Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 27 May 2016

தொடுவானம் - தொடர்கதை (பாகம் 3)

“மகி நம்ம தொகுதில 55% வோட்ஸ் பதிவாகிருக்கு.. ஒருசில பூதஸ்ல ஆறு மணிக்கு மேல கள்ள ஓட்டு போட்டதா சொல்றாங்க... வாக்களிக்கும் எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அரசு வாகனங்களில் ஏற்றும்வரை மகி அந்த இடத்தை விட்டே நகரவில்லை..
“பெரிய அளவுல ஏதும் தப்பு நடக்கல பிரதீப், சோ மைன்யூட் எரர்ஸ்ஐ கணக்குல வச்சுக்க வேணாம்! சிரித்தான்..
“ஜெய்ச்சிடுவோம்னு நம்பிக்கை இருக்கா மகி?
“நம்பிக்கை இருக்கு... வின் பண்ணுவோம்னு இல்ல, கணிசமான வோட்ஸ் வாங்குவோம்னு
“ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் கதை மாதிரி இருக்கே!
“ஹ ஹா... ரிசல்ட் வந்ததுக்கப்புறம் நான் சொல்றதோட அர்த்தம் புரியும் பிரதீப்... நீ போய் சாப்பிடு முதல்ல!
அன்றைய இரவில் மகி, அதிக குழப்பமில்லாமல் உறங்கினான்.. குழப்பங்கள் எல்லாம் சீல் வைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் கல்லூரியில் அல்லவா அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது!.. திலீப்பின் மனதும் அன்றுதான் முழுமையாக சுமை குறைந்திருப்பதை போல உணர்ந்தான்..
காலையில் விடிந்தும் வெகுநேரம் உறங்கிக்கொண்டிருந்தான் மகி.. காலையிலேயே திலீப்பின் அலைபேசி அலறியது, குமார்தான் கதறிக்கொண்டிருக்கிறான்... அப்படி என்னதான் அவசரமோ!.. சத்தத்தை ம்யூட் செய்துவிட்டு, படுக்கை அதிராத வண்ணம் மெள்ள நகர்ந்து ஹாலுக்கு வந்து அழைப்பை ஏற்றான்..
“என்ன குமார் தலைபோற விஷயம்? நேரம்கூட அதிகாலை எட்டு மணி, சலித்துக்கொண்டான் திலீப்...
“தலைபோற விஷயம் இல்ல, நமக்கல்லாம் தலை தப்புற விஷயம்! சொல்லும்போதே உற்சாகம் ததும்பி வழிகிறது...
“என்னப்பா புதிர் போடுற?
“நம்ம படத்து மேல போட்ட கேஸ் இன்னிக்கு வாபஸ் ஆகப்போகுது...  ப்ரட்யூசர் தரப்புலேந்து கொடுக்கவேண்டியதை கொடுத்து செட்டில் பண்ணிட்டாங்க... கூடிய சீக்கிரம் ‘கனவு நாயகன் திலீப்னு அடைமொழியை ஏத்துக்க ரெடியா இரு
“ஓ..... நிஜமாவா குமார்?... ஐயோ, நம்பவே முடியல... ஆனந்தத்தாண்டவம் ஆடினான் திலீப்.. சிரிப்பும் அழுகையுமாக, மேற்கொண்டு பேச விடவில்லை.. யாரிடம் சொல்வது?... ஐயோ அந்த வாசு பயலையும் காணுமே!... குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்துகொண்டிருக்கிறான்...
“ஓகே திலீப்.. சந்தோஷத்த என்ஜாய் பண்ணுப்பா, நான் உதிஷாக்கு கால் பண்ணி விஷயத்த சொல்லணும் அழைப்பை துண்டித்தான்...
இதை மகியிடம் சொன்னால் உற்சாகத்தில் துள்ளிக்குதிப்பான்... இருக்கின்ற மகிழ்ச்சியில் அவனை அப்படியே கட்டி அணைத்து, கன்னத்தை கடிக்க வேண்டும் போல தோன்றியது... ஆனால், ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறானே...
எழுப்ப மனம் வரவில்லை.. இப்படி நிம்மதியாக அவன் உறங்கி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது... பலநாட்கள் உறக்கம் கூட மறந்து போகும் அளவிற்கு எதைப்பற்றியாவது யோசித்தே இரவுகளை கழித்தான்.. மகியின் அருகாமையில் அமர்ந்துகொண்டு, அவன் விழிக்கும்வரையில் காத்திருப்பதென முடிவு செய்தான்...
தலைமாட்டில் அமர்ந்துகொண்டு மகியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அழகாய் உறங்கிக்கொண்டிருக்கிறான்.. அதன் கீழே தையல் போட்ட தழும்பை பார்த்தபோது அவனுக்குள் சிரிப்பு வந்தது... அப்பப்பா இந்த தழும்பிற்குத்தான் எத்தனை ஆர்ப்பாட்டம், அழுகை!... அவ்வளவு அறிவார்ந்து பேசுபவனுக்கு, ஏனோ அழகென்பது அந்த அரை இன்ச் தழும்பு சம்மந்தப்பட்டதில்லை என்பது புரியவில்லை..
புரண்டு படுக்கும்போது மகியின் கை திலீப் மீது பட்டுவிட, சட்டென விழித்துவிட்டான் மகி.. பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு தன்னையே திலீப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி, முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது... அதுவும் கவலைகள் காணாமல் போய், மகிழ்ச்சியில் பொலிவான புன்னகை நிரம்பிய முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்..
“என்ன மாமா முகத்துல இவ்ளோ சந்தோஷம்? தூக்கம் பறந்துபோய்விட்டது..
“முகத்துல மட்டுமில்ல, மனசு முழுக்க சந்தோஷம்... அப்டியே உன்ன கட்டிப்பிடிச்சு, கடிச்சு துப்பலாம்னு தோனுற அளவுக்கு! இறுக்க அணைத்துக்கொண்டான்..
மகிக்கு மூச்சு திணறியது, ‘என்னவாக இருக்கும்?என்கிற குழப்பம் மறுபக்கம் சுழன்றடித்தது...
“என்னன்னு சொல்லிட்டு கடிச்சு தின்னுக்கோ மாமா
“நம்ம படத்து மேல போட்ட கேஸை வித்ட்ரா பண்ணப்போறாங்களாம்... அப்டின்னா இன்னும் கொஞ்சநாள்ல படம் ரிலீஸ் ஆகிடும் இன்னும் அணைப்பை விடுவிக்கவில்லை... மகியால் நம்பவே முடியவில்லை, மனதிற்குள் குருவிகள் ரீங்காரமிடத்தொடங்கின...
சில நிமிட தழுவலுக்கு பிறகு, இருவருமே மெள்ள சகஜ நிலைக்கு திரும்பினர்.. திலீப்பிற்கு விடாமல் அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன... வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்த உதிஷாவும் கூட அந்த வரிசையில் தப்பவில்லை...
“ஹலோ திலீப், இப்போ ஹாப்பியா இர்க்கா?... நெக்ஸ்ட் வீக் ப்ரிவியூ ஷோ இர்க்குன்னு டிரெக்டர் சொல்லுச்சு... அப்றம் பிஸி ஆய்டும் நீ அலைபேசி அதிரும் அளவிற்கு சிரித்த அவளுக்கு நன்றியை கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்..
“இப்டி ரெண்டு பேரும் பிஸி ஆகுற டைம்ல அம்மா வேற ஊருக்கு வரச்சொல்லி இம்சை பண்றாங்க மாமா... ரெண்டு நாளா ஒரே தொல்லை அலைபேசியில் சிதறிக்கிடந்த ‘தவறிய அழைப்புகளை அட்டவணை படுத்திக்கொண்டிருந்தான் மகி...
“எதுக்குடா?.. ஏதும் முக்கியமான விஷயமா?
“அவங்களுக்கு முக்கியமான விஷயம்தான்... வருஷா வருஷம் கொலசாமிக்கு பூசைபோடுறது வழக்கம், என் பிரச்சினையால இந்த வருஷம் அது போடாம விட்டாச்சு.. அந்த குறைதான் என்னை ஐசியூ வரைக்கும் கொண்டுபோனதா அம்மாவுக்கு நெனப்பு, அதான் வரச்சொல்லிட்டே இருக்காங்கசிரித்தான்...
“அவங்க அப்டி நினைக்குறதுல ஒன்னும் தப்பில்லதானே?.. ஒரு ரெண்டு நாள் அங்க போயிட்டு வர்றதில என்ன லாஸ் ஆகிடப்போகுதாம்?
“என்ன மாமா பேசுற?.. நாளைக்கு வோட்ஸ் கவுன்ட் பண்ணப்போறாங்க, நான் அவசியம் இருந்தே ஆகணும்.. உனக்கு இன்னும் ஒருவாரத்தில ப்ரிவியூ ஷோ இருக்கு.. இவ்ளோ டைட் ஷெட்யூல்ல்ல எப்டி?
“அதல்லாம் போகணும்னு நெனச்சா போகலாம்... நாளைக்கு உனக்கு கவுண்ட்டிங் மதியத்துக்குள்ள முடியப்போகுது.. நாளை நைட் நாம தஞ்சாவூர் போறோம், அங்க ரெண்டு நாள் ஸ்டே பண்ணிட்டு மண்டே ரிட்டர்ன் ஆகுறோம்.. இதை உடனே அம்மாகிட்ட சொல்லி ஆகவேண்டிய வேலைகள பார்க்க சொல்லு!அலைபேசியை எடுத்து ‘அம்மா என்றிருந்த எண்ணை அழைத்து மகியின் கையினில் திணித்தான்...
ஏழு மணிக்கல்லாம் வாக்கு எண்ணும் மையத்துக்கு படைசூழ சென்றுவிட்டான் மகி..
“எட்டு மணிக்கு தபால் ஓட்டு எண்ணுவாங்க மகி, மெஷின் வோட்ஸ் கவுன்ட் ஆரமிக்க ஒன்பதாகிடும்... அதுக்குள்ள எதாச்சும் சாப்பிடுறியா? பரபரப்போடு இயங்கினாலும், அக்கறையாய் வினவினான் பிரதீப்... பசியில்லை, என்றாலும் கூட தான் சாப்பிடவில்லை என்றால் உடன் இருப்பவர்களும் சாப்பிட தயங்குவார்கள்... அருகிலிருந்த உணவகத்தில் பெயருக்கு இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டுக்கொண்டான்...
ஆளுங்கட்சி தொண்டர்கள் ஆயிரம் வாலா வெடிகள் நிரம்பிய பெட்டிகளை வாகனங்களிலிருந்து இறக்கிக்கொண்டிருகிரார்கள்...
“அடையார் ஆனந்த பவன்ல லட்டுதான வாங்கிட்டு வரசொன்னேன், எதுக்கு ஜாங்கிரி வாங்கிட்டு வந்த? வெற்றிபெற்றவுடன் விநியோகிக்க இருக்கும் இனிப்பு பற்றிய விவாதமல்லாம் கொஞ்சம் அதிகமாகவே பட்டது...
“ஓட்டுக்கு ஐந்நூறு கொடுத்திருக்காங்க, வெற்றிவிழாவே நடத்தினாலும் ஆச்சர்யமில்ல! சிரித்தான் பிரதீப்...
எதிர்க்கட்சியினர் இன்னும் ஒருபடி மேலே போய், பான்ட் வாத்தியங்கள் கரகாட்டம் சகிதம் கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர்... ஒருவேளை இவங்க தோற்றுவிட்டால், கொடுத்த முன்பணத்தை என்ன பண்ணுவாங்க? அவசியமில்லாத யோசனைக்குள் ஆழ்ந்திருந்தான் பிரதீப்...
“ஹலோ மகி, கவுண்டிங் ஸ்பாட்லதான இருக்கீங்க? கௌதம் ஒருமுறை உறுதிசெய்துகொண்டார்..
தபால் வாக்குகளில் ஆளுங்கட்சி முன்னிலை வகிக்க, வெற்றிக்கான டீசராக கொஞ்சம் கொண்டாட்டங்கள் களைகட்டியது...
ஒவ்வொரு சுற்றின் வாக்குகள் எண்ணப்படும்போதும் மகியுடன் இருந்த நண்பர்களின் முகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசத்தை இழந்துகொண்டிருந்தது... தோல்வி உறுதிசெய்யப்பட்ட நிலையில், பலரும் சொல்லிக்கொள்ளாமல் சோர்ந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பத்தொடங்கினர்.. மகியின் முகத்தில் அணுவளவும் சலனமில்லை.. கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல் மற்ற தொகுதிகளின் முடிவுகளை விசாரித்துக்கொண்டிருந்தான்...
அமைப்பின் அலுவலகத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு கௌதம் அமர்ந்திருக்க, மற்ற தொகுதிகளில் போட்டியிட்டவர்களும் மேற்கொண்டு செய்வதறியாது விழிபிதுங்கி நின்றனர்..
“ஹாய் கௌதம்! வழக்கமான சிரிப்புடன் மகி நுழைவதை அங்கு எவரும் ரசிக்கவில்லை... கௌதம் மட்டும் பொய்யான சிரிப்புடன் அவனை எதிர்கொண்டு, இருக்கையில் அமரச்சொன்னார்...
“எல்லாம் போச்சே மகி, இவ்ளோ கஷ்டப்பட்டும் வீணாப்போச்சு! புலம்பலை தொடங்கினார்...
“இதுல புலம்புறதுக்கு என்ன இருக்கு கௌதம்?.. தோத்திடுவோம்னு தெரிஞ்சுதான எலெக்சன்ல நின்னோம்?
“ஆனாலும் இது பயனில்லாத முயற்சியா போய்டுச்சே!
“யார் சொன்னது பயனில்லைன்னு?... பத்து தொகுதிலயும் நாம தோத்துட்டோம், டெபாசிட் கூட இழந்துட்டோம்... ஆனா இப்போ டாக் ஆப் தமிழ்நாடு யார் தெரியுமா?. நாமதான்... நாம கண்டஸ்ட் பண்ண பத்து சீட்ல, ஆறு தொகுதிகள்ல மூணாவது இடம் பிடிச்சிருக்கோம்.. அதாவது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு அடுத்த இடத்துல நாம வந்திருக்கோம்.. வின் பண்ண காண்டிடேட்க்கும், தோல்வியடைஞ்ச வேட்பாளருக்கும் இடையில இருக்குற வோட்டு வித்யாசம், அதிகபட்சம் பத்தாயிரம்... எட்டு தொகுதில நாம வாங்கின வோட்ஸ் பத்தாயிரத்துக்கும் மேல... அதுவும் குறிப்பா ராயபுரத்துல அமுதா பதினெட்டாயிரம் வோட்ஸ் வாங்கிருக்கா, நீங்க பதினைஞ்சாயிரம், நான் பன்னிரண்டாயிரம் வோட்ஸ்... ஒட்டுமொத்தமா பத்து தொகுதிலயும் நம்ம வோட் பேங்க் எவ்ளோ தெரியுமா?... ஒன்பது சதவிகிதம்... நாம பத்து தொகுதிலயும் வெற்றிபெறலதான், ஆனா வெற்றியை தீர்மானிச்சிருக்கோம்.. இது எவ்ளோ பெரிய வாக்கு வங்கின்னு இந்நேரம் புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சிருக்கும்!புள்ளிவிபரங்களை அடுக்கிமுடித்தான்... ஒருசிலர் மொபைலை எடுத்து மகி சொன்ன கணக்கை ஆராய்ந்துகொண்டிருந்தனர், பலருக்கும் முகத்தில் அப்போதுதான் பொலிவு உதித்தது...
“சரிதான் மகி.. ஆனா எவ்ளோ நாள் இப்டி அடுத்தவங்க வெற்றியை தீர்மானிச்சுட்டே இருக்க முடியும்?.. அடுத்து என்ன பண்றது?
“ஒன்னும் பண்ணவேணாம்... பிரஸ் மீட் எப்போ நடந்தாலும், அடுத்த வருஷம் நடக்க இருக்குற நாடாளுமன்ற தேர்தல்ல தமிழகத்தின் 39 தொகுதிலயும் தனித்து போட்டியிட போறதா ஒரு அறிவிப்பு விடுங்க!
“அத்தனை தொகுதிலயுமா? அதிர்ச்சியில் வாயை பிளந்தார்...
“ஹ்ம்ம்... அது சும்மா பயமுறுத்தும் அறிவிப்புதான்.. இந்த அதிர்ச்சி மத்த கட்சிகளுக்கு வந்துட்டா நாம சாதிச்சிடலாம்...
“எப்டி?
“இன்னொருமுறை தோக்குறதுக்கு அவங்க தயாரா இருக்க மாட்டாங்க.. சோ, அப்போ நாம கூட்டணி பத்தி பேச்சுவார்த்தை நடத்தலாம்..
“அவ்ளோ தூரத்துக்கு சீட்ஸ் ஷேர் பண்ணுவாங்களா?
“அட, நாலு தொகுதிகள் கேட்போம்... ரெண்டு தராங்கன்னே வச்சுக்கலாம்... அதில ஒன்னு வின் பண்ணி பார்லிமென்ட் போறது பெரிய விஷயமில்லையா?... ஆயிரம் படிகள் ஏறுவதற்கு முன்ன முதல் படியை தாண்டுற மாதிரின்னு இத நெனச்சுக்கோங்க... தமிழ்நாட்டுல தொடங்குற கணக்கு காஷ்மீர் வரைக்கும் ஒன்னொன்னா வந்துட்டா, நம்ம பலம் என்னன்னு யோசிச்சு பாருங்க...  ஐபிசி 377 நீக்குறதுக்கு தனி நபர் மசோதாவை நாமே கொண்டுவரமுடியும்ல?மகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கௌதமின் மனத்திரையில் பாராளுமன்றம் கூடி, ஒருமனதாக சட்டப்பிரிவு 377 நீக்கம் செய்யப்பட்டது.. கவலைகள் மறந்து முகத்தில் மெல்லிய புன்னகை பிறந்தது...
“கேட்க நல்லாதான் இருக்கு மகி! கையை பிடித்துக்கொண்டார்...
“நடக்கும்போது இன்னும் நல்லா இருக்கும்! கௌதமை கட்டிப்பிடித்து தேற்றினான்..
அறைக்குள் அவசரமாக நுழைந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர், “என்ன கௌதம் இப்டி ஆகிப்போச்சே? துக்கம் விசாரிக்க தொடங்கினார்...
மகியை பார்த்து சிரித்துக்கொண்ட கௌதம், புதிய நபரை எதிரே அமரவைத்து, “நாம தோத்திடல மகேஷ்... நம்ம வோட் பேங்க் எவ்ளோ தெரியுமா? இனி வரும் நபர்களுக்கு அதே பாடத்தை தொடர்ந்துவிடுவார்...
மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பி வீட்டை நோக்கி விரைந்தான் மகி... இரவில் தஞ்சை பயணம் வேறு இருக்கிறது, அதற்கு ஆயத்தமாகனும்.. திலீப் மகியின் மனதை ஓரளவு ஊகித்திருப்பான், வாசுதான் தொலைக்காட்சியில் முடிவை பார்த்தது முதலாகவே அலைபேசியில் விடாமல் அழைத்துக்கொண்டிருக்கிறான்.. பைக் சிக்னலில் நின்றபோது அழைப்பை ஏற்று காதில் வைத்தான்...
“என்ன மகி இப்டி ஆகிப்போச்சு?
“ஏன் பத்மினி ஆம்பளையா மாறிட்டாளா?
“டேய்.. எலெக்சன் முடிவைப்பத்தி சொல்றேன்.. கடுப்பானான்...
“இப்போ என்னாகிபோச்சுன்னு பதறுற?... இதல்லாம் எதிர்பார்த்த முடிவுதான், நைட் தஞ்சாவூர் கிளம்புறோம்.. நீயும் ரெடி ஆகு! சிக்னலில் பச்சை ஒளிக்க, அலைபேசியின் சிவப்பை அழுத்திவிட்டு வண்டியை செலுத்தினான்...
வீட்டு வாசலிலேயே மாணிக்கம் நின்றுகொண்டிருக்கிறார்... அடுத்த துக்க விசாரணையா?, இப்படி கேள்விகள் கேட்டே அழவைத்துவிடுவார்கள் போல!... எரிச்சலோடு பைக்கை விட்டு இறங்கி நகர்ந்தான்..
“மாப்ள, இது ஒன்னும் விஷயமே இல்ல... அடுத்தமுறை பார்த்துக்கலாம்... நைட்டு தஞ்சாவூர் போறிகளாமே, சந்தோசம்யா... அடுத்த நகர்வுகளை பற்றி யோசிக்கத்தொடங்கிவிட்டார் மாமா... தேர்தல் தோல்வியை ஒரு பொருட்டாகவே மதிக்காத பேச்சு மாணிக்கத்தின் மீதான மதிப்பை உயர்த்தியிருந்தது..
வீட்டிற்குள் நுழையும்போதே, தேர்தல் முடிவுகள் பற்றிய விவாதங்கள் விடாமல் தொலைக்காட்சியில் ஒளித்துக்கொண்டிருக்கிறது..
“இதுல பார்த்திங்கன்னா, என்னென்னமோ நாடகமாடி கட்சி ஆரமிச்ச ஆட்கள்லாம் டெபாசிட் கூட வாங்கமுடில... துண்டைக்கானும், துணியக்கானும்னு ஓடிட்டாங்க! ஆளுங்கட்சி பிரமுகர் பெரிதாக சிரித்தார்.. மகிக்கு சுருக்கென்றது, காலில் ஒரு எறும்பு கடித்துவிட்டது... அதனை மிதித்துத்தள்ளிவிட்டு, தொலைக்காட்சியை நிறுத்திவைத்தான்...
வாசு இன்னும் இறுகிய முகத்துடன் மகியையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.. கருப்பு வெள்ளை படங்களில் சிவாஜி கஷ்டப்படுவதை பார்த்து கலங்கி நிற்கும் நாயகி போல கண்கள் மெலிதாய் கலங்கியிருந்தது...
“என்னடா ஆச்சு?.. ஏன் இப்டி கப்பல் கவுந்த மாதிரி நிக்குற?
“இவ்ளோ கஷ்டப்பட்டும் போச்சே மகி! அவன் பேசுவதை இம்முறை ஏளனம் செய்ய விரும்பாதவனாக, கட்டி அணைத்து தேற்றினான்... “இது தெரிஞ்ச விஷயம்தான வாசு, நாங்க டெல்லி பார்லிமென்ட்க்குத்தான் போகணும்னு விதி இருக்குறப்போ யார் மாத்த முடியும்? சூழலை கலகலப்பாக்கினான்...
எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டதை ஒருமுறை உறுதிசெய்துகொண்டு மூவரும் அமர்ந்துகொள்ள, கார் தஞ்சையை நோக்கி பயணித்தது..
திருச்சியை தாண்டும்போது மகியின் மனதினுள் அனிச்சையாகவே ஒருவித உற்சாகம் பிறந்தது... எல்லா ஊருக்கும் மண்வாசனை இருப்பது இயல்பு, ஆனால் திருச்சிக்கு மட்டும் பிரத்யேக நீர் வாசனை உண்டு... காவிரி நீர் காற்றோடு கலந்து மகியினுள் கலந்துபோனதும் அந்த உற்சாகம் ஒட்டிக்கொண்டது, மூச்சை ஆழமாக ரசித்து சுவாசித்தான்...
வாசுதான் இன்னும் ஏதோ ஒரு குழப்பத்திலேயே அமர்ந்திருக்கிறான்.. தஞ்சையை நெருங்க நெருங்க அந்த குழப்பம், மெல்லிய பயமாக உருமாறுவதை மகி கவனிக்க தவறவில்லை..
“என்ன வாசு பேயறைஞ்ச மாதிரி இருக்க?
திடுக்கிட்டு சுதாரித்தான்.. “அப்டி எதுவும் அறை வாங்கிடக்கூடாதுன்னுதான் மகி
“என்னடா சொல்ற?... புரியுற மாதிரி பேசமாட்டியா?
“இல்ல மகி... உங்க அப்பாவபத்தி கார்த்தி நிறைய சொல்லிருக்கான்... வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு மீசையை முறுக்கி நின்னா அவ்வையார் மாதிரி இருப்பார்னு...
“அது அவ்வையார் இல்ல, அய்யனார் சிரித்துக்கொண்டே திருத்தினான் மகி...
“ஆமா அய்யனார் சிலை மாதிரி இருப்பாராமே... ஏதோ ஒரு கோபத்துல என்னை அடிச்சிட்டா என்ன பண்றது? வார்த்தைகளில் நிஜமான பயம் ஒட்டியிருந்தது...
“லூசா நீ?... கோபமா இருந்தா மகிய அடிக்கணும், இல்லன்னா சம்மந்தப்பட்ட என்னை அடிக்கணும்... சம்மந்தமே இல்லாம ஏண்டா உன்ன அடிக்கப்போறார்? திலீப் இடைநுழைந்தான்...
“லாஜிக்படி நீ சொல்றது சரிதான்.. ஆயிரம்தான் இருந்தாலும் மகி அவரோட பையன், நீ அவரோட மாப்பிள்ளை... ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரைன்னு சொல்றாப்ல, என்னைய அடிச்சிடக்கூடாதுன்னுதான் பயப்படுறேன் பூதாகரமான பயத்தை முன்வைத்தான்...
திலீப்பும் மகியும் சிரித்துக்கொண்டார்கள்...
“அடிக்கல்லாம் பயந்தா லவ் பண்ணமுடியுமா?... நண்பனோட காதலுக்காக படத்துல உசுரையே கொடுக்குறார் சசிகுமார்..
“கொடுக்கலாம்... அடுத்த சீன்க்கு ரெடி ஆகுற ஆர்டிஸ்ட் எதவேனாலும் கொடுக்கலாம்.. அடப்போடாஅலுத்துக்கொண்டான் வாசு..
“நீ செத்துட்டா உனக்கு தஞ்சாவூர்ல சிலை வைக்குறதுக்கான ஏற்பாடு பண்றேன்... அந்த சிலையை நமீதாவ வச்சு திறக்க செய்றேன்! சிரித்தான் திலீப்...
கார் தஞ்சையை தாண்டி ஒரத்தநாட்டு சாலையில் பிரிகின்ற செம்மண் சாலையில் விரைந்தது... கோடைகாலத்து நெற்பயிர்களால் நிலங்கள் பச்சை சாயம் பூசியிருந்ததை திலீப் அகல விரிந்த கண்களுடன் ரசித்தபடியே கடந்தான்..
ரசனையை தாண்டியும் அடி வயிற்றுக்குள் ஒரு கதகதப்பான உணர்வு, மெல்லிய பயத்தின் விளைவாக அரும்பியது... ஊருக்கு வெளியிலிருந்த கோவிலில், அரிவாளுடன் நிற்கும் ஒரு சிலையை பார்த்ததும்தான் அந்த உணர்வு உருவானது, ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாலையோரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்..
“இதுதான் எங்க மாமா வீடு... அந்த பச்சை பெயின்ட் அடிச்சிருக்கதுதான் எங்க சித்தப்பா கடை... மகி ஒவ்வொரு வீட்டை விவரிக்கும்போதும், வாசுவின் நடுக்கம் ரிக்டர் கணக்கில் அதிகரித்துக்கொண்டிருந்தது... ஒரு வீட்ல ஒருநாள்னா கூட, ஆறு மாசத்துக்கு மேல வச்சு அடிப்பானுக போலயே!.. மனதிற்குள் மரணக்கணக்கை சரிபார்த்துக்கொண்டான்...
“இந்த வீடுதான் திலீப் கார் நின்ற இடத்தில், இடதுபுற வீட்டை சுட்டிக்காட்டினான்.. மகியின் வீடு, பழமை மாறாத கட்டிடம்.. நிலைக்கதவு முதல், வீட்டின் முற்றம், திண்ணை, தாழ்வாரம் என அத்தனை அம்சங்களும் நிறைக்கப்பட்ட முழுமையான இல்லம்..
வாசலிலேயே அம்மா நிற்கிறார், கையில் சிறு தாம்பாளத்துடன்... மகி இறங்கி வருவதை கண்டதும், அந்த தட்டில் வைத்திருந்த சூடத்தை ஏற்றி ஆரத்தி எடுக்க ஆயத்தமாகிறார்...
“டேய் இதல்லாம் ரொம்ப ஓவர்... உங்கள ஏத்துக்கர்றதே பெரிய விஷயம், இதுல இப்படி வரவேற்பல்லாம் டூமச்! காதோரம் கிசுகிசுத்தான் வாசு...
வலமும் இடமுமாக மூன்று சுற்றி சுற்றிவிட்டு, நெற்றியில் பொட்டும் வைத்தபிறகு குங்கும நீரினை தெருவினில் கொட்டிவிட்டு வந்தாள் அம்மா..
“ஏன்மா இதல்லாம்? மகியே கேட்டுவிட்டான்...
“என்னப்பா இப்புடி சொல்ற!.. அவ்வளவு வதைபட்டு, உசுருக்கு போராடி மறுபொறப்பா பொழச்சு வந்திருக்க... எவ்வளவு திட்டிபட்டுச்சோ, அதுக்குத்தான்..கன்னத்தை உருவி நெட்டிமுறித்தாள்...
வாசுவை பார்த்து சிரித்தான் மகி, அதீதமாய் கற்பனை செய்துவிட்டேனோ? என அசடு வழிந்துகொண்டான்...
“அப்பா எங்க? சப்தமில்லாமல் கேட்டான்...
“இவ்வளவு நேரம் இங்கதான் நின்னாரு, இப்ப ரூமுல படுத்திருக்காரு
மூவரையும் உள்ளே அழைத்து அமரச்செய்தாள்.. தண்ணீர் குடித்துவிட்டு ஆசுவாசமான பிறகு, மாடியில் தன் அறைக்கு இருவரையும் அழைத்து சென்றான் மகி..
பல மாதங்களுக்கு பிறகும் கூட தூசி படியாமல்தான் இருக்கிறது.. தினமும் அம்மா சுத்தம் செய்கிறாள் போலும், ஆனாலும் கழற்றி வைத்த கைக்கடிகாரம் கூட சற்றும் இடம் நகரவில்லை... அப்பாவின் கோபம் அணு அளவும் கூட அறைக்குள் நுழையவில்லை எனலாம்...
புத்தகங்கள், சிறிய டிவிடி ப்ளேயர், கல்லூரி நாட்களில் வாங்கிய பரிசுகள், ஒருசில புகைப்படங்கள்... அளவாக இருந்தாலும், அந்த நேர்த்தி அழகாக இருக்கிறது...
“ரொம்ப நல்லா இருக்கு மகி திலீப் நெகிழ்ந்தான்...
“இந்த ரூமா?
“இல்ல... எல்லாமும்... இந்த ஊரு, அம்மா, வீடு, உன் ரூம்... ரொம்ப சந்தோஷமா இருக்குடா கட்டியணைத்துக்கொண்டான்...

“நான் வேணும்னா போயிட்டு நாளைக்கு வரட்டுமா? சிரித்தான் வாசு..
“நீ போயிட்டு ஒருவருஷம் கழிச்சு வந்தாலும் கவலையில்ல வாசு.. பட் ஒரே விஷயம் என்னன்னா, மகி அப்பா எழுந்துட்டா நிரந்தரமா போகவேண்டியது இருக்கலாம்!
“அடப்பாவிகளா... ஒருமுடிவோடதான் என்னைய கூட்டிட்டு வந்திங்களா?... ஏதோ கோவில் பங்க்ஷன், மட்டன்லாம் போடுவாங்கன்னு சொன்னத நம்பிவந்த எனக்கு இதல்லாம் தேவைதான்! இருக்கையில் அமர்ந்துகொண்டு, கட்டிலை இறுக்க பிடித்துக்கொண்டான்...
கீழே அம்மா அழைப்பதை போல சத்தம் கேட்கிறது.. காலை உணவுடன் எதாவது பலகாரம் செய்து வைத்து சாப்பிட அழைத்திருப்பார்.. தானே படியேறி வந்து அவற்றை கொடுத்திருக்க தயங்காதவர்தான் என்றாலும், “உன்ன யாரு படில ஏற சொன்னது?... அப்புறம் முட்டி வலிக்குதுன்னு கண்ட எண்ணையதேச்சிட்டு இருக்கவேண்டியது... கீழருந்தே ஒரு சத்தம் வச்சிருந்தா நான் வரமாட்டேனா? மகியின் இந்த அரட்டலுக்கு பிறகு, வீட்டு வாசற்படிகளில் ஏறும்போதுகூட அவன் பேசியது நினைவுக்கு வருவதுண்டு..
ஆனாலும் இத்தனை நாட்களிலும் நாள் தவறாமல் மேலே ஏறி சுத்தப்படுத்தும்போது, அந்த நினைப்பு வந்ததில்லை...
கீழே இறங்கி செல்லும்போது, தட்டுகளில் தயாராக பகிர்ந்துவைக்கப்பட்டிருந்த பலகாரங்களை வெறித்து பார்த்தபடி வந்தான்..
“சாப்புட்டு போயி படுத்திருங்கப்பா... கனிவோடு சொன்னாள்...
அதிரசத்தை எடுத்து வாசு முதல் கடி கடித்தபோது, மகி “அப்பா சாப்ட்டாங்களா? வினவினான்... இதை இப்போதான் விசாரிக்கனுமா?
அதிரசத்தை விழுங்க முடியாமல் அம்மாவின் பதிலை நோக்கி காத்திருந்தான் வாசு, ஒருவேளை இந்த நேரத்தில் அவரும் சாப்பிடுவாரோ?..
“நேரமாகட்டும்னு சொல்லிட்டாரு, நீங்க சாப்புடுங்க!
அதிரசம் தொண்டையை தாண்டி, இரைப்பைக்குள் தஞ்சம் புகுந்தது... சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு, வாசுவையும் திலீப்பையும் மாடிக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான் மகி..
கதவை திறந்த சத்தத்திலேயே உள்ளே வருவது மகிதான் என்பதை ஊகித்த அப்பா, வேறு பக்கம் புரண்டு படுத்துக்கொண்டார்... அறைமுழுவதும் இருள் சூழ்ந்திருந்தது, ஜன்னலை திறந்து வெளிச்சத்திற்கு வழிவிட்டான்.. அப்பாவின் நெற்றியில் கதிரொளி சுளீரிட்டது... இதுநாள் வரையில் சூரியன் உதித்தபிறகு அப்பா எழுந்த வரலாறே இல்லை, “சூரியன் நமக்கு சாமிடா... அது வாறதுக்கு முன்ன எந்திரிச்சு வேலைய பாக்குறதுதான், அந்த சாமிக்கு நாம செய்ற மரியாத!அப்பாவின் லாஜிக் கப்பலில் இன்றைக்கு ஓட்டை விழுந்து மூழ்கிக்கொண்டிருக்கிறது...
அவராக எழுவதாக இல்லை... அருகில் அமர்ந்து, “அப்பா... அவர் தோள்களை தொட்டு அசைத்தான்..
“அப்பா... தடுமாற்றத்துடன் அழைத்தான்... மகியின் கைபட்டதும் சற்று விலகி படுத்துக்கொண்டார்... உறங்கவில்லை, பேசத்தான் பிடிக்கவில்லை போலும்.. நேரமும் பத்து மணி ஆகிவிட்டது.. இன்னும் சாப்பிடாமல் உறங்கிகொண்டிருக்கிறார், மாத்திரைகள் விழுங்குவதற்காவது சாப்பிடணுமே!.. வீம்பு பிடித்த மனிதர், நான் இருக்கும்வரையில் எழுந்து வெளியே வரமாட்டார்.. நாங்கள் வந்ததை அறிந்தும், வாசலிலேயே தடுத்து நிறுத்தி சண்டை போடாத அளவிற்கு அப்பா மாறியதே பெரிய விஷயம்...
மெள்ள அறையை விட்டு வெளியே வந்தான், ‘என்ன நடந்திருக்கும்?என்ற ஆவலோடு அம்மா வெளியே காத்திருக்கிறாள்...
“என்ன எதாச்சும் பேசினாரா? ஆர்வத்தைவிட, அப்பனும் பிள்ளையும் பழையபடி உறவாடிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான் அதிகம் தெரிகிறது...
“இல்லம்மா... முழிச்சுதான் இருக்கார், எதுவும் பேசல... திட்டாம இருக்குறதே பெரிய விஷயமில்லையா! தனது ஏமாற்றத்தை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை, அம்மாவை சமாதானப்படுத்துவதில்தான் முனைப்பாக பேசினான்..
“ஹ்ம்ம்... அதுவும் சரிதான்.. மொள்ள மாறிடுவாரு! பெருமூச்சு விட்டுக்கொண்டாள்..
“அண்ணன்கூட சிங்கப்பூர் போனதை ஒருவார்த்தை சொல்லலம்மா... இதுல அப்பாவ பேசுவார்னு எதிர்பார்க்க முடியாதுல்ல!... சரிம்மா, ரூம்க்கு போறேன்... நான் இல்லன்னு சொல்லி அவரை எழுப்பி சாப்பிட சொல்லும்மா... மறக்காம மாத்திரைகள எடுத்துக்கொடு! அக்கறையாக சொல்லிவிட்டு மாடிக்கு ஓடிவிட்டான்...
அறைக்குள் பயணக்களைப்பால் அடித்து போட்டதை போல உறங்கிக்கொண்டிருக்கிறான் வாசு.. தலை தரையிலும், கால் கட்டிலிலுமான வவ்வால் தூக்கம்.. சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டு, மகியின் சிறுவயது புகைப்பட ஆல்பம்களை புரட்டிக்கொண்டிருக்கிறான் திலீப்... ஏதோ ஒரு புகைப்படத்தினை மட்டும் தனியே எடுத்துவைத்து வெகுநேரம் சிரித்துக்கொண்டிருக்கிறான்...
“அப்டி என்ன மாமா அந்த போட்டோல சிரிக்குற மாதிரியான விஷயம் இருக்கு? அறைக்குள் நுழைந்த வேகத்தில் திலீப்பின் அருகில், கையோடு கை கோர்த்தபடி நெருங்கி அமர்ந்துகொண்டான்.. திலீப்பின் கையில் இருந்த படத்தை பார்த்ததும், வெட்கமும் பதற்றமும் கலந்த வித்தியாச உணர்வு உண்டானது..
“என்னடா ப்ளேபாய் மேகசின் போட்டோ சூட் மாதிரி நியூட் போஸ் கொடுத்திருக்க? கிண்டலாக சிரித்தான் திலீப்...
“ஐயோ மாமா, அதை உள்ள வை.. ஆறு வயசுல எடுத்த போட்டோ அது, எங்க மாமா ஆர்வக்கோளாருல எடுத்துட்டார்... இதை எங்கங்கயோ நானும் மறச்சு வச்சாலும், சரியா ஆல்பத்துக்குள்ள வந்து உக்காந்துட்டு என் மானத்த வாங்குது! அவசரமாக அதனை வாங்கி, அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்குள் கசக்கி திணித்துவைத்தான்...
“அட லூசு... நான் பார்க்காததையா பார்த்துட்டேன்... அப்புறம் என்ன வெட்கம்?
“ஐயோ மாமா... அது வேற, இது வேற! மகியின் வெட்கத்தை ரசிப்பதற்காகவே மேலும் குடைந்துகொண்டிருக்கிறான் திலீப்...
“நீ ரெஸ்ட் எடு மாமா, சாயந்திரம் கோவிலுக்கு போகணும்... பூசை முடிய லேட் நைட் ஆகிடும், மேடை நாடகமல்லாம் கூட இருக்கு... ஒருவழியாக திலீப்பை பேச்சின் திசைமாற்றி உறங்க ஆயத்தமாக்கிவிட்டு, தானும் சிறிது கண்ணயர்ந்தான்...
வெகுகாலம் கழித்து மனம் முழுமையான மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.. திலீப்புடன் தன் அறையில் இப்படி ஒன்றாக, ஒரு தம்பதியாக வாழப்போவதல்லாம் இதுவரை கனவில் மட்டுமே தோன்றிய காட்சியமைப்புகள்... இன்றைக்கு நிஜமாக கண்முன்னே, நம்பவே முடியவில்லை!... முழு மனநிம்மதி, ஆழமான உறக்கத்துக்குள் ஆழ்ந்துவிட்டான்..
அந்திப்பொழுதில் அருகாமையில் அமைந்திருக்கும் அந்த குலதெய்வ கோவிலை நோக்கி நகர்ந்தனர் மூவரும்... செல்லும் வழியில் தென்பட்ட வீடுகளில் எல்லாம் எதிர்பட்ட குசல விசாரிப்புகளை கடந்து, வயல் வரப்புகளில் நிதானித்து நடந்து கோவிலை அடைவதற்குள் தளர்ந்துபோய்விட்டான் வாசு..
“ஹை ஜம்ப், லாங் ஜம்ப், ஸ்கேட்டிங் இதல்லாம் தெரிஞ்சவன்தான் உங்க கோவிலுக்கு வரமுடியும் போலயே?... முடியலடா மரத்தினடியில் கிடந்த கல்லின் மீது அமர்ந்தான்..
மறுபுறம் தலைகீழாக தொங்கவிடப்பட்ட ஆடுகளின் தோல் உரிக்கப்பட்டு, கரித்துண்டுகள் வெட்டப்பட்டுக்கொண்டிருந்தன... “எனக்கென்னமோ அந்த ஆட்டை பாக்குறப்போவல்லாம், என்னை பார்க்குற மாதிரியே தோணுது! இன்னும் பதற்றம் குறையாமல் பேசுகிறான்...
“ச்ச ச்ச... அந்த ஆடல்லாம் ஒரு சின்ன குறைகூட இல்லாம செலெக்ட் பண்ணினது.. கருப்பு ஆட்டுல ஒரு வெள்ளை புள்ளிகூட இல்லாம பலிகொடுக்க தேடி பிடிக்கணும்... அதுகள போய் உன்னோட கம்பேர் பண்ணிக்காத
“எந்த ஆடா இருந்தாலும் வெட்டினோன மட்டன் ஆகிடப்போகுது, அதுக்கு என்னடா இவ்ளோ பில்டப்?
“மகாபாரதத்துல குருஷேத்திர யுத்தத்துல அத்தனை பேரையும் விட்டுட்டு எதுக்காக சர்வ லட்சணமும் பொருந்திய அரவானை பலி கொடுத்தாங்க?... நீ சொல்ற லாஜிக்படி பார்க்குறப்போ, யாரோ ஒரு சாமான்யனை கூட பலி கொடுத்திருக்கலாம்ல?... வியாசர் மகாபாரதத்துல சொன்னா வாயைப்பொத்தி கேட்டுப்பிங்க, இங்க கிராமத்து ஆளுங்க சொன்னா மட்டும் பகுத்தறிவு பொத்துகிட்டு வருதோ? பொறுமையாய் விளக்கினான் திலீப்...
“அடப்பாவி... நீ இவ்வளவல்லாம் பேசுவியா?... அதுமட்டுமில்லாம மகாபாரதமல்லாம் எப்போடா படிச்ச?
“சீரியல் ஷூட்டிங் அப்போ, பக்கத்து செட்ல மகாபாரதம் ஷூட்டிங் நடந்துச்சுல்ல... சிரித்துக்கொண்டான்...
மெள்ள இருள் சூழத்தொடங்கிட, மரத்திற்கு மரம் பொருத்தப்பட்டிருந்த டியூப் லைட்டுகள் ஒளிக்கவிடப்பட்டன.. ஆட்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்க, மூவரும் சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் தஞ்சம் புகுந்தார்கள்... அப்பாவிற்கு அனாவசிய சங்கடம் கொடுக்க வேண்டாமென நினைத்ததாலும் அந்த விலகல் அவசியமாகப்பட்டது..
அந்த இடத்தையும் தேடிப்பிடித்து இருவர் வந்துவிட்டனர்... சுவாசத்தில் நெடியேறும் அளவிற்கான சாராய நாற்றம்...
“என்ன மாப்ள இவுன நிக்குற?... எங்கயோ வெளியூர்ல மேல்படிப்பு படிக்குறன்னு அக்கா சொன்னுச்சு, எப்ப வந்த?
“டேய்... மேல் படிப்பு இல்லடா.. வேலை பாக்க போயிருக்கதா சொன்னாக...இது உடன் வந்தவன்..
தன்னைப்பற்றி ஊருக்குள் ஏதோ காரணங்கள் சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.. ஆனால், ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமான காரணங்களை சொல்லி சொதப்பியிருக்கிறார்கள் போலும்... எத்தனை நபர்களிடம் இப்படி சமாளிப்பதென்று தெரியவில்லை...
“ஆமாமா காலைலதான் வந்தேன்! பொதுவாக சமாளித்துவைத்தான்...
நல்லவேளையாக யாரோ ஒரு புண்ணியவான் அருகிலிருந்த மைக் செட்டை போட்டுவிட, அதன் இரைச்சலில் வாயசைத்து மேற்கொண்டு அவர்களை சமாளித்து அனுப்பினான்...
பூஜை முடிந்து, சாப்பிட்டுவிட்டு மூவரும் நாடக அரங்கை நோக்கி நகர்ந்தார்கள்...
“அவசியம் டிராமா பார்த்தே ஆகணுமா? உண்ட மயக்கம் வாசுவின் கண்களில் சொக்கியது...
“நல்லா இருக்கும்டா, கொஞ்சநேரம் பார்ப்போம்
“அதான் திலீப் நடிச்ச காகித கப்பலை ஒன்றரை வருஷமா பார்த்தேனே...
“இது வேற மாதிரியான நாடகம்டா, பார்த்தாதான் புரியும்! திலீப் பக்கவாத்தியம் வாசிக்கிறான்... வேறு வழியில்லை, தனியாக வீட்டிற்கு போவதல்லாம் சாத்தியமில்லாத விஷயம்... ஆமோதித்து அவர்கள் அருகில் அமர்ந்துவிட்டான் வாசுவும்...
வள்ளி திருமணம் நாடகம்.. மிகத்தேர்ந்த நடிகர்கள் பேசி, பாடி, ஆடிக்கொண்டே நடிக்கிறார்கள்... இரவு முழுவதும் கண்ணசராமல், வறண்ட தொண்டைகளை தண்ணீர் விட்டு நனைத்துக்கொண்டு மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் கலைஞர்களை பார்த்தபோது, அத்தனை ரீட்டேக்குகளுக்கு பிறகு பலவித இத்யாதிகளை இணைத்து காட்சிப்படுத்தப்படும் தன் நடிப்பல்லாம் ‘சுண்டைக்காய்தான் என்று எண்ணிக்கொண்டான் திலீப்...
விடிந்ததும் வள்ளியின் திருமணத்தை பார்த்தபிறகுதான், மூவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்... கண்கள் ரத்தசிவப்போடு எழுந்து நடந்த வாசுவிற்கு, அதீத தூக்கம் மயக்கத்தை உண்டாக்கும் அளவிற்கு நிலைதடுமாற வைத்தது... வீட்டிற்கு வந்தவேகத்தில் தலையணையை மட்டும் எடுத்துப்போட்டவாறு, தரையில் சாய்ந்துவிட்டான்... எப்படியும் எழுந்திருக்க மாலை ஆகிவிடும், கும்பகர்ணன்...
“உனக்கு தூக்கம் வரலையா மாமா?
“இல்ல... தூங்குறதுதான் தினமும் பண்றோமே... ஊரை சுத்திப்பாக்கணும் போல தோணுது மகி ஆவலாக சொன்னான்...
“அட லூசு மாமா... சுத்திப்பாக்க இங்க என்ன பீனிக்ஸ் மாலும், ஈஏவுமா இருக்கு?... மரமும், மட்டையும், ஆத்தங்கரையும், கோவில் சுவரும்தான் இருக்கு.. இதுக்கு மேல ஒண்ணுமே இல்லையே?
“ஒண்ணுமே இல்லைன்னு இவ்ளோ சொல்லிட்டியே... நான் ப்ளான் சொல்றேன் கேட்டுக்கோ... ஆத்துல குளிச்சிட்டு, தஞ்சாவூர் போறோம்... அங்க பெரிய கோவிலை சுத்திப்பாத்துட்டு மதியம் அம்மா செய்ற சாப்பாட்டை சாப்பிட ரிட்டர்ன் ஆகுறோம்... ஓகேவா?
திலீப் இவ்வளவு தீர்மானமாக சொன்னபிறகு மறுப்பேது?... உடனே பைக்கை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை நோக்கி விரைந்தான்... கர்நாடகத்துடன் பஞ்சாயத்து பேசி வாங்கிய தண்ணீர், மகிக்கு வேறுவிதத்தில் மகிழ்ச்சியை கொடுத்தது... ஆனாலும், எல்லா கரைகளிலும் யாரோ குளித்துக்கொண்டிருக்கிறார்கள்... தனிமை வேண்டும், நண்பர்களோடு ஒருமுறை ஒற்றையடி பாதை வழியாக சென்று குளித்த ஒரு கரை நினைவுக்கு வர, உள்ளே புகுந்து அந்த இடத்தை அடைந்தான்... வெற்றி... யாருமில்லை...
“மாமா உனக்கு நீச்சல் தெரியுமா?
“தெரியாதே...
“அப்டின்னா நீ ஆழத்துக்கு வரவேணாம் மாமா, கரைலையே குளிச்சிக்கோ
“அடப்பாவி... நீச்சல் தெரியாதுன்னு சொல்றேன், அதவச்சு எதாவது ரொமான்ஸ்க்கு வழிபண்ணுவன்னு பார்த்தா சுத்த டியூப் லைட்டா இருக்கியே? வெளிப்படையாகவே சொல்லிவிட்டான், கொஞ்சம் ஏமாற்றமும் அந்த வார்த்தைகளில் தெரிந்தது...
“ரொமான்ஸ் மட்டுமில்ல மாமா, மொத்தமும் பண்ணலாம்னு ஆசைதான்... ஆனா, இப்போ கோவிலுக்கு போறோம்.. கொஞ்சம் சுத்தபத்தமா போயிட்டு வரலாமேன்னு...
சட்டென மகியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டான்... “இது அசுத்தத்துல அடங்காது மகி! சிரித்துக்கொண்டான்...
பைக் தஞ்சை சாலையில் சீறிப்பாய்ந்தது.. மகியின் இடுப்பை சுற்றி வளைத்து, தோள் மீது தாடை பதித்து சில்லிட்ட காற்றில் பயணிப்பதில்தான் அத்துனை அலாதி இன்பம்...
“தஞ்சாவூர் இதுக்கு முன்ன வந்ததில்லையா மாமா?
“வந்திருக்கேன்... ஹோம்ல இருந்தப்போ சின்ன வயசுல ஒருமுறை டூர் வந்திருக்கேன்... கோவில் வாசல்ல இருந்த தலையாட்டி பொம்மை வேணும்னு எங்க மேடம் கிட்ட அடம்பிடிச்சு அழுதேன்.. ஊர்ல வாங்கித்தரேன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டாங்க... அத்தன பசங்க இருக்கப்போ, எனக்கு மட்டும் அவங்களால வாங்கிக்கொடுக்க முடியாதுல்ல, அதான் அப்டி பொய் சொன்னாங்க! இயல்பாக சொன்னாலும், அதன் உள்ளார்ந்த வலியை மகியால் உணரமுடிந்தது...
இந்த கேள்வியை கேட்டிருக்கவே கூடாது, தேவையில்லாமல் மகிழ்ச்சியான தருணத்தில் துக்கமான நினைவுகள் அசைபோடும்படியாக ஆகிவிட்டது..  ஓரிரு நிமிடங்கள் துணைக்கேள்வி எதுவும் மகியின் தரப்பிலிருந்து எழவில்லை..
“என்ன மகி பேச்சே காணும்?... கண்ணாடியின் ஊடே பார்த்தபோது, கண்கள் மெலிதாய் கலங்கியிருந்தது...
“ஏய் லூசு... என்னடா ஆச்சு?.. நான் லூசு மாதிரி பழைய விஷயத்தை புலம்பிட்டேனா?... ரிலாக்ஸ் மகி! கட்டிப்பிடித்துக்கொண்டான், பைக் வேகம் குறைந்திருந்தது...
“இன்னும் சொல்லனும்னா, அப்டி பழைய விஷயங்களை நினச்சு பாக்குறப்போதான் இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு எனக்கே புரியுதுடா... அதனால நீ எதையும் போட்டு குழப்பிக்க வேணாம்!
பெரிய கோவில் வாசலை அடைந்தபோதுதான் அதன் பிரம்மாண்டம் திலீப்பிற்கு புரிந்தது.. கண்கொட்டாமல் அதன் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான், வியக்காமல் இருக்கமுடியவில்லை.. உள்ளே சுற்றிப்பார்க்கும்போது ஒவ்வொரு தூணிலும், துரும்பிலும் கூட ஏதோ ஒரு அழகியல் வேலைப்பாடு அதிசயிக்க செய்தது..
“நிஜமாவே ராஜராஜ சோழன் ரசிகன்டா... என்னமா வடிச்சிருக்கார் பாரேன்!
“ஹ்ம்ம்... இன்னமும் இறுக்கம் களையாமல் இருக்கிறான்...
“டேய் பாவி... உன்கூட ஆசையா வெளில வந்தா இப்டிதான், அம்மா விட்டுட்டுப்போன எல்கேஜி குழந்தை மாதிரி உம்முன்னு இருப்பியா... கொஞ்சம் சிரியேன்!
சிரமப்பட்டு இயல்பாக முயற்சித்தான்... பிரகாரத்தை சுற்றி, வாகை மரத்தினடியில் போடப்பட்டிருந்த சிமென்ட் இருக்கையில் அமரும்போது, மகி ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான்...
திலீப்பின் அலைபேசி வைப்ரேட்டியது... குமார்தான் அழைக்கிறான், ‘கழுகுக்கு மூக்கு வேர்த்தார் போல என்ற உவமை இங்கு பொருத்தமாக இருக்கும்...
“சொல்லு குமார், ப்ரிவ்யூ ஷோ வேலைகள்லாம் எப்டி போகுது?
“அது போகுது திலீப்... இப்போதான் நம்ம படத்தோட பர்ஸ்ட் பிரிண்ட் பார்த்தேன், இந்த வருஷத்தோட சூப்பர் டூப்பர் ஹிட் நம்ம படம்தான்... கொஞ்சநேரம் அது நம்ம படம்தானான்னு தடுமாறுற அளவுக்கு எடிட்டிங் பக்காவா பண்ணிருக்காங்க...
“ஓ... ரொம்ப சந்தோசம் குமார், பக்கத்துல சக்கரை இருந்தா ஒரு பிடி உன் வாய்ல அள்ளிப்போட்டுக்கோ
“இன்னொரு விஷயம்... அம்மா சினி கிரியேட்டர்ஸ் முத்துப்பாண்டி சார் கிட்ட கதை சொன்னேன்ல, அதுக்கு ஓகே சொல்லிட்டார்... நீதான் ஹீரோ, உதிஷா கிட்டயும் கால்ஷீட் ஓகே பண்ணிட்டேன்..
“ஏய் குமார், என்னப்பா இன்னிக்கு இவ்ளோ சர்ப்ரைஸ்...
“ஆமா, கூடிய சீக்கிரம் பூஜை போட்டுடலாம், உன்னோட பேமன்ட் சம்மந்தமா ஊருக்கு வந்ததும் பேசிக்கலாம்..
அழைப்பை துண்டிக்கும்போது திலீப்பின் கண்களில் படர்ந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை, அந்த ராஜ கோபுரத்தின் அளவென்று ஓரளவு வரையறுக்கலாம்... குமார் சொன்ன விஷயங்களை சொல்லி முடித்தபோது, அதே அளவிலான மகிழ்ச்சி மகியையும் தொற்றிக்கொண்டுவிட்டது.. திலீப்பின் கைகளை பிடித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தான்...
“ஏய் இது கோவில் சிரித்தான் திலீப்..
“இது ஒன்னும் அசுத்தத்துல அடங்காது மாமா கண்ணடித்து சிரித்தான்...
சில மணித்துளிகள் நீடித்த உற்சாக உரையாடல்களுக்கு பிறகு, இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்... திலீப் பைக்கை எடுக்க சென்றிருக்கையில், அவசரமாக அருகிலிருந்த கடைக்குள் ஓடினான் மகி...
ஒரு பெரிய பையை தூக்கிக்கொண்டு, அவசரமாக அங்கிருந்து வெளியேறி பைக்கில் ஏறிக்கொண்டான்...
“என்ன மகி அது?
பையை நீட்டினான்... அதனுள் தலையாட்டி பொம்மைகள் குவிந்து கிடக்கின்றன, எப்படியும் பத்தாவது இருக்கும்...
“ஏய் எதுக்குடா இவ்ளோ?
“உனக்குத்தான் மாமா... நம்ம வீடு முழுக்க இந்த பொம்மை தலையாட்டிட்டே இருக்கட்டும்! சிரித்தான்...  நெகிழ்ந்துபோனான் திலீப், என்ன சொல்வதென்று புரியவில்லை...  கைகளை எடுத்து கண்களோடு ஒற்றிக்கொண்டான்...
“மாமா இது ரோடு... நேரமும் இப்போ ஒண்ணாச்சு, சீக்கிரம் வீட்டுக்கு போனா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ல
வீடு போய் சேரும்வரையில் சாலை முழுக்க சிதறும் அளவிற்கான காதல் மொழிகள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன...
வாயில் மாடத்திலேயே அமர்ந்து, சாலையை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் அம்மா... மகன் இன்னும் சாப்பிடவில்லையே என்கிற ஏக்கம்தான் பார்வையில் பிரதானமாக தொக்கி நின்றது.. பைக்கில் இருவரும் வருவதை பார்த்ததும், கண்கள் இயல்பாகின..
“என்ன மகி இவ்வளவு நேரம்?.. பாவம் டவுன்ல வளர்ந்த புள்ள அது, பசி தாங்குமா?... இது மகனின் மீதான அக்கறை இல்லை, மருமகன் மீதான கரிசனம் என்பதை புரிந்தபோது மகிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...
“இல்லம்மா நான்தான் கோவிலுக்கு போகணும்னு சொன்னேன், அவன்மேல தப்பில்ல”  மகியை விட்டுக்கொடுத்திடாமல் சமாளித்தான் திலீப்...
“சரி வாங்க சாப்பிடலாம் முன்னே சென்று வாழை இலை விரித்து கோழி, நண்டு, இறால் என அதன் மீது வரிசையாக அடுக்கினாள் அம்மா... இலையில் இடமில்லாது, அடிஷனல் இலை தேவைப்படுமோ? என அதிசயித்து பார்த்துக்கொண்டிருந்தான் திலீப்...
“என்னப்பா பாத்துக்கிட்டே இருக்க?, சாப்பிடுப்பா... வாசு தம்பி முன்னமே சாப்ட்டு ரூமுக்கு போய்டுச்சு! கறியோடு அள்ளி குழம்பை ஊற்றினாள்..
“நேத்துதானேம்மா மட்டன் சாப்ட்டோம், இன்னிக்கும் ஏன் இவ்ளோ செஞ்சீங்க?
“மெட்ராஸ்ல என்னத்தப்பா சாப்ட்டுருக்க போறிய?.. நாட்டுக்கோழி குழம்பு ஒடம்புக்கு ரொம்ப நல்லதுய்யா, சாப்புடுங்க!
வயிறுமுட்ட சாப்பிட்டு, ஒரு குட்டித்தூக்கமும் போட்டபிறகு மொட்டை மாடியில் தென்னைமர கீற்றுகள் தலைமீது உரசும் இடத்தில் அமர்ந்து, மகியின் கையை இறுக்கப்பிடித்துக்கொண்டிருக்கையில் திலீப்பிற்கு பேச்செதுவும் வரவில்லை...
“என்ன மாமா அமைதியா இருக்க?
“இதல்லாம் கனவோன்னு தோணுது.. அம்மாவால எப்டி நம்மள ஏத்துக்க முடிஞ்சுது? அப்பா ஏன் கோபப்படல? சொந்தக்காரங்க இதை ஏன் பெருசு படுத்தல?.. இதல்லாம் கனவுன்னா கூட அதில லாஜிக் இடிக்குதுன்னு யோசிச்சிருப்பேன், ஆனா நிஜமா இவ்ளோவும் நடக்குது... இந்த நிமிஷத்துல உலகத்துலேயே சந்தோஷமா இருக்குறது நானாத்தான் இருப்பேன் மகி... ஐ லவ் யூ டா கையை பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டான்...
மகிக்கு பேச்சும் மூச்சும் நின்றுபோனது... திலீப்பின் வாயிலிருந்து முதல்முறையாக ‘ஐ லவ் யூ.. இத்தனை காலமும் தன்னை திலீப் காதலித்திருந்தாலும் கூட, அதனை வாய் வார்த்தையாக சொன்னதில்லை... அவனை மீறி உணர்வுகள் வழிந்து இன்றைக்கு வார்த்தையில் காதலை வெளிப்படுத்தியுள்ளான்...
பதிலெதுவும் சொல்லாமல் மகியை கட்டி அணைத்துக்கொண்டான்...
பெட்டி பைகள் சகிதம் கிளம்பி வாசலுக்கு வந்தபிறகும் அம்மா அந்த கேள்வியை விடவில்லை, “அதுக்குள்ளையும் போகனுமாப்பா?... இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல! கண்கள் கலங்கிப்போனது, அழுதுவிடுவார் போல...
பையை தரையில் வைத்துவிட்டு அருகில் சென்று தோளோடு சேர்த்து அம்மாவை அணைத்துக்கொண்டான் மகி, “என் லீவும் முடிஞ்சிடுச்சு, திலீப்புக்கும் நிறைய வேலைகள் இருக்கு.. நாங்க எங்கம்மா போறோம், இதோ இருக்க மெட்ராஸ்க்கு தான?... அடிக்கடி வந்து பாத்துட்டு போறோம், கவலைப்படாதம்மா
“சரிப்பா.. சற்று நிதானித்து இயல்பானாள் அம்மா...
“நேராநேரத்துக்கு சாப்பிடுப்பா, அடிக்கடி கடைல சாப்புட வேணாம்.. வழக்கமான அம்மாவாய் மாறிவிட்டாள்...
“அப்பாகிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போயேன்!ஒரு கோரிக்கையாக இதனை முன்வைத்தபோது, அதில் ஒரு ஏமாற்றமும் பொதிந்திருந்தது...
மகி மெளனமாக தரையை பார்த்தபடியே நிற்கிறான்.. இரண்டு நாட்களாக முகத்தை ஏறிட்டுக்கூட பார்த்திடாத அப்பா, விடைபெறுவதாக சொல்லும்போது மட்டும் உச்சிமுகர்ந்தா வழியனுப்ப போகிறார்?... ஆனாலும் அவர் மனதிற்குள் இருக்கும் பாசத்தை ஸ்கேல் வைத்து அளந்துவிடமுடியாது... சரி இன்னொருமுறை பேசித்தான் பார்க்கலாமே? என்று உள்மனம் சொன்னாலும், ஈகோ அதனை தடுக்கிறது...
“சொல்லிட்டு வர்றதுல தப்பில்லையே மகி! திலீப்பும் அம்மாவின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்தான்... மறுக்கமுடியவில்லை, தடுமாறிய நடையுடன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான்... அறைக்குள் அமர்ந்திருக்கும் அப்பா, காலை நாளிதழை கர்ம சிரத்தையாக புரட்டிக்கொண்டிருக்கிறார்... மகி வருவதை விழியோரம் கவனித்தபிறகு, அந்த புரட்டலின் வேகம் இன்னும் அதிகரித்தது...
இருக்கையின் வெகு அருகாமையில் நின்று எச்சிலை விழுங்கிக்கொண்டே. “அப்பா... அழைத்தான்...
திரும்பவில்லை... இன்னும் கண்டுகொள்ளாததை போலவே காகிதத்தை வெறித்துக்கொண்டிருக்கிறார்...
“ஊருக்கு கெளம்புறேன்ப்பா... என்மேல கோபம் எதுவும் இருந்தா எப்பவும் மாதிரி திட்டிடுங்க, அடிச்சிடுங்க... பேசாம இருக்க வேணாம்பா.. ரொம்ப வலிக்குது, செத்துடலாம் போல இருக்கு... இப்பவும் நீங்க பேசமாட்டிங்கன்னு தெரிஞ்சும், பேசிட மாட்டிங்களான்னு ஒரு ஏக்கத்துலதான் வந்தேன்..
பதில் இல்லை... அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருக்கிறது, கண்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறது... ஆனால் எதுவும் வார்த்தையாக மட்டும் வெளிவர மறுக்கிறது...
இரண்டுநிமிட ஆழமான அமைதிக்கு பிறகு “சரிப்பா... நான் கெளம்புறேன்.. அப்பாவின் தோளின் மீது கைவைத்தான்.. சட்டென அந்த கையை இழுத்து தன் கண்களோடு அழுத்தி ஒற்றிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார் அப்பா...
மகி சற்றும் அதனை எதிர்பார்த்திருக்கவில்லை.. ஏதோ ஒரு கடமையைப்போலத்தான், அரை மனதோடு அப்பாவிடம் சொல்லிவிட்டுப்போக வந்தான்... அப்பா அழுவதல்லாம், கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வு... சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றவன், சற்று சுதாரித்து இயல்பு நிலைக்கு வந்தான்... அப்பாவின் முன்னே வந்து, முட்டியிட்டு அவர் கைகளின் மீது முகத்தை பதித்து கண்ணீர் விட்டான்...
தலைமுடியை கோதிவிட்டபடியே அப்பாவின் கண்கள் இன்னும் நீரை சாரையாக வடித்துக்கொண்டிருக்கிறது...
இருவராலும் எதுவும் பேசிக்கொள்ள முடியவில்லை... சில நேரங்களில் பேசிடாமல் உணரப்படும் உணர்வுகளுக்குத்தான் அதிக வலிமை இருப்பதுண்டு, அப்படி ஒரு அபூர்வ தருணம்தான் இதுவும்... இருவரின் தவறுகளை பற்றியும் விவாதித்து விடைதேட, வாழ்க்கை ஒன்றும் பட்டிமன்றம் இல்லையே... ஒற்றைத்துளி கண்ணீர் ஓராயிரம் கேள்விகளுக்கு விடைசொல்லிவிடுமே!...
ஓரிரு நிமிட உணர்வுப்பரிமாற்றத்திற்கு பிறகு அப்பாதான் மௌனம் கலைத்தார்..
“சரிப்பா... நேரமாச்சு இப்பவே, கெளம்புங்கமகியின் கண்களை உள்ளங்கையால் துடைத்துவிட்டு கைகளை உயர்த்தி எழச்செய்தார்...
“உடம்பை பார்த்துக்கோங்கப்பா... என்னைப்பத்தி கவலைப்படாதிங்க, நான் நல்லா இருக்கேன்பா
அறையின் வாசலை அடைவதற்கு முன்பாக, “ஒருநிமிஷம் நில்லுப்பா சொல்லிவிட்டு அவசரமாக எழுந்து அருகிலிருந்த மேசை மீது மடித்துவைக்கப்பட்ட காகிதத்தை பிரித்து, அதனுள்ளிருந்த திருநீறை எடுத்துக்கொண்டு மகியின் அருகில் வந்தார்...
“நம்ம கோவில் துன்னூறுப்பா.. நெற்றியில் பூசிவிட்டு, அதன் துகள்கள் கண்களில் விழக்கூடாததென அக்கறையில் கைவைத்து ஊதிவிட்டார்...
“சரிப்பா... போயிட்டு வா...  இது உன் வீடு, நீ எப்பவேணாலும் வந்துட்டுப்போவலாம்... ஆனா பழையபடி நீ மட்டும் வரணும்னு எதிர்பார்க்குறேன் நிதானித்து சொல்கிறார்... இனி இன்னொருமுறை திலீப்போடு இங்கே வரக்கூடாதென, பூசி மெழுகி சொல்லியிருக்கிறார்... ஆடு பகை குட்டி உறவு என்பதைப்போல, மகன் மட்டும் வேண்டுமாம், அவன் உறவு வேண்டாமாம்.. இதுதான் அப்பாவின் நியாயம் போலும்!
விரக்தியாய் சிரித்துக்கொண்டான் மகி, “இவ்ளோ நாள்ல மாறிருப்பிங்கன்னு நெனச்சேன், ஆனா இன்னும் என்னைப்பத்தி நீங்க புரிஞ்சுக்கலயாப்பா?... அவனை விட்டுட்டு வர்றதா இருந்தா ஏன்பா இங்கருந்து சண்டை போட்டு வெளில போகணும்?.. நான் உங்க புள்ளைப்பா, தெளிவான ஒரு முடிவு எடுத்தப்புறம் அதிலேந்து பின்வாங்க மாட்டேன்... அடுத்தமுறை நான் வரணுமா? வேணாமா?ன்னு நீங்கதான் யோசிச்சு முடிவுபண்ணனும்!.. இப்போ நான் கிளம்புறேன்ப்பா காலில் விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து வாசலை நோக்கி நகர்ந்தான்..
“ஒடம்ப பார்த்துக்கோங்கய்யா... வண்டில போறப்போ சூதானமா போங்க திலீப்பிடம் அவன் மாமியார் ஏதோ அட்வைஸ்களை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறார்... மகியை பார்த்ததும், அவன் நெற்றியில் பூசப்பட்ட விபூதிதான் அம்மாவின் கண்களில் பளிச்சிட்டது...
‘என்ன நடந்திருக்கும்? என்று ஒருவாறு யூகிக்க முடிகிறது.. ஆனாலும், கணவனின் பிடிவாத குணம், அந்த யூகத்தை நம்பச்செய்யவில்லை... ‘என்ன நடந்தது? என்று வினவுவதைப்போல புருவத்தை உயர்த்தி தலையசைத்து கேட்கிறாள்...
தலையை இடமும் வலமுமாக அசைத்து, உதடுகளை பிதுக்கி ‘ஒரு முன்னேற்றமும் இல்லை! என்பதைப்போல பாவனை செய்தான்...
பெருமூச்சு விட்டுக்கொண்டாள் அம்மா... பட்டத்தின் நூல் நம் கைப்பிடியில் இருக்கும்வரையில்தான், காற்றின் வழியே பறக்கும் பட்டத்தை பற்றிய பதற்றம் நமக்குள் இருக்கும்.. என்றைக்கு நூல் அறுந்து, நம் கைப்பிடியின் தொடர்பை துண்டிக்கிறதோ அப்போதே, அதன் மீது உண்டான அவசியமற்ற பதற்றம் , ஒருவித சலிப்பாக உருமாறிவிடுகிறது... அம்மாவின் பெருமூச்சும் அந்த வகை சலிப்பை சார்ந்ததுதான்..
“சரி, கெளம்புறோம்மா... உடம்பை பார்த்துக்க, ஊருக்கு போனதும் போன் பண்றேன் காரில் ஏறி அமர்ந்தபிறகு ஏதோ ஒரு பாரம் மனதினை அழுத்தியது..
அந்த செம்மண் சாலையை, தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையை கடக்கும்போதெல்லாம் சிறுவயது முதலாகவே அடிமனதிற்குள் உண்டாகும் மெல்லிய வலி இப்போதும் மகியை ஆட்கொண்டுவிட்டது... பள்ளி காலம் தொட்டே பழகிப்போன வலிதான் என்றாலும், இம்முறை இன்னும் கூடுதலாக அழுத்தியது...காரின் கண்ணாடி வழியாக சாலை ஓரங்களை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறான்...
“என்ன மகி தூக்கம் வரலையா? தோள் மீது கைபோட்டுக்கொண்டான் திலீப்...
“இல்ல மாமா... ஒரு மாதிரி இருக்கு! தொண்டை கமறியது..
“புரியுது மகி... இத்தனை காலம் மெஷின் வாழ்க்கை வாழ்ந்த எனக்கே மனசல்லாம் பிசையுற மாதிரி இருக்கு.. உங்க ஊர்லையே, அம்மா கூடவே கடைசி வரைக்கும் இருந்திடலாம்னு தோணுது.. இந்த ப்ரிவ்யூ ஷோ மட்டும் இல்லைன்னா, இன்னும் ரெண்டு நாள் சேர்த்து இருந்திருக்கலாம்.. அதனாலென்ன, நம்ம ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைட் ஷெட்யூல் இல்லாத நேரமா பார்த்து, ஒரு பத்து நாள் இங்க வந்திடலாம்.. மகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்...
அப்படியே திலீப்பின் தோள் மீது தலை சாய்த்துக்கொண்ட மகி, “சரி மாமா என்று மட்டும் சொன்னான்... மனதினுள்ளே, ‘நீ மட்டும் வரணும்! என்று சொன்ன அப்பாவின் வார்த்தைகள் காதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது... நிச்சயம் அப்பாவின் மனநிலை ஒருநாள் மாறும், மனதிற்குள் தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்..
காரிருள் சூழ்ந்த நேரத்திலேயே சென்னை மாநகரை அடைந்துவிட்டனர்... மூவரின் கண்களுமே களைத்து சிவந்து போயிருந்தன... ஒருசில மணி நேரத்தூக்கம் அவசியமாகப்பட்டது...
“பதினொரு மணிக்கு ப்ரிவ்யூ ஷோ போகணும், ஒரு மூணு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் மகி கட்டிலில் விழுந்த வேகத்தில் அசந்தும் தூங்கிப்போனான்...
அதிகாலை தூக்கம் ஆளையே விழுங்கிவிடும் வல்லமை பெற்றது... உடல் கூட அசையமறந்து தூங்கிப்போனவனை உலுப்பி எழுப்பியது அலைபேசியின் அலறல் ரிங்க்டோன்தான்... எவ்வளவு நேரம் அடித்ததோ, சிரமப்பட்டு கண்களை திறந்து பார்க்கையில் குமாரிடமிருந்து பன்னிரெண்டு தவறிய அழைப்புகள்... நேரத்தை பார்த்தான், பத்து மணி ஆகிவிட்டது...
அடக்கடவுளே இப்படியா நிலைமறந்து தூங்கிப்போனேன்.. பச்சை பொத்தானை அழுத்தி காதில் வைத்தான்.. “ஹலோவைக்கூட கவனிக்காமல் பரபரப்பாய் பேசுகிறான் குமார்...
“எங்க திலீப் வந்திட்டிருக்க?... இன்னும் ஒரு மணி நேரத்துல ஷோ, முன்னமே நீ வர்றதில்லையா?... அவ்ளோ கேர்லஸ்ஸா உனக்கு? உரிமையோடு கண்டிக்கவும் செய்தான்..
“சாரி குமார்... இதோ கிளம்பிட்டேன், ஆன் தி வே... வந்திடறேன் அழைப்பை துண்டித்த வேகத்தில் மகியையும் அரக்கபபறக்க எழுப்பி கிளப்பினான்..
“நான் அவசியம் வந்துதான் ஆகணுமா திலீப்? பரபரப்பாய் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் மகியின் அனாவசிய கேள்வி...
“நான் போகனுமா வேண்டாமா?ன்னு முடிவு பண்ணிக்கோ! குளியலறைக்குள் சென்றுவிட்டான் திலீப்... வாசுவைத்தான் அசைக்கக்கூட முடியவில்லை, அவனை கிளப்பி அழைத்து செல்வதல்லாம் அந்த அவசர நேரத்தில் சாத்தியமில்லாத விஷயம்... மகியும்  திலீப்பும் கால் டாக்ஸியில் தொற்றிக்கொள்ள, இன்னும் பத்து நிமிடங்களில் ஷோ ஆரமிக்கப்போகின்ற பதற்றம் இருவரின் மனதிற்குள்ளும்...
பரபரப்பான ட்ராபிக் நெரிசலை கடந்து, ஒருவாறு ப்ரிவ்யூ தியேட்டர் வாசலை அடைந்தபோது படம் திரையிடப்பட்டு பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது... வாசலிலேயே திலீப்பிற்காக காத்துக்கொண்டு நின்ற குமாரின் கண்களில், உக்கிரமான கனல் கசிந்துகொண்டிருக்கிறது..
“ஹேய் குமார்!”  தன்னை இயல்பாக காட்டிக்கொண்டான் திலீப்..
“இதான் வர்ற நேரமா?... சேரன் சார்லேந்து கார்த்திக் சுப்புராஜ் வரைக்கும் அத்தன பேரும் வந்திருக்காங்க.. பெரும்பாலான ஹீரோக்களும்கூட வந்தாச்சு.. போய்யா.. எண்ணெயில் போட்ட கடுகாய் வெடித்தான்...
“சரி சரி விடுப்பா... உள்ள போகலாம் வா, உதிஷாக்கு பக்கத்துல சீட் போட்டியா? குமாரின் தோள் மீது கைபோட்டு உள்ளே அழைத்துச்செல்ல, சற்று சமாதானம் அடைந்திருந்தான்.. ஏற்கனவே தனியாக போடப்பட்ட மூன்று இருக்கைகளில் அமர்ந்துகொண்டு, திரைக்காட்சிகளை ரசிக்கத்தொடங்கினார்கள்...
“அந்த சீன்ல இதை எடிட் பண்ணிட்டாங்க... பிஜிஎம் சூப்பர்ல? குமாருடன் ஆர்வமாக விவாதித்துக்கொண்டிருக்கிறான் திலீப்... நுணுக்கங்களை பற்றியல்லாம் மகி ஆராயவில்லை.. திரையில் தன்னவன், முழுக்க அவனையே ரசித்துக்கொண்டிருக்கிறான்... இதுதான் எத்தனை காலத்து தவம்!.. பலநிலை போராட்டங்கள், வலிக்கு பிறகான மயிலிறகு வருடல் போன்ற ஒரு சுகம்... அசோக் செல்வன். சர்வா, உதிஷா என ஒருவரும் அவன் சிந்தைக்குள் எட்டவில்லை... திரை முழுவதும் திலீப்! திலீப்! திலீப்! மட்டும்தான்..
இடைவேளைக்கு ஒருவரும் எழுவதாக தெரியவில்லை... ஊழியர்களால் பரிமாறப்பட்ட குளிர்பானம், சிற்றுண்டிகளை பெரிதாக பொருட்படுத்தாது, திரைப்படத்தின் மீதியை பார்ப்பதிலேயே ஆர்வம் கொண்டிருந்தனர் ... “இன்டர்வெல் ப்ரேக் ஒரு படத்தோட சக்ஸசை டிசைட் பண்ணிடும் திலீப்... யாரும் அழுங்க குழுங்க இல்ல பாரு, நம்ம படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர்தான்... திலீப்பின் கைகளை அழுத்தப்பிடித்தான் குமார்..
குறை வெளிச்சத்தில் பிரபலங்களின் முகங்களை கவனித்தான் திலீப், சிந்தனையில் பலரும் ஆழ்ந்திருப்பதாகவே தோன்றியது... அந்த சிந்தனைக்குள் புதைந்திருக்கும் காரணம்தான் புரியாத புதிர்!... காக்கைக்கும் தன் குஞ்சு, பொன்குஞ்சு என்பதைப்போல, திரையில் ஒரு புகைப்படத்தை காட்டினால் கூட நமக்கு ‘ஆஹா ஓஹோவாகத்தான் இருக்கும்... திரைப்படம் முடியும் தருணத்தில் மட்டும்தான் அந்த யூகங்கள் வெளிச்சத்திற்கு வரும்!..
உதிஷாவின் கன்னத்தை திலீப் கடிப்பதோடு திரைப்படம் ‘சுபம் ஆனது... அழுங்கி குலுங்காத கைத்தட்டுகள் சில வினாடிகள் நீடித்தன.. தியேட்டர் விளக்குகள் எரிகையில், பலரது முகங்களும் பிரகாசித்தன... ராயல் ப்ரொடக்ஷன் முதலாளி, இயக்குனரை சிரமப்பட்டு கட்டியணைத்து வாழ்த்தினார்... அநேகமாக ஓரிரு நாட்களில், கார் ஒன்றை பரிசாக கொடுக்கும் அளவிற்கான மகிழ்ச்சி தயாரிப்பின் முகத்தினில்..
சகலரும் இயக்குனரை பாராட்ட, ஒரு ஓரத்தில் நின்று அவற்றை திருதிரு விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்த திலீப்பை அடையாளம் கண்டார் சேரன்...
“இவர்தானே ஹீரோ?” ஒருமுறை ஊர்சிதப்படுத்தினார்...
“தர்ட் ஹீரோ சார் இயக்குனர் திருத்தினார்...
“இல்ல... இவர்தான் கதையோட ஹீரோ... வேகமாய் நடந்து, திலீப்பின் கைகளை பிடித்து குலுக்கினார்... “ரொம்ப நல்லா பண்ணிருக்கிங்க... அடுத்த படத்தையும் கவனமா தேர்ந்தெடுத்து நடிங்க, ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு நீங்கதான் பீக் முதுகை தட்டிக்கொடுத்தார்...
சிறகில்லாமல் பறக்கத்தொடங்கினான் திலீப்... பலரும் ஒன்றன் பின் ஒருவராய் வந்து தேடி வாழ்த்த, விண்வெளியில் பறக்கத்தொடங்கினான்...
“படம் ரிலீஸ் ஆகிட்டா கால்ஷீட் கஷ்டமாகிடும், என் அடுத்த படத்துல ஹீரோவா பண்றீங்களா திலீப்? கார்த்திக் சுப்புராஜ் நேரடியாகவே கேட்டுவிட்டார்... பேச வார்த்தை வரவே மறுத்தது... “சார், இதுக்கென்ன கேட்கணுமா?... கரும்பு தின்ன கூலியா?... எப்போ ஷூட்னு சொல்லுங்க சார், வந்து நிக்குறேன்! கட்டிப்பிடித்து நன்றிகளை கொட்டினான்...
மகியின் முகம் இருண்டது, ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாது அங்கிருந்து விலகி வெளியே வந்துவிட்டான்...
அரை மணி நேரத்திற்கு பிறகு, சுமக்க முடியாத அளவிற்கான வாழ்த்துகளை சிரமப்பட்டு சுமந்து வந்தான் திலீப்...
வீட்டிற்கு சென்று, நடந்த கதைகளை ஒன்றுவிடாமல் வாசுவிடம் கொட்டினான் திலீப்...
“சூப்பர்டா... அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்து ஹீரோவா?... பீட்சா, ஜிகர்தண்டா போல மாஸ் ஹிட்தான் அதுவும்!... கலக்குடா.. கைபிடித்து வாழ்த்தினான்...
“நீ இவ்ளோ சந்தோஷப்படுற... உன் ப்ரென்ட் இதுல விருப்பமே இல்லாதது போல உக்காந்திருக்கான் பாரு!
இருக்கையில் அமர்ந்து உள்ளங்கை ரேகையினை அழுத்திக்கொண்டிருக்கிறான், ஏதோ நினைவுகளுக்குள் ஆட்பட்டு விட்டதனை போல...
“ஏன் மகி, கார்த்திக் படத்துல திலீப் நடிக்கிறது பிடிக்கலையா?... ரெண்டு மூணு ஹீரோ வச்சு படம் எடுப்பார்னு பயப்படுறியோ?
“யார் படத்துல நடிக்குறதும் எனக்கு பிரச்சின இல்ல வாசு... ஆனா, சட்டுன்னு அவர் கேட்டதும் மாமா ஒத்திருக்க வேணாமேன்னு தோணுது... ஒரு உயரத்துக்கு வந்தப்புறம் எதையும் கொஞ்சம் யோசிக்கணுமில்லையா?.. படில ஏறுறப்போ மேல இருக்குற படி உறுதியா இருக்கான்னு தெரிஞ்சப்புறம்தானே காலை வைக்கணும்?
“கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு அப்டி யோசிக்கணும்னு அவசியம் இல்லையே?
“அசிஸ்டன்ட் டைரக்டர் குமார் எடுக்கப்போற படத்துக்கும் ஓகே சொன்னதை மறந்துட்டிங்களா?
“சினி இண்டஸ்ட்ரிய பொருத்தவரைக்கும் ‘சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் மனநிலையோட இருந்தா மட்டும்தான் மகி பிழைக்கமுடியும்.. புலிகிட்டேந்து மான் தப்பிக்கணும்னா, ஓடுறப்போ பூச்சிகள் கஷ்டப்படும்னு பாவம் பார்த்தா என்னாகறது?
“இந்த மைண்ட்செட் எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா.. நமக்கு உதவி பண்ணவங்கள பூச்சியா புழுவா நினைக்கலாமா? அது தப்பில்லையா?.. ஒருத்தவங்களுக்கு கொடுத்த வாக்குறுதிய காப்பாத்த முடியலைன்னா, நம்ம தவறை மறைக்குறதுக்கு இப்டி காரணங்கள தேடி ஓடிடுறோம்...
“கார்த்திக்குக்கு ஓகே சொன்னது தப்புங்குறியா?
“இல்ல மாமா... குமாருக்கு நீ அவசரத்துல ஓகே சொல்லிட்ட, இப்போ சட்டுன்னு கார்த்திக்குக்கும் அதே அவசரம்... பாவம் அந்த குமார் முகம் வாடிப்போச்சு... நாளைக்கு நீ ஆசையா ஷூட்டிங் போய் நிக்குறப்போ, உனக்கு பதிலா இன்னொரு ஹீரோவ நடிக்கச்சொன்னா எப்டி மனசு வலிக்கும்... அப்டி ஈட்டியால குத்துற வலிய குமார் கண்ணுல பார்த்தேன்... அட்லீஸ்ட் அவரை எதாச்சும் காரணம் சொல்லி சமாளிச்சபிறகாவது, கார்த்திக்குக்கு ஓகே சொல்லிருக்கலாம்..  சினிமாவ பொருத்தவரைக்கும் ஏறுற வேகத்தைவிட ரொம்ப சீக்கிரம் கீழ விழுந்திடுற ஆபத்து அதிகம்.. அந்த மாதிரி கஷ்டமான நேரத்துல, நீ புழுவா பூச்சியா நினைக்குற நல்லவங்க நாலு பேருதான் நம்ம கூட நிப்பாங்க.. வாய்ப்புகள் எப்போ வேணாலும் வரலாம் மாமா.. நல்ல மனுஷங்க அப்டி இல்ல, கிடைக்குறது ரொம்ப அபூர்வம்...
திலீப் மெளனமாக அமர்ந்திருந்தான்.. மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணங்களில், பொதுவாகவே நாம் அக்கம்பக்கம் கவனிக்க மறந்துவிடுவோம்.. அப்படியோர் கண்கட்டிய சூழலில் இருந்த திலீப்பும், குமாரை கவனித்திருக்க வாய்ப்பில்லை... முதல் படம் எடுக்கப்போவதாய் எத்தனை கனவுகள் கண்டிருப்பான்!... அன்றைக்கு அலைபேசியில் தயாரிப்பாளர் சம்மதம் சொன்னபோது அவன் வார்த்தைகளில் எவ்வளவு உற்சாகம்!... தவறுதான்.. இந்த அவசர குணத்தை இனியாவது மாத்திக்கணும்!...
இருக்கையை திலீப்பின் வெகு அருகில் இழுத்துப்போட்டு, அருகில் அமர்ந்து தோளில் கைவைத்தான் மகி.. யோசனையில் இன்னும் ஆழ்ந்திருக்கும் திலீப், தடுமாற்றத்துடன் மகியை பார்க்கிறான்...
“என்ன மாமா உடைஞ்சு போய்ட்ட?... இப்போ இதல்லாம் நான் சொல்லிருக்க கூடாதுதான், ஆனாலும் மனசு கேட்கல... நீ ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்க, எந்த தருணத்திலேயும் கீழ விழுந்திடக்கூடாதுன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ள உறுத்திகிட்டே இருக்கு... இது ஒன்னும் சமாளிக்க முடியாத விஷயம் இல்ல மாமா, முதல்ல நீ ரிலாக்ஸ் ஆகு தலைமுடிகளை கோதி கலைத்துவிட்டான்...
‘எப்படி? என்பதைப்போல ,மகியை ஆர்வத்தோடு பார்த்தான்...
“முதல்ல குமாருக்கு கால் பண்ணி உன் நிலையை விளக்கி சொல்லு மாமா.. வெளிப்படையாவே மன்னிப்பு கேளு
“மன்னிப்பல்லாம் எதுக்கு?... நான் ஒன்னும் தப்பு பண்ணலையே அவசரமாக திமிறி எழுந்தது ஈகோ...
“தப்பு என்னன்னு யோசிக்குற நேரமில்ல மாமா இது... நம்ம நண்பன் ஒருத்தன் மனக்கஷ்டத்துல இருக்குறப்போ ஈகோ என்ன மாமா வேண்டிக்கெடக்கு?... ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க, அப்புறம் மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க!
‘தப்... தப்... தப்... ஏதோ கைத்தட்டல் ஓசை கேட்க, திடுக்கிட்டு மூவரின் கண்களும் வாசலை நோக்கி பாய்ந்தது... அரைகுறையாய் திறந்த கதவினுக்கு இடையே குமார்தான் நிற்கிறான்... கதவை யார் திறந்துபோட்டது? மகி யோசித்தான்.. உற்சாக மிகுதியில் உள்ளே நுழைந்த திலீப்புக்கு கதவை சாத்தவேண்டும் என்கிற எண்ணம் வந்திருந்தால்தான் அது ஆச்சர்யம்...
“வாங்க குமார்... உட்காருங்க நிதானித்து எழுந்து வரவேற்று இருக்கையை போட்டான் மகி...
வேகமாய் உள்ளே நுழைந்த குமார், அதே வேகத்தில் ஓடிவந்து மகியை கட்டி அணைத்தான்.. என்ன? ஏது? என்று யோசிப்பதற்குள், “ரொம்ப நன்றி மகி... என்னையும் ஒரு மனுஷனா நெனச்சு இவ்ளோ பேசினதே போதும்பா... இதுவரைக்கும் திலீப், கார்த்திக் படத்துக்கு ஒப்புகிட்டதுல கொஞ்சம் மனசு நெருடல் இருக்கத்தான் செஞ்சுது... இப்போ சுத்தமாகிடுச்சு, மனசார சொல்றேன் திலீப் அவர் விருப்பப்படி வேற படத்துல நடிக்கட்டும்பிடியை தளர்த்தி மகியின் கண்களை பார்த்து சொன்னபோது, அவனை மீறி கண்ணீர் வழிந்தது...
“ஏய் என்னப்பா கண் கலங்கிக்கிட்டு... உட்காருங்க முதல்ல! இருக்கையில் அமரச்செய்து, ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து குடிக்கச்செய்தான்.. குமாரின் கைகள் நடுங்கிக்கொண்டிருக்கிறது, இவ்வளவு உணர்ச்சிவயப்படுபவராக யாரும் கற்பனை கூட செய்திடாத அளவிற்கு எதார்த்தவாதிதான்... என்றாலும் சில நேரங்களில் சூழல், நம்முடைய இயல்புநிலையை புரட்டிப்போட்டுவிடும் வலிமை வாய்ந்தது...
“சினி பீல்டுல ஜெய்ச்சவங்க மட்டும்தான் எல்லாருக்கும் தெரிவாங்க மகி... ஐஸ்பெர்க் கூற்று மாதிரி, இங்க அடிவாங்கி விழுந்து எழமுடியாம கெடக்குறவன்தான் அதிகம்.. எங்கள மாதிரி ஆளுங்கள ஒரு மனுஷனா கூட வெளில மதிக்க மாட்டாங்க, ஏன் ஒரு பொருட்டா கூட நெனைக்க மாட்டாங்க... அப்டி அவமானங்கள மட்டுமே பார்த்துவந்த என்னை ஒரு மனுஷனா மதிச்சு நீ பேசினத பார்க்குறப்போ என் கண்ட்ரோலை இழந்துட்டேன் மகி... சாரி கொஞ்சம் ஓவரா எமோஷனல் ஆகிட்டேன்! கண்களை துடைத்துக்கொண்டு, சிரமப்பட்டு தன்னை இயல்பாக்க எத்தனித்தான்...
திலீப்தான் எதுவும் பேசத்தகுதியற்றவனாக தடுமாறி நிற்கிறான்... கைகளால் ஜாகை செய்து, திலீப்பை பேசச்சொல்கிறான் மகி...
எதை எடுப்பது? எதை விடுப்பது? புரியாத குழப்பத்தில் பேச்சினை தொடங்க சிரமப்பட்டான் திலீப்...
இருக்கையை விட்டு எழுந்து சென்ற குமார், திலீப்பை கட்டிப்பிடித்து சூழலின் இறுக்கத்தை தளர்த்தினான்...
“ரிலாக்ஸ் திலீப்... ஒரு கில்ட்டி பீலிங்கும் வேணாம்... இயல்பாக பேசுகிறான்...
குமார் இவ்வளவு இறங்கிவருவதுதான், திலீப்பை இன்னும் அதிக குற்றவுணர்ச்சிக்கு பிடித்துத்தள்ளியது... இனியும் அமைதியை கடைபிடித்தால், இன்னும் மோசமான விளைவுகளுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம் என்கிற அச்ச உணர்வில் தடுமாற்றம் தவிர்த்து மன்னிப்பு கேட்டான் திலீப்...
“ரொம்ப சாரி குமார்.. அந்த நேரத்துல எப்டி ரியாக்ட் பண்றதுன்னே எனக்கு புரியாம பண்ணிட்டேன்... வெரி சாரி!
“ஐயோ விடுப்பா... இது விஷயமே இல்ல... இப்ப என்ன மோசமா போச்சு?.. கார்த்திக் படத்துல நீ நடி, எப்டியும் ஆறு மாசத்துல ஷூட்டிங் முடியப்போகுது... அப்புறம் நம்ம ப்ராஜெக்ட் பண்ணலாம்.. ரெண்டு படம் ஹிட் ஆன ஹீரோவ வச்சு படம் செய்றப்போ எனக்கும் கூடுதல் நம்பிக்கை வரும்ல!
“இல்ல குமார்... நான் உன் படத்துலதான் நடிக்குறேன்... கார்த்திக் கிட்ட நான் பேசிக்கறேன்... எனக்கு உன்மேல முழு நம்பிக்கை இருக்கு... இதை ஏதோ வாக்கு கொடுத்ததுனால சொல்றதா நெனைக்காத... உன் டேலன்ட்டை நேர்ல பார்த்திருக்கேன், உன்னால சூப்பர் ஹிட் படத்தை எடுக்க முடியும்னு நம்புறேன்... ப்ரட்யூசர் கிட்ட சொல்லி, பூஜைக்கான வேலைகள பாரு!
தீர்மானமாக சொல்கிறான் திலீப்... இம்முறை அவசரத்தில் வார்த்தைகளை கொட்டவில்லை, நிதானமாக யோசித்தபிறகே சொல்வதாக படுகிறது..
“முதல்ல ஷூட்டிங் ஆரமிக்குற வேலைய பாரு! மேற்கொண்டு குமாரை எதுவும் பேசவிடவில்லை... மனதினுள் தித்திப்பான மகிழ்ச்சியோடு அங்கிருந்து வெளியேறினான் குமார்...
திலீப்பின் அருகிலிருந்த மகி, அப்படியே அவனை பின்புறமாக கட்டி அணைத்தான்...
“லவ் யூ மாமா... இப்டி ரொம்ப நல்லவனா என் மாமாவ பார்க்குறப்போ ரொம்ப பெருமையா இருக்கு மாமா கழுத்தினில் முத்தம் கொடுத்தான்...

                                 ***********
“ஹலோ ராயல் ப்ரொடக்சன்ஸ்லருந்து பேசுறேன்.. திலீப் இருக்காரா?, எம்டி சார் பேசுவார் கனெக்ட் பண்றேன்... ஒரு இளம்பெண்ணின் குரல் ஒலித்து, நான்கைந்து பீப்களுக்கு பிறகு இணைப்பு கொடுக்கப்படும்வரை அமைதியாக காத்திருந்தான் திலீப்..
“எப்பா திலீப் நாயர், எப்டி இருக்க?”  நீண்ட காலத்திற்கு பிறகு அந்த பித்தளைக்குரல்... ‘சைலஜாகூட படுத்தப்போ மட்டும் இனிச்சுச்சோ?ன்னு முகத்தில் அறைந்தாற்போல அவமானப்படுத்திய அதே குரல்...
“இருக்கேன் சார், ஏதோ உங்க புண்ணியத்துல! சற்று ஏளன தொனியுடன் பதில் சொன்னான்...
“என்ன உன்னப்பத்தி என்னென்னமோ பேச்சு அடிபடுது.. நீ அந்த கார்த்திக் சுப்புராஜ் படத்துல நடிக்கப்போறதா ஒருபக்கம் பேசுறானுக, மறுபக்கம் ஏதோ புது டைரக்டர் படத்துல நடிக்கப்போறன்னு பூஜைக்கு இன்விட்டேஷன் கொடுக்குறாணுக... அப்டிலாம் எந்த கமிட்மென்ட்க்கும் போய்டாத... நம்ம ராயல் ப்ரொடக்சன்ஸ்க்கு ரெண்டு படம் பண்ணிட்டு மத்த விஷயத்துக்கு போ.. அவசரப்பட்டு சந்தனம்னு நெனச்சு சாக்கடைல குதிச்சிடாத! ஹ ஹா.. அந்த சிரிப்பில்தான் அத்துனை குரூரம்... இவன் என்னை மீறி எங்கே போய்விட முடியும் என்கிற ஆணவம்..
திலீப்பிற்கு சுர்ரென தலைக்கு மேல் ஏறியது... “சந்தனம்னு நெனச்சு ஏற்கனவே ஒரு சாணில புரண்டுட்டேன்... இனி அப்டி தப்பை பண்ணிட மாட்டேன் முதலாளி!
“ஒரு படம் ஹிட் ஆகிட்டா உங்க தலைல கொம்பு மொளச்சிடுமே!... ஆக்கத்தெரிஞ்ச எனக்கு அழிக்க எவ்வளவு நேரமாகும்?... நான் உனக்கு சாணியா தெரியுறேனா?... த்தா... நெற்றி வியர்க்க, கழுத்து நரம்பு புடைக்க கோபத்தின் எல்லையை எட்டிப்பிடித்துவிட்டார்...
“இதவிட சூப்பர் டயலாக்லாம் நிறைய பேசிருக்கேன், முதல்ல தண்ணிய குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகுங்க முதலாளி... அப்புறம் இன்னொரு விஷயம்... படுத்தவனை பையன்னு விளம்பரப்படுத்த தெரிஞ்ச உங்ககிட்ட, உங்க பசங்களையும் கவனமா இருக்க சொல்லுங்க!
அழைப்பு துண்டிக்கப்பட்டது... திலீப்பின் முகத்தில் ஏதோ சாதித்த பெருமிதம்... இவ்வளவு நாளும் பயந்து ஒடுங்கி, அடித்த அடிகளுக்கு குனிந்தே பணிந்துபோன ஒரு அடிமை, துணிச்சலாக எழுந்து நின்று அடிக்க வந்த கையை ஒடித்த பெருமிதம் அது... வேடனின் வலையில் சிக்கிய புறா, அதனை அறுத்தெறிந்துவிட்டு வேடனையே கொத்தி குதறிவிட்டு பறந்த சுதந்திர பெருமிதம்!...
இப்போ அந்த முதலாளியின் முகத்தில் வெடித்துக்கொண்டிருக்கும் எள்ளையும் கொள்ளையும் ரசிக்க வேண்டுமென்கிற சாடிஸ மனநிலை கூட தோன்றியது... சரியா? தவறா? வரம்பு மீறிய பேச்சா? என்று யோசிக்கவல்லாம் தோன்றவில்லை.. இத்தனை நாள் அழுத்திக்கொண்டிருந்த வலியை, தூக்கி எரிந்துவிட்டதை போல ஒரு நிவாரணி இது, அவ்வளவுதான்... “எதைத்திண்ணுடா இப்டி வளர்த்து வச்சிருக்க?!ன்னு இனி அவனால் எவரிடமும் கேட்டிடமுடியாது, கெட்டொழியட்டும் பாவி...
குளியலறைக்குள் சென்று ஷவரை போட்டுவிட்டு, அப்படியே சிலை போல நின்றான்... உடம்பின் அழுக்குகளை தாண்டி, மனதின் அசுத்தங்களும் கரைந்துபோவதை போல உணர்கிறான்... அவ்வப்போது தன்மீது வீசிய மல்லிகைப்பூ நாற்றமும், நீரில் அடித்துச்செல்லப்பட்டது...
மகியிடம் இதைப்பற்றியல்லாம் சொல்லவேண்டாம்.. இதற்கும் ஒரு காரண காரியங்களை சொல்லி, அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னாலும் சொல்வான்...
தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்த திலீப்பை மகி ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.. அந்த பார்வையே, மனதிற்குள் மறைந்திருக்கும் உண்மைகளை தட்டி வெளியாக்கிவிடுமோ? என்கிற பதற்றம் திலீப்பினுள்...
“என்ன மாமா இந்த நேரத்துல குளிச்சிட்டு வர்ற?
“அது... கசகசன்னு இருந்துச்சு, அதான்.. துண்டால் முகத்தை மறைத்துக்கொண்டான்...
“நாளைக்கு படபூஜைக்கு ராயல் ப்ரொடக்சன்ஸ் எம்டியை இன்வைட் பண்ணிருக்காங்களாம்... பழசை ஏதும் மனசுல வச்சிட்டு ரியாக்ட் பண்ணிடாத மாமா... பழிவாங்குறதல்லாம் நம்ம ஒரு ஸ்டேஜ்க்கு போனப்புறம் பண்ணிக்கலாம்..
“ஹ்ம்ம்... சரி.. அதற்கு மேல் அந்த வாதத்தை வளர்த்தால், மொத்தமும் தெரிந்துவிடும் என்பதால்தான் இந்த அளவான பதில்... மகிக்குத்தான் ஆச்சர்யம்... இப்படி சொல்வதற்கு மாமா வானுக்கும் பூமிக்கும் குதிக்கப்போவதாய் நினைத்த மகிக்கு, இந்த உடனடி ‘சரி சற்று ஆச்சர்யத்தை உண்டாக்கியது...
‘பரவாயில்லையே... மாமா இப்போலாம் ரொம்ப பக்குவப்பட்டுட்டார்! பெருமிதப்பட்டுக்கொண்டான் மகி...
“ஹலோ குமார், மாமா அதை ரொம்ப ஈசியா எடுத்துகிட்டார்... ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா! சிலாகித்து புகழ்ந்தான்... ஆனால் படுக்கையில் படுத்துக்கொண்டு, சற்று முன்பு முதலாளியிடம் பேசியதை அசைபோட்டுக்கொண்டிருந்த திலீப்பின் மனதிற்குள் இன்னும் கொஞ்சம் பழிதீர்க்கும் நெருப்பு கனன்றுகொண்டுதான் இருக்கிறது... அது நெருப்புக்குழம்பாய் வெடிக்கப்போகும் சூழலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறான்...
மறுநாள் காலை படத்திற்கான பூஜை வேலைகளை ஓடியாடி பார்த்துக்கொண்டிருந்தார் மாமா... அரங்கத்தின் வாயிலில் வாழைமரம் கட்டிக்கொண்டிருந்தவரிடம், “எதுக்கு மாமா இதல்லாம்?... வேணும்னா பிளாஸ்டிக் வாழைமரம் செட்ல இருக்கும், வச்சிருக்கலாம்ல? அக்கறையாக சொன்னான் குமார்...
“ஏம்பா நீயல்லாம் டைரக்டரா?... குலை தள்ளிய வாழைமரம் மாதிரி, நாம செய்ற நல்ல விஷயம் தழச்சு வளரணும்னுதான் இதை கட்டுறது... பிளாஸ்டிக் மரம் மாதிரி, ஒன்னத்துக்கும் ஒதவாத விஷயமா ஆகக்கூடாது!
செயற்கை அலங்காரங்களையும் தாண்டி, மாணிக்கத்தின் இயற்கை ஒப்பனை கூடுதல் கவர்ச்சியாய் தெரிந்தது... சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராய் வர, அவர்களை வரவேற்று இருக்கைகளில் அமரச்செய்துகொண்டிருந்தான் திலீப்... “அடுத்த வாரம் உங்க ‘களம் படம் ரிலீசாமே? பலரது கேள்விக்கும் சிந்திய புன்னகையோடு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்...
“ஹாய் திலீப்.. ஓடிவந்து கட்டிப்பிடித்தாள் உதிஷா... நடுப்பக்க கிசுகிசுவிற்கு ஒன்லைன் கொடுத்துவிட்டாள், பாதகி... அசட்டுச்சிரிப்போடு, அவளை நகர்த்தி அமரச்செய்தான்...
இடையில் சற்றும் எதிர்பாராத வகையில், ராயல் எம்டி தனது வழக்கமான பட்டு ஜிப்பாவுடன் நடந்து வந்ததனை தலீப் சற்றும் எதிர்பார்க்கவில்லை... அவ்வளவு கேவலமாக பேசியும், அதே சிரிப்பு மாறாமல் வந்திருக்கிறான்... சூடு கண்ட பூனை, என்ன விஷமத்திற்காக காத்திருக்கிறதோ?... சற்று நிதானத்துடன் அவனை கையாள வேண்டும்.. திலீப்பின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது..
இப்படி யோசித்தபடியே நின்றபொழுது, சற்றும் எதிர்பார்க்காத வகையில் திலீப்பின் அருகில் உருண்டு வந்து அவனை கட்டிப்பிடித்து ஆரத்தழுவினார் எம்டி... தசைகள் வலுவிழந்து பொறிக்குள் சிக்கிய எலியாக திகைத்தபடியே செயலற்று போயிருந்தான் திலீப்.. நான்கைந்து கேமராக்கள் ப்ளாஷ் அடிக்க, திலீப்பின் தோள் மீது கை அணைத்து போஸ் கொடுத்தார்..
ஒரு ஆர்வக்கோளாறு அவசரமாக ஓடிவந்து, “உங்க அறிமுக ஹீரோ மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கிங்க, ஏன் ரெண்டாவது படமே இவர் வேற பேனர்ல பண்றார்? தூண்டிலை போட்டுவிட்டு மீனுக்காக காத்திருந்தான்..
“ஒரு சின்ன திருத்தம்... திலீப் நாயர் என் அறிமுக நாயகன் இல்ல, என் பையன் மாதிரி.. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்னு வள்ளுவர் சொன்னது போல, வேற நிறைய இடங்களுக்கு போய் சாதிச்சு காட்டுறப்போதான் என் பையனை நினச்சு நான் கூடுதல் பெருமைப்படுவேன்...
ஓடிவந்த குமார், எம்டிக்கு சால்வை அணிவித்து, மேடையை நோக்கி கைத்தாங்கலாக அழைத்துச்சென்றான்..
இன்னும் பதற்றம் தணியாமல் மேடையை வெறித்துக்கொண்டிருந்தான் திலீப்...
“ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா... திலீப்பின் தோள் தொட்டு சிலிர்த்துக்கொண்டான் மகி...
“வேற பேனர்ல படம் பண்றதுல அவரும் கெளரவம் பார்க்கல, அவர் செஞ்ச தவறுகள நீயும் பொருட்படுத்தல.. இப்டி ஆரோக்கியமான சூழல்தான் உன் எதிர்காலத்துக்கு நல்லது மாமா... எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வச்சாப்ல இருக்குநெகிழ்ச்சியாய் உருகினான்...
வெறும் உதட்டளவில் சிரித்துக்கொண்டான் திலீப்... மனதிற்குள் ஒரு புதுவித உணர்வு அரும்பியது.. அடிவயிற்றினுள் ஒரு குறுகுறுப்பான உணர்வு, நெஞ்சு படபடக்க, இயல்பை மீறி வழிகிறது வியர்வை... இதற்கு பெயர்தான் பயமா?... அவசரப்பட்டுவிட்டேனோ? என்கிற கேள்வி எட்டுத்திசைகளிலும் பரபரத்தது...
தவறு செய்தவன் அவன், எதற்காக நான் பயப்படனும்? என்கிற லாஜிக்கல் கேள்வியை எழுப்ப முயன்ற அறிவின் முயற்சி, துளிர்த்த கணமே கருகிப்போனது.. அடிபட்ட விஷப்பாம்பு துரத்துகையில், லாஜிக் கேள்விகளுக்கு அங்கே இடமேது?.. எப்படியாவது தப்பிக்க வேண்டும்! என்கிற ஒற்றை சிந்தனை மட்டும்தான் அவனுள்...
மேடையின் சிம்மாசன இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த நபரின் முகத்தில் கொஞ்சமும் சலனமில்லை... அருகில் அமர்ந்திருக்கும் இசையமைப்பாளரிடம் ஏதோ ஹாஸ்யம் பேசி சிரித்துக்கொண்டிருக்கிறார்..
“திலீப், ஸ்டேஜுக்கு வாங்க! மறுபுறத்தில் போடப்பட்ட காலி இருக்கையை கைகாட்டியபடி சொல்கிறார்...
மறுக்க முடியாமல் அங்கு சென்று அமர்ந்துகொண்டான்... பூஜைக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களின் பெயர்களை சொல்லி வரவேற்றுக்கொண்டிருந்தாள் ஒரு சீரியல் நாயகி... இந்த படத்தில் திலீப்பின் தங்கை கதாப்பாத்திரமாம் அவள்...
“தொட்டதல்லாம் துலங்க, பட்டதெல்லாம் பெருக தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா தயாரிப்பு நிறுவனமாம் ராயல் ப்ரொடக்சன்ஸ் எம்டி அவர்களே...! இந்த அடைமொழியல்லாம் ரொம்ப அவசியமா இப்போ?, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் திலீப்..
“அந்த பொண்ணு சரியாத்தான் சொல்லுது, நான் தொட்டது என்னிக்கும் துலங்காம இருந்ததில்ல!திலீப்பின் காதருகில் கிசுகிசுத்தார்... என்ன ஒரு வக்கிரமான உவமானம்...
எதிரே வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியை அப்படியே தூக்கி, அந்த சொட்டைத்தலையில் அடிக்கவேண்டும் என்பது போல கோபம் அவன் தலைக்கு மேல் ஏறியிருந்தது... வெளிக்காட்டிக்கொள்ளாமல், அதனை கிரகித்துக்கொண்டான்...
பூஜை முடிந்து, ஒவ்வொருவராக மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது சற்று நிதானமானான் திலீப்.. நிகழ்ச்சியும் முடியப்போகிறது, இதற்கு மேல் ஆபத்தெதுவும் வந்துவிடும் வாய்ப்புகள் குறைவுதான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அரங்கின் ஒரு பகுதியில் சிறு சலசலப்பு...
நான்கைந்து காவல் துறையினர் அரங்கத்தை கிழித்து மேடையை நோக்கி முன்னேற, சில யூனிட் ஆட்கள் ஏதோ சமாதானம் பேசுகிறார்கள்... அவற்றை மீறி மேடையை அந்த காவலர்கள் அடைந்து திலீப்பின் எதிரே வந்து நிற்கும்போது, ஏதோ ஒரு மிகப்பெரிய அசம்பாவிதத்தின் தொடக்கப்புள்ளியாக அது திலீப்பிற்கு தோன்றியது...
“என்ன?... என்ன சார் வேணும் உங்களுக்கு? திலீப்பை இடைமறித்து நின்றான் குமார்... பத்திரிகையாளர்கள் சரமாரியாக ப்ளாஷ் அடிக்க, “அவங்கள கிளியர் பண்ணுங்கப்பா... படப்பிடிப்பு குழுவினரிடம் சத்தத்தை உயர்த்தினான்..
மேடைக்கு கீழே நிருபர்களுக்கும் குழுவினருக்கும் இடையில் ஒரு சலசலப்பு, மெலிதான கைகலப்பாக திசைமாறிக்கொண்டிருந்தது...
“திலீப்பை அரெஸ்ட் பண்ண வாரன்ட் போட்ருக்கு சார்...
“அரெஸ்ட் பண்ணவா?... என்ன காரணம்?
“ஐபிசி செக்சன் 377 பைல் ஆகிருக்கு... திலீப் ஒரு பையனுக்கு ஹோமோசெக்சுவல் டார்ச்சர் கொடுத்ததா கம்ப்ளைன்ட் வந்திருக்கு.. அந்த அரசாணையை குமாரின் கையில் திணித்தார் காவலர்... மேடையில் நின்றிருந்த அத்தனை நபர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்... மகி சற்று விலகி நின்றுகொண்டான், வெளிப்படையாக மீடியாவிற்கு தெரிந்த தனது பாலீர்ப்பால் திலீப்பிற்கு சிக்கல் வருமோ? என்கிற முன்னெச்சரிக்கை விலகல் அது...
“என்னது திலீப் ஹோமோசெக்ஸ் தொல்லை கொடுத்தானா?... என் மகன் அப்புடியல்லாம் இல்ல... எவன்யா அது கம்ப்ளைன்ட் கொடுத்தது? ராயல் எம்டி உயர்த்திய குரலில், அரங்கின் எட்டுத்திசைகளிலும் ‘ஹோமோவாம்... செக்ஸுவல் ஹராஸ்மென்ட்என பலரது வாய்களும் முணுமுணுத்தது...
“அந்த பையன் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் சார்... பேரு கூட மிதுன்... எங்களால ஒன்னும் பண்ண முடியாது... கேஸ் ரெஜிஸ்டர் பண்ணியாச்சு, அதனாலதான்... தன்மையாக பேசினார்...
“இப்ப என்ன வேணும்?... இன்னும் ஒரு மணி நேரத்துல பெயில் ஆர்டர் உங்க கைக்கு வரும், இப்ப கெளம்புங்க...
“சார்... இது கொஞ்சம் சென்சிட்டிவ் இஸ்யூ... பின்னாடி எங்களுக்கு எதாச்சும் பிரச்சின வந்துட்டா.... இழுத்தார்...
“உங்க எஸ்பி கிட்ட பேசட்டுமா?... இல்ல, மினிஸ்டர் யாரும் சொல்லனுமா?.. சினிமா ஆர்டிஸ்ட்னு வந்தா கொஞ்சம் அப்டி இப்டிதான் இருப்பாங்க... அதல்லாம் பெருசு பண்ணாம வேற வேலைய பாருங்க... ஏதும் சிக்கல் வந்தா நான் பொறுப்பு!
ஒருவழியாக காவலர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்னரும், திலீப் அதிர்ச்சியிலிருந்து மீளாது நின்றிருந்தான்... யார் புகார் கொடுத்தது?.. விளையாட்டாய் சிரித்துப்பேசிய அந்த மிதுனா?.. அப்படி என்ன வன்மம் என் மீது?.. விளையாட்டாய் அன்று நிகழ்ந்த சம்பவத்துக்கு பழி தீர்க்கவா இவ்வளவு மூர்க்கம்?... இருந்திட வாய்ப்பில்லை, அவ்வளவு குரூர மனம் படைத்தவனில்லையே அவன்...
அரங்கம் வெறுமையானது.. திலீப் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்க, ஆறுதல் வார்த்தைகள் கிடைக்காமல் அருகில் மெளனமாக அமர்ந்திருந்தான் மகி...
“வீட்டுக்கு போலாம் மாமா... தோளில் கைவைத்தான்...
உடைந்துபோயிருந்த திலீப்பின் கண்கள் நீரை சுரந்தது.. அழுகிறான்.. மகிக்கு இதயத்தை கூறு கூறாக அறுத்துப்போட்டதனை போன்ற உணர்வு... அவன் அருகிலேயே இருந்தும்கூட, இப்படி அழும் அளவிற்கு சூழலை கண்டுகொள்ளாமல் விட்டதன் வருத்தம்தான் அந்த வலி..
“ஐயோ... மாமா அழாத... என்ன பிரச்சினையா இருந்தாலும் சரி பண்ணிடலாம்... மனசை விட்டுறாத மாமா... தானும் அழுதுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்...
திலீப்பை கைத்தாங்கலாக அழைத்து வாசலை நோக்கி நகர்ந்தபோது, ராயல் எம்டியின் கார் வாயிலில் வந்து நின்றது... உள்ளிருந்து எம்டியுடன் மாணிக்கம் மாமாவும், ஒரு வழக்கறிஞரும் இறங்கினார்கள்..
“என்ன திலீப் கண்ணல்லாம் கலங்கிக்கிட்டு?.. இந்தா வாங்கியாச்சுல்ல ஜாமீன்... ஒரு கையெழுத்து மட்டும் போடு, இப்பவே சரி பண்ணிடலாம்.. சிரித்துக்கொண்டே நகர்ந்து வந்தார் எம்டி..
திலீப் கையெழுத்திட, அதனை எடுத்துக்கொண்டு வழக்கறிஞரை அழைத்துசென்றார் மாணிக்கம்...
சற்று மனம் இளைப்பாறியது திலீப்பிற்கு... ஒரு தற்காலிக நிவாரணம்தான் இது... உடல் முழுவதும் கொழுந்துவிட்டு எறிந்த நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல... தீக்காயமும், வலியும் இனிதான் அதன் வீரியத்தை காட்டப்போகிறது!..
“இப்போ சந்தோஷமா திலீப்பு? அலட்சியமாக சிரித்தார் எம்டி..
“ரொம்ப நன்றி சார்...
“இன்னொரு விஷயத்தை மறுபடியும் சொல்றேன், ஆக்கத்தெரிஞ்ச எனக்கு எப்புடி அழிக்க முடிஞ்சுதுன்னு பார்த்தியா?... உன் புது ப்ரட்யூசர் துண்டைக்கானும், துணியக்காணும்னு ஓடிட்டான்.. முதல் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே பேரு நாறிப்போன ஹீரோ நீதான்.. ஹ ஹா... வக்கிரமாக சிரித்தார்..
சிறிது புரிந்தும், சற்று குழப்பம் மேலிட அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் திலீப்..
“என்ன பண்றது?... கொஞ்சம் கூடுதலா செலவாகிடுச்சு... அந்த மிதுன் பையன் ரொம்பத்தான் அலட்டிகிட்டான், உனக்கு சொன்ன மாதிரி ஹீரோ சான்ஸ்ன்னு சொன்னதும் சரின்னுட்டான்... அப்புறம் எஸ்பிக்கு போன் பண்ணி உடனே கேஸ் பைல் பண்ண சொல்லி, சரியா நிகழ்ச்சி நடக்குறப்போ போலிசை வரச்சொன்னேன்... இதே மாதிரி ஒரு மீட்டிங்க்ல சபேஷ் என்னைய பழிவாங்க போறான்னு சொல்லி, ஒரு கதையை கட்டுனிங்களே ஞாபகம் இருக்கா?... அதோட அப்டேட்டட் வெர்ஷன்தான் இது... இப்பக்கூட உன்கூட படுத்த பாவத்துக்காகத்தான், வக்கீல் வரைக்கும் செலவு பண்ணேன்... இனியாச்சும் யார்கிட்ட எப்புடி நடந்துக்கணும்னு தெரிஞ்சுக்க! சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து காரில் ஏறி புறப்படும் வரையிலும் திகைத்தபடியே நின்றான் திலீப்...
இப்போதுதான் பனி படலம் விலகிய கண்ணாடிப்பேழையை போல எல்லாம் தெளிவானது திலீப்பிற்கு... மிதுன் என்கிற பொம்மையை ஆட்டிவைத்திட்ட கொடூர முகம் யாரென்பது புலப்பட்டது.. அந்த கொழுத்த காட்டேரி அடித்தபோது திமிறி எழுந்த குற்றத்துக்கு, தண்டனையாக விழுந்ததுதான் இந்த முதுகில் குத்து.. எல்லாம் இழந்ததை போன்ற ஒரு வெறுமை மனதிற்குள் நிலைத்தது.. ஏறிய படிகள் அனைத்தும் சரிந்து தரையில் விழுந்ததை போன்று தொடங்கிய இடத்திற்கு வந்துவிட்டான்...
தண்ணீர் கூட அருந்தமறுத்தபடி கட்டிலில் படுத்திருக்கிறான் திலீப்... வீட்டில் வெறுமை மட்டுமே நடமாடியது... ஒரு குவளையில் பழச்சாறை ஏந்தியபடி, பக்கத்தில் அமர்ந்தான் மகி..
“மாமா... மதியத்துலேந்து ஒண்ணுமே சாப்டல, வெறும் வயித்துல படுக்காத... இந்த ஜூஸ் குடி மாமா...
“எல்லாம் போச்சுல்ல மகி?... ரொம்ப சிரமப்பட்டு ஒரு நிலைமைக்கு வந்துட்டேன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள, மொத்த மூச்சுமே நிக்குற அளவுக்கு அடி விழுந்துடுச்சு... இனி எழுந்திருக்கவே முடியாத சம்மட்டி அடி... இவ்வளவு விரக்தியாக திலீப் பேசியதே இல்லை... மகியின் மனம் கவலைகளை மீறிய பயத்திற்குள் ஆழ்ந்தது...
“ஐயோ மாமா... எல்லாம் கொஞ்ச நாள்தான், அப்புறம் சரியாகிடும்... உன்கூட நான் எப்பவும் இருப்பேன் மாமா...
“சரியால்லாம் ஆகாது மகி.. மீடியாக்காரங்க சும்மா விடுவாங்கன்னா நெனைக்குற?.. தப்பித்தவறி எழுந்து நிக்குற சூழல் வந்தாக்கூட, இந்த செய்திய வச்சே அடிப்பாங்க...
“மாமா... நான் சொல்றத கேளு, ஒன்னும் பெரிய ப்ராப்ளம் இல்ல... எல்லாமே தானா சரியாகிடும்.. நாளைக்கே த்ரிஷா கல்யாணம் பத்தி அறிவிச்சாங்கன்னா, மொத்த மீடியா அட்டென்ஷனும் அங்க போய்டும்.. உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன், இதை குடிச்சிட்டு எதையும் போட்டு குழப்பிக்காம தூங்கு மாமா... வலுக்கட்டாயமாக உதட்டின் மீது குவளையை வைத்தான்... மறுக்க மனமில்லாமல் சிறிது குடித்துவிட்டு, போதுமென்றான்...
“பயமா இருக்கு மகி... என் கூடவே இருடா...  கையோடு கை கோர்த்து, மகியின் தோள் மீது சாய்ந்துகொண்டான்... அப்படியே அவனை மடியில் கிடத்திக்கொண்டு, தலையை கோதிவிட்டான்...
“எப்பவும் உன்னைவிட்டு போகமாட்டேன் மாமா... மெலிதாய் அரும்பிய கண்ணீரை, திலீப் பார்க்காவண்ணம் துடைத்துக்கொண்டான்... முதுகை மிருதுவாக தட்டிவிட்டு, குழந்தையை உறங்க வைக்கும் தாயைப்போல மாறியிருந்தான் மகி...
விடிந்தது... சிரமப்பட்டு கண்களை விழித்தான் திலீப்... மகியின் மடியில்தான் இரவு முழுக்க உறங்கியிருக்கிறான்... கட்டிலின் விளிம்பில் தலைசாய்த்து, அமர்ந்தபடியே உறங்கிக்கொண்டிருக்கிறான் மகி.. ஐயோ, இரவு முழுக்க மகி இப்படியேவா தூங்கியிருக்கிறான்?... நகர்ந்தால்கூட தன் தூக்கம் கலைந்துவிடும் என்கிற சிரத்தையில், அமர்ந்திருந்த அமைப்பில் கூட சிறிதும் மாற்றமில்லை...
மகியும் தூக்கம் களைந்து கண்களை கசக்கிக்கொண்டான்...
“நான் கண் அசந்ததும், நீயும் படுத்திருக்கலாம்ல மகி?.. ஏண்டா கஷ்டப்படுற?
“இதுல என்ன மாமா கஷ்டம் இருக்கு... நீ நிம்மதியா கொஞ்சநேரம் தூங்குனில்ல, அதுபோதும்...
அலைபேசி அலறியது... ஏதோ ஒரு புதிய எண்... சற்று தயக்கத்துடன் அழுத்தி காதில் வைத்தான் திலீப்...
“ஹலோ திலீப் நாயரா?... நான் ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டர் பேசுறேன், உங்க மேல செக்சன் 377..” அழைப்பை அவசரமாக துண்டித்த திலீப்பின் முகத்தில், மீண்டும் படரத்தொடங்கியது அச்ச ரேகைகள்...
“யாரு மாமா?
“மீடியா...
மகிக்கு கோபம் மேலிட்டது... என்ன மாதிரியான சமூகம் இது?... அடிவிழுந்து காயப்பட்டு கிடப்பவர்களை துரத்தி துரத்தி ஊசியால் குத்தி இன்புறும் சாடிஸ மனோநிலை.. அநேகமாக இந்நேரம், ‘பிரபல தொலைகாட்சி நடிகர் மீது ஓரினச்சேர்க்கை வழக்குப்பதிவு என்று கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்ட ஏதேனும் காலை நாளிதழ் டீக்கடைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும்... இன்னும் ஒரு வாரத்துக்காவது இதனைப்பற்றிய கிசுகிசுக்கள் இல்லத்தரசி முதல் இணையதள போராளிகள் வரை ‘ஹாட் டாபிக்காக வலம்வரும்...
“எங்கயாச்சும் போகலாமா மாமா?
“எங்க?
“எங்கயாச்சும்... இந்த மீடியா, சினி இண்டஸ்ட்ரி இம்சைகள் இல்லாத இடம் தேடி... எந்த ரூமரும் காத்துவாக்குல கூட உள்ள நுழையமுடியாத ஒரு அமைதியான இடத்துக்கு... நார்த் இந்தியா, இல்லன்னா ஊட்டி கொடைக்கானல்... அப்டி எங்கயாவது...
“எனக்கும் அதான் மகி தோனுச்சு... அப்டி ஒரு இடமும் கூட யோசிச்சு வச்சிருக்கேன்...
“எந்த இடம் மாமா?
“உங்க ஊருக்கு.. வீட்ல அம்மா, அப்பான்னு ஒரு மாறுபட்ட சூழல்ல..  நீ, நான், வாசு, மாணிக்கம் மாமா எல்லாரும் போகலாம்... எல்லாரோடையும் போறப்போ மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் மகி.. உனக்கு ஓகேவா?
“இதென்ன கேள்வி மாமா... இன்னிக்கு மதியமே கிளம்பலாம்...அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மனதிற்குள் இருந்தாலும், அதனை பகுத்தாராயவல்லாம் மகிக்கு தோன்றவில்லை... திலீப்பின் மனநிலை மாற்றம் மட்டுமே அப்போதைய பிரதான தேவையாக தோன்றியது..

                   **************
கார் கிளம்பிவிட்டது... சென்னை மாநகரை தாண்டியபோது திலீப் வேறு உலகத்திற்குள் சென்றுவிட்டதனை போல ஆசுவாசமானான்... அவசரமாக அலைபேசியை அணைத்து, பின்புறத்தில் வைத்துவிட்டான்..
“மாணிக்கம் மாமாவுக்கு டிரைவிங் லைசன்ஸ் கூட இருக்கான்னு கேட்காம கார்ல உக்காந்துட்டேன், அவசரத்துக்கு டிரைவர் கிடைக்காத பாவத்துக்கு ஒரு வழி பண்ணிடப்போறார் வாசுவின் கண்களில் பொய்யான பதற்றம்.. முன்னே சென்ற லாரியை முந்தும் விதமாக இடப்பக்கம் ஒடிக்க, அது ஒரு குழியில் இறங்கி காரை குலுக்கிப்போட்டது...
“டேய், ஊர்ல நானல்லாம் டிப்பர் லாரியே ஓட்டுனவன்டா... இப்போது இடப்பக்கம் ஒடித்தார்...
“இப்பவும் அதே ஞாபகத்துலதான் ஓட்றியா மாமா?
“டேய் வாசு... ரொம்ப கிண்டல் பண்ணாத, அவர் அத்தனை வேலையையும் விட்டுட்டு நாம சொன்னதும் வந்ததே பெரிய விஷயம்... அக்காவையும் கூட்டிட்டு வந்திருந்தா, அவரும் ஒரு ஹனி மூன் கொண்டாடிருக்கலாம்.. அவங்க வரமாட்டேன்னுட்டாங்க.. மகி இடை நுழைந்தான்..
“ஹ ஹா... மாமாவோட ஹனிமூனுக்கு அக்காவல்லாம் தேவையில்ல மகி... அதல்லாம் பக்காவா அங்க போனதும் சரிபண்ணிக்குவார்... தஞ்சாவூர் மண்ணுல மாமா ஆடாத ஆட்டமா என்ன?.. சரிதானே மாமா? கண்ணடித்து சிரித்தான் வாசு... பற்கள் நறநறக்க அவனைப்பார்த்து முறைத்தார் மாணிக்கம்..
மாணிக்கத்திற்கும் தஞ்சை பற்றிய நினைவுகள் நிழலாக தோன்றி மறைந்தன.. மறக்கமுடியாத பசுமையான நினைவுகள் அல்லவா அந்த நாட்கள்.. கழுத்தை நோக்கி வரும் கத்தியை கூட, அலட்சியமாக சிரித்தே எதிர்கொண்ட ஒரு குருட்டுத்துணிச்சல் இருந்த வயது.. இப்போது மனம் பக்குவப்பட்டிருந்தாலும், அப்படிப்பட்ட செயற்பாடுகளுக்கு எப்போதும் மனது ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறது..
 “அங்க பாரு மாமா குட்டிக்குரங்கு... ஆச்சர்யம் விலகாமல் கைகாட்டினான் வாசு...
“அப்டியே சைட் மிரர்ல உன் மூஞ்சிய பாரு மாப்ள, அதோட அப்பா குரங்கே தெரியும்!
திலீப் ஓரளவு கசப்பான நிகழ்வுகளை மறந்துபோகும் அளவிற்கு சூழல் கலகலப்பாகவே சென்றது...
தஞ்சையிலிருந்து பிரியும் அந்த செம்மண் சாலையில் பயணிக்கும்போது திலீப்பின் மனதிற்குள் உற்சாகம் கரைபுரண்டது... ஒவ்வொரு மனிதருக்குமே சொந்தஊர் பாசம் என்பது இருக்கும்.. திலீப்பை பொருத்தவரை சொந்தம் என்று சொல்வதற்கே ஆட்கள் இல்லாதபோது, எங்கிருந்து சொந்த ஊரை கண்டுபிடிப்பது?... ஆனால், தஞ்சைதான் அவனது சொந்த ஊராக மனதிற்குள் ஆழமாக பதிந்துபோனது...
அந்த அய்யனார் கோவிலை பார்த்தபோது, அனிச்சையாகவே கண்களில் ஒற்றிக்கொண்டான்.. மகியின் சித்தப்பா வீடு, ஊராட்சி கட்டிடம்னு ஒவ்வொன்றையும் கடக்கும்போது கடந்தமுறை விட்டுச்சென்ற நினைவுச்சுவடுகள் மனதிற்குள் அரும்பின...
ஒருவழியாக மகியின் வீட்டை அடையும்போது அந்தி சாய்ந்திருந்தது.. கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, வேகமாய் வாசலை நோக்கி விரைந்துவந்தார் அம்மா.. மகியை பார்த்ததும் ஆச்சர்யம் கலந்த உற்சாகம் அந்த நடையிலே...
“வாங்கப்பா வாங்க.. உள்ள வாங்கய்யா. நால்வரையும் வாஞ்சையோடு உள்ளே அழைத்து இருக்கச்செய்தார்..
வரப்போவதாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.. சமையலறைக்குள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தாள்.. நல்லவேளையாக பால் இருக்கிறது, இன்னும் உரை ஊற்றவில்லை... அவசரமாக அதில் காபி போட்டு, அவர்களுக்கு கொடுத்தாள்...
“நல்லா இருக்கிங்களாம்மா?... அப்பா எங்க?திலீப் நலம் விசாரித்தான்..
“இருக்கேன்பா.. அவுக தஞ்சாவூர் வரைக்கும் போயிருக்காக... நீ ஏன்பா ஆளே ஒடஞ்சு போனாப்ல இருக்க?, உடம்பு கிடம்பு சரியில்லையா?
“ஆமாம்மா... கொஞ்சம் அப்டிதான்... இவங்க மாடில ரெஸ்ட் எடுக்கட்டும்மா.. மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பாமல், அந்த விவாதத்தினை துண்டித்து மாடிக்கு அனுப்பிவிட்டான் மகி..
இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, மொட்டை மாடியின் கட்டை சுவற்றில் அமர்ந்திருந்தனர் நால்வரும்.. சுற்றிலும் கும்மிருட்டு, ஆங்காங்கே நாய்கள் ஊளையிடும் ஓலச்சத்தம் மட்டும்தான்.. காற்றில் அசையும் மரத்தின் சத்தங்கள் டிஜிட்டல் எபெக்டில் கேட்டது..
 “பயமாத்தான் இருக்குல்ல? திலீப் பேச்சை தொடங்கினான்...
“லூசா திலீப் நீ?... அதான் ஒன்னும் ஆகாது, சரியாகிடும்னு மகி அவ்ளோ சொன்னான்ல... அப்புறமும் என்ன இன்னும் பயம்?... நாங்கல்லாம் இல்லையா உன்கூட? வாசு பொங்கினான்...
“லூசே... நான் சொல்றது, இந்த இருட்டு பத்தி... இவ்ளோ மயான அமைதிய பார்க்குறப்போ பயமா இருக்குன்னு சொல்றேன்
“ஐயோ... சாரி...
வாசுவை விழுங்கிவிடுவதைப்போல பார்த்தான் மகி... எவ்வளவு சிரமப்பட்டு திலீப்பை இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருக்கிறேன், அந்த கிறுக்கன் இப்படி மடத்தனமாக பேசி காரியத்தை கெடுத்துவிடுவான் போல... இவன் அக்கறைப்படலன்னு இப்போ யார் அழுதது?...
தலையை அப்பாவியாக கீழே குனிந்துகொண்டான் வாசு...
விடிந்தும் கூட அசந்து உறங்கிக்கொண்டிருந்தான் திலீப்... ஆழமான தூக்கம், இப்போது எழுப்பிவிடக்கூடாது... படுக்கை அதிராமல் மெள்ள எழுந்து ஜன்னல் திரைகளை மூடி, சூரியவெளிச்சத்தை தடுத்தான் மகி.. கதவை பூப்போல திறந்து, வெளியேறினான்... அம்மா சமையலறைக்குள் ஐக்கியமாகியிருக்கிறாள்... திண்ணையில் அமர்ந்து நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கிறார் அப்பா, நிஜமாகவே படிக்கத்தான் செய்கிறார்.. அது ஏதோ ‘நெல் விலை குவிண்டாலுக்கு ஐம்பது ரூபாய் அதிகரிப்பு! செய்தி...
மகி தன்னை நோக்கி வருவதை கண்டதும், முன்புபோல கண்டுகொள்ளாமல் இருக்க மனம் ஒப்பவில்லை.. தடுமாற்றமான பார்வையுடன் அவனை எதிர்கொண்டார்...
“எப்டிப்பா இருக்கீங்க? பழைய சலனங்கள் எதுவுமின்றி அவர் பக்கத்தில் அமர்ந்து கேட்டான்...
“இருக்கேன்பா... நீ?... ஏன் ஆளு இப்புடி இளைச்சு போய்ட்ட? ஏற்கனவே மூன்று மாதத்தில் நான்கு கிலோ எடை அதிகரித்திருப்பதாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்த மகிக்கு, அப்பாவின் பார்வை சிரிப்பைத்தான் உண்டாக்கியது...
“அப்டியல்லாம் இல்லப்பா... நீங்க மாத்திரையல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா?... சுகர் செக் பண்ணிங்களா?
“அதல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லப்பா.. நீ இரு, இந்தா கடை வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்!
எழுந்து உள்ளே சென்று சட்டையை மாட்டும்போதே, “புள்ள எந்திருச்சு எவ்ளோ நேரமாகுது, ஒரு காபி போட்டு கொடுக்கலையா இன்னும்? அம்மாவை கடிந்துகொள்கிறார்... அநேகமாக இப்போதுகூட மதிய உணவுக்கு ஏதோ மாமிசம் வாங்கிவரத்தான் கிளம்புகிறார்... அப்பாவை பொருத்தவரைக்கும் எல்லா உணர்வுகளையுமே மிகைப்படுத்தியே வெளிப்படுத்துபவர்... அது கோபமோ, பாசமோ... வடிவங்கள் மட்டும்தான் மாறுபடும்.. எப்படியோ இந்த அளவிற்கு அவர் மாறியதே அதிசயம்தான், மனதிற்குள் சிரித்துக்கொண்டான்...
நாளிதழை புரட்டினான் மகி.. “பிரதமர் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார்! முன்பெல்லாம் முதல் பக்கத்தில் வந்த செய்தி இப்போது ஆறாம் பக்கத்தில் பெட்டிச்செய்தியாக சுருங்கிப்போனது.. அநேகமாக, “பிரதமர் இந்தியா வருகிறார் செய்தி இனி முதல் பக்கத்தில் இடம்பெறலாம்... சிரித்துக்கொண்டே பக்கங்களை புரட்ட, கிசுகிசுக்கள் பகுதியில் ‘சீரியல் டூ சினிமா ஹீரோ, பகீர் செக்ஸ் புகார்! தலைப்பை பார்த்ததும் சற்று தூக்கிவாரிப்போட்டது...
திலீப்பை பற்றிய கிசுகிசுப்புதான்... உள்ளே திலீப்பின் பெயரைத்தவிர அத்தனை விஷயங்களையும் கற்பனைகள் கலந்து குப்பை போல கொட்டப்பட்டிருக்கிறது.. அவனை ‘விலைமகன் என்ற சொல்லாடல் வரை வதைத்து வைக்கப்பட்டிருக்கிற மஞ்சள் பத்திரிகை துணுக்கு..
அவசரமாக அந்த காகிதத்தை மட்டும் தனியே கிழித்து, குப்பைக்கூடையில் போட்டுவந்தான்.. உடலெல்லாம் நடுங்கியது, தன்னை மீறி வியர்த்து வழிகிறது.. அடக்கடவுளே!.. இந்த மீடியா திலீப்பை விடாது போலயே.. என் கண்களில் பட்ட இந்த செய்தி, அவன் பார்த்திருந்தால்... உடைந்து தடுமாறி போயிருப்பான்... கெட்டதிலும் ஒரு நல்லதாக, தான் பார்த்ததில் ஒரு மனநிம்மதி...
தூக்கம் களைந்த கண்களை கசக்கிக்கொண்டே வாசு திண்ணைக்கு வருகிறான்... இதைப்பற்றி அவனிடம் சொல்லக்கூடாது, நிச்சயம் எதாவது சந்தர்ப்பத்தில் உளறிக்கொட்டிவிடுவான்...
“என்ன மகி, பேப்பர் படிக்கிறியா? இப்படி அறிவார்த்தமான கேள்விகளை வாசுவால் மட்டுமே வினவிட முடியும்...
“ஹ்ம்ம்... கலாய்க்கும் சூழலில் மகி இல்லை... மெள்ள அந்த இடைவெளியில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.. காபி குவளைகளோடு அம்மா வர, ஓரளவு அந்த செய்தி விஷயத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டான் மகி...
“திலீப் இன்னும் எழலையா?
“இல்ல... தூங்குறான் வாசு...
“ஹ்ம்ம்... நிம்மதியா தூங்கட்டும்...
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரோ ஒரு புதியவன் வாசலில் நின்று ‘போகலாமா?, வேண்டாமா? என்பதைப்போல தடுமாறிக்கொண்டிருந்தான்..  எப்படியும் ஒரு முப்பது வயதிருக்கலாம், அந்த ஊரில் அதுவரை மகி பார்த்திடாத ஒரு முகம், பரிச்சயமில்லாத சாயல்... அப்பாவை எதுவும் பார்க்க வந்திருக்கானோ? சட்டென எழுந்து, “யார்ணே வேணும்?... கேட்டுவிட்டான்...
“அண்ணே இருக்காரா? அப்பாவைத்தான் கேட்கிறானோ...
“அப்பா வெளில போயிருக்காங்க... எங்க அண்ணன் வெளிநாடு போயிருக்கான்... உங்களுக்கு எந்த அண்ணன் வேணும்?
“மாணிக்கம்... இங்கதான் இருக்குறதா சொன்னாக! வாசுவிற்கு மயக்கமே வந்துவிடுவது போல அதிர்ச்சி... நாம வந்தது இன்னும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கே தகவல் பரவியிருக்காது, அதற்குள் மாணிக்கத்தை தேடி யாரோ ஒருவன் வந்து நிற்கிறான்...  இரவில் பேசிவிட்டு ஒன்றாகத்தான் உறங்கினோம், காலையில் இன்னும் அந்த மனுஷன் எழவே இல்லையே... எப்படி மோப்பம் பிடித்து வந்திருப்பான்? ஆழமாக யோசித்தும் புரிபடவில்லை...
“என்ன பதிலையே காணும்... மாணிக்கம் இங்கதான இருக்கார்?...
“இருக்காரு... நீங்க யாரு? அவரு இங்க இருக்குறதா யார் சொன்னது?
“அதல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க..வாயிலின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான்... உள்ளே ஏதோ பாடலின் சத்தம் கேட்கிறது...
“மகி, உன் மொபைலா சத்தம் கேட்குறது? வாசு எட்டிப்பார்த்தான்...
“இல்லையே... அது என் ரிங்க்டோன் இல்ல..
அந்த பாடல் சத்தம் மெள்ள அவர்களை நோக்கி நகர்ந்து வருவதைப்போல கேட்கிறது...
‘ஐயா வாழும் மண்ணில யாரும் இங்கே ஏழை இல்லடா.. வீச்சருவா சாமி, இது வேலு கம்பு பூமி... கத்தி கிட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி பாடிக்கொண்டிருந்த மொபைலை கையில் வைத்தபடி மாணிக்கம் மாமா வாசலின் நிலையை பிடித்தபடி நிற்கிறார்...
ஆனால், அது மாணிக்கம்தானா?... வாசு வாய் பிளந்து பார்க்கிறான்...
காதோர நரை முடிகளை காணவில்லை, கருப்புச்சாயம் பூசி மறைத்துவிட்டார்... தும்பைப்பூ தோற்றுப்போகும் சட்டை வேஷ்டி சகிதம், மீசையை முறுக்கிக்கொண்டு நிற்கிறார்... தலையில் அண்ணாந்து மாட்டப்பட்டிருக்கும் கூலிங் கிளாஸ், ஒருபுறத்தில் மட்டும் மடித்த வேஷ்டியை இடது கையின் விரல்கள் கச்சிதமாக பிடித்துக்கொண்டிருக்கிறது... ‘மாப்ள, கடைக்கு போலாமா?ன்னு பத்து வருடங்களுக்கு முன்பு மகியை கேட்ட அதே பழைய மாணிக்கம்... டைம் மெஷின் எதுவும் வைத்திருப்பாரா? அப்படியே பழையபடி வந்து நிற்கிறார்... மகியும் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறான்...
“அடிச்சக்கை.. எங்க ஆளு ஹீரோ என்ட்ரி பாட்டு பார்த்திங்களா?.. எங்க மாணிக்கத்த பார்க்குறப்போ, அப்புடியே தேவர் மகன் கமலஹாசன பாக்குறாப்லையே இருக்கு! வந்து நின்ற புதியவன் கச்சிதமாக வசனத்தை சொல்லிமுடித்தான்..
இதைக்கேட்டதும் வாசுவிற்கு கண்கள் இருண்டுபோவதைப்போல தோன்றியது...
“ஏற்கனவே ஒரு அதிர்ச்சிலேந்து விடுபடமுடியாம திகைச்சு நிக்குறேன், நீயும் ஏன்யா உன் பங்குக்கு உசுர எடுக்குற?..
“எங்க மாணிக்கத்துக்கு கமலஹாசனே கொறைவுதான்! அவனும் விடுவதாக இல்லை...
“ஏற்கனவே நாட்டைவிட்டு போறத தவிர வேற வழியில்லன்னு பேட்டியல்லாம் கொடுத்த அந்த மனுஷனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா, யோசிக்காம கெளம்பிடுவாரு... அந்தாளு மானஸ்தன், அவரையல்லாம் வம்பிக்கு இழுக்காத... மாணிக்கத்தை பார்த்து, “என்ன மாமா இது கோலம்?.. யாரு இந்த அலங்கோலம்?... ஒண்ணுமே புரியலையே... மூச்சுத்திணற கேட்டான்...
“இனி எல்லாம் இப்டிதான் வாசு... இந்த மக்களுக்காக நான் பழைய மாணிக்கமா மாறிருக்கேன்...
“ஐயோ... இந்தாளு வசனம் பேசி கொன்னேபுடுவார் போலயே... தலையில் கைவைத்துக்கொண்டான்..
“இவன் என் பால்ய நண்பன்... பேரு முத்து...
“பாக்குறதுக்கு பாலியல் நண்பன் மாதிரில்ல தெரியுது? மாணிக்கத்தின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான்...
“எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும், பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்... பாடலாகவே பாடினார்...
“இப்டியே ஊருக்குள்ள பேசிட்டுப்போனின்னா, பட்டாசை கொளுத்தி உன் வாய்லதான் போடுவானுக!
இந்த கேலிப்பேச்சுகளை எதையும் பொருட்படுத்தாமல் முத்துவின் தோள்மீது கைபோட்டபடி நகர்வலம் கிளம்பிவிட்டார் மாணிக்கம்.. மகியும் வாசுவும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்... மகியின் மனதிற்குள் மெல்லிய பொறாமை கூட படர்ந்திருந்தது... எல்லோராலும் தொடங்கிய புள்ளிக்கு மீண்டும் திரும்பிடமுடியாது... வழியில் எதிர்கொண்ட இன்பம், துன்பம், கவலை என சுமைகளை இறக்கிவைத்துவிட்டு அந்த இடத்திற்கு செல்வது அதிசயமாக சிலருக்கு மட்டுமே வாய்த்திடும் கொடுப்பினை, அது மாணிக்கம் மாமாவிற்கு சாத்தியமாகியிருப்பது அதிர்ஷ்டம்தான்..
“இந்த விஷயமல்லாம் ஊருல இருக்குற அக்காவுக்கு தெரிஞ்சா, இந்தாளு வாய்லதான் சூடுபோடும்.. சிரித்தான் வாசு..
“இன்னும் ரெண்டு மூணு நாள்தானே வாசு... அதுவரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் விடு...
“என்ன ரெண்டுபேரும் காலைலேயே ஏதோ சீரியஸ் மேட்டர் பேசிட்டு இருக்கிங்களே? தூங்கி எழுந்துவந்த திலீப் இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்துகொண்டான்..
“ஆமா... உன்னப்பத்தி பேப்பர்ல கிசுகிசு போட்ருக்கானுக, அதைப்பத்தி பேசிட்டு இருக்கோம்.. ஹ ஹ ஹா... அவசியமில்லாமல் சிரித்தான் வாசு...
“அதல்லாம் இல்ல மாமா... நம்ம மாணிக்கம் மாமா புது கெட்டப்ல ஊருக்குள்ள போயிருக்கார், அதைப்பத்தி பேசிட்டிருந்தோம்... அவசரமாக மறுத்தான் மகி... சற்று நேரத்திற்குள் அவன் மனம் இடியாய் இடித்தது... மாணிக்கத்தின் தோற்ற மாற்றம் பற்றி வாசு விளக்கிக்கொண்டிருக்க, மகியின் மனமோ இன்னும் படபடப்புக்குள் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறது... பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, நடந்தவற்றை மறப்பதற்காக வாசுவையும் உடன் அழைத்துவந்தது அபத்தமோ? என்று யோசித்தான்.. என்ன செய்வது, சமாளித்துதான் ஆகணும்... மனதை திடப்படுத்திக்கொண்டான் மகி...
அந்தி சாயும் நேரம், எதிரே தெரிகின்ற முகங்கள் சற்று தெளிவற்று தெரியும் இருள் போர்த்திய பொழுதில் மகியுடன் திலீப் தனிமையில் நடந்துசென்றுக்கொண்டிருந்தான்.. வீடுகள் இருக்கின்ற தெருக்களை கடந்து, பச்சை பூத்து குலுங்கி நிற்கிற வயல்கள் தாண்டி, ஆண்டுக்கொருமுறை மட்டும் ஆரவாரத்துடன் அல்லோகலப்படும் கிராமத்து கோவிலை அடைந்தபோது நிசப்தம் மட்டுமே துணையாக சூழ்ந்திருந்தது...
“போனதடவை வந்தப்போ எவ்ளோ கலகலப்பா இருந்துச்சுல்ல, இப்ப ஆள் அரவமே இல்லாம நிசப்தமா இருக்குது
ஆலமரத்தின் விழுதுகளோடு பிணைக்கப்பட்டிருந்த மணிகள், காற்றில் அசைந்தபோது சலசலத்த ஓசை சற்று அமானுஷ்ய ஒலியை உண்டாக்க, மகியின் கைகளை இறுக்க பற்றிக்கொண்டான் திலீப்...
“மணி சத்தம் மாமா.. பயப்படாத
“பயமா?... எனக்கா?... அடப்போடா, நீ பயந்துடப்போறன்னு ஒரு சப்போர்ட்க்கு கைய பிடிச்சேன்... அவ்வளவு எளிதில் தன் பயத்தை ஒப்புக்கொண்டுவிடுவானா என்ன?... அழுத்தக்கார காதலனை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான் மகி...
“ஆமா... எனக்குதான் பயமா இருக்கு, கைய விடாம பிடிச்சுக்கோ மாமா...
இருவருமாக விளக்கின் வெளிச்சம் ஒன்றின் அருகில் கிடந்த கல்லில் அமர்ந்துகொண்டனர்... இருள் சூழ்ந்து நட்சத்திரங்கள் பூக்கத்தொடங்கின... தவளைகளின் முனகலும், பூச்சிகளின் ‘க்ரீச்களும் மட்டும்தான் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது...
“இப்டி ஒரு சரவ்ண்டிங்க்கே டர் ஆகுதே, நம்ம குமார் என்கிட்டே சொல்லிருக்குற ஸ்க்ரிப்ட் ஒரு ஹாரர் ஸ்டோரி... அதுவும் ஷூட்டிங் ஸ்பாட் கொல்லிமலையாம்... என்ன ஆகப்போறனோ! சிரித்துக்கொண்டான்...
“அதுல என்ன மாமா பயம்?.. மோஸ்ட்லி கிராபிக்ஸ்தான் இருக்கப்போகுது, இப்டி இருட்டுலையா சூட் பண்ண போறாங்க!...
சிலவினாடிகள் மௌனத்திற்கு பிறகு, “இருக்குறதுக்கே வழி இல்லையாம், இதுல பறக்குறதுக்கு பாராஷூட் இல்லன்னு கவலைப்படுறேன் பாரு... அடுத்த படம் பத்தியல்லாம் இப்டி கனவு மட்டும்தான் காணமுடியும்... விரக்தியை உமிழ்ந்தான் திலீப்...
இவ்வளவு தேற்றுதலுக்கு பிறகும் திலீப் அந்த நிகழ்வுகளிலிருந்து இன்னும் மீளவில்லை... எளிதில் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்லைதான்.. இடம் பெயர்தலாலும், மனிதர்கள் மாறியிருப்பதாலும் மட்டுமே மனதின் வடுக்கள் மறைந்திருக்கும் என்றால், மனிதர்களுக்கு கவலைகளும் சோகங்களும் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது...
“மாமா, இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இப்டி விரக்தியா பேசுற?.. கொஞ்சநாள்ல எல்லாம் சரியாகிடும்... அப்புறம் தொடர்ந்து நீ பல படங்கள் ஹிட் கொடுப்ப, உனக்கு ரசிகர் மன்றமல்லாம் தொடங்குவாங்க.. உன்னோட அத்தன கனவுகளும் நடக்கும்... கைகளை பிடித்து தன் கன்னங்களோடு ஒற்றிக்கொண்டான்...
“எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு!
“நடக்குறப்போ அதவிட நல்லா இருக்கும்
“தாங்க்ஸ் மகி... இப்டி கஷ்டமான நேரத்துல நீ மட்டும் இல்லாம போயிருந்தா, மண்டை வெடிச்சே செத்திருப்பேன்... நீ பக்கத்துல இருக்குறப்போ, வடிவேலு சொல்ற மாதிரி எவ்ளோ அடிச்சாலும் தாங்க ஆரமிச்சுட்டேன்... சிரித்தான்...
என்ன பதிலுக்கு பேசுவதென்று புரியாமல் திக்கற்று நின்றான் மகி... ஏதோ ஒரு மனநிறைவு அவனுக்குள்.. என்னால் என்னவன் இவ்வளவு மனதிடம் பெற்றிருக்கிறான் என்றால், இதைவிட தன்னைப்பற்றி புளகாங்கிதம் அடைவதற்கு வேறு காரணம் தேவையில்லை!...
“முன்னல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை பெருசா இல்ல மகி... ஆனா இப்போ நெறைய வந்திடுச்சு... உன்ன மாதிரி ஒரு பார்ட்னர் கெடச்சதுக்காக இல்ல, நீ எப்பவும் என்னைவிட்டு போய்டக்கூடாதுங்குற பயத்துல வந்த பக்தி அது... சினிமா, பணம், பேரு இதல்லாம் கெடைக்குதோ இல்லையோ, எதுவும் பெரிய விஷயமா தெரியல மகி.. நீ என் கூட எப்பவும் இருந்தாவே போதும்னு தோணுது!மகியின் தோள் மீது சாய்ந்துகொண்டான்...
மகியின் தொண்டை கமறியது... கட்டுப்பாட்டையும் மீறி கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. உள்ளம் பூரிப்பால் தத்தளித்தது... வாழ்க்கையெனும் பாடத்தில், தங்கப்பதக்கம் வென்ற பெருமிதம் அது.. ஒரு பெரிய மலையையே கொஞ்சம் கொஞ்சமாக கொத்திசாய்த்த உளியின் வெற்றித்தருணம் அது...
“செத்தாலும் உன்னைவிட்டு போய்டமாட்டேன் மாமா... ஆவியாவாவது உன்ன சுத்திட்டுதான் இருப்பேன்... ஐ லவ் யூ மாமா... அப்படியே கட்டியணைத்து கன்னத்தை கன்னத்தோடு ஒற்றிக்கொண்டான்... ஓரிரு நிமிடங்கள் நீடித்திருந்த அந்த பிணைப்பை இலகசெய்தது, மகியின் அலைபேசி அலறல்...
“யாருடா அந்த சிவபூஜை கரடி? திலீப் வாங்கிப்பார்த்தான்... திரையில் ‘குட்டி என்ற பெயர் பளிச்சிட்டது...
“யாருடா இந்த குட்டி?... உங்க ஹாஸ்பிட்டல் ஓமனக்குட்டியா?
“இல்ல மாமா... நம்ம கார்த்திக், அவனே அவன் பேரை என் மொபைல்ல இப்டி எடிட் பண்ணி வச்சிருக்கான்!
“சரி அட்டன்ட் பண்ணி கேளேன், என்னன்னு...
அழைப்பை ஏற்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்திலிருந்து இன்னும் மகி வெளிவரவில்லை... “அட்டன்ட் பண்ணனுமான்னு யோசிக்கிறேன்... எந்த இம்சையும் வேணாம்னு இங்க வந்துருக்கோம், எதுனாச்சும் சிக்கல் வந்திடுமோன்னு தயக்கமா இருக்கு! தயக்கத்தை வெளிப்படுத்தினான் மகி...
“ச்சீ லூசு... கார்த்திக்தான, சும்மா பேசு! திலீப்பே பச்சை பொத்தானை அழுத்தி மகியின் காதின் மீது வைத்தான்...
“ஹலோ... ஆமா... ஓ நீங்களா?... இல்லப்பா நான் கவனிக்கல.. திலீப் இங்கதான் இருக்கார்... ஓ அப்டியா?, நாளைக்கா?...  சரி, தஞ்சாவூர்ல பாத்துக்கறோம்.. ரொம்ப தாங்க்ஸ் அழைப்பை துண்டித்து வைத்தபோது மகியின் முகத்தில் ஒருவித பரபரப்பான மகிழ்ச்சியில் காணப்பட்டது... வெகுநாள் கழித்து காதலனை சந்திக்கும்போது உள்ளார்ந்து எழுகின்ற ஒரு மாறுபட்ட உணர்வு அது...
“யாரு?... என்ன சொன்னாங்க? பொறுமை இழந்துபோனான் திலீப்...
எதை முதலில் சொல்வது? என்கிற தடுமாற்றத்துக்கு ஒருவழியாக விடைதேடி கண்டுபிடித்தவனாக, “குமார்தான் கார்த்திக் மொபைல்லேந்து கூப்ட்டுருக்கார்... உன்ன காண்டாக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்ணி, வேற வழி தெரியாம கார்த்திய தேடிப்பிடிச்சு இப்போ பேசிருக்கார்! மூச்சிரைக்க சொல்லிமுடித்தான்...
“அப்டி தேடுற அளவுக்கு என்ன தலைபோற காரியமாம்?... எதுவும் ப்ராப்ளமா? பயம் தொற்றிக்கொண்டது...
“இல்ல மாமா... உன் படம் நாளைக்கு ரிலீஸாம்... அதைச்சொல்லத்தான் ரெண்டுநாளா தேடிருக்கார்... தஞ்சாவூர்ல சத்யா தியேட்டர்க்கு தகவல் சொல்லிட்டாராம், அங்க பாக்ஸ்ல பர்ஸ்ட் ஷோ பார்க்க ஏற்பாடு பண்ணிருக்கார்
“ஓஹோ... இதுக்குத்தானா? சற்றே நாட்டமில்லாத எதிர்வினை...
“என்ன மாமா இவ்ளோ சிம்பிளா சொல்லிட்ட?... உன்னோட இத்தனை வருஷத்து உழைப்புக்கான ரிசல்ட் நாளைக்கு தெரியப்போகுது.. அது நாம எதிர்பார்த்தபடி அமைஞ்சுட்டா, உன்னோட கனவுகளை திறக்குறதுக்கான பாதை அதுவா இருக்கும்!
“படம் நூறுநாள் ஓடிட்டா மட்டும், எம்மேல சுமத்தப்பட்ட கரைகள் காணாம போய்டுமா என்ன?
“காணாம போகுமான்னு தெரியல... ஆனா, அந்த சின்ன கரைகள் அந்த வெற்றிக்கு முன்னால ஒரு பொருட்டா யாரு கண்ணுக்கும் உறுத்தாதுன்னு நம்புறேன்..
“ஒரு பெரிய சாதனையை மறக்குறதுக்கு ஒரு சின்ன தப்பு போதுமானது மகி...
“அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சுப்பாரு... ஏன் ஒரு சின்ன தப்பை மறக்க ஒரு பெரிய சாதனை காரணமா இருக்கக்கூடாது?... வால்மீகிய யாரும் திருடன்னு இப்போ சொல்றதில்ல, அதை மாத்துறதுக்கு ராமாயணம்னு ஒரு பெரிய விஷயம் போதுமானதா இருந்துச்சே...
“நான் வால்மீகி இல்லையே...
“நீ திருடனும் கூட இல்ல மாமா...
“நாளைக்கு அந்த ஷோவ பார்க்க அவசியம் போய்த்தான் ஆகணுமா?
“என் மாமாவுக்கு விழற கைத்தட்டுக்களை தியேட்டர்ல பார்க்கனும்னு ஆசைப்படுறேன்... அதுக்கு மேல நீயே முடிவுபண்ணிக்கோ!
ஓரிரு வினாடிகள் யோசிப்பிற்கு பிறகு, “ஹ்ம்ம்... சரி போகலாம்... உனக்காகத்தான்... மெலிதாக சிரித்தான்...
மகியின் முகத்தில்தான் அத்துனை சாதித்த பெருமிதம்... “தாங்க்ஸ் மாமா...
அன்று இரவு முழுக்க மகிக்கு தூக்கம் வரவே இல்லை... எத்தனையோ யோசனைகள்... திலீப்பிற்கு ஒருவழியாக சமாதானம் சொல்லிவிட்டாலும், இன்னும் மகியின் மனதிற்குள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது... திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறனும், அந்த வெற்றியின் மூலம் திலீப்பின் மீதான களங்கம் மறக்கப்படவேண்டும்... இதெல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம்? என்பது புரியவில்லை...
படுக்கையில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தவன், பதற்றமாக எழுந்து பூஜை அறைக்கு ஓடினான்... முருகன் படத்தை வணங்கிக்கொண்டு, திருநீறை நெற்றி முழுவதும் பூசிக்கொண்டான்.. “முருகா!... வழக்கம்போல இந்தமுறையும் சொதப்பிடாத உரிமையோடு கோரிக்கை வைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தான்...
ஒருவேளை படம் பலாப் ஆகிட்டா? வில்லங்கமான எண்ணங்களும் மனதை அரிக்கத்தொடங்கின... இல்லை இல்லை... எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும்.... அவசியமில்லாமல் எதிர்மறை எண்ணங்களை மனதில் சுமக்கக்கூடாது! தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டான்...
விடிந்துவிட்டது... திலீப் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறான்... பதினொரு மணிக்குத்தான் திரைப்படம், இப்போ மணி ஆறுதான் ஆகிறது... என்றாலும் கூட அவனுக்கு எப்படித்தான் தூக்கம் வருகிறதோ?... நிஜமாகவே நான் சொன்ன ஆறுதல் பேச்சால் இயல்பாகியிருக்கிறானா? அல்லது, தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு ‘இனி கவலைப்பட்டு என்ன பயன்? என்கிற விரக்தியின் விளிம்பில் இருப்பதன் அறிகுறியா?...
அருகில் படுத்துக்கொண்டு திலீப்பின் மூடப்பட்ட கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்... உள்ளே விழிகள் அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன... ஆழமான உறக்கம் போல!, கனவில் என்ன கலவரம் நடந்துகொண்டிருக்கிறதோ? தெரியவில்லை..
திலீப்பின் நெற்றியில் கைவைத்து, மேல்நோக்கி விரல்களை நகர்த்தி முடிகளை கோதிவிட்டான்... தூக்கம் மெள்ள களைந்து, அங்குமிங்கும் உடலை நெளித்துக்கொண்டான் திலீப்... கண்களை கசக்கிக்கொண்டு அசதி முறித்து விழித்து மகியின் முகத்தை பார்த்ததும், அனிச்சையாக ஒரு மென்முறுவல் உதிர்த்தது... ‘நீ கூட இருக்குறப்போ எனக்கு என்னடா கவலை! என சத்தமில்லாமல் சொன்னது அந்த ஒற்றை சிரிப்பு...
கட்டிலில் தவழ்ந்து வந்து மகியின் மடியில் படுத்துக்கொண்டு, அவன் கைகளை தன் கழுத்தோடு பிணைத்துக்கொண்டான் திலீப்...
“இன்னும் தூக்கம் களையலயா மாமா? நெற்றியில் ஒரு பச்சக்...
“தூக்கம், கவலை, பயம் எல்லாமே களைஞ்சிடுச்சே... குழந்தையாக பேசினான்...
“எப்டி ஒரே நைட்ல இவ்ளோ மாற்றம் மாமா?
“தெரியல... ஆனா நீ கூட இருந்தின்னா இதைவிட உயரத்துக்கு என்னால போய்டமுடியும்னு நம்பிக்கை வந்திடுச்சு... அந்த நம்பிக்கை வந்துட்டதால மத்த எதுவுமே பெருசா தெரியல மகி... இன்னிக்கு கனவுல கூட நமக்கு கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணு கூட பிறந்திருக்கா... நாம மூணு பேரும் ஏதோ ஒரு ஹில் ஸ்டேஷன்ல அவ்ளோ சந்தோஷமா விளையாண்டுட்டு இருந்தோம்! சொல்லும்போதே அத்தனை பூரிப்பு அந்த வார்த்தைகளில்... சில விஷயங்கள் மட்டும்தான் சொல்லும்போதே அதன் உள்ளார்ந்த விஷயங்கள் மகிழ்ச்சியாக வெளிப்படுவதுண்டு...
“குழந்தையா?... அது எப்போ மாமா வந்துச்சு? மகியும் அந்த கற்பனை படகில் ஏறி பயனிக்கத்தொடங்கினான்...
“ஆமா மகி... அழகான குட்டிப்பொண்ணு... உன்ன மாதிரியே துறுதுறுன்னு அழகா இருந்தா...
“என்னை மாதிரி வேணாம் மாமா, உன்ன மாதிரி அழகா இருக்கட்டும்! திலீப்பின் கன்னத்தை கிள்ளினான்...
“சரி உன்னில் பாதி, என்னில் பாதியா இருக்கட்டும்... அவளுக்கு என்ன பேர் வைக்கலாம்னு அந்த மலை உச்சில உக்காந்து நாம பேசிட்டு இருந்தப்போதான், சரியா நீ எழுப்பிட்ட... கொஞ்சம் விட்டிருந்தா பேரை முடிவு பண்ணிருக்கலாம்...
“அதனால என்ன மாமா... கனவுல விட்டதை இங்க கண்டின்யூ பண்ணலாம்... நம்ம குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?
திலீப் ஆர்வமாய் எழுந்து அமர்ந்துகொண்டான்... இருவரின் பேச்சுமே குழந்தை பிறந்து, விளையாடிக்கொண்டிருப்பதை போல கற்பனையில் மிதந்துகொண்டிருந்தது...
“எதாச்சும் நல்ல தமிழ் பேரா நீயே சொல்லு மகி...
“யாழினி ஓகேவா?
“யாழினி, அமுதா தவிர உனக்கு வேற பொண்ணுங்க பேரே தெரியாதான்னு படிக்குறவங்க திட்டப்போறாங்க!
“அவங்க திட்டுறதுக்காக நல்ல பேரை நாம மிஸ் பண்ணனுமா? தீவிர ஆலோசனை மெலிதான ஊடலைப்போல தோற்றமளித்தது...
“உள்ள வரலாமா? பதிலுக்கு காத்திராமல் அவசரமாக திறக்கப்பட்ட கதவின் ஊடே உள்ளே நுழைந்தான் வாசு...
நாலா பக்கமும் கண்களை அலைபாயவிட்டவாறே கட்டிலின் விளிம்பில் அமர்ந்து, “எந்த குழந்தைக்குடா பேர் வச்சுகிட்டு இருக்கீங்க?... நான் ஏதோ ஒட்டுக்கேட்டுட்டதா நெனைக்காதிங்க, நீங்க போடுற சத்தம் அந்த ரூம் வரைக்கும் கேட்டுச்சு... பதிலை நோக்கி ஆர்வமாக காத்திருந்தான்...
“எங்க குழந்தைக்குத்தான் வாசு... அழகான குட்டி பெண் குழந்தை! பிரசிவித்த தாயின் உற்சாகம் மகியின் முகத்தில்...
“அது எப்போ பொறந்துச்சு?
“நேத்து நைட் முந்திக்கொண்டான் திலீப்...
“ஒரு நைட்க்குள்ள குழந்தையா?.. ராஜமௌலி படம் மாதிரி எதுனா கிராப்பிக்ஸா?
“இல்ல வாசு... திலீப்போட கனவுலப்பா... அதான் அது நிஜமாகுறதுக்கு முன்னமே பேரல்லாம் யோசிக்குறோம்!
“டேய் என்னைப்பார்த்தா கேனயன் மாதிரி தெரியுதா?
“முழுசா இல்லைன்னாலும், ஒரு சாயல்ல அப்டிதான் தெரியுது சிரித்துக்கொண்டான் திலீப்...
“பொண்ணு பாக்க போறப்போவே, புள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்கின கதையா பண்றீங்களே... இன்னிக்கு திலீப்போட முதல் படம் ரிலீஸ் ஆகுது, அதுப்பத்தி கொஞ்சமாச்சும் பயம் இருக்கா பாரேன் நியாயமான கேள்விதான்...
“எதுக்குடா லூசு பயப்படனும்?... எது நடந்தாலும் பார்த்துக்கலாம்னு தைரியம் வந்துட்டா, பயத்துக்கு அங்க என்ன வேலை?... ஆமா, எங்க மாணிக்கம் மாமா ஆளையே காணும்?
“அவரா?... ராத்திரி வந்து குப்புற படுத்தவரு, இன்னும் அப்டியேதான் கெடக்குறாரு.. நிமிர்ந்து உக்காரவல்லாம் எப்டியும் ஒருவாரம் ஆகும்!
“அடக்கடவுளே... என்னாச்சு?... கிளம்புறப்போ தேவர் மகன் கமல் மாதிரி போனாரே அனுதாபப்பட்டான் மகி...
“திரும்பி வந்தப்போ பருத்திவீரன் பிரியாமணி மாதிரி வந்ததுதான் பிரச்சினையே... பழைய கூட்டாளிகளாம், நாலஞ்சு பேரு அவரை பிரிச்சு மேஞ்சிட்டாணுக.... படம் பார்க்கவல்லாம் அவரால வரமுடியாது, நாம மட்டும்தான் போறோம்!
“ஹ ஹா... சரி ரெஸ்ட் எடுக்கட்டும், நீ போய் கிளம்பு...

திரையரங்க வாசலில் மிதமான கூட்டம்.. அதில் பாதிபேர், நழுவிய சேலையோடு போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருந்த உதிஷாவை பார்க்க வந்திருந்த கூட்டம்... கார்னர் சீட்டுகளை குறிவைத்து காத்திருக்கும் காதல் புறாக்கள், தலையில் துப்பட்டா போட்டபடி மறுபுறத்தில்... திரைப்படம் முடிவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே, பிறர் கண்ணில் பட்டிடாதவாறு அரங்கத்தை விட்டு வெளியேறிவிடும் உத்தி அந்த காதலின் பாலபாடம் போலும்!..
டிக்கெட் கவுண்டர்களை அலட்சியப்படுத்திவிட்டு மேலாளர் அறையை நோக்கி நகர்ந்தான் மகி.. ‘சின்னத்தம்பி, நாட்டாமை, லத்திகா திரைப்படங்கள் நூறுநாள் ஓடிமுடிந்த சாதனை ஷீல்டுகளுக்கு நடுவில் வழுக்கைத்தலையோடு அலைபேசிக்கொண்டிருக்கும் மேலாளரின் எதிரே போய் நின்றான்...
அழைப்பை துண்டித்தபின்பு, “என்னப்பா? தலையை மேலாக அசைத்து அலட்சியமாக வினவினார்...
“இந்த படத்தோட பர்ஸ்ட் ஷோ பார்க்க ஹீரோ வந்திருக்கார்...
“யாரு அஷ்வினா? முப்பத்து ஒன்றரை பற்களும் அவசரமாய் எட்டிப்பார்த்தன... கடந்த மாதத்தில் முழுக்க குடித்துவிட்டு, பைக்கிலிருந்து விழுந்தபோது ஒரு பல் பாதியாய் உடைந்து விழுந்தது கதைக்கு அவசியமில்லை...
“இல்ல... திலீப் நாயர்... மூணாவது ஹீரோ...
“ஓ.... அந்த பையனா?... டிஸ்ட்ரிப்யூட்டர் போன் பண்ணாரு... வெளில உக்காருங்க, ஆளு வரச்சொல்றேன்... சத்தமாக சொல்லிவிட்டு, “மூணாவது ஹீரோ, முப்பதாவது ஹீரோன்னுட்டு கழுத்தருப்பாணுக! முணுமுணுத்தார்...
அதை காதில் வாங்கிக்கொள்ளாதவனாக, அறையைவிட்டு வெளியேற முற்படுகையில், “ஒரு நிமிஷம்... அந்த நபர் அழைத்தார்...
“என்ன சார்? பொறுமையாக கேட்டான் மகி...
“இந்த பையன்தான ஏதோ ஹோமோசெக்ஸ் கேசுல மாட்டுனது?... பேப்பர்லயல்லாம் வந்துச்சே... என்னாச்சு அந்த பிரச்சினை? ஆர்வமாக வினவினார்...
என்ன பதில் சொல்வது?... இருக்கின்ற கடுப்பில் வாயை திறந்தால், அனாவசிய சலசலப்பிற்கு வழிவகுத்துவிடும் என்பதால் வெறும் வேதனையான சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினான் மகி...
விக்கிரமாதித்தனை பிடித்துக்கொண்ட வேதாளமாக அந்த பழிச்சொல்லும் திலீப்பை விட்டு விலகவே மறுக்கிறது... எவ்வித கவலைகளும் சூழாமல் திலீப் வாசுவோடு சிரித்து பேசிக்கொண்டிருக்கிறான்... அறைக்குள் நடந்த விடயங்களின் தடங்கள் தெரியாத வண்ணம் முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டான் மகி... மெலிதாய் சிரித்த வண்ணம் இருவரையும் அடைந்து, அவர்களோடு கலந்துவிட்டான்...
“என்ன சொன்னாங்க மகி?
“ஆச்சர்யப்பட்டாங்க நீ வந்திருக்கத சொன்னதும்... கொஞ்சநேரம் வெய்ட் பண்ண சொன்னாங்க, ஆள் வரும்னு... சமாளித்தான்...
“மேனேஜர் ரூம்ல உக்கார வச்சு கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்கணும்னு ஒரு கர்ட்டசி கூட இல்ல பாரு... அடுத்த படத்தயல்லாம் இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்ணவிடாத திலீப்... சூழல் அறியாமல் உளறிக்கொட்டினான் வாசு....
ஒருவாறாக திரைஅரங்க ஊழியர்கள் இருவர் வந்து, மூவரையும் அழைத்துச்சென்று தனி அறையில் அமரவைத்தனர்... செல்லும் வழியில் ஊழியர்கள் இருவரும் அவர்களுக்குள்ளாகவே ஏதோ கிசுகிசுத்தபடி சிரித்துக்கொண்டனர்... திலீப்பை பற்றிய விஷயமாகத்தான் இருக்கணும்... அதில் ஒன்றிரண்டு வார்த்தைகள் திலீப்பின் காதுகளுக்கு எட்டுவதற்குள் அவசரமாக அவர்கள் இருவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான் மகி... பெருமூச்சோடு இருக்கையில் அமர்ந்துகொண்டான்... ஒரு இரண்டரை மணி நேரம் எந்த இம்சைகளும் இல்லை, சற்றே தற்காலிக நிம்மதி அவன் மனதிற்குள்...
அந்த அறையிலிருந்து கீழ்த்தளத்தை எட்டிப்பார்த்தான் திலீப்... அவ்வளவாக கூட்டமில்லை... என்றாலும் கூட சராசரியான வாரநாட்கள் கூட்டம் அதுதான்... திரைப்படம் வெற்றிபெற்றால், ஹவுஸ் புல் ஆகலாம்... மனதிற்குள் கணக்கு போட்டுக்கொண்டான்...
சென்சார் சான்றிதழலோடு திரைப்படம் தொடங்கியது...
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே கார்னர் சீட்டு காதலர்கள், காமத்துப்பாலுக்கு உரையெழுத தொடங்கிவிட்டார்கள்.. கல்லூரி வகுப்பை கட் அடித்துவிட்டுவந்த காளைகள், உதிஷாவின் என்ட்ரியை உற்சாகத்துடன் வரவேற்றார்கள்...
“ஆடியன்ஸ் படம் பார்க்குற விதத்தை பார்த்தா, படம் ஒரு வாரம் கூட நிக்காது போலயே மகி? மகியின் காதுக்குள் கிசுகிசுத்தான் வாசு... அரையிருட்டுக்குள் கூட மகியின் பார்வை நெருப்பை உமிழ்வதை போல வெளிச்சமாக தெரிந்தது... மேற்கொண்டு எதுவும் கேட்க விரும்பாதவனாக படத்தை பார்க்கத்தொடங்கினான்...
அரைமணிநேர காட்சிகளுக்கு பிறகு அரங்கமே கதைக்குள் மூழ்கியது... அளவான கைத்தட்டு, அவ்வப்போது ஆர்ப்பரிப்பு, மெல்லிய புன்னகை, மெலிதான சிரிப்பொலி...
மகியின் மனமும் இலகுவானது...
இடைவேளையில் கேட்காமலேயே குளிர்பானங்கள் கொண்டுவரப்பட்டன.. அதுவரை அணைத்திருந்த ஏசி, அவசரமாக ஆன் செய்யப்பட்டது.. “வேற ஏதும் வேணுமா சார்? காலையில் கிசுகிசுத்த தியேட்டர் ஊழியன் பவ்யமாக கேட்கிறான்...
“இல்ல ஒன்னும் வேணாம்.. தாங்க்ஸ் திலீப் மறுத்தும்கூட அந்த இடத்தைவிட்டு அவன் நகரவில்லை...
“சூப்பரா நடிக்கிறீங்க சார்... செம்ம ஆக்டிங் வலுக்கட்டாயமாக கைகளைப்பிடித்து குலுக்கினான்...
‘முன் சீட்டில் காலை வைக்காதீர், அரங்கிற்குள் எச்சில் துப்பாதீர் ஸ்லைடுகள் போடப்பட்டன... இன்னும் அந்த ஊழியனின் அன்புத்தொல்லை ஓய்ந்தபாடில்லை... ஒருவழியாக குடித்துமுடித்த குளிர்பான புட்டிகளை அவன் கைகளில் திணித்து அங்கிருந்து அவனை வெளியேற்றுவதற்குள் அடங்கிய தாகம் ஆர்ப்பரித்து மீண்டும் எழத்தொடங்கிவிட்டது...
“பரவால்லையே... நல்ல ரசனைக்காரங்க இந்த ஊர்லயும் இருக்காங்க போலயே? வாசு வாயை கொடுத்தான்...
“ஏன் ரசனையல்லாம் உங்க ஊருக்குன்னு மட்டும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்திருக்காங்களா?... நீ சொன்னது மட்டும் கீழ படம் பார்க்குற மக்களுக்கு கேட்டுச்சுன்னா, பதில்பேச உன் வாய் மிச்சம் இருக்காது பார்த்துக்கோ?
இவனென்ன விட்டால் ஊர்க்கலவரத்தை மூட்டிவிடுவான் போலிருக்கே... ராகு பெயர்ச்சில, வாயால வாங்கிக்கட்டிப்பேன்னு அன்னிக்கே விஜய்டீவில ஜோசியம் சொன்னாரு ஒரு மனுஷன்... ஒருவேள அதுவும் சரியாத்தான் இருக்கும்போல...
மீண்டும் இடைவேளைக்கு பிறகு திரைப்படம் தொடங்கி, அதே அளவிலான விறுவிறுப்பை ரசிகர்கள் உற்சாகத்தோடு ரசித்தனர்...
வழக்கமாக திரைப்படம் முடிவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே எவரும் அறியாமல் துப்பட்டாவால் முகம் மறைத்து வெளியேறும் கார்னர் சீட்டு காதலர்கள் கூட க்ளைமாக்ஸ் பார்க்கும் ஆவலில் இருக்கையை விட்டு எழாமல் அமர்ந்திருந்தனர்... இது அத்திப்பூத்தது போல அதிசயமாக எப்போதாவது மட்டுமே நிகழும் அபூர்வம்...
திரைப்படம் முடிந்து படியிறங்கி கீழே வரும் திலீப்பின் முகத்தில் மெலிதாக ஒரு மகிழ்ச்சி... ‘இந்த படம் சக்சஸ் ஆகிட்டா மட்டும் அந்த அவப்பெயரை மறக்கப்போறாங்களா என்ன?என்கிற அவநம்பிக்கையால் எழுந்த ஆற்றாமையும் அந்த புன்னகையின் ஊடே தொக்கி நிற்கிறது...
“அங்க கீழ வர்றது இந்த படத்து ஹீரோதான? வெளியேறிய கூட்டத்துக்குள்ளிருந்து ஒரு குரல் வந்த மறுநொடியே, பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்கள் போல திலீப்பை மொய்க்கத்தொடங்கியது ரசிகர்களின் கூட்டம்...
“திலீப் நாயர்தான உங்க பேரு? கன்னத்தை வருடியபடி கேட்டான் ஒரு ரசிகன்..
“படத்துல பார்த்ததைவிட நேர்ல கலரா இருக்காருல்ல? முட்டுவாயில் கைவைத்து அதிசயித்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்தி...
“ஒரு செல்பி சார்!” கல்லூரி மாணவியொருவள் அவன் கன்னத்தோடு கன்னம் ஒட்ட எத்தனித்தாள்...
“ஏய் ஏய்... எல்லாம் போங்கப்பா... தள்ளு, வெலகி நில்லு கூட்டத்தை கிழித்துக்கொண்டு திரையரங்க நிர்வாகி உள்ளே புகுந்து, திலீப்பின் கையைப்பிடித்து வாழ்த்து சொன்னார்... நான்கைந்து ஊழியர்கள் அவனை வட்டமிட்டு கைகோர்த்து ரசிகர்களின் அன்புத்தொல்லையிலிருந்து மீட்டு அலுவலக அறைக்குள் அழைத்துசென்றனர்... குஷன் இருக்கை ஒன்று போடப்பட்டு அதில் அமரவைத்து, குளிர்க்காற்று அவன் பக்கம் திருப்பிவிடப்பட்டது... காலையில் அலட்சியமாய் பேசிய மேலாளர் அசடு வழிய சிரித்துக்கொண்டிருந்தார்...
“படம் சூப்பர் ஹிட்டு ஆகுமுங்க... ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அற்புதமா இருக்குங்க...
“நீங்க மூணாவது ஹீரோன்னு யாரு சொன்னது?... படத்துல பேருல மட்டும்தான் மூனாவதா வர்றீக, மொத்த படத்துலயும் நீங்கதானுங்களே தம்பி ஹீரோ...
புகழ்மாலைகள் கழுத்தை முரித்துமிடும் அளவிற்கு சுமைபோல விழுந்தன... படம் நல்லா இருக்கு, ஆடியன்ஸ் ரசிக்கிறாங்க... எல்லாமும் ஓகேதான்... அதற்காக படத்தை தூக்கி நிறுத்துற தூண் அளவுக்கு சொல்லும் வார்த்தைகள், மயக்குவதற்கான ஜாலங்கள் என்பதுகூடவா புரியாமல் போகும்...
“தாங்க்ஸ் அதே அளவான புன்னகையைத்தாண்டி பதிலெதுவும் இல்லை...
“சார் ஒரு போட்டோ எடுத்துக்குவோம், ப்ரஸ்க்கு அனுப்பனும் முன்நெற்றியில் அவசரமாக சீப்பைக்கொண்டு வழித்துக்கொண்டார்...
திலீப் நடுநாயகமாக நிற்க ஊழியர்கள் சகிதம் முதலாளியும் புகைப்படத்தில் இணைந்துகொண்டார்...
“நாளைக்கு காலைல தந்தில வரணும், தினகரனுக்கும் அனுப்பிடுங்க... மூணாவது ஹீரோன்னு நம்பர்லாம் போடவேணாம், கதாநாயகன்னு மட்டும் போடச்சொல்லுங்க... கட்டளை பிறப்பித்துவிட்டு திலீப்பை தனியே அழைத்தார் திரையரங்க முதலாளி...
“வார்த்தைக்காக சொல்லல தம்பி, படம் கண்டிப்பா சூப்பர் ஹிட்டு ஆகும்...தம்பிகிட்ட ஒரு சின்ன ஆப்லிகேஷன், மறுக்காம ஒப்புக்கணும்...
“சொல்லுங்க சார், என்னால முடிஞ்சா செய்றேன்?
“எப்டியும் அடுத்தப்படம் பெரிய பேனர்லதான் பண்ணுவீங்க, தஞ்சாவூர் ஏரியா டிஸ்ட்ரிப்யூஷன் எனக்கு ஒதுக்கணும்... மாட்டேன்னு சொல்லிடாதிங்க, அடுத்த படமும் நம்ம தியேட்டர்ல நூறு நாள் ஓடனும்.. தலையை சொரிந்துகொண்டார்...
“சார், நீங்க சொல்றது புரியுது... ஆனா, டிஸ்ட்ரிப்யூஷன் பற்றியல்லாம் ப்ரட்யூசர்தான முடிவு பண்ணனும்?
“அது உங்க முதல் படத்துக்குத்தான் முடிவு பண்ணுவாங்க... சொன்னா நம்பமாட்டிங்க, இன்னிலேந்து உங்க மார்க்கெட் உச்சத்துக்கு போய்டும் பாருங்க... முப்பது வருஷமா தியேட்டர் நடத்துறேன், ஆடியன்ஸ் பல்ஸ் வச்சு பார்த்தே எல்லாத்தையும் கனிச்சிடுவேன்... இனி உங்க கால்ஷீட்டுக்காக அத்தன ப்ரட்யூசரும் தவம் கெடப்பாங்க பாருங்க... அப்புடி இருக்கயில நீங்க வச்சதுதான் சட்டம்...
திலீப்பிற்கு எதுவும் புரியவில்லை... அதெப்படி முதல் காட்சியை வைத்து மட்டும் இப்படியல்லாம் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்?... அதுவும் அவ்வளவு நம்பிக்கையாக டிஸ்ட்ரிப்யூஷன் பற்றியல்லாம் பேசுகிறார்... முகத்தை மறைத்திருக்கும் அழுக்கான ‘ஹோமோகரை அவ்வளவு எளிதாக துடைக்கப்பட்டு, புதிய தோற்றம் மலர்ந்துவிடுமா என்ன?... ஆனாலும், இந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் கொட்டிவிட மனம் ஒப்பாமல், அரைகுறையாய் தலையை மட்டும் அசைத்து ஒப்புதல் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான் திலீப்...
மகி இன்னும் சிறகின்றி பறந்தபடியேதான் இருக்கிறான்... அலைபேசியில் யாரிடமோ அவ்வளவு உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறான்...
திலீப்பை பார்த்ததும் அழைப்பை துண்டித்துவிட்டு, அப்படியே அவனை கட்டியணைத்துக்கொண்டான்...
“என்னடா?... என்னாச்சு? சிதறிய குழப்பங்கள் இன்னும் திலீப்பின் சிந்தைக்குள் சிறைபட்டுத்தான் கிடக்கின்றன...
“நீ ஜெய்ச்சுட்ட மாமா... சென்னைல அத்தன தியேட்டர்லையுமே மாஸ் ஓப்பனிங்... பேஸ்புக், டிவிட்டர்னு அத்தன சோசியல் நெட்வர்க்லயும் ‘களம் படத்தை பற்றியும், உன் ஆக்டிங் பற்றியும்தான் பேச்சாம்.. இதைவிட முக்கியமா, இப்போதான் குமார் கால் பண்ணார்.. படபூஜைல ப்ராப்ளம்னு ஓடிப்போன ப்ரட்யூசர் சினி ஆர்ட்ஸ் முத்துப்பாண்டி, குமாரை விடாம கம்பல் பண்றாராம்... எப்டியாச்சும் உன்ன சமாதானப்படுத்தி படத்துல நடிக்க வைக்கனும்னு தலையால தண்ணி குடிக்குறாராம்... உன் கஷ்டங்கள் எல்லாம் காணாம போச்சு மாமா.. மீண்டும் இறுக்க கட்டியணைத்துக்கொண்டான்... திலீப்பால் நடப்பனவற்றை நிஜமென இன்னும் நம்பமுடியவில்லை... இனி குழப்பிக்கொள்வதில் அர்த்தமில்லை, நிதர்சனத்தை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்... கண்கள் கலங்கி கண்ணீர் அரும்பி வழிந்தது...
“அப்டின்னா நாம நாளைக்கே சென்னை போகணும் மகி, இன்னொருமுறை தப்பு எதுவும் நடந்திடக்கூடாது இம்முறை வாய்ப்பினை எந்த விதத்திலும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதில் திலீப் தீர்மானமாக இருக்கிறான்...
அன்று இரவே சென்னை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகின...
“இப்புடி சட்டுபுட்டுன்னு கிளம்பனுமாப்பா?... ஒரு நாலஞ்சு நாள் இருந்துட்டு போகலாம்ல? இம்முறை அப்பாவே வெளிப்படையாக கேட்டுவிட்டார்...
“இல்லப்பா... ஒரு அவசர வேலை... அடுத்தவாரம் போல அம்மாவ கூட்டிட்டு நீங்க மெட்ராஸ் வாங்க, ஒரு நாலஞ்சு நாள் எங்ககூட இருந்துட்டு வரலாம்...
அப்பா மறுக்கவில்லை, அம்மாவின் முகத்தில் மகரஜோதியின் பிரகாசம் சுடர்விட்டிருந்தது...
நீண்ட காலத்திற்கு பிறகு சென்னை, உற்சாகம் ததும்பும் ஊராக கண்ணுக்கு தெரிந்தது... தாம்பரத்தை தாண்டி கார் பயணித்தபோது மகியின் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் சிறகுகள் விரிக்கத்தொடங்கின..
மீண்டும் கனவு மேகங்களில் பறந்து, அந்தரத்திலிருந்து கீழே விழுந்து உடைந்து அடிபடுவதற்கு திலீப்பின் மனதில் வலு இல்லை... கற்பனைகளில் மிதக்க விரும்பாதவனாக, சற்று நிதானத்துடனேயே சூழலை அணுகினான்...
வீட்டிற்கு நுழைந்த வேகத்திலேயே அலைபேசி அழைப்புகள் கெண்டை மீன்களாய் துள்ளி விழுந்தன...
“சார், இருபது கோடில ஒரு பக்கா கமர்ஷியல் படம்... ஓப்பனிங்லேந்து எண்டு வரைக்கும் சந்தானத்தோட அட்ராசிட்டி பிண்றீங்க... ஹீரோயினா சமந்தாவ பேசிடலாம்... என்ன சொல்றீங்க? பெரிய பேனர் தயாரிப்பு தரப்பிடமிருந்து இப்படியோர் பம்பர் லாட்டரி அடித்தபோதும், அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லாதவனாக, “இப்போ ஒரு ஸ்க்ரிப்ட் கேட்டுட்டு இருக்கேன், அதனால நீங்க சொல்றதை யோசிச்சு சொல்றேன் சார்! பக்குவமாக தவிர்த்துவிட்டான்...
ஓரிரு மணி நேரங்களில் தயாரிப்பாளருடன் குமார் திலீப்பின் வீட்டிற்கே வந்துவிட்டான்...
“என்ன குமார் இதல்லாம்?... நானே ஆபிஸ் வந்திருப்பேன்ல... அவரு எவ்ளோ பெரிய ப்ரட்யூசர், இவ்வளவு தூரம் அலைக்கழிக்கனுமா?
“அதல்லாம் அப்போ... இப்போ நீ எவ்ளோ பெரிய வான்ட்டட் ஹீரோ தெரியுமா?.. வீட்டுக்கு மட்டுமில்ல, நீ வரச்சொன்னா கூவம் ஆத்துக்கு கூட வந்துதான் ஆகணும்! காதுக்குள் கிசுகிசுத்தான் குமார்...
“தம்பி தப்பா நெனச்சுக்கிடாதிய... அன்னிக்கு முட்டாள்த்தனமா பயந்துகிட்டு போயிட்டேன், அது எம்புட்டு தப்புன்னு இப்பதான் புரியுது... மொதல்ல ஒப்புகிட்ட மாதிரியே நம்ம கம்பெனிக்கு நடிச்சு கொடுக்கணும்... மாட்டேன்னு மட்டும் மறுத்துடாதிய! கைகூப்பி வணங்கிக்கொண்டார்... சினிமா ஒரே நாளில் ஒருத்தரை உச்சத்திற்கும் கொண்டுசெல்லும், அதே நாளில் அவர்களை அதலபாதாளத்திலும் தள்ளிவிடும் என்கிற நிதர்சனத்தை திலீப் உணர்ந்தான்...
இத்துனைகாலம் பெரிய மனிதனாய் நினைத்த ஒருவர் தன் முன்பு கைகூப்பி நிற்பதை கண்டபோது ஒரு கணம் மெல்லிய கர்வம் எட்டிப்பார்த்தது என்னவோ உண்மைதான்... ஆனால் அத்தகைய பிறரின் கர்வம்தான் தன்னை இத்தனை காலம் மேலே எழமுடியாமல் மிதித்துவைத்திருந்தது என்பதை உணர்ந்தவுடன், காற்றில் கரைந்த நீராவியாக காணாமல் போய்விட்டது... இப்போது அந்த தயாரிப்பாளரை பார்த்தபோது மெல்லிய அனுதாபம் மட்டுமே பிறந்திருந்தது...
“ஒன்னும் கவலைப்படாதிங்க சார்... நம்ம கம்பெனிக்குத்தான் நான் படம் பண்றேன்... அதில எந்த மாற்றமும் இல்ல... இந்தமுறை பூஜை ஏதும் போடவேணாம், நேரடியா ஷூட்டிங் போய்டலாம்... குமார் எப்போ போன் பண்ணி சூட்க்கு கூப்ட்டாலும் நான் வந்திடுறேன்... சந்தோஷமா?
இருக்கையில் அமர்ந்திருந்தவர் வேகமாய் எழுந்துவந்து திலீப்பின் கைகளை பிடித்துக்கொண்டார்.. “உங்க மனசுக்காகவே படம் நல்லா வரும்னு நம்பிக்கை இருக்கு தம்பி... ஊருல இருக்குற சொத்தை வித்தாச்சும் பெரிய பட்ஜெட்ல இந்த படத்தை பண்றோம்... ப்லாக்பஸ்டர் ஹிட்டு கொடுக்குறோம்.. நெகிழ்ந்துபோனார்... அவை வெறும் வார்த்தைகளாக தெரியவில்லை... நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் போன்றவற்றை மட்டுமே அதிகம் பார்த்துவிட்டு, திரைத்துறையில் அரிதாய் நல்ல மனங்களை பார்க்கும்போது துளிர்விடும் உணர்வு பொங்கல்தான் அந்த வார்த்தைகள்..
அடுத்த ஒரு வாரத்திற்கும் ஒரு பிரபலமாய் திலீப் வாழ்க்கையை அனுபவித்து ரசித்தான்... எங்கே போனாலும் ஓடிவந்து கையெழுத்து கேட்கும் ரசிகர் கூட்டம், சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் தனது போஸ்டர்கள், கல்லூரி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர் அந்தஸ்து, எல்லா வார ஏட்டிலும் அட்டைப்படத்தில் தன் சிரித்த முகம்... இந்த நாட்களுக்காகத்தானே இத்தனை வருட உழைப்பும்...
இப்போதுகூட தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றின் ப்ரோமோவில் கலந்துகொள்ளத்தான் சென்றிருக்கிறான்... எப்படியும் வீட்டிற்கு வர நள்ளிரவை தாண்டிவிடும்..
பணி முடிந்து வீட்டிற்கு வந்த மகியின் வாயில் வலுக்காட்டாயமாக ஒரு இனிப்பை திணித்தான் வாசு...
“என்னடா?... ஸ்வீட் கொடுக்குற அளவுக்கு அப்டி என்ன சந்தோஷமான செய்தி?.. பத்மினி உனக்கு ஓகே சொல்லிட்டாளா?
“அதல்லாம் இல்ல மகி... இப்பதான அவகூட பேசவே ஆரமிச்சிருக்கேன், உடனே ஓகே சொல்ல நானென்ன ரன்பீர் கபூரா?
“அப்டி இல்லன்னா வேறென்ன ஹாப்பி நியூஸ்?
“போன மாசம் ஒரு சாப்ட்வேர் கம்பெனில இன்டர்வியூ போயிட்டு வந்தேன்ல,  அதில பிளேஸ்மென்ட் ஆகிட்டேன்... நல்ல சாலரி பாக்கேஜ், நெக்ஸ்ட் வீக் ஜாயின் பண்ண சொல்லி கால் லெட்டர் வந்திருக்கு... வாசுவை அப்படியே கட்டியணைத்து, அவன் வாயிலும் ஒரு இனிப்பை திணித்தான் மகி.. வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சிகள் இடையிலே வந்திருந்தாலும், உடனிருக்கும் வாசுவின் பணி பற்றிய கவலை மட்டும் மெலிதாய் மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருந்தது... இப்போது அந்த பாரம் கரைந்துபோனதை போன்று மனம் சில்லிட்டது..
“நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாசு... ஆமா, இந்த விஷயத்த உன் ஆளுகிட்ட சொன்னியா?..
“இன்னும் இல்ல... முதல்ல உன்கிட்ட சொல்லனும்னுதான் வெயிட் பண்ணேன்...
“அடலூசு... முதல்ல அவகிட்ட போய் சொல்லு, ஸ்வீட் கொடு... முடிஞ்சா ஊட்டிவிடு.. கண்ணடித்தான்.. வெட்கப்பட்டுக்கொண்டே ஒரு இனிப்பு பெட்டியை எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கிப்போனான் வாசு...
ஆசுவாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் மகி.. தமிழ் சினிமாவின் முடிவைப்போல எல்லாம் சுபமா நடந்திட்டு இருக்கு... திலீப்பின் கனவு பலித்தது, இப்போ வாசு கரியர் தொடங்கிட்டான்... நானும் சந்தோஷமா இருக்கேன்.. இப்டியே வாழ்க்கை கடைசி வரைக்கும் போகணும்.. கண்களை மூடிக்கொண்டு கடவுளை நினைத்துக்கொண்டான்...
‘டக்.. டக்.. டக்.. அதற்குள்ளாகவா காதலியை தேடிப்போன வாசு திரும்பி வந்துவிட்டான்?... அவனுக்கு நிறைய கற்றுக்கொடுக்கணும் போல!..
கதவை திறந்தான் மகி... யாரோ ஒரு புதுமுகம்.. யார்? என்ன? என்று வினவுவதற்குள் மறுமுனையின் கேள்விக்கணைகள் வில்லாக சீறிப்பாய்ந்தன..
“திலீப் வீடுதான?
“ஆமா... நீங்க யாரு?
“மகிழன்தானே நீ?.. நீ அடிவாங்கினப்போ டீவில பார்த்தது, காயமல்லாம் கூட ஆறிடுச்சு போல? மகியின் கன்னத்து காயத்தழும்பினை வருடிப்பார்த்தான்..
அவசரமாக அதனை தட்டிவிட்டு, “முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க சற்று கடுமையாகவே வார்த்தைகள் விழுந்தன..
“அதை திலீப் வந்ததும் நீயே கேட்டுக்கோ... ஆமா, கூடவே ஒரு வெட்டி பீஸ் ஒன்னு இருக்குமே வாசுன்னுட்டு... அதெங்க? மகியை விலக்கிவிட்டு வீட்டிற்குள் சகஜமாய் நுழைகிறான்.. அறைகளை கண்களால் அளவெடுத்தான்... கட்டிலின் அருகே சென்று இரண்டு படுக்கை விரிப்பினையும் ஆராய்ச்சி செய்தான்...
“ஒரே பெட்லையா படுக்குறீங்க?
“இதல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்... அடுத்தவங்க பெட்ரூம்குள்ள இப்டி துழாவுறீங்களே, கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா? தலைக்கு மேல் கோபம் கொதித்துக்கொண்டிருக்கிறது...
“ஹ ஹா... அடுத்தவங்க பெட்ரூமா இது?... இதை திலீப்கிட்ட சொல்லிப்பாரு, விழுந்து புரண்டு சிரிப்பான்...
“யாருன்னு சொல்றீங்களா, இல்ல உங்கள வேறமாதிரி ட்ரீட் பண்ணனுமா? உதடுகள் துடித்தன...
“ஏய் நீ கொடுக்குறது வெறும் பில்டப்தான்னு தமிழ்நாட்டுக்கே தெரியும்... அதான் அவனுக நாலு பேர் அடிச்சப்போ சுருண்டு விழுந்தியே... ஹ ஹா... ஹாலில் சென்று இருக்கையில் சொகுசாக சாய்ந்தபடி அமர்ந்தான்..
எல்லா விடயங்களையும் பொறுமையாக அணுகும் மகியால், ஏனோ புதியவனின் ஒரு வார்த்தையைக்கூட கிரகிக்க முடியவில்லை... நான்கு தடியன்கள் ஆயுதங்களோடு தாக்கும்போது, திருப்பி தடுத்து அவர்களை தாக்குவதற்கு வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லை... இந்த விளக்கத்தை புதியவனிடம் சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை... இன்னும் சொல்லவேண்டுமானால் அந்த லாஜிக் புரியாத அளவிற்கு வந்திருப்பவன் ஒன்றும் முட்டாள் போலவும் தெரியவில்லை..
வாசுவை இவனுக்கு தெரிந்திருக்கிறது... அப்படியானால், வாசு வரும்வரை அமைதியாக காத்திருந்து வந்திருக்கும் வில்லங்கம் யாரென்று அறிந்துகொள்ளலாம்... மற்றுமொரு இருக்கையில் அமர்ந்துகொண்டு யூகிக்க தொடங்கினான் மகி.. ஒருவேளை தன்னை தாக்க ஏதேனும் சதித்திட்டத்தோடு வந்திருப்பானோ?... அப்படி ஒன்றும் அடியாள் போலவல்லாம் தெரியவில்லை.. சினிமாக்களில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளை போலத்தான் இருக்கிறான், தமிழ் வார்த்தைகள் கூட ‘ரகரங்கள், ‘ர்ர்ர்றகரங்களாக யுஎஸ் தமிழ் போலத்தான் தெரிகிறது.. திலீப்பையும் வாசுவையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறவன் என்பதால், அவர்கள் இருவரின் பழைய நண்பர்களில் யாராவதாக இருக்கலாமோ?..
போனோமா? வந்தோமா?ன்னு இல்லாமல் அந்த வாசு டூயட் பாட போய்விட்டான் போல பாவி... வாசலையே எத்தனை நேரம் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது?...
படி ஏறும் சத்தம் கேட்கிறது... வாசுவேதான்... வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் மகியை கட்டி அணைத்து, “மகி, பத்மினி வெட்கப்பட்டுட்டா... நானே ஸ்வீட்டை ஊட்டிவிட்டேன்... கூடிய சீக்கிரம் ஓகே சொல்லிடுவா... என்று கூறிவிட்டு மறுபுறம் திரும்பிப்பார்க்க, இருக்கையில் அமர்ந்து தன்னை கேலிச்சிரிப்போடு வெறித்துக்கொண்டிருக்கும் புதிய முகத்தை பார்த்து முகம் சுருங்கிப்போனான்...
“ஏய்... நீ எதுக்கு இங்க வந்த?... முதல்ல வெளில போ வாசு வெறுப்பின் மிகுதியோடு வார்த்தைகளை கொட்டினான்...
“கூல் வாசு... இது திலீப் வீடு.. என்னை வெளில போக சொல்றதுக்கு உனக்கென்ன ரைட்ஸ் இருக்கு?.. சற்றும் நிதானம் இழக்காமல் சொல்லிவிட்டு, காலின் மேல் காலை போட்டு சொகுசாக சாய்ந்துகொண்டான்..
“உங்களுக்குள்ள எல்லாம் ஓவர்... நான் திலீப்போட க்ளோஸ் ப்ரென்ட்...
“க்ளோஸ் ப்ரெண்டா?.. வேலை வெட்டி எதுக்கும் போகாம அவன் சம்பாதிக்குறதை தின்னே தீக்குறதுக்கு பேரு க்ளோஸ் ப்ரெண்டா?... மோரோவர், எனக்கும் திலீப்புக்கும் எல்லாம் ஓவர்னு சொல்றதுக்கு உனக்குதான் ரைட் இல்ல... அதை அவன் சொல்லட்டும்... இப்போ நீ போய் சாப்பிட்டு தூங்குற முக்கியமான வேலைய பாரு ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு பாடலை ரசிக்கத்தொடங்கிவிட்டான் புதியவன்..
“திமிரு பிடிச்ச நாய்.. எதுக்கு மறுபடியும் நாக்கை தொங்கப்போட்டுட்டு வந்திருக்கான்னு தெரியல.. இன்னியோட இதுக்கு ஒரு முடிவு கட்டிடணும்... முனகிக்கொண்டே அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டான் வாசு...
நடப்பவை ஒன்றும் புரியவில்லை.. வந்திருக்கும் புதியவனிடம் எதற்காக வாசு இப்படி கோபப்படுகிறான்?.. அவனும் வாசுவை ஒரு புழுவை போல பார்க்கிறான்.. குழம்பிய மூளையோடு அறைக்குள் சென்று வாசுவின் அருகில் அமர்ந்தான் மகி..
“யாரு வாசு அவன்?... ஏன் அவனை திட்டுற?
“அவனை யாருன்னு தெரியலையா?... அவன்தான் கமல்.. திலீப்போட எக்ஸ் லவ்வர் மகியின் மனதிற்குள் விரிசல் விழுந்ததை போன்ற ஒரு வலி... எப்போதோ ஒருமுறை மொபைல் புகைப்படத்தில் பார்த்ததாக ஞாபகம், ஆனால் மனதிற்குள் பதியவைக்க வேண்டிய அளவிற்கு அவசியமில்லாத முகம் என்பதால் ஆழ்மனதிற்குள் நுழைந்திடவில்லை... இப்போது வாசு சொன்னதும்தான் அந்த முகம் நினைவிற்கு வந்தது...
“எங்கயோ வெளிநாடு போயிருக்கதா சொன்னானுக, இப்போ ஏன் இம்சை பண்ண இங்க வந்தானோ தெரியல.. திலீப் இன்னும் அவனை மறந்திருக்கமாட்டான்னு நெனப்பு போல.. அவன்வந்து கழுத்தை பிடிச்சு வெளில தள்ளுறப்போ எல்லாம் தெரியும் பாரு! இன்னும் வாசுவிற்கு கோபம் அடங்கவில்லை...வார்த்தைகளால் எவ்வளவு உணர்வுகளைத்தான் வெளிப்படுத்த முடியும், நாக்குமே ஒரு கட்டத்தில் குழறிப்போனது...
“ஏன் உன்மேல அவ்ளோ கோபமா இருக்கான் வாசு?
“எப்பவுமே அவனுக்கு என்னை பிடிக்காது... என்னை மட்டுமில்ல திலீப்போட யாரு நெருக்கமா இருந்தாலும் அவனுக்கு பிடிக்காது... தேவையில்லாம சண்டைபோட்டு மனசை தேத்திக்குவான்... ஒருவிதத்துல ஒரு சைக்கோ மாதிரின்னு வச்சுக்கோயேன்..
“அவ்ளோ பொசசிவ்னஸ் இருந்துச்சா?
“மண்ணாங்கட்டி... அப்டியல்லாம் இல்ல... திலீப் இவனைத்தாண்டி எதைப்பத்தியும் யோசிக்கவே கூடாதுங்குற ஒரு கேவலமான ஆதிக்க மனோபாவம்... எவ்வளவோ திலீப்பும் விட்டுக்கொடுத்து பார்த்தான், கடைசில எதுவும் வொர்க்கவுட் ஆகல....
“பட் திலீப் கமலைப்பத்தி சொல்றப்போ, இந்த அளவுக்கு மோசமா எதுவும் சொல்லலையே?
“அதுதான் அவனோட நல்ல மனசு... தன்னோட நெகட்டிவ் விஷயங்களை மட்டும்தான் உன்கிட்ட ஷேர் பண்ணிருப்பான், கமல் தரப்பு தவறுகள் எல்லாத்தையும் மறைச்சிருப்பான்... ஒருமுறை தியேட்டருக்கு படம் பார்க்க போனப்போ, சீரியல்ல நடிச்சதை கவனிச்ச ஒரு பொண்ணு திலீப்கிட்ட வந்து பேசுனா, ஒரு செல்பியும் எடுத்துகிட்டா... அதுவரைக்கும் சிரிச்சிட்டு இருந்த கமல், அந்த பொண்ணை திடீர்னு கண்டபடி திட்ட ஆரமிச்சுட்டான்.. ஒட்டுமொத்த தியேட்டருமே எங்களைதான் வேடிக்கை பார்த்துச்சு.. திலீப்புக்கு தர்மசங்கடமா போச்சு... அந்த பொண்ணுகிட்ட சாரி கேட்டுட்டு, மறுபக்கம் கமலை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வரவே மொத்த எனர்ஜியும் அவனுக்கு வேஸ்ட் ஆகிடுச்சு... அந்த அளவுக்கு தான் என்ன செய்றோம்னே தெரியாம சில நேரங்கள்ல பேசிடுவான்... அவனை லவ் பண்றதும், கண்ணாடி தொட்டிய கைல வச்சுகிட்டு வழுக்குப்பாறைல நடந்து போறதும் ஒண்ணுதான்..”  கமலைப்பற்றிய மற்றுமொரு பரிமாணம் மகியை ஆச்சர்யப்படுத்தியது... அதுவரை கமல் பற்றி மனதிற்குள் நிறுத்தியிருந்த ஒரு பிம்பம், சுக்குநூறாக சிதறிப்போனது..
இப்படியோர் குணத்துடன் இருப்பவனை அத்தனை காலம் சமாளித்திருப்பதே ஒருவகையில் திலீப்பின் பொறுமைக்கான சவால்தான்.. சரி அது எப்படியோ போகட்டும்?... அவ்வளவு விரக்தியோடு விலகிப்போனவன், இப்போது எதற்காக மீண்டும் வந்திருக்கிறான்?.. திலீப் என்னை காதலிக்கிறான் என்பதை அறிந்தும்கூட, சற்றும் சலனமில்லாமல் எந்த உரிமையில் இப்படி அமர்ந்திருக்கிறான்?... அவ்வளவு சென்சிட்டிவ் மனம் உடையவன், ஒருவேளை திலீப் கடுமையாக பேசி வீட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டால் எவ்வளவு துடித்துப்போவான்?... கொடுமையாகவல்லவா இருக்கும்!...
இதென்ன முட்டாள்த்தனமான பச்சாதாபம்?... என்றைக்கோ திலீப்பை வேண்டாமென உதறிவிட்டுப்போனவன், இன்றைக்கு மீண்டும் வந்து பழையபடி நட்பு பாராட்டினால், இன்முகத்தோடு அளவளாவ இங்கென்ன ஆன்மிக மையமா கட்டி வைத்திருக்கிறார்கள்?.. அவை எல்லாவற்றையும்விட, என் காதல் எனக்கு முக்கியமாச்சே... எவனோ ஒருவன் மீது பரிதாபப்பட்டு, என் காதலை இழக்க எத்தனித்துவிடுவேனா என்ன?... திலீப் வந்து கமலை எவ்வளவு கடுமையாக திட்டினாலும், இடைபுகுந்து தடுத்துவிடக்கூடாது... நல்லவனாக வாழ்வதற்கும், முட்டாளாக இருப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை.. அந்த இணைப்புள்ளிக்கு முன்பே சற்று விலகி இருப்பதுதான் உத்தமம்...
மணியும் எட்டு ஆகிவிட்டது... வழக்கமாக இந்நேரம் திலீப் வந்திருக்க வேண்டியவன்...
தயக்கத்தோடு அலைபேசியை எடுத்து அழைத்தான்...
ஹலோவிற்கு பதிலாக, “இதோ வந்துட்டேன் மகி, இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்ல இருப்பேன்... அழைப்பை துண்டித்துவிட்டு ஹாலை நோக்கி வந்தான் மகி...
இருக்கையில் சாய்ந்தபடி ஏதோ ஒரு ஆங்கில நாவலை அலட்சியமாக புரட்டிக்கொண்டிருக்கிறான் கமல்...
“என்ன மகிழன், இன்னும் திலீப்பை காணல? கடிகாரத்தை பார்த்துக்கொண்டான்...
“இதோ வந்திடுவார்... பட்டும்படாத பதிலோடு வேறுபக்கம் திரும்பிக்கொண்டான்... நொடிமுற்கள் நகர நகர மனதிற்குள் படபடப்பு அதிகமானது... கதவை திறந்து உள்ளே வரும் திலீப் கமலை பார்த்ததும் காட்டப்போகிற கோபமான முகமாற்றத்தை காணப்போவதின் பதற்றம்... அவசரமாக மேசை மீதிருந்த கண்ணாடி குவளைகளை எடுத்து சமையலறைக்குள் வைத்தான்... கோபப்பட்டு திலீப் எதுவும் அவற்றை உடைத்துவிடக்கூடாதே...
மாடிப்படிகள் ஏறும் சத்தம் கேட்கிறது.. திலீப்பின் குரலும் ஒலிக்கிறது, அலைபேசியில் மறுநாள் நிகழ்ச்சி பற்றி யாரிடமோ விளக்கிக்கொண்டிருக்கிறான்...
செருப்பை கழற்றிவிட்டு கதவை திறக்கையில், மகியின் மனம் படபடப்பின் உச்சத்தை அடைந்தது...
“சாரி மகி, கொஞ்சம் லேட் ஆச்சு... ப்ரோமோல... சொல்லிக்கொண்டே இடப்பக்கம் திரும்ப, இருக்கையிலிருந்து சற்று தடுமாற்றத்துடன் எழுந்து நிற்கிறான் கமல்...
ஏதோ பிரளயம் வெடிக்கப்போகிறது!.. பதற்றத்துடன் கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருக்கிறான் மகி...
“கமல்... திலீப்பின் வாயிலிருந்து வார்த்தை தடுமாறி விழுந்தது... புயலுக்கு முன்னான அமைதியா இது?...
“ஏய் கமல், எப்போ வந்த? மிக இயல்பாக கேட்கிறான்... மகி கண்களை துடைத்துக்கொண்டு நடப்பவற்றை கூர்ந்து கவனித்தான்.. உண்மையாகவே திலீப் இன்னும் இயல்பை இழக்காமல்தான் பேசுகிறான்... வார்த்தைகளில் கொஞ்சமும் கோபம் இருப்பதாய் புலப்படவே இல்லை... ஆனால் இதெப்படி சாத்தியம்?.. மேற்கொண்டு நடப்பவற்றை மெளனமாக கவனித்தான்..
“ஈவ்னிங்க்தான் திலீ... வந்ததும் உன்னை பார்க்கத்தான் ஓடி வந்தேன்... எப்டி இருக்க? சிரித்துக்கொண்டே மகியோடு உரசிக்கொண்டு நிற்கிறான்...
“நல்லா இருக்கேன்... இது நிஜமாவே சர்ப்ரைஸ்.. எவ்ளோ நாள் ஆச்சுல்ல?
என்னதான் நடக்குது இங்க?... வீட்டினுள் நுழைந்த வேகத்தில் கமலை வசவுகளால் அர்ச்சித்து வெளியே துரத்தியிருந்தால் அது இயல்பான நிகழ்வாக இருந்திருக்கும்... அல்லது கோபத்தின் மிகுதியால் முகம் கொடுத்து பேசிக்கொள்ளாமல் மெளனமாக அறைக்குள் சென்று அமர்ந்திருந்தால் அதுவும் இயல்பானதாக இருந்திருக்கும்... ஆனால் நினைத்தவைக்கு நேர்மாறாக குசல விசாரிப்புகள் நடந்துகொண்டிருப்பதை என்னவென்று எதிர்கொள்வது?... திகைத்தபடியே நிற்கிறான் மகி...
“சரி திலீ... நாளைக்கு பார்க்கலாம்... இனிமேதான் அப்பா அம்மாவையே பார்க்கணும்... உன்ன பாக்குற ஆர்வத்துல எல்லாத்தையும் மறந்துட்டு இங்கயே இருந்துட்டேன்... உருகி மருகி வெளியேறிவிட்டான்... படிகளில் இறங்கி போகும் வரை வாசலில் நின்று வழியனுப்புகிறான் திலீப்... பழைய படங்களின் நாயகி போல அவன் கார் செல்லும் வேகத்தில் இரண்டு கிலோமீட்டர் ஓடி வழியனுப்பாமல் விட்டதே அதிசயம்தான்...
“வாடாவா... உத்தமனே... அவன் இந்நேரம் வீட்டுக்கு போயிருப்பான், நீ கொஞ்சம் உள்ள வா... மகியின் கோபத்தை வாசுவின் வார்த்தைகள் வெளிப்படுத்தியது...
கதவை சாத்தி தாழிட்டு சற்று ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்து, வாசுவை அலட்சியமாக பார்த்தான் திலீப்...
“என்னடா ப்ராப்ளம் உனக்கு?
“எனக்கல்லாம் ஒன்னும் இல்ல... உனக்குத்தான் என்னாச்சுன்னு தெரியல... உச்சந்தலைல எலுமிச்சம்பழத்த வச்சு தேய்ச்சின்னா சரியாகிடும்னு தோணுது!
“இப்போ வீட்டுக்கு வந்த கமலை கோபமா திட்டி துரத்தியிருந்தா சந்தோஷமா இருந்திருப்பியா?... அப்டி பண்றதால என்ன கிடைச்சிடபோகுது?... அவனுக்கும் எனக்கும் இப்போ ஒரு சம்மந்தமும் இல்ல... நான் மகிய லவ் பண்றேன்னு கூட அவனுக்கு தெரியும்.. சோ ஒரு நட்பு நிமித்தமா பார்க்க வந்தவனை அவமானப்படுத்தி அனுப்பனுமா?... அதுவுமில்லாம அவன் லீவுக்குதான் வந்திருப்பான், எப்டியும் ஒரு பத்து நாள்ல பறந்திட போறவன இருக்குற வரைக்கும் கஷ்டப்படுத்தணுமா என்ன?... நான் பழைய திலீப்பா இருந்திருந்தா நீ நெனச்சது அத்தனையும் நடந்திருக்கும், ஆனா இப்போ நான் மகியால நிறையவே பக்குவப்பட்டிருக்கேன்... கொஞ்சம் விளைவுகள யோசிச்சு பேசுறதில தப்பில்லையே...
“என்னமோ போங்கடா... அந்த கமல் என்ட்ரி எனக்கு சுத்தமா பிடிக்கல... எனக்கு தோணுறத சொல்லிட்டேன், இனி முடிவெடுக்கிறது உங்க பாடு அறைக்குள் சென்றுவிட்டான்... இன்னும் வாசுவிற்கு எச்சமாய் கோபங்கள் தொக்கிக்கொண்டுதான் இருக்கிறது.. எப்போதும் எடுத்தேன் கவிழ்த்தேன் பேர்வழியான வாசு, இப்படி வழவழா கொழகொழா பாணி விஷயங்கள் மீது நம்பிக்கையற்று இருப்பவன்தான்... தாமதமாக இதன் உள்ளார்ந்த பொருளை உணர்வான் என்று தன்னுள் நினைத்தவாறு உடைகளை மாற்றத்தொடங்கினான் திலீப்...
மகியின் பாடுதான் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் திரிசங்கு நிலை.. தன்னை நோகடித்து படுகுழியில் தள்ளியவன் மீதுகூட ஒரு மெல்லிய நேயம் காட்டுமளவிற்கு பக்குவப்பட்டிருக்கிறான் திலீப், அந்த பக்குவம்கூட மகியால் வந்திருக்கிறதென்றும் கூறுகிறான்.. இந்த சூழலில் கமலின் வருகையால் தனது மனம் வருத்தப்படுவதாய் காட்டிக்கொள்ள மகிக்கு மனம் வரவில்லை.. இன்னும் சில நாட்கள்தானே, பற்களை கடித்துக்கொண்டு கடத்திவிடலாம்... சாலைகளில் எதிர்கொள்ளும் மேடு பள்ளங்களை பொறுமையாகத்தான் கடக்கவேண்டும்.. குழிகளின் மீது கோபப்பட்டு வேகமாய் ஓடினால், விழுந்து அடிபடப்போவதென்னவோ நமக்குத்தானே!... விகடனின் பக்கங்களை விரல்கள் புரட்டிக்கொண்டிருக்க, மனம் முழுக்க கமலைப்பற்றிய குழப்பங்கள் திரைகட்டி ஓடிக்கொண்டிருக்கிறது...
“மகி... ஆர் யூ ஆல்ரைட்? முகம் கழுவி துண்டால் துடைத்தபடி மகியின் தோளில் சாய்ந்தான் திலீப்... சிந்த்தால் சோப் வாசம் மகியை இயல்பு நிலைக்கு திருப்பியது...
“ஆல்ரைட் மாமா... ஏன் கேட்குற? பதற்றத்தை வெளிக்காட்டவில்லை...
“இல்ல.. விகடனை தலைகீழா படிச்சிட்டு இருக்கியேன்னு கேட்டேன்.. சிரித்தான்... அடக்கொடுமையே!.. இவ்வளவு நேரமும் தலைகீழாகவா பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.. மூக்கால் சாப்பிடுவதாய் நடித்தபிறகு தும்மலுக்கு பயந்திட முடியுமா?... சமாளிப்போம்!...
“அது ஒண்ணுமில்ல மாமா.. இப்போ புதுசா ஒரு ரிசர்ச் பண்ணிருக்காங்க... புத்தகங்கள தலைகீழா படிக்குறப்போ, நம்ம மூளையோட செயல்பாடு அதிகரிக்குமாம்... அதான் செஞ்சு பார்த்தேன்!
“நல்லவேள புக்கை நேரா வச்சு, நீ தலைகீழா நின்னு படிக்காம இருந்தியே.. என்ன ரிசர்ச்சோ போ! சிரித்தான்...
ஒருவழியாக புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, பேச்சை மடைமாற்ற ஆயத்தமானான் மகி... காலை முதல் மாலை வரை நடந்த எத்தனையோ விஷயங்கள் இருக்கிறதே, ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு பத்து நிமிடங்கள் இயல்பான உரையாடல் சென்றுகொண்டிருந்தது...
இடையில் திலீப்பிற்கு திடீரென அந்த கேள்வி உதித்தது..
“கமல் வந்ததுல உனக்கெதுவும் சங்கடம் இல்லையே மகி?... நான் அவன்கிட்ட நடந்துகிட்ட முறையால ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?
“ச்ச ச்ச... எனக்கென்ன மாமா ப்ராப்ளம்?.. இவ்ளோ மெட்ச்சூர்டா நடந்துகிட்டதுல சந்தோஷம்தான்... அவசரமாய் பதில் சொல்லி முடித்தான்.. திலீப்பின் முகம் சுடரொளி பட்ட வெள்ளியாய் பிரகாசித்தது... அதில் ஒரு பெருமிதமும் தொனித்தது...
“யாரு வந்தாலும் போனாலும் நீ எப்பவும் என்கூடத்தான் இருப்பன்னு நம்பிக்கை இருக்குற வரைக்கும் இதுப்பத்திலாம் எனக்கு எந்த கவலையும் இல்ல மாமா... கூடுதல் தகவலாக சொல்லும்போது, உள்ளார்ந்த சோகம் வெளிப்பட்டுவிடாதபடி கவனமாய் சொன்னான்...
“வாசுதான் அவசியமில்லாம கோபப்பட்டான் பார்த்தியா?... நிஜமா கமலை பார்த்தப்போ எனக்கும் கோபம் வந்துச்சு, என்னென்னமோ திட்டனும்னல்லாம் தோனுச்சு... கொஞ்சம் லாஜிக்கலா யோசிச்சப்போதான், இப்போ அவனை திட்டுறதுல யாருக்கென்ன கெடச்சிட போகுது?ன்னு தோனுச்சு... அதான் மனசுல தோணுனத தள்ளி வச்சிட்டு, அறிவு சொன்னபடி செஞ்சேன்... மனசுல தோன்றதல்லாம் பேசிட்டா உறவுகள் நிலைக்காதுல்ல! தத்துவவாதியை போல பேசுகிறான்.. ‘ஐயோ மாமா எல்லா நேரத்திலும் மனசு தப்பா முடிவெடுத்திடாது... சிலநேரங்களில் அறிவு ஒருத்தனை மூடனாகக்கூட ஆக்கிவிடும்... விளைவுகள் புரியாத வீணனாக உருமாற்றிவிடும்!இப்போது மகியின் மனது இப்படித்தான் பதறியது... ஆனால் வெளிக்காட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை... மௌனித்தபடியே திலீப் சொன்னவற்றுக்கு தலையசைத்து ஆமோதிப்பதை தவிர வேறு வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை...
கண்களை மூடி உறங்க பிரயத்தனப்பட்டான்... தூக்கம் தூரத்து உறவாய் விலகியே நின்றது..
கண்களை அழுத்த மூடினால், கமல்தான் திரை முன் நிற்கிறான்... என்ன ஒரு விஷமத்தனமான பார்வை... பேசும் அத்தனை வார்த்தைகளிலும் விஷமும் கலந்தே வெளிவருகிறது... திலீப்பின் முன் சாந்த சொரூபனாகவும், அவன் இல்லாத தருணத்தில் கொடூர மனத்தனாகவும் மாறுகின்ற வேடதாரி...
ஒருபுறத்தில் இவன் எத்தகையவனாக இருந்தாலும் திலீப்பை மாற்றிட முடியாது என்கிற நம்பிக்கை ஆழமாக உதித்தாலும், மறுபக்கம் ஒருகாலத்தில் திலீப் காதலித்தவன் ஆயிற்றே என்கிற இயல்பான பதற்றம்.. கமலுடனான காதல் மகியின் வரவிற்கு பிறகு, ஆழமாக புதைக்கப்பட்டுவிட்டது என்றாலும் கூட, அதனை கிளறிவிட்டால் மீண்டும் வெளிப்பட்டுவிடுமோ? என்கிற ஒரு சாமானியனின் பயம் சற்று பதற்றத்திலேயே நீடிக்கச்செய்கிறது...
இதுவும் ஒரு சவால்தான்... பார்த்துவிடலாம் என்ன நடக்கிறதென்று... மனதிற்குள் மெலிதாய் துளிர்த்த துணிச்சலுக்கு நீர் விட்டு, உரம் போட்டு நம்பிக்கையோடு கண்ணயர்ந்தான்...
விடிந்தபோதும் குழப்பம் முடிந்தபாடில்லை... சற்று பித்துப்பிடித்தவன் போலவே நடமாடினான்.. தனக்குள் சிதறிக்கிடக்கின்ற பதற்றத்தை மறைக்கும் பொருட்டு, அடிக்கடி அவசியமில்லாமல் சிரிக்கிறான் மகி...
மருத்துவமனை சென்றபிறகும் சிரிப்பை மறந்தவனாகவே மாறிப்போனான்...
“என்ன மகி ஆளு டல்லா இருக்குற மாதிரி தெரியுது? கோட்டை கழற்றி தோளில் போட்டபடியே கேட்டான் பிரதீப்.. கழுகுக்கு மூக்கு வியர்க்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்...
“அப்டிலாம் ஒண்ணுமில்லப்பா... லேசா தலைவலி இதுதானே யுனிவர்சல் சமாளிப்பு...
“தெரியும் மகி... உங்க தலைவலி நேத்தே இந்தியா வந்திடுச்சுன்னு கேள்விப்பட்டேன்... இயல்பான சிரிப்புடன் சொல்கிறான்... மகிக்கு தூக்கிவாரிப்போட்டது... எப்படி இவ்வளவு எளிதாக அனுமானித்துவிட்டான் ஒரு ஒற்றைப்பார்வையில்?.. சற்று கவனமாகத்தான் கமல் விஷயத்தை கையாளனும் போல!...
“ச்ச ச்ச... கமல் வந்ததுக்கு நான் ஏன் மூட் அவுட் ஆகணும்?
“நான் கமல் பேரையே சொல்லல, அதுக்குள்ள நீங்களாவே உளறிட்டிங்க மகி! அடக்கடவுளே... ஏன் இன்னிக்கு இவ்ளோ சொதப்புறேன்?... நான் சொதப்புறேனா? அல்லது பிரதீப் இன்னிக்கு புத்திசாலித்தனமா பேசுறானா?... ஒன்றும் புரிபடவில்லை...
“கமல் உன் நண்பன்ங்குறதால கெஸ் பண்ணேன்பா... மத்தபடி நீ நினைக்குற எதுவும் உண்மையில்லை...
“சரி போகட்டும் விடுங்க... கமல் நேரா உங்க வீட்டுக்குதான் வந்தானாமே?.. திலீப் அவ்ளோ டீசன்ட்டா பேசினார்னு அவ்ளோ சந்தோஷப்பட்டான்.. திலீப்பை பத்தி அவ்ளோ உருகி சொல்றத பார்க்குறப்போ, எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு... பார்த்து மகி, கொஞ்சம் கவனமா இருங்க...
“நான்... நான் ஏன் கவனமா இருக்கணும்?... ஒரு மனிதாபிமான அடிப்படைல கமல் கிட்ட அப்டி பேசினார்... மத்தபடி கமல் நினைக்குற எதுவும் நடக்க வாய்ப்பே இல்ல... நீ அதிகம் கற்பனை பண்ணி என்னைய குழப்ப நினைக்காத பிரதீப்..சற்று வேகமாக பேசினான்...
“ஐயோ இதில நான் என்ன குழப்பப்போறேன்?.. எனக்கு தோணினத சொன்னேன்... கமல் போல நீங்களும் என் நண்பன்தான்... உங்கமேல உள்ள அக்கறைலதான் இதல்லாம் சொல்றேன்... அதுமட்டுமில்லாம கமலைப்பத்தி அதிகம் தெரிஞ்சவன்குற முறைல ஒன்னு சொல்ல விரும்புறேன்... அவன் ஒரு விஷயத்த விரும்பிட்டான்னா, எவ்ளோ கஷ்டப்பட்டாவது அதை அடைஞ்சிருவான்... திலீப் விஷயத்துல ஒரு சின்ன ப்ரேக் நடந்துட்டத போலத்தான் அவன் நினைக்குறான்.. இப்போவரைக்கும் அவன் திலீப்பைதான் லவ் பண்றான்.. அதனால நீங்க கொஞ்சம் கவனமா இருக்குறதில தப்பில்ல...
“இங்க பாரு பிரதீப், அந்த கமல் எப்டிப்பட்டவன்? என்ன பண்ணுவான்? இதல்லாம் எனக்கு அவசியமில்லாத விஷயங்கள்... நான் கமலை லவ் பண்ணலையே... திலீப் என்னையதான் லவ் பண்றார்... அவர்மேல எனக்கு முழுசா நம்பிக்கை இருக்கு... மத்தபடி எந்த கவலையும் எனக்கில்ல...
பிரதீப்பை சமாளித்து அனுப்பிவைத்தான்.. என்ன நடக்குது இங்க?... கமல் இன்னும் திலீப்பை காதலிக்குறானா?.. இந்த உண்மை திலீப்புக்கு தெரியுமா?... வெளுத்ததெல்லாம் பால் இல்லை, விஷம் கூட வெண்மையாய் இருப்பதுண்டு என்கிற இயல்பான லாஜிக் கூடவா புரியாதவன்?.. கடவுளே!.. நிஜமாகவே தலை வெடித்துவிடுவது போல ...
“சிஸ்டர், நான் கிளம்புறேன்... ஏதும் எமர்ஜன்சின்னா பிரதீப் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கோங்க... நோட்ஸ் எழுதிக்கொண்டிருந்த செவிலிப்பெண், இதைத்தான் அவ்வளவு நேரம் எதிர்பார்த்தவளாய் அவசரமாக ஆமோதித்து தலையசைத்தாள்...
வாசு மட்டும்தான் வீட்டில் இருக்கிறான், அவனும் லாப்டாப்பில் ஏதோ படம் பார்த்துக்கொண்டிருக்கிறான்... நல்லதுதான் அதுவும்... எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓரிரண்டு மணி நேரம் கண்ணயர அந்த சூழல்தான் சரியானது...
“என்ன மகி அதுக்குள்ள வந்துட்ட? சம்பிரதாயமாகத்தான் கேட்கிறான் வாசு...
“லேசா தலைவலி வாசு, கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்குறேன்.. சொல்லிவிட்டு அறைக்குள் நிழைந்து, படுக்கையில் விழுந்தான்... மனதில் இருப்பவற்றை நேற்றே முழுவதுமாய் கொட்டிவிட்டு, இன்றைக்கு இளகிய மனதுடன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறான் வாசு.. அதுவும்கூட ஒருவகையிலான ஸ்ட்ரெஸ் பஸ்டர்தான் போலும்...
கண்ணயர்ந்து ஆழமான நித்திரைக்குள் நுழைந்தான்...
ஏதோ பேச்சுக்குரல் கேட்டுத்தான் விழித்தான்... அறைக்குள் கும்மிருட்டு, ஹாலில் ஒளிர்ந்துகொண்டிருந்த டியூப் லைட் வெளிச்சம் இரவாகிவிட்டதை உணர்த்தியது... கைகளை அருகே துழாவி அலைபேசியை எடுத்து, நேரத்தை பார்த்தான்.. எட்டு மணி ஆகிவிட்டது... மொபைல் திரையில் பளிச்சிட்ட திலீப்பின் முகத்தில் கள்ளம் கபடமற்ற சிரிப்பு... இவனை நம்பாம வேற யாரை நம்பப்போறோம்?... ஆயிரம் கமல் வந்தாலும் இந்த நல்ல மனதினில் நஞ்சை விதைக்கமுடியுமா?... ச்ச... கூடாது... முழுமையாக திலீப்பை நம்பனும்...
ஹாலில் கேட்டுக்கொண்டிருக்கும் குரலுக்கு சொந்தக்காரன் திலீப்தான்... வாசுவிடம் ஏதோ சிரித்து அளவலாவிக்கொண்டிருக்கிறான்.. கண்களை கசக்கியபடி எழுந்து ஹாலுக்கு சென்றான் மகி.
“என்னாச்சு மகி?... ஏன் திடீர்னு தலைவலி? அக்கறையாக கேட்கிறான் திலீப்...
“ஒண்ணுமில்ல மாமா.. இப்போ சரி ஆகிடுச்சு..
“இப்போலாம் எல்லா தலைவலியும் சொல்லிக்காமதான் வருது திலீப்! சிரித்துக்கொண்டே வாசு சொன்னதை, எரிச்சலோடு எதிர்கொண்டான் திலீப்...
சற்று அலட்சிய தொனியோடு, “உன்ன நான் ஏதும் கேட்கல வாசு, நீ கொஞ்சம் பேசாமதான் இரேன்! கடித்தான்...
“இப்போ யாரும் எதுவும் பேசவேணாம் திலீப்... மகி மதியம் சாப்டலன்னு நெனைக்குறேன்... மொதல்ல மூணு பேரும் சாப்டுவோம், அப்புறம் விடிய விடிய வேணாலும் பேசலாம் சமையலறைக்குள்லிருந்து உணவு பதார்த்தங்களை எடுத்துவந்து ஹாலில் அடுக்கினான் வாசு.. ஒரு தட்டை எடுத்து, அதில் இட்லிகள் இரண்டை அருகருகே வைத்து, சட்னியை மேலாக ஊற்றி மகியின் முன்பு நீட்டினான்... தூக்கம் களைந்து நிதானித்த மதியும், பேசிக்குழப்ப விரும்பாதவனாக சாப்பிடுவதில் முனைப்பானான்... மதியம் சாப்பிடாததால் பசி வயிற்றை சுரண்டத்தொடங்கியிருந்தது...
சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் வாசுவின் அலைபேசியில் அவ்வப்போது வாட்சப் குறுஞ்செய்தி கொட்டிக்கொண்டே இருந்ததை மகி கவனிக்க தவறவில்லை...
“என்ன வாசு இப்போலாம் வாட்சப்லதான் வாழ்க்கையே நடத்துற போல? சிரித்தான்...
“அட சும்மா இரு மகி.. என்னதான்பா லவ் பண்றாங்க?... மூணு வேளைதான் சாப்பிடுறோம்... ஆனா ஆறு முறை ‘சாப்டியா?னு கேட்கனுமாம்.. தும்மினா கூட ஜிகா வைரஸ் வந்தது மாதிரி பதறனுமாம்.. அவ ஆன்லைன்ல வர்றப்போ, நான் ஐசியூல இருந்தாக்கூட ரிப்ளை பண்ணியே ஆகணுமாம்.. இப்டி மெசேஜ் டைப் செஞ்சே என் விரல்கள் எல்லாம் வளைஞ்சு போச்சு.. பேசாம சிங்கிளாவே இருந்திருக்கலாம் போல!..”
“இப்போக்கூட ஒன்னும் மோசம் போய்டல... நான் வேணா பேசி, உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கவா? ஆர்வமானான் திலீப்...
“நீங்க ஒரு ஆணியையும் புடுங்க வேணாம் ஹீரோ சார்... உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்ல, அதுல எதாச்சும் ஒன்னை போய் பாருங்க.. என்னைய விட்ருங்க!
“சீரியஸா சொல்லனும்னா இந்த லவ் ஒரு வித்யாசமான பீலிங்க்தான்... இருக்குறவரைக்கும் குறை சொல்லிகிட்டே இருப்போம், அது போனபிறகு வருத்தப்பட்டு புலம்பிகிட்டு இருப்போம்.. திலீப் ஏதோ தத்துவம் சொல்ல எத்தனித்தான்...
“ஓஓஹோ... ரொம்ப அனுபவமோ?
“அனுபவம்தான்... பட் என்னோடதில்ல, கமல் பத்தி சொல்றேன்... அப்போ எங்க லவ் பிரேக்கப் ஆனப்போ அவன் செஞ்ச தவறுகள் புரியலையாம்... இப்போ புரியுறப்போ அதை சரி செய்றதுக்கான வாய்ப்புகள் இல்லைன்னு புலம்பினான்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு?
“இன்னிக்கும் அவனை மீட் பண்ணியா? வாசு எரிச்சலோடு கேட்டான்...
“ஹ்ம்ம் ஆமா... ஜஸ்ட் ஒரு காபி, அவ்ளோதான்.. அப்போதான் புலம்பினான்... இன்னும் ஒரு வாரத்துல இங்கிருந்து கிளம்பிடுவான்... அதுவரைக்கும் அவன் அன்புத்தொல்லை அப்பப்போ இருக்கும் போல!
சாப்பிட்டுக்கொண்டிருந்த மகி, சட்டென எழுந்துவிட்டான்...
“ஏய் ஏண்டா சாப்பிடாம எழுந்துபோற?
“பசி இல்ல வாசு... தட்டை வைத்துவிட்டு தண்ணீர் அருந்தியபின் மீண்டும் படுக்கையறைக்குள் ஐக்கியமானான்... சாப்பிட முடியவில்லைதான்... எவ்வளவுதான் சமரசம் செய்துகொண்டாலும், கமலைப்பற்றி திலீப் எதாவது சொல்லும்போது மனதிற்குள் அனிச்சையாக ஒரு எரிச்சல் தொற்றிக்கொள்கிறது... லேசான படபடப்பும், உடலில் மெல்லிய தடுமாற்றமும் அவனது இயல்புத்தன்மையை ஆட்டம்காண செய்துவிடுகிறது...
இது நிச்சயம் திலீப் மாறிவிடுவானோ? என்கிற சந்தேகத்தின் வெளிப்பாடு இல்லை... திலீப்பின் மனதிற்குள் தான் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று அப்போதுவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஏக்கத்தின் ஏமாற்றம்... இன்னும் ஒருவாரம்தான்... பற்களை கடித்தபடியே நகர்த்திவிடலாம்... மீண்டும் படுக்கையில் விழுந்து புரளத்தொடங்கினான்...
“உடம்பு சரியில்ல போல மகிக்கு கவலையோடு வாசுவிடம் கூறுகிறான் திலீப்...
“உடம்புக்கு ஒண்ணுமில்ல, மனசுக்குத்தான்...
“என்னடா சொல்ற?
“அதுகூட புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு குழந்தையா திலீப் நீ?.. கமலை பத்தி இவ்ளோ சிலாகிச்சு சொல்றப்போ எனக்கே பத்திகிட்டு வருது... பாவம் அவனுக்கு எப்டி இருக்கும்?
“நீ லூசா வாசு?... மிதுன் எனக்கு முத்தம் கொடுத்தத பார்த்துக்கூட சந்தேகப்படாதவன் மகி... கமல் கூட பேசுனதுக்கு ரியாக்ட் பண்ணுவானா?
“அதான் நீ நெனைக்குற தப்பு... மிதுன் யாரோ ஒரு மூணாவது மனுஷன்... ஆனா கமல் அப்டி இல்ல... ஒருகாலத்துல நீ லவ் பண்ணவன்.. என்னதான் அவனை மறந்து இப்போ புது வாழ்க்கை வாழ்ந்தாலும், அடியாழத்துல உன் மனசுலயும் கமல் பத்தி ஒரு சாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யும்... அது கமலுக்கு சாதகமா போய்டக்கூடாதுன்னு அவன் பயப்படலாம் இல்லையா?
“அப்டி பயப்படுற அளவுக்கு அவன் சாமான்ய மனுஷன் இல்லடா...
“ஆனா அவனும் மனுஷன்தான் திலீப்... கொஞ்சம் லாஜிக்கலா யோசிச்சு பாரு... அவன் நல்லவந்தான், அதுக்காக முற்றும் துறந்த முனிவன் இல்ல... சொல்லிவிட்டு வாசுவும் எழுந்து கைகழுவ சென்றுவிட்டான்...
திலீப்பிற்கு மெலிதாய் குழப்பங்கள் அரும்பத்தொடங்கியது...
ஒருவேளை வாசு சொல்வதுதான் சரியோ?.. சின்ன விஷயங்களுக்கெல்லாம் மகி சலனப்படமாட்டான் என்பதற்காக, மிகப்பெரிய விஷயங்களில் அவனை சோதனை எலி போல பயன்படுத்துறேனா?.. பொறுமையாய் இருக்கிறான் என்பதற்காக நெருப்பை அள்ளி தலையில் கொட்டிப்பார்ப்பது எவ்வளவு கொடூர எண்ணம்!..
அறைக்குள் நுழைந்தான்... மகி கண்களை மூடியபடி படுத்திருக்கிறான்... உறங்கவில்லை என்பதை அதிகம் சிரமப்பட்டெல்லாம் கண்டுபிடிக்க அவசியமில்லை... அருகில் படுத்து, நெருக்கமாய் நகர்ந்துகொண்டான்.. நெற்றியை கைகளால் தொட்டுப்பார்த்தான், அப்படியே முடிகளை கோதிவிட்டு காதருகே மெள்ள நெருங்கி, “மகி... இப்போ எப்டி இருக்கு? சாந்தமாய் விசாரித்தான்..
“இப்போ பரவால்ல மாமா... ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. திலீப்பின் அனுசரணையில், தான் தூங்குவதாக நடித்துக்கொண்டிருந்ததை கூட மறந்துவிட்டு பதில் சொல்கிறான்...
அந்த வார்த்தைகளில் மறைந்திருந்த ஏதோ ஒரு இனம்புரியாத சோகத்தை திலீப் அப்போதுதான் கவனித்தான்.. மிகவும் தாமதமான கவனிப்புதான் என்றாலும், அதைப்பற்றி கேள்வி கேட்டு அவன் மனதை குடைந்து குழப்ப விரும்பவில்லை...
அவன் வருத்தப்படுவதாய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால்தான் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?.. இனி கமல் உடனான உறவை சற்று விலக்கி வைப்பதுதான் உத்தமம்... எனக்காக எவ்வளவோ விட்டுக்கொடுத்தும், கஷ்டங்களை தாண்டியும் சற்றும் பாசம் குறையாமல் வாழும் மகிக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா என்ன?... நாளைக்கு முதல்வேலையாக கமலை சந்தித்து, இனி சந்திக்கவே வேண்டாம் என்று சொல்லவேண்டும்... கமல் ஒன்றும் குழந்தை அல்ல, நிச்சயம் சொல்லவரும் விஷயத்தை புரிந்துகொள்வான்...
சரியாக அப்போது கமலிடமிருந்து வாட்சப் மெசேஜ் துள்ளி விழுந்தது...
“தூங்கியாச்சா திலீ?
“இன்னுமில்ல... நாளைக்கு உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும், காபி டே வரமுடியுமா?
“இதென்ன கேள்வி... நீ வான்னு சொல்லி வராம இருப்பேனா?... எத்தன மணிக்குன்னு சொல்லு, அதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னமே வந்து வெயிட் பண்றேன்!
“ஹ ஹா... பத்து மணிக்கு வந்திடு..
அலைபேசியை அணைத்துவிட்டு படுத்தான் திலீப்... மகியின் தோளோடு தனது கையை சேர்த்து அணைத்தபடி உறங்க ஆயத்தமானான்... திலீப்பின் அணைப்பு மகியின் கவலைகளை மெலிதாய் மறக்க செய்துகொண்டிருந்தன...
இவ்வளவு பாசமாக இருக்கின்ற திலீப் சந்தோஷப்படும் ஒரு விஷயத்துக்கு ஏன் நான் சோகமாகனும்... என் சோகம் சில நேரங்களில் அவனையும் பாதிக்கும்.. எவ்ளோ முட்டாள்த்தனமா நடந்துக்கறேன்... எவ்ளோ பெருந்தன்மையா என்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்த திலீப், என் மனசுக்குள்ள வதைக்குற சோகங்கள் தெரிஞ்சா எவ்ளோ கீழ்த்தரமா நினைப்பார்?.. இப்போக்கூட சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்துவிட்டேன்... இதுதொடர்பா கூட திலீப் மனம் வாடியிருக்கலாமோ?...
இனி அப்படி நடந்துகொள்ளவே கூடாது... திலீப் எதுக்கு சந்தோஷப்படுறாரோ, அது எனக்கும் சந்தோஷமான விஷயம்தான்... என்னை கஷ்டப்படுத்துற செயல்களை அவர் செய்யமாட்டார்னு நம்புறேன்... ஒரு தீர்மானத்திற்கு ஒருவழியாய் வந்துவிட்டான் மகி...
திலீப்பின் கையை இரண்டு கைகளாலும் அணைத்துக்கொண்டான்... மனதின் குழப்பங்கள் அகன்று, தெளிந்த நீரோடையாய் மனம் மாறியிருந்தது... கண்களை மூடிய உடனேயே உறக்கம் பைபாஸில் பயணித்து வந்தது...
மறுநாள் காலை காபி டேயில் திலீப்பின் எதிரே உதிராத புன்னகையுடன் கமல் அமர்ந்திருந்தான்... கையில் ஏதோ ஒரு பரிசுப்பொருள்... பேச்சை எப்படி தொடங்குவது? என்கிற குழப்பத்தோடு மெனு கார்டை வெறித்துக்கொண்டிருந்தான் திலீப்...
“மெனு கார்டை மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்குறதா உத்தேசமா திலீ? சிரித்தான்...
“இல்ல... நீ என்ன சாப்டுற?
“நீ எது சொன்னாலும் சாப்டுறேன்... சீக்கிரம் எதாச்சும் ஆர்டர் பண்ணிட்டு சொல்லவந்த விஷயத்த சொல்லுப்பா..
ஏதோ ஒரு பானத்தை பெயருக்கு ஆர்டர் செய்துவிட்டு, கமலின் முகத்தை பார்த்தான்.. மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறான்... சொல்லப்போகின்ற விஷயம் தெரிந்தால், சுருங்கிப்போகுமே முகம்!... கண்களை எதிர்கொள்ள தயங்கி வேறுபக்கம் திருப்பியபடி பேச்சை தொடங்கினான் திலீப்..
“கமல்... நான் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காத... அது... அதுவந்து... வார்த்தைகள் கோர்வையாய் வரமறுத்து தடுமாறினான்...
“இனிமே நாம மீட் பண்ணவேணாம்னு சொல்லவர்றியா? பட்டென உடைத்தான் கமல்..
சட்டென நிமிர்ந்து கமலை ஆச்சர்யத்துடன் ஏறிட்டான் திலீப்... எப்படி கண்டுபிடித்தான்? சிந்தை குழம்பியது...
“குழப்பம் வேணாம் திலீ... இதைகூட கெஸ் பண்ணலைன்னா உன்ன புரிஞ்சுகிட்டதுக்கு அர்த்தமே இல்லாம போய்டுமே... மகிழன் வருத்தப்படுறானா?
சற்று தடுமாறி நிதானத்தை அடைந்த திலீப், “ச்ச ச்ச... மகிக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... நானா யோசிச்சுதான் இதை சொல்றேன்.. தப்பா எடுத்துக்காத.. தன்மையாய் விளக்கினான்...
“ஐயோ இதில தப்பா எடுத்துக்க என்னப்பா இருக்கு?... இந்தியா வந்தப்புறம் உன்ன பாக்கவே வந்திருக்கக்கூடாதுதான்.. ஏதோ ஆர்வக்கோளாருல வந்து ஏதேதோ சிக்கல்கள் வந்திடுச்சு... உங்க வீட்டுக்கு வந்தப்பவே திட்டி வெளிய அனுப்பிடாம இவ்ளோ தூரம் என்னை மதிச்சு பேசுறதுக்கே உனக்கு நான்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. மேசை மீதிருந்த திலீப்பின் கையை தனது கையால் அழுத்தப்பிடித்தான்... திலீப் மறுப்பேதும் சொல்லாமல், அளவான புன்னகையுடன் அமர்ந்திருந்தான்..
“உன் விருப்பப்படியே இன்னிக்குத்தான் நம்மளோட லாஸ்ட் மீட் திலீ... ஆனா எனக்காக கடைசியா ஒரே ஒரு ஆசையை நிறைவேத்துவியா? கண்களை சுருக்கி, உதட்டினை சுளித்து ‘ஆசை என்ற வார்த்தையை கூறியபோது திலீப்பிற்கு பக்கென்றது... அப்படி என்ன கேட்கப்போகிறான்? வில்லங்கமாக கேட்டுவிடக்கூடாதே!.. தடுமாற்றத்துடனேயே, “என்ன ஆசை? எச்சிலை விழுங்கிக்கொண்டான்...
“இன்னிக்கு முழுக்க உன்கூட சுத்தணும்... நாம லவ் பண்ணப்போ போன சில இடங்களுக்கு உன்னோட போகணும்னு ஆசையா இருக்கு... அதுமட்டும் நடந்துட்டா முழு மன திருப்தியோட நான் ஊருக்கு கிளம்பிடுவேன்!
“ஹ்ம்ம்... கண்டிப்பா... அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே... தாராளமா போகலாம்.. சற்றும் தாமதிக்காமல் ஒப்புதல் சொல்லிவிட்டான் திலீப்...
“ஆனா இந்த விஷயம் மகிக்கு தெரிய வேணாம்..
“ஏன்?... அவனுக்கு தெரிஞ்சா என்ன?
“தேவையில்லாம அவனுக்கு சங்கடத்த கொடுக்க வேணாமேன்னுதான்.. சில விஷயங்கள் தெரிஞ்சு குழம்புறதவிட, தெரியாம கடக்குறது புத்திசாலித்தனம் திலீ... அதுதான் சந்தோஷமான வாழ்க்கைக்கு அடித்தளமும்கூட! கமல் ஏதோ தத்துவங்களை உதிர்த்துக்கொண்டிருந்த கணப்பொழுதில், திலீப்பின் மனத்திரையில் சாப்பிடாமல் எழுந்துசென்ற மகியின் சோக முகம் ஒளிர்ந்து மறைந்தது... சரிதான்... கமல் சொல்ல காரணங்களுக்காக இல்லாதுபோனாலும், மகியின் குழப்பங்கள் நீடிக்க வேண்டாம் என்பதற்காகவாவது இந்த ஒரு விஷயத்தை மகியிடமிருந்து மறைப்பதில் தவறில்லை...
“சரி முதல்ல எங்க போகலாம்?
“இப்போ ஸ்கைவாக் போய் எதாச்சும் படம் பார்த்துட்டு, மதியம் லன்ச் ஓபல் இன் ல சாப்ட்டுட்டு, கொஞ்சநேரம் அண்ணா பார்க்ல பேசிட்டு இருந்தப்புறம், கடைசியா வடபழனி முருகன் கோவில்ல சாமி கும்பிட்டுட்டு அவங்கவங்க வீட்டுக்கு போய்டலாம்... ஓகேவா? இது சட்டென யோசித்த யோசனையாக தெரியவில்லை... நீண்ட நெடுங்காலமாக நேர வரையறை எல்லாம் நிர்ணயித்து போடப்பட்ட திட்டமாய் தெரிகிறது... சிரித்துக்கொண்ட திலீப், ஆமோதித்து தலையசைத்தபடியே, “சரி கிளம்பலாம் வா... எழ முயன்றான்...
“ஒரு நிமிஷம்... என்ற கமல், கையில் வைத்திருந்த பரிசுப்பொருளை திலீப்பின் முன்பு நீட்டினான்.. ‘என்ன? என்பதுபோல புருவத்தை உயர்த்தி கேட்டான்..
“ஒரு சின்ன கிப்ட்பா... பிரிச்சுப்பாரு! சின்ன பரிசுப்பொருளாகத்தான் இருக்கிறது... என்னவாக இருக்கும்? குழப்பத்திலும், மெலிதான ஆர்வத்தோடும் அதனை பிரித்தான்... உள்ளே ஒரு சிறிய பெட்டிக்குள் மோதிரம்...
தங்கம் போல இல்லை... “பிளாட்டினம் மோதிரம் திலீ... கனடா போனப்போ வாங்கினேன்.. அதில சின்ன ஹார்ட் இருக்கும் பாரு... அதை பார்த்ததும் உன் ஞாபகம் வந்துச்சு, சட்டுன்னு வாங்கிட்டேன்... நல்லா இருக்கா?
“ரொம்ப அழகா இருக்கு கமல்... ஆனா, இதல்லாம் தேவையா?
“அழகா இருக்குதான?... அப்போ உனக்கு பொருத்தமாதான் இருக்கும், கொடு நானே மாட்டிவிடுறேன்! அதனை வாங்கி திலீப்பின் விரலுக்குள் நுழைத்தான்... கணையாழி அவன் விரலை கச்சிதமாக பிடித்துக்கொண்டது... அந்த விரலுக்காகவே அளவெடுத்து வடிவமைத்ததை போல பொருத்தமாய் காணப்பட்டது...
“அப்டியே உன் விரலை ஒரு செல்பி எடுத்துக்கறேன் திலீ... ஜாய் ஆலுக்காஸ் காரன்கிட்ட கொடுத்தா உன் விரலை மட்டுமே நாலு வருஷ காண்ட்ராக்ட்ல எடுத்துப்பான்... அவ்ளோ க்யூட்... தன் கையால் திலீப்பின் விரலை பிடித்தபடி மொபைலில் ஒரு க்ளிக்கினான்...
“சரி இப்போ கிளம்பலாம்தான?... சினிமா ஷோ ஆரமிச்சிடும்... ஒருவழியாக கமலை கிளப்பிக்கொண்டு திரையரங்கை நோக்கி விரைந்தான் திலீப்...
பழைய குழப்பங்கள் இன்றி, சிகிச்சை பெற வந்தவரை இருமச்சொல்லி இடைப்பகுதியை சோதித்துக்கொண்டிருந்தான் மகி...
“இங்க்வைனல் ஹெர்னியா... சர்ஜரி டிபார்ட்மெண்ட்க்கு அனுப்புங்க சிஸ்டர் கேஸ் ஷீட்டில் ரெபரன்ஸ் நோட்ஸ் எழுதிக்கொடுத்து அனுப்பினான்..
நேரத்தை பார்த்தான், பதினொன்று... ஒரு காபி சாப்பிட்டு வரலாம், கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்ஐ கழற்றி மேசையில் வைத்துவிட்டு எழுந்து இடுப்பை மெலிதாய் வளைத்து ரிலாக்ஸ் செய்தபடி நகர்ந்தான் மகி...
காண்டீனில் அமர்ந்திருக்கும் பிரதீப்பை பார்த்ததும் சற்று நிதானித்து முன்னேறினான்... அந்த நடையில் ‘போகலாமா? வேண்டாமா? என்கிற தயக்கம் அப்பட்டமாய் தெரிகிறது... சரி, அதையும் பார்த்துடலாம்.. இன்று அவன் என்னதான் தீமூட்ட நினைத்தாலும், அசைந்துகொடுத்தால்தானே சிக்கல்.. பிரதீப் மொபைலில் எதையோ பார்த்து தானாகவே சிரித்துக்கொண்டிருக்கிறான்.. அருகில் சென்று அமர்ந்தபடி, “டாக்டர் சார் அவ்ளோ சீரியஸா என்னத்த பார்க்குறீங்க மொபைல்ல? தோளில் கைவைத்து உலுக்கினான்..
“அது ஒண்ணுமில்ல.. வாட்சப்ல ஒரு வில்லங்கமான போட்டோ... அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்...
“அடப்பாவி... அதை இப்டி பப்ளிக்காவா பார்ப்ப?... எதுனாச்சும் ஹீரோயின் விஷயமா? ஆர்வமானான்...
“ஹீரோயின் இல்ல... ஹீரோ...
“அடடே... அப்போ இன்னும் சூப்பர்... எந்த ஹீரோ?
“நீயே பாரு.. மொபைலை மகியின் கைக்குள் திணித்தான்.. அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்துவிட்டு, இடது கையை மறைவாக வைத்து அந்த படத்தை பார்த்தான்.. யாரோ இருவரின் கைகள், ஒன்றன் மீது ஒன்றாக ஒரு மேசை மீது இருக்கின்றன... அதைத்தாண்டி அதில் ஆச்சர்யமடையும் வகையில் ஒன்றுமே இல்லை, பின்பு எதற்காக பிரதீப் இதற்க்கு அவ்வளவு எதிர்வினை புரிந்தான்...
“லூசா நீ?... யாரோ ரெண்டு பேர் கையை பிடிச்சிருக்காங்க... இதல்லாம் ஒரு விஷயமா? எரிச்சலை கொட்டினான்...
“நான் லூசா?... நீ கொஞ்சம் டைட்டா உன் கண்ணை திறந்து பாரு, அதில ஒரு கை உன் ஆளு திலீப்போடது...
அவசரமாக மொபைலை பிடுங்கினான் மகி.. ஆம், மேலே இருக்கின்ற அந்த நீளமான கோதுமை நிறத்து கைக்கு சொந்தக்காரன் திலீப்பேதான்.. ஆள்காட்டி விரலில் அடையாளமாக அந்த மச்சம்கூட தெள்ளத்தெளிவாய் தெரிகிறது... திலீப்பின் கையை யார் புகைப்படம் எடுத்தது? அதனை யார் பிரதீப்புக்கு அனுப்பியது? இவை எல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு விஷயம், அந்த இன்னொரு கைக்கு சொந்தக்காரன் யார்?...
“இப்போவாச்சும் நம்புறியா?
“சரி... ஒரு கை திலீப்தான், இன்னொரு கை யாரு? எச்சிலை விழுங்கினான்..
“அதுல இன்னுமா உனக்கு சந்தேகம்?... கமல்தான்... திலீப்பை கல்யாணம் செஞ்சுகிட்டதா வேற மெசேஜ் அனுப்பிருக்கான்... நல்லா கவனிச்சியா திலீப்போட விரல்ல மாட்டிருக்குற வெட்டிங் ரிங்கை?... அதுமட்டுமில்லாம தியேட்டர், பார்க், கோவில்னு இன்னிக்கு முழுக்க ஒண்ணா சுத்தப்போறாங்களாம்.. அந்த படத்தினை ஸூம் செய்து மோதிரத்தை அடையாளம் காண்பித்தான்... மகிக்கு தலையே சுற்றியது, ஆனாலும் மனதிற்குள் தன்னை சமாதானப்படுத்திக்கொண்டான்...
“ச்ச... முட்டாள்த்தனமா பேசாத.. நட்பு நிமித்தமா கூட மோதிரம் கொடுத்திருக்கலாம்ல? விட்டுக்கொடுக்க மனமில்லை..
“இருக்கலாம்.. அப்டி இருந்திருந்தா உன்கிட்ட சொல்லிட்டுதான மீட் பண்ணிருப்பார்?.. நீ வேணும்னா போன் பண்ணி கேளு, அவங்க எங்க இருக்காங்கன்னு!..
“அவசியமில்ல பிரதீப்...  திலீப் மேல நம்பிக்கை இருக்குறப்போ, நான் எதுக்கு டெஸ்ட் பண்ணியல்லாம் பார்க்கணும்? மகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே பிரதீப்பின் மொபைலில் வாட்சப் மெசேஜ் ‘டங் விழுந்தது...
ஆர்வமாய் திறந்து பார்க்க, அதில் திலீப்புடன் கமல் ஏதோ திரையரங்கில் அமர்ந்திருக்கும் காட்சி... திலீப் வேறு பக்கம் திரும்பும்போது க்ளிக்கியது போல தெரிந்தது... எதுவோ எப்படியோ இருக்கட்டும்... இதுபற்றியல்லாம் ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை? மகி தடுமாறினான்...
“இன்னும் நம்புறியா?... இதுக்கப்புறம் நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல, நீ பொறுமையா டீ சாப்ட்டு டியூட்டி பாரு... நான் கிளம்புறேன்! பிரதீப் அங்கிருந்து கிளம்பிவிட்டான்...
மகியின் தலை தெறிக்கும் அளவிற்கு குழப்பத்தில் ஆழ்ந்தது.. கடவுளே... என்னதான் நடக்குது என்னைசுற்றி? தலையை கவிழ்த்துவைத்தபடி முடிகளை அழுந்தப்பிடித்தான்...
ஆர்டர் செய்த காபி ஆடை படர்ந்து போனபிறகும், குடிக்க மனமில்லாமல் தரையை வெறித்துக்கொண்டிருந்தான் மகி... உயிரே மெள்ள உடலைவிட்டு விலகுவதைப்போன்ற ஒரு வலி மனதிற்குள் சுருக்கென்றது... மொபைலை எடுத்து, திலீப்பின் பெயரை தட்டினான்... அழைக்கலாமா? கடைசிநேர யோசனை... ஒருவேளை அழைத்தபிறகு, “சாரி மகி.. கமல் கூட படத்துக்கு வந்தேன், உன்கிட்ட சொல்ல நேரமில்ல.. திலீப்பே நடந்தவற்றை ஒப்புக்கொண்டுவிட்டால் மனம் ஓரளவு நிதானம் அடையும் அல்லவா?... மோதிரத்திற்கும் கூட நான் ஏற்கும் அளவிற்கான எதாவது காரணத்தை சொல்லலாம்... அதனால் அழைத்துத்தான் பார்ப்போமே!
முழுவதுமாக ரிங் போனபிறகும் திலீப் அழைப்பை ஏற்கவில்லை... மகியின் மனம் இன்னும் அதிகமாய் படபடத்தது... வழக்கமான தருணங்களாக இருந்தால், திலீப் ஏதோ முக்கிய வேலையில் இருப்பான் என்று தன்னை சமாதானப்படுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆயத்தமாகிவிடுவான்... ஆனால் இப்போது சற்று அவசியமான சூழல் ஆயிற்றே... மீண்டும் ஒருமுறை அழைத்தான்...
கடைசிநேர ரிங் போன தருணத்தில், ஹஸ்கி குரலில், “சொல்லு மகி... என்கிறான்..
“ஒண்ணுமில்ல மாமா... எங்க இருக்க?
“ப்ரட்யூசரை பார்க்க ஆபிஸ் வந்திருக்கேன், உனக்கு அப்புறமா கால் பண்ணவா? அழைப்பை துண்டிப்பதில் ஆர்வம் காட்டினான்...
“வீட்லருந்து நேரா அங்கதான் போனியா மாமா?... இல்ல வேறெங்காச்சும் போனியா?
“என்ன துருவி துருவி கேட்குற?... நேரா இங்கதான் வந்தேன்... இப்போ என்னதான் உனக்கு ப்ராப்ளம்? வார்த்தைகளில் மெலிதாய் அனல் கசிந்தது...
பதிலெதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தான் மகி... ஏன் திலீப் இப்படியொரு பொய்யை சொல்லணும்?... அவன் தரப்பில் எள்ளளவு நியாயம் இருந்தாலும் அதனை மலையளவு பூதாகரமாக்கி தன்னை மெய்ப்பித்துக்கொள்ளும் திலீப் ஏன் இந்த விடயத்தில் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்படுகிறான்?... அப்படியானால் ஏதோ செயற்கரிய தவறை செய்துகொண்டிருப்பதாக அவன் மனம் உறுத்துகிறதுதானே?..
திலீப்பை சந்தேகப்படலாமா? மனம் ஒருபுறம் வாதம் புரிந்தது... இல்லை இல்லை, இது சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம்.. யாரோ ஒரு மூன்றாம் நபருடன் இப்படியல்லாம் சுற்றி, அந்த உண்மையை மறைத்தால் எனக்கெழும் கோபத்தில் நியாயம் இருக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம்... ஆனால், இப்போதைய சூழல் தலைகீழானதுதானே!...
திலீப்பிற்கு மீண்டும் கமல் உடன் காதல் வந்திருந்தால்கூட அதை தவறென்று சொல்ல எனக்கென்ன உரிமை இருக்கு?... கமல் மீதான வெறுப்பில் அவனிருந்தபோது, இடைபுகுந்து காதலில் திளைத்த எனக்கு கமலை குறைசொல்லவோ, திலீப்பை சந்தேகப்படவோ என்ன தகுதி இருக்கு?...
இது முட்டாள்த்தனமான காம்ப்ளக்ஸ்... திலீப் மீது கோபப்படவோ, சந்தேகப்படுவதற்கோ எனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்கும்?...
உரிமை இருக்குறது நியாயம்தான்... ஆனால், திலீப் மீது ஏகோபித்த உரிமை கொண்டாடுவதுதான் இப்போ சிக்கலின் அடிநாதமே.. ஒருவேளை திலீப்பிற்கு கமல் மீது மீண்டும் காதல் அரும்பியிருந்து, அதனை எங்கள் காதலின் மீதான கட்டாயத்தால் அவன் மறைக்க முற்படுகிறான் எனும் சூழல் ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்வேன்?... வருத்தப்பட்டாலும் பரவாயில்லை, திலீப் என்னோடதான் இருக்கணும்னு சுயநலமா சிந்திப்பேனா?...
இதில் சுயநலம்னு என்ன இருக்கு?... அப்படி நடந்திடவல்லாம் வாய்ப்பே இல்லை... ஒருவேளை அப்படி நடக்கும்பட்சத்தில், திலீப்பிற்கு எது விருப்பமோ அதுபடிதான் நடந்துகொள்வேன்... இதுகூட முட்டாள்த்தனமா தெரியலாம்... கதையின் நாயகன் என்பதால் பெரிய தியாகி போல சித்தரிக்கப்படுவதாய் பலருக்கும் தோன்றலாம்... ஆனால், காலம் முழுக்க உறுத்திய மனதுடன் திலீப் என்னோடு வாழ்ந்துகொண்டிருப்பதை ஒவ்வொரு நொடியும் சகித்துக்கொண்டு வாழ நானொன்றும் உணர்வற்ற பிண்டம் இல்லையே!...
கேள்வியும், பதிலுமாய் வாதங்கள் மனதிற்குள் அரிக்கத்தொடங்கியது... இப்போ என்ன நடந்திடுச்சுன்னு இவ்ளோ யோசிக்கிறேன்?... ச்ச...
அரைநாள் பெர்மிஷன் போட்டுவிட்டு வீட்டை அடைந்தான் மகி...
படுக்கையில் கிடக்கையிலும் அதே சிந்தனைதான் மனதிற்குள் சிதறித்தெறித்தது.. சதுரங்க விளையாட்டில் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு தனித்து திரியும் ராஜாவைப்போல மனம் திசையற்று தவிக்கிறது... ஒருபக்கம் எதிரியின் யானை, மறுபுறம் குதிரை, பின்னாலிருந்து குத்தவரும் வீரனின் கத்தி என கட்டங்களை கடந்து செல்ல மனம் தடுமாறுகிறது...
அலைபேசியை மீண்டும் எடுத்து, சில வினாடிகள் யோசித்தபிறகு கீழே வைத்துவிட்டான்... இன்னொருமுறை திலீப்பின் பொய்யை எதிர்கொள்ள மனம் தயாரில்லை...
இந்த விடயத்தை போகும் வரை போகவிடலாம்... எந்த ஒரு புள்ளியில், அதன் வெப்பம் வீரியமாகி வெடிக்கிறதோ அப்போது அதனைப்பற்றிய முடிவை யோசிக்கலாம்.. திலீப்பிற்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை... மாலையில் வீட்டிற்கு வந்தபிறகு, அவனாகவே நடந்த விடயங்களைப்பற்றி விளக்குகிறானா? என்று பார்த்தபிறகு அடுத்தகட்ட நகர்வுகளைப்பற்றி முடிவெடுக்கலாம்...  வாட்சப் படங்கள் கூட கமலின் போட்டோஷாப் வித்தையாக ஏன் இருக்கக்கூடாது?... ஹ ஹா... திலீப்பை மெய்ப்பித்துக்கொள்ள எப்படியல்லாம் சாத்தியமற்ற விடயங்களை இந்த மனம் தேடுகிறது பாருங்கள்!..
மகியின் வாட்சப், க்ரீச்சிட்டது... பிரதீப்பிடமிருந்து மெசேஜ்..
தடுமாறிய விரல்கள் அதனை கடுமையான பதற்றத்துடன் திறந்தது...
ஏதோ கோவிலில் திலீப் அமர்ந்திருக்கும் புகைப்படம்... வடபழனி முருகன் கோவில்தான்.. நெற்றியில் திருநீறு குங்குமம் சகிதம் புன்னகையோடு அமர்ந்திருக்கிறான்... ஸூம் செய்து பார்த்தபோது விரலில் அதே மோதிரம்... கடவுளே!... இன்னும் எவ்வளவுதான் சோதனை கொடுக்கப்போற?... மொபைலை மெத்தையின் மீது வீசிவிட்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்...
திலீப் இந்த விஷயங்களை மறைப்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்த புகைப்படங்களை அனுப்புவதன் மூலம் கமல் என்ன சொல்லவருகிறான்?... உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பு செய்வதன் நோக்கமே, அந்த படங்கள் என் பார்வையில் படவேண்டும் என்பதற்காகத்தான்... நான் பார்ப்பதன்மூலம் என்னிடம் அவன் கொண்டுசேர்ப்பிக்க விரும்பும் செய்தி என்ன?...
“திலீப் எனக்குத்தான் சொந்தம்... நீ விலகிடு! என்று சொல்லாமல் சொல்லவருகிறானா?...
திலீப் வந்தபிறகு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரலாம்.. அதுவரை தேவையற்ற குழப்பங்களை மனதிற்குள் திளைக்க விடுவதில் அர்த்தமில்லை...
நொடிகள் இடிகளாக நகர்ந்துகொண்டிருக்கிறது... கதவு திறக்கப்போகும் சத்தத்தை எதிர்நோக்கி காதுகள் கூர்மையாகியிருந்தன.. இது திலீப் வழக்கமாக வரும் நேரம்தான்.. வந்தபிறகு கமல் பற்றிய பேச்சை நானாக தொடங்கக்கூடாது.. காலையில் கைவிரல் மோதிரமாக விதைக்கப்பட்ட விதை, இப்போது விருட்சமாக கிளைகள் பரப்பி நிற்கிறது.. ஒட்டுமொத்த சிக்கல்களையும் களைவதென்பது இலைகளை மட்டும் பிடிங்கிப்போடுவதால் முடிந்துவிடப்போவதில்லை.. அதன் அடிநாதமான ஆணிவேரை ஆட்டம் காணவைக்கவேண்டும்.. அது அவ்வளவு எளிதான செயலும் கிடையாது, நிதானத்தை கொஞ்சமும் இழக்காமல் சிக்கலை தீர்க்க வேண்டும்... ஆழமாக மூச்சினை உள்வாங்கி வெளிவிட்டான்...
கதவு திறக்கப்படுகிறது.. திலீப்தான்..
ஹாலில் அமர்ந்திருக்கும் வாசுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறான்.. கட்டிலிலிருந்து மெள்ள எழுந்து ஹாலை நோக்கி நகர்ந்தான் மகி...
“என்னடா நெத்தில திருநீர்?.. கோவிலுக்கெதுவும் போனியா? வாசுவின் கேள்வி வசமாய் துள்ளி விழுந்தது...
அவசரமாக உள்ளங்கையால் நெற்றியை துடைத்தபடியே, “இல்ல... கோவிலுக்கல்லாம் இல்ல... ஒரு பட பூஜைக்கு போனேன், அங்க பூசினது வார்த்தைகளில் பதற்றம் தெரிகிறது... திலீப்பால் பொய்கூட சொல்லமுடியுமா? விலகாத ஆச்சர்யத்துடன் அவர்களை நெருங்கியிருந்தான் மகி...
இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து, சட்டை பொத்தான்களை கழற்றிவிட்டான் திலீப்...
“அப்பப்பா என்ன வெயிலு பார்த்தியா... வெளில கால் எடுத்து வச்சாக்கூட வெந்துபோற அளவுக்கு கொளுத்துது... வெயிலின் உக்கிரத்தை விரிவாக விளக்கிக்கொண்டிருக்கும் திலீப்பிற்கு, அதைவிட உக்கிரமான வெப்பம் மகியின் மனதினுள் கசிந்துகொண்டிருப்பதை உணரமுடியவில்லை..
“ஹ்ம்ம்... பிளேஸ்மென்ட் கெடச்சதுல அதான் சிக்கலே... இந்த வெயில்ல எப்டி போயிட்டு வரப்போறேனோ!... ஆமா, காலைல ஏதோ ப்ரென்ட்டை பார்க்கப்போறேன்னு சொன்ன, இப்போ திடீர்னு என்ன பட பூஜைக்கு போயிருக்க?.. இன்விட்டேஷன் கூட ஏதும் வந்ததா தெரியலையே? வாசு அவ்வப்போது இப்படி லாஜிக் தூண்டிலை போட்டு, அதிசயமாக மீன்களை அள்ளுவதுண்டு...
“அது... அது திடீர்னு ஒரு ப்ரென்ட் கால் பண்ணி இன்வைட் பண்ணதால அவசரமா போனேன்...
“அப்போ காலைல ப்ரட்யூசர பார்க்கப்போனது? மகியும் நுழைந்தான்...
“ஆமா அது காலைல.. இது இப்போ... என்ன ஆளாளுக்கு கார்னர் பண்றீங்க?... இப்போ என்ன ப்ராப்ளம் உங்களுக்கு? பதற்றம் மெள்ள வெளிப்பட்டது..
மகிக்குத்தான் தாங்கமுடியாத கோபம்... அப்பப்பா எத்தனை பொய்கள், ஒன்றை மறைக்க ஆயிரம் சொல்வான் போல!... எவ்வளவுதான் கட்டுப்படுத்த முயன்றும், மடை உடைந்த வெள்ளம் போல கோபம் நிரம்பி வழியத்தொடங்கியிருந்தது...
“போதும் திலீப், பொய்க்கு மேல பொய்யா சொல்லி உன்மேல இன்னும் இருக்குற கொஞ்சநஞ்ச மதிப்பையும் குறைச்சிக்காத! மகியின் கண்கள் கலங்கியிருந்தது... உதடுகள் துடிக்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை படாரென சாத்திக்கொண்டான்...
திலீப் இன்னும் திகைப்பு விலகாமல் நிற்கிறான்... மகி என் மீது இப்படியொரு கோபத்தினை இதுவரை வெளிப்படுத்தியதில்லை... பொய் சொல்கிறேன் என்றல்லவா கூறுகிறான்!.. கமலுடன் வெளியே சென்றதை எங்கேனும் பார்த்திருப்பானோ?... கவனமாகவே மகி வழக்கமாக செல்லும் பாதைகளை தவிர்த்தல்லவா இன்றுமுழுக்க பயணித்தேன், இருந்தும்கூட எப்படி கண்டுபிடித்திருப்பான்?.. அவன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த உண்மையை மறைத்தேன் என்று சொன்னால், நிச்சயம் புரிந்துகொள்வான்...
அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தான் திலீப்... சுவரோரம் கிடத்தியிருந்த நாற்காலியில், தலையை கவிழ்த்தபடி அமர்ந்திருக்கிறான்... அருகே செல்லும்போதே, மகியின் மூச்சுக்காற்று வெப்பத்தை கக்கியது... கோபத்தின் விளிம்பில் இருக்கிறான் போலும், கவனமாகத்தான் கையாளவேண்டும்...
நெருங்கி நகர்ந்து, மகியின் தோள் மீது கைவைத்தான்... ஒரு அசைவும் இல்லாதவனாக, சிலைபோல் அமர்ந்திருக்கிறான்... தாடைமீது கைவைத்து தலையை மேலே உயர்த்தினான்...
கண்கள் கலங்கி, நீர்த்துளி தரையில் விழுவதற்கு ஆயத்தமாய் காத்திருக்கிறது... அப்படியே அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்து, கண்களை துடைத்துவிட்டான்...
“என்னாச்சு மகி?... ஏண்டா இவ்ளோ கோபம்?
“என்னாச்சுன்னு உனக்கும் தெரியும் திலீப்... அதை என் வாயாலேயே கேட்க விரும்புறியா?... இன்னிக்கு காலைலேந்து பொய்களா சொல்லி உனக்கு அலுக்கலையா?.. மோதிரம் போட்டது, தியேட்டர், கோவில்னு சுத்துனது... இதெல்லாம் அந்த கமல் கூட நடந்தது மட்டுமில்லாம, எல்லாத்தையும் மறைக்க பொய்க்கு மேல பொய்யா என்கிட்டே சொன்னது... இதுக்குமேல கோபப்பட இன்னும் காரணம் தேவையா? சற்றும் ஆத்திரம் குறைந்தபாடில்லை... வார்த்தைகளில் அவ்வளவு விரக்தி...
“ஐயோ இதல்லாத்தையும் உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கல மகி... தெரிஞ்சா நீ வருத்தப்படுவியோன்னுதான் சொல்லல... அது தப்பா?
“நான் வருத்தப்படுவேன்னு தெரியுற ஒரு விஷயத்த உன்னால எப்டி மாமா செய்ய முடிஞ்சுது?
“கடவுளே... இதை எப்டி சொல்லி உன்கிட்ட புரியவைக்குறதுன்னு தெரியல... அந்த கமல் கடைசியா ஒருமுறை அங்கல்லாம்... இடைமறித்து திலீப்பின் வாயினை கையால் மூடினான் மகி...
“உன்கிட்ட நான் காரணம் கேட்கல மாமா... அது அவசியமும் கூட இல்ல.. நீ அவன்கிட்ட செக்ஸ் வச்சிருந்தாக்கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்... ஆனா என்கிட்டே அதை சொல்லாம மறைச்சதுதான் தாங்க முடியல...
“இப்போ இதை யார் சொல்லி உன்னை குழப்பினது?
“நதிமூலம் ரிஷிமூலம் எதுவும் தேவையில்ல மாமா... யாரும் குழப்புற அளவுக்கு நான் முட்டாளும் இல்ல... நீ சந்தோஷமா இருக்குற ஒரு விஷயத்துக்கு நான் குறுக்க நிக்குறதா நினைக்குற... இதுக்கப்புறம் எப்டி மாமா உறுத்தல் இல்லாம உன்கூட வாழமுடியும்?... ‘இவன் நமக்காக சகிச்சுகிட்டு வாழறானோ!ன்னு ஒவ்வொரு நொடியும் குழப்பத்தோடவே எப்டி வாழறது? சட்டென எழுந்து தனது பெட்டிக்குள் உடைகளை திணித்து, பைக்குள் தனது அத்தியாவசிய பொருட்களை அள்ளிப்போட்டான்...
என்ன நடக்கிறது? எங்கே கிளம்புகிறான்? திலீப் திகைப்பில் ஆழ்ந்துபோனான்.. தஞ்சாவூருக்கு போகிறானா?... சாதாரண சண்டைக்கு இவ்வளவு எதிர்வினையை சற்றும் எதிர்பார்க்கவில்லை...
“எங்க கிளம்புற? பையை பிடுங்க முயன்றான் திலீப்...
“பயப்படாத மாமா.. கோவிச்சுகிட்டு அப்பா வீட்டுக்கல்லாம் போகமாட்டேன்... ‘இதுகளுக்கு காதல்லாம் செட் ஆகாதுன்னு நான் அப்பவே சொன்னேன்லன்னு சொல்றதுக்காகவே ஊருக்குள்ள ஒரு கூட்டம் எப்பவும் தயாரா இருக்கும்... அதுங்க வாய்ல விழற அளவுக்கு, நம்ம ப்ராப்ளத்தை வெளிப்படுத்திட மாட்டேன்...
“பின்ன எங்கதான் போற?
“சென்னைல எனக்குன்னும் கொஞ்சம் ஆளுங்க இருக்காங்க மாமா... அவங்களோட கொஞ்சகாலம் இருக்க விரும்புறேன்... எனக்கா தோணுறப்போ மறுபடியும் வருவேன்
பெட்டி பைகள் சகிதம் அறையை விட்டு வெளியேறிய மகியை வாசு ஆற்றாமையுடன் ஏறிட்டான்... அறைக்குள் நடந்த அத்தனை நிகழ்வுகளும் செவிவழியே அறிந்தபிறகு, என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?... எதையும் பலமுறை யோசித்துதான் செய்வான் மகி, அவன் வழியே செல்லவிடுவதுதான் உத்தமம்... அந்த திலீப்பும் கொஞ்சம் திருந்திட இதைவிட வேறு சந்தர்ப்பம் அமையாது..
“யார் வீட்டுக்கு போற?, எவ்ளோ நாள் இருப்ப?வாசு வருத்தம் தோய்ந்த முகத்துடன் வினவினான்..
“கார்த்திக் வீட்டுக்கு போறேன்.. எதாச்சும் எமர்ஜன்சி விஷயம்னா மட்டும் அங்க காண்டாக்ட் பண்ண சொல்லு வாசு... தேவையில்லாம அங்கயும் வந்து தொந்தரவு பண்ணினா, அங்கருந்தும் நான் போறத தவிர வேற வழியில்ல! பதிலைக்கூட எதிர்பார்த்திடாமல் வாசலை கடந்து கீழே சென்றுவிட்டான் மகி...
திலீப்பின் கண்கள் அசைவற்று வாசலையே வெறித்துக்கொண்டிருக்கிறது... இன்னுமே நடதவற்றை உண்மையென நம்ப மனம் ஒப்பவில்லை... இப்படியொரு சின்ன விஷயத்துக்கா மகி இவ்வளவு பெரிதாக கோபப்படுகிறான்!..
வாசு வழக்கமான தன் வேலைகளை இயல்பு மாறாமல் செய்துகொண்டிருக்கிறான்... திலீப்பிற்குத்தான் தலையும் புரியவில்லை, காலும் தெரியவில்லை.. எதற்காக மகி இந்த சிறிய பிரச்சினையை மிகப்பெரிய பிரளயமாக உருமாற்றியிருக்கிறான்?...
குழப்பம் தலைக்கு மேல் சுமை போல சுழன்றுகொண்டிருக்கிறது.. ஒரு சிறிய சலனத்தை தவிர்க்க மறைத்த ஒருவிஷயம், மிகப்பெரிய பூகம்பமாய் வெடித்தது ஏன்?..
“நீ இப்போ சாப்பிடுறியா, லேட் ஆகட்டுமா திலீப்? சகஜமாய் கேட்கிறான் வாசு... திலீப்பிற்கு எரிச்சல்தான் உண்டானது... ஒரு நண்பன் இப்படி குழப்பத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறேன், அதன் வருத்தம் கொஞ்சமாவது அவன் முகத்தில் தெரிகிறதா?... என்ன மனுஷன் இவன்!...
“எனக்கு சாப்பாடு வேணாம், நீயே கொட்டிக்கோ கடுகடுத்தான்...
“கொட்டவல்லாம் வேணாம் திலீப்... நானே சாப்ட்டுக்கறேன்... இதில் நக்கலாய் வேறு பதில் சொல்கிறான்...
“ஏண்டா பாவி, நான் எவ்ளோ குழப்பத்துல இருக்கேன்... என்ன ஏதுன்னு கூட கேட்கமாட்டியா?
“நான் என்ன வெளியூர்லையா இருந்தேன்... அதான் என்ன ஏதுன்னு நேர்லயே பார்த்தேனே... இதில என்ன புதுசா கேட்கணும்?
“சரி தெரிஞ்சுகிட்ட ஓகே... பிரச்சினைக்கு எதாச்சும் சொல்யூஷன் சொல்லலாம்ல?
“நாங்க சொல்றதல்லாம் எப்படா கேட்டிங்க?... அந்த கமல் வந்தப்போவே இப்டி எதாச்சும் வில்லங்கம் நடக்கப்போகுதுன்னு தெளிவா சொன்னேன், பெரிய புத்தனாட்டம் அவன்கூட கனிவா பழகுனியே, உனக்கு இதல்லாம் தேவைதான்...
இதுதான் வாசுவோட பிரச்சினையே... இப்படியல்லாம் சிக்கல்கள் வருமென்று தெரிந்தால் ஏன் ரிஸ்க் எடுக்கப்போகிறேன்?... ஏதோ என்னை மீறி நடந்த ஒரு தவறை நிவர்த்தி செய்ய யோசனை கேட்டால், தன் கணிப்புத்திறனை வெளிக்காட்டிக்கொள்ள அவனோ காயத்தின் மேல் மிளகாய்த்தூள் தூவுகிறான்!...
“சரி வாசு... நீ நாஸ்டர் டாமஸ்தான்... நடக்கப்போறத முன்னமே சொல்ற உன்னிகிருஷ்ண பணிக்கர்தான்... ஒப்புக்கறேன்... மறுபடியும் பழைய பாட்டையே பாடாம, சிக்கல் தீர எதாவது யோசனை சொல்லு... அதைவிட முக்கியமா மகி ஏன் இவ்ளோ பெருசா ரியாக்ட் பண்றான்னு இப்போவரைக்கும் எனக்கு புரியல..
“மகி ரியாக்ட் பண்றது இருக்கட்டும், நீ ஏன் இதை இவ்ளோ சின்ன விஷயமா யோசிக்குறன்னுதான் எனக்கு புரியல..
“இல்லடா... மகி எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்குற்ற ஆளு, பெருந்தன்மையா நடத்துக்குவான்.. ஒரு சின்ன பொய் சொன்னதுக்கு இவ்ளோ கோபப்படனுமா?
“அதான் சிக்கலே... அவ்வளவு தெளிவான பையன்கிட்ட ஒரு விஷயத்தை நீ மறைக்குறன்னா, அது எந்த அளவுக்கு தப்பானதுன்னு உனக்கு தெரியலையா?.. சிம்பிளா சொல்லனும்னா, உனக்கு கமல் மேல மறுபடியும் காதல் வந்திடுச்சோன்னு அவன் நினைக்குறான்.. அதான் நீ மறைக்குறன்னு அவன் நினைக்குறான்..
“அடக்கடவுளே... ஒருமுறை உடைஞ்ச காதல் எப்டிடா மறுபடியும் சேரமுடியும்?... மகி என்னை புரிஞ்சுகிட்டது அவ்ளோதானா?
“இது புரிதல் பற்றிய விஷயம் இல்ல... சிலபல பொய்களை சொல்லி உன்மேல அவனுக்கு சந்தேகத்த துளிர்க்க வச்சுட்ட... அந்த பொய்கள் கமலுக்காக சொன்னதில்ல, மகி கவலைப்படக்கூடாதுன்னு சொன்னதுதான்னு நம்ப வை.. அந்த நம்பிக்கையை ஆழமா விதைக்குற பொறுப்பு உன்னோடது... உன்னோட காதலை தெளிவா மகிகிட்ட புரியவைக்க என்ன பண்ணணுமோ அதை ஒழுங்கா பண்ணு... அதுக்குமுன்ன அந்த கமலோட தொடர்பை முழுசா அறுத்து வீசு..
“அவனுக்கு ஈவ்னிங்கே குட் பை சொல்லிட்டேன்... இந்த விஷயம் மகி காதுக்கு வந்ததுக்குக்கூட அந்த ராஸ்கல்தான் காரணமா இருக்கும்... கவனிச்சுக்கறேன் அவன.. பற்களை நறநறவென கடித்துக்கொண்டான் திலீப்...
“இன்னொரு விஷயத்தையும் மனசுல வச்சுக்கோ... மகி இப்போ போயிருக்குறது கார்த்தி வீட்டுக்கு.. வெறும் வாயை மென்னுக்கிட்டு இருந்தவனுக்கு சூவிங்கம் கொடுத்த மாதிரி மகி மாட்டிக்கிட்டான்... அதனால என்ன முடிவெடுத்தாலும் கொஞ்சம் வேகமா செயல்ல இறங்கு கடைசியாய் போகிற போக்கில் ஒரு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு போகிறான் வாசு..
மாடிக்கு சென்று தனிமையாய் அமர்ந்திருந்தான்.. மெல்லிய காற்று மனதினை மெள்ள இதமாக்கியது... மகியை இவ்வளவு கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கக்கூடாதுதான்.. எவ்வளவோ தவறுகளை சகித்துக்கொண்டு என்னை காதலித்த மகியால் இந்த பொய்களை ஏற்கமுடியவில்லை.. ஆம், அவனோட நம்பிக்கையை இழந்துவிட்டேன்... விழுதுகள் துண்டித்து விழுந்தபோதல்லாம் ஆட்டம் காணாத ஆலமரம்தான் என்றாலும், நம்பிக்கை என்னும் ஆணிவேர் பலமிழக்கும்போது தடுமாறுவதில் அதிசயிக்க ஏதுமில்லை...
இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டும்... எதாவது செய்யனும்... காலம் கடந்து தீர்க்க முற்படும் பிரச்சினைகள், என்றைக்கும் தீர்ந்திட வாய்ப்பே இல்லை... நாளை காலையே மகியை தேடிப்போகணும்.. எதாவது பேசி, உளறி, சமாளித்து அவனை பழைய மகியாய் மாற்றனும்... என்னை மெய்ப்பிக்க பெரிய பிரயத்தனமல்லாம் அவசியம் இல்லை... என்னை நம்பாமல் வேற யாரை நம்பப்போறான்?...
மனம் குழப்பங்கள் அகன்று ஒரு தெளிவான நிலைக்கு வந்தது... அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தான்.. “காலையில் என்ன காரணம் சொல்லி அவனை தேடிப்போவது? யோசனையில் ஆழ்ந்தபோதே தூங்கியும் போனான்..
இன்னும் முழுமையாக விடியவில்லை... குளித்து முடித்து உடைமாற்றி, வாசுவின் அறைக்கு சென்று அவனை அவசரமாக எழுப்பினான் திலீப்...
“டேய்... இன்னும் என்ன தூக்கம்?... எழுந்திருடா தோள்களை உலுக்கி வலுக்கட்டாயமாக நித்திரையை கலைக்க போராடினான், கண்களை கசக்கியபடியே கலையாத தூக்கத்துடன் தடுமாறி எழுந்து அமர்ந்தான் வாசு...
எதிரே விடியலில் அரும்பிய மலராய், புதுப்பொலிவுடன் புன்னகைத்து அமர்ந்திருக்கிறான் திலீப்... மொபைலை எடுத்து நேரத்தை பார்த்தான், நான்கரை என காட்டுகிறது.. இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு பதற்றத்துடன் எழுப்புகிறான்?.. ஒருவேளை அறைக்குள் பேய் பிசாசு எதுவும் வந்ததன் பதற்றத்தில் எழுப்புகிறானோ?... இல்லையே, சிரித்துக்கொண்டல்லவா அமர்ந்திருக்கிறான்... ஒருவேளை மகி போன வருத்தத்தில், மனநிலை எதுவும் பிறழ்ந்து போய்விட்டதோ?... அடக்கடவுளே!..
“என்னடா பேயறைஞ்ச மாதிரி உட்காந்திருக்க?... சீக்கிரம் குளிச்சிட்டு வா
வாசுவின் குழப்பம் இன்னும் சிலபல ரிக்டர்கள் அதிகரித்திருந்தது... நிஜமாகவே பைத்தியமாகவே ஆகிவிட்டான் போலும்!..
“என்னடா பேக்கு மாதிரி உட்காந்திருக்க?... இன்னுமா தூக்கம் கலையல? முதுகை தட்டி மேலே தூக்கி நிறுத்த முயற்சித்தான்..
“நான் பேக்கா?... டேய் பாவி, இந்த நேரத்துல குளிச்சு நானென்ன விண்வெளிக்கா போகப்போறேன்?... எங்கடா கிளம்ப சொல்ற?..  ஆமா, நீ நார்மலாத்தான இருக்க, மனசெதுவும் பிரச்சினை இல்லையே?
“என்னை பாத்தா உனக்கு லூசு மாதிரி தெரியுதா?... இப்போ நீயும் நானும் கார்த்தி வீட்டுக்கு போகப்போறோம்
“போய் பால் பாக்கெட்டும், பேப்பரும் போடப்போறோமா?
“கொழுப்பா உனக்கு?... அங்கபோய் மகிய பார்க்கப்போறேன்... அவன்கிட்ட சென்டிமென்டா பேசி, என்னை நிரூபிக்க போறேன்!
“அது இருக்கட்டும்.. மகி சொன்ன ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா உனக்கு?... தேவையில்லாம அங்கவந்து டிஸ்டர்ப் பண்ணினா வேற வீட்டுக்கு போய்டுவேன்னு சொன்னானே!
“ஹ ஹா... அவன் இன்னொன்னும் சொன்னானே, மறந்துட்டியா?... ஏதாவது எமர்ஜன்சி விஷயம்னா காண்டாக்ட் பண்ண சொன்னானே?... அதுதான் இப்போ துருப்புச்சீட்டு...
“ஓ... அப்டி என்ன எமர்ஜன்சி?
“அது சஸ்பென்ஸ்... பொறுத்திருந்து பாரு சட்டை காலரை உயர்த்திவிட்டு பெருமை பீற்றிக்கொண்டான்...
“அடடே... லவ்வருக்காக ஏதோ செம்மையா யோசிச்சு ப்ளான் வச்சிருக்க போலயே!..  பயங்கர சர்ப்ரைஸ்லாம் காத்திருக்குன்னு நெனைக்குறேன்... அதுக்காகவே தூக்கம் போனாலும் பரவால்லன்னு உன்கூட வரேண்டா துள்ளிஎழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்... திலீப் கடைசி கட்ட டச்சப் பணிகளில் முனைப்பாக இருக்கிறான்.. மகிக்கு பிடித்த கருப்பு ஷர்ட் முதல், ‘இப்டி தலை சீவு மாமான்னு அடிக்கடி சொல்லும் யோசனை முதல் எல்லாம் கச்சிதமாக தயார் நிலையில் இருக்கிறது..
மகியை பார்த்ததும் என்ன பேசலாம்?... ஒருவேளை அவன் முகத்தை திருப்பிக்கொண்டால் கூட எப்படி சமாளித்து கவனத்தை தன் பக்கம் திருப்புவது? போன்ற யோசனைகளில் அதிதீவிர முனைப்பில் மூளை செயல்பட்டுக்கொண்டிருந்தது...
ஒருவழியாக வாசுவையும் கிளப்பி, வேளச்சேரியில் கார்த்தியின் வீட்டை அடைந்தபோது ஐந்தரை மணி ஆகியிருந்தது... ஓரளவு நன்றாகவே விடிந்திருக்க, சற்று பதற்றமான மனதுடன் அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்தினான் திலீப்...
கதவை திறந்த கார்த்தியின் முகத்தில், எள்ளும் கொள்ளும் வெடித்தது... விரும்பாத விருந்தாளியை எதிர்கொள்வதை போல, முகச்சுளிப்புடன் உள்ளே அழைத்தான்..
இருக்கையில் அமர்ந்த திலீப்பின் கண்கள் வீட்டினை வட்டமடித்தது... ஒருக்களித்து மூடப்பட்டிருந்த அறைக்கதவு ஒன்றின் ஊடே தெரிந்த நிழலுக்கு சொந்தக்காரன் யார்? என்பதை அறிவதில் மனம் முனைப்பானது..
“இப்ப எதுக்காக ஹீரோ சார் இங்க வந்திருக்கிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? சற்று கணீர் குரலில் கார்த்தி வினவினான்...
“சும்மாதான்.. மகிய பார்த்துட்டு போகலாம்னு இயல்பாய் பதில் சொன்னான் திலீப்...
“இங்கபாருங்க திலீப்.. உங்களுக்கும் மகிக்கும் என்ன பிரச்சினைன்னல்லாம் எனக்கு தெரியாது, அதை தெரிஞ்சுக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல... இங்க வந்தப்புறம் மகி என்கிட்ட கேட்டுக்கிட்ட ஒரே விஷயம், யாரும் தன்னை டிஸ்டர்ப் பண்ணவேணாம்னு சொன்னதுதான்.. அதனால தயவுசெஞ்சு என் நேரத்தை வீணடிக்காம கிளம்புங்க
“மகி என் லவ்வர்
“இப்போ அவர் என் கெஸ்ட்..
திலீப்பால் பதிலெதுவும் பேசமுடியவில்லை.. மகியை எப்படியாவது பார்த்து பேசியே ஆகணும்.. பேசிடும் வாய்ப்பு கிடைத்தால் எதாவது சொல்லி சமாளித்துவிடலாம்.. கண்ணோடு கண் பார்த்து பேசினாலே நிச்சயம் என் காதலை புரிந்துகொள்வான்... ஆனால், நந்தியாய் எதிரே நிற்கும் இந்த கார்த்தியை எப்படி சமாளிப்பது?...
“சரி, அந்த ப்ராப்ளம் இருக்கட்டும்... வீட்டுக்கு வந்தவங்கள உபசரிக்காம வெளில அனுப்புறதுதான் உங்க தஞ்சாவூர் பழக்கமா? வாசு புத்திசாலித்தனமாக கார்த்தியின் ஈகோவை கிளறினான்...
“சரி, இங்கயே இருங்க... காபி போட்டுட்டு வரேன்... வேறு வழியின்றி கார்த்தி சமையலறைக்குள் நுழைய, நிழல் தெரிந்த அறைக்குள் படாரென நுழைந்தான் திலீப்.. கட்டிலின் ஒருபக்கமாய் அமர்ந்திருக்கிறான் மகி.. ஒருநாள் இரவு மகியை இவ்வளவு அலங்கோலமாய் மாற்றிவிட்டதே!.. கண்கள் சிவந்து, முகம் வீங்கி... நிறைய அழுதிருப்பான் போல... உடல் முழுக்க சோர்வு.. இப்படி உடல் முழுக்க அரிதாரம் பூசியிருக்கும் திலீப்பிற்கு தர்மசங்கடமாய் போய்விட்டது... எவ்வளவோ யோசித்து வந்திருந்தபோதிலும், மகியின் இந்த கோலத்தை பார்த்தபிறகு பேச்செங்கே எழுவது?.. ஸ்தம்பித்து நிற்கிறான்... அறைக்குள் நுழைந்த திலீப்பை கண்டும், அதை காணாதவனைப்போல வேறுபக்கம் முகத்தினை திருப்பிக்கொண்டான்..
இரண்டு குவளைகளில் அவசரமாக பாலோடு காபித்தூளை கொட்டி, ஒரு சம்பிரதாய காபியை பிடித்தபடி சமலயலரைக்குள்லிருந்து வெளியே வந்த கார்த்தி, இருக்கையில் வாசு மட்டும் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியானான்...
“எங்க திலீப்? உரக்க வினவினான்...
“மகிகூட பேசிட்டு இருக்கான்... நீ பதறாம முதல்ல உட்காரு! எழுந்து கார்த்தியை ஆசுவாசப்படுத்தினான்...
“என்ன பொழப்பு இது?... இப்டி ஏமாத்தி அவரை பாக்கலைன்னாதான் என்ன?... மகிதான் உங்கள பார்க்க விரும்பலைன்னு சொல்லியாச்சுல்ல, அப்புறம் எதுக்கு இம்சை பண்றீங்க?
“கொஞ்சம் பொறுமையா இரு.. கடைசில நீ நெனச்சபடி நடந்திடுச்சுன்னு ரொம்ப கனவுல மெதக்காத கார்த்தி... மகிக்கும் திலீபுக்கும் இடைல ஒரு சின்ன சண்டைதான், அதை அவங்க பேசி புரிஞ்சுப்பாங்க.. இடைல நீ புகுந்து மகிய உன் வசப்படுத்தலாம்னு நெனைக்காத...
“அடச்ச... என்னை அவ்ளோ கேவலாமால்லாம் நெனைக்காத வாசு.. மகிமேல எனக்கு விருப்பம் உண்டுதான்... அதுக்காக திலீப் மேல அவருக்கு இருக்குற வருத்தத்த பயன்படுத்தி, மகியை கரெக்ட் பண்ணலாம்னு நெனைக்குற அளவுக்கு மோசமானவன் இல்ல... இப்பவும் திலீப்கூட மகி சேரணும்னுதான் என் விருப்பமும்... நைட் முழுக்க அவர் தூங்காம அழுத விசும்பல் சத்தம் கேட்டுட்டேதான் இருந்துச்சு... இவ்ளோ மகிய கஷ்டப்படுத்திட்டாரே திலீப்னுதான் என் கோபமல்லாம்..
கார்த்தியின் கண்களில் பொய்யில்லை, வார்த்தைகளில் உண்மையான கவலை பொதிந்திருந்தது.. வெளிப்படையாக அவனை அப்படி பேசியிருக்கக்கூடாதுதான்.. வாசு தடுமாறி நிற்கிறான்..
“சரி ரொம்ப பீல் பண்ணாத வாசு... ரூம்குள்ள உங்க ரொமாண்டிக் ஹீரோ என்ன பண்ணிட்டிருக்கார்னு பார்ப்போம் வா! கார்த்தி ஆர்வத்தோடு முன்னே செல்ல, சிரித்தபடியே அவனை பின்தொடர்ந்தான் வாசு...
கார்த்தி கதவைத்திறந்த சத்தத்தில்தான் திலீப் தன்னிலை உணர்கிறான்.. அதுவரை மகியின் தோற்றத்தை கண்ட அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றுபோனான்..
கார்த்தியை பார்த்த மகி சற்று கோபமாக, “கார்த்தி, உன்கிட்ட நான் கேட்டுகிட்டது என்ன, இப்போ நடக்குறது என்ன? முறைத்தான்...
கதவினை தாண்டி கட்டிலின் அருகே வந்து, மகியின் தோளை பிடித்தபடி, “ஐயோ மகி மாமா, நீ சொன்னத தெளிவா இவங்ககிட்ட சொல்லிட்டேன்... இந்த வாசுதான் எல்லாத்துக்கும் காரணம்! தப்பித்துக்கொண்டான்..
மகியின் பார்வை நேராக இடதுபுறம் நகர்ந்து, கதவினோரம் சாய்ந்திருந்த வாசுவை துளைத்தது..
“ஐயோ நானில்ல மகி... எதாச்சும் எமர்ஜன்சின்னா வரலாம்னு நீதானே சொன்ன
“ஒருநாள் ராத்திரில அப்டி என்ன எமர்ஜன்சி?
“ஏய் திலீப்... உனக்கு டயலாக் கொடுத்தாதான் பேசுவியா?... வாயை திறந்து என்ன எமர்ஜன்சின்னுதான் சொல்லேன்! திலீப்பை உலுக்கினான்...
“ஆமாமா... மகி, நீ வரும்போது உன்னோட டூத் பிரஷ்ஐ விட்டுட்டு வந்துட்ட... அதான் கொடுத்திட்டு போகலாம்னு... இழுக்கிறான் திலீப்...
கார்த்தி களுக்கென சிரித்துவிட்டான்... “இதை கொடுக்கத்தான் சைதாப்பேட்டைலேந்து இங்க வந்திங்களா திலீப்?... ரொம்ப எமர்ஜன்சி மேட்டர்தான்...”
“கருமம்.!.. மானத்தை வாங்குறான் பாவி!... இது ஒருவிஷயம்னு நாலு மணிக்கு எழுந்து வந்த என்னையத்தான் செருப்பால அடிக்கணும்! திலீப்பின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியான டெசிபல் சத்தத்தில் வாசு முணுமுணுத்தான்... மகியின் முகமும் வாடல் மறைந்து, சில வினாடிகள் புன்னகைத்து இயல்பானது... திலீப் இப்படியெல்லாம் குசும்புத்தனங்கள் செய்பவனல்ல, தனக்காக குறும்போடு செயல்படுவதை கண்டதால் உண்டான மெல்லிய பூரிப்பு எனக்கூட சொல்லலாம்..
“சரி ப்ரஷ் கொடுத்தாச்சு, பேஸ்ட் நாளைக்கு கொண்டுவருவீங்களோ? கார்த்தி சீண்டலை விடுவதாய் இல்லை..
“நானே இன்னிக்கு அங்க வீட்டுக்கு வரலாம்னுதான் நெனச்சேன் வாசு மகி இயல்பாய் சொல்கிறான்... மற்ற மூவரின் முகங்களும் அதிசயித்து நின்றது... திலீப்புக்கு மட்டும் அதிர்ச்சியை அப்புறப்படுத்தும் அளவிற்கான உற்சாகம் கரைபுரண்டது...
“நிஜமாவா மகி! ஓடிவந்து மகியின் கைகளை பிடித்துக்கொண்டான் வாசு...
“ஆமா.. பட் நீ சந்தோஷப்படுற அளவுக்கான காரணம் இல்ல வாசு.. நைட் வர்ற அவசரத்துல என்னோட ஐடி கார்ட், புக்ஸ், ஸ்டெத் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டேன்.. அதை எடுக்கத்தான்.. மகியின் கோபம் கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை... பேசும் பேச்சினில்கூட அத்தனை விரக்தி.. திலீப்பின் முகம் இருண்டுபோனது.. எப்படியும் தன்னை பார்த்தவுடன் கோபங்கள் மறைந்து, ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொள்வான் என்று நினைத்துக்கொண்டிருந்த திலீப்பிற்கு, இத்தனை பிரயத்தனங்களுக்கு பிறகும் மகி மனமிறங்கவில்லை எனும்போது ஏமாற்றமே மிஞ்சியது...
ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாதவனாக, “நானே எடுத்துட்டு வரேன் மகி, நீ அலையவேண்டாம்... வார்த்தைகள் உயிரற்று விழுந்தது...
“ஒன்னும் அவசியமில்ல திலீப்... என் வேலைய நானே பார்க்க கத்துக்கறேன்! நிமிர்ந்து கண்களைக்கூட ஏறிட்டுப்பார்க்கவில்லை.. அவ்வளவு கோபம்.. எழுந்து குளித்துமுடித்து உடைமாற்றி வெளியே வரும்வரை வாசலிலேயே காத்திருந்தான் திலீப்..
மகி வருவதை பார்த்ததும், தன் பைக்கை ஸ்டார்ட் செய்தபடி, “பைக்ல ஏறு மகி, வீட்டுக்குதானே நானும் போறேன்.. அழைத்தான்...
“என் பைக்கும்கூட சைதாப்பேட்டை வரைக்கும் ஓடும் திலீப்.. இவ்வளவு வீம்பு பிடித்தவனா?... அடக்கொடுமையே!..
சட்டென பைக்கை நிறுத்திய திலீப், அதிலிருந்து இறங்கி மகி ஸ்டார்ட் செய்த பைக்கின் பின்னால் ஏறிக்கொண்டான்.. மகியால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.. ‘இறங்கிப்போ என்று அதிர்ந்துகூட சொல்லமுடியாமல் தடுமாறி நின்றான்..

“அதான் அந்த பைக் இருக்கே, இதுல ஏன் ஏறனும்?
“அந்த பைக் வாசுவுக்கு வேணுமாம்... பத்மினி எங்கயோ கோவிலுக்கு போகணும்னு சொன்னாளாம், அதான் போகட்டும்னு சாவிய கொடுத்திட்டேன்... ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா, தன் காதல் தானா வளரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க மகி!
வாசு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.. ஒரு அப்பட்டமான பொய்யை கூட அப்பழுக்கு இல்லாமல் தெளிவாக சொல்கிறான் திலீப்.. தேர்ந்த நடிகனாகவே ஆகிவிட்டான் போலும்!..
“இப்டி எவ்ளோ நேரம் ஸ்டார்ட் பண்ண பைக்லயே உக்காந்திருக்கது மகி?.. ட்ராபிக் அதிகமாகுறதுக்குள்ள கிளம்பலாமே!
வேறு வழியுமில்லை.. வண்டியை நகர்த்தினான் மகி...
எப்படியும் இன்னும் இருபது நிமிடங்கள் நேரமிருக்கு... அதற்குள் எப்படியாவது மகியின் மனதை மாற்றனும்.. இந்த வாய்ப்பினை தவறவிட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைப்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது... “கடவுளே, நல்ல வாய்ப்புகளை உருவாக்கி தந்திடு!சாலையோரம் அமர்ந்திருந்த பிள்ளையாரிடம் மனு ஒன்றை போகிற போக்கில் தட்டிவிட்டுப்போனான்...
“மகி.. அன்னிக்கு நடந்த விஷயங்களோட ஒரு வெர்ஷன்தான் உனக்கு தெரியும்.. நடந்தது என்னன்னு முழுசா தெரிஞ்சுகிட்டு உன் கோபத்தை காட்டு... மெள்ள தொடங்கினான்..
“இப்ப நான் பைக் ஓட்டனும்னு நெனைக்குறீங்களா, இல்ல ஓரமா நிறுத்திட்டு பஸ்ல போகட்டுமா? எதையும் கேட்கும் நிலையில் மகி இல்லை.. மேற்கொண்டு எதுவும் பேசினால், அவன் சொன்னதை செய்தாலும் செய்திடுவான்..
“நைட் அழுதியா மகி?
“இல்லையே... நான் ஏன் அழனும்? சொல்லும்போதே வார்த்தைகள் தழுதழுத்தது...
“கண்ணல்லாம் சிவந்து, வீங்கிருக்கே..
“நைட் லாப்டாப்ல ஒரு படம் பார்த்தேன்.. அதான்.. சமாளிக்க காரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கிறான்..
“இப்ப எதுவும் படம் பார்க்கலதானே, அப்புறம் ஏன் கண்ணு கலங்குது? பைக்கின் சைட் மிரரில் தெரிந்த மகியின் முகத்தை பார்த்தபடி வினவினான்...
அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு, “ஒண்ணுமில்ல தூசி பட்ருச்சு... கிளம்புற டென்ஷன்ல ஹெல்மட்டை மறந்துட்டேன்.. சமாளித்தபடி பைக்கை சற்று வேகமாய் செலுத்தினான்... சற்று விரைவாக வீட்டினை அடையவேண்டும் என்பதால் மட்டுமல்ல, வேகத்தின்போது உண்டாகும் எதிர்காற்றினால் திலீப் பேசுவது தன் காதுகளை எட்டக்கூடாது என்பதாலும் அந்த வேகம் அவசியமாகப்பட்டது..
வீட்டினை அடைந்தபோது, தன் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்த சோகத்தின் முழு வடிவமாய் படியேறினான் திலீப்...
அறைக்குள் சென்று தன் மிச்சசொச்ச பொருட்களை மூட்டைகட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் மகி.. ஹாலில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த திலீப்பை பார்த்து, ‘என்னாச்சு? என்பதுபோல சைகை செய்தான் வாசு...
‘எல்லாம் ப்ளாப் ஆச்சு! என்பதாய் உதடுகளை பிதுக்கி பதில் சைகை புரிந்தான்..
சரியாக தன் உடமைகளுடன் அறையைவிட்டு வெளியே வந்த மகி, வாசுவை பார்த்ததும், “வாசு, உன்னோட ரெஸ்யூம்லாம் என் லாப்டாப்ல இருக்குறதால, அதை இங்கயே வச்சிட்டு போறேன்.. நீ யூஸ் பண்ணிக்கோ... தேவைன்னா வாங்கிக்கறேன்.. லக்கேஜ் எடுத்துட்டு போக ஓலா கார் புக் பண்ணிக்கறேன், பைக்கை கார்த்தி வந்து ஈவ்னிங் எடுத்துட்டு வருவான்! இறுதிகட்ட பாகப்பிரிவினையிலும் ஈடுபட்டான்..
“போதும் மகி... ஏன் இப்டிலாம் பண்ற?.. சற்று ஆதங்கமான குரலில் சப்தமிட்டான் வாசு..
“ஏய் வாசு, ஏன் கத்துற?... நான் என்ன அப்டி பண்ணிட்டேன்?
“இவ்ளோ பிடிவாதம் கூடாது மகி... எது செஞ்சாலும் நீ சரியாத்தான் செய்வன்னு இவ்ளோ நேரம் நானும் பதிலெதுவும் பேசாம அமைதியா இருந்தேன்... ஆனா நீ ரொம்ப எல்லை மீறிப்போற!
“எல்லை மீறிப்போனது நானா?
“ஒத்துக்கறேன்... திலீப் செஞ்சது தப்புதான்... ஆனா அதுக்கான தண்டனை இப்டியான பிரிவு இல்லப்பா... இப்போ நடக்குறத பாக்குறப்போ, அவன் செஞ்ச தப்பைவிட கூடுதலா நீதான் பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கன்னு தோணுது!
“ஆமா எல்லா தப்பையும் நான்தான் பண்ணேன்... திலீப் இன்னொருத்தனை லவ் பண்ணான்னு தெரிஞ்சும் லவ் பண்ணது தப்புதான், என்கிட்ட உண்மையா எப்பவும் இருப்பார்னு நெனச்சது தப்புதான், கடைசியா கமல் கூட அவர் பழகுனதை பார்த்தப்போ முட்டாள்த்தனமா கவலைப்பட்டதும் என் தப்புதான்... ஆனா இந்த தப்புக்கெல்லாம் ஒரே காரணம், திலீப் மேல நான் வச்சிருந்த முட்டாள்த்தனமான காதல்தான்.. கண்கள் கலங்கியிருந்தது... கையில் வைத்திருந்த பையை கீழே வைத்துவிட்டு, தரையில் தடுமாறி சரிந்து அமர்ந்தான்...
திலீப் கலங்கிப்போய் நின்றான்... மெள்ள மகியின் அருகே சென்று அமர்ந்தான்... அவன் கைகளைப்பிடித்து தன் கண்களோடு ஒற்றிக்கொண்டு, “மகி, இப்பவும் சொல்றேன் நான் செஞ்சது மிகப்பெரிய தப்புதான்... அந்த பொய் சொன்னதுகூட நீ எதுவும் வருத்தப்படக்கூடாதுங்குறதுக்காகத்தான்.. இவ்ளோ பெரிய சிக்கல் வரும்னு தெரிஞ்சிருந்தா அந்த கமல் கூட நான் பேசியிருக்கவே மாட்டேன்... ரொம்ப தெளிவா சொல்றேன், அந்த கமல் என்னைப்பொறுத்தவரைக்கும் யாரோ ஒரு மூணாம் மனுஷன்தான்... உன்னைத்தான் நான் லவ் பண்றேன், உன்னை மட்டும்தான்... இதயத்தை கிழிச்சு திறந்துகாட்ட நான் அனுமன் இல்லடா... நேத்திலேந்து பைத்தியம் பிடிச்சா மாதிரி இருக்கு.. ப்ளீஸ், என்னை புரிஞ்சுக்கோ திலீப்பின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது... அதை துடைத்துவிடுவதா? தன்னிலையை நினைத்து நொந்துகொள்வதா? என்று புரியாமல் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறான் மகி...
“வாசு.. அரைகுறையாய் திறந்திருந்த கதவிற்கு வெளியே ஏதோ பெண்ணின் குரல்... கதவை திறந்தான் வாசு, மாணிக்கத்தின் மனைவி சந்தியா...
திலீப்பும் மகியும் கண்களை துடைத்துக்கொண்டு, தங்களை இயல்பாக காட்டிக்கொள்ள முனைந்துகொண்டிருந்தனர்... அதற்குள் ஹாலின் நடுவினை அடைந்திருந்தாள்..
“என்னக்கா திடீர்னு? முதலில் எதாவது பேசி அவளை அனுப்புவதில் தீவிரம் காட்டினான் வாசு... மகி திலீப்பை மன்னித்துவிடுவான் என்று காத்திருந்த சூழலில், வெண்ணை திரண்ட நேரத்தில் உடைந்த தாழியாய் இடைபுகுந்துவிட்டாள் சந்தியா...
“ஒண்ணுமில்லப்பா... ஏதோ சண்டை மாதிரி சத்தம் கேட்டுச்சு... மாமாவும் வீட்ல இல்ல, அதான் என்னன்னு பார்த்துட்டு போகலாம்னு... என்ன பிரச்சின?
என்ன பிரச்சினை என்று சொல்லிவிட்டால் மட்டும் புரியவா போகிறது?.. இன்னும் மாணிக்கம் மாமாவைப்பற்றியே புரிந்துகொள்ளாத சந்தியா அக்காவிற்கு முதலில் இவர்களின் உறவை விளக்கி புரியவைக்கவே மாமாங்கம் ஆகலாம்...
“அதல்லாம் ஒண்ணுமில்ல... சின்ன ப்ராப்ளம்தான், அதை நாங்க சரி பண்ணிக்கறோம்.. நீ போக்கா..
“உங்க சின்ன ப்ராப்ளம்தான் தெரு முக்கு வரைக்கும் அலறல் சத்தமா கேட்குதாக்கும்.. சரி அது என்னதான் ப்ராப்ளம்னு சொல்லேன்
“ஐயோ அக்கா... அதல்லாம் உனக்கு சொல்லி புரியவைக்கமுடியாதுக்கா.. இது வேற மாதிரியான சண்டை
“நானும் ரெண்டு நாளா கவனிச்சிட்டுதான் இருக்கேன்... மகி முகம் வாடிப்போய்தான் கெடக்கு.. திலீப் கூட ஏதோ பெரிய வருத்தம் போல.. இப்ப பெட்டி படுக்கையோட நிக்குறத பாக்குறப்போ பக்குன்னு இருக்கு.. உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன சண்டைன்னாலும் பேசி தீர்த்துக்கோங்கப்பா.. உங்களைப்போல எத்தனையோ கே பசங்களுக்கு, நீங்க வாழற வாழ்க்கைதான் ரோல் மாடல்... அதை கெடுத்துடாதிங்க!
வாசு அதிர்ச்சியில் உறைந்துபோனான்.. சந்தியா அக்காவா இப்படியல்லாம் பேசுறது?.. தலையே சுத்துது.. இவ்வளவு நாள் ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்ணாக நினைத்தவளின் வாயிலிருந்து, ஒரு புரட்சி பெண்ணியவாதியின் வார்த்தைகள்!...
“அக்கா! அதிசயித்து அவளை ஏறிட்டான்...
 “குடும்பம்னு இருந்தா அதில ஆயிரம் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்... அதுக்காக பிரிஞ்சுபோறதுதான் முடிவுன்னு ஆகிடாது... தப்பு யார்மேலன்னு ஆழமாப்போய் பார்க்குறதவிட, விட்டுக்கொடுத்து போங்கப்பா... பொதுவா கணவன் மனைவின்னா, ஒரு சண்டைன்னு வர்றப்போ அதப்பேசி தீர்த்துவைக்க எத்தனையோ உறவுகள் தயாரா இருப்பாங்க... உங்க வாழ்க்கைல அப்டியல்லாம் வாய்ப்பில்ல, வாழ்வோ சாவோ மொத்தத்துக்கும் நீங்க மட்டும்தான் பொறுப்பு... அதிகப்ரசங்கித்தனமா பேசுறதா நினைக்க வேணாம், அக்கான்னு இத்தன நாளா கூப்பிட்ட உரிமைல தம்பியாத்தான் உங்களையல்லாம் பாக்குறேன்! ஒவ்வொரு வார்த்தையிலும் அத்துனை தெளிவு.. ஓரிரு வினாடிகள் நிசப்தம் ஆழ்ந்திருக்கிறது... கடிகார முட்கள் எழுப்பிய ‘டக் டக் மட்டும்தான் பளிச்சென ஒலித்தது...
“அக்கா... உங்களுக்கு எப்புடி இதல்லாம் தெரியும்?... வாசுவால் அதற்குமேலும் பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை...
“எல்லாம் தெரியும்தான்... எதையும் கண்டுக்காத மாதிரி ஒதுங்கி போறதால, ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவுக்கு வந்துட்டிங்களோ?... வாழ்க்கைல சில விஷயங்களை உள்ள ஆழமாப்போய் பாக்கணும், பல விஷயங்களை கண்டும் காணாமலும் போகணும்... கிரைண்டர், மிக்ஸி விஷயங்களையும் சேர்த்துதான் சொல்றேன்! சுவற்றை பார்த்தபடி சொல்லிமுடித்தபோது, வாசு எச்சிலை விழுங்கிக்கொண்டான்..
“அப்டின்னா, மாணிக்கம் மாமாவப்பத்தி...
“எல்லாம் தெரியும்!
“அப்புறம் ஏன்க்கா எதுவும் தெரியாத மாதிரி இருக்குற?
“தெரிஞ்ச மாதிரி காட்டியிருந்தா என்னாகிருக்கும்?... சண்டை போட்டு, பிரிஞ்சு போயிருப்போம்... ஆனால், அதுதான் வாழ்க்கையா என்ன?
“அவர் பண்றது தப்பா தெரியலையா?
“தெரியுதுதான்... அவரை வெறுக்க அந்த ஒரு காரணம் போதும்... ஆனா, அவர்கூட சந்தோஷமா வாழறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கே... என் அப்பாவைவிட அதிக பாசத்தோட பாத்துக்கறார், எனக்கு ஒண்ணுன்னா துடிச்சு போய்டுறார், மொத்தத்துல கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கர்றார்... அதவிட முக்கியமா அவரைப்பற்றி முழுசா தெரியாம காதலிச்சு, கல்யாணம் கட்டிக்க கட்டாயப்படுத்தினதே நான்தான்.. நானா விரும்பி எடுத்த வாழ்க்கைல, இப்போ குத்துதே குடையுதேன்னா ஊர்ல என்ன சொல்வாங்க?
“இவ்ளோ சகிச்சு வாழறது கஷ்டமா இல்லையா?
“அப்டி என்ன சகிச்சு வாழ்ந்துட்டேன்... ஒருவேளை அவர் குடிகாரனாவோ, சாடிஸ்ட் புருஷனாவோ இருந்திருந்து, என்னை கஷ்டப்படுத்தியிருந்தா சகிச்சு வாழறதா சொல்லிருக்கலாம்.. அதல்லாம் கண்டுக்காம வாழறது சங்கடமாத்தான் இருக்கு, ஆனாலும் விதி விதிச்ச வாழ்க்கைய ஏத்து வாழறதுதான் சரி... இப்போ உங்களுக்கு அட்வைஸ் பண்றதுலகூட, ஒரு பொண்ணா எனக்கு சுயநலம் இருக்கு... என்னைப்போல இன்னொரு பொண்ணு இப்புடி சங்கடப்பட்ட வாழ்க்கை வாழக்கூடாதுன்னுதான், உங்கள மாதிரி கே பசங்க ஒண்ணா வாழணும்னு சொல்றேன்.. வீட்டு நிர்பந்தம், சமுதாயம்னு ஆயிரம் காரணங்கள், ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும், மறுபுறம் நீங்க நசுக்கப்போறது ஒரு பொண்ணோட வாழ்நாள் ஆசைகள், கனவுகள்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும்...
“கடைசியா என்னக்கா சொல்லவர்ற?... ஒருபக்கம் மாணிக்கம் மாமாவால நீ கஷ்டப்பட்டல்லாம் வாழலன்னு சொல்ற, மறுபுறம் பெண்ணோட ஆசைகள் கனவுகள்னு உரிமை பத்தியல்லாம் பேசுற?...
“நிஜத்துல நான் பெருசா வருத்தப்படலதான்... ஆனா ஒருவேள மாணிக்கம் மாமா ஸ்ட்ரைட்டா இருந்திருந்தா கூடுதல் சந்தோஷத்தோட வாழ்ந்திருப்பேன்... நான் இப்போ வருத்தப்படலங்குறதால, எல்லா பொண்ணுகளும் அப்டி இருப்பாங்கன்னு சொல்லமுடியாது... எது எப்டியோ, இதையல்லாம் சோதிச்சு பார்க்க ஒரு பொண்ணு ஒன்னும் சோதனை எலி இல்ல... அவளும் மனுஷி... சரி, அவங்க பிரச்சினைய தீர்க்கலாம்னு வந்தா, நீ என் சிக்கலை கிளருற.. முதல்ல அவங்களுக்கு என்னதான் சிக்கல்னு சொல்லு இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து மொத்த கதைகளையும் கேட்கத்தொடங்கினாள் சந்தியா... வாசுவிற்கும் சந்தியாவால் இந்த சிக்கலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்கிற நம்பிக்கை ஆழமாக வேரூன்றியது...
இந்த கதைகள் ஒருபுறம் விளக்கப்பட்டுக்கொண்டிருக்க, இவை அனைத்தையும் கதவின் மறுபுறம் மேல் படியின் மீது ஒருக்களித்து அமர்ந்தபடி ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த மாணிக்கம் மாமாவிற்கு சுருக்கென இதயத்தில் ஊசி குத்தியது... எதேச்சையாக மாடிப்படிகள் ஏறிவந்தவர், உள்ளே மனைவியின் குரல் கேட்க சற்று பொறுமையாய் நின்று நடப்பவற்றை கவனித்தபோதுதான் தன்னை பற்றியதான சந்தியாவின் புரிதலையும் அதிர்ச்சியோடு கேட்கவேண்டிய சூழல் உருவாகிப்போனது...

மனதினுள் ஒரு இனம்புரியாத வலி ஆட்கொண்டுவிட்டது... இத்தனை காலம், அவளுக்கு தெரியாதென செய்த ஒவ்வொரு நிகழ்வும் கண் முன் வந்துபோனது... தன்னைப்பற்றியே அருவருப்பாய் எண்ணத்தோன்றியது... ஒரு வெகுளியாய் நினைத்து, இத்தனை காலம் அவள் மனதினுள் அவ்வப்போது திராவகத்தை அல்லவா தெளித்திருக்கிறேன்!.. யாரோ ஒரு நபருடன் நான் ஒன்றாக இருக்கும்போதெல்லாம், அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!..
மாடிப்படிகளில் இறங்கி வீட்டிற்குள் நுழைந்தபோதும் இதயம் இடியென துடித்துக்கொண்டிருந்தது.. எவ்வளவு வன்மத்தோடு நடந்திருக்கிறேன், அவ்வளவையும் கண்டும் காணாமல் வாழ எத்தனை சிரமப்பட்டு போயிருப்பாள்!.. ‘மாணிக்கம் மாமாவைத்தான் கட்டிப்பேன்! என்று பிடிவாதம் பிடித்து, போராடி, சொந்தங்களோடு படையெடுத்து வீட்டிற்கு வந்தவளை இன்னதென காரணம் கூறி மறுக்கமுடியவில்லை.. அந்த தருணத்தில் என்னோட ஈர்ப்பை பற்றியல்லாம் விளக்கிடும் சூழலும் இல்லை... ஏதோ கனவுபோல, கண்மூடி திறப்பதற்குள் திருமணமும் நடந்தேறிவிட்டது... செய்யும் தவறை ஊருக்கெல்லாம் விளம்பரப்படுத்தி செய்யவிரும்பாததால், குடும்பத்தினரோடு மட்டும் கோவிலில் முடித்த திருமணம்.. இன்றைக்கும் அதே பாசத்தோடுதான் அவள் இருக்கிறாள்.. இத்தனை அறிந்ததற்கு பிறகும் அவளால் என்னை சகித்து வாழமுடிகிறது என்றால், ஏன் நான் மட்டும் சுயநலமாகவே வாழனும்!...
‘டிங் டாங்... டிங் டாங் அழைப்புமணி அடித்தது...
சற்று நிதானப்படுத்திக்கொண்டு கதவை திறந்தார்.. இளைஞன் ஒருவன் கையில் ஒரு பையோடு நிற்கிறான்.. அதிகம் கணிக்க அவசியமில்லாத, ஏதோ மெக்கானிக் போலத்தான் தெரிகிறான்...
“என்ன வேணும்? சுரத்தே இன்றி வினவினார்...
“கிரைண்டர், மிக்ஸி எதுனாச்சும் ரிப்பேர்னா சொல்லுங்க சார்.. பாக்குறேன்..
“இல்லப்பா... அதல்லாம் ரிப்பேர் இல்ல..
“சார்.. நாகராஜ் அண்ணே அனுப்பினாரு! சிரிக்கிறான்... சிரிப்பில் ஒரு விஷமம்... நாகராஜ் அனுப்பிய நபர் என்றால், அதிகம் அலசவேண்டிய அவசியம் இல்லை... அவர்தான் அந்த பகுதியின் தொழில்அதிபர் ஆயிற்றே..
“சொல்றதக்கேளு... முதல்ல கிளம்புப்பா... அவசரமாய் அவனை துரத்திவிட்டு, கதவை தாழிட்டு இருக்கையில் அமர்ந்தார்... மனம் மெலிதாய் இலகுவானது.. முதல்முறையாக சந்தியாவிற்காக தன் ஆசையை துறந்ததன் நிறைவு அது.. இது இன்னும் எவ்வளவு நாளைக்கு நீடிக்கப்போகுது? என்றெல்லாம் தெரியவில்லை... ஆனால், அவள் மனம் சங்கடப்படும்படியான விஷயங்களை முடிந்த அளவிற்கு அவள் சிந்தைக்கு எட்டும்படியான இடங்களிலாவது தவிர்க்கவேண்டும்!..
“இதுதான் பிரச்சினையா மகி?.. இதுக்கல்லாம் பிரிஞ்சு போறதுன்னா, ஊருக்குள்ள ஒரு தம்பதியும் ஒண்ணா இருக்கமுடியாதுப்பா... ஒருவழியாக இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்தபிறகு இறுதிகட்ட ஆலோசனைக்குள் நுழைந்தாள் சந்தியா... மகியால் அதற்குமேலும் அங்கு அமர்ந்து வழக்குமன்றத்தை வேடிக்கைபார்க்க விருப்பமில்லை.. சட்டென அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்.. கதவு அடித்துக்கொண்டதின் ஒலி, வீட்டின் சுவர்களில் எதிரொலித்து அடங்கியது..
“பார்த்தியாக்கா அவன?... இந்த விஷயத்துக்கு இவ்ளோ ரியாக்ட் பண்ணுவான்னு நான்  நினைச்சுக்கூட பார்க்கலக்கா திலீப் தனது தரப்பு நியாயத்தினை முன்வைத்தான்..
“நீ நினைக்குறதும் தப்புதான் திலீப்... எந்த ஒரு விஷயத்துக்கும் இப்புடித்தான் ரியாக்ட் பண்ணனும்னு எந்த அளவுகோலும் இல்ல... உனக்கு சிறுசா தெரியுற ஒருவிஷயம், எனக்கு ரொம்பப்பெருசா தெரியலாம்.. அதனால மகி இவ்வளவு கோபப்படுறதை நான் தப்புன்னு சொல்லமாட்டேன், அதுக்கான தீர்வை அவன் யோசிக்குறதுதான் நெருடலா இருக்கு..
“நான் செஞ்ச தவறை ஒப்புக்கிட்டேன், அதுக்கு மன்னிப்பும் கேட்டாச்சு.. இனி அப்புடி தவறு எதுவும் நடக்காதுன்னும் தெளிவா சொல்லிட்டேன்... இன்னும் அவன் எதையும் புரிஞ்சுக்கலக்கா...
“இங்க சிக்கலே, உன்ன அவன் ரொம்ப புரிஞ்சுகிட்டதாலதான்.. கமலோட நீ பழகுறதை மகிகிட்ட மறைச்சின்னா, நீ ஏதோ ஒருவிதத்துல மகியைவிட கமலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததா அர்த்தம் ஆகிடாதா?... நீ பண்ணவேண்டியது, இனிமே இப்படியல்லாம் நடக்காதுங்குற உத்தரவாதம் கொடுக்குறது இல்ல... கமலைவிட மகியை அதிகம் நேசிக்குறதா அவன் நம்பனும்..
“அதை மகி நம்பாமல்லாம் இல்லக்கா!
“இல்ல, அதை நீ இப்போ மறுபடியும் நிரூபிக்கணும்.... அதுக்கு என்ன பண்ணனும்னு நீதான் யோசிக்கணும்.. மகி எதையோ நீ பண்ணனும்னு எதிர்பாக்குறான், அதை அவன் வாயால சொல்லி புரியவைக்க விரும்பல... நீயா கண்டுபிடிச்சு அதை செஞ்சிட்டா, அவன் மனசு பழையநிலைக்கு மாறிடும்!..  அது என்னவா இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப்பாரு, பிரச்சினை தானா தீர்ந்திடும்.. சரி, மாமா சாப்பிட வந்திடுவார்.. நான் கீழ போறேன்..உங்க மூணுபேருக்கும் தோசை ஊத்தி கொடுத்துவிடுறேன்! சொல்லிவிட்டு சிட்டுக்குருவியைப்போல பறந்துவிட்டாள்.. வாசு இன்னும் சந்தியாவைப்பற்றிய அதிர்ச்சியிலிருந்தே மீளவில்லை, பிறகெங்கே திலீப்பின் யோசனைக்கு தீர்வு சொல்வது?.. தனிமையாய் யோசிக்கத்தொடங்கினான் திலீப்..
என்ன செய்யனும்னு மகி எதிர்பார்க்குறான்?... பிரச்சினையின் தொடக்கப்புள்ளி எது?.. கமலுடன் தனியே சென்றதை, மகியிடம் சொல்லாமல் விட்டதுதான்.. அதற்கான தீர்வும் அந்த புள்ளியின் விளிம்பில்தான் எங்கோ ஒட்டியிருக்கும்!.. என்ன செய்யலாம்? தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக தீவிரமாக யோசித்தான்..
அறைக்குள் மகி கார் ஓட்டுனருக்கு வழி சொல்லிக்கொண்டிருக்கிறான்... “ஏன் சார் செக்கென்ட் ஸ்ட்ரீட் போனிங்க, தர்ட் ஸ்ட்ரீட் வாங்க.. பிள்ளையார் கோவில் பக்கத்துல, கிரீன் கலர் பெயின்ட் அடிச்ச வீடு.. ஓலா கார் புக் செய்துவிட்டான் போலும்!.. இன்னும் ஓரிரு நிமிடங்களில் இங்கிருந்து கிளம்பியும்விடுவான், அதற்குள் என்ன செய்து நிரூபிப்பது?... நினைத்துக்கொண்டிருக்கும்போதே அறைக்குள்ளிருந்து வெளிவந்த மகி, பை பெட்டி சகிதம் கதவைத்திறந்து மாடிப்படிகளில் இறங்கத்தொடங்கினான்... ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை திலீப்பிற்கு, மூளையின் செயல்பாடே ஸ்தம்பித்து நின்றது..
சட்டென திலீப்பிற்கு ஏதோ பொறிதட்டியது.. வேகமாய் எழுந்து அடித்துப்பிடித்து படிகளிலிருந்து இறங்கி, வாசலில் நின்ற காரின் அருகே சென்றுவிட்டான்.. காரின் ஓட்டுனரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறான் மகி.. பெட்டியை காருக்குள் திணிக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்க, திலீப் அதனை வாங்கி உள்ளே திணித்தான்.. மகி சற்று ஆச்சர்யமாக ஏறிட்டுப்பார்த்தான், ஆனால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை...
சட்டென திலீப் காருக்குள் ஏறிக்கொண்டான், மகி எதுவும் புரியாமல் தடுமாறி நின்றான்...
“ஏறிக்கோ மகி! சற்று தள்ளி அமர்ந்து, அமர்வதற்கு இடம் ஒதுக்கித்தந்தான்..
“நீ எங்க வர்ற திலீப்?... தயவுசெஞ்சு பிரச்சினை பண்ணாம இறங்கு! தணிந்த குரலில் சொன்னான்..
“நான் ஒரு ப்ராப்ளமும் க்ரியேட் பண்ணல, இப்போ திநகர் போகணும்... எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் அங்க டைம் ஸ்பென்ட் பண்ணனும்...
“சார், ரொம்ப நேரம் வெயிட் பண்ணமுடியாது... பத்து நிமிஷத்துக்குள்ள உங்க வேலை முடிஞ்சிடும்ல? ஒட்டுக்கேட்பதே தவறு, இதில் கூடுதலாய் நேரக்கணக்கு வேறு போடுகிறார் ஓட்டுனர்...
“அடகொஞ்சம் சும்மா இருங்கண்ணே... உங்களுக்கு உங்க கவலை! புலம்பிக்கொண்டான் திலீப்..
“ப்ளீஸ் திலீப்... டார்ச்சர் பண்ணாத, எனக்கு அல்ரெடி நேரமாச்சு..
“இத்தனைகாலம் பழகுன பழக்கத்துக்காகவாவது எனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தாயேன்.. உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கறேன்... மன்றாடினான்.. மகிக்கு கண்கள் கலங்கியது... திலீப் இவ்வளவு இறங்கிப்பேசி பார்த்ததில்லை... ஒருபக்கம் அவனை அளவுக்கு மீறி காயப்படுத்துறேனோ? என்கிற மன உறுத்தல் வருத்திக்கொண்டிருந்தாலும், மறுபக்கம் திலீப்போடு பழைய உறவை தொடர்வதில் ஒரு சிறு நெருடல் இருந்துகொண்டுதான் இருக்கிறது..
“திநகர் போங்கண்ணே... மகி ஒப்புதல் கொடுத்துவிட்டான்.. அங்குபோய் அந்த ஐந்து நிமிடங்களில் என்ன செய்து சமாதானப்படுத்தப்போகிறான்?..  சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் விளையாட்டு காட்டப்போகிறான் போலும்... அதைப்பார்த்து சிரிப்பு வரலாமே ஒழிய, பழைய ஒட்டுதல் எப்படி தொடரப்போகிறது?..
திலீப்பை ஓரக்கண்ணால் பார்க்கிறான்.. முகத்தில் அளவுக்கதிகமான பதற்றம்.. நகத்தை கண்டித்துக்கொண்டிருப்பதில், ரத்தமே வந்துவிடும் போல.. ஒருவேளை காதலை நிரூபிக்க, கத்தியால் கீறிக்கொள்வது, உயரமான கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற முட்டாள்த்தனமான காரியங்களில் ஈடுபடப்போகிறானோ?... இருக்காது... அதற்கு ஏன் திநகர் வரைக்கும் போகணும், அதைத்தான் வீட்டிலேயே செய்திருக்கலாமே!.. பதற்றம் இப்போது மகியையும் தொற்றிக்கொண்டது..
“சார்... நீங்க களம் படத்து ஹீரோதான?... இப்பதான் ஞாபகம் வருது! ட்ராபிக்கில் நின்றபோது சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரை பார்த்து, திலீப்பை அடையாளம் கண்டுபிடித்தார் ஓட்டுனர்...
“ஆமாண்ணே... படம் பார்த்திங்களா? உற்சாகமாய் வினவினான்..
“பார்த்தியாவா?... மூணு தடவை பார்த்தேன் சார்... சிரித்துக்கொண்டார்.. திலீப்பிற்கு பெருமை அள்ளியது.. சட்டை காலரை சற்று உயர்த்திவிட்டு, மகியிடம் பெருமிதம் அடைவதாய் காட்டிக்கொண்டான்..
“தாங்க்ஸ் அண்ணே.. ரொம்ப சந்தோஷம்!
“எதுக்கு சார் தாங்க்ஸ்?... உதிஷாவுக்காக முப்பது தடவ பார்த்தாலும் தகும்!.. எங்கருந்து சார் அந்த பொண்ணை புடிச்சிங்க, குதிரை கணக்கா இருக்குது!
“ஹ்ம்ம்... அரேபியா குதிரைப்பண்ணைலேந்து... இது ரொம்ப முக்கியமா? ரோட்டை பார்த்து ஓட்டுங்க ஏமாற்றத்தால் அவரிடம் சிடுசிடுத்துக்கொண்டான்.. மகி உதடு விலகாமல் சிரித்துக்கொண்டான்.. அதை பார்த்தபோது திலீப்பிற்கு ஓட்டுனர் மேல் கோபம் பற்றிக்கொண்டுதான் வந்தது...
“ரைட்ல போய், சக்கென்ட் லெப்ட் கட் பண்ணுங்க!
“அட்ரஸ் சொன்னா போதும் சார், வழியல்லாம் நல்லாவே தெரியும்... கூலா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க சார்... ஆமா, உங்க அடுத்த படத்துலயும் உதிஷாதான் ஹீரோயின்னு பேப்பர்ல பார்த்தேனே, உண்மையா சார்? அடப்பாவி!... இந்த மனுஷன் விடுவதாய் தெரியவில்லை... குஷ்பூ, நமீதாவிற்கு பிறகு உதிஷாவுக்கும் கோவில் கட்டாமல் விடமாட்டான் போல!.. கடவுளே, இந்த நடிகைகள் கிட்டேந்து இந்த அப்பாவி மக்களை காப்பாத்து!
“தலை வலிக்குது, கொஞ்சம் பேசாம போங்கண்ணே!
குறிப்பிட்ட இடம் வந்தபோது, மகியை இறங்கச்சொன்னான் திலீப்... ஏதோ அடுக்குமாடி குடியிருப்பு.. இங்கே எதற்காக அழைத்து வந்திருக்கிறான்?.. சுற்றி முற்றியும் பார்த்தும் ஒன்றும் புரிபடவில்லை..
“ரொம்ப லேட் பண்ணிடாதிங்க சார், பத்து நிமிஷம்தான் மாக்சிமம் லிமிட் ஒருவழியாக ஓட்டுனரிடமிருந்து தப்பித்து, லிப்டில் ஐந்தாவது மாடிக்கு மகியை அழைத்துச்சென்றான்.. என்னதான் நடக்குது? குழப்பம் தலையை சுற்றும் அளவிற்கு சுழற்றி அடித்தது...
குறிப்பிட்ட வீட்டின் முன்பு நின்று அழைப்பு மணியை அடிக்க, ஒரு வயதான பெண்மணி கதவை திறந்தார்.. முதலில் அடையாளம் கான சிரமப்பட்டவர், சட்டென யூகித்தவராக, “ஏய் நீ எதுக்கு இங்க மறுபடியும் வந்த?.. மறுபடியும் எங்கள இம்சை பண்ணவா? பொரிந்து தள்ளினாள்.. அப்பெண்மணியின் வார்த்தைகளை பொருட்டாக எண்ணிடாமல், அவளை கடந்து வீட்டிற்குள் இயல்பாக நுழைந்தான்...
“ஏய், நான் சொல்லிகிட்டே இருக்கேன்... நீபாட்டுக்கு உள்ள போற?.. செக்யூரிட்டியை வரச்சொல்லவா? சற்று கூடுதலாய் கோபத்தின் வார்த்தைகள் விழுந்தன..
இந்த ஆரவாரம் கேட்டு, அறைக்குள்ளிருந்து ஒரு இளைஞன் வெளிவந்தான்... வேறு யாருமில்லை, கமல்தான்.. திலீப்பை பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளினான்.. “ஏய் என்ன சர்ப்ரைஸ் விசிட்?... உட்காருப்பா அருகில் நின்ற மகியை ஒரு உருவமாகக்கூட ஏறிடவில்லை...
“அம்மா... சத்தம் போடாம கொஞ்சம் உள்ள போறியா?.. ஏன் இப்டி அலறி மானத்த வாங்குற! அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறான் கமல்..
“யாரு நானா மானத்த வாங்குறேன்?.. இந்த படுபாவிகூடத்தான் நீ சேர்ந்து குடும்பத்து மானத்தை வாங்குன.. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்குறோம், அதுக்குள்ள மறுபடியும் வந்துட்டானே! தலையில் அடித்து அழத்தொடங்கினாள்...
“ஆண்ட்டி ஒரு நிமிஷம்... நீங்க பயப்படற அளவுக்கு நான் ஒன்னும் பண்ணப்போறதில்ல.. கமல் என்னிக்கோ என் வாழ்க்கைய விட்டு போய்ட்டான், இனி எப்பவும் அவனோட ஒண்ணா வாழப்போறது இல்ல... இதுதான் சத்தியம்.. இப்ப நான் வந்ததுகூட, இனி அவனை சந்திக்கவே கூடாதுன்னு சொல்லத்தான்.. என்னோட மொத்த வாழ்க்கைலயும் கமல்ங்குற பேரே இனி இருக்கப்போறதில்ல... தயவுசெஞ்சு என்னை நம்புங்க! அவள் கையைப்பிடித்து கேட்டுக்கொண்டான்.. அப்பெண்மணியும் திலீப்பின் வார்த்தைகளில் தெரிந்த உண்மையை ஏற்றுக்கொண்டவளாய் சப்தமில்லாமல், அறைக்குள் சென்றுவிட்டாள்...
ஓரிரு நிமிடங்கள் திலீப் மெளனமாக நின்றிருந்தான்.. 
“சாரி திலீ... அம்மா ரொம்ப பேசிட்டாங்களா?
“இப்டி வெளிப்படையா பேசுறவங்கள நினச்சு இப்போலாம் சந்தோஷப்படுறேன் கமல்.. அதிகம் பேசாத ஆட்கள்கிட்டதான் அவ்வளவு வன்மமும் புதஞ்சிருக்கு
“என்னப்பா சொல்ற? அருகில் வந்து திலீப்பின் கையை பிடிக்க எத்தனிக்க, அந்த கையை அலட்சியமாய் தட்டிவிட்டான்...
“இனி இப்டி நாடகமாட ஒரு அவசியமும் இல்ல கமல்... என்னமா நடிக்குறடா சாமி... அப்பப்பா, அவ்ளோ தத்ரூபமா, சீரியல் வில்லிகள் மாதிரி ப்ளான்லாம் பயங்கரமா போட்டு ஒவ்வொரு சீனையும் நகர்த்திருக்கன்னு ஆச்சர்யமா இருக்குடா.. ஆனா உன்னோட எந்த தகிடுதத்த வேலைகளும், மகியை என்கிட்டருந்து பிரிச்சிடாதுன்னு சொல்லிட்டுப்போகத்தான் இப்போ வந்தேன்.. மகியை நான் அளவுக்கதிகமா லவ் பண்றேன்... அந்த காதலை இனி என் வாழ்க்கைல வேற யார்கூடவும் ஷேர் பண்ணிக்க வாய்ப்பே இல்ல... நீ முட்டாள்த்தனமா எதுவும் யோசிக்காம, உன்னோட வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்க பாரு!... மகியை என் வாழ்க்கைலேந்து எடுத்திட்டு, திலீப்னு ஒரு மனுஷனை மட்டும் பார்த்தா ஒட்டுமொத்தமா நான் ‘ஜீரோதான்.. என் வாழ்க்கைல எல்லாமும் அவன்தான்.. எங்க காதலை உன்னைப்போல ஒரு மூணாம் தர மனுஷனால புரிஞ்சுக்க முடியாது... அதை நீ புரிஞ்சுக்கனும்னும் நான் விரும்பல.. இவ்வளவு நீ பண்ணின பிறகும் உன்கிட்ட பொறுமையா பேசுற அளவுக்கு என்னை ஒருபக்குவமுள்ள மனுஷனா மாத்தினதும் கூட  மகிதான்.. ஆனா, எப்பவும் இதுமாதிரி பொறுமையாவே போய்டுவேன்னும் நெனைக்காத... இனி அதை சோதிச்சு பார்க்கவும் முயற்சி பண்ணாத! சொல்லிவிட்டு கமலின் பதிலைக்கூட எதிர்பார்த்திடாமல், மகியின் கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் திலீப்...
கதவை படாரென சாத்திவிட்டு, லிப்டிற்குள் சென்று கீழ்த்தள எண்ணை அழுத்திவிட்டு அமைதியாக நின்றான் திலீப்.. அந்த மௌனத்தை சற்று பிரம்மித்து பார்த்துக்கொண்டிருந்தான் மகி...
“உனக்கென்ன ஹீரோன்னு நெனப்பா?.. எவன் வீட்டுக்கோ போயி, பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு என் கையை பிடிச்சு இழுத்துட்டு வர்ற!.. வெகுநேரம் கழித்து வாயை திறந்தான் மகி...
திலீப்பிற்கு கோபம் சுளீரிட்டது... “நான் ஹீரோன்னு நிரூபிக்கவல்லாம் உன்னைய கூட்டிட்டு போகல.. அந்த கமலுக்கு என் வாழ்க்கைல ஒரு முக்கியத்துவமும் இல்லன்னு ப்ரூவ் பண்ணத்தான் இங்க வந்ததே.. இன்னும் நான் நடிக்குறேன்னும், பொய் சொல்றேன்னும் உன் மனசுக்கு தோணினா, உனக்கு எது விருப்பமோ அப்டியே பண்ணு மகி.. இன்னொரு முக்கியமான விஷயம், உன்ன எந்த அளவுக்கு நான் லவ் பண்றேன்னு ப்ரூவ் பண்ணனும்னு எனக்கு விருப்பமில்ல.. அது உன் மனசுக்கு எப்போ புரியுதோ, அப்போ என்னைய ஏத்துக்கோ லிப்ட் கதவு திறக்க சரசரவென அதிலிருந்து இறங்கி வாயிலை கடந்தான் திலீப்...
மகி ஓரிரு வினாடிகள் மௌனித்தபடி நடந்தான்.. என்ன நடக்கிறது? இனி என்ன செய்யப்போகிறேன்? ஒரு தெளிவான முடிவையும் எட்டமுடியவில்லை..
காரினுள்ளே அமர்ந்தபிறகு, “எங்க சார் போகணும்? ஓட்டுனரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்கையில் சாய்ந்துகொண்டான் திலீப்... மகியின் மீது அவனுக்கு மெலிதாய் கோபம் படர்ந்திருந்தது..
“சீக்கிரம் சொல்லுங்க சார்
“இப்போ கிளம்புன இடத்துக்கே போங்க.. சைதாப்பேட்டைக்கு மகி பதிலளித்தான்...
திலீப் அதிசயித்து மகியை பார்க்க, அழகான புன்முறுவலோடு திலீப்பின் கையை பிடித்துக்கொண்டான்... கார் வந்த பாதையிலேயே திரும்பிக்கொண்டிருக்க, திலீப்பின் தோளின் மீது சாய்ந்துகொண்டான் மகி...
“நீ எதையும் ப்ரூவ் பண்ணவேணாம் மாமா... உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், சாரி.. தோளில் ஒரு முத்தம்..
இதைத்தான் எதிர்பார்த்தேனா? என்பது இப்போவரை மகிக்கு புலப்படவில்லை... ஆனாலும், இதற்குமேல் திலீப்பின் காதலை சோதித்து பார்ப்பது ஏதோ சாடிஸ மனநிலை போல தோன்றியது.. இனி ஒருகாலமும் இத்தகைய துன்பத்தில் தன்னவனை ஆழ்த்திடக்கூடாது என்கிற மன நெகிழ்வோடு திலீப்பின் கைகளை அழுத்தப்பிடித்துக்கொண்டான் மகி..
இப்போதுவரை இந்த பிரச்சினை எங்கே தொடங்கியது? எப்படி மறைந்தது? என்கிற குழப்பங்களுக்கு இருவருக்குமே விடைதெரியவில்லை... ஆனால், விடைதேடி அலைவது மட்டும் வாழ்க்கையில்லை... விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் நிலையான வாழ்க்கை என்ற புரிதல் அந்த அரவணைப்பில் அப்பட்டமாய் வெளிப்பட்டது... திலீப்பின் கண்கள் கசிந்து நீராய் ஊற்றிக்கொண்டிருந்தது.. ஏதோ ஒரு சாதித்த பெருமிதம்.. சாவின் விளிம்பிலிருந்து தப்பித்து வந்தவனைப்போல உயிர்மூச்சை உள்வாங்கி விட்டான்..
“ஐ லவ் யூ மகி... மகியின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தான்...
“லவ் யூ டூ மாமா... கையினை முகத்தோடு ஒற்றிக்கொண்டு, ஆழமாய் அதில் ஒரு முத்தம் கொடுத்தான் மகி... புதிய பிறப்பு பிறந்ததை போன்று உற்சாகமாய் உணர்ந்தார்கள் இருவரும்!...
                                            ****************

1 comment:

  1. வணக்கம் நண்பரே ...

    ரொம்ப சந்தோசமா இருக்கு .......என்ன விட்டுட்டு போன நண்பன் திரும்பவும் என் கூட சேர்த்ந்துடான் என்ற சந்தோசம் .......நல்லா இருக்கீங்களா ? .....அப்புறம் நிறைய பேசனும்னு தோணுது ஆனா முடியல ஹ ஹ ஹ ....கொஞ்சம் உணர்ச்சிவச படுறேன் போல ஹ ஹ ஹ .....முதல் பாராட்டு அரசியல கதைக்குள்ள கொண்டுவந்ததுக்கு ......இந்த ஆரம்ப கட்ட விழிப்புணர்வு ரொம்ப முக்கியமா இப்போ தேவை....இரண்டாவது பாராட்டு நெஜமாவ சொல்றிங்க கதையோட தொடரவ மாணிக்கம் மாமவ இந்த கதைல கொண்டுவந்ததுக்கு.....வாழ்கை என்ன எங்கயோ கொண்டு சேதுடுச்சு ........ஆனா நம்பிக்கை இன்னும் அதிகமாய் இருக்கு .........உங்கள் வாழ்வு நலமுடன் இருக்க என் வாழ்த்துக்கள் ...................

    ReplyDelete