Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 29 April 2013

"ஜில்லுனு ஒரு பயணம்" - சிறுகதை...





 
வழக்கமாக நான் செல்லும் பேருந்தையும் இன்றைக்கு தவறவிட்டுவிட்டேன்... இப்பவே மணி ஒன்பது ஆகிடுச்சு, சத்திரத்திலிருந்து டோல்கேட் போவதற்கு எப்படியும் பத்து ஆகிடும்... இதுக்குமேல  வீட்டுக்கு போயி சாப்பிட்டு தூங்குறதுக்குள்ள... அப்பப்பா....  நாய் பொழப்பா ஆச்சு என் வேலை... காலைல ஆறு மணிக்கு தொடங்குற அலைச்சல், நள்ளிரவை நெருங்கும்வரை தொடர்ந்தால் எப்படி இருக்கும்?னு “நானாக” நீங்க இருந்து பார்த்தாதான் உங்களுக்கு புரியும்..... என்னுடைய எந்த கவலையின் சாயலுமே இல்லாமல், திருச்சி வழக்கமான உற்சாகத்தில் வழக்கம்போல இயங்கிக்கொண்டு இருக்கிறது... வலது புறத்தில் இருக்குற சாமியப்பா மெஸ்’சில் முட்டை பரோட்டாவை கொத்தும் சத்தத்தால் வயிற்றுக்குள் இப்பவே ஹைட்ரோக்லோரிக் அமிலம் சுரக்க தொடங்கிடுச்சு... .. பரோட்டாவை பிய்த்துபோட்டு, அதில் முட்டையை ஊற்றி, சிலபல மசாலாக்களை கலக்கும்போது அதிலிருந்து வெளியாகும் வாசனைக்கு எங்கள் மார்கெட்டிங் ஏஜென்சியை கூட எழுதிவைக்கலாம்னு பலநேரம் தோன்றும், ஆனால் அந்த விஷயத்துக்கு முதலாளி சம்மதிக்கமாட்டாரே, என்ன பண்றது?... என்னோடு சேர்ந்து, இன்னும் நான்கைந்து பேர் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள்...என்னைப்போலவே அவ்வப்போது அவங்களும் அந்த பரோட்டா கடையை ஏக்கத்தோட பார்க்கிறதுல நான் அங்கு தனிமைப்படுத்தவில்லை என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.. காலையில் கொண்டு போன கீரைகளில் விற்காத மீதியை கூடைக்குள் வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ஒரு கிழவி... அவள் கைகளில் காணப்பட்ட சுருக்க ரேகைகள், வாழ்க்கையின் மீதான பயத்தை எனக்குள் ஏற்படுத்துது.... இரண்டு கல்லூரி மாணவர்கள், ஒரு மத்திய வயதினன்... இவ்வளவுதான் அந்த பேருந்து நிறுத்தத்தில் என்னோடு பயணத்திற்காக காத்திருக்கும் சக பயணிகள்...  மத்திம வயது ஆசாமி நிற்க கூட முடியாத அளவுக்கு, கழுத்து வரை தண்ணி அடிச்சிருக்கான்... ஏனோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது, சற்று விலகி இடதுபுறம் இருந்த கம்பியின் மீது சாய்ந்தபடி நின்றேன்... நேரம் இப்போ ஒன்பதே கால் ஆகிடுச்சு, இன்னும் பஸ் வரல...
இந்த கடுப்பில் இருக்கும்போதுதான் மாமாவிடமிருந்து போன் வரணுமா?...
“ஹலோ... சொல்லு மாமா”
“என்னடா பண்ற புது மாப்ள?”
“சங்கம் ஹோட்டல்ல டின்னர் சாப்டுட்டு, சூட் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்... உனக்கும் ரூம் போட்ருக்கேன் வர்றியா?”
“என்னடா ரொம்ப சூடா இருக்க போல?... பொண்ணு பாத்துட்டு போனியே, ஒண்ணுமே சொல்லாம போய்ட்டன்னு அக்கா பொலம்பிகிட்டு இருக்கு... என்ன சொல்லட்டும்?”
“இப்ப என்ன அதுக்கு அவசரம்?... யோசிக்க நேரம் வேணும் மாமா”
“ரெண்டு நாளா யோசிக்காமலா இருந்திருப்ப?... சட்டு புட்டுன்னு சொல்லு, அடுத்து நெறைய வேலை கெடக்கு மாப்ள”
“ஹ்ம்ம்... சரின்னு சொல்லிடு...”
“இதுக்குத்தான் இந்த இழுவை இழுத்தியா?... வேற எதாச்சும் கண்டிஷன் இருக்கா?”
“சீர் என்ன கேக்குறீங்களோ இல்லையோ, ஒரு நல்ல பைக் வாங்கித்தர சொல்லிடு... தெனமும் பஸ்சுக்கு காத்திருந்தே பாதி வாழ்க்க முடிஞ்சிடும் போல... மத்ததெல்லாம் நான் உங்களுக்கு சொல்லனும்னு அவசியமே இல்ல, நீங்கதான் கான்வன்ட் ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் மாதிரி இருக்குறதல்லாம் புடிங்கிடுவீங்களே”
“அப்புறம், சும்மாவா விடுவோம்... பைக் என்னடா பைக்கு, முடிஞ்சா எலிகாப்டரே வாங்கிடுவோம்”
“வாங்குனாலும் வாங்குவீங்க... சரி, பஸ் வந்திடுச்சு, கல்யாணத்துக்கப்புறம் எலிகாப்டர் பத்தி யோசிச்சுக்கலாம்... இப்ப பஸ்ஸை விட்டுட்டா நடந்துதான் ரூமுக்கு போவனும்... ” சொல்லிவிட்டு மாமாவின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தேன்..
கூடையை படியில் வைத்தவாறு கீரை பாட்டி படிகளில் ஏறினாள்... வழக்கமான பிரயாணம் போல, நடத்துனரே கூடையை வாங்கி உள்ளே வைத்துவிட்டு, “என்ன பாட்டி, இன்னிக்கு போனி ஆவலையா?” என்று இன்னொரு கையால் பாட்டியின் கையை பிடித்து வண்டிக்குள் ஏற்றிவிட்டான்.... நானும் மற்ற ஓரிருவரும் வண்டியில் ஏறியதும்,  ஸ்டைலாக விசில் அடித்து பேருந்தை கிளம்ப செய்தான் அந்த நடத்துனன்.....
பேருந்தில் நிறையவே காலி இடம் இருந்தது.... இப்படி நிறைய இருக்கைகள் காலியாக இருந்தாலே, “எந்த சீட்டில் உட்காருவது?” என்ற ஒரு குட்டிப்போராட்டமே மனதிற்குள் நடந்திடும்... ஒருவழியாக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, சட்டையின் முதலிரண்டு பட்டன்களை கழற்றிவிட்டபடி பெருமூச்சு விட்டேன்.... வண்டி கிளம்பியதும் காற்றின் வேகத்தால், வியர்வை துளிகள் பட்ட இடமெல்லாம் சில்லிட்டது, உடல் சிலிர்த்தது... அன்றைய முழுப்போழுதின் அலுப்பும், இப்படிப்பட்ட சில தருணங்களில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் ஓடிடும்... ரம்பா தியேட்டரில் மாலை காட்சி முடிந்து மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.... எப்படித்தான் இவங்க வேலையும் பார்த்துட்டு, இப்டி வாழ்க்கையையும் என்ஜாய் பண்றாங்களோனு பல நாள் யோசிச்சும், இப்போவரை விடை கிடைக்கல... நான் எப்போ கடைசியா படம் பார்த்தேன்???... யோசித்துக்கொண்டே பேருந்தின் பின் இருக்கை பக்கம் பார்த்தேன்...  என் பின் சீட்டில் இன்னும் அந்த விற்காத கீரையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருக்கும், அந்த கிழவியை பார்த்ததும் தியேட்டர் ஆசாமிகளின் மீதிருந்த பொறாமை, காற்றோடு கரைந்துபோனது.... “இனி படம் எப்போ பார்த்தேன்?”னு யோசிக்க வேண்டிய அவசியம் எப்பவும் எனக்கு வராது....
மீண்டும் ஜன்னல் வழியே சாலையோரங்களை வேடிக்கை பார்க்க தொடங்கினேன்... பகலில் காணப்படும் பரபரப்பு சாயல் எதுவுமே இல்லாமல், பரீட்சை எழுதும் தேர்வு அறையை போல திருச்சி சலனமற்று போனதாய் தெரிகிறது... ஆனாலும், அதுவும் அழகாகத்தான் இருக்கிறது... அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது இன்னும் சிலர் பேருந்தில் ஏறினர்... என் அருகே யாரோ வந்து அமர்வதை உணர்கிறேன், என் பார்வை இன்னும் அந்த பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்ட “ஜோய் ஆலுக்காஸ்” தட்டி மாதவனை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்ததால், அருகில் அமர்ந்தவர் யாரென்ற ஆராய்ச்சி செய்யவல்லாம் மனம் முன்வரவில்லை... அலைபாயுதே படத்தில் பார்த்ததை போலவே இப்பவும் இருக்குறான்... அழகான சிரிப்போடும், குழறிய தமிழோடும் அவன் பேசும் அந்த பேச்சுக்காகவே பெண்கள் கூட்டம் அந்த கடையில் குவிகிறதோ? என்று பலநேரம் தோன்றும்... பேருந்து எடுக்கப்பட்டதும், என் கண்களிலிருந்து மாதவன் மெல்ல நகர்ந்தவாறே மறைந்தும் போனான்....
ஏனோ இப்போதும் அந்த கீரை பாட்டியை பார்க்க மனம் விரும்பியது.... ஒரு கையில் பேருந்தின் கம்பியையும், மறு கையில் கூடையயும் பிடித்தவாறே கண் அயர்ந்துவிட்டாள்... பேருந்து குலுக்கங்களில் அந்த கிழவியின் தலை முன்னும் பின்னும் ஆடியது கூட ஒரு அழகாகத்தான் இருக்கிறது... தூங்கும்போது கூட அவன் முகத்தில் அளவிட முடியாத ஒரு சோகம் பளிச்சிட்டது... மீண்டும் முன்பக்கம் திரும்பும்போதுதான் என் பக்கத்தில் இருந்தவனை கவனித்தேன்... சட்டென திரும்பியதில் அவன் முகத்தை என்னால் சரியாக கவனிக்க முடியல....
ஆனால், அந்த கண்ணிமைக்கும் நொடிப்பொழுது காட்சி என் மனதிற்குள் மீண்டும் அவனை பார்க்க தூண்டியது... தூரத்தில் இருப்பவனை எவ்வளவு நேரம் பார்த்தாலும் பிரச்சினை இல்லை, ஆனால் அருகில் இருப்பவனை எப்போவாச்சும் திரும்பி பார்த்தால் கூட ஏதோ ஒரு சந்தேகத்தை அவனுக்குள் ஏற்படுத்திடும்.... ஆனாலும் என் மனக்குரங்கு என்னை சும்மா விடவில்லை, எதேச்சையாக பார்ப்பதை போல அவனை பார்த்தேன்... முகத்தின் ஒரு பக்கத்தை மட்டும்தான் பார்க்க முடிந்தது... காதில் ஹெட்செட் மாட்டி இருக்கிறான், கண்கள் கைகளில் வைத்திருந்த மொபைலின் மீதே வெறித்தபடி இருந்தது... உதடுகள் மெல்ல ஏதோ ஒரு பாட்டை அழகாக முணுமுணுக்கிறது... அந்த செவ்விதழ்கள் அசைவு என்னை பலமாகவே அசைத்துவிட்டது.... அந்த பாதி முகத்துக்கே என்னை பித்தம் பிடிக்க வைத்துவிட்டான்... ஜீன்ஸ், டீ ஷர்ட் சகிதம் உடலை இறுக்கிப்பிடித்தபடி  ஆடையே அவன் ஆண்மையை பளிச்சிட வைத்தது.... அவன் பேரழகன் இல்லை என்றாலும், ஒருமுறை பார்த்தால் மறுமுறை மீண்டும் பார்க்கத்தூண்டும் ஒரு வசீகரனாய் தெரிந்தான்...
சில நிமிடங்கள் என் கண்கள் அவன் முகத்தையே இம்மி பிசகாமல் வெறித்து பார்த்ததை, வேறு எவரும் பார்க்கும் முன்னர் வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்... ஆனாலும், என் மனம் அவன் நினைவையே “பூவை சுற்றும் வண்டாக” சுற்றிக்கொண்டு இருந்தது....
எப்போதாவது நிகழும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போல அபூர்வமாகத்தான் இப்படி அற்புதமான பயணங்கள் கிடைக்கும்... இந்த இரவு நேர பயணங்களில், வழக்கமாக முகம் முழுக்க அசதியோடு வரும் தொழிலாளர்களும், டாஸ்மாக் கடைகளில் “வட்ட மேசை மாநாடு” முடித்துவரும் குடிமகன்களும் மட்டும்தான் பிரதானமாக இருப்பார்கள்... இன்றோ, காஷ்மீர் ஆப்பிளின் பொலிவும், அழகும் நிறைந்த இந்த இளைஞன் என்னருகில் பயணிக்கிறான்.... பேருந்து என்னவோ, குலுக்கமில்லாமல்தான் செல்கிறது... ஆனால், நான் “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் வரும் பாலைய்யா போல அதீதமாகவே குலுங்கினேன்... ஒவ்வொரு குலுக்கத்தின்போதும் என் கால்கள் அவன் கால்களோடு உரசும்படி செய்தேன்.... என் தோள்கள் அவ்வப்போது அவன் தோளோடு உரசியது...சரவெடி போல என் இதயம் படபடக்க தொடங்கியது....
“லட்சியம் உறவு, நிச்சயம் உரசல்” என்கிற உயர்ந்த கொள்கையோடு என்னையும் மீறி என் மனம் இயங்க தொடங்கியது.... பயம், பதற்றம் எல்லாம் இருந்தாலும், அதையும் மீறி அதில் ஒரு “கிக்” இருக்கவே செய்தது... இவ்வளவு மனப்போராட்டங்களின் எவ்வித சுவடுமே தெரியாமல், அவன் மொபைலில் அடுத்த பாட்டை மாற்றுவதில் கவனம் கொண்டிருக்கிறான்.... “அடுத்து எப்படி என் எண்ணத்தை செயலாக்குவது?” என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது, ஏதோ நிறுவனத்தில் வேலை முடிந்த ஊழியர்கள் ஒரே சீருடையில் பேருந்தில் ஏறினர்... அதுவரை காலி இடங்கள் நிறைய இருந்த பேருந்தில், இப்போது இருக்கைகள் நிரப்பப்பட்டு ஒருசிலர் நின்றுகொண்டு வரும் நிலைமை உண்டானது... “சரி கூட்டம் வந்தால், அதுவும் நல்லதுதான்” என்று நினைத்தவாறு என் கருமத்தில் நான் கண்ணாக இருந்த நேரத்தில், எங்கள் இருக்கையின் அருகில் வந்து நின்றார் ஒரு முதியவர்...
பார்த்ததும் முதியவர் என்று சொல்லும்படியாக இருந்தாலும், வயதென்னவோ ஐம்பதுகள் தான் இருக்கும்... மாறுவேட போட்டியில் பெரியார் வேடம் தரித்து, அவசரமாக அதை கலைத்துவிட்டு பேருந்து ஏறியதை போல வெண்தாடி மார்பை நோக்கி வழிந்தோடியது, லேசான முன்வழுக்கை... கையில் ஏதோ அட்டைப்பெட்டி... பேருந்து ஏறியதுமுதல், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் விடாமல் இருமிக்கொண்டு வந்த அவரை பார்த்தபோது “எதிர்நீச்சல்” படத்தில் வரும் “இருமல் தாத்தா” இப்படித்தான் இருப்பாரோ? என்று என்னை யோசிக்க வைத்தது....
அதுவரை மணமேடையில் அமர்ந்திருக்கும் மணப்பெண் போல, தாடையை மார்போடு இணைத்தபடி குனிந்தே அமர்ந்திருந்த அவன் இப்போது நிமிர்ந்து அந்த தாத்தாவை பார்த்தான்... அவன் காதுகளில் மாட்டியிருந்த ஹெட்செட் பாட்டையும் தாண்டி, அந்த இருமல் அவன் காதை எட்டி இருக்கிறது போலும்... ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கீரை கிழவியே தூக்கம் கலைந்தவளாக விழித்து இருமியவரை அண்ணாந்து  பார்க்கும்போது, ஹெட்செட் பாட்டல்லாம் எம்மாத்திரம்!....
அவரை பார்த்ததும் சட்டென எழுந்தவன், தாத்தாவை உட்காரும்படி சொன்னான்... எனக்கோ இதயத்தில் “பகீர்” என்றது... அடப்பாவி! உன்னோட பொதுநல எண்ணத்தை இந்த நேரத்துலதான் காட்டணுமா?... வலது கையை குவித்து வாயருகே வைத்து இருமியபடியே என் அருகில் அமர்ந்த அந்த தாத்தா என்னை பார்த்து லேசான புன்முறுவல் உதிர்த்தார்.... நானும் விதியை நொந்தபடியே உதடுகளை விரித்து சிரிப்பது போல பாவனை செய்தேன்..
ஆனாலும், இப்படி அவன் எழுந்து நின்றதிலும் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது... ஆம், அதுவரை அவன் ஒருபக்க முகத்தை மட்டுமே வைத்து, நானாக ஒரு உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன்... ஆனால், உண்மையில் என் கற்பனை உருவத்தைவிட, பன்மடங்கு பேரழகனாக தெரிந்தான் அவன்... “எங்கேயும் எப்போதும்” திரைப்படத்தில் அனன்யா சொல்வதைப்போல “லென்த்தி ஐப்ரோஸ், ஷார்ப் நோஸ், சுருட்டை முடி”னு அவனை பார்த்ததும் எனக்கு சர்வாதான் நினைவுக்கு வந்தான்... இப்படிப்பட்ட பேரழகு மன்மதன்களை அதிசயமாக எங்காவது எதிர்பாராத இடங்களில் பார்ப்பதுண்டு.... ஒரு வருடத்துக்கு முன்பு காவேரி திரையரங்கில் அப்படி ஒருவனை பார்த்தபோதும், இதே மன குடைச்சல்தான்.... ஆனால், அவன் அப்போது அவனுடைய காதலியோடு படம் பார்க்க வந்ததால், என் ஆசைகள் அனைத்தும் ஒற்றை பெருமூச்சோடு கரைந்து போனது....  ஆனால், இப்போது இவன் தனியாகத்தான் வந்திருக்கிறான், பேருந்து ஏறியது முதல் ஒரு மெசேஜ் கூட இவன் அலைபேசிக்கு வரவில்லை... அதனால், இவனுக்கு காதலியோ காதலனோ இருக்கக்கூட அதிக வாய்ப்பில்லை.... எப்படியோ இன்றைக்கு ஒருநாள் விருந்தாவது இவனோடு , இவனையே சாப்பிட வேண்டும் என்ற தீராத வேட்கை எனக்குள் கனலாக எரிய தொடங்கியது...
“பிரம்மன் படைத்த...” “அழகென்றால்...” “எனக்காக பிறந்த”..... ஒண்ணுமில்லை, அவனை பார்த்ததும் கவிதை சொல்லனும்னு தோணுது, ஆனால் முதல் இரண்டு வார்த்தைகளுக்கு பிறகு, அவன் அழகால் என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை... கவிதை கிடக்குது கவிதை, அவனே ஒரு கவிதை போலத்தான் நிற்கிறான்... மூன்று அடிகளில் முடிவது ஹைக்கூ என்பார்கள், இப்படி ஆறு அடிகள் கவிதையாய் நிற்கும் அவனுக்கு என்ன பெயர்?... என்னென்னமோ யோசிக்க வைக்கிறான், அவன் அழகால் என்னை ஏதோ செய்கிறான்...
என் யோசிப்புகளுக்கு அவ்வப்போது “ப்ரேக்” போடுவது போல அவ்வப்போது இருமிக்கொண்டே தன் கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தார் “இருமல் தாத்தா”.... பேருந்தின் கம்பியில் சாய்ந்தபடி, ஒரு முட்டியை மடக்கி ஸ்டைலாக நின்றுகொண்டிருக்கிறான் அவன்... நெடுநேரம் நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக அவன் பார்வை என் மீது பட்டது... சட்டென நான் வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன்... “எதற்காக அப்படி அவசரமாக திரும்பினேன்?” என்று எனக்கு புரியல... அவனை பார்த்தால் என்ன என் மேல வழக்கா போடப்போறான்?... மெதுவாக கொஞ்சம் பயத்தை விலக்கி, மீண்டும் அவனை நோக்கினேன்... இப்போதும் அவன் என்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்...
எனக்கோ உள்ளூற ஒருவித பயம், வெளிக்காட்ட முடியாத ஒருவித மகிழ்ச்சியும் கூட... இம்முறை நான் என் பார்வையை அவனை விட்டு விலக்கவில்லை... சில நொடிகள் என்னை பார்த்த அவன் முகத்திலிருந்து லேசான புன்முறுவல் தோன்றி மறைந்தது... அது நிஜமாகவே அவன் சிரித்தானா? அல்லது பிரம்மையா? என்பது எனக்கு புரியவில்லை... ஆனாலும், நான் பதிலுக்கு சிரித்தேன்... இப்போது அவன் வெளிப்படையாகவே சிரித்துவிட்டு, எந்த ரியாக்சனும் கொடுக்காமல் வேறு பக்கம் திரும்பினான்....
அப்படின்னா, என் சிக்னல் அவனுக்கு புரிஞ்சிடுச்சா?.... “பழம் நழுவி பாலில் விழுந்தது”னு சொல்வாங்க, இப்போ அது நழுவி என் வாயில் விழுந்ததை போல உணர்கிறேன்... இதை நான் ஒரே அர்த்தத்தில்தான் சொல்றேன், அதற்கு இரட்டை அர்த்தம் நீங்க கண்டுபிடித்தால் அதற்கு நானோ, கம்பியில் சாய்ந்துகொண்டு நிற்கும் அந்த யுவனோ எவ்விதத்திலும் பொறுப்பில்லை....
எங்கோ பார்த்தபடியே அவன் தலை என்னை நோக்கி திரும்பியது... பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பது போல, லேசாக கண்களை உருட்டி என்னை பார்க்கிறான்... நான் அவனையே பார்த்ததனால், சட்டென மீண்டும் அந்த கருவிழிகளை வேறு பக்கம் திருப்பினான்... என் மனதிற்குள் வண்ணத்துப்பூச்சிகள் விதவிதமாக பறப்பதை போல உணர்கிறேன், கடற்கரையில் கேட்கின்ற அலைகளின் இரைச்சல் சத்தம் அதிவேகத்துடன் என் மனதிற்குள் இரைந்தது....
கடற்கரையில் இருக்கின்ற கலங்கரைவிளக்கம் போல, அவன் கண்கள் முழு பேருந்தையும் சுற்றி வட்டமடித்தது... அவன் மனதிற்குள்ளும் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதை உணர்கிறேன்... அவ்வப்போது அவன் என்னை பார்க்கும்போது, என்னிடம் ஏதோ சொல்ல அவன் மனம் பரபரப்பதை உணர்கிறேன்....
திருமண வயதை எட்டிய நானே என் ஆசையை வெளிக்காட்ட இவ்வளவு தயங்கும்போது, கல்லூரி படிப்பவனை போல இருக்கும் அவனுடைய தயக்கத்தில் நிச்சயம் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன்.... “திருமண வயது”... ஆம், இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் நடைபெற போற நேரத்துல இந்த ரிஸ்க் எடுக்கனுமா? என்று இப்போதுதான் என் அறிவு மனதை நோக்கி கேள்வி எழுப்புது.... ஒருபக்கம், இப்படி எனக்கு அறிவுரை சொல்லும் அந்த அறிவுதான் “இப்பதான் நீ என்ஜாய் பண்ண முடியும், கல்யாணத்துக்கு அப்புறம் ரிஸ்க் எடுக்குறதுதான் தப்பு”ன்னு என் மனசுக்கு தூபம் போடும் வேலையையும் செய்யுது.... அவன் அழகில் நானே பித்து பிடித்து நிற்கும்போது, என் அறிவெல்லாம் எம்மாத்திரம்!.... மீண்டும் அவனை என் கண்கள் வெறிக்க தொடங்கியது, என்னை பார்த்தபடியே அவன் ஒரு அவசரத்தில் அந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு இருக்கிறான்....
என் ஆசைகள், ஏக்கங்கள், கனவுகள் எல்லாவற்றையும் ஒரே நிமிடத்தில் கானல் நீராக காணாமல் போகவைத்துவிட்டு பேருந்தை விட்டு இறங்கும் அவனை பொம்மையை தொலைத்த குழந்தையை போல ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.... பேருந்தை கிளப்ப நடத்துனர் விசில் அடித்த அந்த நொடியில், என் அனுமதியை எதிர்பார்க்காமல் என் கால்கள் அவசரமாக பேருந்திலிருந்து இறங்கி, நிறுத்தத்தை நோக்கி நடக்க தொடங்கின... நான் எழுந்த அவசரத்தில் என் அருகில் இருந்த இருமல் தாத்தாவின் கால்களை மிதித்துவிட்டேன், கீரை கிழவியின் கூடையில் இடறி தடுமாறி இறங்க முற்பட்டபோது  கூடை கவிழ்ந்து கூடையில் மிச்சமிருந்த கீரைகள் சிதறி கீழே விழுந்தன... இருமல் தாத்தாவுக்கு சம்பிரதாயமாக ஒரு “சாரி” கேட்காமலும், இடறி கவிழ்ந்த கூடையை சம்பிரதாயத்துக்கு நிமிர்த்தி கூட வைக்காமலும் நான் படிகளில் இறங்கியபோது அவ்விருவரும் என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருக்கிறதை கண்டுகொள்ளாதவனை போல படிகளிளிருந்து இறங்கி நிறுத்தத்தை நோக்கி நகர்ந்தேன்.... என்னை மனதிற்குள் சபித்தபடி அமர்ந்திருந்த அந்த இருவரையும் சுமந்தபடி, நான் இறங்கிய பேருந்து அடுத்த நிறுத்தத்தை நோக்கி விரைந்தது...
வில் வித்தை பயிற்சியின்போது அர்ஜுனனுக்கு கிளியின் கண்கள் மட்டும் தெரிந்ததை போல, உலகமே இப்போது எனக்கு “அவுட் ஆப் போக்கஸ்” ஆகி, அவன் முகம் மட்டும் என் முன் நிழலாடியது....
நானும் பேருந்திலிருந்து இறங்கியதை பார்த்ததும் அந்த இளைஞன் வழக்கத்தைவிட கொஞ்சம் பளிச்சென சிரித்தான்.... “அவனருகில் செல்லலாமா?” என்று நான் யோசிக்க தொடங்கிய அந்த நொடியில், சிறிதும் யோசிக்காமல் என்னை நோக்கி அவன் வந்தான்... இது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது, மனதிற்குள் மின்சாரம் பாய்ச்சும் இன்ப அதிர்ச்சி அது.... சலனமில்லா பேருந்து நிறுத்தம் அது.... இடம் தேடியல்லாம் அலைய வேண்டாம், இருபதடி தூரத்தில் யாரும் கண்டுகொள்ள முடியாத மறைவிடம் இருக்கிறது.... அடிக்கடி நான் மார்கெட்டிங் வரும் பகுதிதான் அது என்பதால் “இடம்” பற்றிய கவலை இப்போ இல்லை....
என் அருகில் வந்து சிரித்தபடி நின்றான் அவன்... மனதிற்குள் மெல்லிய பயமும், பதற்றமும் அதிகரித்தது.... “லப்டப்” சத்தம் இப்போது “டம்டம்” சத்தமாக இடிக்க தொடங்கியது.... எவ்வித சலனமும் இல்லாமல் என் முன்பு வந்து நின்ற அவன், “ஹாய்” என்றான்....
எச்சிலை விழுங்கியபடி நானும் “ஹாய்” என்றேன்....
பேசியே சம்மதிக்க வைக்கும் மார்கெட்டிங் தொழிலில் இருந்தாலும் ஏனோ இப்போது தொண்டையை அடைக்கும் அளவிற்கு என்னுள் பயம்தான் இருந்தது....
“பரவால்லையே, நீங்க செம்ம ஷார்ப்.... எப்டி கண்டுபிடிச்சிங்க?” என் பயத்தின் சிறு அளவு கூட அவனிடம் இருப்பதாக தெரியல... இவ்வளவு ஓப்பனா பேசுறதில் எனக்கு இன்னும் பயம் அதிகமானது....
பதிலெதுவும் சொல்லாமல் நான் அசடுவழிய சிரித்துவைத்தேன்.....
“எனக்கு பார்த்ததும் சட்டுன்னு ஞாபகம் வரல, நீங்க சிரிச்சதும்தான் ஞாபகம் வந்துச்சு... உங்க அளவுக்கு நான் ஷார்ப் இல்ல, எனக்கு மெமரி’லாம் ரொம்ப கம்மி” என்றான் அவன்.... இப்போ என்ன அவன் சொல்றான்னு எனக்கு ஒன்னும் புரியல.... ஆனால், ஏதோ ஒரு தவறு நிகழ்வதை என்னால் உணரமுடிகிறது.... அந்த தவறு நான் செய்ததன் விளைவா? அல்லது அவனுடைய தவறான புரிதலா? என்று நான் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றேன்....
என் குழப்பத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், என் அனுமதியை கூட எதிர்பார்க்காமல் என் கைகளை இறுக்க பிடித்தபடி பேசத்தொடங்கினான் அவன்  “எங்க அக்காவ பொண்ணு பாக்க வந்தப்போ நீங்க வெட்கப்பட்டத பார்த்ததுல, அக்காவ சரியா பார்த்திங்கலான்னே எனக்கு சந்தேகம் இருந்துச்சு.... ஆனால் நீங்க என்னையே அவ்ளோ ஷார்ப்பா நோட் பண்ணிருக்கிங்க, அதனால இப்போ நான் தெளிவாகிட்டேன்.... நெஜமாவே எங்க அக்கா செம்ம லக்கி தான்”.... (முற்றும்)

9 comments:

 1. ///“லட்சியம் உறவு, நிச்சயம் உரசல்”//.


  என்னே ! ஒரு சொல்லாடல் .

  ////“பழம் நழுவி பாலில் விழுந்தது”னு சொல்வாங்க, இப்போ அது நழுவி என் வாயில் விழுந்ததை போல உணர்கிறேன்... இதை நான் ஒரே அர்த்தத்தில்தான் சொல்றேன், அதற்கு இரட்டை அர்த்தம் நீங்க கண்டுபிடித்தால் அதற்கு நானோ, கம்பியில் சாய்ந்துகொண்டு நிற்கும் அந்த யுவனோ எவ்விதத்திலும் பொறுப்பில்லை....////

  நல்ல நகை சுவை உணர்வு

  "கிளைமாக்ஸ் "படித்துவிட்டு சிரித்ததில்
  ,தூங்கிகொண்டிருந்த என்ன நண்பர்கள் சென்னை பாஸை இல் அம்மாவை அழைத்து (ங்கோ....) என்று திட்டினார்கள் .பின்னே பேய் சிறுப்பு சிரித்தல்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விரிவான அலசலுக்கு ரொம்ப நன்றி நண்பா...

   Delete
 2. super twist sir...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா...

   Delete
 3. oh., my gosh! mama, machan! sema story!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா....

   Delete
 4. Really lucky time

  ReplyDelete
 5. Semma kadhai pa. pavam pa hero..

  ReplyDelete