Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 15 July 2013

"தில்லை நகர் கொலை வழக்கு" - பகுதி இரண்டு....


7
“என்னோட அப்பாவும் அம்மாவும் நான் மூணு  வயசா இருக்கும்போது ஒரு ஆக்ஸிடென்ட்’ல இறந்துட்டாங்க... அப்பாவுக்கு நெறைய சொத்து... சொத்துக்கும் எனக்கும் கார்டியனா என்னோட உறவுக்காரர் ஒருத்தர் வந்தார்... அப்பாவோட பிஸ்னஸ் ஒண்ணா பண்ணவர், மாமான்னு அவரை கூப்பிடுவேன்... எந்த முறையில அவர் மாமா?னு எனக்கு தெரியல... கல்யாணம் கூட பண்ணிக்காம எனக்காக எல்லாம் பண்ணுவார்... நான் கேட்டதல்லாம் வாங்கி கொடுத்தார், எல்லாம் செஞ்சார்... அப்போ அவர் என் சின்ன வயசுல என்னோட அந்தரங்க இடங்கள்ல கை வச்சு விளையாடுவார்... அது ஒரு விளையாட்டு போல முதல்ல தெரிஞ்ச எனக்கு, விபரம் தெரிய ஆரமிச்சதும் அவர் செய்றது தப்புன்னு புரிஞ்சுது....
நான் விலக முயற்சி பண்ணாலும், பின்னாடி வலுக்காட்டாயமா உறவு வச்சுக்க தொடங்குனார்... ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்த அவரை என்னால வெறுக்கவும் முடியல, அவரோட செயல்களை மறுக்கவும் முடியல, அவரை விட்டு விலகி போகவும் வழியில்ல...
மனரீதியா நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன்... அதுவும் என் டீனேஜ்’ல அவரோட செயல்களால நான் துடிச்சு போய்ட்டேன்... ‘வேணாம் மாமா, எனக்கு பிடிக்கல’னு ஒருதடவை துணிஞ்சு சொன்னப்போ, என்னைய அடிச்சு காயப்படுத்தினார்... முதன்முதலா என்னைய அப்போதான் அவர் அடிச்சார்... வேற வழியே இல்லைன்ற நிலைமைல, சகிச்சு வாழ கத்துகிட்டேன்... ஆனாலும், பல நாள் அதை நினச்சு அழுதிருக்கேன்...
தூக்கமே வராது... மூணு தடவை தற்கொலை முயற்சி பண்ணேன்... ஹாஸ்பிட்டல்ல என்னென்னமோ பண்ணி காப்பாத்திட்டாங்க...
ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துதான் எனக்கு அந்த நரகத்துலேந்து விடுதலை கெடச்சுது... ஆனால், அவர் இறந்ததுக்கு அப்புறம் என்னைய யாராச்சும் செட்யூஸ் பண்ண வந்தால், எனக்கு பிடிக்கல... மாமா செஞ்ச அந்த மொத்த விஷயமும் என் கண் முன்னால வந்து, எல்லா கோபத்தையும் செட்யூஸ் பண்ற ஆளுகிட்ட காட்டிடுறேன்... என் மேல ஒருத்தன், என் அனுமதி இல்லாம கை வச்சா அதை நான் பொருத்துக்கனுமா?....
மாமா இறந்த பின்னாடியும், அவரை போலவே என்னை அவங்க காம நோக்கத்தோட பாக்குறது எனக்கு பிடிக்கல...  ஆனால், அவ்ளோ காயத்துக்கும் எனக்கு மருந்தா இருந்தவ இந்து... சின்ன வயசுலேந்து என்னோட பெஸ்ட் பிரென்ட்... எனக்கு ஸ்கூல்ல, காலேஜ்’ல னு ப்ரெண்ட்ஸ் கிடையாது... நான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கற ஒரே ஆள் இந்துதான்...
என்னப்பத்தி எல்லா விஷயமும் அவளுக்கு தெரியும்.... என்னோட அவ ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்பட்டாள், ஆனால் அவங்க குடும்பத்துல ஒத்துக்கல... அதனால இந்த ஒரு வாரமா அவ என்கூடத்தான் இருக்கா... அவளுக்காகத்தான் நான் பயப்படுறேன்... நான் இந்த கொலை விஷயத்துல மாட்டிகிட்டா அவ தனியா கஷ்டப்படுவா... தாங்க மாட்டா”
தன் மொத்த சுய சரிதையையும் சொல்லி முடித்தான் விவேக்....
“சின்ன வயசுல பெத்தவங்கள இழந்து, paedophile மாமா கிட்ட வாழ்க்கைய தொலைச்சு, அதுவும் கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷமா!... அதுக்கப்புறம் செட்யூஸ் செய்ற ஆளுங்களை பார்த்தா கொலைவெறி” எல்லாவற்றையும் மீண்டும் அசைபோட்டான்  பாலா... ஒருநிமிடம் நிலைகுழைந்து போனான், கண்களில் நீர் அரும்பி, வழிவதற்காக காத்திருந்தது.....
என்ன செய்வது? என்று பாலா யோசித்துக்கொண்டிருக்க, மறுபுறத்தில் விவேக்கின் கைகளை அவிழ்த்துவிட்டான் குமார்... அதை பாலாவும் தடுக்கவில்லை... அவிழ்க்கப்பட்ட கையால் தன் முகத்தில் வழிந்திருந்த கண்ணீரை துடைத்தான்... மேசை மீது இருந்த பாட்டில் நீரை “மடக் மடக்”என்று குடித்தான்....
அறை முழுவதும் இன்னும் சென்ட் வாசனை நெடி குறையவில்லை... அதைவிட அதிகமாக அந்த அறையில் சோகம் மேலிட்டது...
“இந்து உன் லவ்வரா?” அப்பாவியாக கேட்டான் குமார்...
“ஏய்! அது ரொம்ப முக்கியமா?... இப்போ என்ன பண்றதுன்னு சொல்லு...” முறைத்தபடியே உறுமினான் பாலா...
“இங்க பாரு... உன் பேர் என்ன?” கேட்டான் பாலா...
“விவேக்..”
“ஆங்!... விவேக்... உன்னோட நிலைமை எனக்கு புரியுது... ஆனால், நீ ரொம்ப நாள் போலிஸ் கிட்டேந்து தப்பிக்க முடியாது... நீ நேத்து கொல்லப்பார்த்தவன் சாகல, ஐ.ஸி.யூ’ல இருக்கான்.... அவன் சரி ஆகிட்டா, ஈசியா உன்னைய அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்க...”
“அது முடியாது... அவன் என்னைய காட்டிக்கொடுக்க மாட்டான்”
“எப்டி உறுதியா சொல்ற?”
“என்னயப்பத்தி சொன்னா, அவன் எல்லாத்தையும் சொல்ல வேண்டி இருக்கும்... அதாவது, தான் ஒரு கே’ன்னும் சொல்லணும்... படுக்குறதுக்காக எவ்ளோ ரிஸ்க் வேணாலும் எடுக்குற பசங்க, நிச்சயம் தன்னை கே’னு சொல்லிக்க மட்டும் தயங்குவாங்க...”
பாலாவிற்கு அதிர்ச்சி... இவ்வளவு தெளிவா பேசுற இவனா கொலைகாரன்?... நான் யோசிக்காததை கூட அவன் யோசிச்சிருக்கான்... இப்போ என்ன பண்றது?... நாளைக்கு அவன் போலிஸ்’ல மாட்டிகிட்டா நானும் மாட்டிக்க வேண்டி இருக்குமே?... பலவாறும் பாலா யோசித்துக்கொண்டிருக்க, குமார், “நீ நல்லா அழகா இருக்கியே, மாடலிங் சினிமா’ன்னு ட்ரை பண்ணலாமே?... நான் வேணும்னா ரெக்கமண்ட் பண்ணவா?” தூண்டிலை போட்டான்...
வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்த விவேக், பாலாவின் அடுத்த பதிலுக்காக காத்திருந்தான்...
“எனக்கு என்ன பண்றதுன்னு புரியல... இது தப்போன்னு தோணுது” தலையில் கைவைத்தபடி பேசினான் பாலா...
குறுக்கிட்ட குமார், “டேய், என்னடா இப்டி பேசுற?... சிட்பன்ட் பிராடு சொன்னதை மறந்துட்டியா?”
“ஐயோ சாமி!... அது சிக்மண்ட் பிராய்டு...”
“ஆமா... அந்தாளுதான்.... நம்ம எல்லாருக்குள்ளும் வன்முறை எண்ணம் இருக்கும், அதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள்தான் கொலைகாரர்கள் ஆகிறார்கள்... நமக்கு பிடிக்காத ஒருத்தனை கொன்றால், உனக்கு தண்டனை இல்லை, இந்த சமூகம் உன்னை தப்பா நினைக்காதுன்னு ஒரு நிலைமை வந்தா, எத்தனை பேரை நீ கொன்னிருப்ப?.. அந்த சட்டமும், சமூகமும் உன் வன்முறை எண்ணத்தை செய்ய விடாமல் தடுக்குது.... இந்த நபர்களுக்கு அப்படி யோசிக்கவிடாமல் மனம் அந்த தவறை செஞ்சிடுது... இதுக்கு சிகிச்சைதான் தேவை” சில நாட்களுக்கு முன்பு பாலா சொன்ன விஷயத்தை, வார்த்தைகளை மட்டும் ஆங்காங்கே மாற்றிப்போட்டு, “சிக்மண்ட் ப்ராயிட்” கூட டீ குடிக்கையில் பேசிய விஷயம் போல அவனிடமே திருப்பி கூறினான்... அவ்வப்போது அவன் விவேக்கின் முகத்தை காண மறக்கவில்லை, தன் புத்திசாலித்தனத்தை விவேக்கிடம் காட்டிக்கொள்ள அதை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொண்டான்... ஆனாலும், இன்னும் அந்த சந்தேகம் அவனை விட்டு அகலவில்லை... “யார் அந்த இந்து?”
சிரித்த பாலா, “சரி, பார்த்துக்கலாம்... உனக்கு நான் ட்ரீட்மென்ட் தரேன், அதை ஒழுங்கா நீ கடைபிடிக்கணும்”
“வெரி குட் பாலா... ஐ லைக் திஸ் ஸ்பிரிட்....” அருகில் சென்று பாலாவின் முதுகை தட்டிக்கொடுத்தான் குமார்...
“சரி, அந்த இந்து யார்?.. உன் லவ்வரா?” பாலாவே கேட்டுவிட்டான்...
“ச்ச.. ச்ச... அவ என் பிரென்ட்... வாழ்க்கை முழுக்க அவளும் நானும் ஒண்ணா வாழ முடிவெடுத்திருக்கோம்...”
“அது எப்டி சாத்தியம்?.. ஒன்னு லவ்வரா இருக்கணும், இல்ல கல்யாணம் பண்ணவங்களா இருக்கணும்... அது இல்லாம எப்டி?” ஆச்சரியத்தில் கேட்டான் பாலா...
“ஏன் ப்ரெண்ட்ஸ் ஒண்ணா இருக்கக்கூடாதா?... லவ், மேரேஜ் இதையல்லாம் தாண்டியது ப்ரெண்ட்ஷிப்...” மென்மையான குரலில் சொன்ன விவேக்கை, ரசித்து பார்த்தான் குமார்...
“குல்பி படத்துல நடிச்ச ரன்பிர் மாதிரியே இருக்க நீ!” பெருமூச்சு விட்டபடி சொன்னான் குமார்....
“அது குல்பி இல்லை, பர்பி....” சிரித்தான் விவேக்...
“டேய் குமார், உன் கழுத்துல ஏதோ கோடு மாதிரி தெரியுதே?” என்று பாலா சொன்னதும், கொஞ்சம் கலவரத்துடன், கழுத்தை தடவிக்கொண்டான்... காதல் பார்வை கலவரப்பார்வையாக மாறியதை விவேக் ரசித்தான்...
வெகுநேரம் மூவரும் பலவாறு பேசிக்கொண்டிருந்தனர்..
“ஐயோ லேட் ஆச்சு!... இந்து தனியா இருப்பா...” தன் கடிகாரத்தை பார்த்தபடி பதறி எழுந்தான் விவேக்...

8
பாலா கொஞ்சம் தயங்கினாலும், மனிதத்தன்மை என்ற அடிப்படையில் இப்போது விவேக்கை அவன் நம்பித்தான் ஆகணும்... அவன் பொய் சொல்வதாக தெரியவில்லை, அவனே தனக்கு சிகிச்சை தேவைப்படுவதை உணர்ந்திருக்கிறான்...
தன் பைக்கில் விவேக்கை அவன் வீடு வரை கொண்டு சென்று விட்டான் பாலா... நல்ல பிரம்மாண்டமான வீடு, “இந்த வீட்டில்தான் தொடர்கொலைகாரன் இருக்கிறான்” என்று சொன்னால் காவல்துறை கூட நம்பிட யோசிக்கும்... ஆளுயர நின்ற வாயிற்கதவை திறந்தபடி பாலாவை பார்த்த விவேக், “உள்ள வாங்களே!... இந்துவை பார்த்துட்டு போகலாம்?” என்றான்...
நேரம் நள்ளிரவை நெருங்கும் நேரம், இப்போது புதியவர் வீட்டிற்குள் நுழைவது என்பது தவறான விஷயம், அதுவும் ஒரு பெண்ணை பார்க்க இது தருணமில்லை....
“பரவால்ல விவேக்... நீங்க போங்க, நாளைக்கு மறக்காம வந்திடுங்க...” சொல்லிவிட்டு பைக்கில் சீறி பாய்ந்தான் பாலா...
நள்ளிரவு காட்சி முடிந்து சோனா மீனா திரையரங்கம் மக்களை வெளியேற்றிக்கொண்டிருந்தது... ஏதோ ஆங்கில படத்தின் தமிழாக்கம், அவ்வளவாக கூட்டமில்லை... நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்த கொலைகாரனோடு, கொஞ்ச நேரத்திற்கு முன்பு பைக்கில் சென்றதை தன்னால் நம்பவே முடியவில்லை... காவல் துறைக்கு காட்டிக்கொடுக்காமல், சிகிச்சை கொடுப்பதாய் சொன்னது ரொம்ப அதிகபிரசங்கித்தனம் தான்... என்ன பண்றது?... சுஜாதாவின் கதைகளில் வரும் “கணேஷ், வசந்த்” போல ஆகவேண்டும் என்ற நெடுநாளைய எண்ணத்தை ஈடுசெய்ய, இது ஒரு சந்தர்ப்பமாகவே பாலாவிற்கு தோன்றியது...
அறையை அடையும்போது, அறையின் வாசலில் பாலாவிற்காக ஆவலோடு காத்திருந்தான் குமார்...
“என்னடா வீட்ல விட்டுட்டியா?... எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு, இன்னிக்கு கொலைக்கான கோட்டா முடியலையே, உன்னைய போட்டு தள்ளிடுவானோன்னு நினச்சேன்” சிரித்தான் குமார்...
“நினைச்சியா?.. ஆசைப்பட்டியா?”
“நாம நினைக்கிறது எல்லாம் நடக்கவா செய்யுது!... டேய், எனக்கு ஒரு சந்தேகம்.. இவ்வளவு பேரையும் துணிஞ்சு கொல்ற தைரியம் உள்ள  இவனால ஏன் அவனோட அந்த மாமாவ மட்டும் கொல்ல முடியல?” கொஞ்சம் வித்தியாசமான குமார் புத்திசாலித்தனமாக யோசிக்கிறான்...
“நீ கேட்கிறது சரிதான்... கோவில்லயெல்லாம் யானை கால்ல கட்டிருக்குற சங்கிலியை பாத்திருக்கியா?... அந்த யானை நினச்சா அதை ரொம்ப எளிதா அறுத்து எறிஞ்சுட்டு போய்ட முடியும்... ஏன் அந்த சங்கிலிக்கு கட்டுப்பட்டு இருக்கு தெரியுமா?”
தலையை சொரிந்தபடியே யோசித்துவிட்டு, “ஆமால்ல, ஏன்?” என்றான் குமார்...
“அந்த யானை குட்டியா இருக்கும்போது அந்த அளவுல கட்டப்படுற சங்கிலி அது... ஆரம்பத்துல அதை அறுக்கிறதுக்காக காலை போட்டு இழுக்குமாம்.. அப்டி இழுத்து இழுத்து கால் புண்ணாகி போய்டுமாம்.. அதனால தான் பெரிய ஆளா ஆகிட்டாலும், தனக்கு நிறைய உடல் வலிமை வந்தாலும் அந்த சங்கிலியை தன்னால அறுக்க முடியாதுன்னு எண்ணம் மட்டும் அது மனசுல எப்பவும் தங்கிடுமாம்... அதனால அதைப்பத்தி யோசிக்கவே செய்யாதாம்... அது போலத்தான் விவேக் கதையும்... அந்த மாமா, அவன் காலில் கட்டப்பட்ட சங்கிலி”
“அடேங்கப்பா!.... வாரமலர்’ல போன வாரம் படிச்ச விஷயத்த, முதுமலை காட்ல போயி ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து சொல்ற மாதிரி சொல்றியேடா..... சரி, அதைவிடு கழுத... நீ ஒரு உதவி எனக்கு செய்யனும்”
“என்ன?”
“விவேக் கியூர் ஆனபிறகு, என்னையும் அவனையும் நீ சேத்து வைக்கணும்..”
“சேத்து வச்சிட்டு, பக்கத்துல நின்னு விளக்கு பிடிக்கனுமா?” நக்கலாய் கேட்டான் பாலா...
“தப்பா பேசாத... விவேக் மாதிரி ஒருத்தன் கெடச்சா, வாழ்க்கை முழுக்க வேற பசங்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்..”
“போதும்.. போதும்... லைட் ஆப் பண்ணு, கண்ட படத்தையும் பார்த்துட்டு இப்டி மொக்கை டயலாக் பேசுறதே உனக்கு பொழப்பா போச்சு” கட்டிலில் படுத்து, கண்களை மூடினான் பாலா...
பாலாவை மனதிற்குள் சபித்தபடியே, உறங்க ஆயத்தமானான் குமார்....
விடிந்தது....
“டக்... டக்... டக்....” கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தான் பாலா... அருகில் படுத்திருந்த குமாரை உதைந்து எழுப்பினான்... திடுக்கிட்டு விழித்த குமார், கதவு தட்டப்படுவதை அறிந்து, பாலாவை கரித்தபடியே கதவை திறக்க எழுந்தான்... கைலியை கொஞ்சம் சரிபடுத்தியபடியே, கண்களை கசக்கிக்கொண்டே கதவை திறந்த குமாருக்கு அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியம்... வெளியில் நின்றது விவேக், வாய் நிறைய புன்னகையோடு “ஹாய்... குட் மார்னிங்” என்றான்....
கனவல்ல... நிஜம்தான்... இரவு நிகழ்வுகள் எல்லாம் மீண்டும் குமாரின் மனதிற்குள் ஒரு ட்ரைலர் போல ஓடி மறைந்தது... இரவில் பார்த்ததைவிட, இப்போ இன்னும் அழகா தெரியுறான்... சுத்தமாக குளித்து, பாண்ட்ஸ் வாசம் குமாரின் நாசிகளில் பரவியது... வெள்ளை சட்டை, ஊதா ஜீன்ஸ் சகிதம் இன்றைக்கு வேறு ஒரு புதுவித “விவேக்”காக வந்திருக்கிறான்....
“ஏய், இன்னும் எழுந்திரிக்கலையா?” சிரித்தான் விவேக்.... அது சிரிப்பா?... இல்லை, குமாரின் கண்களை கூசவைத்த மின்னல்... காலை நேரத்தில் இயல்பாக இருக்கும் பிரச்சினை, விவேக்கை இப்படி பார்த்ததும் இன்னும் அதிகமானது குமாருக்கு... கூனி குறுகி கைலியை ஏதேதோ செய்து சமாளித்து, விவேக்கை உள்ளே அழைத்தான்...
பாலாவிற்கும் ஆச்சரியம்தான், ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை....
“ஹாய் விவேக்... குட் மார்னிங்”
“குட் மார்னிங் பாலா” மேசை மீது விரிக்கப்பட்டிருந்த ‘current diagnosis and treatment in psychiatry’ புத்தகம் விவேக்கின் கண்களை உறுத்தியது.... கையில் எடுத்தான், அதன் கனத்தால் புத்தகம் அவன் கைகளில் தடுமாறியது...
“இவ்ளோ வெய்ட்டா இருக்கே, இந்த உலகத்துல அவ்ளோ மனநோய்கள் இருக்கா என்ன?” ஆச்சரியம் விலகாமல் கேட்டான்.... பாலா பதில் சொல்லவில்லை, பாலாவிடம் இதற்கு விவேக் எந்த பதிலையும் எதிர்பார்க்கவும் இல்லை...
குளியலறைக்குள் மூன்றாவது முறையாக பியர்ஸ் சோப்பை முகத்தில் தேய்த்து கரைத்தான் குமார்... இரண்டு முறை தேய்த்த பல்லை, கண்ணாடியால் சரி பார்த்தான்... ஜீன்ஸ் பேன்ட் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு, மாடல் போல வெளியே வந்தான்...
“என்ன குமார், எங்கயும் வெளில போறிங்களா?... முக்கியமான வேலை எதுவுமா?” ஆச்சரியமாக கேட்டான் விவேக்....
“ஆமா.... ஈரான் அதிபரோட எண்ணை கிணறு வாங்குறது சம்மந்தமா பேசப்போறான்...” சமயம் பார்த்து குமாரை வாரினான் பாலா...
பாலாவை பார்த்து முறைத்தபடியே, விவேக்கை பார்த்து அசடு வழியவும் சிரித்தபடி, “இல்ல விவேக், நான் எப்பவும் இப்டிதான் டீசன்ட்டா இருப்பேன்...”
“ஆனால், குளிக்க மட்டும் மாட்டான்....” இறுதியாக குமாரை இன்னும் அதிக கடுப்பிற்கு ஆளாக்கிய சந்தோஷத்தோடு குளியலறைக்குள் சென்றான் பாலா...
மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தினசரி நாளிதழை பிரித்தான் பாலா.... இரண்டாம் பக்கத்தில் பிரதான செய்தியின் தலைப்பு “தொடர்கொலைகளை செய்பவன் அடையாளம் தெரிந்தது” என்று இருந்தது...
“எப்டி தெரிஞ்சிருக்கும்?... ஹாஸ்பிட்டல்ல இருந்தவன் சொல்லிருப்பானோ?” பாலா கேட்டான்....
“இல்ல... அவனா இருக்க வாய்ப்பில்லை... வேற யாராச்சும்...” யோசித்தான் விவேக்...
“வேற யாரும்னா....” இழுத்தபடியே குமாரை பார்த்தான் பாலா....
“ஐயோ சாமி நானில்ல.... முதல்ல என்ன எழுதிருக்கானுகன்னு முழுசா படி” பதற்றமானான் குமார்... “நேத்து தண்ணி கூட அடிக்கல, அப்புறம் எப்டி னா சொல்லிருப்பேன்... ஒருவேளை தூக்கத்துல உளறி இருப்பேனோ?... அப்டி உளறி இருந்தாலும், பக்கத்துல பாலாதானே படுத்திருந்தான்” தனக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டான் குமார்...
நாளிதழை முழுதாக படித்த பாலா சிரித்தபடியே சொல்ல தொடங்கினான், “அந்த கொலைகாரன் டெல்லியில் முன்னாடி பரபரப்பாக பேசப்பட்ட குரங்கு மனிதனாம்... யாரோ நாலு பேர் பார்த்ததா, பேட்டி கூட போட்டிருக்காங்க.... இப்டி பேசிப்பேசியே உன்மேல சந்தேகம் வராத அளவுக்கு இந்த பத்திரிகை காரங்களே உன்ன காப்பாத்திடுவாங்க... நீ காபி குடி விவேக்”
கையில் வைத்திருந்த காபி கோப்பையை ரசித்து ருசித்துக்கொண்டிருக்கும் இந்த கொலைகாரனை பிடிக்க, சாப்பாடு தூக்கம் எதுவும் இல்லாமல் செந்தமிழன் போராடிக்கொண்டு இருக்கிறார்...
மாநகராட்சி பேருந்து நிலையத்தில் வழிந்த வியர்வையை உள்ளங்கையால் துடைத்தபடி, ஒரு நடத்துனரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் எஸ்.ஐ ராஜேந்திரன்...
“இந்த டிக்கெட் இந்த பஸ்’ல கொடுத்தது தானே?” அதை வாங்கி பார்த்து, எண்களை உறுதி செய்த பிறகு, “ஆமா சார்” என்றான் நடத்துனர்... நடத்துனர் பதினெட்டு வயதை கடந்திருப்பானா?ன்னே ராஜேந்திரனுக்கு ஒரு சந்தேகம்... ஆனால், இப்போது அது அவருக்கு தேவையில்லாத சந்தேகம்....
“இவன் இந்த பஸ்’லதான் ஏறிருக்கான்... அவன் எங்க இறங்குனான்?.. யார் கூட இறங்குனான்?னு கொஞ்சம் யோசிச்சு சொல்ல முடியுமா?” தன் கையில் ஒரு புகைப்படத்தை நீட்டினார் ராஜேந்திரன்... அதை வாங்கி பார்த்து, புருவத்தை சுருக்கி யோசித்த நடத்துனன், “ஞாபகம் இருக்கு சார்... மறக்க முடியாது... இந்த பையன் சத்திரத்துல ஏறினான்... முன் சீட்ல உக்காந்திருந்தான்... பாலக்கரைல ஏறுன இன்னொருத்தன் வந்து கடைசி சீட்ல உக்காந்தப்போ, இவனும் அவன் பக்கத்துல போய் உக்காந்து, என்னமோ கருமத்த பண்ணாணுக... நான் படியில நின்னபடியே என்ன பண்றானுங்கனு பார்த்தேன்.... திடீர்னு ஒருத்தன் புத்தூர்ல எறங்க, இவனும் பின்னாடியே இறங்கி போய்ட்டான்... இவன் டிக்கெட் எடுத்தது கண்டோன்மன்ட்’க்கு, ஆனால் புத்தூர்’லேயே இறங்கிட்டான்...” நடந்த விஷயங்களை வரிசையாக ஒப்பித்தான்...
ராஜேந்திரன் முகத்தில் இப்போதுதான் ஒரு “அப்பாடா!” பெருமூச்சு... வழக்கை விசாரிக்க தொடங்கியது முதல், முதன்முதலில் கிடைக்கும் ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் அது....
“இவன் கூட வந்தவன் எப்டி இருந்தான்?” ஆர்வமாக கேட்டார் ராஜேந்திரன்....

9
“ஆள் நல்லா நடிகர் மாதிரி இருந்தான் சார்... நல்லா செவப்பா, ஒயரமா, கருப்பு சட்டை போட்டிருந்தான்.... மூஞ்சி அவ்ளோ சரியா ஞாபகம் இல்ல, ஆனால் ஆள் நல்லா இருந்தான் சார்” பதிலில் குழப்பம் தெரிந்தது...
“அன்னிக்கு நைட் தண்ணி போட்டிருந்தியா?”
“சார்....” தலையை சொறிந்தபடி பம்மினான்.... ராஜேந்திரனுக்கு “அப்பாடா!” பெருமூச்சு இப்போது “அய்யோடா!” சிறுமூச்சாக ஆகிவிட்டது.... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞனும் உண்மையை சொல்ல மறுக்கிறான்.... அமைச்சரோட உறவினாராம், அதற்கு மேல் “வழக்கமான” விசாரணையை அவனிடம் மேற்கொள்ள முடியாத நிலைமை... “ஆமை புகுத்த வீடும், அரசியல்வாதி புகுந்த வழக்கும் முன்னேற்றம் அடைந்ததா வரலாறே இல்லை...” இந்த வழக்கும் அப்படி ஒரு முன்னேற்றமில்லாத பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது.... இப்போது அவன் பாக்கெட்டில் இருந்த ஒரே துருப்பு சீட்டான இந்த பயண சீட்டும் அதிகம் பயனற்ற வெற்று காகிதம் போல ஆகிவிட்டது...
“சரி, இனிமேல் அவனை எங்கயாச்சும் பார்த்தா இந்த நம்பருக்கு போன் பண்ணி சொல்லு” நடத்துணனின் கையில் தன் அலைபேசி எண் எழுதிய ஒரு காகிதத்தை கொடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார் ராஜேந்திரன்...
சரியாக அந்த நேரத்தில், பாலக்கரையில் கருப்பு உடை போட்ட இளைஞனை பற்றிய விசாரணையில் தீவிரமாக இருந்தார் எஸ்.ஐ பழனிவேலு...
மதி பேன்சி ஸ்டோர், ராஜா மளிகை கடை, சிவா ஹார்டுவேர்ஸ், ஒரு பெயரில்லா மாலை கடை.... எல்லாவற்றையும் கடந்து ஒரு மெடிக்கல் ஷாப் இருந்தது, அதுவும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகில்... மற்ற கடைகள் இரவு வரை திறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் பழனிவேலு அந்த மருந்தகத்தை நோக்கி சென்றார்..
“என்ன சார் வேணும்?” அங்கிருந்த இரண்டு மூன்று வாடிக்கையாளர்களை தவிர்த்துவிட்டு, பழனிவேலு அருகில் வந்து நின்றாள் கடையில் வேலை பார்க்கும் பணிப்பெண்... கருப்பாக இருந்தாலும், ஒரு தமிழ் சாயல் முகத்தில் தெரிந்தது... நெற்றிக்கு நேராக மேலே நடு வகிடெடுத்து , நடுவில் பொட்டு வைத்திருக்கிறாள், திருமணமான பெண்....
“நீ அவங்கள கவனிச்சுட்டு வாம்மா...” கரிசனத்தோடு சொன்னார்.... லேசான ஒரு புன்முறுவலோடு மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்க தொடங்கினாள்....
“சார் ஓவிரான் இல்ல, டைக்லோ தந்துடவா?” மருந்தகத்தில் அவள் நடக்கவில்லை, ஓடினாள்... இருவரையும் அவசரமாக கவனித்து, பில் போட்டு வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும், பழனி வேலு முன் வந்து நின்றாள்...
“முந்தாநாள் நைட் ஒரு ஒன்பது மணி போல, இந்த பஸ் ஸ்டாப்ல கருப்பு சட்டை போட்ட பையனை பார்த்தியாம்மா?”
“போட்டோ இருக்கா சார்?”
“இல்ல... அவன் ஆள் நல்லா செவப்பா, உயரமா இருப்பான்... ஒரு மாடல் மாதிரி இருப்பான், தனியா பஸ் ஏறிருப்பான்...”
அவள் சிரித்தாள்... பதில் எதிர்பார்த்த நேரத்தில், அவள் சிரிப்பு அவரை சங்கடப்படுத்தியது.... சிரிப்பை நிறுத்திவிட்டு, “என்ன சார் கேள்வி இதல்லாம்?.... இது மெயின் ஏரியா... ஒருநாளைக்கு நூத்துக்கணக்கான பேர் இங்க வராங்க, பல நூறு பேர் அந்த பஸ் ஸ்டாப்ல நிப்பாங்க... அதில.... நைட் ஒன்பது மணிக்கு மேல, ஒரு பையன்...” ஏதோ நினைவு வந்தவளை போல நிறுத்தினாள்...
“சார், ஞாபகம் வருது... நீங்க சொல்ற அடையாளத்துல இருந்த அந்த பையன் அதுக்கு முன்னாடி ஒருதடவை இங்க வந்திருக்கான்... தூக்க மாத்திரை கேட்டான், டாக்டர் ப்ரெஸ்க்ரிப்சன் இல்லாம தரமுடியாதுன்னு சொன்னேன்... முதலாளி வந்த நேரம் என்னோட சண்டை போட்டுட்டு இருந்தான்.... நீங்க சொன்ன அந்த நாள்ல, அவன் இங்கதான் பஸ் ஏறினான்... போனதடவை வந்தப்போ பைக்ல வந்தான், இப்போ நடந்து வந்தான்....”
“என்ன பைக்மா?”
“பல்சர் சார்... கருப்பு கலர்” யோசிக்காமல் ஒரு பைக்கின் பெயரை இவள் சொல்லுவாள் என்று பழனிவேலு நினைத்து கூட பார்க்கவில்லை...
“யோசிக்காதிங்க சார்... எங்க அப்பா மெக்கானிக் ஷெட் வச்சிருக்கார், எல்லா வண்டி பேரையும் பார்த்ததும் சொல்லிருவேன்” சிரித்தாள்... அவள் பெண்ணாக தெரியவில்லை, விசாரணையை நல்ல விதத்தில் கொண்டு செல்ல வந்த தேவதையாக தெரிந்தாள்...
“ரொம்ப தேங்க்ஸ்மா... அவனை மறுபடியும் பார்த்தா, இந்த நம்பருக்கு கூப்பிடு” சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி சென்றார் பழனிவேலு....
“கருப்பு சட்டை, சிவப்பான ஆசாமி, உயரமான உடல் வாகு... இதோடு இப்போது புதிதாக இணைந்திருக்கும் அடுத்த ஆதாரம் ‘கருப்பு பல்சர்’” இதற்கு மேல் வழக்கில் அடுத்த மூன்று நாட்களும் எந்த முன்னேற்றமும் இல்லை... ஆனால், எவ்வித கொலையோ, கொலை முயற்சியோ அந்த மூன்று நாட்களில் நடக்காமல் இருந்ததே வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றமாக நம்பினார்கள் செந்தமிழன் டீம் சகாக்கள்.... இதுவரை நூற்றி இருபது நபர்களிடம் தொலைபேசி எண்கள் கொடுத்தாகிவிட்டது... ஆனால், அவர்களிடமிருந்து அழைப்பு மட்டும் வரவில்லை....
“ஒருவேளை வெளியூர், வெளிநாடுனு எங்கயாவது போயிருப்பாங்களோ?” காவல் துறையில் தீவிர ஆலோசனை நடந்துகொண்டிருக்கும் அந்த நேரத்தில், சரியாக உறையூர் வீதிகளில் மளிகை கடையில் “மசாலா” பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தான் விவேக்....
“நான் சூப்பரா சமைப்பேன்... அதுவும் சிக்கன் செய்றதுல நான் ஸ்பெசலிஸ்ட்...” வாய்வார்த்தையாக சொன்ன இந்த வார்த்தைகளை, உடும்பு பிடியாய் பிடித்துக்கொண்டான் குமார்... அன்று இரவு நடக்கவிருக்கும் மது விருந்துக்கு சைட் டிஷ் ஏற்பாட்டை விவேக் கையில் ஒப்படைத்துவிட்டான் குமார்....
சமையலறையில் சூடான எண்ணையில் கடுகு தாளிப்பது முதல் சமையல் வேலை சுபமாக தொடங்கியது....
மது புட்டிகள், குளிர்பானங்கள், விவேக் ஸ்பெஷல் சிக்கன் சகிதம் மூவரும் ஒன்றாக அமர்ந்தார்கள்... “நீயும் குடிப்பில்ல விவேக்?” பாட்டிலில் கண்களை பதித்தவாறே கேட்டான் குமார்...
“இல்ல... பழக்கம் இல்ல”
“எங்களுக்கு மட்டுமென்ன பிறந்த உடனே பால் பாட்டில்ல பிராந்திய ஊத்தி கொடுத்தா கத்துக்கொடுத்தாங்க?... எல்லாத்தையும் போற போக்குல கத்துக்கிட வேண்டியதுதானே?”
“டேய் குமாரு, நீ எதுக்கு அடிபோடுறன்னு தெரியுது.... இந்த பாட்டில் சரக்கு, உனக்கு பால் ஊத்துற சரக்கா மாறிடாம பார்த்துக்க...” சிரித்துக்கொண்டே விவேக்கின் பக்கம் திரும்பிய பாலா, “விவேக், இவன் இப்பவே அலப்பரைய கொடுக்க ஆரமிச்சுட்டான்... ஒரு குவாட்டருக்கு மேல போனா நம்மளால தாங்கிக்க முடியாது... பாத்துக்கோ” சிரித்தான்...
உற்சாக பானம் அருந்தும் படலம் இனிதே நடந்துகொண்டிருந்தது...
“விவேக், அந்த சரக்கை கொஞ்சம் ஊத்து!” உட்காந்திருந்தாலும் உடலில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது...
“போதும்.... குவார்ட்டர் கோட்டா முடிஞ்சாச்சு... சாப்டுட்டு போய் தூங்கு” பாட்டிலை எடுத்து கொஞ்சம் தள்ளி வைத்தான் விவேக்...
“உங்க பூர்விகம் கர்நாடகாவா?”
“இல்ல... மதுரை...”
“அப்புறம் ஏன் குடிக்க தண்ணி கொடுக்குறதுல கூட பிரச்சினை பண்ற?” அழுவதை போல அப்பாவியாக கேட்டான் குமார்... சிரித்தபடியே வேறு வழியில்லாமல் அவன் கிளாசில் ஊற்ற, பாலா சொன்னதைப்போல குமார் தனது சொற்பொழிவை தொடங்கிவிட்டான்....
“மச்சான் விவேக்கு... நான் குடிச்சுட்டு உலருறேன்னு நினைக்காத... நான் எதுவும் தப்பு பண்ணிருந்தா என்ன மன்னிச்சிடு.... நான் போதைல இருக்குறப்போ கழுத்துல கோடு போட்டுட்டு போய்டாத... இது உன் கை இல்ல, காலா நெனச்சுக்கறேன்”
“நீ இப்போ புடிச்சிருக்கது நெஜமாவே என் கை இல்ல, கால் தான்....”
“ஓ!... சாரி பார் திஸ் மிஸ்டேக்... எதாவது கோபம் இருந்தா, ‘சப்பு சப்பு’ன்னு நாலு அறை வேணாலும் அறைஞ்சிடு... நான் ரொம்ப நெறைய கனவுகள்ல இருக்கேன்...”
“அப்டியா?.. அப்டி என்ன கனவு?” ஆர்வத்தோடு சிரித்தபடியே கேட்டான்......
“நல்லா ஐடி பீல்டுல இருக்க ஒரு அழகான பையனா பார்த்து லவ் பண்ணி, கனடால செட்டில் ஆகணும்... அவன் வேலைக்கு போய் நெறைய சம்பாதிக்கணும், அதை ஜாலியா நான் என்ஜாய் பண்ணனும்” ரொம்ப சீரியசாக முகத்தை வைத்து, தன் கனவை பட்டியலிட்டான் குமார்.... இதையெல்லாம் அவனாக பேசவில்லை, அவனுக்குள் சென்ற எத்தனால் பேசவைத்தது...
பலமாக சிரித்த விவேக், “அடப்பாவி!.. அப்போ கடைசி வரைக்கும் வேலைக்கு போறதில்லை’னு முடிவோட இருக்க?... இதுக்கு லவ்வை உனக்கு அட்வாண்டேஜா எடுத்துக்கற...” என்றான்...
ஏதேதோ இன்னும் சில புலம்பல்களோடு அப்படியே உறங்கிப்போனான் குமார்....
காலையில் விழித்தான்... விழித்தான் என்பதைவிடவும் பதறி அடித்து எழுந்தான் என்றுதான் சொல்லணும்.... கழுத்தை ஒருமுறை தடவி பார்த்துக்கொண்டான், “அப்பாடா!... நான் இன்னும் சாகல”...

10

“நீ இன்னும் சாகலடா!” சிரித்தான் பாலா....
“ச்ச... இது ஒரு பொழப்பாடா?... ஒவ்வொரு நாளும் கண் முழிக்கைல இருக்குறோமா? செத்துட்டோமா?னு பயந்துட்டே எழுந்திருக்கிறது” முகத்தில் வழிந்த வியர்வையை போர்வையால் துடைத்தபடியே எழுந்தான்...
எழும்போது அவனுக்கு இன்னொரு சந்தேகம் உருவானது, “நைட் நான் எதுவும் தப்பா நடந்துக்களல்ல?..”
“நடந்திருந்தா, அதை கேட்க நீ இப்போ உயிரோட இருந்திருக்க மாட்ட” பல் துலக்கியபடியே சிரித்தான்...
“விவேக் எங்க?”
“அவன் நைட்டே போய்ட்டான்... அவன் இருக்குறதா சொன்னான், நான்தான் எதுக்கு வீண் வம்புன்னு அனுப்பிட்டேன்”
“இந்துவை விட்டுட்டு இருக்க மாட்டானே அவன்?” முகம் கழுவிக்கொண்டே இவன் கேட்ட கேள்விக்கு பதிலை, கதவை திறந்து உள்ளே வந்த விவேக்கே சொன்னான், “இப்போலாம் இந்து தனியா இருக்க பழகிட்டா... ட்ரீட்மென்ட் முடியுரவரைக்கும் இங்கயே தாங்கிக்க கூட சொல்றா... அடிக்கடி வெளில போனா போலிஸ் பிரச்சினைக்கும் அவ பயப்படுறா”....
விவேக் திடீரென உள்ளே வந்ததில் குமார் அதிர்ச்சியானான்... ஆனாலும், அதை காட்டிக்கொள்ளவில்லை... எப்போது வந்திருப்பான்?.. பேச்சு தொடங்கியபோதே வந்திருப்பானோ?... இருக்காது... முகத்தில் எந்த ரியாக்சனையும் காட்டிக்கொள்ளவில்லை...
“பாலா, இன்னிக்கு நான் வெளில வரவா உங்ககூட?... மூணு நாள் வேற எங்கயும் வெளில போகல... வீடு விட்டா உங்க ரூம், அதுவும் ஹெல்மெட் போட்டுக்கொண்டே பயணம்... போர் அடிக்குது...
“தீவிரமா உன்ன தேடிட்டு இருக்கு போலிஸ்... இன்னும் கொஞ்சநாள் இப்டி அமைதியா இருக்கதுதான் நல்லது...”
“உங்க ஹாஸ்பிட்டல் வரவா?”
“ஹாஸ்பிட்டல் என்ன டூரிஸ்ட் ஸ்பாட்டா?... அங்க பாக்குறதுக்கு என்ன இருக்கு?”
“நாம வேணும்னா கொள்ளிடம் போலாமா விவேக்” குமாரின் இந்த கேள்வியை  இருவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை...
“ஹாஸ்பிட்டல்ல விதவிதமான மக்கள் இருக்காங்களே... குழந்தைகள் வார்டுல இருக்குற ஒரு சந்தோசம் கொள்ளிடத்துல கூட கெடைக்காது” விவேக் உடும்பு பிடியாக இருந்தான்...
“சரி... வா... அங்க போலிஸ் ப்ராப்ளம் உனக்கு அவ்வளவா இருக்காதுதான்... இது ரிஸ்க் தான், ஆனாலும் உன் மைன்ட் ரிலாக்ஸ் ஆகுறதும் ட்ரீட்மென்ட்க்கு முக்கியம்”
மூவரும் கிளம்பினர்..
விவேக்கின் பைக்கை அவன் ஓட்ட, பின்னால் பாலா அமர்ந்திருந்தான்.. பின்சீட்டில் அமர்ந்திருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டே அமர்ந்திருந்த பாலாவின் மனதில் இருப்பது பயமா? என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்... ஏக்கப்பார்வையோடும், ஏமாற்ற பார்வையோடும் பாலாவின் பைக்கை ஓட்டினான் குமார்...
ஒன்பது மணி வெயில் அன்றைக்கு கொஞ்சம் உக்கிரமாகத்தான் இருந்தது...
“வெயில் ரொம்ப ஜாஸ்தில்ல?... கூல் டிரிங்க்ஸ் குடிச்சுட்டு போவோம்.. அந்தா தெரியுது பார், ஜூஸ் கடை அங்க போ” விவேக்கிடம் ஒரு கடையை கை நீட்டி அடையாளம் காட்டினான் பாலா... அருகே செல்லும்போதுதான் கவனித்தான் அங்கு நின்ற போக்குவரத்து காவலரை....
“ஏய்!... வண்டிய திருப்பிடு... அங்க ட்ராபிக் போலிஸ் நிக்கிறார்”
“சும்மா இரு பாலா... ‘ஒரு முடிவெடுத்த பின்னாடி, அந்த முடிவுலேந்து பின்வாங்கவே கூடாது’னு இந்து சொல்லிருக்கா” சொல்லிக்கொண்டே நேராக அந்த ஜூஸ் கடையின் வாசலில் வண்டியை நிறுத்தினான் விவேக்... எதிர்பார்த்தபடியே அந்த காவலரும், அவர்கள் முன்பு வந்து நின்றார்....
“ஆர்.ஸி புக் எடு” என்றார்...
“வீட்ல இருக்கு...” ரொம்ப சாதாரணமாக பதில் சொன்னான் விவேக்... அவன் பேச்சில் கொஞ்சமும் பயமோ, பதற்றமோ இல்லை...
“புக்கை வீட்ல வச்சுட்டு நீ எதுக்கு வந்த?, வீட்லயே இருக்க வேண்டியதுதானே?... ஸ்டேசன்’ல வந்து வண்டிய எடுத்துக்க” காவலருக்கு வீட்டில் என்ன கோபமோ தெரியவில்லை, அந்த கோபத்தை இவர்கள் இருவரிடத்திலும் காட்டினார்...
சரியாக அந்த நேரத்தில் ஒரு பாட்ரோல் வண்டி வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினார் ராஜேந்திரன்... போக்குவரத்து காவலரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது, எதேச்சையாக பாலாவை பார்த்தார்... சில நொடிகள் புருவத்தை சுருக்கி யோசித்த பிறகு, “நீங்க ஜி.ஹச் ல பார்த்த டாக்டர் தானே?...”
“ஆமா சார்”
“மறுபடியும் அந்த பையனை பார்த்திங்களா?”
அருகில் நின்ற விவேக்கிடமிருந்து கொஞ்சம் விலகி வந்து, “இல்ல சார்.. பார்த்தா சொல்றேன்”
“இப்போ என்ன ப்ராப்ளம்?”
குறுக்கிட்ட போக்குவரத்து காவலர், “புக் இல்ல சார்... கேட்டா, இவன் பதிலும் ஒழுங்கா சொல்ல மாட்றான்” விவேக்கை கை காட்டி சொன்னார்...
அப்போதுதான் விவேக்கை கவனித்தார் ராஜேந்திரன், “இது யாரு?” பாலாவை பார்த்து கேட்டார்...
“என் கசின்... ஊர்லேந்து வந்திருக்கான்...”
“இந்த பைக்...?” பல்சரை தடவியபடியே கேட்டார், அந்த தடவலில் ஒரு யோசிப்பு கலந்திருக்கிறது....
“என்னோடதுதான் சார்” கேள்வியை முடிப்பதற்கு முன்பே பாலா முந்திக்கொண்டு பதில் சொன்னான் ....
கொஞ்சம் யோசித்தார், சரியாக அந்த நேரத்தில் அலைபேசி அழைக்கப்பட, “தெரிஞ்ச பசங்கதான்... விட்ருங்க ரமேஷ்” என்று சொல்லிவிட்டு அலைபேசியை காதில் வைத்தவாறே “ஹலோ அரவிந்த், நல்லா இருக்கிங்களா?” என்றவாறே அங்கிருந்து விலகினார்... “கண்ணுக்கு தெரியாத யாரோ ஒரு அரவிந்த் நல்லா இருக்கட்டும்... ஒரு வகையில் நிம்மதி ஆனாலும், ராஜேந்திரன் சந்தேகப்படுறாரோ?” குழப்பம் அகலாமல் நெற்றியில் கை வைத்து பிசைந்துகொண்டிருந்தான் பாலா....
“இந்தா ஜூஸ்” சொன்னபடியே நடந்த பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல், ஜூஸ் வாங்கிவிட்டான் விவேக்... இவனை எந்த அளவுகோளில் வைப்பது? என்று புரியவில்லை.. ட்ராபிக் போலிசை பார்த்ததும், நண்பர்களை கூட கழற்றிவிட்டு பைக்கை பறக்க செய்த குமார் புத்திசாலியா? மற்ற நேரங்களில் புத்திசாலித்தனமாக பேசிவிட்டு, நேரம் புரியாமல் காரியம் செய்யும் இவன் முட்டாளா?.. புரியவில்லை...
“இந்த ஜூஸ் வேற கடைல கிடைக்காதா?” கோபமாக கேட்டான் பாலா...
“இருக்கலாம் பாலா... நீ இங்க குடிக்கனும்னு தானே முடிவெடுத்த?... அப்புறம் எதுக்கு மத்ததை பற்றி யோசிக்கணும்... ஒரு முடிவை எடுத்துட்டா, குறுக்கே என்ன வந்தாலும் யோசிக்க கூடாது’னு இந்து சொல்லிருக்கா....”
“இவ்ளோ சொன்ன இந்து, வண்டி எடுக்கும்போது ஆர்.ஸி புக் எடுக்கணும்னு சொல்லலையா?” இன்னும் கோபமாக கேட்டான்...
“இல்லையே!”
மருத்துவமனையை அடையும்போது பாலாவின் கோபம் சற்றே தணிந்திருந்தது.... அவர்களுக்கு முன்பே அங்கு சென்று காத்திருந்தான் குமார்...
ஆனாலும் கோபம் குறைந்ததாக காட்டிக்கொள்ளாத பாலா, “இங்க பாரு விவேக், வர்றப்போ செஞ்ச மாதிரி முட்டாள்த்தனமா எதுவும் பண்ணாத.... நீ வெளிநாட்டுலேந்து சுத்தி பார்க்க வந்திருக்கிற சுற்றுலா பயணி இல்ல, ஒட்டுமொத்த போலிஸ் டிப்பார்ட்மெண்ட்’ட்டே தேடுற குற்றவாளி... நான் போய், எங்க ஓபி’ல லெட்டர் கொடுத்திட்டு வந்திடுறேன்... அரை மணி நேரம் இங்க பாக்குறத பார்த்துட்டு, இங்கயே வந்து நின்னு... எக்காரணத்தை முன்னிட்டும் ஐ.ஸி.யூ பக்கம் போய்டாத.... அந்த பையன் அங்கதான் அட்மிட் ஆகிருக்கான்... உன்ன அடையாளம் கண்டுட்டா பிரச்சினை ஆகிடும்.... கொஞ்சம் கவனம்!” என்றான்...
“கவலைப்படாத பாலா, நான் இருக்கைல உனக்கு என்ன பயம்?... இந்த குமார் ஒருத்தன் இருக்கிறது, ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் சமம்.... என்ன விவேக்?” விவேக்கை பார்த்து சிரித்தான்...
“என் வாய்ல நல்லா வந்துடப்போகுது!... அவன தனியா விட்டுட்டு போனா கூட நான் அதிகம் கவலைப்படமாட்டேன், இப்பதான் ரொம்ப பயமா இருக்கு... வர்ற வழில இந்த ராணுவம்தானே ஒரு ட்ராபிக் போலிசை பார்த்ததும், டாப் கியரில் பறந்துச்சு?”
“ஓகே... நீ முதல்ல கிளம்பு, காத்து வரட்டும்” பாலாவை தள்ளாத குறையாக அங்கிருந்து புறப்பட செய்தான் குமார்....

11
பாலா சென்றதும் இருவரும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்... கொசுக்களின் புண்ணியத்தால் “டெங்கு” மனிதர்களின் கூட்டம் இன்றைக்கு அதிகமாகவே வரிசைகளை நிரப்பிக்கொண்டு இருக்கிறது...
“என்ன பண்ணுது?... நல்லா மூச்சை இழுத்து விடுங்க” நெஞ்சில் ஸ்டெத் வைத்து மருத்துவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்...
“யாரும்மா நீ?... என்ன வேணும் ஒனக்கு?... இங்கயல்லாம் படுக்கக்கூடாது.... அங்குட்டு போ” நர்ஸ் ஒருவர், வராண்டாவில் படுத்திருந்த ஒரு பாட்டியை விரட்டிக்கொண்டு இருக்கிறார்.... அதையும் வேடிக்கை பார்க்க நான்கைந்து நபர்கள் சுற்றி நிற்கிறார்கள்.... “வேடிக்கை பார்க்கும் நோய்”க்கு மட்டும் இன்னும் எந்த மருத்துவமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.... ஆனால், இதையெல்லாம் விவேக் கண்டுகொண்டதாக தெரியவில்லை, அவன் கண்கள் எதையோ தேடி, அதற்கு இயைந்தது போல அவன் கால்களும் வேகமாக நடந்தன...
ஒரு இடத்தில் கால்கள் சட்டென நிற்க, அப்போது அவன் கண்கள் பார்த்த இடம் “தீவிர சிகிச்சை பிரிவு”.... “ஐ,ஸி.யூ பக்கம் மட்டும் போய்டாத...” பாலா சொன்னது மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தது.... ஏன் போகக்கூடாது?... தப்பு நான் செஞ்சேனா?.... கால்கள் அந்த பிரிவை நோக்கி முன்னேறும்போதுதான் அருகில் வந்துகொண்டிருக்கும் குமாரின் நினைவு அவனுக்கு வந்தது....
நிச்சயம் அங்கு செல்ல அவன் சம்மதிக்க மாட்டான்...
“குமார், எனக்காக ஒன்னு பண்ணுவியா?”
“என்ன பண்ணனும் சொல்லு விவேக்... இந்த கவர்மென்ட் ஹாஸ்பிட்டல உன் பேர்’ல எழுதி வைக்கணுமா?... திருச்சி மலைக்கோட்டைய திண்டிவனத்துக்கு மாத்தனுமா?... என்ன பண்ணனும் சொல்லு” வார்த்தைகளில் எதுகை மோனை கரைபுரண்டு ஓடியது.... காதலிக்க தொடங்கிவிட்டான் அல்லவா?... இனி குமாரும் ஒரு ‘குட்டி கண்ணதாசன்’ தான்....
“அவ்ளோ பெரிய வேலயல்லாம் ஒண்ணுமில்ல.... சாக்லேட் வாங்கிட்டு வா”
“சாக்லேட்டா?” வித்தியாசமாக கேட்டான் குமார்....
“ஆமா.... சாக்லேட் சாப்பிடனும் போல இருக்கு... வாங்கிட்டு வாப்பா” குழைந்து பேசினான் விவேக்....
அது போதாதா?... அங்கிருந்து பறந்து போய்விட்டான் குமார்....
இப்போது மீண்டும் அவன் கால்கள், தீவிர சிகிச்சை பிரிவை நோக்கி விரைந்தது....
அருகில் சென்றபோதுதான், பிரிவுக்கு வெளியே காவலுக்கு நின்ற ஒரு போலிஸ் காவலரை கவனித்தான் விவேக்... அவரை கண்டுகொள்ளாதவனை போல, உள்ளே நுழைய முயன்ற விவேக்கை தடுத்த காவலர், “யாரை பாக்கணும்?” என்றார்....
“எங்க மாமா.... நெஞ்சு வலி’ன்னு அட்மிட் ஆகிருக்கார்” கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னான்...
“பேரு?”
“சண்முகம்...”
“சண்முகநாதனா?”
“ஆமா சார்....” ஏதோ ஒரு பெயரை சொல்ல, அந்த பெயரில் ஒரு நோயாளி இருப்பது அவனுக்கு சந்தோசம்... ஒருவேளை அப்படி யாரும் இல்லை என்றாலும், சாரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்பி செல்பவனை சந்தேகிக்கவல்லாம் அந்த காவலருக்கு தோன்றாது....
“விசிட்டர்ஸ் பாஸ் இருக்கா?”
“இல்லையே!”
“இல்லாம விடமுடியாது... உள்ள முக்கியமான பையன் ஒருத்தன் இருக்கான்... அதனால, பாஸ் இல்லாம யாரையும் உள்ள விடக்கூடாது” காவலர் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, ஒரு மருத்துவர் அங்கு வர, அவரிடம் கூட அடையாள அட்டையை வாங்கி வைத்து, ஒரு நோட்டில் எழுதியபிறகே உள்ளே அனுமதிக்கிறார் அந்த காவலர்.... சற்று விலகி சென்று, கண்ணாடி வழியே பார்த்தான்... வரிசையாக போடப்பட்டிருக்கும் படுக்கைகளில், ரொம்பவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் மூக்கு, வாய் என்று சகலத்திலும் குழாய்கள் சொருகப்பட்டு படுத்திருக்கிறார்கள்...
கடைசி படுக்கையில் கொஞ்சம் சாய்ந்தபடி படுத்திருப்பவன் அவனேதான்!.... கழுத்தில் ஒரு கட்டு கட்டி இருக்கிறது, சாய்ந்தபடியே அமர்ந்து ஜூஸ் குடித்துக்கொண்டு இருக்கிறான்... அவன் அருகே செல்ல விவேக் மனம் துடித்தாலும், அந்த காவலை தாண்டி அவனை அடைவது என்பது இயலாத காரியம்.... என்ன செய்யலாம்?... யோசித்தபோது, பின்னாலிருந்து ஒரு கை அவன் தோளில் பட்டது....
திரும்பி பார்த்தால், அது பாலா....
“இங்க என்ன பண்ற?... இங்கதான் வரவேனாம்னு சொன்னேன்ல?” சத்தம் வேறு யாருக்கும் கேட்டிடாதபடி மெல்ல, அதே நேரத்தில் வார்த்தைகளில் அதீத கோபத்தோடும் பேசினான்...
“இல்ல... சும்மாதான்” சமாளித்தான்....
“எங்க அந்த எரும?” சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்க்க, சரியாக அந்த நேரத்தில் குமாரும் வந்துவிட்டான்....
“என்னைய தேடிட்டு இருக்கிங்களா?...” சிரித்தான்....
இருவரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை பாலா... மூவரும் அங்கிருந்து முதலில் வேகமாக கிளம்புவதுதான் முதலில் முக்கியமாகப்பட்டது அவனுக்குள்...
இரவு ஏழு மணி.... அறையில் விட்டத்தை பார்த்தபடியே படுத்திருந்தான் பாலா....
“என்ன மச்சான் யோசிச்சுட்டு இருக்க?” என்றான் குமார்...
“நான் முட்டாள்த்தனமா எதுவும் பண்றனோ’ன்னு பயமா இருக்கு”
“நீ பண்றதுல பல முட்டாள்த்தனமான விஷயங்கள் இருக்கு.... இப்போ எந்த முட்டாள்த்தனமான விஷயத்தை பற்றி சொல்ற?” அவ்வப்போது அத்தி பூத்தாற்போல பாலாவை வம்பிழுக்க தருணம் அவனுக்கு அமைவதுண்டு, அதை தயக்கமே இல்லாமல் சூழலையும் பொருட்படுத்தாமல் பயன்படுத்திக்கொள்ள தவறமாட்டான் குமார்....
“நீ மிதி வாங்கப்போற... கிட்டத்தட்ட நாலு நாள் அவன் மருந்து சாப்பிடுறான்... ஒரு முன்னேற்றமும் பெருசா இல்ல... எப்டியும் சரி ஆகிடுவான்னு நம்பிக்கை இருக்கு... ஆனால், அதுவரை அவன் போலிஸ்’ல மாட்டிப்பானோன்னு பயமா இருக்கு...”
“மாட்டினா அவன்தானே மாட்டுவான்... நீ ஏன் பயப்படுற?”
“அட முட்டாள் குரங்கே!... அவன் மாட்டுனா நாமளும் மாட்டுவோம்.... அவன் செஞ்ச எல்லா கொலைகள்லையும் நம்மளையும் சம்மந்தப்படுத்துவாங்க... பேசாம, நாளைக்கு இதை போலிஸ்’ல சொல்லிடலாம்னு இருக்கேன்”
“ஜெயில், கம்பிகள், வார்டன்... இந்த கொலையில் சம்மந்தப்பட்ட குமாருக்கு மரண தண்டனை விதிக்கிறேன்.... சைக்கோ கொலைகாரனின் நண்பன் குமார் கைது.... அடப்பாவி, ஊர்ல சும்மா சுத்திகிட்டு இருந்தியே, இப்போ கொலைகாரனா நிக்குறியே?” குமாரின் மனதில் எண்ண சங்கிலிகள் தொடர்வண்டி போல ஓடியது... கொஞ்சம் யோசித்ததுக்கே குமாரின் உடல் சிலிர்த்து, படபடப்பு அதிகமானது....
 “நீ சொல்றத பார்த்தா பயமாவும் இருக்கு... அதே நேரத்துல விவேக் பாவம்டா.... ரொம்ப நல்லவன்... அவன் அறியாமல் செஞ்ச தப்புக்கு, அவன் தண்டனை அடையக்கூடாது... இப்போ போட்டு எதையும் குழப்பிக்காத... நாளைக்கு பொறுமையா பேசிக்கலாம்” இந்த கதை வரலாற்றில் முதல் முறையாக குமார் பொறுப்பாக யோசித்து ஒரு கருத்தை சொல்லி இருக்கிறான்... அதனால், நம்மை போலவே பாலாவும் அந்த கருத்துக்கு மதிப்பளித்து அந்த விவாதத்தை அத்தோடு நிறுத்திவிட்டு புத்தகத்தை பிரித்து படிக்க தொடங்கினான்... குமாரின் பயத்தை பாசம் மிஞ்சிவிட்டது....
சிறிது நேரத்தில், கதவு திறக்கப்பட்டது... வழக்கம்போல கதவை தாழிட மறந்துவிட்டான் குமார்.... உள்ளே வந்தவன் விவேக்கேதான்...
“என்ன இந்த நேரத்துல?” குழப்பத்தில் கேட்டான் பாலா....
“சும்மாதான்.... இன்னிக்கு நடந்ததுக்கு சாரி... நான் கொஞ்சம் என் எல்லையை மீறிட்டேன்... இனி நிச்சயம் நீங்க சொல்றத மட்டும் செய்றேன்... என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இனி வராம பார்த்துக்கறேன்” காலையில் முட்டாள்த்தனமான விஷயங்களை செய்த விவேக்கா இது?... அந்த அதிர்ச்சியிலிருந்து மீள பாலாவுக்கு சில நிமிடங்கள் ஆனது....
“பரவால்ல விவேக்.... இதுக்கு போய் பீல் பண்ணாத” குமார் அரவனைத்தான்....
மூவரும் சில மணிகள் பேசிவிட்டு, அங்கே படுத்துவிட்டனர்.... பாலாவின் மனதில் ஒரு குழப்பம் அகன்றது... பாவம் விவேக்!... அவசரப்பட்டு போலீசில் மாட்டிவிட்டிருந்தால், துடித்து போயிருப்பான்... அருகில் ஒரு குழந்தை போல படுத்திருக்கும் விவேக்கின் முகத்தில் சிறிதும் வன்மம் தெரியவில்லை... இவனை போய் எப்படி அந்த மாமனால.... ச்ச!...  மனுஷத்தன்மையே இல்லாத மிருகம் அவன்...
கண்களை மூடி, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டான் பாலா... திடீரென அலைபேசி “யாரோ இவன், யாரோ இவன்” பாடத்தொடங்கியது... திடுக்கிட்டு விழித்து திரையை பார்த்தான்... புது எண்!...
“ஹலோ... யாரு?”
“பாலாஜி தானே?”
“ஆமா... நீங்க?”
“நான் ராஜேந்திரன், எஸ்.ஐ... ஞாபகம் இருக்கா?”
படுக்கையில் எழுந்து அமர்ந்து, கண்களை உள்ளங்கையால் தேய்த்தபடியே பேசத்தொடங்கினான், “சொல்லுங்க சார், என்ன விஷயம்?”

12
“கொஞ்ச நேரம் புத்தூர் ஸ்டேஷன் வந்துட்டு போங்க சார்”
“ஏன் சார்?.. எதுவும் பிரச்சினையா?” குரலில் பதற்றம் அப்பட்டமாக வெளிப்பட்டது....
“அது.... நீங்க வாங்க, பேசிக்கலாம்” பிடிகொடுக்காத பதில்... மணி மூன்று தான் ஆகிறது.... இனியும் தாமதிக்க கூடாது, அழைப்பை துண்டித்த அடுத்த கனம் முகத்தை கழுவிவிட்டு, அவசர அவசரமாக ஹாங்கரில் கிடந்த ஏதோ ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பியபோதுதான் கவனித்தான், கீழே படுத்திருந்த விவேக்கை காணவில்லை... இன்னும் பயம் பாலாவை தொற்றிக்கொண்டது....
“ஒருவேளை போலீசில் மாட்டி இருப்பானோ?”...
குமார் உறங்கிக்கொண்டு இருக்கிறான்.... எழுப்பலாமா?... வேண்டாம்... அவன் வந்து உளறி குழப்புவதை விட, வராமல் எப்படியாவது சமாளிப்பது சுலபம்... அவனை எழுப்பி சொல்லிவிட்டு செல்லவெல்லாம் அவன் மனம் விழையவில்லை... அறையை திறந்து வெளியே வந்தபோது, அறைக்கு வெளியே இரண்டு காவலர்கள் நிற்கின்றனர்...
காவல்துறை தன்னை நம்பவில்லை என்பதை உணர்ந்தான்... கும்மிருட்டை கிழித்த காவல்துறை வாகனம் அவனுக்காக தயார் நிலையில் காத்திருந்தது....
“நீங்கதானே பாலா?”
பதில் சொல்லவல்லாம் அவனுக்கு வாய் வரவில்லை... நேராக அந்த வாகனத்தில் ஏறினான்... என்ன ஆகியிருக்கும்?... ஒன்றும் புரியவில்லை... என்ன ஆனாலும், தானாக எதிலும் வாய்விட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்... புத்தூர் காவல் நிலையம், வழக்கத்தைவிட அன்று அங்கு பரபரப்பு அதிகமாக காணப்பட்டது...
நான்கைந்து ஆளுங்கட்சி கொடி கட்டிய வாகனம் வேறு, அதில் உஷ்ணம் மேலோங்க கரைவேட்டிகளின் வாக்குவாதம்... எஸ்.ஐ ராஜேந்திரன் அவனுக்காக காத்திருந்ததை போல, வாகனம் வந்து நின்ற வேகத்தில் அருகில் வந்தார்...
“ஹலோ சார்...” ராஜேந்திரனை பார்த்து சம்பிரதாய சிரிப்போடு கை குழுக்க முயன்றான்... ஆனால் எதையும் கண்டுகொள்ளாதவரை போல, அவனை உள்ளே அழைத்து செல்வதில் முனைப்பு காட்டினார் அவர்...
உள்ளே ஒரு தனி அறைக்குள் நான்கைந்து அதிகாரிகள் குழப்பத்தோடு பேசிக்கொண்டு இருக்கின்றனர்... காவல் துறை காக்கிகள் பலரும் பாலாவை பார்த்து ஏதோ கிசுகிசுத்தனர்.... அறைக்குள் செந்தமிழன் பிரதானமாக அமர்ந்திருந்தார்... அவர் முகத்தில் பரபரப்பும், இயலாமையும் காணப்பட்டது... கண்கள் வீங்கிப்போய் இருப்பது, பல நாள் தூக்கமின்மையை பளிச்சென காட்டியது....
பாலாவை அங்கிருந்த அத்தனை அதிகாரிகளின் கண்களும் சுட்டெரிப்பது போல நோக்கியது...
“வாங்க மிஸ்டர்....” செந்தமிழன் உள்ளே அழைத்தார்...
“என்ன சார் ஆச்சு?” அப்பாவியாக கேட்டான் பாலா...
“ஐ.ஸி.யூ’ல இருந்த அந்த பையன் இறந்துட்டான்!”
“எப்டி?”
“கொலை?”
“யாரு?”
“அதை நீ தான் சொல்லணும்” ‘நீங்க’ இப்போது ‘நீ’ஆக மாறி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது....
“என்ன சார் சொல்றீங்க?... எனக்கு ஒன்னும் தெரியாது”
“இது உங்க ஐடி கார்டு தானே?.. இதை அங்க வெளிய நின்ன போலீஸ்காரர் கிட்ட கொடுத்திட்டுதான் உள்ள போனவன் கொலை பண்ணிருக்கான்” ஒரு அட்டையை எடுத்து பாலாவின் கைகளில் திணித்தார் பழனிவேலு... ஆம்! அது அவனுடயதுதான்... லாமினேஷன் செய்யப்பட்ட அதன் முனையில், நெருப்பு பட்டிருந்த அடையாளம் கூட இருக்கிறது... இரவு படுக்கும் முன்பு கூட அதை மேசையில் பார்த்த ஞாபகம் அவனுக்குள்!... அப்படியானால் அதை விவேக் தான் செஞ்சிருக்கணும்....
அடப்பாவி!... மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன்....
“சொல்லுப்பா... உன்னோடதுதானே?... நீ கொலை பண்ணலைன்னு எங்களுக்கு தெரியும்... ஆனால், அந்த கொலைகாரனுக்கும் உனக்கும் ஏதோ தொடர்பு இருக்கணும்... இனியும் மறைக்காத...” தமிழ் இன்னும் அக்கறை மாறாமல் பேசினார்...
“நேத்து உன்கூட பார்த்தவன் மேல எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு... ஆனால், அப்பவும் நீ ஏதோ சொல்லி சமாளிச்சு அவனை கூட்டிட்டு போய்ட்ட.... என்ன விஷயம், ஒழுங்கா சொல்லு..” ராஜேந்திரன் கிட்டத்தட்ட மிரட்டினார் என்றுதான் சொல்லணும்...
“சார், உண்மையை சொல்றேன்... அவன் என்கிட்ட ட்ரீட்மென்ட்’க்கு வந்த ஒரு பேஷன்ட்... மற்றபடி அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... அவனை நம்பி ட்ரீட்மென்ட் கொடுத்தேன்... இப்டி செயவான்னு எனக்கு தெரியாது சார்” கலங்கிய கண்கள், அவன் அறியும் முன்பே வழிந்தோடியது....
“எவ்ளோ சாதாரணமா சொல்லிட்ட!.. இது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?... சரி, இதை பேச இது நேரமில்லை... அவன்  இப்போ எங்க இருப்பான்?... உடனே அவனை பிடிக்கணும்” அனைவரும் அவரவர் உடைகளை சரிபடுத்திக்கொண்டு எழுந்தனர்...
“அவன் வீடு எனக்கு தெரியும் சார்... அங்கதான் இருப்பான்” அனைவரும் ஒன்றாக கிளம்பினர்... செல்லும் வழியில் விவேக்கின் கதைகளை அவர்களிடம் கூற, பழனிவேலு மட்டும் உணர்ச்சிவசப்பட்டார், “மனுஷனா அவன்?... பாவி.. குழந்தைகிட்ட போய்” பல்லை கடித்தபடியே பேசினார்... அதை யாரும் அங்கு பொருட்படுத்தவில்லை... எல்லோர் மனதிற்குள்ளும் இருந்த ஒரு கோபத்தை பழனிவேலு வார்த்தைகளாக வெளிப்படுத்தி இருக்கிறார், அவ்வளவே!....
வீட்டு வாசலில் காவல்துறை வாகனம் நின்றது... அதை வேடிக்கை பார்க்க ஆட்கள் இல்லை, அது நான்கு மணி அதிகாலை என்பதால் அந்த அமைதி...
வாயிற்கதவை திரிந்தபோதுதான், உள்ளே வீட்டின் அழகு இன்னும் பளிச்சென தெரிந்தது.... அழகான வீடுதான், ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில்தான் அங்கு யாருமில்லை... திண்ணை அருகே வைக்கப்பட்ட சில குரோட்டன்ஸ் செடிகள் தண்ணீர் இன்றி, கிட்டத்தட்ட கருகிய நிலை... கதவின் அருகே சென்றபோதுதான் கவனித்தனர், கதவு பூட்டப்படவில்லை.... உள்ளே இருப்பானோ?... காவலர்கள் அவரவரும் ஆயத்தமாகினர்... மெல்ல வீட்டிற்குள் நகர்ந்தபடியே உள்ளே சென்றார்கள், சில நிமிட தேடலுக்கு பிறகு அங்கு அவனில்லை என்பதை உறுதி செய்தனர்... தரை முழுக்க தூசிகள், வீட்டை சுத்தப்படுத்தி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருக்கக்கூடும்...
சொல்லிக்கொள்ளும்படி எவ்விதமான ஆதாரமும் சிக்கவில்லை... வீட்டில் ஒரே ஒரு புகைப்படம் ஹாலில் மாட்டப்பட்டிருக்கிறது, நாற்பது வயது ஆசாமி... அவன் மாமாவாக இருக்கணும், அந்த படத்திற்கு போடப்பட்டிருந்த மாலை கூட காய்ந்து உதிர்ந்து கீழே கிடக்கிறது... வித்தியாசமான ஆள் விவேக், இவ்வளவு கொடுமை படுத்தியவனையும் இன்னும் மதித்து வாழ்கிறான்....
“என்ன பாலா இது?... நீ சொன்னபடி யாரையும் காணும்?” ராஜேந்திரன் அதட்டலாக கேட்டார்...
“தெரியல சார்... இதுதான் வீடு... கொலை பண்ணிட்டு எங்கயாச்சும் ஓடிட்டான் போல!”
“யாரோ ஒரு பொண்ணு இருக்கும்னு சொன்ன?” பழனிவேலுவின் கேள்வியில் ‘என்னடா பொய் சொல்றியா?’ தொனி தென்பட்டது....
“ஆமா சார்... இந்து... அவளையும் காணும்... அவ வீடு பக்கத்துலதான், வாங்க சார் பாக்கலாம்” சொல்லிவிட்டு முன்னே பாலா செல்ல, அவன் ஓடிவிட கூடாது என்று மற்ற காவலர்களும் அவனை பின்தொடர்ந்தனர்...
வாசலில் நின்று வீட்டின் இருபுறத்திலும் பார்த்தான்... “பக்கத்து வீடு... வலது பக்கமா? இடது பக்கமா?” நியாயமான சந்தேகம் அவனுக்குள்.... சரியாக அந்த நேரம் இடது புறத்து வீட்டின் கதவு திறக்கப்பட்டு வாளியில் நீரோடு வெளியே வந்தாள் ஒரு இளம்பெண்... பாவாடை தாவணி கட்டி இருக்கிறாள்... இந்த நாட்களில் கண்டிட முடியாத ஆடை...  பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டவளின் கால்களில் அழகான கொலுசும் ‘ஜல், ஜல்’ ஓசையை எழுப்பியது... இவள் இந்துவாக இருக்குமோ?...
வாசல் தெளிக்க வந்தவள், காவல் துறை வாகனத்தை பார்த்து அதிசயித்து நின்றாள்...
“இங்க இந்து வீடு எதும்மா?” பழனிவேலு முன்வந்து கேட்டார்....
“அந்த பக்கம் இருக்குற வீடு சார், அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்களே!....” சொல்லிவிட்டு தன் பாவாடையை ஒருமுறை சரிபடுத்திக்கொண்டு உள்ளே ஓடினாள்...
“மாமா, போலிஸ் வந்திருக்கு” ‘ஜல் ஜல் ஜல்’ ஓசை கேட்டு முடிக்கும்போது சரியாக வெளியே வந்தார் ஒரு மத்திம வயது ஆசாமி.... வெள்ளை வேஷ்டியில் போட்டி போட்டுக்கொண்டு மஞ்சள் நிறம் படர்ந்து காணப்பட்டது... பனியனின் சில பல ஓட்டைகளை மறைத்தபடியே ஒரு துண்டு, மூன்று நாள் சவரம் செய்யாத அளவிலான தாடி மீசை....
“வாங்க சார்... என்ன வேணும்?” ‘வாங்க’ என்பதில் வெறும் வாய் வார்த்தைதான் இருந்தது.... அடிக்கடி வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார், யாரும் தன் வீட்டில் போலிஸ் நிற்பதை பார்த்திட கூடாது என்ற பயமாக இருக்கலாம்...
“ஒண்ணுமில்ல... பக்கத்து வீட்ல விவேக்’னு ஒரு பையன்....”
சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த அந்த மனிதர், “என்னாச்சு சார் அவனுக்கு?... நல்ல பையனாச்சே?” என்றார்...
“இல்ல ஒரு விசாரணை தொடர்பா அவனை பாக்கணும்... எங்க இருப்பான் இப்போ?” தமிழ் முன்னே வந்து  கேட்டார்...
“தெரியல சார்.... எங்ககூட அதிகம் பேசமாட்டான்... அந்த இந்து வீடே கதியா கெடப்பான்.... என்ன கருமமோ தெரியல, அதை அவங்க வீட்லயும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க... இந்து போன பிறகு அவனை ஆளே பாக்க முடியல” கிசுகிசுப்பாக பழனிவேலுவின் அருகில் வந்து புரணி பேசினார் அந்த புதிய மனிதர்...
“எங்க போனா இந்து?” ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து கேட்டான் பாலா...
“அவ இறந்துட்டா... பத்து நாள் இருக்கும்... டெங்கு காய்ச்சலாம், காய்ச்சல் அதிகமாகி போய்ட்டா” உதடுகளை பிதுக்கி, தான் அனுதாபப்படுவதாக காட்டிக்கொண்டார்....
இந்து பத்து நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டாளா?... அப்போ இந்து தனியா இருப்பாள், இந்து அதை சொன்னாள்’னு அவன் சொல்றதல்லாம் பொய்யா?... இல்லை, பொய் இல்லை... இறந்த பிறகும் அவள் நினைவுகளுடன் வாழ்ந்திருக்கிறான்... அவளோடு கற்பனை உலகில் வாழ்ந்திருக்கான், பேசிருக்கான், அழுது புலம்பிருக்கான்.... அவன் செய்த கொலைகளை அந்த கற்பனை உருவமும் சரி என்று சொல்லி நியாயப்படுத்தி இருக்கிறது... விளைவு, அடுத்தடுத்த கொலைகள்.... பாலாவின் மனதில் தோன்றிய கணக்குகள் விடைகளை நோக்கி விரைந்துகொண்டிருந்தது....
“என்ன பாலா இதல்லாம்?... விஷயம் ரொம்ப சிக்கலா இருக்கே?.... ஒருமுறை கொலை முயற்சி செஞ்சவனை கூட, தீர்த்து கட்டுற உறுதியோட பல காவல்களையும் மீறி கொன்னிருக்கான், அதுவும் பக்காவா திட்டம் போட்டு செஞ்சிருக்கான்... இன்னும் எத்தன பேரை இப்டி கொல்லப்போறானோ!” பழனிவேலு கிட்டத்தட்ட புலம்பினார்...
“இந்து சொல்றதா சொல்வான் சார் ‘ஒரு விஷயத்தை தொடங்கிட்டா, அதை எந்த தடங்கல் வந்தாலும் முழுசா முடிக்கணும்... அதுக்காக எந்த விளைவையும் சந்திக்கலாம்’னு... அதான்....” பாலா சொல்லிக்கொண்டிருக்கும்போது தான் அவனுக்கு குமாரின் நினைவு வந்தது.... குமாரும் ஒரு வகையில் விவேக்கால் கொல்ல முயற்சி செய்யப்பட்டவன் தானே!
அலைபேசியை எடுத்து குமாரின் எண்ணை அழுத்தினான்... இரண்டு முறைக்கு பிறகு, மூன்றாவது முறை அழிப்பின்போது தொடர்பு கிடைத்தது...
“ஹலோ.... ஹலோ குமார்...” பரபரப்பாக பேசினான் பாலா....
மறுமுனையில் சத்தமில்லை.... “ஹலோ, ஹலோ” மீண்டும் மீண்டும் கத்தினான்....
“ஹலோ குமார்... விளையாடாத.... எங்க இருந்தாலும் உடனே வெளில வந்திடு, போலிஸ் ஸ்டேசன் பக்கம் போய்டு.... குமார்... கேக்குதா?” பாலாவின் வார்த்தைகளில் பதற்றம் பிரதானமாக தென்பட்டது.....
“ஹலோ குமார்... ப்ளீஸ் விளையாடாத... பேசுடா.... அவன்... அந்த விவேக், அடுத்த கொலை பண்ணிட்டான்... உன்னையும் கொல்ல முயற்சி செய்வான்... ப்ளீஸ் பேசுடா” பாலாவின் கண்களில் நீர் அவனை அறியாமல் வழிந்தோடியது... அவன் கைகள் நடுங்கி, வியர்வை பாதத்தை நோக்கி அருவியாக கொட்டியது....
“ஹலோ பாலா....” மறுமுனையில்...
“ஹலோ.... ஹலோ யாரு?... இது குமாரோட குரல் இல்ல” பதறினான்....
“தெரியலையா நான்தான் விவேக்....” சிரித்தான்...
“டேய் பாவி... குமார் எங்க, அவன்கிட்ட போனை குடு” கெஞ்சினான் பாலா...
“அவன் தூங்குறான் பாலா.... தப்பு செஞ்சவன் அவன், அதுக்கு தண்டனை கொடுக்கிறது தப்பா?.... இந்து சொன்ன மாதிரி, தொடங்குன விஷயத்தை, இப்போ முடிச்சும் வச்சிட்டேன்... இப்போ நிம்மதியா தூங்குறான்...” வார்த்தைகளில் எவ்விதமான தடங்களும் இன்றி இயல்பாக பேசினான் விவேக்...
“என்ன சொல்ற?... அப்டின்னா?” வார்த்தைகள் வரவில்லை... அழுகை பீறிட்டு வந்தது, வாய் முழுக்க எச்சில், தொண்டைக்குள் நுழைய மறுக்கிறது....
“புரியலையா?... கழுத்துல கோடு போட்டுட்டேன்... நிம்மதியா தூங்குறான்.... உன் பெட்’டை ரத்தத்தால நனச்சிட்டான்.... சாரி பாலா, துவச்சுக்கோ” தொடர்பு துண்டிக்கப்பட்டது...
(முற்றும்)

8 comments:

  1. ஓர்பாலிருப்புள்ள ஒவ்வொரு நபரும் இந்த கதையைப் படித்தால் கண்டிப்பா straight நபரை approch பன்ன யோசிப்பாங்க பயப்படுவாங்க விக்கி. நல்ல கதை.
    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேகர்... அப்படி ஒரு யோசனை வரவேண்டும் என்பதுதான் இந்த கதையின் நோக்கம்...

      Delete
  2. yappa arumaya erukku kalai velai muluthum maranthu continue va padichu mudichen supero super oru muzhu thigil padam partha thirupthi
    anbudan mylai satish\


    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மயிலை சதீஷ்.....

      Delete
  3. தல அருமை தல யோசிக்காத முடிவு, ராஜேஷ் குமார் நாவல் மாதிரி முடிவுல
    கொலை காரன் பிடிபடுவான்னு நெனச்சன். வழக்கம் போல
    பல்பு குடுத்துடிங்க. இருந்தாலும் குமார் கொன்னுருக்க வேணாம்.
    கொலை பண்றதுனா உங்களுக்கு ஈசி யா இருக்கம் போல.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிப்பா..... கொலை செய்றது ஈசியா?.... விவேகுக்கு தான் அது ஈசி, எனக்கில்ல....

      Delete
  4. Nice Narration Vicky. Elephant Eg is simply superb. I too feel for Kumar. So Paavam Pakrathum Thappu.

    ReplyDelete
  5. Good story, there are many like Vivek in this world. Child abuse should be be punished severely.

    ReplyDelete