இதுவரை அறிவியல், மதம், இனம் தொடர்பாக
எத்தனையோ விஷயங்களை படித்து, பார்த்து, கேட்டு எழுதி வந்தோம்... இனி நாம அப்படி
ஆழமான விஷயத்துக்குள் போகாமல், மேலோட்டமாக மக்கள் மனசு பற்றி இப்போ பார்க்கலாம்...
பொதுவா நீங்க ஓரளவு விபரம் தெரிஞ்ச நபரிடம் “கே பற்றிய உங்க அபிப்ராயத்தை
சொல்லுங்க” என்று கேட்டால், அவருடைய பதில் என்னவாக இருக்கும்?...
“கே என்பது இயற்கைக்கு முரணானது,
இறைவனுக்கு எதிரானது” என்பார்...
“எதை வச்சு அப்டி சொல்றீங்க?...
இயற்கை பற்றி உங்களுக்கு வரையறுத்து கூறியது யார்?.. இறைவன் எப்போ வந்து தனக்கு
ஒருபால் ஈர்ப்பு என்பது எதிரானதுன்னு சொன்னார்?” இப்படி கேள்விகளை கேட்டால்,
அவருக்கு பதில் தெரியாது... அப்போ அவர் மனசுல கே பற்றி பதிந்துள்ள அந்த ஆழமான
தவறான பிம்பத்துக்கு காரணம் என்ன?...
“எல்லாரும் சொல்றாங்க” என்பதுதான்
காரணம்.... இங்க பெரும்பான்மையானவர்களின் கருத்துதான் உண்மை என்று
சொல்லப்படுகிறது.... இன்றைக்கு “வெள்ளைக்காக்கா மல்லாக்க பறக்குது”ன்னு நாம
எல்லாரும் பொய் சொன்னா கூட, நாளைக்கு அதை கேள்விப்படுற எல்லாரும் உண்மைன்னு நம்ப
ஆரமிச்சிடுவாங்க... காரணம், “பெரும்பான்மையானவர்களின் கருத்து பொய்யாக இருக்காது”
என்ற நம் எண்ணம் தான்...
டெல்லி பாலியல் பலாத்காரம் பற்றி
இன்னைக்கு நாடே பொங்கி எழுந்து பேசிக்கொண்டிருக்கு... அப்படின்னா, டெல்லில
நடந்ததுதான் பலாத்காரமா?.. அதுவரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பலாத்காரம் நடந்த
நம் நாட்டில், டெல்லி விஷயம் மட்டும் மிகப்பெரிய பூதமாக கிளம்பியது ஏன்?...
எல்லாரும் போராடுறாங்க, நாமளும் போராடுவோம் என்கிற எண்ணம்தான் காரணம்...
அண்ணா அசாரே பக்கம் நாம கொடிபிடித்து
போனதும், ஐரோம் சர்மிலாவை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கூட இந்த “எல்லாரும்”
கான்சப்ட் ஆல்தான்..... அதனால், இந்த “எல்லாரும் சொல்றாங்க, செய்றாங்க,
நம்புறாங்க” கான்சப்ட் நம்மோடு ரொம்ப ஒட்டிக்கிட்டு இருக்குறத நாம ஒன்னும் பண்ண
முடியாது...
ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஒருபால்
ஈர்ப்பை குற்றம் என்று அவர்கள் சொன்னார்கள், சட்டமும் இயற்றினார்கள்... “செவப்பா
இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்”னு நாமளும் இன்னிக்கு வரைக்கும் அதை நம்பிகிட்டு,
சொல்லிக்கிட்டு இருக்கோம்.... இன்னிக்கு அந்த ஆங்கிலேயன் தன்னோட தப்பை உணர்ந்து,
கே விஷயத்தை தப்பில்லைன்னு ஒத்துகிட்டான், நாம மட்டும் அவன் சொன்ன பழைய
பஞ்சாங்கத்தை பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கோம்....
ஊடகங்கள் பற்றி நான் முன்னரே
சொல்லிருக்கேன், கே பற்றிய நம் மக்களின் மனதில் ரொம்ப பெரிய தவறான பிம்பத்தை
உருவாக்கிய “ரொம்ப நல்லவங்க” தான் அவங்க... கே என்பவனை ஒரு செக்ஸ் மெஷின் போலவும்,
காமக்கொடூரன் போலவும், மனநலம் பாதிக்கப்பட்டவன் போலவும் ரொம்ப அழகா நம்ம மக்கள்
மனசுல நஞ்சை விதச்சுட்டாங்க...
இங்க ஒரு மருத்துவருக்கு கூட கே பற்றி
தெளிவான விளக்கம் தெரியாது... அதற்கு காரணம் என்ன தெரியுமா?.. பாடப்புத்தகத்தில்
ஒருபால் ஈர்ப்பை பற்றிய விஷயம் என்பது ஒரு மருத்துவம் படிக்கும் மருத்துவனுக்கு
அவன் பாடத்திட்டமே கொடுக்கவில்லை... நான்கரை வருட படிப்பில், கிட்டத்தட்ட
பதினைந்து பாடத்திட்டங்களில் ஒருபால் ஈர்ப்பை பற்றிய விஷயங்கள் ஒரு இடத்தில்
மட்டும்தான் இருக்கிறது.... அதுவும் எங்கு தெரியுமா?... எயிட்ஸ் மற்றும் பால்வினை
நோய் பற்றிய பகுதியில், ஒரு நோயை பரப்பும் விஷயமாக மட்டும்தான் ஒருபால் ஈர்ப்பை
இந்த மருத்துவ உலகம், எதிர்கால மருத்துவர்களுக்கு சொல்லி தருகிறது....
அதனால், ஒரு சாமானியன் தான் கே என்பதை
அந்த மருத்துவரிடம் சொல்லும்போது, நிச்சயம் அந்த சாமானியன் ஒரு “தவறான
பிம்பதோடும், ஒரு மனநோயாளியாகவும் மட்டும்தான்” பார்க்கப்படுகிறான்.... என்னிடம்
பேசும்போது பல நண்பர்கள், தாங்கள் மனநல மருத்துவரிடம் சென்றதை பற்றி சொல்லி
இருக்காங்க.... பெரும்பாலான மருத்துவர்கள் (சில தெளிவான, கே பற்றிய முறையான
புரிதல் கொண்ட மருத்துவர்களும் இருக்காங்க) கே பற்றி ரொம்ப தவறான புரிதலில் தான்
இருக்காங்க... என் நண்பர், தான் கே என்று அந்த மருத்துவரிடம் சொன்னபோது , ஒரு
புழுவை பார்ப்பதைப்போல பார்த்துள்ளார் ஒரு மருத்துவர்... கடுமையான பேச்சுகளும்,
தவறான வழிநடத்தல்களும் அந்த நபர்களை இன்னும் அதிக மன அழுத்தத்திற்கு
ஆளாக்குகிறது....
இப்படி நம்ம மக்கள் அடிப்படை தெளிவே
இல்லை என்றாலும் கூட, எல்லோரும் சொல்கிறார்கள் என்ற காரணத்தால் அதையே நம்ப
ஆரமித்து விட்டார்கள்... சந்திரமுகி படத்தில் ரஜினி சொல்வதைப்போல, “கங்கா
சந்திரமுகி ரூமுக்கு போனா, சந்திரமுகியா நின்னா, சந்திரமுகியாவே ஆகிட்டா” என்பது
போல “நம்ம ஆளுங்களும் ஒரு பிம்பத்தை நம்ப ஆரமித்து விட்டார்கள்”... ஹர்ஷ்பீல்ட்
சொன்ன ஒரு கருத்தை இதுவரை நூறு முறை சொல்லி இருப்பேன், நூற்றி ஒன்றாவது முறையாக
இப்பவும் சொல்றேன்.... “பெரும்பான்மையானவர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக
இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை இயற்கைக்கு முரனானவர்களாக சொல்ல
முடியாது.... அது போல பெரும்பான்மையானவர்கள் எதிர்பால் மீது விருப்பம்
கொண்டவர்களாக இருந்தாலும், ஒருபால் ஈர்ப்பு கொள்வதும் இயற்கையே”... இந்த கருத்தை
இருநூறு வருடங்களுக்கு முன்னர் அந்த
மாமேதை சொன்னதை, இப்போவரைக்கும் நம்மவர்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் ரொம்ப
வேதனை...
ஒரு பக்கம் ஒருபால் ஈர்ப்பு என்பதை
சிறுமையான விஷயமாகவும், கொடிய விஷமாகவும் பார்க்கும் அதே நேரத்தில் இங்கு கே
நபர்களில் சிலர் “நான் கே என்பதில் பெருமை கொள்கிறேன்” அப்டின்னு சொல்றாங்க.... கே
என்பதை சிறுமையாக நினைப்பது எவ்வளவு தவறான விஷயமோ, அதே போன்றுதான் பெருமையாக
நினைப்பதும்... முதலில் அது இயல்பான விஷயம் என்று நம்மவர்கள் நம்புவதில்லை...
லோட்டஸ் சங்கம் நண்பர் முத்துக்குமார்
பேசும்போது ஒரு கருத்து சொன்னது இப்பவும் என் மனசுல ஓடிட்டே இருக்கு.... தன்னை ஒரு
கே என்று மற்றவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள அவர் விரும்புவதில்லை... நம்மை
அறிமுகப்படுத்திக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, பாலீர்ப்பை
மையப்படுத்தி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அவர் மறுக்கிறார்.... எந்த ஒரு
ஸ்ட்ரைட் நபரும் மற்றவர்களிடத்தில் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் போதும், “நான்
ஸ்ட்ரைட், எதிர்பால் ஈர்ப்பு கொண்டவர்” என்று சொல்லிக்கொள்வது இல்லை....
அப்படியானால் நாமே நம்மை ஒரு வித்தியாசமான எண்ணம் கொண்டவர்களாக பார்க்கிறோம்
என்றுதான் அர்த்தம்... “நான் கே என்பதை என் படுக்கை அறை மட்டும் அறிந்துகொண்டால்
போதும்” என்பது சிலரின் எண்ணம்... அதுவும் சரிதான்... ஆனாலும், நம் உரிமைகளுக்காக
போராடும் ஒரு நேரத்தில் நம்மை கே என்று நாம் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியது
அத்தியாவசியம் ஆகிறது....
இன்னும் நிறைய பேர் பேசும்போது, “இதை
சரிசெய்ய ட்ரீட்மென்ட் இருக்கா?” என்கின்றனர்.... நிச்சயம் இருக்கு... உங்களை கே
என்ற உணர்விலிருந்து மீட்பதற்கான சிகிச்சை அல்ல அது, “கே என்பது தவறு” என்கிற
உங்கள் தவறான எண்ணத்தை மாற்ற சிகிச்சை இருக்கிறது... கே என்பதை இன்னும் ஒரு
மனநோயாகத்தான் பலரும் நினைக்குறாங்க....
இப்படி நினைத்து நினைத்தே தங்களை
மனநோயாளிகளாக பலர் ஆக்கிகொள்கிறார்கள்....
ஒவ்வொருவரின் புரிதலும் இங்கே ஒவ்வொரு
மாதிரிதான் இருக்கும்... பச்சை கண்ணாடியை போட்டுக்கொண்டு உலகமே பச்சையாய்
மாறிவிட்டது என்று நினைப்பவர்கள்தான் நம்மில் பலரும்.... அந்த மாயக்கண்ணாடியை
கழற்றிக்கொண்டு, உலகத்தை உங்கள் கண்களால் பாருங்கள்....
பொதுவானவர்களுக்கு இறுதியாக ஒன்றே
ஒன்றை சொல்கிறேன்.... “என்னை படைத்தது, எனக்கு உருவத்தை வைத்தது, அதில் கே உணர்வை
வைத்தது எல்லாமே இயற்கைதான்.... இயற்கையின் படைப்பில் எல்லாமே நியாயம்தான்...
அதனால், என்னை கே’யாக படைத்த இயற்கையின் படைப்பை குற்றம் சொல்லும் நீங்கள்தான்
இயற்கைக்கு முரனானவர்கள்....” இவ்வளவு சொல்லியும் இனி புரிந்துகொள்ளவில்லை
என்றால், சுஜாதா அவர்கள் சொல்வதைப்போல, “புரிந்துகொள்ளாதவர்களை பசித்த புலி
தின்னட்டும்”....
சரி, பத்து பேர் இருக்கும் ஒரு
இடத்தில் ஒரு கே தன்னை எவ்வளவு மறைத்துக்கொண்டாலும், இன்னொரு கே’யால் எளிதாக அவனை
கண்டுபிடித்திட முடியும்... அதற்கு சில டெக்னிக் இருக்கிறது, அது என்ன?னு அடுத்த
பதிவில் பார்ப்போம்....
No comments:
Post a Comment