Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 19 July 2013

"தாயுமானவன்....!" - சிறுகதை...

(கதிர் ஒளியாய் அவன், பனித்துளியாய் நான் கதைத்தொடரின் மூன்றாம் பாகம்)



தஞ்சை-புதுகை நான்கு வழி சாலையில் அந்த விலையுர்ந்த ஏற்றுமதி மகிழுந்து காற்றை கிழித்தபடி மின்னல் வேகத்தில் பறந்தது.... உள்ளிருந்து பார்க்கும்போது சாலையோரத்தில் நின்ற மரங்கள் எல்லாம், வரிசை கட்டி பின்னோக்கி ஓடுவதை போல தெரிகிறது.... பின் இருக்கையில் காட்சிகளை ரசிக்க மனமில்லாமல், முன் இருக்கையை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்.... அவர் அருகில் இருபதுகளை நெருங்கி இருக்கும் இளம் பெண் அமர்ந்திருக்கிறாள்.... பச்சை நிற சல்வார் அணிந்து, தலைமுடியை லூசாக பறக்கவிட்டிருக்கிறாள்.... நெற்றியில் பாம்பு போன்ற வடிவத்தில் கருப்பு பொட்டு வைத்திருக்கிறாள், உதட்டில் சிவப்பு சாயம்.... கருப்பாக இருந்தாலும், அந்த கருப்பிற்கே உரிய அழகு அவள் முகத்தில் பளிச்சிட்டது.... கனடாவில் இருந்து இன்று காலைதான் இந்தியா வருகிறாள் என்று சொன்னால் , அதை நம்ப கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்... கண்ணாடி ஜன்னல் வழியாக அவள் வெளியே தெரியும் காட்சிகளை உற்சாகத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.... அவளுடைய கண்கள் இடமும் வலமுமாக பரபரத்து வேடிக்கை பார்த்தது.... உதட்டில் வழிந்த முடியை பின்னோக்கி நகர்த்திய அவள் பார்வை மீண்டும் கண்ணாடியை நோக்கியது.....
“அரிசி எப்படிப்பா செய்றாங்க?”
“அது செய்யமாட்டாங்க.... நெல் பயிர்லேந்து உருவாகும்...”
“அது எங்கப்பா இருக்கும்?”
“எங்க தஞ்சாவூர்’ல நீ எந்த பக்கம் பார்த்தாலும் நெல் பயிராகத்தான் இருக்கும்.... ஊர்ல உங்க தாத்தா கூட நெல் விவசாயம்தான் செய்றார்”
“நாம எப்போ அங்க போவோம்?”
இந்த கேள்வியை யாழினி கேட்டு, பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும்... இந்த மழலை மொழி கேள்விக்கு இப்போதுதான் பதில் சொல்ல வருணுக்கு தோன்றியது....
“அதோ தெரியுது பார், அதுதான் நெல் பயிர்” இதை சொல்லும்போது வருணின் வார்த்தைகளில் பெருமிதம் தென்பட்டது.... யாழினி இன்னும் ஆர்வத்தோடு கொஞ்சம் நிமிர்ந்தபடி வெளியே நோக்க தொடங்கினாள்....
மின்னோட்டம் பொருத்தப்பட்ட அந்த மெல்லிய கம்பிகளின் இடைவெளியில் பயிர்களை காண கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது... வால்மார்ட் வந்ததன் விளைவாக இன்றைக்கு மின்கம்பிகளுக்கு பின்னால் கவலையோடு தலையை அசைத்துக்கொண்டிருக்கிறது பயிர்கள்.... அரை ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவன், தன் நிலத்துக்கு தான் சொந்தக்காரன் என்கிற எண்ணத்தில் இருந்தவன் இப்போது வால்மார்ட்டின் சீருடை அணிந்து வயல்களுக்கு வேலைக்கு செல்கிறான்...
பயிர் பச்சையாக இருக்கிறது, அதைத்தவிர யாழினியால் மற்ற விஷயங்களை கற்பனை மட்டும்தான் இப்போதைக்கு செய்ய முடிகிறது.....
“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்ப்பா?”
“இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல போய்டலாம்” கையில் கட்டியிருந்த ரேடோ வாட்ச்சை ஒருமுறை வெறித்து பார்த்தபடி பதில் சொன்னான் வருண்... இருபது வருடங்களுக்கு பின்பு வருண் இங்கே வருவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை, அதுவும் யாழினியை அழைத்துக்கொண்டு..
“நீ பொறந்ததுக்கு பொறக்காமலே இருந்திருக்கலாம்.. எங்கயாவது தொலஞ்சு போடா.... சாயந்திரம் நான் வர்றப்போ நீ இங்க இருந்தின்னா, நான் நாண்டுகிட்டு செத்துப்போவேன்” அப்பா வருணிடம் கடைசியாக பேசிய பேச்சுகள் இப்போதும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது... இருபது வருடங்களுக்கு பிறகும், அந்த வார்த்தைகளின் வரிசை கூட மாறாமல் அவனால்  நினைவுபடுத்த முடியுது... இந்த நிலையில் இங்கே வருவது அவனால் ஏற்கமுடியவில்லை, ஆனாலும் யாழினியின் பேச்சை மறுக்கமுடியவில்லை....  விக்கியுடனான தன்  திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறிய வருண், இப்போது தன் மகளின் திருமணத்திற்காகத்தான் வருகிறான்... விக்கியுடன் திருமணமாகி, யாழினியை தத்தெடுத்து, இப்போது அவளுக்கும் திருமணம்... காலம் எவ்வளவு சீக்கிரமாக உருண்டோடுகிறது!...
ஒருநாள் யாழினியும் அவள் காதலனும் ஒன்றாக வந்து, “எங்க கல்யாணத்துக்கு தாத்தா பாட்டியை இன்வைட் பண்ணனும்பா” என்று அவள் சொன்னபோது, விக்கியும் அதை ஆமோதித்ததன் விளைவாக இப்போது இவர்கள்  இருவரும் வருணின்  பூர்விக கிராமத்தை நோக்கி...
செல்லும் வழிகள் இப்போதுதான் வருணின் கவனத்தை ஈர்த்திருக்கிறது... கருவேல மரங்கள் நிறைந்திருந்த காட்டு வழிகளில் இப்போது கட்டிடங்களுக்கு பஞ்சமில்லை, அந்த ஐந்து கிலோமீட்டர் இடைவேளையில் கல்வி வள்ளல்களின் நான்கைந்து கல்வி நிறுவனங்கள் “படித்ததை வாந்தி எடுக்கும்” திறமையான மாணவர்களை உருவாக்கும் முனைப்பில் கட்டப்பட்டிருக்கிறது....
 “மேலையூர் முனியாண்டவர்” கோவிலை தாண்டி போகும்போது வருணின் வலது கை உதட்டில் பட்டு வணங்கியது.... அது ஒரு அனிச்சை நிகழ்வுதான்... பள்ளியில் படிக்கும்போது ஒவ்வொரு தேர்வுக்கும் இங்கிருந்து திருநீர் எடுத்து வரும் அவன்  நண்பனால், எப்போதும் இந்த கோவிலின் மீது அவனுக்கு ஒரு தனி பக்தி இருக்கும்... அதுவும் அந்த நண்பன் சொல்லும் முனியின் கதைகளை கேட்கும்போது, பயமும் வருணை அறியாமல் அவனை  நிறைத்துவிடும்....
வருண் சிறுவனாக இருந்த ஒரு சமயம் அவனுக்கு கடுமையான காய்ச்சல் வர, அவன் அம்மாவுடன் இந்த கோவிலில் வந்துதான் திருநீறு பூசிக்கொண்டான்.... அந்த கோவில் பூசாரி தலைமுடியை சுருட்டிக்கொண்டு, நெற்றி கை மார்பு என எல்லா பகுதிகளிலும் திருநீறை பூசிக்கொண்டு, உடுக்கை அடித்தபடியே அவன் தலையில் திருநீறை வீசி எரிய, அதில் பாதி வருணின் கண்களில் பட்டது.... கருப்பு கயிறு ஒன்று அவன் கையில் கட்டிவிடப்பட, இரண்டே நாட்களில் காய்ச்சல் காணாமல் போனது... காய்ச்சல் குறைந்ததற்கு அவன் சாப்பிட்ட பாராசிட்டமால் தான் காரணம் என்பதை அவன் உணர்ந்தாலும், அன்றிலிருந்து அந்த கோவிலின் மீது மட்டும் அவனுக்கு தனிப்பட்ட ஒட்டுதல் உருவாகிவிட்டது....
மகிழுந்து ஒரு சுங்கசாவடியில் நிற்க, வருணின் நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தன... குமார் அண்ணனின் உரக்கடை இருந்த இடத்தின் அருகில்தான் இப்போது டோல்கேட் உருவாகி இருக்கிறது.... அந்த கடையில் உரம் மட்டுமல்லாமல், சோப் பவுடர் சகிதம் எல்லாமும் இருக்கும்... அப்பாவோடு செல்லும்போது, பிளாஸ்டிக் பையில் தொங்கிக்கொண்டிருக்கும் தேன் மிட்டாயை குமார் அண்ணன் வருணுக்கு கொடுப்பார்.... இப்போது அதை நினைக்கும்போது கூட அந்த தித்திப்பு அவன் நினைவுக்கு வர, எச்சிலை விழுங்கிக்கொண்டான்....
“யாருப்பா அந்த கேப்டன்?...? மிலிட்டரி’ல இருந்தவரா?... அவர் எதுக்கு எல்லாரையும் கூப்பிடுறார்?” திடீரென யாழினியின் இந்த கேள்வி வருணை  குழப்பியது... இப்போது எதற்காக இந்த கேள்வி? புரியவில்லை... அவள் கண்கள் வெறித்த இடத்தை வருண் பார்த்தான், அங்கு “கேப்டன் அழைக்கிறார்.... அனைவரும் வாரீர்!” வாசகம் ஒட்டிய டிஜிட்டல் விளம்பர பலகை நடப்பட்டிருக்கிறது... சுவரில் எழுதப்பட்ட காலம் முதல், இப்போ டிஜிட்டல் விளம்பரம் வரை அவர் இன்னும் யாரையோ அழைத்துக்கொண்டே இருக்கிறார்... அந்த சோகமான தருணத்திலும் யாழினியின் அந்த கேள்வி, வருணின் உதட்டில் லேசான புன்னகையை தவழவிட்டது....
யாழினியின் கையை அழுத்திய வருண், “எதாச்சும் சாப்பிடுறியா?” என்றான்...
“இல்லப்பா... பசி இல்ல” பொய் சொல்கிறாளா? தெரியவில்லை... அவள் கண்கள் வரப்போகும் வருணின் கிராமத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது, அவள் மனம் தாத்தா பாட்டியை பார்க்கப்போகும் ஆவலில் குதூகலத்தில் இருக்கிறது...
“என்னைய தெரியுமாப்பா அவங்களுக்கு?” அவள் கேள்வியில் ஒரு ஏக்கம் தெரிந்தது.... ஆம், யாழினியி பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை... வருண் அதற்கு பதில் சொல்லாததை கண்ட யாழினி, தானாகவே “தெரியாது” என்கிற பதிலை யூகித்துக்கொண்டாள்....
“அப்போ நான் யாரு’ன்னு கேட்டா என்ன சொல்வீங்க?”
சிரித்தான் வருண், “என்னோட தேவதை’னு சொல்வேன்”....
அவள் நெற்றியில் படர்ந்திருந்த முடியை விலக்கிவிட்டு, நெற்றியின் பொட்டை சரிபடுத்தினான்... அவள் கையை எடுத்து இறுக்க பற்றிக்கொண்டு, கண்களில் ஒத்திக்கொண்டான்....
ஊருக்குள் நுழைந்தது மகிழுந்து... வீடுகளை அடையாளம் காணவே அவனுக்கு சிரமமாக இருக்கிறது... ஊரே தலைகீழாய் மாறிவிட்டது... காரை விட்டு இறங்கினர் இருவரும்... புதிதாக முளைத்திருக்கும் ஒரு கோவில் அவன் கண்களில் தென்பட்டது... அதன் அருகில் நின்ற பாலை மரம் மட்டும்தான் வருணால் அடையாளம் காணமுடிந்த ஒரே விஷயம்... அப்போ அது ஐயனார் கோவில்தான்... பாலை மரத்தின் அடியில் ஒரு கல்லை கடவுளாக வழிபட்ட காலம் போய், இப்போது கோபுரம் வைத்த கோவிலாக உருவெடுத்துவிட்டது... பாலை மரத்தின் காய்ந்த சருகுகளை கடந்து இடதுபுற பாதையில் நடந்தனர்... வழக்கமான கிராமமாக அது இல்லை... கிராமத்துக்குரிய பழைய உற்சாகம் எதுவுமில்லை...
முன்பெல்லாம் ஊருக்குள் புதிதாக ஒருத்தர் நுழைந்தால், அவரை விசாரிப்பதற்காகவே அந்த பாலை மர நிழலில் ஒரு கூட்டம் படுத்திருந்து உலக செய்தி பேசிகொண்டிருக்கும்.... இப்போதோ யாரையும் காணும்... ஒரு நாய் மட்டும் படுத்திருக்கிறது, அதுவும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தலையை கவிழ்த்து மறுபடியும் உறக்கத்தை தொடர்ந்தது...
எல்லா வீடுகளின் அடையாளங்களும் மாறி இருந்தாலும், வருணின் வீடு மட்டும் இந்த இருபது வருடங்களின் எவ்வித மாற்றங்களை தனக்குள் சுமக்கவில்லை.... அதே வீடு, அதே தோட்டம்... தோட்டத்தில் இருக்கும் செடிகளில் மட்டும் சிறிய மாற்றம்... வாசல் கதவில் துரு ஏறி, துணுக்குகளாக கீழே உதிர்ந்துகொண்டிருக்கிறது... வீட்டை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் கூட, உள்ளே இருக்கும் சோகத்தை எளிதாக புரிந்துகொள்ளும் அளவுக்கு வீடு மொத்த சோகத்தையும் அப்பிக்கொண்டு குழப்பத்தோடு நிற்கிறது...
பக்கத்து வீடு பூட்டி இருக்கிறது.... ரவி இருந்த வீடு அது, இப்போ யார் இருக்கிறார்கள்? யாரும் இருக்கிறார்களா? என்பது கூட தெரியவில்லை... ஊருக்குள் வருணை பற்றிய விஷயம் அவனுக்கு மட்டுமே தெரியும்... யாழினி அதிசயமாக வீட்டை பார்க்கிறாள்... வருணுக்கு முன்னே அவள் மெல்ல வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறாள்... அப்பாவின் இருமல் வாசல் வரை கேட்கிறது... இருமளில் கூட அந்த கம்பீரமான புலியின் உறுமல் தெரிகிறது...
வீட்டின் திண்ணையை கடக்கும்போது வருணுக்கு பற்பல நினைவுகள் நினைவுக்கு வந்தது.... அம்மாவுடன் அமர்ந்து “ஆணா, ஆவன்னா...” எழுதப்பழகியது தொடங்கி, மருத்துவம் சேர்ந்து அனாட்டமி படித்தது வரை இதே திண்ணையில்தான்... சுவற்றில் அவன் சிறுவயதில் வரைந்து பாதியில் விடப்பட்ட பொம்மை இப்போதும் அவன் தன்னை முடித்துவைப்பான் என்கிற ஆர்வத்தோடு அவனை நோக்குகிறது... பன்னிரண்டாம் பகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கியபோது எடுத்த புகைப்படம் திண்ணையில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தது.... அது லேமினேட் செய்யப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம், இப்போது அது இரண்டாக உடைந்து மீண்டும் ஒட்டப்பட்டு அந்த மேசை மேல் வைக்கப்பட்டிருக்கிறது.... வருணுக்கு புரிந்தது, தான் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு உடைக்கப்பட்டிருக்கலாம்... இப்போது ஒட்டப்பட்டு மீண்டும் சுவரேற காத்துக்கொண்டு இருக்கிறது....
உள்ளே ஹாலில் யாருமில்லை, வெளியே நின்று ஆட்களை அழைக்க அது அந்நிய மனிதரின் வீடா என்ன?...  உரிமையுடன் உள்ளே மேற்கொண்டு சென்றபோது, அவன் அம்மா வீட்டு முற்றத்தில் மிளகாய் காயவைத்துக்கொண்டு இருக்கிறாள்.... அம்மாவை இந்த இருபது வருடங்கள் பெரிதாக மாற்றிவிடவில்லை... “இப்போது அம்மா எப்படி இருப்பாள்?” என்று வருண் யூகித்தபடியே தான் இருக்கிறாள்... எதேச்சையாக வருணை அப்போதுதான் கவனித்தாள்... பார்வை சரியாக புலப்படவில்லை, இன்னும் கண்களை சுருக்கி அவனை பார்த்தாள்....
“வாப்பா.... உக்காரு....” சொல்லிவிட்டு தூக்கி சொருகி இருந்த சேலையின் முனையை சரிபடுத்தியபடியே, அறைக்குள் சென்றாள்... அப்பாவின் அறை அது... வருண் நிற்கும் இடத்திலிருந்து பார்க்கும்போது அவர் கால்கள் மட்டும் தெரிந்தது, படுத்திருக்கிறார்... ஓயாமல் இருமிக்கொண்டே இருக்கிறார்... அம்மா தன்னை யாரோ என்று நினைத்துக்கொண்டாள் போல... கண்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறது போலும், கண்ணில் புரை விழுந்திருக்கலாம்... அம்மாவை அழைக்கலாமா?... யோசித்துக்கொண்டிருக்கையில், உள்ளே அம்மா பேசியது அவன் காதுகளில் விழுந்தது....
“இங்க பாருங்க.... தம்பி வந்திருக்கான்....” வார்த்தைகளில் ஒரு பரபரப்பு தெரிந்தது....
“எந்த தம்பி?” அப்பா எழுந்து கட்டிலில் அமர்வதும் தெரிகிறது, எட்டி பார்க்கிறார்... வருண் லேசான புன்னகையை சிந்துகிறான், அவர் கண்கள் அதை கவனித்ததாக தெரியவில்லை...
“அவன்தான்... நம்ம வருணு” வருணின் பெயரை சொல்லும்போது அத்தனை வருடங்களின் ஏக்கம் கலந்திருந்தது.... அம்மா கண்டுபிடித்திருக்க மாட்டாள் என்று நினைத்தான்... என்ன ஒரு முட்டாள்த்தனமான நினைப்பு?... காலம் பிள்ளையின் முகத்தை கூடவா மறக்கவைத்திருக்கும்!.. அம்மா இப்போது மட்டுமல்ல, எப்போது வந்தாலும் தன்னை அடையாளம் கண்டுகொள்வாள்... ஆனால், வந்திருப்பது மகன்தான் என்று தெரிந்தபிறகும், எதற்காக அவள் அப்பாவை நோக்கி போகவேண்டும்.... அது இப்போ மட்டுமல்ல, எப்போதுமே அம்மா அப்படித்தான்... சிறுவயதில் ஒருமுறை வருண் வாசற்படியில் தவறி விழுந்து, நெற்றியில் இருந்து ரத்தம் சொட்டியபோது கூட அம்மா ஓடி சென்று, அப்பாவிடம் தகவல் சொன்னாளே தவிர, விழுந்து கிடந்தவனை தூக்கவில்லை.... பின்னர் அப்பா வந்து, அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியெல்லாம் அம்மாவை வார்த்தைகளால் சித்திரவதை படுத்தியது அவன் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது...
இப்போதுதான் அறையை விட்டு வெளியே வந்தவளாக, வருணின் அருகில் வந்து அவன் கன்னத்தை வருடி முத்தம் கொடுத்தாள்... அம்மாவை பொருத்தவரைக்கும் இப்போது வருண் “45வயது குழந்தை”...
“எப்புடிப்பா இருக்க?... சாப்டியா?” நடந்து முடிந்த எந்த பிரச்சினைகளின் சுவடுமே வெளிவராமல், அம்மாவால் மட்டும்தான் இப்படி இயல்பாக பேசமுடியுது...
அப்போதுதான் யாழினி திண்ணையை விட்டு வீட்டிற்குள் வருகிறாள்... பழைய காலத்து புகைப்படங்களை பார்த்திருக்கக்கூடும், அவள் கைகளில் ஒட்டியிருக்கும் தூசி அப்பட்டமாக தெரிந்தது... யாழினியை பார்த்ததும் , “யாருப்பா அது?” என்றாள் அம்மா...
“உங்க பேத்திம்மா” என்றான் உதடு துடித்தபடி...
அதற்கடுத்த கேள்வியாக அவள், “எப்புடி?” என்றல்லாம் கேட்கவில்லை.... அம்மாவின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? என்று வருணுக்கு புரியவில்லை.... ஒருவேளை, “இந்த விஞ்ஞான உலகத்தில், ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கலாம்” என்கிற எண்ணம் கூட அவள் மனதில் இருந்திருக்கலாம்... ஆனால், அம்மா அப்படியல்லாம் யோசிக்குற ஆள் கிடையாது, பாசத்தை தாண்டி எந்த அறிவியலும், விஞ்ஞானமும் அவள் கண்ணுக்கு தெரியாது...
“வாம்மா... சாப்டியா?” உடனே யாழினியின் அருகில் சென்று அவள் கன்னத்தில் கைவைத்து நெற்றியில் திருஷ்டி கழித்தாள்.... “அப்புடியே எங்கம்மா சாயல்ல இருக்காடா என் பேத்தி” சிரித்தாள்.... லாஜிக்கே இல்லாத விஷயம், அது கற்பனையாக கூட இருக்கலாம்... வருனுக்காக பொய் கூட சொல்லி இருக்கலாம், ஆனால் வருண் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி...
“சாப்டியாத்தா?” யாழினியின் கைகளை பிடித்தபடியே கேட்டாள் அம்மா...
சாப்பிடவில்லை என்கிற விஷயம் தெரிந்ததும், யாழினியை அழைத்துக்கொண்டு சமையல்க்கட்டிற்குள் சென்றுவிட்டாள்.... வருண் மட்டும் அதை பார்த்து ரசித்தபடியே முற்றத்தில் நின்றான்... மீண்டும் அப்பாவின் இருமல் சத்தம் கேட்டபோதுதான், அப்பாவின் நினைவே அவனுக்கு வந்தது... தான் வந்தது தெரிந்தும், அதற்கான எவ்வித ரியாக்சனும் இல்லாமல், உள்ளே படுத்திருக்கிறார்.... வீம்புக்காரர்....
மெல்ல நடந்து அறையை நோக்கி சென்றான்... கட்டிலில் படுத்திருக்கும் அவர் கைகளில் நாளிதழ் விரிக்கப்பட்டு, காற்றாடியின் காற்றில் தடதடத்துக்கொண்டு இருக்கிறது... அவர் கண்கள் அந்த இதழை பார்த்துக்கொண்டு இருந்தாலும், அவர் நினைப்பு முழுக்க அறையின் வாசலில் நிற்கும் வருணை பார்த்திட ஆவலாக இருந்தது... அறைக்குள் நுழைந்த வருணின் இதயமே ஒரு கனம் நின்று துடிக்கும் அளவுக்கு, அப்பா இருக்கிறார்... காலம் அவரை கந்தலாக மாற்றி இருக்கிறது... உடல் மிகவும் வலுவிழந்து காணப்பட்டது... முதுகு லேசான கூன் போட்டது போல இருக்கிறது, அந்த கம்பீரமான மார்பையும், தோளையும் இப்போது கண்டுபிடிக்கவே முடியவில்லை... தோளில் சுருக்கங்கள், ஏனோ அளவுக்கதிகமான வயோதிகத்தை வெளிக்காட்டியது... நாளிதழை விரித்திருக்கும் கைகளை அவரால் அசைக்காமல் வைக்க முடியவில்லை, நரம்பு மண்டலத்தில் பிரச்சினை போலும்... அவர் அருகில் பரப்பி வைக்கப்பட்டிருந்த மாத்திரை மருந்துகள், அவருக்குள் நிறைந்திருந்த நோய்களின் நீளமான பட்டியலை வாசித்துக்கொண்டு இருந்தது...
அவர் அவனை கண்டும் காணாததுமாக நாளிதழில் கண்களை பதித்தார்... கட்டிலின் அருகே கிடந்த இருக்கையை கட்டிலின் அருகே போட்டு, அப்பாவின் கால் அருகே மெல்ல அமர்ந்தான் வருண்... நாற்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்தே ஓடாய்போன கால்கள் அது... வருணுடைய இத்தனை ஆண்டுகள் சொகுசு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது இந்த கால்கள்தான்... ஒரு நாளினது பாதிக்கு மேலான நேரங்கள் வயல் வெளியின் சேற்றில் புதைந்து கிடந்த பாதங்கள் அது... தன் கையால் அந்த பாதத்தை தொட்டபோது, அதன் சொரசொரப்பு வருணின் மனதில் ஒரு புரியாத வலியை உருவாக்கியது... அவன் கை பட்டதும், கால்களை அவசரமாக விலக்கிக்கொண்டார் அப்பா...
இது என்ன வீம்பு?... பல நாட்கள் தான் தூங்குவதற்காக கால் பிடித்துவிட்ட அப்பாவின், கால்களை தொடக்கூட அனுமதி இல்லையா அவனுக்கு... கோபம்தான் வந்தது அவனுக்குள்... மீண்டும் வலுக்கட்டாயமாக அந்த கால்களை பிடித்து, தன் கைகளுக்குள் அரவணைத்தான்.. இப்போது அவர் அதை தடுக்கவில்லை...
“ஏன்பா இப்புடி ஆகிட்டிங்க?...” வருணின் கண்கள் கலங்கியது....
அவர் பதில் சொல்லவில்லை, தொண்டையை செருமிக்கொண்டார்... அப்பா அழுகையை அடக்கிக்கொள்வது அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது...
“நான் செஞ்சது தப்புதான்... அதுக்காக இவ்வளவு நாள் தண்டனை கொடுக்கிறது சரியா?... எப்போதான் என்னைய மன்னிக்க போறீங்க?”
அப்பாவால் கண்களில் அரும்பிய நீரை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை... நாளிதழை அருகே வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து கண்களின் ஓரம் வழிந்த நீரை துடைத்துக்கொண்டார்...
“சொல்லுங்கப்பா.... எப்போ மன்னிக்க போறீங்க?... இன்னும் எத்தனை நாள் உங்களுக்கும் எனக்கும் இடையில லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இருக்கணும்?”
“உனக்கு இப்டி மன்னிப்பு கேட்க இவ்வளவு வருஷமாச்சாடா?” அப்பாவின் தழுதழுப்பான குரலில் இந்த வார்த்தைகளை கேட்டபோது வருணின் மனது முள்ளாக குத்தியது போல இருந்தது... இவ்வளவு நாளும் தன் வரவை எதிர்பார்த்து அப்பா காத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்போது, “வீம்பும் வீராப்பும்” யாருக்கு இருந்தது? என்று ஒருமுறை யோசித்து பார்த்துக்கொண்டான்...
அப்பாவின் அருகே வந்து, அவர் கைகளை பிடித்தான்... அவருடைய கைகள் நடுக்கம் இன்னும் அதிகமானது... அதை அப்படியே தன் முகத்தில் புதைத்து அழத்தொடங்கினான் வருண்... அப்பாவாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை... இருவருமே ஒருவருக்கொருவர் கடந்த காலத்தை பற்றி விவாதிக்க விரும்பவில்லை.. அது அவசியமாகவும் அவர்களுக்கு தோன்றவில்லை... இந்த சமூகத்துக்காகவும், கலாச்சாரத்துக்காகவும் மகனின் விருப்பத்தை புறந்தள்ளிய அந்த அப்பாவை, இப்போ எந்த சமூகமும் கண்டுகொள்ளவில்லை.... எத்தனை வருட தனிமையோ தெரியவில்லை, அவர் கண்களின் நீர் வடிவில் வெளியாகி மார்பு வரை வழிந்தோடியது....
சில நிமிட அந்த நிசப்தமான சூழல் இருவரையும் இன்னும் அதிக இணக்கத்தோடு இணைத்தது... அப்போது அம்மா அறைக்குள் வர, பின்னாலேயே யாழினியும் வந்தாள்... அப்பாவின் பார்வை யாழினியை நோக்கி செல்ல, கண்களை துடைத்துக்கொண்ட வருண், “என் மகள்’ப்பா... அதாவது, உங்க பேத்தி” என்றான்... யாழினி கொஞ்சமும் யோசிக்காமல் வெகு இயல்பாக தாத்தாவின் அருகே சென்று அமர்ந்து குசலம் விசாரிக்க தொடங்கினாள்... அப்பாவின் மனதில் இப்போது ஆயிரம் கேள்விகள் தோன்றியது... அத்தனையும் யாழினியை பற்றியது... “எப்படி? எப்போ?” வகை கேள்விகள்தான் அவை.. ஆனால், அதை அவர் பொருட்படுத்தவில்லை... “எப்படியாக இருந்தால் என்ன!, எப்போதாக இருந்தால் என்ன!” மகன்தான் இனி தனக்கு எல்லாம் என்ற ஒரு தெளிவான மனநிலைக்கு இப்போது அவர் வந்துவிட்டார்...
“உங்க பேத்திக்கு கல்யாணம்பா... அடுத்த மாசம்... உங்களை கூட்டிட்டு போக அவளே வரணும்னு ரொம்ப அடம்...” அழுது சிவந்த மூக்கிற்கு கீழே எட்டிப்பார்த்த புன்னகை அழகான முரணாக தெரிந்தது....
வருணின் காதருகே வந்த அப்பா, மெல்ல யாருக்கும் கேட்காதபடி “அவள் கல்யாணம் பண்ணிக்க போறது பையனை தானே?” என்றார்.....
சத்தமாக சிரித்தான் வருண்... அந்த சத்தம், அந்த வீட்டின் அத்தனை வருட வெறுமையையும் ஒட்டுமொத்தமாக நிறைத்தது... (முற்றும்)

25 comments:

  1. கிரேட் விக்கி நீங்க, அழ வைத்து விட்டர்கள். என்ன வார்த்தை பிரயோகம், உங்களால் மட்டுமே முடியும். எழுத்தர் பாலகுமாரனின் தீவிர ரசிகனான நான் இன்று உங்களின் ரசிகனாகவும் மாறிவிட்டேன். நிறைய எழுதுங்க விக்கி ப்ளீஸ்., உணர்சிகளை வெளியில் கொண்டு வருவதில் நீங்கள் நீங்கள் தான்., ஹ்ம்ம்ம் கிரேட் ஸ்டோரி ரைட்டிங்., நீங்கள் கிரேட்.,

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி விஜய்... மிகப்பெரிய வார்த்தைகள், அதற்கு நான் உகந்தவனாக ஆகிட இன்னும் நிறைய எழுதணும்... எழுதுவேன்...

      Delete
  2. awesome writing. this story in particular can appear in the main stream books as well. it doesnt glorify gay sex. it just takes it as a happening and proceeds forward. u should send this to some books :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா... நம்ம பத்திரிகை ஊடகங்கள் மீது உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?.... நிச்சயம் ஏற்கமாட்டாங்க நண்பா, அவங்க குடும்ப வாசகர்கள் படிக்க மாட்டாங்கன்னு காரணம் சொல்வாங்க... பிற்போக்குத்தனமான ஊடகங்கள்...

      Delete
  3. vicky ah pathi 1 vaartha kooda sollala ,,, aanalum kadha sooooper anna!!!!! really grat!!!! hats off

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி.... விக்கியை பற்றியா?.... நிறையபேர் கேட்கிறாங்க.... இன்னும் அடுத்த பாகங்கள் எழுதும்போது சொல்லிக்கலாம்...

      Delete
  4. wow really awesome..................evalo periya thapu senjalum pulangala manikira gunam parentskita mattum than iruku really great

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா... இங்க பிள்ளை என்ன தப்பு செஞ்சான்?... தவறு யார் மீதும் இல்லை, இந்த சமுதாயத்தின் மீதுதான்... இனி நல்லா இருக்கட்டும் அவங்க... கதையில்...

      Delete
  5. Vanakkam Vijay, Realy Great Ithepol matra kadhtaigalayum avargalin thirumanthirkku peragu enna aanathunnu eluthuna nalla irukkum Vijay

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.... எல்லா கதைக்கும் அப்படி எழுதப்போனா, கொஞ்ச நாள்ல போர் அடிச்சிடும்பா...

      Delete
  6. great vijay. I am moved by the story.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா...

      Delete
  7. வழக்கமான கிராமமாக அது இல்லை... கிராமத்துக்குரிய பழைய உற்சாகம் எதுவுமில்லை...
    முன்பெல்லாம் ஊருக்குள் புதிதாக ஒருத்தர் நுழைந்தால், அவரை விசாரிப்பதற்காகவே அந்த பாலை மர நிழலில் ஒரு கூட்டம் படுத்திருந்து உலக செய்தி பேசிகொண்டிருக்கும்.... இப்போதோ யாரையும் காணும்...


    இப்போ எந்த கிராமமும் இது போல இல்லை.....யதார்த்த நிதர்சனம்.... உங்கள் படைப்புகள் என்றாலே அது சிறப்பானதுதான்.... பாலசந்தர் சார் படம் போல....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா..... உங்கள் கருத்துகளை நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி...

      Delete
  8. neenga eluthurah ovvoru kathaikum thodahrbu illah ithliyeah neenga sathichitinga and onga naaration chance less nee inum neryeah elutha ennodah valthukal....

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவு மட்டும் இருந்தால் இன்னும் எவ்வளவோ எழுதலாம்..... ரொம்ப நன்றிங்க...

      Delete
  9. உனக்கு இப்டி மன்னிப்பு கேட்க இவ்வளவு வருஷமாச்சாடா?” 

    இந்த சமூகத்துக்காகவும்,
    கலாச்சாரத்துக்காகவும் மகனின் விருப்பத்தை புறந்தள்ளிய அந்த அப்பாவை, இப்போ எந்த சமூகமும் கண்டுகொள்ளவில்லை.... ஆழமான வார்த்தைகள். அழகான முடிவு விக்கி.

    சேகர்.

    ReplyDelete
    Replies
    1. "உங்களுக்கு இந்த கருத்தை சொல்ல இவ்வளவு நாலாச்சா?" :P

      ரொம்ப நன்றி சேகர்.... மிக்க மகிழ்ச்சி...

      Delete
  10. விஜய், உங்களின் சில கதைகளை திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக நம் மக்களின் மனதிலும் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும் என்று நினைக்கின்றேன். உங்கள் கதைகள் அனைத்தும் மனதை வருடிசெல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்தி.... அப்படி வாய்ப்பு கிடைத்தால் எடுக்கலாம்....

      Delete
  11. Appavin kaalgal patri miga azhagaga varnithu ullergal..Mugavum arumai...Ennudaya kanneerai kattupadutha mudiyavillai.....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... உங்கள் பெயர்தான் வித்தியாசமா இருக்கு, எண்ணங்கள் நல்ல எண்ணங்களாகவே இருக்கு...

      Delete
  12. really great vijay. Kathaila verum thani manitha unavurgal mattum illama soceity pathina pathippukal, kalathin maaruthalgal,apparam appa,paiyan paasam yellam romba alaga pathivoo panni irukeenga. really nice thanks

    ReplyDelete