Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 5 April 2013

"விடியாத இரவு" - சிறுகதை...

முந்திரி காடுகளுக்கு மத்தியில் போடப்பட்டிருக்கும் அந்த செம்மண் சாலையை கொஞ்சம் தடுமாறியபடியேதான் என் மகிழுந்து கடந்துகொண்டு இருக்கிறது... கருப்பு நிற சான்ட்ரோ காரில் சிவப்பு பூச்சு பூசினாற் போல செம்மண் புழுதி படர்ந்துவிட்டது... ஒருவாராக செம்மண் சாலையை தாண்டி தார் சாலையை அடையும்போதுதான் என்னை அறியாமல் பெருமூச்சு என்னிலிருந்து வெளியானது...
செட்டிநாட்டு புகழுக்கே உரித்த வானுயர்ந்த வீடுகள் சாலையின் இருமருங்கையும் வெயில்கூட பட்டுவிடாத அளவிற்கு ஆக்கிரமித்து வைத்திருந்தது... சூரியனின் ஆணவம் கரைந்து, வெண்ணிலவின் ஆதிக்கம் மேலோங்கும் அந்தி வேலையில் தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் இன்னும் அழகாக தெரிந்தது காரைக்குடி வீதிகள்... காரைக்குடிக்குள் நுழையும்போதே அந்த ‘ராஜா மஹால்’ என்ற மண்டபத்தை கண்டுபிடிக்க அவ்வளவு கஷ்டமாக தோன்றவில்லை.... ஊர் எல்லை முதல், மண்டபத்தின் வாசல் வரை கட்டப்பட்டிருந்த ப்ளெக்ஸ் தட்டிகளும், டியூப் லைட்டுகளும் மண்டபத்திற்கான பாதையை சிக்கலே இல்லாத அளவிற்கு தெளிவாக வழிகாட்டியது....
“செட்டிநாட்டு தங்கமே வருக!, சிவகங்கை சிங்கமே வருக!”, “இன்றைய தமிழகமே!, நாளைய இந்தியாவே!, நாளை மறுநாளைய ஐநா சபையே!” போன்ற வாசகங்கள் மறுநாள் திருமணத்திற்கு வரவிருக்கும் அமைச்சரை புகழ்கிறார்களா? கிண்டல் செய்கிறார்களா? என்பதே புரியவில்லை... எப்படியும் இந்த அமைச்சருக்கு இன்னும் சில நாட்களில் இலாகா பறிக்கப்படும் என்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரிந்தது....
மகிழுந்தை நிறுத்திவிட்டு, முகத்தை கழுவி லேசான டச் அப் செய்துவிட்டு மண்டபத்தை நோக்கி நடந்தேன்.... பாலாவை எப்போது பார்க்க சென்றாலும் நான் செய்யும் டச் அப் இப்போதும் செய்வதில் அர்த்தமில்லை என்றாலும், அது அனிச்சை நிகழ்வாக என்னுள் உண்டாகிவிட்டது.... மண்டபத்தின் முகப்பில் “பாலாஜி weds இந்து” என்ற வண்ண அட்டைகளால் செய்யப்பட்ட தட்டியை கண்டபோது மனதிற்குள் ஊசியால் குத்துவதை போன்ற ஒரு உணர்வு....
கண்கள் அந்த எழுத்துகளை பார்த்தாலும், என் மனம் இப்போது கல்லூரி நாட்களுக்கு சென்றது....
“என்னடா எழுதிட்டு இருக்க?” என்னை கண்டதும் எழுதிக்கொண்டிருந்த தாளை மறைத்த பாலாவை பார்த்து இப்படி கேட்டேன்...
“ஒண்ணுமில்ல, சும்மாதான்” பொய்யாக சிரித்தான்...
வலுக்கட்டாயமாக அவன் கைகளை பிடித்து இழுத்து பார்த்தபோது, அதில் “பாலா weds விஜய்” என்று பல வண்ணங்களில் எழுதி இருந்தான்...
அவனை பார்த்து சிரித்த நான், “எதுக்குடா இப்டி எழுதுற?... இது நடக்குற விஷயமா சொல்லு?” என்றேன்...
“நிச்சயம் நடக்கும்டா... இப்டி ஒருநாள் ஒரு பெரிய கல்யாண மண்டபத்துல நம்ம பேர் எழுதி, நமக்கு கல்யாணம் நடக்கும் பாரு” என்றான் அவன்... நடக்கவே வாய்ப்பில்லாத விஷயம் என்றாலும், மனதிற்குள் ‘அப்படி நடந்தா எப்டி இருக்கும்!’ என்ற ஆசை என்னை நிறைத்தது....
என்னை மறந்து நான் மண்டபத்தின் முகப்பில் நின்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, என் தோளை தொட்டது ஒரு கை.... சட்டென திரும்பி பார்த்த என்னை பார்த்து சிரித்தபடி நின்றார் பாலாவின் அப்பா....
“என்ன விஜய் இப்போதான் வந்தியா?”
“ஆ... ஆமாப்பா... இப்போதான்”
“வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“இருக்காங்கப்பா”
சுற்றி முற்றி பார்த்த அவர், “டேய் பாலா, இங்க வா” என்று கூற, நான்கைந்து கடா மீசை ஆசாமிகளை விலக்கிவிட்டு, என்னை பார்த்தபடியே வந்தான் பாலா.... ஆறு மாதத்தில் பெரிதாக ஒன்னும் மாறிவிடவில்லை அவன்... கொஞ்சம் உடல் இளைத்திருக்கிறான்... முகம் பளபளப்பாக இருக்கிறது, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்த பேசியல் விளைவாக இருக்கலாம்.... முதன்முதலாக அவனை வேட்டியில் இப்போதான் பார்க்குறேன்... கல்லூரி நாட்களில் நடந்த நாடகத்தில் வேட்டி கட்டவேண்டும் என்ற காரணத்தால், கடைசி நேரத்தில் நடிக்க மறுத்தவன் இப்போ என் கண் முன்னால் வேட்டியோடு...   மாப்பிள்ளை வேடத்தில் இருந்தாலும், அந்த மாப்பிள்ளை கலை என்று சொல்வார்கள் அல்லவா, அது அவன் முகத்தில் காணப்படவில்லை...
என்னை நெருங்கும்போது லேசான புன்னகை அவன் உதட்டை கிழித்தபடி எட்டிப்பார்த்தது.... பதிலுக்கு நானும் சிரித்தேன்...
“வாடா, நல்லா இருக்கியா?” என்ற அவன் குரலில் கொஞ்சமும் அன்னியம் தெரியவில்லை... இயல்பான கல்லூரி நண்பனிடத்தில் பேசுவதைப்போல அவனால் எப்படி, எல்லாவற்றையும் மறைத்தபடி பேசமுடிகிறது என்று புரியவில்லை....
“ஹ்ம்ம்... இருக்கேன்”
“வாடா சாப்பிடலாம், எல்லாரும் டைனிங் ஹால்ல இருக்கானுக” என்று கூறியவன் முன்னே செல்ல, கனத்த மனதுடன் அவன் பின்னே நான் சென்றேன்... டைனிங் ஹாலுக்கு செல்லும் அந்த இருபதடி இடைவேளையில் நான்கு முறை பாலா அவன் உறவினர்களால் வழிமறிக்கப்பட்டு “குசலம்” விசாரிக்கப்பட்டான்... முதல் வரிசையில் அமர்ந்து சிக்கன் துண்டுடன் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறான் தினேஷ், பரோட்டாவில் சில கரண்டி கிரேவியை ஊற்றி ஊறவைத்துக்கொண்டு இருக்கிறான் வெங்கட், பக்கத்து இலையில் வைக்கப்பட்ட இனிப்பு பதார்த்தத்தின் அளவோடு தன் இலை பதார்த்தத்தின் அளவை ஒப்பிட்டுப்பார்த்து கொண்டிருக்கிறான் குமார்... இவர்களெல்லாம் திருமண வேலை பார்ப்பதற்காக வந்ததாக சொல்லிக்கொள்ளும்  எங்கள் கல்லூரி நண்பர்கள்....
என்னை பார்த்ததும் சிரித்து, தங்கள் பக்கத்தில் இலை போட்டு அமரவைத்தார்கள் அந்த பாசக்கார நண்பர்கள்.... என் இலையில் உணவு வகைகள் நிரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.... பரோட்டாவிற்கு மட்டன் குழம்பு ஊற்ற வந்த நபரிடமிருந்து பாத்திரத்தை வாங்கினான் பாலா... அதுவரை மாப்பிள்ளை மிடுக்கோடு நின்றுகொண்டிருந்தவன், இப்போ அந்த மட்டன் குழம்பிற்குள் தேடிப்பிடித்து ஈரலை எடுத்து என் இலையில் வைத்தான்.... என்றைக்கோ ஒருமுறை நான் சாப்பிடும்போது ‘மட்டன்’ல ஈரல்தான் செம்ம டேஸ்ட்டுடா’ என்று சொன்ன விஷயத்தை இப்போவரை மறக்காமல் நினைவில் வைத்துள்ளான்.... தொண்டை துக்கத்தால் அடைத்தது....
“டேய் மாப்ள, நீ என்னத்த இவுன பண்ற?... மாப்புள இங்குட்டல்லாம் வரப்புடாது... மாமன் சீர் வரப்போற நேரம், வெளிய போய் நின்னு” உரிமையோட ஒரு உறவுக்கார பெருசு சொன்ன வார்த்தைக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல், என்னை பார்த்து மீண்டும் ஒருமுறை சிரித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே போனான்...
சாப்பிட்டு முடித்து மண்டபத்தின் மாடியில் நண்பர்களுக்கு மதுவிருந்து நடந்துகொண்டிருக்க, அதில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாமல் மாடி சுவற்றில் ஏறி அமர்ந்தவாறு கீழே நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்....
வான வேடிக்கைகளுடன் மாமன் சீர் வந்துகொண்டிருக்கிறது... பேண்ட் வாத்தியங்கள் முழங்க, நாட்டிய குதிரைகள் நடனமாட, கரகாட்டம் சகிதம் தலையில் சீர் தட்டுகளுடன் பெண்கள் வர, அவர்களுக்கு முன்னால் மாமன்மார்கள் கழுத்தில் மாலையோடு மண்டபத்தை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள்.... ஆரத்தி எடுத்து மாமன்கள் உள்ளே அழைக்கப்பட்டதோடு அந்த வைபவம் இனிதே முடிந்தது.... தங்கள் செல்வாக்கை காட்டவும், சகோதரியின் மீதான பாசத்தை காட்டவும் மாமன் சீர் என்பது அதிமுக்கியமான நிகழ்வாக அங்கு நடப்பது வழக்கம் என்று பாலா ஒருமுறை சொல்லியது எனக்கு நினைவிருக்கிறது.....
தனிமையில் அமர்ந்திருந்த என்னை அழைக்கிறான் குமார்....
“ஏண்டா தனியா நிக்குற?... வா, வந்து ஜோதில ஐக்கியமாகுடா” என்றான்....
அடப்பாவி! நான் இப்படி தனிமையில் நின்று புலம்ப காரணமே நீதானேடா.... ஆறு வருட எங்கள் காதலை, அரை நிமிடத்தில் சிதற செய்தவன் நீதான்.... ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த எங்கள் கல்லூரி நண்பர்கள் சந்திப்பு மட்டும் நடந்திடாமல் இருந்திருந்தால், நிச்சயம் இவ்வளவு மனக்குழப்பங்களுடன் இப்போது நான் இங்கு புலம்பிகொண்டிருக்க மாட்டேன்....
வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சந்திப்பு என்பதால் பலரை பற்றியும் பலவாறும் பேசிக்கொண்டிருக்கையில் இந்த குமார் தான் தொடங்கினான்....
“என்னடா விஜய், உன் புருஷன் வரலையா?”
அதிர்ச்சியில் நான் நின்றேன், பாலாவுக்கும் அதே அதிர்ச்சி இருப்பதை அவன் முகத்தை பார்த்ததும் அறிந்துகொண்டேன்.... எங்கள் அதிர்ச்சிக்கு காரணம், எங்கள் காதல் பற்றி இவனுக்கு தெரிந்துவிட்டதா? என்கிற பயம்தான்....
நான் அதிர்ச்சி விலக்கி குமாரிடம் விளக்கம் கேட்பதற்குள், பாலாவே முந்திக்கொண்டான்....
“என்னடா உளர்ற?” என்றான்...
“உனக்கு தெரியாதா?... விஜயோட ரூம் மேட் பிரபுதான் அது...”
அதிர்ச்சி விலகி இப்போது குழப்பம் உண்டானது இருவருக்கும்...
எங்கள் குழப்பத்தை கவனித்த குமாரே தன் கொள்கை விளக்கத்தையும் கூறினான்....
“ஆமாடா... பிரபுவும் விஜயும் அவ்ளோ க்ளோஸ்... அதுவும் நம்ம பிரபு ஆக்ஸிடன்ட் ஆகி ப்ராக்சரோட இருந்தப்போ, சகலமும் விஜய்தான்...” உண்மைதான், நல்ல நண்பன் விபத்தில் அடிபட்டு அறையில் இருந்தபோது உதவிகள் செய்தேன், அந்த உறவை கொச்சைப்படுத்தும் குமாரை பார்த்து எரிச்சல் ஆனது... இதை ஜோக் என்று சொல்லிக்கொண்டு அவன் சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் கடனுக்கு சிரித்து வைத்தார்கள்... மற்றவர்கள் சிரிப்பதில் எனக்கு கோபமில்லை, அதைக்கேட்ட பாலாவும் சிரித்துக்கொண்டு இருக்கிறான்... ஒருவேளை குமாரின் ஜோக்’களுக்கு யாரும் சிரிக்கவில்லை என்றால், அடுத்த ஜோக் அந்த சிரிக்காத நபரை பற்றிதான் இருக்கும் என்பது நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்று... அதனால்தான் அனைவரும் சிரிக்க, பாலாவும் உடன் சிரித்தான்...
கடுப்பிலும் கோபத்திலும் அந்த இடத்திலிருந்து விலகி அருகில் இருந்த மரத்தடியை நோக்கி நடந்தேன்... நான் கோபத்தில் இருப்பதை உணர்ந்த பாலா என் பின்னாலேயே வந்தான்... அவன் வருவதை நான் உணர்ந்தாலும், அதை கண்டுகொள்ளாதவனை போல மரத்தடியில் சென்று அமர்ந்தேன்...
“என்னடா தனியா வந்து உக்காந்திருக்க?... செம்ம மூட்ல இருக்க போல” தீ என்று தெரியாமல் பாலா விரலை வைத்து பார்க்கிறான், அதன் சூட்டை விரைவில் அனுபவிக்க போகிறான்....
“ஆமா மூட்ல இருக்கேன்.... இருக்குற மூட்ல உன் சங்கை கடிச்சு துப்பத்தான் போறேன்” அனலாக வார்த்தைகளை கொப்பளித்தேன்....
“ஏய் லூசு.... குமார் சொன்னதுக்கல்லாம் கோபப்படுவியா?... அவனை பத்தி உனக்கு தெரியாதா?... லூஸ் டாக்கிங் டா அவன்” என் தோள் மீது கைவைத்து என் அருகில் அமர்ந்தான்....
“அவன் சொன்னதுல எனக்கு கோபமில்ல... அவன் சொன்னதுக்கு நீ அவன் மேல கோபப்படுவன்னு நினச்சேன்... ஆனால், அதை ஒத்துக்கற மாதிரி நீயும் சேர்ந்து சிரிக்குற... அதான் எனக்கு கோபமே”
“டேய், அவன் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னான்... நீ இவ்ளோ ரியாக்ட் பண்றத பார்த்தா, ஒருவேளை அது உண்மையா இருக்குமோனு சந்தேகப்பட போறாங்க எல்லாரும்”
“சந்தேகப்படுவாங்களா? சந்தேகப்படுவியா?”
“பொதுவா சொன்னேன்டா”
“அப்போ உன் மனசுலயும் அப்டி ஒரு சந்தேகம் இருக்குதானே?....உன்னல்லாம் லவ் பண்ணதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு... நீ மனுஷன் இல்ல, பேய்... சாதாரண பேய் இல்ல, சந்தேக பேய்... உனக்குன்னு மானம் ரோஷம் எதுவும் இருந்தா, இனிமேல் என்கூட எதுவும் பேசாத...” கலங்கிய கண்களோடும், நடுங்கிய உடலோடும் அவனை பிரிந்த நான் ஐந்து மாதங்களாக எதுவும் பேசவில்லை.... தவறு செய்த அவன் பேசுவான் என்ற என் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருந்தது.... அந்த சமயத்தில் ஒருநாள் வந்த பாலாவின் அலைபேசி அழைப்பை பார்த்து வானுக்கும் பூமிக்குமாக குதித்தேன்.... ஆனால், அப்போது அவன் “அடுத்த மாசம் எட்டாம் தேதி எனக்கு கல்யாணம்... உன் அட்ரஸ்’க்கு இன்விட்டேசன் அனுப்பிருக்கேன்.... வந்திருடா” என்றான்...
என்னிடம் பதிலாக ஏதோ எதிர்பார்த்து சில வினாடிகள் மெளனமாக காத்திருந்தான், என்ன எதிர்பார்க்கிறான்?... ஆனாலும் அது பற்றி யோசிக்கவல்லாம் எனக்கு தோன்றவில்லை... “ஹ்ம்ம்... சரி” என்று மட்டும் சொன்னதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது....
நீங்க நரகத்துக்கு சென்றிருக்கிறீர்களா?... நான் போயிருக்கேன்.... அவன் தன் திருமணத்தை பற்றி சொன்ன அந்த நாள் முதல், இன்று வரையிலான இந்த ஒருமாதமும் நான் நரக வேதனையை அனுபவித்தேன்...
அதுவரை என்னை மறக்கவே மாட்டேன் என்று சொன்னவன், வாழ்க்கை முழுவதும் என்னோடு இருப்பதாக உறுதி அளித்தவன், எத்தகைய எதிர்ப்பையும் எங்கள் காதலுக்காக சமாளிப்பதாக கூறியவன் இன்று என்னைவிட்டு பிரிவதை எவ்வித உறுத்தலும் இன்றி என்னிடம் கூறிய அந்த நொடி முதல், நான் என்னை மறந்தவனாக, முற்றும் துறந்தவனாக வாழ்ந்து வருகிறேன்....
இப்போதும் நான் ஏன் இங்கு வந்தேன்? என்று எனக்கு தெரியவில்லை.... இன்னும் சில மணி நேரங்களுக்குள் என்ன மாற்றம் நடந்துவிடப்போகுது? எதுவும் தெரியவில்லை.... ஏதோ ஒரு இயக்கு விசை என்னை இயக்கிக்கொண்டு இருக்கிறது...
தரையை பார்த்து இப்படி யோசித்துக்கொண்டிருந்த நான், நிமிர்ந்து பார்த்தபோது அதிர்ந்தேன்.... என் முன்னால் பாலா நிற்கிறான், சம்பிரதாய புன்னகையுடன்....
“ஏண்டா நீ தண்ணி அடிக்கலையா?” என்றான்...
“இல்ல”
“ஏன்?”
“தோணல...”
“நீ வரமாட்டேன்னு நெனச்சேன்”
“வரக்கூடாதுன்னு நெனைக்கல தானே?”
“இல்லடா, நீ வரணும்னுதான் நெனச்சேன்”
“ஏன் இந்த அவசர கல்யாணம்?”
“அவசர கல்யாணம் இல்ல, முன்னாடியே பேசுனதுதான்.... ஜாதகத்துல இந்த மாசம் கல்யாணம் வச்சுக்க சொல்லிருக்காங்களாம்... அதான்”
இருவரும் சில நொடிகள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... சாலையை வெறித்து பார்த்துக்கொண்டு நின்றோம்.... சோடியம் விளக்கு வெளிச்சத்தில் பாலாவின் முகம், ரொம்பவே பொலிவாக தெரிகிறது... சில நொடிகள் ஆசைப்பார்வையை தணித்து, முகத்தில் இருந்த பார்வையை திருப்பி தரையை நோக்கி பார்த்தேன்....
“உனக்கு சம்மதம் தானே?”
ஹ்ம்ம்...”
“பொண்ணு பிடிச்சிருக்கா?”
“ஹ்ம்ம்... நல்ல பொண்ணு, ஐடி தான்... அழகா இருப்பா... அவங்க அப்பா அரசியல்வாதி.... நல்ல குடும்பம்”
சொல்லும்போது சிரித்துக்கொண்டே சொன்னான்.... அவனுக்கு பிடித்திருக்கிறது போலும்...
எங்கள் இருவரது உரையாடலுக்கு இடைபுகுந்தான் ஒருத்தன்...
“அத்தான், சீக்கா சுத்தனுமாம், உங்கள கூப்பிடுறாங்க” என்றான் அந்த மாப்பிள்ளை மைத்துனன்...
“ஐயோ நான் மறந்தே போய்ட்டேன், நேரமாச்சு.... அப்புறம் பார்க்கலாம்டா” என்று சொல்லிவிட்டு வந்தவனுடன் கீழே சென்றான் பாலா... அவன் சென்ற திசையை சில மணித்துளிகள் வெறித்து பார்த்தபடி நின்றேன்... இப்போவரை ஏதோ ஒரு நம்பிக்கையில் அவனுக்காக காத்திருந்த நான், அந்த நம்பிக்கையில் நியாயமில்லை என்பதை உணர்ந்தேன்.... என் மீது இருந்த வெறுப்பாலா? அந்த பெண் மீது இருந்த விருப்பாலா? என்ன காரணம் என்று புரியவில்லை, ஆனாலும் இந்த திருமணம் பாலாவின் முழு விருப்பத்துடன் நடைபெற இருக்கிறது...
பழைய நினைவுகளை அசைபோட அவன் விரும்பவில்லை, இப்போவரை பழைய விஷயங்கள் எதையும் அவன் பேசாததில் இருந்து எனக்கு அது புரிகிறது.... அன்பான குடும்பம், அழகான சொந்தம், நிம்மதியான வாழ்க்கை... எல்லாவற்றையும் எனக்காக விட்டுவிட்டு அவன் வருவதாக சொன்னது எதார்த்தத்தை மீறிய விஷயம் என்பதை நான் உணராமல் விட்டுவிட்டேன்... தவறு என் மீதும் இருக்கிறது... இந்த ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு நாளும் அவன் அழைப்புக்காக காத்திருந்த நான், ஒரு அரை நிமிடம் அவனை தொடர்பு கொள்ள நினைக்கவில்லை.... ஈகோ, பிடிவாதம் எல்லாம் சேர்ந்து என்னை தனிமையில் நிற்கவைத்து விட்டது...
பாலாவின் அருகில் நெருங்கி நிற்பவனை கூட இத்தனை காலம் பார்வையால் எரித்த நான், நாளை காலையில் அந்த பெண்ணுக்கு மட்டுமே உரியவனாக போகும் பாலாவை நினைத்துக்கூட பார்க்க முடியல.... கண்களில் திரண்ட நீரை மீண்டும் கண்ணுக்குள் உள்வாங்கிக்கொண்டேன்... நான் அழக்கூடாது, இப்போ அழுதுவிட்டால் அவனுக்காக வாழ்க்கை முழுக்க அழுதுகொண்டே இருக்கும்படி ஆகிவிடும்....
அருகில் உள்ள அறையில் படுத்துவிட்டு, காலை விடிவதற்கு முன்னால் எழுந்து சென்றுவிட தீர்மானித்தேன்.... போதையின் மிகுதியால் எழுந்து அறைக்கு சென்று கூட படுக்க முடியாமல், நண்பர்கள் அங்கே ஆளுக்கொரு திசையாக கிடக்கிறார்கள்... சிக்கன் துண்டுகளில் எறும்பு மொய்த்திட, அந்த எறும்புக்கூட்டம் அங்கு கிடப்பவர்களின் மீதேறி சாவகாசமாக நடந்து செல்கின்றன... பாட்டிலில் இருந்து கீழே ஊற்றிக்கிடந்த மதுவின் வாடையில் ஈக்களும் அங்கு வலம் வந்தன...  எல்லாவற்றையும் எவ்வித உறுத்தலுமின்றி தாண்டி சென்று, அறையில் படுத்தேன்...
நிச்சயம் தூக்கம் வராது என்பது எனக்கு தெரிந்தாலும், துக்கத்தை மறைப்பதற்காகவாவது உறங்க முயற்சிக்க வேண்டும்.... கண்களை மூடி வேறு சிந்தனைகளை எனக்குள் திணித்திட கடும் பிரயத்தனம் செய்தேன்...  அந்த நேரத்தில் அறைக்கதவு திறக்கப்பட, கழுத்தை மட்டும் உயர்த்தி பார்த்த நான் அதிர்ச்சியானேன்.... கதவை சாத்திவிட்டு படுக்கையை நோக்கி வந்துகொண்டு இருக்கிறான் பாலா...
விடிந்தால் திருமணம், மாப்பிள்ளை இந்த நள்ளிரவு நேரத்தில் என் அருகில்... அது கனவா? நிஜமா? என்பதை நான் சுதாரிப்பதற்கு முன்பு, என் அருகில் வந்து அமர்ந்தான் பாலா....
“எ... என்னடா?... என்ன இந்த நேரத்துல?” தட்டு தடுமாறி கேட்டேன்...
“ஒண்ணுமில்ல சும்மாதான்.... நைட் இங்கயே படுத்துக்கவா?” அவன் இப்படி கேட்டதும் என் மனம் பிசையப்பட்டதை போல உணர்கிறேன்... என்னருகே படுப்பதற்கு என்னிடம் சம்மதம் கேட்கிறான்!.... அப்படியே அவன் கன்னத்தில் அறைந்து, கட்டிப்பிடித்து, “நீ என் உயிர்டா... உனக்கு எல்லா உரிமையும் இருக்கு... நீ பர்மிஷன் கேட்கலாமா?” என்று சொல்ல மனம் துடிக்கிறது, ஆனால் அந்த ஒரு நிமிட பேச்சு அவன் வாழ்க்கையை பாதித்துவிட கூடாது என்கிற தயக்கத்தில் “ஹ்ம்ம்... சரிடா” என்று மட்டும் சொன்னேன்...
என் அருகில் அவன் படுத்திருக்க, என் கையின் ஒரு பகுதி அவன் கையேடு ஒட்டியபடி இருந்தது... சில நிமிட மௌனத்துக்கு பிறகு நான், “சாரிடா....” என்றேன்....
“எதுக்கு?”
“எல்லாத்துக்கும்.... நான் அன்னிக்கு அப்டி உன்கிட்ட பேசிருக்க கூடாது”
“இல்லடா... தப்பு என் மேலையும் இருக்கு... இனி அதப்பத்தி பேசவேணாம்”
ஆம் அவன் சொல்வதும் சரிதான்... காலம் கடந்து கேட்கப்படும் மன்னிப்பு, எவ்வித பயனும் அற்றது என்பதை நானும் உணர்கிறேன்...
“உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே?” என்கிறான்... என்னை பார்த்த பிறகும், என் கண்ணை பார்த்த பிறகும் அவனால் எப்படி இப்படி கேட்கமுடிகிறது?... வாயால் சொன்னால்தான் என் வருத்தம் அவனுக்கு புரியுமா?... ஆனாலும், அவன் திருமணத்தில் விருப்பத்தோடு இருக்கையில் நான் குழப்பக்கூடாது....
“இல்லடா... எனக்கு ஒண்ணுமில்ல.... நம்ம விஷயம் சாத்தியமில்லை’னு எனக்கு எப்பவோ தெரியும்.... எல்லாம் எதிர்பார்த்ததுதான்”
“நீயும் கல்யாணம் பண்ணிக்க போறியா?”
“ஆமா.... வீட்ல பொண்ணு கூட பார்த்துட்டு இருக்காங்க.... நிச்சயம் நீயும் உன் மனைவியும் கல்யாணத்துக்கு வரணும்” சில நிமிஷங்கள் அவன் எதுவும் பேசவில்லை.... இந்த ஒரு பொய், அவனை வாழ்க்கை முழுவதும் குற்ற உணர்ச்சி இன்றி வாழவைக்கும் என்பதால் தான் இப்படி பொய் சொல்கிறேன்...
“இப்டி கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழ முடியுமாடா?” அவன் எந்த அர்த்தத்தில் அப்படி கேட்கிறான்? என்று எனக்கு புரியவில்லை... ஒருவேளை என் முடிவை அவன் சோதித்து பார்க்கிறான் போல...
“ஹ்ம்ம்... முடியும்னு நம்புவோம்”
அவன் கையேடு உரசிக்கொண்டிருந்த என் கையை இறுக்கி பிடித்தான்... அந்த கையை என் மார்பின் மீது எடுத்து வைத்தேன்... என் மார்பு துடிப்பை அவன் கை உணர்ந்திருக்கும்... சட்டென நான் சூழலை உணர்ந்தேன், அவன் கையை விலக்கி தனியே எடுத்துக்கொண்டேன்... நிலைமை அத்துமீறினால் பலரது வாழ்க்கை அர்த்தமற்று போய்விடும் என்பதை உணர்கிறேன்.... இருவரும் அதன்பிறகு எதுவும் பேசிக்கொள்ளவில்லை... என்னை அறியாமல் கண்ணயர்ந்த நான் விழிக்கும்போது, நேரம் விடியலை நெருங்கிக்கொண்டு இருந்தது.... மெல்ல எழுந்து, அவன் அறியாமல் ஊருக்கு சென்றுவிட தீர்மானித்தேன்... படுக்கையில் இருந்த எழ முயற்சித்த போது, அவன் வலது கை என் சட்டையின் முனையை இறுக்க பிடித்திருப்பதை கண்ட எனக்கு என் இதயமே நொறுங்குவதை போல உணர்கிறேன்...
அவன் கை விரல்களில் இருந்து என்னை விடுவித்துவிட்டு, அவன் கன்னத்தில் அவன் உணராவண்ணம் என் ‘இறுதி முத்த’த்தை கொடுத்தேன்.... கன்னங்களில் பிசுபிசுப்பை உணர்கிறேன், இரவு அழுதிருக்கிறான் என்று புரிகிறது... என் பையை எடுத்துக்கொண்டு கதவை திறந்த அந்த நொடியில், “விஜய்.... காலைல எட்டு மணிக்கு முகூர்த்தம்... எங்கயும் போய்டாத” என்ற குரல் பாலாவுடயதுதான்...
எப்போது விழித்தான்? என்று புரியவில்லை... பதிலெதுவும் கூறாமல், மீண்டும் அறைக்குள் வந்து பையை கீழே வைத்துவிட்டு, இருக்கையில் அமர்ந்தேன்...
“என்னோட வாழ்க்கை முழுக்க நீ இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும், குறைஞ்சது என் முகூர்த்த நேரம் வரைக்குமாச்சும் இருக்கலாம்ல” கண்களில் திரண்டு இருந்த நீர் அவனை அறியாமல் கீழே விழும் நேரத்தில் அவன் சொன்ன இந்த வார்த்தைகள் என்னை சிதிலமாக்கின.... எதுவும் என்னால் பேசமுடியவில்லை, அழுதிட சொல்லி மனம் நிற்பந்தித்தாலும் அடக்கிக்கொண்டு தரையை பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்...
இறுக்கமான அந்த சூழலை இயல்பாக்கும் வண்ணம் அறைக்கதவை திறந்தான் பாலாவின் மைத்துனன்...
“அத்தான், வாங்க.... குளிச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு வரணுமாம்” வந்தவன் சொல்ல, தயக்கத்துடன் மெல்ல எழுந்து வெளியே சென்றான் பாலா... நான் சென்றுவிடுவேனா? என்கிற தயக்கம் தான் அது...
மணி எட்டு ஆனது...
மங்கள வாத்தியங்கள் முழங்கிக்கொண்டு இருக்கிறது, திருமணத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பெண்ணுமே தன்னை மணப்பெண்ணாக நினைத்து அலங்கரித்துக்கொண்டு வருகிறார்கள்... தெரிந்தவர், தெரியாதவர் என்று யாராக இருந்தாலும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து சாப்பிட சொல்லிக்கொண்டு இருக்கிறார் பாலாவின் அப்பா... வந்திருந்த முகங்கள் மீது பிளாஷ் ஒளி படர, வீடியோ கவரேஜ் செய்தான் ஒரு இளைஞன்...
மணமேடையில் பாலாவும், மணப்பெண்ணும் நான்கைந்து மணப்பெண் தோழிகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்... மணப்பெண் பாலாவிற்கு பொருத்தம் இல்லாதவள், நேற்று இரவு “அழகா இருப்பா” என்று பெண்ணை பற்றி பாலா சொன்னது எதனடிப்படையில்? என்று எனக்கு தெரியவில்லை... . மூன்றாம் வரிசையில், என் நண்பர்களைவிட்டு விலகி தனிமையில் நான் அமர்ந்திருக்கிறேன்.... மேடையிலிருந்த பாலாவின் கண்கள், வந்திருந்த கூட்டத்தை அளவெடுத்தது... யாரையோ தேடிக்கொண்டு இருக்கிறான்.... என்னை பார்த்ததும் அந்த தேடல் முடிந்ததை போல, லேசான புன்னகையை உதிர்க்கிறான்.... பட்டு வேஷ்டி சட்டையில் ‘என்’பாலா பேரழகனாக தெரிகிறான்... இன்னும் அரை மணி நேரம் தான் அவன் ‘என்’ பாலா என்று நினைக்கும்போது மனதில் சொல்ல முடியாத சோகம் உண்டானது....
மனதின் சோகங்களை வெளிப்படுத்தி விடாமல், எனக்குள் வைத்தவாறே நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்... என் அருகில் இருந்த காலி இருக்கையில் வந்து அமர்ந்தான் ஒரு இளைஞன்....
“ஹாய் விஜய், எப்டி இருக்கீங்க?” என்று என்னை பார்த்து கேட்பவனின் முகம் பரிச்சயமானதாக இருந்தாலும், யாரென்று சட்டென நினைவுக்கு வரவில்லை... அடர்த்தியான புருவங்கள், எடுப்பான மூக்கு, சிரிக்கும்போது மட்டும் புலப்படும் தெத்துப்பல்... ஆங்., நினைவுக்கு வந்துவிட்டான்... இவன் பாலாவின் பள்ளி நண்பன் ராஜா... அவன் பல்லை பார்த்ததும் எனக்கு அவன் நினைவுக்கு வரக்காரணம், பாலா இவனுக்கு வைத்த பெயர் “ஓட்டை வாயன்” என்பதால்தான்...
அதற்கான பெயர்க்காரணம் கூட உண்டு.... பரம ரகசியம் ஒன்றை, “யார்ட்டயும் சொல்லிடாத” என்று சொல்லிவிட்டு நாம் நான்கடி நகர்வதற்குள், அதை ஐந்து பேரிடம் உளறிவிடுவான்... “அஞ்சாவது படிக்குற வரைக்கும் பாலா படுக்கைல ஒன்னுக்கு போய்டுவான்” என்று பாலாவை பற்றிய அந்த சிதம்பர ரகசியத்தை காரைக்குடி வந்திருந்தபோது என்னிடம் ராஜா சொன்னதற்காக, துரத்தி துரத்தி அவனை அடித்தான் பாலா... அதன்பிறகு ஒரு மாதம் நான் பாலாவை அதை சொல்லியே கிண்டல் செய்தது நேற்று நடந்தது போல இருக்கிறது....
அவன் முகத்தை பார்த்தவாறே நான் இவ்வளவையும் யோசித்ததை கவனித்த ராஜா, “என்னங்க ஆச்சு?.. என்னை நினைவில்லையா? என்றான்....
“ஐயோ ராஜா, நல்லா ஞாபகம் இருக்கு.... எப்டி இருக்கீங்க?”
“ஹ்ம்ம் இருக்கேன்... ஏன் அதுக்கப்புறம் உங்கள ஊர்பக்கமே பாக்க முடியல?”
“கொஞ்சம் வேலையா போச்சுங்க... அதான்”
“சரி சரி... பாலாவை இந்த ஆறு மாசமும் நீங்கல்லாம் தனியா அழ வச்சுட்டிங்க”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா... அவனுக்கு இஷ்டமில்லாம கல்யாணம் பண்ணதால ஒரு ரெண்டு மாசமா ரொம்பவே மனசொடஞ்சு போய்ட்டான்... எதுவும் தெரியாத மாதிரி பேசுறீங்க?..” ராஜா சொல்வதை கேட்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது... இஷ்டமில்லாம பண்ணிக்கறானா?.. அப்போ நேத்து நைட் சந்தோஷமா இருக்குற மாதிரி பேசுனது எதனால?... மேடையிலிருந்த பாலாவை பார்த்தேன், அவன் என்னைதான் பார்த்துக்கொண்டு இருக்கிறான்... ராஜாவின் அருகில் நான் இருப்பதால், எனக்கு தெரியக்கூடாத விஷயங்கள் தெரிந்துவிடுமோ! என்கிற பயத்தில் முகம் வெளிறிப்போய் இருக்கிறான்...
“ஏன் இஷ்டமில்லை அவனுக்கு?”
“அப்போ நெஜமாவே உங்களுக்கு தெரியாதா?.... என்ன பிரச்சினை’னு தெரியல... எப்பவும் போனை கைல வச்சு, ஏதோ காலுக்காக வெயிட் பண்ணிக்கிட்டே இருப்பான்... ‘லவ் எதுவுமா?’னு நான் கேட்டா, பதில் சொல்ல மாட்டான்... தண்ணி அடிச்சிட்டா ‘சாரிடா... நான்தான் தப்பு பண்ணிட்டேன்... உன்ன சந்தேகப்படுற மாதிரி நான் நடந்தது என் தப்புதான்’னு புலம்புவான்.... எனக்கு ஒன்னும் புரியாது... வீட்ல ரொம்ப பிரஷர் கொடுத்ததால, ஒத்துக்கிட்டான்... பொண்ணு குடும்பம் கூட சரி இல்லாத குடும்பம்.... ஒருவேள நீங்கல்லாம் இருந்திருந்தா, உங்ககிட்டயாவது சொல்லிருப்பான்...”
எனக்கு எல்லாம் புரிகிறது.... என் அழைப்புக்காக இவ்வளவு நாள் காத்திருக்கிறான்... ஒரு கட்டத்தில் குடும்ப நிர்பந்தத்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டான்... அப்போ நேற்று சந்தோஷமாக இருப்பது போல நடித்தது எதற்காக?... அவன் திருமணத்துக்கு பிறகு நான் வேதனைப்பட கூடாது என்பதற்காகவா?.... அவன் கஷ்டப்பட கூடாதுன்னு நானும், நான் கஷ்டப்பட கூடாதுன்னு அவனும் பொய் சொன்னதுல, இப்போ ரெண்டு பேர் வாழ்க்கையும் நிர்மூலமா ஆகப்போகுது...
அட்சதை தட்டு கொண்டுவரும் பெண்மணி, என் முகத்திற்கு நேராக தட்டை நீட்ட சிறிது அட்சதையை கையில் எடுத்துக்கொண்டேன்... இப்போதும் மேடையில் இருக்கும் அவன் என்னையே பார்க்கிறான், என் கண்கள் கலங்கியதை பார்த்த அவன் நிச்சயம் எல்லாவற்றையும் புரிந்திருப்பான்...
ராஜாவிற்கு அலைபேசியில் அழைப்பு வர, அதை கையில் எடுத்துக்கொண்டு சத்தமில்லா இடத்தை நோக்கி நகர்ந்தான்...
மெல்ல நானும் எழுந்தேன்... மனம் நிறைய எதிர்பார்ப்புடன் மணப்பெண் அமர்ந்திருக்கிறாள் மேடையில், மகனின் திருமண மகிழ்ச்சியில் அப்பா நிற்கிறார்  மண்டப வாசலில், பாலாவின் திருமணத்திற்காக பலநாள் காத்திருந்த உறவினர்கள் எல்லோரும் என் கண் முன்னால் தெரிகிறார்கள்... எழுந்து மேடைக்கு சென்று, அவனை கட்டிப்பிடித்து அழவேண்டும் போல இருந்தது.... அந்த ஒரு நிமிட நிகழ்வு, இங்கு அத்தனை பேருடைய மகிழ்ச்சியையும் காணாமல் செய்துவிடும் என்பது எனக்கு தெரியும்.... இப்போ காலம் கடந்துவிட்டது, இனி அப்படி ஒரு எண்ணம் வருவதே மிகப்பெரிய தவறு.... மீண்டும் ஒருமுறை பாலாவின் முகத்தை பார்த்தேன், விழிகளின் ஓரத்தில் கண்ணீர் திரண்டு இருக்கிறது... குழம்பிய மனதோடு எழுந்து நின்ற நான், மண்டப வாசலை நோக்கி திரும்பினேன்... இனியும் ஒருமுறை அவனை திரும்பி பார்க்க கூடாது என்ற உறுதியோடு வாசலை நோக்கி நகர்ந்த என் உறுதி, சில அடிகளிலேயே தளர்ந்துவிட்டது... இப்போதும் இறுதியாக அவனை பார்க்கிறேன், ஏக்கமும் ஏமாற்றமும் கலந்த முகத்தோடு என்னை ஏதோ எதிர்பார்ப்பில் பார்க்கிறான்.....கல்லான மனதோடு, மண்டப வாசலை நோக்கி விரைந்தேன்.... தாலி கட்டும் நேரம் என்பதால் மண்டப வாசலில் இருந்த நபர்கள் எல்லாம் உள்ளே வர, நான் மட்டும் வெளியே சென்று கொண்டு இருக்கிறேன்.... கையில் இருந்த அட்சதை என்னை அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுந்துகொண்டு இருக்கிறது....
மண்டப வாசலை தாண்டி என் கார் நிப்பாட்டியிருக்கும் இடத்தை அடைந்த நேரத்தில் “கெட்டிமேளம்” சத்தம் அரங்கம் அதிர ஒலித்தது... அவன் வாழ்வில் ஒலிக்கும் சுபமான ஒலிதான், என் வாழ்வின் இடியாக இடிக்கிறது... அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த என் சோகங்கள், கண்களை உடைத்துக்கொண்டு கண்ணீராய் வெளியாகின..... எவ்வளவுதான் அழுதிடக்கூடாது என்ற மன உறுதியோடு இருந்தாலும், இழப்பின் உச்சத்தில் அந்த அழுகை என்பது அனிச்சை நிகழ்வாக ஆகிவிட்டது.... நிற்க கூட திராணி இல்லாமல், மண்டியிட்டு மணல் தரையில் விழுந்தேன்.... மனம் முழுக்க வேதனையும், சோகமும் கலந்த உணர்வால் கண்ணீர் தாரை தாரையாக தரையில் விழுகிறது.... இனி எப்போதும் அவன் எனக்கில்லை... அவனுக்காக இனி நான் கண்ணீர் மட்டுமே சிந்த முடியும், என் கண்கள் சுரப்பதை நிறுத்தும் வரை... இனி நானே நினைத்தாலும், அந்த நீரோட்டத்தை நிறுத்த முடியாது...(முற்றும்)...

8 comments:

  1. Well, I like this story.... But not the endings.. I felt very bad.

    ReplyDelete
  2. ithe mathiri tha en life layum nadnathuiruku...

    ReplyDelete
  3. உண்மை கசக்கத்தான் செய்யும் நண்பா....

    கருத்துகளுக்கு மிகவும் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. ithu kathyalla nijam

      Delete
    2. இப்படி தான் நானும் என் நண்பனிடம் கோபமாக இருக்கிறேன் ஆனால் இருவருக்கும் பேச ஆசை தான் என்ன செய்ய ....................

      Delete
  4. unmai kasakathan seiyum nanba, great reply vijay.,

    ReplyDelete
  5. Nanum oru thara love pannen anna, ana avar straight athanala sollala, avar marriage ku nan pokavum illa enna ennala avar vera orutharukku sontham akaratha pakka mudiyathu...

    ReplyDelete