் கூட ரெண்டு நாள் இருந்தா பைத்தியம்தான் பிடிக்கும், நான் கிளம்புறேன்... வேகம் கூடியதால், இப்போது உடைகள் சுருட்டி திணிக்கப்பட்டன... பெட்டியை அழுத்தி மூடிவிட்டு திரும்பிப்பார்க்க, கண்களில் குழப்பத்தோடு மகி நிற்கிறான்...
“என்னடா?... ஆயிரம் கேள்விகளையும் ஒருவார்த்தைக்குள் சுருக்கிவிட்டான் மகி...
“ஒண்ணுமில்ல மாமா... ரெண்டு நாள்ல ஜாப்ல ஜாயின் பண்ணனும்.. அதான் ப்ரென்ட் ரூம்ல ஸ்டே பண்ணிக்கலாம்னு
“அதுக்காக இப்டி சொல்லிக்காம கிளம்புவியா?... அடிச்சேன்னா... உரிமையோடு கை ஓங்கினான்..
“போதும் மாமா... உன்ன ஒருவாரமா ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன்... உங்க ரெண்டு பேருக்கும் இடைல இருக்குற புரிதல் புரியாம நானும் குழம்பி, உன்னையும் குழப்பிடுறேன்.. என்னால உங்க லவ்வுக்குள்ள எதுனாச்சும் ப்ராப்ளம் வருமோன்னு பயமா இருக்கு! சுருங்கிய முகத்தில் கவலை தோய்ந்திருந்தது...
“ஏய் குட்டிம்மா... என்ன பெரியமனுஷன் மாதிரி பேசுற?... உன்னால எங்களுக்கு என்ன ப்ராப்ளம் வந்திடப்போகுது?... மார்போடு சேர்த்து அவனை அணைத்துக்கொண்டான்...
சட்டென விலகிக்கொண்ட கார்த்தி, “இதான் மாமா ப்ராப்லமே... இப்டி நீ பாசமா பழகுறதை நாயர் எப்போவாச்சும் தப்பா நெனச்சிட்டா என்ன பண்றது?.. நேத்திவரைக்கும் எனக்கு அப்டி தோனல, ஆனா யாரோ ஒருத்தன் அவர்கூட நெருக்கமா பழகுறப்போ நெஞ்சல்லாம் எரிஞ்சுது... என்னிக்காச்சும் அந்த எரிச்சல் திலீப்புக்கு வந்துட்டா? தலையை கவிழ்த்துக்கொண்டான்...
“டைஜின் இல்லன்னா ஜெலுசில் கொடுத்து சரிபண்ணிக்கலாம் கண்ணடித்து சிரித்தான்...
“அடப்போ மாமா, இன்னும் உனக்கு சீரியஸ்னஸ் புரியல கவலையோடு கட்டிலில் அமர்ந்தான்...
“ஏண்டா குட்டி சீரியஸா இருக்கணும்?... என் கார்த்திக்குட்டி எப்பவும் சிரிச்சுகிட்டே துருதுருன்னு இருக்கணும்... பளிச்சுன்னு கண்ணும், விரிஞ்ச உதடுகளும்தாண்டா உனக்கு அழகே... அத ஏன் கவலையால காணாம போக செஞ்சிடுற?
“ஏய் மங்க்கி மாமா, ரொமான்ஸ் பேசுற நேரமா இது?... திலீப் எதாச்சும் இழுத்தான்...
“என்ன கார்த்தி, விட்டா என்னைய கோட்டா ஸ்ரீனிவாசராவ் ரேஞ்சுக்கு வில்லன் ஆக்கிடுவ போல?.. மகிக்கு எது பிடிக்குமோ, அதான் எனக்கும் பிடிக்கும்.. நான் எதுக்கு உங்கள சந்தேகப்படப்போறேன் அறைக்குள் தூக்கம் களைந்த முகத்துடன் வந்துநின்றான் திலீப்...
கார்த்தி அசடுவழிய சிரித்துக்கொண்டான்... இனி மேற்கொண்டு என்ன பேசுவது?.. என்ன பேசினாலும் எடுபடப்போவதில்லை...
“அதான் திலீப்பே சொல்லியாச்சுல்ல, அப்புறம் என்னடா திருதிருன்னு முழிக்குற? மகி குரலை உயர்த்தினான்...
“ஐயோ அதுக்கில்ல... புது இடத்துக்கு போய் செட்டாகனும்ல, அதான் முன்னமே போய் அதல்லாம் சரிபாத்துக்கலாம்னு... வேறு காரணங்களை தேடி ஓடினான்... அடுத்த பத்து நிமிடங்களும் ஆயிரம் காம்ப்ரமைஸ்கள், அதற்கு பத்தாயிர விதமான கார்த்தியின் பதில்கள்.. பேச்சை நிறுத்தினால், வாசலை நோக்கி ஓடிவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் கார்த்தி தயாராக நிற்கிறான்...
“என்னதான் சொன்னாலும் இவன் எடுத்த முடிவை மாத்திக்கப்போறதில்ல, விடு மாமா களைத்துப்போய்விட்டான் மகி..
“ஏய் மகி மாமா... நான் எங்க போகப்போறேன்.. இதோ இருக்கு ஓ.எம்.ஆர் ரோடு.. வீக்கென்ட் வந்துட்டா ஓடிவரப்போறேன், அப்புறமென்ன பீலிங்க்ஸ்?... என் மங்க்கி மாமா இப்டியல்லாம் டென்ஷனே ஆகக்கூடாது மூக்கை திருகினான்...

                        ***********
நாட்கள் உருண்டோடியது... திலீப்பும் மகியும் அவரவர் வேலைகளில் மூழ்கிப்போய்விட்டார்கள்...
“இப்டி மூணு பேரும் ஒண்ணா உக்காந்து சாப்புட்டு எவ்ளோ நான் ஆச்சுல்ல? வாசுதான் தொடங்கினான்... மகியும் திலீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள்... வெறும் உதட்டளவில், உள்ளத்தினுள் ஒருவித வெறுமை படர்ந்திருந்தது...
“என்னடா பண்றது?.. முதல் படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் அவங்க ஆட்டிவைக்குற குரங்குதான் நான்.. சாதத்தை பிசைந்துகொண்டே சொன்னான்.. அள்ளி வாயில் வைக்க முடியாத அளவிற்கு ஒருவித விரக்தி...
“எதையும் நெனைக்காம சாப்பிடு மாமா... அதான் ஷூட்டிங் மோஸ்ட்லி முடிஞ்சிடுச்சே... இன்னும் ஒரு மாசத்துல படமே ரிலீஸ் ஆகப்போகுது, அப்புறம் தினமும் நாள் முழுக்க உக்காந்து ஒண்ணா சாப்பிடலாம்.. உற்சாகப்படுத்தினான் மகி.. இப்படி அவ்வப்போது வாய் வார்த்தைக்காவது ஊக்கப்படுத்த மகி இல்லாது போயிருந்தால், திலீப் என்றைக்கோ துவண்டு விழுந்திருப்பான்...
“ஹ்ம்ம்... பார்க்கலாம்... இன்னும் ஒரு பாட்டு மட்டும் மிச்சம் இருக்கு... அப்புறம் ரீ ரெக்கார்டிங் வேலைகள், எடிட்டிங் முடிஞ்சதும் சென்சார் போர்டு அப்ரூவல்... இதில எல்லாம் ஏதும் ப்ராப்ளம் வரலைன்னா படம் அடுத்த மாசம் ரிலீஸ் ஆகிடலாம்...சாப்பிடத்தோன்றவில்லை.. எழுந்து கைகழுவிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான் திலீப்...
மகியும் தட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்...
“சாரி மகி, நான் இப்போ பேசிருக்கக்கூடாது... அவன் இவ்ளோ பீல் பண்ணுவான்னு நெனைக்கவே இல்ல... வாசு நொந்துகொண்டான்...
“இல்ல வாசு... என் மனசுக்குள்ளயும் இருந்த ஏக்கம்தான் அது... நீ வெளில சொல்லிட்ட, அவ்ளோதான்... இப்பவல்லாம் திலீப்போட உக்காந்து பேசக்கூட முடியல... அதவிட அவன் உடம்பை சரியா கவனிச்சுக்க, அவனுக்கே நேரமில்ல.. நேத்து நைட் பன்னிரண்டு மணிக்கு வந்தவன், காலைல அஞ்சு மணிக்கு எழுந்து போய்ட்டான்... இப்போ ஒரு அரைமணி நேரம் தூங்கிட்டு, உடனே ஜெமினி போகணுமாம்.. எழுந்து கைகழுவிவிட்டு திலீப்பிற்கு சிறுதானியங்களில் சிற்றுண்டி செய்தான்... எழுவதற்குள் பால் காய்ச்சி, பாதாம் பருப்பை தட்டி அதனுள் போட்டான்...
திலீப் எழுந்து கிளம்பி ஹாலுக்கு வருவதற்கும், இவற்றை கையில் வைத்துக்கொண்டு மகி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது... பாலை மட்டும் குடித்துவிட்டு, “இதை போறப்போ சாப்ட்டுக்கறேன் மகி! சொல்லிவிட்டு சிட்டாக பறந்துவிட்டான்...
சற்று நிதானமாக இருக்கையில் சாய்ந்துகொண்டான்... அடுத்த ஐந்தாவது நிமிடம் திலீப்பிற்கு கால் செய்து, “நான் கொடுத்தத சாப்ட்டியா? வினவிக்கொண்டான்... சாப்பிட்டதை உறுதிசெய்தபோது மனதிற்குள் ஒரு நிம்மதி, கண்களில் ஒளிர்ந்தது...
“நிஜமாவே திலீப் ரொம்ப லக்கிதான் மகி.. வாசு சிரித்தான்...
“ஏண்டா?
“இவ்ளோ அக்கறையான லவ்வர் கிடைக்குறதுன்னா சும்மாவா?
“அப்டிலாம் ஒண்ணுமில்ல... லவ்வருக்கு செய்றதில என்ன கணக்கு பாக்கப்போறோம்!
“சரிதான்.. ஆனா, திலீப் உனக்காக செஞ்சதை கம்பேர் பண்றப்போ நீ பண்ணது ரொம்பவேதான?
“கெடயாது வாசு... அவன் எவ்ளோ ஹாண்ட்சம் அழகன்... நான் ரொம்ப சுமாரான பையன்... என்னை மாதிரி ஒரு ஆளை, லவ்வரா ஏத்துக்கறதே நீ சொல்ற கணக்குகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் வாசு...
“ச்சி ச்சி... என்ன இது காம்ப்ளக்ஸ் உனக்கு?... நீயும் நல்லாதான இருக்க? அவசரமாக மறுத்தான்...
“இல்ல வாசு... நீ கே கண்ணாடிய போட்டு பார்த்தா அப்டி சொல்லமாட்ட
“அதென்ன கண்ணாடி?
“சாதாரண ஒரு ஸ்ட்ரைட் நபரோட அழகியல் பார்வையவிட, ஒரு கே நபரோட அழகியல் பார்வை கொஞ்சம் கூடுதல் சென்சிட்டிவ்... அதாவது உனக்கு கியூட்டா தெரியுற பையன், ஒரு கே பார்வைல ரொம்ப சுமாரா தெரியலாம்..
“இதல்லாம் உன் அனுமானம்...
“இல்ல அனுபவம்..
“எதவச்சு சொல்ற?
“எத்தனையோமுறை பிளானட் ரோமியோல போட்டோ அனுப்பி, ரிப்லை வராத எண்ணிக்கைய வச்சு சொல்றேன்...
“அவங்களுக்கு பார்வைக்கோளாறா இருக்கலாம்...
“ஆடத்தெரியாதவனுக்கு தெருக்கோணல்னு சொல்ற மாதிரியா? சிரித்தான் மகி..
“அப்போ அழகா இருக்குற பையனை லவ் பண்ணினா, காலம் முழுக்க அவனுக்கு அடிமையா இருக்கணும்னு சொல்லவர்றியா?...
“அப்டி சொல்லல... அவன்கிட்ட என்னைய ஈர்த்த அழகு இன்னும் குறையல, அதேபோல என்கிட்டே அவன் எதிர்பார்க்குற அக்கறையான பாசமும் குறையக்கூடாதுல்ல?
“அப்போ ஒரு பத்து வருஷம் கழிச்சு அவனுக்கு வயசாகிட்டா அழகு குறைஞ்சிடும், அப்போ உங்க லவ்வும் போனமாதிரிதான?
“இல்ல... அந்த அழகு விஷயமல்லாம் எங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒரு பிடிப்பு உண்டாகுற வரைக்கும்தான்.. அது கூடியசீக்கிரம் முழுமை அடைஞ்சிடும்னு நம்புறேன்
“போதும் மகி.. பைனலா என்ன சொல்ல வர்ற?
“என்னைப்போல ஒருத்தன அவன் லவ்வரா ஏத்துகிட்டப்போவே, நீ சொல்ற கணக்குகளுக்கு அப்பாற்பட்டவனா ஆகிட்டான் திலீப்.. சோ, என் தரப்புலேந்து அவனுக்கு நான் கொடுக்குறது பாசத்தையும், கவனிப்பையும் மட்டும்தான்.. அதை கணக்கு பாக்காம அள்ளி கொடுக்குறது தப்பா?
வாசு அமைதியானான்... அவனிடத்தில் பதிலில்லை.. மகி சொல்வதனுள் ஏதோ கருத்துப்பிழை இருப்பதாகவே பட்டாலும், அதற்குரிய விளக்கம் சொல்லி தர்க்கம் புரிவதற்கான தெளிவு தன்னிடத்தில் இல்லாததால் உண்டான அமைதி அது..
அலைபேசி சிணுங்கியது... திரையை பார்த்த மகியின் முகம் சுருங்கியது...
“யாருடா கால்? முகமாற்றத்தை வாசு கவனித்திருக்கக்கூடும்...
“பிரதீப்
“எதுக்கு பண்றான்?.. அட்டன்ட் பண்ணி கேளேன்!
“வழக்கம்போல ஏதோ ஈவன்ட்னு இன்வைட் பண்ணித்தான்.. தோழர் அமைப்புக்காக
“பார்ட்டியா?
“இல்ல... மீட்டிங்க்னு சொன்னான்..
அப்போ போய்ட்டுதான் வாயேன்... ஹாஸ்பிட்டல் வீடுன்னு வேற எங்கயும் போறதே இல்ல... அட்லீஸ்ட் ஒரு சேஞ்க்காக போகலாம்ல
“போகலாம்... ஆனா போற இடத்துல என் வாய் சும்மா இருக்கணுமே, எதுனாச்சும் உளறி ப்ராப்ளம் ஆகிட்டா?
“குட்டை குழம்பினாத்தான் மீன் பிடிக்கமுடியும்... நீ போ பார்த்துக்கலாம்..
மூன்றாவது முறையாக தொடர்ந்து விடாமல் அழைத்துக்கொண்டிருக்கிறான் பிரதீப்.. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் சொல்லி மறுத்தாயிற்று, இம்முறை சொல்வதற்கான காரணம் கூட இல்லை... மறுபுறத்தில் வாசு சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதாகவே படுகிறது..
பச்சை பட்டனை அழுத்திய கணமே, “ஆறு மணிக்கு சரியா வந்திடுறேன் பிரதீப் வேறுவித சம்பாஷனைகளுக்கு இடம் கொடுக்கவில்லை...
“ஓகே மகி அதற்கு மேல் சொல்வதற்கு என்ன?... அந்த ‘ஓகேயில்தான் அத்துனை சாதித்த பெருமிதம்...
அரங்கத்திற்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு, சுற்றிமுற்றி பார்த்தான் மகி... நேரமும் ஏழு மணியை எட்டியிருந்தது... கூட்டம் உள்ளே நடந்துகொண்டிருக்கிறது, உள்ளே செல்லலாமா? சிறிது தடுமாறினான்...
“ஏய் மகி! உள்ளிருந்து ஒரு குரல்... யோசிக்க அவசியமே இல்லை, அங்கு பரிச்சயமான ஒரே நபர் பிரதீப்தானே...
“அங்க என்ன நிக்குற?.. இங்க வா கைபிடித்து அழைத்து உள்ளே சென்றான்..
‘தோழர் அமைப்பின் லோகோ ஆங்காங்கே திரைகட்டி தொங்கவிடப்பட்டிருந்தது... மேடையில் ஆங்கிலம் கலந்த தமிழில் கே ப்ரைடின் பெருமையை பேசிக்கொண்டிருந்தார் ஒரு மத்திம வயதினர்.. அரங்கத்தில் அமர்ந்திருந்த ஐம்பது நபர்களில், அதிகபட்சம் அதனை ஐந்து பேர் கவனித்திருக்கக்கூடும்... சிலர் மொபைலில் விரல்களால் விளையாடிக்கொண்டிருக்க, இன்னும் சிலரோ அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் “அந்த ஆக்டர் கேயாம்... அவனும் இவனும் எங்கயோ டேட்டிங் போனானுகளாம்! அதிமுக்கியம்வாய்ந்த கிசுகிசுக்களை அப்டேட் செய்துகொண்டிருந்தனர்....
“ஹார்வே மில்க் அப்டின்னு ஒருத்தர் அமெரிக்கால இல்லன்னா, இன்னிக்கு அங்க கிடைச்சிருக்குற கே ரைட்ஸ் இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சுதான் கிடைச்சிருக்கும்... இடையில் தண்ணீர் குடித்துக்கொண்டார்...
“அதனால ப்ரெண்ட்ஸ், இந்த வருஷம் கே ப்ரைடை இன்னும் சிறப்பா செய்யனும்... வழக்கம்போல உங்க சப்போர்ட் எங்களுக்கு வேணும்! பேசி முடித்ததை உறுதிசெய்த அந்த ஐம்பது நபர்களும் தூசி தட்டுவதை போல கரகோஷம் எழுப்பினர்...
“ஓகே ப்ரெண்ட்ஸ்... வேற யாரும் பேச விரும்புறீங்களா? பேச்சை கேட்கவே சுவாரசியம் அற்றுப்போனவர்கள் பேசவா போகிறார்கள்?... சிறிதும் சலசலப்பு இல்லை...
கூட்டத்தில் ஒரு கை மட்டும் உயர்த்தியிருக்க, அமைப்பின் நிர்வாகிகளுக்கு அது ஒரு புதுவித அனுபவமாக இருந்திருக்கக்கூடும்...
“சொல்லுங்க ப்ரோ... என்ன பேசணும்? எல்லோர் கண்களும் மகியை மொய்க்கத்தொடங்கியது... பிரதீப் வளைந்து நெளிந்தான்... அவசரப்பட்டு இவனை அழைத்துவிட்டமோ? தன்னை நொந்துகொண்டான்...
“வருஷம் ஒருமுறை ப்ரைடு... மாசம் ஒரு பார்ட்டி... இவ்ளோதானா ஆக்டிவிசம்? குரல் உயர்த்தி கேட்டான்... “மகி, ப்ளீஸ் கொஞ்சம் உக்காருங்க! பிரதீப் கைபிடித்து அழுத்தினான்...
“என்ன சொல்லவர்றீங்க மிஸ்டர்...
“மகிழன்...
“ஓகே... மகிழன்... அப்போ நாங்க வேற ஏதும் செய்யலன்னு சொல்றீங்களா?
“அப்டி சொல்லவரல... ஆனா, நாம விரும்புற உரிமைகள் கிடைக்குறதுக்கான பாதை இது இல்லன்னு சொல்றேன்...
“இப்டி அப்பப்போ யாராவது கிளம்புறீங்க... சட்டமும் சமூகமும் நமக்கு சாதகமா இல்லாத சூழல்ல வேற என்னதான் பண்ணமுடியும்னு சொல்றீங்க?
“அந்த சட்டத்தையும் சமூகத்தையும் மாத்துறதுக்கு முதல்ல முயற்சி பண்ணலாம்ல?
“அதென்ன சாக்லேட் சாப்பிடுற மாதிரி சாதாரண விஷயமா?
“சயனைட் சாப்பிடுற அளவுக்கு சாத்தியமில்லாத விஷயமில்ல...
“இப்டி குறை சொல்றவங்க யாரும் நேரடியா களத்துக்கு வர்றதில்ல... தோணுனத பேசிட்டு போய்டுவீங்க, இங்க இறங்கி வேலை பாக்குறப்போதான் அதோட கஷ்டங்கள் புரியும்..
“இப்போவரைக்கும் நீ என்ன பண்ணின? ஏன் வரல?ன்னுதான் வசையா அள்ளி வீசுறீங்களே தவிர, என்ன பண்ணலாம்னு கேட்க தோனல... நாம ஒண்ணா பண்ணுவோம்னு துணிஞ்சு சொல்லவும் மாட்றிங்க...
சிறிது சலசலப்பு நிலவியது... பலரது முகங்களும் சுளித்தன... அப்படி ஒரு அசௌகர்யமான சூழலை அங்கு எவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.. நேரமும் ஓடிக்கொண்டிருக்க, கைக்கடிகாரங்களை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தன பல ஜோடி கண்கள்.. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்தனர்...
“சரி சொல்லுங்க மகிழன்... ப்ரைடு, பார்ட்டி ஏதும் வேணாம்... என்ன பண்ணலாம்னு சொல்ல வர்றீங்க?
“நாம நேரடியா அரசியல்ல இறங்குவோம்... மகிழன் சொல்லி முடிப்பதற்குள், எதிரொலிக்கும் அளவிலான சிரிப்பலைகள் அரங்கை நிறைத்தன...
மேடையில் பேசிக்கொண்டிருந்தவர், கிரேசி மோகன் நாடகம் பார்த்தவரைப்போல விழுந்து புரண்டு சிரித்தார்... கண்களில் நீர் முட்டும் அளவிலான சிரிப்பு அது... ஒருவகையில் அவ்வளவு நேரம் வதைத்துக்கொண்டிருந்த மகியை அவமானப்படுத்துவதற்காகன அப்படியோர் அதிர்வலை சிரிப்பு அது..
“இப்டி ரியாக்ஷன் எதிர்பார்த்ததுதான்... ஆனால் இதுல சிரிக்க என்ன இருக்கு? மகி விடுவதாக இல்லை...
“இங்க அவனவனையும் குடும்பமே ஏத்துக்கல, இதுல அரசியல்ல நின்னு கோட்டைய பிடிக்கப்போறோமா?
“கோட்டையல்லாம் புடிக்க வேணாம், ஒரு சின்ன ஓட்டைய அடைக்க முடிஞ்சாலே போதும்... இவ்ளோ நேரம் தொண்டை வறண்டுபோக பேசிட்டு இருந்த, ஹார்வே மில்க் யாரு சார்?... அமெரிக்க அரசியல்வாதி... அப்போ அங்க அவரால உண்டுபண்ண முடிஞ்ச தாக்கம், நம்மால இன்னிக்கு தேதில இங்க பண்ணமுடியாதா?
“மகிழன்... கொஞ்சம் எதார்த்தத்த பேசுங்க...
“இவ்ளோ நேரம் அதைத்தான் பேசிட்டு இருக்கேன் சார்... நாம அத்தனை தொகுதிலயும் நின்னு ஆட்சிய பிடிக்கணும்னு சொல்லவரல, ஒரு குறிப்பிட்ட பத்து தொகுதில முதல்ல நிப்போம்.. நல்லா படிச்ச வாக்காளர்கள் நிறைஞ்ச தொகுதியா தேர்ந்தெடுத்து நிக்கலாம்... சர்வேப்படி ஒட்டுமொத்த மக்கள் தொகைல 10% சமபால் ஈர்ப்பாளர்கள் இருக்குறதா ஆய்வுகள் சொல்லுது... அப்டி பார்க்குறப்போ, நம்ம கே, லெஸ்பியன் வாக்களிச்சா மட்டுமே குறஞ்சது 10% வாக்குகள் வாங்கலாம்... அதாவது, ஒரு சட்டமன்ற தொகுதில ரெண்டு லட்சம் ஓட்டு இருக்குன்னா, நமக்கு அங்க நிச்சயம் இருபதாயிரம் வாக்குகள் விழவாயப்பிருக்கு... சிலர் ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருக்க, மேலும் சிலரின் முகங்கள் மட்டும் இன்னும் வதங்கியே காணப்பட்டது...
“அப்பவும் நம்மால ஜெய்க்க முடியாதே...
“ஜெய்க்கவே வேணாம் சார்... நாலஞ்சு சதவிகிதம் வோட் பேங்க் வச்சிருக்குற ஜாதி கட்சிகளே, இங்க உள்ள பெரிய கட்சிகள மிரட்டி வச்சிருக்கப்போ நம்மளோட வாக்கு வங்கி பத்து சதவிகிதம்... எலெக்சன பொருத்தவரைக்கும் வெற்றி தோல்விய தீர்மானிக்குற வோட் பேங்க் நம்மளோடது... முதல்ல நம்ம பலத்தை காட்டுவோம், அதுக்கு பிறகு நம்மளோட டிமான்ட் முன்வைப்போம்...
“ஆனா, நீங்க சொல்ற பத்து சதவிகிதம் வோட்ஸ் நமக்கு விழனுமே?
“கண்டிப்பா விழும்.. ப்ரைடுக்கு வாடான்னா வர சங்கடப்படுற ஆட்கள் கூட, வோட்டிங் மெஷின் முன்ன நின்னு அவனுக்கான பட்டன் அழுத்த தயங்கமாட்டான்...
“இதனால சமூகத்துல என்ன மாற்றம் வரப்போகுதுன்னு நினைக்குறீங்க?
“நிறைய நடக்கும்... எலெக்சன் பிரச்சாரத்துக்காக வீடு வீடா போறப்போ, ஓரியன்ட்டேசன் பற்றிய விஷயங்களை ஒவ்வொரு வீட்டு ஹாலுக்கும் கொண்டுசேர்க்க முடியும்... முக்கியமா மீடியாவோட அட்டென்ஷன் நமக்கு கிடைக்கும்... ஓரியன்ட்டேசன் பற்றி ஒவ்வொரு மனுஷனும் பேசவாச்சும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்ல... இதுவரைக்கும் பொதுத்தளத்தை விட்டு ஒதுங்கியே போராடின நாம, முதல்முறையா மக்கள் மத்தியில ஒண்ணா கலப்போம்... அவங்ககிட்ட நம்ம கோரிக்கைய முன்வைப்போம், அதுக்கப்புறம் நடக்குறதை எதிர்கொள்ளலாம்..
ஒருசில நிமிடங்கள் மீண்டும் ஒரு மயான அமைதி அரங்கத்துள்... மீண்டும் மேடையில் ஒரு குட்டி வாதவிவாதம்...
“இப்போ மகிழன் சொன்னதுபற்றி நம்ம அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் கூடி முடிவு செய்யும்! இறுதி உரை முடித்துவிட்டு குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தார் அந்த ‘ஹார்வே மில்க் ஆசாமி...
கூட்டம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு பத்து மணி ஆகிவிட்டது... சீக்கிரமே வந்திருக்கலாம், அந்த பிரதீப்தான், “என்ன மகி இப்டி பண்ணிட்டிங்க?ன்னு தேய்ந்த ரெக்கார்ட் போல புலம்பியே ஒருமணி நேரத்தை கபளீகரம் செய்துவிட்டான்...
போகட்டும் நல்லதுதான், இனியொருமுறை மீட்டிங், பார்ட்டின்னு கூப்பிடமாட்டான்...
சத்தம் வராமல் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தான்... திலீப் வந்துவிட்டான்.. உடைகளைக்கூட மாற்றாமல் உறங்கிக்கொண்டிருக்கிறான்... அவ்வளவு அசதி போல, சாப்பிட்டிருக்கக்கூட மாட்டான்... அருகில் அமர்ந்து முகத்தை வருடிப்பார்த்தான்.. எண்ணைப்பசை.. பாடல் காட்சிகளுக்காக பூசப்பட்ட கண்டகண்ட மாய்சுரைஷர் கிரீம்களின் விளைவால் முகமே பொலிவிழந்து போய்விட்டது...
எழுப்பவேண்டாம், தூங்கட்டும்... அநேகமாக ஒருமணிக்கோ, இரண்டு மணிக்கோ எழுந்து போனாலும் போவான்... ரீ ரெக்கார்டிங் பகலில் வைப்பதில்லைன்னு சபதம் போட்டிருக்கிறார்கள் போலும்... திலீப்பை அணைத்தபடி தானும் கண்ணயர்ந்தான்...
கனவிலும் கூட யாரோ நான்கைந்து ரௌடிகள் மகியை திசைக்கொரு பக்கமாய் துரத்துகிறார்கள், கைகளில் ஆயுதங்களோடு... நன்றாக கவனித்தால் அவர்கள் ஸ்டன்ட் யூனியன் ஆட்கள்... இடறிக்கீழே விழ, ஒரு நான்கடி நீள அரிவாள் அவன் கழுத்தை நோக்கி ஸ்லோ மோஷனில் வருகிறது... பின்னணியில் ஸ்ட்ரிங்ஸ் பிஜிஎம் கூட கேட்கிறது...
திடுக்கிட்டு விழித்தான்... திலீப் அருகில் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருந்தான்... கண்ட கனவை எண்ணி சிரித்துக்கொண்டான் மகி... சினிமாக்காரனை காதலிப்பதற்காக இப்படியல்லாமா சினிமாத்தன கனவு?...
அவசரமாக அலைபேசியை எடுத்துப்பார்க்க, மணி ஐந்தென காட்டியது... அச்சச்சோ... திலீப்பிற்கு ரெக்கார்டிங் இருக்கும், போகாமல் தூங்கிவிட்டான்... இப்போ பகலிலும் ஷூட்டிங் இருக்குமே?... யோசித்துப்பயனில்லை, எழுப்பித்தான் கேட்கணும்...
மெள்ள திலீப்பின் தோள் மீது கைவைத்து உலுக்கினான்... ஊஹூம்... எழுவதற்கான அறிகுறியே இல்லை, அப்படியோர் ஆழமான தூக்கம்... தலைமுடியை கோதிவிட்டு கன்னங்களை அசைத்து, “மாமா... மாமா எழுப்பினான்.. புரண்டு படுத்துக்கொண்டான்...
கொஞ்சம் வேகமாக உலுக்கி, “மாமா, ஷூட்டிங் போகலையா இன்னிக்கு? சத்தமாக கேட்டான்...
மகியின் பக்கம் திரும்பிப்படுத்த திலீப், அப்படியே அவனை வாரி அணைத்துக்கொண்டான்... இறுக்க அணைத்தபடியே கன்னத்தை கடித்தான்...
“ஏய் மாமா... காலங்காத்தாலேயே ரொமான்ஸா?... ஷூட்டிங் போகல?
“இன்னிக்கு ஷூட்டிங் இல்ல, என் டார்லிங் கூட டேட்டிங்தான்.. மறுகன்னத்தில் ஒரு கடி...
“என்ன மாமா சொல்ற?
“அட டியூப்லைட் டார்லிங்... இன்னிக்கு ஷூட்டிங் இல்ல... பெப்சி தொழிலாளர்கள் போராட்டம் நடத்துறாங்க... அதனால நாம இன்னிக்கு அவுட்டிங் போறோம்
“வாவ்... சூப்பர் மாமா... எங்க போறோம்?  துள்ளிக்குதித்து கட்டிலில் அமர்ந்தான்..
“அது சர்ப்ரைஸ்... ஒன்பது மணிக்கு இங்கருந்து கிளம்புறோம், அதுவரைக்கும் பேசாம தூங்குடா..போர்வையை போர்த்திக்கொண்டு அதிகாலை தூக்கத்துக்கு அடித்தளம்போட்டுவிட்டான்... அதன்பிறகு மகி எங்கே தூங்குவது?... வலமும் இடமுமாக புரண்டுகொண்டே கற்பனைகளில் மிதக்கத்தொடங்கினான்...
திலீப்தான் பைக் ஓட்டினான்... காதலன் பின்னால் அமர்ந்திருந்து இடுப்பை பற்றிக்கொள்ள, பைக்கை ஓட்டுவதில்தான் அவ்வளவு அலாதி இன்பம்... சீரியல், ஷூட்டிங்க்னு வந்தபிறகு வெயிலுக்கு அஞ்சி ஓட்டியதில்லை, பைக் துருப்பிடித்தே போய்விட்டது... இப்போ இப்படியோர் புதுமையான அனுபவம், மனதிற்குள் சிலிர்ப்பாய் மாறியது..
“எங்க மாமா போறோம்? அனுமானித்த இடங்களை எல்லாம் பைக் கடந்துபோக, பொறுமை இழந்தான் மகி...
“ஈ.சி.ஆர் ரோடு
“ஓ... அங்க ரிசார்ட் ஏதும் புக் பண்ணிருக்கியா மாமா? ஆர்வமானான்...
“ஹ ஹா... குதர்க்க சிரிப்பு...
“மகாபலிபுரம் ஏதும் போறோமா?..
“பேசாம வாடா... இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் சீரிப்பறந்தது...
சாலையின் ஓரத்தில் ஓரிடத்தில் பைக்கை நிறுத்தினான்... அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ரிசார்ட்டோ, வேறெதுவும் தளங்களோ இருப்பதாக தெரியவில்லை.. எதற்காக இங்கே நிறுத்துகிறான்? கண்கள் அந்த இடத்தை வட்டமிட்டது...
“என்ன மாமா, சூச்சூ போகப்போறியா?.. சீக்கிரம் போயிட்டு வா சிரித்தான்...
“நீயும் வாடா..
“ஏன் தனியா போக பயமா?
“நாம அவுட்டிங் வந்ததே இங்கதான்... மகியின் கைபிடித்து இழுத்து சென்றான்...
அடர்ந்த ஊசியிலை மரங்களுக்கு இடையில் தென்பட்ட ஒற்றையடி பாதையில் ஒவ்வொரு அடியாக சுதாரித்து எடுத்துவைத்து நடந்து செல்கிறான் திலீப்... காலியான மதுப்புட்டிகள், மகிக்குள் பதற்றத்தை உண்டாக்கியது...
“மாமா, எங்க கூட்டிட்டு போற?... இந்த இடமே சரியா படலையே?
“க்ளாஸ்ல ஏதும் குத்திக்காம கவனமா வா பேசுவதை காதுகொடுத்து கேட்கவே இல்லை..
ஒருவழியாக அந்த அடர்ந்த மரங்களை தாண்டி வெளிர்மஞ்சள் மணலை அடைந்தபோது ஒருவித ரம்மியமான தோற்றம் கண்களை நிறைத்தது... கால்களை தொடும் தூரத்தில் கடல் அலைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஒரு மனிதரும் இல்லை... வாகன இரைச்சல் இல்லை, எந்திரத்தனம் எங்கும் இல்லை... ஒரு மரத்தின் அடியில் திலீப் அமர்ந்தான்.. கண்கள் அகல ஆச்சர்யத்துடன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்த மகியை, தன்னருகில் அமரச்செய்தான்...
“என்னடா இடம் பிடிச்சிருக்கா?
“பிடிச்சிருக்காவா?... மாமா இங்கயே செட்டில் ஆகிடலாம் போல, அவ்ளோ பிடிச்சிருக்கு
“ஆகிக்கலாம்.. ஆனா, நில அபகரிப்புல உள்ள போகணுமே... சிரித்தான் திலீப்..
மணலை கைகளால் அள்ளி விளையாடினான்... ஆழமாக மணலினை தோண்ட, உள்ளே ஒரு பிளாஸ்டிக் பலூன் போன்ற ஒரு பொருள்... எடுத்து கீழே போட்டுவிட்டு உற்றுகவனித்தான் மகி... “அடச்சை... முகம் சுளித்து சுருங்கிப்போனது... பயன்படுத்தப்பட்ட ஆணுறை... திலீப் சத்தமாக சிரித்தான்...
“என்ன கருமம் மாமா இதல்லாம்?...
“அதல்லாம் சாயந்திரத்துக்கு மேல இங்க கேஷுவலா நடக்கும்... அதனாலதான் இந்த நேரத்துல உன்ன கூட்டிட்டு வந்தேன்..
“இவ்ளோ கிரவுண்ட் ஸ்டடி பண்ணிருக்கியே, ரொம்ப அனுபவமா மாமா? கண்ணடித்து சிரித்தான்...
“ஹ ஹா.. இல்லடா... இந்த இடத்தை எனக்கு அறிமுகப்படுத்துனதே கமல்தான்... அவன்கூட நிறைய முறை இங்க வந்திருக்கேன்...
ஓரிரு நிமிடங்கள் அமைதி நிலவியது... ‘கமல் என்கிற பெயர் மகியின் மனதிற்குள் ஒருவித நிசப்தத்தை உண்டாக்கியது... திலீப்பும் கடலை வெறித்துக்கொண்டிருந்தான், பழைய நினைவுகள் எட்டிப்பார்க்கிறது போலும்..
“மாமா... தோள் தொட்டான்...
“என்ன? சுரத்தே இல்லாத கேள்வி...
“ஒன்னு கேட்பேன் தப்பா நெனைக்க மாட்டியே?
“கமல் பத்தியா?
“ஹ்ம்ம்...
“என்ன தெரியனும்?
“எல்லாமும்... எப்டி கமிட் ஆனிங்க? உங்க லவ் எப்டி போச்சு? ஏன் பிரேக்கப்?... எல்லாமே வெகுநாள் விழைவு, இன்றைக்கு கேட்டுவிட்டான்...
“ஹ்ம்ம்... சொல்றேன் ஆயத்தமானான் திலீப்..
“கமலை நான் முதன்முதலா பார்த்தது ஒரு விளம்பர ஷூட்டிங்லதான்.. அது ஒரு பைக் ஆட்.. அந்த கம்பெனியோட ஐடி டிப்பார்ட்மெண்ட்லதான் கமல் வேலை பார்த்தான்.. பேமென்ட் சம்மந்தமா அவன்கிட்டதான் பேச்சுவார்த்தை நடத்தனும்.. கம்பெனியோட மொத்த ஆட்களும் சிரிச்சும், வழிஞ்சும் பேசுறப்போ அவன்மட்டும் அரைகிலோ மிளகாவை அரைச்சு தின்ன மாதிரி உர்ருன்னு இருப்பான்.. அப்போவல்லாம் அவன்கிட்ட பேசுறதுன்னாவே எரிச்சலா இருக்கும், எனக்கு மட்டுமில்ல அந்த ஷூட்ல நடிச்ச எல்லாருக்கும்... அப்டி ஒரு உம்மணா மூஞ்சியோட கமிட் ஆகுவேன்னு நானும் கூட நினைச்சு பார்த்ததில்ல..
ஒருநாள் ஷூட்டிங் முடிஞ்சு போறப்போ பைக் ரிப்பேர் ஆகி ரோட்ல நிக்குறேன்... மழை அடிச்சு ஊத்துது... ஒதுங்கக்கூட இடமில்லாம ஒன்னும் புரியாம நின்னப்போதான் அந்த மேஜிக் நடந்துச்சு...
“கார்ல கமல் வந்திருப்பானே?ஆர்வமாக கேட்டான் மகி..
“இல்ல... குடை பிடிச்சிட்டு நடந்துவந்தான்... அவன்கிட்ட அப்போ கார்லாம் இல்ல, ஒரு பைக் மட்டும்தான்..
“அப்போ பைக் எங்க?
“அது ஸ்டார்ட் ஆகாததாலதான் நடந்துவந்தான்..
“குடை பிடிச்சிட்டு வந்தவன், உன்னையும் அழைச்சுட்டு போயிருப்பான்... அப்போ ரொமான்ஸ் நடந்துச்சாக்கும் இம்முறை ஆர்வம் குறைந்து எரிச்சல் படர்ந்தது...
“அதுதான் இல்ல.. குடையை பிடிச்சுகிட்டே வந்தவன், என்னைய கடந்து பஸ் ஸ்டாப் நோக்கி நடந்து போனான்... அப்போதான் எனக்கு கோபம் சுர்ருன்னு வந்துச்சு.. வேகமா நடந்து அவன் முன்னாடி போய் நின்னு, ‘உனக்கு என்னதான் ப்ராப்ளம்?னு ஆக்ரோஷமா கேட்டேன்... அவன், ‘பைக் ரிப்பேர்னு சிம்பிளா சொல்றான்.. நானென்ன மெக்கானிக்கா, என்கிட்டே அந்த பிரச்சினைய சொல்றதுக்கு... கோபம் தலைக்கு மேல ஏறிடுச்சு, இவன சும்மா விடக்கூடாதுன்னு பைக்கை ஓரமா நிறுத்திட்டு அந்த பஸ் ஸ்டாப்க்கு நானும் போனேன்...
“ஹ ஹா... செம்ம கலாய் மாமா... கமல் உன்ன வச்சு செஞ்சிருக்கான் அதிரச்சிரித்தான்... திலீப்பின் முகமாற்றத்தை கவனித்துவிட்டு, நிதானித்த மகி, “சரி மாமா... பஸ் ஸ்டாப்ல என்னாச்சு? கதையை நோக்கி கவனத்தை திருப்பினான்...
“அந்த ஸ்டாப்ல அவனைத்தவிர யாருமே இல்ல... மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குற என்னை ஒரு பொருட்டா கூட மதிக்காம மொபைலை பார்த்துகிட்டு இருந்தான்.. அவன் பக்கத்துல போய் நின்னு, ‘என்னை யாருன்னு தெரியுதா?ன்னு கேட்டேன்.. அவன் அசராம அதுக்கு, ‘கொஞ்ச முன்ன வழில நின்னு என்ன ப்ராப்ளம்னு கேட்டிங்களே, அவர்தான? அடுத்த இன்சல்ட்.. இவன என்னதான் பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தப்போ, பஸ் வந்ததால அவன் ஏறிப்போய்ட்டான்... எனக்குத்தான் அந்த இன்சிடன்ட்டை மறக்கவே முடியல.. மறுநாள் ஷூட்டிங் இல்லைன்னாலும், அவனை பார்க்கவே அவங்க ஆபிஸ் போனேன்... அவன் எதிரே போய் நின்னு, ‘கமல்னு கூப்ட்டேன்... ‘உக்காருங்கன்னு என் முகத்தைக்கூட பார்க்காம ஏதோ பைலை புரட்டிகிட்டே சொன்னான்... உலகத்துல அப்டி ஒரு ஆணவமானவன அப்போதான் முதல்ல பார்த்தேன், அந்த திமிரை உடைக்கணும்னு முடிவு பண்ணேன்... ஏதும் பேசாம உக்காந்து அவனையே பார்த்துட்டு இருந்தேன்... ‘என்ன சார் வேணும்?னு கேட்டான், என்னோட பார்வை அவனை குறுகுறுக்க வச்சிருக்கும்... ‘நீதான் வேணும், கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு சிரிக்காம சொன்னேன்... அது படத்தோட வசனம்னு தெரிஞ்சாலும், அவன் முகம் பேயறஞ்ச மாதிரி ஆகிடுச்சு.. சட்டுன்னு நிமுந்து என்னைப்பார்த்தான், எச்சிலை விழுங்குறதை பார்த்தப்போவே அவன் பதட்டம் புரிஞ்சுது..
‘என்ன?’ன்னு மறுபடியும் கேட்டான்... ‘மோதிரம் மாத்திக்கலாமா? இல்ல, தாலி மாதிரி எதாச்சும் கட்டிக்கலாமா?ன்னு நானும் விடாமல் நச்சரித்தேன்... ‘என்ன சார் சொல்றீங்க? இந்த முறை அப்டி சொன்னப்போ, அவன் குரல் தழுதழுத்து போச்சு... விட்டால் அழுதிடுவான் போலன்னு பயந்து, ‘சும்மா சொன்னேன்பா... ஒரு காபி சாப்பிடலாம் வாங்க!ன்னு அவனை கூப்டேன்... முதல்ல தயங்குனான், அப்புறம் சரசரன்னு எழுந்து என் பின்னால வந்துட்டான்..
நிஜமா சொல்லனும்னா அவன்மேல அப்டி எந்த ஒரு எண்ணமும் எனக்கில்ல.. ஆனாலும் ஏன் அவனை விடாம துரத்துறேன்னும் புரியல... பார்த்ததும் பிடிச்சுப்போற மாதிரி அவன் அழகல்லாம் கூட இல்ல, ஆனாலும் என்னமோ ஒரு விஷயம் அவனை நோக்கியே என்னை போகசொல்லுச்சு...
“சரி... காபி குடிச்சப்போ என்ன நடந்துச்சு? மகி கதையை விட்டு நகரவே இல்லை...
“காபி ஆறிப்போய் ஈ மொய்க்குற வரைக்கும் பேசிகிட்டே இருந்தோம்.. அவனைப்பத்தி நானும் என்னப்பத்தி அவனும் நிறைய பேசினோம்.. அதுவரைக்கும் பேசாம இருந்ததுக்கு மாறா மொத்தமா பேசிட்டான்.. எனக்கு ஏதோ சாதிச்சிட்ட பெருமிதம்... அதுதான் என் மனசுல உதிச்ச முதல் கனல், அதுக்கப்புறம் ஒவ்வொரு நாளும் அவனோட பேசுறப்போ அது காட்டுத்தீ மாதிரி மனசுக்குள்ள படர்ந்துச்சு... தொடர்ந்து அவனை பார்க்குறதுக்காகவே அந்த கம்பெனி விளம்பரத்தை கேட்டு வாங்கினேன்.. ஆறு மாசத்துக்கு மேல அவ்வளவு அன்யோன்யமா பழகுன பின்னாடிதான், நான் கேட்ட அதே கேள்வியை கமல் கேட்டான்... ‘என்ன கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு.. அப்போ எனக்கு எந்த உறுத்தலும் இல்ல, கட்டிப்பிடிச்சு சரின்னு சொல்லிட்டேன்.. சொல்லும்போதே திலீப்பின் முகம் பிரகாசித்திருந்தது...
மகிக்குத்தான் ஏன் இந்த கேள்வியை கேட்டோம்?னு ஒரு வெறுப்பான மனநிலை... அவ்வளவு அகங்காரம் பிடிச்சவன் கேட்டதும், இந்தாளு கட்டிப்பிடிச்சு சரின்னு சொல்லிட்டாராம்... இந்த பசங்கல்லாம் சினிமாக்கள பார்த்து ரொம்ப கெட்டுப்போய்ட்டாங்க...
“அதுக்கப்புறம் ஒன்னாவே தங்குனோம், அந்த நாட்கள் ரொம்ப சந்தோஷமானவை... சின்ன வயசுலேந்து அப்பா அம்மா இல்லாம வளர்ந்து, எந்த ஒரு பிடிமானமும் இல்லாத வாழ்க்கைல எனக்குன்னு ஒரு இடத்தை தக்க வச்சுக்க ரொம்பவே சிரமப்பட்டுப்போனேன்... அப்டியல்லாம் கஷ்டப்பட்ட வாழ்க்கைல, கமலோட என்ட்ரிதான் சந்தோஷம்ங்குற விஷயத்தையே கொண்டுவந்துச்சு... என்னை ஒரு அம்மா போல பார்த்துகிட்டான்.. எதுவா இருந்தாலும் அக்கறையா செய்வான், ரொம்ப பாசமா இருந்தான்... அவனை வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் நினைச்சதுண்டு திலீப்பின் கண்கள் கலங்கியிருந்தது...
திலீப்பின் காதல் இவ்வளவு ஆழமானதா? மகிக்கு ஆச்சர்யம்தான் உண்டானது... முதன்முதலாக திலீப்பின் மீது பரிதாப உணர்ச்சியும் அரும்பியது..
“இவ்ளோ லவ் பண்ணிருக்குற... அப்புறம் ஏன் மாமா பிரேக்கப் ஆச்சு?
“லவ் பண்ணதுல எந்த ப்ராப்ளமும் இல்ல மகி, அவன்கிட்ட அதை எக்ஸ்ப்ரஸ் பண்றதுலதான் சிக்கலே... பொதுவாவே நான் எக்ஸ்ப்ரசிவ் கிடையாது.. ஆனா என்கிட்டே அதைத்தான் கமல் எதிர்பார்த்தான்.. கண்ணே, மணியே, செல்லம், குட்டின்னல்லாம் எனக்கு பேச வராது... அவன் வார்த்தைக்கு வார்த்தை அப்டிதான் கூப்டுவான், என்கிட்டயும் அதையே எதிர்பார்ப்பான்... எப்போ ஷூட்டிங்ங்குற டேட்ஸ் தவிர வேற எதுவுமே எனக்கு ஞாபகம் இருக்காது, அவனோ ‘இன்னிக்கு நாம முதல்ல பார்த்த நாள், நாளைக்கு முதல்ல பேசின நாள், லவ் ப்ரப்போஸ் பண்ண நாள், ஒண்ணா டின்னர் சாப்ட்ட நாள்ன்னு ஒரு தனி டைரியே போட்ருப்பான்... அதில எதையாச்சும் நான் மறந்துட்டா, ‘ஏண்டா குட்டி என்ன பிடிக்கவே இல்லையா?... என்மேல லவ் இல்லையா?ன்னு ஆரமிச்சு, பெரிய பிரளயத்துலதான் வந்து நிக்கும்...
“இதல்லாம் ப்ரேக்கப்க்கு காரணமா சொல்லமுடியுமா மாமா?
“கேட்குறப்போ அப்டிதான் தோணும்... ஆனா சைன்ஸ்ல பட்டாம்பூச்சி விளைவுன்னு ஒரு விஷயம் இருக்கு தெரியுமா?... ஒரு சின்ன பட்டாம்பூச்சி பறக்குறதுக்கும், ஒரு மிகப்பெரிய சுனாமி வர்றதுக்கும் ஒரு பிணைப்பு இருக்கும்.. அப்டிதான் எங்க ப்ரேக்கப்பும்... ஆரம்பத்துல என்கிட்டே, ‘பிடிக்கலையா?... லவ் பண்ணலையா?ன்னு புலம்பிகிட்டு இருந்தவன், என்னை ‘உணர்வுகள் இல்லாத மெஷின், நடமாடுற ரோபோன்னு வசைபாட ஆரமிச்சான்... நானும் எவ்வளவோ அவன் விரும்புற மாதிரி பேச நினைச்சும், ஒரு கட்டத்துக்கு மேல நடிக்கவும் முடியல... ரொம்ப கஷ்டப்பட்டேன், புலி வாலை பிடிச்ச கதையா... ஆனாலும் அவனை வெறுத்து ஒதுங்கவும் முடியல... ஒருகட்டத்துல நானே அவன்கிட்ட என் நிலைமையை சொல்லி கெஞ்சுனேன்... அவனை பொருத்தவரைக்கும் சினிமாத்தனமா கொஞ்சுற ஒரு லவ்வர் தேவை, அவன் அழகாவும் இருக்கணும்... அதனால என்னை தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டான்... சொல்லி முடிக்கும்போது குரல் உடைந்து போயிருந்தது...
மகிக்கு தர்மசங்கடமாகிவிட்டது... இன்னிக்கு ஒருநாள்தான் சந்தோஷமா இருக்கலாம்னு கூட்டிட்டு வந்தவன்கிட்ட பழைய கதைகளை கேட்டு கஷ்டப்படுத்தியிருக்க வேண்டாம்... ஆனாலும், கமல் போல மனுஷங்கள மனிதர்கள்னு பட்டியலுக்குள்ளே வச்சிடமுடியாது... காதல்னு கமிட் ஆனபிறகு அதென்ன, ஒரு மனுஷனோட இயல்பை மாத்த நினைக்குறது?.. அது ஒருவகையான பாஸிசம், அதுக்கு காதல்னு ஒரு லேபிள் வேற...
“மாமா, உன்ன புரிஞ்சுக்காம போனவனை நினச்சு நீ ஏன் பீல் பண்ற?.. போனா போகட்டும், எவன்கிட்டயாச்சும் அவனும் பட்டு திருந்துவான்... அடிபட்டு உதைபட்டு திருந்துவான் திலீப்பின் தலையை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்...
அந்த அணைப்பு, திலீப்பிற்குள் சுமையை கரைத்தது...
“இல்ல மகி.. அவன் எங்கயாச்சும் சந்தோஷமா இருக்கட்டும், அவனை சபிச்சு நமக்கென்ன ஆகப்போகுது?... நிமிர்ந்து மகியை பார்த்தான்... அவன் கண்களும் கலங்கியிருந்தது... “ஐயோ மகி, நீ ஏன் பீல் பண்ற?... நான் ஒரு கிறுக்கன், உன்னோட என்ஜாய் பண்றதுக்கு வந்துட்டு லூசு மாதிரி புலம்பிருக்கேன் பாரு! எக்கி மகியின் கன்னத்தை கடித்தான்... அந்த கடியில் தூண்டப்பட்ட உணர்வுகளால், மகியின் முகம் சிலிர்த்து புத்துணர்வு பெற்றது...
“ஐ லவ் யூ மாமா... திலீப்பின் உதட்டில் ஆழமாக ஒரு ‘இச்ச்...
நீண்டநெடிய முத்தப்போராட்டங்களுக்கு பின், ரத்தச்சிவப்புடன் உதடுகள் பிரிந்தன... மகியின் கண்களுக்குள் காதல் மயக்கம் இன்னும் கிறுகிறுத்தது...
“இத வந்ததுமே செஞ்சிருந்தா, இவ்ளோ பேசிருக்க மாட்டேன்.. திலீப் வெட்கத்தில் சிவந்தான்..
“அதனாலதான் மாமா நேரம் பார்த்து கொடுத்தேன்... சிரித்தான்...
“ஒருவகைல பார்த்தா என் தரப்புலயும் தப்பு இருக்குதான் மகி... எப்பவும் கணக்கு வாத்தியார் மாதிரியே வெறச்சுகிட்டு திரிஞ்சா எந்த லவ்வருக்குதான் வெறுப்பு வராது... கொஞ்சம் அவனுக்கு ஏத்தமாதிரி நானும் மாறிருக்கணும்... கேட்குறேன்னு தப்பா நெனைக்காத, நான் மாத்திக்கவேண்டிய விஷயம்னு உனக்கேதாச்சும் தோணுதா?... அப்டி எதாவது இருந்தா சொல்லு, மாத்திக்க ட்ரை பண்றேன்.. ஒரேநாள்ல அலைபாயுதே மாதவன் மாதிரி ரொமான்ஸ் பண்ணிட முடியாது, ஆனா கொஞ்சம் கொஞ்சமா கத்துப்பேன்... அப்டி எதாவது எதிர்பார்ப்பு இருந்தா ஓப்பனா சொல்லிடு மகி... மகியின் கையை எடுத்து மார்பின் மீது வைத்துக்கொண்டவாறு சொன்னான்... ஒருமுறை நிகழ்ந்த பிழை, இன்னொருமுறை நடந்துவிடக்கூடாது என்கிற கவனம் அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் பிரதிபலித்தது...
“அட லூசு மாமா... ஏன் இப்டிலாம் நினைக்குற?
“இல்லடா... எதாச்சும் உனக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல, அதைத்தான் கேட்குறேன்... திலீப் விடுவதாக இல்லை...
“ஒரே ஒரு எதிர்பார்ப்பு இருக்கு மாமா
“என்ன?
“எனக்காகன்னு நீ எதையும் மாத்திக்காம எப்பவும் நீயா இருந்து என்னை காதலிக்கணும்... எப்போ அடுத்தவங்களுக்காக நாம ஒருவிஷயத்த மாத்த நினைக்குறமோ, அப்பவே நடிக்கத்தொடங்கிட்டோம்னு அர்த்தம்... அப்புறம் அங்க லவ்வுக்கான புரிதல் அர்த்தமற்று போய்டும்... நான் அந்த திமிர் பிடிச்ச திலீப்பைதான் இப்பவும் ரசிக்கிறேன் கன்னத்தில் ஒரு கடி...
திலீப்பின் மனதினுள் காதல் நிரம்பி வழிந்தது.. மகியின் கைகளை எடுத்து தனது கன்னங்களோடு ஒற்றிக்கொண்டான்...
“இன்னும் ஒருவாரத்துல ரெக்கார்டிங்லாம் முடிஞ்சிடும்.. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு எப்டியும் ஒருமாசம் ஆகலாம்.. அதுக்குள்ள எங்கயாச்சும் ஒரு ட்ரிப் போகணும்... நீயும் நானும் மட்டும்.. ஒரு பத்து நாள் காத்துக்கூட நுழையமுடியாத அளவுக்கு நெருக்கமா இருக்கணும்... இவ்ளோநாள் நீ என்ன பாத்துகிட்ட மாதிரி, உன்ன அந்த பத்து நாளும் நான் பார்த்துக்கணும் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போனான் திலீப்... வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, அத்தனை வார்த்தைகளுமே மனதின் உள்ளார்ந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவே மகிக்கு தோன்றியது...
“மாமா... இந்த நிமிஷம் செத்துப்போனாகூட எனக்கு மோட்சம் நிச்சயம்... திலீப்பை நிமிர்த்தி கட்டியணைத்தான்... ஓரிரு நிமிடங்கள் அந்த அணைப்பு நீடித்தது.. இருவருக்கும் இடையிலான அந்த நிசப்தம் பல குழப்பங்களுக்கான நிவர்த்தியாய் அமைந்தது...
மதியத்திற்கு மேல் அங்கிருந்து இருவரும் வீட்டை நோக்கி விரைந்தனர்... போகும் வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. திலீப்பின் முதுகில் கன்னத்தை பதிந்தவாறு, இடுப்பை சுற்றி கைகளால் அணைத்துக்கொண்டான்... காற்றில் மிதப்பதைப்போன்ற உணர்வது, முதுகின் ஊடாக ஒலித்த திலீப்பின் மூச்சுக்காற்றை ரசித்தபடியே பயணித்தான்..
வீட்டிற்குள் நுழைந்ததும்கூட அந்த நிசப்தம் தொடர்ந்தது.. திலீப் அறைக்குள் சென்றுவிட, ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வாசுவின் அருகில் அமர்ந்துகொண்டான் மகி... முகத்தில் எவ்வித சலனமுமின்றி, கண்கொட்ட மறந்தவனாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் வாசு, ஜென் நிலையில் ஆழ்ந்திருக்கிறான்... அவனது கவனம் முழுவதும் ப்ரியாவின் கள்ளக்காதலன் யார்? என்பதில் சிறைபட்டுக்கிடந்தது... திரையில் ஓடிய அந்த இந்தி டப்பிங் சீரியலில், லிப்ஸ்டிக் கலையாமல் ப்ரியாவின் அம்மா, “யாருடி அவன்?... சொல்லு கோபப்பட, மஸ்காரா அழிந்திடாத வகையில் கண்களை கசக்கி அழுதுகொண்டிருக்கிறாள் ப்ரியா?... :அந்த ஹரிதானே உன்ன ஏமாத்துனது? அம்மா ஏதோ ஊகத்திற்கு வந்துவிட்டாள்...
“உண்மைதான் வாசு வாசுவின் தோள் பிடித்து சொன்னான் மகி...
“ஹரிதான் பண்ணதா? அதிர்ச்சியாக கேட்டான்...
“அட சீரியல் பைத்தியம்... நான் நாம நேத்து பேசினத பத்தி சொல்றேன் ரிமோட்டை பிடுங்கி, டிவியை அணைத்தான்...
ப்ரியாவோட வாழ்க்கை பற்றிய கவலை வாசுவை வருத்தினாலும், மகி சொல்லவருவதை கேட்பதில் முனைப்பானான்...
“என்னடா உண்மை?
“நான் திலீப்போட அழகை பார்த்து மட்டும் லவ் பண்ணலதான் போல... இவ்ளோ நாள் அப்டி நினச்சு என்னையே நான் குறைவா நினைச்சிருக்கேன் வாசு...
“ஹப்பா... இப்போவாச்சும் புரிஞ்சுதா?.. எந்த போதிமரத்துக்கு அடில இந்த ஞானம் கிடைச்சுது?
“போதிமரம் இல்ல... அது ஏதோ யூகலிப்டஸ் மரம்னு நினைக்குறேன்...
“அடலூசு... இப்போ எப்டி அதை புரிஞ்சுகிட்டன்னு கேட்குறேன்..
“திலீப்போட மனசு விட்டு நிறைய பேசினதுல புரிஞ்சுது... அழகுதான் முக்கியம்னு நினைச்சிருந்தா, இத்தனை மாசத்துல அவன் அலுத்துப்போயிருப்பான்... அவனைவிட கியூட்டான பசங்கள பார்க்குறப்போ, மனசு தடுமாறியிருக்கும்... ஆனா இப்போவரை மாமா மேல இருக்குற லவ் கொஞ்சமும் குறையலன்னா, அந்த அழகை தாண்டிய ஒருவிஷயம் இருக்குன்னுதானே அர்த்தம்... அது என்னன்னு புரியல... ஆனா, அப்டி ஒரு விஷயம் இருக்குன்னு உணரமுடியுது... கடவுள் மாதிரின்னு வச்சுக்கோயேன்... பார்க்கமுடியலைன்னாலும், உணரமுடியுது... சுவற்றில் சாய்ந்து ஒரு ஞானியை போல பேசுகிறான்...
வாசுவிற்குத்தான் அந்த மாற்றம் புரிபடவில்லை... எது எப்படியோ, நல்லா இருந்தா சரி..
“ஹ்ம்ம்... ரொம்ப சந்தோசம்டா.. இப்டியே எப்பவும் இருங்க ரெண்டு பேரும்... முகமல்லாம் ஒரே டையர்டா தெரியுது, ரெஸ்ட் எடு மகி.. அதற்கு மேல் அங்கிருந்தால் இத்திகாச புராணங்கள் பற்றியல்லாம் சொற்பொழிவு நடத்திவிடுவான் என்கிற பயமும் வாசுவின் அக்கறைக்குள் பொதிந்திருந்தது...
நிச்சயம் அன்றைய இரவு மகிக்கு ஆழமான நிம்மதியான உறக்கத்தை தந்தது.. கனவிலும் கூட வழக்கமான வில்லன்கள் வரவில்லை, பூக்களும் குழந்தைகளுமாக புத்துணர்ச்சி ஊட்டியது...
காலையில் எழுந்து படுக்கையில் அமர்ந்தவாறே, நேற்றைய நினைவுகளை அசைபோட்டான்... இன்னும் பத்து நாட்களுக்காவது நினைத்து மகிழ்வதற்கான அற்புத தருணமல்லவா நேற்று... தனக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான், உற்சாகத்தில் விரல்கள் பரபரத்தன...
திலீப்பின் போர்வையை விலக்கி, அவனை இறுக்க அணைத்துக்கொண்டான்... குளிருக்கு இதமான அணைப்பு, மனதிற்கும் சுகமாய் படர்ந்தது...
“இன்னிக்கு ஷூட்டிங் இல்லையா மாமா? காதினை கடித்தான்..
“இல்ல.. ஈவ்னிங்தான் ரெக்கார்டிங் தூக்கம் களைத்தான் திலீப்...
“அப்போ நானும் லீவ் போட்டுடவா?
“எதுக்கு?.. என் காதை கடிச்சு துப்புறதுக்கா? சிரித்துக்கொண்டான்...
“ரொம்ப பண்ணாத மாமா... நேத்து வெளில போனோமே, அப்டி எங்கயாச்சும் போகலாமான்னு கேட்டேன்... செல்லக்கோபத்தில் சிணுங்கினான்...
“இல்ல மகி... அடிக்கடி லீவ் போடவேணாம்.. எப்டியும் ரெக்கார்டிங் முடிஞ்சப்புறம், நாலஞ்சு நாள் லீவ் போடுற மாதிரி இருக்கும்.. அப்போ கஷ்டமாகிடக்கூடாது... இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸா உன் ஹாஸ்ப்பிட்டலுக்கு நானும் வரேன்..
“வாவ்... நிஜமாவா மாமா?... என்ன திடீர் முடிவு? அதிசயித்தான்..
“ரொம்பநாளா நெனச்சிட்டு இருந்த விஷயம்தான்.. என் ஷூட்டிங் ஸ்பாட்லாம் நீ பார்த்திருக்குற, உன் வர்க் ப்லேசை நான் பார்க்கக்கூடாதா?.. வந்தாதானே நீ என்னவல்லாம் கூத்தடிக்குறன்னு எனக்கும் தெரியும்...
இருவரும் ஒன்றாக கிளம்பி, மருத்துவமனையை அடைந்தனர்...
வழக்கத்திற்கு மாறாக மகியின் நடையில் ஒரு மாற்றம் தெரிந்தது, அது ஒரு பெருமித ராஜநடை... ஆனாலும், டீஷர்ட் ஜீன் சகிதம் அவன் பின்னால் நடந்துவந்த திலீப்பின் மீதுதான் பலரது பார்வையும் படர்ந்தது... மருத்துவமனைக்கு அது சற்று பரிச்சயமில்லாத உடையாயிற்றே...
“டாக்டர், உங்கள சீப் பீடியாட்ரிக் வார்ட்க்கு வரச்சொன்னுச்சு... அவ்விட டியூட்டி சேஞ் செய்திட்டு செவிலிப்பெண் ஓடிவந்து கொஞ்சுதமிழில் தகவல் சொன்னாள்...
“குட்டி கேரளாவோ? திலீப் இடைபுகுந்தான்...
“இல்ல... கீழ்ப்பாக்கம்... போறியா? மகி முறைக்க, சேச்சி சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டாள்...
படிகளில் ஏறி குழந்தைகள் வார்டை அடைந்தபோது திலீப்பிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது...
“ஏன் இவ்ளோ மூச்சு வாங்குற?... ஒரு ட்ரெட்மில் டெஸ்ட் எடுத்து பார்த்திடலாமா?..
“அடப்பாவி... மூச்சை கொஞ்சம் இழுத்து விட்டாக்கூட, எதாச்சும் பில்லு தீட்டிருவீங்களே?... ஹாஸ்ப்பிட்டலுக்கு வந்ததுமே டாக்டராகிட்டான் பாவி... ஆளவிடு சாமி.. முகத்தை துடைத்துக்கொண்டு நடந்தான் திலீப்...
ஏற்கனவே வார்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த பிரதீப்பின் முகம், இவர்கள் இருவரையும் ஒன்றாக கண்டதும் ஆச்சர்யம் அடைந்தது..
கேஸ் ஷீட்டில் எழுதிக்கொண்டிருந்த பேனா அரைகுறை எழுத்தோடு ஸ்தம்பித்து நின்றது, பிரதீப்பின் கண்கள் மகியுடன் வருபவன் திலீப்தானா? என்று உறுதிசெய்வதில் முனைப்பாக செயல்பட்டது...
திலீப்பேதான்... இருவரும் தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தபோதுதான் நிதானத்தை அடைந்தான்...
“என்ன பிரதீப், பேயறைஞ்ச மாதிரி பார்க்குற? மகி தொடங்கினான்...
“இல்ல.. திலீப்பை இங்க எதிர்பார்க்கல... மருகினான்..
“பட் பிரதீப்பை எனக்கு ரொம்ப நல்லா தெரியும் மகி... கமலோட ஆஸ்தான ஆலோசகராச்சே... பிரதீப்பை திலீப்பும் அங்கு எதிர்பார்த்திடவில்லை... பார்த்ததுமே பழைய நினைவுகள் சுழன்றடிக்க, கமலின் மீதான வெறுப்பு மெலிதாய் பிரதீப்பின் மீதும் சாரலாய் பொழிந்தது...
“அப்டிலாம் இல்ல திலீப்... அவன் என் ப்ரென்ட், அவ்ளோதான்... மற்றபடி அவன் எடுத்த எந்த முடிவுக்கும் நான் சப்போர்ட் பண்ணல அவசரமாக மறுத்தான்...
“சரி.. ஓகேப்பா... கூல்... முடிஞ்ச கதைக்கு ஏன் பிள்ளையார் சுழி போடணும்?... வேற எதாச்சும் பேசுங்களே! மகி மத்தியஸ்த வேலைகளில் இறங்கினான்... ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டே பெண்ணொருத்தி, இவர்கள் பேசுவதை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்...
“என்னம்மா வேணும்?... சாப்ட்டாளா பாப்பா?
மகியின் கேள்வியை பொருட்படுத்தாது, திலீப்பின் அருகில் வந்து, “காகித கப்பல் நாடகத்துல நடிச்சவகதானே நீங்க? அவசரமாக கேட்டாள்... குழந்தையின் ரிப்போர்ட்டில் நேற்று இரவு 102 டிக்ரீ காய்ச்சல் இருந்ததாக போட்டிருக்கிற சூழலில், அந்தப்பெண்ணின் விசாரணை மகிக்கு எரிச்சலை தந்தது...
“முதல்ல குழந்தைக்கு சாப்பாடு கொடுத்திட்டு, மாத்திரையை கொடும்மா... இப்போ இது ரொம்ப அவசியமான கேள்வியா? கடிந்துகொண்டான்...
“ஏய் மகி, கூல் டா... ஏதோ ஆர்வத்துல கேட்குறாங்க, நீ ஏன் டென்ஷன் ஆகுற? மகியிடம் சொல்லிவிட்டு, சுருங்கிய முகத்துடன் நின்றுகொண்டிருந்த அப்பெண்ணின் பக்கம் திரும்பி, “ஆமாம்மா... நான்தான்... நல்லா நடிக்கிறேனா? ஆர்வமாக கேட்டான்...
அவள் முகமும் அப்போதுதான் மலர்ந்தது, “ரொம்ப நல்லா நடிச்சிங்க... ஏன் இப்ப உங்களுக்கு பதிலா வேற யாரையோ போட்ருக்காங்க?
“நான் சினிமால நடிச்சிட்டு இருக்கேன்மா... அதான் வந்துட்டேன்.. அடுத்த மாசம் படம் ரிலீஸ் ஆகும், தியேட்டருக்கு வந்து பாருங்க!
கேள்விகளும், பதிலும் நீண்டுகொண்டே செல்ல, பக்கத்து வார்டு தாய்மார்களும் அந்த இடத்தினை சூழத்தொடங்கினர்.. ஒருகட்டத்தில் திலீப்பால் சமாளிக்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் அன்புத்தொல்லை அதிகரித்துவிட்டது...
“அண்ணே ஒரு செல்பின்னு ஒரு குட்டீஸ் மடியில் ஏறி அமர்ந்து மொபைலை நீட்டியது, “உடம்ப கின்னுன்னு வச்சிருக்கிங்க!ன்னு ஒரு பெரியவர் முதுகை வருடினார்...
“இந்த நேரத்துல சீப் வந்தா பங்க்ஷன் ரொம்ப சிறப்பா இருக்கும்ல? பிரதீப் சிரிக்க, அதே கவலையில் ஆழ்ந்திருந்த மகி, திலீப்பை அவசரமாக அழைத்துக்கொண்டு அருகிலிருந்த அறைக்குள் இருக்கச்செய்தான்...
“எல்லாம் அவங்கவங்க பெட்டுக்கு போங்க... பெரிய டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரம் ஒருவழியாக அவர்களை சமாளித்து அனுப்பி, தனது வேலைகளையும் முடித்துவிட்டு பிரதீப்புடன் அறைக்குள் நுழைந்தான் மகி...
“சாரி ரொம்ப லேட் ஆகிடுச்சா? விகடனை புரட்டிக்கொண்டிருந்த திலீப்பின் அருகில் அமர்ந்தபடி கேட்டான் மகி...
“ரொம்பவான்னு தெரியல... இந்த விகடனை மூணாவது தடவையா படிச்சிட்டு இருக்கேன், அப்போ நேரத்த நீயே கணக்கு பண்ணிக்கோ
“கணக்கு பண்ண ஆளு என் பக்கத்துல இருக்கப்போ, நான் ஏன் தேவையில்லாத விஷயத்த கணக்கு பண்ணப்போறேன்? மகி குழைந்தான்...
“சரி பிரதீப், எப்டி போகுது உங்க வாழ்க்கை? திலீப்பின் இருப்பை மகிக்கு உணர்த்த வேறு வழி தெரியாததால், அவனுடன் பேச்சை தொடங்கினான்...
“ஹ்ம்ம்.. இருக்கேன் திலீப்...
“அமைப்புல இன்னும் இருக்கீங்கதான?
“ஹ்ம்ம்... இதுவரைக்கும் இருக்கேன், இனி இருப்பனான்னு தெரியல... அந்தளவுக்கு முந்தாநேத்து கலாட்டா பண்ணிட்டார் மகி சிரித்துக்கொண்டே சொன்னான்...
“ஓ... அந்த அரசியல் பத்தின பேச்சா?... சரியாத்தான பேசிருக்கான்?.. அதிலென்ன அவங்களுக்கு பிரச்சினையாம்?
“ரெண்டுநாளா நம்ம ஆட்கள் மத்தியில மகி பேசின விஷயம்தான் ஹாட் டாபிக்... பேஸ்புக்ல, வெப்சைட்லன்னு ஹீரோ ரேஞ்சுக்கு ஆகிட்டான்.. அடுத்த வாரம் கூட அதுபத்தி முடிவுபண்ணி, அமைப்புல ஒரு அறிக்கை வெளியிட போறாங்க.. அது சம்மந்தமா பிரஸ் மீட் கூட அரேஞ் பண்ணிட்டு இருக்கோம்... அதுக்கு மகி வந்தே ஆகணும்னு ஒருசிலர், அவர் ஏன் வரணும்னு வெறுக்குறாங்க இன்னும் சிலர்... அமைப்பு உடையாம எல்லாரும் ஏற்குற ஒரு முடிவை பற்றித்தான் இப்போ கவுன்சில்ல இருக்கவங்க தீவிரமா விவாதிக்கிறாங்க!
“எப்டியோ எடுக்குற முடிவு நல்லதா இருந்தா சரி!

                         ************
“பிரஸ்மீட்க்கு எல்லா மீடியாக்காரங்களும் வந்தாச்சா?... ஏன் இன்னும் புதிய தலைமுறை வரல?... கால் பண்ணி பாருங்கப்பா
“அறிக்கைய தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணது யாருப்பா?... பல இடத்துலயும் ஒற்றுப்பிழை!.. சீக்கிரம் சரி பண்ணுங்க!
“செண்டர் ஆப் ஸ்டேஜ்ல நாலு சேர் மட்டும் போடுங்க... ஸ்டேஜ்க்கு பின்னாடி லோகோ க்ளியரா தெரியுற மாதிரி செட் பண்ணுங்க
தோழர் அமைப்பின் நிர்வாகிகள் அரக்கபபறக்க ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர்... ஊடகவியலாளர்களும் அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும், அவர்கள் முகங்களில் பெரிதாக ஆர்வமில்லை.. “இந்த வருடம் ப்ரைட் நடத்தப்போறோம்! என்கிற ஒரே அறிக்கையை, ஒன்பது வருடங்களாக தேதிகளை மட்டும் மாற்றிவிட்டு அறிக்கையாக தந்துவந்தவர்களிடம் வேறு எந்த விதமான எதிர்பார்ப்பு இருக்க முடியும்?...
சந்திப்பு தொடங்க இருக்கிறபோது, மகியும் பிரதீப்பும் பத்திரிகையாளர்களுக்கு பின்வரிசையில் அமர்ந்து நடக்கப்போவதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்...
மேடையில் தோழர் அமைப்பின் தலைவர் கெளதம், உட்பட மூன்று பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.. கூட்டம் தொடங்கப்போகும் கணப்பொழுதில் கௌதமின் கண்கள் கூட்டத்திற்குள் ஊடுருவி. யாரையோ தேடியது.. மகியை பார்த்ததும், கைகளால் சமிக்கை செய்து மேடைக்கு வரச்சொன்னார்.. “எதாவது கேட்குறதுக்கா இருக்கும் மகி, போ பிரதீப் அவசரமாக அனுப்பிவைத்தான்..
மேடையில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமருமாறு மகியிடம் கெளதம் கூறிய மறுநொடியே, கூட்டத்தில் அமர்ந்திருந்த பல முகங்களும் இருண்டுபோயின... மகி சற்று தடுமாற, கையை பிடித்து இழுத்து அமரச்செய்தார் கௌதம்...
மீண்டும் ஒருமுறை அனைவரும் வந்துவிட்டதனை உறுதிசெய்துகொண்ட கெளதம், அறிக்கையை வாசிக்கத்தொடங்கினார்...
“இதுநாள்வரையில் பெயரளவில் அமைப்பாக இயங்கிக்கொண்டு, பொதுத்தள மக்களிடமிருந்து விலகியே எமது மக்களுக்கான உரிமைப்போராட்டங்களை முன்னெடுத்துவந்த தோழர் அமைப்பு, இனி நேரடி அரசியலில் பங்கேற்க இருக்கிறது... எங்களுக்கான உரிமைகளை இனி அரசியல்வாதிகளிடம் முன்வைத்திடாமல், மக்கள் மன்றத்தில் கோரிக்கையாக வைக்க இருக்கிறோம்.. வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாத, எமது சமூக விடுதலை ஒன்றையே ஒற்றைக்குறிக்கோளாக கொண்டு அரசியல் பயணம் தொடங்க இருக்கிறது... ஊடகவியலாளர்களாக தாங்கள் அனைவரும் எமது போராட்ட வழிமுறைக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம் கைத்தட்டல்கள் அரங்கத்தை அதிரச்செய்தது... கூட்டத்தில் ஓரிரு முகங்களில் தென்பட்ட முகச்சுளிப்பை தவிர, பெரும்பாலான முகங்கள் உற்சாகமாகவே காணப்பட்டது... ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களின் ஏடாகூட கேள்விகளுக்கு தன்னை ஆயத்தபடுத்திக்கொண்ட கௌதம், “நீங்க கேட்கவேண்டிய கேள்விகளை கேட்கலாம் நிருபர்களுக்கு வழிவிட்டார்...
“கடைசில உங்கள மாதிரி அமைப்புகளும் அரசியல் ஆதாயத்த எதிர்பார்க்க ஆரமிச்சுட்டிங்களே!முதல் வில்லே கழுத்தை நோக்கி பாய்ந்தது..
“இதில என்ன ஆதாயம் எங்களுக்கு கிடச்சிட போகுது?... இத்தனை வருஷமா எங்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கல.. நாங்களும் அதை கேட்காத இடமில்லை, போராடாத வழிமுறை இல்லை.. அதனால எதுவா இருந்தாலும் மக்கள்கிட்ட நேரடியா முன்வைக்கலாம்னுதான் இந்த முடிவு
“ரொம்ப மைனாரிட்டி மக்கள் நீங்க, எந்த துணிச்சல்ல அரசியல் என்ட்ரி? சற்று எகத்தாள கேள்வி...
“இதே கேள்விய எதாவது ஒரு சாதி அமைப்பு, கட்சி தொடங்குனப்போ உங்களால கேட்க முடிஞ்சுதா?... ஆனா ஒரு அடிப்படை உரிமையை முன்வச்சு அரசியல் பயணத்தை தொடங்குற எங்ககிட்ட கேட்கமுடியுது...
“சாதாரண செக்ஸ் விஷயத்த மையமா வச்சு, கட்சி தொடங்குற அளவுக்கு அரசியல் கீழ்நிலைக்கு போயிடுச்சா? அதே நபரின் துணைக்கேள்வி...
“ஓரியன்ட்டேஷன் உங்கள பொருத்தவரைக்கும் வெறும் செக்ஸ் விஷயமா?.. பாலீர்ப்பு காரணத்தால இங்க நித்தமும் நடக்குற தற்கொலைகள் பற்றி என்னிக்காவது யோசிச்சிருக்கிங்களா?.. எங்க மக்கள் மேல பிரயோகிக்கப்படுற வன்முறைகள் பற்றி கவர் ஸ்டோரி எழுதிருக்கிங்களா?.. விரும்புற வாழ்க்கைய கூட வாழமுடியாத இழிநிலைலதான் எங்கள்ல பலரும் வாழறோம்... நீங்க நினைக்குற மாதிரி இது எங்கள் படுக்கைக்கான உரிமை இல்ல, படைப்பிற்கான உரிமை தீர்க்கமான பதில்... ஏடாகூட ஆசாமி மேற்கொண்டு கேள்வி கேட்க விரும்பாதவராய் அமர்ந்துவிட்டார்..
“அப்போ உங்க வாக்கு வங்கிய காட்டத்தான் கட்சி தொடங்குறீங்களா?
“அப்டின்னே வச்சுக்கலாம், அது ஒன்னும் தப்பில்லையே... இவ்ளோ நாள் எங்களுக்கே தெரியாம இருந்த எங்க பலத்தை சோதித்து பார்க்குற முயற்சின்னு கூட சொல்லலாம்.. இம்முறை மகி இடைபுகுந்தான்...
“சரி உங்க அரசியல் பயணத்தை பற்றி சொல்லுங்க... கட்சி பெயர்?.. தேர்தல் வியூகம் பற்றில்லாம்...
“மறுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கட்சிதான் இயக்கத்தோட பெயர்... தோழர் அமைப்பு மட்டுமல்லாது ஒட்டுமொத்த பாலீர்ப்பு சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கம் இது... நேற்றே தேர்தல் ஆணையத்துல பெயரை பதிவு செஞ்சுட்டோம்.. வர்ற சட்டமன்ற தேர்தல்ல பத்து தொகுதிகள்ல மட்டும் போட்டியிடுறோம்.. யாரோடவும் கூட்டணி கிடையாது... எங்க சமூக மக்களை மட்டும் நம்பி தேர்தல் களத்துல நிக்குறோம்... இன்னிக்கே நாங்க போட்டியிடப்போற மூணு தொகுதிகளையும் வேட்பாளர்களையும் முதற்கட்டமா அறிவிக்கிறோம் அருகிலிருந்த அமைப்பின் நிர்வாகியிடம் அந்த பட்டியலை படிக்குமாறு சொன்னார் கௌதம்... பலருக்கும் இவ்வளவு வேகமான முடிவு ஆச்சர்யத்தை கொடுத்தது...
மைக்கை வாங்கிய அந்த நபர், “மறுக்கப்பட்டோர் உரிமை மீட்பு கட்சியின் சட்டமன்ற தேர்தல் 2016க்கான முதல் வேட்பாளர் பட்டியல்... கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கௌதம் தியாகராய நகர் தொகுதியிலும், தலைவர் அரவிந்த் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், செயலாளர் மருத்துவர் மகிழன் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்... கைத்தட்டல்களுக்கு இடையே நிலவிய சலனத்தின் அடிநாதமாக “மகிழனா?... அவனுக்கு ஏன்? என்கிற கேள்விதான் பரவலாக ஒலித்தது...
“மகிழன் பெயரை ஏன் அறிவிச்சோம்னு பலருக்கும் கேள்வி எழலாம்... அரசியல் பற்றிய புரிதலும், சமூகத்தை பற்றிய விசாலமான பார்வையும் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்குற எண்ணத்தில்தான் அவருக்கு கட்சிப்பதவியும், தேர்தல் வாய்ப்பும்... எல்லாரும் அதை ஏற்பீங்கன்னு நம்புறேன்... அமைப்பினரிடம் சற்று மனம்திறந்து பேசிய கௌதம், பத்திரிகையாளர்களை நோக்கி திரும்பி, “ஆப் தி ரெக்கார்டா சில விஷயங்களை சொல்லனும்னு நினைக்குறேன்.. எங்களுக்கு அரசியல் பற்றியல்லாம் பெரிய அளவில் புரிதல் இல்லை... ஆனாலும், எதைத்தின்றால் பித்தம் தெளியும்னு சொல்ற மாதிரி, இதன் மூலமாவது எதாவது விடிவு கிடைக்குமான்னு கட்சி தொடங்கிருக்கோம்... எங்கமேல இருக்குற விருப்பு வெறுப்புகளை தாண்டி, மக்கள் மத்தியில எங்க கோரிக்கைய கொண்டுசேர்க்க வேண்டியது நீங்கதான்... அதை தயவுசெஞ்சு செய்திடுங்க கைகூப்பி வணங்கிக்கொண்டார்... அதுவரை பேனாவினால் கழுத்தை வருடிக்கொண்டிருந்த ஒருசில நிருபர்களும், அவசரமாக கையேட்டில் எதையோ கிறுக்கிக்கொண்டனர்...
கூட்டம் கலைந்தது... மகிக்குதான் இன்னும் ஆச்சர்யம் அகலவில்லை.. ஒருபுறத்தில் வாய்வார்த்தையாக சொல்லிவிட்டதனை செயல்படுத்தப்போவதன் ஆர்வம் அவனை உந்தினாலும், மறுபுறம் ‘முடியுமா? என்கிற அச்சமும் அவனை துரத்தியது...
“ஏன் கௌதம் இவ்ளோ அவசரம்? கலவையான முகமாற்றத்தோடு வினவினான் மகி...
“இன்னொருமுறை ‘ஏன் இவ்ளோ ஸ்லோ?ன்னு நீங்க கேட்டுடக்கூடாதுல்ல! சிரித்தார்..
“அதுக்காக வேட்பாளரா என்னைய அறிவிக்கனுமா என்ன?
“திறமைக்கான வாய்ப்புன்னு நினச்சுக்கோங்க, அதை நல்லவிதமா பயன்படுத்திக்கோங்க!
“அமைப்புல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?
“ஒரு ப்ராப்ளம் இல்ல, ஆயிரம் ப்ராப்ளம்ஸ்... ஆரம்பத்துலேந்தே பிரச்சினைதான், கட்சி தொடங்கவே பலருக்கு விருப்பமில்ல.. ப்ரைடுக்கு பன்ட் ரெய்சிங் பார்ட்டி வைக்கலாம், பொலிட்டிக்கல் பார்ட்டி வேணாம்னு பயங்கர எதிர்ப்பு... நானும் அரவிந்த்தும் பிடிவாதமா மறுத்துட்டோம்... இந்த முயற்சி நல்ல அவுட்புட்ட கொடுத்தா மட்டும்தான் தப்பிக்க முடியும்... இல்லைன்னா அமைப்பே வேற சிலர் கைக்கு மாறிடும்..கௌதமின் கைகளை பிடித்து அழுத்திக்கொண்டான் மகி.. அந்த அழுத்தத்தில் நன்றி உணர்ச்சியை அவரால் உணரமுடிந்தது... இத்தனை காலம் எவ்வளவோ இடங்களில், “கௌதம் சரியா பண்றதில்லப்பா!ன்னு குறைகூறிய மனிதனின் இன்னொரு நிஜமான முகத்தை பார்த்ததன் விளைவு... ‘மன்னிப்பு கேட்கணும் போல இருந்தாலும், அது அவசியமற்ற சலனத்துக்கு வழிவகுத்துவிடும் என்பதால் மகிழ்வான புன்னகையோடு அவரை விடைபெற்று சென்றான் மகி...
வீட்டிற்குள் நுழைந்தபோதும் கூட மகியின் குழப்பம் சற்றும் குறைந்தபாடில்லை... கதவை திறந்த மறுகணமே, “வருங்கால முதல்வர் ஷில்பா குமார் வாழ்க! வாசு சீண்டினான்...
“டேய் சும்மா இரு அவனை அமர்த்திவிட்டு, வேகமாய் ஓடி மகியை கட்டி அணைத்தான் திலீப்... “வாழ்த்துகள் மகி அணைப்பு இறுக்கமானது... அதுவரை சிந்தையை செயலிழக்க செய்திருந்த குழப்பங்கள் காற்றோடு கரைந்து போயின..
“உங்களுக்கு யார் சொன்னது? புதுவித குழப்பம் மகிக்குள்...
“யார் சொன்னதா?... ஒருமணி நேரமா போன் கால் அட்டன்ட் பண்ணமுடியல, அந்த அளவுக்கு எவனெவனோ போன் பண்ணி மகிக்கு வாழ்த்தை சொல்லிடுங்கன்னு சொல்றான்.. விசாரிச்சப்போதான் நீ எலெக்ஷன்ல நிக்கப்போறன்னு தெரிஞ்சுது.. பெருமிதத்தோடு சொன்னான் திலீப்...
“அட அது பரவாயில்ல.. தண்ணி பிரச்சினையா இருக்கு, எம்.எல்.ஏ கிட்ட மனு கொடுக்கணும்னு நாலு பேரு வந்துட்டாங்க! மீண்டும் சீண்டினான் வாசு...
இருவருமே அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை... “ஏண்டா நீ போன் பண்ணி சொல்லல? வாசுவே தொடர்ந்தான்...
“எதையும் சொல்ற மைண்ட்செட்ல இல்லடா... அவங்கபாட்டுக்கு என் பேரை அறிவிச்சிட்டாங்க... அதுவரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு, எலெக்சன்ல நிக்கப்போறோம்னு யோசிக்குறப்போ என்னென்னமோ குழப்பங்கள் வருது... என்ன செய்யப்போறேன்னு தெரியல! மிச்சசொச்ச குழப்பங்களையும் கொட்டிவிட்டான் மகி...
 மகியின் அருகில் வந்து தோள் மீது கைபோட்டவாறே “லூசாடா நீ?.. என்ன குழப்பம் உனக்கு?... இது ஜஸ்ட் ஒரு ட்ரைடா.. நீ இதுபத்தியல்லாம் சொன்னபிறகுதான், பொலிட்டிக்கல் என்ட்ரி நம்ம கம்யூனிட்டிக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கே புரிஞ்சுது.. நீயே இப்போ பின்வாங்கினா என்ன அர்த்தம்?... கன்னத்தை கிள்ளினான் திலீப்..
சரிதான்.. எதற்காக யோசிக்கணும்?.. நடக்கப்போறதை எதிர்கொள்ளலாம்... என்ன ஆகிடப்போகுது?.. பக்கபலமா திலீப்பும், இயக்கத்தோட ஒத்துழைப்பும் இருக்குறப்போ எதுக்காக கவலைப்படணும்?.. முகத்தின் குழப்ப ரேகைகள், மறைந்து போயின.. மெலிதாய் சிரித்தான்...
“ஹப்பா சிரிச்சுட்டான்... அந்தந்த குதிரைக்கு அதுக்கான ஜாக்கி சொன்னாதான் சரிவரும் போல சிரித்தான் வாசு...
“ஜாக்கி சொல்றதைவிட, எப்டி சொல்றாங்குறதுலதான் விஷயமே இருக்கு மரமண்டை வாசு
“சரிதான்... ஆனாலும் மொத்த ரைடையும் ஹால்லையே முடிச்சிடாதிங்க, நான் சின்ன பையனாக்கும்!
வெட்கத்தில் சிவந்துவிட்டான் மகி... “இன்னிக்கு உன் லாஸ்ட் டே ஷூட்டிங் ஆச்சே மாமா, நல்லபடியா முடிஞ்சுதா?பேச்சை மடைமாற்றினான்...
“ஹ்ம்ம்... சூப்பர்... ரயில்வே ஸ்டேஷன்ல கண்ணீரோட கட்டிப்பிடிச்சு நானும் உதிஷாவும் ஒன்னு சேருறோம், இதான் க்ளைமாக்ஸ்
“அடப்பாவிகளா... இந்த க்ளைமாக்சை இன்னுமா விடல?.. ஸ்ரீதர் காலத்துலேந்து இந்த சீனை மட்டும் மாத்தமாட்றிங்க நொந்துகொண்டான் வாசு...
“அதுகூட பரவால்ல... அந்த சீனுக்கு பத்தொன்பது டேக் வாங்கினா உதிஷா... எக்ஸ்ப்ரஷன் காட்டுறதில அவ்ளோ தடுமாற்றம்
“அப்டி இருக்காது... உன்ன கட்டிப்பிடிக்கத்தான் அத்தன டேக் வாங்கிருப்பா... யாருக்கு தெரியும், நீயே கூட அப்டி ஐடியா கொடுத்திருப்ப!
“வாசு, உனக்கு இன்னிக்கு படையல் இருக்குன்னு நினைக்குறேன் முறைத்தான் திலீப்...
“அதவிடு மாமா... எப்போ ரீரெக்கார்டிங் முடியும்?...
“இன்னும் ரெண்டே நாள்ல... சொன்னபடியே அதுக்கப்புறம் எங்கயாச்சும் டூர் போறோம்!.. கண்ணடித்து சிரித்தான் திலீப்..

                          **************
மருத்துவமனைக்குள் நுழைந்த வேகத்திலேயே பிரதீப் அவசரமாக மகியை தேடி வந்தான்.. முகத்தில் ஒரு உற்சாகம், கண்களில் பரபரப்பு...
“மச்சான்... கலக்கிட்ட... கைகொடுத்து கட்டி அணைத்தான்...
“ஏய் ஏய்... என்னப்பா?... பொறுமை அமைதிப்படுத்தினான் மகி...
“இந்த வாரம் ஜூனியர் விகடன்ல நம்ம கட்சி பற்றி கவர் ஸ்டோரி... வேட்பாளர்கள் மூணு பேர் போட்டோவும் கூட போட்ருக்காங்க! பரபரப்பாக புத்தகத்தை பிரித்துக்காட்டினான்...
‘களம் காணும் இளைஞர்கள், பாலீர்ப்பை முன்வைத்து ஒரு பொலிட்டிக்கல் பயணம்!தலைப்பே சிலிர்ப்பூட்டியது.. மகியின் படம்தான் முதல் பத்திக்கு அருகிலேயே, தனக்குள் சிரித்துக்கொண்டான்...
அதன்பிறகு மகியின் அலைபேசிக்குதான் ஓய்வே இல்லை... “மகி, நம்மளோட முதல் வெற்றி இது... இதோட எதிர்வினை கொஞ்சம் கடுமையா கூட இருக்கலாம், கொஞ்ச நாள் கவனமாவே இருங்க! கௌதமின் எச்சரிக்கை அந்த உற்சாக நிமிடங்களில் மகிக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை..
சில இனிப்புகளை வாங்கிக்கொண்டு, முகம் முழுக்க மகிழ்வோடு வீட்டை குடியிருப்பின் படிகளை அடைந்தபோதுதான் அங்கு நின்ற நான்கைந்து நபர்களின் பார்வை மகியை உறுத்தியது...
இதுவரை பார்த்திடாத பரிச்சயமில்லாத நபர்கள், கண்களில் ஒருவித குரோதத்தோடு நிற்கிறார்கள்... கையில் காலையில் பார்த்த ஜூனியர் விகடன், அதனை புரட்டிப்பார்த்துவிட்டு தன்னையும் பார்க்கிறார்கள்.. ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது... அவசரமாக லிப்ட் பட்டனை அழுத்த, எங்கோ ஐந்தாவது மாடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது...
யாரையாவது உதவிக்கு அழைக்கலாமா? என்று அலைபேசியை எடுத்த மறுகணமே முதுகில் விழுந்தது ஒரு அடி... கையில் ஹாக்கி ஸ்டிக், ஏதோ கம்பிகளுடன் அந்த நால்வரும் நிற்கிறார்கள்... ஓடவும் வழியில்லை... “திலீப்... வாசு சப்தமிட்டான்... அடிகள் தாறுமாறாக விழத்தொடங்கியது, நிலைகுழைந்து கீழே விழுந்தான்.. கன்னங்களை கிழித்தது ஒரு கம்பி, ரத்தம் ஆறாக பெருகியது... அரைகுறை பார்வை மட்டும் தெரிகிறது, சப்தங்கள் மட்டும் மெலிதாய் ஒலிக்க நினைவு மெள்ள மெள்ள இழந்துகொண்டிருந்தது...
“ஏய்... யாரு நீங்க?... என்னடா பண்றீங்க?... ஐயோ டாக்டர் தம்பி! செக்யூரிட்டி பதறுகிறார்... நினைவு முற்றிலும் செயலிழந்துபோனது...
ஏதோ பீப் சத்தங்கள் கேட்கிறது.. குளிர்க்காற்று உடலில் கூசியது.. கண்களை சிரமப்பட்டு திறந்தான் மகி... அருகில் ட்ரிப்ஸ் மாற்றிக்கொண்டிருக்கிறாள் ஒரு நர்ஸ்.. மருத்துவமனையில்தான் இருக்கிறேனா?.. அதுவும் தீவிர சிகிச்சை பிரிவில் அல்லவா சேர்த்திருக்கிறார்கள்?..
என்ன நடந்தது?... யோசித்துப்பார்த்தான்.. செக்யூரிட்டியின் குரல் கடைசியாய் கேட்டதற்கு பிறகு நடந்த எதுவும் நினைவில்லை... ஐயோ முகமல்லாம் வலிக்கிறது!... கைகளில் கட்டு, அநேகமாக எலும்பு முறிந்திருக்கும் போல.. கன்னத்தில் கம்பி கிழித்த வேகத்தை நினைத்தபோதே, எப்படியும் ஏழெட்டு தையல் போட்டிருப்பார்கள்!.. முன்பு மாதிரி கவலையில்லை, இப்போதெல்லாம் காயத்தின் தடமே தெரியாமல் சியூட்ச்சர் போடும் நவீனம் வந்துவிட்டதால் தழும்பு பற்றிய கவலை இல்லை...
எச்சிலை விழுங்கவே சிரமமாக இருக்கிறது.. யாரையும் காணுமே? கண்கள் கதவினில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வட்டத்தினுள் தெரிந்த முகத்தை உற்று நோக்கியது... திலீப் போலவே தெரிகிறதே?.. அவனேதான், கண்கள் வீங்கியுள்ளதை போல தெரிகிறது?.. தூக்கமில்லாததாலா? அழுதிருப்பானா?... மனம் வலித்தது.. எழுந்து ஓடிப்போய் அவனை கட்டியணைத்து, கண்களில் முத்தம் கொடுக்கணும் போல இருக்கு... காலை நகர்த்தவே இங்க வலு இல்லையே!...
யாரோ ஒரு மருத்துவர் தன்னை நோக்கி வருகிறார்!.. ஒருமுறை அவரை ஏதோ கான்பரன்சில் பார்த்த ஞாபகம், யோசிக்கவல்லாம் தோன்றவில்லை.. “எப்டி இருக்கீங்க மகிழன்? இதற்குமேலும் எப்படி இருந்தால் அவர் ஒரு தீர்மானத்துக்கு வருவார்? என்றுதான் புரியவில்லை..
“ஹ்ம்ம்... தலையை லேசாக அசைத்தான்...
“உங்களுக்கு ஒண்ணுமில்ல மகி... யூ ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட்... ரைட் ஹாண்ட்ல ரேடியஸ் போன்ல ஒரு சின்ன ப்ராக்சர்.. லெப்ட் சீக்ல ஒரு சின்ன கீறல்... சில இடங்கள்ல ஹெமட்டோமா.. தட்ஸ் ஆல் கை எலும்பு நொறுங்கிடுச்சு, கன்னம் கிழிஞ்சிடுச்சு, உடம்புல பல இடங்கள் ரத்தக்களறியா ஆகிடுச்சுன்னு மருத்துவ மொழியில் சொல்வதனால் மட்டும் ‘ஆல் ரைட் ஆகிவிட்டதாக நினைக்கிறார் போலும்!..
“நாளைக்கே வார்டுக்கு ஷிப்ட் பண்ண சொல்லிட்டேன், சோ பீ கூல் டாக்டர் வந்தது முதல் இப்போதான் அந்த மருத்துவர் மனதிற்கு இதமான விஷயத்தை கூறுகிறார்..
மெள்ள தடுமாறி, சிரமப்பட்டு எச்சிலை விழுங்கிவிட்டு, “த்தி... தி.. திலீப் புரிந்துகொண்டிருப்பார்...
“விசிட்டர்ஸ் ஹவர்ல வருவாங்க மகிழன் இந்த பதிலை சொல்வதற்கு சின்னக்குழந்தை போதுமே!..
மீண்டும் சிரமப்பட்டு, “ப்ளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் சார் கெஞ்சினான்.. மறுக்க மனமில்லாததால், செவிலிப்பெண் ஒருத்தியிடம் திலீப்பை அழைத்து வரச்சொன்னார் மருத்துவர்...
பரபரப்பாக நடையும் ஓட்டமுமாக வந்தான் திலீப்.. சட்டை கசங்கி, ஆங்காங்கே ரத்தத்திட்டுகள், முகம் முழுக்க வியர்வை படிந்து, அழுக்காய் தன் முன்னால் நிற்கும் ‘மாடல் திலீப்பை பார்த்தபோது பெருமிதம்கொள்ள தோன்றியது... வலியையும் மீறி சிரிப்பு வந்தது...
“உங்கள பார்க்கணுமாம்... சீக்கிரம் பார்த்துட்டு போய்டுங்க சார்... நாகரிகம் அறிந்த மருத்துவர், நகர்ந்துவிட்டார்...
அருகில் வந்து நின்றுகொண்டு மகியின் கையை பிடித்து அழுத்தியபோது, கண்கள் அனிச்சையாக நீரை சுரந்தது...
“ஏய் மாமா, என்ன இது?.. ஐ ஆம் ஆல்ரைட் மனசு கேட்கவில்லை...
“நீ சரியாகிடுவன்னு தெரியும்... என்னைவிட்டு போக விட்ருவேனா? அழுகையை புறந்தள்ளி சிரிப்பு வந்தது...
“நீ ஏன் இப்டி இருக்க?.. போய் குளிச்சுட்டு வா மாமா பேச்சு சரளமாக வந்துவிட்டது...
“ஹ்ம்ம்.. போறேன்டா.. வலி ஏதும் இல்லையே? கட்டுபோடப்பட்ட கையை வருடினான்...
“இல்ல மாமா.. பெயின் கில்லர் போட்ருப்பாங்க... நீ சாப்டியா?
“ஹ்ம்ம்.. சாப்டலாம்.. கன்னத்தின் காயத்தை தொட்டுப்பார்த்தான்... சட்டென ஏதோ தோன்றியவனாக, அந்த கட்டின் மீது முத்தம் கொடுத்தான்.. மகிக்கு சிலிர்ப்பாகியது...
“மாமா இது ஐசியூ சிரித்துவிட்டான்... பக்கத்து படுக்கையில் மூச்சுத்திணறலால் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியவரின் இதயத்துடிப்பு அதிகமாகி “பீப் ஒலிக்க தொடங்கிவிட்டது...
“மாமா... நீ கிளம்பு, போய் சாப்டு... இன்னும் கொஞ்சநேரம் இருந்தின்னா, பல ஆபத்தான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்... ஒருவழியாக திலீப் மனச்சுமை குறைந்தவனாக அங்கிருந்து வெளியேறினான்...
மறுநாள் காலை அறைக்கு மாற்றியபிறகுதான், சிறையிலிருந்து விடுதலை பெற்ற உணர்வு மகிக்குள்.. மகியின் படுக்கையின் அருகேயே இருக்கையில் அமர்ந்து, அவன் கையை பிடித்துக்கொண்டிருந்தான் திலீப்... கையில் சாப்பாட்டுடன் கதவை திறந்த வாசு, சற்று செருமிக்கொண்டான்...
நிதானம் பெற்ற மகி, புன்னகைத்துக்கொண்டான்..
“அதுக்குள்ளையும் வாங்கிட்டு வந்திட்டியா? திலீப் ஏமாற்றத்தோடு கேட்டான்...
“நாளைக்கு வேணும்னா செங்கல்பட்டு வரைக்கும் போய் வாங்கிட்டு வரட்டுமா?
மகி சிரித்துவிட்டான்... ஒரு தட்டில் இட்லியை எடுத்துவைத்து, மகியின் அருகில் வைத்த வாசு, “சாப்டு மகி என்றான்...
இடதுகையால் ஸ்பூனை வைத்து இட்லியை உடைத்து துண்டாக்கி, அதனை சட்னியை தொட்டு ஒருவாய் சாப்பிடுவதற்குள் கடும் பிரயத்தனமாய் போய்விட்டது..
“கொஞ்சுறதுக்கும், ரொமான்ஸ் பண்றதுக்கும் மட்டும் லவ்வர் இல்லடா.. அவன் கஷ்டப்படுறப்போ கைக்கு கையா இருக்குறதுதான் லவ் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் வாசு...
இவனுக்கென்ன ஆச்சு திடீர்னு?... நல்லாத்தான் சாப்பாடு வாங்கிட்டு வந்தான், திடீர்னு ஏதோ வசனம் பேசிட்டு போறான்.. மகி சாப்பிடறத தவிர, ஒரு விஷயமும் இங்க நடக்கலையே!.. அடக்கடவுளே!.. மகிக்கு வலது கை அல்லவா அடிபட்டிருக்கு, இவ்வளவு நேரம் இடது கையில் ஸ்பூனை வைத்து சாப்பிடுவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன்... நிஜமாவே நான் மெஷின்தான் போல.. திலீப் தன்னையே நொந்துகொண்டான்..
அவசரமாக மகியின் கையிலிருந்த ஸ்பூனை பிடுங்கி வீசினான், தட்டை கையில் எடுத்து இட்லியை தன் கையால் பிய்த்து மகிக்கு ஊட்டத்தொடங்கினான்.. திலீப்பின் விரல், உதட்டின் மீது பட்ட ஒவ்வொருமுறையும், “என்னை அடித்த அந்த நாலு பேரு நல்லா இருக்கணும்!... அதுவும் வலது கைல குறிபார்த்து அடிச்ச மனுஷன் சீரும் சிறப்புமா இருக்கணும்! நினைத்துக்கொண்டான்...
சாப்பிட்டு முடித்து, உதட்டில் தண்ணீர் தொட்டு துடைத்துவிட்டு தண்ணீர் குடிக்கசெய்தான்...
“ஐ லவ் யூ மாமா உருக்கமானான்...
“என்ன சாருக்கு காலைலேயே ரொமான்ஸ் மூடா?
“நீ என் பக்கத்துல இருக்குறப்போ, நேரம் காலமல்லாம் பார்க்க வேணாம்கண்ணடித்தான் மகி...
“இப்டியே தொடர்ந்து பேசினா, எதாவது அசம்பாவிதம் நடந்திடும் மகி
பேசி சிரித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் வாசு உள்ளே நுழைந்தான்...
“நான் அடிக்கடி தப்பான நேரத்துல என்ட்ரி கொடுத்திடுறேனா?
“இல்ல வாசு... இந்த தடவ ரொம்ப சரியான நேரத்துக்கு வந்திருக்க! அவசரமாக சொன்னான் மகி..
“திலீப், நீ போய் சாப்ட்டு வா.. நான் பார்த்துக்கறேன்..
“இல்லடா.. கொஞ்சம் நேரமாகட்டும்
“மாமா, இதுக்குமேல என்ன நேரமாகனும்?.. போய் சாப்புடு! மகியின் கண்டிப்பபை மறுக்க மனமில்லாமல் எழுந்துசென்றான்...
“வர்றவரைக்கும் உன் ஆளு பத்திரமாதான் இருப்பான், போயிட்டு வா வாசுவின் சீண்டல் தொடருமென்பதால், கதவை அவசரமாக திறந்து வெளியேறினான் திலீப்..

“இப்போ எப்டி இருக்கு மகி வாசுவின் கண்களில் கலக்கம் தெரிந்தது..
“இப்போ ஒன்னும் ப்ராப்ளம் இல்ல வாசு, சீக்கிரமே சரியாகிடும்!
“பாவிங்க, மனசாட்சியே இல்லாம அடிச்சிருக்காணுக பாரு... யாருக்குமே அவனுக எப்டி அப்பார்ட்மென்ட் உள்ள வந்தானுகன்னு தெரியல.. செக்யூரிட்டிகிட்ட ப்ளம்பிங் வர்க் பார்க்க வந்ததா சொல்லிருக்காணுக, அதான் பைப் டூல்ஸ் கொண்டுவந்ததை அவரு பெருசா கண்டுக்கல.. நல்லவேளையா கூட்டம் கூடினதால ஓடிட்டானுக!
“செக்யூரிட்டி வந்து அவனுகள சத்தம் போட்டபிறகு எதுவுமே ஞாபகம் இல்ல வாசு, அப்புறம் என்ன நடந்துச்சு?... யார் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது?... நேற்றுமுதலாகவே மூளையை கசக்கிய கேள்வியை கேட்டுவிட்டான் மகி...
“செக்யூரிட்டி சத்தம் போட்டதுல அங்க இங்கன்னு இருந்த ஆட்கள் கூடினதும், அந்த நாய்கள் ஓடிடுச்சுங்க... உடனே பக்கத்து ப்ளாட் ராமுதான், திலீப்புக்கு கால் பண்ணி விஷயத்த சொன்னார்... நானும் அவனும் வீட்லதான் அப்போ இருந்தோம்.. பதறி அடிச்சு ஓடிவந்து பார்த்தா, ரத்தவெள்ளத்துல நீ கிடந்த... ஒண்ணுமே புரியல யாருக்கும்... ஆம்புலன்ஸ்க்கு கூப்பிடலாமா?ன்னு மொபைலை எடுத்து சிலர் காதுல வைக்குறாங்க.. எதையும் திலீப் கண்டுக்கல.. உன்ன கைத்தாங்களா தூக்கி வாசல் வரைக்கும் ஓடினான்... சரியா அந்தநேரத்துல செக்கன்ட் ப்ளோர் லாயர் கார்ல வந்தாரு, அவரை கேட்காமலேயே உன்னையும் தூக்கி உள்ள வச்சுகிட்டு ‘பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல் போங்கன்னு சொன்னான்.. டிபன்ஸ் லாயரால வாதம் பண்ணமுடியல, வேறவழியில்லாம ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு... ஆனா சும்மா சொல்லக்கூடாது மகி, அப்புடியே உன்னை தூக்கிட்டு போனதை பாக்குறப்போ ‘காக்க காக்க சூர்யா தோத்துட்டான்... உன்மேல அவன் அவ்ளோ லவ் வச்சிருக்குறத அப்போதான் பார்த்தேன்... அவனை மீறி அழறான், அவ்ளோ பதட்டத்துக்கு நடுவுலயும் உன்ன ஹாஸ்ப்பிட்டல்ல சேர்க்கணும்னு தெளிவா யோசிச்சான்.. இவ்ளோநாளும் அவன்தான் லக்கின்னு நினச்சேன், முந்தாநாள் முதலா நீயும் லக்கிதான்னு புரிஞ்சுகிட்டேன்... நிஜமாவே நீங்க மேட் பார் ஈச் அதர்தான் விலாவரியாக சொல்லிமுடித்தான் வாசு...
மகியின் கண்கள் நெகிழ்ச்சியால் கலங்கின... உடலின் வலியல்லாம் பறந்துபோனதை போல உணர்ந்தான், இனம்புரியாத கலவையான உணர்வுகள் அவனை ஸ்தம்பிக்க செய்தது...
படாரென கதவு திறக்கப்பட்டதில், மகி திடுக்கிட்டான்.. நான்கைந்து நபர்கள் உள்ளே நுழைந்ததைக்கண்டு வாசு பதற்றமடைந்தான்... “யார்?... யாரு நீங்க? வார்த்தைகளில் நடுக்கம் தெரிந்தது...
“ஏய் வாசு... கூல்.. இவங்க தோழர் அமைப்புல இருக்கவங்க சாந்தப்படுத்தினான் மகி...
பிரதீப் மகியின் அருகில் வந்துநின்று “ப்ராக்ஷர்இன் வகைபற்றி பேசிக்கொண்டிருந்தான்.. கௌதமின் கண்களில்தான் பதற்றம் தொனித்தது...
“சாரி மகிழன்.. உங்கள கேட்டுட்டு பெயரை அறிவிச்சிருக்கணும், அவசரப்பட்டுட்டேன்... வருத்தத்தில் திளைத்திருக்கிறார்..
“ஐயோ கௌதம்.. இதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?.. இன்னும் சொல்லனும்னா, நீங்க எச்சரிக்கை செஞ்சும்கூட நான்தான் அதை அலட்சியம் பண்ணிட்டேன்... கவனக்குறைவா இருந்திட்டேன்.. உங்களுக்கல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?
“என் வீட்ல பெட்ரோல் குண்டு வீசிருக்காங்க, அரவிந்த் பைக்கை கொளுத்திட்டாங்க.. ஆனா நாங்க கொஞ்சம் சுதாரிச்சதால தப்பிச்சோம்..
“மை காட்... யாரு இதல்லாம் பண்றது?
“வேற யாரு?, மதவாதிகளாத்தான் இருக்கும்.. நம்மளோட அரசியல் பிரவேசம் அவங்களுக்கு பிடிக்கல போல.. இனி ஒன்னும் கவலைப்படாதிங்க மகி, இன்னிக்கே கமிஷனர் கிட்ட பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்கிறோம்.. மீடியாக்களை அலர்ட் பண்ணப்போறோம்.. முக்கியமா உங்க அப்பார்ட்மென்ட்ல நீங்க தாக்கப்பட்ட காட்சிகள், சிசி டிவில பதிவாகிருக்காம்.. முதல்ல அதை மீடியாகிட்ட சேர்க்கணும் வார்த்தைகளில் வேகம் தெரிந்தது...
“எதுவும் வேணாம் கௌதம், அவனை உயிரோட விடுங்க போதும்! சாப்பிட்டு முடித்து திலீப் வந்துவிட்டான்.. மகியின் மீதான பாசம், அமைப்பினர் மீது கோபமான வார்த்தைகளாக வெளிப்பட்டது..
“முதல்ல மகி சொன்னதை கேட்டதும் நானும் அரசியல்ல நுழையுறத நினச்சு பெருமைப்பட்டேன், ஆனா இவ்ளோ ரிஸ்க் இதுல இருக்குன்னு புரியாம போச்சு... இனியும் அப்டி ஒரு தப்பை தெரிஞ்சே பண்ண விரும்பல கௌதம் நிதானமாய் விளக்கினான் திலீப்...
“உங்க கோபம் புரியுது திலீப்... எலெக்சன் பற்றி இப்போ நான் எதுவும் பேசவிரும்பல, அதுக்கான நேரமும் இது இல்ல.. ஒருவாரம் கழிச்சு, நல்லா கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க... அப்போ மகி என்ன முடிவு எடுத்திருந்தாலும், அதில நாங்க தலையிடலதீர்மானமாக சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றனர் அமைப்பினர்..
மகிக்குதான் அந்த சூழல் தர்மசங்கடமாகிவிட்டது.. ஆனாலும் திலீப் அப்படி பேசியிருக்கக்கூடாது, பாசத்தின் மிகுதியால் அவசரப்பட்டுவிட்டான்.. அதைப்பற்றி கேட்டு திலீப்பை சங்கடப்படுத்த விரும்பாமல் அமைதியாக படுத்திருந்தான்..
மகியின் அருகாமையில் வந்து அமர்ந்த திலீப், “சாரி மகி, கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் பேச்சில் தன்மை தெரிந்தது..
“பரவால்ல விடு மாமா.. உன் கண்ணல்லாம் அசதியா தெரியுது, கொஞ்சம் ரெஸ்ட் எடு கன்னத்தை வருடி ஆசுவாசப்படுத்தினான்... திலீப்பிற்கும் கண்கள் எரிச்சலாகத்தான் இருந்தது, சற்று தூங்கினால் சரியாக இருக்கும்..
அசந்து ஆழமாக தூங்கினான்...
அலைபேசி அடித்திட, திடுக்கிட்டு விழித்தான்... வீட்டிற்கு போன வாசுதான் அழைக்கிறான்.. ரசம் சாதம் வைப்பதற்கு, ஆயிரத்தெட்டு விளக்கங்கள் கேட்பான்... துண்டித்துவிட்டு படுத்தான்.. மீண்டும் அழைக்கிறான், எரிச்சலோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்...
“என்னடா வேணும்?
“வேகமா டிவிய போட்டு பாரு... புதிய தலைமுறை, தந்தி எதாச்சும் நியூஸ் சேனல்.. பரபரத்தான் வாசு...
“என்னாச்சு?
“முதல்ல நீ போட்டுப்பாரு! அழைப்பை துண்டித்துவிட்டான்...
என்னவாக இருக்கும்?.. அறைக்குள் இருக்கும் தொலைக்காட்சியை போட்டால், அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் மகிக்கு தொந்தரவாக ஆகிடுமே!.. ஆனாலும், வாசுவின் குரலில் ஏதோ பரபரப்பு தெரிந்ததே.. பூகம்பம் வந்தால்கூட, பூக்காரி வந்ததைப்போல எதேச்சையாக சொல்லும் வாசுவின் குரலில் தெரிந்த பரபரப்பு திலீப்பை நிதானம் இழக்கச்செய்தது..
சற்றும் தாமதிக்காமல் தொலைக்காசியை ஆன் செய்து, ஒவ்வொரு சேனலாக கடந்து ‘புதிய தலைமுறையை அடைந்தான்..
“தோழர் அமைப்பின் நிர்வாகிகள் மீது மதவாத அமைப்புகள் கடும் தாக்குதல்.. அமைப்பின் நிர்வாகி மகிழன் என்ற மருத்துவர் சில ரௌடிகளால் தாக்கப்பட்ட சிசிடிவி பதிவு அண்மையில் வெளியாகியுள்ளது.. மிகவும் கொடூரமான இந்த தாக்குதலை பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்கள் கண்டித்துள்ளனர்.. பூங்குழலி செய்தி வாசித்து முடிக்க, மகிழன் தாக்கப்பட்ட காட்சி திரையில் ஒளிபரப்பாகியது..
ஆஜானுபாகுவான நான்கு தடியன்கள் கம்பிகளால் தாக்குகிறார்கள், அவர்களுடைய கண்களில்தான் அத்தனை வெறி!... கைமீது ஒரு வலுவான அடி, மகி தடுமாறி கீழே விழுகிறான்... ரத்தம் ஆறாக பாய்கிறது, சுயநினைவை மெள்ள இழக்கிறான்.. திலீப்பால் மேலும் தொடர்ந்து அந்த காட்சியை பார்க்கமுடியவில்லை...
“எங்க அமைப்பினர் மேல இப்டி கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் அமைப்புகளை உடனடியா தடை செய்யனும், கொலைமுயற்சியில் ஈடுபட்ட பாதகர்களை உடனே கைது செய்யனும்... எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு தகுந்த போலிஸ் பாதுகாப்பு கொடுக்கணும்! கௌதம் காரசாரமாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறான்... அவசரமாக தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, இருக்கையில் அமர்ந்தான் திலீப்...
“ஏன் மாமா பதட்டமா இருக்குற? மகி எழுந்துவிட்டான்... எப்போது விழித்திருப்பான்?, தொலைக்காட்சித் திரையில் ஓடிய காட்சிகளை அவனும் பார்த்திருப்பானோ?...
ஆனாலும் எதனையும் காட்டிக்கொள்ளாததை போல, “ஒன்னும் இல்ல... சும்மாதான், தலைவலி பொய்யாக தலையை பிடித்துக்கொண்டான்...
“அந்த தலைவலிய நானும் பார்த்தேன் மாமா... அதான் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஜம்முன்னு உன் முன்னால நிக்குறேனே.. அப்புறம் என்ன தேவையில்லாத டென்ஷன்?..
“அது சரிதான்... ஆனாலும், இவ்ளோ கொடூரமா உன்ன அடிச்சிருக்காணுகளே அந்த தே#$#^ பசங்க... கூப்பிடுற தூரத்துல இருந்தும் ஒன்னும் செய்யமுடியல பாரு!
“இது ஒரு விஷயமா மாமா?... இத்தனை நாளா நாம ஒண்ணா பேசிக்கக்கூட அதிகமா சந்தர்ப்பம் கிடைச்சதில்ல.. இப்போ என் மாமா எப்பவும் என் பக்கத்துலையே இருக்குற, சாப்பாடு ஊட்டிவிடற, முக்கியமா எனக்காக அழுதிருக்க... இதல்லாம் கிடைச்சிருக்குறதை பாக்குறப்போ, அந்த அடியும் வலியும் ஒன்னும் பெருசா தெரியல மாமா...நெகிழ்ச்சியாக பேசினான் மகி, திலீப்பும் கோபம் களைந்து நிதானமானான்...
அதன்பிறகு ஒலித்த அலைபேசி சத்தங்களுக்குத்தான் ஓய்வே இல்லை..
“என்னாச்சு மகிழனுக்கு? எல்லா சாலைகளும் ரோமை நோக்கி பயணிப்பதைப்போல, அத்தனை அழைப்புகளின் சாராம்ச கேள்வியும் இதுதான்...
“ஒண்ணுமில்ல... சின்ன காயங்கள்தான், சீக்கிரம் சரியாகிடும்.. எல்லோருக்கும் ஒரே பதிலை சொல்லி சலிப்படைந்தான் திலீப்...
“மாமா உன் மொபைலை முதல்ல ஆப் பண்ணி வை, இன்னும் எத்தனை பேருக்கு இதே பதிலை சொல்லிட்டிருக்கப்போற? சிரித்தான் மகி..
அதுவும் சரிதான்.. தொலைக்காட்சியில் தாக்குதல் செய்தியை போட்டாலும் போட்டான், முன்பின் அறிமுகமில்லாத நபர்களல்லாம் நலம் விசாரிக்கிறார்கள்... ஒருவழியாக மொபைலை அணைத்துவிட்டு, மகியோடு உற்சாக பேச்சினை தொடர்ந்தான்..
கதவின் விளிம்பை மெள்ள திறந்த செவிலிப்பெண் ஒருத்தி, “சார், பேஷண்ட்டை தூங்க சொல்லுங்க... டைம் இப்போவே டென் தர்ட்டி கனிவாக கண்டித்துவிட்டு நகர்ந்தாள்...
காலையில் எழுந்ததும், மகி இடது கையாலேயே ஒருவழியாக பல்துழக்கி சமாளித்துவிட்டு ரிலாக்ஸ் ஆனான்...
“உடம்பே கசகசன்னு இருக்கு, குளிக்கணும் போல இருக்குடா! இரண்டு நாட்களாக படிந்த வியர்வை படிமங்கள் அவனை உற்சாகம் இழக்கசெய்திருந்தன..
உடனே ஏதோ யோசித்தவனாக, ஒரு பாத்திரத்தில் வெந்நீர் மற்றும் காட்டன் டவல் சகிதம் மகியின் அருகில் வந்து அவன் உடைகளை கழற்றினான்...
“ஏய் மாமா என்ன பண்ற?
“ரேப் பண்ணப்போறேன்... அட லூசே, உடம்பை துடைச்சுவிடுறேன் தண்ணீரில் நனைத்த துண்டை அழுத்த பிழிந்தான்...
“வேணாம் மாமா... நீ இதல்லாம் பண்ணனுமா?
“இது எனக்கான உடம்பு, நான் பண்ணாம வேற எவன் பண்ணுவானாம்? பதிலுக்கு காத்திராமல் நெற்றியில் தொடங்கி, முகங்கள் வழியாக, கழுத்து, மார்பென பயணித்து, வயிறோடு நிறைவுபெற்றது... அதற்கு கீழே?... வேண்டாம், அது பிறகு பார்த்துக்கலாம்...
மீண்டும் நன்றாக அழுத்தி துடைத்தபோது, கதவு மெள்ள திறக்கப்பட்டது... தயங்கிய நடையுடன் ஒரு பெண்மணி வருகிறாள், ஒரு நாற்பது வயதுகளை கடந்த கிராமத்து பெண்மணி போல யூகிக்கலாம்...
“யாரும்மா வேணும்? அறையின் எண் தெரியாமல் நுழைந்திருக்கலாம்! என்கிற சந்தேகத்துடன் அப்பெண்ணை கேட்டான் திலீப்...
சட்டென திலீப்பின் கைகளை பிடித்து அழுத்திய மகி, “அம்மா... சத்தம் வராமல் வாய் மட்டும் அசைத்தான்.. கண்கள் கலங்கியிருந்தது... அப்பெண்ணின் பின்னால் கார்த்தியும் நிற்கிறான்..
சட்டென விலகி நகர்ந்துவிட்டு, இருக்கையை மகியின் அருகில் போட்ட திலீப், “உக்காருங்கம்மா! பவ்யமாக சொன்னான்..
தயக்கத்தோடு நகர்ந்துவந்த அம்மா, மகியின் காயங்களை பார்த்தபோது தன்னை மீறி அழத்தொடங்கினாள்... சேலையின் முந்தானையில் கண்ணீரை துடைத்துவிட்டு, மகியின் கையை பிடித்தபடி பேச்சை மறந்து நின்றாள்...
மகிக்கும் பேச்சு வரவே இல்லை... நிச்சயமாக அம்மாவை அவன் எதிர்பார்த்திடவே இல்லை, நிதானித்து அம்மாவின் வருகையை ஒருவழியாக கிரகித்து, “எப்டிம்மா இருக்க? தொண்டைக்கமற கேட்டான்..
“ஹ்ம்ம்... யாருப்பா இப்புடி பண்ணுனது?
“வேண்டாதவங்கதான்மா... போலிஸ் கண்டுபிடிச்சிடுவாங்க... நீ எப்டி இங்க?
“டீவில உன்னப்போட்டு அடிக்குறத பார்த்ததும் மூச்சே நின்னிடுச்சுய்யா... செய்திலயும் என்னென்னமோ சொன்னாக, ஒன்னும் புரியல.. யோசிக்கவல்லாம் தோனல, டவுனுக்கு போய் கார் எடுத்துகிட்டு வந்துட்டேன்யா.. நம்ம கார்த்தியதான் வெவரம் கேட்டேன், அவன்தான் இப்ப கூட்டியாந்தான்...அம்மாவின் வார்த்தைகள் எப்போதுமே மாசு கலக்காத காற்றைப்போன்று தூய்மையானது, அதில் எழுத்துகளுக்கு பதிலாக உணர்வுகள்தான் பொதிந்துகிடக்கும்...
“அப்பாவுக்கு தெரியுமா?
“டீவில போட்டத அந்த மனுஷனும்தான் பார்த்தாரு... கலங்குன கண்ணை துடைச்சுக்கிட்டு, எதையும் காட்டிக்காதமாதிரி எந்திருச்சு போயிட்டாரு... நான் உன்ன பாக்குறதுக்கு கிளம்புனது கூட தெரியும், தடுக்கல... வீராப்பல்லாம் கொறஞ்சிடுச்சுப்பா, ஆனாலும் அதை வெளிக்காட்டத்தான் அம்புட்டு ரோஷம்...
“எதாவது சாப்ட்டியாம்மா? மகியின் கேள்வி முடிவதற்குள், “நான் போய் எதாச்சும் வாங்கிட்டு வரேன்! திலீப் கிளம்பினான்...
“இல்ல திலீப்... சாப்பிடவச்சுதான் கூட்டிட்டு வந்தேன் கார்த்தி தடுத்தான்..
“இவர்தான்மா திலீப்... நான் அப்போ சொன்னேனே அறிமுகப்படுத்தினான் மகி...
ஒருவாறாக முன்பே அதனை அனுமானித்திருந்தாலும், மகி சொன்னபோது உறுதிசெய்துகொண்டாள்..
“ரொம்ப நன்றிப்பா... என் மவன ரொம்ப நல்லா பார்த்துக்கறியாம்!.. வர்றப்ப கார்த்தியும் நெறைய சொன்னான், ரொம்ப சந்தோஷம்யா... தனியா போறானே, எப்புடி இருப்பானோ?ன்னு பயந்தேன்.. இப்ப மனசு பாரம் கொறஞ்ச மாதிரி இருக்கு! வெள்ளந்தியாக பேசினாள்.. தன் மகனுக்கும், திலீப்புக்கும் இடையே இருக்கின்ற உறவிற்கு பெயரென்ன? என்பதுகூட அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனாலும், உணர்வுகளை புரிந்துகொள்ள அறிவியல் மொழி அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை திலீப் உணர்ந்தான்... அவன் கண்கள் நீரை திரட்டி குவித்திருந்தது...
அம்மா அதனை கவனிப்பதற்குள் அவசரமாக துடைத்துக்கொண்டான்... “அப்டிலாம் ஒண்ணுமில்லம்மா.. உண்மைய சொல்லனும்னா மகிதான் என்னைய அதிகம் கவனிச்சுக்கறான்... இப்போ உங்கள பார்த்ததும்தான் அந்த குணம் எங்கருந்து வந்ததுன்னு புரியுது குடும்பத்தில் ஒருவனாக ஐக்கியமாகிவிட்டான்...
“அவங்க அப்பாவ பார்த்திருந்தா, இதை சொல்லிருக்க மாட்டிங்க! கார்த்தியும் உள்ளே நுழைந்தான்...
“ஹ்ம்ம்... அப்டியா?.. அப்போ ஒருநாள் நிச்சயம் பார்க்கணும்! கண்ணடித்து சிரித்தான் திலீப்...
“அதுக்கென்னப்பா இப்பவே வாங்க, நம்ம ஊருக்கு போகலாம்
“ஐயோ இப்ப முடியாதும்மா... எங்க ரெண்டுபேருக்குமே நெறைய வேலைகள் இருக்கு, முடிஞ்சதும் ஒருநாள் நிச்சயம் வரோம்
கலகலப்பான பேச்சு மாலைவேளைவரை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் தொடர்ந்துகொண்டிருந்தது... ‘இந்த பேச்சுதான்! என்றில்லாமல் பல விஷயங்களையும் உள்ளடக்கிய உரையாடலாக அமைந்திருந்தது...
“அம்மா.. நேரமாச்சு, நீ கிளம்பிடேன் சட்டென சொல்லிவிட்டான் மகி.. ‘லூசா மகி? எதுக்கு இப்போவே அம்மாவ போகசொல்லனும்?.. இத்தனை தடைகளையும் தாண்டி அவனை பார்க்க வந்திருக்கும் அவங்கள, ஒருசில நாட்களாவது உடன் வைத்திருப்பதில்லையா?.. நாம வாழும் வாழ்க்கை நிஜமானதுன்னு அவங்க உணரவேண்டாமா?...  திலீப்பிற்கு எரிச்சல் அரும்பியது...
“காலைலதான மகி வந்தாங்க, இன்னிக்கே போகனுமா?.. ஒரு ரெண்டுநாள் இருக்கட்டுமே! மனதில் அரித்ததை சொல்லிவிட்டான்...
“ரெண்டு நாள் இல்ல திலீப், அம்மா கடைசி வரைக்கும் நம்மளோட இருக்கனும்னுதான் என்னோட ஆசையும்... ஆனா, அப்பா அங்க தனியா இருப்பார்.. யார்கிட்டயும் குடிக்க தண்ணி கேட்கக்கூட ஈகோ பார்க்குற மனுஷன், சாப்பிட்டிருப்பாரா? இல்லையா?ன்னு கூட தெரியல... அம்மாவைத்தவிர வேற யாராலையும் ஹாண்டில் பண்ணமுடியாத ஆளு அவர்.. அப்பாவைப்பற்றிய கவலைகள் மனதின் அடியாழத்திலிருந்து உதிரத்தொடங்கின.. திலீப்பால் அந்த காரணத்தை புறந்தள்ள முடியவில்லை... மேற்கொண்டு அம்மாவின் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான்..
“நீ சொல்றதும் சரிதான்பா... உனக்கு என்னாகிருக்கும்?ங்குற கவலையே அவரை ரொம்ப படுத்தியிருக்கும்... யார்கிட்டயும் கேட்டு தெரிஞ்சுக்கவும் மாட்டார்.. நான் போயி ‘மகி நல்லா இருக்கான்னு அரசல்புரசலா சொன்னாத்தான் நிம்மதியாவாரு... இப்போ கெளம்புனாத்தான் வெள்ளன ஊருக்கு போகமுடியும்!
“கார்த்தி, அம்மாவ விட்டுட்டு வந்திடுறியா?.. இல்லன்னா தெரிஞ்ச ட்ராவல்ஸ்ல கார் வரச்சொல்லுவோமா? ஆலோசித்தான் மகி..
“அதல்லாம் வேணாம்யா... பஸ் ஏத்திவிட்டுட்டா ஊருல போய் இறங்கப்போறேன்... எனக்கென்ன பயம்?
மகியின் அசாத்திய துணிச்சலும் தோன்றிய விதம் திலீப்புக்கு புரிந்தது... முதலில் வாய் வார்த்தைக்காக சொல்லியிருந்தாலும்கூட, நிஜமாகவே ஒருநாள் மகி வீட்டுக்கு போகணும்..
அம்மாவை வழியனுப்பிய பிறகு, மகியின் முகத்தில் தெரிந்த உற்சாகத்தை கவனித்தான் திலீப்...
“ஹாப்பியா மகி?... அம்மா இவ்ளோ நெருக்கமா பழகுவாங்கன்னு நினைக்கல.. இப்போ எந்த குறையும் இல்லையே?
“ஹாப்பிதான்.. பட் ஒரே ஒரு குறை!
“என்ன?
“நீ அத்தைன்னு கூப்பிட்டிருக்கணும்!சிரித்தான் மகி.. திலீப்பிற்கு ஏனோ வெட்கம் கலந்த சிரிப்பு எட்டிப்பார்த்தது..
ஐந்தாறு நாட்களில் ஓரளவு உடல்நிலை தேறியிருந்தான் மகி... வலது கையில் முறிந்த எலும்பு மட்டும் அப்படியே இருக்கிறது. பழையபடி இணைந்திட மூன்று மாதங்கள் ஆகலாம்.. இன்றே மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு செல்ல இருக்கின்ற உற்சாகம் மகியின் முகத்தில் பிரகாசித்தது...
“இப்போ நான் ஆல்ரைட்டா திலீப்? உற்சாகம் பொங்க வினவினான் மகி... ஆமோதித்து தலையசைத்தபடி காதலனை ரசித்துக்கொண்டிருக்கிறான் திலீப்...
“முகத்தில இருக்குற தையலை பிரிச்சிடலாம்.. அதான் ஒருவாரமாச்சே! செவிலிப்பெண் சொல்லும்போது சிரித்துக்கொண்டான் மகி..
“ஸ்கார்லஸ் சியூட்ச்சர்க்கு அதல்லாம் அவசியமில்ல சிஸ்டர், தானாவே விழுந்திடும்
“டாக்டர்... தயங்கிக்கொண்டே நிற்கிறாள்...
“என்ன சிஸ்டர் ஆச்சு?... மாடர்ன் பிரஸ்யூட்ஜர் பத்தி உங்களுக்கு தெரியாதா?
“அதில்ல சார்... உங்களுக்கு ஆர்டினரி சூட்ச்சர்தான் போட்ருந்துது..
மகி குழம்பினான்.. என்ன பேசுகிறாள்?..  அவசரமாக முகத்தின்மீது ஒட்டியிருந்த பிளாஸ்டரை பிரித்தான், “ஏய் மகி, என்ன பண்ற?.. பார்த்து! திலீப்பின் வார்த்தைகள் அவன் சிந்தைக்குள் நுழைந்ததாக தெரியவில்லை... பிரித்துமுடித்து, ஒட்டியிருந்த பஞ்சை ஒவ்வாத பொருளை போல வீசி எறிந்துவிட்டு, தடுமாற்றத்துடன் எழுந்து அமர்ந்து அருகிலுள்ள கண்ணாடியை எடுத்து முகத்தின் எதிரே வைத்துப்பார்த்தான்...

தையல் போடப்பட்டிருக்கிறது, அதுவும் சுஸ்ருதா காலத்து தையல் முறையில்... பழைய படங்களில் வரும் வில்லன்களைப்போல குறுக்குக்கோடு போல.. சட்டென கையில் வைத்திருந்த கண்ணாடியை வீசி எறிந்தான்... படாரென சுவற்றில் அடித்து, சில்லுகள் தெறித்து கீழே விழுந்தன...
“ஏய் மகி, லூசா நீ? சற்று கோபத்துடன் அருகில் வந்தான் திலீப்...
“என்ன ஹாஸ்ப்பிட்டல் இது?.. ஒரு தையல் போடுற சிஸ்டம்கூட இன்னும் அப்டேட் பண்ணலையா?... இப்டி ஒரு மோசமான ஹாஸ்ப்பிட்டல நான் பார்த்ததே இல்லை அப்பாவியாக நின்ற செவிலிப்பெண் செய்வதறியாது திகைத்துப்போனாள்!..
“சார், உங்களுக்கு தையல் இங்க போடல... வரும்போதே பர்ஸ்ட் எய்ட் பண்ணித்தான் கூட்டிட்டு வந்தாங்க!மகி மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, அவசரமாக சொல்லிமுடித்தாள்...
“என்னது? திலீப்பை கண்கள் சிவக்கப்பார்த்தான்...
“ஆமா மகி.. உனக்கு பர்ஸ்ட் எய்ட் செஞ்சபிறகுதான் இங்க சேர்த்தேன்.. கார்ல கூட்டிட்டு வர்றவழில காயத்தில ரத்தம் நிக்கவே இல்ல, பயத்துல என்ன பண்றதுன்னு தெரியாம, பக்கத்துல இருந்த கிளினிக்ல தையல் போடச்சொல்லிட்டேன்... தோள் மீது கைவைத்தான்...
அந்த கையை அவசரமாக விலக்கிவிட்ட மகி, “என்ன மாமா இப்டி பண்ணிட்ட?... இப்போ எவ்ளோ அசிங்கமா தெரியுது பாரு! கண்கலங்கிப்போனான்.. திலீப்பின் மீது வெளிப்படுத்த முடியாத கோபம்தான், ஆற்றாமையாக உருமாறி கண்ணீரை திரட்டி வெளியிட்டது...
ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசிடாமல், தலையில் கைவைத்துக்கொண்டு முகத்தை கவிழ்த்துக்கொண்டான் மகி... கிடைத்த இடைவெளியில், கதவை திறந்துகொண்டு லாவகமாக தப்பித்தாள் நர்ஸ்...
கதவை அழுத்த சாத்திய திலீப், மகியின் எதிரே அமர்ந்து அவன் முகத்தை நிமிர்த்தினான்... கண்கள் சிவந்து, நீர் அரும்பியிருந்தது... பொதுவாக எதற்கும் கவலைப்படாத மகி, இப்படியோர் விஷயத்துக்கு இவ்வளவு எதிர்வினை புரிவான் என்பது திலீப் யூகித்திடாத விஷயம்...
“மகி, இது ஒரு பெரிய விஷயமில்லடா! கண்களை துடைத்துவிட்டான்...
“இல்ல மாமா... பெரிய விஷயம்தான்.. ஏற்கனவே நான் சுமார்தான், இதில இந்த தழும்பு என்னை இன்னும் மோசமா காட்டும்... இப்போ நான் உனக்கு சுத்தமா பொருத்தமில்லாம போயிட்டேன் பொருமினான்...
“அடலூசு... பொருத்தமென்ன முகத்துலையா இருக்கு?... நாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அக்கறையா சந்தோஷமா வாழ்றதில இருக்கு... அந்தவகைல இப்போ நாம மேட் பார் ஈச் அதர்தான்... தேவையில்லாம ஏன் குழப்பிக்கற?...
“என்னதான் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியல மாமா...
“சரி, அப்போ உனக்கு பொருத்தமா வர்றதுக்கு என் முகத்துலையும் கீறிக்கவா? நகத்தால் முகத்தை பிராண்டுவதை போல செய்துகாட்டினான்... மகியின் கவலையையும் மீறி சிரிப்பு வந்தது...
“ஏன் மகி உனக்கிந்த காம்ப்ளக்ஸ்?... எப்டி இருந்தாலும் உன்ன எனக்கு பிடிக்கும்... அதுவும் இப்போ ரொம்ப பிடிக்குது.. அழகான வட்டத்தில, மயில் இறகை ஓட்டவச்சது மாதிரி தெரியுற அந்த தழும்புதான் ரொம்ப அழகா தெரியுது எழுந்து பளிச்சென அந்த தழும்பின் மீது முத்தம் கொடுத்தான் திலீப்... மகியின் முகம் குழப்பங்களும் கோபங்களும் மறைந்து, பொலிவடைந்தது...
“லவ் யூ மாமா உற்சாகம் பொங்க திலீப்பை கட்டியணைத்தான்...
மகியின் மனதிற்குள் படர்ந்திருந்த தழும்பு பற்றிய கவலைகள், கசிவாக கரைந்திட அந்த அணைப்பு ஓரிரு நிமிடங்கள் நிலைபெற்றது.. தெளிவானது முகம், பழைய உற்சாகம் மீண்டும் அவன் முகத்தில் குடிகொண்டது...
“இப்போதான் என் மகி ஆல்ரைட்...  வீட்டுக்கு போகலாமா?
ஒருவழியாக மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து, வீட்டிற்கு செல்லும்போது மாலை நேரமாகிவிட்டது...
குடியிருப்புக்குள் நுழையும் முன்பே செக்யூரிட்டி ஓடிவந்து வணக்கம் வைத்தார்... “இப்ப எப்டி டாக்டர் சார் இருக்கீங்க? நன்றிக்கு வித்தான மனிதர்.. அவர் மட்டும் அன்றைக்கு வராதிருந்திருந்தால், அநேகமாக எட்டாம் நாள் படையல் வைத்திருப்பார்கள்...
“நல்லா இருக்கேண்ணே... ரொம்ப நன்றி கைபிடித்து நெகிழ்ந்தான்...
லிப்டின் அருகே சென்றபோது பழைய நினைவுகள் எட்டிப்பார்த்தது... அடித்தது, தடுமாறி விழுந்தது, சுவற்றின் மீது மெல்லிய ரத்தப்புள்ளிகள்...
வீட்டின் வாசலில் கதவை திறந்துவைத்தே காத்திருக்கிறான் வாசு... “என்னடா இவ்ளோ நேரம்?
“ட்ராபிக்தான் வாசு..
குடிக்க தண்ணீர் கொடுத்தான்... வீடு எப்போதுமே மனதிற்கு நெருக்கமான மனிதரைப்போல ஆகிவிடுகிறது, சுவர்கள் கூட அவனை குசலம் விசாரிப்பதை போல உணர்ந்தான்..
அக்கம்பக்கத்தினர் வரிசைகட்டி வந்து நலம் விசாரித்தனர்...
“ஹாஸ்ப்பிட்டல் வரலாம்னுதான் இருந்தோம், அதுக்கிடைல ஒரு சிக்கல் சிலநேரங்களில் இப்படியான சமாளிப்புகள்தான் நிறைய உறவுகளை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது... பக்கத்து ப்ளாட் வரை விஷயம் தெரிந்திருக்கிறது, பரிச்சயம் இல்லாத நபர்கள் கூட வருகிறார்கள்...
“டீவில அடிவாங்குன அண்ணன்தான இது? இனி அந்த குடியிருப்பில் குழந்தைகளுக்கான மகியின் அடையாளமாக இதுதான் இருக்கப்போகிறது...
எட்டு மணியைப்போல ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில்தான், கீழ் போர்ஷன் தாத்தா தடுமாறிய நடையுடன் வந்திருந்தார்... எல்லோரும் சென்றுவிட்டதனை உறுதிசெய்த பிறகுதான் வந்திருப்பார் போலும்... அவர்தான் இவர்கள் வீட்டின் உரிமையாளரும் கூட, அதனால் அதற்குரிய மரியாதையுடன், கூடுதல் இணைப்பாக ஒரு காபியும் கொடுக்கப்பட்டது...
“இப்ப ஒன்னுமில்லையே?.. ரொம்ப பயந்துட்டோம்! இயல்பாகத்தான் தொடங்கினார்...
“சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க, ஒரு பதினைஞ்சு நாள்ல வீட்டை காலி பண்ணிடுங்கப்பா... எங்க பொண்ணு இங்க குடிவரணும்னு ஆசைப்படுறா! தயங்கிக்கொண்டே குண்டை வீசினார்..
“என்ன தாத்தா திடீர்னு சொல்றீங்க?... அக்ரீமென்ட் பேப்பர்ல அப்டிலாம் ஏதும் சொல்லலையே!.. திடுதிப்ன்னு டெனன்ட்டை அப்டி காலி பண்ண சொல்லிட முடியாது! வாசு தனக்கு தெரிந்த சட்டங்களை கோர்த்து பேசினான்...
“ஏன் சார், எங்களால உங்களுக்கு எதாச்சும் ப்ராப்ளம் வரும்னு பயப்படுறீங்களா? மகி நேரடியாக கேட்டுவிட்டான்...
தாத்தாவிடம் இன்ஸ்டன்ட் பதில் இல்லை, சில நாழிகைகள் யோசித்தார்..
சமாளிக்க விரும்பாததைப்போல, தலையை அசைத்து ஆமோதித்தார்.. “ஆனா பயம் எனக்கில்ல, என் பசங்களுக்கு... அவங்கல்லாம் வெளிநாடுகள்ல இருக்குறதால, தனியா இருக்க அப்பன் மேல அப்டி ஒரு கரிசனம்... இதை பாசம்னும் சொல்லிடமுடியாது, ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிட்டா சட்டுன்னு லீவ் போட்டுட்டு வரமுடியாதுல்ல!... அடிதடி, நியூஸ், போலிஸ்னு எந்த சிக்கலும் வரக்கூடாதுன்னும் நினைக்குறாங்க.. இதுப்பத்தி அவங்ககிட்ட வாதம் பண்ற காலமல்லாம் கடந்திடுச்சு, அவங்க சொல்றதை எதுவா இருந்தாலும் கேட்டுத்தான் ஆகணும்!.. எனக்கும் நீங்க போறதுல துளியும் உடன்பாடு இல்ல, ஆனா எனக்கும் வேற வழி தெரியலப்பா!ஆற்றாமையோடு சொல்லி முடிக்கும்போது தலையை கவிழ்த்துக்கொண்டார்... நேரடியாக அவர்களின் கண்களை எதிர்கொள்ளும் பலத்தை இழந்திருந்தார்...
அவர் அருகில் சென்ற மகி, கையை பிடித்துக்கொண்டு அருகில் அமர்ந்தான்... “ஒன்னும் கவலைப்படாதிங்க தாத்தா... கூடியசீக்கிரம் வேற வீடு பார்த்துட்டு காலி பண்ணிடுறோம்.. நீங்க கில்ட்டியா பீல் பண்ணாதிங்க.. ஆனா எப்போ எந்த உதவி தேவைப்பட்டாலும், பேரப்பசங்களா நெனச்சு எங்கள கூப்பிடுங்க! மனதை தேற்றினான்... தழுதழுத்த குரலில், “சாரிப்பா... என்று சொல்லும்போதே அவர் கண்கள் கலங்கிவிட்டது.. லிப்ட் வரை அவரை கொண்டுசேர்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் மகி..
“உனக்கு ஏண்டா இன்னும் பீச்ல சிலை வைக்கல? வாசு கடுப்பானான்...
“சுனாமி வந்திடக்கூடாதுல்ல!
“ஏண்டா பாவி, அந்தாளுதான் ஏதோ பிட்டை போடுறார்னா, ‘இல்ல, அதல்லாம் இப்போ முடியாது.. ஒரு ஆறு மாசம் போகட்டும்னு சொல்லாம, ‘சரி, காலி பண்ணிடுறோம்;னு உடனே ஒப்புக்கிட்ட... இதுல சொல்வதல்லாம் உண்மை லட்சுமி மாதிரி, உருகி உருகி பைனல் டச் வேற... தலையில் அடித்துக்கொண்டான்..
“ஏய் லூசு, அவர் என்னடா பண்ணுவார்?.. பசங்க சொல்லிவிட்டதை வந்து சொல்றார், அவ்ளோதான்... இதை இத்தோட விட்டுட்டு, நாளைலேந்து புது வீடு பார்க்க ஆரமிக்கணும்!
காலையில் எழுந்த உடனேயே திலீப்பிற்கு வீடுபற்றிய குழப்பம் தலைக்கு மேல் கத்தியாய் நின்றது...
“கொஞ்சநேரம் அசந்து தூங்கிட்டேன், அதுக்குள்ள வீட்டை விட்டுட்டிங்களே! வாசுவிடம் கடிந்துகொண்டான்...
“ஏய் பாவி... வீட்டை தாரைவார்த்து கொடுத்தது உன்னோட காந்தர்வ மணாளன், அவன்கிட்ட போய் சண்டை போடு! மகி இன்னும் தூக்கம் களைந்து எழவில்லை... ஒருவேளை விழித்திருந்தால் இந்த பேச்சையே எடுத்திருக்க மாட்டான் திலீப்...
“சரி அவன்தான்  உணர்ச்சிவசப்பட்டுட்டான்னா உனக்கெங்க போச்சு புத்தி? எந்தப்பக்கம் வில்லை திருப்பினாலும், அம்பு பாய்வதென்னவோ வாசுவின் மார்பை நோக்கித்தான்...
“கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா உனக்கு?.. இவ்வளவு சொன்னபிறகும் பலியாடா நான்தான் கெடச்சேனா?
ஹாலில் ஏதோ பேச்சுக்குரல்கள் கேட்க, மெள்ள தூக்கம் களைத்து எழுந்து வந்தான் மகி.. முகத்தை கழுவிவிட்டு, துண்டால் துடைத்தபடியே மகி வருவதைக்கண்ட திலீப், “தக்காளி சட்னியே வச்சுக்கலாம்டா, நான் வெங்காயம் நறுக்கித்தரவா? சடாரென பேச்சை திசை திருப்பினான்...
‘அடப்பாவி! என வாயை பிளந்த வாசு, மேற்கொண்டு பேசி குழப்பிக்கொள்ள விரும்பாமல் அங்கிருந்து அவசரமாக நகர்ந்தான்...
“குட் மார்னிங் மாமா... இன்னிக்கு ரொம்பநேரம் அசந்து தூங்கிட்டேன்.. சிரித்துக்கொண்டான்..
“ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மகி, நல்லா ரெஸ்ட் எடு
“அப்புறம் நேத்து ஹவுஸ் ஓனர் தாத்தா வந்திருந்தார், வீட்டை காலி பண்ண சொன்னார்... ஏதோ பசங்க விரும்பலன்னு சொல்றார், நானும் சரின்னுட்டேன்... அது ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே மாமா? இயல்பாக கேட்கிறான்...
“ச்ச ச்ச.. அதிலென்ன ப்ராப்ளம்?... வேற வீடு தேடிக்கலாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை...
பக்கத்து அறைக்குள்ளிருந்து வெளிவந்த வாசுவின் பார்வை, திலீப்பை பொசுக்கிவிடுவதை போல கனன்றது...
“என்ன திலீப் சொன்னிங்க?
“உன்ன தக்காளி சட்னி வைக்க சொன்னேன்
“அந்தர் பல்ட்டிய அரசியல்வாதிகள்கூட உன்கிட்டதான் கத்துக்கணும்!நறநறவென பற்களை கடித்துக்கொண்டான்..
மகிக்கு ஒன்றும் புரியவில்லை... திலீப் அசடு வழிய சிரிப்பதை பார்த்து, தானும் சிரித்துக்கொண்டான்... காலையில் சாப்பாடு முடிந்து, இயல்பாக அளவளாவிக்கொண்டிருந்தபோது வீட்டின் அழைப்பு மணி விடாமல் ஒலித்தது...
எழுந்து சென்று கதவை திறப்பதற்குள், இத்தனை முறை அடிக்கிறார்கள்!.. கதவை திறந்தபிறகு, “எலெக்ட்ரானிக் ஊதுபத்தி டெமோ பார்க்குறீங்களா சார்?னு எவனாச்சும் நிற்பான்... எரிச்சலுடன் கதவை திறந்த திலீப்பிற்கு, கதவின் மறுபுறத்தில் நிற்கும் கௌதமை பார்த்ததும் எரிச்சலுக்கு பதிலாக குழப்பம்தான் மேலிட்டது...
ஆச்சர்யமாக படைபல சேனையோடு வந்திடாமல் தனியே வந்திருக்கிறான்.. என்னவாக இருக்கும்?.. என்னவிதமான புது சிக்கலுக்கு அடிக்கல் நாட்ட வந்திருக்கிறானோ!..
“வாங்க கௌதம் வழிவிட்டு நகர்ந்து நின்றான்.. ஹாலில் அமர்ந்திருந்த மகி, சட்டென எழுந்து வணக்கம் சொன்னான்...
“நீங்க இருங்க மகி, ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம்... மகியின் அருகில் வந்து தோள் பிடித்து சொன்னார்..
“இப்போ ஓகேதான் கௌதம், நீங்க உட்காருங்க
“அப்புறம் என்ன முடிவு பண்ணிருக்கிங்க? இன்னும் இருக்கையில் இயல்பாகக்கூட அமரவில்லை, அதற்குள்ளாக விஷயத்திற்கு வந்துவிட்டார்...
“எதைப்பத்தி? தயங்கித்தான் கேட்டான் மகி, கருவிழிகள் மட்டும் திலீப்பை நோக்கி சட்டென போய்வந்தது...
“எலெக்சன்ல கண்டஸ்ட் பண்றது பத்திதான்.. முன்னைவிட எனக்கு கூடுதலா இப்போ நம்பிக்கை வந்திடுச்சு மகி, நம்மால மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ண முடியும்னு... இன்னும் அரைமணி நேரத்துல பிரஸ் மீட் போறேன்... அடுத்தகட்டமா ஏழு தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கிறோம், அதில இரண்டு பெண்களும் அடக்கம்... அதுக்கிடைல உங்கள பார்த்து உறுதி செஞ்சுட்டு போய்டலாம்னு... இறுதியாக இழுத்தார்...
எதிர்பார்த்தது போலவே திலீப் இடைபுகுந்தான்.. “அன்னிக்கே சொன்னதுதான் கௌதம், புதுசா சொல்றதுக்கு எதுவுமில்ல... அவன் உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்னு நினைக்குறேன், இன்னொருமுறை சோதிச்சு பார்க்க விரும்பல.. அதுமட்டுமில்லாம இந்த வீட்டைக்கூட இன்னும் ரெண்டு வாரத்துல காலி பண்ணனும்னு ஹவுஸ் ஓனர் கிட்டேந்து பிரஷர்... போதும் சார் எல்லாம் கைகூப்பி வணங்கினான்...  கௌதமால் பதிலெதுவும் பேசமுடியவில்லை... கட்டாயப்படுத்தவும் விரும்பாதவனாக, அங்கிருந்து எழுந்து செல்ல ஆயத்தமானார்..
“ஒருநிமிஷம் கௌதம்... எதிர்பார்ப்போடு மகியை நோக்கினார்...
“நான் கண்டஸ்ட் பண்றேன்... எந்த மாற்றமும் இல்ல தீர்க்கமாக சொன்னான்.. திலீப்பின் முகம் இருண்டது...
“என் மேல இருக்குற பாசத்துல திலீப் இப்டி பேசுறார்.. இப்டி அடுத்தவங்க பாசத்துக்கு பயந்து எல்லாரும் ஒதுங்கிட்டா, ஒருகட்டத்துல உரிமைக்குன்னு குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டாங்க... திலீப்கிட்ட நான் பேசிக்கறேன், நீங்க மேற்கொண்டு ஆகுற வேலைகள பாருங்க! சொல்லிமுடிப்பதற்குள் ஓடிவந்து கட்டிப்பிடித்தார் கௌதம், முகத்தில் அதுவரை படிந்திருந்த மெல்லிய சலனம் சுவடே தெரியாமல் மறைந்துபோனது...
“கிரேட்யா... ரொம்ப சந்தோஷமா இருக்கு, இன்னிக்கு பிரஸ்காரங்களை ஒரு பிடி பிடிக்குறேன்! நடையும் ஓட்டமுமாக வீட்டை விட்டு வெளியேறினார்..
கதவை சாத்திவிட்டு உள்ளே நுழைந்த திலீப்பின் அருகில் சென்றான் மகி, “மாமா... எதுக்காக அப்டி சொன்னேன்னா... உதடுகளின் மீது கைவைத்து பேச்சை நிறுத்தினான் திலீப்...
“எதுவும் எக்ஸ்ப்ளைன் பண்ணவேணாம் மகி... நீ எதுசெஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்.. என் மகி எடுக்குற முடிவு என்னிக்கும் தப்பாகாது! விரல்களை உதட்டிலிருந்து எடுத்துக்கொண்டான்... மகி எதுவும் பேசவில்லை, ஓரிரு வினாடிகள் மௌனித்து நின்றிருந்தான், சட்டென திலீப்பை கட்டி அணைத்துக்கொண்டான்... அந்த அணைப்பில் முழுமையான புரிதல் புலப்பட்டது...
“இப்டி கட்டிப்பிடுச்சிட்டே நின்னுட்டா, மதியம் சாப்பிட வேணாமா?... வந்து காய்கறிகள நறுக்கித்தா திலீப்
சிரித்துக்கொண்டே விலகினான் திலீப்... மகிக்காக சமைப்பதிலும் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது... கத்தரிக்காய் நறுக்குவதில் கனிந்த அன்பும், முருங்கைக்காய் வெட்டுவதில் முதிர்ந்த பாசமும் சாம்பாராய் கொதித்தபோது காதலாய் கனிந்திருந்தது..
ஒருவழியாக சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, சமையலின் ருசியோடு திலீப்பின் காதலையும் சேர்த்தே புசித்தான் மகி..
கார்த்தியிடமிருந்து விடாமல் வந்துகொண்டிருந்தது அழைப்பு...
“என்னதான் வேணுமாம் அவனுக்கு?... மூணு மிஸ்டு கால்... நொந்துகொண்டான் திலீப்...
“எதாச்சும் முக்கியமா இருக்கும் மாமா, நான் பேசுறேன் அலைபேசியை வாங்கி காதில் வைத்தான்...
“ஏய் லூசு மகி மாமா, நீ இருக்குற வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்களாம்.. நிஜமாவா?... என்ன பிரச்சினை? பரபரப்பாக பேசுகிறான் கார்த்தி...
“ஆமாம்டா.. ஏதும் பிரச்சினை நடந்திடும்னு ஓனர் பயப்படுறார், அதான் வேற வீடு பாக்க சொல்லிட்டார்... ஆமா, அதெப்டி உனக்கு தெரியும்? இன்னும் வீடு பார்க்கச்சொல்லிகூட யாரிடமும் கேட்கவில்லையே?..
“எனக்கு மட்டுமா?... ஊர் உலகத்துக்கே தெரிஞ்சிருக்கும்.. இப்பவல்லாம் உன்னப்பத்தி விஷயங்கள நீ சொல்றதவிட, டிவில பார்த்து தெரிஞ்சுக்கர்றதுதான் அதிகம்... ஏன் நீ பார்க்கலையா? அழைப்பை துண்டித்துவிட்டு அவசரமாக தொலைகாட்சி சேனல்களை மாற்றினான்...
செய்தி சேனல்களை வரிசையாக ஆராயத்தொடங்கினான்... தந்தி தொலைக்காட்சியில் மைக்கை கடித்து தின்னும் அளவிற்கு கத்திக்கொண்டிருக்கிறார் கௌதம்...
ஒலி அளவை அதிகப்படுத்திவிட்டு, அகன்ற கண்களுடன் அவற்றை கவனித்தான்..
“இன்றோடு சேர்ந்து பத்து வேட்பாளர்களை நாங்கள் அறிவித்திருக்கிறோம்.. எங்கள் வேட்பாளர்களின் மீதுதானே அவர்களால் தாக்குதல் நடத்த முடியும்?... அஞ்சாத மனங்களை அசைத்து பார்த்திட முடியாது.. கொளத்தூர் தொகுதி வேட்பாளர் மகிழன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாதகர்கள், இப்போது அவர் வசிக்கும் வீட்டையும்விட்டு வெளியேற மிரட்டியுள்ளார்கள்... நடுத்தெருவில் நின்றாலும் கூட, எங்கள் மக்கள் பணியை விடமாட்டேன் என உறுதியான மனதோடு போராட்டக்களத்தில் நிற்கிறார் அவர்... அப்படிப்பட்ட...” தொலைக்காட்சியை அணைத்தான் திலீப்...
“இந்த மனுஷன் நம்மள நடுத்தெருவுல நிக்கவைக்குறதை சபதமே போடுவார் போலயே! சிரித்தான்..
மீண்டும் கார்த்தியிடமிருந்து அழைப்பு...
“பார்த்தியா மாமா டிவி?.. இப்போ புரியுதா நான் ஏன் டென்ஷன் ஆகுறேன்னு? சிரித்தான்...
“ஹ்ம்ம்... சரி, வீடு பார்க்கனும்னு உன்கிட்ட சொன்னா மட்டும் என்னடா பண்ணமுடியும்?.. நீயே சென்னைக்கு புதுசு!
“நான் புதுசுதான்... ஆனா நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் இங்கதான் இருக்கார், சைதாப்பேட்டைல.. அவர் வீட்டு மாடி போர்ஷன்கூட சும்மாத்தான் இருக்கு... உனக்குன்னா நிச்சயம் கொடுப்பார், கேட்கட்டுமா?
“தாராளமா கேளுடா... எனக்கு தெரியாம யாருடா அந்த சொந்தம்?
“மாணிக்கம் மாமா... ஞாபகம் இருக்கா?... பிரபா அண்ணன் வீட்டுக்கு திருவிழாக்கல்லாம் போவோமே!... அப்போ பார்த்த மாணிக்கம் மாமாதான்.. இப்போ ரீசண்ட்டாதான் கோயம்பேட்டுல பார்த்தேன், உன்னப்பத்தி ரொம்ப விசாரிச்சார்... தங்கமான மனுஷன்.. கண்களை சுருக்கி மனதிற்குள்ளான பதிவுகளில் மாணிக்கம் மாமாவை தேடினான்.. வேஷ்டியை விரல்களுக்கிடையில் பிடித்தபடி, மீசையை முறுக்கிக்கொண்டே பேசும் அந்த காட்சி மனதிற்குள் வந்துபோனது... உடனே சிரிப்புதான் வந்தது...
“சரிடா... உடனே பேசு! அழைப்பை துண்டித்தான்...
மாணிக்கம் மாமா இன்னும் மாறவே இல்லை, அப்படியே இருக்கிறார்... காதோரத்தில் மட்டும் நரைமுடிகள், அஜித்தைவிட சால்ட் & பெப்பர் லுக் இவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது... திருமணமாகி மனைவியுடன் வசிக்கிறார்.. முன்பு காணப்பட்ட கண்களின் குறுகுறுப்பு மட்டும் மிஸ்ஸிங், குடும்பஸ்தன் ஆகிவிட்டதாலோ என்னவோ...
மகியை பார்த்ததும் வேகமாய் ஓடிவந்து கட்டி அணைத்தார்... “எப்டி இருக்க மாப்ள? வாஞ்சையோடு நலம் விசாரித்தார்... உறவுமுறைப்படி என்ன முறை?ன்னு யோசிக்க விரும்பவில்லை... மாணிக்கத்தை பொறுத்தவரை தன்னைவிட இளையவர்கள் எல்லோரும் ‘மாப்பிள்ளைகள்தான்..
“நல்லா இருக்கேன் மாமா... எவ்ளோ நாள் ஆச்சுல்ல பார்த்து?... எப்போ இங்க வந்திங்க?... கல்யாணம் ஆனதல்லாம் கூட யாரும் சொல்லலையே? காபி கோப்பையுடன் மனைவி வந்து நிற்கிறாள்...
“இங்க வந்து ஏழெட்டு வருஷத்துக்கு மேல ஆச்சுப்பா... இங்க ஹார்டுவேர்ஸ் கடை வச்சிருக்கேன்... இவ சந்தியா, எங்களுக்கு கல்யாணமாகி மூணு வருஷம் ஆகுது... லவ் மேரேஜ், யார்கிட்டயும் சொல்லிக்கலப்பா... மாப்ள பிரபா கனடா போனதும் இங்கயே செட்டில் ஆகிட்டேன்.. இன்னும் கைவிரல்களில் மோதிரம், கழுத்தில் புலி நகம் சங்கிலி... ரங்கநாதன் தெருவில் நடக்கவிட்டால்கூட, மாணிக்கத்தை மட்டும் தனியாக அள்ளிவிடும் அளவிற்கான கிராமத்து மைனர் சாயல்...
“உன்ன அடிக்குறத டிவில பார்த்ததும் பதறிப்போயிட்டேன் மாப்ள... இதுவே நம்ம ஊரா இருந்திருந்தா, நடக்குறதே வேறயா இருந்திருக்கும்... மாடி போர்ஷன்க்கு வந்திடு நீ, எந்த கொம்பன் வாரான்னு நான் பார்க்குறேன்... மீசையை முறுக்கிய அந்த சிலநொடிகள் மட்டும் பழைய மைனர் மாமா வந்து மறைந்தார்...
மாலையே பேக்கர்ஸ் & மூவர்ஸ் மூலம் பொருட்கள் வீட்டிற்குள் அடுக்கப்பட்டன... பழைய வீட்டின் அளவிற்கு சொகுசு இல்லை என்றாலும் கூட, ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வும், மனநிறைவும் இந்த வீட்டில் கிடைத்தது...
“யாருடா அந்த ஆளு?... சினிமாக்கள்ல வர்ற வில்லன்கள் மாதிரி காஸ்ட்யூம், என்னையும் ‘மாப்ளங்குறார்! வாசுவின் முதல் குழப்பம்...
“அவருக்கு எல்லாரும் மாப்ளதான்.. ஆனா தங்கமான மனுஷன்.. வேஷ்டி சட்டை போட்டவனல்லாம் வில்லனா தெரியுறானா உனக்கு?... ஊருக்குள்ள திரியுற முக்கால்வாசி கொலைகார, கொல்லைக்காரணுக பேன்ட் ஷர்ட் போட்டவங்கதான்
“சரி சரி... உடனே உபதேசம் ஆரமிச்சுடாத! பக்கத்து வீட்ல ஒரு அழகான பொண்ணு இருக்குறத பார்த்தேன், காலேஜ் படிக்குது போல... புதுவீட்டு ராசில எதாச்சும் நல்லது நடக்குதான்னு பார்ப்போம்! ஜன்னல் வழியே பக்கத்து வீட்டு வாசலை எட்டிப்பார்த்தான்... செருப்புகள் மட்டும்தான் கிடந்தது, அது ஏதேனும் அபாய சமிஞையோ?.. எச்சிலை விழுங்கிக்கொண்டான்...

                          ***********
“மகி, இங்கவந்து ஒரு மாசமாச்சு... ரெண்ட் என்னன்னு கேட்டு கொடுத்திடனும்! கணக்கு வழக்குகளை ஆராயந்துகொண்டிருந்தான் திலீப்...
“கேட்டேன் மாமா... வாடகை கெடக்குது, அப்புறம் பார்த்துக்கலாம்ங்குறார்... உக்காந்து பேசி ஒரு அமவுண்ட்டை கொடுத்திடனும்! மகியின் கையில் ஒரு சிறிய கட்டு மட்டும்தான் கட்டப்பட்டிருக்கிறது... இப்போதல்லாம் வலிகூட இல்லை, இயல்பாகத்தான் உணர்கிறான்.. கண்ணாடியை பார்க்கும்போது, அந்த கன்னத்து தழும்பு மட்டும் அவ்வப்போது மனதை உறுத்துகிறது...
கதவை திறந்து உற்சாகமாக உள்ளே ஓடிவந்தான் வாசு... “சக்சஸ்! கட்டை விரலை உயர்த்தி காட்டினான்...
“ஆமா இவரு பெரிய பராசக்தி சிவாஜி கணேசன் பாரு, என்ட்ரியே சக்சஸ்னு சொல்லிட்டு வர்றதுக்கு சிரித்துக்கொண்டான் திலீப்...
“நான் சிவாஜியோ இல்லையோ, என் ஆளு பத்மினிதான்..வெட்கப்பட்டுக்கொண்டான்...
“அடப்பாவி, அந்தம்மாவுக்கு எழுபது வயசுக்கு மேல இருக்கும்!
“டேய் நாயே... நான் சொல்றது பக்கத்து வீட்டுப்பொண்ணு... அவபேரும் பத்மினிடா... மீண்டும் அதே வெட்கம்..
“ஐயோ... யாரைப்பத்தி வேணாலும் சொல்லு, தயவுசெஞ்சு வெட்கப்பட்டுக்கிட்டு மட்டும் சொல்லாத... அதை தாங்குற மன தைரியம் எனக்கில்ல நெஞ்சை பிடித்துக்கொண்டான் திலீப்...
“போடா... நானும் லவ் பண்ணி, அவளையே கல்யாணம் செஞ்சு காட்டுறேன் பாரு!
“பேரை தெரிஞ்சுக்கவே ஒரு மாசம் ஆகிடுச்சு, இதுல லவ் பண்ணி, கல்யாணம் முடிக்கவல்லாம் எப்டியும் ஒரு ஐம்பது வருஷம் ஆகிடுமா?.. அதுவரைக்கும் நான் உயிரோட இருந்தேன்னா பார்க்குறேன்... நான் போய் குளிச்சிட்டு வந்து உன்ன கவனிச்சுக்கறேன் துண்டை தோளில் போட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்..
“சோப் உள்ளதான் இருக்கு, காணும்னு மகிய கூப்பிடுற வேலை வச்சுக்காத! சிரித்தான் வாசு... வெட்கப்பட்டுக்கொண்டே கதவை தாழிட்டான் திலீப்...
தொலைக்காட்சியில் ஏதோ நகைச்சுவை காட்சியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் மகி.. அருகில் மேசை மீதிருந்த திலீப்பின் அலைபேசி, விடாமல் அலறிக்கொண்டிருக்கிறது... எட்டி எடுத்து அதன் திரையை பார்த்தான், ‘குமார் பெயர் பளிச்சிட்டது... பேசி ரொம்ப நாள் ஆச்சு, பேசிப்பார்ப்போம்... குரலை கண்டுபிடிக்குறாரா?ன்னு கவனிக்கணும்...
பச்சை பொத்தானை அழுத்தி காதில் வைத்து, “ஹலோ என்றான்..
“ஹலோ திலீப்... இன்னிக்கு மதியம் டீ நகர் வந்திடு, ஆட் ஷூட் பேசிட்டேன்
“எந்த ஆட்? ஏதோ பொறி தட்டியது மகிக்குள்...
“ஏய், நீ சொன்னபடி கழுகு பிரான்ட் ஜட்டி விளம்பரம்ப்பா... பேமென்ட்தான் ரொம்ப குறைவா சொல்றாங்க, பத்தாயிரத்துக்கு பேசிட்டேன் இவ்வளவு நாள் சினிமாவில் நடித்துவிட்டு எதற்காக மீண்டும் பழையபடி விளம்பர ஷூட்டிங் பக்கம் போகணும்?... அதுவும் ஜட்டி விளம்பரத்துக்கு... இன்னொருமுறை ஜட்டியோடு அவனை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை!...
“குமார், நான் மகி பேசுறேன்... எதுக்கு இப்போ இப்டி ஷூட்லாம்?
“ஓ மகியா?... இப்போ எப்டி இருக்கீங்க?... கை இப்போ சரி ஆகிடுச்சா?நலம் விசாரித்தான் குமார்..
“அதல்லாம் இருக்கட்டும் குமார், எதுக்கு இப்போ இப்டி ஷூட்டிங்? கண்டிப்பாக கேட்டான். ஏதோ வில்லங்கம் இருப்பதாக அவனுக்குள் தோன்றியது...
“அப்போ திலீப் உங்ககிட்ட விஷயத்த சொல்லலையா?
“என்ன விஷயம்? பதற்றம் உண்டானது...
“நம்ம படத்தை ரிலீஸ் பண்ண ஹைகோர்ட்ல ஸ்டே வாங்கிருக்காங்க... எவனோ ஒருத்தன் படத்தோட கதைய, தன் கதைன்னு சொல்லி கேஸ் போட்ருக்கான்... அந்த ப்ராப்ளம் சால்வ் ஆகுறவரைக்கும் படம் ரிலீஸ் ஆகுறதுல சிக்கல்தான் மகி..
மகி அதிர்ச்சியில் உறைந்துபோனான், கண்கள் இருண்டு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது... இத்தனை இடர்பாடுகளை கடந்து, இனி எதுவும் சிக்கல் இல்லை என்று நம்பியிருந்த நிலையில் இப்படி ஒரு திடீர் முட்டுக்கட்டை... ஏன் திலீப் மட்டும் எப்போதுமே ஒரு கஷ்டத்தை சுமந்துகொண்டே இருக்கிறான்?... அந்த கடவுளுக்கும்தான் இரக்கம் என்பதே கிடையாதா?
“இந்த பிரச்சினயல்லாம் எப்போ முடியும்? ஆற்றாமையின் எல்லைக்கே சென்றுவிட்டான்..
“அது சொல்லமுடியாது மகி... ஒரு மாசம், ரெண்டு மாசம் ஆகலாம்.. சில படங்கள் வருஷக்கணக்குல கூட ரிலீஸ் ஆகாம இருந்ததுண்டு...
குளித்து முடித்துவந்த திலீப், மகி அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்தான்... “சரி குமார், எந்த ஷூட்டிங்க்கும் இனி திலீப் வரமாட்டார்... படம் ரிலீஸ் ஆகட்டும் அழைப்பை துண்டித்தான்... அடக்கடவுளே குமாரா பேசினான்?... போச்சு!... மொத்தத்தையும் கொட்டிவிட்டான் போலும்!.. மகியின் கண்களில் மிரட்சி தெரிகிறது... கோபத்தோடல்லவா பார்க்கிறான்!...
“ஏன் மாமா இதல்லாம் சொல்லல?உரிமையான கோபம்..
“இது சின்ன விஷயம் மகி... சீக்கிரமே படம் ரிலீஸ் ஆகிடும்! அருகில் வந்து தோள்கள் மீது கைவைத்துக்கொண்டான்...
“சின்னதோ பெருசோ, எதுவா இருந்தாலும் சொல்லிருக்கலாம்ல?
“மகி, இந்த கேஸ் கோர்ட்ல நிக்காது... கதை தன்னோடதுன்னு எவனோ கேஸ் போட்ருக்கான்... நிஜத்தை சொல்லனும்னா, கதை என்னன்னு நம்ம டைரக்டருக்கே தெரியாது... ஏன்னா, அப்டி ஒரு விஷயமே படத்துல இல்ல... அதனால கவலைப்படுற அளவுக்கு இது வர்த்தான விஷயம் இல்லடா பொய்யாக சிரித்தான்...
“அப்புறம் ஏன் ஜட்டி விளம்பரத்துல நடிக்க ஓகே சொன்ன?
கிராதகன் எல்லாவற்றையும் உளறியிருக்கிறான்.. இன்னும் எத்தனை விஷயங்களை சமாளிப்பது?...
“இல்ல மகி... அதுவரைக்கும் எதாச்சும் ஒருவகைல வருமானம் வந்துதான ஆகணும்?
“அப்புறம் ஏன் நான் இருக்கேன்?...  என்னால சமாளிக்க முடியாதா?
“முடியும்... ஆனா, இன்னும் ரெண்டு நாள்ல எலெக்சன்ல நாமினேஷன் தாக்கல் பண்ணப்போற!... அதுக்கப்புறம் கேன்வாஸ் பண்ணத்தான் உனக்கு நேரம் சரியா இருக்கும், அப்புறம் எப்டி டியூட்டி போவ?
“அதல்லாம் பேசியாச்சு மாமா... என்னோட மெடிக்கல் லீவை இன்னும் ஒரு மாசம் எக்ஸ்டன்ட் பண்ணிட்டேன்... எலெக்சன் முடியுற வரைக்கும்!
“சரிதான்... அப்போ செலவுக்கு?
“என் சேவிங்க்ஸ் இருக்கு மாமா... அதவச்சு ஆறு மாசம் கூட சமாளிக்கலாம், நமக்கு இப்போ தேவை ஒரு மாசம் மட்டும்தான?... சோ, அதைப்பத்தின கவலைய விடு”  ஒரு டெபிட் கார்டை எடுத்து திலீப்பின் கைகளில் திணித்தான்... மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கான வாய்ப்பு திலீப்பிற்கு கிடைக்கவில்லை... மெளனமாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டான்...
“வாசு... வாசு.. கதவிற்கு வெளியே யாரோ அழைப்பதை போல சத்தம் கேட்டது.. ஏதோ  பெண்ணின் குரல்தான், சந்தியா அக்காவாத்தான் இருக்கும்.. அவ்வப்போது வீட்டில் சமைக்கும் பதார்த்தங்களை, அப்படி கீழே நின்று அழைத்துதான் கொடுப்பார்.. காலையில்கூட மாமா மீன் வாங்கிவந்ததை பார்த்தான் வாசு, ‘அப்போ இன்னிக்கு மீன் குழம்பை ஒரு பிடிபிடிக்கலாம்நாவில் ஊறிய எச்சிலோடு அவசரமாக படிகளில் இறங்கி கீழே போனான்...
“என்னக்கா? என்று கேட்டபோது வெற்றுக்கையுடன் நிற்கும் சந்தியாவை பார்த்து, ‘மீன் இல்லையா? என்று ஏமாற்றத்தோடு கேட்பதை போலவே இருந்தது...
“உங்க மாமா எதுவும் மேல வந்தாரா?.. காலைல ஏதோ டிஷ் ஆண்டெனா திரும்பிடுச்சுன்னு சரிபண்ண ஆள் கூட்டிட்டு வந்தவரு, மாடிக்கு போய் ஒரு மணி நேரமாகுது... இன்னும் ஆளைக்காணும்!... கடைலேந்து ஸ்பேர் பார்ட்ஸ் வந்திருக்குன்னு போன் மேல போன் வருது, சொல்லலாம்னு தேடுறேன் எங்க போனாருன்னு தெரியல அவள் கையில் வைத்திருந்த அலைபேசி அப்போதும் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது..
ஏதோ அவசர காரியம்தான் போல, பரபரத்து நிற்கிறாள்.. மொட்டை மாடிக்கு போய் பார்க்கலாம், என்னதான் இவ்வளவு நேரமா டிஷ் திருப்புறார்னு... “நான் பார்த்துட்டு வரேன், நீ இருக்கா... படிகளில் துள்ளிக்குதித்து ஏறினான் வாசு..
மாடியில் காயப்போட்டிருந்த வற்றல்களை கடந்து, டிஷ் இருக்கும் பகுதியை அடைந்தான்... ஆண்டெனாவின் அருகில் ஒருசில டூல்ஸ் மட்டும் அனாதையாக கிடக்கிறது, அப்படி ஒன்றும் பிரித்து வேலை பார்த்ததாகக்கூட தெரியவில்லை... எங்க போயிருப்பாங்க? பார்வையை 360 டிக்ரீயும் சுற்றி சுழலவிட்டான்.. தண்ணீர் தொட்டியின் பின்புறத்திலிருந்து ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம், பலமாக மூச்சுவிடும்போது எழும் காற்றொலி போல கேட்கிறது...
வீட்டிற்கு குடிவந்த புதிதில், “மாப்ள, அந்த மொட்டை மாடி பக்கம் போகவேணாம்.. அங்க ஏதோ காத்துக்கருப்பு இருக்குன்னு ஒரு பேச்சு! மாணிக்கம் மாமா எச்சரித்தது நினைவுக்கு வந்தது... பேய் பிசாசில் எல்லாம் நம்பிக்கை இல்லைதான், என்றாலும் கூட உச்சி வெயிலில், மொட்டை மாடியில், ஏதோ ஒரு அத்துவான சத்தம் கேட்கும்போது மனத்தால் பதறாமல் இருக்கமுடியவில்லை...
இருந்தாலும் கீழே நிற்கும் சந்தியாவிடம், பயந்து வந்துவிட்டதாக காட்டிக்கொண்டால், பின்னாளில் தனக்கும் பத்மினிக்கும் இடையிலான காதலில் ஏதேனும் சிக்கல் வரலாம்! என்கிற தொலைநோக்குப்பார்வை,போய்தான் பாரேன்!என்று துணிச்சலை கொடுத்தது...
மெள்ள அந்த வாரத்தை நெருங்கினான்.. மூச்சுக்காற்றுடன் முனகல் சத்தமும் கேட்கிறது... இன்னும் நெருங்க வெள்ளை சட்டை ஒரு ஓரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததை கவனித்தான்... சடாரென உள்ளே எட்டிப்பார்க்க, மாணிக்கம் யாரோ ஒரு இளைஞனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவாறு கைகளை ஆங்காங்கே படரவிட்டுக்கொண்டிருக்கிறான்...
‘அடச்சை! பட்டென விலகி வந்துவிட்டான்... யாரோ தங்களை எட்டிப்பார்த்ததை கவனித்துவிட்ட இளைஞன், மாணிக்கத்தை விருட்டென விலக்கி தள்ளிவிட்டு சட்டையை அவசரமாக மாட்டிக்கொண்டான்... ஏதோ வில்லங்கம் நடந்துவிட்டதை உணர்ந்த மாணிக்கம், அவசரமாக உடைகளை மாற்றிக்கொண்டு சுருக்கங்களை சரிசெய்தவாறு அங்கிருந்து வெளியே வந்தார்...
சற்று தூரத்தில் நின்ற வாசுதான் அந்த வில்லங்கம்! என்பதை உணர்ந்தவனாக, எதுவும் காட்டிக்கொள்ளாமல் வழக்கமான சிரிப்புடன் அருகே வந்தார்..
“வாசு மாப்ள, என்ன தனியா நிக்குற?...
“ஹ்ம்ம்... வேண்டுதல்!
“ஒண்ணுமில்ல மாப்ள... பய டிஷ் சரிபண்ணிட்டு இருந்தான், திடீர்னு மயங்கி விழுந்துட்டான்.. அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்குறதுக்கு அங்க ரெஸ்ட் எடுக்க சொன்னேன் சரளமாக சமாளித்தார்...
“ஓஓஹோ... பார்த்தேன் பார்த்தேன்... உங்கள அக்கா கூப்டுது, கடைலேந்து போன் வந்திருக்காம்! சொல்லிவிட்டு முன்னே சென்றுவிட்டான் வாசு.. தலையை குனிந்தபடியே நடந்துவந்தான் டிஷ் பார்க்க வந்தவனும்...
படிகளிலிருந்து இறங்கி வரும் மாணிக்கத்தை பார்த்தவுடன், “இந்தா வந்துட்டாக, கொடுக்குறேன்! என்றபடி அலைபேசியை கணவனிடம் கொடுத்தாள் சந்தியா...
அதனை எவ்வித சலனமுமின்றி வாங்கி காதில் வைத்த மாணிக்கம், “ஏண்டா இதுக்கல்லாம் போன் பண்ணனுமா?... பொருட்கள வாங்கி வச்சுட்டு, வவுச்சர்ல கையெழுத்து போட சொல்லு!கடிந்துவிட்டு அழைப்பை துண்டித்தார்..
“ஏன்தான் அந்த டிஷ் அடிக்கடி திரும்புது?... இப்பவாச்சும் நல்லா செட் பண்ணியா இல்லையா? அப்பாவியாக கடிந்துகொண்டாள் அந்த இளைஞனை...
“நல்லா செட் ஆனதால்தான்க்கா அடிக்கடி திரும்புது!.. சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான் வாசு...
“டேய் அக்கா சொன்னத கேட்டில்ல, இனி டிஷ்ல பிரச்சினை வரக்கூடாது... இந்தா வச்சுக்க சில நூறுகளை சுருட்டி அந்த இளைஞனின் பைக்குள் திணித்து விரட்டிவிட்டு, மனைவியின் பக்கம் திரும்பி, “என்னம்மா பண்ற இங்க?... ஐஸ்ல வச்ச மீன், உடனே குழம்பு வச்சாதான் நல்லா இருக்கும்.. போய் அதுக்கு ஆகுற வேலைய பாரு! மனைவியையும் மறுபக்கம் அனுப்பிவிட்டு ஆசுவாசமாக கதவில் சாய்ந்தார் மாணிக்கம்..
“மாமா... ஐஸ்ல வச்ச மீன் கெட்டுப்போய்டக்கூடாதுன்னு நெனக்கிற நோக்கு, இப்டி ஆபத்தான விஷயங்களால வாழ்க்கையே நாறிப்போய்டும்னு தோணலையா?மழலை மொழியில் சொன்னான்...
“ஏலே உனக்கென்ன ‘வேதம் புதிது படத்துல வர்ற ஐயரூட்டு பையன்னு நெனப்பா?... நீ இப்டி கேட்டதும், கன்னத்துல ‘சப்.. சப்னு அறை விழற மாதிரி தோன நான் ஒன்னும் சத்யராஜ் இல்ல... எதாச்சும் வேலை இருந்தா போய் பாரு மாப்ளஅலட்சியமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் மாணிக்கம்... எத்தனையோ முதலைகளை முழங்கையால் அடித்து முடமாக்கிய சிங்கத்தை, ஒரு சாதாரண கீரிப்பிள்ளை என்ன செய்துவிடப்போகிறது? என்கிற அசாத்திய துணிச்சல் அந்த நடையில் தெரிந்தது..
மனதிற்குள் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் வாசு... கையில் ஏதோ காகிதங்களை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தான் மகி..
“சர்ட்டிபிக்கட்ஸ் மறக்காம வச்சுக்கோ மகி... எதாச்சும் காரணம் சொல்லி ரிஜெக்ட் பண்ணிடாம திலீப்பின் முகம்தான் அதிக கவலைக்குள் ஆட்பட்டிருந்தது..
மதியம் வேட்புமனுத்தாக்கல்.. காலை முதலாகவே வழக்கறிஞர் ஒருவருடன் மனுத்தாக்கல் பற்றிய சம்பிரதாயங்களை கவனமாக கேட்டுக்கொண்டார்கள்.. இறுதிகட்டமாக அவற்றை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டிருக்கும் பரபரப்புதான் அந்த கவலைகளுக்கான காரணம்..
“மகி கிளம்பியாச்சா? கௌதமிடமிருந்து மூன்றாவது அழைப்பு... இதற்குமேலும் தாமதிக்க முடியாது, எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துக்கொண்டு கிளம்பும் முன்பு திலீப்பை கட்டி அணைத்துக்கொண்டான்...
“ஏய் ஷர்ட் சுருங்கப்போகுது பாரு... டிவில காட்டுறப்போ, டிப் டாப்பா தெரிய வேணாமா? வாசு சொல்வது எதுவும் இருவரின் காதுகளை எட்டவில்லை...
“இவ்ளோ பீல் பண்றதுக்கு திலீப்பை கூட்டிட்டே போகலாம்ல? வாசுவே தொடர்ந்தான்...
“இல்லடா.. வேணாம்... சினி இண்டஸ்ட்ரில இருக்குற ஆளு, தேவையில்லாத ஸ்கூப் அடிபடும்.. ஹீரோவா ஒரு இடத்தை பிடிக்கட்டும், அப்புறம் எங்க வேணாலும் போகலாம்! திலீப்பை விடுவித்துக்கொண்டு உற்சாகமாக அங்கிருந்து கிளம்பினான் மகி..
மகி கிளம்பியது முதலாகவே திலீப் பரபரப்பாக காணப்பட்டான்.. கைகளை போட்டு பிசைந்துகொண்டிருப்பதிலேயே அவனுடைய பதற்றத்தை அளவிட்டுவிடமுடியும்.. அலைபேசியை எடுத்து, மகியின் எண்களை தட்டினான்...
“சொல்லு மாமா...
“எங்க இருக்க?
“ஆபிஸ் வந்தாச்சு மாமா.. கொஞ்சநேரத்துல நாமினேட் பண்ணிடுவோம்... இங்க ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, போலிஸ் ப்ரொட்டக்ஷன் பக்காவா போட்ருக்காங்க... கவலைப்படாம ரெஸ்ட் எடு மாமா, சீக்கிரம் வந்திடுறேன் அழைப்பை துண்டித்தான்...
மனசு இலகுவானதைப்போல உணர்ந்தான்... மகி ஒருமுறை தாக்கப்பட்டபிறகு ஏனோ அதிகமாக எதிர்மறை எண்ணங்கள்தான் முளைவிடுகிறது... நேற்றுக்கூட ஏதோ ஒரு தொலைக்காட்சியில், தமிழகத்தில் நடந்த அரசியல் கொலைகள் பற்றிய காட்சித்தொகுப்பை ஒளிபரப்பினார்கள்.. போதாத குறைக்கு எதிர்க்கட்சி சேனலை எப்போ போட்டாலும், “அரசியல் பிரமுகர் வெட்டிக்கொலை! செய்திதான்.. இவற்றையெல்லாம் பார்த்தபிறகும் அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றாமல் இருந்திட்டால்தான் அது அதிசயம்...
“இதுக்கு நீயும் மகி கூடவே போயிருக்கலாம்... கோவிலுக்கு போனவன், வாசல்ல கழற்றிப்போட்ட செருப்பை நெனச்சுகிட்டிருந்த மாதிரி ஆகிடுச்சு உன் நெலமை!ஒரு குவளையில் பழச்சாற்றை ஊற்றி திலீப்புக்கு கொடுத்தான் வாசு...
“அப்போ மகிய செருப்புன்னு சொல்றியா? சீறினான்... 
“அய்யய்யோ... டேய், ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்.. இருக்குற கடுப்பை என் மேல காட்டிடாத பிள்ளையார் பிடிக்க குரங்காகிப்போனதால், தன்னை தற்காத்துக்கொள்ளும்பொருட்டு பவ்யமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்...
“உங்க பேருல ஊர்ல வேறேதும் ப்ராப்பர்ட்டி இல்லையே மகி? கையெழுத்து போடும் முன்பு கடைசியாக உறுதிப்படுத்திக்கொண்டார் வழக்கறிஞர்..
“இல்ல சார்.. இருக்குறது மொத்தத்தையும் கணக்குல காட்டியாச்சு, நீங்க விருப்பப்பட்டு எதாச்சும் எழுதித்தர்றதுன்னா தாங்க! சிரித்துக்கொண்டே கையெழுத்திட, கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர் அமைப்பினர்...
“ஹலோ மகி, நாமினேட் பண்ணியாச்சுன்னா நம்ம ப்ரஸ் க்ளப் வரைக்கும் வந்துட்டுப்போங்க... கௌதம் அழைப்பை மறுக்கமுடியவில்லை, சகாக்கள் சகிதம் பத்திரிகையாளர் மன்றத்தை அடைந்தான்.. முந்தைய முறையை போலல்லாமல் பலதரப்பட்ட ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள்...
“தந்தி டிவில லைவா டெலிகாஸ்ட் பண்றாங்களாம்! காதில் கிசுகிசுத்தான் பிரதீப்... ஏனோ மனதிற்குள் ஒரு பதற்றம் அரும்பியது.. மேடையின் பக்கவாட்டு இருக்கைகளில் அமர்ந்திருந்த நண்பர்கள் அருகில் நின்றுகொண்டான்...
“டாக்டர்... இங்க வாங்க! மேடைக்கு அழைத்தார் கௌதம்... அவசரப்பட்டு, ‘எலெக்சன்ல நின்னுங்கன்னு சொன்ன ஒரு பாவத்துக்கு, சோதனை எலி போல ஒவ்வொருமுறையும் பயன்படுத்தப்படுகிறேன்!... ‘அட எழுதி வச்சிருக்கத பேசிட்டு கீழ வாய்யான்னு சொல்லணும் போல இருந்தாலும், எண்ணத்தை எச்சிலாக விழுங்கிக்கொண்டு அமைதி காத்தான்..
“மகிழன், உங்களைத்தான்.. விடுவதாக இல்லை... அரங்கின் பல கண்களும் அவனையே வட்டமடித்தது.. இனி மறுத்தும் பலனில்லை, தடுமாற்றத்துடன் மேடை ஏறினான்... கௌதம் அருகில் இருக்கையில் அமரவைக்கப்பட்டான்...
“ஸ்டார்ட் பண்ணலாமா?ஊடகவியலாளர்களை ஒருமுறை கேட்டுக்கொண்டார் கௌதம்.. பலரும் ஆமோதித்து தலையசைக்க, மைக்கை மகியின் பக்கம் திருப்பினான்.. குழப்பம் கலந்த அதிர்ச்சியோடு கௌதமை பார்த்தான் மகி..
“நீங்க பேசுங்க மகிழன்! அடப்பாவி ஸ்க்ரிப்ட் எழுதிட்டு வர மறந்துட்டியா?..
“என்ன பேசுறது? மிரட்சியானான் மகி..
“தோணுறத பேசுங்க.. நம்ம அமைப்போட முகமா நான் மட்டும் மக்கள் மனசுல பதிஞ்சிடக்கூடாது.. நீங்களும் எலெக்சன்ல நிக்குறதால இந்த அறிமுகம் உங்களுக்கு தேவைப்படும்.. முக்கியமா நம்ம சமூகத்துக்காக சாவின் விளிம்புவரை போயிருக்கிங்க, நீங்க இப்போ பேசினாத்தான் சரியா இருக்கும்
“நல்லாத்தானே பேசுறீங்க... அதே ப்ளோல பேசிடுங்களே அதற்கு மேல் கெஞ்சமுடியவில்லை... தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு சான் போனால் என்ன, முழம் போனால் என்ன?.. தொண்டையை சரிசெய்துகொண்டு பேசத்தொடங்கினான்...
“பாலீர்ப்பு காரணங்களால் மறுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இன்றைக்கு பத்து பேர் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம்.. எங்கள் சமூகத்து மக்கள் மட்டுமல்லாது, சக மனிதனின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு மனிதநேயமுள்ள மனிதரும் எங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.. மிகவும் சனநாயக முறையில் மக்கள் மன்றத்தில் களம் காணும் எங்கள் மீது சில சமூக விரோதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.. என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர்த்தப்பியிருக்கிறேன்... இதுவரை எங்கள் உரிமையை வெறும் உடல் சார்ந்த விஷயமாக பார்த்த மக்களுக்கு இப்போதுதான் எங்கள் உயிருக்கே அச்சறுத்தலான ஒரு சூழலில் வாழ்ந்து வருகிறோம்! என்ற உண்மை புரியவந்திருக்கும்... எங்களுடைய இந்த மரணப்போராட்டத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையோடு பயணத்தை தொடர்கிறோம் மகியை கட்டியணைத்துக்கொண்டார் கௌதம்...
“மகி சூப்பரா பேசிட்டான்ல? தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த வாசு உற்சாகமானான்...
“பேசிட்டான்... அதுக்கு எதாவது ரியாக்சன் வராம இருக்கணும்!திலீப்பின் கவலை வேறுவிதமானது...
“அப்பவே சொன்னேன்ல, அங்க பாரு அவன் ஷர்ட் கசங்கிப்போய் தெரியுது... அப்டி கிளம்புறப்போ கட்டிப்பிடிக்கலைன்னாதான் என்னவாம்! காஸ்ட்யூம் பற்றி கவலைப்படும் வாசுவிடம், எவ்வளவு விளக்கினாலும் தனது உள்ளுணர்வை வெளிப்படுத்த முடியாதென்பதை உணர்ந்தான் திலீப்...
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோடு ஒரு தனி அறையில் விவாதித்துக்கொண்டிருந்தார் கௌதம்..
“ஏதோ ஒரு தைரியத்துல எலெக்சன்ல நின்னுட்டோம், அதே தைரியத்தோட கடைசிவரைக்கும் நின்னாத்தான் நாம நினச்ச இலக்கை ஓரளவாவது எட்டமுடியும்... தோற்கத்தான் போறோம்னு தெரிஞ்சே கண்டெஸ்ட் பண்றது தற்கொலைக்கு சமம்னு சிலர் நினைக்கலாம், சிலநேரங்கள்ல அப்படியான தற்கொலைகளில் கூட நியாயம் இருக்கத்தான் செய்யும்... இது ஒரு சோதனை முயற்சிதான், நம்மை நாமே சோதித்துக்கொள்கிற பலப்பரீட்சை.. அதனால வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாம போராடுங்க... உங்க பத்து பேருக்குமே, ஓரளவு இங்க நடக்குற அரசியல் பத்தி தெரியும்னு நம்புறேன்... மற்ற கட்சிகளுக்கு இணையான பணபலமோ, ஆட்பலமோ நமக்கு கெடயாது.. முழுக்க முழுக்க நம்ம கொள்கைகளை மட்டும்தான் நம்பி களத்துல இறங்கிருக்கோம்... நாம அரசியல் பயணம் பற்றி அறிவிச்ச நாள் முதலாவே பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் பதினைஞ்சு லட்ச ரூபாய் வரைக்கும் நிதி வந்திருக்கு... நம்ம அமைப்பை பொருத்தவரைக்கும் இது மிகப்பெரிய தொகைதான், ஆனாலும் அரசியல்னு போறப்போ இது யானைப்பசிக்கு சோளப்பொறிதான்... இப்போ நம்ம அமைப்பால முடிஞ்சுது ஒவ்வொருத்தருக்கும் தலா ஒரு லட்சம் தேர்தல் செலவுக்கு கொடுக்கலாம்னு இருக்குறோம்... மீதி பணத்துல கட்சியோட சின்னம், கொள்கைகள் அடங்கிய லீப்லெட்ஸ், போஸ்டர்ஸ், ஆட்டோ விளம்பரங்கள்னு ஓரளவு சமாளிக்கலாம்னு யோசிக்கிறோம்... இதல்லாம் உங்களுக்கு ஓகேதான? தன்மையாக பேசினார்... பேசுகையில் மெலிதான பயமும், அதனை மறைக்க முனைந்த எச்சரிக்கையுணர்வும் வெளிப்படையாகவே தெரிந்தது...
“பணமெல்லாம் எதுக்கு கௌதம், சமாளிச்சுக்கலாம்.. பெருந்தன்மையாக பேசினான் மகி...
“இல்ல மகி.. அடிப்படை செலவுகளுக்காவது இந்த பணம் வேணும்.. உங்க வேலை, தொழில்னு எல்லாத்தையும் ஒருமாசம் விட்டுட்டு நம்ம சமூகத்துக்காக போராடுறீங்க.. அதுக்கு நம்ம மக்களால முடிஞ்ச ஒரு சின்ன பதிலுபகாரம்னு நினச்சுக்கோங்க.. அதே போல உங்ககூட பிரச்சாரத்துக்கு வர ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இருபது வாலன்ட்டியர்ஸ் அரேஞ் பண்ணிருக்கோம்.. ரொம்ப ஆக்டிவா வேலை பார்க்குற பசங்களா பார்த்து செலெக்ட் செஞ்சிருக்கோம்... நாளைக்கு காலைல அவங்கவங்க வாலன்ட்டியர்ஸ், உங்கள மீட் பண்ணுவாங்க... கேன்வாஸ் யுத்திகள் பத்தி நீங்க முடிவு பண்ணிக்கலாம்.. மற்றபடி எதாவது உதவிகள் தேவைப்பட்டா தாராளமா எப்போ வேணாலும் காண்டாக்ட் பண்ணலாம் உருக்கமாக சொல்லிமுடித்தார்...
“இந்து, அமுதா... நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் கூடுதல் கவனமா இருங்க... பிரச்சினைக்குரிய இடங்களுக்கு போகவேணாம், எங்க போனாலும் நம்ம பசங்ககூட போங்க! இரண்டு பெண் வேட்பாளர்களிடமும் கூடுதல் கவனத்தோடு பேசினார்..
“நாங்க பார்த்துக்கறோம் கௌதம்... ரிலாக்ஸ் ஏனோ இன்னும் கௌதம் மெல்லிய மனப்பதற்றத்தோடுதான் காணப்படுகிறார்..
மகி வீட்டை அடையும்போது சரியாக கௌதமிடமிருந்து அழைப்பு, “பாதுகாப்பா வீட்டுக்கு போயிட்டிங்களா மகி? உறுதிசெய்துகொண்டார்... மற்ற எட்டு பேருக்கும்கூட இதே போன்ற அழைப்புகள் பறந்திருக்கும், யாரோ ஒருவருடைய மொபைல் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டாலும் கௌதம் தூக்கத்தை இழந்துவிடுவார்... நல்லதே நடக்கும், மனதிற்குள் நினைத்துக்கொண்டான் மகி...
மகியை பார்த்ததும்தான் திலீப்பிற்கு உயிரே வந்தது.. ஆனாலும், இன்னும் ஒருமாதம் நீடிக்கப்போகும் இந்த மனப்பதற்றத்தை நினைத்துப்பார்க்கவே கூடுதலாக பயமும் தொற்றிக்கொண்டது...
“சாப்ட்டியா மாமா? முகம் கழுவி உடைகளை மாற்றிவிட்டு அருகில் அமர்ந்துகொண்டான் மகி..
“அட நீ வேற... கொடுத்த ஜூஸ் கூட ஈ எறும்புக்கு விருந்தா ஆகிடுச்சு! வாசு சுட்டிக்காட்டிய திசையில், எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்த குவளை யாராலும் தீண்டப்படாமல் இருக்கிறது...
“சரி எழுந்திரு மாமா, சாப்டலாம் திலீப்பின் கைபிடித்து இழுக்க, மறுப்பேதும் சொல்லாமல் பின்னே நடந்தான்..
சாப்பிட்டு முடிக்கும்வரையில்கூட அதே மௌனமும், குழப்பமும் குடிகொண்டிருந்தவனாகவே காணப்பட்டான்.. “டிவில லைவா பார்க்குறப்போ உன் ஷர்ட் கலர் கூட வித்யாசமா தெரிஞ்சுது மகி.. மைக்கை இன்னும் கொஞ்சம் பக்கத்துல வச்சு பேசிருக்கலாம் வாசு மட்டும் தொனதொனத்துக்கொண்டிருக்கிறான்...
“ஹ்ம்ம் ஆமா... அப்டிதான்டா பதில் சொல்லிக்கொண்டிருக்கும் மகியின் பார்வை மட்டும் திலீப்பின் கண்களுக்குள் தெரிந்த குழப்பத்தை சுற்றியே வட்டமடித்தது.. அரசியலில் இறங்கியதிலேயே திலீப்புக்கு உடன்பாடில்லை என்றாலும் தனக்காக ஒப்புக்கொண்டுவிட்டான் போலும்... இப்போ தொண்டையில் சிக்கிய முள்ளைப்போல அது ஒவ்வொரு முறையும் அருவுகிறது...
படுக்கையில் படுத்தபிறகு மகியாகவே பேச்சை தொடங்கினான்...
“ஏன் மாமா ஒரு மாதிரி இருக்க?
“இல்லையே... சாதாரணமாத்தான் இருக்கேன்! அவசரமாக மறுத்தான்...
“இப்டி அவசரமா மறுக்கும்போதே, அதில ஏதோ விஷயம் இருக்குன்னு புரியுது மாமா திலீப்பின் கன்னத்தில் உள்ளங்கையை வைத்து அணைத்துக்கொண்டான்..
“ஒண்ணுமில்ல மகி... கொஞ்சம் பயமா இருக்கு, எதுவும் நடந்திடக்கூடாதுன்னு பதட்டம்.. அவசியமில்லாத பயம்னு புரிஞ்சாலும், அதை தவிர்க்க முடியல!
“நான் கண்டஸ்ட் பண்றதை வாபஸ் வாங்கிடவா மாமா?.. போட்டியிலிருந்து விலகிடவா? திலீப்பை வதைத்துத்தான் ஒரு போராட்டம் செய்யவேண்டும் என்பதி மகிக்கு விருப்பமில்லை...
ஐயோ இல்ல மகி... வேணாம்.. உன்னோட முடிவுலேந்து நீ பின்வாங்க வேணாம், அது உயர்ந்த லட்சியம்.. எனக்கிருக்குற பயம் கொஞ்ச நாள்ல சரியாகிடும், அதுக்காக தேர்தல்லேந்து விலகுறதுல எனக்கு உடன்பாடு இல்ல நிதானமாக பேசினான்..
“ஆனாலும் ஒருபக்கம் உன்ன கஷ்டப்படுத்திட்டு, மறுபக்கம் என்னால மட்டும் எப்டி முழுமனசோட அதில இயங்கமுடியும்? மகி இன்னும் தடுமாற்றத்தில்தான் இருக்கிறான்..
மகியின் நெற்றியில் முத்தம் கொடுத்த திலீப், “என் மகி இப்டி ஒரு முடிவு எடுத்ததுக்கு பிறகு யோசிக்கமாட்டான்... எடுத்த முடிவுல தெளிவா இருப்பான்!.. இப்போ ஏன் நீ குழம்புற? தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தான்..
சிரித்துவிட்டான் மகி.. அந்த ஸ்பரிசத்தில் ‘அல்ஜீப்ரா குழப்பமே அடிபட்டு போய்விடுமெனும்போது, இந்த அவசியமற்ற குழப்பங்கள் மட்டும் நீடித்திடவா போகிறது?..
“சரி மாமா இனி குழம்பல, தெளிவா இருக்கேன்... நீயும் பயப்படாத மாமா, எனக்கு ஒன்னும் ஆகாது கட்டி அணைத்துக்கொண்டான்...
காலையில் கடைக்கு போய்விட்டு வரும்போது, வாசலிலேயே சந்தியா நிற்பதை பார்த்த வாசுவிற்கு குழப்பம் வந்தது.. ஒருவேளை மாமா இன்னிக்கும் டிஷ் திருப்ப போயிருப்பாரோ?, காலங்காத்தாலையா அதல்லாம் செய்வாரு?..
“என்னக்கா இங்க நிக்குற?... சமையல் செய்யலையா? வீட்டிற்குள் எட்டிப்பார்த்தான், மாணிக்கத்தை காணவில்லை...
“மிக்சி ரிப்பேர் ஆகிடுச்சு, அதான்
“மாமா எங்க?
“அவர்தான் ஆள் கூட்டிட்டு வந்து உள்ள ரிப்பேர் பார்க்குறாரு! நேற்று டிஷ், இன்னிக்கு மிக்சியா?... அடப்பாவி மனுஷா!..
“நீ ஏன்க்கா இங்க நிக்குற?.. ரிப்பேர் பண்றத பொம்பளைங்க பார்க்ககூடாதுன்னு மாமா சொன்னாரா?
“அடலூசு... மெயின் ஆப் பண்ணிட்டு நிக்குறேன்.. யாராச்சும் வந்து போட்டுடக்கூடாதுல்ல? அப்பாவியாக சொன்னாள்... மிக்சி ரிப்பேர் செய்வதை, ட்ரான்ஸ்பார்மர் பழுது பார்ப்பதை போல பில்டப் செய்து வைத்திருக்கிறார்... இதில் என்னை ‘லூசுன்னு வேற அடையாளப்படுத்திவிட்டாள்..
சட்டென உள்ளே நுழைந்து சமையலறையை நோக்கி விரைந்தான் வாசு.. கதவு சாத்தப்பட்டிருக்கிறது, உள்ளே தாழ்ப்பாளும் கூட போடப்பட்டிருக்கிறது... இந்நேரம் எதை பிரித்து எதில் மாட்டியிருப்பாரோ?, மிக்ஸியைத்தான் சொல்கிறேன்!... கதவை தட்டினான்...

உள்ளே பொருட்கள் உருளும் சத்தம்... ஓரிரு நிமிடங்களில் கதவை, தலைமுடிகளை சரிசெய்தவாறே திறந்தார் மாணிக்கம்... பின்புறத்தில் யாரோ ஒரு வாலிபன், சட்டையை சரிசெய்துகொண்டு நிற்கிறான்.. ஒரு ஓரத்தில் அப்பாவியாக சாய்ந்துகிடந்தது மிக்ஸி... 
“வா மாப்ள, என்ன வேணும்? ஒன்றுமே நடக்காததைப்போல வினவுகிறார்.. கண்ணால் கண்டபோதே துணிச்சல் இழக்காதவர், அனுமானித்து நிற்கும்போது மட்டும் அசைந்துவிடுவாரா என்ன!...
“ஒண்ணுமில்ல மாமா... மிக்ஸி ரிப்பேர் பண்றிங்கன்னு அக்கா சொன்னுச்சு, அதான் பார்க்கலாம்னு வந்தேன்! சிரித்தான்...
“அதல்லாம் சரி பண்ணியாச்சு, நீ ரொம்ப லேட்டு சொல்லிவிட்டு, வாலிபனுக்கு வழிவிட்டுவிட்டு அவன் பைக்குள் பழையபடி பணத்தை திணித்து அனுப்பினார்..
“எப்பப்பார்த்தாலும் எதாச்சும் ரிப்பேர் ஆகிட்டே இருக்கு, என்னன்னுதான் தெரியல.. சந்தியாவும் உள்ளே வந்துவிட, தனக்குள் சிரித்துக்கொண்டான் வாசு...
“ஒண்ணுமில்லக்கா, கரண்ட் எதாச்சும் வோல்டேஜ் டிராப் ஆகிருக்கும்.. அதுக்குன்னு உள்ள ஆளை கூட்டிட்டு வந்து பார்த்தா சரியாகிடும், ஆமாதானே மாமா? கண்ணடித்து சிரித்தான்...
“நீ போய் மிக்ஸில சட்னி அரைச்சிடு சந்தியா... நேரமாகுது மனைவியை அனுப்பிவிட்டு, வாசுவின் பக்கம் திரும்பி, “ஏலே, என்ன உனக்கு பிரச்சின?... அதான் தெரிஞ்சிடுச்சுல அப்புறம் என்ன அதுலயே கொடஞ்சிகிட்டு கெடக்குற?... நீ பக்கத்து வீட்டு பொண்ணு சைட்டு அடிக்குறியே, அதுலா எதாச்சும் குறுக்க வந்தா சொல்லு நிதானம் இழந்தவராக சொல்லிமுடித்தார்...
“மாமா... எப்டி மாமா அதல்லாம் தெரியும் உங்களுக்கு? அதிர்ச்சியானான்...
“ஆமா அதான் பொறை போட்ட நாயாட்டம், அது எங்க போனாலும் பின்னாலேயே சுத்துறியே... அவ அப்பா யாருன்னு தெரியும்ல, மெக்கானிக்டா... உன்ன பிரிச்சு மேஞ்சிடுவார் பார்த்துக்க! மிரட்டும் தொனியில் சொல்லி முடித்தார் மாணிக்கம்..
சட்டென அவர் கையை பிடித்துக்கொண்ட வாசு, “அப்டியல்லாம் சொல்லிடாதிங்க மாமா... எத்தனையோ டூல்ஸை பார்த்த மனுஷன் நீங்க, எனக்கு ஒண்ணுன்னா வந்து நிக்க மாட்டிங்களா? பணிந்துவிட்டான்...
“ஹ்ம்ம்... பார்ப்போம், ஒன்னும் பெரிய விஷயமில்ல... அவ அண்ணன் எனக்கு நல்ல பழக்கம்தான், சமாளிப்போம் முதுகில் தட்டிக்கொடுத்தார்...
“மாமா, உங்களுக்கு பழக்கமா?... அப்போ என் மச்சானும் உங்க வலையில சிக்கின மீன்தானா?
“தப்பு தப்பு.. என் லிமிட்ல இருக்குற பையனோட தங்கச்சியதான் நீ லவ் பண்ற... திருத்தினார்..
“துவையல் அரச்சிட்டேன் மாமா, சாப்பிடுறீங்களா? சந்தியாவின் குரல் கேட்க சாப்பிடுவதற்கு ஆயத்தமானார் மாணிக்கம்..
“நீ சாயந்திரம் வா வாசு, பேசிக்கலாம் அனுப்பிவைத்தார்.. உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்து ஓடினான்..
மகியுடன் நான்கைந்து பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்... வழக்கம்போல அரசியல் பேச்சுதான்..
“கொளத்தூர் தொகுதியை பொருத்தவரைக்கும் கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க.. தோராயமா ஐம்பதாயிரம் குடும்பங்கள்னு சொல்லலாம்.. நமக்கு இருக்குற நாற்பது நாட்கள் காலக்கெடுக்குள்ள அத்தனை வீடுகளையும் கவர் பண்ணனும்னா, ஒருநாளைக்கு ஆயிரம் வீடுகளுக்கு மேல பிரச்சாரம் பண்ணனும்.. ஒரே க்ரூப்பா நாம போறப்போ, அந்த டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ணமுடியுமான்னு தெரியல... அதனால நம்மள்ல இருக்குற இருபது பேரும், நாலு பிரிவுகளா பிரிஞ்சு ஏரியாக்களை கவர் பண்ணனும்...  பகுதிகளை ஆராயந்துகொண்டிருந்தான் மகிழன்...
“கேன்வாஸ் பண்ணிடலாம் மகி, அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே? பிரதீப் இயல்பாக சொன்னான்...
“இல்ல பிரதீப்.. மற்ற கட்சிகள் பிரச்சாரம் பண்றதுக்கும், நாம பண்றதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.. பல வீடுகள்ல நம்மளால வாசலை தாண்டி உள்ள போகமுடிஞ்சாவே அது சாதனைதான்... அவங்க ஹோமோபோபிக் மனநிலையை மாத்துறது அவ்வளவு சுலபமில்ல... அதனால, ஒவ்வொரு வீட்டுக்கும் கேன்வாஸ் பண்ண கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்... அதனால பொறுமையா நம்ம வேலைய செய்யனும்...
“எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணமுடியுமா?
“எல்லார்கிட்டயும் எடுத்து சொல்வோம், கன்வின்ஸ் ஆகுறவங்க ஆகட்டும்... சோசியல் மீடியால ப்ரமோட் பண்ற வேலைகளை திலீப் பார்த்துப்பார்... தேவைப்பட்டால் ஸ்டேஜ் ப்ளே எதாச்சும் பண்ணி விழிப்புணர்வு கொடுக்க வேண்டியிருக்கும்...
“செஞ்சிடலாம் மகி, அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல
ஓரிரு நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, அமைப்பினருக்கு மெழுகுவத்தி சின்னமும் ஒதுக்கப்பட்டது... வாக்காளர்களை எளிதில் சென்றடையும் சின்னம்தான் என்பதால், மகியும் உற்சாகமானான்...
ஒரு வீட்டின் கேட்டை திறந்து, வாசலின் அழைப்புமணியை அழுத்திவிட்டு கதவு திறக்கும்வரையில் காத்திருந்தார்கள்.. “அந்த கோரிக்கைகள் ஸ்லிப்பையும், சின்னத்தோட கார்டையும் ஸ்டாப்ளர் போடுங்க பிரதீப்.. கதவு திறக்கப்பட்டது...
“யார் நீங்க?... மார்க்கெட்டிங் பண்ண வந்திருக்கிங்களா? பேன்ட் ஷர்ட்டுடன் தேர்தல் பிரச்சாரமல்லாம் நம்மூரில் அத்திபூத்தார் போல அதிசயங்ககளாச்சே!..
“இல்ல சார்... எலெக்சன்ல நம்ம தொகுதில கண்டஸ்ட் பண்றேன், வாக்குக்கேட்டு வந்திருக்கேன்! கையில் வைத்திருந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தான் மகி...
“பரவால்லையே.. இப்டி யூத்ஸ் பாலிட்டிக்ஸ்க்கு வர்றது நல்ல டெவெலப்மென்ட் சொல்லிக்கொண்டே அந்த காகிதத்தை பிரித்துப்பார்த்தார், சட்டென முகம் இருண்டது...  மறுநொடியே அவசரமாக அதனை தூரவீசினார்...
“முதல்ல வெளில போங்க... கேட்டை திறந்து எப்டி உள்ளவரலாம்? கழுத்து நரம்பு புடைக்க சப்தமிட்டார்...
“சார், ஒருநிமிஷம் நாங்க சொல்றத கேளுங்க... வோட் கூட போடவேணாம், அட்லீஸ்ட் ஒரு ரெண்டு நிமிஷம் சொல்றதை கவனியுங்க!
“வெளில போறீங்களா இல்ல போலிஸ்க்கு கால் பண்ணவா?.. பண்ற அசிங்கத்தை ரெண்டு நிமிஷத்துல நியாயப்படுத்த போறானுகளாம்! வார்த்தைகளில் கனல் கக்கினார்... அதற்கு மேலும் வாதம் செய்தில் பலனில்லை.. ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, இந்த நபர்களையல்லாம் மாற்றிடமுடியாது..
“அனேகமா இவனும் கேவாதான் இருப்பான் பாரேன்! சிரித்தான் பிரதீப்...
அந்த வீட்டைவிட்டு இவர்கள் வெளியேறிய மறுநிமிடமே, அவர்கள் நின்ற இடங்கள் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது... ஒரு துணியால் காலிங் பெல்லை தேய்த்து துடைத்தார்... பேசிக்கொண்டிருக்கும்போது மகியின் விரல்கள் பட்ட சுவர்கூட அந்த சுத்தப்படுத்ததலில் தப்பவில்லை...
மகியின் சிரிப்பில் விரக்திதான் அதிகம் வெளிப்பட்டது..

நாளடைவில் அந்த புறக்கணிப்புகள் அவர்களுக்கு பழக்கப்பட்டுவிட்டது.. ஒருகட்டத்தில் தங்களை நோக்கி வரும் வெறுப்புகளையும், முகம் சுளிக்காமல் புன்னகையுடன் எதிர்கொள்ள கற்றுக்கொண்டார்கள்...
ஒருசில இடங்களில், “வாங்கப்பா... உட்காருங்க, காபி சாப்ட்டுதான் போகணும்!.. வாஞ்சையான வரவேற்புகளும் நிகழத்தான் செய்தது... பெரும்பாலான இடங்களில் மகியின் ‘அடி வாங்கிய பரிச்சயம் ஒரு விசிட்டிங் கார்டாக முன்னின்றது.. “இப்போ கை பரவால்லையா தம்பி? அக்கறையான வார்த்தைகள் அதிசயிக்க வைத்தன..
சில ஆச்சர்ய அலைபேசி அழைப்புகளும் அவ்வப்போது வந்தவண்ணம்தான் இருந்தன.. “நீங்க வோட் கேட்டு எங்க வீட்டுக்கு வந்திங்க, எங்க அப்பா உங்கள திட்டிட்டார்.. தப்பா நினைச்சுக்காதிங்க... நான் கே இல்லைன்னாலும், என் வோட் உங்களுக்குத்தான்.. என்னோட சில ப்ரெண்ட்ஸ் உங்கள மாதிரித்தான், அட்லீஸ்ட் அவங்க சந்தோஷமா இருக்குறதுக்காகவாச்சும் நீங்க வின் பண்ணனும்!
“ஹலோ தம்பி... நான் ரிட்டையர்ட் கவர்மென்ட் ஆபிசர்... நானும் கே தான், அதை சொல்லிக்காமலே காலத்தை கடத்துறது நரக வேதனை... அந்த கஷ்டம் அடுத்த ஜெனரேசன் படக்கூடாதுன்னா, உங்க முயற்சி சக்சஸ் ஆகணும்... என்னால முடிஞ்ச உதவியை நான் பண்றேன்பா
மகிழ்ச்சிதான்... நிஜத்தில் இப்படிப்பட்ட வெளிவராத நபர்களின் வாக்குகளை நம்பித்தான் இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள்.. பாலீர்ப்பை பற்றி எதையும் வெளிப்படுத்திக்கொள்ளவே வேண்டாம், பூத்தில் வந்து ‘மெழுகுவத்தி பொத்தானை அழுத்தினாலே போதும்!..
தேர்தல் இன்னும் மூன்று நாட்களில் நடக்க இருக்கிறது, நாளையோடு பிரச்சாரமும் ஓய்கிறது..  இறுதிக்கட்ட பிரச்சார யுக்திகளில் அரசியல் கட்சிகள் தீயாக வேலை செய்தார்கள்..
“கவலைப்படாதிங்க மகிழன், நீங்க வின் பண்ணிடுவீங்க! ஐடி ஊழியர் ஏதோ ஒரு ஊகத்தில் நம்பிக்கையாக பேசுகிறார்..
“ரொம்ப தாங்க்ஸ் ப்ரோ.. மறக்காம மெழுகுவத்தி சின்னத்துல வோட் போட்டுடுங்க! சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் அவசரமாக பிரதீப் மகியை அழைத்தான்..
“என்ன பிரதீப்?... பேசிட்டிருக்கப்போ அப்டி என்ன அவசரம்?
“ராயபுரத்துல கேன்வாஸ் பண்ணிடிருந்த நம்ம அமுதாவ யாரோ அடிச்சு, இப்போ ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்.. தலைல நல்ல அடியாம்.. கௌதம் இப்போதான் கால் பண்ணி சொன்னார்
பதறிப்போய் மருத்துவமனை ஓடினான் மகி... ஏற்கனவே மருத்துவமனை வாயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. வழக்கம்போல மீடியாவும் மோப்பம் பிடித்து வந்துவிட்டார்கள்.. அவர்களுக்குள் புகுந்து முன்னேறினான் மகி..
ஐசியூ வாசலில் கௌதம் உட்பட சில நிர்வாகிகள் நின்றுகொண்டிருந்தார்கள்...
“என்னாச்சு கௌதம்?
“யாரோ கட்சிக்காரங்க பணம் கொடுக்குறதா கேள்விப்பட்டு போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டு அங்க போயிருக்கா, அப்போ நாலைஞ்சு ரௌடிகள் இரும்பு ராடால அடிச்சு போட்டுட்டு ஓடிட்டானுக.. உடம்பல்லாம் ரத்தம், தலைலையும் நல்ல அடி போல! கண்கள் கலங்கியது..
ஒரு பெண்மணி ஓடிவந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறாள்... “அமுதாவோட அம்மா மெள்ள காதில் கிசுகிசுத்தார் கௌதம்..
“அடப்பாவிகளா... நல்லா இருப்பிங்களா நீங்க?.. மான்குட்டி மாதிரி திரிஞ்ச புள்ளைய என்னென்னமோ சொல்லி, தேர்தல்ல நிக்கவச்சு, இப்புடி ஆக்கிட்டிங்களே! கதறுகிறாள்...
அதற்குமேலும் அங்கு நிற்க மனம் ஒப்பவில்லை.. மருத்துவமனை வாயிலை நோக்கி நகர்ந்தபோது மீடியாக்கள் கௌதமை சூழ்ந்தன..
“என்ன சார் ஆச்சு?.. இதப்பத்தி என்ன நெனைக்குறீங்க?... யார் பண்ணிருப்பாங்கன்னு சந்தேகம் இருக்கா? வில்லைப்போல கேள்விகள் அவரை துளைத்து எடுத்தன...
“நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்.. நான் எதுவும் பேச விரும்பல.. எங்க மத்த கேண்டிடேட்ஸ் ஆச்சும் உயிரோட இருக்கணும்னு நெனைக்குறேன், தயவுசெஞ்சு வேற வேலைகளை பாருங்க! கையெடுத்து கும்பிட்டபோது, தன்னை மீறி அழுதுவிட்டார் கௌதம்... தன் தோளில் சாய்த்து தேற்றியபடியே  அவர்களை கடந்து அழைத்து சென்றான் மகி...
அலுவலக அறையில் இருக்கையில் அமர்ந்து விட்டத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் கௌதம்.. கண்கள் கலங்கி, நீர்த்திவலைகள் கசிந்துகொண்டிருந்தன... தண்ணீர் பாட்டிலை திறந்து, அவர் கைகளில் திணித்தான் மகி... “ரிலாக்ஸ் கௌதம், அமுதாவுக்கு ஒன்னும் ஆகிடாது முதுகை தட்டி ஆறுதலாய் பேசினான்...
“அவசரப்பட்டுட்டோமா மகி? வார்த்தைகள் உடைந்து விழுந்தன...
“வேணாம் கௌதம்.. இனி அதைப்பற்றி யோசிச்சு பயனில்லை... உங்க தைரியத்துலதான் இவ்ளோதூரம் எங்களால வரமுடிஞ்சிது, நீங்களே நம்பிக்கை இழந்துடக்கூடாது!
“முடியலப்பா... அந்த பொண்ணு என்னங்க பாவம் பண்ணுச்சு?... அவ அம்மா பேசினத பார்த்திங்களா?... அவங்க மட்டுமில்ல, நம்ம அமைப்புல இருக்கவங்களே ‘அவங்களுக்கு அரசியல்லாம் தேவையா?ன்னுதான் பேசுறாங்க... மனசு விட்டுப்போச்சு மகிழன் விரக்தியில் உழன்றுவிட்டார்...
மறுநாள் காலை நாளிதழ்களில், இரண்டாம் பக்கத்திலேயே “எல்ஜிபிடி கட்சியினர் மீது தொடரும் தாக்குதல்... உயிருக்கு போராடிய நிலையில் வேட்பாளர்! தலைப்பிட்டு, கௌதம் கண்ணீரோடு கைகூப்பி அழுதவாறு நிற்கும் புகைப்படம்... அதுவரை எட்டாம் பக்கத்தில், பெட்டித்தகவலாக வந்த செய்தி அதிரடி முன்னேற்றம் கண்டது..
“அவங்க நல்லாவே டிராமா பண்றாங்க! தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒரே குரலில் சொன்னார்கள்...
“அதை நாளைக்கு நடக்கப்போற தேர்தல்ல மக்கள் முடிவுபண்ணட்டும் சூடுபிடித்தன விவாதங்கள்...
‘மாணிக்கம் ஹார்ட்வேர்ஸ் கல்லாப்பெட்டியில் அந்த மதிய வெயிலிலும் கூட பவுடரும், திருநீறும் கலையாமல் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார் மாணிக்கம்... வியர்க்க விறுவிறுக்க வந்த வாசு, அவர் எதிரே கிடந்த இருக்கையில் அமர்ந்து தண்ணீரை குடித்துக்கொண்டான்...
“என்னா வெயிலு... எப்பா மூச்சுவிடக்கூட எரிச்சலா இருக்கு மாமா கர்சீப்பை முகத்தில் ஒற்றிக்கொண்டான்..
“அப்போ மூச்சு விடாமத்தான் இரேன், யாருக்கென்ன நட்டம்?
“நீ மட்டும் எப்டி மாமா மேக்கப் கூட கலையாம உக்காந்திருக்க?
“ஏலே ரிசப்சன்ல மங்களகரமா உக்காந்திருந்தாத்தான் வியாபாரம் பண்ண வர்றவன் கண்ணுக்கு இதமா இருக்கும்
“நீ எந்த வியாபாரத்த சொல்றேன்னு புரியலயே..
முறைத்தார் மாணிக்கம், அதனை பொருட்படுத்தாது சாலையையே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான் வாசு.. அடிக்கடி கடிகாரத்தை வேறு பார்த்துக்கொள்கிறான்...
“எலி ஏண்டா அம்மணமா போகுதுன்னு இப்பதான் புரியுது சிரித்தார் மாணிக்கம்...
“மாடில எதாச்சும் டிஷ் திருப்புற வேலை இருந்திருக்கும் மாமா, கண்டுக்காத
“வரவர வாய்க்கொழுப்பு அதிகமா போய்டுச்சு உனக்கு... என்னதான் ரோட்டை வெறிச்சு பார்த்தாலும், நீ எதிர்பார்க்குற ஆள் வரப்போறதில்ல
“என்ன மாமா சொல்ற? அதிர்ச்சியானான்...
“அந்த புள்ள மதியமே காலேஜ் லீவுன்னு வீட்டுக்கு போய்டுச்சு அலட்சியமாக புன்னகைத்தார்...
“அடக்கடவுளே! தலையில் கைவைத்துக்கொண்டான்...
“லவ் பண்றவன் முதல்ல டைமிங் மிஸ் பண்ணாம இருக்க கத்துக்கோ... ஆமா, எப்போதாண்டா நீ வேலைக்கு போகப்போற?
“போகணும் மாமா... அப்ளை பண்ணாத கம்பெனி இல்ல, ரெஸ்யூம் அனுப்பாத ஆள் இல்ல.. வேலைன்னு ஒண்ணுதான் செட்டாக மாட்டுது!.. கொஞ்ச நாள் பார்த்துட்டு உங்கள மாதிரி பிஸ்னஸ் பண்ணலாமான்னு பார்க்கணும்.. தன்னிலையையும் நொந்துகொண்டான்..
“சரி சரி கெடைக்கும் பொறுமையா இரு... என் மாப்ள பிரபாகிட்டையும் உன் ரெஸ்யூம் அனுப்புறேன்... வெளிநாட்டுல வேலை எதுனா இருந்தா சொல்ல சொல்லலாம்.. சமாதானப்படுத்திவிட்டு, முறுக்குக்கம்பியின் விலை பற்றி விசாரித்துக்கொண்டிருந்த இளைஞனின் பக்கம் திரும்பினார்.. ஆள் வாட்டசாட்டமாக இருக்கிறான், இருபதுகளின் இறுதியில் வயதிருக்கலாம்..
“கம்பி பத்தியல்லாம் எனக்கு தெரியலங்க.. கான்க்ரீட் போடணும்னு சொன்னாங்க, சின்ன தளம்தான்.. அப்பாவியாக வினவிக்கொண்டிருக்கிறான்..
“எத்தனையோ கம்பி இருக்கு சார்.. துறு பிடிக்காத கம்பி, தம் பிடிக்குற கம்பின்னு விளம்பரம் பார்த்ததில்லையா? சிரித்தார் மாணிக்கம்..
தலையை சொறிந்துகொண்ட இளைஞன், “நமீதா விளம்பரத்துல வர்ற கம்பியே கொடுங்க! தீர்மானத்துக்கு வந்துவிட்டான்... மனதிற்குள் சிரித்துக்கொண்டார் மாணிக்கம், வாழ்நாளில் இப்படி கம்பியின் வகையை தேர்ந்தெடுத்த நபரை இப்போதுதான் முதன்முதலில் சந்திப்பதால் அந்த சிரிப்பு..
“சரி வாப்பா, உனக்கு எந்த கம்பிய எப்புடி தேர்ந்தெடுக்கலாம்னு சொல்லித்தரேன்! தோளில் கைபோட்டுக்கொண்டு ஸ்டோர் ரூமிற்குள் அழைத்து சென்றார் மாணிக்கம்.. அவற்றை திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்த வாசுவின் இதயம்தான் ‘லப் டப் எகிறியது...
அரை மணிநேரம் கழித்து வெளியே வந்தார்கள் இருவரும்.. வெள்ளை சட்டையில் ஆங்காங்கே வியர்வை திட்டுகள், உடைகள் சுருக்கமாகி, அதை சரிசெய்துகொண்டே வெளியே வந்தார் மாணிக்கம்.. அந்த இளைஞனும் முகத்தை கர்சீப்பால் படிய துடைத்துக்கொண்டான்...
அடப்பாவி மனுஷா!... டோல் ப்ரீ நம்பர் போல, இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்பாட்டிலேயே இருக்கிறார்... தண்ணீரை அவசரமாக வாய்க்குள் அடைத்துக்கொண்டான்...
“ரொம்ப நன்றி சார்... உங்க கடை கம்பி மாதிரி ஸ்ட்ராங் வேற எதுவுமே இல்ல ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் வேறு கொடுத்துவிட்டு செல்கிறான்...
சிரித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார் மாணிக்கம்..
“அடப்பாவி மாமா.. மனுஷனா நீ?... எந்த நேரத்துல எவன் கெடச்சாலும் விடமாட்டியா? சீறினான்..
“டேய் லூசு.. இப்ப என்ன நடந்துச்சுன்னு இப்புடி பதறுற?
“இதுக்கு மேல என்ன நடக்கணும்?.. அதான் பார்த்தேனே, உன் சட்டை கசங்கிருக்கு, வியர்வை ஊத்துது, அங்கங்க அழுக்கு... ஊகங்களை பட்டியலிட்டான்...
“மோட்டார் ரூம்குள்ள போனாலே ரேப் சீன்தான்னு நம்ம சினிமாக்காரனுக உன்ன மாதிரி ஆளுங்க மனசுல ஆழமா பதியவச்சுட்டானுக.. இதுல சட்டை சுருங்கிருக்குதாம், வியர்வை ஊத்துதாம்... ஆளுகளையும் மூஞ்சியையும் பாரு!
“அப்போ உள்ள அப்டி எதுவும் நடக்கலையா? இந்த கேள்வி கண்டிப்பாக மாணிக்கத்தை வெறுப்பேற்றும் என்று தெரிந்தேதான் கேட்கிறான்...
“அட லூசே... அவன் ஸ்ட்ரைட் பையன்டா.. அவனும் என்ன மாதிரி இருந்திருந்தா அவன் பார்வைலையே புரிஞ்சிருக்கும்.. அப்டி இல்லாதப்ப அவனை சீண்டுறது மகா கேவலமான விஷயமில்லையா? கோபப்படாமல் பொறுமையாக எடுத்துச்சொன்னார்...
ஓரிரு நிமிடங்கள் வாசு ஆச்சர்யத்தில் உறைந்திருந்தான், மாணிக்கம் மாமாவிற்குள் இப்படியொரு மாணிக்கமான மனசா?.. பெரிதாக படிக்கவில்லை என்றாலும்கூட, ஈர்ப்புகளை பற்றியல்லாம் புரிந்துவைத்திருக்கிறார்.. அனுபவத்தைவிட பெரிய படிப்பு இருக்கிறதா என்ன?...
“உங்களுக்கல்லாம் கே பசங்கன்னாவே எல்லோர் கூடவும் படுக்குறவங்கன்னு ஒரு மனநிலை உருவாகிடுச்சு, அப்டி கண்ணோட்டத்துலதான் என்னையும் பார்க்குற!மாமாவே தொடர்ந்தார்..
“அப்போ அன்னிக்கு மாடில, அப்புறம் கிச்சன்ல நடந்ததும் ஒன்னுமில்லைன்னு சொல்றியா?
“இல்ல.. அதல்லாம் உண்மைதான்... அவங்களுக்கு விருப்பம் இருக்கு, எனக்கும் பிடிச்சிருக்கு... இதுல என்ன தப்பு?... எனக்கு பிடிச்சவன்கூட வாழத்தான் இந்த சமூகம் விடமாட்டுது, குறஞ்சது எனக்கு பிடிச்சா மாதிரி வாழ்றதுக்காச்சும் அப்பப்போ அப்புடி போறேன்!.. ஆனா எந்த காலத்துலயும் ஸ்ட்ரைட் பசங்கள தப்பான நோக்கத்துல தொடக்கூட மாட்டேன்!
வாசு அமைதியானான்.. மேற்கொண்டு எதுவும் அனாவசிய கேள்விகளுக்கு மாணிக்கம் இடம்கொடுக்கவிடாமல், பேசி முடித்துவிட்டார்..
                               *********



No comments:

Post a Comment