Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 30 June 2013

"தர்மத்தின் வாழ்வு தனை" - சிறுகதை....


“என் ஸ்கூல் மேட் சஞ்சய் இன்னிக்கு திருச்சி வரான்... ஏதோ செமினார் ப்ரோக்ராமாம், இங்க நம்மளோட தங்கிக்கறதுல ஒனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?” அலுவலகத்துக்கு பரபரப்பாக கிளம்பியபடியே அவசரமாக கேட்டான் குணா...
சுஜாதாவின் நாவலிலிருந்து கண்களை விலக்கி, தலையை நிமிர்த்தி குணாவை பார்த்த பாலா, “ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல படுக்காத வரைக்கும்” சிரித்தான்... அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்து, டையை அவசரமாக அரைகுறையாக கழுத்தில் மாட்டியபடியே வீட்டை விட்டு வெளியேறினான் குணா....
மாலை நேரத்தில், வீட்டின் அழைப்புமணி ஒலிக்க, கதவை திறந்தான் பாலா... வெளியே குணாவும், இன்னொரு புதியவனும் நின்றனர்... அவ்வளவாக யோசிக்க வேண்டாதபடி, பார்த்ததும் “சஞ்சய்” என்ற பெயருக்கு ஏற்றார் போலவே தெரிந்தான் சஞ்சய்... சிலரின் பெயர்கள் மட்டும் அவர்களுக்காகவே உருவாக்கி வைத்த பெயர்களை போல இருக்கும்... சஞ்சய் குணாவை விட கொஞ்சம் உயரமானவன், குணாவை விட சற்று நிறம் வெளுப்பானவன், குணாவை விட கொஞ்சம் அழகானவனும் கூட.... இப்படி “குணாவை விட” என்ற பட்டியல் நிறைய உண்டென்றாலும், இப்போதைக்கு இதுபோதும்...
அவன் சிரிக்கும்போது வரிசை தப்பியிருந்த முன்வரிசை பற்களில் ஒன்றுதான், அவன் அழகின் பிரதானமாக பாலாவிற்கு தெரிந்தது... சந்தித்த முதல் சந்திப்பிலேயே, பாலாவின் கைகளை குழுக்கி, மிக எதார்த்தமாக பழகினான் சஞ்சய்... பெங்களூரு ஐந்தாறு வருடங்களில் மனிதரின் அத்தனை சுபாவங்களையும் மாற்றிவிடுகிறது...
“நீதானே பாலா... உன்னைப்பத்தி குணா நெறைய சொன்னான்... ரொம்ப சந்தோசம்... உனக்கு ஜாப்’க்கு நான் பெங்களூர்ல ட்ரை பண்றேன்...” பாலாவிற்கு பேசுவதற்கே இடம் தராமல், அருவி போல வார்த்தைகளை கொட்டினான் சஞ்சய்...
குணா அதிகம் பேசாதவன், பேசுவதில் ஏதோ ஒரு பயன் இருக்கவேண்டும் என்று நினைப்பவன், வார்த்தைகளில் கூட சிக்கனம் கடைபிடிப்பவன்... இப்போ சஞ்சையுடன் நான் குணாவை எதற்காக ஒப்பிடுகிறேன்?... குணா கூட பாலாவை முதலில் சந்தித்தபோது, பேசாத பேச்செல்லாம் பேசினான்... அர்த்தமே இல்லாமல், ஒரு தொடர்பே இல்லாமல் ஏதேதோ உளறினான் என்றுதான் சொல்ல வேண்டும்... இந்த ஒருவருட காதல் வாழ்க்கை கொஞ்சம் கசப்புகளை இருவருக்கும் இடையில் கொடுத்திருப்பது என்னவோ உண்மைதான்...
ஆனாலும், பார்த்த முதல் சந்திப்பிலேயே “நீ, வா, போ...” போன்ற நெருக்கம், பாலாவிற்கு புதுமையாகவும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது....
“ஓ! நீ சுஜாதா புக்கல்லாம் படிப்பியா?... ஐ லவ் சுஜாதா நாவல்ஸ்....” என்று ஆர்வமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் வரிசைகளை எடுத்து பிரித்தான்...
“ஆமா... நான் சுஜாதாவோட தீவிர வெறியன்.... அதுவும் சிறுகதைகள்’னா எனக்கு உயிர்.... குணாவுக்கு சுஜாதா ஆணா? பெண்ணா?னு கூட தெரியாது... அந்த அளவுக்கு அவனுக்கு இலக்கிய அறிவு” சிரித்தான் பாலா.... இதை குணா ரசிக்கவில்லை, இந்த நேரத்தில் இப்படி ஒரு கம்பாரிசன் நிச்சயம் தேவை இல்லாதது... ஆனாலும், அதை கண்டுகொள்ளாதவனை போல அறைக்குள் சென்று உடைகளை மாற்றினான் குணா...
“பாலா, குடிக்க கொஞ்சம் தண்ணி தாயேன்” கையில் ‘கனவு தொழிற்சாலை’புத்தகத்தை பிரித்தபடியே கேட்டான் சஞ்சய்....
ஓடிசென்று, ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்து சஞ்சய் கைகளில் கொடுத்த பாலா, “உங்க ஊர்ல மாதிரி நாங்க தண்ணி தரமாட்டோம்னு பிடிவாதம் பிடிக்கவல்லாம் மாட்டோம்” லேசாக சிரித்தான் பாலா... ஆனால், இந்த நகைச்சுவைக்கு, வீடே அதிரும் வண்ணம் சிரித்தான் சஞ்சய்.... ஒருநிமிடம் பாலாவே, தான் சொன்ன ஜோக்கை நினைத்துப்பார்த்தான்... இப்படி விழுந்து புரண்டு சிரிக்கும் அளவிற்கு பெரிய நகைச்சுவை இல்லையே, வேற எதையும் நினைத்து சிரிக்கிறானோ? என்று தன் ஜோக்கை ஒரு மறு ஆய்வு செய்தான் பாலா... ஆனாலும், சஞ்சயின் ரசனையை நினைத்து சந்தோஷப்பட்டான்.... குணாவிடம் ஒருமுறை “மெக்சிக்கோ சலவைக்காரி” ஜோக் சொன்னபோது, ஜோக் முடிந்தது கூட தெரியாமல், “ஹ்ம்ம்” சொன்னபோது பாலாவிற்கு வந்ததே ஒரு கடுப்பு!... அன்றிலிருந்து குணாவுக்கு ஜோக் சொல்வதற்கு, வாழ்நாள் தடையே தனக்குள் போட்டுகொண்டான்....
மறுபடியும், மறுபடியும் ஏனோ சஞ்சயின் ஒவ்வொரு செயலுமே குணாவை ஒப்பிட்டு பார்க்கவே பாலாவை தூண்டியது...
குளித்து முடித்து குணா ஹாலுக்கு வரும்போது, இருவரும் தீவிரமாக இலக்கியத்தில் சிலாகித்துக்கொண்டிருந்தனர்....
“எனக்கு பாலகுமாரன் கதைகள்ல அவ்வளவா உடன்பாடில்லை... சுஜாதா கதை பிடிச்சவங்களுக்கு, பாலா கதை அவ்வளவா விருப்பம் இருக்காது”
“உண்மைதான்... ரெண்டு பேருமே ரெண்டு விதமான மேதைகள்... ஒருத்தரை ரசிக்குற மனசால, இன்னொருத்தரை ரசிக்க முடியாது...ஆனாலும், எனக்கு சுஜாதாதான் பிடிக்கும்” சஞ்சய் பாலாவின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், வண்ணம் சேர்ப்பது போலவே பேசினான்....
ஹாலில் வந்து அமர்ந்த குணா, இந்த பேச்சுகளில் எதையும் கண்டுகொள்ளாமல் தொலைக்காட்சியில் வணிக செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தான்.... பங்குச்சந்தை இன்றைக்கு வீழ்ச்சி என்ற செய்தி அவன் மனதிற்குள் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்ககூடும்...
தொலைக்காட்சி சத்தம் கேட்ட இருவரும், அப்போதுதான் குணா என்கிற “மூன்றாம்” நபர் அங்கிருப்பதையே உணர்ந்தனர்... ஆம், இப்போது குணா அந்த இடத்தில் தனித்து இயங்கும் மூன்றாம் நபராகிவிட்டான்...
“குணாவுக்கு வாழ்க்கையே ஷேர் மார்க்கெட், நிப்டி, சென்செக்ஸ் இதான்.... அதை தாண்டி புக்ஸ் படிச்சா, அது எல்லாம் கார், மொபைல் போன் இப்டி மெஷின் சமாச்சாரம்தான்.... டிவி பார்த்தா கூட, கிரிக்கெட் மட்டும்தான் பார்ப்பான்... ஒரு ஜோக் கூட அவனால படிச்சு புரிஞ்சுக்க முடியாது” பாலா தன் வருத்தத்தை சஞ்சயிடம் பகிர்ந்துகொண்டான்.... எவ்வளவோ நாட்கள், அற்புதமான சில கதைகளை படிக்குற நாட்கள்ல, அதை யார்கிட்டயாவது பகிர்ந்துக்க ஆசைப்பட்டிருக்கிறான்... ஆனால், அருகில் படுத்திருக்கும் குணா, தன் மொபைலில் ஷேர் மார்க்கெட் நிலைமையை அலசிக்கொண்டிருப்பான்.... விதியை நொந்தபடி சிவப்பு மையால், அந்த குறிப்பிட்ட வரிகளை மேற்கோள் போட்டு வைத்திருப்பான்.... மேற்கோள்களால் அப்படி நிறைக்கப்பட்டிருந்த பல புத்தகங்கள், பாலாவின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது...
“சரி சஞ்சய், நீங்க குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க... நான் கடைக்கு போயிட்டு வந்திடுறேன்” சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான் பாலா..
பாலா சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்ட சஞ்சய், குணாவின் அருகில் வந்து நின்றான்....
“நான் சொன்னதை நீ இப்போவாச்சும் நம்புறியா இல்லையா?... நீ ரொம்ப தப்பு பண்ற?... இதல்லாம் காதல் இல்ல...கே வந்து ஒரு ஈர்ப்பு, அவ்வளவுதான்... இன்னிக்கு உன்மேல வந்தது, நாளைக்கு என்மேல வரலாம், அடுத்த நாள் அது இன்னொருத்தர் மேல... அவ்ளோதான்... ஒழுங்கா அவனை விட்டுட்டு வீட்ல அப்பா அம்மா சொல்றதை கேளு” அன்றைய நாள் முழுவதும் சொன்னதை, மீண்டும் ஒருமுறை குணாவிற்கு வலியுறுத்தினான் சஞ்சய்.... ஆனால், நாள் முழுவதும் சஞ்சய் சொன்னபோது உறுத்தாத மனம், இப்போது லேசாக உறுத்தியது... அந்த உறுத்தலுக்கு காரணம் கடந்த அரை மணி நேர பாலாவின் செய்கை...
ஆனாலும், அதை காட்டிக்கொள்ளாத குணா, “இல்ல சஞ்சய், அவன் குழந்தை மாதிரி... எல்லார்கிட்டயும் வெகுளித்தனமா பழகுவான்... அதுக்காக அவனை தப்பா பேசாத... எனக்காக அவன் குடும்பத்தையே விட்டுட்டு வந்திருக்கான்.... அவன்தான் என் வாழ்க்கை” என்றான்...
“இன்னும் நீ நம்பமாட்டில்ல?... உனக்கு ஒரு சவால் விடுறேன்... இன்னும் நாலு நாள்ல, அவன் என்னை லவ் பண்றதா உன்கிட்டயே சொல்ல வைக்குறேன்... கே லவ்’ல எப்பவும் உடம்புதான் பிரதானம்.... இந்த ஒரு வருஷம் நீ அவனுக்கு போர் அடிச்சிருப்ப... அவன் என்னை லவ் பண்றதா சொன்னா, நீ என்னை நம்புறியா?... அவனை விட்டுட்டு நீ விலகி போய்டுறியா?”
இதை கேட்டு அதிர்ந்தான் குணா.... குழப்பம் அதிகமானது... ஒரு பக்கம் பாலாவை சந்தேகிக்காதே!னு மனம் சொல்லுது, மறுபுறம் “சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவன்னு எவனும் இல்லை”னு மூளை வாதம் புரியுது... ஆனாலும், காதலை தனக்கும், சஞ்சய்க்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் குணா, “சரி, அப்டி ஒன்னு நடந்தா பாக்கலாம்” என்றான்....
“ஓகே... இது நம்ம ரெண்டுபேருக்குள்ள மட்டும் ரகசியமா இருக்கணும்... இன்னும் நாலு நாள்ல, யார் சொல்றது உண்மை?னு புரிஞ்சுக்கலாம்” சொல்லிவிட்டு குணாவை விட்டு நகர்ந்தான் சஞ்சய்...
ஒருவிதத்தில் தன் முடிவு பற்றிய பயமும், மறுபுறம் பாலாவை சந்தேகிக்கிறோமே! என்கிற குற்ற உணர்வும் குணாவை பாடாய் படுத்தியது.... இந்த காதலின் வலிமையை பரிசோதிக்கும் முடிவை குணா ஒருவகையில் ரசிக்கவே செய்தான், அதற்கு காரணம் “என்னதான் இருந்தாலும் பாலா காதலில் உண்மையாய் இருப்பவன்” என்கிற குணாவின் திண்ணமான ஒரு எண்ணம்... 
அன்று இரவு, படுக்கை அறையில் பற்பல ஆசைகளுடன் பாலாவை நெருங்கிய குணாவிற்கு தொடக்கம் முதலே ஏமாற்றம்தான்... வழக்கத்தைவிட இன்றைக்கு பாலா அழகாக தெரிகிறான், அதற்கு காரணம் அன்றைய காலை முதலான மகிழ்ச்சியாக கூட இருக்கலாம்... மேலும், எப்போதையும்விட இன்றைக்கு அதிகமாக பாலாவின் மீதான ஒரு கண்காணிப்பு கூட குணாவின் இந்த அதீத ஆர்வத்துக்கு காரணமாக இருக்கலாம்... ஆனால், எல்லாமும் ஏமாற்றமாகிட காரணம் பாலாவின் “சஞ்சய் புராணம்”...
“நம்ம சஞ்சய் எவ்வளவு ப்ரில்லியன்ட்டா இருக்கான் தெரியுமா?... உன் ப்ரெண்ட்ஸ்’ல இப்டி ஆளுங்க கூட இருக்கிறது ஆச்சரியம்தான்”
“ஓஹோ... சரி” அவ்வளவாக ஆர்வம் கட்டாத பதில்... இன்னும் அவன் கண்கள் மொபைலின் பங்கு பரிவர்த்தனையை விட்டு அகலவில்லை...
“அதுமட்டுமில்ல.... அவனுக்கு நவீன இலக்கியம் மட்டுமில்லாம சிலப்பதிகாரம்’லாம் கூட அத்துபிடியாம்.... ஆனால், அதுல எதாவது பாட்டு பாட சொன்னா மட்டும்....” பாலா சொல்லி முடிப்பதற்குள் குறிக்கிட்ட குணா, “பாடிருக்க மாட்டானே?” என்றான்....
“ஆமா.... அது எப்டி உனக்கு தெரியும்?” ஆச்சரியம் கலந்த சந்தேகத்தில் குணாவை பார்த்தான்...
“இல்ல... அவனுக்கு ரொம்ப தன்னடக்கம் ஜாஸ்தி, அதான்”
“ஆமாப்பா.... நமக்கு தெரிஞ்சதை எதுக்காக தெரிஞ்சா மாதிரி காட்டிக்கணும்?னு சொல்றான்... நிறை குடம் தழும்பாதுன்றது எவ்வளவு உண்மை பார்த்தியா?”
“ஆமாமா... காலி குடம் கூட தழும்பாதுதான்” பாலாவின் காதுகளில் விழாதவாறு சொன்ன குணாவின் நினைவுகள் பள்ளி நாட்களுக்கு சென்றது.... சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டத்தின் பெயர்களை கேட்டதுக்கு “நிரோத் காண்டம், எக்ஸ்ட்ரா மூட் காண்டம், கோஹினூர் காண்டம்”னு சொல்லி, வகுப்புக்கு வெளியே முட்டிப்போட்டதல்லாம் இப்பவும் அவர்கள் பள்ளியில் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு... அதுவும் இப்போ பாலா பேசுறதெல்லாம் அவங்க தமிழ் ஆசிரியருக்கு தெரிந்தால், அதிர்ச்சியில் உயிரையே விட்டுவிடுவார்....
“அதுமட்டுமில்லப்பா.... சஞ்சய்க்கு....” என்று அடுத்த அத்தியாயத்தை பாலா தொடங்குவதில் கொஞ்சம் ஆடிப்போன குணா, “எனக்கு லேசா தலை வலிக்கிறது மாதிரி இருக்கு.... நான் தூங்கிக்கவா?” என்று அப்பாவியாக கேட்டான்....
“ஓஹோ அப்டியா?... சரிப்பா... மத்ததை காலைல பேசிக்கலாம்” என்று குணாவின் தூக்கத்திற்கு வழிவிட்டு புத்தகத்தில் கண்களை பதிக்க தொடங்கினான் பாலா....
“காலைலையா?... மறுபடியும் முதல்லேந்தா?” மனதிற்குள் காலையில் நடக்க இருக்கும் அடுத்த அத்தியாயத்தை எண்ணியவாறே கண்கள் அயர்ந்தான் குணா....
கண்களை விழித்தபோது, யாரோ சுவாரசியமாக பேசும் பேச்சுகள் குணாவின் காதுகளில் விழுந்தது... இன்னும் முழுதாக விடியவில்லை... நேரமென்னவோ ஏழு மணி இருக்கலாம், ஆனால் இவர்களை பொருத்தவரை எட்டு மணிதான் விடியல்.... அருகில் படுத்திருந்த பாலாவின் இடத்தில், போர்வை மடிக்கப்பட்டுள்ளது...ஜன்னலுக்கு வெளியே ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடும் சத்தம் அவுட் ஆப் போக்கஸில் கேட்டிட, ஹாலில் இருவர் பேசும் பேச்சு பிரதானமாக ஒலித்தது...  
இப்போதும் சுஜாதா பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருப்பதாகவே குணாவிற்கு பட்டது.... ஒரு சாதாரண சுஜாதாவோட கதைகள் தன் காதலுக்கு எதிரியாகி நிற்பதை குணா நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான்... திரைப்படங்களில் முரட்டு மீசைகளும், கனரக ஆயுதங்களும் கொண்ட வில்லன்களையே பார்த்திட்ட குணாவிற்கு, இந்த சுஜாதா கதைகள் ஒரு வித்தியாசமான வில்லனாக பட்டது...
எல்லா நிகழ்வுகளையும் மனதிற்குள் ஒன்றாக போட்டு குழப்பியபடியே, அலுவலகத்திற்கு கிளம்பும் வேலையையும் கவனித்தான் குணா.... அலுவலகத்தில் அமர்ந்திருந்த நேரமெல்லாம், குணாவிற்கு வீட்டு நிகழ்வுகளே பிரதான குழப்பமாக இருந்தது... விரல்களின் நகங்கள் புண்ணாகிடும் அளவிற்கு குழப்பத்தில் நகங்களை கடித்து துப்பினான்... மாலை ஐந்து மணியை எதிர்பார்த்த கண்கள் நொடிக்கொருமுறை கடிகாரத்தை வட்டமிட்டது... ஐன்ஸ்டினின் “theory of relativity” என்பதை நன்றாக அனுபவப்பூர்வமாக உணர்ந்தான்.... ஒருவழியாக கடிகாரத்தின் முள் “மணி ஐந்து” என்று காட்டியதற்கும், குணா எழுந்து நடையும் ஓட்டமுமாக அலுவலகத்தை விட்டு ஓடுவதற்கும் சரியாக இருந்தது...
வழக்கமாக பூட்டியே இருக்கும் கதவு, இன்று ஒருக்களித்து சாத்தி இருந்தது... கதவை திறந்து உள்ளே சென்றபோது, பேச்சு சத்தம் காதில் விழவில்லை... எங்கே சென்றார்கள் இருவரும்? பதட்டத்தில் காலில் அணிந்திருந்த ஷூவை கூட கழற்ற மறந்தவனாக நேராக படுக்கை அறைக்குள் சென்றான்... எதிர்பார்த்தபடியே படுக்கை அறையில் இருவரும் படுத்துதான் இருந்தனர், ஆனால் எதிர்பார்த்திராத வண்ணம் தூங்கிக்கொண்டு இருந்தனர்.... அருகில் சிற்சில கதை புத்தகங்கள் திறந்தபடியும், மூடியபடியும் பரப்பி கிடந்தன... பாலாவின் கை சஞ்சயின் மார்பின் மீது கிடந்தது... அது தூக்கத்தில் எதேச்சையாகதான் விழுந்திருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு மெல்ல நடந்து, அந்த கையை விலக்கி விட்டான்....
“சஞ்சய் வருகிறான்” என்று சொன்ன அந்த நேரத்தில், பாலா சொன்ன பதில், “நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல படுக்காத வரைக்கும் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல”... இன்றைக்கு வழக்கமாக தான் படுக்கும் இடத்தில் சஞ்சய் படுத்திருக்கிறான் என்று நினைக்கும்போது எரிச்சல் உண்டானது... ஆனாலும், இப்பவும் அவன் மனம் என்னவோ பாலாவை விட்டுக்கொடுக்கவில்லை, “என்ன மனுஷன்டா நீ?... போன மாசம் உன் ப்ரெண்ட் ஒருத்தன் வந்திருந்தபோது, இதே படுக்கையில் நீயும் அவனும் ஒண்ணா படுத்திருந்திங்களே?... அப்போ பாலா கொஞ்சமாச்சும் உன்ன சந்தேகப்பட்டானா?... அப்போ ‘நீங்க ரொம்பநாள் கழிச்சு மீட் பண்ணிருக்கிங்க, அதனால பேசிட்டு இருங்க... நான் வெளில படுத்துக்கறேன்’னு சொன்னானே.... அவன் மனுஷனா? நீ மனுஷனா?” கொஞ்சம் ஆக்ரோஷமாகவே மனம் குணாவை வசைமாரி பொழிந்தது....
ஷூவின் காலடி சத்தத்தில் விழித்த பாலாவின் முகத்தில் கொஞ்சமும் பதட்டம் இல்லை... “என்னடா இது புதுப்பழக்கம்?” என்றான்....
“எது?  என்ன சொல்ற?” குணா தான் பதறுகிறான்....
“பெட்ரூம் வரைக்கும் ஷூ போட்டுட்டு வந்திருக்க?.... போய் கழட்டிட்டு வா” என்று உரிமையோடு கூறினான்... அவன் பேச்சில் கொஞ்சமும் வஞ்சகம் தெரியவில்லை, எப்போதும் தென்படும் ஒரு வெகுளித்தனம் அப்பட்டமாக தெரிந்தது.....
“இவனப்போயா சந்தேகப்பட்டேன்?” என்று தன்னைத்தானே நொந்துகொண்டான்....
குளித்து முடித்து, மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.... பாலா சஞ்சய்யுடன் அன்யோன்யம் அதிகமாக இருப்பது போல குணாவிற்கு தோன்றியது.... “காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது போல, எல்லாமும் குணாவை சந்தேகத்தை நோக்கியே இழுத்து சென்றது... “என் பாலாவை நான் சந்தேகப்பட மாட்டேன்” என்று நினைக்கும் தருணமெல்லாம், சஞ்சயின் ஒரு வில்லத்தனமான பார்வை பழையபடி குழப்பத்திற்கு இட்டுசென்றது குணாவை...
இரவு படுக்கையில், இன்றைக்கு குணாவின் கையில் மொபைல் இல்லை, பாலாவின் கையில் புத்தகம் இல்லை.... பத்து நிமிடங்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் பாலா, அவ்வளவு நேரமும் அந்த பேச்சில் “சஞ்சய்” வராததில் குணாவிற்கு ஒரு உள்ளூற மகிழ்ச்சி.... சட்டையின்றி படுத்திருந்த குணாவின் மார்பில் தலை வைத்து படுத்தபடியே, பாலா பேசிக்கொண்டிருந்தான்.... குறுக்கிட்ட குணா, “பாலா, என் மேல நீ இப்பவும் காதலோட இருக்கியா?” என்றான்...
“துரைக்கு இவ்வளவு நாள் கழிச்சு இப்போ என்ன திடீர் சந்தேகம்?”
“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு....”
“அந்த வானமும் பூமியும்...” என்று பாலா தொடங்கியதை கண்ட குணா, இடைமறித்து, “நீ படிக்குற கதை வசனங்கள் நான் கேட்கல... நேரடியா பதில சொல்லு... லவ் இருக்கா? இல்லையா?” என்று கேள்வியை நண்டு பிடியாய் பிடித்தான்...
“இருக்கு... ரொம்ப இருக்கு.... ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அதிகமாகிட்டே இருக்கு.... போதுமா?” மார்பில் கடித்தான்....
குணாவின் முகமெல்லாம் பல்லாக தெரிந்தது, “பாலா இந்த பதிலைத்தான் சொல்லப்போகிறான்” என்று குணாவிற்கு மட்டுமல்ல, நமக்கே அப்பட்டமாக தெரிந்திருந்தும், அப்படி ஒரு பதிலை பாலாவின் வாயால் சொன்னபோது குணாவின் முகமும், மனமும் பன்மடங்கு உல்லாசத்தில் துள்ளிக்குதித்தது....
“ஒருவேளை என்கிட்ட உனக்கு எதுவும் பிடிக்கலைனா சொல்லிடுடா” அப்பாவியாக கேட்டான் குணா....
“சொல்றேன்.... ரெண்டு நாளா நைட் மாடு மாதிரி தூங்குறது பிடிக்கல.... கொஞ்சம் கூட ரொமான்ஸ் இல்ல... குறஞ்சபட்சம் ஒரு கிஸ் கூட இல்ல” பாலா சொல்லி முடிப்பதற்குள், சிரித்தபடியே அவன் முகத்தை தன் விரல்களால் ஏந்தி, போருக்கு ஆயத்தமானான் குணா....
கிட்டே நெருங்கிய சமயத்தில் பாலா, “அப்புறம், நானும் சஞ்சய்யும் நாளைக்கு.....” என்று ஏதோ தொடங்கியதை கவனித்த குணா, அவன் பேச்சுக்கு வழிவிடாத வண்ணம் இதழ்களை இதழ்களால் “லாக்” செய்தான்.... அப்புறம் என்ன?.... இரண்டு கிளிகள் மூக்கோடு மூக்கு உரசுவதையும், தண்ணீரில் தாமரை மலர்கள் இணைந்து நடனமாடுவதை போலவும் மனதிற்குள் கற்பனை செய்துகொள்ளுங்கள்.... மேற்கொண்டு கற்பனைகள், உங்கள் கற்பனா சக்தியை பொறுத்தது.....
விடிந்தது.... இரவு ஆட்டத்தின் பலனாக, இன்னும் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடி உறங்கிக்கொண்டு இருந்தனர்... ஜன்னல் வழியே சூரியக்கதிர்கள் குணாவின் முகத்தை ஊடுருவியபோதுதான் குணா விழித்தான்... ஒருமுறை நள்ளிரவு ஆட்டத்தை நினைவு கூர்ந்தான், அருகில் அப்பாவியாக படுத்திருந்தான் பாலா.... “இந்த பூனைதான் பால் குடித்ததா?” (பழமொழியை சொன்னேன்... நீங்கள் இன்னும் கற்பனையை வளர்க்காதீர்கள்... இரவு விஷயத்தை இரவோடு மறந்திருங்க) என்று தனக்குள் சிரித்துக்கொண்டான்.... நெற்றியில் படர்ந்திருந்த முடிகளை விலக்கி, அதில் ஓர் முத்தம் கொடுத்தான் குணா ... அப்படியே தன் வலது கையால் குணாவின் கழுத்தை வளைத்து பிடித்து, அடுத்த அத்தியாயத்தை “பகலிரவு ஆட்டமாக”ஆட முயன்ற பாலாவை தடுத்த குணா, “டேய் போதும்.... லேட் ஆச்சு... நான் கிளம்பனும்... மத்ததை நைட் பார்த்துக்கலாம்” என்று அரைமனதோடு படுக்கையை விட்டு எழுந்தான்....
அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்த குணாவின் முகத்தில் இன்று வழக்கத்தைவிட அதிகமான ஒரு “தேஜஸ்” தெரிந்தது.... அந்த ஒளி இன்னும் இரண்டு நிமிடங்களில் காணாமல் போகப்போகிறது என்பதை அவனே அறிந்திருக்க மாட்டான்.....
“குணா, நானும் சஞ்சய்யும் இன்னிக்கு தஞ்சாவூர் போறோம்”
“என்ன திடீர்னு?... எதுவும் முக்கியமான விஷயமா?”
“அங்க தமிழ் பல்கலைகழகத்து லைப்ரரி’ல ரொம்ப அரிதான புக்ஸ் நிறைய இருக்காம்.... சஞ்சய் மாதிரி ஒரு ஆளை கூட்டிட்டு அங்க போனா நிறைய தெரிஞ்சுக்கலாம்ல?”
குணாவின் முகம் தளர்ந்து சுருங்கி போய்விட்டது....
“இதை நீ ஏன் முன்னாடியே சொல்லல....” வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான்...
“நேத்து நைட் அதை சொல்ல வந்தப்போதான் நீ...” என்று சொல்ல தொடங்கியவன், சஞ்சய் நிற்பதை பார்த்து நிறுத்திவிட்டான்.... இதை மறுக்க குணாவால் முடியாது... பாலா பெர்மிஷன் கேட்கவில்லை, அவன் தகவல் சொல்கிறான்.... தகவலை மறுக்க முடியாதல்லவா!... மனதிற்குள் குழப்பம் இருந்தாலும், அதை காட்டிக்கொள்ள கூடாது என்பதால் அவர்கள் தஞ்சைக்கு செல்ல வழிவிட்டான் குணா....
இன்றைக்கு அலுவலகத்தில் குணாவால் இயல்பாக இருக்க முடியவில்லை... படபடப்பாக காணப்பட்டான், கவனம் தப்பியவனாக வேலையை செய்தான்...
“என்னாச்சு குணா?... ஆர் யூ ஆல்ரைட்?... நீங்க இன்னிக்கு நீங்களா இல்லை... வீட்டு பிரச்சினைகளை வீட்டோட விட்டுட்டு வந்துருங்க.... மதியம் பெர்மிஷன் எடுத்துட்டு வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு, நாளைக்கு வாங்க” மேலாளர் கொஞ்சம் கோபமாகவும், அதிக அக்கறையாகவும் பேசினார்... அதுவும் குணாவுக்கு சரியென்றே தோன்றியது...
மதியம் சாப்பிடவில்லை, அவசரமாக வீட்டை அடைந்தான்... இன்னும் அவர்கள் வரவில்லை... அதற்குள் எப்படி வருவார்கள்?... லாஜிக் படி பார்த்தால் கூட மாலை ஆகிடுமே!... படுத்தாலும் உறக்கம் வரவில்லை, தொலைக்காட்சியை போட்டால் தமிழகத்தின் புகழ்பெற்ற “மின்வெட்டு”, பங்குச்சந்தை, கிரிக்கெட் பற்றி யோசிக்கவல்லாம் மனம் வரவில்லை... ஹாலில் சிதறிக்கிடந்த புத்தகங்களில் ஒன்றை கையில் எடுத்தான்...
சுஜாதாவின் “6961” என்ற கதை அது... கதையை வாசிக்கும் பொறுமையெல்லாம் அப்போதில்லை என்றாலும், எதாவது இப்படிப்பட்ட மாற்று விஷயங்கள் செய்யவில்லை என்றால் மூளை கலங்கியேவிடும்...
அரை மணி நேர வாசிப்புக்கு பின்னர், மனம் இன்னும் குழப்பமானதுதான் மிச்சம்... திருமணமான ஒருத்தி, கணவனின் கார் டிரைவருடன் “காதல்” கொள்வதை நியாயப்படுத்தி இருக்கிறார் சுஜாதா... என்ன ஒரு முட்டாள்த்தனமான விஷயம், ஆனால் வாசகர்களுக்கு அந்த காதலில் உள்ள நியாயத்தை சொல்லி “கன்வின்ஸ்” செய்துவிட்டார்... இப்படி கதைகளை படித்தேதான், பாலா இப்படியெல்லாம் மாறிவிட்டானா?.... இல்லை, இல்லை.... நிச்சயம் மாறியிருக்கமாட்டான்... இவை எல்லாம் “குருவி உட்கார பனங்காய் விழுந்த கதை” தான்...
மனம் முழுக்க குழப்பத்தோடு, எப்படியோ கண் அயர்ந்தும் போனான்... புதர் மண்டிக்கிடக்கும் காடு, குணாவை சுற்றியும் மிருகங்கள்... கொலை வெறியோடும், பசியோடும் குணாவை பார்க்கும் அந்த மிருகங்கள், மறுபுறமோ பாலா சஞ்சய்யுடன் உல்லாச நடை பயின்றுகொண்டு இருக்கிறான்.... மிருகங்கள் நெருங்க, உயிர் பிரியப்போகும் நேரம்..... ஆஹ்.... “ச்ச... கனவா?” திடுக்கிட்டு விழித்தான்... கடிகாரத்தை பார்த்தான், ஏழு மணியென காட்டியது.... இவ்வளவு நேரமா தூங்கினேன்?... இன்னும் அவனுக வரலையே!...
இவ்வளவு நேரமும் கடைபிடித்த மௌனம் களைந்து, அலைபேசியை கையில் எடுத்தான்... “அன்பு, அழகேசன், அருண்.....” வரிசையில் “புஜ்ஜி” என்ற பெயரை டயல் செய்தான்... பாலாதான் அந்த “புஜ்ஜி”... \புஜ்ஜி தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தான்... சஞ்சயின் எண்ணை அழுத்திய அந்த நேரம், வீட்டின் கதவும் திறந்தது.... இருவரும் ஏதோ பேசியபடியே உள்ளே நுழைந்தனர்...
குணாவிற்கு உயிரும் வந்தது....
சட்டை கசங்கி இருக்கிறது, தலைமுடி களைந்து காணப்பட்டது..... “அட முட்டாளே!... மூளையே செயலிழந்துவிட்டதா?... தஞ்சை வரை பயணம் செய்தவர்கள் முடி கலையாமல், படிய சீவியா இருக்கும்?... சட்டை கசங்கி இல்லாமல், கஞ்சி போட்டு அயன் செய்தா இருக்கும்?” மனம் குணாவின் எண்ணங்களை திசைமாறி செல்லவிடாமல் தடுத்தது....
பரஸ்பர குசலம் விசாரிப்போடு, அசதியின் மிகுதியால் உடைகளை கூட மாற்றாமல் படுக்கையில் வீழ்ந்தான் பாலா...
“தஞ்சை நகர்வலத்தில் என்னதான் நடந்தது?”சஞ்சயிடம் கேட்டதற்கோ, அவன் ஒரே வரி தான் பதிலாக சொன்னான், அந்த ஒற்றை வரி ஒரு மாமாங்கம் அவனை தூங்கவிடாத பதில்...
“என்னோட ப்ராஜெக்ட் ஓவர்.... நாளைக்கு உனக்கு, உன்னோட காதலுக்கு ஒரு முடிவு கட்டும் நாள்”....
இரவு முழுக்க குணாவிற்கு தூக்கம் வரவில்லை... என்ன நடந்திருக்கும்? கற்பனைகள் பலவிதமாக சுழன்றன.... காதல் என்றால் இவ்வளவுதானா?... “வாழ்க்கை முழுக்க இவன் தான்” என்றிருந்த ஒருவனால், நான்கே நாட்களில் ஆள் மாற்ற முடியுமா?.. அப்படியென்றால் அது என்ன காதல்?... ஆழ்ந்த உறக்கத்தில் அருகில் படுத்திருக்கும் பாலாவை ஒருநிமிடம் எழுப்பி கேட்டிடலாமா? என்று நினைத்தான்... அது தப்பு.... விடியும்வரை காத்திருந்துதான் ஆகணும்...
தூக்கம் வரவே இல்லை... எழுந்தான், வீடு முழுக்க தன் பாதத்தால் அளந்தான், தொலைக்காட்சியில் “செக்ஸ் டாக்டர் சின்னப்பாவின் கிளுகிளு” பதில்களை ரசிக்க முடியவில்லை... புத்தகங்களை எடுத்தான்.... அதே சுஜாதா... இப்போ படிப்பதாக உசிதமில்லை... கண்களை இறுக்க மூடியும், கண் வலி வந்ததே ஒழிய தூக்கம் வருவதற்கான அறிகுறியே இல்லை... இப்படி என்ன செய்வதென்று புரியாமலேயே, நேரம் அதிகாலை மூன்றாகிவிட்டது....
இன்னும் ஓரிரு மணி நேரங்கள்தான் விடிவதற்கு.... அதுவரை என்ன செய்வது?.. “ஆதலினால் காதல் செய்வீர்” சுஜாதாவின் புத்தகம், கண்ணில் பட்டது, சில மணித்துளிகளில் அது குணாவின் கைகளில் தவழ்ந்தது....
படிக்க தொடங்கினான்.... நேரம் நான்கு மணி ஆகிவிட்டது...
அழகான சுவாரசியமான ஒரு குழப்பமான காதல் கதை.... ரொம்பவே ரசித்து படித்தான்.... மனதின் பாரங்கள் குறைந்ததாக உணர்ந்தான் குணா... ஆனால், இது காலம் கடந்த உணர்தல்... பாலாவை எழுப்பி, அவனிடம் கதை பற்றி பேசவேண்டும் என்ற ஆசை, இப்போதைக்கு அதுவும் காலம் கடந்த ஆசையாக தோன்றியது...
அப்படியும், இப்படியும் ஏதேதோ செய்து மணி ஆறு ஆகிவிட்டது...
இன்னும் சிறிது நேரத்தில் விழித்துவிடுவான்... எழுந்ததும் அவனாக சொல்வானா?... நானாக பேச்சை தொடங்க வேண்டுமா?... ஒருவேளை சஞ்சய் சொன்னது போல இவன் பேசினால்???.... அப்படி எண்ணம் தோன்றிய நேரத்தில், அவன் கண்களில் பட்டது பழம் நறுக்க வைக்கப்பட்டிருந்த கத்தி.... ச்சி.. ச்சீ.... முட்டாள்த்தனமான சிந்தனை... ஒருவேளை சொல்லிவிட்டால்?.... அதை சொல்லும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தனக்குள் ஒரு விவாதம் நடத்தி முடித்தான்...
எழுந்து அறையை விட்டு வெளியே சென்றான், அப்போதுதான் சஞ்சய் தூக்கம் களைந்து முகம் கழுவி ஹாலில் வந்து அமர்ந்தான்...
குணாவை பார்த்ததும், “ஹாய்டா, குட் மார்னிங்... அதுக்குள்ள எழுந்தாச்சா?” என்று சொன்னபோதே அவன் கண்களின் அசதியையும், சிவந்த வெண்திரையையும் பார்த்துவிட்டு, “ஓஹோ, சார் தூங்கவே இல்லையா?” என்றான்...
சஞ்சய் எந்த நோக்கத்தில் பேசுகிறான்? என்று யோசிக்கவல்லாம் குணா முன்வரவில்லை... அவன் கண்கள் அறையின் வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தது, அவன் காதுகள் படுக்கையை விட்டு எழப்போகும் பாலாவின் காலடி சத்தத்தை எதிர்நோக்கி காத்திருந்தது... முகத்தின் தூக்கமின்மையால் உண்டான அசதியை கிழித்துக்கொண்டு அப்பட்டமாக தெரிந்தது குணாவின் கவலை...
எதிர்பார்த்தது போலவே பாலா எழுந்து வந்து, சஞ்சய் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தான்... “பாலா, குணாகிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னியே நேத்து?” என்று ஆட்டத்தை தொடங்கினான் சஞ்சய்...
“காலைலயே சொல்லிடனுமா?... சரி, நீ ஆரமிச்சுட்ட... சொல்லலைனா அவன் தலை வெடிச்சிடும்... குணா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான் குணாவின் கண்களை பார்த்து...
இந்த தருணத்தை தான் இரவு முழுக்க எதிர்பார்த்தான் குணாவும்.... தலையை மட்டும் அசைத்துவிட்டு, பாலா சொல்லப்போவதை எதிர்நோக்கி காத்திருந்தான்...
“உனக்கும் எனக்கும் பல விஷயத்துல பொருத்தமே இல்ல.... பல விஷயம் என்ன, எல்லா விஷயமும்னு கூட சொல்லலாம்.... நீ டெக்னிக்கலா வாழணும்னு ஆசைப்படுற, நான் கலைத்துவமா வாழ ஆசைப்படுறேன்... அதுதான் இவ்வளவு நாளா நமக்குள்ள அடிக்கடி வந்த சண்டைகளுக்கு கூட காரணம்....” என்று குணாவிற்கு தெரிந்த இந்த விஷயத்தை, ஏதோ புதிதாக கண்டுபிடித்தவன் போல கூறினான் பாலா...
“அதனால....” அடுத்து பாலா என்ன சொல்லப்போகிறான்? என்ற ஆர்வத்தில் கேட்டான் குணா...
“இவ்வளவு நாள் இது எனக்கு தோணவே இல்ல.... சஞ்சய் வந்தப்புறம் இப்டி ஒரு மாற்றம் எனக்குள்ள... நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை, நமக்கு  பிடிச்ச ஒருத்தர் கிட்ட ஷேர் பண்ணிக்குறதுல இருக்குற சந்தோஷத்தை இப்போதான் உணர்ந்தேன்... அந்த விஷயத்துல நான் சஞ்சய்க்கு தாங்க்ஸ் சொல்லணும்”
“சரி அதல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம்.... கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற?” அடுத்து பாலா சொல்லப்போகும் பதிலை கேட்டபிறகு, அவன் கன்னம் பழுக்க அறை கொடுக்க வேண்டும் என்ற ஆயத்தத்தில் இருந்தது குணாவின் வலது கை...
“அதனால, இனிமேல் நான் உனக்கு பிடிச்ச மாதிரியும் வாழப்போறேன்... புரியலையா, உனக்கு பிடிச்சதை நானும் தெரிஞ்சுக்க போறேன்.... இனி உன்கூட ரிலையன்ஸ் ஷேர் விலை பற்றி பேசுவேன், தோனி சிக்சர் அடிக்கிறப்போ நான் உன்ன கட்டிப்பிடிச்சு சந்தோஷப்படுவேன், புதுசா வந்திருக்கிற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பத்தி சொல்லுவேன்... உலகத்துல யாருமே “மேட் பார் ஈச் அதர்” கிடையாது, அப்படி வாழ நாமதான் முயற்சி எடுக்கணும்.... அந்த விதத்துல இது என்னோட முயற்சி” பாலா சொல்லி முடிப்பதற்குள், அவனை கட்டி அணைத்து அழுதே விட்டான் குணா...
அருகில் நின்ற சஞ்சயின் கண்களும் கலங்கி இருந்தது, ஆனால் அவன் மனமோ இப்போ தெளிவா இருந்தது....
(தர்மம் மறுபடியும் வெல்லும்...) (முற்றும்)

Monday, 24 June 2013

"போராட்டம்" தொடர்பான பதிவுக்கான பதில் - சென்னை தோஸ்த் அமைப்புக்கு...





(ஒரு கட்டுரை தொடர்பாக சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னாவிடம் இருந்து வந்த கருத்துக்கான என் பதில்.... அவருடைய கருத்தை காண... http://chennai-dost.blogspot.in/2013/06/blog-post.html)
அன்பிற்கினிய தோழர் விக்ராந்த் அவர்களே,
“தனியாக போராட முடியாதா?” என்ற எனது கட்டுரைக்கு நீங்கள் முன்வந்து பதில் அளித்தமைக்கு நன்றி.... குறிப்பிட்ட அந்த கட்டுரையில், எனது நீண்டநாள் கேள்விகளையும், கோரிக்கையையும் முன்வைத்தே எனது வாதங்களை முன்வைத்தேன்....
நீங்கள் சொல்வதை போல திருநங்கைகள் அனைவரும் நம் சகோதரிகள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது... சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நபர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதையும் நான் ஏற்கிறேன்.... ஒரே குடும்பமாக இருந்தாலும், அந்த குடும்பத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் உரிமைகள் வெவ்வேறாக இருக்கும் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... நம் கையில் உள்ள விரல்கள் கூட ஒரே அளவில் இருந்திடவில்லை... அதே போல நம் போராட்டம் மற்றும் கோரிக்கைகளும், திருநங்கைகளின் கோரிக்கைகளும் முற்றிலும் வேறு என்பதும் நாம் ஏற்றாக வேண்டிய உண்மை....
“மூன்றாம் பாலினமாக தங்களை அங்கீகரிக்க வேண்டும், அரசு தங்களுக்கான உரிமைகளை முழுமையாக தந்திட வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்” போன்ற இன்னும் பல நியாயமான கோரிக்கைகளோடு போராடுகிறார்கள் நம் திருநங்கை சகோதரிகள்.... ஆனால், நம் கோரிக்கைகள் முற்றிலும் வேறுபட்டவை.... “சட்டரீதியாக ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க வேண்டும், ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை சட்டமாக்க வேண்டும், ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடிய சட்ட முன்வரைவுகள் கொண்டுவரப்பட வேண்டும், குழந்தைகள் தட்தெடுப்பதில் ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” என்று முற்றிலும் வேறு திசைகளிலான நம் போராட்டங்கள் துளி அளவு கூட நம் சகோதரிகளின் கோரிக்கையோடு ஒத்துப்போகாது....
திருநங்கைகளை பற்றிய சமூக விழிப்புணர்வு ஓரளவு நம் தமிழகத்தில் உண்டாகிவிட்டதை நீங்களும் நானும் அறிவோம்.... அவர்களுக்கான சட்ட ரீதியான கோரிக்கைகள் கூட ஓரளவு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது (நலவாரியம், வாக்குரிமை போன்ற விஷயங்கள்)... அவர்களின் இனிவரும் போராட்டங்கள் என்பது, அடுத்தகட்ட உரிமைகளுக்கான போராட்டமே.... ஆனால், நம் போராட்டங்கள் அடிப்படை போராட்டம்.... படித்த படைப்பாளிகள், இலக்கியவாதிகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களிடம் கூட நம்மை பற்றிய ஒரு தெளிவான சிந்தனை இல்லை....
முதலாம் வகுப்பில் “அகர” எழுத்து கற்பவனுக்கும், இளங்கலை பட்ட வகுப்பில் “இலக்கியங்கள்” படிப்பதற்கும் உள்ள வித்தியாசம் நம் இரு போராட்டங்களின் அடிப்படையில் உள்ளது...
இனியும் நாம் தனியாக போராட மறந்தால், நமக்கான தனித்துவத்தை நாம் இழந்துவிடுவோம்.... இறுதிவரை நம்மை பற்றியான ஒரு விளக்கத்தை மக்கள் மன்றத்தின் முன் வைக்க முடியாமலேயே போய்விடும்.... இவ்வளவு காலம் இணைந்து செயல்பட்டோம்... நம் அக்காக்களின் கைகளை பிடித்து, போராட்ட வழிகளை கண்டறிந்து சென்றோம்.... இனி நம்முடைய தனிப்பட்ட அடையாளத்தை நாம் காட்ட வேண்டாமா?... அரசுக்கு உணர்த்த வேண்டாமா?... மக்கள் முன்னால் வைக்க வேண்டாமா?....
அதற்கான காலம் இதுவென்று உணருவோம்... கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை இப்போது இல்லை.... ஓரளவு நாம் நம்மை புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறோம்... இனி நமக்கு புரிந்ததை இந்த சமூகத்துக்கு புரியவைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது... இதனை நான் நிச்சயம் ஒரு எதிர்மறை விமர்சனமாக முன்வைக்கவில்லை... உங்களை போன்ற அமைப்பினர் நிச்சயமாக சமூக மாற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான வழிவகைகளை செய்து வருவதை நான் காண்கிறேன்... அந்த உழைப்பு இன்னும் உயர்வான வெற்றிகளை பெற்றிட, அந்த போராட்டங்கள் தனிப்பட்ட முறையில் அமைந்திட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்....
இங்கு நம் கே சமூகத்தில் நடக்கும் “சகோதர யுத்தம்” பற்றி நான் நன்றாக அறிகிறேன்.... இது மிகப்பெரிய அபாயத்தில் நம் சமூகத்தை இட்டு செல்லும் என்பதை அனைவரும் அறிவோம்... பல திசைகளிலும், பல வழிகளிலும், பல விதங்களிலும், பல அமைப்புகளாக நீங்கள் எல்லோரும் போராடினாலும், அந்த போராட்டங்களின் அடிநாதம் என்பது “ஒருபால் ஈர்ப்புக்கான உரிமைகள்” என்பதை நாம் அனைனரும் அறிவோம்.... அப்படி இருக்கையில், ஈகோ மறந்து, போட்டிகள் மறந்து ஒன்றாக கைகோர்த்து போராடி நமக்குள் இருக்கின்ற “நுண்ணரசியலை” உடைத்தெறிய  வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்....
அனைத்து அமைப்பும் ஒன்றாக இணைந்து போராடினால், நாம் வேறு யாருடனும் கைபிடித்து செல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படாது.... அப்படி ஒரு இணக்கமான சூழலை நாமாக உருவாக்க வேண்டிய காலம் இப்போது கனிந்திருக்கிறது.... இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இனி நம் போராட்டங்களின் அடுத்த கட்டத்தை அடைந்திட இந்த தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்....
“நல்லதொரு மாற்றத்துக்கு நாம் எல்லோரும், ஒன்றாக இணைந்து போராட வேண்டும்”...
நல்லதொரு மாற்றத்தை எதிர்நோக்கி,
என்றும் உங்கள் விஜய் விக்கி...