நள்ளிரவு ஒரு மணிக்கு சரவணனின் அலைபேசி அலறியது..... அருகில் படுத்திருந்த மனைவி கொஞ்சம் சலித்துக்கொண்டே சரவணனை எழுப்பி அலைபேசியை கொடுத்தார்.... அலைபேசியை ஆன் செய்த சரவணன், "ஹலோ சரவணன் ஹியர்" என்றார்.... மறுமுனையில், "ஏய் சரவணா, நான் கோபி பேசுறேன்..... நாளை மறுநாள் நிகழ்ச்சிடா, மறந்திடாத" என்றார்.... "நான் எப்படிடா மறப்பேன்.... நாளைக்கு ஈவினிங் ப்ளைட் ஏறி, நாளை இரவே சென்னை வந்திடுவேன்...... எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா?...." என்றார் சரவணன்.... "எல்லாம் ரெடிப்பா.... லீ மெரிடியன் கான்பரன்ஸ் ஹால்லதான் மீட்டிங்..... உனக்கு ரூம் புக் பண்ணிட்டேன்..... ஓகேடா, உனக்கு ஞாபகப்படுத்தத்தான் கால் பண்ணேன்.... வச்சிடவா?" என்றார் கோபி.... "ஏய் ஏய்... வச்சிடாத........ ஆமா, மீனாட்சிக்கும் சொல்லியாச்சுல்ல?" என்ற சரவணன் "மீனாட்சி" என்று சொல்லும்போது மெல்லிய குரலில் மனைவிக்கு கேட்காதபடி கூறினார்.... "ஹ ஹ ஹா..... அப்பவே லெட்டர் அனுப்பிட்டேன்.... சரவணன்- மீனாட்சி ஆர்கெஸ்ட்ரா இல்லாமல் நிகழ்ச்சி சுவாரசியமா இருக்குமா என்ன?.... கண்டிப்பா அவனும் வந்திடுவான், வழக்கம்போல உனக்கும் மீனாட்சிக்கும் ஒரே ரூம்தான் புக் பண்ணிருக்கேன்" என்று சிரித்தார் கோபி.... "ஓகேடா... நாளைக்கு நைட் பாக்கலாம்..... குட நைட்...."என்று அழைப்பை துண்டித்தார் சரவணன்.....
அழைப்பை துண்டித்தபின் மனதிற்குள் ஒரு புத்துணர்வு, ஒரு பரவசம் உண்டாவதை உணர்ந்த சரவணன், எழுந்து பால்கனிக்கு சென்றார்.... உறையவைக்கும் பனிக்காற்று மனதை இன்னும் சிலிர்ப்பாக்கியது..... இவர் சரவணன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த இருபது வருடமாக வசிப்பவர்.... இப்போது 45 வயதாகும் சரவணன், அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் முக்கியமானவர்.... பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் கூட, வருடத்திற்கு ஒருமுறை தன் நண்பர்களை சந்திக்க மட்டும்தான்
தமிழகம் செல்வது வழக்கம்.... ஒரு வார காலம் குடும்பம், தொழில், அமெரிக்க வாழ்க்கை என்று எல்லாவற்றையும் மறந்து தன் கல்லூரி நண்பர்களோடு மகிழ்வாக இருப்பதற்காக ஒரு வருட காலமும் இந்த ஒரு வாரத்திர்காக காத்திருப்பது கடந்த பதினைந்து வருட வழக்கமாகிவிட்டது சரவணனுக்கு..... மறுநாள் காலை முதல் ஒரு வார விடுப்பிற்கான வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு பயணத்திற்கு மதியமே ஆயத்தமாக தொடங்கிவிட்டார் சரவணன்.... "பாருடா அஷ்வின்.... உங்கப்பா எவ்வளவு சந்தோஷமா கிளம்பிகிட்டு இருக்கார்னு..... ஒரு வாரம் நம்மள பிரியப்போற கவலையே இல்லாமல் கிளம்பிகிட்டு இருக்காரு" என்று செல்ல கோபம் கொண்டார் சரவணனின் மனைவி இந்திரா.... "அம்மா, இந்த தடவை நானும் அப்பாகூட போகப்போறேன் இந்தியாவுக்கு..... டிக்கட்லாம் எடுத்திட்டேன்.... முன்னாடியே சொன்னா எதையாச்சும் சொல்லி தடுத்திருப்பார், அதான் இப்போ சொல்றேன்..... ஒன் வீக் நானும் பிசிதான்" என்றான் சரவணனின் மகன் அஷ்வின்..... இவன் பதினெட்டு வயது கல்லூரி மாணவன்.... அதிர்ச்சியான சரவணன், "டேய், நீயுமா?..... உன் இம்சைஎல்லாம் இல்லாம கொஞ்சம் என்ஜாய் பண்ணதான் நான் இந்தியா போறேன்.... பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா இருக்கு..... நான் நெக்ஸ்ட் டைம் உன்ன கூட்டிட்டு போறேன் செல்லம்..... இந்த தடவை அப்பா மட்டும் போறேன்" என்று சிரித்தார் சரவணன்.... "அந்த கதையே வேண்டாம்.... நிச்சயமா உங்ககூட நான் வருவேன்.... ரெண்டு வருஷமா நீங்க இப்படித்தான் சொல்லி என்னைய ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க..... அதான் இந்த முறை இந்த அதிரடி முடிவு" என்று சத்தமாக பேசிய அஷ்வின், மெல்ல சரவணனின் காதருகே வந்து, "உங்க மீனாட்சிய இந்த தடவை நான் பார்த்தே ஆகணும்..." என்று தன் அம்மாவின் காதுகளில் விழாதவாறு கூறினான் அஷ்வின்.... இதை பார்த்த இந்திரா, "நீயும் போறியா?.... அவர் தனியா போனா கூட நான் பயப்பட மாட்டேன், நீயும் போறதை நினச்சா பயமா இருக்கு..... என் ஹஸ்பண்டை கெடுத்திராம அமேரிக்கா கொண்டு வந்து சேர்த்திடு " என்று சிரித்துவிட்டு சமையல் வேலையை பார்க்க சென்றுவிட்டார் இந்திரா... அப்படியாக எல்லாமும் முடிந்து விமான நிலையமும் வந்துவிட்டார்கள் சரவணனும், அஷ்வினும்.... விமானம் ஏறுவதற்கு முன்னால் அஷ்வினை பார்த்த சரவணன், "நீ கண்டிப்பா வந்தே ஆகணுமா?" என்றார்.... "அந்த சந்தேகமே வேணாம்.... நீயே சென்னை போகலைனாகூட நான் அங்க போறது உறுதி" என்று சொல்லிவிட்டு விமானத்தை நோக்கி விரைந்தான் அஷ்வின்.... விமானத்தில் அமர்ந்த பின்பு கண்களை மூடி பழைய நினைவுகளில் மூழ்கினார் சரவணன்....
சரவணன் கல்லூரி நாட்களை நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் வந்துதான் அந்த கற்பனையை நிறைவு செய்வது வழக்கம்.... அந்த கண்ணீருக்கு காரணம் நாம் நினைப்பது போல மீனாட்சிதான்..... மீனாட்சி என்கிற மீனாட்சிசுந்தரம்.... கல்லூரியின் போராட்ட நாயகன் இவர்.... கல்லூரியில் இணைந்த நாள் முதலாக "மாணவர் எழுச்சி இயக்கம்" என்கிற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர ஈடுபாடுகொண்ட இளைஞர்.... நம் சரவணனின் குனாதிசயத்திற்கு நேர் எதிரானவர்.... சரவணனின் லட்சியம், கனவு எல்லாமே அமெரிக்க வேலையும், அங்கே குடி அமர்வதும்தான்.... அதற்காக தான் உண்டு, தன் படிப்புண்டு என்று கல்லூரி வாழ்வை சுருக்கிக்கொண்டவர்.... ஆனால் மீனாட்சி சுந்தரத்தின் கனவு லட்சியம் எல்லாமே பொதுவுடைமை , சமூக நீதி நிறைந்த சமுதாயம் அமைப்பது.... அதனால் மீனாட்சியில் கல்லூரி வாழ்வு எல்லைகள் இன்றி பறந்து விரிந்து காணப்பட்டது.... எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு மீனாட்சி தலைமையில் ஒரு குழு கொடி பிடித்து கோஷம் போட்டுக்கொண்டிருக்கும்.... அதனால் சரவணனுக்கு மீனாட்சியையும் அவனை சார்ந்தவர்களையும் கண்டால் பிடிக்காது.... சுயநலம் பிடித்தவர்கள், அமெரிக்க கைக்கூலிகள் என்று சரவணனின் மீதும் மீனாட்சிக்கு ஒரு எதிர்மறை எண்ணம் இருந்தது.... இப்படி எதிரும் புதிருமாக இருந்தவர்களை இணைத்தது இசை..... சரவணன் ட்ரம்பட் எனும் இசைக்கருவி வாசிப்பதில் கைதேர்ந்தவன், அதே போல மீனாட்சியோ மிகத்திறமையான ட்ரம்ஸ் ப்ளேயர்.... இருவரும் கல்லூரி இசைக்குழுவில் பிரதான இசைக்கலைஞர்கள்.... சரவணன் மீனாட்சி இணை இந்த விஷயத்தில் கல்லூரி முழுவதும் பிரபலம்.... கல்லூரிக்காக மற்ற கல்லூரிகளில் இசை போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றதன் காரணமாக வெளிமாநிலங்கள் இசை நிகழ்ச்சி வாய்ப்பெல்லாம்கூட இவர்களின் இசைக்குழுவிற்கு கிடைத்தது.... கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் மறையத்தொடங்கியது.... நாளடைவில் அவர்களின் மோதல் எண்ணங்கள் ஈர்ப்பாக கனிந்தது.... தனிப்பட்ட விஷயத்தில் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும், இருவரும் தங்கள் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க முயலவில்லை.....எப்போது இந்த மாற்றம் நிகழ்ந்தது, எப்போது இந்த காதல் இருவருக்குள்ளும் கனிந்தது என்று இருவருக்குமே நினைவில்லை.... இவர்களின் இந்த காதல் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியாவிட்டாலும்கூட, அவர்கள் இசையில் அந்த மாற்றம் தெரிந்தது.... இன்னும் மெருகேறி , இன்னும் தித்திப்பாகியது அந்த இசை.... இந்த கெமிஸ்ட்ரி சரவணன்-மீனாட்சி இணையை இன்னும் பிரபலமாக்கியது.... கல்லூரி கால தங்கள் மூன்று வருடமும் ஒரு சிறு சலனம் கூட இல்லாமல் தெவிட்ட தெவிட்ட இருவரும் காதல் ரசம் பருகினர்.... சரவணன் மீனாட்சி அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷமாக நினைத்தான்.... எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதம் எதுவும் அறியாமல் கனிந்த அவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளியாக, இருவரின் சோகத்திற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது அந்த கல்லூரியின் கடைசி நாள்.... அன்றோடு இருவரின் சென்னை கல்லூரி நாட்கள் முடியப்போகிறது.... அதன் பிறகு சரவணனின் லட்சியமான அமெரிக்க கனவு நினைவாகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது..... இன்னும் சில நாட்களில் அமேரிக்கா செல்ல வேண்டும்... அதேபோல மீனாட்சிக்கோ தன் சொந்த ஊரான தஞ்சாவூரில் கட்சிப்பணி அழைத்தது.... இருவரும் தங்களின் லட்சியங்களை கொஞ்ச காலம் தள்ளிப்போடும் முடிவோடு சென்னையில் எவ்வித காரணமும் இன்றி ஒரு வருடம் இருந்தனர்.... அவ்வப்போது இசைக்குழுவில் கிடைக்கும் பணத்தை வைத்து காலத்தை கழித்தனர்.... சரவணன் அமெரிக்க வேலையை உதறிய விஷயம் சில காலம் கழித்து அவரின் பெற்றோருக்கு தெரியும்போது கடும் கோபம் கொண்டனர்.... பல சண்டைகளுக்கு பிறகு வேறு வழியின்றி மீண்டும் அமெரிக்க பயணத்திற்கு குடும்ப நிர்பந்தத்தால் ஆயத்தமாகினார்.... இதற்கிடையில் சரவணனின் திருமணத்திற்கும் அவர் வீட்டில் நெருக்குதல் அதிகமாக , முடிவெடுக்க முடியாமல் திணறிய சரவணனுக்கு , வீட்டில் சொல்லும் திருமணத்தை செய்துகொள்ள அறிவுறுத்தினார் மீனாட்சி.... வேறு வழியின்றி திருமணம் முடிந்து அமேரிக்கா சென்றுவிட்டார் சரவணன்..... முதல் ஐந்து வருடங்கள் மீனாட்சியை பற்றி எவ்வித விபரமும் சரவணனுக்கு தெரியவில்லை.... தன் கல்லூரி நண்பர்கள் ஏற்பாடு செய்த முதல் மாணவர் சந்திப்பில்தான் அந்த ஐந்து வருடத்திற்கு பிறகு மீனாட்சியை சந்தித்தார் சரவணன்.... அப்போது தனக்கும் திருமணம் முடிந்து, குழந்தை பிறந்துவிட்டதாக மீனாட்சி சொன்னதும் மனதில் அந்த சோகங்களுக்கு நடுவில் ஒரு நிம்மதி உருவானது.... அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் இந்த ஒரு வாரத்தை இந்த பதினைந்து வருடங்களும் மறக்காமல், தவறாமல் மீனாட்சியுடன் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் சரவணன்..... ஒரு வருட கவலைகளையும் இந்த ஒரு வார நிகழ்வுகள் தீர்த்து வந்தன.... இந்த வருடம் பதினைந்தாம் வருட சந்திப்பு.... இந்த விஷயங்கள் எல்லாம் அஷ்வினுக்கு மட்டும் தெரியும்.... இதுவரை இதைப்பற்றி வேறு யாருடனும் இதைப்பற்றி சொன்னதில்லை சரவணன்.... அஷ்வினிடம் கூட தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் இதை கூறினார்.... தன் தந்தை கே என்று தெரிந்ததும் அஷ்வின் அதை ஏற்கமுடியாமல் தவித்தான்.... பின்னர் தந்தையின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதன் பிறகு பெரிய ஆறுதலாக மாறிவிட்டான் அஷ்வின்....
மீனாட்சியை பற்றிய கனவுகளோடு தன் உடல் விமானத்திலும், தன் மனம் அதையும் தாண்டியும் பறந்துகொண்டிருந்தது..... அப்போது அருகில் அஷ்வின், "அப்பா... அப்பா..... என்ன ட்ரீம்ஸா?.... சென்னை வந்தாச்சு...... எழுந்திருங்க....." என்று எழுப்பும்போதுதான் தான் உறங்கிப்போனதை உணர்ந்தார் சரவணன்.....
சென்னை விமான நிலையத்தில் சரவனனுக்காக அவர் நண்பர் கோபி காத்துக்கொண்டிருந்தார்..... சரவணனை பார்த்த கோபி கட்டிப்பிடித்து நலம் விசாரித்ததை பார்த்த அஷ்வின் சரவணனின் காதருகே வந்து, "அப்பா, இவர்தான் மீனாட்சியா?... காண்டாமிருகத்துக்கு காஸ்டியூம் போட்ட மாதிரி இருக்காரு..... உன் டேஸ்ட் ஏன்பா இப்படி போச்சு?" என்றான்..... மெல்லிய குரலில் சரவணனும், "அஷ்வின், இந்தியாவுலயாவது கொஞ்சம் அப்பாகிட்ட பேசுற மாதிரி பேசுடா..... இவன் மீனாட்சி இல்ல, இந்த மீட்டிங் ஆர்கனைஸ் பண்ற என் ப்ரெண்ட் கோபி" என்று கூறிவிட்டு கோபியிடம் அஷ்வினை அறிமுகப்படுத்தினார் சரவணன்... கோபியின் மகிழுந்தில் மூவரும் தங்கும் இடத்தை நோக்கி பயனப்பட்டார்கள்..... செல்லும் வழியில் சென்னையின் எழிலை ரசித்தபடி வந்துகொண்டிருந்தான் அஷ்வின்.... சரவனனோ ஏதோ ஒரு குழப்பத்திலேயே வந்தான்.... "எல்லாரும் வந்துட்டாங்களா கோபி?" என்றார் சரவணன்....
"இல்ல சரோ.... பாதிபேர் வந்துட்டாங்க, இன்னும் எல்லாரும் வரல..." என்றார் கோபி.... கொஞ்சம் யோசித்தபிறகு, "மீனாட்சி வந்துட்டானா?" என்று சரவணன் கேட்டதும், சீண்டல் சிரிப்புடன் அதை பார்த்தான் அஷ்வின்.... "இல்ல சரோ, அவன் இன்னும் வரல.... எப்பவும் அவன் நைட்தானே வருவான்.... அதான் இன்னும் வரல சரோ " என்று கோபி விளக்கம் கொடுத்தபோது அவர்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது.... அங்கு வந்திருந்த சில நண்பர்களுடன் பேசி அளவளாவிய சரவணன் நேரம் நள்ளிரவை நெருங்கியதால் தன் அறைக்கு சென்றுவிட்டார்.... சிறிது நேரத்தில் சரவணனும் அஷ்வினும் படுத்துவிட்டார்கள்.... ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு கண்விழித்து பார்த்த அஷ்வின், தன் அருகில் சரவணன் இல்லாததை கண்டு எழுந்து பார்த்தான்.... நேரம் அதிகாலை மூன்று மணி.... சரவணன் இன்னும் உறங்காமல் வராண்டாவில் உலாவிக்கொண்டிருந்தார்..... குழப்பமான அஷ்வின், "என்னப்பா பண்றீங்க?.... உலகமே இடிஞ்சு விழுந்தாலும் நைட் தூக்கத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டிங்களே.... இன்னைக்கு என்ன தூக்கம் வரலையா?" என்றான் அஷ்வின்....
"தூக்கம் வருது, ஆனால் தூங்க முடியலடா" என்றார் சரவணன்....
"என்னப்பா காதலுக்கான அறிகுறிஎல்லாம் சொல்றீங்க ?... தமிழ் படமெல்லாம் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டிங்க.... " என்று சிரித்தான் அஷ்வின்....
"இல்லடா.... இந்நேரம் மீனாட்சி வந்திருக்கணும்... ஆனால் அவனுக்கு என்ன ப்ராப்ளம்னு தெரியல இன்னும் காணும்" என்றார் கொஞ்சம் ஏமாற்றத்தோடு சரவணன்....
"இதுக்குத்தான் இப்படி ஆகிட்டிங்களா?.... ஏன்பா நிகழ்ச்சி ரெண்டு நாள் நடக்கப்போகுது.... அதனால கொஞ்சம் லேட்டா வரலாம்னு நினச்சிருப்பார்.... எப்படியும் இன்னைக்கு வந்திடுவார்.... நீங்க தூங்குங்க" என்றான் அஷ்வின்....
"இல்ல அஷ்வின், இவ்வளவு ஆர்வத்தோட ஒரு வருஷம் காத்திருந்து இங்க வந்தேன்.... மீனாட்சிய பார்த்த பின்புதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகமுடியும்..." என்றார் சரவணன்....
"இந்த ஒரு வருஷத்துல எத்தனை தடவைப்பா மீனாட்சியை நினச்சிருப்பிங்க....." என்றான் அஷ்வின்....
"எப்போ நினச்சேன்னு கேட்குறியா?.... நான் மறந்தாத்தானேடா நான் நினைக்க முடியும்.... இந்த இருபது வருஷ காலத்துல அவனை நான் மறக்கவே முடியலடா" என்றார் சரவணன்....
"இவ்வளவு லவ் பண்ற நீ ஏன்பா அம்மாவ கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட.... தாத்தாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கலாம்ல...." என்றான் குழப்பத்தோடு அஷ்வின்....
"என் அப்பா நான் உன்கிட்ட பேசுற மாதிரி இருப்பார்னு நினைக்கிறியா?.... சாதாரணமாவே அவர்கிட்ட பேசவே முடியாது... அமெரிக்கால ஜாப் கிடைச்சத நான் அவர்கிட்ட முதல்ல மறைச்ச்சதுக்கே நடு ரோட்னு கூட பார்க்காமல் ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சதுல ஹாஸ்பிட்டல்ல ஒரு மாசம் இருந்தேண்டா.... நானும் முடிஞ்ச அளவுக்கு என் கல்யாணத்த தள்ளிப்போடுரதுக்காக எவ்வளவோ முயற்சி பண்ணேன்....ஒரு கட்டத்துல என்னால எதையும் தடுக்க முடியல... மீனாட்சிதான் என்னைய வீட்ல சொல்றபடி கல்யாணம் பண்ணிக்க சொல்லி அட்வைஸ் பண்ணான்..... எல்லாத்தையும் கொஞ்ச நாள்ல மறந்திடலாம்னு நினச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன்....ஆனால், மறக்கவே முடியாத அளவுக்கு சில விஷயம் நமக்குள்ள இருக்குன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.... பதினஞ்சு வருஷ நிகழ்வுகளும் என்னால மீனாட்சிய மறக்குற அளவுக்கு மாத்திடல.... நீ பொறந்த பின்னாடி அந்த விஷயங்களை மறக்க முடியலைனாலும் கூட, கொஞ்சம் மாற முடிஞ்சுது.... " என்றார் விரக்தியான சரவணன்....
"நீ இவ்வளவு பீல் பண்றப்போ, உன்னைய அம்மாவ கல்யாணம் பண்ணிக்க சொல்ல மீனாட்சிக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு?" என்றான் அஷ்வின்....
"என் கஷ்டத்தை என்னைவிட அதிகமா புரிஞ்சுக்குவான் மீனாட்சி.... நான் ஒரு முடிவு எடுக்க முடியாம தடுமாறுனப்போ, என் நிலைமையையும் எங்க குடும்ப நிலைமையையும் யோசிச்சு ரொம்ப இக்கட்டான நிலைமையில்தான் அவன் அந்த முடிவை எடுக்குமாறு என்கிட்டே சொன்னான்" என்றார் சரவணன்....
"இது கஷ்டமா இல்லையாப்பா..... உங்களையும் ஏமாத்திக்கிட்டு, நம்மள சுத்தி இருக்குரவங்களையும் ஏமாத்திட்டு இருக்கிறது ரொம்ப கஷ்டமா இல்லையா உங்களுக்கு?" என்றான் அஷ்வின்....
பெருமூச்சு விட்ட சரவணன், "வலி கூட நாளாக நாளாக சுகமா மாறிடுச்சு... பொதுவா ஒருத்தரோட கல்யாண நாள்தான் அவங்க வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோஷமான நாளா இருக்கும்.... ஆனால், என்னை பொருத்தவரைக்கும் நான் எல்லை மீறி துன்பத்துல இருந்த நாள் அது.... கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள்லேந்து மீனாட்சி எங்க போனான்? என்ன ஆனான்?னு ஒன்னும் தெரியல.... நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தபோதும் அவனை பத்தி தகவல் தெரியல.... நானும் எதையோ இழந்தவன் மாதிரி கல்யாணம் முடிஞ்சதுலேந்து ஒரு மாசம் இருந்ததுல உங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.... வீடே மயானம் மாதிரி இருந்துச்சு.... என் ஒருத்தனால இவ்வளவு பேரும் கஷ்டப்படுரத நினைக்கையில ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.... அப்போலேந்து வெளி உலகத்துக்கு சிரிச்சு வாழ்ந்தாலும், உள்ளுக்குள்ள இன்னும் அழுதுக்கிட்டுதான் இருந்தேன்..... ஒரு கட்டத்துல அது பழகியும் போச்சு.... எந்த மீனாட்சிக்காக நான் அமெரிக்காவை முதல்ல மருத்தேனோ, அதே மீனாட்சியோட நினைவுகள்ள இருந்து தப்பிக்க அந்த அமெரிக்காவை மறுபடியும் நாடி போனேன்.... அப்புறம் சில வருஷங்களுக்கு பிறகு என் காலேஜ் ப்ரெண்ட்ஸ் ஒன்னா இணையுற நிகழ்ச்சி அரேஞ்ச் பண்ணப்போதான் நான் மறுபடியும் மீனாட்சிய பார்த்தேன்.... என் கல்யாணம் முடிஞ்சப்புறம் அவன் என் நினைவுகளை மறக்க கம்யூனிஸ்ட் போராட்டங்கள் தொடர்பா கேரளா போய்ட்டான்.... அதுக்கு பிறகு நான் அவனை பார்த்தப்போ அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்த விஷயம் தெரிஞ்சப்போ கொஞ்சம் என் மனசு நிம்மதி ஆச்சு..... அப்போலேந்து இந்த பதினஞ்சு வருஷமும் இந்த ஒரு வாரம் தவறாம சசந்திப்போம்.... நான் நிறைய பேசுவேன்.... நம்ம வீட்டு நாய் குட்டி போட்டதை கூட அவன்கிட்ட சொல்லுவேன்.... ஆனால் அவன் அதிகம் பேச மாட்டான்.... அவன் எங்கயோ நிம்மதியா வாழ்ரான்குற நிம்மதியிலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்" என்று கொட்டித்தீர்த்தார் சரவணன்...
எல்லாவற்றையும் கேட்ட அஷ்வினின் கண்கள் கலங்கி இருந்தது.... "புரியுதுப்பா..... ஒருவேளை உன்னை அவர் மறக்குரதுக்கான நாள் வந்ததால அவர் இந்த மீட்டிங்கை தவிர்த்திருக்கலாம்ல.... உங்க காதலை மறந்து அவர் குடும்பம் பிள்ளைகளோட நிம்மதியா வாழ்ந்தா உனக்கு சந்தோசம் தானேப்பா?" என்றான் அஷ்வின்.....
"அப்படி ஒன்னு நடக்க வாய்ப்பில்லை... ஆனால் நடந்தா சந்தோஷம்தான்.... எனக்காக நிறைய கஷ்டப்பட்டவன் அவன், இனியாவது நிம்மதியா இருந்தா அது போதும்.... ஒருவேளை அவனுக்கு உடம்பு எதுவும் சரி இல்லாததால அவன் இங்க வராம இருந்தா ?" என்றார் சரவணன்....
"அவ்வளவுதானே.... நாளைக்கு நைட் வரைக்கும் பார்க்கலாம்.... அவர் வரலைன்னா நானே தஞ்சாவூர் போயிட்டு அவர் நல்லா இருக்கிராரான்னு பார்த்துட்டு வரேன்.... அதுக்கப்புறம் நீயே முடிவெடுத்துக்கோ" என்றான் அஷ்வின்....
"நானும் வரேண்டா.... அவனை பார்த்த மாதிரி இருக்கும்ல" என்றார் சரவணன்....
"வேண்டாம்பா.... அவர் உன்னைய மறக்க நினச்சு வராம இருந்திருந்து நீ அவரை பார்த்து அதன் மூலமா மறுபடியும் அவர் நிம்மதி இல்லாமல் தவிக்க வேண்டாம்.... நான் போயி அவரை பத்தி விசாரிச்சிட்டு வரேன்" என்று அஷ்வின் சொன்னதை முழுமனதோடு சரவணனும் ஏற்றுக்கொண்டார்.... அடுத்த இரண்டு நாட்களும் மீனாட்சி வருவார் என பார்த்து பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாந்து போனார் சரவணன்.... எவ்வளவோ நண்பர்கள் அருகில் இருந்தபோதும்கூட தனிமையில் இருப்பதைப்போல உணர்ந்தார் சரவணன்.... அஷ்வின் சொன்னபடி மறுநாள் மாலை தஞ்சைக்கு பயணமானான்.... சரவணனின் நண்பர் கோபியிடமிருந்து மீனாட்சியின் விலாசத்தை வாங்கிக்கொண்டு ஒரு மகிழுந்தில் பயணமானான் அஷ்வின்.... மீனாட்சியின் முகரவியை அடைந்துவிட்டான் அஷ்வின்..... வீட்டின் உச்சியில் சிவப்புக்கொடி சிலிர்ப்புடன் பறந்துகொண்டிருந்தது.... அந்த வீட்டில் ஒருசில சிவப்பு துண்டு போட்ட நபர்கள் அரசியல் பேசிக்கொண்டிருந்தனர்.... அவர்களில் ஒருவரை அணுகிய சரவணன் கொஞ்சம் பயத்தோடு, மீனாட்சிக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்ற கடவுள் வேண்டுதலோடு "மீனாட்சி எங்க இருக்காரு?" என்றான் அஷ்வின்....
"எந்த மீனாட்சியப்பா கேட்குற?" என்றார் அந்த தோழர்....
"மீனாட்சி சுந்தரம்.... கம்யூனிஸ்ட்காரர்" என்றான் அஷ்வின்....
"தோழர் மீனாட்சிய கேட்குறியா?... அய்யா உள்ளதான் இருக்கார்.... பார்க்கணுமா?" என்றார் அந்த மனிதர்.... அஷ்வின் மனதிற்குள் மகிழ்ச்சி பட்டாசுகள் படபடத்தன..... உடனே தன் தந்தைக்கு அலைபேசிய அஷ்வின், "அப்பா உன் மீனாட்சி நல்லா இருக்கார்.... இப்போ கூட ஒரு பஸ் மறியலுக்கு தயாராகிட்டு இருக்காராம்.... நல்லபடியா இருக்கார்.... சந்தோஷம்தானே.... நான் கிளம்புறேன்" என்றான் அஷ்வின்....
"சந்தோஷம்டா.... அவன் குடும்பத்தோட நல்லபடியா இருந்தா எனக்கு சந்தோஷம்தான்.... நீ வா" என்றார் சரவணன்... அஷ்வினின் வார்த்தைகளில் உண்மை இருந்ததை சரவணன் கண்டுகொண்டார்.... ஆனால் அஷ்வினுக்கு இப்போது ஒரு குழப்பம் துளிர்விட்டது.... "குடும்பத்தோடு" நல்லா இருக்கணும்னு தந்தை சொன்னபோது அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.... உடனே மீண்டும் அந்த வீட்டருகே வந்த அஷ்வின் அந்த தோழரை அழைத்து, "மீனாட்சி சாரோட மனைவி, பிள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்கள்ள?" என்றான்.... குழம்பிய அந்த தோழர், "என்னப்பா சொல்ற?.... தோழருக்கு குடும்பம் பிள்ளைகளா?.... நீ சொல்றபடி மீனாட்சி யாரும் இங்க இல்ல.... இங்க இருக்கிறது எங்க அய்யா தோழர் மீனாட்சி.... அவருக்கு கல்யானம்லாம் ஆகல" என்றார்.... இதை கேட்ட அஷ்வின் இன்னும் குழப்பமானான்..... தான் தேடி வந்த மீனாட்சி இவர் இல்லையோ? என்கிற குழப்பம் அதிகமானது.... அதற்கு மேல் நேரடியாக கெட்டு தெரிந்துகொள்ளும் முடிவில் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் அஷ்வின்.... லெனின், ஸ்டாலின், சே குவேரா, ஜீவா என்று செங்கொடி வீரர்களின் படங்கள் அந்த வீட்டின் வரவேற்பறையை இன்னும் கம்பீரமாக்கியது....அப்போது அந்த கூடத்தின் அருகே இருந்த அறையில் மீனாட்சிக்காக காத்திருக்குமாறு மற்றொரு தோழர் சொல்ல அந்த அறையின் நாற்காலியில் அமர்ந்தான் அஷ்வின்.... அந்த அறையில் மாட்டியிருந்த படங்களை நோட்டமிட்ட அஷ்வின் ஒரு புகைப்படத்தை பார்த்தபோது திகைத்துவிட்டான்.... அது தன் தந்தை சரவணனும், மீனாட்சியும் இனைந்து கல்லூரி நாட்களில் எடுத்துக்கொண்ட புகைப்படம்... அப்படிப்பட்ட புகைப்படம் ஒன்று இருந்ததாகவும், அது தன் திருமணத்தின்போது காணாமல் போய்விட்டதாகவும் சரவணன் கூறியது அஷ்வினுக்கு நினைவுக்கு வந்தது.... அந்த புகைப்படத்தை பார்த்து யோசித்துக்கொண்டிருந்தபோது அந்த அறைக்குள் ஒரு முதியவர் வந்தார்.... வயது நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் என்றாலும் தோற்றம் என்னவோ அறுபதை தாண்டியதைப்போல காட்டியது.... அவர்தான் மீனாட்சி என்று கண்டுகொண்ட அஷ்வின் அவரை வணங்கினான்.... பதிலுக்கு வணங்கிய மீனாட்சி, "நீங்க யாரு தம்பி?.... " என்றார்....
"நான் அஷ்வின்.... சரவனனோட பையன்" என்று அஷ்வின் சொன்னதும் மீனாட்சியின் முகம் வெளிரிப்போனது.... கொஞ்சம் தடுமாறிய வார்த்தைகளில், "எந்த.... எந்த சரவணன்?" என்றார் மீனாட்சி.... அங்கிருந்த புகைப்படத்தை கைநீட்டி காட்டிய அஷ்வின், "அதோ அந்த சரவணன்.... உங்க சரவனன்தான்...ஒரு வருஷத்துக்குள்ள மறந்துட்டிங்களா?" என்றான் அஷ்வின்..... தலையில் துளிர்த்த வியர்வை துளிகளை தோளில் கிடந்த சிவப்பு துண்டினால் துடித்த மீனாட்சி" வாப்பா தம்பி நல்லா இருக்கியா?.... சரவணன் நல்லா இருக்கானா?.... என்ன விஷயமா வந்திருக்க?" என்றார் மீனாட்சி....
"எல்லாம் எனக்கு தெரியும் சார்..... உங்க லவ் விஷயம் முதல் எல்லாத்தையும் அப்பா என்கிட்டே சொல்லிருக்கார்.... உங்க மனைவி பிள்ளைகல்லாம் எங்க?" என்றான் அஷ்வின்.... வார்த்தைகள் கிடைக்காமல் தவித்த மீனாட்சி, "அவங்கல்லாம் கோவில் திருவிழாக்கு போயிருக்காங்க.... வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்பா" என்று சமாளித்தார்..... "நீங்க என் அப்பா மாதிரி.... பொய் சொல்லி மறைக்காதிங்க சார்.... நீங்க கல்யாணம் பண்ணிக்கலன்னு எனக்கு தெரியும்.... அப்புறம் ஏன் இதை என் அப்பாகிட்ட இவ்வளவு நாளா மறச்சிங்க?" என்றான் அஷ்வின்...
"இதை உங்க அப்பாகிட்ட சொல்லிட்டியா தம்பி.... சொல்லிடாத.... அவன் ரொம்ப கஷ்டப்படுவான்.... சரவணனுக்கு கல்யாணம் முடிஞ்சபிறகு என்னையும் என் வீட்ல கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப ப்ரெஷர் கொடுத்தாங்க.... எனக்கு சரோவை மறக்க முடியாமல் கேரளா போயிட்டேன்.... அஞ்சு வருஷம் கழிச்சுதான் இங்க வந்தேன்..... சரோவோட நினைவுகளை மறக்குரதுக்காக மக்களுக்காகவே என்னை அர்பணிக்க முடிவெடுத்தேன்..... வருஷா வருஷம் ஒரு வாரம் நடக்குற அந்த சந்திப்புல சரோவை பார்ப்பேன்.... நிறைய பேச மாட்டேன்.... ஏன்னா, நான் பேசுனா பொய் சொல்ல வேண்டி இருக்கும்... அதனால அதிகம் பேசாமல் சரோ பேசுறதை மட்டும் கேட்டுகிட்டே இருப்பேன்..... அவன் கஷ்டப்பட கூடாதுங்குரதுக்காக கல்யாணம் ஆச்சுன்னும் குழந்தைகள் இருக்குன்னும் பொய் சொன்னேன்..... ஒவ்வொரு வருஷமும் எனக்கு அவன் மேலையும், அவனுக்கு என் மேலையும் இருக்குற அன்பு கூடுச்சே தவிர குறையல.... இது எங்க போய் முடியும்னு பயந்ததாலதான் இந்த வருஷம் நான் அங்க வரல.... அவனுக்குன்னு குடும்பம் இருக்கு.... என்னால அவன் கஷ்டப்படுரதையும், உங்க குடும்பம் கஷ்டப்படுரதையும் என்னால ஏத்துக்க முடியல.... என்னை விட்டு அவன் கொஞ்சம் கொஞ்சமா விலகுரதுதான் இப்போதைக்கு நல்லதுன்னு எனக்கு பட்டுச்சு.... ஆனால் நீ இப்படி இங்க வந்து நிப்பென்னு நான் நினைக்கவே இல்ல.... " என்ற மீனாட்சியின் கண்களில் வழிந்த நீரை அவரின் சிவப்பு துண்டு துடித்தது.... இதை எல்லாம் கேட்ட அஷ்வினின் கண்களும் கலங்கின... "இவ்வளவு நாளும் என் அப்பாவோட காதல்தான் உயர்ந்ததுன்னு நினச்சேன்..... இப்போதான் புரியுது அதைவிட நீங்க அவர் மேல வச்சிருக்குற காதல் பல மடங்கு பெருசுன்னு..... நீங்க எங்கூடவே அமேரிக்கா வந்திடலாமே..... இனி இருக்குற காலத்துலயாவது ரெண்டு பேரும் நிம்மதியா ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரனையா இருக்கலாம்ல?" என்றான் அஷ்வின்.... "அது சரியா வராதுப்பா.... நான் நல்லா இருக்கேன்குற விஷயம் மட்டும் அவனுக்கு இப்போ தெரிஞ்சா போதும்.... என்னோட கடைசி காலத்தையும் இந்த மக்களுக்காகவே ஓட்டிடுறேன்..... நீ சரோவ பத்திரமா பார்த்துக்கோ.... நான் சொன்ன எந்த விஷயத்தையும் அவன் கடைசி வரைக்கும் தெரிஞ்சுக்காம பார்த்துக்கோ.... " என்றபோது மீனாட்சியின் வார்த்தைகள் தடுமாறி விழுந்தன.... எல்லாவற்றையும் கேட்ட அஷ்வின் வாழ்க்கையின் விலை உயர்ந்த பாடம் ஒன்றை கற்ற நிம்மதியோடு தன் மகிழுந்தின் அருகே வந்து நின்றான்.... அடுத்த நிமிடத்தில் தோழர் மீனாட்சி சுந்தரத்தின் தலைமையில் நூறு செங்கொடி தோழர்கள் அரசை எதிர்த்து கோஷம் இட்டபடி சாலையை நோக்கி விரைந்தனர்.... இப்போது மீனாட்சியின் கண்களில் ஒரு புத்துணர்வு பிறந்திருப்பதை கவனித்த அஷ்வின் சிரித்தான்....
Wow! Wow!
ReplyDeleteSuperb dear.
Great writing.
Tears rollout from my eyes.
Great friendship.
Regards
Vijay @ Raj
thank u vijay raj nanbaa......
ReplyDeleteTouching story... very nice...
ReplyDeleteநன்றி REJISH ..... ரொம்ப சந்தோசம்...... மற்ற கதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.....
Deletewow vijay super..ur narrattion of story is very nice...can't control my tears whn reading...keep it up
ReplyDeletenaanum gay than oru aanudan vazhvadharkaaga thedikittu irukken innum yaarum kidaikkavillai but en valkail enakku kandippaaga oru aan thevai. naan engae poi theduven. unga story is very super and love is common to all type of persons
ReplyDeleteManasa thalara vitama unga work la concentrate pannunga unka love ungala thedi varum, vijay annavum athan solrar
Deleteஅஷ்வின் கதாபாத்திரத்தின் அமைப்பு ரொம்ப அழகு
ReplyDeleteமகனின் அதரவு இருப்பதை போல ஒரு கதை களம் நான் எதிர்பார்கவில்லை
வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் எழுத்து பணி
நன்றி நண்பர் ஸ்ரீதர் அவர்களே...
Delete