Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 22 July 2013

"லெஸ்பியன்" - இதுவும் பெண்ணுரிமை போராட்டம்தான்....



கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய முறைப்படி ஒரு திருமணம் நடைபெற்றதை ஊடகங்கள் ஆச்சரியத்துடன் செய்தியாக வெளியிட்டனர்... அமெரிக்காவில் இந்திய முறைப்படி திருமணம் என்பது ஆச்சரியமான விஷயமா என்ன?... இல்லைதான், ஆனால் இந்த திருமணம் கொஞ்சம் அல்ல, ரொம்பவே வித்தியாசமான திருமணம்தான் நம் ஊடகங்களை பொருத்தவரை... ஆம், நண்பர்கள் உறவினர்களுக்கு மத்தியில் சிரிப்பொலி நிறைந்த அந்த அரங்கத்தில், முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மணமேடையில் திருமணம் செய்துகொண்டவர்கள் “இரண்டு பெண்கள்”.... ஆம், ஷன்னோன் மற்றும் சீமா ஆகிய “லெஸ்பியன்” தம்பதிகளின் திருமண நிகழ்வுதான் அது... இந்திய முறைப்படி ஒரு லெஸ்பியன் திருமணம் இதுவரை நாம் கேட்டிடாத ஒன்றல்லவா, அதனால்தான் அதை வித்தியாசமான திருமணம் என்று கூறினேன்....
சரி, அந்த தம்பதிகளுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட திருமணங்கள் இந்தியாவில் எப்போ நடக்கும்’னு யோசித்தால், அடுத்தடுத்து பல கேள்விகள், பதிலை ஓவர்டேக் செய்து என்முன் வந்து விழுகிறது.... திருமணம் கிடக்கட்டும் அது அடுத்த விஷயம்... இங்கே, நம் இந்தியாவில், குறிப்பாக நம் தமிழகத்தில் “லெஸ்பியன்” பெண்கள் நிலை சொல்லிகொள்ளும்படியாகவா இருக்கிறது?....
“ஒருபால் ஈர்ப்பு தமிழர்களின் உரிமைக்குரல்” என்று நான் என் வலைப்பூவிற்கு சப்டைட்டில் வைத்ததோடு, பெயருக்கு இரண்டே இரண்டு பதிவுகள் லெஸ்பியன் பற்றி பதிந்தேன்... அவ்வளவுதான்... அதைத்தாண்டி நான் எழுத இதுநாள்வரை, இங்கே வாழும் லெஸ்பியன் பெண்களை பற்றிய ஒரு தெளிவான மனநிலை எனக்கு இல்லை... சமீபத்தில், அதற்கான வாய்ப்பு எனக்கு வழிய வந்தது... என் வலைப்பூவை பார்த்து, தன் சந்தேகங்களை கேட்ட ஒரு பெண்ணிடம் பேசிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... எனக்குள் இருந்த பல சந்தேகங்களை அந்த பெண் தீர்த்து வைத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.... இருபதுகளை கடந்த வயது, திருமணத்திற்கு தயாராக்கப்படும் வயது என்று சொன்னால் அது சரியாக இருக்கும்...
பேசும் வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு, அளவில்லா உண்மை, ஒரு மிதமிஞ்சிய தைரியம் என்று எல்லாமும் வெளிப்படையாக தெரிந்தது... நான், “அடக்கொடுமையே!” என்று அதிரும் பல விஷயங்களை, தன் சிரிப்பு மாறாமல் சொல்லிவிட்டார்....
அந்த பெண் தான் ஒரு லெஸ்பியன் என்பதை உணர்கிறார், ஆனால் இந்த சமூக வழக்கங்களை தாண்டி அவரால் இன்னொரு பெண்ணோடு இணைந்து வாழமுடியாத சூழல்... தன் உடன் பயிலும் தோழியுடன் காதல்வயப்படுகிறார்... தன் குமுறல்களை, எண்ணங்களை, காதலை அந்த தோழியிடம் மிகுந்த குழப்பங்களை தாண்டி, இந்த பெண் கூறி இருக்கிறார்... விளைவு என்ன தெரியுமா?.. அத்தனை வருடமாக நட்பாக இருந்த பெண், இவளோடு முற்றிலுமாக தன் நட்பை துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.... “லெஸ்பியன்” என்ற வார்த்தை நம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஒரு அவசொல்லாக மாறி இருக்கிறது? என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்....
இப்போ அந்த பெண் என்ன செய்வது?.... இதே கேள்வியை ஒரு ஆண் கேட்டிருந்தால், “துணிந்து வெளிப்படுத்திக்கொள்!” என்று சொல்லிவிடலாம்... ஆனால், ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில், ஒரு சராசரி மிடில் க்ளாஸ் வீட்டுப்பெண் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது என்பது நிச்சயம் இயல்பை மீறிய விஷயம்... ஏதோ புரட்சியாக பேசுவதாக எண்ணி, நான் பாரதியின் பாடலையும், பெரியாரின் மேற்கொளையும் சொல்லி அந்த பெண்ணை “பெண்ணே!... நீ வெளியே வா...” என்று சொல்ல எவ்வளவு நேரம் எனக்கு ஆகப்போகுது?.... என்னை புரட்சியாளனாக காட்டிக்கொள்ள, அந்த பெண் வாழ்க்கையை நான் பயன்படுத்திக்கொள்ள  விரும்பவில்லை.... துணிந்து வெளியே வந்திடும் அந்த பெண், இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வாள்?... தமிழகத்தின் ஒரு கடற்கரை பகுதியின் ஒரு வளரும் நகரத்தில் வாழும் அந்த பெண், பணி நிமித்தமாக கூட வெளியூர் தனியாக செல்ல அனுமதிக்கப்பட்டிடாத அளவிற்கான வளர்ப்பு....
இந்த பெண்ணுக்கு நான் தீர்வென்று எதை சொல்ல?....
“வீட்டில் ஒரே பெண்ணாக இருந்தால் கூட நான் திருமணத்தை தவிர்க்க முயலலாம்... ஆனால், எனக்கு பிறகு திருமண வயதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் என் தங்கையின் வாழ்க்கையை நினைத்தால், வீட்டின் நிர்பந்தம் என் மீது அதிகமாகிடுது” என்று அந்த பெண்ணின் கூற்றில், அப்பட்டமாக ஒரு தமிழகத்து பெண்ணின் சாயல் தெரிகிறது....
இந்த பெண்ணிடம் நான் பேசியபோது, அவள் எடுக்க காத்திருக்கும் ஒரு அதிர்ச்சியான முடிவு என்னை இன்னும் கலவரப்படுத்தியது.....
“பேசாம, நான் ஆணாக மாறிடலாமொன்னு தோணுது” என்றபோது, விரக்தியின் உச்சத்தில் இருக்கும் அந்த பெண்ணின், விரக்திக்கே நானும் சென்றுவிட்டேன்....
“அது தப்புங்க.... பாலினம் வேற, பாலியல் ஈர்ப்பு வேற... இரண்டையும் போட்டு குழப்பிக்காதிங்க.... நீங்க ஆணா என்பதை உங்க குரோமோசோம், ஹார்மோன் போன்ற விஷயங்கள் தீர்மாநிக்கணும்... நீங்க உங்கள முழுசாவே ஆணாக நினைத்தால் சரி, ஆனால் உங்களுக்கு ஒரு பெண் மேல ஈர்ப்பு வருவதால் மட்டுமே நீங்க ஆணாகிட்டதா அர்த்தம் கிடையாது” என்று நான் பாலீர்ப்பு தொடர்பா ஒரு குட்டி வகுப்பே எடுத்துட்டேன்... உண்மையை சொல்லனும்னா அந்த பெண்ணுக்கு, இந்த அறிவியல் புரியாமல் இல்லை... அவளுக்கும் “பாலீர்ப்புக்கும், பாலின ஈர்ப்புக்கும்” உள்ள வித்தியாசம் தெரியும்... ஆனால், இந்த அறிவியலை தாண்டி, அவள் சந்திக்கப்போகும் பிரச்சினை அவளுக்கு பெரிதாக தெரிகிறது....
“அது எல்லாம் தெரியுதுங்க.... ஆனால், அப்படி ஆணாக மாறிட்டா குறைந்தபட்சம் ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் அந்த நிர்பந்தத்தில் இருந்தாவது நான் தப்பிக்கலாம் அல்லவா?” என்றார் அந்த பெண்... சில நேரங்களில் அறிவியலை தாண்டிய ஒரு தர்க்க ரீதியான நியாயம் சரியென தோன்றும்.... ஆனாலும், ஏதேதோ சொல்லி அந்த முடிவை எடுக்க வேண்டாம் என்றும், ஒரு பாலினம் தொடர்பான கலந்தாய்வு எடுத்த பிறகு தீர்மானமான ஒரு முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னேன்.... 
“திருமணத்தை முடிந்தவரை தள்ளிப்போடுங்க.... காலம் சில நேரம் நமக்கு சாதகமாக செயல்படவும் வாய்ப்பிருக்கு” என்று மட்டும் சொன்னேன்... இதுவே அந்த பெண்ணுக்கு எவ்வளவு தூரம் சாத்தியம்? என்பது எனக்கு தெரியவில்லை... இந்த பெண் ஒரு சிறிய உதாரணம்தான்... இன்னும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ஒரு களம் கிடைக்காமல் தவிப்பதை பின்னர் நான் அறிந்தேன்... களம் கிடைத்தாலும், அதை பயன்படுத்த மனதளவில் அவர்களுக்கு உண்டாகியிருக்கும் ஒரு தடையால் அவர்கள் ஒதுங்கி சென்றுவிடுகிறார்கள்... தங்கள் வாழ்நாள் முழுக்க ஒருவித மன குழப்பத்தோடு அவர்கள் வாழ்கிறார்கள்....
சமூக வலைத்தளங்கள் எவ்வளவோ கே நபர்கள், தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் களமாக இப்போது மாறி இருக்கிறது, கதைகள் மூலம் பலநேரங்களில் தத்தமது துன்பங்களை மறக்க முடிகிறது... ஆனால், இத்தகைய ஒரு வாய்ப்பும் கூட லெஸ்பியன் பெண்களுக்கு இல்லை...
இன்னொரு முக்கியமான, அதே நேரத்தில் முட்டாள்த்தனமான கேள்வி என்னுள் எழுகிறது... ஒரு கே, தன் உடல்பசியை தீர்த்துக்கொள்ள எத்தனையோ “மாமா” தளங்கள் இருக்கிறது... அதன்மூலம் குறைந்தபட்சம் தங்கள் உடல்தேவைகளையாவது பூர்த்தி செய்து , மன நிம்மதி அடைகிறார்கள்.... அத்தகைய வாய்ப்பை இந்த அறிவியல் உலகம் கூட லெஸ்பியன் பெண்களுக்கு உருவாக்காதது ஏன்?... அப்படி என்றால், அவர்கள் உடல் தேவையை எப்படி பூர்த்தி செய்கிறார்கள்?...
நான்கு ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சத்தமாக பேசினால் கூட, முதலில் அந்த பெண்ணை நோக்கி பாயும் ஆயுதம் “அவள் நடத்தை சரி இல்லாதவள்” என்பதுதான்... ஆண்களின் ஆளுமை நிறைந்த நம் நாட்டில், பெண்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காகவே கூட இன்னும் நம் சமூகம் முழு அதிகாரங்களை பகிர்ந்துகொடுக்கவில்லை... இந்த நிலையில் ஒரு பெண்ணுக்கான பாலீர்ப்பு உரிமை என்பது அவளுக்கு கிடைப்பதற்கான கூறுகள், என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை... ஒரு கே ஆண் சந்திக்கும் சவால்களை விட, ஒரு லெஸ்பியனான பெண் சந்திக்கும் சவால்கள் பலமடங்கு அதிகம்....
நம் ஒருபால் ஈர்ப்பு அமைப்புகள் நடத்திடும் விழிப்புணர்வு போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் கூட “லெஸ்பியன்” பெண்கள் பற்றிய தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை... அதற்காக நான் அந்த அமைப்புகளை குறைகூறவில்லை, பெண்கள் முன்வராதபோது அமைப்புகள் என்ன செய்ய முடியும்?....
பெண்ணுரிமைக்கான போராடும் பெண்ணியவாதிகள் கூட லெஸ்பியன் என்று வரும்போது, வாய்மூடி மௌனியாகவே இருந்துவிடுகிறார்கள்.... “பாலீர்ப்பு உரிமை” என்பது தேவையில்லாத உரிமை என்று அவர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ?....
ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன்....
ஷனோன், சீமா ஆகியோரின் திருமணத்தை பெருமையாக கூறிவிட்டு, நம் வாழ்த்துக்களோடு “லெஸ்பியன்” பற்றிய பேச்சுகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்றால், நிச்சயம் பாதிக்கப்படும் பெண்களுக்கான உரிமைகளை நாமே கிடப்பில் போட வழி செய்கிறோம் என்றுதான் அர்த்தம்.... ஒரு பெண் சாலையில் அடிபட்டு கிடக்கிறாள், அவளுக்கு “ஏ பாசிட்டிவ்” ரத்தம் தேவைப்படுகிறது என்ற நிலை இருந்தால், உடனே ஒரு பொறுப்புள்ள சமூக போராளியாக மாறி “குறுஞ்செய்தி, பேஸ்புக் ஸ்டேட்டஸ்” போன்ற வடிவில் அந்த பெண்ணின் நல்வாழ்வுக்கு உதவிட முயற்சிக்கிறோம்.... அதே போலத்தான் இங்கே நம் சகோதரிகள், மனதளவில் குழப்பத்தோடு, இதயங்கள் நொறுக்கப்பட்டு, தங்கள் ஏக்கங்களை பகிர்ந்துகொள்ள கூட முடியாத ஒரு தருணத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்... அந்த வாழ்தலுக்கான ஒரு அர்த்தத்தை நாம் கொடுத்தே ஆகவேண்டிய சமூக பொறுப்பு நமக்கு உள்ளது....
அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் குறைந்தபட்சம் என்ன செய்ய போகிறோம்? என்பதுதான் உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும்.... கடைசியாக அந்த பெண்ணிடம் பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் என்னை வேதனைப்பட வைக்கிறது.... “என் வாழ்க்கையே சபிக்கப்பட்ட வாழ்க்கை போல... இப்படி வாழணும்னு எனக்கு சாபம் போல!” என்ற அந்த வார்த்தைகள் உண்மைதானோ? என்று என்னை யோசிக்க வைக்கிறது.... இந்த சாபங்களுக்கு விமோச்சனம் எப்போது, எப்படி கிடைக்கப்போகிறது? என்ற கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரியவில்லை... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க....

5 comments:

  1. என்னக்கு ஒரு யோசனை,
    ஏன் அந்த பெண் ஒரு gay ஆண்-னை திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரு நட்போடு வாழ்ந்து கொண்டு ஒரு துணையை தேடக்கூடாது. இருவருக்கும் ஒரு நல்ல துணை கிடைக்கும் பொழுது இப்பெண்ணின் இளைய சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்திருக்கும். பிறகு இவர்கள் தாங்கள் விரும்பும் நபருடன் இணைந்து இல்வாழ்க்கையை துவங்கலாம். இவர்கள் விரும்பினால் இந்த உலகிற்கு இவர்கள் பால் ஈர்ப்பு உணர்வை வெளிபடுத்தலாம், இல்லையென்றால் இந்த சமூகத்தின் பார்வைக்கு தெரியாத homosexual உலகத்தில் தங்கள் இல்வாழ்க்கையை தொடர்ந்து வாழலாம்...

    இதில் சிக்கல் பல வரலாம், இந்த சமூகத்திற்காக தன் வாழ்கையை(ஆசைகளை) அழித்து கொள்ளாமல், சில நாட்கள் கஷ்டப்பட்டுவிட்டு, பிறகு நலமாக நாம் ஆசைபடும் வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு கஷ்டம் இல்லை என்று நான் நினைக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமல்... நிச்சயம் உங்க ஆலோசனையை அந்த சகோதரியிடம் நான் சேர்ப்பித்துவிடுகிறேன்...

      Delete
  2. விக்கி அவங்க திருமணம் கண்டிப்பா பன்னிக்கொள்ளனும்.
    திருமணம் நடந்து தாய்மைங்கிற உணர்வை அடையும் போது பாலிருப்பையும் தாண்டி நல்ல மாற்றங்கள் வரலாம். அல்லது நண்பர் கமல் சொன்னது போல் ஒரு கே வை திருமணம் செய்து கொண்டு நல்ல நண்பர்களாகவோ அல்லது நேரம் வரும் போது தங்களுக்கு விருப்பபட்ட துணையுடன் சேரலாம்.

    நம்மைக்காட்டிலும் அவர்களுடைய போரட்டம் பெரியதுதான் விக்கி. அவருடைய உணர்வுகளை புரிந்துகொள்ளகூடிய நல்ல துணை அமைய இறைவணிடம் பிரார்த்திப்போம்.
    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேகர்.... அவங்க கண்டிப்பா திருமணம் செய்துகொள்ளனும்னு நாம கட்டாயப்படுத்த முடியாது... அது அவங்க விருப்பம், மற்றபடி நீங்க சொல்லும் ஆலோசனைகளை நிச்சயம் அவங்க யோசிப்பாங்க....

      Delete
  3. கல்யாணம் என்பது அவரவர் விருப்பம்

    ReplyDelete