Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 17 February 2013

"அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு....." - ஒரு கடிதம்....


இது நான் என்னோட அப்பா அம்மாவுக்கு எழுதுற கடிதம் இல்ல... ஒட்டுமொத்தமா கே சமுதாயத்து இளைஞர்களோட பெற்றோர்களுக்கு எழுதுற கடிதம்.... கே’ன்னா என்ன? அது ஏன் தப்பில்லை?னு எவ்வளவோ இதுவரைக்கும் சொல்லியாச்சு... அப்டி இருந்தும் உங்க பிள்ளைங்க இன்னும் தங்களோட அடையாளத்த மறச்சுகிட்டு, தங்களையே வருத்திகிட்டு வாழறதுக்கு காரணம் யார் தெரியுமா?... நீங்கதான்...
ஒட்டுமொத்தமா கே’ன்னா தவறுன்னும், அது இயற்கைக்கு முரணானது’ன்னும் நெனச்சு நம்பிட்டு இருக்குற இந்த சமூகத்தோட அங்கம் தான் நீங்களும்.... சமூகத்தோட விழிப்புணர்வு முழுமையாகாத வரைக்கும் உங்க எண்ணங்கள தப்பு சொல்லி, உங்கள குற்றவாளி ஆக்குறது தப்பு.... ஆனால், சமூகத்த பொருத்தவரைக்கும் யாரோ ஒரு மூன்றாம் நபர்தான் நாங்க... ஆனால், உங்களுக்கு தான் நாங்க பிள்ளைங்க.... எங்களோட அடையாளத்த நாங்க வெளிப்படுத்துறப்போ, நாலு நாள் அதப்பத்தி புரணி பேசிட்டு அஞ்சாவது நாள் அடுத்த புரனிக்கு தயார் ஆகிடும் இந்த சமூகம்... ஆனால், நீங்க நிச்சயம் வாழ்நாள் முழுசுக்கும் இத நினச்சு வருத்தப்படுவீங்க.... உங்கள வருத்தப்பட வைக்கக்கூடாதுன்னு காலம் முழுக்க தங்கள வருத்திக்கிட்டு வாழ்றாங்க உங்க பிள்ளைங்க....
முதல்ல, இது தப்பில்லைன்னு நீங்க புரிஞ்சுக்கோங்க.... உலகத்துல எல்லாரையும் கே’யா கடவுள் படைக்கல... தன்னோட மகனோட பாலீர்ப்பை புரிஞ்சுப்பாங்கன்னு கடவுள் எந்த பெத்தவங்கள நம்புறாரோ, அவங்களுக்குத்தான் கே பிள்ளைகளை வரமா கொடுப்பார்.... கடவுள் உங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை கூட நீங்க இன்னும் நம்பாம இருக்கீங்க...
வெளிநாடுகள்ல ஒரு கே, தன் பெற்றோருக்காக இந்த அளவு யோசிக்க மாட்டான்.... ஒரு குறிப்பிட்ட வயதோட, தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் உரிமைகள் அந்த இளைஞர்களுக்கு கிடச்சிடுது.... ஆனால், நம்ம நாட்ல அப்டி இல்ல... மகனுக்கு திருமனமாகுற வரைக்கும் பெத்தவங்கள சார்ந்து இளைஞன் வாழனும், திருமணத்துக்கு பிறகு அதே பெத்தவங்க அந்த பிள்ளையை சார்ந்து வாழனும்... இந்த சார்பு நிலைதான் ஒவ்வொரு இளைஞனையும் யோசிக்க வைக்குது... எளிதா தன்னோட பாலீர்ப்பை வெளிக்காட்டிட்டு குடும்பத்த விட்டுட்டு வெளியேறுற துணிவு எங்களுக்கு இல்ல.... அதனால என்னாகுது?.... நீங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு, குழந்தை பெத்துகிட்டு, உங்க பார்வைக்கு சந்தோஷமா வாழ்றத மாதிரி உங்கள சந்தோஷப்படுத்திட்டு, வாழ்க்கை முழுசுக்கும் துன்பத்தை சுமந்துகிட்டு வாழ்றாங்க....
நல்லா யோசிச்சு பாருங்க.... கே மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செஞ்சு வச்சிட்டு, யாரை சந்தோஷமா ஆக்க முயற்சிக்குறீங்க?...
பதின்வயசு முதலாவே கொஞ்சம் கொஞ்சமா தன்னை புரிஞ்சுக்க முடியாம, தான் செய்றத தவறுன்னு நெனச்சுட்டு, தன்னையே தாழ்த்திட்டு வளருற உங்க பையன் இளமை பருவத்துல கிட்டத்தட்ட ஒரு “மனநோயாளி”யாதான் உருவாகுறான்.... ஒரு சாதாரண பாலியல் சம்மந்தமான ஆரோக்யமான விவாதம் கூட நடத்த முடியாத அளவுக்கு ஒரு இடைவெளியை உருவாக்கி வச்சிருக்குற உங்ககிட்ட எப்டி உங்க பையன் தைரியமா தன்னோட பாலீர்ப்பை பற்றி சொல்வான்?... அதனால என்னாகுது தெரியுமா?... நித்தமும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, தாழ்வு மனப்பான்மைல சிக்கி தன்னையே சீரழிச்சுட்டு வாழறான்.... உங்க பையன் எத்தன தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கான்னு உங்களுக்கு தெரியுமா? எத்தன தடவை தற்கொலை எண்ணத்தால குழம்பிருக்கான்னு தெரியுமா?... எல்லாத்துக்கும் உங்களுக்கே தெரியாம நீங்கதான் காரணமா இருக்கிங்கன்னு உங்களுக்கு தெரியுமா?....
கே என்பது மனநோய் இல்லைன்னு முப்பது வருஷத்துக்கு முன்னாடியே அறிவியல் சொல்லிடுச்சு, அது இயற்கையானதுன்னு அறிஞர்கள் சொல்லிட்டாங்க, அது பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டது’ன்னு விஞ்ஞானிகள் சொல்லிட்டாங்க... இவங்க சொல்றத ஏத்துக்கலைனாலும் உங்க பிள்ளைங்க சொல்றதையாவது ஏத்துக்கோங்க....
தன்னோட மகன் கே’ன்னு தெரிஞ்சதும் அவனை அடிச்சு கிழிஞ்ச சட்டையோட தெருவில் விரட்டிய அப்பாவும், மகனோட பாலீர்ப்பு பற்றி எப்டியோ தெரிஞ்சதும் தினமும் அவனை “பொட்டை”னு சொல்லி காயப்படுத்துன அம்மாவும், கௌரவ கொலை பண்ணிடலாமா?னு யோசிக்குற அளவுக்கு போன பெற்றோர்களும் இங்க நான் பார்த்த என்னோட நண்பர்களோட பெற்றோர்கள் தான்... “சமூகம் என்ன நெனக்கிமோ?”னு கவலைப்படுற நீங்க ஒரு நிமிஷம் உங்க பிள்ளை படுற கஷ்டத்த நெனச்சு பார்க்காம ஏன் விட்டுடுறீங்க?.... “வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் உலகமடா”னு கவிஞர் ஒருத்தர் சொன்னதைப்போல, குற்றம் பாக்குறதையே வேலையா வச்சிருக்கிற சுற்றத்தை பத்தி கவலைப்படுற நீங்க, உங்க பிள்ளைக்காக கவலைப்படலாமே?...
தன்னோட மகன் கே’ன்னு தெரிஞ்சதும் பிலிப்’னு ஒரு தந்தை, அவனை வெறுத்து ஒதுக்கியிருந்தா இன்னிக்கு உலகம் வியக்குற “மாவீரன் அலெக்சாண்டர்” உருவாகியிருக்க மாட்டான்.... டாவின்சி ஓவியம், மைக்கேல் ஏஞ்சலோ சிற்பம், அரிஸ்டாட்டில் தத்துவம்’னு எதுவுமே நமக்கு கிடைச்சிருக்காது.... உங்க பிள்ளைக்குள்ளும் அப்படிப்பட்ட திறமைகள் இருந்திருக்கலாம், அதை நீங்களே உங்களோட குழப்ப சிந்தனைகளால மண்ணை போட்டு மூடிட்டிங்க....
இதுபோன்ற விஷயங்கள் எவ்வளவுதான் அறிவியல் பூர்வமா தப்பில்லை’னு புரிஞ்சாலும், அதை உணர்வுப்பூர்வமா ஏத்துக்க முடியாம தவிக்கிறது உண்டு... அப்படிப்பட்ட தவிப்புலதான் நீங்க இருக்கீங்க...
ஆனால், உங்க உணர்வுப்பூர்வமான முடிவு, உங்க பிள்ளையோட வாழ்க்கையை பாதிக்கும்’னு தெரிஞ்ச பிறகும் நீங்க அதை ஏத்துக்க மறுத்தா, அது உங்க பிடிவாதம்....
“கல்யாணம் ஆனா சரி ஆகிடும்”னு ஒரு முட்டாள்த்தனமான யோசனையை நீங்க யோசிக்காதிங்க.... நாற்பது, ஐம்பது வயதிலும் தன்னோட பாலீர்ப்பை மாற்ற முடியாம தவிக்குற எத்தனையோ ஆண்களை நான் பாத்திருக்கேன்... உங்களைப்போலவே அவங்க பெத்தவங்களோட நிர்பந்தத்தால திருமணம் செஞ்சுகிட்டு, இன்னிக்கு நடக்குற ஒருசில கே காதல்களை ஏக்கப்பார்வையோட அவங்க பாக்குறத நான் பார்க்கிறேன்... உங்க பிள்ளைகளும் வாழ்க்கை முழுசும் அப்டி கவலை, ஏக்கம், ஏமாற்றம், வருத்தம்’னு பல குப்பைகளையும் சுமக்குற குப்பை வண்டியா காலம் முழுக்க இருக்கணும்னு நீங்க நெனைக்கிறீங்களா?...
உங்கள நாங்களும், எங்களை நீங்களும் குற்றம் சுமத்திகிட்டே காலம் முழுக்க நிம்மதி இல்லாம வாழறதுக்கு பதிலா, உக்காந்து பேசுங்க... பெத்தவங்களா இல்லாம, ஒரு நண்பனா பேசுங்க.... இவ்வளவு நாள் உங்களுக்காக அவங்களோட ஆசைகளை மறச்சுகிட்டு உங்க பிள்ளைகள் சுமந்த கவலைகள் போதும், இனி அவங்களுக்காக நீங்க உங்க எண்ணங்களை, பிடிவாதத்தை விட்டுக்கொடுங்க.... விட்டுக்கொடுக்குற யாரும் கெட்டுப்போறதில்ல... உங்க பையன் மேல நீங்க நம்பிக்கை வையுங்க, உங்க வளர்ப்பு சரியா இருந்தா அவனோட முடிவும் சரியாத்தான் இருக்கும்னு நம்புங்க.... உங்களுக்காக அவன் வாழ்க்கையை விட்டுக்கொடுக்க முன்வந்து ஒவ்வொரு முறையும் அவன் உயர்ந்திடுறான், இனி நீங்களும் உங்க மகன் மீதான அக்கறைல கொஞ்சமும் குறஞ்சவங்க இல்லன்னு நிரூபிங்க....
இந்த மாற்றம் மட்டும் நடந்தா, நிச்சயம் சமுதாய புரட்சி என்பது சத்தமில்லாமல் முடிந்துவிட்டதாகவே அர்த்தம்.... இத்தகைய புரட்சிகள் இப்படி வீடுகளில் இருந்துதான் தொடங்க வேண்டும்.... இனி தொடங்கும் என்ற நம்பிக்கையோடு அப்பா, அம்மாக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்....

2 comments:

  1. funny nu react panniruken..
    pesavum, kekkavum, padikavum nalla iruku(sorry!) vijay anna..
    nammala pathi veetuku therinja enna agum nu yosichale paithiyam pidikudhu na..
    nan avanga kitta eppadi solven, eppadi react pannuvanga? AYO thalai suthudhu na..
    Valkai pora varai pogattum.. Samalikalam..

    ReplyDelete