தன் அறையின் கதவு சாத்தப்பட்டிருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொண்டு,
மெல்ல கணினியின் முன்பு அமர்ந்தான் செந்தில்... திரையில் “பிளானட் ரோமியோ” என்ற
தளத்தின் முகப்பில் ஆடவன் ஒருவன், மறைக்க வேண்டியதை மறைக்காமல், தன் கைகளால்
கண்களை மூடிய நிழற்படம் பளிச்சிட்டது.... அதை ஒருமுறை கண்களால் அனுபவித்த
செந்தில், தனக்கு வந்திருக்கும் ஒரு குறுந்தகவலை ஆவலுடன் திறந்தான்...
“ஹாய், நான் ராகேஷ்... சேலம்... வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ காதலன்
வேண்டும், செக்ஸ் மட்டுமே உங்கள் நோக்கமாக இருந்தால் இந்த குறுந்தகவலை அழித்துவிடவும்..”
இந்த தகவலை பார்த்ததும் தனக்குள் ஒரு நம்பிக்கையும், புத்துணர்ச்சியும்
உண்டானது செந்திலுக்கு... தன்னுடைய தேவை காதலா? செக்ஸா? என்பதில் இன்னும்
தீர்க்கமான மனநிலையில் செந்தில் இல்லையென்றாலும், உண்மையானவன் கிடைத்தால் அதுவே
போதும் என்ற மனநிலையில் செந்திலும் பதிலளித்தான்...
“நான் செந்தில், சேலம்... நானும் காதலனைத்தான் தேடுறேன்”
சில நொடிகளில் கெண்டை மீனாக துள்ளி விழுந்தது அதற்கு பதில்...
வழக்கமான உரையாடல்கள், விருப்பங்கள் போன்ற சம்பிரதாய பேச்சுகள் இருவருக்கும்
பரஸ்பரம் பிடித்திருந்தது...
“ஓ நைஸ்.... உங்க போட்டோ இருக்கா?... அனுப்புங்க ப்ளீஸ்”
இவனும் மற்றவர்களை போலத்தான் போல என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்
செந்தில்... இப்போதெல்லாம் பல திருமணங்களை முடிவு செய்வதே புகைப்படங்கள் தான்
எனும்போது, இவன் காதலுக்கு புகைப்படம் கேட்பதில் தவறில்லைதான் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு
ஒரு படத்தை அனுப்பினான் செந்தில்....
அதுவரை மின்னல் வேகத்தில் விழுந்த பதில்கள், இப்போது நிமிடங்கள் கடந்தும்
வரவில்லை என்றதும் கொஞ்சம் மனம் நொந்தான் செந்தில்... மனம் படபடத்தது, விரல்களின்
நகங்கள் பற்களுக்கு இரையாகின...
“ப்ளீஸ், ரிப்ளை பண்ணுங்க” மீண்டுமொருமுறை தகவல் அனுப்பினான்....
“சாரி, நாட் இன்ட்ரஸ்டட்”
இது எதிர்பார்த்த க்ளைமாக்ஸ்தான் என்றாலும், அதனை ஏற்க மனம் மறுத்தது... இது
இன்று நேற்று நடப்பது அல்ல... ஏறத்தாழ ஒருசில வருடங்களாக நடக்கும்
ஏமாற்றங்கள்தான்... முயற்சிக்கு எடுத்துக்காட்டாக கஜினியை சொல்வார்கள்
வரலாற்றில்... ஆனால், நிகழ்காலத்தின் செந்தில் தான் அதற்கு வாழும் சாட்சி... ஆரம்ப
நாட்களில் தன்னை புறக்கனிப்பவர்களின் மீது கோபம் வந்தாலும், இப்போது அதை தன்மீதே
சுமத்திக்கொண்டான் செந்தில்... எவ்வளவோ
ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், ஒதுக்குதல் என்று நித்தமும் நடந்தாலும், “இனி
இதுபோன்ற தளங்களுக்கு போகவே கூடாது” என்று தீர்மானமாக இருந்தாலும், மறுநாள்
வழக்கம்போல அந்த ஏமாற்றங்களுக்கு தன்னை தயாற்படுத்திக்கொள்வான்.... அவ்வப்போது
அதிசயமாக நிகழும் சந்திப்புகள் மட்டுமே இந்த ஏமாற்றங்களுக்கு கொஞ்சமேனும் மருந்து
போடுகின்றன...
கோபத்தில் கணினியை ஷட்டவுன் கூட செய்ய விரும்பாமல், நேரடியாக அணைத்தான்....
அறைக்கு வெளியே அம்மா அழைக்கும் குரல் கேட்டது....
“அழகு.... அழகு.... சாப்புட வாடா”
மேலும் எரிச்சலானது செந்திலுக்கு.... கோபத்தில் படாரென்று கதவை திறந்து
அம்மாவை கோபம் கக்கும் வேகத்தில் பார்த்தவன், “எத்தன தடவ உன்கிட்ட சொல்லிருக்கேன்,
அழகுன்னு கூப்புடாதன்னு.... அப்டியே அஜித் மாதிரி என்ன பெத்துட்ட பாரு, அழகு
மிளகு’னு கூப்ட்டுட்டு.... இனி அப்டி கூப்பிட்டா
நான் என்னன்னு கேக்க மாட்டேன்... எனக்கு சாப்பாடும் வேணாம், நீயே தின்னு”
கையில் வைத்திருந்த சட்னி பாத்திரத்தை அருகில் வைத்துவிட்டு, தலையில் அடித்து
சிரித்த அம்மா, “ஐயோ மறந்துட்டேன்டா.. உங்க தாத்தா பேரு வைக்கணும்னு உங்கப்பா வச்ச
பேரு அது... கூப்டே பழகிடுச்சு... உனக்கென்னடா கொறச்சல், நீ அழகன்தாண்டா... என்ன
பெரிய அஜித் குமாரு, எம்புள்ள முன்னாடி நிக்க முடியுமா?” செந்திலின் கன்னங்களை
வருடினாள்....
இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என்றுகூட செந்திலுக்கு புரியவில்லை...
அம்மாவின் எவ்வளவோ சமாதானத்துக்கும் பிடிகொடுக்காமல், அறைக்குள் சென்று
படுத்துவிட்டான்.... “காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு” என்பதைப்போல
அம்மாவுக்கு தான் அழகாக தெரிவதாக நினைத்தான் செந்தில்... முகம் தெரியாத அந்த
சிலநிமிட “காதலன்”கள் மீதுள்ள கோபத்தை கணினியின் மீதும், அம்மாவின் மீதும் மட்டும்தானே
அவனால் காட்டமுடியும்....
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் என்ன?... செந்தில், தனக்கு அழகில்லை என்று
நினைக்கும் நினைப்புதான் காரணம்... “தமிழர்களின் பாரம்பரிய நிறமான கருப்பான தேகம்,
சிறுவயதில் ஏற்பட்ட அம்மை தழும்புகளும், பதின்வயதில் உருவான பருக்களின் வடுக்களும்
முகத்தை ஆங்காங்கே சிதிலமாக்கி வைத்திருந்தது, சராசரியை விட கொஞ்சம் பெரிதான
பரம்பரை மூக்கு, தாடை கொஞ்சம் உள்வாங்கி ஒருவித வித்தியாசமான முக அமைப்பை
கொடுத்தது...” இவைதான் செந்திலை மற்றவர்கள் புறக்கணிக்க காரணமாக இருக்கும் என்பது
அவனுடைய எண்ணம்....
சந்தையில் விற்கும் முக பூச்சுகளில் இவன் வாங்கி பயன்படுத்தாத பிராண்ட்’ஏ
இல்லை.... “பிரபாஸ் வீ கேரில் தழும்புகளை அகற்றுவதையும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து
தன் மூக்கினை வடிவமைப்பதையும்” தன் எதிர்கால ஐந்தாண்டு திட்டத்தில்
சேர்த்திருந்தான் செந்தில்....
இதுமட்டுமில்லாமல்,
“கடலை மாவோட எலுமிச்சம்பழம் கலந்து மூஞ்சில பூசு”
“முட்டை வெள்ளைக்கருவை வெங்காயத்தோட சேர்த்து முகத்துல தேய்”
“சுத்தமான மலைத்தேன் தினமும் முகத்துல பூசி, அரை மணிநேரம் கழித்து கழுவு”
இப்படிப்பட்ட டிப்ஸ்’கள் ஆங்காங்கே யாரால் சொல்லப்பட்டாலும், அந்த நாளே ஆய்வுக்கூட
எலியாக தன்னை மாற்றிக்கொள்வான்.... எதை தின்றால் பித்தம் தெளியும்? என்று எதையோ
தேடி ஓடினான் செந்தில்....
இவ்வளவு யோசிக்கும் நம்ம அழகன்.... சாரி, செந்தில் வேலை பார்ப்பது பிரபல வார
பத்திரிகையான “அகரம்” இதழில்.... “ஜர்னலிசம்” கோர்சில் மிகச்சிறந்த மாணவனாக
வெளியான உடனே, இந்த பணி அவனுக்கு தேடி வந்தது....
முந்தைய இரவின் எல்லா சோகங்களையும் அன்றைய இரவுக்கே காணிக்கையாக்கிய செந்தில்,
விடியும்போது சோகத்தின் சுவடுகளை மறைத்து புதிய மனிதனாக உருமாறினான்.... இதுவும்
அவனுக்கு பழகிய ஒன்றுதான்.... குளித்து முடித்து உடைகளை மாற்றிவிட்டு அவசர அவசரமாக
அம்மா செய்து வைத்திருந்த இட்லியை, நான்கே வாய்களில் பிய்த்துபோட்டு, தன்
விசையுந்தில் ஏறி பறந்தான்... “PRESS” என்று எழுதப்பட்டிருந்த வாகனங்களுக்குரிய சிறு திமிர் கூட இல்லாமல்,
சாமானிய மக்களுள் ஒருவனாய் வேளச்சேரி வீட்டிலிருந்து, தேனாம்பேட்டை பத்திரிகை
அலுவலகத்தை அடைந்தான் செந்தில்....
“அகரம்- தமிழ் வார பத்திரிகைகளின் சிகரம்” சப்- டைட்டிலோடு பிரம்மாண்ட முகப்பு
பலகை அலுவலகத்தை அனைவருக்கும் அடையாளம் காட்டியது.... வாசலில் நின்ற
செக்யூரிட்டியை வாஞ்சையுடன் நலம் விசாரித்துவிட்டு அலுவலகத்துக்குள் சென்றான்...
வாசலில் நின்ற காவலாளியை இயல்பாக விசாரித்த அவனால், உள்ளே தனக்கு மேல் பதவிகளில்
இருந்த தலைமை நிருபர்களிடம் பழகமுடியவில்லை.... அதற்கு காரணம் அவனுடைய
தாழ்வுமனப்பான்மை என்பது அவனுக்கு தெரிந்தாலும், அதை மாற்றிட அவனால்
முடியவில்லை....
அகரம் பத்திரிகையில் செந்திலின் பங்கு அரசியல் பிரிவில்... அரசியல்
பிரிவுக்கான அறையில் அமர்ந்து, முந்தைய நாள் வந்த சில செய்திகளின் “லே அவுட்”களை
பார்வையிட்டு கொண்டிருந்தான்.... சிறிது நேரத்தில் உள்ளே வந்த அவனுடைய தலைமை
நிருபர் ராஜன், வழக்கமான தன் புன்னகையை உதிர்த்துவிட்டு தன் இருக்கையில்
அமர்ந்தார்....
“குட்
மார்னிங் செந்தில், லே அவுட்’லாம் சரியா இருக்கா?... “ சிரித்தார்...
“சும்மா பார்த்துட்டு இருந்தேன் சார்.... “
“ஹ்ம்ம்.... நேத்து எக்ஸ் மினிஸ்டர் இளங்கோ பேட்டில சுவாரசியமே இல்ல....
என்னாச்சு உனக்கு?.... அந்த ஆளு கல்யாண பத்திரிகை கொண்டு போனாவே பவர் பாலிடிக்ஸ்
பேசுவான், நீ போயிட்டு உப்பு சப்பில்லாம பேட்டி எடுத்திட்டு வந்திருக்க.... போன
மாசம் நீ பண்ணின கூடங்குளம் கவரேஜ் பத்தி இப்போவரைக்கும் நம்ம ஆசிரியர் பெருமையா
பேசுறார்.... நம்ம சிகரம் சர்க்குலேஷன் அந்த நாட்கள்ல ரொம்பவே அதிகமாச்சு.....
அப்டி திறமையா இருக்குற நீ பேட்டினு வரும்போது சொதப்பிடுற..... ஒரு நிருபர் கேள்வி
கேட்க தயங்கவே கூடாது... நீ ரொம்ப தயங்குறியாம்.... நீ இன்னும் போகவேண்டிய தூரம்
ரொம்ப இருக்கு.... பயம், தயக்கம், தடுமாற்றம் இதல்லாம் பத்திரிகைகாரனுக்கு இருக்கவே
கூடாது... நீ எழுத்துல காட்டுற திறமைல, ஒரு பர்சன்ட்’ஆவது உன் பேச்சுலையும்
காட்டுனாத்தான் பெரிய அளவுல நீ சாதிக்க முடியும்...”
ராஜனுக்கு செந்தில் மீதான தனிப்பட்ட அக்கறை எப்போதும் உண்டு.... செந்திலின்
திறமையை ஏதோ அவனுக்குள் இருக்கும் உணர்வு தடுப்பதாக அவருக்கு தோன்றியது....
அதனால்தான் இந்த உபாசனை.... சிலநேரங்களில் கடிந்துகொள்வதும் உண்டு.... ஆனால்
எத்தகைய பேச்சுகளுக்கும், உபாசனைகளுக்கும், கண்டிப்புகளுக்கும் செந்திலின் பதில்
“மௌனம்” மட்டுமே....
நேற்றைய பேட்டி தொடங்கும் முன்பு, எக்ஸ் மினிஸ்டர் இளங்கோ செந்திலை பார்த்து,
“நீ சிகரம் பத்திரிகை காரனா?.... ஆச்சரியமா இருக்கு.... “ சொல்லிவிட்டு அருகில்
இருந்த உதவியாளரை பார்த்து, “தகரம் மாதிரி மூஞ்சி இருக்குற இவனுக்கெல்லாம்
சிகரத்துல வேலை கொடுத்திருக்கானுக” இருவரும் சிரித்தனர்.....
இது அரைகுறையாக தன் காதில் கேட்டதும், மனம் நொந்த செந்திலால் அதற்கு மேல் தான்
யோசித்த எந்த கேள்விகளையும் கேட்கமுடியவில்லை... இப்படி செல்லும் இடங்களில் சில
ஏளன பேச்சுகளும், வித்தியாச பார்வைகளும் அவனை நிலைகுழைய வைத்தது.... பலநேரங்களில்
அப்படி ஏளனப்பெச்சு வந்துவிடுமோ? என்கிற அச்சத்தில் ரொம்பவே தயங்கி
நிற்பதுண்டு.... இதை யாரிடமும் சொல்லி வருத்தப்படக்கூட முடியாமல், தனக்குள்
புதைத்துக்கொன்டதன் விளைவுதான் இந்த “மௌனம்”....
அந்த மௌனத்திற்கான பதில் தெரியாமல், தேய்ந்த ரெக்கார்டை போல தினமும் ஆலோசனை
சொல்வதை மட்டும் வழக்கமாக கொண்டிருந்தார் ராஜன்.... வார்த்தைகளால் விவரிக்க
முடியாத இந்த ஆற்றாமைகளை, எழுத்துக்களாக தன் முழு திறமையாலும் பலரையும் அதிசயிக்க
வைத்தான்....
“சரி ஓகே செந்தில், ஒய்.எம்.சி.ஏ கிரவுண்ட்’ல இன்னிக்கு எதிர்க்கட்சி
மாநாடு.... உனக்கு ஏத்த ஏரியாதான்.... அவங்க பேசுறதுல யாரும் நோட் பண்ணாத சின்ன
விஷயத்தை வச்சு பெரிய களேபரம் பண்ணனும்.... போட்டோகிராபரோட இப்பவே கிளம்பு”
“சரி சார்.... நம்ம சதாசிவம் இப்போ ஜெனீவா போயிட்டாரே, எந்த போட்டோகிராபரை
கூட்டிட்டு போறது?”
“அதை பேசிட்டேன்... சினிமா ஏரியா கவர் பண்ற புதுப்பைய்யன் தான் தற்காலிகமா
நம்ம போட்டோகிராபர்..... அவனை கூட்டிட்டு போ”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவை தட்டாமல் அதிரி புதிரியாக உள்ளே
நுழைந்தான் ஒரு இளைஞன்.... மார்கழி மாதத்து வண்ண கோலத்தில் புரண்டதை போல பலவண்ண டீ
ஷர்ட், இடுப்புக்கு கீழே நிராதரவாக “கீழே விழுந்துவிடுமோ?” என்று பார்ப்பவர்கள் அஞ்சிடும் அளவிற்கு தொக்கி நின்ற
பேன்ட் சகிதம் உள்ளே நுழைந்தான்.... கழுத்தில் மாட்டியிருந்த சோனி டிஜிட்டல் கேமரா
மட்டும் இல்லாதிருந்திருந்தால் அவனை பக்கத்தில் நடக்கும் ஜம்போ சர்க்கஸ் கோமாளி
என்று நினைத்திருப்பார் ராஜன்.....
“வாப்பா.... இதான் வர்ற டைமா?.... சினிமா மாதிரி இது தத்து பித்து வேலை
கிடையாது.... சொன்னா சொன்ன நேரத்துக்கு பக்காவா போய் நிக்கணும்.... அதே மாதிரி
உள்ள வர்றதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு வரணும்” வழக்கம்போல வந்தவனுக்கும்
பாடத்தை ராஜன் தொடங்க, கடிகாரத்தில் செந்தில் நேரத்தை பார்ப்பதை கவனித்த ராஜன், “சரி,
கிளம்புங்க.... டிலே ஆகிடக்கூடாது” என்றார்....
ராஜனின் கண்ணோட்டத்தில் கோமாளியாக தெரிந்தவன், செந்திலின் பார்வையில் மன்மதனாக
தெரிந்தான்.... பார்க்க பதின்வயதுகளை தாண்டாதவனை போல இருந்தான்... கண்களில் ஒரு
கழுகு பார்வை... அடர்த்தியான புருவங்கள், முன் நெற்றி வரை அலைபாயும் கேசம்....
பேசும்போது அடிக்கடி தலையை சிலுப்ப, முடிகள் காற்றில் களைந்து மீண்டும் பழையபடி
இணைந்துகொண்டது.... மன்மதனின் சாயலில் கொஞ்சமும் மாறாமல், பேரழகனாக தெரிந்தான்....
அவ்வளவு அழகானவன் என்பதாலோ என்னவோ, செந்தில் அவனை அவ்வளவாக நிமிர்ந்தே பார்க்கவில்லை....
மனதிற்குள் ஒரு தயக்கம், ஒரு பயம்....
ஆனாலும் பணி நிமித்தம் அவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமே, மறுக்க
முடியாது....
செந்திலின் பைக்கில் ஒய்.எம்.சி.ஏ அடைந்தனர் இருவரும்.... ஏற்கனவே மாநாடு
தொடங்கி ஒன்றியம், நகரம், கடந்து மாவட்ட செயலாளர் பேசிக்கொண்டிருந்தார்....
இனிதான் கட்சியின் தலைவர் பேசப்போகிறார்....
இருவரும் பத்திரிகை நிருபர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு பகுதிக்குள்
நுழைவதற்கும், கட்சித்தலைவர் பேச தொடங்கியதற்கும் சரியாக இருந்தது...
தலைவர் எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு, “எங்களை இன்றைக்கு நீங்கள்
அடக்க நினைக்கலாம்.... உங்களையும் தாண்டிய அதிகாரம் ஒன்று இருக்கிறது, அதை நாங்கள்
ஆட்டிப்படைக்கும் நாள் வெகுதூரம் இல்லை” என்ற துவக்க உரை முடிவதற்குள்,
அங்கிருந்து வெளியேறினான் செந்தில்.... ஹட்ச் நாயைப்போல ஒன்றும் புரியாமல் அவன்
பின்னால் சென்றான் புதியவன்.... பைக்கை செந்தில் எடுக்க, ஓடிவந்து ஏறிக்கொண்டான்
போட்டோகிராபர்..... பைக் இப்போது அருகில் இருந்த ஒரு உணவகத்தில் நின்றது....
புகைப்பட நிருபரை பார்த்து தலையசைத்து தன் பின்னால் வருமாறு அழைத்தான்...
இருவரும் ஒரு மேசையில் அமர, வியர்வையை கைக்குட்டையால் துடைத்தான் புதியவன்....
“என்ன சாப்பிடுற?”
“அடேங்கப்பா!... உங்களுக்கு பேச்சு வருமா?.... நீங்க ஊமையோன்னு நினச்சேன்”
“ஹ ஹ ஹா”
“உங்களுக்கு சிரிப்பு கூட வருமா?.... நரசிம்ம ராவ் மாதிரி எதுவும் ப்ராப்ளமா
இருக்குமோன்னு நினச்சேன்”
“ஹ்ம்ம்... அவ்வளவுதான் நினைச்சியா, இன்னும் வேறெதுவும் நினைச்சியா?”
“என்னென்னமோ நினச்சேன், எல்லாமே பொய்யா போச்சு”
“அப்டி என்ன நெனச்ச?”
“கூடங்குளம் விஷயத்த சென்செஷனல் விஷயமா ஆக்குன செந்தில் குமாரோட சேர்ந்து வேலை
பாக்க போறோம், நெறைய பேசி அவர்கிட்ட கத்துக்கணும்னு நெனச்சேன்.... இங்க,
ஒருவார்த்த பேச ஒருவருஷம் காத்திருக்கணும் போல....”
“நீ சொல்ற அளவுக்கல்லாம் நான் ஒன்னும் செஞ்சிடல... ஒரு விஷயத்த எல்லாரும் பாக்குற
மாதிரி இல்லாம, வேற விதத்துல யோசிச்சேன்... நான் யோசிச்சது உண்மையாவும் இருந்ததால
மக்கள் ஏத்துக்கிட்டாங்க”
“சரிதான்.... ஆனாலும், என் வாழ்க்கைல நான் உங்களோட இருந்த இந்த ரெண்டு மணி
நேரத்ததான் வேஸ்டா போக்கிருக்கேன்... தொடர்ந்து ரெண்டு மணி நேரமா இப்டி நான் பேசாம
இதுவரைக்கும் இருந்ததே இல்ல தெரியுமா?... இப்பகூட எனக்கு ரொம்ப பசிக்குறதாலதான்
கொஞ்சமா பேசுறேன்”
சிரித்த செந்தில், “இது கொஞ்சமா?... சரி சரி... உன் பேர் என்ன?”
“இப்போவாச்சும் கேட்டிங்களே, என் பேரு தீபன்... சொந்த ஊர் திருச்சி பக்கம்...
அப்பா, அம்மா ரெண்டு பேரும் டாக்டர்ஸ்... பிடிவாதம் பிடிச்சு நான் விஸ்காம்
படிச்சேன்... பெரிய பத்திரிகையாளரா ஆகணும், ஊரல்லாம் என்ன பத்தி பேசனும்...
அப்புறம்...”
இடைமறித்த செந்தில், “சாப்டுட்டு அப்புறமா பேசலாமே?” என்றான்....
“ஆமா, எனக்கு கூட அதிகமா பேசப்பிடிக்காது”
“ஹ்ம்ம்... பாத்தாலே தெரியுது” செந்தில் சிரிக்க, அவனை பார்த்து தீபனும்
சிரித்தான்... ஒருவழியாக நிறைய பேசிக்கொண்டே அவ்வப்போது கொஞ்சம் சாப்பிட்டும்
முடித்து, அலுவலகத்தை அடைந்தனர் இருவரும்.... இருவரும் இயல்பாக பேசிக்கொண்டு
வருவதை கவனித்த தலைமை நிருபர் ராஜன், “பரவால்லையே, செந்தில் உன்ன மாத்திடுவான்னு
நெனச்சேன்.... நீயே செந்திலை மாத்திட்ட போல... இப்டி இவன் சிரிச்சு பேசி நான்
பார்த்தே ரொம்ப நாள் ஆகுது” தீபனின் தோள் தட்டி சிரித்தார்...
“போங்க சார், ரொம்ப புகழ்றீங்க.... எனக்கு வெக்கம் வெக்கமா வருது” தலையை
குனிந்து காலால் கோலம் போட்டு இடுப்பை ஆட்டி ஆட்டி அவன் சொன்ன தோரணையை பார்த்த
செந்தில் சிரித்துவிட்டான்...
ராஜனுக்கோ தன்னை சின்ன பையன் கிண்டல் செய்வதில் லேசான எரிச்சல் உண்டானது...
“சரி சரி.... வெக்கத்த நாளக்கி ரூம் போட்டு பட்டுக்க, இப்போ போய் போட்டோ எடிட்
பண்ற வேலைய பாரு” சொல்லிவிட்டு இருவரையும் விட்டு விலகி சென்றார் ராஜன்....
அறைக்குள் சென்ற செந்தில் கணினிக்கு முன் அமர்ந்தபிறகு தீபனை கண்டுகொள்ளவே
இல்லை... கண்கள் திரையை பார்க்க, கைகள் தட்டச்சு செய்ய, “ரெண்டு நிமிஷ பேச்ச
இவ்வளவு நேரமாவா டைப் பண்றான்?” என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் தீபன்... ஒரே
இடத்தில் உட்கார முடியாமல் அங்கும் இங்குமாய் அந்த அறைக்குள் நடந்த தூரம் மட்டுமே
கிலோமீட்டர் அளவை தாண்டி இருக்கும்.... ஒருவழியாக தன் கட்டுரையை முடித்துவிட்டு
தீபனின் பக்கம் திரும்பிய செந்திலை பார்த்து, “ஏங்க, அந்த தலைவர் சொன்ன ரெண்டு
வரியையா இவ்வளவு நேரம் டைப் பண்ணிங்க?... முதல்ல டைப்பிங் கத்துக்கோங்க”
என்றான்...
“இந்தா நீயே பாரு” என்று கணினியின் திரையை தீபனின் பக்கம் திருப்ப, அதில் தான்
எடுத்த புகைப்படம் வரிசை கட்டி நிற்க, அதற்கு ஊடே எழுதப்பட்ட கட்டுரையின் அளவு
நான்கு பக்கங்கள்....
“மத்தியில் அங்கம் வகிக்க போகிறது எதிர்க்கட்சி” என்ற தலைப்பில் சுவாரசியமாக,
பல திடிக்கிடும் விதமான விஷயங்களோடு எழுதி இருந்தான் செந்தில்...
“இவ்வளவு விஷயம் அங்க அந்த தலைவர் சொல்லவே இல்லையே?”
“அவர் சொல்லல.... ஆனால் அவர் சொன்னதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள்
இருக்கு... மத்த பத்திரிகைகாரங்க, ஆளுங்கட்சியை திட்டி பேசுனதைதான் பெருசா
எழுதுவாங்க, அது சாதாரணம்... அவர் சொன்ன முதல் இரண்டு வரிகள்தான் எனக்கு முக்கியமா
பட்டுச்சு, அதான் அத்தோட வந்துட்டேன்... இது இந்த ஒருநாள் சம்மந்தப்பட்ட விஷயம்
இல்ல, அஞ்சு வருஷமா நாம கவனிக்குற அரசியல் விஷயம்...”
“அப்பாடி.... இவ்வளவு இருக்கா இதுல?... உங்ககிட்ட நெறைய கத்துக்கணும்”
இன்னும் திகைப்பு அகலாமல் செந்திலையே பார்த்துக்கொண்டிருந்தான் தீபன்....
அன்றைய பணிகள் முடிந்து பிற்பகலில் அவரவரும் வீடுகளுக்கு கிளம்பிவிட்டனர்....
செய்திகளை தொகுத்து கொடுத்தாச்சு, இனி அச்சகத்தின் கையில் தான் முழு பொறுப்பும்
என்பதால் கிளம்பிவிட்டனர்....
வீட்டை அடைந்த செந்திலின் கைகளில் சாவியை கொடுத்தார் அண்டைவீட்டு பெண்மணி....
அம்மா கோவிலுக்கு சென்றிருப்பதாகவும் கூடுதல் தகவலை சொல்லிவிட்டு சென்றார் அந்த
பெண்.... உள்ளே சென்று, உடைகளை மாற்றி புத்துணர்வு அடைந்த செந்திலின் கண்களை
உறுத்தியது கணினி... ஏனோ அந்த நேரத்தில் அவனுக்கு தீபனின் நினைவு வந்தது... என்ன
அழகு! என்ன ஸ்டைலு!... அப்பப்பா.... அவனோடு ஒருநாள் பேசியதே மனதிற்குள்
பட்டாம்பூச்சி கூட்டங்கள் சிறகடிப்பதை போன்ற ஒரு உணர்ச்சியை கொடுத்தது....
அலுவலகத்திலிருந்து விடைபெறும் போது தீபனின் கைகுலுக்கல் தான் எவ்வளவு சுகம்!....
பைக்கில் அவனோடு சென்றபோது அவ்வப்போது உரசிய அவன் கால்கள், இறங்கும்போது என் தோளை
பிடித்த கை.... எல்லாமே ஒருவித இன்ப உணர்வை திகட்ட திகட்ட கொடுத்தது....
அந்த இன்பங்களின் விளைவை வீடு வந்ததும் தான் உணர்கிறான் செந்தில்.... பொதுவாக
அப்படி அழகான ஆண்களிடம் விலகியே நிற்பான் செந்தில்... தான் அழகில்லை என்ற குற்ற
உணர்வு ஒரு காரணம், தவறுதலாக ஆசைகளை வளர்த்துக்கொண்டு பின்பு வீண் வருத்தங்களை
சுமக்க வேண்டுமே! என்கிற அச்சம் இன்னொரு காரணம்.... ஆனால், எல்லாவற்றையும் மீறி
தீபன் தன்னை நெருங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டான் செந்தில்....
தீபன் உருவாக்கிய ஒருவித காமத்தீ இப்போதும் தனக்குள் ஜுவாலைகள் விட்டு
எரிந்துகொண்டிருப்பதை தன்னால் தவிர்க்க முடியவில்லை... சிலபல மனப்போராட்டங்களுக்கு
பிறகு கணினியை ஆன் செய்தான்.... வழக்கமாக தன்னை வெறுப்பேற்றும் அதே “பிளானட்
ரோமியோ” சென்றான்.... பகலில் நடக்கும் எவ்வளவோ கலவரங்களை தாண்டியும், மனைவியை
நள்ளிரவில் சுரண்டும் கணவனைப்போல செந்தில் இப்போதும் பிளானட் ரோமியோவை
சீண்டினான்....
ஆன்லைனில் இருந்த அத்தனை நபர்களின் எதிர்பார்ப்புகளும், “அழகு, சிவப்பு,
கல்லூரி படிப்பு” என்று தனக்கு நேரெதிர் எதிர்பார்ப்புகளாக இருந்தது.... “காதலன்
வேண்டும்” என்று சொல்பவர்களே புகைப்படத்தை பார்த்து பின்னங்கால் பிடரியில் அடிக்க
ஓடும் நிலைமையில், இத்தகைய நபர்களிடம் புகைப்படத்தை கொடுத்து மனம் நோக விரும்பாமல்
வேண்டா வெறுப்பாக ஷட்டவுன் செய்தான்....
படுக்கையில் படுத்து மேலிருந்த காற்றாடி சுழல்வதையே
பார்த்துக்கொண்டிருந்தான்.... கண்கள் கலங்கியது.... கண்களை மூடி எண்ணங்களை
மனத்திரைக்கு கொண்டுவந்தான்... “இவ்வளவு கேவலப்படுறேன்.... முகம் தெரியாத எவனோ
ஒருத்தன் கூட, நீ படுக்கைக்கு தகுதி இல்லாதவன்னு தூக்கி எறியுறான்... அழகா இல்லைனா
ஆசைகள் இருக்க கூடாதா?.... இத்தனை வருஷங்களிலும் சந்தித்த ஆயிரக்கணக்கான
மனிதர்களில் ஒருசிலரை தவிர வேறு யாருக்கும் பிடிக்காதவனா போய்ட்டேன்... அப்படி
ஒருசிலர் கூட ஒருமுறைக்கு பிறகு, அடுத்த முறை அலைபேசியை எடுப்பதில்லை....
செத்துடலாம் போல இருக்கு.... பொறந்தா அந்த தீபன் மாதிரி பொறந்திருக்கணும், இல்லைனா
பொறந்திருக்கவே கூடாது.... பாவப்பட்ட வாழ்க்கை இது...” நெற்றியில் ஏதோ ஊர்வதை போல
உணர்கிறான்... விழித்து பார்த்தால், அம்மா... கோவில் திருநீறை செந்திலின்
நெற்றியில் பூசிவிட்டு, “என்னடா அதுக்குள்ளையும் வந்துட்ட?..... ஏதோ பொதுக்கூட்டம்
போறதா சொன்ன?.... மதியம் சாப்டியா?” கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்....
“ஐயோ அம்மா..... கொஞ்சம் சத்தம் போடாம இரு.... ஏற்கனவே ரொம்ப அசதியா
இருக்கேன்... நீ வேற எரிச்சல கெளப்பாத, தலை வலிக்குது” சத்தம் போட்டு அம்மாவை
அறையை விட்டு வெளியேற வைத்தான்....
வழக்கம் போல அம்மாவிடம்தான் கோபத்தை காட்டினான் இன்றும்.... பலவாறும் தன்
இயலாமைகளையும், ஆற்றாமைகளையும் நினைத்து மனம் நொந்து வருந்திக்கொண்டிருக்க
நிஜமாகவே தலைவலி வந்துவிட்டது செந்திலுக்கு....
“அம்மாவிடம் காபி கேட்கலாம்” என்று படுக்கையை விட்டு எழுந்த அந்த நொடியில்,
கதவை திறந்து உள்ளே வந்தார் அம்மா... கையில் காபி டம்ளர் .... அருகில் இருந்த
மேசையில் வைத்துவிட்டு, “தலை வலிக்குதுன்னு சொன்னில்ல, மாத்திரை எதாச்சும்
போட்டுக்கோடா” சொல்லிவிட்டு செந்தில் அதற்கும் ஏதேனும் திட்டுவானோ என்கிற
தயக்கத்தோடு வெளியேறிவிட்டார் அம்மா....
அம்மா எப்போதும் அம்மாவாகத்தான் இருக்கிறாள், நான்தான் பலநேரம் பிள்ளையாக
இருப்பதில்லை.... காபியை குடித்துவிட்டு, கவலைகளிருந்து தற்காலிக விடைபெற்றிட
உறங்கிப்போனான் செந்தில்....
செய்திகள் அச்சகத்தில் புத்தகமாக தயார் ஆகி, மறுநாள் காலை கடைகளுக்கு
வந்துவிட்டது.... அட்டைப்படத்தில் எதிர்க்கட்சி தலைவர் கைநீட்டி பேசும் தீபன்
எடுத்த படத்துடன் “மத்தியில் அங்கமாக போகிறதா எதிர்க்கட்சி?” என்ற செந்திலின்
கட்டுரை தலைப்புடனும் கடைகளின் வாசலில் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது “அகரம்”
வார இதழ்....
அதைபார்த்த தீபனுக்கோ அதிர்ச்சியும், மகிழ்ச்சியும்....
காலையில் பரபரப்பாக ஓடி வந்து அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த செந்திலை கட்டி
அணைத்தான் தீபன்.... செந்திலுக்கோ சப்த நாடிகளும் ஒடுங்கிப்போகின.... உடலில்
“சுர்ர்”என்று ஏறிய ஒருவித மின்சார பாய்ச்சலில், உடல் சிலிர்த்துப்போனது..... சில
வினாடிகளில் சுதாரித்த செந்தில், “என்னாச்சு தீபன்?” என்றான்...
“என்ன ஆச்சா?.... நான் எடுத்த போட்டோ அட்டைப்படத்துல.... நீங்க எழுதுன செய்தி
இன்னிக்கு தமிழ்நாட்டையே உலுக்குது..... கிரேட்.... கிரேட்..... சூப்பர் சார்”
வார்த்தைகளில் உற்சாகமும் பெருமிதமும் நிறைந்து காணப்பட்டது....
சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த தலைமை நிருபரும் இருவரையும் வெகுவாக
பாராட்ட, ஒரே நாளில் அகரத்தின் மூலம் சிகரத்தை அடைந்த மகிழ்ச்சியில் திகைத்து
போனான் தீபன்.... வழக்கம் போல அத்தனை பாராட்டுகளுக்கும் செந்திலின் பதில் “லேசான
புன்னகை, கனத்த மௌனம்” அவ்வளவுதான்....
மதிய உணவுக்கு பிறகு தீபனை அழைத்த செந்தில், “வேளச்சேரி பக்கத்துல ஒரு மர்டர்
சம்மந்தமா ரிப்போர்ட் எடுக்கணும், போயிட்டு வந்திடலாம்” என்றான்....
“மர்டர் கேஸா?.... அது மாதிரி போலிஸ் கேஸை
குமார் சார்’ல ரிப்போர்ட் எடுப்பாரு, நீங்க எப்டி இதை கவர் பண்ண போறீங்க?”
“இல்ல தீபன், இது அரசியல் கொலை.... கா.ம.க கட்சி உள்கட்சி தேர்தலால நடந்த கொலை
இது... இறந்தவர் முன்னாள் மாவட்ட செயலாளர் வேற.... அதனால இது நம்ம ஏரியா’ல வருது”
“அப்போ ஓகே, கலக்கிடலாம் வாங்க” தன் கேமராவை கையில் எடுத்துக்கொண்டு, தலையை
சிலுப்பியதில் செந்தில் ஒருநிமிடம் ஆடித்தான் போனான்... ஐம்புலன்கள்
மட்டுமல்லாமல், ஆறாவது புலனையும் சேர்த்து அடக்கியவனாக தீபனை அழைத்துக்கொண்டு
வேளச்சேரி விரைந்தான்.....
வழக்கமான விசாரணை, எதிர்பாராத புதிய விஷயங்கள் என கவர் ஸ்டோரிக்கு ஏற்ற
செய்தியாக மனநிறைவாக முடிந்தது அந்த கவரேஜ்....
“ஓகே, போகலாமா தீபன்?”
“எங்க?”
“எங்கயா?... ஆபிஸ்’க்குதான்”
“வேளச்சேரி’லதான் உங்க வீடு இருக்குறதா ஒரு செய்தி வந்துச்சு.... நீங்களும்
கூப்பிடுவீங்கனு நானும் எவ்வளவு நேரம்தான், அது தெரியாத மாதிரியே நடிக்கிறது?....
வாங்க உங்க வீட்டுக்கு போகலாம், நான் கூச்சப்படவல்லாம் மாட்டேன்”
சிரித்த செந்தில், “ஹ்ம்ம்.... இதுக்கு மேலையும் நான் மறுக்க முடியாது, வா
போகலாம்” என்று கூறிவிட்டு தீபனை அழைத்துக்கொண்டு வீட்டை அடைந்தான்....
கதவை திறந்த அம்மா லேசான ஆச்சரியத்துடன் இருவரையும் உள்ளே அழைத்தார்.... விஜய்
டிவியின் “நீயா நானா?” நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருந்தது.... புதிய இடம்
என்று அமைதியாக அமராமல், ஆங்காங்கே எழுந்து சென்று வீட்டை சுற்றிப்பார்த்தான்.....
குடும்ப புகைப்படங்கள், பல்வேறு அரசியல்வாதிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்,
பற்பல அரசியல் சூழல்களில் எடுத்திட்ட படங்கள் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன்
பார்த்து, அது பற்றி விசாரித்தான்....
“இது உதயகுமார் தானே?”
“ஹ்ம்ம்.... இடிந்தகரை’ல எடுத்தது...”
“அப்பப்பா.... எவ்ளோ ஆச்சரியமான போட்டோஸ்’லாம் வச்சிருக்கிங்க.... இப்டி
ஒருத்தரோட நான் போட்டோ எடுத்திருந்தா கூட, அதை பேஸ்புக்’ல போட்டு நூத்து கணக்குல
லைக்ஸ் வாங்கிருப்பேன்.... நீங்க சுத்த வேஸ்ட்” சிரித்துக்கொண்டே செந்திலின்
அறைக்குள் சென்றான்....
அடுக்கிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை அதிசயமாக
பார்த்தான்....
“இவ்வளவையும் படிக்கிறதுக்கா வாங்குனீங்க?”
“படிக்குறதுக்கு இல்லாம, சும்மாவா வாங்குவாங்க?”
“பெரும்பாலும் நான் அப்டிதான் வாங்குவேன்.... எல்லாரும் நல்லா இருக்குன்னு
சொல்ற புக் வாங்குவேன், இதுவரைக்கும் எதையும் படிச்சதில்ல”
தன்னை மறந்து சிரித்தான் செந்தில்...
“சிரிச்சுட்டே இருக்குறதா உத்தேசமா?.... காபி, டீ’லாம் தரமாட்டிங்களா?”
சரியாக அந்த நேரத்தில் கதவை திறந்த அம்மாவின் கையில் இரண்டு கோப்பைகளில்
காபி.... அதிசயமாக பார்த்த தீபன், அதை கையில் வாங்கி மெல்ல குடித்தான்...
“ரொம்ப நல்லா இருக்கும்மா”
என்ன சொல்வதென்று தெரியாமல், அசடு வழிய சிரித்தார் அம்மா....
“இத்தன வருஷத்துல ஒருதடவை கூட இவன் அப்டி சொன்னதில்லப்பா.... எப்பவாச்சும்
எதாவது குறஞ்சிருந்தா அப்போ மட்டும் நக்கீரன் மாதிரி கெடந்து குதிப்பான்”
செந்தில் முறைக்க, அதை கண்டுகொள்ளாமல் அம்மா தீபனுடன் கலகலப்பாக
பேசினார்....தீபன் தன் குடும்பத்தை பற்றியும், பூர்வீகம் பற்றியும் கதை கதையாக
கூறினான்.... அம்மாவும் அதைக்கேட்டு, சில சந்தேகங்களையும், விளக்கங்களையும் என்று
இடைவிடாமல் பேசினர்...
“நாங்க கூட தஞ்சாவூர் தான் பா”
“அப்டியா?... செந்தில் இதுவரை இத சொன்னதே இல்லம்மா”
“அவன் எப்பவும் அப்டிதான்... அவங்க அப்பா மாதிரி...”
“செந்தில் அப்பா எங்க இருக்காங்க?”
“தஞ்சாவூர்’ல இருக்காக.... இப்ப விவசாய நேரம்ல, அதான் அங்க இருக்காங்க....
அறுவடை முடிஞ்சதும் வருவாங்க”
கட்டிலிலிருந்து எழுந்த செந்தில், தீபனின் கைகளை பிடித்து எழுப்பி, “விட்டா
ரெண்டு பேரும் நைட் வரைக்கும் பேசிட்டே இருப்பிங்க, ராஜன் சார் டென்ஷன்
ஆகிடுவார்... கிளம்பு போகலாம்” என்றான்....
அரை மனதுடன் அங்கிருந்து விடைபெற்றான் தீபன்.... பைக்கில் செல்லும்
வழியெல்லாம் செந்திலின் குடும்பத்தை பற்றி ஒவ்வொரு விஷயமாக கேட்டு
தெரிந்துகொண்டான்....
“உங்க வீட்டு பெட்ரூம்ல மைக் எதுவும் வச்சிருக்கிங்களா?”
“இல்லையே.... ஏன்?”
“காபி பத்தி நாம பேசுற அடுத்த நொடி உங்கம்மா காபியோட உள்ள வராங்க, நான்
அதிர்ச்சியாகிட்டேன்”
“இல்ல.... அவங்க எப்பவும் அப்டிதான்.... நான் நெனக்கிறத சரியா புரிஞ்சு அதுபடி
செய்வாங்க”
“நீங்க ரொம்ப லக்கிப்பா.... இவ்வளவு அன்பான குடும்பம், நல்ல வேலை, அதீத
புத்திசாலித்தனம், திறமை..... எல்லாம் இருக்குற முழு மனுஷன் நீங்க.... உங்கள
பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு”
செந்திலால் எதுவும் பேசமுடியவில்லை..... அலுவலகத்தை அடைந்தபிறகும் கூட
செந்திலுக்கு தீபன் சொன்ன வார்த்தைகளே காதில் விடாது ஒலித்துக்கொண்டிருந்தது.....
அன்று கவர் ஸ்டோரியை எழுதும் அளவிற்கு கூட மனம் ஒருநிலையில் இல்லை... வீட்டை
அடைந்துவிட்டான்...
அறைக்குள் சென்றபிறகு இன்று பழைய சிந்தனைகள் எதுவுமே இல்லை, தீபனால் உண்டான
புதுவித சிந்தனைகள் தான்....
நானா லக்கி?... என்னப்பாத்தா அவனுக்கு பொறாமையா இருக்கா?.... நேத்து நைட்
“பொறந்திருந்தா தீபன் மாதிரி பொறந்திருக்கணும், இல்லைனா பொறந்திருக்கவே கூடாது”
என்று யாரை நினைத்து பொறாமையுடன்
புலம்பினேனோ , அப்படிப்பட்ட தீபனிடமிருந்து இப்படி வார்த்தைகளா?... அவன் சொன்னது
உண்மையா?.... எனக்கு ஏன் இதுவரை இப்படி தோன்றியதில்லை.... வெறுப்பை உமிழ்ந்தாலும்
பாசத்தை காட்டும் அம்மா, எழுதும் எல்லா கட்டுரைகளும் பத்திரிகையின் சர்குலேசனை
அதிகமாக்கும் அளவிற்கான திறமை, கைநிறைய சம்பளம்.... அவன் சொன்னதைப்போல எல்லாம்
இருந்தும், ஏன் எனக்குள் வெறுமை மட்டுமே மிஞ்சி இருக்கு?.... முகம் அழகில்லை என்ற
ஒரு காரணத்தால் இருக்கும் அத்தனை விஷயங்களும் இதுநாள் வரை என் கண்ணுக்கு தெரியாமல்
போனதா?.... ஆனாலும் இத்தனை வருட அவமானங்கள் எல்லாம் எனக்கு இந்த அழகால்தானே
நிகழ்ந்தது?... என்னை பார்ப்பவர்களுக்கு என்னை பற்றிய முதல் எண்ணத்தை விதைத்தது
என் முகம்தானே?... அப்படியானால் அதற்கெல்லாம் என்ன பதில்?.... இதுவரை தனக்கு
அழகில்லை என்ற தாழ்வுமனப்பான்மையில் மட்டுமே இருந்த செந்திலுக்குள், முதல் முறையாக
இப்படி ஒரு தன்னம்பிக்கை தொடர்பான கருவை விதைத்தவன் தீபன் என்றுதான்
சொல்லவேண்டும்.... அந்த விதை விருட்சமாக வளர்கிறதா? அல்லது, அரும்பும் முன்னரே
கருகிப்போனதா? என்பதை இனிவரும் காலம்தான் முடிவு செய்யும்...
ஏனோ அன்று கணினியின் பக்கம் அவன் பார்வை செல்லவே இல்லை.... இனி போகவே கூடாது
என்ற தீர்மானமும் தனக்குள் ஏற்படுத்திக்கொண்டான்..... இது வழக்கமாக தினமும்
எடுக்கும் முடிவுதான் என்றாலும், இன்றைக்கு ஒரு மனநிறைவோடு எடுத்திருக்கிறான் அந்த
முடிவை.... வழக்கத்திற்கு மாறாக இன்று அம்மாவுடன் வெகுநேரம் பேசினான்....
சிரித்து, சந்தோஷமான வார்த்தைகள் கூறி அம்மாவையே அசரவைக்கும் அளவிற்கு
பேசினான்....
பேசிவிட்டு சாப்பிட்டு, படுக்க செல்லும்
முன்பு செந்திலை அழைத்த அம்மா,”என்னடா இன்னிக்கு இவ்வளவு சந்தோஷமா
இருக்க?.... அந்த பையன் வந்த நேரம் போல.... அடிக்கடி அவனை வீட்டுக்கு கூட்டிட்டு
வா.... எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குடா” செந்திலின் தலையை கோதிட, மௌனமான புன்னகையை
மட்டுமே அதற்கு பதிலாக கொடுத்துவிட்டு, உள்ளே சென்று நிம்மதியான உறக்கத்தை
அடைந்தான்...
இதுநாள் வரை “என்க்கு டமில் கொஞ்சும் கொஞ்சும் வர்து” என்று செந்தமிழில்
பேசும் மும்பை இறக்குமதி நடிகைகள் தலை கோதுவதையும், உதட்டை சுழிப்பதையும்,
மார்புக்குழி தெரியும் அளவிற்கு குனிந்து நிமிர்வதையும் மட்டுமே புகைப்படமாக
எடுத்துத்தள்ளிய தீபனுக்கு, இந்த அரசியல் செய்திகள் கவரேஜ் ரொம்பவே
பிடித்திருந்தது... அகரம் இதழை புரட்டும்போதே அதில் “செந்தில்குமரன்” கட்டுரையை
தேடி எடுத்து படித்த காலம் போக, இன்றைக்கு அதே செந்திலுடன் ஒன்றாக இணைந்து
பணிபுரிவதில் அவனுக்கு கூடுதல் உற்சாகம்....
அதன்பிறகு இரண்டு வாரங்கள் மிகவும் உற்சாகமாகவும், புதுமையான அனுபவங்களாகவும்
கிடைத்தது தீபனுக்கு.... அரசியல் தொடர்பான புகைப்படங்கள் எந்தந்த தருணங்களில்
எடுக்க வேண்டும்? விளைவுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்கிற பல்வேறு விதமான
யோசனைகளை வாரி வழங்கினான் செந்தில்...
சாதி சங்க ஊர்வலத்தில் நடந்த அடிதடியை “மணவறையில் அமர்ந்திருக்கும் திருமண
ஜோடிகளை” புகைப்படம் எடுப்பது போல க்ளோஸ் அப் ஷாட் வைத்து, பல்வேறு எபக்ட்’கள்
வைத்து நிறுத்தி நிதானமாக புகைப்படம் எடுப்பதை கவனித்த “சாதி சங்க அபிமானி”
ஒருத்தன் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை தீபனை துரத்தி கேமராவை பிடுங்க
பார்த்தான்... அப்போதுதான் அதைப்போன்ற சூழ்நிலைகளில் புகைப்படங்களை எப்படி எடுக்க
வேண்டும்? எப்படி தப்பிக்க வேண்டும்? என்ற விளக்கங்களை கொடுத்தான் செந்தில்....
அவ்வளவு கஷ்டங்களையும், பரபரப்புகளையும் சந்தித்த தீபனுக்கு கொஞ்சம் கூட இந்த அரசியல் இலாகா பிடிக்காமல் போகவில்லை...
காரணம்,அவனுக்கு கிடைத்த “புகழ்”, தன் நண்பர்கள் மத்தியில் கிடைத்த “பாராட்டு”...
சாதி சங்க ஊர்வலத்தில் தான் துரத்தப்பட்டதை பேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு நூற்றி
இருபது லைக்ஸ் வாங்கியதை தனக்கு கிடைத்த பெரிய கௌரவமாக நினைத்தான்.... அதனால்
நித்தமும் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தான் தீபன்....
இந்த இரண்டு வாரங்களில் நிறையவே கற்றுக்கொண்டு விட்டான், செந்திலுடன் இன்னும்
இணக்கமாக ஆகிவிட்டான்....
உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது இருவருடைய இணக்கத்திற்கு இன்னும்
இறுக்கம் கொடுக்கும் அளவிலான ஒரு சந்தர்ப்பத்தை தீபனே உருவாக்கித்தந்தான்.....
“என் ரூம்லேந்து தினமும் ஆபிஸ் வர லேட் ஆகுது.... உங்க வீட்ல நான் தங்கிக்கவா
கொஞ்ச நாள்” என்றான் தீபன்...
செந்திலின் வீட்டிலிருந்து அலுவலகம் வர ஒரு மணி நேரம் ஆகும், சில நேரங்களில்
இரண்டு மணி நேரங்கள் கூட ஆவதுண்டு.... ஆனால், தீபனின் அறையில் இருந்தோ அரை மணி
நேரத்தில் அலுவலகம் வந்துவிடலாம்.... இதை
இருவரும் உணர்வார்கள், ஆனாலும் அதை ஆராய்ச்சி செய்ய விரும்பாத செந்தில், “ஹ்ம்ம்...
ஓகே, எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல” என்றான்...
இப்படி செந்திலின் வாய் சொன்னாலும், மனதிற்குள் ஒரு பயம் இருந்தது.... விலகி
இருக்கும்போதே தீபன் தன்னால் விலக்க முடியாத ஒருவனாக இருக்கும் நிலையில், அருகில்
வந்துவிட்டால் அது தனக்குள் வேறு விதமான ஆசைகளை வளர்த்துவிடும் என்று பயந்தான்...
வீண் ஆசைகள் வளர்வதை தடுக்கவும், ஆசைகளை வளர்த்து பின்னர் அதன் மூலம் இருக்கும்
நட்பையும் இழக்க விரும்பாததும் மட்டுமே அதற்கு காரணம்...
அடுத்த இரண்டாவது நாள், தன் உடமைகளுடன் செந்திலின் வீட்டிற்கு குடி
பெயர்ந்தான் தீபன்...
“எங்க அம்மாவ காணும்?” வீட்டை சுற்றி முற்றி பார்த்த தீபன் புருவத்தை உயர்த்தி
கேட்டான்....
“அவங்க தஞ்சாவூர் போய்ட்டாங்க..... அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம், அதான்
அம்மாவ அனுப்பிட்டேன்”
“உண்மையாவே அதுக்குத்தான் அனுப்பினீங்களா?, இல்ல.....” என்று தீபன் இழுத்த
இழுவைக்கு அர்த்தம் புரியாமல், “என்ன சொல்ற?... நெஜமாதான்” என்றான் செந்தில்...
“சரி, அதுவும் நல்லதுதான்... அம்மா இருந்தா கொஞ்சம் கூச்சம் இருந்திருக்கும்,
இப்போ ப்ரீயா பழகலாம்ல”
“உனக்கு கூச்சமா?... அதுவும், எங்க அம்மாகிட்டயா?.... ரொம்ப உண்மைதான்”
சிரித்தான்....
வீட்டில் ஒரு இடத்தில் அமரவில்லை தீபன்.... எதையோ ஒன்றை துறுதுருப்பாக
செய்துகொண்டே இருந்தான்... குழந்தைகள் இருக்கும் வீட்டைப்போல தீபன் கலைப்பதும்,
அதை செந்தில் மீள் குடியமர்த்தம் செய்வதும் இரண்டு நாள் வாடிக்கையாகி இருந்தது....
தீபன் செய்யும் ஒவ்வொரு செயலையும் தன்னையும் அறியாமல் ரசித்து சிரிப்பான்
செந்தில்... முன்பல்லாம் செந்திலின் முகத்தில் புன்னகை என்பது, “தேர்தல் வரும்போது
மட்டும் வரும் அரசியல்வாதிகளை” போல எப்போதாவது வரும்... ஆனால், தீபனின் வருகைக்கு
பிறகு, “பேஸ்புக்கில் லாகான் செய்யும் இளைஞர்களை போல” அடிக்கடி வருவதற்கு காரணம்
தீபனின் ஏதோ ஒரு செய்கை...
“நீங்க சமைப்பிங்களா?”
“சாப்பிடுவேன்.... சமைக்கவல்லாம் தெரியாது...”
“அம்மாவோட சாப்பாட்டை குறை சொல்ல மட்டும் தெரியும், சமைக்க தெரியாதா?....
சமைக்க கத்துக்கோங்க, நீங்க செஞ்ச சாப்பாட்டை ஒருநாள் சாப்பிட்டு பாருங்க,
அப்போதான் அவங்க சமைக்கிறது உங்களுக்கு அமுதமா தெரியும்...”
பொதுவாக தன் சொந்த விஷயங்களில் அடுத்தவர்கள் தலையிடுவதை செந்தில்
விரும்புவதில்லை.... ஆனால், தீபன் விஷயத்தில் அப்படி இருக்கமுடியவில்லை....
அவனுடன் உண்டான உறவுக்கு பெயர் நட்பா?... தீபன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேத
வாக்காக தெரிகிறது.... அவன் எது சொன்னாலும் கோபம் வருவதில்லை.... எப்போதும் அவன்
அருகில் இருக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது.... எப்போதாவது அவன்
தொடும் அந்த தொடுதலையும், தழுவும் அந்த தழுவல்களுக்காகவும் எப்போதுமே எதிர்பார்த்து
காத்திருந்தான் செந்தில்... “எது நடக்க கூடாது” என்று செந்தில் நினைத்தானோ, அதோ
தன்னை மீறி நடப்பதை தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்தான்....
ஆம், தீபன் மீது செந்திலுக்கு வேறு விதமான உணர்வை உண்டாக்கியது... அது காதலா?
அதீத ஈர்ப்பா? என்பது அவனுக்கு புரியவில்லை... அதிகமான மகிழ்ச்சியும், கொஞ்சம்
பயமும் செந்திலுடன் எப்போதும் இணைந்தே காணப்பட்டது....
“வாங்க போங்க” என்ற நிலை இப்போது “வா, போ” என்று மாறிப்போனது.... அந்த
அளவிற்கு இருவரும் இணக்கம் காட்டினர்.... ஒரே படுக்கையில் படுத்திருக்கும்போது,
தன்னை கட்டுப்படுத்துவதில் செந்தில் சிரமப்பட்டு போனான்.... அப்படி ஒருநாள்
படுக்கையில் படுத்திருந்தனர் இருவரும்... தீபன் சட்டை இல்லாமல் வெற்று உடம்பில்
படுத்திருக்க, பனியனுடன் படுத்திருந்தான் செந்தில்... அவ்வப்போது தன்னை மீறிய
பார்வை தீபனின் உடம்பில் படுவதை தடுக்க முடியாமல் தவித்தான் செந்தில்....
“நீ யாரையும் லவ் பண்றியா தீபன்?”
“என்ன திடீர் சந்தேகம்?... நான் சந்தோஷமா இருக்குறத பார்த்துமா, நான் லவ்
பண்றேன்னு உனக்கு தோணுது?”
“இல்ல... அப்புறம் எப்படி....?” தயங்கி நிறுத்தினான்....
“என்ன கேக்குற?.... தயங்காம கேளு...” செந்திலின் அருகில் வந்து அமர்ந்தான்....
“இல்ல... மத்த பீலிங்க்ஸ்’லாம் எப்டி அப்புறம் கண்ட்ரோல் பண்ற?” மெல்ல மென்று
விழுங்கியவாறு கேட்டான்.... அதைக்கேட்டு பலமாக சிரித்த தீபன், “இன்னும் நான் நெறைய
சாதிக்கணும்... பேர், புகழ்னு சம்பாதிக்கணும்.... அதுக்கு இதுதான் வயசு... லவ்
பண்றது எப்போ வேணாலும் பண்ணிக்கலாம்... நம்ம சாதிச்ச பின்னாடி லவ் தானா தேடி
வரும்” என்றான்...
“லவ் ஓகே... மத்த பீலிங்க்ஸ்?” இன்னும் குழப்பத்தை போக்க முடியாத செந்தில்
அடுத்த கேள்வியை கேட்டான்...
“அஞ்சு நிமிஷம் பலான வீடியோ, அஞ்சு நிமிஷம் பாத்ரூம்.... ஒரு நாளைக்கு அந்த
பத்து நிமிஷம் மட்டும்தான் என்னோட ‘அந்த’ பீலிங்க்ஸ்’க்கு ஒதுக்குவேன்... அதை
தாண்டி நாம என்ஜாய் பண்றதுக்கும், கத்துக்கர்றதுக்கும், பாக்குறதுக்கும் உலகத்துல
நெறைய இருக்கு... ஆறடி உடம்புல, அரையடி உறுப்புக்கு அந்த நேரம் ஒதுக்குனா போதும்”
“அரையடியா?” என்று நீங்கள் குதர்க்கமாக யோசிப்பதைப்போல செந்தில்
யோசிக்கவில்லை.... அவன் யோசித்ததெல்லாம் தம்மைவிட இளையவன் எப்படி இதைப்போன்ற
உணர்வுகளை எளிதாக கையாளுகிறான்? என்றுதான்... உடனே எழுந்து சென்று பாத்ரூம்
போய்விட்டு, ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்த செந்திலை மென்மையான சிரிப்புடன்
பார்த்தான் தீபன்... அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருப்பதாக
தோன்றினாலும், அதில் ஒன்றை கூட தன்னால் புரிந்துகொள்ள முடியாத இயலாமையை எண்ணி
நொந்துகொண்டான்.....
மறுநாள் காலை வழக்கம் போல அலுவலகம் சென்றனர் இருவரும், வழக்கத்திற்கு மாறாக
இன்று தீபன் பைக்கை ஓட்டினான்.... எதிர்பாராத விதமாக அன்று சிக்னலில்
மடக்கப்பட்டது அவர்கள் சென்ற பைக்.... காரணம், பைக் ஓட்டிய தீபன், பள்ளி மாணவன் சாயலில் இருந்ததாகக்கூட
இருக்கலாம்....
“எதுக்கு சார் நிப்பாட்டுறீங்க?... நாங்க பிரஸ் தெரியுமா?” போக்குவரத்து காவலரை
நோக்கி முன்னேறினான் தீபன்....
“பிரின்ட்டிங் ப்ரெஸ்’ல வேலை பாக்குறியா?”
“சார், நாங்க அகரம் பத்திரிகை நிருபர்கள்” தன் பையில் இருந்த அடையாள அட்டையை
எடுத்து காவலர் முன் நீட்டினான் தீபன்....
“ஓஹோ.... சரி, உன் லைசன்ஸ் எடு”
“இந்த வாரம், சிறந்த காவலர்’னு ஒரு பகுதி போடப்போறோம், அதுக்கு உங்க பேஸ்
ரொம்ப பொருத்தமா இருக்கும்” சொல்லிவிட்டு தன் கேமராவால் அவரை படம் எடுக்க முயல,
அதை தடுத்த காவலர், “முதல்ல லைசன்ஸ் எடு, அப்புறம் போட்டோ
எடுக்கலாம்”பிடிகொடுக்காமல் பேசினார்...
தீபனின் அருகே வந்த செந்தில், “உன் லைசன்ஸ் எடுத்துதான் காட்டுனா என்ன?”
என்றான்...
“இருந்தா காட்டவா மாட்டேன்!... இன்னும் எடுக்கலப்பா” காதருகே மெல்ல கூலாக
கூறினான்...
“என்ன இருக்கா? இல்லையா?... இல்லைனா, ஐந்நூறு ரூபாய் பைன் கட்டுங்க”
சொல்லிவிட்டு தன் கையில் வைத்திருந்த பேப்பரில் வண்டியின் எண்ணை நோட்டமிட தொடங்கினார்....
“சார், இப்போ எங்களுக்கு லேட் ஆகுது, சி.எம் ஸ்பெஷல் இன்டர்வியூ எடுக்க
போறோம்... எதனால லேட்’னு அவங்க கேட்டா, காத்தமுத்துனு ஒரு ட்ராபிக் போலிஸ் லேட்
பண்ணிட்டார்னு அவங்ககிட்டே சொல்றோம்” முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு
கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டான், ஆனால் செந்திலுக்குத்தான் சிரிப்பை அடக்க
சிரமமாக இருந்தது...
“என்கிட்டயே கதை விடுறியா?.... சி.எம். அரசு விழாவுக்காக மதுரை
போயிருக்காங்க.... நீ என்னதான் பிட் போட்டாலும், நான் அசரமாட்டேன்”
தலையில் கைவைத்த தீபன், “சார், மதுரை போனவங்க அவசர வேலையா ஒரு மணி நேரத்துக்கு
முன்னாடிதான் ப்ளைட்’ல சென்னை வந்தாங்க... அதான் அவசர மீட்டிங்காம்.... எங்க மேல
நம்பிக்கை இல்லைனா தலைமை செயலகத்துக்கு போன் பண்ணி தறோம், பேசுறீங்களா?” என்று
சொல்லிவிட்டு, செந்திலை பார்த்து, “செந்தில், அந்த செகரட்ரியேட் நம்பர் போட்டு
குடுங்க” என்றான்... என்ன செய்வதென்று தெரியாமல் செந்திலும், தன் அலைபேசியை தடவ,
எச்சிலை விழுங்கிய காவலர், “சரி சரி... கிளம்புங்க.... என்னைய எதுவும் போட்டு
கொடுத்துறாதிங்க” என்று இருவரையும் வழியனுப்பி வைத்தார்...
பைக்கில் செல்லும்போது சிரித்த தீபன், “இப்டியா பயப்படுவ?... இதல்லாம்
ஹாண்டில் பண்ண கத்துக்கணும்.... உன் எழுத்துல மட்டும் கான்பிடன்ஸ் இருந்தா போதாது,
வாழ்க்கைலையும் இருக்கணும்.... தைரியமா பேசு எல்லார்கிட்டயும், ஒதுங்கி போயி
நிக்காத....” நித்தமும் ராஜன் சொல்லும் அதே புத்திமதி.... ஆனால், தீபனிடம்
கேட்டபோது மட்டும் அது “வாய்க்குள் போட்ட நெல்லை அல்வா” போல விரைவாக மனதை
அடைந்துவிட்டது....
“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
வள்ளுவனுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்திருக்கும் போல...
அலுவலகத்தை அடைந்தனர், இருவருக்கும் முன்பே வந்துவிட்டார் ராஜன்....
“தீபனோட சேர்ந்த பின்னாடி நீயும் லேட்டா வர ஆரமிச்சுட்டியா செந்தில்” அதை
கடிதலா, இயல்பான கேள்வியா? என்பதை செந்திலால் புரிந்துகொள்ள முடியவில்லை....
வழக்கமான மௌனத்திற்கு மாற்றாக செந்தில் இன்று வாயை திறந்தான், “சி.எம் போறாங்கன்னு
ட்ராபிக் டைவர்ட் பண்ணிட்டாங்க சார்” கொஞ்சமும் யோசிக்காமல் அள்ளிவிட்டான்
செந்தில்...
“சி.எம்மா? அவங்க மதுரைல இருக்காங்களே?” போக்குவரத்து காவலருக்கு தெரிந்தது
தலைமை நிருபருக்கு தெரியாமலா இருக்கும்?... என்ன சொல்லலாம்? என்று தீபன்
யோசிக்கும் முன்பு செந்தில் பதிலளித்தான், “நம்ம சி.எம் இல்ல சார், மிசோரம்
சி.எம்... ஏதோ கோவிலுக்கு வந்தாங்களாம்”....
“ஓஹோ.... சரி சரி” அப்பாவியாக தலையசைத்தார் ராஜன்.... அதிர்ந்துபோய் செந்திலை
பார்த்தான் தீபன்... லேசாக சிரித்து செந்தில் கண்ணடிக்க, அடக்க மாட்டாமல்
சிரித்துவிட்டான் தீபன்...
நடக்கும் எதையும் புரிந்துகொள்ளாத அப்பாவியாக ராஜன், “செந்தில், இன்னிக்கும்
எக்ஸ் மினிஸ்டர் இளங்கோவை நீங்க பேட்டி எடுக்கணும்” என்றார்...
“வாராவாரம் நம்ம பத்திரிகைல தலையங்கம் வருதோ இல்லையோ, அந்தாளு பேட்டி மட்டும்
தவறாம வந்திடுது” தீபனின் இந்த கிண்டலை கண்டுகொள்ளாத ராஜன், செந்திலை பார்த்து,
“அவரு கட்சி மாறப்போறதா நியூஸ் வந்திருக்கு.... பேச்சுவார்த்தை முடிஞ்சு,
செட்டில்மன்ட் கூட முடிஞ்சாச்சாம்.... அதான், இன்னிக்கே அவர் பேட்டி எடுக்கணும்”
என்றார்....
மெல்ல தயங்கிய செந்தில், “சார், நீங்க பேட்டி எடுக்க கூடாதா?” என்றான்...
“இல்ல செந்தில்.... இளங்கோ மாதிரி ஆளுங்ககிட்ட நீ பேட்டி எடுத்துதான் நெறைய
கத்துக்கணும்... நெறைய பேசுவாரே தவிர, பிரச்சினை இல்லாத ஆள் அவரு” தோளை தட்டி
தன்னம்பிக்கை கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார் ராஜன்....
இன்னும் எதையோ யோசித்துக்கொண்டே இருக்கும் செந்திலை பார்த்த தீபன், “என்ன
தயங்குற?.... இளங்கோ கிட்டதான் நீ பலதடவை பேட்டி எடுத்திருக்கியே?.... உனக்கு அந்த
ஆளுதான் சோதனைக்கூட எலியாவே மாறிட்டாரே?” சிரித்தான்....
அதற்கும் மௌனமாகவே இருந்த செந்திலின் அருகே சென்று அமர்ந்த தீபன், “என்னப்பா
ப்ராப்ளம்?.... இவ்ளோ யோசிக்கிறியே?... ஒருவேள உன் குடும்பத்துக்கும் அவர்
குடும்பத்துக்கும் எதுவும் பரம்பரை விரோதமா?... நீ இவ்ளோ யோசிக்குறத பாத்தா, பெரிய
பிளாஷ்பேக் இருக்கும் போல?” என்றான்...
இதை கேட்டு சிரித்துவிட்டான் செந்தில், ஆனாலும் அந்த சிரிப்பில் முழு உயிர்
இல்லை...
தீபனிடம் அதை கூறலாம், அவனை விட்டால் வேறு யாரிடமும் கூறமுடியாது என்று
நினைத்த செந்தில், தன் தாழ்வுமனப்பான்மை பற்றி கூறினான், முன்பு நடந்த பேட்டியில்
இளங்கோவால் தான் அவமானப்படுத்த பட்டதையும் கூறினான்...
எல்லாவற்றையும் கேட்ட தீபன், பலமாக சிரித்தான்...
“லூஸா செந்தில் நீ?... அழகுன்றது உன் முகத்துல இல்ல, உன் மனசுல இருக்கு.... நீ
அழகா இல்லைன்னு யார் சொன்னது?... நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா ஒத்த
கால்லையாவது நின்னு உன்னைத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன்.... எது அழகு?னு
அவங்கவங்களுக்கு தனிப்பட கண்ணோட்டம் இருக்கும்... முதல்ல நீ அழகில்லை’னு நெனக்கிற
எண்ணத்த மாத்திக்க.... எப்பவும் சிரிச்சு பேசு, தைரியமா பேசு... ஓப்ரா வின்ப்ரே
பத்தி உனக்கு நான் சொல்லி தெரியணும்னு இல்ல.... மீடியா சைட் அவங்க போனப்போ, அவங்க
முகத்த பாத்தும், நெறத்த பாத்தும் அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பினாங்க....
இன்னிக்கு உலகத்துல இருக்குற அத்தனை பெரிய ஆளுங்களும், ஒரு தடவையாவது தன்னை ஓப்ரா
பேட்டி எடுக்கனும்ன்ற அளவுக்கு சாதிச்சு காட்டி இருக்காங்க.... அப்போ பலராலும்
அசிங்கமா தெரிஞ்ச ஓப்ரா இன்னிக்கு உலகத்துலேயே நம்பர் ஒன் மீடியா ஆளு....
நமக்குள்ள இருக்குற திறமை தான் உண்மையான அழகு....”
எப்போதும் குழந்தைபோல பேசும் தீபனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள்
வந்ததை ஆச்சரியம் விலகாமல் பார்த்தான் செந்தில்.... செந்திலை நிற்க வைத்து, அவன்
ஹேர் ஸ்டைலை மாற்றினான், உடை அணியும் விதத்தை மாற்றினான்....
“இப்போ சிரிச்சபடியே கண்ணாடிய பாரு” என்று கண்ணாடியை செந்திலின் முன்
காட்டினான் தீபன்....
ஆம்!.... உண்மையாகவே ஏதோ மாற்றம் தெரிகிறது... தான் அழகாக தெரிவதாக செந்தில்
நம்பியதன் விளைவாக, அழகனாகவே மாறிப்போனான் செந்தில்....
தீபன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் செந்திலின் மனதில் ஆழமாக பதிந்தது....
அதுவும், “நான் பொண்ணா பொறந்திருந்தா ஒன்னத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன்” இந்த
ஒரு வார்த்தை போதும், காலம் முழுக்க தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கு.... அவ்வளவு அழகா
நான்?... அதுவும் தீபனை போன்ற ஒரு அழகனின் வார்த்தைகளாக இது வருவதில், இன்னும்
அதிக உற்சாகம் தனக்குள் மிளிர்ந்தது....
செந்தில் நடந்து சென்ற விதம், பைக் ஓட்டிய ஸ்டைல், மினிஸ்டர் வீட்டில்
நடந்துகொண்ட விதம், பேட்டி எடுத்த விதம் என்று எல்லாமே இன்றைக்கு தன்னம்பிக்கை
மிகுந்து காணப்பட்டது.... தீபன் அதிசயிக்கும் அளவிலான மாற்றங்களை செந்தில் ஒரே
நாளில் தனக்குள் உருவாக்கிக்கொண்டான்.... ஆனால், இது ஒருநாளைய மாற்றம் இல்லை,
தீபனின் வருகைக்கு பின்பு இந்த இருபது நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக உருவான
மாற்றத்தின் வெளிப்பாடாக இன்றைய மாற்றம் உருவானது.....
பேட்டி எடுத்துவிட்டு அலுவலகத்தை அடைந்தபோது, வாசலில் நின்ற ராஜன் செந்திலை
கட்டி அணைத்தார்....
“கிரேட் டா கண்ணா.... கலக்கிட்ட....” வழக்கத்திற்கு மாறாக பாராட்டு மழையில்
நனையவைத்தார் செந்திலை...
“என்ன சார் ஆச்சு?.... என்ன விஷயம்?” குழப்பத்தில் கேட்டான் செந்தில்...
“இளங்கோவ கேள்விகளால பிச்சு எடுத்துட்டியாம்.... அந்தாளு போன் பண்ணி,
புலம்பறான்.... இனிமே உன்ன பேட்டிக்கே அனுப்ப வேணாம்னு சொல்றான், அந்த அளவுக்கு
பயந்து கெடக்குறான்.... ஒரு பத்திரிகையாளன் இந்த அளவுக்கு ஒரு பிரபலத்துகிட்ட
கிலிய உண்டாக்குறான்னா, அதுதான் அவன் திறம... மூணு வருஷமா உன்கிட்ட நான் சொன்னது
இதான்... இப்பதான் அதை புரிஞ்சுகிட்டு நடந்திருக்க” சிலாகித்து பேசினார் ராஜன்....
மூன்று வருடமல்ல, முப்பது வருடங்கள் ராஜன் சொல்லி இருந்தாலும் செந்தில் இப்படி
மாறியிருக்க மாட்டான்... இந்த மாற்றங்களுக்கு காரணம் தீபன் என்பதை அவன் மட்டுமே
அறிவான்....
தனக்குள் உண்டாகியிருக்கும் மாற்றங்களை செந்தில் உணர்கிறான், மற்றவர்களுக்கும்
உணர்த்தி வருகிறான்.... இதுநாள் வரை தீபனின் மீதிருந்த உறவுக்கு பெயர் தெரியாமல்
இருந்தான், இன்று முடிவே செய்துவிட்டான் “இதுதான் காதல்”.... எப்போது, எங்கு,
யாருடன், எதனால், எப்படி காதல் வரும்? என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டதுதான்
காதல்... தீபனுடனான தன் காதல் எப்போது தனக்குள் துளிர்விட்டது என்பதை அவன்
உணரவில்லை, அவன் அறியாமல் அந்த காதல் விருட்சமாக வளர்ந்திருப்பதை காணும்போதுதான்
அதை செந்திலே உணர்கிறான்.....
வாழ்க்கை முழுவதும் தீபனை போல ஒருவன் தன்னோடு இருந்துவிட்டால், வாழ்க்கைக்கே
புது அர்த்தமும், சிறப்பும் கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.... தீபனை
தான் காதலித்திட அவனுடைய அழகு, குணம், நல்ல எண்ணங்கள், தன்னம்பிக்கை என்று எல்லாமே
காரணமாக இருக்கலாம்.... ஆனால், எந்த விதத்தில் தன்னுடன் தீபன் காதல் கொள்வான்?,
அதற்கு எந்த விதத்தில் தான் தகுதிகளை பெற்றிருக்கிறேன்? என்பதை செந்தில்
புரிந்துகொள்ளவில்லை... தீபனுக்கு பிடிக்கும் வகையில் தான் இருப்பேனா? என்ற
சந்தேகமும் அவன் மனதிற்குள் எழுந்தது....
பிடிக்காமல் இருந்திருந்தால், “நான் மட்டும் பொண்ணா இருந்திருந்தா உன்னைத்தான்
கல்யாணம் பன்னிருப்பேன்” இந்த வார்த்தைகளை எப்படி சொல்லி இருப்பான்?...
அப்படியானால், அவனுக்கு தன்னை பிடித்திருக்கத்தானே வேண்டும்....
“பெண்ணாக பிறந்திருந்தால்...” என்று மட்டுமே சொல்லி இருக்கிறான், அதனால், இதை
வேறு விதமாக தான் நினைப்பதும் சரியாக இருக்காது என்கிற எண்ணமும் அவனுக்குள் எழாமல்
இல்லை.... இதில் அவசரப்படக்கூடாது.... காதலை சொல்லி நட்பை இழந்திட கூடாது என்பதில்
செந்தில் தீர்மானமாக இருந்தான்...
அன்று மாலை வழக்கம்போல வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்....
“நீ ஏன் விஷுவல் மீடியா’ல ட்ரை பண்ண கூடாது... சன், விஜய் டீவின்னு முயற்சி
பண்ணலாம்ல?”
“ஐயோ... அது எனக்கு சரியா வராது... எழுத்துதான் என் ஆயுதம், பேச்சுல நான்
பூஜ்யம்”
“இன்னும் நீ திருந்தலையா?.... எழுத்தோ, பேச்சோ உன் ஆயுதம் கிடையாது... உன் எண்ணம்
தான் உன் ஆயுதம்... அதுதான் எழுத்தாவும், பேச்சாவும் வெளிவருது.... பூஜ்யம்’னு
சொன்ன பல விஷயங்கள், ராஜ்யத்தை பிடிச்சதுதான் வரலாறு”
“நீ எப்போ இப்டிலாம் பேச கத்துகிட்ட?”
“ஹ்ம்ம்.... ஆறு மாசம் மூணு கோர்ஸ் போயி கத்துகிட்டேன்....அட லூசு! நான் சொன்ன
பல விஷயங்கள் நீ எழுதினதுதான்.... ஒழுங்கா நாளைக்கே டிவிக்கு அப்ளை பண்ணு”
“நீ சொன்னதுக்கு பிறகு அப்பீலே இல்ல.... பண்ணிடுறேன்”
“ஹ்ம்ம்... நாளக்கி நான் ஊருக்கு போறேன், ரிலேசன் கல்யாணம்.... நாலு நாள்
கழிச்சுதான் வருவேன், அதுக்குள்ள நீ விஷுவல் மீடியா பக்கம் அடி எடுத்து வச்சிடனும்”
“நாளக்கி போறியா?... சொல்லவே இல்ல?” செந்திலின் வார்த்தைகளில் ஏமாற்றம்
தெரிந்தது...
“அதான் இப்ப சொல்றேனே, முன்னமே சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப?” சிரித்துவிட்டு
தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தான் தீபன்....
நான்கு நாட்கள்!!!... அப்பப்பா !...
எப்படி அவன் இல்லாமல் இருக்க போகிறேன்?.... அவன் அருகில் இருக்கும்வரை அவன்
இருப்பின் இனிமேல தெரிந்ததைவிட,
“அவன் போகப்போகிறான்” என்று தெரிந்த பின்பு, அந்த தவிப்பு கொடுமையாக இருக்கிறது.... அம்மா போய் பத்து நாட்கள் ஆகியும் ஒரு கவலையும் தோன்றாத செந்திலுக்கு, போகப்போவதாக தீபன் சொன்ன வார்த்தை கவலைகளை உண்டாக்குவதை அவனால் கூட ஏற்கத்தான் முடியவில்லை....
“அவன் போகப்போகிறான்” என்று தெரிந்த பின்பு, அந்த தவிப்பு கொடுமையாக இருக்கிறது.... அம்மா போய் பத்து நாட்கள் ஆகியும் ஒரு கவலையும் தோன்றாத செந்திலுக்கு, போகப்போவதாக தீபன் சொன்ன வார்த்தை கவலைகளை உண்டாக்குவதை அவனால் கூட ஏற்கத்தான் முடியவில்லை....
மறுநாள் அவனை பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பும்போது மனம் சொல்ல முடியாத
துயரத்தில் ஆழ்ந்ததை செந்தில் மட்டுமே அறிவான்.....
இந்த சிறு தற்காலிக பிரிவையே தாங்கிக்கொள்ள முடியாத தன்னால், ஒருவேளை தீபனுடன்
நிரந்தர பிரிவு ஏற்பட்டால்?.... நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.... மரணத்தின்
வலியை அப்படித்தான் உணரமுடியும், அந்த அளவிற்கு அது ஈடு செய்ய முடியாத
இழப்பாகத்தான் இருக்கும் அந்த பிரிவு...
வீட்டிற்கு வந்த செந்திலால் சாப்பிட முடியவில்லை, தொலைக்காட்சியில்
ஓடிக்கொண்டிருந்த சன் டிவியின் சீரியலை கண்கள் பார்க்கிறது, ஆனால் மனம் ஏதோ
சிந்தனையில் தன்னை வருத்திக்கொண்டிருக்கிறது....
வழக்கமான சீரியல் அழுகை சத்தம் தன் காதிற்கு எட்ட, கடுப்பில் தொலைக்காட்சியை
அணைத்துவிட்டு படுக்கைக்கு வந்தான்...
வழக்கமாக அவன் தலைவைத்து படுக்கும் தலையணையை எடுத்து கட்டி அணைத்தபடியே
படுத்தான், நினைவுகள் ஒவ்வொன்றும் நிழலாடி கொண்டிருந்தது....
இந்த தற்காலிக பிரிவுக்கு இவ்வளவு பெரிய விளைவை செந்தில் விரும்பவே இல்லை....
தன் மீதே எரிச்சல் கொண்டு, கண்களை இறுக்க மூடி நித்திரையை தன் வசமாக்க
முயன்றான், ஒருவழியாக வசமாக்கி வென்றான்...
அடுத்தநாள் காலை வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் அலுவலகத்தை அடைந்தான்
செந்தில்...
“ஏன் செந்தில் ஒரு மாதுரி இருக்க?... உடம்பு எதுவும் சரியில்லையா?”
அனுசரணையுடன் கேட்டார் ராஜன்....
படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்த செந்தில், “இல்ல சார், லேசா
தலைவலி.... அவ்வளவுதான்... “ என்றான்....
“அந்த பையன் இருந்தா எதாவது துறுதுறு’னு செஞ்சு கலகலப்பாக்கிடுவான், அவனும்
இல்லாததால ஆபிஸ் வெறிச்சோடி கெடக்கு”
சொல்லிவிட்டு சிகரட் பிடிப்பதற்கு அறையை விட்டு வெளியே சென்றார்.... உண்மைதான்,
அவன் இல்லாததன் வெறுமையை அந்த அறை கூட இன்று அனுபவிக்கிறது.... எப்போதும் அவன்
மீது எரிந்து விழுந்திடும், ராஜன் சாருக்கே அவனுடைய இல்லாமை, “வெறுமையாக”
தெரியும்போது தனக்குள் உண்டான சோகமும், வலியும் நியாயம்தான் என்பதை உணர்ந்தான்
செந்தில்...
அந்த நேரத்தில் அவன் அலைபேசி சிணுங்க, தீபனாக இருக்குமோ? என்கிற ஆர்வத்தில்,
அலைபேசி திரையை பார்த்த செந்திலுக்கு ஏமாற்றம்... ஏதோ புது எண்ணிலிருந்து
அழைப்பு....
“வணக்கம்... யார் பேசுறது?”
“ஹலோ... நான் ராகேஷ் பேசுறேன்” எதிர்முனையில் ஒருவித வசீகர குரல் ஒலித்தது....
“எந்த ராகேஷ்?... யார் வேணும் உங்களுக்கு?”
“நீங்க செந்தில் தானே?”
“ஆமா”
“நான் ராகேஷ், பிளானட் ரோமியோ சைட்’ல போட்டோ அனுப்புனீங்களே?” செந்திலுக்கு
நினைவு வந்தது.... கடைசியாக தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி, கடுமையான
மனத்துயருக்கு ஆழ்த்தியவன்.... அவன் எதற்காக இப்போது பேசனும்?
“ஹ்ம்ம்... என் நம்பர் எப்டி உங்களுக்கு கிடச்சுது?”
“போட்டோ அனுப்பும்போது நீங்கதான் அனுப்புனீங்க” ஆம்!... அங்கு செந்தில் தன்
அலைபேசி எண்ணை கொடுத்திருக்காவிட்டால்தான் அது ஆச்சரியம்....
“சொல்லுங்க... இப்ப எதுக்காக கால் பண்ணிங்க?” செந்திலின் வார்த்தைகளில்
அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது....
“நீங்க என்மேல கோபத்துல இருப்பிங்கன்னு எனக்கு தெரியும்... அன்னிக்கு நான்
முகத்துல அடிச்சாப்ல உங்கள பிடிக்கலன்னு சொன்னது தப்புதான்... ரொம்ப சாரி”
“பரவால்ல.... அதை விடுங்க.... நான் அதை பெருசா கண்டுக்கல... ”
“எனக்கு அப்போ அந்த தப்பு புரியல, இப்பதான் புரியுது....”
“ஐயோ அந்த பேச்சை விடுங்க....”
“ஓகே, இப்போ சொல்றேன், உங்கள எனக்கு பிடிச்சிருக்கு” செந்திலுக்கோ இது பெரிய
அதிர்ச்சியாக இருந்தது.... அப்போ பிடிக்காத தான் எப்படி இப்போ பிடித்தவனாக ஆனான்?
என்பதை குழப்பத்துடன் யோசித்தான்.... ஒருவரை பிடிக்கவும், பிடிக்காததற்கும்
காரணங்கள் தேவையில்லை....
மனம் முழுக்க தீபன் நிறைந்திருக்கும் இந்த நேரத்தில் தன்னால் இன்னொருவனுடன்
நிச்சயம் காதல் கொள்ள முடியாது.... ஆனால், தீபன் ஒரு ஸ்ட்ரைட்டாக இருக்கும்
பட்சத்தில், அவன் மீதான தன் காதல் வெறும் “ஆசை” என்ற அளவில் மட்டுமே இருக்கும்
என்பதையும் செந்தில் உணர்ந்தான்.... என்ன காரணங்கள் இருந்தாலும், இப்போதைக்கு
இன்னொரு காதலை தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றாலும், அதை முகத்தில்
அறைந்தார் போல “முடியாது” என்று சொல்லிட செந்திலுக்கு மனமில்லை... எத்தனையோ
புறக்கணிப்புகளை, ஏமாற்றங்களை சந்தித்த அவனுக்குத்தான் தெரியும், அதனால் உண்டாகும்
வலிகள்.... அப்படி ஒரு வலி தன் மூலம் எந்த தருணத்திலும் இன்னொருவனுக்கு கிடைத்திட
கூடாது என்பது மட்டும் அவன் எண்ணமாகவும் திண்ணமாகவும் இருந்தது....
“என்ன திடீர் மாற்றம்?... ” வார்த்தைகள் தடுமாறி விழுந்தன....
“தெரியல.... ஆனால், உங்க மேல எனக்கு காதல் வந்தது மட்டும் உறுதி...” பேச்சில்
ஒருவித உறுதி இருந்தது...
“....”
“உங்க தயக்கம் புரியுது.... உங்க முடிவை இப்ப சொல்லவேணாம்... நாம பேசி
பழகுவோம்... உங்களுக்கா எப்போ தோணுதோ அப்போ சொல்லுங்க” ராகேஷின் வார்த்தைகளில்
பிடிவாதம் கூட எட்டிப்பார்த்தது....
அலைபேசியை துண்டித்த மறுநொடியில் தீபனின் அழைப்பு வந்தது....
“என்ன ரொம்ப நேரம் பிசியாவே இருக்க போல?”
“இல்ல... ராஜன் சார் பேசிட்டு இருந்தார்”
“ஓஹோ.... இப்போதான் அவர்கிட்ட போன் பேசிட்டு வச்சேன், ஒரே நேரத்துல ரெண்டு
பேர் கூட பேசுற மந்திரம் அவருக்கு தெரியும் போல”
“அது.... இல்லடா... அது”
“சரி சரி.... விடு.....” பின்னர் வழக்கமான பேச்சுக்களுக்கு பிறகு அலைபேசியை
துண்டித்த செந்திலுக்குள் குழப்பமே மிஞ்சியது....
அப்போது தன்னை பிடிக்காமல் சென்ற ஒருவன், இப்போது காதல் வார்த்தை பேச என்ன
காரணம்?... அப்படி மனமாற்றம் நிகழும் அளவிற்கு இந்த நாட்களில் இருவருக்கும் எவ்வித
தொடர்பும் கூட இருக்கவில்லை.... அப்படி இருக்க, ராக்கேஷின் மனமாற்றம் எதனால்
நிகழ்ந்தது? என்பதை செந்தில் யோசிக்க விரும்பவில்லை.... அவன் யோசனையெல்லாம்
இப்போது தீபனை சுற்றியே அலைந்தது... தீபனை மறக்க ராக்கேஷின் காதலை ஏற்பதா?..
கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தீபனின் நினைவுகளுடனே வாழ்வதா?... தீபன்
கிடைப்பான் என்ற நம்பிக்கையில் ராக்கேஷை மறுப்பதா?... ஒரு முடிவையும் செந்திலால்
எடுக்கமுடியவில்லை....
“நீ காதலிக்கிறவன விட, உன்ன காதலிக்கிறவன காதலிச்சா வாழ்க்கை சிறப்பா
இருக்கும்” படத்துக்கு மட்டும்தான் இதைப்போன்ற வசனங்கள்
பொருந்தும்....வாழ்க்கையில் அப்படி ஒரு தெளிவான முடிவை யாராலும் எடுக்க
முடியாது....
மனக்குழப்பம் அதிகமாகி ,மதியத்துடனே வீட்டிற்கு சென்றுவிட்டான் செந்தில்....
படுக்கையில் படுத்தவாறே விட்டத்தை பார்த்து யோசித்தான்... ஏங்கி தவித்தபோது
எட்டிப்பார்க்க கூட ஒருவரும் வரவில்லை... ஒதுங்கி நிற்கும்போது, வழியக்க வரும்
இதுபோன்ற உறவுகளை ஏற்கமுடியாத சூழல் இப்போது....
அலைபேசி ஒலிக்க, எடுத்து பார்த்தான்... “ராகேஷ்” தான்... அழைப்பை எடுக்கவில்லை
செந்தில்.... அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ரக்கேஷ் அழைக்க, அழைப்பை ஏற்றான்...
“பிசியா இருக்கிங்களா செந்தில்”
“இல்ல... சொல்லுங்க” ஏனோ ராக்கேஷிடம் முகத்தில் அறைந்தார் போல பேசி
விலகமுடியவில்லை செந்திலால்....
படிப்பு, குடும்பம், பணி, நட்பு, பிடித்தவை, பிடிக்காதவை என்று பலவாறும்
பேசினர் இருவரும்.... உற்சாகமாகவே பேசினான் செந்திலும் கூட, இன்னும் சொல்லப்போனால்
ராகேஷ் செந்திலை பேசவைத்தான் என்றுதான் சொல்லவேண்டும்....
பேசிமுடித்து அலைபேசியை வைத்தபோதுதான் கவனித்தான் செந்தில், இருவரும் ஒன்றரை
மணி நேரம் பேசியிருப்பதை....
பேச தொடங்கும்போது விருப்பமில்லாமல் தொடங்கிய பேச்சு, முடிக்கும்போதோ மிகவும்
மனநிறைவுடனும் மகிழ்வுடனும் முடிந்தது....
விளக்கமாக சொல்லவேண்டுமானால் தீபனின் வெறுமையை, ராக்கேஷின் பேச்சு கொஞ்சம்
செழுமையை கொடுத்தது.... இந்த உறவுக்கு பெயர் என்ன? எவ்வளவு தூரம் போகும்? என்ற
எந்த கேள்விக்கும் விடைதெரியாமல் மூன்று நாட்கள் தொடர்ந்தது....
இதை ஏனோ தீபனிடம் சொல்ல செந்திலின் மனம் ஒப்பவில்லை... தான் “கே” என்று
தெரிந்தால் தீபன் தன்னை தவறாக நினைத்துவிடுவானோ, அதன்மூலம் நட்பு கெட்டுவிடுமோ?
என்கிற தயக்கத்தில் சொல்லவே இல்லை...
ராக்கேஷுடனான பேச்சு இப்போது இயல்பான பேச்சை தாண்டி, உணர்வு பூர்வமான இணைப்பை
கொடுக்கும் உறவாக மலர்ந்தது....
அப்படி வழக்கம்போல மாலை வேலையின் ரம்மிய சூழலில், படுக்கையில் படுத்து
சிரித்துக்கொண்டே தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தான் செந்தில்... சிறிது நேரம்
கழித்துதான் வீட்டின் அழைப்புமணி அடிப்பதை உணர்ந்தான்... வெகுநேரமாக மணி
அடிக்கிறது என்பதை அப்போதுதான் செந்தில் உணர்கிறான்... அழைப்பை துண்டித்து, பதறி
எழுந்து ஓடிப்போய் கதவை திறந்தான்...
கையில் பையுடனும், முகத்தில் சோர்வுடனும் நின்றான் தீபன்... எதிர்பாராத
நேரத்தில் வந்த தீபனை பார்த்து மகிழ்வதற்கு பதிலாக பதட்டமே செந்திலுக்கு அதிகமாக
வந்தது... ஏன் பதட்டம் வந்தது? என்ற கேள்விக்கு அவனுக்கு விடைதெரியவில்லை....
“நீ நாளக்கி வர்றதா சொன்ன, என்ன திடீர்னு இப்போ....” தயங்கி கேட்டான் செந்தில்....
“வேலை முடிஞ்சுடுச்சு வந்துட்டேன், அவ்ளோதான்... எவ்வளவு நேரமா காலிங் பெல்
அடிக்குறேன், என்ன பண்ணின உள்ள?” உள்ளே வந்து பைகளை வைத்துவிட்டு, சோபாவில்
அமர்ந்தவாறு கேட்டான் தீபன்...
“இல்ல.... ஒண்ணுமில்ல.... பெட்ரூம்ல... இல்ல இல்ல, பாத் ரூம்ல இருந்தேன்”
செந்திலை ஏற இறங்க பார்த்த தீபன், “இவ்வளவு நேரம் பாத்ரூம்ல இருந்த உன் கை,
கால்ல கொஞ்சம் கூட ஈரம் இல்லாதது அதிசயம்தான்” சிரித்தான்....
அசடுவழிய சிரித்த செந்திலும், சமையலறையிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து
தீபனிடம் கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தான்...
நீரை அருந்திய செந்தில், சட்டையை கழற்றி வியர்வையை காயவைத்தான்....
“போன் பண்ணிருந்தா நானே பைக்ல வந்து ஸ்டேசன்லேந்து கூட்டிட்டு
வந்திருப்பேன்ல?”
“உனக்கு போனா?... நான் போனதுலேந்து எப்போ போன் பண்ணாலும், உன் நம்பர்
பிசிதான்... யார்கிட்டதான் அப்டி பேசுவ?.... எப்டியும் பொய்தான் சொல்லுவ, அதனால
இந்த கேள்விய சாய்ஸ்’ல விட்டுடு”
தானாகவே வாய்கொடுத்து மாட்டிக்கொன்டத்தை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டான்
செந்தில்...
“நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன், நீ ரெஸ்ட் எடு” அந்த நேரத்தில்
தப்பித்த சந்தோஷத்தில் வெளியே வந்தான் செந்தில்...
தீபனிடம் ஏன் பொய் சொல்லணும்?.... தீபனை பார்க்கும்வரை ராகேஷின் மீது
ஒருவிதமான மெல்லிய ஈர்ப்பு இருந்தது உண்மைதான்.... ஆனால், இவனை பார்த்த மறுகணம்,
அந்த எண்ணமெல்லாம் சிதறி தெறித்து மனம் “தீபன் சரணம்” சொல்ல தொடங்கியது..... தீபன்
ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அவன்தான் என் காதலன்.... இந்த மூன்று நாட்களும்
குழம்பிய மனதிற்குள் ஒரு பட்டவர்த்தனமான வெளிச்சம் சுடர்விட்டு ஒளிர்ந்தது....
ராக்கேஷுடனான உறவை முதலில் துறக்க வேண்டும்.... சாலை ஓரத்தில் நடந்து
சென்றுகொண்டிருக்கும்போது ராக்கேஷின் எண்ணை அழைத்தான்....
“ஹலோ செந்தில்.... என்ன ஆச்சரியமா இருக்கு? நீங்களே கால் பண்றீங்க?”
உற்சாகத்துடன் பேசினான் ராகேஷ்....
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”
“மூணு நாள்லயே சொல்லுவீங்கன்னு நான் நெனச்சு கூட பாக்கல, சொல்லுங்க”
“ஐயோ.... அதல்லாம் இல்ல.... என்னால உன்ன லவ் பண்ண முடியாது”
“ஏன்? எதனால?.... என்னை பிடிக்கலையா?”
“அப்டி இல்ல.... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்....”
“உண்மையாவா?... இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” வார்த்தைகளில் ஏமாற்றம்
தெரிந்தது....
“அவன் ஒரு ஸ்ட்ரைட், நான்தான் அவனை லவ் பண்றேன், நான் லவ் பண்றது கூட அவனுக்கு
தெரியாது.... அவன் மூணு நாளா ஊர்ல இல்லாததால நான் என்னென்னமோ பண்ணிட்டேன், இப்போ
அவனை , அவன் முகத்த பார்த்தபோதுதான் என் தப்பு புரியுது”
“என்ன பேசுறீங்க நீங்க?... ஒரு ஸ்ட்ரைட்டை எப்டி நீங்க லவ் பண்ண முடியும்?...
இது நடக்கவே நடக்காது”
“நடக்கலைனாலும் வேற ஒருத்தர நான் நெனக்க முடியாது... சாரிப்பா” சொல்லிவிட்டு
அழைப்பை துண்டித்தான் செந்தில்.... மனம் இப்போது இலகுவாக காணப்பட்டது.... இனி
தீபன் ஒருவன்தான்... நாளைக்கே காதலை அவனிடம் சொல்லிடவேண்டும்... சொல்லாமல் ஒவ்வொரு
நாளும் மனம் படபடப்புடன் இருப்பதற்கு பதிலாக, சொல்லிய பின் உண்டாகும் விளைவுகளை
எதிர்கொள்ளலாம்... இந்த எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள கற்றுக்கொடுத்தது கூட
தீபன்தான்....
அதனால் நட்பை இழக்கும் சூழல் வந்தால்?... அப்படி வந்துவிடாது.... தீபன்
முற்போக்கு சிந்தனை உடையவன், நிச்சயம் என்னை தவறாக புருந்துகொள்ள மாட்டான்...
ஆனால், எவ்வளவுதான் முற்போக்காக சிந்தித்தாலும், இத்தனை நாளும் அவனை நான் காதல்
பார்வையுடன் அணுகியதை அறிந்தால் அவன் கோபப்பட மாட்டானா?... காதலை சொன்னபின்
என்னவேணாலும் நடக்கலாம், எதையும் எதிர்கொள்ளும் மனதிடம் இப்போது செந்திலுக்குள்
வந்துவிட்டது....
அடுத்தநாள் காலை அலுவலகத்தில் பணிகளுக்கு மத்தியில் பேச்சை தொடங்கினான்
தீபன்....
“உன்கிட்ட கேக்கவே மறந்துட்டேன்.... டிவிக்கு அப்ளை பண்ணியா?”
அப்போதுதான் செந்திலுக்கு அந்த நினைவே வந்தது... மூன்று நாட்கள் தனக்குள்
நிகழ்ந்த மனப்போராட்டங்களில் இதை மறந்தே போய்விட்டான்...
“அது... இன்னிக்கு தான்” இழுத்தான்....
“இந்த மூணு நாள்ல என்னதான் பண்ணின நீ?... ஆபிஸ்’லையும் ஒரு கட்டுரை கூட எழுதல,
நியூஸ் கவரேஜ் எதுவும் பண்ணல.... அட்லீஸ்ட் ஜாப் விஷயமாவாச்சும் ட்ரை
பண்ணிருப்பன்னு பார்த்தா, அதுவுமில்ல... “ தீபன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே
நுழைந்தார் ராஜன்... தீபன் ஏதோ காரசாரமாக பேசுவதை உணர்ந்த ராஜன், “என்னாச்சு
தீபன்?... ஜாப் கீப்’னு ஏதோ பேச்சு வருது.... நீ ஏதோ கோபமா பேசுற?” என்றார்...
“அது ஒண்ணுமில்ல சார்... நம்ம செந்தில் விஷுவல் மீடியா பக்கம்
போகப்போறாராம்.... அதான் சன், விஜய் டீவின்னு ட்ரை பண்ணிட்டு இருக்காராம்....
இங்கயே இருந்து அவர் பெஸ்ட் கொடுத்தா அதுவே போதும், புது இடமல்லாம் வேணாம்னு நான்
சொல்லிட்டு இருந்தேன்... நான் சொல்றது சரிதானே சார்?” கொஞ்சமும் வாய்கூசாமல்
பொய்களை அள்ளி இறைத்த தீபனை முறைத்து பார்த்தான் செந்தில்....
“கிரேட் செந்தில்... நான் கூட இதை உன்கிட்ட எப்டி சொல்றதுன்னு தெரியாம
இருந்தேன்... நீ அந்த மீடியா பக்கம் போனா இன்னும் உனக்கு நிறைய எக்ஸ்போஷர்
கிடைக்கும்.... ரவி பெர்னாட், வீரபாண்டியன், மாலன் இவங்க மாதிரி பெரிய
பொலிட்டிக்கல் டிபேட்டரா மாறலாம்...” செந்திலின் கையை பிடித்து ஆசிர்வாதமே
செய்துவிட்டார் ராஜன்....
மேலும் தொடர்ந்த ராஜன், “இந்த பையன் சொல்றத கேக்காத.... கிணத்து தவளையா இருக்குறதுல
பெரிய வெற்றிகளை பார்த்திட முடியாது.... இவ்வளவு நாள் இல்லாத கான்பிடன்ஸ் உனக்கு
இப்போ நெறைய வந்திருக்கு, நிச்சயம் சாதிக்கலாம்... ஒரே ஒரு சந்தேகம் எனக்கு, இப்போ
கொஞ்ச நாளா உன்னோட இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்?... லவ் எதுவும்...?”
சிரித்தார்....
“ஐயோ அப்டிலாம் இல்ல சார்...” பதறினான் செந்தில்...
“இல்ல சார், எனக்கு அந்த சந்தேகம் ரொம்ப இருக்கு... கொஞ்ச நாளா திருட்டுத்தனமா
போன் பேசுறார், பொய் பேசுறார், நிறைய தன்னம்பிக்கை வந்திருக்கு... ஏதோ சம்திங்
இருக்கு சார்” தீபன் சிரிக்க, ராஜனும் சிரித்தார்... செந்திலின் முகத்தில்
வெட்கத்தின் மிகுதி காணப்பட்டது...
“சரி செந்தில்... நான் சொல்ற ஆள நீ போயி இன்னிக்கு பாரு, உனக்கு ஜாப்
உறுதி.... உன்னோட திறமைக்கு என்னாலான ஒரு சின்ன உதவி இந்த ரெக்கமண்டேசன்” ராஜனின்
கைகளை பிடித்து, முகத்தில் உற்சாகம் மிளிர “ரொம்ப நன்றி சார்” என்றான்
செந்தில்....
மாலை நேரம், வீட்டில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..... செந்திலின் மனம்
“எப்போ அவன்கிட்ட சொல்ல போறோம்? என்ற அதீத எதிர்பார்ப்பில் அதற்கான சந்தர்ப்பத்தை
ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து காத்திருந்தது...
ஒரு ஆச்சரியமாக செந்தில் தொடங்க நினைத்த விஷயத்தை தீபன் தொடங்கினான்....
“செந்தில், ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லனும்னு
நெனச்சிட்டு இருக்கேன்... அதை நீ எப்டி புரிஞ்சுப்பன்னு எனக்கு தெரியல....
இருந்தாலும் இப்போ சொல்லிடுறேன்” பலமான பீடிகை போட்டான் தீபன்...
என்ன சொல்லப்போகிறானோ? என்கிற ஒரு பதற்றத்தில், “சொல்லு, என்ன விஷயம்?”
என்றான்...
“நான் ஒருத்தர லவ் பண்றேன்” முதல் இடி செந்திலின் தலையில் விழுந்தது....
“நான் லவ் பண்றது, பொண்ணு இல்ல பையனை... ஆமா, நான் ஒரு கே” இரண்டாம் இடி
இன்னும் வேகமாக விழுந்தது....
தன் மொபைலை எடுத்து அதிலிருந்த ஒரு புகைப்படத்தை காட்டினான் தீபன்... வட
இந்தியனைபோல ஒருத்தன், நாகரிக உடையில் புன்சிரிப்புடன் மன்மதனைப்போல நின்றான்....
“இவன்தான் ரோஹித்.... நான் லவ் பண்றவன்” இதுதான் முக்கியமான மூன்றாவது பேரிடி....
விழுந்த இடிகளின் விளைவாக மொத்த இதயமும் கண்ணாடி சிதறலாக சிதறிப்போனது.....
அதிர்ந்தபடியே நின்றான்... ஒன்றும் பேசமுடியவில்லை, எச்சில் கூட கடும்
போராட்டங்களுக்கு பிறகே தொண்டைக்குள் நுழைந்தது....
“உன்னோட குழப்பம் எனக்கு புரியுது செந்தில்... பொதுவா கே பத்திய அபிப்ராயம்
சாதாரண ஆளுங்களுக்கு தப்பாதான் இருக்கும்.... இதுவும் ஒரு சாதாரண உணர்வுதான்னு
மத்தவங்க புரிஞ்சுக்கற அளவுக்கு நம்ம நாடு இன்னும் வரல.... நீ என் பெஸ்ட்
பிரென்ட், என்னையும் என்னோட உணர்வுகளையும் நிச்சயம் புரிஞ்சுப்பன்னு நான்
நம்புறேன்” செந்திலின் கைகளை பிடித்தபோதுதான், அவன் சுயநினைவுக்கே வந்தான்....
“உனக்கு நான் அவனை இன்ட்ரோ கொடுக்கணும், போய் அவனை கூட்டிட்டு இன்னும் அரை மணி
நேரத்துல வந்திடுவேன்.... ஓகே வா?” என்றான் தீபன் சிரித்தபடியே...
“ஹ்ம்ம்” என்று வராத சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து தலையை அசைத்தான்
செந்தில்....
குழந்தைபோல உற்சாகம் மிகுதியாக, பைக் சாவியுடன் வெளியே கிளம்பினான் தீபன்...
அவன் சென்ற வழியையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த செந்திலின் கண்களிலிருந்து,
அவன் அறியாமல் கண்ணீர் கொட்டியது...
கதவை “படார்” என்று தீபன் சாத்திவிட்டு போனபோதுதான் நிலைமையின் விபரீதத்தை
உணர்ந்தான் செந்தில்....
“இதுவரை நான் ஆசைப்பட்டது எதுவுமே கெடச்சதில்ல, தீபன் விஷயத்திலையும் அது
உண்மையாகிடுச்சு.... என்னோட குற்ற உணர்வு, தாழ்வுமனப்பான்மை எல்லாத்துலேந்தும்
ஒவ்வொரு நாளும் என்னை மீட்டு, உயரத்துக்கு கொண்டு போய் இன்னிக்கு இயல்பான மனுஷனா
ஆக்குன அவனே, இந்த ஒரு நிமிஷத்துல அதல பாதாளத்துள தள்ளிட்டான்.... அவன் கெடைக்க
மாட்டான்னு எனக்கு தெரியும்... ஆனால், கெடச்சிருக்க வாய்ப்பிருந்தும் அது
தப்பிப்போனதுதான் என்னோட இயலாமை.... அவன் ஸ்ட்ரைட்டாக இருப்பான்னு நெனச்சு, என்னோட
ஆசைகள சொல்லாம விட்டதுதான் தப்பா?... இப்ப இன்னொருத்தனுக்கு சொந்தமானவனா
ஆகிட்டான்... அவன் இல்லாம என்னால என் வாழ்க்கைய கற்பனை செஞ்சு கூட பாக்க முடியல”
பலவிதமாகவும் யோசித்தான் செந்தில்....
மெல்ல எழுந்து சென்று, படுக்கையறையின் ஆளுயர கண்ணாடி முன்பு நின்று தன்னை
கண்ணாடி பிம்பத்தில் பார்த்தான்....
“தீபன் மேல ஆசப்படுறதுக்கு முன்னாடி இந்த மூஞ்சிய கண்ணாடில பாக்காம
விட்டுட்டேன்... மூஞ்சியா இது” கண்ணாடி முன்பு எச்சிலை துப்பினான்... இவ்வளவு நாள்
அடக்கி வைத்திருந்த தன் மீதான கோபத்தின் முதல் வெளிப்படுதல் இதுதான்....
“ஒரு பொருள் மேல ஆச வைக்கிறதுக்கு முன்னாடி, அந்த ஆசைக்கு தகுதி இருக்கான்னு
யோசிச்சிருக்கணும்... இப்படிப்பட்ட காதல்லாம் எனக்கு வந்த பேராசை... “ தன்
கன்னங்களில் இரண்டு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு அழுதான்....
இயலாமை, விரக்தி, ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை என எல்லாமே ஒரு சேர அவன்
உள்ளுக்குள் நிறைந்து கிடக்கிறது இப்போது.... இவ்வளவு நாளும் இவைகள் தன்னை
தீண்டாமல் பாதுகாத்த செந்திலையும் தாண்டி ஒருசேர அவனுக்குள் ஆளுமை செலுத்தியது....
மனம் சுமக்க முடியாத பாரத்தை உணர்கிறது.... அவனையும் மீறி கண்களில் நீர்
கசிந்தது..... தீபனை இன்னொருவனுடைய காதலனாக பார்க்கும் தருணத்தில் நிச்சயம்
தனக்கான மரணத்தின் முதல் படி காத்திருப்பதாக நம்பினான்... அதை எதிர்கொள்ள நிச்சயம்
செந்திலுக்கு மனம் திடமாக இல்லை....
“செத்துடலாமா?” என்று கூட ஒரு நிமிடம் யோசித்தான்.... தீபன் வருகைக்கு முன்பு
இந்த மன சுமையை அனுபவிக்க நேர்ந்திருந்தால் நிச்சயம் “தற்கொலை” முடிவுக்கு சென்றிருப்பான்...
இன்றோ தற்கொலை கூட செய்ய முடியாத அளவிற்கு தன்னம்பிக்கையை தீபன்
கொடுத்துவிட்டான்.... இயலாமையின் உச்சத்தில் ஏதும் புரியாமல் தவித்து நின்றான்....
“என்ன செய்வது?... எப்படி என்னை மீட்பது?” என்ற யோசிப்புகளுக்கு அவகாசம்
கொடுக்காமல், கதவு திறக்கும் சத்தம் கேட்டது... தீபனாகத்தான் இருக்கும்.... அந்த
கொடுமையின் உச்ச நிகழ்வை எப்படி தாங்கிக்கொள்ளப்போகிறேன்? என்று மனம் படபடக்க
அறைக்குள் அமர்ந்தே அறையின் வாயிலை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தான்....
வீட்டிற்குள் நுழையும்போதே “செந்தில்.... செந்தில்...” சத்தம் போட்டுக்கொண்டே
உள்ளே வந்தான் செந்தில்... அந்த அழைப்பில் உற்சாகம் மிகுந்து காணப்பட்டது....
அறைக்குள் நுழைந்த தீபன், தன் கையில் வைத்திருந்த ஒரு சிறு பெட்டியை
செந்திலிடம் காட்டி, “செந்தில், இத அவனுக்காக வாங்கிருக்கேன்.... என்னோட முதல் மாச
சம்பளத்துல வாங்குன மோதிரம்... நல்லா இருக்கான்னு பாத்து சொல்லேன்” செந்திலின்
கைகளில் திணித்தான்....
கைகள் நடுங்க, அதை திறந்து பார்த்தான் செந்தில்... உள்ளே ஒரு அழகான தங்க
மோதிரம் பளிச்சிட்டு எட்டிப்பார்த்தது....
தலையசைத்தபடி, “ஹ்ம்ம்...” என்றான்...
“வெளில நிக்குறான் அவன், வந்து பாரேன்” கையை பிடித்து இழுத்தான் தீபன்...
அதற்கு மேலும் தன்னை அடக்கமுடியாமல் வெடித்து அழுதான் செந்தில்..... தன்
கைகளால் முகத்தை மூடி அழுதான்...
அந்த கைகளை விலக்கி, அதில் விரலை பிரித்து, வாங்கி வந்த மோதிரத்தை விரலில்
அணிவித்தான் தீபன்....
அழுகைக்கு மத்தியில், தீபனின் இந்த செய்கை புரியாமல் “ஏய்... என்ன பண்ற?”
என்றான் செந்தில்....
“புரியலையா?... என் லவ்வருக்கு மோதிரம் போட்டு விடுறேன்”
இதைக்கேட்ட செந்திலுக்கு மகிழ்ச்சியைவிட, அதிர்ச்சியே மேலோங்கி இருந்தது...
“என்ன சொல்ற?... வெளில யாரோ இருக்குறாங்கன்னு சொன்ன!”
“ஆமா, ஹால்ல மாட்டிருக்குற போட்டோல நீதானே இருக்க... இப்போ உனக்கு இந்த ரிங்
வாங்கத்தான் வெளில போனேன்....”
“அப்போ போன்ல காட்டுன அந்த போட்டோ?”
“நம்ம அகரம் புக் காஸ்ட்யூம் பேஜ்’க்கு போட்டோ அனுப்புன மாடல் அவன்.... சும்மா
அதை காட்டுனதுக்கு இந்த அழுக அழுற” சிரித்தான்.... இப்போதுதான் செந்திலின்
முகத்திலும் லேசான வெட்க சிரிப்பு எட்டிப்பார்த்தது....
“வெக்கப்படுறாராம்......” தீபன் கலாய்க்க, கண்ணீருக்கு மத்தியில் செந்திலின்
உயிரோட்டமான புன்னகை தவழ்ந்தது....
“சரி நானும் கே’ன்னு எப்டி தெரியும் உனக்கு?” செந்தில் கேட்டான்....
“டேய் அசடு.... இவ்வளவு நாள் ராக்கேஷா உன்கிட்ட பேசுனது நான்தான்... கொஞ்சம்
வாய்ஸ் மாத்தி பேசுனத கூட கண்டுபிடிக்க முடியாத தத்தியா இருக்குறியே.... அப்டி
பேசுனப்போதான் என்மேல நீ எவ்வளவு லவ் வச்சிருக்கன்னு புரிஞ்சுது.... ஆரம்பத்துல நீ
இன்னொருத்தன்கிட்ட வழிந்து பேசுறது எரிச்சலாத்தான் இருந்துச்சு, போகப்போக என் மேல
நீ வச்சிருந்த லவ் உன் வார்த்தைகள்ல தெரிஞ்சுது... இன்னும் ரெண்டு நாள் உன்ன
சுத்தல்ல விடலாம்னு நெனச்சேன், ஆனால் இதுக்கு மேலயும் உன்ன இம்ச பண்ண கூடாதுன்னு
நானே இப்போ ப்ரப்போஸ் பண்ணிட்டேன்.... லேட் பண்ணா நாளைக்கே சுரேஷ், தினேஷ்’னு
எவனாச்சும் வந்துட்டா, என்ன பண்றது.....”
செந்திலுக்கோ ஆச்சரியமும், சொல்ல முடியாத உற்சாகமும் கரைபுரண்டு ஓடியது....
“நெஜமாவா?... அப்போ, அந்த பிளானட் ரோமியோ போட்டோ....?”
“ஆமா.... அதே ரோமியோ தான்.... அப்போ அழகா தெரியாத நீதான் இப்போ எனக்கு அழகா
தெரியுற.... அதுவும் பேரழகனா தெரியுற...... ஐ லவ் யூ செந்தில்” கட்டிப்பிடித்து
கன்னத்தில் முத்தம் கொடுத்தான் தீபன்.... தான் அடித்து ரணமாக்கிய கன்னங்கள்,
தீபனின் உதடுகளின் ஒத்தடத்தால் குணமாகிப்போகின........ “தான் காதலித்த தீபனும்,
தன்னை காதலித்த ராக்கேஷும் ஒருவன்தான்” என்ற உண்மை தெரிந்ததும், பிறவி பெருங்கடலை
நீந்திய பேறு பெற்றான் செந்தி.... செந்தின் கண்களில் இருந்து இப்போதும் கண்ணீர்
துளிகள் எட்டிப்பார்க்கிறது, ஆனால் இது எல்லாம் கிடைத்த மனநிறைவால் உண்டான ஆனந்த
கண்ணீர்.... கண்ணாடி பிம்பத்தில் தன் முகம் தெரிவதை பார்த்த செந்திலுக்கு, தன்
முகம் இப்போது தீபன் சொல்வதைப்போல பேரழகாக தெரிவதை உணர்கிறான்..... (முற்றும்)
naa rakesh deepan nu sandhega patten !!!!! bt ........ adhu unmai nu therinja appo senthilukku irundha andha sandhoshatha naa unarndhen!!!! andha alavuku story la ondriten!!!!! nice na!!!!! .
ReplyDeleteso sweet frd............... nice da
ReplyDeletenan class first.classla than first(education).matra naraya fieldla enakana theramaya puriya vachavan theepan mathri oru frnd..its similar to my story.bt my frnd oru straight...
ReplyDeleteஉன் எண்ணம் தான் உன் ஆயுதம்... உண்மையான வாக்கியம். சந்தோஷமான முடிவு விக்கி.
ReplyDeleteமிகவும் ரசித்தேன். மெல்லிய உணர்வுகளை வார்த்தைகளில் வார்ப்பதில் நீங்கள் சிகரத்தை தொட்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள் - மாதவ்
ReplyDeleteSuper anna, oru nalla, arbuthamana love story paditha santhosam. idaiyil ragesh entry konjam kulappinalum, avanukkum deepanukkum link irukkonu thonunalum senthil mudivu and climax remba relax a feel panna vachuttathu...thanks...
ReplyDelete