திருச்சி
தில்லை நகரின் ஏழாவது குறுக்கின் ஒரு குறுகிய சாலையில் அந்த காவல்துறை வாகனம்
நிற்க, அதிலிருந்து இறங்கினார் டீ.எஸ்.பி செந்தமிழன்... ஏற்கனவே அங்கு நின்ற அவசர
ஊர்தியின் பணியாளர்கள் பவ்யமாக வணக்கம் வைக்க, தலையை மட்டும் அசைத்தபடி அந்த
வீட்டின் சுற்றத்தை நோக்கினார்... எதிர்வீட்டில் சுவற்றில் கைவைத்து, மார்பை
மறைக்க துண்டை கவசமாக போட்டபடி இவரை பார்த்து ஏதோ கிசுகிசுத்தனர் பெண்கள்
வகையறாக்கள், டீக்கடையின் வெளியே ஆறிப்போன தேநீரை மணிக்கணக்காக “ஊதி ஊதி”
குடித்துக்கொண்டிருந்த சில லுங்கி வாலாக்கள் அவசரமாக அங்கிருந்து விடைபெற்றனர்....
களைந்த தலைமுடியை கையால் வகிடெடுத்தபடி, வீட்டிற்குள் நுழைந்தார் செந்தமிழன்...செந்தமிழனுக்கு
ஐம்பது வயது இருக்கலாம், முன்வழுக்கையை தொப்பியிட்டு மறைத்தார் என்றால் நாற்பது
வயதென்றால் கூட நம்பிவிடலாம்... முகத்தில் எப்போதும் எவ்வித ரியாக்சனும் காட்டாத
முக அமைப்பை உடையவர்... “தில்லை நகரில் கொலை” என்ற செய்தியானாலும், “உங்களுக்கு
ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றாலும் ஒரே முக வெளிப்பாடுதான்.... அவரை
பார்த்ததும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நான்கைந்து காவலர்கள் விறைப்பாக
நிமிர்ந்து நிற்க, எஸ்.ஐ பழனி வேலு மட்டும் அருகில் வந்து வணக்கம் வைத்தார்...
படுக்கையில்
கொலை செய்து கிடக்கும் அந்த இளைஞன், பதினெட்டு வயதை கடந்திருக்க மாட்டான்....
கழுத்தில் ஒரே ஒரு கோடு, அதிலிருந்து வெளியாகி காய்ந்து போன ரத்தம் தவிர்த்து
பார்த்தால், அவன் தூங்கிக்கொண்டிருப்பதாகவே பார்ப்பவருக்கு தெரியும்...
படுக்கையின் பாதி சிவப்பு கம்பளம் விரித்தாற் போல ரத்தத்தால் நிரப்பப்பட்டு
இருந்தது... கால்களின் ஷூ கூட கழற்றாமல் அவசரத்தில் செத்துவிட்டான்... அறை முழுக்க
சுற்றி நோட்டமிட்டார்... சுவற்றில் “இந்தியா தொடங்கி இங்கிலாந்து” வரைக்கும் பல நாட்டு
கிரிக்கெட் வீரர்களின் படங்கள் வெட்டி ஒட்டப்பட்டு இருந்தன... தொலைக்காட்சியின்
மேல் அந்த இளைஞன் கையை கட்டிக்கொண்டு, ஏதோ ஒரு பூங்காவில் எடுத்துக்கொண்ட
புகைப்படம்...
மேசை
மீது சல்மான் ருஷ்டி, சுஜாதா போன்றோரின் புத்தகங்கள் இரைந்து கிடந்தன... காற்றில்
தடதடத்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை மூடி, அதன் மீது வெயிட் வைத்தபோதுதான் அந்த
புத்தகத்தின் தலைப்பை கவனித்தார்... “கொலையுதிர்காலம்” ரசிக்கும்படியான
“கோ-இன்சிடன்ட்”, ஆனால் ரசிக்கமுடியாத தருணம்...
“என்ன
பழனிவேலு, ஆம்புலன்ஸ்’ல எடுத்துட்டு போகலாம்ல?”
“போகலாம்ங்கய்யா...
போரன்ஸிக் ஆளுங்க வேலையல்லாம் முடிச்சாச்சு”
அவசர
ஊர்தி ஆட்கள், மிக லாவகமாக அந்த இளைஞனை... இல்லை, இனி அது பிணம்... பிணத்தை
தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர்...
மீண்டும்
ஒருமுறை அறையை நோட்டமிட்டார், மேற்கொண்டு ஆராய இது நேரமில்லை.... வெளியே
கொண்டுசெல்லப்பட்ட பிணத்தை சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம்... இன்னும்
பெற்றோர், உறவினர் வரவில்லை....
“அவங்க
சிவகங்கையாம்.... வந்துட்டு இருக்காங்களாம்... நாம ஆஸ்பத்திரிக்கு கொண்டு
போய்டலாம்ங்கய்யா...”
அதுவும்
சரிதான்.... தொந்தரவில்லாமல் பிரேத பரிசோதனை செய்ய அதுதான் சரி...
வாகனத்தில்
ஏறி அமர, வண்டி அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது.... செல்லும் வழியெல்லாம்
செந்தமிழனின் மனம் வழக்கத்திற்கு அதிகமாக துடித்தது... கொலை வழக்கோ, பிணமா
அவருக்கு புதிதில்லை... ஆனால், ஒரு வாரத்தில் இது மூன்றாவது கொலை, அதுவும் தன்
கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் காவல் நிலைய எல்லைக்குள் நடந்திருக்கிற மூன்று கொலைகள்....
இருபது வருட சர்வீஸில் இப்போதை போல எப்போதும் இவரை பற்றி காவல் துறையில் இப்படி
எதிர்மறையாக பேசியதில்லை...
அரசு
மருத்துவமனைக்குள் வண்டி நின்றது, இன்னும் அதிக இறுக்கமான முகத்துடன் கீழே இறங்கினார்...
பிரேத பரிசோதனையில் இப்போது மண்டை ஓடு உடைக்கப்பட்டு, மூளை பார்க்கும் படலம்
நடந்துகொண்டிருந்தது.... முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த மருத்துவர், ரொம்ப இயல்பாக
செந்தமிழனின் அருகில் வந்தார்....
“என்ன
சார் நடக்குது?.... மூணாவது கேஸ், அதுவும் உங்க லிமிட்ல... ஒரே மாதிரி கொலை..”
மூன்றாவது கொலை, மருத்துவரையும் செந்தமிழனையும் அவ்வளவு நெருக்கமாக்கிவிட்டது...
“ஒரே
மாதிரியா?..”
“ஆமா...
கழுத்தில் ஒரே கீறல், ரொம்ப ஆழமான கீறல்...”
“கத்தியா?”
“தெரியல....
ஆனால், கீறலோட பண்பை பார்த்தால் கத்தி மாதிரி தெரியல.... புதுவிதமான ஆயுதம்... மே
பி, ஆயுதமா இல்லாத பொருளா கூட இருக்கலாம்...”
“ஹ்ம்ம்...
வெளிநாட்ல நகத்தை வச்சு கீறியே கொலை செஞ்ச சம்பவமல்லாம் நடந்திருக்கு... வேற
எதாவது காயம்?”
“இல்ல....
முன்னாடி மாதிரியே இப்பவும், வேற ஒரு காயமும் உடம்புல இல்ல... ஆனால், விந்து இந்த
தடவையும் லீக் ஆகிருக்கு... ரொம்ப வித்தியாசமான மர்டர்” மாஸ்க்’க்குள் மறைந்திருந்த உதட்டில் சிரித்தது
செந்தமிழனுக்கு தெரிந்தது...
“சரி
ரிப்போர்ட் எஸ்.ஐ கிட்ட கொடுத்து விடுங்க... நான் கிளம்புறேன்”
சொல்லிவிட்டு
வெளியே வந்த நேரம், இரண்டு கார்’களில் வந்த ஒரு கும்பல் பதறி அடித்து அந்த இடத்தை
நோக்கி வந்தது... தலையில் அடித்துக்கொண்டும், கதறி அழுதுகொண்டும் வந்தவர்கள்
நிச்சயம் இறந்தவனின் பெற்றோராகத்தான் இருக்க வேண்டும்... காவல் துறை எவ்வளவோ
சிரமப்பட்டு தடுத்து அவர்களை கேட் அருகே நிறுத்தி வைத்தனர்... செந்தமிழனை
பார்த்ததும், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்,
அருகில் வந்து கையை பிடித்து, “ஐயா... என் புள்ள மொகத்தயாவது பாக்க விட
சொல்லுங்க.... ஒடம்ப கூறு கூறா அறுத்து போட்ராதிய, பச்ச ஒடம்புய்யா அது”
சொல்லிக்கொண்டே கதறி அழுதார்... எஸ்.ஐ அந்த பெண்மணியை கைத்தாங்கலாக இழுத்து சென்று
சமாதான பேச்சு பேச தொடங்கினார்...
வாகனத்தில்
ஏறி அமர்ந்த செந்தமிழன் காதுகளில் அந்த தாய் கத்திய கதறல் இன்னும் ஒலித்துக்கொண்டே
இருந்தது, அந்த அம்மா தொட்ட அவருடைய கைகளில், இன்னும் கண்ணீர் பிசுபிசுப்பு
காயவில்லை... ஒரு நிமிடத்தில் செந்தமிழன் நிலைகுழைந்து போனார் என்பதுதான் உண்மை...
ஒரு வாரத்தில், இப்படி மூன்றாவது தாயின்
கதறலை காதால் கேட்கும் கொடுமை, மிக வேதனையானது....
அசிஸ்டன்ட்
கமிஷனர் அலுவலகம் சென்ற செந்தமிழனை பார்த்து, இரண்டு மூன்று காவலர்கள்
காதுகளுக்குள் கிசுகிசுத்தனர்...வழக்கம்போல எவ்வித ரியாக்சனும் காட்டாமல் உள்ளே
சென்றார்...
“என்ன
நடக்குது தமிழ் உங்க ஏரியா’ல?... மூணாவது மர்டர், ஒரு வாரத்துல... பேப்பர்
பார்த்திங்களா?”
என்று
கையில் இருந்த செய்தித்தாளை மேசை மீது வைத்து, அவர் அருகில் நகர்த்தினார்....
‘கொலை கொலையா முந்திரிக்கா, காவல் துறைக்கு டண்டனக்கா...’ என்ற தலைப்பிட்டு மூன்று
கொலைகளை பற்றியும்,கற்பனை கலந்த செய்தி அச்சிடப்பட்டிருக்கிறது....
“உறையூர், கன்டோன்மென்ட் இப்போ தில்லை நகர்...
முக்கியமான சிட்டி லிமிட், உங்க ஏரியா... இதுவும் அதே போல மர்டரா?”
“ஆமா
சார்” உயிரற்று பேசினார்.... இன்னும் அந்த அம்மாவின் கதறல் காதுகளுக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது....
“திருச்சில
என்ன நடக்குது’னு உள்துறை அமைச்சர் கிழிக்கிறார்... ‘கொலைக்கோட்டையாகிறதா
மலைக்கோட்டை?’னு ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி போட்டிருக்கான்... வெளில தலைக்காட்ட
முடியல.... சொல்றேன்னு தப்பா நினச்சுக்காதிங்க, உங்களால முடியலைனா மெடிக்கல் லீவ்
போட்டுட்டு போய்டுங்க, நான் வேற யாரையாவது வச்சு பாத்துக்கறேன்” இதுவரை இப்படி
தமிழிடம் எந்த அதிகாரியும் பேசியதில்லை... ‘தமிழ் சார்’ என்ற அடைமொழியோடு
கூப்பிட்டே பழகிய அதிகாரிகள், இன்றைக்கு இப்படி பேசும் நிலைக்கு ஆகிவிட்டது...
“இல்ல
சார்... மத்த மர்டர் கேஸ் ரெண்டையும் எஸ்.ஐ தனிப்படை விசாரிச்சாங்க... இப்போ இந்த
கேஸ்’ல நானே டீம் போட்டு விசாரிக்கிறேன்... இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நான்
கொலைகாரனை கண்டுபிடிக்கிறேன் சார்”
“வெறும்
பேச்சா இருக்க கூடாது தமிழ்... இப்பவும் நான் உங்கள நம்புறேன், இன்னொரு தடவை
மேலிடத்துக்கு நானும், எனக்கு நீங்களும் பதில் சொல்ற நிலைமைக்கு கொண்டு
போய்டாதிங்க”
அர்த்தமில்லாமல்
சிரித்துக்கொண்டிருந்த காந்தியின் புகைப்படத்தை பார்த்தவாறே, அறையை விட்டு வெளியே
வந்தார் டீ.எஸ்.பி செந்தமிழன்...
2
திருச்சி
அரசு பொது மருத்துவமனை... “மனநல மருத்துவ பிரிவு”க்கான புறநோயாளிகள் பிரிவில்
நிற்கும் அந்த இளைஞன், அங்கு நின்ற மற்றவர்களை காட்டிலும் வித்தியாசப்பட்டான்...
இறுக்கமான கறுப்பு நிற டீ ஷர்ட் அவன் உடலின் வடிவமைப்பை இன்னும் அழகாக காட்டியது...
சந்தன நிற உடம்பில், ஆங்காங்கே நாற்று பாவியதை போல காணப்படும் அவன் ரோமங்கள்
இன்னும் அழகாக தெரிந்தது... “கண், காது, மூக்கு” எல்லாம் அளவெடுத்து செய்தார் போல
கச்சிதமாக காணப்பட்டது... மேல் உதட்டின் மேலே, மெலிதாக அரும்பிய அவன் மீசை,
அவனுடைய பதின் வயதின் இறுதியை பட்டவர்த்தனமாக காட்டியது... அவ்வப்போது அவனுடைய
சிவந்த உதடுகள் எதையோ முனுமுனுத்துக்கொண்டு இருக்கிறது...
“இவன்
எதுக்கு இங்க நிக்குறான்” பார்க்கும் அனைவரது மனதிலும் இந்த கேள்வி நிச்சயம்
தோன்றாமல் இருக்காது...
“விவேக்...”
பெயர் கூறி அழைத்தார், மருத்துவமனை ஊழியர்...
கூட்டத்தை
விலக்கி முன்னே சென்றான் அந்த இளைஞன்...
“அடுத்து
நீதான்பா” என்றார்.... அவன் மீது விழுந்த ஊழியரின் வித்தியாசமான பார்வையை
தவிர்க்கும் பொருட்டு, அங்கிருந்து விலகி சற்று தள்ளி நின்றான்...
உள்ளே
சென்ற ஒரு அம்மா வெளியே வந்ததும், உள்ளே நுழைந்தான் விவேக்... நான்கு இடங்களில்
மருத்துவர் நால்வர் நோயாளிகளை தனித்தனியாக பார்த்துக்கொண்டிருந்தனர்...
“இங்க
வாங்க” அழைத்தார் ஒரு மருத்துவர்... மருத்துவரா? இவரா?... சின்ன பையன் போல
இருக்கிறான்... மேசை மீது வைக்கப்பட்டிருந்த “tutor” என்ற பெயர் பலகை, அதை நம்பவைத்தது... அந்த மருத்துவனின் கோட்’இன் இடது
புறத்தில் மாட்டப்பட்டிருந்த “பாலாஜி”என்ற பெயர் பேட்ஜில் கண்களை பதித்தான்
விவேக்...
“சொல்லுங்க...
என்ன ப்ராப்ளம்”
சற்று
தூரத்தில், இன்னொரு மருத்துவர் முன்னால் அமர்ந்திருந்த பெண், அவளுக்கு பதினைந்து
வயது இருக்கலாம்... “என்னால வாழ முடியல சார்.... எல்லாரும் என்னைய
ஏமாத்துறாங்க.... நான் சாகணும்” புலம்பிக்கொண்டு இருக்கிறாள்....
“ஹலோ
மிஸ்டர்.... உங்களுக்கு என்ன ப்ராப்ளம்.... வேடிக்கை அப்புறம் பார்த்துக்கலாம்”
மருத்துவரின்
பக்கம் முகத்தை திருப்பினான் விவேக்...
“என்ன?”
என்றான்...
“சொல்லுங்க...
என்ன ப்ராப்ளம் உங்களுக்கு?”
“ஏதோ...
வித்தியாசமா.... ஒன்னும் புரியல...” ஆளுக்கும் பேச்சுக்கும் தொடர்பே இல்லாமல்
இருந்தது... வார்த்தைகளில் கோர்வை இல்லை... .
“சொல்லுங்க....
சொன்னாத்தானே எனக்கு புரியும்...”
“எப்பவும்....
என் மேல.... ஒரு ரத்த வாடை அடிக்குது, யாரோ என்கிட்ட... பேசுற மாதிரி
இருக்குது...” தத்தி தடுமாறி சொன்னான்...
“ஹாலுசினேஷன்...
ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.... சரி பண்ணிடலாம்... தூக்கம் சரியா வருதா?”
“இல்ல...
அப்புறம், அப்டி கேக்குறதால நான் தப்பு பண்ணிடுறேன்...”
“என்ன
தப்பு பண்றீங்க?... சிகரெட், தண்ணி இப்டியா?” சிரித்தபடியே மருந்து சீட்டில்
“ஹாலோபெரிடால், அல்ப்ராக்ஸ்” என்று வரிசையாக எழுதினார்...
“இல்ல....
பெரிய தப்பு... அது அப்போ தப்புன்னு புரியல... அப்புறமா புரியுது... கழுத்துல
பேனாவால கோடு போட்டிடுறேன்”
“ஹ ஹ
ஹா... வித்தியாசமான தப்பா இருக்கே... எல்லாம் சரி பண்ணிடலாம்... இந்த மாத்திரைகளை
சாப்பிடுங்க, மூணு நாள் கழிச்சு வாங்க...”
மீண்டும்
ஏதோ சொல்ல முயன்ற விவேக்கை தவிர்த்த பாலா, “அடுத்த ஆளை வர சொல்லுங்க” என்றார்...
அந்த
மருந்து சீட்டை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தபடி, ஒரு குழப்பத்தில் அதனை
சுருட்டி தன் சட்டை பையில் வைத்துக்கொண்டான்...
வெளியே
வந்தான்.... அருகில் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில், ஒரே கதறல் சத்தம்....
காவல் துறை வாகனம் அருகே நின்ற ஒரு காவலரின் கைகளை பிடித்து ஒரு அம்மா
கதறிக்கொண்டு இருக்கிறது... அந்த கதறல் சத்தம் அவனுள் ஏதோ விநோதமாக செய்தது.... கண்ணையும்,
காதுகளையும் இறுக்க மூடிக்கொண்டு அங்கிருக்கும் ஒரு மரத்தடியின் நிழலில்
அமர்ந்தான் விவேக்.... ஒரு தற்காலிக நிம்மதி அவனுக்குள்... அந்த உலகத்திலேயே
இல்லாத ஒரு உணர்வு அவனுள்... இரண்டு நிமிடங்கள் கழித்து நிமிர்ந்து பார்த்தான்,
சூழல் கொஞ்சம் அமைதியாக காணப்பட்டது... குழப்பமான முகத்தோடு மருத்துவமனையை விட்டு
வெளியே வந்தான் விவேக்...
பேருந்து
ஏறி வீட்டை அடைந்தான் விவேக்... உடல் முழுவதும் கசகசப்பு, இரவு முழுக்க
தூக்கமின்மை எல்லாமும் நேராக அவனை குளியலறையை நோக்கி அழைத்து சென்றது... உடைகளை
களையவெல்லாம் தோன்றவில்லை... ஷவரை திறந்தான், ஜில்லென்ற நீர் மழையை போல அவன் உடலை
நனைத்தது.... கண்களை மூடிக்கொண்டு, கைகளை விரித்து உடல் முழுவதும் தண்ணீர்
படும்படி ஷவரில் நனைந்தான்...
“ஐயோ
என் புள்ளைய எவனோ படுபாவி இப்டி பண்ணிட்டானே... வெளுவூர் காளிக்கு கண்ணு மண்ணாவா
போச்சு!.... அந்த பாவி வம்சமே செதஞ்சு போவ...” அந்த அம்மா மருத்துவமனையில்
புலம்பியது அவன் காதுகளில் நுழைந்து மனதை ரணமாக்கியது... புலம்பலா அது?... இல்லை,
சாபம், அதுவும் வம்சத்தையே அழிக்க துடிக்கும் சாபம்.... காதுகளை இப்போதும்
மூடிக்கொண்டான், குரல்கள் இப்போது குறைந்திருப்பதாக அவனுக்குள் ஒரு எண்ணம்...
குளிர்ந்த
நீர் அவன் உடலை குளிர்ச்சியாக்கியது, மனம் இன்னும் சூடாகவே இருந்தது... குளியலறையை
விட்டு வெளியே வந்தான்...
“ஏய்
விவேக், என்னப்பா இது?... இப்டிதான் டிரெஸ் போட்டுட்டு குளிப்பாங்களா?... பாரு,
உன் தலையெல்லாம் தண்ணி ஊத்துது...” சொல்லிக்கொண்டே கொடியில் கிடந்த துண்டை
எடுத்து, விவேக்கின் தலையை தேய்த்தாள் இந்து....
“என்ன
அவசரம் உனக்கு?... சொல்லிருந்தா நான் டவல் கொடுக்க மாட்டனா?... நைட்டெல்லாம் எங்க
போன?... தனியா இருக்க பயமா இருந்துச்சுப்பா” உரிமையாக அவன் சட்டையை கழற்றி
பிழிந்து கொடியில் உலர்த்தினாள்... துண்டை அவன் கையில் கொடுக்க, விவேக் அதை வாங்கி
பேன்ட்டை கழற்றிவிட்டு துண்டை கட்டிக்கொண்டான்... உடை மாற்றி கட்டிலில்
அமர்ந்தான், இன்னும் அவன் முகம் வாடிப்போய் இருந்ததை கவனித்தாள்... அருகில் வந்து
நெருக்கமாக அமர்ந்தாள், அவன் தாடையை பிடித்து மேல் உயர்த்தினாள்... அவன் கண்கள்
கலங்கி இருப்பதை பார்த்து, பதற்றமாகிவிட்டாள்...
“என்னப்பா
ஆச்சு?... ஏன் ஒரு மாதிரி இருக்க?... என்கிட்ட சொல்லக்கூடாதா?” அவள் கண்களும்
கலங்கியது...
“நான்
தப்பு பண்றனா இந்து?”
“யார்
சொன்னா அப்டி?”
“ஒரு
அம்மா... பாக்க என் அம்மா மாதிரியே இருந்தாங்க... அவங்கதான்..”
“யார்
அவங்க?”
“நைட்
என்கிட்ட தப்பா நடக்க வந்தான் அவன்... தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கொடுத்தது
தப்பா?... அதுக்கு அந்த அம்மா என்னைய சபிக்கிறாங்க... அவன் செஞ்ச தப்பு
அவங்களுக்கு தெரியாம என்னைய திட்றாங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு இந்து”
சொல்லிக்கொண்டே இந்துவின் மடியில் சாய்ந்தான்.... தலைமுடிகளுக்குள் விரலை ஊடுருவ
செய்து, வருடியவாறே பேசத்தொடங்கினாள், “ஏன்பா நீ இதுக்கு பீல் பண்ற?... அவன்
செஞ்சது தப்புன்னு உனக்கு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் நீ கவலைப்படுற?... அந்த
அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சா உன்ன திட்டமாட்டாங்க... ஆமா, நீ சாப்டியா?”
“இல்ல
இந்து... வேணாம்... பசி இல்ல”
“இப்டிதான்
நீ சொல்லுவ... நீ படுத்திரு, நான் போய் தோசை எடுத்துட்டு வரேன்” என்று எழுந்தவளை,
கை பிடித்து இழுத்து மீண்டும் அருகில் அமரவைத்தான், “வேணாம்... இங்கயே, என்
பக்கத்துலயே இரும்மா...” அவள் கையை பிடித்து, அவன் கன்னத்தோடு ஒட்டியவாறே, கண்களை மூடினான்....
உறக்கம்... ஏதோ ஒரு சாதித்த மனநிறைவு, ஆழ்ந்த உறக்கமாக வெளிப்பட்டது....
3
மருத்துவமனையில்
காலை முதல் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களையே பார்த்ததில் கொஞ்சம் களைப்பானான்
பாலா... ஒரு குழந்தையை விட மென்மையாக கையாளப்பட வேண்டியவர்கள் மனநலம்
பாதிக்கப்பட்டவர்கள்....
“பைத்தியம்” என்று ஒரு வார்த்தையில் நாம் அவர்களை சுருக்கிவிட்டாலும், ஆயிரம் அர்த்தங்கள் அதனுள் புதைந்திருப்பதை பாலா போல சிலர் மட்டும்தான் அறிவார்கள்... சில நேரம் தன்னையும் மீறி ஒரு கோபம், ஒரு எரிச்சல் வெளிப்படும்... அதை வெளிக்காட்டினால், போட்டிருக்கும் அந்த வெள்ளை கோட்டிற்கு அர்த்தம் இருக்காது, நியாயம் கற்பிக்க முடியாது....
“பைத்தியம்” என்று ஒரு வார்த்தையில் நாம் அவர்களை சுருக்கிவிட்டாலும், ஆயிரம் அர்த்தங்கள் அதனுள் புதைந்திருப்பதை பாலா போல சிலர் மட்டும்தான் அறிவார்கள்... சில நேரம் தன்னையும் மீறி ஒரு கோபம், ஒரு எரிச்சல் வெளிப்படும்... அதை வெளிக்காட்டினால், போட்டிருக்கும் அந்த வெள்ளை கோட்டிற்கு அர்த்தம் இருக்காது, நியாயம் கற்பிக்க முடியாது....
“வாங்க
பாலா, டீ சாப்ட்டுட்டு வரலாம்” அருகில் இருந்த சக மருத்துவர் அழைத்தார்... பாலாவிற்கு
இந்த மருத்துவமனை புதிது, இப்போதுதான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்திருக்கும்
புதியவர்...
புறநோயாளிகள்
ஓரிருவர் தவிர, வேறு யாருமில்லை என்று உறுதிசெய்துகொண்ட பிறகு இருவரும் வெளியே
சென்றார்கள்... அருகிலிருக்கும் சவக்கிடங்கில் கூட்டம், ஒரே கூச்சல்.... வழக்கமாக
அங்கு நடக்கும் இயல்பான நிகழ்வு என்பதால் அதை பாலா மட்டும் அதிசயமாக பார்த்தான்...
அமரர் ஊர்தியில் பிணத்தை ஏற்ற மறுத்து, உறவினர்கள் போராட்டம் செய்வது போல இருந்தது...
“இப்போ
நாம பார்த்துட்டு இருக்குற இடம் திருச்சி அரசு மருத்துவமனை... திருச்சில இந்த ஒரு
வாரத்துல நடக்குற மூணாவது கொலை இது... இதுவரை காவல்துறை குற்றவாளியை
பிடிக்கவில்லை... இப்போ இறந்து போயிருக்கும் கல்லூரி மாணவனுடைய பெற்றோர்,
தங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்று போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.... சம்பவ இடத்திற்கு மாநகர காவல் துறை ஆணையர் வந்துகொண்டிருப்பதாக
சொல்லப்படுகிறது.... தொடர்ந்து நடக்கும் இப்படி அசம்பாவிதங்களால் திருச்சி மக்கள்
பீதியில் ஆழ்ந்துள்ளனர்.... சன் டிவி செய்திகளுக்காக, ஒளிப்பதிவாளர் கணேஷுடன்
நெல்சன் சேவியர்” மைக், கேமரா சகிதம் பேசிக்கொண்டிருந்தவரை விசித்திரமாக
பார்த்தபடியே நின்றான் பாலா... அருகில் நின்று லைவ் செய்திகளை, இன்னும் லைவாக கேட்டுவிட்டு
மெல்ல நகர்ந்தான்.... கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறது, சுற்றி நிற்கும் மக்களின்
முகங்களில் கோபம் கொப்புளித்தது... தலையிலடித்து அழுதுகொண்டிருக்கும் அந்த
அம்மாவின் கண்களில் கண்ணீர் வற்றி, குரல் வலுவிழந்து போய்விட்டது... அவங்களுக்கு
கவுன்சிலிங் வேணும்!... ரொம்ப பாவம்...
“கழுத்துல
கத்திய வச்சு கீறி.... ச்ச... மனசாட்சியே இல்லாம இருக்காங்க மனுஷங்க பார்த்திங்களா
பாலா?”
“ரொம்ப
கொடுமையா இருக்கு சார்... கண்டிப்பா கொலை செஞ்சவன் நல்ல மனநிலைல இருக்குறவனா
இருக்க மாட்டான்”
சொல்லிக்கொண்டே
அங்கிருந்து விடைபெற்று, டீ குடிக்க சென்றனர்....
பணி
முடிந்து, சில புத்தகங்கள் வாங்கிவிட்டு அறைக்கு செல்லும்போது இரவு எட்டு மணி
ஆகிவிட்டது... மாலை மலர் நாளிதழில் அந்த இளைஞனின் படம் போடப்பட்டிருக்கிறது...
அம்பி போல இருக்கிறான்... இவனை கொலை செய்ய எப்டி மனசு வந்திருக்கும்?... ச்ச!....
என்னென்ன
கனவுகளோட இங்க வந்திருப்பான்?... அவன் பெத்தவங்க எவ்வளவு துடிச்சு போயிருப்பாங்க!....
“உறையூர்”....
நடத்துனர் விசில் அடிக்க, இறங்கினான் பாலா...
இறங்கி
நடக்கத்தொடங்கினான்... பைக்லையே வந்திருக்கலாம், இப்போ நடக்குற மாதிரி
ஆகிடுச்சு... “அந்த நாய்கிட்டேந்து முதல்ல பைக் சாவிய புடுங்கனும்” அறை நண்பனை
சபித்தபடியே, இரவின் இருளை தன் மொபைல் வெளிச்சத்தால் கிழித்தபடியே பாதையில்
நடந்தான்... கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது... திருச்சி பழக்கப்பட்ட ஊர்தான்
என்றாலும், மூன்று கொலைகளை கடந்த எவனும் “இருட்டு, தனிமை, நிசப்தம்”
போன்றவற்றுக்கு பயப்படாமல் இருக்க முடியுமா?... உறையூர் வீதிகளே இன்றைக்கு
வெறிச்சோடி கிடக்குது, மக்களுக்கு அவ்வளவு உயிர் பயம் வந்துவிட்டது போலும்....
“ஊ...
ஊ” நாய்கள் விசித்திரமாக ஊளையிட்ட சப்தம் மனதை இன்னும் கலவரப்படுத்தியது...
“அப்பாடா!” தங்கியிருக்கும் அறை கண்களில் பட்டதும் பெருமூச்சு விட்டுக்கொண்டான்...
யாரோ பின்தொடர்வதை போல உணர்ந்து, கொஞ்சம் வேகமாக நடந்தான்... அவன் நிழலை தாண்டி,
இன்னொரு நிழலும் அவனை பின்தொடர்ந்து நடப்பதில் இன்னும் கலவரமானான்.... கழுத்தில்
“க்ரீச்ச்...” ஒரு இழுப்பு இழுத்தால், முடிந்தது கதை... திரும்பி பார்க்கலாமா? ஓடி
சென்று விடலாமா?, இன்னும் அறை சில அடி தூரம்தானே இருக்கு.... யோசித்தான்...
சற்று
அருகில் ஆட்கள் நடமாடுவதை கவனித்த பாலா, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து திரும்பி
பார்த்தான்.... “அடச்சீ...!” நாய்!.... வாலை ஆட்டிக்கொண்டே அவனை அவ்வளவு தூரம்
தொடர்ந்து வந்திருக்கிறது... என்றைக்கோ ஒருநாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியை
அதற்கு போட்டதற்கு நன்றியாக, இவ்வளவு தூரம் தொடர்ந்து வந்திருக்கிறது... இல்லை,
இல்லை... கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பையில் வைத்திருக்கும் உணவு
பதார்த்தங்களின் வாசனையால் பின்தொடர்கிறது... என்ன எழவோ, பயம் குறைந்த நிம்மதியோடு
அறையை நெருங்கினான்...
கதவு
ஒருக்களித்து சாத்தப்பட்டிருக்கிறது, குமாரின் செருப்பு வெளியில் கிடக்கிறது...
கதவை மெல்ல திறந்து, மின்விளக்கை போட்டான் ...
“டேய்
எரும!... கதவை மூடல, லைட் போடல... என்னதான் பண்ணிட்டு இருக்க?.... நாளைலேந்து பைக்
சாவியை....” சொல்லிக்கொண்டே கட்டிலை பார்த்தவனுக்கு அதிர்ச்சி, பேரதிர்ச்சி....
குமாரும்
இன்னொரு இளைஞனும்... உடைகளை அவசரமாக மாட்டிக்கொண்டு இருக்கின்றனர்... பேன்ட்டை
போட்ட பிறகு, அவனுடைய ஜட்டி குமார் கையில் சிக்க... அதை வாங்கி கையில்
வைத்துக்கொண்டே புதியவன், அடித்துப்பிடித்து வெளியே ஓடினான்... போர்வையை தன் இடுப்பில்
சுற்றியவாறே அமர்ந்து, பாலாவை பார்த்து அசடுவழிய சிரித்தான் குமார்...
“அட
கருமம் பிடிச்ச நாயே!... இதை இங்க செய்யாதன்னு எத்தன தடவை சொல்லிருக்கேன்?...
திருச்சில ஹோட்டல் ரூமா இல்ல?... அதுவும் என் பெட்’ல!” படுக்கை விரிப்பை ஒரு
தீண்டத்தகாத பொருளை போல கையில் எடுத்து, கீழே வீசினான் பாலா...
“விடு
மச்சி!... இதல்லாம் ஜாலிக்குதானே!... நீ வர்றவன், கதவை தட்டிட்டு
வந்திருக்கலாம்ல?”
“சொல்லுவடா
சொல்லுவா.... ரூம்ல தங்க எடமும் கொடுத்து, ஊர் சுத்த என் பைக்கையும் கொடுத்து,
செலவுக்கு என் ஏ.டி.எம் கார்டையும் கொடுத்தா இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ..”
“மச்சி....
செஞ்சத சொல்லிக்காட்ட கூடாது தெரியுமா?... அதுதான் பண்பாடு... நான் என்னிக்காவது
அப்டி சொல்லி காமிச்சிருக்கேனா? சொல்லு...”
“இல்லடா...
சொன்னதே இல்ல... எதுவும் அப்டி செஞ்சிருந்தாதானே சொல்லுவ... சரி விடு, ஏண்டா இப்டி
அசிங்கம் பண்ற?... ஒழுங்கா நல்லவனாத்தானே இருந்த?”
“உனக்கு
பொண்ணுக மேல ஒரு ஈர்ப்பு வர்ற மாதிரி, எனக்கு பசங்க மேல வருது... நீ பஸ்
ஸ்டாண்ட்’ல நிக்குறப்போ, ஒரு அழகான பொண்ணு உனக்கு சிக்னல் காட்டி படுக்க
கூப்பிட்டா, நீ மறுப்பியா என்ன?... வாய்ப்பு கிடைக்காதப்போ, எதுவும் செய்யாத நீ
ஒன்னும் உத்தமனும் இல்ல... வர்ற வாய்ப்பை பயன்படுத்துறதால நான் ஒன்னும்
அயோக்கியனும் இல்ல... புரியுதா?” பொன்மொழிகளை உதிர்த்தவாறே, உடைகளை மாற்றிவிட்டு,
குளியலறையை நோக்கி சென்றான் குமார்....
“இந்த
வாய் மட்டும் இல்லைனா நீ என்னிக்கோ காலாவதி ஆகிருப்படா...” சிரித்தான் பாலா...
“இதையேதான்
இப்போ வந்தவனும் சொன்னான்.... வாய்தான் என் மூலதனமாம்.... வெளில நின்னு
ஒட்டுக்கேட்டியா என்ன?” குமார் சொன்ன இந்த பதிலின் இரட்டை அர்த்தத்தை கொஞ்சம்
தாமதமாக உணர்ந்த பாலா, அவனை அடிக்க பாய.... குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டான்
குமார்... சிரித்தபடியே தன் உடைகளை மாற்றி, சாப்பிட அமர்ந்தான்...
முன்பெல்லாம்
“தீபிகா, ஐஸ்வர்யா, வித்யா பாலன், சமந்த்தா, காஜல்” என்று அழகுப்பதுமைகளால்
நிரப்பப்பட்டிருந்த அந்த அறையின் சுவர்கள், இப்போது விதவிதமான “ரன்பிர் கபூர்”
படங்களால் மறைக்கப்பட்டு விட்டது.... குமார் ஒரு தீவிர ரன்பிர் வெறியன்... ரன்பிர்
விளம்பரங்கள் வந்தால் கூட வெறித்து பார்க்கும் அளவுக்கு ஒரு வெறியன்... அந்த
பார்வையில் நிச்சயம் ஒரு கள்ளத்தனமான காம இச்சை புதைந்திருக்கும், அதை அவனும்
மறுக்க மாட்டான்....
குளித்து
முடித்து வெளியே வந்த குமார், பாலாவை பார்த்து, “என்னடா என் டார்லிங் ரன்பிரை ஒரு
மாதிரி பாக்குற?... என்னிக்காவது உன் நடிகைகளை நன் ஏறெடுத்து பார்த்திருக்கேனா?...
ஒழுங்கா டீசன்ஸி கடைபிடி” சிரித்தான்...
“டேய்
ஊருக்குள்ள இப்போ காலேஜ் பசங்களையா கொலை பண்ணிட்டு இருக்கானாம் ஒருத்தன்... நீ
கண்டபடி இப்டி கதவை திறந்து போட்டுட்டு உள்ள யாகம் நடத்துனா அடுத்த கொலை நீதான்
பாத்துக்க...”
“ஓஹ்...
அப்டியா?... கொலைகாரன் ஆள் எப்டி இருப்பானாம்?”
“ஹ்ம்ம்...
ரன்பீர் கபூர் மாதிரி இருப்பானாம்”
“அப்டியா?..
அப்டினா, அவன் கூட ஒரு தடவை எல்லாம் முடிச்சுட்டு, செத்தாலும் பரவால்லடா” குமார்,
அந்த விஷயத்திலும் சீரியஸ் ஆகவில்லை.... ஏனோ இப்போது பாலாவுக்கு அந்த கொலைகளின்
நினைவு வந்தது... சாப்பிட்ட கையோடு, கதவை சாத்தி தாழிட்டான்... ஒரு பாதுகாப்பு
உணர்வு, மனம் கொஞ்சம் அமைதியானதாய் உணர்ந்து வாழக்கம் போல தன்னை காட்டிக்கொள்ள
முயற்சித்தான்...
4
துணை
கண்காணிப்பாளர் செந்தமிழன் தலைமையில், கொலை தொடர்பாக விசாரிக்க உருவாக்கப்பட்ட
சிறப்பு தனிப்படை அதிகாரிகள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கிறார் தமிழ்...
“என்
இருபது வருஷ சர்வீஸ்’ல இப்போ மாதிரி நான் எப்பவும் நிலைகுழைந்து போனதில்ல...
இப்போ, இந்த நிமிஷம் உங்ககிட்ட பேசுறது அனேகமா எனக்கு கடைசி கேஸா இருந்தாலும்
இருக்கலாம்... இப்போ இந்த ஸ்பெஷல் டீம்’ல நான் ரொம்ப முக்கியமா நான் ரொம்ப நம்புற உங்களையெல்லாம்
சேர்த்திருக்கேன்....ஒரு பக்கம் மீடியா நம்மள துரத்துது, மறுபக்கம் மேலிடம் நம்மள
நெருக்குது... எல்லாத்திலையும் மீண்டு எப்டி நாம வெளியே வர்றதுன்னு எனக்கு
தெரியல... என்னோட நிலைமையை உங்ககிட்ட நான் சொல்லிட்டேன், இனி நீங்க எடுக்கப்போற
ஆக்ஷன்தான் நான் பார்க்கப்போற உங்க ரியாக்ஷனா இருக்கணும்” தழுதழுத்த குரலில்
பேசிவிட்டு அமர்ந்தார் தமிழ்... “கறார் போலிஸ்”ஆக பார்த்த ஒருவர், இப்படி மனம்
நொந்து போனது அங்கிருக்கும் எல்லோரையும் மனமுருக வைத்தது... அங்கு அமர்ந்திருந்த
அத்தனை அதிகாரிகளின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது ஒரு வேகமும் அனுதாபமும்
கலந்த கலவை...
“சார்,
மூணு கேஸ்’லையும் இதுவரைக்கும் ஒரு துப்பும் கெடைக்கல... மூணு கொலைகளையும் ஒரே
ஆள்தான் செஞ்சிருக்கான்.... கைரேகை ஆதாரம்
நமகிட்ட இருக்கு” கோப்பை ஒன்றை கையில் வைத்து புரட்டியபடி தொடங்கினார்
ராஜேந்திரன்...
“கொலைக்கான
காரணம் தெரிஞ்சுதா?”
“இல்ல
சார், பணத்துக்காகவோ, முன்விரோதம் காரணமாவோ கொலை நடக்கல... வேற தனிப்பட்ட மோட்டிவ்
இருக்குறதா தெரியல...”
“கொலையான
மூணு பசங்களுக்கும் எதாச்சும் ஒற்றுமை இருக்கா?” தொப்பியை கழற்றி கீழே
வைத்துவிட்டு, முன் வழுக்கையின் மீது கையை வைத்து தடவியபடியே கேட்டார் தமிழ்...
“இல்ல
சார்.... முதல் கொலை கண்டோன்மென்ட்’ல, அவன் ஒரு பெட்ரோல் பங்கு’ல வேலை பாத்தவன்...
அவன் கொலை செய்யப்பட்ட இடம் பப்ளிக் டாய்லட்... அடுத்தவன், உறையூர்ல ஒரு வீட்டு
மொட்டை மாடில கொலைசெய்யப்பட்ட ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் பையன்... இப்போ, தில்லைநகர்’ல
கொலைசெய்யப்பட்டது ஒரு என்ஜினீயரிங் காலேஜ் ஸ்டூடன்ட்... மூணு கொலைகளும் ஒரே
மாதிரி, அதாவது கழுத்து அறுபட்டு இறந்ததை தவிர வேற ஒரு ஒற்றுமையும் இல்ல...”
இன்னும் அந்த கோப்பிலிருந்து கண்களை விலக்காமல் பதிலளித்தார் ராஜேந்திரன்...
“ரொம்ப
சிக்கலான மர்டர்ஸ்.... இதை நிச்சயம் வழக்கமான ரௌடிகள் செஞ்சிருக்க வாய்ப்பில்லை...
கொலை செஞ்சவன் கொஞ்சமும் பதட்டமில்லாம கழுத்தை அறுத்துட்டு போயிருக்கான்... அவன்
கைரேகை பல இடத்துல பதிஞ்சிருக்கு, கைரேகை பதியுறதை பற்றியல்லாம் அவன் கவலைப்படல...”
“ஆமா...
சார், இன்னொரு முக்கியமான விஷயம்... பட், இது கேசுக்கு பயன்படுமான்னு தெரியல....
அந்த மூணு பேருக்கும் இன்னொரு ஒற்றுமையும் இருக்கு” பேச்சை மெல்ல தொடங்கினார் பழனி
வேலு...
“அப்டியா
என்ன அது?... சொல்லுங்க வேலு..”
“மூணு
பசங்களும் ஒரு கே... அதாவது ஹோமோசெக்ஸ் ஆசாமிங்க... அந்த பசங்களோட ப்ரெண்ட்ஸ்
கிட்ட கொஞ்சம் மிரட்டி விசாரிச்சதுல தெரிஞ்சுது... பட், இதுக்கும் இந்த
கேசுக்கும்...” கொஞ்சம் தயங்கியபடியே சொன்ன பழனிவேலு இழுத்தார்....
“இல்ல
வேலு, இது ரொம்ப முக்கியமான விஷயம்தான்...
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்’ல கூட விந்து வெளியாகிருக்குறதா
சொல்லிருக்காங்க... மே பி, இது ஒரு காரணமா இருக்கலாம்....” கண்களை மூடி மெல்ல
ஒவ்வொன்றாக பட்டியலிட்டார் செந்தமிழன்...
“ஓகே
ப்ரெண்ட்ஸ்.... நான் நினைச்சத விட இது ரொம்ப சிக்கலான விஷயமா தெரியுது.... இப்போ
நீங்க சொன்னதல்லாம் வச்சு பார்த்தா, அடுத்த கொலை ரொம்ப சீக்கிரமாவே
நடக்கப்போகுது... அது நடக்குறதுக்கு முன்னாடி நாம தடுக்கணும்... நம்ம போலிஸ்
ஒவ்வொருத்தரையும் மப்டி’ல பஸ் ஸ்டாப், மேன்சன், ஹாஸ்டல், பப்ளிக் டாய்லட் இப்டி
இடங்கள்ல வேவு பார்க்க சொல்லுங்க, குறிப்பா டீனேஜ் பசங்க அதிகம் இருக்குற
இடங்கள்ல.... அடுத்து கொலையாக போற பையன் நிச்சயம் ஒரு டீனேஜரா இருப்பான்,
கண்டிப்பா திருச்சி சிட்டி’ல தான் இந்த கொலை நடக்கும், கொலையாகப்போற பையன் ஒரு
“கே”யா இருக்கலாம்... இதுவரை நடந்த கொலைகளை வச்சு, இதுக்கு மேல நாம ஒன்னும்
கண்டுபிடிக்க முடியாது... ஆனால், அடுத்து கொலைகாரன் தானாவே வெளிய வந்து
எடுக்கப்போற அடுத்த கொலை முயற்சிதான் நாம அவனுக்கு வைக்குற எலிப்பொறி...” தமிழ்
முகத்தில் இப்போது இழந்த பழைய உற்சாகம் மிகுந்து காணப்பட்டது... ஒரு நம்பிக்கை
அவர் பேச்சில் தென்பட்டது....
“கொலை
செய்றவன் மோட்டிவ் என்னவா இருக்கலாம் சார்?”
“தெரியல...
ஒருவேளை ஹோமோசெக்ஸ் மேல இருக்குற கோபத்துல எதாவது ஒரு அமைப்பு இப்டி செய்யலாம்...
இல்லைனா, ஹோமோசெக்ஸ்’ஆல பாதிக்கப்பட்ட ஒருவன் செய்ற தொடர்கொலையா இருக்கலாம்...
பட், இதல்லாம் ஒரு யூகம்தான்... இது இல்லாம வேற காரணம் கூட இருக்க வாய்ப்பிருக்கு”
மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரே மூச்சில் குடித்து, வெறும் கிளாசை கீழே
வைத்தார்.... கோப்புகளை ஒவ்வொருவராக பார்த்துவிட்டு, சந்தேகங்களை கேட்டு
தெரிந்துகொண்ட பிறகு அந்த கூட்டம் முடிய இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது....
சரியாக
அதே ஒன்பது மணிக்கு, பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக
காத்துக்கொண்டிருக்கிறான் ஒரு இளைஞன்... பேருந்து வெளிச்சத்தில் இப்போது நாம் அவனை
தெளிவாக பார்க்க முடிகிறது... கருப்பு டீஷர்ட், ஜீன்ஸ் சகிதம் இவனை எங்கோ
பார்த்திருக்கோம்... ஆங்!... அவனேதான்... அது விவேக் தான்... நேற்று போட்ட அதே
உடை, தண்ணீரி நனைந்த அந்த டீ ஷர்ட்தான்.. துவைத்தானா? தெரியவில்லை... அது நமக்கு
அவசியமும் இல்லை... அவ்வளவாக ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பேருந்து நிறுத்தத்தில்,
விவேக் தவிர இன்னுமிரண்டு பேர் மட்டுமே நிற்கிறார்கள்... மத்திய பேருந்து
நிலையத்துக்கு செல்லும் பேருந்து நிற்க, அதில் ஏறிக்கொண்டான்... பேருந்திலும்
கூட்டமில்லை... கடைசி இருக்கையில், ஜன்னல் ஓரமாக அமர்ந்தான் விவேக்...
காற்று
அவன் தலைமுடியை நடனமாட வைத்தது... யாரோ அவனை பார்ப்பது போல அவனுக்கு தோன்ற,
திரும்பி பார்த்தான்... முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் விவேக்கையே
பார்த்துக்கொண்டு இருக்கிறான்... சட்டென கண்களை விலக்க மறுத்து, அந்த இளைஞனை வெளிப்படையாக
பார்த்தான் விவேக்... ஒல்லியானவன், கருப்பாக இருந்தாலும் நல்ல கலையான முகம்...
அவன் மெலிதாக ஒரு புன்னகையை உதிர்க்க, பதிலுக்கு விவேக்கும் சிரித்தான்... அவன்
சிரிப்பில் ஒரு பொலிவு தெரிந்தது...
மீண்டும்
விவேக் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினான்.... சில நிமிடங்களுக்கு
பிறகு யாரோ தன் அருகில் அமர்வதாக உணர்ந்தான்... “பஸ் ஸ்டாப்’ல கூட பஸ் நிக்கலையே?,
இப்போ யார் வந்து உக்கார்றாங்க?” யோசித்தபடியே அருகில் பார்த்த விவேக்கிற்கு
அவ்வளவாக அருகில் இருந்தவன் வியப்பை ஏற்படுத்தவில்லை.... சில நிமிடங்களுக்கு
முன்பு, தன்னை வெறித்து பார்த்த முன் இருக்கை இளைஞன்தான் அவன்...
ஆனாலும்,
அதை பொருட்படுத்தாமல் வெளியில் பார்க்கும் வேடிக்கையை தொடர்ந்தான்.... பேருந்து
குழுக்கத்தில் எதேச்சையாக படுவதை போல அந்த இளைஞனின் கால், விவேக்கின் காலோடு
உரசியது... விவேக்கிடமிருந்து எவ்வித மறுப்பும் வரவில்லை என்பதால், மெல்ல தன் கையை
விவேக்கின் தொடையில் உரசும்படி செய்தான்... இப்போதும் விவேக்கிடம் எவ்வித
மறுப்பும் இல்லை... “அப்படியானால், இதை சம்மதமாகத்தானே எடுத்தக்கணும்?” புதிய
இளைஞனின் எண்ணம் இப்படி ஓடியது... உண்மைதானே!... புதிய ஒருவனின் கை தன் தொடை வரை
செல்ல அனுமதிப்பது என்பது, எல்லாவற்றுக்குமான சம்மதம் என்று எடுத்துக்கொள்வதுதானே
நிதர்சனம்!....
தொடைகளை
அடைந்த கை, மேலும் முன்னேறப்போகும் அந்த நேரத்தில், பேருந்து ஒரு நிறுத்தத்தில்
நிற்க, அவசரமாக இறங்கினான் விவேக்.... அது புத்தூர், இறங்கியபின்புதான்
விவேக்கிற்கு அது தெரிந்தது...
புதியவனும்
மந்திரித்த கோழியாய் விவேக்கின் பின்னே சென்றான்.... எதற்காக செல்கிறான்?... அந்த
காரணம் கூட புரியாத அளவுக்கு பச்சைக்குழந்தையா நீங்க?.... இறங்கிய வேகத்தில், தன்
பின்னே அந்த இளைஞனும் வருவதை ஒருமுறை உறுதி செய்துகொண்டு, உறையூர் சாலையில் நடக்க
தொடங்கினான் விவேக்.... தன் நடையை வேகப்படுத்திய புதியவன், ஒருவழியாக விவேக்கின்
அருகே சென்றுவிட்டான்... இப்போது இருவரும் ஒரே சீரான வேகத்தில் நடந்தனர்...
“கண்டோன்மென்ட்’ல
ப்லேஸ் இருக்கு... போகலாமா?” என்றான் புதியவன்....
“கண்டோன்மென்ட்
வேலை நாலு நாளைக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு... இப்போ இங்க பக்கத்துல ஒரு ப்லேஸ்
இருக்கு, மரத்தடி... யாரும் இருக்க மாட்டாங்க, இருட்டாத்தான் இருக்கும்...”
குதர்க்க பேச்சு புதியவனால் புரிந்துகொள்ள முடியாதபடி கூறினான் விவேக்....
இருவரும்
ஒப்புக்கொண்டு, அந்த இடத்தை நோக்கி நகர்ந்தனர்.... ராமகிருஷ்ணா திரையரங்கம் அருகே,
ஒரு சந்து வழியாக உள்ளே சென்று, ஒரு காலி இடத்தை அடைந்தனர் இருவரும்....
வெளியிலிருந்து பார்த்தால், அவ்வளவாக அந்த இடம் தெரியாது...
“சூப்பர்
இடம்பா... இங்க கொலை நடந்தா கூட வெளில தெரியாது” நடக்கப்போகும் விபரீதம் புரியாமல்
சிரித்தான் புதியவன்....
“ஆமா...
சரி, வேலைய ஆரமிக்கலாமா?” என்று புதியவனை நோக்கி, திரும்பி நின்று பார்த்தபடி
கேட்டான் விவேக்....
மெல்ல
விவேக் அருகே நெருங்கி, அவனை கட்டி அணைக்க முயன்ற புதியவனை கொஞ்சம் விலக்கிய
விவேக், “இரு ஒரு நிமிஷம்” என்று பேனாவை கையில் எடுத்தான்...
5
“இப்போ எதுக்கு பேனாவ எடுக்குற?... கவிதையா எழுதப்போற?” மீண்டும்
சிரித்தான் புதியவன்...
“கவிதை
இல்லை... ஒரு கதை.... அந்த கதைக்கு இப்போ க்ளைமாக்ஸ் எழுதப்போறேன்...” விவேக்கும்
சிரித்தான்...
“பேப்பர்
இல்லையே?... என் கைல எழுது” கையை நீட்டி சிரித்தான்...
“இது
கைல எழுதுற கதை இல்ல, உன் கழுத்துல” என்று சொன்ன வேகத்தில், அந்த பேனா புதியவனின்
கழுத்தை நோக்கி பாய்ந்தது... இடது கையால் அவன் தலையை பிடித்து, வலது கையால் அந்த
பேனாவை பாய்ச்சினான் விவேக்... சரியாக அந்த நேரத்தில் கீழிருந்த கல்லில்
விவேக்கின் காலிடற, புதியவனின் தலையை பிடித்திருந்த இடது கை விலகியது... அந்த
சின்ன இடைவெளியில், கொஞ்சம் திமிரி விவேக்கின் பிடியில் இருந்து விலகினான்
புதியவன்... ஆனால், அவன் காலும் இடறி, கீழே விழுந்தான்... மீண்டும் சுதாரித்த
விவேக், புதியவன் கத்தாதபடி வாயை பொத்தினான்.. இன்னொரு கையால் பேனாவை பாய்ச்ச
முயன்றும், அவன் தப்பிக்கும் பொருட்டு தலையை அசைத்துக்கொண்டிருந்ததில் விவேக்கால்
சரியாக குறி பார்க்கமுடியவில்லை...
“ஏய்,
யாருடா அது? இருட்டுக்குள்ள என்ன பண்றிய?” யாரோ ஒருவர் அந்த இடத்தை நெருங்குவதை
கவனித்த விவேக் பதட்டமானான்.... எழுந்து தப்பிக்க முயன்ற நேரம், விவேக்கின் சட்டை
பாக்கெட்டை புதியவன் பிடித்து இழுக்க... அது கிழிந்து, அதிலிருந்து ஏதோ தவறி கீழே
விழுந்தது... என்ன என்று பார்க்க விவேக் குனியப்போகையில், யாரோ தன்னை
நெருங்கிவிட்டதாக உணர்ந்த விவேக், தப்பித்து ஓடினான்....
முதல்
முறையாக விவேக்கின் முயற்சி தோல்வியில் முடிந்தது... “அவன் சாகமாட்டான்...
ஜூகுலார் வெயின்’ல நான் குத்த முடியல... அவசரப்பட்டுட்டேனா?” குழம்பினான்
விவேக்... “எத்தன தடவை உன்கிட்ட சொல்றது, ஒரு காரியத்தை கைல எடுத்தா அதை முழுசா
முடிக்காம அடுத்த வேலைக்கு போகக்கூடாதுன்னு... எந்த விஷயத்தையும் நாம அரைகுறையா
மிச்சம் வச்சா, அதுதான் நமக்கு பெரிய பிரச்சினைய உண்டாக்கும்” அடிக்கடி இந்து
சொல்வது இப்போது அவன் காதுகளுக்குள் ஒலித்தது....
மறுநாள்
காலை, அரசு பொது மருத்துவமனை “தீவிர சிகிச்சை பிரிவில்” கழுத்தில்
கட்டப்பட்டிருக்கும் கட்டோடும், கையில் ஏற்றப்பட்டிருக்கும் ட்ரிப்ஸ்’ஓடும் மயக்கத்தில்
படுத்திருக்கிறான் புதியவன்... அவன் அருகில் நான்கைந்து காக்கி சட்டைகள், அதில்
மையமாக நின்று பெற்றோரிடம் விசாரித்துக்கொண்டிருப்பது நம் செந்தமிழன்
அவர்களேதான்...
“பசங்களோட
படத்துக்கு போனவன்தான் சார்.... அதிகம் புது ஆளுங்க யார்கிட்டயும் பேசக்கூட மாட்டான்...
இப்டி பண்ணிட்டாணுக பாவிங்க” சேலையின் முனையால் வாயை பொத்தியபடியே அழுகையும்
வார்த்தைகளும் கலந்து பேசினார் அந்த பையனின் அம்மா...
“அதான்
ஒன்னும் பயப்பட வேணாம்னு சொல்லிட்டாங்கள்ல!.. பயப்படாதிங்க... மயக்கம் தெளிஞ்சதும் தகவல் சொல்ல சொல்லுங்க”
சொல்லிவிட்டு வெளியே வந்த தமிழின் வெகுஅருகில் வந்த ராஜேந்திரன், “சார், கேஸ்’ல
முதல் முறையா ஒரு எவிடென்ஸ் கிடைச்சிருக்கு... இப்போ நாம பார்த்த அந்த பையன் கைல
இந்த பேப்பரை பிடிச்சபடி கெடந்திருக்கான்... அதோட அவன் நகத்துல கருப்பு நூல் கூட
ஒட்டிருந்துச்சு... கொலைகாரன் கூட தள்ளு முள்ளு நடந்திருக்கு, அதில அவன் சட்டை
கிழிஞ்சிருக்கலாம்... அதிலேந்து விழுந்த பேப்பர் இவன் கைல கிடச்சிருக்கலாம்”
“இருக்கலாம்...
அந்த பையன் மயக்கம் தெளிஞ்சு எழுந்ததும் இதை உறுதி பண்ணிக்கலாம்... அந்த பேப்பரை
தாங்க” கையில் வாங்கினார்... அது ஒரு மருந்து சீட்டு.... எழுத்துகளில் சில தண்ணீர்
பட்டு அழிந்திருக்கிறது, அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் “மனநல பிரிவு, அண்ணன் காந்தி
அரசு மருத்துவமனை, திருச்சி” என்று காணப்பட்டது... மாத்திரைகளின் பெயரை தவிர, வேறு
எந்த தகவலும் அதில் இல்லை...
அருகில்
இருந்த மனநல பிரிவிற்குள் நுழைந்தனர் செந்தமிழன் அண்ட் கோ....
காவல்
துறை அதிகாரிகள் அந்த பிரிவுக்கு வருவதெல்லாம் ரொம்ப அரிது... சில நேரங்களில்
நீதிமன்றத்தில், குற்றவாளிகளின் “ஐ.க்யூ” சோதனை செய்வதற்கு நபர்களை அழைத்து
வருவதுண்டு... அதுவும் ஒரு பி.ஸி மட்டும் வருவதுதான் வழக்கம்... இப்படி டீ.எஸ்.பி
சகிதம் காவலர்களை பார்த்ததும் உள்ளிருந்த மருத்துவர்களுக்குள் கொஞ்சம் சலசலப்பு
உண்டானது...
“உங்கள
டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி.. ஜஸ்ட் ஒரு என்கொயரி... இந்த சீட்டை யார் எழுதினது?னு
சொல்ல முடியுமா?” என்று ஒரு மருத்துவர் கையில் கொடுத்தார்... அவர்களுக்குள் ஏதோ
கிசுகிசுத்து, பின்னர் “ஏன் சார்?.. என்ன ப்ராப்ளம்?... அவர் இங்க புதுசா ஜாயின்
பண்ணவர்... எதுவும் ப்ராப்ளமா?” என்றார் ஒருவர்....
“இல்ல
சார்... சும்மா ஒரு விசாரணை, அவ்ளோதான்... ஒரு கேஸ் விஷயமா விசாரணை”
மருத்துவர்
கூட்டத்திலிருந்து வெளியே வெளிப்பட்டு, தமிழின் அருகில் கொஞ்சம் பதட்டத்தோடு வந்து
நின்றான் பாலா...
“ஹலோ
மிஸ்டர் யங் மேன், ஒன்னும் பயப்படாதிங்க.... இது நீங்க எழுதினதுதானே?” பாலாவின்
தோள் பிடித்து அவனை இயல்பாக்கிகார் தமிழ்...
கையில்
வாங்கி மீண்டும் ஒருமுறை பார்த்தான் பாலா... “ஹாலோபெரிடால், அல்ப்ராக்ஸ்”
எழுத்துகள் ஒவ்வொன்று அழிந்திருந்தாலும், எளிதாக மருந்தின் பெயரை யூகிக்க
முடிந்தது....
“ஆமா
சார்...”
“யாருக்கு
இதை கொடுத்திங்கன்னு ஞாபகம் இருக்கா?”
யோசிக்கவல்லாம்
அவனுக்கு தோன்றவில்லை, “சார், சொல்றேன்னு தப்பா நினச்சுக்காதிங்க... இங்க ஒரு
நாளைக்கு நூறு பேருக்கு மேல வர்றாங்க, அதுல பாதி பேருக்கு மேல இந்த
மாத்திரைகள்தான் எழுதி கொடுக்குறோம்... திருப்பதில போய் மொட்டை போட்டவனை
கண்டுபிடிக்க சொல்ற மாதிரி இருக்கு சார் நீங்க சொல்றது...”
“புரியுது
டாக்டர்... பட், எங்களுக்கு கிடச்சிருக்குற ஒரே எவிடன்ஸ் இது.... இப்போ நடக்குற
கொலைகளை செஞ்சவனுக்கு நீங்க இந்த மாத்திரைகள் எழுதி கொடுத்திருக்கிங்க... நல்லா
யோசிங்க, அவன் டீனேஜ் பையனா இருக்கணும்... நிச்சயம் தனியாதான் வந்திருக்கணும்...
உங்களுக்கு ஞாபகம் வந்தா, எனக்கு காண்டாக்ட் பண்ணுங்க” ஒரு சீட்டில் தன் அலைபேசி
எண்ணை எழுதி, பாலாவின் கைகளில் திணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் தமிழ்...
கொஞ்சம்
தூரம் சென்றபின், மீண்டும் அவன் அருகே வந்து “இதை யார்கிட்டயும் சொல்ல வேணாம்...
கேஸ் முடிஞ்சப்புறம் சொல்லிக்கோங்க” சிரித்துவிட்டு விலகி வெளியே சென்றார்...
இப்போது
வெளியே இன்னும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது... வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்...
கூட்டத்தை கிழித்து, தமிழை நோக்கி முன்னேறினார் ஒரு நபர்...
“வணக்கம்
சார், நான் ‘வேகம்’ பத்திரிகை நிருபர்....”
“ஓ
நீங்கதானா அந்த ‘டண்டனக்கா’ பார்ட்டி?... சொல்லுங்க...”
“என்ன
சார் இப்டி ஆச்சு?.. நாலாவது கொலையும்....” சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்த
தமிழ், “ஹலோ மிஸ்டர், இது கொலை இல்ல... கொலை முயற்சி... நடக்க இருந்த கொலையை காவல்
துறை தடுத்திருக்கு....” பழைய டண்டனக்கா கோபத்தையும் இந்த கேள்விக்கான பதிலில்
ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்...
“சரி
சார்... கொலை முயற்சின்னு வச்சுக்கலாம்... என்னாச்சு கொலைகாரன்?... அவனை இன்னும்
பிடிக்கலையே?”
“அதுக்கான
விசாரணை நடந்துட்டு இருக்கு... விரைவில் பிடிச்சிடுவோம்” பதிலை சொல்லிவிட்டு,
அடுத்த கேள்வியை தவிர்க்கும் பொருட்டு, அவனை கண்டுகொள்ளாமல் காவல்துறை வாகனத்தை
நோக்கி விரைந்தார் தமிழ்...
இரவு
வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல பாலாவிற்கு இன்றும் ஒன்பது மணி
ஆகிவிட்டது... இப்போதெல்லாம் அவன் வருகைக்காக பேருந்து நிறுத்தத்தில்
காத்திருப்பது அந்த நாய்க்கும் வழக்கமாக ஆகிவிட்டது... அதற்கென வாங்கிய பிஸ்கட்டை
நாய்க்கு போட்டதும், அது அறை வரை பாலாவை பின்தொடர்ந்தது...
பாலாவின்
மனதிற்குள் காலையில், அந்த காவல்துறை அதிகாரி சொன்ன விஷயம் குடைந்தெடுத்தது....
6
ஒரு
கொலைகாரனோட நான் பேசிருக்கேனா?... இங்கு பணிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிருக்கு,
அதில் அந்த கொலைகாரனை கண்டுபிடிப்பதா சிரமம்?... ஆழமாக யோசித்தான்...
ஹாலோபெரிடால்.... ஹாலுசினேஷன்... குரல்!....ஆங்!.... தப்பு... பெரிய தப்பு....
அவனேதான்... அந்த ஜீன்ஸ் டீஷர்ட் இளைஞன்தான்... அவன் பெரிய தப்புன்னு சொன்னது இந்த
கொலையைதானா?... அடப்பாவமே!.. நான் அதையும் அவனோட கற்பனைன்னு நினச்சுட்டேன்.... எவ்வளவு
முட்டாள்த்தனமான எண்ணம்?... அவன் அங்கு அடையாளம் கூட நன்றாக நினைவில் இருக்கு...
டீ.எஸ்.பிக்கு போன் பண்ணிடலாமா?.... வேணாம்... இப்போ வேணாம், நல்லா இன்னொரு தடவை
உறுதி செஞ்சுக்கலாம்... ஒருவேளை அந்த பையன் கொலைகாரனா இல்லாம இருந்தா, என்னால
மாட்டிக்க கூடாது....
அறை
வந்துவிட்டது... நாய் வாலை ஆட்ட, மீதியிருந்த பிஸ்கட்டை அதற்கு போட்ட பின்பு அறை
கதவை திறந்தான்... வழக்கம்போல அறை இருட்டாக இருந்தது, உள்ளே ஆட்கள் இருக்கும்
சத்தம் லேசாக முனைகளாக கேட்டது... மனதில் குமாரை கரித்தபடியே மின்விளக்கை போட்டான்
பாலா...
அப்போது
அவன் கண்ணில் கண்ட காட்சி, அவனை பேரதிர்ச்சி ஆக்கியது.... ஆம், அதே இளைஞன்...
கையில் பேனாவோடு, குமாரின் வெகு அருகில் நிற்கிறான்... விளக்கின் வெளிச்சத்தில்
அந்த இளைஞனின் முகம் கலவரமானது, வெளியே ஓட முயன்றவனை, தன் கையால் தடுத்து பிடித்து
உள்ளே தள்ளினான் பாலா...
பாலா
தள்ளியதில் அந்த பேனா கீழே விழ, அதை கையில் எடுத்துக்கொண்டான் பாலா.... விவேக்கோ நிலைதடுமாறி
மேசைக்கு அருகில் விழுந்தான், தலை சுவற்றில் இடித்த “டம்”சத்தம் பளிச்சென
கேட்டது...
“ஏய்,
என்ன பாலா இதல்லாம்?.... லூசு மாதிரி பண்ணாத” குமார் கோபத்தில் சத்தமாக கத்தினான்,
அந்த கோபத்தில் ‘இன்னும் ஒன்னும் முடியலையே!’ என்ற ஆதங்கமும் கலந்து
வெளிப்பட்டது...
“அதை
அப்புறம் பேசிக்கலாம்... முதல்ல அவன பிடி... விடாத” கத்தினான் பாலா.... நடப்பதை
கவனித்த விவேக், மேசை மீது இருந்த சென்ட் பாட்டிலை பாலாவின் மேல் வீசினான்...
சுதாரித்து
தலையை விலக்கிய பாலா மயிரிழையில் தப்பித்தான்... ஆம், அந்த பாட்டில் அவன்
தலைமுடியை உரசியபடியே சுவற்றில் பட்டு, சுக்குநூறாக உடைந்து தெறித்தது... அதன்
வாசனை, நெடியாக அறை முழுக்க பரவியது....
“டேய்,
கேனப்.... அவன புடின்னு சொல்றேன்ல!” இன்னும் கோபமாக பாலா கத்த, ஏதோ விபரீதம்
என்பதை மட்டும் புரிந்த குமார், விவேக்கின் கைகளை பிடிக்க முயன்றான்... திமிரி
எழுந்து, குமாரை தள்ளி தப்பிக்க முயன்றான் விவேக்... உடனே, பாலாவும் வந்து
இருவருமாக விவேக்கை மடக்கி பிடித்தனர்.... அருகில் கிடந்த கொடிக்கயிரை எடுத்து,
அந்த மேசையோடு இணைத்து விவேக்கின் கைகளை கட்டினான் பாலா...
இரண்டு
நிமிடங்கள் அறை மயான அமைதியில் இருந்தது... விவேக், தன் இயலாமையை உணர்ந்து அவனும்
அமைதி ஆகிவிட்டான்.... இன்னும் குழப்பமும், கொஞ்சம் கோபமும் கலந்த முகத்தோடு
குமார், “என்னடா நடக்குது இங்க?.... உன் பெட்’ல படுக்க கூட இல்லையேடா?... உன்கிட்ட
சொல்லாதது தப்புதான், அதுக்காக இப்டியா பண்ணுவ?... போடா...” வெள்ளந்தியாக
கோபித்துக்கொண்டான்... பாலாவிற்கு சிரிப்பதா, அழுவதா? என்பதே தெரியவில்லை....
“டேய்
லூசு... இன்னும் ஒரு நிமிஷம் நான் லேட்டா வந்திருந்தா, நாளைக்கு உனக்கு போஸ்ட் மார்ட்டம்
பண்ற நிலைமை ஆகிருக்கும்... இன்னிக்கு ஊரே தேடுற கொலைகாரன் இவன்தான்டா”
“ச்சி...
ச்சி.... நீ தப்பா புரிஞ்சுகிட்ட... இவன் கொலைகாரன் இல்ல, என் உள்ளத்தை கொள்ளை
கொண்ட கொள்ளைக்காரன்” விவேக்கை காதல் பார்வை பார்க்க, அவனோ நடந்த சம்பவத்தில்
விளைவாக களைப்பாக முகம் தொங்கி காணப்பட்டான்...
“அட
நாதாரி நாயே!... என் வாய்ல நல்லா வந்துர போவுது... உன் கழுத்துல அவன் பேனாவ வச்சு
என்ன பண்ண வந்தான்?”
“ஏதோ
கதை எழுதனும்னு சொன்னான்....”
“கதை
எழுத உன் கழுத்து என்ன ஏ4 சைஸ்
பேப்பரா?... உன் கழுத்த அறுத்து கூறு
போட்டிருப்பான்” இப்போதுதான் குமாரின் முகத்தில் கொஞ்சம் கலவரம்
பற்றற்தொடங்கியது.... எதையோ யோசித்தவனாக, பாலாவின் கையில் இருந்த பேனாவை வாங்கி
திறந்து பார்த்தான்.... பேனாவில் மையில்லை, முனை வளைந்து இருந்தது... லேசான
சிவப்பு புள்ளி, கையால் துடைக்க அது காய்ந்த ரத்தம் என்பதை உறுதி செய்துகொண்டான்...
இப்போது இன்னும் அதிக பதற்றம் அவன் முகத்தில்... ஒருமுறை தன் கழுத்தை தடவி
பார்த்துக்கொண்டே, விவேக்கை பார்த்தான்... உடல் முழுவதும் வியர்த்து கொட்டியது....
“அடப்பாவி!
அவ்ளோ நல்லவனாட்டம் ரூம் வரைக்கும் வந்தியே?... புடிக்கலைனா பஸ் ஸ்டாப்’லேயே சொல்லிருக்கலாம்ல?....
அதுக்குன்னு கொலையா பண்ணுவ?” அப்பாவியாக கேட்டான் குமார்....
“ஐயோ...
நான் கொலை காரன் இல்ல.... இவரு தப்பா நெனச்சுகிட்டு இருக்காரு... ப்ளீஸ் நம்புங்க”
விவேக் கண்கள் கலங்கியதை பார்த்த குமாரின் முகம் சுருங்கிப்போனது....
“அழாதடா...
ஆம்பளப்பசங்க, அதுவும் உன்ன மாதிரி அழகான பசங்க அழுதா என்னால தாங்கிக்க முடியாது...” என்று விவேக்கை
பார்த்து சொல்லிவிட்டு, பாலாவை பார்த்து, “ஐ தின்க், யூ மிஸ்டேக் ஹிம்....
விட்டுடலாம் பாவம்...” என்றான்....
பாலாவின்
முகம் இன்னும் அதிக கோபத்தால் சிவந்தது.... “அப்டியா?... அதை நாம ஏன் முடிவு
பண்ணனும்?... போலிஸ்’க்கு கால் பண்ணலாம், அவங்க விசாரிச்சு முடிவு
பண்ணிக்கட்டும்”... தன் அலைபேசியை எடுத்து எண்களை தட்டினான்...
“ஐயோ
போலிஸ் வேணாம்... ப்ளீஸ்”
“நீ
ஏன் செல்லம் பயப்படுற?... போலிஸ் என்ன, ராணுவமே வரட்டும்... நான் இருக்கேன் உனக்கு”
சம்மந்தமே இல்லாமல், கிடைத்த கேப்பில் தன் பிட்டை போட்டான் குமார்....
“ஐயோ
வேணாம்... எனக்கு போலிஸ்’னா பயம்...”
“அப்போ
உண்மையை சொல்லு.... நீ அன்னிக்கு ஹாஸ்பிட்டல் வந்தது எனக்கு ஞாபகம் இருக்கு....
இப்பவும் நான் எதுக்கு உன்கிட்ட இதல்லாம் சொல்றேன்னா, அன்னிக்கு ஒருவிதத்துல நீ
சொல்ல வந்த விஷயத்தை நான் முழுசா கேட்காம விட்டுட்டேன்... அது என் தப்பா கூட
இருக்கலாம்... அதான் கேட்குறேன், உண்மையை நீயா சொல்றியா?... இல்லை....?” மீண்டும்
அலைபேசியை பாலா பார்க்க, இடைபுகுந்த குமார், “டேய், இவனை பார்த்தா கொலை பண்றவன் மாதிரியா
தெரியுது?... பச்சை குழந்தை மாதிரி மூஞ்சி.... ரொம்ப....” என்று இழுக்க, சட்டென
குறுக்கிட்ட விவேக், “ஆமா.... நான்தான் கொலை பண்ணேன்” என்று தன்னிலையை
ஒப்புக்கொண்டான்....
“ரொம்ப”
என்று சொன்னதோடு வாய் பிளந்து போனான் குமார்....
பாலாவிற்கு
அது அதிர்ச்சி இல்லை என்றாலும், ஒருவிதத்தில் தன் நினைப்பை இன்னும் உறுதி
செய்துகொள்ள முடிந்தது...
“கொலை
பண்ணது உண்மைதான்... ஆனால், அது என் தப்பு இல்லை... என்னையும் மீறி ஏதோ ஒரு விசை
என்னை அப்டி செய்ய தூண்டுச்சு.... அது நானறியாமல் நடக்குறது... அந்த உண்மை
புரிந்துதான், நானே அன்னிக்கு ஹாஸ்பிட்டல் வந்தேன்... நான் தப்பு செஞ்சதை
ஒத்துக்கறேன், ஆனால் அதுக்கான தீர்வு தண்டனை இல்ல, ட்ரீட்மென்ட்.... இதை நான்
உங்களுக்கு சொல்லி புரியனும்னு இல்ல... தயவுசெஞ்சு என்னைய போலிஸ்’ல மாட்டி
விட்டுடாதிங்க, எனக்கு சிகிச்சை கொடுங்க” விவேக் மேசையில் தன் தலையை சாய்த்தபடி
அழுதான்... ஒருவகையில் பாலாவே அந்த அழுகையில் தடுமாறி விட்டான் என்றுதான்
சொல்லணும்...
“சரி
அழாத... ஆனால், நான் உனக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு செய்ய கூடாது... அதுக்கு
போலிஸ், கோர்ட் எல்லாம் இருக்கே?”
“கொஞ்சம்
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க பாலாஜி... நம்ம சட்டமும், போலிசும் என்ன அவ்ளோ ஈசியா
விட்டிடுவாங்களா?... மீடியா என்னை வாழவிடும்னு நெனச்சிங்களா?... எனக்காக நான்
கவலைப்படல, இந்து’க்காக தான் நான் பயப்படுறேன்... அவளுக்கு என்னை விட்டா வேற
யாரும் இல்ல”
“யாரு
அந்த இந்து?” இடைபுகுந்தான் குமார்....
அந்த
கேள்வியை பாலாவோ, விவேக்கோ கண்டுகொண்டதாக தெரியவில்லை....
“உன்
அப்பா அம்மா எல்லாம் எங்க?... நீ ஏன் இப்டி ஆன?” பாலாவின் வார்த்தைகளில் கரிசனம்
தெரிந்தது....
தன்
இறந்த கால வாழ்க்கை நிகழ்வுகளை சொல்ல தொடங்கினான் விவேக்....
(கதையின் முதல் பகுதி முடிவுற்றது, இரண்டாம் பகுதியான இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில் பதியப்படும்.... வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் ஒத்திவைக்கப்படுகிறது)
Nice crime story...
ReplyDeleteவிக்கி படிக்கும்போத மனசுக்குள்ள ஒருபயம் உண்டாகுது. தீர்ப்பபைக்காட்டிலும் வினோத் ஏன் இப்படி ஆனா, இவன் ஒரு கே வா இல்லை ஸ்ட்ரைட்டா, யார் அந்த இந்து இந்த மாதிரி நிறைய கேள்விகள். வேகமாக 2ம் பகுதியைப்பதியவும் விக்கி.
ReplyDeleteசேகர்.
நன்றி சேகர்.... விரைவில் இரண்டாம் பாகத்தை பதிகிறேன்...
Deleteplease continue
ReplyDeleteeager to read next
நன்றி...
DeleteDear Vijay ,
ReplyDeleteI love ur stories .Please help me . please give me a solution .
I loved straight guy . We worked together near by eight months.
After i switched to other location . On that time only i told my love to him . That time he shocked . Now he is feeling lot for me , he is telling that he will be with me .I know ,he sacrificing his wishes for me and my love . i know he is straight and he is more interested in girls .
Please tell me wat i have to do , my only wish is that he should be in his life .
முதலில் நன்றி....
Deleteநான் பலமுறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்ன ஒரு விஷயத்தை மறுபடியும் கேட்குறீங்க.... ஒரு ஸ்ட்ரைட்டை காதலிப்பது என்பது உங்களையும் வருத்தி, அந்த நபரையும் வருத்தும் செயலாகும்.. நட்பின் பாதையை முற்றிலுமாக சிதைத்துவிடும் ஒரு விஷயம்.... தயவுசெய்து அந்த தவறை செய்யாதிங்க.... "கனியிருப்ப காய் கவர்ந்தற்று"...
vicky ungaloda ezhuthukal unmayileye uyirottam ullavai enbathai evaralum marukka mudiyathu....... i'm very proud to have you as my friend vicky. Thanks once again........
ReplyDeleteரொம்ப நன்றிப்பா....
Deleteபாருங்க விக்கி நீங்க எவ்ளோ நண்பர்களை தயார் செய்து கொண்டிருகின்றீர்கள் என்று, என்னையும் உங்கள் நட்பு வட்டத்திற்குள் சேர்த்த ஆண்டவனிற்கு என் நன்றிகள் பல. திருப்பி திருப்பி சொல்லனும்னா நீங்கள் பெரியவர், u r some thing great., உங்கள் எழுத்து தனி திறமை கொண்டதாய் விலங்கு கின்றது . நன்றிகள் பல இங்கு பலரை உங்கள் வாசகராய் செய்தமைக்கு, படிக்கும் வழக்கம் உங்களால் பலரிற்கு கிடைத்துள்ளது, நன்றிகள் பல.,
ReplyDeleteஇப்படிப்பட்ட வாசகர்களையும், நண்பர்களையும் என்னிடம் சேர்ப்பித்த அந்த இறைவனுக்கு நான்தான் நன்றி சொல்லணும்... உங்களுக்கும் நன்றி...
DeleteWhen next publishing by karthik
ReplyDeleteதிங்கள் அன்று அடுத்த பகுதி பதியப்படும்...
DeleteDear Vijay ,
ReplyDeleteIt is hard to accept the real fact .Anyway I am leaving him..
Thanks vijay...
நல்ல கதையம்சம் நிறைந்த படைப்பு கதைபோக்கை அழகாக தீர்மானித்துள்ளீர்கள் தங்களுக்கு எல்லாமும் வருகிறது. ஆனால் எங்கதைதான் புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகி விடும் போல இருக்கிறது
ReplyDeleteஅப்படியல்லாம் இல்லப்பா... நானும் இப்போ பூனை தான், புலியாவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்குற பூனை... உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிகள்...
Deletenalla story vijay... u r proving now as a detective writer also. Congrats vijay. story romba thrilling ah, athey nerathula romba byama iruku....ana nalla irukku. pls post the next post soon... and one more small obligation. pls accept me as ur friend. sending u a personal mail...
ReplyDelete